முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளைப் பற்றி விரிவாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் எண்களுக்கும் பொருளுண்டு என்பது தொடர்பான செய்திகளைக் கண்டோம். நான்காம் பகுதியில் உயிர் எழுத்துக்களுக்குள் ஒளிந்திருக்கும் பல உண்மைகளைப் பற்றி விளக்கமாகக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் ஒவ்வொரு தமிழ் எழுத்துக்குமான எண்மதிப்பினைப் பற்றி விரிவாகக் கண்டோம். ஆறாம் பகுதியான இதில் தமிழ் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை அளிப்பதால் என்னென்ன நன்மைகள் / பயன்பாடுகள் கிடைக்கும் என்பதைப் பற்றியும் கோள் / கிழமைப் பெயர்களுக்கு மதிப்பெண்களை அளிக்கும் முறை பற்றியும் விரிவாகக் காணலாம்.
எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் தேவையா?
எழுத்துக்களுக்கு மதிப்பெண்கள் அளிப்பது தேவையான செயல்தானா? அவற்றால் பயன் ஏதும் உண்டா?. என்று பலர் நினைக்கின்றனர். இக்கேள்விகளுக்கான விடை 'ஆம்' என்பதே ஆகும். தமிழ் எழுத்துக்களுக்கு மதிப்பெண்களை அளிப்பதால் உண்டாகும் சில பயன்கள் / பயன்பாடுகள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
> சொற்களைக் குறியீட்டு முறையில் ( கோடிங் ) மாற்றுவதற்கு மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம்.
> சொல்லுக்கும் பொருளுக்கும் இடையிலான தொடர்புகளை ஆராய மதிப்பெண்களைப் பயன்படுத்தலாம்.
இவற்றுள் முதல் இரண்டு பயன்பாடுகள் குறித்துத் தனிக்கட்டுரையில் விரிவாகக் காணலாம். இக் கட்டுரையில், கோள் / கிழமைப் பெயர்களுக்கு எவ்வாறு மதிப்பெண்களை அளிப்பது என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.
ஞாயிறு:
இது ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.
ஞாயிறு = ஞ் + ஆ + ய் + இ + ற் + உ
= 7 + 3 + 7 + 3 + 2 + 3
= 25 = 7
ஆக, ஞாயிற்றின் மதிப்பெண் ஏழு (7) ஆகும்.
திங்கள்:
இதுவும் ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.
திங்கள் = த் + இ + ங் + க் + அ + ள்
= 8 + 3 + 1 + 1 + 3 + 4
= 20 = 2
ஆக, திங்களின் மதிப்பெண் இரண்டு (2) ஆகும்.
செவ்வாய்:
இதுவும் ஒரு தமிழ்ச்சொல்லே ஆகும். ஏராளமான இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.
செவ்வாய் = ச் + எ + வ் + வ் + ஆ + ய்
= 7 + 7 + 6 + 6 + 3 + 7
= 36 = 9
ஆக, செவ்வாயின் மதிப்பெண் ஒன்பது (9) ஆகும்.
புதன்:
இது தமிழ்ச்சொல் இல்லை. அறிவினைக் குறிக்கும் 'புத்' என்ற வடமொழி வேருடன் 'அன்' எனும் தமிழ் விகுதியைச் சேர்த்து பயன்படுத்தி வருகிறோம். எனவே இதற்கான தூய தமிழ்ச்சொல்லினை முதலில் காணவேண்டும். அறிவுடன் தொடர்புடையதால் இதனை ' அறிவன் ' என்றே தமிழ்ப்படுத்தலாம். இனி அறிவன் என்னும் தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.
அறிவன் = அ + ற் + இ + வ் + அ + ன்
= 3 + 2 + 3 + 6 + 3 + 2
= 19 = 1
ஆக, அறிவன் என்னும் புதனுக்கான மதிப்பெண் ஒன்று (1) ஆகும்.
வியாழன்:
இதுவும் தமிழ்ச்சொல் இல்லை. மந்திரி, குரு போன்றோரைக் குறிக்கின்ற வடசொல்லான இதற்குச் சரியான தமிழ்ச்சொல் அந்தணன் என்பதாகும். பல்வேறு தமிழ் நிகண்டுகளும் அந்தணன் என்ற பொருளைக் கூறுவதால் வியாழன் என்பதனை அந்தணன் என்றே தமிழ்ப்படுத்தலாம். இனி அந்தணன் என்ற தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.
அந்தணன் = அ + ந் + த் + அ + ண் + அ + ன்
= 3 + 8 + 8 + 3 + 4 + 3 + 2
= 31 = 4
ஆக, அந்தணன் ஆகிய வியாழனின் மதிப்பெண் நான்கு (4) ஆகும்.
வெள்ளி:
இது ஒரு தமிழ்ச்சொல் ஆகும். ஏராளமான தமிழ் இலக்கியங்களிலும் இச்சொல் இவ்வாறே பயின்று வந்துள்ளது. எனவே இச்சொல்லை அப்படியே எடுத்துக்கொண்டு இதன் மதிப்பெண்ணைக் காணலாம்.
வெள்ளி = வ் + எ + ள் + ள் + இ
= 6 + 7 + 4 + 4 + 3
= 24 = 6
ஆக, வெள்ளியின் மதிப்பெண் ஆறு (6) ஆகும்.
சனி:
இதுவும் தமிழ்ச்சொல் இல்லை. சனி என்றாலே கருமை நிறமே நினைவுக்கு வரும். வடமொழிச் சொல்லான இதற்குக் காரி என்றே நிகண்டுகள் பொருள் உரைப்பதால் அவ்வாறே தமிழ்ப்படுத்தலாம். இனி காரி என்ற தமிழ்ச்சொல்லுக்கான மதிப்பெண்ணைக் கீழே காணலாம்.
காரி = க் + ஆ + ர் + இ
= 1 + 3 + 1 + 3
= 8
ஆக, காரி என்ற சனியின் மதிப்பெண் எட்டு (8) ஆகும்.
கிழமை / கோள்களும் மதிப்பெண்களும்:
இதுவரை மேலே கண்ட கிழமை / கோள்களின் மதிப்பெண்கள் கீழே அட்டவணை எண்: 1 ல் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
கிழமை / கோள் பெயர் மதிப்பெண்
ஞாயிறு 7
திங்கள் 2
செவ்வாய் 9
அறிவன் (புதன்) 1
அந்தணன் (வியாழன்) 4
வெள்ளி 6
காரி (சனி) 8
மேற்காணும் அட்டவணையில், திங்கள், செவ்வாய், வெள்ளி, சனி ஆகிய நான்கு கோள்களுக்குத் தமிழ் முறைப்படி மேலே கொடுக்கப்பட்டிருக்கும் மதிப்பெண்களும் மேலைநாட்டாரின் இன்றைய எண்கணிதத்தில் கொடுக்கப்பட்டுள்ள மதிப்பெண்களும் ஒத்திருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.
... தொடரும் ......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.