சனி, 12 ஆகஸ்ட், 2017

திருமறைக்காடு - ஊரும் பெயரும் - இலக்கிய ஆய்வு

முன்னுரை:

'திருமறைக்காடு' - வேதாரண்யம் என்று வடமொழியில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுப் பல காலமாக வழக்கத்தில் இருந்துவருகின்ற சிவ வழிபாட்டுடன் தொடர்புடையதோர் இடம் ஆகும். சைவசமயக் குரவர்களான அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்ற கோயில் இது. தமிழ்நாட்டில் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடலோரத்தில் அமைந்திருப்பதான இவ் ஊரைப் பற்றி பக்தி இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்ற செய்திகளையும் இவ் ஊருக்குத் 'திருமறைக்காடு' என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் விரிவாகக் காணலாம்.

பக்தி இலக்கியத்தில் திருமறைக்காடு:

சைவசமய பக்தி இலக்கியமான தேவாரத்தில் அப்பர், சுந்தரர், திருஞான சம்பந்தர் ஆகியோர் திருமறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற சிவபெருமானைப் பற்றி மொத்தம் நூறு பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்கள் ஒவ்வொருவரும் மறைக்காட்டினைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களின் எண்ணிக்கை கீழே:

திருஞானசம்பந்தர் 40 பாடல்கள்
திருநாவுக்கரசர் 50 பாடல்கள்
சுந்தரர் 10 பாடல்கள்

இவர்களது பாடல்களில் இருந்து அக்காலத்தில் மறைக்காட்டிற்கு 'மறைவனம்' மற்றும் 'வேதவனம்' என்ற பெயர்களும் இருந்தன என்னும் செய்தி பெறப்படுகிறது. மறைக்காட்டினைப் பற்றி இவர்கள் குறிப்பிடும்போது கீழ்க்காணும் பலவிதமான அடைமொழிகளைக் கொடுத்தே குறிப்பிட்டுள்ளனர்.

திருமறைக்காடு, எழில்மறைக்காடு, அணிமறைக்காடு,
முதுமறைக்காடு, தொன்மறைக்காடு,
மாமறைக்காடு, நான்மறைக்காடு.

இனி இவர்களது பாடல்களில் மறைக்காட்டின் இயற்கையும் இயல்பும் எப்படிச் சொல்லப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

மறைக்காட்டின் இயற்கை:

திருமறைக்காட்டின் இயற்கையினைப் பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து பெறப்பட்ட செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின்கீழ்த் தொகுத்துக் காணலாம்.

1. கடல்வளம்
2. மண்வளம்
3. பிறவளம்

1. மறைக்காட்டின் கடல்வளம்:

திருமறைக்காடானது வங்கக் கடலோரம் அமைந்திருப்பதால் கடல்வளங்கள் மிக்கிருந்தது. கடல் அலைகள் ஒதுக்கிய முத்துக்கள் பகலிலும் ஒளிவீச அவ்வொளியானது கதிரொளியையும் விஞ்சியதாம். முத்துக்கள் மட்டுமின்றி ஏராளமான சங்குகளும் சலஞ்சலங்களும் வலம்புரிகளும் பவளங்களும் மிக்கிருந்தது மறைக்காட்டின் கடற்கரை.

மறைக்காட்டில் அடிக்கடி உயரமான அலைகள் சீற்றமுடன் எழுவதாக இன்றளவும் செய்திகளைப் பார்க்கிறோம். இந் நிகழ்வுகள் இக் காலத்தில் மட்டுமல்ல தேவார காலத்திலும் நடந்துள்ளன. நீரைத் தேக்கிவைத்திருக்கின்ற பெரும்பரப்புடைய அணையினைப் போன்ற மேகக்கூட்டங்களைத் தழுவவிரும்பிய கடலலைகள் மலைபோல் உயர்ந்து எழுந்தனவாம். மலைக்குன்று போல உயரமாய் எழுகின்ற கடல் அலைகள் கரையில் குவித்துவைத்த முத்துக்களை வில்போன்று வளைந்திருப்பதும் கொடிபோல மெலிந்திருப்பதுமான இமைகளை உடைய இளம்பெண்கள் கவர்ந்து சென்றனராம்.

சங்குகளும் முத்துக்களும் பவளங்களும் மிக்கதான கடலலைகள் பெரும் ஓதமாக தகரமரங்களும் தாழைகளும் ஞாழல்களும் வளர்ந்திருக்கும் கழிமுகச் சோலைக்குள் புகும்போது மகரம், சுறவம் போன்ற மீன்கள் கடற்கரையில் தெறித்து வீழும். மீன்வளம் மிக்கிருந்தபடியால் ஏராளமான மரக்கலங்கள் மறைக்காட்டின் கடலில் இயங்கியவண்ணம் இருந்தன.

தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை உதிர்த்துக் கிடந்த மணற்பரப்பிலே சங்குகளும் சிப்பிகளும் வலம்புரிகளும் மிகுதியாகக் குவிந்திருந்ததால் உயர்ந்த பாய்மரங்களுடன் கூடிய மரக்கலங்கள் தடம்மாறிக் கவிழ்ந்து கிடந்த நிலையானது அவையும் சிவபெருமானை வணங்குவதைப் போல இருந்ததாம்.

செப்புக்காசு போன்ற நிறத்ததுவும் கருமை நிறத்ததுவும் பொன் நிறத்ததுவுமாகிய பல்வேறு வகையான முத்துக்களை நீண்ட கடல்நீரின்மேல் வலையினை வீசி அள்ளிக் குவித்த வலைவாணர்கள் அவற்றை விலைபேசி விற்றனர். 

2. மறைக்காட்டின் மண் வளம்:

கருநிற மேகக்கூட்டங்கள் எப்போதும் தவழ்வதான பல சோலைகளை உடையது மறைக்காடு. இச் சோலைகளில் கடம்பம், குரவம், குருக்கத்தி, புன்னை, ஞாழல் போன்ற மரங்கள் நிறைந்திருந்தன. இம்மரங்களில் பூத்திருந்த மலர்களில் இருந்த தேனை உண்ட வண்டுகள் யாழ்போல இசைத்தபடி எங்கும் திரிந்தன. நிழல் மிக்க சோலைகளிலே வண்டுகள் ஒலிக்கப் பூத்திருந்த மாதவிப் பூக்களைத் தழுவியதால் அங்கு வீசிய தென்றலும் மணம் மிக்கிருந்தது.

கடற்கழிகளிலும் கடலை அடுத்த பகுதிகளிலும் நெய்தலும், ஆம்பலும், தாழைகளும் ஏராளமாய்ப் பூத்துக் குலுங்கின. கடல்நீரின் நடுநடுவே இருந்த கழிமுகப் பகுதிகளில் தாழைகள் பூத்து மணம் வீச அவற்றின் நடுநடுவே வெண் நாரைகள் தலையைத் தூக்கிப் பார்க்கின்ற தன்மையது மறைக்காடு. அறியாமை மிக்க வெண்நாரை ஒன்று தனக்குப் பக்கத்தில் இருந்த தாழையின் மலர்மொக்கினைத் தனது பெண்துணையென்று கருதித் தழுவியதாம். அதுமட்டுமின்றி, தாழைகள் பூத்திருந்த சோலையில் இருந்த சிறியவழியின் வழியாகச் செல்லும் குட்டிக் குரங்குகள் அடுத்திருந்த வாழைத்தோப்பில் இருந்து வாழைக்கனிகளைப் பறித்து உண்ணுமாம்.

திருமறைக்காட்டில் பரந்த வயல்வெளிகளில் செந்நெல் விளைந்தன. இவ் வயல்களில் தேங்கியிருந்த நீரில் மீன்கள் துள்ளிவிளையாடின. தென்னைமரங்களும் பனைமரங்களும் தமது கனிகளை கடற்கரையின் பரந்த மணற்பரப்பிலே உதிர்த்திருந்தன. 

3. மறைக்காட்டின் பிறவளங்கள்:

தேவாரப் பாடல்களில் இருந்து திருமறைக்காடானது அக்காலத்தில் கல்விவளத்திலும் இசைவளத்திலும் மிக்கிருந்ததாக அறியப்படுகிறது. பொருளுடைய இனிய தமிழ்ச்சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பெண்கள் பாடவும் அதைச் செவிமடுத்த ஆண்கள் பல்வேறு திசைகளிலும் அப்படியே கூற பெரும் இசைப்பயிற்சியை உடையதாய் இருந்தது மறைக்காடு. அதுமட்டுமின்றி, தேர்த்திருவிழாவின்போது உயர்ந்த மாடங்கள் நிறைந்த தெருக்களிலே தேர் அசைந்துவரும்போது சங்குகள் முழக்கப்படவும் முரசுகள் அறையப்படவும் நறுமணப்பூக்களை அணிந்த பெண்கள் ஒவ்வொருநாளும் நல்ல இசைப்பாடல்களைப் பாடவும் ஆக பல்வேறு ஒலிகளால் நிறைந்து இருந்தது மறைக்காடு.

இசைவளத்தில் மட்டுமல்ல பொருள்வளத்திலும் மனவளத்திலும் மிக்கிருந்தது மறைக்காடு. திருவிழாக்கள் செல்வச்செழிப்புடன் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டன. பொருட்செல்வம் மிக்கிருந்தாலும், மறைக்காட்டு மக்கள் மரங்களைப் போல பலனை எதிர்பாராமல் பிறருக்குக் கொடுத்துதவினர். மக்களின் பல்வேறு துயர்களை ஒழிக்க நினைத்து, அறம் செய்வதனை விரும்பி, அறிஞர்கள் வறுமையில் இருந்து விடுபடுதலை மதித்துப் பெரும்பொருள் தந்து உதவுகின்ற நல்லவர்கள் நிறைந்திருந்தது மறைக்காடு.

மறைக்காட்டுச் சிவன் கோவிலும் வழிபாடும்;

இதுவரை மறைக்காட்டின் இயற்கை வளங்களைக் கண்டோம். இனி, மறைக்காட்டில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனாகிய சிவபெருமானின் திருக்கோவிலைப் பற்றியும் அங்கு நடந்த வழிபாடுகளைப் பற்றியும் தேவாரப் பாடல்கள் கூறுகின்ற செய்திகளைப் பார்க்கலாம்.

மறைக்காட்டு இறைவனின் திருக்கோவிலானது கடலுக்கு மிக அருகிலேயே அமைந்திருந்தபடியால், கோவிலைச் சுற்றிலும் மலைபோல உயரமான சுற்றுச்சுவர்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதுமட்டுமின்றி, கோவிலைச் சுற்றிலும் ஏராளமான மரங்களும் இயற்கை அரணாக நிறைந்திருந்தன.

மறைக்காட்டில் இரவிலும் பகலிலும் பக்தர்கள் இறைவனை வணங்கினர். ஒலிக்கின்ற கடலினைத் தியானித்தவாறு சிவன் கோவிலைப் பெண்கள் வலம்வந்து வணங்கினர். உலகமே தூங்கும் பொழுதிலும் தூக்கமின்றி இறைவனைப் போற்றியவாறு வலம்வருகின்ற மனத்தூய்மை கொண்டோர் நிறைந்தது மறைக்காடு. இப்படிப் பல மெய்யன்புடைய பக்தர்களும் சித்தர்களும் நிறைந்தது மறைக்காடு.

அதுமட்டுமின்றி, மலர்மறையவன் ஆகிய பிரம்மனும் சிவபெருமானை மறையோதி வழிபட்டான். நான்மறைகளும் சிவனை வழிபட்டன. வானவர்களும் மாதவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன. பலகோடி உருத்திரர்களும் தங்கள் தலைவன் என்று சிவபெருமானை வாழ்த்திப் பாடினர். வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.

மறைக்காடா மரைக்காடா?:

மறைக்காடு என்ற ஊர்ப்பெயர் குறித்து இரண்டு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன. மறைக்காடு என்னும் பெயரில் வரும் மறை என்பது வேதங்களைக் குறிக்கும் என்பதே பெரும்பான்மையோர் கருத்தாகும். ஆனால் ஒருசிலர், மறைக்காடு என்னும் பெயரே தவறானது என்றும் உண்மையில் மரைக்காடு என்பதே சரி என்றும் இவ் ஊரில் மரைகள் அதாவது மான்களும் குதிரைகளும் ஏராளமாக வாழ்ந்ததால் தான் இவ் ஊருக்கு மரைக்காடு என்ற பெயர் உண்டானது என்றும் கருதுகின்றனர். உண்மையில் இந்த இரண்டாவது கருத்து அதாவது மரைக்காடு என்பது தவறானதாகும். இதற்கான காரணங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

1. மறைக்காட்டின் இயற்கை வளங்களைப் பற்றி மிக விரிவாக மேலே கண்டோம். மறைக்காட்டின் இயற்கையினைப் பற்றிப் பாடிய தேவார மூவர்களில் ஒருவர்கூட தமது பாடல்களில் அங்கு வாழ்ந்த மான்களைப் பற்றியோ குதிரைகளைப் பற்றியோ குறிப்பிடவில்லை.

2. உண்மையிலேயே மான்களும் குதிரைகளும் மறைக்காட்டில் அதிகமாக வாழ்ந்திருந்தால், அதன் காரணத்தாலேயே அவ் ஊருக்கு அப்பெயர் ஏற்பட்டிருந்தால் அதனைக் கண்டிப்பாகப் பாடல்களில் சுட்டிக் காட்டியிருப்பார்கள். ஆனால் ஒரு பாடலில் கூட அதற்கான குறிப்புக்கள் இல்லை.

3. மறைக்காட்டிற்கு 'வேதவனம்' என்ற பெயரும் இருந்ததாகப் பல பாடல்களில் இருந்து அறியமுடிகிறது. இதிலிருந்து, இவ் ஊர்ப்பெயரில் வரும் மறை என்பது வேதத்தைக் குறித்து வந்துள்ளதே அன்றி அதற்கும் மரைக்கும் சிறிதும் தொடர்பில்லை என்பது உறுதிசெய்யப்படுகிறது.

மறைக்காடு - பெயர்க் காரணம்:

மறைக்காடு என்ற பெயர் அவ் ஊருக்கு ஏற்பட என்ன காரணம் என்பதை இங்கே காணலாம். மறைக்காடு பற்றித் தேவார மூவர் பாடியுள்ள பாடல்களில் இருந்து கீழ்க்காணும் கருத்துக்கள் பெறப்பட்டுள்ளன.

1. வேதங்கள் பல காலங்களாகத் தொடர்ந்து மலர்களைச் சொரிந்து சிவபெருமானின் பாதங்களைப் போற்றி வழிபட்டன.
  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 6 ஆவது பாடல் )

..... பலகாலங்கள் வேதங்கள் பாதங்கள் போற்றி
மலரால் வழிபாடுசெய் மாமறைக்காடா - தேவா. 2/6

2. வேதங்கள் சிவபெருமானின் திருவடியில் பலவித நறுமணப் பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்திப் போற்றின.  ( ஆதாரம்: இரண்டாம் திருமுறை: திருமறைக்காடு: 10 ஆவது பாடல் )

.... வேதம் பல ஓமம் வியந்து அடிபோற்ற
ஓதம் உலவும் மறைக்காட்டில் உறைவாய் - தேவா. 2/10

இப்பாடலில் வரும் ஓமம் என்பது ஓமத்தீயினையோ ஓமப்புகையினையோ குறித்து வரவில்லை; மாறாக, ஓமப்புகையினைப் போல எங்கும் பரந்து மணம் வீசுவதான நறுமணம் கமழும் பூக்களைக் குறித்தே வந்துள்ளது. சான்றாக, நறுமணம் வீசுவதால் கற்பூரவல்லிக்கு ஓமவல்லி என்ற பெயரும் உண்டு. ஓமத்திரவியம், ஓமப்பொடி ஆகியவை அப் பொருளின் வாசனையால் உண்டான பெயர்கள்.

மேற்காணும் கருத்துக்களை ஆராய்ந்து பார்க்குமிடத்து, வேதங்கள் மரங்களின் வடிவாகக் கோவிலைச் சுற்றிநின்று பூக்களைச் சொரிந்து அலையோசையினால் வாழ்த்தி வழிபட்டன என்னும் கருத்தினை எளிதாக அறிந்துகொள்ளலாம். உண்மை என்னவெனில், கோவிலைச் சுற்றி இருந்த காட்டுமரங்கள் கடல்நீரைத் தடுத்தது மட்டுமின்றி கடல்அலைகளின் ஆரவாரத்தினை உள்வாங்கிப் பெருக்கி 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலியினை எப்போதும் ஒலித்துக் கொண்டிருந்தன. இது சில இயற்கைச் சூழ்நிலைகளில் நடக்கக்கூடிய ஒன்றேயாகும். மக்கள் இந்த மரங்களுக்கிடையில் செல்லும்போது 'ஓம்' என்பதைப் போல ஒரு ஒலி கேட்டுக்கொண்டிருந்தபடியால், இந்த மரங்கள் வேதம் ஓதுவாகக் கருதி ' மறையினை ஓதும் காடு ' என்ற பொருளில் அவ் ஊருக்கு 'மறைக்காடு' என்ற பெயர் சூட்டினர். அதுவே பின்னாளில் வேதங்களே மரங்களாக மாறிநின்று இறைவனைப் போற்றுகின்றன என்பதாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இயற்கை நிகழ்வுகளை இறைவன்மேல் சார்த்திக் கூறுவதுடன் நின்றுவிடாமல் பின்னர் அதைப் புராணமாக்குவதும் மக்களின் இயல்புதான் என்பதற்கு மறைக்காடு ஒரு நல்ல சான்றாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.