வெள்ளி, 18 மே, 2018

தமிழில் ஆண்டுப் பெயர்கள் - செய்முறையும் பயனும்


முன்னுரை:

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவ தெங்கும் காணோம்.

- என்று தமிழின் இனிமையைப் புகழ்ந்தான் முண்டாசுக் கவி பாரதி. இனிமையில் மட்டுமின்றி தொன்மையிலும் இளமையிலும் தமிழ்மொழியை மிஞ்ச உலகில் எம்மொழிக்கும் தகுதியில்லை. ஏறத்தாழ 3500 ஆண்டுகால இலக்கியப் பழமையுடன் இன்றளவும் பலகோடித் தமிழர்களால் உலகமெங்கும் பேசப்பட்டு வரும் பெருமையுடைய மொழி நம் தமிழ்மொழி. சங்க இலக்கியங்களில் மட்டுமல்லாது இன்றைய கணினிகளிலும் தொலைத்தொடர்புக் கருவிகளிலும் வெகுவேகமாகப் பரவித் தனது ஆளுமையினை நிலைநாட்டிக் கொண்டு தொடர்ந்து வளர்ந்து வருகிறது தமிழ். இப்படித் தொன்மைக்குத் தொன்மையும் இளமைக்கு இளமையும் கொண்டதாய் விளங்கும் நம் தமிழ்ப்பண்பாட்டில் ஆண்டுகளின் பெயர்கள் தமிழில் அல்லாது வடமொழியில் அமைந்திருப்பது அழகே வடிவான தமிழன்னையின் கன்னத்தில் பிறர் வைத்தக் கருநிறப் பொட்டு ஆகும். இந்தக் கருநிறப் பொட்டை அழித்துவிட்டு அவள் நெற்றியில் அழகான செந்தூரப் பொட்டு வைத்தால் அவள் இன்னும் அழகாகத் தெரிவாள் அல்லவா?. அதற்கான சிறிய முயற்சியே இக் கட்டுரை ஆகும். வடமொழியில் அமைந்திருக்கும் ஆண்டுப் பெயர்களுக்குப் பதிலாகத் தமிழ்ப் பெயர்களின் அடிப்படையிலான ஆண்டுப்பெயர்களை அமைக்க முன்மொழிகிறது இக்கட்டுரை.

தமிழரின் ஆண்டுமுறைகள்:

ஆண்டுகளின் கணக்குமுறை என்று எடுத்துக்கொண்டால் தமிழ்நாட்டில் பலவிதமான முறைகள் இன்று நடைமுறையில் உள்ளன. சா`லிவாகன ஆண்டு, பச~லி ஆண்டு, கொல்லம் ஆண்டு போன்றவற்றைத் தமிழர்களின் நாட்காட்டிகளில் பார்க்கலாம். இவ்வரிசையில் தற்போது திருவள்ளுவர் ஆண்டும் புதியதாகச் சேர்க்கப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பிறந்த ஆண்டு இன்னது என்று யாருக்கும் உறுதியாகத் தெரியாதநிலையில், திருவள்ளுவரின் பிறந்தநாளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டுமுறை அமைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழர்களின் ஆண்டுப்பெயர்கள் என்று எடுத்துக்கொண்டால், ப்ரப^வ என்று தொடங்கி அக்ச~ய என்று முடிவதான 60 ஆண்டுப் பெயர்களில் ஒன்றுகூட தமிழில் இல்லை. அனைத்தும் வடமொழிப் பெயர்களாகவே இருப்பது குறிப்பிடத் தக்கதாகும். உலகளாவிய பெருமையும் புகழும் கொண்ட நம் தமிழ்மொழியில் இந்த ஆண்டுப் பெயர்களை எல்லாம் மாற்றி அமைக்க இயலாமல் போய்விட்டதா என்ன?. என்ற கேள்வி தமிழர்களின் நெஞ்சில் எழாமல் இராது. உறுதியாக இயலும் என்று கூறுவதைக் காட்டிலும் ஏனை மொழிகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாகச் செய்ய இயலும் என்பதே இக்கேள்விக்கான பொருத்தமான விடையாக இருக்கும். இதை எப்படிச் சிறப்பாக செய்யலாம் என்பதைக் கீழே விரிவாகப் பார்க்கலாம்.

குறிஞ்சி ஆண்டுமுறை:

தமிழ் என்றாலே அதனுடன் முருகனைத் தொடர்புபடுத்தாமல் இருக்க முடியாது. தமிழ்க்கடவுள் என்று போற்றப்படும் முருகனைக் குறிஞ்சிக் கிழவன் அதாவது குறிஞ்சி நிலத் தலைவன் என்று இலக்கியங்கள் புகழும். முருகனுக்குரிய இடமாகிய 'குறிஞ்சி' என்பதையே இந்தப் புதிய முறைக்குப் பெயராக வைப்பதற்கு இக்கட்டுரை முன்மொழிகிறது. இந்தப் புதிய ஆண்டுமுறைக்குக் குறிஞ்சி என்னும் பெயரை வைப்பதற்கு இதுமட்டுமே முதன்மைக் காரணமன்று. இந்தப் புதிய ஆண்டுமுறையில் அமைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெயர்கள் யாவும் குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்க இலக்கியத்தில் பாடப்பட்டுள்ள பல்வேறு பூக்களின் பெயர்கள் என்பதும் இன்னொரு முதன்மைக் காரணமாகும்.

குறிஞ்சிப்பாட்டு என்னும் நூலில் 99 வகையான பூக்களின் பெயர்கள் வருவதாகக் கணக்கிட்டுள்ளனர். உண்மையில் 100 க்கும் மேற்பட்ட பூக்கள் அந்த நூலில் இடம்பெற்றுள்ளன. குறிஞ்சிப்பாட்டில் வரி எண் 62 முதல் 96 வரையிலும் தொடர்ச்சியாக அவர் குறிப்பிடுகின்ற பூக்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டால், மொத்தம் 99 பூக்கள் வருகின்றன. இப் பூக்களின் எண்ணிக்கையைக் கணக்கிடும்பொழுது,

> குறிஞ்சிப்பாட்டின் 96 ஆவது வரியில் வரும் அரக்கு, புழகு ஆகிய இரண்டு பூக்களின் பெயர்களும் கணக்கில் கொள்ளப்பட்டுள்ளன.
> நெய்தல்பூ இரண்டு இடங்களில் ( குலைநெய்தல், நீள்நெய்தல் ) வந்தாலும்  ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.
> மாம்பூ இரண்டு இடங்களில் ( தேமா, கலிமா ) வந்தாலும் ஒரே பூவாகக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்த 99 வகையான பூக்களைத் தவிர, செயலை, தகரம், அகில், கடம்பு போன்ற மரங்களின் பெயர்களும் பாட்டில் ஆங்காங்கே குறிப்பிடப்பட்டுள்ளன. முருகனுக்குப் பிடித்தமான காந்தள் மலரையே முதல்மலராகக் கொண்டு இந்நூலில் கபிலர் பாடியிருப்பதால், முருகனுக்குப் பிடித்தமான கடம்ப மலரையே இறுதிமலராகக் கொள்வது சாலவே பொருத்தமாயிருக்கும் என்பதால் இந்தப் பூக்களின் வரிசையில் 100 வது மலராகக் கடம்பமலர் கொள்ளப்படுகிறது.

குறிஞ்சி ஆண்டுகளின் பெயர்கள்:

குறிஞ்சிப்பாட்டில் பூக்களின் பெயர்கள் பாடப்பட்டுள்ள அதே வரிசைப்படியே இந்தப் புதிய ஆண்டுமுறையின் ஆண்டுப் பெயர்களும் வரிசைப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளன. குறிஞ்சி ஆண்டுமுறைக்குரிய ஆண்டுகளின் பெயர்களும் வரிசைமுறையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1. காந்தள்
2. ஆம்பல்
3. அனிச்சம்
4. குவளை
5. குறிஞ்சி
6. வெட்சி
7. செங்கோடு
8. வேரி
9. மா
10. மணிச்சிகை
11. உந்தூழ்
12. கூவிளம்
13. எறுழம்
14. சுள்ளி
15. கூவிரம்
16. வடவனம்
17. வாகை
18. குடசம்
19. எருவை
20. செருவிளை
21. கருவிளை
22. பயினி
23. வானி
24. குரவம்
25. பசும்பிடி
26. வகுளம்
27. காயா
28. ஆவிரை
29. வேரல்
30. சூரல்
31. பூளை
32. கண்ணி
33. குருகிலை
34. மருதம்
35. கோங்கம்
36. போங்கம்
37. திலகம்
38. பாதிரி
39. செருந்தி
40. அதிரல்
41. சண்பகம்
42. கரந்தை
43. குளவி
44. தில்லை
45. பாலை
46. முல்லை
47. குல்லை
48. பிடவம்
49. மாரோடம்
50. வாழை
51. வள்ளி
52. நெய்தல்
53. தாழை
54. தளவம்
55. தாமரை
56. ஞாழல்
57. மௌவல்
58. கொகுடி
59. சேடல்
60. செம்மல்
61. செங்குரலி
62. கோடல்
63. கைதை
64. நறுவழை
65. காஞ்சி
66. பாங்கர்
67. மராம்
68. தணக்கம்
69. ஈங்கை
70. இலவம்
71. கொன்றை
72. அடும்பு
73. ஆத்தி
74. அவரை
75. பகன்றை
76. பலாசம்
77. பிண்டி
78. வஞ்சி
79. பித்திகம்
80. சிந்துவாரம்
81. தும்பை
82. துழாய்
83. தோன்றி
84. நந்தி
85. நறவம்
86. புன்னாகம்
87. பாரம்
88. பீரம்
89. குருக்கத்தி
90. ஆரம்
91. காழ்வை
92. புன்னை
93. நரந்தம்
94. நாகம்
95. நாறி (நள்ளிருள்நாறி)
96. குருந்தம்
97. வேங்கை
98. அரக்கு
99. புழகு.
100. கடம்பு.                                            

சிறப்புக் கூறுகளும் பயன்பாடும்:

 எந்தவொரு கண்டுபிடிப்பாகட்டும் அதனைப் பயன்படுத்தும் முறையினைப் பொறுத்தே அதன் வெற்றியும் இருப்பும் அமைகிறது. இது திணைசார்ந்த கண்டுபிடிப்புக்களுக்கு மட்டுமின்றி துறைசார்ந்தவற்றுக்கும் உண்டு. அவ்வகையில், இந்தப் புதிய ஆண்டுமுறையின் வெற்றியும் அதனைப் பயன்படுத்தும் முறையைப் பொறுத்தே அமையும் என்பதால், இந்தப் புதிய ஆண்டுமுறையின் சிறப்புக் கூறுகளையும் அதனைப் பயன்படுத்தும் வகையினையும் கீழே காணலாம்.
1. ஆண்டுப்பெயர் என்பது ஒரு குறியீடாக மட்டுமே இல்லாமல் புதிய தகவலைத் தெரிவிப்பதாக இருப்பது அதற்கு மேலும் சிறப்பினைச் சேர்க்கும் என்பதால்தான் பழைய 60 ஆண்டுகள் சுழற்சிமுறைக்குப் பதிலாக இந்தப் புதிய முறையில் 100 ஆண்டுகள் சுழற்சி கணக்கில் கொள்ளப் பட்டுள்ளது.
2. ஒரு ஆண்டின் பெயரில் இருக்கும் முதல் இரண்டு எழுத்துக்களே அந்த ஆண்டைக் குறிப்பிடப் போதுமானது என்பதே இந்தப் புதிய ஆண்டுமுறையின் இன்னொரு சிறப்புக் கூறாகும்.
3. இப்புதிய முறையானது பழமைக்குப் பழமையும் புதுமைக்குப் புதுமையும் கொண்டதாக இருக்கும். அதாவது ஒரு ஆண்டின் பெயர் வெறும் குறியீடாக இல்லாமல் அது புதிய செய்தியையும் தெரிவிப்பதாக அமையும். சான்றாக,
   2018 ஆம் ஆண்டானது செருகுட என்ற பெயரில் அழைக்கப்படும். இப்பெயரில் வரும் செரு என்பது ஆண்டுப்பெயர்களின் வரிசையில் 20 ஆக வரும் செருவிளையையும் குட என்பது அவ்வரிசையில் 18 ஆவதாக வரும் குடசத்தையும் குறிக்கும்.
4.    இப்புதிய முறைப்படி எந்தவொரு ஆண்டின் பெயரும் 10000 ஆண்டுகள் வரையிலும் அதேபெயரில் திரும்ப வராது.
5.  இப்புதிய முறைப்படி பத்தாயிரமாவது ஆண்டு (கி.பி. 10000) கடகட என்பதாகும். ஆண்டுகள் கடகட என்று ஓடுவது இதனால்தானோ என்னவோ?. :))
6.    ஆண்டுகளின் பெயர்களை இவ்வாறு அமைப்பதன் மூலம் தமிழில் ஆண்டுப்பெயர் அமைத்தமாதிரியும் இருக்கும். அதேசமயம், அப்பெயரிலிருந்து தற்போதைய ஆங்கில ஆண்டு என்ன என்பதைக் கண்டறியவும் முடியும். தனியாக ஆங்கில நாளினைக் குறிப்பிடுவதன் தேவையும் இருக்காது.
7. குறிஞ்சிமுறைப்படி அமைந்த இன்றைய நாளான செருகுட வைகாசி 4 என்ற தகவலைக் கொண்டு அதற்கான ஆங்கிலநாளைச் சரியாகக் கணக்கிட முடியும். காரணம், இது 10000 ஆண்டுகள் வரையிலும் செல்லுபடியாகும். ஆனால் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் விளம்பி` வைகாசி 4 என்ற தகவலைக் கொண்டு அதற்கான ஆங்கில நாளைச் சரியாகக் கணக்கிட இயலாது. ஏனென்றால், இது வெறும் 60 ஆண்டுகள் வரையில் மட்டுமே செல்லுபடியாகக் கூடியது.

முடிவுரை:

இது கட்டுரையின் முடிவு தானே தவிர புதிய முறையின் தொடக்கம் என்பதே சரியாக இருக்கும். தமிழ் ஆண்டுகளின் பெயர்களைத் தமிழ்ப் புலவர்கள், அரசர்கள், சான்றோர்கள் பெயர்களின் அடிப்படையில் வைக்காமல் பூக்களின் பெயர்களில் அமைக்கக் காரணம், மனிதர்களைக் காட்டிலும் பூக்களே காலத்துடன் நெருங்கிய தொடர்புடையவை என்பதால். சில பூக்கள் காலையிலும் சில இரவிலும் சில கார்காலங்களிலும் சில கோடையிலும் மலரும் தன்மையவை. முல்லைமலர்கள் மலர்வதைக் கொண்டே பொழுதினைக் கணக்கிட்டவர்கள் சங்ககாலத் தமிழர்கள். அதனால்தான் இப்புதிய முறைக்குப் பூக்களின் பெயர்கள் அடிப்படையாகக் கொள்ளப்பட்டது.

தமிழனால் முடியாதது இல்லை !         
தமிழ் என்றும் முடிவது இல்லை !!


5 கருத்துகள்:

  1. அருமையான ஆய்வுக் கண்ணோட்டம்
    தொடருவோம்
    http://tev-zine.forumta.net/f6-2

    பதிலளிநீக்கு
  2. காலத்தின் தேவை சகோதரன் திருத்தம் பொன் சரவணன். பேசும் மொழி தமிழால் மொழித்துவ வழி இனத்துவ தேசியக் குடிமைகளான தமிழர்கள் நாம் நமக்கான பல அடையாளங்களைத் தொலைத்து விட்டோம். நமது அடையாளப்படுத்தலுக்கான பெயர்கள், காலநேரங்களுக்கான பெயர்கள் (ஆண்டுகள், மாதங்கள்), இசை மரபுகளை, விழாக்கள், பண்டிகைகள் என அனைத்தும் தொலைத்து விட்டு ஆங்கில மற்றும் பிராகிருத மொழி இரவல் பெயர்களும், ஆரிய பிறப்பிமையான பார்ப்பனத்து வடமொழி நடைமுறைகளை இன்னமும் நாம் பின்பற்றி வருவது வேதனைக்குரியது. உலகின் யூதர்கள் போல், ஜெர்மானியர்கள் போல் நமது பண்பாட்டுக்கு கூறுகள் காக்கப்பட வேண்டும். இதில் உங்க முன்னெடுப்புகள் நம்பிக்கை தருகிறது. இதில் நாம் இணைந்தே செயற்படுவோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி. நன்றி ஐயா. எனது மின்னஞ்சல்: vaendhan@gmail.com. இதற்கு மடல் அனுப்புங்கள். இணைவோம். செயலாற்றுவோம். வாழ்க தமிழ் !

      நீக்கு
  3. காலத்தின் தேவை சகோதரன் திருத்தம் பொன் சரவணன். பேசும் மொழி தமிழால் மொழித்துவ வழி இனத்துவ தேசியக் குடிமைகளான தமிழர்கள் நாம் நமக்கான பல அடையாளங்களைத் தொலைத்து விட்டோம். நமது அடையாளப்படுத்தலுக்கான பெயர்கள், காலநேரங்களுக்கான பெயர்கள் (ஆண்டுகள், மாதங்கள்), இசை மரபுகளை, விழாக்கள், பண்டிகைகள் என அனைத்தும் தொலைத்து விட்டு ஆங்கில மற்றும் பிராகிருத மொழி இரவல் பெயர்களும், ஆரிய பிறப்பிமையான பார்ப்பனத்து வடமொழி நடைமுறைகளை இன்னமும் நாம் பின்பற்றி வருவது வேதனைக்குரியது. உலகின் யூதர்கள் போல், ஜெர்மானியர்கள் போல் நமது பண்பாட்டுக்கு கூறுகள் காக்கப்பட வேண்டும். இதில் உங்க முன்னெடுப்புகள் நம்பிக்கை தருகிறது. இதில் நாம் இணைந்தே செயற்படுவோம்.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.