புதன், 2 மே, 2018

பானை மீனும் யானை மருப்பும் ( நகுதல் - நகார் - நகில் )


முன்னுரை:

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றார் ஐயன் வள்ளுவன். அவ்வகையில், இற்றைத் தமிழ் அகராதிகள் பல தமிழ்ச் சொற்களுக்குத் தமது முடிந்த முடிபாகக் கூறியிருக்கும் பல்வேறு பொருட்களில் சில இடங்களில் பொருள் குற்றங்களும் சில இடைகளில் பொருள்குறைபாடுகளும் இருந்தே வந்துள்ளன. இதைப்பற்றிப் பல கட்டுரைகளில் விரிவாகக் கண்டுள்ளோம். அவ்வகையில் இக்கட்டுரையில் காணப்போவதும் அத்தகையதோர் ஆய்வே ஆகும். நகுதல் என்னும் வினையின் அடிப்படையாகப் பிறந்த நகா(அ)ர், நகில் ஆகிய இரண்டு சொற்களுக்கும் அகராதிகள் கூறியிராத புதிய பொருட்கள் உள்ளனவா என்பதை ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதைய அகராதிப் பொருட்கள்:

நகுதல், நகில், நகாஅர் ஆகிய சொற்களுக்குத் தற்கால அகராதிகள் கூறியிருக்கும் பல்வேறு பொருட்களை முதலில் காணலாம்.

நகு-தல் naku- v. [T. K. nagu.] intr. 1. To laugh, smile; சிரித்தல். நகுதற்பொருட் டன்று நட்டல் (குறள், 784). 2. To rejoice; மகிழ்தல். மெய்வேல் பறியா நகும் (குறள், 774). 3. To bloom, as a flower; மலர்தல். நக்க கண்போ னெய் தல் (ஐங்குறு. 151). 4. To open or expand; கட்டவிழ்தல். நக்கலர் துழாய் நாறிணர்க் கண்ணியை (பரிபா. 4, 58). 5. To shine, glitter; பிரகாசித் தல். பொன்னக்கன்ன சடை (தேவா. 644, 1). 6. To hoot, as an owl; to sing, as a bird; புள்ளி சைத்தல். நட்பகலுங் கூகை நகும் (பு. வெ. 3, 4).--tr. 1. To despise; அவமதித்தல். ஈகென்பவனை நகு வானும் (திரிகடு. 74). 2. To surpass, overcome, defeat; தாழ்த்துதல். மானக்க நோக்கின் மடவார் (சீவக. 1866).
நகில் nakil - n. perh. நகு-. Woman's breast; முலை. நகின்முகத்தி னேவுண்டு (கம்பரா. மிதிலை. 45).
நகாஅர் nakāar - , n. < நகு-. Tooth, as appearing in laughter; [சிரிப்பில் தோன்றுவது] பல்.
.
நகுதல் வினையும் விளக்கமும்:

நகுதல் வினையின் அடிப்படையிலேயே நகாஅர், நகில் ஆகிய சொற்கள் பிறப்பதால் முதலில் நகுதல் வினையைப் பற்றிக் காணலாம். நகுதல் வினைக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் கூறியுள்ள பல்வேறு பொருட்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் சிரித்தல் என்ற பொருளையே பெரும்பாலும் நாம் அனைத்து இடங்களிலும் பயன் கொள்கிறோம். அதுவே பேச்சு வழக்கிலும் இருப்பதால் பிற பொருட்களைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதில்லை. இதனால் அச்சொல் குறிக்கும் புதிய பொருட்களைக் கண்டறிய இயலாமல் போய்விட்டது.

சிரித்தல் என்றாலே வாயில் உள்ள பற்கள் வெளியே தெரியுமாறு காட்டுதல் என்ற கருத்தே அனைவருக்குள்ளும் எழுவது இயற்கை. ஆனால் சிரித்தல் என்ற வினை பற்களுக்கு மட்டும் தானா?. கண்களுக்கு இல்லையா?. என்ற கோணம் ஆய்வுக்குரியது. பல்லைக் காட்டிச் சிரிக்காமல் கண்களால் மட்டும் சிரிப்பதை நாம் அன்றாட வாழ்வில் பார்க்கிறோம்; செய்கிறோம். பொதுவாக, சிரிக்கும்போது என்ன நடக்கிறது?. ஒரு பூ மொட்டவிழ்வதைப் போல அவை முழுதாய் மலர்கின்றன. முன்னைக் காட்டிலும் அதிக ஒளியுடன் திகழ்கின்றன. நகுதல் என்பதற்குச் சிரித்தல் என்ற பொருள் உட்பட மலர்தல், ஒளிர்தல் ஆகிய பொருட்களும் உண்டென்று மேலே அகராதிகள் கூறுவது இங்கே குறிப்பிடத்தக்கதாகும். இந்த மலர்ச்சியும் ஒளியும் சிரித்தல் வினையில் நடப்பது பற்களுக்கு மட்டுமல்ல பெண்களின் கண்களுக்கும் பொருந்தக் கூடியவை தான். ஆம், வாயைத் திறவாமல் கண்களாலேயே பேசுவதும் சிரிப்பதும் பெண்களால் மட்டுமே முடியும். இதனால்தான் பெண்களின் சிரிக்கும் கண்களை மலர்ந்த மலர்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் ஏராளமான பாடல்களில் பாடியுள்ளனர். முல்லை, நெய்தல், குவளை, தாமரை, வாழைப்பூ போன்ற மலர்களுடன் பெண்களின் மையுண்ட கண்களை ஒப்பிட்டுக் கூறும் சங்கப் பாடல்கள் பல உண்டு. இதைப்பற்றி விரிவாக, பெண்களின் கண்களைப் பூவிழி என்பது ஏன்?. என்ற கட்டுரையில் படிக்கலாம்.

காதலும் கண்களும்:

நகுதல் என்னும் வினைக்குக் கண்களால் சிரித்தல் என்ற பொருளைக் கொள்ளும்போது, அதன் உட்கிடையாகக், கண்களால் கண்டும் பேசியும் அகமகிழ்தல் என்ற பொருள் அமைவதை அறியலாம். ஆணும் பெண்ணும் இயற்கைப் புணர்ச்சியின்போது சந்தித்துக் காதல் செய்யும்போது அதில் முதன்மைப் பங்காற்றுவது கண்களே ஆகும். தலைவனும் தலைவியும் சந்தித்துக் கண்களால் பேசிச் சிரித்துக் காதல் வளர்த்தனர். திடீரென்று தலைவியால் தலைவனைச் சந்திக்க முடியாமல் போகிறது. தனிமைத் துன்பத்தினால் தலைவி பலநாட்கள் உழல்கிறாள். அப்போது அவளது உள்ளத்தில் எழுந்த உணர்வுகளை அழகான பல உவமைகளின் வாயிலாக வடித்துக் காட்டுகிறார் புலவர் கீழ்க்காணும் பாடலில்.

சுரம் செல் யானை கல் உறு கோட்டின்
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம்
நும்மொடு நக்க வால் வெள் எயிறே
பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல
எமக்கும் பெரும் புலவு ஆகி
நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே - குறு. 169.

பொருள்: காட்டில் சென்ற யானையின் நெடிய மருப்புக்கள் சட்டென பாறையில் மோத, அவை முறிந்து தெறித்து விழுவதைப் போல, உன்னைக் கண்டு சிரித்து அகமகிழ்ந்த என் கண்கள் தெறித்து விழட்டும்; பாணர்கள் மீனை இட்டு வைத்திருந்த மண்பாண்டம் போல உன்னைப் பெறவியலாத நிலையில் எனக்கும் பெரும் தனிமைத் துன்பம் தருவதான எனது உடலும் பயனின்றி இற்றுப் போகட்டும்.

இப்பாடலில் பல உவமைகளை அழகாகக் கையாண்டிருக்கிறார் புலவர். ஒரு ஆணும் பெண்ணும் இயற்கைப் புணர்ச்சியின்போது கண்களால் கண்டு பேசிச் சிரித்து மகிழ்வது வழக்கம். ஆணும் பெண்ணும் தனித்தனியே விலகி இருந்தாலும் அவர்களுக்கு இடையில் எப்போதும் தொடர்பினை உண்டாக்குவது கண்கள் தான். இப்பாடலில் வரும் தலைவியானவள், பாறையின்மேல் மோதிய யானையின் வெண்மருப்புக்கள் தெறித்து விழுவதைப் போல, தலைவனைக் கண்டு சிரித்து அகமகிழ்ந்த தனது கண்கள் தன்னிடமிருந்து தெறித்துப் போகட்டும் என்று மருவுகிறாள். இந்த ஒப்புமையில், தலைவி = யானை, தலைவன் = பாறை, தலைவியின் கண்கள் = யானையின் மருப்புக்கள். யானையின் மருப்புக்கள் பாறையில் மோதினால் பாறைக்கு ஒன்றும் ஆவதில்லை; பாதிப்பு யானையின் மருப்புக்களுக்குத்தான். அதைப்போல இயற்கைப் புணர்ச்சியின் பின்னால் விளையும் பாதிப்புக்களும் தலைவனுக்கு அன்றி தலைவிக்கே ஆகும். இதனை அழகான உவமைகளின் மூலம் விளக்கிய புலவரின் நுண்மாண் நுழைபுலம் வியந்து பாராட்டத் தக்கதன்றோ !.

இப்பாடலில் வரும் நகுதல் என்ற வினைக்குப் பற்களைக் காட்டிச் சிரித்தல் என்றும் எயிறு என்னும் சொல்லுக்குப் பல் என்றும் பொருளைக்கொண்டு தலைவியானவள் தலைவனைக் கண்டு சிரித்த தனது பற்கள் தெறித்துப் போகட்டும் என்று கூறுவதாக உரை எழுதியுள்ளனர். இது பொருத்தமாகத் தோன்றவில்லை. காரணம், காதலின் தோற்றுவாயாகவும் பெருக்கெடுக்கும் ஊற்றாகவும் எப்போதும் விளங்குவது கண்களே அன்றி பற்கள் அல்ல. அதுமட்டுமின்றி, காதல் தோற்றுப்போகும்போது அதாவது காதலன் இறந்தபொழுதோ கைகூடாத பொழுதோ காதலியானவள் தனது கண்களையே பழிப்பது வழக்கம். இதைச் சங்கப் பாடல்களில் மட்டுமின்றி, சிலப்பதிகாரத்திலும் ஆண்டாள் பாடல்களிலும்கூட காணலாம். எயிறு என்ற சொல்லுக்குக் கண் என்ற பொருளும் உண்டென்று அகராதிகள் காட்டாத காரணத்தினால் அவ்வாறு உரைகூறியுள்ளனர். எயிறு என்ற சொல்லுக்குக் கண் என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதைப் பற்றி எயிறு என்றால் என்ன?. என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

அடுத்து இப்பாடலில் வரும் இன்னொரு உவமையைப் பார்க்கலாம். இறைச்சி வகைகளிலேயே அதிக நாற்றம் கொண்டது மீன் தான். ஒருமுறை பாத்திரத்தில் மீனை வைத்துவிட்டால் அந்தப் பாத்திரத்தைப் பலமுறை நன்கு கழுவி காயவைத்தாலும் மீன் வாசனை முற்றிலும் போகாது. தலைவன் தலைவிக்கு இடையிலான இயற்கைப் புணர்ச்சியினை பாத்திரத்தில் மீன் இடும் நிகழ்வுக்கு ஒப்பாகக் கூறுகிறார். இதில் தலைவி = மண்பாத்திரம், தலைவன் = மீன், நினைவுகள் = மீன் வாசனை. மீனை வெளியே எடுத்தபின்னரும் பாத்திரத்தில் தங்கிவிட்ட மீன்வாசனையைப் போல, தலைவன் சென்றுவிட்ட பின்னரும் தலைவனின் நினைவுகள் அவளுக்குள் தங்கிவிட்டனவாம். என்ன ஒரு அழகான ஒப்பீடு !. தலைவனைப் பெறமுடியாத நிலையில் தனிமைத் துன்பத்தால் பெரிதும் தவித்த தலைவியால் எவ்வளவு முயன்றும் அவனது நினைவுகளை அழிக்க இயலவில்லை. இதற்கென்ன வழி?. இந்த உடலை அழித்துக்கொள்ள வேண்டியதுதான். காரணம், இந்த உடல் இருக்கும்வரை அவனது நினைவுகளும் இருக்கும். மீன்வாசனையை உடைய பாத்திரம் யாருக்கும் பயன்படாமல் அழிவதைப் போல யாருக்கும் பயன்படாத இந்த உடலை இனிநான் அழித்துக் கொள்வேன் என்று உறுதி பூண்கிறாள் தலைவி.

இப்பாடலின் விளக்கத்தில் இருந்து, நகுதல் என்பது கண்களால் கண்டு சிரித்து மகிழ்தல் என்பதையும் எயிறு என்பது கண்களையும் குறிக்கும் என்பதை உறுதியாக அறிந்துகொள்ளலாம். இப்பாடலைப் போலவே, கண்களால் கண்டு மகிழ்ந்த காதலனைக் காணவியலாத காரணத்தினால் மனம் வருந்தி உழக்கும் தலைவியின் நிலையினை விளக்கும் இன்னொரு பாடல் கீழே. 

தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய்
அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது ....
.......துறைவனொடு இலங்கு எயிறுதோன்ற நக்கதன் பயனே - குறு. 381

கண்களையும் நகுதல் வினையையும் நேரடியாகவே தொடர்புறுத்திப் பாடும் பாடல்வரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடலில் வரும் நக்க கண் என்பது சிரித்த கண் என்ற பொருளில் வந்துள்ளதுடன் அக்கண்ணானது மலர்ந்த நெய்தல் மலருடன் ஒப்பிடப்பட்டும் கூறப்பட்டுள்ளது கவனிக்கத் தக்கதாகும்.

.... மிதிப்ப நக்க கண் போல் நெய்தல்..... - ஐங்கு. 151

நகா(அ)ர் - புதிய பொருளும் சான்றுகளும்:

நகார் என்ற சொல் நகாஅர் என்றும் வருவதால் இக்கட்டுரையில் நகா(அ)ர் என்று பயன்படுத்தப் படுகிறது. இச் சொல்லுக்குப் பல் என்ற பொருளையே தமிழ் அகராதிகள் காட்டியிருப்பதனை மேலே கண்டோம். காரணம், நகுதல் என்னும் சொல்லுக்குப் பற்களைக் காட்டிச் சிரித்தல் என்ற பொருளைக் கொண்டு சிரிக்கும்போது பல் தெரிவதால் நகார் என்பதற்குப் பல் என்று பொருள் கூறியுள்ளனர். ஆனால், நகுதல் என்பதற்குக் கண்களால் சிரித்தல் அதாவது கண்டுபேசி மகிழ்தல் என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். இதன் அடிப்படையில் நகா(அ)ர் என்னும் சொல்லுக்கு, நகுதலைச் செய்யும் உறுப்பு என்னும் அடிப்படையில்

கண்கள் என்ற புதிய பொருளும் இருப்பதை அறியலாம்.

நகா(அ)ர் என்ற சொல்லுக்குக் கண் என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைக் கீழே சில சான்றுகளுடனும் விளக்கங்களுடனும் கண்டு நிறுவலாம்.

... பறிமுறை நேர்ந்த நகார் ஆக கண்டார்க்கு
இறுமுறை செய்யும் உருவொடு நும் இல்
செறிமுறை வந்த கடவுளை கண்டாயோ.. - கலி. 93

மேற்பாடலில் பறிமுறை நேர்ந்த நகார் என்று வந்துள்ளது. இதில்வரும் நகார் என்பதற்குப் பற்கள் என்று பொருள்கொண்டால், 'கண்டவர்களின் பற்களைப் பறிக்கும் அழகிய உருவத்துடன் கூடிய கடவுளைப் போல' என்று பொருள்வரும். இது பொருத்தமற்றது என்று நன்கு அறிவோம். காரணம், ஒரு அழகிய பெண்ணின் உருவம் அவளைக் காணும் ஆடவரின் கண்களைத் தான் பறிக்குமேயன்றி அவர் பற்களைப் பறிக்காது அன்றோ?. கண்ணைப் பறிக்கும் அழகி என்றுதான் கூறுவார்களே அன்றிப் பல்லைப் புடுங்கும் அழகி என்று யாரும் கூறுவதில்லை. ஆக, இப்பாடலில் வரும் நகார் என்னும் சொல்லானது, கண் என்ற பொருளில்தான் வந்துள்ளது என்பதை அறியலாம்.

... மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் ..- சிறு. 57

மேற்காணும் பாடலில் பெண்களின் நகாஅரானது கடல் முத்துக்களுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. இதில்வரும் நகாஅர் என்பதற்குப் பல் என்று பொருள்கொண்டால் பெண்களின் பற்களைப் போன்ற கடல் முத்துக்கள் என்ற விளக்கம்வரும். இவ் விளக்கம் பொருந்தாத ஒன்றாகும். காரணம், பெண்களின் பற்கள் வெள்ளையாக இருந்தாலும் கடல்முத்துக்களைப் போல உருண்டு திரண்டு இல்லாமல் சப்பையாக இருக்கும். ஆனால், பெண்களின் கண்களோ வெள்ளையாக இருப்பதுடன் கடல்முத்துக்களைப் போலவே உருண்டும் திரண்டும் இருக்கும். அருகில் கடல்முத்தின் படம் காட்டப்பட்டுள்ளது. கண்விழிகளைப் போலவே இம் முத்துக்களின் நடுவில் வளையங்கள் இருப்பதைப் பார்க்கலாம். இவற்றைப் பார்க்கும் யாருக்கும் கண்விழிகள் நினைவுக்கு வருவதில் வியப்பில்லைதானே. இதனால்தான் பெண்களின் ஒளிவீசும் அழகிய கண்களை வெண்ணிற ஒளிவீசும் திரண்ட பெரிய கடல்முத்துக்களுடன் ஒப்பிட்டுச் சங்கப் புலவர்கள் உட்பட புலவர்கள் பலரும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். இதேமுறையினைப் பின்பற்றிக் கவிஞர் கண்ணதாசன் கூட 'முத்துக்களோ கண்கள்' என்ற பாடலைப் பாடியிருக்கிறார். இதிலிருந்து, இப்பாடலில் வரும் நகாஅர் என்பதும் கண்களையே குறித்து வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

நகில் - புதிய பொருளும் சான்றுகளும்:

நகில் என்னும் சொல்லுக்குப் பெண்களின் மார்பகம் என்ற பொருளையே தமிழ் அகராதிகள் காட்டியிருப்பதனை மேலே கண்டோம். இச்சொல்லைப் போலவே முலை, கொங்கை ஆகிய சொற்களுக்கும் பெண்களின் மார்பகம் என்ற பொருளையே அகராதிகள் கூறியுள்ளன. ஆனால் இச்சொற்களுக்குப் பல இடங்களில் இப்பொருள் பொருந்தாது என்றும் இவை பெண்களின் கண்கள் / கண்ணிமைகளையே பெரிதும் குறித்து வந்துள்ளது என்றும் பல கட்டுரைகளில் சான்றுகளுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைப்போல, நகில் என்ற சொல்லும் பெண்களின் மார்பகத்தைக் குறிக்காமல்

கண்கள் என்ற புதிய பொருளிலேயே வந்துள்ளது.

நகார் என்னும் சொல்லைப் போலவே நகில் என்ற சொல்லும் நகுதல் என்ற வினையின் அடைப்படையில் தோன்றியதே ஆகும். நகுதல் என்னும் சொல்லுக்குக் கண்களால் சிரித்தல் அதாவது கண்டுபேசி மகிழ்தல் என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். இதன் அடிப்படையில் நகில் என்னும் சொல்லுக்கு, நகுதலைச் செய்யும் உறுப்பு என்னும் அடிப்படையில் கண் என்ற புதிய பொருள் ஏற்பட்டது எனலாம். நகில் என்னும் சொல்லுக்குக் கண்கள் என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்று சில பாடல்களின் வாயிலாகக் காணலாம்.

நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட - பரி. 6
நகில் முகடு மெழுகிய அளறு - பரி. 10

மேற்காணும் இரண்டு பாடல்களிலும் நகிலின்மீது சந்தன குங்கும வாசனைக் கலவை போன்ற ஒன்றைப் பூசிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இக்காலத்தில் மட்டுமல்ல, எக்காலத்திலும் பெண்கள் யாரும் தமது மார்பகங்களின்மேல் எந்தவொரு கலவையையும் பூசமாட்டார்கள் என்பது வெளிப்படையான செய்தியாகும். ஆனால், பெண்கள் தமது கண்களுக்கு மேலாக இருக்கும் இமைகளின்மேல் வண்ண வாசனைக் கலவையினைப் பூசுவதும் எழுதுவதும் உண்டு. இது இக்காலத்திலும் தொடர்கிறது. இதிலிருந்து, இப்பாடல்களில் வரும் நகில் என்பது பெண்களின் மார்பகங்களைக் குறிக்காமல் அவரது கண்களையே குறித்து வந்துள்ளதனை அறியலாம். 

நகில்முகத்தின் ஏவுண்டு மலங்கு உழைஎன உயிர் வருந்தி - கம்ப.பால.10/45

' பெண்களின் நகில் முகத்தில் இருந்து பாய்ந்த அம்புகளால் தாக்குண்டு கலங்கும் மான்களைப் போல உயிர் வருந்தி' என்ற செய்தியை மேற்பாடல் வரி கூறுகின்றது. இப்பாடலில் வரும் நகில் என்பதற்கு மார்பகம் என்ற பொருள் பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம், ஆண்களின் மனதில் அம்பு விட்டுத் துளைக்கும் ஆற்றல் பெண்களின் கண்களுக்கே அன்றி அவரது மார்புகளுக்கு உரியதன்று. ஆம், பெண்களின் பார்வை அம்புகள் பட்டுப் புண்ணாகிய ஆண்களின் நெஞ்சங்கள் பல. பெண்களை யானையுடனும் அவரது கண்களை யானையின் மருப்புக்களுடனும் ஒப்பிட்டுப் பாடிய பாடலினை மேலே கண்டோம். இதேபோன்ற ஒப்பீட்டினை வள்ளுவரும் கூறியுள்ளார். எப்படி மதம்கொண்ட யானையின் மருப்புக்களால் மாந்தர் தாக்கப்படாமல் இருக்க யானையின் கண்களை மறைத்துக் கட்படாம் கட்டுவார்களோ அதைப்போல பெண்களின் கண்பார்வை பட்டு ஆண்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்கே பெண்கள் முகத்திரை அணிவதாகக் கூறுகிறார் கீழ்க்காணும் குறளில். இப்பாடலில் வரும் முலை என்னும் சொல் பெண்களின் கண்களைக் குறித்தே வந்துள்ளது.

கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில் - குறள். 1087.

பெண்கள் இளகிய மனம் கொண்டவர்கள் என்பதால் துன்பத்திலும் சரி இன்பத்திலும் சரி பொசுக்கென்று கண்கலங்கி விடுவார்கள். இதனால் நீர்நிறைந்திருக்கும் இவரது கண்களை இளநீருடன் ஒப்பிடுவது புலவர்களின் வழக்கமே. கம்பரும் பல இடங்களில் பெண்களின் கண்களை இளநீருடனும் பனைமரத்தின் நுங்குகளுடனும் நீர்தாங்கிய கலசங்களுடனும் ஒப்பிட்டுக் கூறியுள்ளார். அதைப்போலவே பெண்களின் நகிலையும் இளநீருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் கூறியுள்ளார்.

நகிலினொடு இகலுவ நளிவளர் இளநீர் - கம்ப. பால. 2/45

இப்பாடலில் வரும் நகில் என்பதற்குப் பெண்களின் கண்களே அன்றி மார்பகம் என்ற பொருள் பொருந்தாது. காரணம், இப்பாடலில் வரும் இளநீரைப் போல பெண்களின் விழிகளே நீர்சுமந்து நிற்கும் என்பதால். இக்கருத்தினைக் கீழ்க்காணும் பாடல் உறுதிசெய்வதுடன் நகிலானது கண்ணீருடன் நேரடியாகவே தொடர்புறுத்திப் பாடப்பட்டுள்ளது.

நகில்விழி நீர் ததும்புவார் விழி தாரை - கம்ப. சுந்த.12/47

நகில் விழி நீர் ததும்புவார் என்னும் தொடருக்கு நகில் ஆகிய விழிகளில் நீர் ததும்புவார் என்பது பொருளாகும். இதனை அடுத்து வரும் விழி தாரை என்பது அதனை மேலும் உறுதி செய்கிறது. ஆக, இதுவரை கண்ட சான்றுகளில் இருந்து நகில் என்னும் சொல்லுக்குப் பெண்களின் கண்கள் என்ற பொருளே மிகப்பொருத்தமாக அமைந்திருப்பதனை உறுதியாகப் புரிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

நகுதல் என்ற வினைக்கான பல்வேறு பொருட்களின் அடிப்படையில் அச்சொல்லானது பற்களால் சிரித்தலை மட்டுமின்றி கண்களால் சிரித்தலையும் குறிக்கும் என்று மேலே கண்டோம். அதுமட்டுமின்றி, நகுதல் என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு பிறந்த நகா(அ)ர், நகில் ஆகிய சொற்கள் பெண்களின் கண்களை எவ்வாறு குறிக்கும் என்று மேலே பல சான்றுகளுடன் கண்டோம். தமிழ் அகராதிகளில் இப் பொருட்கள் கூறப்பட்டிராத காரணத்தினால் பல பாடல்களுக்குத் தவறான விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இக்கட்டுரையின் மூலம் இனி அத் தவறுகள் கண்டறியப்பட்டுத் திருத்தப்படும் என்பதுடன் கூடிய விரைவில் இந்த புதிய பொருட்களைத் தமிழ் அகராதிகளில் சேர்க்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தமிழ் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் இதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளும் இதன்மூலம் முன்வைக்கப் படுகிறது.

 ................... வாழ்க தமிழ் ......................

2 கருத்துகள்:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.