புதன், 4 ஏப்ரல், 2018

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 9 - எருமை


முன்னுரை:

எருமை - என்றவுடனே கருத்த பெரிய உடலுடன் சோம்பலுடன் நடந்துவரும் அந்த விலங்குதான் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும். உருவத்தில் மட்டும் பெருமையும் அறிவில் சிறுமையும் கொண்டவர்களை 'எருமைமாடு மாதிரி வளர்ந்திருக்கே. கொஞ்சம்கூட அறிவில்லையா?.' என்று பெற்றோர் உட்பட பலரும் திட்டுவதை அடிக்கடி பல இடங்களில் காணலாம். அதாவது, எருமைக்கு உடல்தான் மிகப் பெரியதே தவிர அறிவு மிகச்சிறியது என்பதே இதனால் உணர்த்தப்படும் கருத்தாகும். பசுமாடுகளைப் போலவே எருமைமாடுகளும் வளர்ப்பு விலங்குகளாக இல்லங்களில் வளர்க்கப்பட்டு வருவதால் எருமை இனம் இன்னும் அழியவில்லை. களவேள்விகளிலும் சில விழாக்களிலும் பசுமாடுகளைப் பலியிடுவதற்குப் பதிலாக எருமைகளைப் பலியிடும் பழக்கம் இன்னமும் தொடர்கிறது. பால், தோல், இறைச்சி, கொம்பு என்று எருமையின் உடலைக் கூறுபோட்டு உண்டாலும் உணவில்லாத வறட்சிக் காலங்களில் பல ஊர்களில் எருமைப்பாலே குழந்தைகளை மரணத்தில் இருந்து காப்பாற்றி வந்திருக்கிறது. சங்ககாலத் தமிழகத்தில் வாழ்ந்துவந்த பல்வேறு விலங்குகளைப் பற்றிப் பதிவுசெய்து வைத்துள்ள மூத்த அறிவுக் களஞ்சியமான சங்க இலக்கியத்தில் எருமை மாடுகளைப் பற்றிக் கூறியுள்ள பல்வேறு செய்திகளை இங்கே விரிவாகக் காணலாம்.

எருமை - பெயர்களும் காரணங்களும்:

எருமை என்னும் விலங்கினைக் குறிக்க, இப்பெயர் உட்பட, காரான், மையான், மேதி, மூரி, மை ஆகிய பெயர்களையும் சங்ககாலத் தமிழ் இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள்,

எருமை என்னும் பெயர் அதிகமான எருவினைப் போடும் கரிய விலங்கு என்னும் பொருளிலும்
காரான் (கார்+ஆன்) என்னும் பெயர் கருமைநிறமுள்ள மாடு என்னும் பொருளிலும்
மேதி என்னும் பெயர் 'மெது' என்பதன் அடிப்படையாய், தாமதநடையும் மந்தகுணமும் கொண்டது என்னும் பொருளிலும்
மூரி என்பது சோம்பல் மிகுந்த விலங்கு என்னும் பொருளிலும்
மை / மையான் (மை+ஆன்) என்னும் பெயர்கள் கருமைநிறம் கொண்ட மாடு என்ற பொருளிலும்

அமைந்தவை எனலாம். இந்திய மொழிகளில் எருமை மாட்டைக் குறிக்கும் பெயர்களுக்கும் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள மேற்காணும் பெயர்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்புண்டா என்று பார்க்கலாம்.

இந்தி, செங்கிருதம், பெங்காலி, மராட்டி - மஹிஸ - சங்கத்தமிழ்ப் பெயரான மை என்பதன் திரிபு.
மை - மஇ - மஹி - மஹிஸ். ( ஒப்பீடு: தயிர் - தயி - தஇ - தஹி )
கன்னடம் - எம்மெ - சங்கத் தமிழ்ப் பெயரான எருமை என்பதன் திரிபு.
மலையாளம் - எரும - சங்கத் தமிழ்ப் பெயரான எருமை என்பதன் திரிபு.
மலையாளம் - போத்து - ஆண் எருமையைக் குறிக்கும் சங்கத் தமிழ்ப் பெயர்.
தெலுங்கு - எனுமு - சங்கத் தமிழ்ப் பெயரான எருமை என்பதன் திரிபு.

சங்க இலக்கியத்தில் எருமை:

எருமை என்னும் விலங்கானது போவிடே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பாலூட்டியாகும். இக் குடும்பத்தில் பசுமாடு உட்பட பலவகைகள் உள்ள நிலையில் எருமையே அவற்றுள் மிகப் பெரிய விலங்காகும். சங்க இலக்கியத்தில் பேசப்பட்டுள்ள எருமையானது நீர் எருமை வகையைச் சேர்ந்ததாகும். இதன் விலங்கியல் பெயர் புபாலஸ் புபாலிஸ் (Bubalus Bubalis) ஆகும். இந்தியத் துணைக் கண்டம் முழுவதிலும் பரவலாகக் காணப்படும் இந்த நீர் எருமையினை ஆற்று எருமை என்றும் சேற்று எருமை என்றும் இருவகைப்படுத்தலாம். சங்ககாலத் தமிழகத்தில் இந்த இருவகை எருமைகளும் வாழ்ந்திருக்கின்றன என்றாலும் சேற்று எருமையே அதிகம் பேசப்பட்டிருக்கிறது. பொதுவாக எருமைகள் கருநிற உடல் கொண்டவை என்றும் அதன் முதுகில் மெல்லிய மயிர்கள் காணப்படும் என்றும் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. எருமையின் கருத்த உடலைக் கருங்கல்லோடும் படகோடும் ஒப்பிட்டுக் கூறுகிறது. காட்டெருமைக்கு மாறாக, நீர் எருமையின் கால்கள் கருநிறம் கொண்டவை என்று பலபாடல்களில் கூறுகிறது. எருமையின் மதர்த்த நடையினை போர்வீரனின் செருக்கிய நடையுடன் ஒப்பிடுகிறது. எருமையின் கொம்புகள் பல திரிபுகளை உடையது என்றும் அவை அதன் தலைக்குப் பின்புறமாக நீண்டு உள்நோக்கி வளைந்திருக்கும் என்று கூறுகிறது.  எருமையின் வளைந்த கொம்புகளை இரும்பினால் செய்த வாள்கருவியுடனும் பேடியின் வாள்பிடித்த கையுடனும் காய்ந்த பயிரின் நீண்ட நெற்றுக்களுடனும் ஒப்பிட்டுக் கூறுகிறது. எருமையின் உணவினைப் பற்றிக் கூறுமிடத்து, அது ஒரு தாவர உணவுண்ணியாக, நெற்கதிர் முதலான பயிர்களையும் ஆம்பல், தாமரை, நெய்தல், கழுநீர், பசுமோரோடம், குவளை போன்ற மலர்களையும் உண்டதாகப் பதிவுசெய்துள்ளது. பகலில் அதிகம் இரைதேடாமல் நீர்நிலைகளிலும் சேற்றுநிலைகளிலும் மரநிழலிலும் பொழுதைக் கழிக்கும் எருமைகள் இரவிலும் அதிகாலையிலும் மேயச்செல்லும் என்ற செய்திகளைப் பதிவுசெய்துள்ளது. காளைகளைப் போலவே சங்ககாலத் தமிழகத்தில் எருமைகளை உழவுக்குப் பயன்படுத்திய செய்திகளும் காணப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் எருமைகளைப் பற்றிக் கூறியுள்ள பல்வேறு செய்திகளைப் பற்றி விரிவாகக் கீழ்க்காணும் தலைப்புக்களில் காணலாம்.
.
1. எருமையின் உடல்
2. எருமையின் கொம்புகள்
3. எருமையின் கால்கள்
4. எருமையின் உணவு
5. எருமையும் உழவும்
6. எருமையும் நீரும் சேறும்
7. எருமை இரவில் மேய்தல்
8. எருமையும் உவமைகளும்

1. எருமையின் உடல்:

எருமை என்றாலே அதன் கருமைநிறம் தான் நம் அனைவரின் கண்முன்னர் வந்து நிற்கும். அதன் கருமை நிறத்தை அடிப்படையாகக் கொண்டே அதற்கு மை / மையான் என்றும் காரான் என்றும் பெயர்கள் அமைந்தன என்று முன்னர் கண்டோம். எருமையின் உடல் கருமைநிறம் கொண்டது என்பதைக் குறிக்கும் விதமாக அமைந்திருக்கும் சங்கப் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

எருமை அன்ன கருங்கல் இடைதோறும் - புறம்.5

மேற்காணும் பாடலில் எருமையானது கருங்கல்லுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து எருமையானது கருங்கல்லைப் போலவே கருமைநிறம் கொண்டது என்ற செய்தியைப் பெறலாம்.

திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் - குறு. 279

இப்பாடலானது எருமையின் நிறத்தினை இருள்நிறம் என்று தெளிவாகவே கூறுகிறது.

திரி மருப்பு எருமை மயிர் கவின் கொண்ட மா தோல் இரும்புறம் .. - அகம். 206

எருமையின் தோல் கருமைநிறம் கொண்டது என்பதை இப்பாடலில் வரும் 'மா தோல்' என்ற சொல் உணர்த்துகிறது.

தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும்போத்து .- நற். 330
நெறி மருப்பு எருமை நீல இரும்போத்து - ஐங்கு. 91

இப்பாடல்களில் வரும் இரும்போத்து என்பது கருமைநிற ஆண் எருமையைக் குறித்து வந்துள்ளது.

எருமையின் உடலில் முதுகுப்பகுதியில் மெல்லிய மயிர்கள் காணப்படும். இதைப்பற்றிக் கூறும் சங்கப்பாடல் வரிகள் கீழே:

கயவாய் எருமை பைங்கறி நிவந்த பலவின் நீழல்
மஞ்சள் மெல்இலை மயிர்புறம் தைவர .. - சிறு. 41

திரி மருப்பு எருமை மயிர் கவின் கொண்ட
மா தோல் இரும் புறம் .. - அகம். 206
 
2. எருமையின் கொம்புகள்:

எருமையின் தலையில் கொம்புகள் இருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆண் எருமைகளுக்கு மட்டுமின்றி பெண் எருமைகளுக்கும் கொம்புண்டு. இதன் கொம்புகள் முதலில் அகன்று வளர்ந்து பின்னோக்கி நீண்டு பின்னர் உள்நோக்கி வளைந்த நிலையில் காணப்படும். அருகில் எருமையின் கொம்புகளின் படம் காட்டப்பட்டுள்ளது. எருமையின் கொம்புகள் 5 அடி நீளம் வரையிலும் வளரக்கூடியவை. ஆண் எருமையைக் காட்டிலும் பெண் எருமையின் கொம்புகள் குட்டையானவை. எருமையின் கொம்புகள் எருதுகளின் கொம்புகளைப் போலன்றி அகன்று வளர்ந்து பல திரிபுகளையும் கொண்டிருக்கும். எருமையின் கொம்புகள் அகன்று இருப்பதால் இதனைத் 'தடமருப்பு' என்றும் திரிபுகளைக் கொண்டதால் 'திரிமருப்பு' / 'நெறிமருப்பு' என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும். எருமையின் கொம்புகளைப் பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்களைக் கீழே காணலாம்.

தட மருப்பு எருமை மட நடை குழவி - நற். 120
தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து    - நற். 330
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் - குறு. 279
நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து - ஐங்கு. 91

எருமையின் கொம்புகள் கருமைநிறம் கொண்டவை என்று கீழ்க்காணும் பாடல்கள் குறிப்பிடுகின்றன.

இரு மருப்பு எருமை ஈன்றணி காரான் - குறு. 181
கரும் கோட்டு எருமை செம் கண் புனிற்று - ஐங்கு. 92

எருமையின் கொம்புகள் கருமைநிறத்தில் வலிமையுடன் விளங்கியதால் அதனை இரும்பினால் செய்த வாள்கருவியைப் போன்று விளங்கியதாகக் கீழக்காணும் பாடல் குறிப்பிடுகிறது.
\
இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை  - அகம். 56

எருமையின் கொம்புகள் எருதுகளைப் போலன்றி பின்னோக்கி வளைந்திருப்பதனைப் பேடியின் வாள்பிடித்த கையுடன் உவமையாகக் கூறுகிறது கீழ்க்காணும் அகப்பாடல் வரிகள்.

பேடி வாள்கொண்டு ஆடு கைகடுப்ப
நகுவர பணைத்த திரி மருப்பு எருமை .. - அகம். 206

மனதில் ஊக்கமுடைய ஒருவன் சண்டையிடும்போது தனது கையில் வாளைப்பிடித்துக்கொண்டு எதிரிக்கு நேராக நீட்டுவான். ஆனால் உள்ளத்தில் துணிவில்லாத பேடி ஒருவன் எதிரியின் முன்னால் வாளை எவ்வாறு பிடிப்பான்?. எதிரி வாளை ஓங்கும்போது அச்சத்தால் நடுங்கி இவன் தனது வாளினை நேராக நீட்ட இயலாமல் தனது தலைக்குப் பின்னால் வளைத்துக் கொண்டு செல்வான் இல்லையா?. அந்த பேடியின் வளைந்த கைகளைப்போல இருந்ததாம் அந்த எருமையின் பருத்து வளைந்த கொம்புகள் என்று மேற்பாடல் வரிகள் விளக்குகின்றன. இப்பாடலில் வாள் என்னும் சொல்லுக்குப் பதிலாக பெண் என்று வருவது பாடபேதம் என்றே தோன்றுகிறது. காரணம் பெண் என்ற சொல்லைக் கொண்டால் இப்பாடலின் பொருள் சரியாக விளங்கக் கூடவில்லை. அதுமட்டுமின்றி, பேடி கை வாள் என்பது கீழ்க்காணும் திருக்குறள்களிலும் உவமையாக வந்துள்ளது. இக்குறள்களில் வரும் உவமைகளுக்கு முன்னோடியாக மேற்காணும் அகப்பாடல் விளங்கியது என்றால் தவறில்லை.

பேடி கை வாளாண்மை போலக் கெடும் - குறள்: 614
பகையகத்து பேடி கை ஒள் வாள் - குறள் :727

எருமையின் முறுக்குடைய கரிய நீண்ட கொம்புகளைக் காய்ந்து கருத்துப்போய்த் தொங்குகின்ற பயிற்றின் நீண்ட நெற்றுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்வரி.

எருமை இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின் பைம்பயறு - புறம். 297


3. எருமையின் கால்கள்:

நீர் எருமையின் கால்களைப் பற்றிக் குறிப்பிடும்போது 'கருந்தாள்' என்ற சொல் பல பாடல்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவற்றில் சில பாடல்களை மட்டும் கீழே காணலாம்.

கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை - நற் 260
கரும் தாள் எருமை கன்று வெரூஉம் - ஐங் 97

இப்பாடல்களில் வரும் கருந்தாள் என்பது நீர் எருமையின் கால்கள் கருப்புநிறம் கொண்டவை என்பதை உணர்த்தும். இவ்வாறு சொல்வதன் காரணம், நீர் எருமைக்கும் காட்டெருமைக்கும் உள்ள வேறுபாடுதான். எருமை இனத்தைச் சேர்ந்த காட்டெருமையின் கால்கள் அடிப்பகுதியில் வெண்ணிறத்தில் இருக்கும். ஆனால், நீர் எருமையின் கால்கள் முழுவதும் கருநிறம் கொண்டவை. காட்டெருமையில் இருந்து நீர் எருமையினை வேறுபடுத்திக் காட்டவே கருந்தாள் என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கின்றனர் சங்கப் புலவர்கள். காட்டெருமையும் நீர் எருமையும் அருகில் உள்ள படத்தில் ஒப்பிடப்பட்டுள்ளது.

4. எருமையின் உணவு:

பசுமாடுகளைப் போலவே எருமைமாடுகளும் தாவர உணவுண்ணிகள் ஆகும். வயலில் விளைந்திருக்கும் நெற்கதிர்களை இவை விரும்பி உண்ட செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

எருமை கயிறுபரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும் - ஐங்கு. 95
காய் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை - பட். 14

இவ்வாறு வயலில் விளைந்து முற்றிய நெற்கதிர்களை எருமைகள் உண்டபோது நெல்லை அறுவடை செய்வோர் தண்ணுமை என்னும் கருவியை முழக்கி ஒலியெழுப்பினர். அவ்வொலியைக் கேட்டு அஞ்சி தனது கூட்டத்திடம் இருந்து பிரிந்து தனியாக ஓடிய ஆண் எருமையானது சேயாற்றின் கரையில் தேங்கியிருந்த நீரில் மிக விரைவாக ஓடியது. அப்போது அதன் கால்கள் நீரில் எழுப்பிய அலைகளானவை குயவனின் திகிரியைப் போல வேகமாக வட்டமாகச் சுழன்ற வண்ணம் இடையறாது தோன்றிக் கொண்டே இருந்தன. இதனை ஒரு அழகான ஓவியமாக நம் கண்முன்னர் கொண்டுவந்து நிறுத்துகின்றன கீழ்க்காணும் பாடல்வரிகள்.

வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇ
செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல்
கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி
வனை கல திகிரியின் குமிழி சுழலும்                      
துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும்
காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின்  - மலை. 472

நெற்கதிர்கள் மட்டுமின்றி, ஆழமில்லாத நீர்நிலைகளில் பூத்திருக்கும் குவளை, ஆம்பல், கழுநீர், பசுமோரோடம், நெய்தல், தாமரை போன்ற பூக்களையும் எருமைகள் விரும்பி உண்டன. இதுபற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குவளைக் கூம்பு விடு பன் மலர் மாந்தி - அகம். 56
வள் இதழ் கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை - சிறு. 41
எருமை நல் ஏற்றினம் மேயல் அருந்துஎன பசுமோரோடமோடு - ஐங்கு. 93
தட மருப்பு எருமை தாமரை முனையின் - அகம். 91
எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் - அகம். 100
ஆம்பல் மேய்ந்த நெறிமருப்பு ஈர்ம் தண் எருமை - அகம். 316

5. எருமையும் உழவும்:

தற்காலத் தமிழகத்தில் பெரும்பாலும் காளைமாடுகளைப் பூட்டியே வயல்களில் உழவு செய்கின்றனர். பிற மாநிலங்களில் எருமைகளைப் பூட்டி உழவுசெய்யும் முறை இன்னும் தொடர்கிறது. சங்ககாலத் தமிழர்கள் உழவுக்காகக் காளைமாடுகளை மட்டுமின்றி எருமை மாடுகளையும் பயன்படுத்தி இருக்கின்றனர். இதைப்பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைச் சில பாடல்களின் வாயிலாகக் காணலாம்.

மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெருநெல் பல கூட்டு எருமை உழவ - நற்..60

எருமைகளைக்கொண்டு உழுது வித்தி மலைபோல நெற்கதிர்களை அறுவடை செய்து குவித்த உழவனை எருமை உழவன் என்ற புகழ்கின்றது மேற்பாடல் வரிகள். கதிரவனின் ஒளிக்கதிர்கள் வெளிப்படும் அதிகாலைப் பொழுதிலேயே உழவினைத் துவக்கி விடுவர். எருதுகளைப் போலன்றி எருமைகள் மந்தநடை உடையவை. எனவே ஒரு வயலை உழுவதற்கு ஒரே ஒரு எருது போதுமென்ற நிலையில் எருமைகள் பல தேவைப்படும். எருமைகளை வயலுக்கு ஓட்டிச்சென்றுப் பல இடங்களுக்குப் பரப்பி உழவினைத் துவக்கிய செய்தியைக் கீழ்க்காணும் பாடலில் இருந்து அறியமுடிகிறது.

வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப - அகம். 41

பகல்நேரம் வரையிலும் உழவுக்குப் பயன்படுத்திய பின்னர் எருமைகளை அவிழ்த்து விட்டுவிடுவர். அவை தம் விருப்பப்படி, மீன் உண்ணும் நாரைகள் அஞ்சிப் பறந்தோடுமாறு நீர்நிலைகளில் திடுமென்று புகுந்து படிந்து நீராடிய பின்னர், உழவுசெய்ததால் உண்டான அலுப்புதீர மருதமரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறிய செய்தியைக் கீழ்க்காணும் பாடலில் இருந்து அறிய முடிகிறது. கீழ்க்காணும் பாடலில் வரும் நாள்தொழில் என்னும் சொல் உழவினைக் குறித்து வந்துள்ளது.

தட மருப்பு எருமை பிணர் சுவல் இரும் போத்து
மட நடை நாரை பல் இனம் இரிய
நெடு நீர் தண் கயம் துடுமென பாய்ந்து
நாள்தொழில் வருத்தம் வீட சேண் சினை
இருள் புனை மருதின் இன் நிழல் வதியும்   - நற். 330

6. எருமையும் நீரும் சேறும்:

சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நீர் எருமையில் ஆற்று எருமை, சேற்று எருமை என்று இருவகை உண்டென்று முன்னர் கண்டோம். ஆற்று எருமை என்பது ஆறு / குளம் போன்ற பெரிய நீர்நிலைகளில் கழுத்துவரை படிந்தவாறு பெரும்பொழுது நேரத்தினைச் செலவழிக்கும். சேற்று எருமை என்பது நீர்கலந்த மண்சேற்றிலும் வயலில் இருக்கும் ஆழமற்ற நீரிலும் படிந்திருக்கும். இவ்வாறு அவை நீர்நிலையிலும் சேற்றிலும் கிடப்பதன் காரணம், அவற்றால் அதிக வெப்பத்தினைத் தாங்கிக்கொள்ள இயலாது என்பதே. நீர்நிலைகளில் படிந்தும் சேற்றில் படுத்தும் மரநிழலில் தங்கியும் தனது உடல்வெப்பத்தினை இவை ஆற்றிக்கொள்கின்றன. எருமைகள் நீர்நிலைகளில் / சேற்றில் படிந்துகிடக்கும் செய்திகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

பெருநீர் மேவல் தண்ணடை எருமை .. - புறம். 297
தண்புனல் ஆடும் தடம் கோட்டு எருமை ... - ஐங்கு. 98
அணி நடை எருமை ஆடிய அள்ளல் ... - ஐங்கு. 96
சேற்றுநிலை முனைஇய செங்கண் காரான் - குறு. 261, அகம். 46

மீன்வளம் மிக்கதோர் பொய்கையில் பூத்திருந்த ஆம்பல் மலர்களை உண்ட ஆண் எருமையானது சேற்றுநீரில் பகலெல்லாம் படிந்திருந்து பொழுதுசாயும் வேளையில் எழுந்து வரால் மீன்கள் தனது காலடியின்கீழ் மிதிபட்டுச் சாகுமாறு செருக்குடன் நடந்து பூக்களையுடைய பகன்றைக்கொடியினைத் தலையில் ஏந்தியவாறு ஒரு போர்வீரனைப் போல ஊருக்குள் புகுந்த காட்சியினை அப்படியே நம் மனக்கண்ணில் கொண்டுவந்து நிறுத்துகின்றன கீழ்க்காணும் அகப்பாடல் வரிகள்.

துறை மீன் வழங்கும் பெரு நீர் பொய்கை
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்து
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி பொழுது பட
பைம் நிண வராஅல் குறைய பெயர்தந்து
குரூஉ கொடி பகன்றை சூடி மூதூர்
போர் செறி மள்ளரின் புகுதரும் ..... - அகம். 316

7. எருமை இரவில் மேய்தல்:

எருமைக்கு அதிக வெப்பம் ஆகாது என்றும் அதனாலேயே அது பகல்பொழுதினை நீர்நிலைகளிலும் சேற்றிலும் மரநிழலிலும் கழிக்கும் என்று மேலே கண்டோம். அப்படியானால் அது எந்த நேரத்தில் தனக்கான உணவினைத் தேடிச்சென்று மேயும் என்ற கேள்வி எழுகின்றது அல்லவா?. இதற்கான பதில்: இரவு மற்றும் அதிகாலை நேரம் ஆகும். உழவுக்குப் பயன்படுத்தப்படும் எருமைகளை வீட்டுத் தூண்களில் கட்டி வைத்திருப்பர். இவை தனக்கான உணவினைப் பெரும்பாலும் வீட்டிலேயே உண்டுவிடும். உணவு போதாதபொழுது எருமைகள் இரைமேய்வதற்கு தாது எரு மன்றத்தில் இருந்து தப்பித்து இரவிலும் கிளம்பிச்செல்லும். இதைப்பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்து வைத்துள்ள செய்திகளைக் கீழே காணலாம்.

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
அம் தூம்பு வள்ளை மயக்கி தாமரை             
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர - அகம். 46

சேற்றில் படுத்திருந்த எருமையானது ஊர் உறங்கும் இரவுவேளையில் தன்னைக் கட்டியிருந்த கயிற்றினையும் அறுத்துக்கொண்டு சுற்றிலும் போடப்பட்டிருந்த கூரிய முள்வேலியினைத் தனது கொம்புகளால் முட்டி விலக்கி வழிசெய்துகொண்டு தாது எரு மன்றத்தில் இருந்து தப்பித்துச் சென்று மீன்கள் தெறித்தோடுமாறு வயலுக்குள் புகுந்து அங்கிருந்த வள்ளைக்கொடியை மிதித்துத் தாமரை மலர்களை உண்ட செய்தியை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

அதிகாலை வேளையில் வயலுக்குச் சென்ற ஒரு எருமை அங்கிருந்த நெய்தல் மலர்களை உண்டதைக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்வரி.

தண் புலர் வைகுறு விடியல் போகிய எருமை
நெய்தல் அம் புது மலர் மாந்தும் .. - அகம். 100

8. எருமையும் உவமைகளும்:

எருமைகளை அடிப்படையாகக் கொண்டு தற்காலத்தில் சில சொலவடைகள் புழக்கத்தில் உள்ளன. ' எருமைமாட்டின் மீது மழை பெய்தாற் போல ' என்பது அவற்றுள் ஒன்றாகும். மழைபெய்யும்போது நனையாமல் ஒதுங்குவது விலங்குகளின் வழக்கமே. ஆனால் எருமைமாடு இவற்றில் இருந்து மாறுபடும். எருமைக்கு நீரின் குளிர்ச்சி மிகவும் பிடிக்கும் என்பதால் மழையில் நனைந்தவாறே வெகுநேரம் நின்று கொண்டிருக்கும். இதை அடிப்படையாகக்கொண்டே இந்தப் பழமொழி எழுந்தது எனலாம். பெரிய உருவமும் சிறிய அறிவும் கொண்டவரை எருமையுடன் ஒப்பிட்டு வசைபாடுவதும் இக்காலத்தில் உண்டு. இக்காலத்தைப் போலவே சங்ககாலத்திலும் தமிழ்ப்புலவர்கள் எருமைகளைப் பிற பொருட்களுடன் உவமைப்படுத்திப் பல பாடல்களில் பாடியுள்ளனர். அவற்றை இங்கே விளக்கமாகக் காணலாம்.

கருமைநிறக் கொம்புகளைத் தாங்கிய எருமையினை ஆயுதம் ஏந்திய மள்ளர் அதாவது வீரருடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்வரி. கருமைநிற எருமையினை மள்ளருடன் ஒப்பிட்டுக் கூறுவதில் இருந்து இம் மள்ளர்கள் கருப்பு நிறத்தவர் என்பது புலனாகிறது.

மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை - ஐங்கு. 94

அதுமட்டுமின்றி, எருமையானது மெதுவாக நடந்து செல்வதனை போர்வீரன் ஒருவன் செருக்குடன் நடந்துசெல்வதனோடு ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் நற்றிணைப் பாடல்.

கருந்தாள் எருமை பழனத்தாமரை பனிமலர் முனைஇ
தண்டுசேர் மள்ளரின் இயலி ... - நற். 260
....போர் செறி மள்ளரின் புகுதரும் ...- அகம். 316

மெதுவாக அசைந்துசெல்லும் எருமைமாட்டின் முதுகின்மேல் சிறுவர்கள் ஏறி அமர்ந்து விளையாடுவதை இப்போதும் பல சிற்றூர்களில் பார்ர்க்கலாம். இதைப்போல சங்ககாலத்திலும் சிறுவர்கள் எருமையின் முதுகின்மேல் ஏறிவிளையாடினர். இக்காட்சியானது தொலைவில் இருந்து பார்ப்போர்க்குக் கருங்கல்லின்மீது குரங்குகள் ஏறி விளையாடுவதைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

...எருமை மயிர்க்கவின் கொண்ட மாதோல் இரும்புறம்
சிறுதொழில் மகாஅர் ஏறி சேணோர்க்கு
துறுகல் மந்தியின் தோன்றும் ..... - அகம். 206

இப்பாடலில் எருமையினைக் கருங்கல்லுடன் ஒப்பிட்டுக் கூறியிருக்கின்றனர். இதைப்போலக் கீழ்க்காணும் பாடல்களும் எருமையினைக் கருங்கல்லுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

எருமை அன்ன கருங்கல் இடைதோறும் - புறம்.5
மேதி அன்ன கல் பிறங்கு இயவின் - மலை. 111

முதுகு தெரியும் அளவில் நீர்நிலைகளில் படிந்து நீராடிய எருமைகளைப் பார்த்தபொழுது படகுகளின் நினைவு வந்துவிட்டது புலவருக்கு. படகுகளைத் தரையில் நடப்பட்ட கழிகளுடன் பிணித்திருந்தனர். இரண்டையும் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் பாடுகிறார் புலவர்.

தண்புனல் ஆடும் தடம் கோட்டு எருமை
திண்பிணி அம்பியின் தோன்றும் ... - ஐங்கு. 98

படகுகள் கவிழ்ந்தநிலையில் கிடந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. அதனால்தான் கவிழ்ந்த படகினை எருமையின் முதுகுடனும் படகினைப் பிணித்திருக்கும் கழிகளை எருமையின் கொம்புகளுடனும் ஒப்பிட்டு நோக்குமாறுப் பாடியுள்ளார் புலவர்.

முடிவுரை:

பசுமாட்டில் இருந்து பாலைக் கறப்பதன்முன், பசுவிடம் அதன் கன்றைவிட்டுப் பாலைக் குடிக்கச்செய்வர். இப்படிச் செய்வதால் அதிக பால் ஊறும். இவ்வாறு செய்யும் வழக்கம் சங்ககாலம்தொட்டு வருகின்றது போலும். சங்ககாலத்தில் எருமைமாட்டில் இருந்து பால்கறப்பதன்முன் அதனிடம் அதன் கன்றைவிட்டுப் பால்குடிக்கச் செய்தபின்னர் ஊர்மக்கள் பால்கறந்து சென்ற நிகழ்ச்சியைக் கூறும் பாடல்வரிகள் கீழே:

மன்ற எருமை மலர் தலை காரான்
இன் தீம்பால் பயம் கொள்மார் கன்று விட்டு
ஊர் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் .. - நற். 80

மேற்பாடலில் வரும் மன்ற எருமை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது எருமை முதலான பெரிய மாடுகளை அவற்றின் சாணங்களைச் சேகரிக்க வேண்டி வீட்டில் கட்டிவைக்காமல் முள்வேலியிட்ட ஒரு பொது இடத்தில் கட்டி இரவில் தங்கவைக்கும் பழக்கம் சங்ககாலத்தில் இருந்திருக்கிறது. இந்த இடத்தினைத் 'தாது எரு மன்றம்' என்றும் ' தாது எரு மறுகு' என்றும் 'எருபடு வரைப்பு' என்றும் 'தாது எரு முற்றம்' என்றும் பலபெயர்களால் சங்க இலக்கியம் குறிப்பிடுகிறது. என்னதான் இந்த மன்றத்தில் கட்டி வைத்தாலும் இரவுநேரத்தில் விடுதியின் மதில்சுவரைத் தாண்டிச்சென்று இரவெல்லாம் ஆட்டம்போட்டுத் திரும்பும் இன்றைய காளையரைப் போல சங்ககால எருமைகள் மன்றத்தில் இருந்து தப்பிச்சென்று இரவில் இரைமேய்ந்துள்ளன. இதைப்பற்றிய செய்தியைத்தான் அகநானூற்றின் 46 ஆம் பாடல் கூறுகிறது.

 =========== xxxxx=============

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.