திங்கள், 18 மே, 2009

'தயிர் பிசைந்த தாரகை'


பாடல்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎன கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.
- குறுந்தொகை பா.எண்: 167

தற்போதைய பொருள்:

காய்ச்சித் தோய்த்த தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற தன் கைவிரல்களைக் கழுவாமல் (மாசறக்) கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு குவளை போன்ற தனது மைதீற்றிய கண்களிலே தாளிப்பின் நறுமணம் கமழும் புகை புகுந்து வருத்தத் தானே தன் கையால் துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பினை இனிப்பாய் இருக்கிறது என்று புகழ்ந்து தன் கணவன் உண்டதினாலே உள்ளம் மிக மகிழ்ந்தது மகளின் முகம்.
(ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002)

தவறு:

இப்பாடலின் இரண்டாவது வரிக்குக் கூறப்படும் பொருளின் மீது நிறைய நாட்களாகவே ஒரு நெருடல் இருந்து வந்தது. 'கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு' என்பது தான் இந்த அடிக்குக் கூறப்படும் பொருள் ஆகும். 'தயிர் பிசைந்த விரல்களைக் கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு ' என்று பொருள் கூறினால் அதன் உட்கருத்து என்ன?. 'தயிர் பிசையும்முன்னர் ஆடை ஏதும் அணியாது இருந்தவள் பிசைந்த பின்னர் ஆடை அணிந்தாள்' என்றோ 'தயிர் பிசையும்போது அழுக்கான ஆடையுடன் இருந்தவள் பிசைந்த பின்னர் துவைத்த ஆடையினை அணிந்தாள்' என்றோ தானே பொருள் கொள்ள வேண்டி வருகின்றது. இந்த இடத்தில் இக்கருத்துக்கள் சற்றேனும் பொருந்துகின்றனவா என்றால் சிறிதும் இல்லை. ஏனென்றால் இந்த இரண்டு உட்கருத்துக்களும் பண்பற்றவைகள் என்பதுடன் அறிவுக்குப் புறம்பானவையும் ஆகும் . இவ்வாறு உட்கருத்து கொண்டால் அந்தப் பெண்ணைப் பற்றி ஏன் சங்ககாலப் பெண்களைப் பற்றியே ஒரு தவறான கருத்து அல்லவா கற்போர் நெஞ்சில் முகிழ்த்துவிடும்?.

அன்றியும் எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு கீழ்த்தரமாகவும் மடத்தனமாகவும் நடந்து கொள்வாளா?. ஒருபோதும் மாட்டாள். இல்லறத்தின் சிறப்பினைப் போற்றுகின்ற இந்தப் பாடலுக்கு பெண்மையினை இழிவுபடுத்தும் விதமாக ஒரு கருத்தினை ஏன் கூறினர் என்று ஆராய்ந்த போது அது ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் என்று தெரிய வந்தது. அந்த எழுத்துப் பிழை இருப்பது இரண்டாம் வரியில் உள்ள கடைசிச் சொல்லில் தான். 'கழாஅ துடீஇ' என்ற தொடரினை 'கழாஅது உடீஇ' என்று பிரித்து அதற்கு 'கழுவாமல் உடுத்தி' என்று பொருள் கொண்டிருப்பது தான் இங்கே தவறு ஆகும்.

திருத்தம்:

இரண்டாம் வரியில் உள்ள 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வந்திருக்க வேண்டும். இதுவே இதன் திருத்தமாகும். 'கழாஅ துடைஇ' என்னும் தொடருக்கு 'கழுவாமல் துடைத்து' என்று பொருள் வரும். 'கழாஅத்தலையார்' என்ற பெயர் எவ்வாறு 'கழுவாத தலையார்' என்று பொருள் தருகின்றதோ அவ்வாறே இதனையும் பொருள் கொள்ள வேண்டும்.

நிறுவுதல்:

இல்லறத்தின் முதுகெலும்பாகிய 'இயைபு' பண்பின் சிறப்பினை உணர்த்த வந்த பாடல் இது. இப்பாடலின் உண்மையான பொருளை அறியும் முன்னர் இப்பாடல் தோன்றிய பின்புலத்தை ஆராயலாம். செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்த ஒரே செல்ல மகள் ஒரு காளையின் மேல் காதல் கொள்கிறாள். அவனோ ஏழை. மகளின் பெற்றோர் இவர்களது காதலை எதிர்க்கவே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கின்றனர். இதை அறிந்த அவளது அன்னை மிகவும் வருந்துகிறாள். சமையலைப் பற்றி எதுவுமே அறியாத தனது ஒரே செல்ல மகள் வயதில் மிகவும் இளையவள். எவ்வாறு தன் கணவனுடன் சிக்கல் ஏதும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாளோ என்ற கவலை மேலிடவே தன் மகள் இல்லறம் நடத்தும் பாங்கினை அறிந்துவர செவிலித்தாயினை அனுப்புகிறாள். அந்த செவிலித்தாய் மகளின் வீட்டை அணுகி ஒரு சாளரத்தின் வழியாக அந்த வீட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சியைக் கண்டு சென்று அன்னையிடம் கூறுவதாக அமைவதே இந்தப் பாடல் ஆகும்.

மிகவும் செல்லமாக வளர்ந்தவள் என்பதால் இன்னும் சமையல் கலையினையே கற்றுக் கொள்ளாதவள் கணவனுக்குச் சமைத்துக் கொடுக்கவேண்டுமே என்ற ஆவலில் மூன்று தவறுகளைச் செய்கிறாள். தயிர் கெட்டியாய் இருந்தால் சற்று தண்ணீர் விட்டு ஒரு கரண்டியால் கிண்டினால் போதும். ஆனால் இவளோ தனது செங்காந்தள் மலர் போன்ற சிவந்த மெல்லிய விரல்களால் பிசைகிறாள். இது முதல் தவறு ஆகும். அவ்வாறே விரல்களால் பிசைந்த போதிலும் பிசைந்த பின்னர் விரல்களைத் தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டுத் துணியால் துடைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இவளோ விரல்களைத் தண்ணீரில் க்ழுவாமல் தனது சலவை செய்த புடவையிலேயே துடைத்துக் கொள்கிறாள். இது இரண்டாவது தவறு ஆகும். அடுத்து தாளிக்கும்போது எண்ணையை அதிகம் சூடேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் எண்ணை ஆவியாவதுடன் அதில் நீர் பட்டால் புகை உருவாகி எண்ணை தெறிக்கவும் செய்யும். ஆனால் இவளோ சமையல் அறியாதவள் ஆயிற்றே. அதிகம் சூடேறிய எண்ணையில் தயிரைக் கொட்டித் தாளிக்க முயல்கிறாள். இது மூன்றாவது தவறு ஆகும். இதனால் அதிகமான புகை தோன்றி இவளது கண்களைப் பதம் பார்க்கிறது. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்து சமைத்து முடித்த பின்னர் அதனை தனது கணவனுக்குப் பரிமாறுகிறாள். அதை உண்டுவிட்டு கணவன் 'என்ன சொல்வானோ?' என்று அவளது பேதை நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆனால் அவளது கணவனோ பண்பாடு தெரிந்தவன். மனைவி சமைத்த தீம்புளிப்பாகில் குறை இருந்த போதிலும் அதை மறைத்துக்கொண்டு 'நன்றாக இருக்கிறது' என்று புகழாரம் சூட்டுகிறான். இது தான் இல்வாழ்வின் இயைபுப் பண்பாகும். அதாவது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தல் அல்லது அனுசரித்துப் போதல் ஆகும். கணவனின் பாராட்டைக் கேட்ட அவள் உள்ளம் மகிழ்கிறாள். அது அவளது முகத்தில் தெரிகிறது.

இதுதான் அந்த வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியைக் கூறும்போது மகள் செய்த மூன்று தவறுகளையும் அதைப் பொறுத்துக்கொண்டு அவளது கணவன் அவளைப் பாராட்டியதையும் மட்டும் செவிலித்தாய் கூறவில்லை. தன் மகளுக்கு சமையல் தான் தெரியாதே தவிர நன்றாக சலவை செய்யத் தெரியும் என்றும் தன்னை நன்கு அலங்காரம் செய்துகொள்ளத் தெரியும் என்றும் கூறி பெருமைப் படுகிற நுட்பமும் இப்பாடலில் புலனாகிறது. 'கழுவுறு கலிங்கம்', 'உண்கண்' ஆகிய தொடர்கள் இதைப் பறைசாற்றுகின்றன. இதிலிருந்து இந்தப் பாடலில் 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வருவதே சரி என்று தெளியலாம்.

சரியான பாடல்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎன கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.

(விரல் என்ற சொல்லை அடுத்து கழாஅ என்ற சொல்லைப் பொருத்திப் பொருள் கொள்க.)
..................................தமிழ் வாழ்க!.................................

5 கருத்துகள்:

  1. அருமை அருமை...
    ஆனாலும், ´மை தீற்றிய `என்பது சரிதானா?
    ´மை தீட்டிய`என்றுதான் வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி திரு. அமுதசிவம்.

      மைதீட்டிய என்பதே சரி.

      அன்புடன்
      தி.பொ.ச

      நீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.