செவ்வாய், 10 அக்டோபர், 2017

கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும்

முன்னுரை:

தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பல்வேறு பழமொழிகளில் கழுதை சார்ந்த பழமொழிகள் பல உண்டு. சிவனே என்று நின்றுகொண்டிருக்கும் கழுதை என்னதான் பாவம் செய்ததோ தெரியவில்லை. பல பழமொழிகளுக்குள் இதனை இழுத்துப்போட்டுத் தவறான பொருள்கூறி அதனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பல பழமொழிகளில் இரண்டே இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இங்கே காணலாம்.

கழுதையும் பழமொழிகளும்:

தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துவரும் கழுதை சார்ந்த பல்வேறு பழமொழிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான்.
குதிரையில்லா நாட்டில் கழுதை அரசாளும்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

இப் பழமொழிகளில் முதல் இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

1. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்:

இப்பழமொழிக்குத் தற்போது புரிந்துகொள்ளப்படுகின்ற கருத்தானது: கழுதையினைப் போல மதிகெட்டவர்கள் அமர்ந்து கதைபேசும் இடம் குட்டிச்சுவர். அதாவது, படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் தங்கள் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு பகலெல்லாம் அரட்டை அடிக்கும் இளைஞர்களைப் பார்த்து அவரது பெற்றோர் இப்படிக் கூறுவதைப் பல வீடுகளில் கேட்டிருக்கலாம்.

இளைஞர்கள் வேலைக்குப் போகாமல் குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு அரட்டை அடிப்பதற்கும் கழுதைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?. பொதுவாக, படிக்காத முட்டாள்களைக் கழுதையுடன் ஒப்பிடுவது உலக வழக்கம். படித்திருந்தும் படிக்காத முட்டாள்களைப் போல வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதனால் ஒருவேளை இந்த ஒப்பீடு செய்திருக்கலாமோ?. ஆனால்.... ஆனால்... படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்லரே!. படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்லரே!!. படிக்காத முட்டாளாகவே இருந்தாலும் வேலைக்குச் செல்கின்றனரே!!!. ஆக, படிப்புக்கும் முட்டாள்தனத்துக்கும் வேலைக்குப் போவதற்கும் எப்படி ஒருதொடர்பும் இல்லையோ அதைப்போலவே கழுதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றால், இப் பழமொழி உணர்த்தும் உண்மைப் பொருள்தான் என்ன?. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

மக்கள் பயன்பாட்டில் கழுதை:

மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யும் பல்வேறு விலங்குகளில் கழுதையும் ஒன்றாகும். பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு மட்டுமின்றி உழவுக்கும் கழுதையானது பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் சங்ககாலம் தொட்டே கழுதையானது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதற்குக் கீழ்க்காணும் பாடல்கள் சான்றாகும்.

.... தடவு நிலைப் பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் ..- பெரும்பாண்.

கழுதை சுமந்துவந்த மிளகு மூட்டையானது பலாப்பழம் போலத் தோன்றியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

... அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
வெள் வாய் கழுதை புல்இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ வாழிய பெரிது என ... - புறம். 392

வெற்றிபெற்ற போர்க்களத்திலே கழுதைகளை ஏரில் பூட்டி வெள்ளை வரகும் கொள்ளும் வித்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இனி பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். பொதுவாகக் கழுதைகள் மந்தமான நடையினை உடையவை. கழுதைகளைப் பொருள் போக்குவரத்திற்கோ உழவுக்கோ பயன்படுத்தும் முன்னர் அவற்றை நன்கு பழக்கவேண்டும். பழக்காவிட்டால் அவற்றிடம் இருந்து வேலைவாங்க முடியாது; உதைதான் வாங்கமுடியும்.

வேலைவாங்கினால் மட்டும் போதாது; அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். வேளாவேளைக்கு உணவும் நீரும் கொடுப்பதுடன் அதனைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழுதைதானே என்று சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மருண்டுவிடும் அதாவது குழம்பிவிடும். சரியாக உண்ணாது; கட்டளைகளை ஏற்று வேலைசெய்யாது. இதைத்தான் 'கழுதை கெடுதல்' என்று பழமொழி கூறுகிறது. இவ்வாறு கழுதையின் மனநிலை பாதிக்கப்பட்டாலோ உடல்நிலை கெட்டாலோ அதன் இயல்பான நடவடிக்கைகள் பாதிப்படையும். எந்தவேலையும் செய்யாமல் ஒரு குட்டிச்சுவர் போல அப்படியே நின்றுகொண்டிருக்கும். சிலநேரங்களில் சாலையின் நடுவிலோ பொது இடத்திலோ கழுதைகள் அப்படியே அசையாமல் சிலைபோல நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். ஓசை எழுப்பினாலும் கட்டளை இட்டாலும் ஒரு குட்டிச்சுவரைப் போல அவை நகராமல் இருப்பதன் காரணம் அவற்றின் மனநிலை அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதே.

இப்படி ஒரு கழுதையானது மனநிலை மற்றும் உடல்நிலையில் கெடும்போது / பாதிப்படையும்போது ஒரு குட்டிச்சுவரைப் போல அசையாமல் கட்டளைகளை ஏற்காமல் வேலைசெய்யாமல் நிற்பதையே இப்பழமொழி கூறுகிறது. இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:

கழுதையைப் போல ஒருவன் முட்டாளாக இருந்தாலும்
தன் மனநிலை / உடல்நிலை கெட்டுப் போனால்
குட்டிச்சுவரைப் போல பயனற்றுப் போவான்.

2. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல:

இப் பழமொழிக்குத் தற்போது கொள்ளப்படும் பொருள் இதுதான்: ' கழுதையானது தனது பெரிய உருவில் இருந்து மெலிந்து மெலிந்து ஒரு கட்டெறும்பு அளவுக்குச் சுருங்கியதைப் போல ' . மிக்க வளத்துடனும் பலத்துடனும் நல்ல நிலையில் இருந்து பின்னர் மெல்ல மெல்ல அனைத்தையும் இழந்து நிற்கும் நிலைக்கு இந்தப் பழமொழியினை ஒரு உவமையாகக் குறிப்பிடுவர்.

பழமொழி விளக்கம் சரியா?:

இப்பழமொழியின் விளக்கம் சரியா என்று பார்க்கலாம். இப் பழமொழியில் இரண்டு உயிரினங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று: கழுதை. இன்னொன்று: கட்டெறும்பு. இதில் வரும் கழுதை என்பதற்குப் பொதி சுமக்கும் நாலுகால் விலங்கு என்றும் கட்டெறும்பு என்பதற்குக் கருநிறம் கொண்ட பெரிய எறும்பு என்றும் பொருள்கொண்டால் பழமொழியின் விளக்கத்தில் கேள்விக்குறி எழுகிறது. காரணம், கழுதை எனும் விலங்கிற்கும் கட்டெறும்பிற்கும் என்ன தொடர்பு என்பதை அறிய முடியவில்லை. கழுதையின் எந்தவொரு பண்பினையும் கட்டெறும்பிற்குப் பொருத்திப் பார்க்க இயலவில்லை. அதுமட்டுமின்றி, கழுதை எவ்வளவுதான் மெலிந்தாலும் கட்டெறும்பின் அளவுக்குச் சுருங்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம். 

இல்லை இல்லை இங்கே கழுதை, கட்டெறும்பு ஆகிய சொற்கள் மோனை (முதலெழுத்து) நயம் பற்றித்தான் கூறப்பட்டுள்ளனவே அன்றி இவ் இரண்டுக்கும் இடையில் வேறு யாதும் தொடர்பில்லை என்று ஒருசிலர் கூறுகின்றனர். இவர்களது கருத்து தவறானதாகும். காரணம், மோனை அழகுக்காகத் தான் கழுதை என்ற சொல்லைப் பயன்படுத்தினர் என்றால் கழுதைக்குப் பதிலாக கரடியைச் சொல்லியிருக்கலாம். கழுதையைக் காட்டிலும் கரடி என்ற சொல் இன்னும் பொருத்தமாயிருக்கும். காரணம், கரடியும் கட்டெறும்பும் கருநிறம் கொண்டவை. ஆனால் அவ்வாறு கூறவில்லை. எனவே கழுதையும் கட்டெறும்பும் வெறும் மோனைநயம் பற்றிக் கூறப்படவில்லை என்பது உறுதியாகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இப் பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். இப் பழமொழியில் வரும் கழுதையும் கட்டெறும்பும் நேரடியாகத் தத்தம் பொருட்களை உணர்த்தாமல் ஆகுபெயராக நின்று அவற்றுடன் தொடர்புடைய பிற பொருட்களை உணர்த்தி நிற்கின்றன. அதாவது,

கழுதை என்பது ஆகுபெயராகக் கழுதை சுமக்கும் பொதிபோன்ற பெரும் செல்வத்தையும்
கட்டெறும்பு என்பது ஆகுபெயராகக் கட்டெறும்பு சுமக்கும் உணவுபோன்ற சிறிய பொருளையும்

இப் பழமொழியில் உணர்த்தி நிற்கின்றன. இனி இப்பழமொழியின் உண்மை விளக்கம் இதுதான்:

கழுதை = கழுதை சுமக்கும் பொதியின் அளவில் இருந்த பெரும் செல்வமானது
தேய்ந்து = மெல்ல மெல்லக் குறைந்து
கட்டெறும்பு ஆனதைப் போல = கட்டெறும்பு சுமக்கும் உணவின் அளவுக்குச் சிறுத்துப் போனதைப் போல.

இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து:

' சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் எவ்வளவு பெரிய பொருட்செல்வமும் வற்றிவிடும் '.

முடிவுரை:

பழமொழிகளின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள பொறுமை தேவைப்படுகிறது. அவசரப்பட்டுத் தவறான பொருட்களைப் புரிந்துகொண்டால் பழமொழிகள் கூறப்பட்டதன் நோக்கமே மாறிவிடும். இப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பழமொழிகளில் இரண்டைத் தான் மேலே கண்டிருக்கிறோம். வாழ்க தமிழ் !

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.