செவ்வாய், 12 ஜூன், 2018

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா ?- 1 - வேதியியல்

முன்னுரை:

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா?. என்ற தலைப்பில் பன்னெடுங்காலமாகவே கருத்தரங்கங்களும் பயிலரங்கங்களும் நடைபெற்றுக் கொண்டுதான் வருகின்றன. ஆனால், இவற்றின் விளைவுதான் என்ன?. ஒன்றுமில்லை.!. ஏன்?. ஏனென்றால், இந்த அரங்குகள் எல்லாம் தமிழில் அறிவியல் நூல்களைச் சமைப்பதில் இருக்கும் பல்வேறு சிக்கல்களை மட்டுமே முன்வைக்கின்றன. இச்சிக்கல்களுக்கான தீர்வுகளை வரையறுத்து முன்வைக்கவோ அவற்றை அலசி ஆராய்ந்து முடிவெடுத்து நடைமுறைப் படுத்தவோ முன்வராதது வருத்தத்திற்குரியது. தமிழில் அறிவியல் நூல்களை இயற்ற முடியவே முடியாது என்று கூறும் தமிழரே பலரிருக்க, அப்படியே இயற்றினாலும் ஆங்கில மொழியின் துணையின்றி முழுமையாகத் தமிழில் இயற்ற இயலாது என்பாரும் உளர். இவர்கள் எல்லோருமே ஒன்றை மறந்துவிட்டுப் பேசுகிறார்கள். தமிழ் தனித்தே இயங்கவல்ல ஒரு வளம்மிக்க மொழி. இம்மொழிக்கு வேறு எந்தவொரு மொழியின் உதவியும் தேவையில்லை. தமிழில் உள்ள எழுத்து மற்றும் சொற்களைக் கொண்டே ஒன்றல்ல இரண்டல்ல ஆயிரக்கணக்கான அறிவியல் நூல்களை இயற்ற முடியும். முதலில், தமிழில் வேதியியல் நூல்களை இயற்றும் முறை பற்றி இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தாய்மொழியில் கல்வியின் பயன்:

அறிவியல் நூல்கள் தான் ஏற்கெனவே ஆங்கில மொழியில் உள்ளனவே, ஏன் தமிழ்மொழியில் புதிதாக அறிவியல் நூல்களை அரும்பாடுபட்டுச் செய்யவேண்டும்?. என்று பலர் கேட்கின்றனர். இவர்கள் தாய்மொழிக் கல்வியின் பயனையோ சிறப்பினையோ அறியாதவர்கள். ஒரு கருத்தினைத் தாய்மொழியில் கற்பதற்கும் அதேகருத்தினை வேற்றுமொழியில் கற்பதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தாய்மொழிக்கல்வி என்பது சமைத்த சோற்றினை உண்பதைப் போல நேரடியாக ஏற்றுக்கொள்ள / புரிந்துகொள்ள எளிமையானது. வேற்றுமொழிக்கல்வி என்பது அரிசியைக் கொடுத்து உண்ணச்சொல்வதைப் போன்றது. அரிசியைச் சோறாகச் சமைத்தபின்னரே உண்ண முடிவதைப் போல வேற்றுமொழியில் இருக்கும் கருத்தினைத் தாய்மொழியில் மாற்றிய பின்னரே புரிந்துகொள்ள முடியும். இப்படி மொழிமாற்றம் செய்யும்போது ஏற்படும் சில நடைமுறைச் சிக்கல்களால் பிறமொழியில் கல்வி கற்கும் பலரும் கருத்துக்களைச் சரியாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகின்றனர். இவ்வாறு புரிதல் தடைபட்டுப் போவதால் வேற்றுமொழிக் கருத்துக்களைப் பலரும் அப்படியே மனப்பாடம் செய்து தேர்வுகளில் அப்படியே அதை எழுதி வருகின்றனர். தேர்வு முடிந்த சில நாட்களிலேயே தாம் கற்ற அனைத்தையும் மறந்து விடுகின்றனர். வேற்றுமொழிக் கல்விமுறையின் மிக மோசமான பின்விளைவு இதுதான்.

தாய்மொழியில் கல்வி கற்கும்போது கருத்துக்கள் நேரடியாக உள்வாங்கப் படுகின்றன. அப்போது அவற்றில் ஏதேனும் தெளிவின்மை ஏற்படின், அவை உடனுக்குடன் ஆசிரியர்களால் தெளிவாக்கப் படுகின்றன. இதைத்தான் ஐயன் வள்ளுவன் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே கீழ்க்காணும் குறளில் தெளிவாக எழுதிச் சென்றுவிட்டார்.

கற்கக் கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.


கற்கும்போதே ஐயமின்றித் தெளிவாகக் கற்கவேண்டும். கற்றபின்னால், கற்றவற்றின் நினைவு அகத்தில் இருக்கவேண்டும் என்கிறார் வள்ளுவர். கல்விகற்கும் முறை பற்றி வள்ளுவர் கூறியிருக்கும் இக் கருத்து மிக இன்றியமையாதது ஆகும். இதைப்பற்றி மேலும் விரிவாக அறிந்துகொள்ள http://thiruththam.blogspot.com/2017/12/blog-post_23.html என்ற ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம். வள்ளுவர் கூறுவதைப் போல ஐயமின்றித் தெளிவாகக் கற்கவேண்டும் என்றால் தாய்மொழியில் கற்றால்தான் இது சாத்தியமாகும். ஏனென்றால் ஒருவருக்கு அவரது தாய்மொழி என்பது வெறும் மொழி மட்டுமன்று; அவரது எண்ணங்களும் உணர்வுகளும் ஊடாடும் களம் அது. தூங்கும்போதுகூட ஒருவரது மூளை அவரது தாய்மொழியில்தான் சிந்தித்துக் கொண்டிருக்கும். ஒருவர் விரும்பினால் அவரது எண்ணங்களை வேற்றுமொழியில் வெளிப்படுத்த முடியும். ஆனால் அவரது உணர்வுகளை அவரது தாய்மொழியில்தான் வெளிப்படுத்த முடியும். திடீரென கல்தடுக்கி விழுந்தாலோ அவரை யாராவது எதிர்பாராமல் தாக்கினாலோ அதன் விளைவாக வெளிப்படும் மொழி அவரது தாய்மொழியாகத்தான் இருக்க முடியும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒருவரது ஆழ்மனதில் பதிந்துள்ள மொழி அவரது தாய்மொழியே ஆகும். ஒருவரது பிறப்புமுதல் இறப்புவரை அவருடன் கூடவே வருவதான தாய்மொழியில் கல்வி கற்றால் அவர் கற்ற அக் கல்வியும் அவரது இறுதிவரையிலும் அவருடன் நிற்கும் என்பது வெள்ளிடைமலை. இதுதான் தாய்மொழியில் கல்வி கற்பதால் ஏற்படும் ஆகச்சிறந்த பயனாகும்.

வேதியியல் நூல்களில் உள்ள சிக்கல்கள்:

தமிழ் மாணவர்கள் வேதியியல் நூல்களைக் கற்பதில் உள்ள சிக்கல்களைப் பற்றி முதலில் காண்லாம். எல்லா அறிவியல் நூல்களிலும் இருப்பதைப் போலவே வேதியியல் நூல்களிலும் காணப்படுவதான முதல் சிக்கல் ஒலிப்புச் சிக்கலாகும். அதாவது தமிழில் க,ச,ட,த,ப ஆகிய வல்லின ஒலிப்புக்கள் வகைக்கு ஒன்று மட்டுமே இருக்க, வேதியியலில் வரும் தனிமங்கள், மூலக்கூறுகள், கூட்டுப்பொருட்கள், கண்டுபிடிப்பாளர்கள் போன்றவற்றின் பெயர்கள் எல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட வல்லின ஒலிப்புக்களை உடையனவாய் இருக்கின்றன. சான்றாக,

COBALT, ZIRCONIUM, ZINC, GALLIUM, BORON, ARGON, CADMIUM, RUBIDIUM, BENZENE, GLUCOSE....

போன்ற பல பொருட்களின் பெயர்களைச் சரியாக ஒலிக்கும் எழுத்துக்கள் தமிழில் இல்லை என்பது ஒரு குறையாகவே கூறப்பட்டு வருகிறது. இதனால் பொருட்களின் பெயர்களைச் சரியாக ஒலிக்கும் முறையினை மாணவர்கள் அறிந்துகொள்ள இயலாமல் போவதுடன் பிறருடன் கலந்துரையாடும்போது இவர்களது ஒலிப்பினைப் பிறர் புரிந்துகொள்ள இயலாமலோ தவறாகப் புரிந்துகொள்ளவோ வாய்ப்பு அமைகின்றது.

மேற்காணும் ஒலிப்புச்சிக்கலானது அனைத்து அறிவியல் துறைகளுக்கும் பொதுவானதாக இருக்க, வேதியியல் துறையில் இருக்கும் இன்னொரு இன்றியமையாத சிக்கல் சமன்பாட்டுச் சிக்கலாகும். வேதிவினைச் சமன்பாடுகளின் மிக இன்றியமையாத கூறாக விளங்கும் தனிமங்களின் குறியீடுகளும் வாய்ப்பாடுகளும் ஆங்கிலமொழியைச் சார்ந்தவையாக உள்ளன. இதனால் வேதிச்சமன்பாடுகளைத் தமிழ் மாணவர்கள் புரிந்துகொள்வதில் சிக்கல்கள் எழுகின்றன. அவற்றைக் கீழே சான்றுகளுடன் விரிவாகக் காணலாம்.

2 AgI + Na2S → Ag2S + 2 NaI

மேற்காணும் சமன்பாட்டில் வரும் Ag என்னும் குறியீடு சி`ல்வர் என்ற வெள்ளியையும் Na என்னும் குறியீடு சோ`டி`யத்தையும் குறிக்கும். இந்த எடுத்துக்காட்டில் வரும் பொருட்களின் பெயர்களையும் (சி`ல்வர் , சோ`டி`யம்) அவற்றின் குறியீடுகளையும் (Ag, Na) பார்த்தால் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாமல் இருப்பதை அறிய முடியும். இதைப்போல பல தனிமங்களின் பெயருக்கும் அவற்றின் குறியீட்டிற்கும் இடையில் தொடர்பே இல்லாமல் இருப்பது சமன்பாடுகளைப் புரிந்துகொள்வதில் ஒரு தடைக்கல்லாக அமைகின்றது. அதுமட்டுமின்றி, மேற்காணும் எடுத்துக்காட்டில் வரும் S என்ற குறியீடு ச`ல்பரைக் குறிக்குமா சி`ல்வரைக் குறிக்குமா என்ற தடுமாற்றமும் பலருக்குண்டு. இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதால் பலரும் வேதிச்சமன்பாடுகளைப் புரிந்து கொள்ளாமல் மனப்பாடம் செய்து அப்படியே தேர்வில் எழுதிக் கொட்டுகின்றனர். வேதியியல் அறிவில் ஏற்படும் குறைபாட்டினால் புதிய கண்டுபிடிப்புக்களுக்கும் வழியில்லாமல் போய்விடுகிறது.

சிக்கல்களுக்கான தீர்வுகள்:

வேதியியல் நூல்களைத் தமிழ் மாணவர்கள் புரிந்து கற்பதில் உள்ள பல்வேறு சிக்கல்களை இதுவரை கண்டோம். இனி இச்சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பற்றி விளக்கமாகக் காணலாம். சிக்கல்களில் முதலாவதாகக் கூறப்பட்ட ஒலிப்புச்சிக்கலை ஆறுரூபாய் முறையைப் பின்பற்றி எளிதில் தீர்த்துவிடலாம். ஆறுரூபாய் முறை பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ள http://thiruththam.blogspot.com/2018/04/blog-post_26.html என்ற ஆய்வுக் கட்டுரையைப் படிக்கலாம். இந்த ஆறுரூபாய் முறையைப் பயன்படுத்தி, வேதியியலில் உள்ள 118 தனிமங்களின் பெயர்களையும் எவ்வாறு ஆங்கில ஒலிப்புமுறை மாறாமல் எழுதுவது என்பதனைக் கீழ்க்காணும் அட்டவணை எண் 1 ல் காணலாம்.

தமிழில் தனிமப்பெயர்களும் குறியீடுகளும்: (அட்டவணை 1)

அணு    தனிமப்பெயர்    தனிமப்பெயர்    குறியீடு   
எண்        (ஆங்கிலம்)              (தமிழ்)            (தமிழ்)    


1    Hydrogen    கை`ட்`ரச^ன்    கை`   
2    Helium    கீ`லியம்    கீ`   
3    Lithium    லித்தியம்    லித்   
4    Beryllium    பெ`ரிலியம்    பெ`   
5    Boron    போ`ரான்    போ`   
6    Carbon    கார்ப`ன்    கா   
7    Nitrogen    நைட்ரச^ன்    நை   
8    Oxygen    ஆக்சி`ச^ன்    ஆ   
9    Fluorine    ஃபுளூரின்    பு   
10    Neon    நியான்    நியா   
11    Sodium    சோ`டி`யம்    சோ`   
12    Magnesium    மெக்~னீசி`யம்    மெக்~   
13    Aluminium    அலுமினியம்    அலு   
14    Silicon    சி`லிகான்    சி`லி   
15    Phosphorus    பாச்`பரச்`    பா   
16    Sulfur    ச`ல்ஃபர்    ச`   
17    Chlorine    குளோரின்    கு   
18    Argon    ஆர்கா~ன்    ஆகா~   
19    Potassium    பொட்டாசி`யம்    பொ   
20    Calcium    கால்சி`யம்    கால்   
21    Scandium    ச்`காண்டி`யம்    ச்`கா   
22    Titanium    டைடானியம்    டை   
23    Vanadium    வனடி`யம்    வ   
24    Chromium    குரோமியம்    குர்   
25    Manganese    மேங்க~னீச்`    மே   
26    Iron    அயர்ன்    அய   
27    Cobalt    கோபா`ல்ட்    கோ   
28    Nickel    நிக்கல்    நிக்   
29    Copper    காப்பர்    காப்   
30    Zinc    சி^`ங்க்    சி^`   
31    Gallium    கே~லியம்    கே~   
32    Germanium    செ^ர்மானியம்    செ^ர்   
33    Arsenic    ஆர்செ`னிக்    ஆசெ`   
34    Selenium    செ`லினியம்    செ`   
35    Bromine    பு`ரோமின்    பு`   
36    Krypton    க்ரிப்டான்    க்ரி   
37    Rubidium    ருபி`டி`யம்    ருபி`   
38    Strontium    ச்`ட்ரான்சி`யம்    ச்`ட்   
39    Yttrium    யிட்டிரியம்    யிடி   
40    Zirconium    சி^`ர்கோனியம்    சி^`ர்   
41    Niobium    நியோபி`யம்    நிபி`   
42    Molybdenum    மாலிப்`டெ`னம்    மாலி   
43    Technetium    டெக்னீசி`யம்    டெக்   
44    Ruthenium    ருதேனியம்    ருதே   
45    Rhodium    ரோடி`யம்    ரோ   
46    Palladium    பல்லேடி`யம்    பல்   
47    Silver    சி`ல்வர்    சி`ல்   
48    Cadmium    காட்`மியம்    காட்`   
49    Indium    இன்டி`யம்    இன்   
50    Tin    டின்    டி   
51    Antimony    ஆன்டிமனி    ஆன்   
52    Tellurium    டெல்லூரியம்    டெல்   
53    Iodine    ஐயோடி`ன்    ஐ   
54    Xenon    க்செ`னான்    க்செ`   
55    Caesium    சீசி`யம்    சீசி`   
56    Barium    பே`ரியம்    பே`   
57    Lanthanum    லந்தானம்    ல   
58    Cerium    சீரியம்    சீரி   
59    Praseodymium    புரசோ`டை`மியம்    புசோ`   
60    Neodymium    நியோடை`மியம்    நிடை`   
61    Promethium    புரோமெதியம்    புமெ   
62    Samarium    ச`மரியம்    ச`ம   
63    Europium    யூரோபியம்    யூ   
64    Gadolinium    க~டோ`லினியம்    க~டோ`   
65    Terbium    டெர்பி`யம்    டெர்   
66    Dysprosium    டி`ச்`ப்ரோசி`யம்    டி`ச்`   
67    Holmium    கா`ல்மியம்    கா`ல்   
68    Erbium    எர்பி`யம்    எ   
69    Thulium    துலியம்    து   
70    Ytterbium    யிட்டர்பி`யம்    யிட   
71    Lutetium    லுடீசி`யம்    லு   
72    Hafnium    கா`ஃப்னியம்    கா`ஃப்   
73    Tantalum    டான்டாலம்    டான்   
74    Tungsten    டங்க்~ச்`டன்    ட   
75    Rhenium    ரேனியம்    ரேனி   
76    Osmium    ஆச்`மியம்    ஆச்`   
77    Iridium    இரிடி`யம்    இரி   
78    Platinum    ப்ளாடினம்    ப்ளா   
79    Gold    கோ~ல்ட்`    கோ~   
80    Mercury    மெர்குரி    மெர்   
81    Thallium    தேலியம்    தே   
82    Lead    லெட்`    லெ   
83    Bismuth    பி`ச்`மத்    பி`   
84    Polonium    போலோனியம்    போல்   
85    Astatine    அச்`டாடைன்    அச்`   
86    Radon    ரேடா`ன்    ரேடா`   
87    Francium    ஃபிரான்சி`யம்    பிர்   
88    Radium    ரேடி`யம்    ரேடி`   
89    Actinium    ஆக்டினியம்    ஆக்   
90    Thorium    தோரியம்    தோ   
91    Protactinium    புரோடாக்டினியம்    புடா   
92    Uranium    யுரேனியம்    யு   
93    Neptunium    நெப்டூனியம்    நெப்   
94    Plutonium    ப்ளூடோனியம்    ப்ளூ   
95    Americium    அமெரீசி`யம்    அம்   
96    Curium    க்யூரியம்    க்யூ   
97    Berkelium    பெ`ர்கெலியம்    பெ`ர்   
98    Californium    கலிஃபோர்னியம்    கலி   
99    Einsteinium    ஐன்ச்`டீனியம்    ஐன்   
100    Fermium    ஃபெர்மியம்    பெர்   
101    Mendelevium    மென்டெ`லீவியம்    மென்   
102    Nobelium    நோபெ`லியம்    நோ   
103    Lawrencium    லாரன்சி`யம்    லா   
104    Rutherfordium    ரூதர்ஃபோர்டி`யம்    ரூ   
105    Dubnium    ட`ப்`னியம்    ட`ப்`   
106    Seaborgium    சீ`போ`ர்சி^யம்    சீ`   
107    Bohrium    போ`ரியம்    போ`ரி   
108    Hassium    கா`சி`யம்    கா`சி`   
109    Meitnerium    மேட்னீரியம்    மேட்   
110    Darmstadtium    டா`ர்ம்ச்`டாட்`சி`யம்    டா`ர்   
111    Roentgenium    ரான்ட்செ^னியம்    ரான்   
112    Copernicium    கோபர்னீசி`யம்    கோப   
113    Nihonium    நிகோ`னியம்    நிகோ`   
114    Flerovium    ஃபிலெரோவியம்    பில்   
115    Moscovium    மாச்`கோவியம்    மாச்`   
116    Livermorium    லிவர்மோரியம்    லிவ   
117    Tennessine    டென்னச்`சி`ன்    டென்   
118    Oganesson    ஓக~னெசா`ன்    ஓக~   



குறியீடுகளும் விதிமுறைகளும்:

மேலே உள்ள அட்டவணையில் தனிமங்களின் தமிழ்ப்பெயர்கள் மட்டுமின்றி, தனிமங்களுக்கான குறியீடுகளும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளன. இக்குறியீடுகள் ஆங்கிலக் குறியீடுகளைப் போலன்றி, தமிழ்ப்பெயர்களுடன் நேரடித் தொடர்புடையவாக அமைந்திருப்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது. தனிமங்களுக்கான குறியீடுகளை அமைக்கும்போது கீழ்க்காணும் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளன.

1. பிற தனிமப் பெயர்களுடன் ஒத்துப்போகாதநிலையில், தனிமப்பெயர்களின் முதல் எழுத்து மட்டும் குறியீடாகக் கொள்ளப்பட்டுள்ளது.

சான்றாக, எர்பி`யம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு எ என்றும்
டைடானியம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் எழுத்தைக்கொண்டு டை என்றும் அமைக்கப்பட்டுள்ளது.

2. தனிமங்களின் பெயர்களில் வரும் முதலெழுத்து ஒன்றிவரும்போது, முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு குறியீடுகள் அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, அயர்ன் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு அய என்றும்
அலுமினியம் என்ற தனிமத்தின் குறியீடு அப்பெயரின் முதல் இரண்டு எழுத்துக்களைக் கொண்டு அலு என்றும் அமைக்கப்பட்டுள்ளன.

3. தனிமப்பெயர்களில் வரும் முதலிரண்டு எழுத்துக்களும் ஒன்றிவரும்போது, முதல் எழுத்தும் மூன்றாம் எழுத்தும் குறியீடு அமைக்கக் கொள்ளப்பட்டுள்ளன.

சான்றாக, ஆர்கா~ன், ஆர்செ`னிக் என்ற இரண்டு தனிமங்களிலும் முதல் இரண்டு எழுத்துக்கள் (ஆர்) ஒரேமாதிரி வருவதால்,
ஆர்கா~ன் என்பதற்கு முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்து ஆகா~ என்றும்
ஆர்செ`னிக் என்பதற்கு முதல் எழுத்தையும் மூன்றாம் எழுத்தையும் சேர்த்து ஆசெ` என்றும் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கில முறையிலும் இதுபோல பயன்படுத்தி இருக்கின்றனர்.

4. மேற்காணும் தனிமங்களில் சில வினைபுரி அலோகங்களின் ( REACTIVE NONMETALS ) பெயர்கள் பிறபெயர்களின் முதலெழுத்துடன் ஒத்துவரும்நிலையிலும், வேதிச்சமன்பாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், இவற்றின் குறியீடுகள் மட்டும் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, கார்ப`ன் - கா, ஆக்சி`ச^ன் - ஆ, ச`ல்பர் - ச`, குளோரின் - கு, புளூரின் - பு, ஐயோடி`ன் - ஐ.

5. மேற்காணும் தனிமங்களில் சில பெயர்கள் பிறபெயர்களின் முதலெழுத்துடன் ஒத்துவரும்நிலையிலும், வேதிச்சமன்பாடுகளில் எந்தத் தனிமங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறதோ அவற்றின் குறியீடுகள் மட்டும் பெயர்களின் முதல் எழுத்தைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

சான்றாக, போ`ரான், போ`ரியம் ஆகிய தனிமங்கள் ஒரே முதலெழுத்தைக் கொண்டிருந்தாலும், வேதிவினைகளில் போ`ரான் அதிகம் பயன்படுத்தப்படுவதால், போ`ரானின் குறியீடு போ` என்றும் போ`ரியத்தின் குறியீடு போ`ரி என்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதேமுறையில், பெ`ரிலியம் - பெ` என்றும் பெ`ர்கெலியம் - பெ`ர் என்றும் கோபா`ல்ட் - கோ என்றும் கோபர்னீசி`யம் - கோப என்றும் அமைக்கப்பட்டுள்ளன.

சமன்பாடுகளில் பயன்படுத்தும் முறைகள்:

குறியீடுகளின் உதவியுடன் வேதிவினைகளை விளக்குவதற்காக அமைக்கப்படுவதே வேதிச்சமன்பாடுகள் ஆகும். இதுவரையிலும் ஆங்கில எழுத்துக்களில் அமைந்த குறியீடுகளைக் கொண்டு சமன்பாடுகளை எழுதி வந்தோம். இனி, ஆங்கில எழுத்துக்களின் உதவியின்றி முழுக்க முழுக்கத் தமிழ் எழுத்துக்களைக் கொண்டே வேதிச்சமன்பாடுகளை எவ்வாறு எழுதுவது என்று கீழே காணலாம்.
\
சுண்ணாம்புக்கல் ஆகிய கால்சி`யம் கார்ப`நேட்டினை அதிக வெப்பத்தில் சூடேற்றும்போது அது உடைந்து கால்சி`யம் ஆக்சை`டு` எனும் பொருளாக மாறுவதுடன் கரிப்புகை ஆகிய கார்ப`ன்-டை`-ஆக்சை`டை` யும் வெளிவிடுகிறது. இந்த வேதிவினையைக் கீழ்க்காணும் சமன்பாட்டின் மூலம் ஆங்கிலத்தில் குறிப்பிடுவர். 

CaCO3 ® CaO + CO2

மேற்காணும் வேதிவினையினைத் தமிழ்க் குறியீடுகளின் உதவியுடன் கீழ்க்காணுமாறு எழுதலாம்.

கால்.கா.ஆ3 >>> கால்.ஆ + கா.ஆ2.

அவ்வளவுதான்!. எழுதுவதற்கு எவ்வளவு எளிதாக இருக்கிறது!. எளிமையாகப் புரிகிறது அல்லவா?. இதேபோல, இன்னும் சில வேதிவினைகளைக் காணலாம். தாவரங்கள் கதிரவனின் ஒளியில் கரிப்புகையை உட்கொண்டு நீரின் உதவியுடன் கு~ளுக்கோசை`த் தயார் செய்வதுடன் உயிர்வளியாகிய ஆக்சி`ச^னை வெளிவிடுவது அனைவரும் அறிந்ததே. இவ் வேதிவினையினைக் கீழ்க்காணும் சமன்பாட்டினைக் கொண்டு விளக்குவர்.

6 CO2 + 6 H2O → C6H12O6 + 6 O2

இதனைக் கீழ்க்காணுமாறு தமிழ்ப்படுத்தி எழுதலாம்.

6 கா.ஆ2 + 6 கை`2.ஆ >>> கா6.கை`12.ஆ6 + 6 ஆ2

இதேபோல சில வேதிவினைகளுக்கான சமன்பாடுகள் தமிழ்க்குறியீடுகளின் உதவியுடன் கீழே எழுதப்பட்டுள்ளன.

2 சி`ல்.ஐ + சோ`2.ச` >>> சி`ல்2.ச` + 2 சோ`.ஐ
பே`3.நை2 + 6 கை`2.ஆ >>> 3 பே`(கை`ஆ)2 + 2 நை.கை`3
3 கால்.கு2 + 2 சோ`3.பா.ஆ4 >>> கால்3(பா.ஆ4)2 + 6 சோ`.கு
4 அய.ச` + 7 ஆ2 >>> 2 அய2.ஆ3 + 4 ச`.ஆ2
2 ஆசெ` + 6 சோ`.கை`ஆ >>> 2 சோ`3.ஆசெ`.ஆ3 + 3 கை`2
3 மெர்(கை`ஆ)2 + 2 கை`3.பா.ஆ4 >>> மெர்3(பா.ஆ4)2 + 6 கை`2.ஆ
12 கை`.கு.ஆ4 + பா4.ஆ10 >>> 4 கை`3.பா.ஆ4 + 6 கு2.ஆ7
8 கா.ஆ + 17 கை`2 >>> கா8.கை`18 + 8 கை`2.ஆ
10 பொ.கு.ஆ3 + 3 பா4 >>> 3 பா4.ஆ10 + 10 பொ.கு
டி.ஆ2 + 2 கை`2 >>> டி + 2 கை`2.ஆ
3 பொ.கை`ஆ + கை`3.பா.ஆ4 >>> பொ3.பா.ஆ4 + 3 கை`2.ஆ
டை.கு4 + 2 கை`2.ஆ >>> டை.ஆ2 + 4 கை`.கு
2 போ`.பு`3 + 6 கை`.நை.ஆ3 >>> 2 போ`(நை.ஆ3)3 + 6 கை`.பு`

தமிழ்க்குறியீடுகளின் பயன்கள் / சிறப்புக்கள்:

1. வேதியியல் சமன்பாடுகளைப் பிறமொழி உதவியின்றித் தமிழ்எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்தி எழுதி தமிழுக்குப் பெருமை சேர்த்திருப்பதுதான் இந்தத் தமிழ்க்குறியீட்டு முறையின் தலையாய சிறப்பாகும்.

2.  தமிழ்க்குறியீடுகள் தனிமங்களின் பெயர்களுடன் நேரடித் தொடர்புடையதால் சமன்பாடுகளைப் புரிந்துகொள்வது எளிதாகிறது. சான்றாக,

2 சி`ல்.ஐ + சோ`2.ச` >>> சி`ல்2.ச` + 2 சோ`.ஐ

என்ற சமன்பாட்டினைப் பார்த்தவுடனே இதில் சி`ல்வர் ஐயோடை`டு`ம் சோ`டி`யம் ச`ல்பைடு`ம் வினைபுரிந்து சி`ல்வர் ச`ல்பைடு`ம் சோ`டி`யம் ஐயோடை`டு`ம் வினைப்பயன்களாகக் கிடைக்கின்றன என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

3. தனிமங்களின் பெயர்களும் குறியீடுகளும் ஆறுரூபாய் முறைப்படி அமைக்கப்பட்டுள்ளதால், வேதிப்பொருட்களின் வாய்ப்பாடுகளை எவ்விதக் குழப்பமுமின்றித் தெளிவாகப் பலுக்கவும் எழுதவும் முடிகிறது. சான்றாக சில பொருட்களின் பெயர்களும் அவற்றின் வாய்ப்பாடுகளும் தமிழில் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

 போ`ரான் பு`ரோமைட்` = போ`.பு`3
 பொட்டாசி`யம் கை`ட்`ராக்சை`ட்` = பொ.கை`ஆ
 சோ`டி`யம் கை`ட்`ராக்சை`ட்` = சோ`.கை`ஆ
 சோ`டி`யம் குளோரைடு` = சோ`.கு
 சோ`டி`யம் அசிடேட் = சோ`.கா2.கை`3.ஆ2

4. கரிம வேதியியலில் மூலக்கூறுகளின் கட்டமைப்பினைக்கூட முழுவதும் தமிழ்க் குறியீடுகளைப் பயன்படுத்தி வடிவமைக்க முடியும். சான்றாக, மீத்தேனின் கட்டமைப்பு தமிழ்க்குறியீடுகளைப் பயன்படுத்திக் கீழே வடிவமைக்கப்பட்டுள்ளது.

              கை`                                 
                 |                                           
 கை` -- கா -- கை`           
                |                                            
             கை`                                                          

முடிவுரை:

தமிழ்மொழியில் எல்லா வளங்களும் உண்டு. அவற்றை எப்படிப் பயன்படுத்தினால் மொழி வளர்வதுடன் நாமும் வளரலாம் என்பது தமிழ் ஆர்வலர்களும் ஆய்வாளர்களும் இணைந்து செயல்பட வேண்டிய பெரும்பணி ஆகும். இதற்குத் தமிழக அரசின் உதவி அவசியம் தேவை. இறுதியாக இக்கட்டுரையின் முடிபாகக் கூறப்படுவது: தனித்தமிழில் அனைத்து அறிவியல் நூல்களையும் இயற்ற முடியும். 

2 கருத்துகள்:

  1. எளிய உத்தியைப் பகிர்ந்தமைக்கு நன்றி. தமிழில் படியாக்கம் என்ற நூலை சில ஆண்டுகளுக்கு முன் எழுதினேன். ஆங்கிலத்தில் The Hindu நாளிதழில் வந்த செய்திகளை தொடர்ந்து தொகுத்து மேலும் பல நூல்களையும், செய்திகளையும் பார்த்து எழுதினேன். அந்நூல் எழுதக் காரணமான சூழலை முன்னுரையில் குறிப்பிட்டிருந்தேன். முயன்றால் முடியும்.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி ஐயா. உங்கள் நூலின் படியிருந்தால் எனக்கு அனுப்பி உதவுங்களேன். எனது முகவரி இத்தளத்தில் 'தொடர்புக்கு' என்ற பகுதியில் உள்ளது. நூலைப் பெற்றதும் உங்களுக்குப் பணம் அனுப்பி விடுகிறேன் ஐயா. நன்றி.

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.