சனி, 9 ஜூன், 2018

11 - புலி ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


முன்னுரை:

புலி - என்று ஒருவர் விளையாட்டுக்குக் கூறினாலும் அதைக் கேட்டவுடனே ஒரு நடுக்கம் தோன்றுவது அனைவருக்கும் இயல்பே. ஏனென்றால், மனிதர்கள் ஊருக்குள் வாழ்ந்தாலும் திடீரென ஊருக்குள் புகுந்து மனிதர்களையும் கால்நடைகளையும் அதிகம் தாக்கிக் கொல்லும் காட்டுவிலங்கு புலியே ஆகும். மனிதர்களையும் கால்நடைகளையும் புலிகள் தாக்கிக் கொல்லும் செய்திகளை ஆண்டுதோறும் படித்துக் கொண்டுதான் வருகிறோம். தலை, தோல், இறைச்சி, நகம், பல் ஆகியவற்றுக்காகப் புலிகள் மனிதர்களால் வேட்டையாடப்படுவதால் இந்தியாவிலும் தமிழகத்திலும் புலிகளின் எண்ணிக்கைத் தற்போது வெகுவாகக் குறைந்துவிட்டது. பாதுகாக்கப்படவேண்டிய விலங்குகள் பட்டியலில் உள்ள புலியைக் காப்பகத்தில் நேரில் கூண்டுக்குள் பார்க்கும்போதும் உள்ளுக்குள் அஞ்சாதவர் வெகுசிலரே எனலாம். சங்க இலக்கியங்களில் புலியைப் பற்றிய பல்வேறு செய்திகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அவற்றை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

புலி - பெயர்களும் காரணங்களும்:

புலி என்னும் விலங்கினைக் குறிக்கும் பெயர்களாக இப்பெயர் உட்பட, உழுவை, வேங்கை, வயம், வயமா(ன்), வல்லியம், கொடுவரி, குயவரி, பல்வரி, சிறுவரி ஆகிய பெயர்களைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. இப்பெயர்களுக்கான காரணங்களைக் கீழே காணலாம்.

புலி - புலால் / புலவு நாற்றம் கொண்டது.
உழுவை - விரல்நகங்களால் உழுதலாகிய கீறலைச் செய்வது.
வேங்கை - வேங்கை மரத்தின் பூப்போன்ற வண்ணவரிகளை உடலில் கொண்டது.
வயம், வயமா(ன்) - வலிமை மிக்கது.
வல்லியம் - வல்+இயம் - விரைந்து ஓடக்கூடிய விலங்கு.
கொடுவரி, குயவரி - வளைந்த வரிகளை உடல்முழுவதும் கொண்டது.
பல்வரி - உடல்முழுவதும் பலவரிகளைக் கொண்டது.
சிறுவரி - உடல்முழுவதும் சிறிய வரிகளைக் கொண்டது.

இந்திய மொழிகளில் புலிக்கான பெயர்கள்:

தமிழ்மொழியில் புலியைக் குறிக்கும் பெயர்களை மேலே கண்டோம். இனி, இந்தியாவின் தேசிய விலங்கான புலியைக் குறிப்பிடுவதற்கு இந்தியாவின் பிறமாநில மொழிகள் பயன்படுத்தும் பெயர்களையும் அவை எந்தெந்த தமிழ்ச்சொல்லின் திரிபுகள் என்பதையும் கீழே காணலாம்.

புலி >>> கு`லி
வேங்கை >>> வ்யாக்^ர >>> வாக^ >>> பா`க்^, பா`க^
சிறுவரி >>> ச^கு~வார்
வயம் >>> வ, வா

சொல்வடிவம்    பேசப்படும் மொழிகள்

புலி              மலையாளம், தெலுங்கு
கு`லி            கன்னடம்
வ்யாக்^ர         மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, 
                 செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
வாக^            மராத்தி, கு~ச்^ராத்தி
பா`க^, பா`க்^      இந்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
வ, வா           செங்கிருதம்
ச^கு~வார்         இந்தி

சங்க இலக்கியத்தில் புலி:

புலி எனும் விலங்கானது உண்மையில் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். அக் குடும்பத்தில் மிகப் பெரிய விலங்கு புலியே ஆகும். பாந்தெரா டைக்~ரிச்` (PANTHERA TIGRIS) என்பது இதன் விலங்கியல் பெயராகும். புலிகளில் வங்கப்புலி, காச்`பியன் புலி, சை`பீ`ரியன் புலி என்று பலவகைகள் உண்டு. இந்தியாவில் காணப்படும் புலிகள் வங்கப்புலி வகையைச் சேர்ந்ததாகும். வங்கப்புலியின் சராசரி நீளம் 9 அடி, உயரம் 3 1/2 அடி, எடை 250 கிலோ. 3500 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகக் காடுகளில் வாழ்ந்துவந்த புலிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ள செய்திகளைக் கீழே தொகுத்துக் காணலாம்.

சங்க இலக்கியங்கள் புலியின் உடல்நிறம் பற்றிக் கூறுமிடத்து, அதில் பலவரிகள் காணப்பட்டன என்று கூறுகிறது. இவ்வரிகளைக் கொடுங்கேழ், கொடுவரி, வாள்வரி, குயவரி, பல்வரி, சிறுவரி என்ற பெயர்களால் குறிப்பிடுகிறது. செம்பொன் / பொன் நிறமுடைய புலியின் உடலில் கருமைநிற வரிகள் காணப்படுவதனை வேங்கை மரத்தில் பூத்திருக்கும் மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. அதுமட்டுமின்றி, புன்னை மரத்தின் மலர்களில் இருந்து உதிர்ந்த பொன்னிறத் தாதுக்களைக் கருவண்டுகள் மொய்க்கும் காட்சியை வரிப்புலியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. புள்ளிகளை உடைய சிறுத்தைப் புலியின் உடலைக் கழங்கு எனப்படும் சோழிகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. புலியின் கண்களைப் பற்றிக் கூறுமிடத்துச் செங்கண் என்றும் கடுங்கண் என்றும் கூறுகிறது. புலியின் முன்னங்கால்களைக் குறுங்கை என்று குறிப்பிடும் சங்க இலக்கியமானது அதன் கால்/கை விரல்களில் காணப்படும் கூரிய நீண்ட நகங்களை முருக்க மரத்தின் பூமொக்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. புலியின் குரலைப் பற்றிக் கூறுமிடத்து, அதனைத் தயிர் கடையும் ஓசையுடனும் கார்முகில்கள் எழுப்பும் ஓசையுடனும் கடல் அலைகளின் ஓசையுடனும் உவமையாகக் கூறுகிறது. யானை, மான், காட்டுப்பன்றி ஆகியவற்றைப் புலி வேட்டையாடுவதைப் பற்றிக் கூறியுள்ள சங்க இலக்கியமானது, எதிரியின் கொம்பு / பல்லினால் தனது உடலில் கீறல் / காயம் ஏற்பட்டால் அந்த எதிரியை அடித்து வீழ்த்துமே ஒழிய உண்ணாது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. சங்க இலக்கியங்கள் புலியைப் பற்றிக் கூறியுள்ள பல்வேறு செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் விரிவாகக் காணலாம்.

1. புலியும் தோலும்
2. புலியும் கண்களும்
3. புலியும் நகமும்
4. புலியும் குரலும்
5. புலியும் வேட்டையும்

1. புலியும் தோலும்:

புலியின் தோல் என்று கூறுமிடத்து அதன் நிறமும் அதில் காணப்படும் வடிவங்களுமே குறிப்பிடத்தக்கவை ஆகும். செம்மை, செம்பொன், பொன், வெண்மை, கருமை என்று புலியின் தோல்நிறங்கள் இனத்திற்கேற்ப மாறுபடுவதுண்டு. அதுமட்டுமின்றி, கருமைநிறத்திலான சிறுவரிகள், பெரிய வளைவான வரிகள், சிறுபுள்ளிகள், சிறுவட்டங்கள் உட்பட பூப்போன்ற வடிவங்களும் இனத்திற்கு ஏற்பப் புலியின் உடலின்மேல் காணப்படுவதுண்டு. ஒருமனிதரின் கைரேகையானது பிறரது கைரேகையுடன் ஒத்துப்போகாததைப் போலவே ஒரு புலியின் உடலின்மேல் காணப்படும் வடிவங்களும் நிறமும் பிறபுலிகளுடன் ஒத்துப்போவதில்லை என்று விக்கிபீடி`யா கூறுகிறது.

புலியின் உடலின்மேல் காணப்படும் வரிகளை அடிப்படையாகக் கொண்டே புலிக்குச் சிறுவரி, கொடுவரி, குயவரி, பல்வரி ஆகிய பெயர்கள் ஏற்பட்டன எனலாம். புலியின் உடலில் காணப்படும் வரிகளைப் பற்றிக் கூறும் சில சங்கப்பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில் - மலை.302
வய களிறு பொருத வாள் வரி உழுவை - நற்.255

புலியின் தோலில் காணப்படும் செம்பொன் நிறம் மற்றும் வடிவங்களைப் பற்றிக் கூறுமிடத்து அவற்றை வேங்கை மரத்தின் பூக்களுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். ப்டெரோகார்பச்` மார்சு`பியம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட வேங்கை மரத்தின் பூமொட்டுக்கள் கருப்புநிறத்திலும் மலர்ந்த பூக்கள் பொன் / செம்பொன் நிறத்திலும் இருப்பதால் கருமையும் செம்பொன் நிறமும் கலந்த ஒரு காட்சியாகப், பார்ப்பதற்கு அவை ஒரு புலியின் உடல்போலத் தோன்றுவதில் வியப்பில்லை. அருகில் காட்டப்பட்டுள்ள ஒரு வேங்கைமரத்தின் பூக்களில் இருந்து இதனை உறுதிசெய்து கொள்ளலாம். புலிக்கு வேங்கை என்ற பெயர் ஏற்பட்டதே இதன் அடிப்படையில்தான் எனலாம். புலியின் உடல்நிறத்தினை வேங்கை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

வேங்கையும் புலி ஈன்றன - நற்.389
வேங்கை ஒள் வீ புலிப்பொறி கடுப்ப தோன்றலின் - அகம். 228
கருங்கால் வேங்கை வீ உகு துறுகல்
இரும்புலி குருளையின் தோன்றும் - குறு.47

கரிய பாறையின்மேல் வரிவரியாக உதிர்ந்திருந்த வேங்கையின் செம்பொன் நிற மலர்கள் பார்ப்பதற்குக் குட்டிப்புலி ஒன்று அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றியதாக மேற்காணும் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது. இதேபோன்ற ஒரு கருத்தினை கீழ்க்காணும் புறப்பாடலும் கூறுகிறது.

அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல்
இரும் புலி வரி புறம் கடுக்கும் - புறம். 202

இரும்பு போல் கருமையான வலிய கிளைகளைக் கொண்ட அந்த புன்னை மரத்தில் இருந்து அதன் கரும்பச்சை நிற இலைகள் கீழே உதிர்ந்து குவிந்திருந்தன. வெள்ளியைப் போன்ற புன்னை மலர்களில் இருந்து பொன்னிறத் தாதுக்களும் ஏராளமாய் அந்த இலைகளின்மேல் உதிர்ந்திருந்தன. அந்த பூந்தாதுக்களில் இருக்கும் தேனை உண்பதற்காகக் கருநிற வண்டுகள் வரிசையாய் மொய்த்திருந்த நிலையில், அதனை ஒரு புலியாகக் கருதிய குதிரையானது அச்சத்தால் ஒரு பந்தினைப் போல எழும்பிக் குதித்த நிகழ்வினை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல்வரிகள் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருவதைப் பாருங்கள்.

இரும்பின் அன்ன கரும் கோட்டு புன்னை
நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும்
வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண்
பொன்னின் அன்ன நறும் தாது உதிர
புலி பொறி கொண்ட பூ நாறு குரூஉ சுவல்         5
வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇ
பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவ - நற்.249.

புலியின் உடலைப் பூக்களுடன் மட்டுமின்றிக் கழங்கு எனப்படுவதான பலகறை (சோழி) களுடன் ஒப்பிட்டும் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கல் முகை வய புலி கழங்கு மெய்ப்படூஉ - ஐங்கு.246

சிறுத்தைப் புலியின் உடலில் காணப்படும் புள்ளிகளைப் போலத் தோன்றுகின்ற சோழிகளைப் பற்றி மேற்பாடல் வரி கூறுகிறது. சிறுத்தையின் உடலும் சோழியும் அருகில் உள்ள படத்தில் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

2. புலியும் கண்களும்:

பொதுவாகவே வேட்டையாடும் விலங்குகளின் கண்கள் அச்சம் தரும் நிறத்தில் தான் இருக்கும். அவ்வகையில் புலியின் கண்களும் எதிரிக்கு அச்சம் உண்டாக்கும் வகையில்தான் அமைந்திருக்கின்றன. பகல் நேரத்தில் மட்டுமின்றி இரவு நேரத்தில் கூட புலிக்குக் கூர்மையான கண்பார்வை உண்டு. காட்டுப்பகுதியில் இரவுநேரத்தில் மிகச்சிறிய ஒளியில் புலியின் கண்கள் விளக்குகளைப் போல ஒளிர்வதைப் பார்க்கலாம். இருளில் மறைந்திருந்து இரையின்மேல் சரியாகப் பாய்ந்து தாக்கி வேட்டையாடுவதற்குப் புலியின் இரவுநேரப் பார்வைத் திறன் பெரிதும் உதவுகின்றது எனலாம். மனிதர்களைக் காட்டிலும் புலியின் இரவுநேரப் பார்வைத் திறன் ஆறுமடங்கு பெரியது என்று விக்கிபீடி`யா கூறுகிறது.

புலியின் கண்களைப் பற்றிக் கூறுமிடத்து, அவற்றைச் செங்கண் என்றும் கடுங்கண் என்றும் சங்கப் பாடல்கள் கூறுகின்றன. சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

செங்கண் இரும் புலி கோள் வல் ஏற்றை     - நற். 148
கடுங்கண் வய புலி ஒடுங்கும் நாடன் - நற்.322
செங்கண் இரும் புலி குழுமும் - குறு.321

மேற்பாடல்களில் வரும் கடுங்கண் என்பது புலியின் கண்களில் காணப்படும் கடுஞ்சினத்தையும் செங்கண் என்பது செம்பொன் நிறத்தில் அதன் கண்கள் ஒளிரும் தன்மையையும் குறித்து வந்துள்ளன எனலாம். அருகில் புலியின் கண்களின் படம் காட்டப்பட்டுள்ளது.

3. புலியும் நகமும்:

புலி ஒரு சிறந்த வேட்டை விலங்காக விளங்குவதற்கு மிகவும் உதவியாய் இருப்பது அதன் கூரிய நகங்களே ஆகும். வேறு எந்தவொரு பூனைக் குடும்ப விலங்கிற்கும் இல்லாத வகையில் புலியின் நகங்கள் மிக நீளமானவை ஆகும். இந்தியப் புலிகளின் விரல் நகங்கள் 10 செ.மீ வரையிலும் இருப்பதுண்டு என்று விக்கிபீடி`யா கூறுகிறது. புலியின் கூர் நகங்களைப் பற்றிக் கூறும் சில சங்கப் பாடல்கள் கீழே:

கல் அளை செறிந்த வள் உகிர் பிணவின் - நற். 148
கூர்உகிர் கொடுவரி குருளை கூட்டுள் வளர்ந்தாங்கு - பட்.221

புலியின் நீண்ட கூரிய நகங்களைப் பற்றிக் கூறுமிடத்து, அவற்றை முள்முருக்கு மரத்தின் கூரிய நீண்ட மலர்மொக்குகளுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன கீழ்க்காணும் சங்கப்பாடல் வரிகள். அருகில் உள்ள படத்தில் புலியின் நகமும் முள்முருக்க மலர்மொக்கும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

வாள்வரி வயமான் கோள் உகிர் அன்ன செம்முகை
அவிழ்ந்த முள்முதிர் முருக்கின் சிதரார் செம்மல் - அகம். 99
முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வய பிணவு - அகம். 362

புலி தனது எதிரியைத் தாக்கும்போது தனது நீண்ட கூரிய நகங்களைக் கொண்டு எதிரியின் உடலில் மிக ஆழமாகக் கீறிக் காயப்படுத்தும் தன்மை கொண்டதாகும். கூரிய ஏர்முனை கொண்டு மண்ணில் ஆழமாக உழுவதைப்போல எதிரியின் உடலில் தனது கூர்நகங்களால் ஆழமாக உழுவதினால் தான் புலிக்கு 'உழுவை' என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். புலி தனது கூர்நகங்களால் உழுததினால் தமது கணவரின் மார்பில் உண்டான ஆழமான நீண்ட காயங்கள் விரைவில் ஆறுவதற்காக மலைவாழ் பெண்கள் தமது கடவுளைக் குறித்து காப்பு பாடிய செய்தியைக் கீழ்க்காணும் மலைப்படுகடாம் பாடல்வரிகள் கூறுவதைக் காணலாம்.

கொடுவரி பாய்ந்தென கொழுநர் மார்பில்
நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என
அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் - மலை.302

4. புலியும் குரலும்:

இயற்கை விதிப்படி, ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொருவிதமான குரலினை எழுப்பக் கூடியதே. காட்டுப்பகுதியில் செல்லும்போது ஒரு விலங்கு எழுப்பும் குரலைக் கேட்டே அந்த ஒலிக்குரிய விலங்கு எதுவென்று புரிந்துகொள்ள முடியும். அவ்வகையில், புலி எழுப்பும் குரலும் தனிப்பட்ட ஒன்றுதான். புலி எழுப்பும் ஒலியினை உறுமல் என்று நாம் தற்போது சொன்னாலும் குழுமல் என்றும் உரறல் என்றும் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. புலியின் குரலினைத் தயிர் கடையும் ஓசையுடனும் கருமேகங்களின் ஓசையுடனும் கடலலைகளின் ஓசையுடனும் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர். அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி - பெரும். 156
கடையல் அம் குரல வாள் வரி உழுவை - அகம். 277

மேற்காணும் பாடல்களில் புலியின் குரலானது மத்தினால் தயிர் கடையும்போது எழுவதான 'க~ர்க~ர்' என்பது போன்ற ஒலியுடன் ஒப்பிட்டுக் கூறப்பட்டுள்ளது. புலியானது சினங்கொண்டு எழுப்பும் பெருங்குரலானது கார்முகில்கள் வானத்தில் ஒன்றுகூடி மழையாகப் பொழியும் முன்னர் எழுப்புகின்ற ஓசையைப் போன்றிருக்கும் என்று கீழ்க்காணும் பாடல்களில் கூறப்பட்டுள்ளது. 

கதம் சிறந்து எழுபுலி எழுதரு மழையின் குழுமும் - ஐங்கு.218

வானத்தில் கருமேகங்கள் ஒன்றுகூடி எழுப்பிய ஓசையினைப் புலியின் உறுமலாகக் கருதியக் காட்டுயானையொன்று அஞ்சி ஓடியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின்
மாஅல் யானை புலி செத்து வெரீஇ - அகம்.232

ஐந்தறிவு உடைய விலங்கான யானைதான் மேகங்களின் ஒலியினைப் புலியின் குரலாகக் கருதி மயங்கியதென்றால் ஆறறிவு படைத்த மனிதர்களும் அவ்வாறே மயங்கிய செய்தியைக் கீழ்க்காணும் பாடல்வழி அறியமுடிகிறது.

இரும்புலி களிறு தொலைத்து உரறும் கடிஇடி
மழை செத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும் .. - நற்.344

புலி எழுப்பிய ஓசையினைக் கார்மேகங்களின் குரலாகக் கருதிய கானவர்கள், மழைதான் வரப்போகிறது என்று எண்ணி, வெயிலில் காயவைத்திருந்த செந்தினையினைத் தொகுத்து எடுத்துச்சென்ற செய்தியினை மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. புலியின் குரலினைக் கடல் அலைகளின் இரைச்சலுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

மா கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு
கோள் புலி வழங்கும் சோலை - குறு. 237

5. புலியும் வேட்டையும்:

இயற்கை படைத்த பல்வேறு வேட்டை விலங்குகளில் புலியானது குறிப்பிடத்தக்க விலங்காகும். காட்டு அரசனாக அறியப்படும் அரிமாவானது பெரும்பாலும் கூட்டமாகவே விலங்குகளை வேட்டையாடும் நிலையில், புலியானது பெரும்பாலும் தனி ஒருவனாகவே தனக்கான இரையினை வேட்டையாடிக் கொன்று உண்ணும். மிகச்சிறிய முயல் முதல் மிகப்பெரிய யானை வரையிலும் துணிவுடன் விடாமல் போராடி வேட்டையாடிக் கொல்லும். காட்டுப்புலியானது தனது இரையினை எவ்வாறு வேட்டையாடிக் கொன்றுண்ணும் என்று இங்கே காணலாம்.

புலியானது, தனக்கான இரையினை வேட்டையாடும் முன்னால் அந்த இரையின் கண்ணில் படாதவாறு மறைவில் இருந்துகொண்டு இரையினையே நெடுநேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். பின்னர் திடீரென்று அந்த இரையின்மேல் அதிக வேகத்துடன் பாயும். இரை ஓடத் துவங்கியதும் அதிக வேகத்தில் அதனைப் பின்தொடர்ந்து பாய்ந்தோடும். இரையை நெருங்கியவுடன் குட்டையானதும் வலிமை மிக்கதும் கூரிய நகங்களைக் கொண்டதுமான தனது முன்னங்கால்களால் இரையினை வலுவுடன் ஓங்கி அடித்து வீழ்த்தி அதன்மேல் தனது மொத்த உடல் எடையையும் செலுத்தி இரையினை எழவிடாமல் செய்யும். இரையின் குரல்வளையைத் தனது கூரிய பற்களால் கவ்வியபின், தனது பிடியை விடாமல் இறுக்கியவாறு பற்களை மேலும் ஆழமாகச் செலுத்திக் கொல்லும். இரையின் உயிர் முழுவதுமாக பிரிந்து பிரியாமல் இருக்கும்போதே இரையின் வயிற்றைத் தனது கூர்நகங்களால் கிழித்து அதற்குள் இருக்கும் தசையினை உண்ணத் துவங்கும்.

யானை, மான், காட்டுப்பன்றி, காட்டுமாடுகள் போன்றவற்றை புலி வேட்டையாடிக் கொன்ற நிகழ்வுகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்துள்ளன. இவற்றுள் யானைக்கும் புலிக்கும் இடையிலான போராட்டங்களே அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

விடர் முகை செறிந்த வெம் சின இரும் புலி       5
புகர் முக வேழம் புலம்ப தாக்கி
குருதி பருகிய கொழும் கவுள் கய வாய்
வேங்கை முதலொடு துடைக்கும் - நற். 158

குறும் கை இரும் புலி கோள் வல் ஏற்றை
பூ நுதல் இரும் பிடி புலம்ப தாக்கி  - நற். 36

புலியின் வேட்டையைப் பற்றிக் கூறுமிடத்து, புலியானது தனது இரையினை அடித்து வீழ்த்தும்போது அது தனக்கு வலப்புறமாக வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் என்றும் இடப்புறமாக வீழ்ந்தால் உண்ணாது என்றும் ஒரு கருத்து பரவலாகக் கூறப்படுகிறது. இக் கருத்திற்கு ஆதாரமாகக் கீழ்க்காணும் சங்கப்பாடல்களை மேற்கோள் காட்டுகின்றனர்.

கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்து என
அன்று அவண் உண்ணாது ஆகி .... - புறம்.190

கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ் களிறு மிசையா புலியினும் .... - அகம். 29

இடம்படுபு அறியா வலம் படு வேட்டத்து வாள்வரி ...- அகம்.252

மேற்காணும் பாடல்களில் வரும் இடம்படுதல் என்ற சொல்லுக்கு இடப்புறமாக வீழ்தல் என்று பொருள்கொண்டு இவ்வாறு கருத்து கூறியுள்ளனர். இக் கருத்து உண்மையா? பொய்யா? என்று அறிந்துகொள்ளவேண்டி, புலிவேட்டை தொடர்பான குறிப்புக்கள், நூல்கள், காணொளிகள் என்று பலவும் அலசி ஆராயப்பட்டன. ஆய்வின் முடிவில் இக் கருத்து தவறு என்று உறுதி செய்யப்பட்டது. ஆம், வேட்டையாடும்போது புலியினால் கொல்லப்பட்ட இரை எந்தப் பக்கம் வீழ்ந்தாலும் புலி அதனை உண்ணாமல் செல்வதில்லை என்பதே உண்மை என்று உறுதியானது. என்றால், சங்கப் புலவர்கள் புலியைப் பற்றிய உண்மையை அறியாமல் மேற்காணும் பாடல்களைக் கற்பனையாகக் கூறியுள்ளார்களா?. என்ற கேள்வி பிறக்கிறது. இக்கேள்விக்கான விடை: கற்பனை இல்லை என்பதே. உண்மையில் சங்கப் புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களில் தவறில்லை. அப் பாடல்களுக்கு நாம் கொண்டிருக்கும் பொருள்தான் தவறானது. இதைப்பற்றி விளக்கமாகக் கீழே காணலாம்.

உண்மையில், மேற்காணும் பாடல்களில் வரும் இடம்படுதல் என்ற சொல்லானது வடு உண்டாகுதல் / கீறப்படுதல் என்ற பொருளில் வந்துள்ளது. இது எவ்வாறென்றால், இடம்படுதல் என்பது தன்வினையைக் குறிக்கும் நிலையில், அதன் பிறவினையைக் குறிக்கும் சொல் இடம்படுத்தல் ஆகும். இடம்படுத்தல் என்ற சொல்லானது வடுவினை உண்டாக்குதல் / கீறுதல் / கிழித்தல் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் - அகம் 90
ஏர் இடம்படுத்த இரு மறு பூழி - அகம் 194

இரும்புப்படை கீறிய வடுவினை உடைய முகத்தர் என்பது முதற்பாடலின் பொருள். ஏர்முனையைக் கொண்டு கீறி இருமுறை உழுத புழுதி என்பது இரண்டாவது பாடலின் பொருள். இவ் இரண்டு பாடல்களில் இருந்தும், இடம்படுத்தல் என்ற சொல்லானது கீறுதல் / கிழித்தல் / வடு உண்டாக்குதல் என்ற பொருளில்தான் பயின்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

மேலே கண்ட சான்றுகளில் இருந்து, நாம் முன்னர்கண்ட புலிவேட்டை பற்றிய மூன்று பாடல்களிலும் இடம்படுதல் என்ற சொல்லானது கீறப்படுதல் / வடுவுண்டாதல் என்ற பொருளில்தான் பயின்று வந்துள்ளது என்பதை உறுதியாக அறிந்து கொள்ளலாம். இயற்கையிலேயே புலி ஒரு திறமையான வேட்டை விலங்காக இருந்தாலும் இரையினை வேட்டையாடும்போது இரையும் புலியைத் தாக்கிக் காயப்படுத்தவோ கொன்றுவிடவோ முயல்வதுண்டு. புலியானது பெரும்பாலும் இத்தகைய தாக்குதல்களில் இருந்து தப்பித்து விடும். சில நேரங்களில் எதிரி விலங்கின் நீண்ட கொம்பு, பல் போன்றவற்றால் கீறப்படும் / குத்தப்படும். இப்படி எதிரியால் கீறப்பட்டோ / குத்தப்பட்டோ உடலில் வடுவுண்டாகிய நிலையில், அந்த எதிரியைப் புலி அடித்து வீழ்த்திவிட்டாலும் அதனை உண்ணாமல் சென்றுவிடும். காரணம், எதிரியால் தனது உடலில் உண்டான வடுவினை அது இழிவாகக் கருதுவதே என்பது சங்கப் புலவர்களின் கருத்தாகும். இக் கருத்தினையே மேற்காணும் மூன்று பாடல்களிலும் சங்கப் புலவர்கள் கூறுகின்றனர். புலிகள் வேட்டையாடும் முறை குறித்து சங்கப் புலவர்கள் கூறியுள்ள இக் கருத்தினைத் தவறு என்று நிரூபிக்க இதுவரையிலும் எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், சரியென்று கொள்வதில் தவறில்லை. 

புலி தொடர்பான பழமொழிகள்:

புலி தொடர்பான சில பழமொழிகளும் சொலவடைகளும் தற்காலத்திலும் வழக்கில் உண்டு. அவற்றில், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது, புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம், புலிக்குப் பிறந்தது பூனை ஆகுமா?, பார்த்தால் பூனை பாய்ந்தால் புலி ஆகியவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். வீரத்தில் சிறந்த ஒருவரை வீரப்புலி, சூரப்புலி என்று கூறுவர். இது ஏற்புடைய ஒன்றே. ஆனால், கணக்கு வழக்கில் சிறந்து விளங்கும் ஒருவரை கணக்குப்புலி என்று கூறுகிறார்கள். கணித அறிவுக்கும் புலிக்கும் என்ன தொடர்போ விளங்கவில்லை. கணக்கு வழக்குகளைப் புள்ளி விவரங்களுடன் கூறக்கூடியவர் என்ற பொருளைத்தரும் கணக்குப்புள்ளி என்ற சொல்லே கணக்குப்புலி என்று ஒருவேளை மருவி வழங்கப்படுகிறதோ என்று தோன்றுகிறது. இந்நிலையில், சங்க இலக்கியங்களில் சில பாடல்களில் புலி தொடர்பான உவமைகள் பழமொழி வடிவில் கூறப்பட்டுள்ளன. அவற்றின் விளக்கங்களையும் அவற்றை எவ்வாறு புதிய பழமொழிகளாக நடைமுறையில்  பயன்படுத்தலாம் என்பதையும் இங்கே விரிவாகக் காணலாம்.

பழமொழி: எருத்து வவ்விய புலி போல (புறம்.4)
பொருள்: கழுத்தைக் கவ்விய புலியைப் போல....
உவமை: கருமத்தைக் கைவிடாமல் செய்து வெற்றி பெறுதல்.

பழமொழி: துஞ்சு புலி இடறிய சிதடன் போல (புறம்.73)
பொருள்: தூங்கிக் கொண்டிருக்கும் புலியை அறியாமல் இடறிய குருடன் போல......
உவமை: அறியாமையால் ஒரு பெருந்துன்பத்தைத் தானே உருவாக்கி அழிந்துபோதல்.

பழமொழி: புலி புறங்காக்கும் குருளை போல (புறம் 42)
பொருள்: புலி காவல்காக்கும் குட்டியைப் போல.....
உவமை: நெருங்க இயலாத காவலை உடையது எனல்.

பழமொழி: புலி சேர்ந்து போகிய கல் அளை போல (புறம். 86)
பொருள்: புலி தங்கிச்சென்ற குகையினைப் போல....
உவமைகள்: 1) வீரம் மிக்க மகனைச் சுமந்து பெற்றெடுத்த வயிறு இதுவெனல்.
2) தலைவன் வாழ்ந்த / தங்கிச் சென்ற வீடு இதுவெனல்.

முடிவுரை:

சங்க இலக்கியத்தில் புலியைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை மேலே கண்டோம். இக்காலத்தில் மட்டுமின்றி சங்ககாலத்திலும் புலிகள் மனிதர்களைத் தாக்கிய செய்திகள் இலக்கியத்தில் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. இதில் நற்றிணையின் 2 ஆம் பாடலில் கூறப்பட்டுள்ள செய்தி அச்சத்தை உண்டாக்குவது ஆகும். வழியில் நடந்து சென்றோரை மறைந்திருந்து தாக்கி அவர்களது கழுத்தைக் கவ்விக் குருதியைப் பருகிய செய்தி கூறப்பட்டுள்ளது. மிகமிகக் கொடூரமான வலிமைமிக்க விலங்கான புலியைத் தமிழ்ப்பெண் ஒருத்தி வெறும் முறத்தைக் கொண்டு துரத்தியதாகக் கதை ஒன்று உண்டு. ஆனால் இதைப்பற்றிய எவ்விதக் குறிப்பும் சங்க இலக்கியத்தில் காணக் கிடைக்கவில்லை. மாறாக, புலியின் பல்லைக் கயிற்றில் கோர்த்துத் தாலியாக அணிந்த செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.

 =============== வாழ்க தமிழ் ! ===================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.