செவ்வாய், 3 அக்டோபர், 2017

எண்ணும் எழுத்தும் - 5 ( தமிழ் எழுத்துக்களும் மதிப்பெண்களும் )

முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைப் பற்றிக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியான இதில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் காணலாம்.

மெய்யெழுத்துக்களும் மதிப்பும்:

முதலில் மெய்யெழுத்துக்களின் மதிப்பினைக் காணலாம். மெய்யெழுத்துக்கள் பதினெட்டினையும் ஆறு தொகுதிகளாகப் பிரித்து அவற்றுக்கான வினைச்சொற்களை இக் கட்டுரையின் இரண்டாம் பகுதியில் ஏற்கெனவே கண்டோம். அவை மறுபடியும் கீழே ஒரு அட்டவணையாகத் ( அட்டவணை எண்: 1) தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

தொகுதிபெயர்  எழுத்துக்கள்   சில வினைச்சொற்கள்

பொங்கர்         க், ங், ர்                  ஒன்றுபடுதல், திரளுதல் ....
நஞ்சை            ச், ஞ், ய்                 உயர்தல், எழுதல் .....
மண்டளி         ட், ண், ள்              வளைதல், தொங்குதல் .....
குழந்தை         த், ந், ழ்                 மழுங்குதல், எண்ணுதல் .....
வம்பு                 ப், ம், வ்               சமமாயிருத்தல், அமைதல் ......
முன்றில்         ற், ன், ல்              உட்குழிதல், இரண்டாதல் .......

அதேசமயம், ஒன்று முதல் ஒன்பது வரையிலான ஒவ்வொரு எண்ணும் குறிக்கின்ற பல்வேறு பொருட்களைப் பற்றி இக்கட்டுரையின் மூன்றாம் பகுதியில் ஏற்கெனவே கண்டோம். அவை மறுபடியும் கீழே ஒரு அட்டவணையாகத் ( அட்டவணை எண்: 2) தொகுத்துக் காட்டப்பட்டுள்ளது.

எண்         குறிக்கும் பொருட்கள்

ஒன்று        1, ஒன்றுபடுதல்
இரண்டு      2, அறுத்தல்
மூன்று       3, உதவி / இன்பம்
நான்கு       4, தொங்குதல்
ஐந்து           5, துன்பம்
ஆறு            6, அமைதல்
ஏழு              7, எழுதல்
எட்டு           8, முழுமையாதல், எண்ணுதல்.
ஒன்பது      9, உதவி / இன்பம், துன்பம்.

இப்போது மேலே கண்ட இரண்டு அட்டவணைகளையும் ஒப்பிடலாம். அதாவது, முதல் அட்டவணையில் காட்டப்படுகின்ற வினைச்சொற்களையும் இரண்டாம் அட்டவணையில் காட்டப்படுகின்ற பொருட்களையும் ஒப்பிட்டு, இவ் இரண்டிலும் எதெல்லாம் பொதுவாக வருகின்றதோ அவற்றை மட்டும் பிரித்துக் கீழே தனியாக ஒரு அட்டவணையில் ( அட்டவணை எண்: 3) காட்டப்படுகிறது.

பொதுப்பொருள்./வினை       எண்        எழுத்துக்கள்    

ஒன்றுபடுதல்                              ஒன்று         க், ங், ர்
அறுத்தல் / இரண்டாதல்        இரண்டு        ற், ன், ல்
தொங்குதல்                                  நான்கு         ட், ண், ள்
அமைதல்                                        ஆறு           ப், ம், வ்
எழுதல்                                              ஏழு            ச், ஞ், ய்
எண்ணுதல்                                    எட்டு           த், ந், ழ்

மெய்யெழுத்துக்கள் பதினெட்டிற்குமான எண்மதிப்புக்களை மேற்காணும் அட்டவணை எண் : 3 காட்டுகிறது.

உயிரெழுத்துக்களும் மதிப்பும்:

உயிரெழுத்துக்களின் வகைகளையும் அவை உணர்த்தும் பல்வேறு செய்திகளையும் இக் கட்டுரையின் நான்காம் பகுதியில் விரிவாகக் கண்டோம். அதை மறுபடியும் இங்கே ஒரு அட்டவணை வடிவில் ( அட்டவணை எண்: 4) தொகுத்துக் காணலாம்.

எழுத்துவகை            எழுத்துக்கள்        குறிக்கும் பொருட்கள்

சுட்டெழுத்துக்கள்        அ,ஆ,இ,ஈ,உ,ஊ      உதவுதல், எளிதாக்கல்
வினா எழுத்துக்கள்      எ, ஏ, யா, ஆ, ஓ     எழுதல், உயர்தல்
உணர்ச்சி எழுத்துக்கள்   ஐ, ஓ                      வியப்பு, மகிழ்ச்சி, அவலம்.
                                                                                      (இன்பம், துன்பம்)

மேற்காணும் அட்டவணை எண் 4 ல் வருகின்ற வினா எழுத்துக்களுள் ஆ, ஓ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் ஈற்றில் மட்டுமே நின்று வினாப்பொருள் தருவதாலும் ஏனை எழுத்துவகைகளில் (அதாவது சுட்டெழுத்துக்கள், உணர்ச்சி எழுத்துக்கள்) அவை பங்குபெறுவதாலும் இவ் இரண்டு எழுத்துக்களும் வினா எழுத்துக்கள் என்ற வகையில் இருந்து நீக்கப்படுகின்றன. இனி, அட்டவணை எண் 4 ல் உள்ள பொருட்களையும் அட்டவணை எண் 2 ல் உள்ள பொருட்களையும் ஒப்பிடலாம். இவ் இரண்டு அட்டவணைகளிலும் பொதுவாக வருகின்ற பொருட்களை மட்டும் தனியாகத் தொகுத்துக் கீழே அட்டவணை எண் 5 ல் கொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப்பொருள்             எண்         எழுத்துக்கள்

உதவுதல்/உதவி           மூன்று       அ,ஆ,இ,ஈ,உ,ஊ
எழுதல்                                 ஏழு          எ,ஏ
இன்பம், துன்பம்          ஒன்பது       ஐ, ஓ, ஒ

சில விளக்கங்கள்:
உயிர் எழுத்துக்களில் குறிப்பிட்ட எழுத்துக்களுக்கு குறிப்பிட்ட எண்மதிப்புக்களை அளித்தமைக்கான காரணங்களை இங்கே விளக்கமாகக் காணலாம்.

சுட்டெழுத்துக்கள் சொற்றொடர்களைச் சுருக்கி எளிமைப்படுத்தி எழுதவும் பேசவும் உதவுகின்றன என்று முன்னர் கண்டோம். சுட்டெழுத்துக்களைப் போலவே எண் மூன்றின் வடிவமானது தொலைவினைச் சுருக்கி பயணத்தை எளிமையாக்கி உதவுகின்ற ஒரு தூக்கி (லிஃப்ட்) போலவும் ஒரு சுருங்கை (சப்-வே) போலவும் இருப்பதால் சுட்டெழுத்துக்களுக்கு எண்மதிப்பாக மூன்றினை அளிப்பதே சாலப் பொருத்தமாகத் தோன்றுகிறது.

வினா எழுத்துக்கள் நமக்குள் புதிய சிந்தனைகளை எழும்பச்செய்து செயலில் ஈடுபடுத்தி நமது வாழ்வினை உயர்த்திக்கொள்ள அடிப்படையாக அமைகின்றன என்று முன்னர் கண்டோம். வினா எழுத்துக்களைப் போல எண் ஏழானது 'எழுதல், உயர்தல்' ஆகிய பொருட்களைச் சுட்டிக்காட்டுவதால், வினா எழுத்துக்களுக்கு எண்மதிப்பாக ஏழினை அளிப்பதே மிகப் பொருத்தமாகத் தோன்றுகிறது. யா என்ற வினா எழுத்தின் முதலாக வரும் ய் என்ற எழுத்து ஏற்கெனவே நஞ்சைத் தொகுதியில் வருவதாலும் இதன் மதிப்பாக எண் ஏழே கொடுக்கப்பட்டுள்ளதாலும் வினா எழுத்துக்களின் எண்மதிப்பு ஏழு என்பது மிகச் சரியாகவே அமைகின்றது.

உணர்ச்சி எழுத்துக்களை எடுத்துக்கொண்டால், அவை வாழ்க்கையில் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்ற இன்ப துன்பங்களை வெளிப்படுத்த உதவுகின்றன என்று முன்னர் கண்டோம். இந்த உணர்ச்சி எழுத்துக்களைப் போலவே எண் ஒன்பதின் வடிவமானது துன்பத்தில் உள்ள ஒருவருக்குத் தோள்கொடுத்து உதவிசெய்து அவரது துன்பத்தை நீக்கி மகிழ்ச்சிபெறச் செய்தல் மற்றும் உதவியின்றி தானே துன்புறச்செய்தல் ஆகிய இருநிலைகளையும் சுட்டிக்காட்டுவதால் உணர்ச்சி எழுத்துக்களுக்கு எண்மதிப்பாக ஒன்பதினை அளிப்பதே சாலப் பொருத்தமாகப் படுகிறது. ஓகார எழுத்து மட்டுமே உணர்ச்சி எழுத்து வகையில் வந்தாலும், ஒகார எழுத்தானது அதன் குறிலாக இருப்பதால் அதற்கும் எண்மதிப்பு ஒன்பது என்றே கொள்ளப்படுகிறது.

இதுவரை உயிர் எழுத்துக்களில் அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ,ஒ,ஓ ஆகியவற்றின் எண்மதிப்பினைப் பற்றிப் பார்த்தோம். இனி, எஞ்சி இருக்கின்ற ஔ, ஃ ஆகிய எழுத்துக்களுக்கான எண்மதிப்பினை எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம்.

ஔ என்ற உயிர் எழுத்தினை அவ் என்று எழுதுவதும் வழக்கமே என்று அறிவோம். அவ்வகையில்,

ஔ = அவ் = அ+வ் = 3+6 = 9 என்ற எண்மதிப்பினைப் பெறும்.

அதுமட்டுமின்றி, ஔ என்னும் எழுத்தானது ஒருவகையில் பார்த்தால் உணர்ச்சியை வெளிப்படுத்துகின்ற எழுத்தாகவும் சில நேரங்களில் பயன்படத்தான் செய்கின்றது. திடீரென்று வலி ஏற்பட்டாலும் எதிர்பாராத வகையில் ஏதேனும் தவறுகளைச் செய்துவிட்டாலும் 'ஔச்' என்று கத்துவது வழக்கமே. மிக அரிதாகவே பயன்படுத்தப்படுகின்ற இவ் எழுத்தினை ஓர் உணர்ச்சி எழுத்தாகவே கொண்டாலும் இதன் எண்மதிப்பாக ஒன்பதினைக் கொள்வது சாலப் பொருத்தமாகவே தோன்றுகிறது.

அடுத்து ஆய்த எழுத்தான ஃ என்ற எழுத்துக்கான எண்மதிப்பினை எவ்வாறு கணக்கிடுவது என்பதைப் பற்றிக் காணலாம். இந்த எழுத்தின் பெயரிலேயே ஆய்தம் என்று வருகிறது. பொதுவாக எந்த ஒரு ஆய்தமும் தாக்கி வருத்தவே செய்யும் என்று அறிவோம். அதுமட்டுமின்றி, ஒரு வல்லின எழுத்தின் முன்னால் ஆய்த எழுத்து பயின்று வரும்போது அது அவ் வல்லின எழுத்தினைத் தாக்கி அதனை மெலியச்செய்வதனை அறிவோம். சான்றாக,

எஃகு, அஃது, கஃசு, பஃறுளி, கஃடு.

இச் சொற்களில் ஆய்த எழுத்துக்களின் பின்னால் வரும் கு, து, சு, று, டு ஆகிய வல்லின எழுத்துக்களானவை வல்லினமாக அன்றி மென்மையாகவே ஒலிக்கப்படுவதனை அறிவோம். இப்படி ஆய்த எழுத்தானது ஒரு கூரிய ஆயுதத்தினைப் போல வல்லின எழுத்துக்களைத் தாக்கி வருத்தி மெலியச் செய்கின்ற பண்புடையதால் இதற்கு எண்மதிப்பாக ஐந்தினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றுகிறது. காரணம், எண் ஐந்தின் வடிவமானது பிறரது உதவி ஏதுமின்றி ஒருவர் தானே மெய்வருத்தித் துன்புற்று முயன்று முன்னேறுவதைக் காட்டுகிறது என்று இக் கட்டுரையின் மூன்றாம் பகுதியில் கண்டோம். எனவே, மெலிதல் / வருந்துதல் என்ற பண்பின் அடிப்படையில் ஆய்த எழுத்திற்கு எண்மதிப்பாக ஐந்து என்பது கொள்ளப்படுகிறது.

தமிழ் எழுத்துக்களும் மதிப்பெண்களும்:

இதுவரை மேலேகண்ட தமிழ் எழுத்துக்கள் ஒவ்வொன்றுக்குமான மதிப்பெண்ணைக் கீழே அட்டவணை எண் 6 ல் தனித்தனியே காணலாம்.

எழுத்து         மதிப்பெண்

உயிரெழுத்துக்கள்

அ                              3
ஆ                             3
இ                              3
ஈ                               3
உ                              3
ஊ                             3
எ                               7
ஏ                               7
ஐ                              9
ஒ                             9
ஓ                             9
ஔ                         9      
ஃ                               5

வல்லின மெய்யெழுத்துக்கள்

க்                              1
ச்                              7
ட்                             4
த்                             8
ப்                             6
ற்                            2

மெல்லின மெய்யெழுத்துக்கள்

ங்                            1
ஞ்                           7
ண்                          4
ந்                             8
ம்                            6
ன்                           2

இடையின மெய்யெழுத்துக்கள்

ய்                            7
ர்                             1
ல்                           2
வ்                           6
ழ்                            8
ள்                           4

மதிப்பெண்களும் தமிழ் எழுத்துக்களும்:

ஒரே மதிப்பெண்களைக் கொண்ட பல்வேறு எழுத்துக்களைக் கீழே அட்டவணை எண் 7 ல் தொகுத்துக் காணலாம்.

மதிப்பெண்           எழுத்துக்கள்

1                                    க், ங், ர்
2                                   ற், ன், ல்
3                                  அ, ஆ, இ, ஈ, உ, ஊ
4                                  ட், ண், ள்
5                                  ஃ ( ஆய்த எழுத்து )
6                                  ப், ம், வ்
7                                  ச், ஞ், ய், எ, ஏ
8                                  த், ந், ழ்
9                                  ஐ, ஒ, ஓ, ஔ.


.... தொடரும் .....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.

முன்னுரை:     ஒரு மொழியைச் சரியாகப் புரிந்து கொள்வதில் அம் மொழி சார்ந்த அகராதிகள் எவ்வளவு முக்கியமான பணியைச் செய்கின்றன என்பதை ...