செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

தமிழகப் பெண்கள் பூச்சூடுதல் - அன்றும் இன்றும்

முன்னுரை:

பூக்களை விரும்பி அணியாத பெண்களே இவ் உலகில் இல்லை எனலாம். கணினிக் காலமான தற்காலத்தில் மல்லிகை, முல்லை, பிச்சி, கனகாம்பரம், ரோசா, செம்பருத்தி முதலான பல்வேறு பூக்களைச் சாதிமத வேறுபாடின்றி தமிழ்ப் பெண்கள் தமது தலையில் சூடுவதை அன்றாடம் பார்க்கிறோம். அதுமட்டுமின்றி, இயற்கையான பூக்களுக்குப் போட்டியாக பலவகையான நெகிழிப்பூக்கள் இக்காலத்தில் தலைதூக்கியிருந்தாலும் அவற்றில் நறுமணம் இன்மையால் பலரும் இயற்கைப் பூக்களையே விரும்பிச் சூடுகின்றனர்.

அன்றியும், தற்காலத்தில் தமிழகப் பெண்கள் பூச்சூடுவதைக் கவனித்துப் பார்த்தோமானால், பெரும்பான்மையோர் தமது தலையின் பின்புறத்திலேயே பூக்களைச் சூடுவதை அறியலாம். இதைப் பார்க்கும்போது, இப்படி இவர்கள் தமது பின்னந்தலையில் உள்ள தலைமயிரில் பூக்களை அணிவதன் காரணம் என்ன?. இதுதான் பெண்கள் பூக்களைச் சூடிக்கொள்ளும் பொதுவான நடைமுறையா?. சங்ககாலம் தொட்டு இன்றுவரை தமிழ்ப் பெண்கள் இப்படித்தான் பூச்சூடினார்களா?. என்பது போன்ற கேள்விகள் எழுகிறது. இக் கேள்விகளுக்கான விடைகளைக் கண்டறியும் பொருட்டு சங்கால இலக்கியங்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில், பல புதிய தகவல்கள் கிடைத்தன. அவற்றை விளக்கமாகப் பின்வரும் பகுதிகளில் காணலாம்.

சங்க இலக்கியங்களில் பூக்கள்:

சங்க இலக்கியங்களில் பூக்கள் என்றாலே 'குறிஞ்சிப்பாட்டு' தான் முதலில் நினைவுக்கு வரும். சங்ககாலப் புலவரான கபிலர் தமது ' குறிஞ்சிப்பாட்டு ' என்னும் நூலில் 99 வகையான பூக்களைப் பற்றிக் குறிப்பிடுவதாகச் சொல்லப்படுகிறது. உண்மையில் அவர் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்களை அதில் குறிப்பிடுகிறார். ஆனால், வரி எண் 62 முதல் 96 வரையிலும் தொடர்ச்சியாக அவர் குறிப்பிடுகின்ற பூக்களின் தொகையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தம் 99 பூக்கள் வருகின்றன. இப் பூக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்பொழுது, 

> குறிஞ்சிப்பாட்டின் 96 ஆவது வரியில் வரும் அரக்கு, புழகு ஆகிய இரண்டு பூக்களின் பெயர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.

> நெய்தல்பூ இரண்டு இடங்களில் ( குலைநெய்தல், நீள்நெய்தல் ) வந்தாலும்  ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

> மாம்பூ இரண்டு இடங்களில் ( தேமா, கலிமா ) வந்தாலும் ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இனி, அந்த 99 வகையான பூக்களின் பெயர்களையும் கீழே காணலாம்.

செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கோடு, வேரி, மா, மணிச்சிகை, உந்தூழ், கூவிளம், எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, குடசம், எருவை, செருவிளை, கருவிளை, பயினி, வானி, குரவம், பசும்பிடி, வகுளம், காயா, ஆவிரை, வேரல், சூரல், பூளை, கண்ணி, குருகிலை, மருதம், கோங்கம், போங்கம், திலகம், பாதிரி, செருந்தி, அதிரல், சண்பகம், கரந்தை, குளவி, தில்லை, பாலை, முல்லை, குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நெய்தல், தாழை, தளவம், தாமரை, ஞாழல், மௌவல், கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, நறுவழை, காஞ்சி, பாங்கர், மராம், தணக்கம், ஈங்கை, இலவம், கொன்றை, அடும்பு, ஆத்தி, அவரை, பகன்றை, பலாசம், பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்துவாரம், தும்பை, துழாய், தோன்றி, நந்தி, நறவம், புன்னாகம், பாரம், பீரம், குருக்கத்தி, ஆரம், காழ்வை, புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, குருந்தம், வேங்கை, அரக்கு, புழகு.

இந்த 99 வகையான பூக்களைத் தவிர, செயலை, தகரம், அகில், கடம்பு போன்ற மரங்களின் பெயர்களும் பாட்டில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

சங்ககாலப் பெண்கள் சூடிய பூக்கள்:

சங்ககாலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பூக்கும் தாவரங்கள் இருந்தன என்னும் கருத்தினை மேலே அறிந்துகொண்டோம். இவற்றில் அனைத்து வகையான பூக்களையும் சங்ககாலப் பெண்கள் சூடினார்களா என்றால் இல்லை. சங்காலப் பெண்கள் சூடிய சில பூக்களின் பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொடிப்பூக்கள்: முல்லை, அதிரல், தளவம், வயலை.

கோட்டுப்பூக்கள்: காந்தள், மராம், தும்பை, வேங்கை, ஞாழல், புன்கம், செயலை, நொச்சி, பாதிரி, காஞ்சி, ஆவிரை, கோங்கு, தாழை.

நீர்ப்பூக்கள்: தாமரை, ஆம்பல், குவளை, நெய்தல், நீலம்.

சங்ககாலப் பெண்கள் இப்பூக்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகவோ பிற பூக்களுடன் கலந்தோ இலைகளுடன் கலந்தோ தொடுத்து அணிவதுண்டு. இவ்வாறு தொடுத்து அணியப்பட்ட பூக்களை, மாலை, தார், கண்ணி, பிணையல், தோடு, அலரி, தொடை, தொடலை, தழை, கோதை, காழ் போன்ற பல பெயர்களால் சங்கப் புலவர்கள் குறித்துள்ளனர்.

சங்ககாலப் பெண்கள் பூச்சூடிய இடங்கள்:

சங்ககாலத்தில் பெண்கள் தமது விருப்பத்திற்குரிய பூக்களைத் தமது உடலில் அணிந்து மகிழ்ந்திருந்த இடங்களாகக் கீழ்க்காண்பவற்றைச் சங்க இலக்கியங்கள் சுட்டுகின்றன.

1. நுதல். சான்று: ..... தண்கமழ் புதுமலர் நாறும் நறுநுதற்கே - அகம். 238.

2. அல்குல். சான்று: ..... பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல் .... - அகம். 230

3. முலை. சான்று: ... களரி ஆவிரைக் கிளர்பூங் கோதை
                    வண்ண மார்பின் வனமுலைத் துயல்வர... - அகம். 301
      
4. கூந்தல். சான்று: .... தண்நறு நெய்தல் நாறும் பின்இருங் கூந்தல்... - ஐங்கு. 173

5. கதுப்பு. சான்று: .... முல்லைப் பெருந்தார் கமழும் விருந்தொலி கதுப்பின்.. - அகம்.314

6. முச்சி. சான்று:.... மராஅத்துத் தேம்பாய் மெல்லிணர் தளிரொடு கொண்டு நின்
                   தண்நறு முச்சி புனைய, - அகம்.221

7. கூழை. சான்று: ... கண்ணேர் இதழ தண்நறுங் குவளை
                    குறுந்தொடர் அடைச்சிய நறும்பல் கூழை.. - அகம்.358

8. ஓதி. சான்று  :...  வேங்கைத் தண்கமழ் புதுமலர் நாறும் அஞ்சில் ஓதி... - அகம்.365       

9. ஐம்பால். சான்று: ...அணி மலர் முண்டகத்து ஆய் பூங்கோதை
                     மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇ ... - நற். 245

பூச்சூடிய இடமும் காரணமும்:

மேற்காணும் 9 இடங்களில், நுதல் என்பதற்கு நெற்றி என்றும் அல்குல் என்பதற்குப் பெண்களின் இடுப்பு / பெண்குறி என்றும் முலை என்பதற்குப் பெண்களின் மார்பகம் என்றும் கூந்தல், கதுப்பு, முச்சி, கூழை, ஓதி, ஐம்பால் ஆகிய சொற்களுக்குப் பெண்களின் தலைமயிர் என்றும் இற்றைத் தமிழ் அகராதிகள் பொருள் உரைக்கின்றன. அகராதிகள் காட்டும் பொருட்களின் அடிப்படையில் பார்த்தால், சங்ககாலப் பெண்கள் பூக்களைத் தமது

> நெற்றியில் அணிந்தனர் என்றும்
> இடுப்பு / பெண்குறியில் அணிந்தனர் என்றும்
> மார்பகங்களில் அணிந்தனர் என்றும்
> தலைமயிரில் அணிந்தனர் என்றும்

தெரியவருகிறது. இவற்றுள், பெண்கள் பூக்களைத் தமது நெற்றியில் சூடுவதற்கோ தலைமயிரில் சூடிக்கொள்வதற்கோ ஒரு காரணம் இருக்கிறது. அதுமட்டுமின்றி, இன்றும் பல பெண்கள் நெற்றியிலும் தலைமயிரிலும் பூச்சூடிக் கொள்வதைப் பார்க்கிறோம். இதைப்பற்றி விளக்கமாகப் பின்னர் பார்க்கலாம். ஆனால், இடுப்பிலோ பெண்குறியிலோ மார்பகங்களின் மீதோ பெண்கள் பூச்சூடிக் கொள்ள ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. இக்காலத்தில் கூட அப்படி யாரும் அணிவதில்லை. எனவே, சங்ககாலப் பெண்கள் பூச்சூடியிருக்க வாய்ப்புள்ள இடங்களாக அமைகின்ற ' நெற்றி ' மற்றும் 'தலைமயிர்' ஆகிய இரண்டில் எது பொருத்தமான இடம் என்பதைப் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் பின்வரும் பகுதிகளில் விரிவாகக் காணலாம்.

சங்ககாலப் பெண்கள் பூச்சூடியது நெற்றியே:

சங்ககாலப் பெண்கள் பூச்சூடிய இடங்களாகக் கருதப்பட்ட நெற்றி, தலைமயிர் ஆகிய இரண்டு இடங்களையும் ஆய்வு செய்ததில் நெற்றியே மிகப் பொருத்தமான இடம் என்பது உறுதிசெய்யப்பட்டது. இக் கருத்தானது கீழ்க்காணும் ஆதாரங்களின் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளது.

1. நுதலில் பூச்சூடுதல்
2. அல்குலில் பூச்சூடுதல்
3. வண்டுகள் பூக்களை மொய்த்தல்
4. வண்டுகளும் முயக்கமும்

இவ் ஆதாரங்களைப் பற்றித் தனித்தனியே விரிவாகக் காணலாம்.

நுதலில் பூச்சூடுதல்:

முதல் சான்றாக நுதல் என்பதைப் பற்றிக் காணலாம். சங்ககாலப் பெண்கள் தமது 'நுதல்' எனும் உறுப்பில் பூக்களை அணிந்திருந்ததைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.... காந்தள் மென்பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த
தண்கமழ் புதுமலர் நாறும் நறுநுதற்கே - அகம். 238

,,, தீம்பெரும் பைஞ்சுனைப் பூத்த
தேம்கமழ் புதுமலர் நாறும் இவள் நுதலே    - அகம். 78

....'சினையொண் காந்தள் நாறும் நறுநுதல் .....- அகம்.338

சங்ககாலப் பெண்களின் நுதலில் காந்தளும் நெய்தலும் தோன்றி மணந்ததை மேற்காணும் பாடல் வரிகள் நமக்கு நினைவூட்டுகின்றன. இப்பாடல்களில் வரும் நாறுதல் என்பதற்கு மணத்தல் எனினும் தோன்றுதல் எனினும் பொருந்தக்கூடியதே. இவ் இரண்டு பொருட்களையுமே அகராதிகள் காட்டுகின்றன. மேலும் இப்பாடல்களில் வரும் நுதல் என்பதற்குத் தற்கால அகராதிகள் 'நெற்றி' என்ற பொருளையே பெரிதும் பரிந்துரைக்கின்றன. ஆனால், இப்பாடல்களில் வரும் நுதல் என்பதற்கு 'கண் , கண்ணிமை ' ஆகிய புதிய பொருட்களும் உண்டென்று ' நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம்.

இந்நிலையில், இப்பாடல்களில் வரும் 'நுதல்' என்ற சொல்லுக்கு 'நெற்றி' என்று பொருள்கொண்டாலும் சரி, 'கண், கண்ணிமை' என்று பொருள் கொண்டாலும் சரி, இரண்டுமே பொருந்தக்கூடியதே. காரணம், பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மேலாக இருக்கும் நெற்றிப்பகுதியில் தான் பூக்களை அணிவது வழக்கம்.

அல்குலில் பூச்சூடுதல்:

இரண்டாவது சான்றாக, அல்குல் என்னும் சொல்லைப் பற்றிக் காணலாம். சங்ககாலத் தமிழ்ப்பெண்கள் தங்களது அல்குல் என்ற பகுதியிலும் பூக்களை விரும்பி அணிந்திருந்த செய்திகளை ஏராளமான சங்கப்பாடல்கள் கூறுகின்றன. அவற்றிலிருந்து சில பாடல்களை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

.....சிறுகருநெய்தல் கண்போல் மாமலர்ப்
பெருந்தண் மாத்தழை இருந்த அல்குல் .... - அகம். 230

கருங்கால் வேங்கைச் செம்பூம் பிணையல்
ஐதுஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் ....- அகம்.345

வயல்மலர் ஆம்பல் கயில் அமை
நுடங்குதலைத் திதலை அல்குல் .... - ஐங்கு.72

மேற்காணும் பாடல்களில் பெண்கள் தமது அல்குலில் நெய்தல், வேங்கை, ஆம்பல் போன்ற மலர்களைத் தொடுத்து அணிந்திருந்த செய்திகள் கூறப்பட்டுள்ளன. இப்பாடல்களில் வரும் அல்குல் என்பது பெண்களின் இடுப்பு அல்லது பெண்குறியைக் குறிக்காது என்றும் அவர்களது நெற்றியினையே குறிக்கும் என்றும் 'அழகின் மறுபெயர் அல்குல் ' என்ற ஆய்வுக்கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் விரிவாகக் கண்டுள்ளோம்.

பெண்கள் தமது நெற்றிப்பகுதியில் பூமாலைகளைத் தாழ்வாக அணிந்திருக்கும்போது அவை கண்ணிமைகளின் மேலாக அசைவதும் புரள்வதும் உண்டு. இவை பற்றிய செய்திகளைக் கூறும் பாடல்கள் கீழே:

வயல்மலர் ஆம்பல் கயில்அமை நுடங்குதலைத்
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் .... - ஐங்கு.72

நெற்றியில் அணிந்திருந்த ஆம்பல்மலர் மாலையானது கூந்தல் ஆகிய இமைகளுக்கு மேலாக அசைவதைப் பற்றி மேற்காணும் பாடல் கூறுகிறது. பல்வகையான மலர்களைக் கொண்டு அழகாகத் தொடுத்த மாலையானது நெற்றியின் மேலிருந்தவாறு முச்சி ஆகிய இமைகளின்மேல் முழுவதுமாகப் புரண்டு புரண்டு அசைந்ததைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

.... வணர்சுரி முச்சி முழுதுமன் புரள   
ஐதகல் அல்குல் கவின்பெறப் புனைந்த
பல்குழைத் தொடலை ..... - அகம்.390

இப்பாடல்களில் வரும் கூந்தல், முச்சி ஆகியவை பெண்களின் கண்ணிமைகளையும் குறிக்கும் என்று பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?, முச்சி என்றால் என்ன?. ஆகிய கட்டுரைகளில் முன்னரே கண்டுள்ளோம்.

வண்டுகள் பூக்களை மொய்த்தல்:

மூன்றாவதாக வந்தாலும் இதுவே மிக இன்றியமையாத சான்றாக விளங்குகிறது. பெண்கள் தமது உடலின் எந்த இடத்தில் பூக்களைச் சூடினாலும் அதில் உள்ள தேனைக் குடிக்க வண்டுகள் மொய்த்த செய்திகள் ஏராளமாக சங்ககாலப் புலவர்களால் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றுள் சில சான்றுகளை மட்டும் விளக்கமாகக் காணலாம்.

சான்று ஒன்று:

பெண்கள் தமது நுதலில் பூக்களை விரும்பி அணிந்தனர் என்று மேலே கண்டோம். அப்படி அணியும்போது அப் பூக்களில் உள்ள தேனைக் குடிக்க விரும்பி வண்டுகளும் சுரும்புகளும் அவரது நுதல் ஆகிய நெற்றி அல்லது கண் பகுதியினை மொய்த்தன. இதைப்பற்றிக் கூறுகின்ற சில இலக்கியப் பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

.... காந்தள் நாறும் வண்டிமிர் சுடர்நுதல் குறுமகள் .... - ஐங்கு. 254
... சுறவுவாய் அமைத்த சுரும்புசூழ் சுடர்நுதல்... - பெரும்பாண்.
.....சுரும்பு இமிர் சுடர்நுதல் நோக்கி ..... - நற். 245

இப்பாடல்களில் வரும் நுதல் என்னும் சொல்லுக்கு நெற்றி என்று அகராதிப் பொருளைக் கொண்டாலும் சரி, கண் / கண்ணிமை என்ற புதிய பொருட்களைக் கொண்டாலும் சரி, பெண்கள் அப் பகுதியில் அணிந்திருந்த பூக்களை வண்டுகள் ஒலித்தவாறு மொய்த்தன என்ற செய்தி உறுதியாகிறது.

சான்று இரண்டு:

அடுத்து கூந்தல் என்னும் சொல்லைப் பற்றிக் காணலாம். சங்ககாலப் பெண்கள் தமது கூந்தலில் பூச்சூடியதைப் பற்றி ஏராளமான பாடல்கள் குறிப்பிடுகின்றன. கூந்தல் என்பதற்குப் பொதுவாக 'தலைமயிர்' என்ற பொருளையே அகராதிகள் குறித்தாலும் அச்சொல் பெண்களின் கண்ணிமையினையும் குறிக்கும் என்று முன்னர் கண்டுள்ளோம். இந்நிலையில், பெண்கள் தாம் விரும்பிய பூக்களைத் தமது தலையின் பின்புறத்தில் உள்ள தலைமயிரில் சூடினார்களா இல்லை கண்ணிமைகளுக்கு மேலாக உள்ள நெற்றிப் பகுதியில் சூடினார்களா என்ற ஐயம் எழுகிறது. இவ் இரண்டில் சரியான விடையினைக் கண்டறியும் முன்னர் கீழ்க்காணும் சில பாடல்களைக் காணலாம்.

.. அரும்புஅற மலர்ந்த ஆய்பூ மராஅத்துச்
சுரும்புசூழ் அலரி தைஇ வேய்ந்த நின்
தேம்பாய் கூந்தல் குறும்பல மொசிக்கும்
வண்டுகடிந்து ஓம்பல் தேற்றாய்... - அகம். 257

இப்பாடலில் தலைவியானவள் மராமரத்தின் மலர்களை மாலையாகக் கட்டித் தனது கூந்தலில் அணிந்திருக்கிறாள். அந்த மலர்களில் இருக்கும் தேனைக்குடிக்க வண்டுகள் அவற்றை மொய்க்கின்றன. அப்படி மொய்க்கின்ற வண்டுகளைத் தனது கைகளை வீசிவீசி விரட்டித் தோற்றுப்போகிறாள். இதுதான் இப்பாடல் வரிகள் கூறுகின்ற செய்தியாகும். இப்பாடலில் வரும் கூந்தல் என்பது பின்னந்தலை மயிராக இருந்தால், அவள் தனது பின்னந்தலையில் பூச்சூடி இருந்தாள் என்று பொருள்படும். அதேசமயம், பின்னந்தலையில் சூடி இருக்கும் பூக்களை வண்டுகள் மொய்த்தால் அவளுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதால் கைகளை வீசிவீசி அவ் வண்டுகளை விரட்டத் தேவையில்லை என்பதுடன் கைகளைப் பின்னால் கொண்டுசென்று அவற்றை விரட்டவும் முடியாது. ஆனால் இப்பாடலோ, தலைவியானவள் தனது கைகளை வீசி வண்டுகளை விரட்டித் தோற்றுப்போன செய்தியைக் கூறுகிறது. இதிலிருந்து, அவள் அந்த மலர்மாலையினை கண்ணிமைகளுக்கு மேலாகத் தனது நெற்றியில் தான் அணிந்திருக்க வேண்டும் என்பதும் அந்த மலர்மாலையினை மொய்த்த வண்டுகளையே அவள் விரட்டுவதற்காக முயன்று தோற்றாள் என்பதும் தெள்ளத் தெளிவாகிறது.

சான்று மூன்று:

அடுத்து, சங்ககாலத்தில் முதலிரவின்போது புதுமனைவியின் நாணம் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப்பாடல் கூறுவதைப் பார்க்கலாம்.

.... உவர்நீங்கு கற்பின் எம் உயிர் உடம்படுவி!
முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப்,   
பெரும்புழுக்குற்ற நின் பிறைநுதல் பொறிவியர்   
உறுவளி ஆற்றச் சிறுவரை திற' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின்   
உறைகழி வாளின் உருவுபெயர்ந்து இமைப்ப,   
மறைதிறன் அறியாள் ஆகி, ஒய்யென   
நாணினள் இறைஞ்சியோளே பேணிப்   
பரூஉப்பகை ஆம்பற் குரூஉத்தொடை நீவிச்   
சுரும்பிமிர் ஆய்மலர் வேய்ந்த
இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே - அகம். 136

முதலிரவின்போது மனைவியானவள் தனது சேலையினால் முழுவதும் தன்னை மறைத்து முகத்தையும் மூடியநிலையில் அமர்ந்திருக்கிறாள். ' உனக்கு வியர்த்திருக்கும்; காற்று வரட்டும் சிறிதே திறப்பாய் ' என்று கூறியவாறு அவளது முகத்தைக் காணும் ஆவலுடன் அவளது முகத்திரையினை மிகச்சிறிதே தூக்குகிறான் கணவன். உறையிலிருந்து உருவிய வாளினைப் போல ஒளிவீசுகின்ற அவளது கண்களைப் பார்க்கிறான். அவளோ தனது கண்களை மறைக்கும் வழியேதும் அறியாதவளாய் நாணத்தால் தலைகவிழவும், நெற்றியில் அணிந்திருந்த வண்டூதும் ஆம்பல் பூமாலை தாழ்ந்து இமைகளை அழுத்தவும் கண்களை மூடிக்கொள்கிறாள்.

இப்பாடலில் வரும் கூந்தல் என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டால், அவள் ஆம்பல் பூமாலையினைத் தனது பின்னந்தலை மயிரில் அணிந்திருந்ததாகப் பொருள்படும். ஆனால், உண்மையிலேயே அவள் தனது பின்னந்தலைமயிரில் பூமாலை அணிந்திருந்தால், அவள் தனது உடல் முழுவதையும் ஆடைகொண்டு மூடிமறைத்திருந்த நிலையில் (பார்க்க: முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇ ) , அப் பூமாலையினை அவளது கணவன் கண்டிருக்க முடியாது. கண்டிருக்கவே முடியாது எனும்போது அதைப்பற்றிப் பேசவோ அதில் வண்டுகள் ஊதியதைப் பற்றிக் கூறவோ அவனால் இயலாது. மேலும், கூந்தல் என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டால், வெட்கத்தினால் அவள் தனது பின்னந்தலை மயிரை முன்னால் எடுத்துப் போட்டுக்கொண்டுத் தனது கண்களை மறைத்ததாகப் (பார்க்க: இரும்பல் கூந்தல் இருள்மறை ஒளித்தே ) பொருள்வரும். ஆனால் எந்த ஒரு பெண்ணும் அவ்வாறு செய்யமாட்டார் குறிப்பாக மங்கலநாளாகிய மணநாளன்று யாரும் செய்யமாட்டார். இதிலிருந்து இப்பாடலில் வரும் கூந்தல் என்பது தலைமயிரைக் குறிக்காமல் கண்ணிமையைக் குறித்தே வந்துள்ளது என்பதும் அவள் பூமாலை அணிந்திருந்த இடம் நெற்றியே என்பதும் உறுதிசெய்யப்படுகிறது.

சான்று நான்கு:

அடுத்து கதுப்பு பற்றிக் காணலாம். பெண்கள் தமது கதுப்பிலும் பூக்களை அணிவது வழக்கம் என்று முன்னர் கண்டோம். கீழே வரும் ஐங்குறுநூற்றுப் பாடலை இன்னுமொரு சான்றாகக் கொள்ளலாம்.

.....புலிப்பொறி வேங்கைப் பொன்னிணர் கொய்துநின்
கதுப்பு அயல் அணியும் அளவை பைபய... - ஐங்கு.396

இப் பாடலில் வரும் கதுப்பு என்பதற்குக் ' கண்ணிமை ' என்ற பொருளும் உண்டென்று ' கதுப்பு - ஓதி - நுசுப்பு ' என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னர் கண்டோம். வேங்கை மரத்தில் இருந்து பொன்போன்ற மலர்ச்சரத்தினைக் கொய்து தனது கண்ணிமைக்கு அருகில் இருப்பதான நெற்றியில் அணிந்தாள் என்று இப்பாடல் கூறுகிறது. அவள் பூக்களை அணிந்திருந்த இடம் 'நெற்றியே' என்பதற்குக் ' கதுப்பு அயல் ' என்ற சொல்லாடலே போதுமான சான்றாகும்.

சான்று ஐந்து:

வண்டுகளும் சுரும்புகளும் ஞிமிறுகளும் தாம் நெற்றியில் அணிந்திருந்த பூக்களைத் தொடர்ந்து விடாமல் மொய்த்ததால் கடுப்பாகிய இளம்பெண்கள் என்னென்ன செய்தார்கள் என்பதை ஒரு சங்ககால ஓவியம்போல கண்முன்னால் நிறுத்துகின்றன கீழ்க்காணும் கலித்தொகையின் 92 ஆம் பாடலின் வரிகள்.

.... ஒருத்தி, கணம் கொண்டு அவை மூசக், கை ஆற்றாள், பூண்ட
மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி
வணங்கு காழ் வங்கம் புகும்;

( பொருள்: வண்டுகள் கூட்டமாக மொய்க்கவும் அவற்றைக் கைகளால் விரட்ட இயலாதவளாக இறுதியில் தான் நெற்றியில் அணிந்திருந்த மணம் வீசும் பூமாலையினைப் பிடுங்கி எறிந்துவிட்டு வளைந்த மரக்கழிகளால் செய்யப்பட்ட மரக்கலத்தில் புகுந்தாள் ஒருத்தி. )

ஒருத்தி, இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள்,
பறந்தவை மூசக் கடிவாள், கடியும்
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை;

(பொருள்: சுரும்புகள் அளவிறந்து மொய்த்தலால் கண்களை இமைகளால் மூடியவள் பறந்துகொண்டிருந்த வண்டுகளைத் தனது கைகளால் விரட்ட முனைந்து விரட்டும் இடம் அறியாமல் தோற்றுக் கை சோர்ந்தாள் ஒருத்தி. )

ஆங்க, கடி காவில் கால் ஒற்ற, ஒல்கி ஒசியாக்
கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல்,
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு
வண்டலவர்; கண்டேன், யான்;

(பொருள்: மணம் வீசுகின்ற சோலையிலே காற்று வீச, அங்கிருந்த கொடிகள் அசைந்து ஒன்றுக்கொன்று தமக்குள் பின்னிக்கொண்டவை போல, பெண்கள் தமது நெற்றியில் அணிந்திருந்த பூமாலைகளும் இழைகளும் அசைந்து ஒன்றுக்கொன்று பின்னிக்கொள்ள, தம்மை விடாது மொய்த்து அலைக்கழிக்கின்ற வண்டுகளைக் கண்டு அஞ்சி ஓடினர். )

சான்று ஆறு:

அடுத்து பரிபாடல் காட்டும் காட்சி ஒன்றினையும் சான்றாகக் காணலாம்.

.... கண்டார்க்குத் தாக்கு அணங்கு, இக் காரிகை; காண்மின்:
பண்டாரம், காமன் படை, உவள் கண்; காண்மின்:
நீல நெய்தல் கோதையவர் விலக்க நில்லாது,
பூ ஊது வண்டினம் யாழ் கொண்ட கொளை கேண்மின். 125 - பரிபாடல்.

பொருள்: காண்பவர்க்கு அணங்காகும் இப்பெண்ணைப் பாருங்கள்; செல்வக் கிடங்கு போலும் காமனின் படை போலும் தோன்றும் அப் பெண்ணின் கண்ணைப் பாருங்கள். நீலமும் நெய்தலும் தொடுத்து நெற்றியில் அணிந்திருந்த மாலையினை வண்டுகள் மொய்க்கவும் அவற்றை அவர்கள் விலக்கவும் விலகாமல் மீண்டும் மொய்க்கின்ற அவ் வண்டுகளின் யாழ்போன்ற ஒலியினைக் கேளுங்கள். 

வண்டுகளும் முயக்கமும்:

பெண்கள் தமது நெற்றியில் அணிந்த பூக்களின் மீது வண்டுகள் மொய்த்தலால் எவ்வளவு துன்பத்திற்கு ஆளானார்கள் என்று மேலே கண்டோம். அதுமட்டுமின்றி, பெண்கள் தமது கூந்தல், முலை, கதுப்பு, ஓதி, முச்சி, கூழை, ஐம்பால் என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுவதான இமைகளின்மேல் நெற்றியில் பூக்களை அணிந்தவாறு தமது காதலருடன் இரவில் முயங்கி இருக்கும்போது கூட வண்டுகள் அவர்களை மொய்க்கத் தவறவில்லை. கீழ்க்காணும் கலித்தொகை வரிகள் காட்டும் செய்தியைப் பார்க்கலாம்.

.... வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட   
ஞாங்கர் மலர் சூழ்தந்து, ஊர் புகுந்த வரி வண்டு,   
ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம்   
ஆங்கு அவை விருந்து ஆற்றப், பகல் அல்கிக், கங்குலான்,
வீங்கு இறை வடுக் கொள, வீழுநர்ப் புணர்ந்தவர்   
தேம் கமழ் கதுப்பின் உள் அரும்பு அவிழ் நறு முல்லைப்
பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து ... - கலி.66

பொருள்: ...காலையிலே வயலில் பூத்திருந்த நீலமலர்களை ஊதியபின்னர் ஊருக்குள் புகுந்த வண்டுகள், யானையின் நாற்றம் மிக்க மதநீரைப் பருகி பகலெல்லாம் கழித்த பின்னர் இரவிலே காதலில் வீழும் இருவருக்கிடையே சென்று காதலியானவள் தனது நெற்றியில் புதிதாகக் கட்டி அணிந்திருந்த முல்லைப் பூக்களையும் விடாமல் பாய்ந்து ஊதி....

இப்படிக் காதலர்கள் முயங்கி இருக்கும்போதும் அவர்களுக்குத் தொல்லை கொடுத்தன தும்பிகளும் வண்டுகளும். இப்படித் தொல்லை கொடுத்தாலும் தமது முயக்கத்தில் இருந்து சிறிதும் விலகாமல் இருக்க வேண்டும் என்றே பெண்கள் விரும்பினர். இதைப்பற்றிக் கூறும் அகநானூற்றுப் பாடல் கீழே:

வண்டு இடைபடாஅ முயக்கமும் தண்டா காதலும் தலைநாள் போன்மே - அகம் 332/14,15

முயக்கம் என்றால் என்ன என்பதைப் பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள 'சங்ககால முதலிரவும் காதலர் தினமும்', 'திருக்குறளில் முயக்கம்' , 'போகப்பொருளா பெண்கள்?' ஆகிய கட்டுரைகளைப் படிக்கலாம்.

முடிவுரை:

இதுவரை கண்ட சான்றுகளில் இருந்து சங்ககாலத்தில் பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் தான் பெரும்பாலும் பூக்களைச் சூடினர் என்பது உறுதிசெய்யப்படுகிறது. காதலன் காதலியின் நெற்றிப் பகுதியில் மணம் வீசும் பூக்களைச் சூட மையுண்ட அழகான இமைகளுக்கு மேலாக இருந்துகொண்டு அவை அசைவதைக் காண்பதில் காதலருக்குத் தனி இன்பம் தான் போலும். மூக்கிற்கு ஒரு நறுமணமும் தொடர்ந்து கிடைப்பதுடன் முகமானது இன்னும் பொலிவுடன் தோன்றும்.

நெற்றியில் பூக்களை அணிவதில் இவ்வளவு இன்பங்கள் இருந்தாலும் வண்டுகளினால் துன்பங்கள் இல்லாமல் இல்லை. இரவு பகல் என்றும் பாராமல் வண்டுகள் நெற்றியில் அணிந்த பூக்களை மொய்த்துத் தொல்லை கொடுத்தமையால் நாளடைவில் இப் பழக்கம் குறைந்து வழக்கற்றுப் போயிருக்க வேண்டும். அதற்காகப் பூக்களை அணியாமல் பெண்களால் இருக்கமுடியாதே. அதனால் வேறு வழியின்றி தலையின் பின்புற மயிரில் பூக்களைச் சூடிக் கொள்ளலாயினர். இப் புதிய பழக்கம் எப்போதிருந்து தோன்றியது என்பதை அறுதியிட்டுச் சொல்ல முடியாது. ஆனால், முதன்முதலில் தமிழ்ப் பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக நெற்றியில் தான் பூக்களை அணிந்தனர் என்னும் கருத்தானது ஆணித்தரமாக இக்கட்டுரையின் மூலம் உறுதிசெய்யப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.