முன்னுரை:
சங்ககால இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ள
பல தமிழ்ச்சொற்களுக்குப் புதிய பொருட்கள் இருப்பதையும் இன்றைய தமிழ் அகராதிகள் எவையும்
அப்பொருட்களைக் காட்டாமல் போனதையும் பல ஆய்வுக் கட்டுரைகளின் வாயிலாகக் கண்டுள்ளோம்.
அதைப்போலவே இக்கட்டுரையிலும் செம்பாகம் - கதுவாய் - முகடு ஆகிய மூன்று சொற்களுக்குப்
புதிய பொருட்கள் இருப்பதைப் பற்றியும் அவை தமிழ் அகராதிகளில் காட்டப்படாத நிலையினைப்
பற்றியும் விரிவாகக் காணப்போகிறோம்.
தற்போதைய அகராதிப் பொருட்கள்:
செம்பாகம், கதுவாய், முகடு ஆகிய சொற்களுக்கு
இன்றைய தமிழ் அகராதிகள் காட்டியுள்ள பல்வேறு பொருட்கள் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
செம்பாகம்¹ cem-pākam ., n. < id. + bhāga. See செம்பாதி. காமத்திற் செம்பாக மன்று
பெரிது (குறள், 1092)., n. < id. + pāka.
Lucidity; clear, natural flow of style; இலளிதம். அவர்கவி செம்பாகமாயுள்ளது.
கதுவாய் katuvāy. , n. < கது +. 1. Being scarred; வடுப்படுகை.
(திவா.) 2. Diminishing, decreasing; குறைகை. கதுவாய்பட நீர்முகந்தேறி (திவ். பெரியாழ்.
3, 5, 4). 3. (Pros.) Mōṉai, of two kinds, viz. மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்;
தொடைவிகற் பம். (இலக். வி. 723.)
முகடு mukaṭu. n. [T. K. mogaḍu.] 1. Top,
highest part; உச்சி. முகடுதுமித் தடுக்கிய பழம்பல் லுணவின் (பெரும்பாண். 246). 2.
Ridge of a roof; வீட்டின் மேற்கூரை. (W.) 3. See முகட்டு வளை. இகழ்ந்தார் முகட்டுவழி
கட்டிற்பாடு (ஆசாரக். 23). 4. Roof of the heavens; அண்டமுகடு. வானெடு முகட்டை யுற்றனன்
(கம்பரா. மருத்து. 30). 5. Superiority, excellence, acme; உயர்வு. முனி மை முகடாய
மூவா முதல்வன் (சீவக. 1609). 6. Entrance of a house; வாயில். முகட்டு வழியூண் புகழ்ந்தார்
(ஆசாரக். 23). 7. Platform, as of an assembly; சபைக்குறடு. பெரியோர்கள் சபையிலே முகடேறி
வந்தது பிதற்றிடும் பெருமூடரும் (அறப். சத. 35). 8. Head; தலை. முகடூர் மயிர்கடிந்த
செய்கையாரும் (தேவா. 936, 10). 9. Hump, as of camel, etc.; ஒட்டகம் முதலியவற்றின்
உயர்ந்த முதுகுப்புறம். சொல்லத்தகு முகட் டொட்டகம் (கனா. 15). 10. The region of
Chaos, as beyond the worlds; பாழ். நீர்மலிய முகடுபடு மண்டகோளகை (தக்கயாகப்.
140). 11. Salvation; மோட்சம். (தக்க யாகப். 140, உரை.)
செம்பாகம்:
செம்பாகம் என்ற சொல்லுக்கு மேற்காணும் அகராதிகள்
காட்டாத புதிய பொருள் 'கன்னம்' என்பதாகும். காதுக்குக் கீழ் உள்ள இந்த பாகமானது முகத்தில்
உள்ள ஏனை உறுப்புக்களைப் போலன்றிச் செம்மையாக அதாவது மேடுபள்ளமின்றி நேராக இருப்பதால்
இப்பகுதிக்குச் செம்பாகம் என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். கன்னம் என்ற பொருள் இச்சொல்லுக்கு
எவ்வாறு பொருந்தும் என்று கீழே இரண்டு சான்றுகளுடன் காணலாம்.
கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது - குறள். 1098
பொருள்: காண்பவரின் கண்களைக் கொள்ளை கொள்வது
சிறிய கண்களே ஆகும். இதனால் காதலைப் பொருத்தமட்டிலும் கன்னங்கள் பெரியதன்று; கண்களே
பெரியவை.
அதாவது, முகத்தில் அமைந்திருக்கும் பல்வேறு
உறுப்புக்களில் கன்னங்களே பெரியவை ஆகும்; கண்களே சிறியவை ஆகும். அளவில் பெரியதாக இருந்தாலும்
காண்போரின் மனதையோ கண்களையோ கன்னங்களால் கொள்ளையடிக்க இயலாது; அளவில் சிறிய கண்களாலேயே
இது முடியும். எனவே காதலைப் பொருத்தவரையிலும், கன்னங்கள் பெரியவை அன்று; கண்களே பெரியவை
என்று காதலில் கண்களின் பெருமையினை ஒப்பீட்டின் மூலம் விளக்கிக் கூறுகிறார் வள்ளுவர்.
சரிதானே?.
அடுத்த சான்றாக கீழ்க்காணும் கலித்தொகைப்
பாடலைப் பார்ப்போம். கையால் செய்யப்பட்ட ஒரு போர்யானை பொம்மையின் அழகினைப் பற்றி உயிருள்ள
ஒரு போர்யானையுடன் ஒப்பிட்டு இப்பாடல் விரிவாகக் கூறுகிறது.
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல்
கை புனை முக்காழ் கயம் தலை தாழ
பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட
நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அம் வாய்
கலந்து கண் நோக்கு ஆர காண்பு இன் துகிர்
மேல்
பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்ப
கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் - கலி.
86
பொருள்: யானையானது தனது கருமைநிறத் தலையில்
அணிந்திருக்கும் ஓடை அணியைப் போலக் கையால் புனைந்த முக்காழ் என்னும் அணியானது அதன்
தலையில் தாழ்ந்திருக்க, பொன்னாலான மழுவைப் போல ஒளிகொண்ட அழகான பூண் அதன் மருப்புக்களின்
முனையில் தோன்ற, காட்சிக்கு இனிய செம்பவளம் போன்ற அதன் கண்களும் அதற்கு மேலாக அதன்
கன்னங்களில் இருந்த பொன்னிற அணிகளும் ஒன்றுக்கொன்று போரிட்டவாறு ஒளிவீச, எதிரிகளின்
கோட்டைவாசலை முட்டாத உனது கையால் செய்யப்பட்ட யானை பொம்மை விளங்கியது.
யானை பொம்மைக்கு என்ன ஒரு அழகான விளக்கம்
பாருங்கள். உயிருள்ள போர்யானையின் தலைமேல் ஓடை என்னும் அணியைச் சூட்டுவதைப் போல பொம்மையானையின்
தலையில் முக்காழ் என்னும் அணி விளங்கியதாம். இந்த முக்காழ் என்பது பலவண்ண மணிமாலைகள்
மூன்றினைச் சேர்த்துக் கட்டிய அணியாகும். போர்யானையின் கண்கள் புகர்நிறத்தில் அதாவது
செந்நிறத்தில் இருப்பதால் அதற்குப் பதிலாக ஒரு செம்பவளத்தினை பொம்மையானையின் கண்களுக்கு
வைத்தனர். உயிருள்ள யானைக்கு அதன் கண்களின்மேல் முகபடாம் அணிவிப்பதைப் போல பொம்மையானைக்குப்
பொன்னிற அணி ஒன்றை அதன் கன்னப்பகுதியில் அணிவித்தனர். இப்பாடலுக்கான விளக்கத்தில் இருந்து
இப்பாடலில் வரும் செம்பாகம் என்பது யானையின் கன்னங்களையே குறித்து வந்துள்ளது என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
கதுவாய்:
கதுவாய் என்னும் சொல்லுக்குத் தமிழ் அகராதிகள்
காட்டாத புதிய பொருள் 'தாடை' என்பதாகும். வாயின் கீழே இருக்கும் இந்த தாடை என்னும்
பகுதியானது குவிந்த நிலையில் இருப்பதாகும். சங்கப் பாடல்கள் எதுவும் தாடை என்னும் உறுப்பினைப்
பற்றி நேரடியாகக் கூறவில்லை. மாறாகக், கதுவாய் என்னும் உறுப்பு எவ்வாறு இருக்கும் என்பதனைச்
சில பாடல்களின் வாயிலாகக் கூறியுள்ளன. அவற்றைக் கீழே காணலாம்.
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் - புறம்.347
களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் -
பதி. 45
கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு - புறம்.353
மேற்காணும் பாடல்கள் அனைத்தும் வேல் என்னும்
கருவியின் கதுவாய் என்னும் உறுப்பு பற்றிக் கூறுகின்றன. யானையின் மேல் எறிந்ததால் வேலின்
கதுவாய் என்னும் உறுப்பானது முறிந்து போனதைப் பற்றிக் கூறுகின்றன. வேலில் இருப்பது
இரண்டே உறுப்புக்கள். ஒன்று, நீண்ட தண்டுப்பகுதி. இன்னொன்று, தண்டின் முனையில் இருக்கும்
இலைபோன்ற பகுதி. வேலின் இலைபோன்ற பகுதி முறிந்துபோனதாக மேலே முதல் பாடல் கூறுகிறது.
மற்ற இரண்டு பாடல்களும் வேலின் கதுவாய்ப் பகுதி முறிந்ததாகக் கூறுகின்றன. இம் மூன்று
பாடல்களும் ஒரே கருத்தையே கூறுவதால், கதுவாய் என்னும் உறுப்பானது இலையினைப் போலக் குவிந்த
அமைப்புடையது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதனை மேலும் சில சான்றுகளின் மூலம் உறுதிசெய்து
கொள்ளலாம்.
யானை கதுவாய் வள் உகிர் இரும்பனை இதக்கையின்
- அகம்.365
மேற்காணும் பாடலானது, யானையின் கால்நகமானது
கதுவாய் அமைப்புடையது என்றும் அதனைப் பனைமரத்தின் நுங்கின்மேல் இருக்கும் தோட்டுடன்
ஒப்பிட்டும் கூறுகிறது. பனைநுங்கும் அதன்மேல் இருக்கும் தோடும் அருகில் இருக்கும் படத்தில்
காட்டப்பட்டுள்ளது. நுங்கின் தலையுச்சியில் குவிந்தநிலையில் இருக்கும் தோட்டுடன் ஒப்பிட்டுக்
கூறி இருப்பதில் இருந்து கதுவாய் என்பது யானைநகத்தின் குவிந்த பகுதியைக் குறிப்பதே
என்பதைப் புரிந்து கொள்ளலாம். கீழ்க்காணும் பாடலில் கதுவாய் அமைப்புடைய குடிசை பற்றிக்
கூறப்பட்டுள்ளது. குடிசையின் கதுவாய் என்பது அதன் குவிந்த மேற்புறம் உடைய கூரையைக்
குறிப்பதாகும்.
கல் சேர்பு இருந்த கதுவாய் குரம்பை - அகம்.
129
மேலே கண்ட சான்றுகளில் இருந்து கதுவாய் என்பது
குவிந்த அமைப்புடையது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். பொதுவாகக், கதுவுதல்
என்ற சொல்லுக்குக் கவ்வுதல் என்ற பொருள் உண்டு. இப்பொருளில் அமைந்த சில பாடல்கள் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.
பழன வாளை கதூஉம் ஊரன் - குறு 8
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் - குறு
91
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் - குறு
164
பூ கதூஉம் இன வாளை - புறம் 18
பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை - பெரும்
287
மேற்காணும் பாடல்கள் யாவும் கெண்டை, வாளை
போன்ற மீன்கள் தம் வாயினால் இரையினைக் கவ்வுதலைப் பற்றிக் கூறுகின்றன. கதுவாய் என்ற
சொல்லில் கதுவுதல் என்னும் வினை இருப்பதால், கதுவாய் என்பது கவ்வுதலுடன் தொடர்புடையது
என்பதைப் புரிந்துகொள்ளலாம். இதுவரை கண்டவற்றைத் தொகுத்துப் பார்க்கும்போது, கதுவாய்
என்பது,
1. குவிந்த அமைப்புடையது
2. கவ்வுதலுடன் தொடர்புடையது
என்று தெரியவருகிறது. இந்த இரண்டு பண்புகளையும்
உடைய உடல் உறுப்பு எதுவென்று ஆய்ந்ததில், அது வாயில் அமைந்திருக்கும் தாடையே அன்றி
வேறாக இருக்க முடியாது என்று தெரிய வந்தது. காரணம், தாடை மட்டுமே கவ்வுதலுடன் தொடர்புடையதும்
குவிந்த அமைப்புடையதும் ஆன உறுப்பு ஆகும். தமிழ் இலக்கணத்தில் வரும் மேற்கதுவாய், கீழ்க்கதுவாய்
என்ற பிரிவுகள் இக்கருத்துக்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் தாடையின் மேல், கீழ்
என்ற பிரிவுகளைக் குறிப்பதாக அமைந்திருப்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.
முகடு:
மேலே கண்ட தமிழ் அகராதிகள் முகடு என்னும்
சொல்லுக்குக் கூறாமல் விட்ட புதிய பொருள் ' தாடை ' என்பதாகும். முகடு என்னும் சொல்
பயின்று வரும் இலக்கியப் பாடல்கள் சிலவற்றைக் கீழே காணலாம்.
முகடு உற உயர்ந்த நெல்லின் - புறம். 391
நெற்கதிர்களைப் போராகக் குவித்து வைக்கும்போது
அடிப்பகுதி அகலமாகவும் மேலே செல்லச்செல்ல சுருங்கியும் இருக்கும். மொத்தத்தில் போரின்
மேற்பகுதியானது குவிந்து தோன்றும். இந்த குவிந்த பகுதியையே முகடு என்று மேற்பாடல் கூறுகிறது.
கோங்கின் பெரிய மலர்மொட்டின் குவிந்த பகுதியினை முகடு என்று கீழ்க்காணும் சிந்தாமணிப்
பாடல்வரி குறிப்பிடுகிறது.
கொங்கு அலர் கோங்கின் நெற்றி குவி முகிழ்
முகட்டின் - சிந்தா.1281
நாம் முதலில் கண்ட கதுவாய் என்னும் சொல்லினைப்
போலவே, முகடு என்னும் சொல்லும் குவிந்த பகுதியைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டிருப்பதை
மேற்காணும் பாடல்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.
இலக்கியச் சான்றுகள் ஒருபுறம் இருக்க, வீட்டுக்
கூரையின் மேற்பகுதியில் இருக்கும் வளைவான குவிந்த நடுப்பகுதியினை முகட்டுவளை என்று
இன்றும் நாம் கூறிவருகிறோம். இந்த முகட்டுவளையின் மேல்பகுதியில் வீட்டின் புகைபோக்கியும்
பல வீடுகளில் அமைக்கப் பட்டிருக்கும். அண்ணாந்து வானத்தைப் பார்க்கும் ஒருவரது முகத்தைப்
பார்க்கும்போது அவரது குவிந்த தாடைப்பகுதி வீட்டின் முகட்டு வளையினைப் போன்றும் அவரது
மூக்கானது வீட்டுக் கூரையின் முகட்டுவளையின்மேல் இருக்கும் புகைபோக்கியைப் போலவும்
தாடையில் விளைந்திருக்கும் கரிய மயிரானது கூரையினைப் போலவும் தோன்றும். அருகில் உள்ள
படத்தில் இருந்து அதனைக் கண்டு தெளியலாம். இவ்வாறு, நம் முகத்தில் உள்ள தாடைப் பகுதியானது
வீட்டின் முகட்டுவளையைப் போலவே வளைந்து குவிந்திருப்பதால் ஒப்பீட்டின் அடிப்படையில்
தாடைப்பகுதியினை முகடு என்னும் சொல்லால் குறித்தனர் எனலாம். முகடு என்னும் சொல்லைத்
தாடை என்ற பொருளில் கீழ்க்காணும் தேவாரப் பாடல் கூறுகிறது.
முகடு ஊர் மயிர் கடிந்த செய்கையாரும் மூடு
துவர் ஆடையாரும் - தேவா. 643
தேவார காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த சமணர்கள்
தமது முகடு ஆகிய தாடையில் தோன்றும் மயிரைக் கடியும் / விலக்கும் தன்மையுடையவர்கள் என்ற
செய்தியை மேற்பாடல்வரி கூறுகிறது.
முடிவுரை:
இதுவரை கண்டதில் இருந்து, செம்பாகம் என்னும்
சொல்லுக்குக் கன்னம் என்ற புதிய பொருள் இருப்பதையும் கதுவாய், முகடு ஆகிய சொற்களுக்குத்
தாடை என்ற புதிய பொருள் இருப்பதைப் பற்றியும் அறிந்து கொண்டோம். இதுபோல பல சொற்களுக்குத்
தமிழ் அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள் உள்ளன. இந்தப் புதிய பொருட்களைத் தமிழ் அகராதிகள்
காட்டாமல் போன காரணத்தினால், பல பாடல்களின் விளக்கம் தவறாகப் புரிந்துகொள்ளப்படுவது
மட்டுமின்றி, பிற இந்திய மொழிகளில் இச்சொற்களின் தாக்கம் பற்றிய வரலாறும் அறியப்படாமலே
போய்விடுகிறது. எனவே கூடிய விரைவில், இப்புதிய பொருட்களைத் தமிழ் அகராதிகளில் சேர்த்து
இக்குறைகளைக் களைய வேண்டும் என்று இக்கட்டுரை முன்மொழிகிறது.
***************** வாழ்க தமிழ்! ****************
அரிய செய்தியினை அறிந்தேன். முயற்சிக்குப் பாராட்டுகள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா. :))
நீக்கு