செவ்வாய், 19 மே, 2009

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.



பழமொழி:
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.

தற்போதைய பொருள்:

ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும்.

தவறு:

எழுத்துப் பிழையினால் தவறான பொருள் கொள்ளப்பட்ட பல பழமொழிகளுள் இதுவும் ஒன்று. இந்தப் பழமொழிக்குக் கூறப்பட்டுள்ள கருத்து தவறானது என்று நாம் நன்கு அறிவோம். ஏனென்றால் ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக் கல் மட்டுமில்லை எந்தக் கல்லும் பறப்பதில்லை. இல்லை இல்லை ஆடி மாதத்தில் வீசும் காற்றுக்கு மற்ற மாதங்களில் வீசும் காற்றைவிட வலிமை அதிகம். இக் கருத்தினை உணர்த்தவே சற்று உயர்வு நவிற்சியாக இவ்வாறு கூறியுள்ளனர் என்று ஒரு கருத்தும் மக்களிடையே நிலவுகிறது. இவ்வாறு கொண்டாலும் இக் கருத்துப் பிழையானதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் ஆடி மாதக் காற்றுக்கு வலிமை அதிகம் என்று மக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் என்ன சொல்ல முற்படுகிறது இந்தப் பழமொழி?. ஆடி மாதத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; மீறி வந்தால் காற்று தூக்கிக் கொண்டு போய்விடும் என்றா?. இப்படி ஒரு கட்டுப்பாட்டினை ஒரு பழமொழி கூறினால் யாரேனும் அதற்கு உடன்படுவார்களா?. ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். என்றால் இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். உண்மையைச் சொன்னால் ஆடி மாதத்தில் தான் திருக்கோயில் வழிபாடுகளும் வயல் வேலைகளும் புனித நீராடல்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

ஆடி மாதக் காற்றுக்கு வலிமை சற்று அதிகம் தான் என்றாலும் அது ஒன்றும் சூறாவளிக் காற்று அல்ல. ஆடி மாதத்தில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மழைக் காற்று சற்று பலமாக இருக்கும். அவ்வளவு தான். ஆடிக் காற்றில் அம்மிக் கல் புரண்டுவிடும் என்று சொன்னாலாவது சற்று சிந்திக்க இடமுண்டு. ஆனால் பறக்கச்செய்வது என்றால் அது மிகையோ மிகை ஆகும். அத்துடன் அம்மிக்கல்லானது பெரும்பாலும் வீட்டின் உள்ளே தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருக்கும் அம்மிக்கல்லை வெளியில் இருந்து காற்று வந்து பறக்கச் செய்யும் என்றால்?. எவ்வளவு பெரிய பொய்!. எனவே இப் பழமொழி உணர்த்தும் கருத்து உண்மையும் இல்லை உயர்வு நவிற்சியும் இல்லை என்று தெளியலாம். இந்தத் தவறான கருத்துக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'அம்மி' என்ற சொல்லில் உள்ள எழுத்துப் பிழையே ஆகும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

'அம்மி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அம்மை' என்ற சொல் வருவதே திருத்தம் ஆகும். 'அம்மை' என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு என்றாலும் இச்சொல் இப் பழமொழியில் 'அம்மை நோயினைக்' குறிக்கும். இந் நோய்க்கு வைசூரி என்றும் பெயர் உண்டு. 'ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்' என்பது தான் திருந்திய பொருள் ஆகும்.

நிறுவுதல்:

இக் கருத்தினை நிறுவும் முன்னர் ஆடி மாதம் பற்றியும் அம்மை நோயினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுதல் இங்கே நலம் பயக்கும். வேனில் காலங்களான பங்குனி,சித்திரை,வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த நான்கு மாதங்களில் சிறிதளவு மழையும் இல்லை என்றால் அங்கே எவ்வளவு கொடிய வெப்பம் நிலவும்?. இத்தகைய கொடிய வெப்பத்தினால் உண்டாவதே அம்மை நோய் ஆகும். கொடிய வெப்பமும் உணவுத் தூய்மையின்மையும் கைகோர்க்கும்போது அங்கே அம்மை நோய் தோன்றுகிறது. உயிர்க் கொல்லி நோய்களுள் ஒன்றாக அம்மை நோயினையும் கருதலாம். ஏனென்றால் இந்த நோய் அவ்வளவு கொடுமையானது என்பதுடன் ஆறாத வடுக்களையும் உண்டாக்கி விட்டு செல்கிறது. இந்த நோய்க்கு நாட்டு மருந்தாக வேப்பிலையும் நவீன ஆங்கில மருந்துகளும் இருந்தபோதும் அம்மை நோயினைப் போக்கவல்ல ஒரு கண்கண்ட இயற்கை மருந்து ஆடி மாதக் காற்று ஆகும்.

பன்னிரெண்டு மாதங்களில் ஆடி மாதத்திற்கு பல சிறப்புக்கள் உண்டு. மழைக் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் இலையுதிர்ந்த மரங்கள் எல்லாம் புதிய தளிர்களை உருவாக்கத் துவங்கும். 'ஆடிப் பட்டம் தேடி நடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாதத்தில் தான் உழவர்கள் வேளாண்மையினைத் துவக்குவார்கள். ஒரு ஆண்டின் துவக்கமழையாகப் பெய்து வருகின்ற ஆடி மாதப் புது வெள்ளத்திலே மக்கள் நீராடி மகிழ்வர். காவிரி ஆற்றங்கரையில் 'ஆடிப்பெருக்கு' என்னும் விழா நடப்பதும் இந்த மாதத்தில் தான். கருநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாய் அதிக அளவில் உலா வரத்துவங்கும் மாதம் இது. கோடைகாலம் முடிந்தவுடன் வரும் முதல் மழை என்பதால் குளிர்ந்த மழைக் காற்று பலமாக மோதி நம் உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும். தென்றல் காற்றும் வாடைக் காற்றும் செய்யாத ஒரு நன்மையினை கொண்டல் காற்று அதாவது ஆடிக் காற்று மட்டுமே செய்யும்.

ஏனென்றால் ஆடிக் காற்று மட்டும் தான் குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியையும் நல்குவது. குளிர்ந்த மழைக் காற்று பலமாக உடலில் மோதும்போது உடலில் உள்ள வெப்பம் சடாரெனக் குறைகிறது. அம்மை நோயினால் உடலில் உண்டான முத்துக்களின் மேல் இக் காற்று பட்டதும் அந்த முத்துக்களின் வழியாக உடல்வெப்பம் சடாரென வெளியேற அந்த முத்துக்களில் ஒரு மாற்றம் உண்டாகி விரைந்து அவை பழுக்கத் துவங்குகின்றன.

ஏனை மாதங்களில் முத்துக்கள் பழுக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்றால் ஆடி மாதக் காற்று உடலில் படுமாறு நன்கு காட்டினால் அவை நான்கே நாட்களில் பழுத்துவிடும். அதுமட்டுமின்றி அதுவரை வெப்பமான சூழ்நிலையில் கூத்தாடி மகிழ்ந்த அம்மைநோய்க் கிருமிகள் திடீரென்ற பருவகால மாற்றத்தினைத் தாங்க மாட்டாமல் காற்றின் அழுத்தத்தாலும் குளிர்ச்சியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. இதனால் அம்மைநோய் பரவுவதும் தடுக்கப்பட்டு விடுகிறது. இது ஆடி மாதக் காற்றுக்கு இயற்கை அளித்த ஒரு வரம் ஆகும். ஆடிக் காற்று வீசும்போது உதிர்ந்த இலைகளும் பூக்களும் தூசியும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம். இவைமட்டுமல்ல 'அம்மைநோயும்' பறக்கும் அதாவது வேகமாக நீங்கும் என்னும் பொருளைக் குறிக்கவே 'அம்மையும்' என்று உம்மையுடன் பழமொழி கூறப்பட்டுள்ளது.

சரியான பழமொழி:

ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்.
...................................வாழ்க தமிழ்!..................................

1 கருத்து:

  1. ஐயா,

    இது போலவே "அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்" என்ற பழமொழியும் தவறாகவே பொருள் கொள்ளப் படுகிறது. அடி மேல் அடி அடித்தால் அம்மி உடையத்தான் வாய்ப்பிருக்கிறதே ஒழிய நகர வாய்ப்பில்லை. இங்கேயும் அம்மி என்ற சொல்லை "அம்மை" என்று மாற்றி தக்க பொருள் கொள்ள முடியுமா ?

    நன்றி !!

    திருநாவுக்கரசு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.