வெள்ளி, 10 செப்டம்பர், 2010

திருக்குறளில் மரம்

முன்னுரை:
வாயுறை வாழ்த்து எனப் போற்றப்படும் திருக்குறளில் பல இடங்களில் மரம் என்ற சொல் பயின்று வந்துள்ளது. நுண்மாண் நுழைபுலம் மிக்க தெய்வப் புலவராம் வள்ளுவர் மரத்தின் தன்மைகளைப் பற்றியோ நன்மைகளைப் பற்றியோ அறியாதவரல்லர். 'மருந்தாகித் தப்பா மரத்தற்றால்', 'உள்ளூர்ப் பயன் மரம் பழுத்தற்றால்' என்று மரத்தின் நன்மைகளைக் கூறி அவற்றைப் போற்றிய வள்ளுவர் 'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்', 'மண்ணோடியைந்த மரத்தனையர்', ' மரமக்கள் ஆதலே வேறு' என சில இடங்களில் மரத்தின் சிறப்பைக் குறைத்துக் கூறியிருப்பதாக இன்றைய உரைநூல்கள் கூறுகின்றன. வள்ளுவர் உண்மையில் அவ்வாறு கூறியிருப்பாரா?. மரத்தைப் பொறுத்தமட்டில் வள்ளுவரின் உண்மையான நிலைப்பாடு என்ன? என்பதை ஆய்வின் மூலம் விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சில முரண்பாடான உரைவிளக்கங்கள்:

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடாதவர் - குறள் 576
கலைஞர் உரை: ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.
மு.வ உரை: கண்ணோட்டதிற்க்கு உரிய கண்ணோடுப் பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் (கண் இருந்தும் காணாத ) மரத்தினைப் போன்றவர்.
சாலமன் பாப்பையா உரை: கண் பெற்றிருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர் இயங்கினாலும் மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம் போன்றவரே.

உரம் ஒருவற்கு உள்ளவெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு. - குறள் 600
கலைஞர் உரை: மனத்தில் உறுதியான ஊக்கமில்லாதவர்கள் உருவத்தில் மனிதர்களாகக் காணப்பட்டாலும் மரங்களுக்கும் அவர்களுக்கும் வேறுபாடு இல்லை.
மு.வ உரை: ஒருவனுக்கு வலிமையானது ஊக்க மிகுதியே, அவ்வூக்கம் இல்லாதவர் மரங்களே, (வடிவால்) மக்களைப் போல் இருத்தலே வேறுபாடு.
சாலமன் பாப்பையா உரை: ஊக்க மிகுதியே ஒருவனுக்குத் திண்ணிய அறிவு. அவ்வூக்கம் இல்லாதவர் வடிவத்தால் மக்கள்; மனத்தாலோ வெறும் மரமே.

அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லாதவர்.-குறள் 997
கலைஞர் உரை: அரம் போன்ற கூர்மையான அறிவுடைய மேதையாக இருந்தாலும், மக்களுக்குரிய பண்பு இல்லாதவர் மரத்துக்கு ஒப்பானவரேயாவார்.
மு.வ உரை: மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர் அரம் போல் கூர்மையான அறிவுடையவரானாலும், ஓரறிவுயிராகிய மரத்தைப் போன்றவரே ஆவர்.
சாலமன் பாப்பையா உரை: மனிதப்பண்பு இல்லாதவர்கள் அரம் போல அறிவுக்கூர்மை படைத்தவர் என்றாலும் ஓர் அறிவு படைத்த மரத்தைப் போன்றோரே.

உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளை நோக்கினால் ஓர் உண்மை விளங்கும். அனைத்து விளக்கங்களிலும் மரத்தின் சிறப்பு குறைத்துக் கூறப்பட்டுள்ளதை அறியலாம். முதல் குறளில் கண்ணோட்டமில்லாதவருக்கும் இரண்டாம் குறளில் ஊக்கமில்லாதவருக்கும் மூன்றாம் குறளில் மக்கட் பண்பு இல்லாதவருக்கும் ஒப்பாக மரம் கூறப்பட்டுள்ளது. இது சரியாகுமா என்றால் சரியாகாது. ஏனென்றால் கண்ணோட்டம், ஊக்கம், மக்கட் பண்பு ஆகியவை மாந்தருக்குரிய பண்புகள். இவற்றை மரத்துடன் ஒப்பிடுவதோ மரத்திடம் எதிர்பார்ப்பதோ எவ்வகையிலும் முறையாகாது. மாந்தருக்கு ஆறறிவு இருக்கலாம்; மரத்துக்கு ஓரறிவு இருக்கலாம். ஆனால் மனிதனைவிட மரம் எவ்வகையிலும் தாழ்ந்ததில்லை. இலை, காய், கனி, பூ, பட்டை, வேர் என்று தனது அனைத்து உறுப்புக்களாலும் மாந்தருக்கும் பிற உயிரினங்களுக்கும் கைம்மாறு கருதாமல் உதவி செய்துவரும் மரம் உறுதியாக மனிதரைவிட உயர்ந்ததுதான். இதை வள்ளுவரே 216, 217 ஆம் குறள்களில் கூறுகிறார்.

எனவே தான் பண்பு கெட்ட மனிதர்களை மரத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது ஏற்புடைய செயலாகாது என்னும் கருத்து இங்கே வலியுறுத்தப் படுகிறது. இப்படி ஒரு தவறான கருத்தை வள்ளுவர் உறுதியாகக் கூறி இருக்க மாட்டார்.  இவை உரையாசிரியர்களின் சொந்த விளக்கங்கள். ஆகவே இந்த விளக்கங்கள் தவறாகவே கொள்ளப்படும். இதிலிருந்து இக் குறள்களில் வரும் மரம் என்ற சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது. என்றால் வள்ளுவர் மரம் என்ற சொல்லை எப்பொருளில் பயன்படுத்தியுள்ளார்?.  இதைப் பற்றி முடிவு செய்ய மரம் என்ற சொல் பயிலும் அனைத்துக் குறள்களையும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

மரம் பயிலும் குறள்கள்:

மரம் என்ற சொல் பயிலும் குறள்கள் யாவையும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அன்பகத்தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று - குறள்: 78
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடையான் கண் படின் - குறள்: 216
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகையான் கண் படின் - குறள்: 217
இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து - குறள்: 879
நச்சப்படாதவன் செல்வம் நடுவூருள் நச்சுமரம் பழுத்தற்று - குறள்: 1008

மண்ணோடியைந்த மரத்தனையர் கண்ணோடியைந்து கண்ணோடாதவர் - குறள்: 576
உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃதில்லார் மரமக்கள் ஆதலே வேறு - குறள்: 600
அரம்போலும் கூர்மையரேனும் மரம்போல்வர் மக்கட் பண்பில்லாதவர் - குறள்: 997
நாண் அகத்தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர் மருட்டியற்று - குறள்: 1020
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று - குறள்: 1058

இனி இக்குறள்களுக்கான உண்மையான விளக்கங்கள் என்ன என்று காணலாம்.

குறள் விளக்கங்கள் -1 :

மேற்காணும் பத்து குறள்களில் முதல் ஐந்து குறள்களின் விளக்கங்களை முதலில் காணலாம்.

குறள் எண்: 78 - உள்ளத்தில் அன்பு எனும் ஈரம் இல்லாதவருடைய உயிர் வாழ்க்கையானது பாலை நிலத்தில் நீரின் ஈரம் இல்லாமல் வற்றிப் போன ஒரு மரம் மீண்டும் தளிர்ப்பதைப் போன்றதாகும். அதாவது பூமிக்குக் கீழே நீரின்றி வற்றிப்போன ஒரு மரம் பெய்த மழையால் சிறிது தளிர்த்தாலும் பாலைநிலத்தின் அகத்தே ஈரமின்மையால் விரைந்து உலர்ந்துவிடும். அதுபோல அகத்தில் சிறிதும் அன்பில்லாமல் புறத்தில் மட்டும் அன்புடையதுபோல நடப்பவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி இருப்பதுபோலத் தோன்றினாலும் வெகு விரைவில் அது இல்லாது அழியும். இக் குறள் மரத்தின் தன்மையைக் கூறுகிறது.

குறள் எண்: 216- மக்களுக்குப் பயன் தரக்கூடிய ஒரு பொது மரம் ஊருக்குள் வளர்ந்து பழுக்கும்போது அதனால் மக்கள் பலரும் பயன் பெறுவர். அதுபோல தன்னலம் கருதாத ஒரு தலைவனிடத்திலே செல்வம் சேருமானால் அதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுவர். இக் குறள் மரத்தின் நன்மையைக் கூறி அதைச் சிறப்பிக்கிறது.

குறள் எண்: 217 - ஒரு நல்ல மரமானது நன்கு வளர்ந்ததும் இலை, காய், பட்டை, வேர், பழம் எனப் பலவகையாலும் மக்களின் பிணிக்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. அதைப் போல செல்வமானது ஒரு பெருந்தகையிடம் சேருமானால் அது மக்களின் பசிப்பிணியைப் போக்கப் பயன்படும். இந்தக் குறளும் மரத்தின் நன்மையைக் கூறி அதைச் சிறப்பிக்கிறது.

குறள் எண்: 879 - முள்மரம் இளையதாக இருக்கும்போது அதைக் கொய்து அழிக்க வேண்டும். முட்கள் முதிர்ந்து விட்டால் அவை கொய்வோரின் கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும். அதுபோல பகையினையும் ஆரம்பத்திலேயே அகற்றாமல் முற்றிய பின்னர் அகற்றும்போது பெரும் சேதம் ஏற்படும். இக் குறள் மரத்தின் தன்மையினைச் சொல்கிறது.

குறள் எண்: 1008 - மக்களால் விரும்பப் படாதவனிடத்திலே சேரும் செல்வமானது நச்சு மரத்தில் பழுத்திருக்கும் பழங்களைப் போல யாருக்கும் பயனற்றது ஆகும். இக் குறளும் மரத்தின் தன்மையினைச் சொல்கிறது.

மேற்காணும் ஐந்து குறள்களை நோக்கினால் ஓர் உண்மை புலப்படும். இக் குறள்களில் வெறுமனே 'மரம்' என்று வழங்காது, 'வற்றல் மரம்', ' பயன் மரம்', 'மருந்தாகித் தப்பா மரம்', 'முள்மரம்', ' நச்சு மரம்' என மரச் சொல்லுடன் முன்னொட்டுக்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும். இம் முன்னொட்டுக்கள் அடைமொழிகளாய் இருந்து மரத்தின் தன்மைகளையும் நன்மைகளையும் விளக்குவதற்காக வந்தவை. ஆனால் பின் ஐந்து குறள்களிலும் முன்னொட்டுக்கள் இல்லாததைக் காணலாம். சிலவற்றில் பின்னொட்டுக்களும் ('மக்கள்' மற்றும் 'பாவை') சிலவற்றில் எவ்வித ஒட்டும் இல்லாமலும் வந்திருப்பதைக் காணலாம். இதில் 'மண்ணோடியைந்த மரம்' என்ற குறளில் முன்னொட்டு இல்லை என்றே கொள்ள வேண்டும். இது ஏன் என்பதையும் பின் ஐந்து குறள்களுக்கான சரியான விளக்கங்களையும் கீழே காணலாம்.

குறள் விளக்கங்கள் - 2 :

குறள் எண்: 576 ல் 'மண்ணோடியைந்த மரம்' என்ற தொடரில் வரும் மரத்தை உயிருள்ள மரமாகக் கருத முடியாது. ஏனென்றால் உயிருள்ள மரம் என்றாலே அது மண்ணோடு அதாவது நிலத்தோடு பொருந்தியே இருக்கும். எனவே 'மண்ணோடியைந்த மரம்' என்று அடைகொடுக்க வேண்டிய தேவை இல்லை. ஒன்றின் சிறப்புப் பண்புகளைக் குறிக்கவே அடைமொழிகள் தேவை என்பதால் இங்கு 'மண்ணோடியைந்த' என்பது உயிருள்ள மரத்தைக் குறித்து வந்திருக்காது என்பது தெளிவு. என்றால் இங்கு மரம் என்பது எதைக் குறிக்கிறது?. இதற்கான விடையினை கடைசி இரண்டு குறள்களில் காணலாம். கடைசி இரண்டு குறள்களில் 'மரப்பாவை' என்ற சொல் பயின்று வந்துள்ளது. இதற்கு 'மரத்தாலான மனித வடிவம்' என்று பொருள் கொள்ளலாம். குறள் எண் 576 ல் வருகின்ற மண்ணோடியைந்த மரமும் இத்தகைய மரப்பாவை ஒன்றையே குறிக்கிறது. ஆனால் இதில் வரும் மரப்பாவையானது வண்ணக் கலவையால் பூசப்பட்டு அலங்கரிக்கப் பட்டுள்ளது. (மண் என்றால் அலங்காரம், ஒப்பனை என்ற பொருட்களும் உண்டு. சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி). மண்ணோடியைந்த மரம் என்பது அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாவை என்ற பொருளில் கண்ணோட்டம் இல்லாதவர்களுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. உயிருள்ள கண்களில் கண்ணோட்டம் இல்லையென்றால் அவை அலங்காரம் செய்யப்பட்ட ஆனால் உயிரற்ற மரப்பாவையின் கண்களுக்கே ஒப்பாகும் அல்லவா, அதனால் தான்  கண்ணோட்டம் இல்லாத மனிதரை அலங்காரம் செய்யப்பட்ட மரப்பாவை என்கிறார் வள்ளுவர். ஆக இக் குறளில் வரும் மரம் என்னும் சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்காமல் ஆகுபெயராக மரத்தாலான பாவையைத் தான் குறிக்கிறது என்பது பெறப்படுகிறது.

குறள் எண்: 600 ல் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. 'மரமக்கள் ஆதலே பேறு' என வருவதே திருத்தமாகும். இக் குறளின் பொருளானது: ' ஒருவற்கு உள்ள வெறுக்கையானது ஊக்க மிகுதியே ஆகும். ஊக்கமுடையவர்கள் அடையக் கூடிய நற்பேறுகள் பலவாகும். ஆனால் ஊக்கம் இல்லாதார் உயிரோடிருந்தும் உயிரற்ற மரத்தாலான பாவைகளாக ஆவதே அவர்கள் அடையும்  பேறாகும்.' இங்கே மரமக்கள் என்பது மரத்தாலான மனித வடிவங்கள் (பாவைகள்) என்ற பொருளில் தான் வள்ளுவரால் பயன்படுத்தப் பட்டுள்ளது.

குறள் எண்: 997  ன் பொருள் விளக்கமானது: வாளரம் போல கூர்மையான அறிவுடையவரே ஆனாலும் மக்கள் பண்பு இல்லாவிட்டால் அவர்கள் உயிரோடிருந்தாலும் உயிரற்ற மரப்பாவை போன்றவரே ஆவார்கள். இக் குறளில் வரும் மரம் என்ற சொல் உயிருள்ள மரத்தைக் குறிக்காமல் எவ்வாறு மரப்பாவையைக் குறிக்கும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். மக்களால் அடைவதற்கு எளியவனாயும் மக்களிடத்தில் இனிமையாக பழகுபவனாயும் இருப்பவனே மக்கட் பண்புடையவன் என்று பண்புடைமை குறள்கள் 991, 992 கூறுகின்றன.  ஆனால் சிலரை இவ்வாறு பார்த்திருக்கலாம். நாம் அவரிடத்தில் சென்று ஏதாவது பேசினால் அவர் பதிலே பேசமாட்டார். இத்தனைக்கும் அவர் ஊமையோ செவிடோ அல்ல; சிறந்த அறிவாளி எனப் பெயர் பெற்றவர். பொதுமக்களிடத்தில் பேசவேமாட்டார். உயர்மட்ட அறிவாளிகளுடன் மட்டுமே பேசக் கூடியவர். பிறரை எள்ளளவும் மனிதராகக் கூட மதிக்கமாட்டார். இத்தகைய மனிதர்களைத் தான் மக்கட் பண்பில்லாதவர் எனக் கூறுகிறார் வள்ளுவர். இவர்களிடம் சென்று பேசுவதும் சரி ஒரு மரப்பாவையிடம் பேசுவதும் சரி இரண்டுமே ஒன்று தான். ஏனென்றால் இரண்டுமே பதில் பேசாது. அதனால் தான் மக்கட் பண்பில்லாதவர்களை மரப்பாவை என்கிறார் வள்ளுவர்.

குறள் எண்: 1020 ன் விளக்கமானது: நெஞ்சிலே வெட்கமின்றி தகாத செயல்களைச் செய்வது கயிற்றால் கட்டி இயக்கப்படும் மரப்பாவையின் செயலை ஒக்கும். இக் குறளில் வெட்கமில்லாதவரை உயிரற்ற மரப்பாவைக்கு ஒப்பிடுவதன் காரணம் மரப்பாவை உயிரற்றதெனினும் கயிற்றால் கட்டி அதை இயக்க முடியும். ஆனால் அதற்கு வினையின் நன்மை தீமைகள் தெரியாது; வெட்கப்படவும் தெரியாது. தவறு செய்துவிட்டோம் என்று அறிந்ததும் நெஞ்சில் ஒரு துணுக்குறுவோமே அது உயிருள்ளவைக்கு மட்டுமே பொருந்தும். இந்த துணுக்கு இல்லாதவர்கள் கயிற்றால் கட்டி இயக்கப்படும் உயிரற்ற மரப்பாவை என்கிறார் வள்ளுவர்.

குறள் எண் 1058 ல் வேற்றுமை உருபு மயக்கம் உள்ளது. இதை உணராமல் தற்கால உரையாசிரியர்கள் கீழ்க்காணுமாறு உரை விளக்கங்கள் கூறியுள்ளனர்.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண் மாஞாலம் மரப்பாவை சென்று வந்தற்று.

கலைஞர் உரை: வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை.
மு.வ உரை: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை ஏற்பார் என்பவர் இல்லாது போய் விட்டால், குளி்ர்ந்த பெரிய இவ்வுலகத்தில் வாழ்பவரின் வாழ்க்கை, வெறும் மரப்பொம்மைகளின் போக்குவரத்தாகவே ஆகிவிடும்.

இங்கே இரப்பாரை என்னும் சொல்லிற்கு இரப்பவர்கள் என்று பொருள் கொண்டு உரை கூறியுள்ளனர். இவ்வாறு பொருள் கொண்டால், உலகில் பிச்சைக்காரர்கள் இருந்தால் தான் நல்லது என்று வள்ளுவர் வலியுறுத்திக் கூறுவதாக அல்லவா பொருள் தொனிக்கிறது.  இவ்வாறு வள்ளுவர் கூறி இருக்க முடியாது. ஏனென்றால் ஒரு நாடு செல்வச் செழிப்புடன் இருந்தால் அங்கே பிச்சைக் காரர்கள் இருக்க மாட்டார்கள் அல்லவா?. எனவே இரப்பாரை என்னும் சொல்லிற்கு இரப்பவர்கள் என்று பொருள் கொள்வது தவறு என்பது புலப்படும். என்றால் இச்சொல் உணர்த்தும் உண்மைப் பொருள் தான் என்ன?. இதைப் பற்றிக் காணலாம்.

இரப்பாரை என்னும் சொல்லில் உள்ள 'ஐ' என்னும் இரண்டாம் வேற்றுமை உருபிற்கு பதிலாக 'கு' என்னும் நான்காம் வேற்றுமை உருபு வந்திருக்க வேண்டும். அதாவது இரப்பார்க்கு என்று வந்திருக்க வேண்டும். இங்கே வேற்றுமை உருபு மயங்கி வந்திருப்பதால் இது உருபு மயக்கமாகும். திருக்குறளில் இதுபோல வேற்றுமை உருபு மயங்கும் இடங்கள் உண்டு. குணமும் சினமும் என்ற ஆய்வுக் கட்டுரையில் இது பற்றி நாம் ஏற்கெனவே கண்டிருக்கிறோம்.  'இரப்பார்க்கு இல்லாயின்' எனக் கொண்டால் இக் குறளின் உண்மையான பொருள் இது தான்:

'தம்மிடம் வந்து இரப்பவர்களுக்கு 'இல்லை' என்று கூறும் நிலை உண்டானால் பசுமை உடைய இந்தப் பெரிய உலகத்தில் வாழும் மக்களின் இயக்கம் மரப்பாவைகளின் இயக்கத்திற்கே ஒப்பாகும்.' அதாவது உயிர் கொண்டு இயங்கினாலும் உதவி செய்யும் குணம் இல்லாததால் அவர்கள் உயிரற்ற ஆனால் கயிற்றால் கட்டி இயக்கப்படும் மரப்பாவைகளையே ஒப்பர் என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவரின் நிலைப்பாடு:

மேற்கண்ட குறள்கள் அனைத்திலும் வள்ளுவர் மரம் என்ற சொல்லை தனியாகவோ பிற சொற்களுடன் சேர்த்தோ மரத்தாலான மனித வடிவங்கள் என்ற பொருளில் தான் பயன்படுத்தியுள்ளார் என்பதைக் கண்டோம். ஏன் வள்ளுவர் கற்சிலை அல்லது மண்சிலையை உவமையாகப் பயன்படுத்தவில்லை? என்ற கோணத்தில் ஆய்வு செய்தபோது சில கருத்துக்கள் முகிழ்த்தன.

1. மரப்பாவைக்கும் மனிதஉடலுக்கும் ஒரு அடிப்படை ஒற்றுமை உண்டு. இரண்டுமே கரிமப் பொருட்களால் ஆனவை. அதனால் இரண்டுமே தீப்பிடித்து எரியும்; நீரில் மிதக்கும். உயிர் பிரிந்தவுடன் மனித உடல் மரப்பாவை போல விறைத்துவிடும்.

2. மரப்பாவையினை கயிற்றால் கட்டி உயிருள்ளது போல இயக்க முடியும். ஆனால் கல்சிலைகளையோ மண்சிலைகளையோ அவ்வாறு இயக்குவது கடினமாகும்.

இக் காரணங்களால் வள்ளுவர் கற்சிலை மற்றும் மண்சிலையினைத் தவிர்த்து மரப்பாவையினை உவமையாகப் பயன்படுத்தி இருக்கலாம். அது மட்டுமின்றி திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கற்சிலை என்ற சொல்லோ அப்பொருளைத் தருவதாக வேறொரு சொல்லோ பயன்படுத்தப் படவில்லை. கல் என்ற சொல் சில இடங்களில் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் அவை கற்சிலை என்ற பொருளில் வழங்கப்படவில்லை. குறள் 407 ல் மண்மாண் புனைபாவை என்ற சொல்லாடல் வருகிறது. இதில் வரும் மண் என்பதற்கு மண்ணாலான என்று பொருள் கொள்வதைக் காட்டிலும் அலங்காரம் அல்லது ஒப்பனை என்ற பொருள் நன்கு பொருத்தமாக உள்ளது. காண்பதற்கு நல்ல அழகுடன் நல்ல உடையுடுத்தி இருக்கும் ஒருவன் நுட்பமான கல்வி அறிவு இல்லாவிட்டால் அலங்காரம் செய்யப்பட்டு (மண்மாண்) ஆடையணிந்த(புனை) ஒரு மரப்பாவைக்கு ஒப்பாவான் என்று பொருள் கொள்வது சாலப் பொருத்தமாக இருக்கிறது. இக் குறள் மட்டுமின்றி வேறெங்கும் மண்சிலை அல்லது அதைக் குறிப்பதான வேறொரு சொல் திருக்குறளில் பயின்று வரவில்லை. ஆக கற்சிலை அல்லது மண்சிலை பற்றி பிற குறள்களில் வராததாலும் மரப்பாவையே பயின்று வருவதாலும் 407 ஆம் குறளில் வரும் பாவையினை மரப்பாவை எனக் கொள்வதே சரியாகும்.

3. மரப்பாவைகளைப் பற்றிக் கூறிய வள்ளுவர் மண்சிலை மற்றும் கற்சிலைகளைப் பற்றிக் கூறாததில் இருந்து வள்ளுவர் காலத்தில் மரப்பாவைகள் மட்டுமே வழக்கில் இருந்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்தும் முகிழ்க்கிறது.

முடிவுரை:

இதுகாறும் கண்டதில் இருந்து வள்ளுவர் மரத்தைப் போற்றியுள்ளாரே தவிர அதன் மதிப்பை ஒரு சிறிதும் குறைத்துக் கூறவில்லை என்ற முடிவுக்கு வருகிறோம். வள்ளுவரைப் புரிந்து கொள்ளாமல் அவர் எழுதிய குறள்களுக்கு விளக்கங்கள் அளிப்பது எவ்வளவு தவறு என்பதற்கு இக் கட்டுரை ஓர் சான்றாகும். இயற்கையோடு ஒட்டிய வாழ்வியல் கருத்துக்களை மிக நுட்பமாக விளக்கும் திறன் கொண்ட வள்ளுவனை இனியாவது மக்கள் சரியாகப் புரிந்து கொள்ளவேண்டும்.
....................................................................................................................

15 கருத்துகள்:

  1. இக் கட்டுரை மிக நன்று.

    இப்படிக்கு,

    முத்தையா ராஜாராம்

    பதிலளிநீக்கு
  2. தீர்க்கமான சிந்தனை! படித்துப் பயனடைந்தேன்.


    பதிலளிநீக்கு
  3. மிகவும் அருமையான ஆய்வு,இயற்கையுடன் நீங்கள் ஒன்றிவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு
  4. நண்பா,நான் ஒரு நூல் எழுதலாம் என்று முயற்சி செய்கிறேன்.உங்களது ஆய்வுக்கட்டுரை எனக்கு மிகவும் ஊக்கமளிப்பதாக இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க மகிழ்ச்சி நண்பரே. உங்களை அறிமுகப் படுத்திக் கொண்டால் உங்களுக்கு உதவுதற்கும் நான் தயார். :))

      நீக்கு
    2. நண்பா, க.மாரியப்பன்,சொந்த ஊர் : சங்கரன்கோவில் அருகே பொய்கைமேடு என்ற கிராமம் ,பணி: துணை வட்டாட்சியர் ( தேர்தல்) ,நூல்கள் படிப்பதில் ஆர்வம்,நமது இயற்கைக்கு எதிரான செயல்களை சுட்டிக்காட்டும் விதமாக நூல் ஒன்று எழுத ஆசை.....

      நீக்கு
    3. மிக்க மகிழ்ச்சி நண்பரே. நீங்கள் என்னை vaendhan@gmail.com என்ற மின்முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

      நீக்கு
    4. மிக்க நன்றி,வாழ்க வளமுடன்

      நீக்கு
  5. நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - மணி. 6.47

    பாங்குற மண்ணீட்டில் பண்புற வகுத்து - மணி. 6.200

    'மண்ணீடு' இந்தக் கலை குறித்த ஒரு கலைச்சொல்லாக இருந்திருக்க வேண்டும், சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலையில் இக்கலையின் வல்லுநர்கள் மண்ணீட்டாளர் என்று குறிக்கப்பெற்றமை நோக்குக. நவீன காலத்தில், இவர்கள் சுதை வேலைக்காரர் என்று அழைக்கப்படுகின்றனர்.
    செங்கலுக்கும் முன்பாக மரம் பயன்படுத்தப்பட்ட பிற்காலத்திற்கு நம்மை இட்டுச்செல்கிறது, திருக்குறள். சுதைச்சிற்பக் கலையும், செங்கல் கட்டுமானங்களும் எண்ணிக்கையில் பெருகிய காலத்து, செல்லரிக்கத் தொடங்கியிருந்த பழைய மரக்கட்டுமானங்களும், சுதையினால் பூசப்பட்டிருக்க வேண்டும். இது, மரச்சட்டத்தைக் கூடாகக் கொண்டு அதன் மேல் சுதை வேலை செய்யும் புதியதோர் கலைக்கு வித்திட்டது.

    இதுவே, மண்ணோடியைந்த மரம் - என்பதற்கும் பொருத்தமான விளக்கமாக அமையும் என்று நினைக்கிறேன். தங்கள் கருத்தென்ன ஐயா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதிய கருத்திற்கு பாராட்டு. ஆனால், சுதை பூசிய மரத்தினை உதவி செய்யாத மனிதனுடன் எப்படி ஒப்பிட முடியும்?.

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.