முன்னுரை:
தமிழ் இனி மெல்லச் சாகும் என்று சொல்கிறார்கள்.
இதை வேறு யாரும் சொல்லவில்லை; தமிழர்கள் தான் சொல்கிறார்கள். அதுவும் தமிழை விரும்பாமல்
ஆங்கிலத்தையே பெரிதும் போற்றுகின்ற தமிழர்கள் தான் சொல்கிறார்கள். பிற இடங்களில் தமிழ்
உயிர்வாழக் கூடுமோ இல்லையோ கூடிய விரைவில் தமிழகத்தில் தமிழின் நிலை அதோகதி தான். காரணம்,
எங்கு பார்த்தாலும் ஆங்கிலச் சொல் கலப்பு. எதில் பார்த்தாலும் ஆங்கில மொழியின் தாக்கம்.
போதாக்குறைக்கு, பேசும்போதுகூட ஆங்கிலச் சொல் கலவாமல் தமிழனால் பேசவே முடியவில்லை.
பல்துலக்கி, குளித்து, உண்டு, பள்ளிக்குச் செல்லும் அன்றாட வேலைகளைக் கூட ஆங்கிலம்
கலந்து பி`ரச்~ பண்ணி, பா`த் பண்ணி, டிபன் பண்ணி, ச்`கூலுக்குப் போகணும் என்று சொல்வது
பெருமைக்குரியதாக மாறிப் பலகாலம் ஆகிவிட்டது. ஆங்கில மொழியின் தாயகமான இங்கிலாந்தில்
கூட ஆங்கிலம் ஒருநாள் அழிந்து போகலாம்; ஆனால் தமிழகத்தில் என்றென்றும் சாகா வரம்பெற்று
ஆங்கிலம் வாழும்; நம் தமிழ் மக்கள் அதனை வாழவைப்பார்கள். ஆங்கிலேயரின் ஆட்சிக்கு அடிமைப்பட்டு
ஏறத்தாழ இருநூறு ஆண்டுகள் வாழ்ந்துவிட்டதால், மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மனநோயாளிகளாய்
இன்னமும் அவரது ஆங்கில மொழியையே போற்றிக் கொண்டாடி வருகின்றோம். ஆங்கில மொழியைத் தலைமேல்
தூக்கிவைத்துப் போற்றுவோர் கூறும் காரணங்கள் இதுதான்:
1. ஆங்கிலத்தில் அனைத்து அறிவியல் கருத்துக்களும்
இருக்கின்றன.
2. மேல்படிப்புக்கும் வேலைவாய்ப்புக்கும்
ஆங்கிலம் தேவை.
இந்தக் காரணங்களையே இன்னமும் எத்தனை நாள்தான்
கூறிக்கொண்டிருப்பது?. ஆங்கிலத்தில் உள்ள கருத்துக்களைத் தமிழில் கொண்டுவர வேண்டிய
பணியை முழுமையாக முடுக்கிவிட்டுச் செய்துமுடிக்க வேண்டாமா?. வேதியியல், கணிதம், இயற்பியல்
போன்ற பாடங்கள் கடினமானவை; அவற்றை நன்கு புரிந்துகொண்டு தமிழில் இயற்றுவதற்குக் கடின
முயற்சியும் காலமும் தேவைப்படும்தான். ஆனால், நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்திவரும்
உணவுப் பெயர்களையாவது இன்றுவரையிலும் தமிழ்ப்படுத்தி இருக்கிறோமா?. இல்லையே.! தமிழ்நாட்டில்
ஒவ்வொருநாளும் மக்களால் நிரம்பி வழிகின்ற உணவகங்களில் காணப்படும் / பேசப்படும் உணவுப்பெயர்களில்
பெரும்பாலானவை ஆங்கில / பிறமொழிப் பெயர்களாகத் தான் உள்ளன. இவற்றைத் தமிழ் இலக்கியங்களின்
உதவியுடன் எவ்வாறு தமிழ்ப்படுத்தி எளிமையாக வழங்கலாம் என்பதையும் தமிழ்மொழியைக் கொண்டு
உணவியல் நூல்களை எவ்வாறு இயற்றலாம் என்பதையும்
இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.
தமிழரின் உணவு முறைகள்:
பழந்தமிழர்களின் உணவுமுறைகள் பற்றிய பல குறிப்புகள்
சங்க இலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. சோற்றினைக் குறிக்கும் வேறு பெயர்களாக, அவிழ்,
அடிசில், சொன்றி, பதம், புகா, நிமிரல், மடை, அமலை, வல்சி, புன்கம், புழுக்கு, பொம்மல்
போன்றவை அறியப்படுகின்றன. தயிர், புளி, கீரை ஆகியவற்றைக் கொண்டு செய்யப்பட்ட தாவரவகை
உணவுகள் குறித்துக் கூறப்பட்டுள்ளன. தாவர உணவேயன்றி, இறைச்சி உணவுகளைப் பற்றியும் ஏராளமான
செய்திகள் காணப்படுகின்றன. ஆடு, மான், பன்றி, உடும்பு போன்ற விலங்குகளின் இறைச்சியினை
உண்டதைப் பற்றியும் கள் குடித்ததைப் பற்றியும் பல்வேறு சங்கப் பாடல்களின் மூலம் அறியலாம்.
பண்பாட்டுக் கூறுகள் காலந்தோறும் மாறிவந்துள்ளதைப்
போல தமிழரின் உணவுப் பழக்கங்களும் மாறியே வந்துள்ளன. பல்வேறு காலகட்டங்களில் பல்வகை
இனங்களைச் சேர்ந்த மக்களுடன் ஏற்பட்ட கலப்பினால் அவர்களது உணவுப் பழக்கங்களும் தமிழ்ப்
பண்பாட்டில் புகுந்துவிட்டன எனலாம். ஆவியில் வேகவைத்து உண்ணப்படும் இட்லியானது தமிழர்களின்
முதன்மை உணவாகிவிட்ட இக்காலத்தில், பிற மாநிலத்தாரின் / பிற நாட்டினரின் உணவுமுறைகளும்
வெகுவாகப் புழக்கத்தில் வந்துவிட்டன. வேலை மற்றும் கல்வி தொடர்பாக வெளிமாநிலங்கள்
/ வெளிநாடுகளுக்குச் செல்லும் தமிழக மக்கள் பலவகையான உணவுகளுக்குப் பழகிவிட்டதால் அவற்றைத்
தமிழகத்திலும் பெறக்கூடிய வகையில் பலவகை உணவகங்கள் தமிழகத்தில் பெருகிவிட்டன. சீன மற்றும்
வட இந்திய உணவுவகைகள் தமிழகத்தில் பட்டிதொட்டியெங்கும் தற்போது கிடைத்து வருகின்றன.
ஆனால், அந்த உணவுகளுக்கான பெயர்கள் தமிழில் சூட்டப்படாமல் இன்றளவும் பிறமொழிப் பெயர்களாகவே
இருந்துவருகின்றன. இப்பெயர்களை எல்லாம் தமிழ் இலக்கியங்களின் உதவியுடன் தமிழ்ப்படுத்தி
எளிய தமிழில் வழங்க முடியும். அதைப்பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
நிமிரல்:
நிமிரல் என்னும் சொல்லானது சங்க இலக்கியங்களில்
சோற்றைக் குறிக்கும் ஒரு பெயராக வழங்கப்படுகிறது. இந்த நிமிரலைப் பற்றிக் கூறும்போது,
கொக்கு உகிர் நிமிரல் என்றே வழங்கப்படுகின்றது.
கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட - நற்
258
பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
- புறம் 395
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர - புறம்
398
நிமிரல் என்னும் சோறானது கொக்கின் நகத்தினைப்
போல மெலிதாகவும் கூர்மையுடனும் இருந்ததென்று மேற்பாடல்கள் கூறுகின்றன. பொதுவாக, அரிசியைச்
சோறாக வடித்ததும் சற்று பெரியதாகவும் கூர்மழுங்கியும் இருக்கும். பின்னர் இச்சோற்றினை
எண்ணையில் இட்டு நன்கு வறுத்தவுடன் தனது அளவில் சுருங்கி மெலிந்து முனை கூரியதாக மாறுவதைப்
பார்க்கலாம். இவ்வாறு எண்ணையில் வறுத்து எடுத்தவுடன் சோறானது நிமிர்ந்ததைப் போல மெலிதாகவும்
கூரியதாகவும் மாறுவதால் இதனை நிமிரல் என்ற சொல்லால் குறிப்பிடலாம். அவ்வகையில், தற்போது
நாம் உண்டுவருகின்ற சீன உணவுவகையான ஃப்ரைடு` ரைச்` என்பதனைத் தமிழில் நிமிரல் என்ற
சொல்லால் குறிப்பிடுவது சாலப் பொருத்தமாய் இருக்கும்.
ஃப்ரைடு` ரைச்` = நிமிரல்
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை நிமிரல்களின் பெயர்களைக் கீழே காணலாம்.
எக்~ ஃப்ரைடு` ரைச்` = முட்டைநிமிரல்
வெசி^டபி`ள் ஃப்ரைடு` ரைச்` = காய்நிமிரல்
சிக்கன் ஃப்ரைடு` ரைச்` = கோழிநிமிரல்
மட்டன் ஃப்ரைடு` ரைச்` = மறிநிமிரல் (மறி
= ஆடு)
பீ`ஃப் ஃப்ரைடு` ரைச்` = ஆநிமிரல் (ஆ = மாடு)
மச்~ரூம் ஃப்ரைடு` ரைச்` = காளான்நிமிரல்
ஃபிச்~ ஃப்ரைடு` ரைச்` = மீன்நிமிரல்
ப்ரான்ச்` ஃப்ரைடு` ரைச்` = இறால்நிமிரல்
போர்க் ஃப்ரைடு` ரைச்` = ஏனநிமிரல் (ஏனம்
= பன்றி)
பன்னீர் ஃப்ரைடு` ரைச்` = விளர்நிமிரல்
(விளர் = பன்னீர்)
மடை:
அரிசிச் சோற்றினைக் குறித்து வந்த இன்னொரு
சங்க இலக்கியச் சொல் மடை ஆகும். மடுத்தல் என்னும் வினையின் அடிப்படையில் தோன்றியதே
மடை என்ற சொல்லாகும். மடுத்தல் என்ற சொல்லுக்கு உண்ணுதல் என்ற பொருள் உண்டு என்பதால்
மடை என்பது உணவினைக் குறிக்கும் பெயர் ஆயிற்று. அரிசிச் சோற்றுடன் பலவகைப் பொருட்களையும்
சேர்த்து அவித்துப் பலவண்ணங்களில் பலியுணவாகப் படைக்கப்பட்ட செய்தியினைக் கீழ்க்காணும்
பாடல் குறிப்பிடுகிறது.
பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு - குறு
362
தற்காலத்தில் நாம் பெரிதும் விரும்பி உண்கின்ற
பி`ரியாணி என்ற உணவுத் தயாரிப்பிலும் வடித்து எடுத்த அரிசிச் சோற்றுடன் பலவகைப் பொருட்களைச்
சேர்த்துப் பொன் / செம்பொன் நிறமாக அவித்துச் செய்யப்படுவதால் பி`ரியாணி என்னும் உணவினைக்
குறிக்கும் தமிழ்ப்பெயராக மடை என்ற சொல்லைப் பயன்படுத்துவது சாலவும் பொருந்தக் கூடியதே. எனவே,
பி`ரியாணி = மடை
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை மடைகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
எக்~ பி`ரியாணி = முட்டைமடை
வெசி^டபி`ள் பி`ரியாணி = காய்மடை
சிக்கன் பி`ரியாணி = கோழிமடை
மட்டன் பி`ரியாணி = மறிமடை
பீ`ஃப் பி`ரியாணி = ஆமடை
மச்~ரூம் பி`ரியாணி = காளான்மடை
ஃபிச்~ பி`ரியாணி = மீன்மடை
ப்ரான்ச்` பி`ரியாணி = இறால்மடை
வல்சி:
சங்க இலக்கியங்களில் சோற்றினைக் குறிக்க
உதவுகின்ற பல பெயர்களில் வல்சியும் ஒன்றாகும். வல்சி என்னும் சொல்லானது பல சங்கப் பாடல்களில்
பயின்றுவரும் நிலையில் சில பாடல்கள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
கோழ் ஊஉன் குறை கொழு வல்சிப் புலவு வில்
பொலி கூவை - மது 141
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி - பெரும்
255
குறமகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி - மலை
183
வல்சி என்பது மடையினைப் போலன்றி ஒரே வேக்காட்டில்
செய்யப்படுவதாகும். அதாவது அரிசியினைச் சோறாகச் சமைக்கும்போதே அதனுடன் காய்கறிகள் / இறைச்சி முதலான
பிற பொருட்களைச் சேர்த்து ஒரே வேக்காட்டில் சமைப்பதாகும். தற்போது நாம் பயன்படுத்தி
வருகின்ற புலவ் என்னும் உணவினைத் தயாரிக்கும் முறையினை இது ஒத்திருப்பதால், புலவ் என்னும்
சொல்லுக்குப் பதிலாக வல்சி என்னும் சொல்லைப் பயன்படுத்துவது சாலவும் பொருத்தமாயிருக்கும்.
புலவ் = வல்சி
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை வல்சிகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
எக்~ புலவ் = முட்டைவல்சி
வெசி^டபி`ள் புலவ் = காய்வல்சி
சிக்கன் புலவ் = கோழிவல்சி
மட்டன் புலவ் = மறிவல்சி
பீ`ஃப் புலவ் = ஆவல்சி
மச்~ரூம் புலவ் = காளான்வல்சி
ஃபிச்~ புலவ் = மீன்வல்சி
ப்ரான்ச்` புலவ் = இறால்வல்சி
நோலை:
நோலை என்ற சொல் முதன்முதலில் சிலப்பதிகாரத்தில்
புகார்க் காண்டத்திலும் மதுரைக் காண்டத்திலும் கீழ்க்காணும் பாடல்வரிகளில் வருகின்றது.
நோலை என்பது என்ன வகையான உணவு என்பதனை மேற்பாடல்
வரிகளில் இருந்து நேரடியாக அறிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் நோலை என்னும் பெயரில் இருந்து
நூல்இழை போன்ற உணவாக அதாவது இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் இடியாப்பம் போன்ற ஒரு
உணவுவகையாக இருக்கக் கூடும் என்பதனைப் புரிந்துகொள்ள முடிகிறது. அவ்வகையில், தற்காலத்தில்
நாம் பயன்படுத்தி வருகின்ற நூடு`ல்ச்` என்ற சீன உணவுவகையின் பெயருக்கு மாற்றாக நோலை
என்னும் சொல்லைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
நூடு`ல்ச்` = நோலை
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை நோலைகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
எக்~ நூடு`ல்ச்` = முட்டைநோலை
வெசி^டபி`ள் நூடு`ல்ச்` = காய்நோலை
சிக்கன் நூடு`ல்ச்` = கோழிநோலை
மட்டன் நூடு`ல்ச்` = மறிநோலை
பீ`ஃப் நூடு`ல்ச்` = ஆநோலை
மச்~ரூம் நூடு`ல்ச்` = காளான்நோலை
ஃபிச்~ நூடு`ல்ச்` = மீன்நோலை
ப்ரான்ச்` நூடு`ல்ச்` = இறால்நோலை
அமலை:
சங்கத் தமிழ் இலக்கியங்களில் வழங்கப்படும்
அமலை என்பது உருண்டைகளைக் குறிக்கும். இறைச்சி கலந்து உருட்டிய சோற்று உருண்டைகளைப்
பந்துடன் ஒப்பிட்டுக் கூறுகின்றது கீழ்க்காணும் பாடல்.
மலரா மாலை பந்து கண்டு அன்ன ஊன்சோற்று அமலை
- புறம்.33
வட இந்திய உணவு வகைகளில் கோஃப்தா என்றொரு
உணவுவகை உண்டு. இதில் எல்லா உணவுப்பொருட்களையும் நன்கு மசித்து உருண்டைகளாக்கித் தயார்
செய்வர். அவ்வகையில், கோஃப்தா என்னும் உணவுவகையினைக் குறிப்பதற்கு அமலை என்ற சொல்லைப்
பயன்படுத்தலாம். அதாவது,
கோஃப்தா = அமலை
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை அமலைகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
வெசி^டபி`ள் கோஃப்தா = காயமலை
சிக்கன் கோஃப்தா = கோழியமலை
மட்டன் கோஃப்தா = மறியமலை
பன்னீர் கோஃப்தா = விளரமலை
அடிசில்:
அடிசில் என்ற சொல் சோற்று உணவுக்கான பொதுப்பெயராகவே
இலக்கியங்களில் அறியப்படுகிறது. பொதுவாக, அடிசில் என்பது இறைச்சி, பால், நெய் போன்றவற்றைச்
சோற்றுடன் கலந்து செய்யப்படுவதாகக் கீழ்க்காணும் பாடல்களின் மூலம் தெரியவருகிறது.
பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் - அகம்
394/11
நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் -
புறம் 188/5
தற்காலத்தில் நாம் பயன்படுத்தி வருகின்ற
கிச்சடி என்னும் உணவு வகையில் காய்கறிகள் உட்பட பல உணவுப்பொருட்களைக் கோதுமை / அரிசிச் சோற்றுடன் கலந்து செய்வதை அறிவோம்.
இந்த கிச்சடி என்னும் பிறமொழிச் சொல்லுக்கு மாற்றாக அடிசில் என்ற தமிழ்ச்சொல்லைப் பயன்படுத்தலாம்.
கிச்சடி = அடிசில்
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை அடிசில்களின் பெயர்களைக் கீழே காணலாம்.
வெசி^டபி`ள் கிச்சடி = காயடிசில்
மட்டன் கிச்சடி = மறியடிசில்
அயினி:
அயில்தல் என்னும் சங்கத்தமிழ்ச் சொல்லுக்குப்
பருகுதல் என்ற பொருளும் உண்டு. கீழ்க்காணும் சங்கப்பாடலில் அயில்தல் என்ற சொல்லானது
பருகுதல் என்ற பொருளில் வந்துள்ளது.
நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை - குறி.191
இந்த அயில்தல் என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில்
தோன்றிய பெயர்ச்சொல்லே அயினி ஆகும். அதாவது,
அயில்தல் >>> அயினி
அயினி என்னும் சொல்லுக்குப் பொருளாகப் பருகும்
நிலையிலுள்ள நீர்த்த உணவினைக் கொள்வது பொருத்தமாயிருக்கும். அவ்வகையில், குழம்பு வகைகளில்
ஒன்றாக இன்று நாம் உண்டு வருகின்ற சால்னா என்ற உணவுப் பொருளின் பிறமொழிப் பெயருக்கு
மாற்றாக அயினி என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.
சால்னா = அயினி / ஐனி
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை அயினிகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
வெசி^டபி`ள் சால்னா = காய் ஐனி
மட்டன் சால்னா = மறி ஐனி
சிக்கன் சால்னா = கோழி ஐனி
இழுது:
இழுது என்னும் சங்கத் தமிழ்ச் சொல் அயினியைக்
காட்டிலும் சற்று கெட்டியாக உள்ள நீர்ம உணவினைக் குறிக்கும். இழுது என்னும் சொல் பயிலும்
சில சங்க இலக்கியப் பாடல்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.
தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக - மலை
442
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓர் இல்
பிச்சை ஆர மாந்தி - குறு 277
பொதுவாக, இழுது என்னும் சொல்லானது வெண்ணை,
நெய், தேன் ஆகியவற்றையும் கெட்டியாக உள்ள குழம்பினையும் குறிக்கும் என்று தமிழ் அகராதிகள்
கூறுகின்றன. அவ்வகையில், அயினியைக் காட்டிலும் செறிவுடைய குழம்பாகத் தயாரிக்கப்படுகின்ற
குருமா என்னும் குழம்பினைக் குறிப்பதற்கான தமிழ்ச் சொல்லாக இழுதினைக் கொள்ளலாம்.
குருமா = இழுது
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை இழுதுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
வெசி^டபி`ள் குருமா = காய் இழுது
நவரத்ன குருமா = பன்மணி இழுது
மட்டன் குருமா = மறி இழுது
சிக்கன் குருமா = கோழி இழுது
கண்ணுறை:
கண்ணுறை என்னும் சங்கத்தமிழ்ச் சொல்லானது
சோற்றுடன் சேர்க்காமல் தனியாகச் சமைத்து உண்ணப்படும் கூட்டு, பொறியல் போன்றதொரு உணவுப்
பொருளாகக் கீழ்க்காணும் சங்கப் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.
பழன வாளை பரூஉ கண் துணியல்
புதுநெல் வெண்சோற்றுக் கண்ணுறை ஆக - புறம்
61
அடகின் கண்ணுறை ஆக யாம் சில - புறம் 140
இதன் பெயரிலேயே உறை என்பது வருவதால் உறைக்கும்
தன்மையினைக் கொண்ட காரவகை உணவுப் பொருளாக இதனைக் கருதமுடியும். அவ்வகையில் நாம் தற்போது
உண்டுவருகின்ற மசாலா என்ற உணவுவகையினைக் குறிக்கும் தமிழ்ப்பெயராக கண்ணுறையைக் கொள்ளலாம்.
மசாலா = கண்ணுறை, சுருக்கமாக உறை.
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில் இருக்கும்
சிலவகை உறைகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
சிக்கன் மசாலா = கோழியுறை
மட்டன் மசாலா = மறியுறை
ஃபிச்~ மசாலா = மீனுறை
கோ~பி` மசாலா = கோசுறை
ஆலூ மசாலா = உருளுறை
சன்னா மசாலா = கடலையுறை
எக்~ மசாலா = முட்டையுறை
.............. தொடரும் ..............
அருமை ஐயா.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே. :))
நீக்கு