வியாழன், 21 மே, 2009

அற்பனும் அர்த்தராத்திரிக் குடையும்


பழமொழி:

'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

தற்போதைய பொருள்:

அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இத் தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்பது தான். விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் கருத்தில் உள்ள தவறினைக் காணலாம். அற்ப சிந்தனை என்பது கீழான எண்ணம் அதாவது பொறாமை. பிறர் நன்றாக இருப்பதைக் கண்டு மனம் பொறாமல் எப்போதும் அவர்களின் அழிவினைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்களே இவ்வுலகில் அற்பர்கள் அதாவது கடைநிலை மனிதர்கள்(?) ஆவர். இவர்கள் தமது அற்பமான எண்ணத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பின்தங்கிய நிலையிலேயே இருப்பர். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென்று இவர்களுக்கு பெரும்பணமோ உயர்ந்த பதவியோ தவறுதலாகக் கிடைத்துவிட்டால் என்ன செய்வார்கள்?. தாம் பொறாமை கொண்டிருக்கும் பிறர் முன்னால் தங்களை மிகவும் பகட்டாகக் காட்டிக்கொள்வார்கள். தமது பணத்தையோ பதவியினையோ பயன்படுத்தி அவர்களுக்குத் துன்பம் விளைவிக்க முயல்வார்கள். எதற்கெடுத்தாலும் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொண்டு அவர்களைத் தோற்கடிப்பது அல்லது அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள். இதுதான் பொறாமைக் குணம் கொண்ட அற்பர்களுக்குத் திடீரென்று பெருவாழ்வு கிட்டினால் உண்டாகும் மனக்கோளாறுகள் ஆகும்.

இந்த அற்பர்கள் மட்டுமின்றி நாம் அனைவருமே குடையைப் பயன்படுத்துபவர்கள் தான். நள்ளிரவில் குடைபிடிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல; அது குடையை ஏன் பிடிக்கிறோம் என்ற காரணத்தைப் பொறுத்தது. மழைபெய்தால் அது இரவு நேரமானாலும் குடைபிடித்துத் தான் நடக்கவேண்டும். இதில் அற்பர்கள் என்றோ மற்றவர்கள் என்றோ வேறுபாடு இல்லை. ஆனால் மழையே இல்லாத இரவு நேரத்தில் கூட அற்பர்கள் குடைபிடிப்பார்கள் என்று இத் தொடருக்குக் கருத்து கூறப்பட்டுள்ளது. இக் கருத்து இங்கே பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பொறாமைக்காரர்கள் கல்நெஞ்சம் கொண்டவர்களே அன்றி வடிகட்டிய முட்டாள்கள் அல்லர். எந்தெந்த வழிகளில் எல்லாம் துன்பம் விளைவிக்கலாம் அல்லது அவமானப்படுத்தலாம் என்று தீய வழியில் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். மழையே இல்லாத நள்ளிரவில் இவர்கள் பிறர் முன்னால் குடைபிடித்து நின்றால் என்ன நடக்கும்?. இவர்கள் யாரை அவமானப்படுத்த இதைச் செய்தார்களோ அவர்களே இச்செயலைக் கண்டு எள்ளி நகையாடுவர். இதனால் இந்த பொறாமைக்காரர்கள் தான் வெட்கித் தலைகுனிய நேரும். இதை இவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே இந்த அற்பர்கள் தமக்கு பணம்பதவி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி இதுபோன்ற மடத்தனமான செயலில் மட்டும் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியுடன் கூறலாம். சரி, இத் தொடர் உணர்த்தும் தற்போதைய பொருள் தவறென்றால் இதன் உண்மையான பொருள் தான் என்ன?. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'காளானை'க் குறிக்கும் என்று பார்ப்போம். இடிமின்னலுடன் மழைபெய்யும்போது மாட்டுச்சாணம், வைக்கோல், இற்றுப்போன மரம், மட்கிய இலை முதலான கரிமப் பொருட்கள் மீது இயற்கையாய்த் தோன்றுவதே காளான் என்னும் பூஞ்சை என்று நாம் அறிவோம். அன்றியும் இந்தக் காளான்கள் இரவு நேரத்தில் தான் பூக்கும். ஏனென்றால் சூரிய வெளிச்சம் பூஞ்சைகளுக்கு ஆகாது. காளானில் பல வகைகள் உண்டு என்றாலும் வெண்ணிறத்தில் ஒரு குடையினைப் பிடித்துக் கொண்டு நிற்குமே 'குடைக்காளான்' அதுவே அனைத்து இடங்களிலும் பரவலாகத் தோன்றுவது.

அதிகாலையில் எழுந்து கொல்லைப்பக்கம் சென்றால் வெண்குடைவிரித்து சிரித்தவாறு நம்மை வரவேற்கும் இந்த குட்டிக் காளான்கள். இக் காளான்களைத் தான் நாம் 'நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்' என்று அற்பப் பொருளாக எண்ணிக் கூறுகிறோம். இதனால் தான் இந்த விடுமொழியும் இதனை 'அற்பன்' என்றே கூறுகிறது.

இந்த அற்பக் காளான்களுக்கு வாழ்வு வருவதோ மழைபெய்கின்ற ஒரு இரவில் தான் என்றாலும் தோன்றிய பின்னர் ஒரு சில நாட்கள் வரை பகலிலும் ஏன் நள்ளிரவுநேரத்திலும் கூட இவை குடைபிடித்தே நிற்கும். (என்ன செய்வது இவற்றால் தமது குடையை மடக்கிக் கொள்ளமுடியாதே!.) காளான்களின் இந்த வாழ்வினை அடிப்படையாய் வைத்து எழுந்ததே இந்த விடுகதை ஆகும். இதுவே நாளடைவில் தனது 'அவன் யார்?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.
.....................................வாழ்க தமிழ்!...............................

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.