தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா? - 3- உணவியல் என்ற ஆய்வுக் கட்டுரையின் இரண்டாம் பகுதியாக இது வழங்கப்படுகிறது.
வறையும் கருனையும்:
வறையும் கருனையும்:
சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்ற
இறைச்சி உணவு வகைகளில் வறையும் கருனையும் அடங்கும். வறையும் கருனையும் ஏறத்தாழ ஒரே
மாதிரிதான் இருக்கும் என்பதால் இவையிரண்டும் இணைத்தே பேசப்பட்டுள்ளன.
பரல் வறை கருனை காடியின்
மிதப்ப - பொரு 115
மண்டைய கண்ட மான் வறை கருனை
- புறம் 398
இவற்றில், வறை என்பது எண்ணையில்
பொறித்து எடுக்கப்பட்டு குச்சியில் கோர்த்து வைக்கப்படுவது என்று கீழ்க்காணும் பாடல்களில்
வழி அறியமுடிகிறது.
நெய் கனிந்து வறை ஆர்ப்ப
- மது 756
நெய் துள்ளிய வறை முகக்கவும்
- புறம் 386/3
வறை கால்யாத்தது வயின்தொறும்
பெறுகுவிர் - பெரும் 133
கருனையும் வறையைப் போன்ற
ஒன்றே ஆகும். எண்ணை இல்லாமல் தீயில் கருக்கி / வாட்டி எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்பது
இதன் பெயரில் இருந்து தெரிகிறது.
கரும் கண் கருனை செந்நெல்
வெண் சோறு - நற் 367
பசும் கண் கருனை சூட்டொடு
மாந்தி - புறம் 395
இவற்றில், வறை என்பதனைத்
தற்காலத்தில் நாம் பயன்படுத்தி வருகின்ற கபா`ப்` என்பதற்கும் கருனை என்பதனை உலையில்
க்~ரில் செய்யப்படும் உணவுக்கும் மாற்றாகப் பயன்படுத்தலாம். அதாவது,
கபா`ப்` = வறை
க்~ரில்டு` = கருனை
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை வறை & கருனை உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
சிக்கன் கபா`ப்` = கோழிவறை
மட்டன் கபா`ப்` = மறிவறை
ஃபிச்~ கபா`ப்` = மீன்வறை
பீ`ஃப் கபா`ப்` = ஆவறை
ப்ரான்ச்` கபா`ப்` = இறால்வறை
க்~ரில்டு` சிக்கன் = கோழிக்கருனை
க்~ரில்டு` ஃபிச்~ = மீன்
கருனை
க்~ரில்டு` மட்டன் = மறிக்கருனை
க்~ரில்டு` பீ`ஃப் = ஆன்கருனை
க்~ரில்டு` போர்க் = ஏனக்கருனை
விழுக்கு, விடக்கு ஆகிய
இரண்டு தமிழ்ச்சொற்களும் இறைச்சி உணவு வகைகளைக் குறிப்பவையே. இச்சொற்கள் பயின்றுவரும்
சங்கப் பாடல்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மீன் தடிந்து விடக்கு அறுத்து
- பட் 176
விடக்கு உடை பெரும் சோறு
உள்ளுவன இருப்ப - நற் 281
விழுக்கு நிணம் பெய்த தயிர்
கண் விதவை - புறம் 326
விழுக்கொடு விரைஇய வெள்
நிண சுவையினள் - புறம் 371
இப்பாடல்களில் வரும் விழுக்கு
என்பது பெயருக்கு ஏற்றாற் போலவே, கடித்துத் தின்னும் தேவையின்றி விழுங்கும் தன்மையதாய்
இருப்பதான இறைச்சி உணவினைக் குறிக்கும். விடக்கு என்பது சற்று பெரிய அளவில் துண்டு
துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி உணவினைக் குறிக்கும். எனவே, இறைச்சியினைப் பொடிப்பொடியாக
வெட்டிப் பயன்படுத்தப்படும் கீமா / கைமா என்ற உணவினைக் குறிக்க விழுக்கு என்ற சொல்லையும்
சற்றே பெரிய அளவில் வெட்டிப் பயன்படுத்தப்படும் சாப்ச்` என்னும் உணவினைக் குறிக்க விடக்கு
என்ற சொல்லையும் பயன்படுத்தலாம். அதாவது,
கீமா / கைமா = விழுக்கு
சாப்ச்` = விடக்கு
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை விழுக்கு & விடக்கு உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
மட்டன் கைமா = மறி விழுக்கு
ஃபிச்~ கைமா = மீன் விழுக்கு
பீ`ஃப் கைமா = ஆன்விழுக்கு
பொடாடோ சாப்ச்` = உருளை
விடக்கு
மட்டன் சாப்ச்` = மறி விடக்கு
ஃபிச்~ சாப்ச்` = மீன்
விடக்கு
சிக்கன் சாப்ச்` = கோழி
விடக்கு
பீ`ஃப் சாப்ச்` = ஆன்விடக்கு
சங்க இலக்கியங்களில் முட்டையைக்
குறிப்பதற்கு முட்டை என்ற சொல் மட்டுமின்றி, சூல் என்ற சொல்லும் பயன்படுத்தப் பட்டுள்ளது.
சூல் என்ற சொல் முட்டை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட பலபாடல்களில் ஒருசில பாடல்கள்
கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
கடும் சூல் வதிந்த காமர்
பேடைக்கு - நற். 272
சினை பசும்பாம்பின் சூல்
முதிர்ப்பு அன்ன - குறு 35
சங்ககாலத் தமிழர்கள் முட்டையை
உணவாக உட்கொண்டனர் என்பதைப் பலபாடல்களின் வழி அறிய முடிகிறது. பொதுவாக, முட்டையை நீரில்
அவித்தும் அடையாகச் செய்தும் உண்ணுவது வழக்கம். ஆனால், முட்டையில் செய்யப்படும் உணவுக்களுக்கான
பெயர்கள் இலக்கியத்தில் இல்லை. இந்நிலையில், முட்டையைக் கொண்டு செய்யப்படும் அன்றாட
உணவுப் பொருட்கள் சிலவற்றுக்கு அவற்றின் செய்முறையின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு
பெயர் வைக்கலாம்.
ஆம்லெட் = சூல் அடை
>>> சூலடை
ஆஃப் பா`யில் = அரை அவி
>>> அரவி
ஃபுல் பா`யில் = முழு அவி
>>> முழவி
விளர் உணவுகள்:
விளர் என்னும் சங்கத் தமிழ்ச்
சொல்லானது பல பாடல்களில் பயின்று வந்துள்ளது. அவற்றில் சில பாடல்கள் கீழே சான்றாகக்
கொடுக்கப்பட்டுள்ளன.
விளர் ஊன் தின்ற வேட்கை
நீங்க - அகம் 265
காழ் போல் நல் விளர் நறு
நெய் தீண்டாது - புறம் 246
குறும்தாள் ஏற்றை கொழுங்கண்
அம் விளர் நறுநெய் உருக்கி - புறம் 379
விளர் என்னும் சொல்லுக்குத்
தற்கால அகராதிகள் வெண்மை, நிணம், முற்றாதது ஆகிய பொருட்களைக் கொடுத்துள்ளன. அவ்வகையில்,
விளர் என்னும் சொல்லைப் பன்னீர் என்னும் பாலாடைக்கட்டிக்கு மாற்றாகக் கொள்ளலாம். காரணம்,
பன்னீர் ஆகிய பாலாடைக் கட்டியும் வெண்ணிறத்தில் கொழுப்பு மிக்கதாய் முற்றாத தன்மையதாய்
இருப்பதே. மேலும் பாலாடைக்கட்டி என்பதைக் காட்டிலும் விளர் என்னும் சொல் மிகச் சுருக்கமாக
இருப்பது சொல்பயன்பாட்டினை எளிமைப்படுத்தும். எனவே,
பன்னீர் = விளர்
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை விளர் உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
பன்னீர் ப`ட்டர் மசாலா
= விளர்நெய்யுறை
பன்னீர் ப`ட்டர் ஃப்ரை
= விளர்நெய்வறுவல்
பன்னீர் ஃப்ரைடு` ரைச்`
= விளர்நிமிரல்
பன்னீர் கோஃப்தா = விளரமலை
தமிழகத்தில் பலவகையான வட
இந்திய / வெளிமாநில உணவுகளும் தற்போது பெரிதும் விரும்பி உண்ணப்படுகின்றன. வட இந்திய
உணவுகளில் உருளைக்கிழங்கின் பங்கு மிகக் கணிசமானது. இதனுடன் பலவகையான காய்கறிகளைச்
சேர்த்துப் பலவகையான உணவுகளைத் தயாரிக்கிறார்கள். இந்த உணவுப் பொருட்களுக்கு வைக்கப்பட்டுள்ள
பிறமொழிப் பெயர்களை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம் என்று சில எடுத்துக்காட்டுக்களின் மூலம்
கீழே பார்க்கலாம்.
ஆலூ கோ~பி` = உருளை + பூக்கோசு
= கோசுருளை
ஆலூ மட்டர் = உருளை + பட்டாணி
= பட்டாணியுருளை
ஆலூ கேப்சி`கம் = உருளை
+ குடமிளகாய் = குடமுருளை
ஆலூ பாலக் = உருளை + கீரை
= கீரையுருளை
ஆலூ பன்னீர் = உருளை +
விளர் = விளருருளை
பாலக் பன்னீர் = கீரைவிளர்
மட்டர் பன்னீர் = பட்டாணிவிளர்
வட இந்திய உணவு வகைகளில்
கடா`ய் உணவுகள் புகழ் பெற்றவை. சில உணவகங்களில் கடா`ய் எனப்படும் ஒரு பாத்திரத்தில்
சூடாக வைத்தபடியே அப்படியே கொண்டுவந்து கொடுப்பார்கள். இந்த கடா`ய் எனப்படும் சொல்லானது,
பாத்திரம் என்னும் பொருளுடைய கடிஞை எனப்படும் தமிழ்ச்சொல்லில் இருந்து தோன்றியதாகும்.
அதாவது,
கடிஞை >>> கடா`ய்
எனவே கடா`ய் என்னும் சொல்லுக்குப்
பதிலாக, கடிஞை என்னும் தமிழ்ச்சொல்லையே பயன்படுத்தலாம். தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை கடா`ய் உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
கடா`ய் சிக்கன் = கடிஞைக்
கோழி
கடா`ய் மட்டன் = கடிஞை
மறி
கடா`ய் ஃபிச்~ = கடிஞை
மீன்
கடா`ய் மச்~ரூம் = கடிஞைக்
காளான்
கடா`ய் பன்னீர் = கடிஞை
விளர்
வட இந்திய உணவுகளில் அடுத்தபடியாக
வருபவை தந்தூ`ரி வகை உணவுகள். இவ் வகை உணவுகள் மண் அல்லது மாழையால் செய்யப்பட்ட ஒரு
பானை போன்ற அடுப்பில் எண்ணையின்றி வாட்டிச் செய்யப்படுவை. தந்தூ`ரி உணவுகளுக்கு பானையே
அடிப்படை என்பதால் பானையைக் குறிக்கும் சொல்லான குழிசி என்பதையே தந்தூ`ரி வகை உணவுகளுக்கான
மாற்றுப்பெயராக வழங்கலாம். அதாவது,
தந்தூ`ரி = குழிசி
>>> குழிசம் = பானையில் செய்யப்படுவது.
தந்தூ`ரி அடுப்பில் செய்யப்படும்
சிலவகை உணவுகளின் பெயர்களை எவ்வாறு தமிழ்ப்படுத்தலாம் என்று கீழே காணலாம்.
தந்தூ`ரி சிக்கன் = குழிசக்கோழி
தந்தூ`ரி கோ~பி` = குழிசக்கோசு
தந்தூ`ரி ஃபிச்~ = குழிசமீன்
மேற்கண்டவையே அன்றி, தந்தூ`ரி
அடுப்பினைக் கொண்டு ரொட்டி, நான், குல்ச்சா, புல்க்கா ஆகிய மாவு உணவுகளும் தயாரிக்கப்படுகின்றன.
இவையனைத்தும் கோதுமை / மைதா மாவினைக் கொண்டு தயார் செய்யப்படுகின்ற சப்பாத்தி போன்ற
உணவு வகைகளே ஆகும். இவ் உணவுகள் அனைத்தும் வலுவாகவும் சவ்வு போலவும் இருப்பதால் இவற்றைப்
பற்களால் நன்கு மென்று தின்று உண்ண வேண்டும். எனவே இவற்றுக்கான தமிழ்ப்பெயர்களை இவற்றை
உண்ணும் வினைகளின் அடிப்படையிலேயே கீழ்க்காணுமாறு அமைக்கலாம்.
ரொட்டி = சவட்டி (சவட்டுதல்
= மெல்லுதல் வினையடிப் பெயர்)
நான் = திற்றி (தின்னுதல்
வினையடிப் பெயர்)
குல்ச்சா = உண்சி (உண்ணுதல்
வினையடிப் பெயர்)
புல்க்கா = மெல்கி (மெல்குதல்
= அசைபோடுதல் வினையடிப் பெயர்)
சில தமிழக உணவுகளின் பெயர்களும்
காரணங்களும்:
தற்காலத்தில் தமிழகத்தில்
இட்லி, தோசைக்கு அடுத்தபடியாக அதிகமாக உண்ணப்படும் சிற்றுண்டி வகைகளில் இடம்பெறுபவை
பூரி, சப்பாத்தி மற்றும் புரோட்டா ஆகும். இந்த உணவுகளின் பெயர்களைத் தமிழ் அல்ல என்று
கூறும் சிலர் இவை தமிழகம் சாராதவை என்றும் கூறுகின்றனர். இது தவறான கருத்தாகும். உண்மையில்,
இந்த உணவுகளின் பெயர்கள் தமிழ்ச் சொற்களே ஆகும். மேலும் இந்த உணவுகள் தமிழகத்தில் தோன்றிய
உணவுகளே ஆகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.
பூரி என்னும் உணவானது எண்ணையில்
இட்டவுடன் பூரித்து அதாவது பெரிதாக உப்பி எழுகின்ற உணவாகும். பூரி என்னும் பெயர் பூரித்தல்
என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில் தோன்றிய உணவுப் பெயராகும். அதாவது,
பூரித்தல் = பெரிதாதல்
>>> பூரி
பூரித்தல் எனப்படும் தமிழ்ச்சொல்லின்
அடிப்படையில் தோன்றிய பூரி என்னும் உணவுப் பெயர் தமிழ்ச்சொல்லே என்றும் பூரி என்பது
தமிழகத்தில் தோன்றிய ஒரு உணவே என்றும் இதன்மூலம் அறிந்து கொள்ளலாம்.
இதைப்போலவே, புரோட்டா எனப்படும்
உணவுவகையானது புரட்டுதல் எனப்படும் வினைச்சொல்லின் அடிப்படையில் தோன்றிய பெயராகும்.
அதாவது,
புரட்டுதல்
>>> புரோட்டா
பொதுவாக தமிழகத்தில் புரோட்டா
உணவு தயாரிப்பின்போது மாவானது பலமுறை நன்கு புரட்டிப் புரட்டி எடுக்கப்படும்; உருட்டப்படும்;
கீழ்மேலாகத் திருப்பப்படும்; தேய்க்கப்படும்; இறுதியில் எண்ணையில் வதக்கப்படும். புரட்டுதல்
என்னும் தமிழ்ச்சொல் குறிக்கும் பொருட்களாக இந்த அனைத்து வினைகளையுமே தற்காலத் தமிழ்
அகராதிகள் காட்டுவதைக் கீழே காணலாம்.
புரட்டு¹-தல் puraṭṭu- , 5 v. tr. Caus. of புரள்-. 1. [K. poraḷcu, M. puraṭṭuka.]
To turn a thing over; to roll; உருட்டுதல். முடையுடைக் கருந்தலை புரட்டுமுன்றா ளுகிருடை
யடிய (பட்டினப். 230). 2. To turn up, as the soil in ploughing; கீழ்மேலாகத் திருப்புதல்.
3. To fry, as vegetable curry; கறி முதலியவற்றைக் கிண்டி வதக்குதல். Loc. 4. To
smear, rub on the head, as oil; தேய்த்தல். (W.)
இவ்வாறு, புரட்டுதல் என்னும்
தமிழ்ச்சொல்லின் அடிப்படையில் தோன்றியதால் புரோட்டா என்னும் உணவுப்பெயர் தமிழே என்றும்
புரோட்டாவும் தமிழ்நாட்டில் தோன்றிய ஒரு உணவே என்றும் அறிந்துகொள்ளலாம்.
அடுத்து, சப்பாத்தி என்பது
சவட்டுதல் என்னும் வினையின் அடிப்படையில் உருவான ஒரு உணவுப் பெயராகும். அதாவது,
சவட்டுதல்
>>> சப்பட்டி >>> சப்பாத்தி
சவட்டுதல் என்னும் தமிழ்ச்
சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைத் தமிழ் அகராதிகள் கூறியுள்ளன.
சவட்டு¹-தல் cavaṭṭu- , 5 v. tr. Caus. of சவள்-. To bend, twist;
வளைவாக்குதல். அவன் காலைச் சவட்டி நடக்கிறான். (W.) 5 v. tr. cf. carv. 1. To
chew, masticate; மெல்லுதல். பஞ்சாய்க் கோரை பல்லிற் சவட்டி (பெரும்பாண். 217). 3.
To beat; மொத்துதல்.
சப்பாத்தி உணவு தயாரிக்கும்போது
மாவினைப் பிசைந்து நன்கு மொத்துவர். பின்னர் மாவை வளைத்து உருட்டி உருண்டைகளாக்குவர்.
பின்னர் அந்த உருண்டைகளைத் தேய்த்து மெலிதாக்குவர். சவட்டுதல் என்னும் வினைக்குத் தமிழ்
அகராதிகள் கூறியுள்ள மேற்காணும் வினைகளின் அடிப்படையில் சப்பாத்தி உணவு தயாரிக்கப்
படுவதால் சப்பாத்தி என்னும் உணவுப் பெயர் தமிழே என்றும் சப்பாத்தி என்பது தமிழகத்தில்
தோன்றிய ஒருவகை உணவே என்றும் அறிந்துகொள்ளலாம்.
மேலும் சில உணவுகளும் தமிழ்ப்பெயர்களும்:
தமிழகத்தில் தற்போது மஞ்சூரியன்
வகை உணவுகள் விரும்பி உண்ணப்படுகின்றன. இவ்வகை உணவுகளில் பொடிப்பொடியாக வெட்டப்பட்ட
பூண்டு அதிகமாக சேர்க்கப்படும். எனவே மஞ்சூரியன் உணவிற்கான தமிழ்ப்பெயராகப் பூண்டு
அதாவது உள்ளியை அடிப்படையாகக் கொண்டு உள்ளியம்
/ உள்ளி என்று பெயர் வைக்கலாம்.
மஞ்சூரியன் = உள்ளியம்
/ உள்ளி
கோ~பி மஞ்சூரியன் = கோசுள்ளியம்
/ கோசுள்ளி
மச்~ரூம் மஞ்சூரியன் =
காளான் உள்ளியம் / காளானுள்ளி
அடுத்து, பி`ரட்` எனப்படும்
உணவுவகையைப் பார்க்கலாம். இவ் உணவானது கோதுமை மாவினைக் கொண்டு பெரிய அளவினதாய் உப்பவைத்துச்
செய்யப்படுகின்ற மென்மையான ஒரு உணவாகும். சிறுவர்கள் முதல் பெரியவர் வரை விரும்பி உண்கின்ற
இவ் உணவிற்குப் பரூஉ / பரூ என்ற தமிழ்ப்பெயர் பொருத்தமாக இருக்கும். காரணம், பரூ என்பது
பருத்த அல்லது உப்பிய பொருளைக் குறிக்கும் சொல்லாகும்.
பி`ரட்` = பரூஉ / பரூ
அடுத்ததாக, கட்லெட் என்னும்
உணவுவகையினைப் பற்றிக் காணலாம். இவ் உணவானது காய்கறிகள் அல்லது இறைச்சிப் பொருட்களைக்
கூழாக்கி பின்னர் வடையினைப் போலத் தட்டி பரூவின் துகள்களின் மேல் புரட்டி எடுத்து இறுதியில்
எண்ணையில் பொரித்துச் செய்யப்படும். இவ் உணவிற்கு
மிளிர்வை என்னும் சங்கத் தமிழ்ப்பெயர் பொருத்தமாக இருக்கும். காரணம், மிளிர்வை என்னும்
சொல் பெரிதாக வெட்டப்பட்ட அல்லது செய்யப்பட்ட ஒரு கறித்துண்டு என்ற பொருளைத் தருவதுடன்
இதில்வரும் மிளிர்த்தல் என்பது புரட்டுதல் என்னும் பொருளைத் தரும் என்று தமிழ் அகராதிகள்
கூறுகின்றன. எனவே,
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை மிளிர்வை உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
வெசி^டபி`ள் கட்லெட் =
காய்மிளிர்
பொடாடோ கட்லெட் = உருளைமிளிர்
ஃபிச்~ கட்லெட் = மீன்மிளிர்
மட்டன் கட்லெட் = மறிமிளிர்
சிக்கன் கட்லெட் = கோழிமிளிர்
பீ`ஃப் கட்லெட் = ஆன்மிளிர்
அடுத்தது, பி`ரட்` மற்றும்
கட்லெட் உணவுகளின்மேல் பூசி உண்ணப்படும் சாச்` எனப்படும் உணவுப் பொருளைப் பற்றிக் காணலாம்.
சாச்` என்பது தக்காளி, மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாக நன்கு மைபோல மசித்துச் செய்யப்படுவதே
ஆகும். எனவே, சாச்` என்பதற்கு மசியல் / மசி என்னும் தமிழ்ப்பெயர் பொருத்தமாக இருக்கும்.
சாச்` = மசியல் / மசி
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை மசியல் உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
டொமாடர் சாச்` = தக்காளிமசி
சில்லி சாச்` = மிளகாய்மசி
அடுத்தது, சூ`ப் எனப்படும்
உணவுவகையினைப் பற்றிக் காணலாம். சூ`ப் என்பது தமிழ்ப்பெயர் அல்ல என்று சிலர் கருதுகின்றனர்.
உண்மையில் சூ`ப் என்பது தமிழ்ப்பெயரே ஆகும். சுவைத்தல் எனும் வினையின் அடிப்படையில்
தோன்றிய பெயரே சூப் ஆகும். இது எவ்வாறு தோன்றும் என்று கீழே காணலாம்.
சுவைத்தல்
>>> சூப்புதல் >>> சூ`ப்
குழந்தைகள் தமது விரலை
வாயில் வைத்துச் சப்புதலை விரல் சூப்புதல் என்று நாம் சொல்கிறோம். விரலைச் சுவைத்தல்
என்பதே இதன் பொருளாகும். குழந்தைகளைப் போல, உணவுப்பொருளை வாயில் வைத்துக் கொஞ்சம் கொஞ்சமாய்
உறிஞ்சிக் குடிப்பதனைச் சூப்பிக் குடித்தல் என்று சொல்வது வழக்கம். இதன் அடிப்படையில்
தோன்றியதே சூ`ப் என்னும் உணவின் பெயராகும்.
தமிழகத்தில் தற்போது பயன்பாட்டில்
இருக்கும் சிலவகை சூப்பு உணவுகளின் பெயர்களைக் கீழே காணலாம்.
டொமாடர் சூ`ப் = தக்காளி
சூப்பு
மச்~ரூம் சூ`ப் = காளான்
சூப்பு
வெசி^டபி`ள் சூ`ப் = காய்
சூப்பு
சிக்கன் சூ`ப் = கோழி சூப்பு
முடிவுரை:
தமிழக மக்கள் உண்டுவரும்
பல்வேறு உணவுப் பொருட்களுக்குத் தமிழ் இலக்கியங்களின் உதவியுடன் எவ்வாறு தமிழ்ப்பெயர்களைச்
சூட்டலாம் என்றும் பிறமொழிப் பெயர்களைப் போலத் தோன்றும் சில உணவுப் பெயர்கள் உண்மையில்
தமிழ்ப்பெயர்களே என்றும் மேலே பல ஆதாரங்களுடன் கண்டோம். உண்ணும் உணவுவகைகளைப் பொறுத்து
உண்பவரை மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிப்பது வழக்கம். இப் பிரிவுகளைத் தமிழில் வழங்கும்
எளியமுறையினைக் கீழே காணலாம்.
வெசி^டேரியன் = காயுணவு
/ காயுண்போர்
நான்-வெசி^டேரியன் = ஊனுணவு
/ ஊனுண்போர்
எகி~டேரியன் = முட்டையுணவு
/ முட்டையுண்போர்
இந்த மூன்று பெரும்பிரிவுகள்
போதுமானவை. தற்காலத்தில் இவை ஒவ்வொன்றிலும் பலவகையான உட்பிரிவுகளை உருவாக்கிக் கொண்டே
போகின்றனர். அவை நமக்குத் தற்போது தேவையில்லை. தேவைப்படும்போது அவற்றுக்கும் தமிழில்
பெயர்சூட்டி விடலாம். இறுதியாக, தமிழில் உள்ள சொல்வளத்தினைக் கொண்டு சரியான முறையில்
பயன்படுத்தி புதுப்புதுக் கலைச்சொற்களை உருவாக்க முடியும் என்பதும் தமிழில் உணவியல்
நூல்களை எழுதுவது மிக எளிதான செயலே என்றும் உறுதிசெய்யப்படுகிறது.
அருமை. உங்கள் கட்டுரைகளிலிருந்து தமிழ் அகரமுதலி செய்து அதைச் செயலியாகவும் மாற்றலாம்.
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே. அகரமுதலி உருவாகிக் கொண்டிருக்கிறது. அதன்பின்னர் அதனைச் செயலியாக மாற்றும் முயற்சிகள் எடுக்கப்படும். :))
நீக்குசில உணவுப் பெயர்கள் உண்மையில் தமிழ்ப்பெயர்களே என்பதை அறிவதில் மகிழ்ச்சி. நுணுக்கமான பதிவு.
பதிலளிநீக்குமிக்க நன்றி ஐயா. :))
நீக்கு