முன்னுரை:
தமிழில்
வழங்கிவரும் பல்வேறு பண்புப் பெயர்களில் செம்மை என்பதும் ஒன்றாகும். செம்மை என்னும்
பண்புப் பெயர் வருமொழிக்கு ஏற்பப் பலவாறு மாறுதல்களை அடையும். செம்மையும் தமிழும் சேர்ந்து
செந்தமிழ் ஆகும். செம்மையும் மொழியும் சேர்ந்து செம்மொழி ஆகும். செம்மையும் சடையும்
சேர்ந்து செஞ்சடை ஆகும். செம்மையும் காலும் சேர்ந்து செங்கால் ஆகும். செம்மையும் கண்ணும்
சேர்ந்து செங்கண் ஆகும். சங்க இலக்கியம் உட்பட தமிழ் இலக்கியங்கள் பலவற்றிலும் பரவலாகப்
பயன்படுத்தப்பட்டுள்ள செம்மை என்னும் பண்புப் பெயருக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள்
காட்டியுள்ள பொருட்கள் நீங்கலாக புதிய பொருள் உள்ளதா என்பதை ஆய்வதே இந்தக் கட்டுரையின்
நோக்கமாகும்.
செம்மை
- தற்கால அகராதிப் பொருட்கள்:
செம்மை
என்னும் சொல்லுக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள பொருட்களைக் கீழே காணலாம்.
இணையத்
தமிழ்ப் பேரகராதி: - n. 1. Redness,
ruddiness; சிவப்பு. (திவா.) 2. Goodness, soundness, good condition; செவ்வை. (திவா.)
3. Spotlessness; uprightness, directness, rectitude; நேர் மை. செம்மையி னிகந்தொரீஇ
(கலித். 14). 4. Fairness, impartiality; மனக்கோட்டமின்மை. செம் மையுஞ் செப்பும் (தொல்.
பொ. 209). 5. Unity, concord, agreement; ஒற்றுமை. (J.) 6. Excellence, eminence,
greatness; பெருமை. (திவா.) செம்மை சான்ற காவிதி மாக்களும் (மதுரைக். 499). 7.
Fineness; neatness, cleanliness; சுத்தம். (W.) 8. Beauty, grace, elegance; அழகு.
(W.) 9. Moon's descending node; கேது. (சூடா.) 10. Sulphur; கந்தகம். செம்மை முன்
னிற்பச் சுவேதம் திரிவபோல் (திருமந். 2455).
ஃபேப்`ரிசி`யச்`
அகராதி - 1) செம்மை cemmai (p. 170) , s. redness, orange or gold colour, சிவப்பு;
2. straightness, evenness, rectitude, honesty uprightness, செவ்வை; 3. equality,
equity, justice, நேர்மை; 4. excellence, grace, elegance, dignity, பெருமை.
வின்சு`லோ
அகராதி - 1) செம்மை cemmai (p. 204) s. Straightness, exactness, செவ்வை. 2.
Uprightness, correctness, fitness, rectitude, செப்பம். 3. Integrity, ஒழுக் கம்.
4. Fineness, neatness, சுத்தம். 5. Beauty, comeliness, grace, elegance,
handsomeness, அழகு. 6. Excellence, eminence, superbness, மேன்மை. 7.
Respectability, dignity, பெருமை. 8. Redness, ruddiness, orange or gold color, சிவப்பு.
9. [prov.] Unity, concord, agreement, மாறின்மை.
பொருள்
பொருந்தாத இடங்கள்:
செம்மை
என்னும் சொல்லுக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் மேலே காட்டியுள்ள பல்வேறு பொருட்களில்
எதுவும் பொருந்தாத சில இலக்கிய இடங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே சான்றாகக்
காணலாம்.
முதலில்
மரப்பெயருடன் தொடர்புடைய சில சான்றுகளைக் காணலாம். கீழ்க்காணும் பாடல்களில் மரா மரத்தினைப்
பற்றிக் குறிப்பிடுகையில் செங்கால் என்ற அடைமொழியுடன் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.
செங்கால்
மராஅத்த வால் இணர் இடை இடுபு - திரு 202.
செங்கால்
மராஅத்த வரி நிழல் இருந்தோர் - ஐங் 381.
செங்கால்
என்ற அடைமொழியில் வரும் செம்மை என்பது அகராதிகள் கூறுவதைப் போலச் சிவப்புநிறத்தைக்
குறிக்குமா எனில் குறிக்காது. காரணம், மரா மரத்தின் கால் சிவப்பு நிறம் கொண்டது அல்ல.
இதைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் உறுதிசெய்கின்றன.
கருங்கால்
மராத்து வாஅல் மெல் இணர் - அகம் 127.
கருங்கால்
மராஅத்து வைகு சினை வான் பூ - ஐங் 331
கருங்கால்
மராஅத்து கொழும் கொம்பு பிளந்து - அகம் 83
அடுத்து,
விலங்குப் பெயர்களுடன் தொடர்புடைய சில சான்றுகளைக் காணலாம். கீழ்க்காணும் பாடல்கள்
மான், எருமை, வரால் மீன் ஆகியவற்றின் கண்களைப் பற்றிக் கூறுகின்றன.
சிலை
ஒலி வெரீஇய செங்கண் மரை விடை - மலை 406
பிடி
கை அன்ன செங்கண் வராஅல் - மலை 457
செங்கண்
எருமை இனம் பிரி ஒருத்தல் - மலை 472
மான்,
எருமை, வரால் மீன் ஆகியவற்றின் கண்களைச் செங்கண் என்ற அடைமொழியால் மேற்பாடல்கள் கூறுகின்றன.
இதில் வரும் செம்மை என்பது அகராதிகள் கூறுவதைப் போலச் சிவப்பு நிறத்தைக் குறிக்காது
என்பது தெளிவு. காரணம், இந்த மூன்று விலங்குகளில் எதனுடைய கண்களும் சிவப்பு நிறத்தில்
இருப்பதில்லை.
இதுவரை
கண்டதிலிருந்து, செம்மை என்னும் பண்புப் பெயருக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள
பொருட்களைத் தவிர புதிய பொருளும் உண்டென்பது உறுதியாகிறது.
செம்மை
- புதிய பொருள் என்ன?
செம்மை
என்னும் பண்புப் பெயரானது அகராதிப் பொருட்கள் நீங்கலாக,
கருமைநிறம்
என்னும் புதிய பொருளையும் குறிக்கும்.
நிறுவுதல்:
செம்மை
என்னும் பண்புப் பெயருக்குக் கருமைநிறம் என்னும் புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று
காண்பதற்கு முன்னால், அப்பொருளை ஏன் கொண்டனர் ?. என்ற கேள்விக்கான விடையினைக் காணலாம்.
இவ்விடையினை அறியும்முன், சிவப்பு நிறத்திற்கும் கருப்பு நிறத்திற்கும் இடையில் உள்ள
தொடர்பினைப் பற்றி அறியவேண்டிய தேவை இருக்கிறது. இயற்கையிலேயே கருப்புநிறத்திற்கும்
சிவப்புநிறத்திற்கும் இடையில் தொடர்பு இருக்கிறது. கருப்பு நிறத்தில் இருக்கும் இரும்பானது
நாளடைவில் துருப்பிடித்துச் சிவப்பு நிறம் அடைகிறது. சிவப்பு நிறத்தில் இருக்கும் சிந்திய
குருதியானது நாளடைவில் கருப்புநிறம் அடைகிறது. அதுமட்டுமின்றி, சில இயற்கைப் பொருட்கள்
துவக்கத்தில் சிவப்பு நிறத்திலும் நாளடைவில் கருப்புநிறமும் அடைகின்றன. இதன் முதன்மைக்
காரணம் அவற்றில் உள்ள இரும்புத் தனிமம் ஆகும். இரும்பில் ஃபெர்ரச்` , ஃபெர்ரிக் என்று
இருவகைகள் உண்டு. இவற்றில் ஃபெர்ரச்` என்பது கருப்புநிறத்தில் இருக்கும். இது காற்றில்
உள்ள உயிர்வளியுடன் வேதிவினை புரிந்து ஃபெர்ரிக் என்னும் சிவப்புநிறப் பொருளாக மாறும்.
இதற்குச் சான்றாகத் துருப்பிடித்தல் வினையைக் கூறலாம். ஒரு பொருளில் எந்தவகை இரும்பு
அதிகம் உள்ளதோ அதைப் பொறுத்தே அப்பொருளின் சிவப்பு, கருப்பு நிறங்கள் அமைகின்றன. சில
சான்றுகள்: செம்மண் - கரிசல்மண், செவ்வேல மரம் - கருவேல மரம், செங்குவளை - கருங்குவளை.
மனிதர்களிலும், கருப்பாக இருக்கும் ஆண் சிவப்பான பெண்ணை விரும்புவதும் சிவப்பான பெண்
கருப்பாக இருக்கும் ஆணை விரும்புவதும் இயற்கையின் விதிதான். இப்படியாகக், கருப்புநிறத்திற்கும்
சிவப்பு நிறத்திற்கும் இடையில் ஒரு ஈர்ப்பு / தொடர்பு இருப்பதாலேயே செம்மை என்னும்
சொல்லுக்குச் சிவப்புநிறம் தவிர கருப்பு நிறத்தையும் ஒரு பொருளாகக் கொண்டிருக்க வேண்டும்
என்று தோன்றுகிறது.
இனி,
செம்மை என்னும் பண்புப் பெயரானது கருப்புநிறம் என்னும் பொருளில் வழங்கிவரும் இடங்களைப்
பார்க்கலாம். முதலில் மரா மரம் பற்றிவரும் பாடல்களைப் பார்க்கலாம்.
செங்கால்
மராஅத்த வால் இணர் இடை இடுபு - திரு 202.
செங்கால்
மராஅத்த வரி நிழல் இருந்தோர் - ஐங் 381.
செங்கால்
மராஅத்து அம் புடை பொருந்தி - நற் 148
செங்கால்
மராஅம் தகைந்தன பைம் கோல் - கார்.19
இப்பாடல்களில்
வரும் செங்கால் என்பது மராமரத்தின் கருநிறத் தண்டு / காலினைக் குறிப்பதாகும். மரா மரத்தின்
கால்கள் கருநிறம் கொண்டவை என்பதைக் கீழ்க்காணும் பாடல்வரிகளாலும் அறியலாம்.
கருங்கால்
மராத்து வாஅல் மெல் இணர் - அகம் 127.
கருங்கால்
மராஅத்து வைகு சினை வான் பூ - ஐங் 331
கருங்கால்
மராஅத்து கொழும் கொம்பு பிளந்து - அகம் 83
அடுத்து,
தோட்டங்களில் விளையும் தினைகளைப் பற்றிக் காணலாம். கீழ்க்காணும் பாடல்களில் செந்தினையின்
கதிரினை யானையின் தும்பிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது.
யானைத்
தடக்கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைம்தாள் செந்தினை - நற்.376
கரும்புமருள்
முதல பைம்தாள் செந்தினை மடப்பிடி தடக்கை அன்ன பால்வார்பு
கரிக்குறட்டு
இறைஞ்சிய செறிகோள் பைம்குரல் - குறு.198
இப்பாடல்களில்
வரும் செந்தினை என்பது கருப்புநிற மக்காச்சோளத்தினைக் குறிப்பதாகும். யானையின் கருப்புநிறத்
தும்பிக்கையுடன் செந்தினையை ஒப்பிட்டுக் கூறியிருப்பதில் இருந்தே இதனை உறுதிசெய்து
கொள்ளலாம். கருப்புநிறத்தில் பெரிய பெரிய கதிர்களாக நீண்டு வளர்ந்து ஒரங்களில் வெண்ணிறத்
தோல்கள் உரிந்து தொங்கியநிலையில் அக்கதிர்களைப் பார்ப்பதற்கு இரண்டு வெண்ணிற மருப்புகளுக்கு
இடையில் நீண்டு தொங்கும் யானையின் கருப்புநிறத் தும்பிக்கையைப் போல இருந்ததாக மேற்பாடல்கள்
கூறுகின்றன. அருகில் உள்ள படத்தில் யானையின் தும்பிக்கையும் கருப்பு மக்காச்சோளமும்
ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளது.
அடுத்து,
வரால் மீன்களைப் பற்றிய பாடல்களைக் காணலாம். கீழ்க்காணும் பாடல்களில் வரால் மீன்களின்
கண்கள் பேசப்பட்டுள்ளன.
பிடி
கை அன்ன செங்கண் வராஅல் - மலை 457
செங்கண்
வரி வரால் மீன் பிறழும் காவிரி நாடன் - கள.7
இப்பாடல்களில்
வரும் செங்கண் என்பது வரால் மீன்களின் கரிய கண்களைக் குறிப்பதாகும். அருகில் வரால்
மீனின் படம் காட்டப்பட்டுள்ளது. இதிலிருந்து வரால் மீன்களின் கண்கள் கருப்புநிறத்தவையே
என்பதை உறுதியாக அறிந்துகொள்ளலாம்.
அடுத்து,
எருமைமாடுகளைப் பற்றிய பாடல்களைப் பார்க்கலாம். கீழ்க்காணும் பாடல்கள் எருமை மாட்டின்
கண்களைப் பற்றிக் கூறுகின்றன.
செங்கண்
எருமை இனம் பிரி ஒருத்தல் - மலை 472
சேற்று
நிலை முனைஇய செங்கண் காரான் - குறு 261, அகம். 46
கரும்
கோட்டு எருமை செங்கண் புனிற்று ஆ - ஐங் 92
உழலை
முருக்கிய செந்நோக்கு எருமை - ஐந்.எழு.46
கரும்
கோட்டு செங்கண் எருமை கழனி - திணைநூற். 137
செங்கண்
கரும் கோட்டு எருமை சிறுகனையா - திணைநூற். 147
மேற்காணும்
பாடல்களில் வரும் செங்கண் / செந்நோக்கு என்பது எருமை மாடுகளின் கருப்புநிறக் கண்களையே
குறித்து வந்துள்ளன. அருகில் எருமை மாட்டின் படம் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து,
எருமை மாடுகளின் கண்கள் கருநிறம் கொண்டவையே என்பதை உறுதியாகத் தெரிந்து கொள்ளலாம்.
எருமைகளைப் போலவே, மான்களின் கண்களும் கருநிறம் கொண்டவையே. இதைப்பற்றிக் கீழ்க்காணும்
பாடலில் காணலாம்.
சிலை
ஒலி வெரீஇய செங்கண் மரை விடை - மலை 406
மேற்பாடலில்
வரும் செங்கண் என்பது மானின் கருநிற விழிகளைக் குறிக்கும். அருகில் மானின் படம் காட்டப்பட்டுள்ளது.
இதிலிருந்து, மானின் கண்கள் கருநிறம் கொண்டவை என்பதை உறுதியாக அறியலாம்.
முடிவுரை:
செம்மை
என்னும் பண்புப் பெயர்ச் சொல்லுக்குக் கருமை என்ற பொருளைத் தமிழ் அகராதிகள் காட்டாத
காரணத்தினால் பல பாடல்களில் பொருள் குழப்பம் நேர்ந்துள்ளது. மேலே கண்ட பாடல்களில் செங்கண்
/ செந்நோக்கு, செங்கால், செந்தினை ஆகிய சொற்கள் வரும் இடங்களில் எல்லாம் சிவப்புக்
கண்கள், சிவப்புக் கால்கள், சிவப்புத் தினைகள் என்றே பொருள்கொண்டு தவறான உரைகளை எழுதியுள்ளனர்.
இக் கட்டுரையைப் படித்தபின்னர், உரைகளில் நேர்ந்துள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டு விடுவர்
என்றாலும் செம்மை என்னும் சொல்லுக்குக் கருநிறம் என்ற புதிய பொருளைத் தமிழ் அகராதிகளில்
கூடிய விரைவில் சேர்க்கவேண்டும் என்பதே இக்கட்டுரையின் முடிபாகும்.
மிக அற்புதம்
பதிலளிநீக்குநன்றி ஐயா.:))
நீக்குமிகவும் நன்று பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி ஐயா. :))
நீக்குசெம்மை பற்றி இவ்வளவு விளக்க முடியுமா?
பதிலளிநீக்கு:))
நீக்கு