செவ்வாய், 26 ஜூன், 2018

12 - ஆடு ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


முன்னுரை:

ஆடு - என்றவுடன் மே...மே... என்று எப்போதும் கத்திக்கொண்டு கூட்டம் கூட்டமாய்ச் செல்வதும் எப்போதும் எதையாவது மேய்ந்துகொண்டே இருப்பதுமான அந்த அப்பாவி விலங்கின் முகம் அனைவருக்கும் உடனே நினைவுக்கு வரும். இறைச்சி உணவில் சுவைமிக்கதாகக் கருதப்படுவதால் ஆடுகள் பெரும்பாலும் அவற்றின் இறைச்சிக்காகவே வளர்க்கப்பட்டுக் கொல்லப்படுகின்றன. மாடுகளைப் போல அதிக பாலைத் தருவதற்கு ஆடுகளால் இயலாது என்றாலும் ஆட்டுப்பாலின் தன்மையும் நன்மையும் மாட்டுப்பாலை விடச் சிறப்பானது. அண்ணல் காந்தி அடிகள் விரும்பி உண்டது ஆட்டுப்பாலே ஆகும். மாடுகள் சூழலைப் புரிந்துகொள்ளும் அறிவுமிக்கவையாக இருக்கும் நிலையில், ஆடுகள் மந்த அறிவு கொண்டவையாக இருக்கின்றன. தலையை வெட்டுவதற்காகக் கையில் அரிவாளை ஓங்கிய நிலையில்கூட கொலைகாரன் தரும் இலைதழையை ஆவலுடன் உண்ணும் அதன் அப்பாவித்தனம் காண்பவரின் நெஞ்சைப் பிழியக் கூடியது. இதனால்தான் மந்த புத்தி உடையவரை ஆட்டுடன் ஒப்பிட்டுக் கூறுவர். சங்க இலக்கியங்களில் ஆட்டினைப் பற்றிக் கூறியிருக்கும் பல்வேறு செய்திகளை இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

ஆட்டின் பெயர்களும் காரணங்களும்:

ஆடு என்னும் விலங்கினைக் குறிக்க இப்பெயர் உட்பட, யாடு, வருடை, தகர், மோத்தை, துரு, துரூஉ, துருவை, புருவை, ஏழகம், மேழகம், வெள்ளை, மறி, செச்சை, அப்பர், உதள், கிடாய், மை, விடை போன்ற பல்வேறு பெயர்களைச் சங்க இலக்கியங்களும் தொல்காப்பியமும் பதிவுசெய்துள்ளன. இனி இப்பெயர்களுக்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆடு = கொலை, அதாவது விருந்து, விழா, சடங்கு போன்ற எந்தவொரு நிகழ்வானாலும் மக்களால் பெரிதும் கொல்லப்பட்டு உணவாக உண்ணப்பட்ட / உண்ணப்படும் விலங்கு.
யாடு = ஆடு என்பதன் மரூஉச் சொல் - மேல் விளக்கமே பொருந்தும்.
வருடை = வரையாடு என்பதன் மரூஉச்சொல் - மலையில் வாழும் ஆட்டு வகை.
தகர் = தகர்ப்பது - எதிரியைத் தலையால் மோதித் தகர்க்கும் விலங்கு.
மோத்தை = மோதுவது - மேல்விளக்கமே பொருந்தும்.
அப்பர் = அப்புவது = தாக்குவது - மேல்விளக்கமே பொருந்தும்.
கிடாய் = கிட்டுவது = தாக்குவது - மேல்விளக்கமே பொருந்தும்..
துரு, துரூஉ, துருவை = இரும்புத்துரு போலச் செந்நிறத்தில் இருக்கும் செம்மறியாடு.
புருவை = துருவையின் மரூஉச் சொல் - மேல்விளக்கமே பொருந்தும்.
ஏழகம் = ஏழ் + அகம் = அறியாமை மிக்க விலங்கு, அதாவது தான் உடனே கொல்லப்படப்போவதைக் கூட அறியாமல் கொலைகாரன் தரும்  இலைதழையை ஆவலுடன் உண்கின்ற மடப்பம் மிக்க விலங்கு.
மேழகம் = ஏழகத்தின் மரூஉச்சொல் - மேல்விளக்கமே பொருந்தும்.
வெள்ளை = வெண்ணிறத்தில் இருக்கும் வெள்ளாட்டு வகை.
மறி = மறிக்கும் அதாவது துள்ளிக் குதிக்கும் இயல்பினையுடைய குட்டி விலங்கு.
செச்சை = செந்நிறம் கொண்ட வெள்ளாட்டு வகை.
உதள் = வாயின் இதழ்களாகிய உதடுகளால் உணவினை இறுகப் பற்றி இழுத்து உண்ணும் விலங்கு.
மை = கருமை நிறம் கொண்ட ஆடு.
விடை = விடைப்பது = சினம்கொண்டு எதிர்த்து நிற்கும் ஆண் விலங்கு.

இந்திய மொழிகளில் ஆட்டின் பெயர்களும் மூலமும்:

பிற இந்திய மாநில மொழிகளில் ஆட்டினைக் குறிக்கப் பயன்படும் பல்வேறு பெயர்களையும் அவை எந்தெந்த பழந்தமிழ்ச் சொற்களில் இருந்து எவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன என்பதையும் கீழே விளக்கமாகக் காணலாம்.

ஆடு >>> ஆடு`
தகர் >>> `கரா >>> பே^ரா >>> பா^ரு
தகர் >>> சக~ரா >>> சாக~ >>> சாக~ >>> சேலி
மேழகம் >>> மேக >>> மேகெ
மேழகம் >>> மேச~ >>> மேடா`, மேண்ட`
வருடை >>> பே^`
ஏழகம் >>> ஏட`.
ஏழகம் >>> ஏச~ >>> அச^
துருவை >>> உரப்^
துருவை >>> ச்`துப^, ச்`தப`
கிடாய் >>> கா~`
வெள்ளை >>> வல்கு~
மோத்தை >>> மேத்^

சொல் வடிவம்      பேசப்படும் மொழிகள்

ஆடு`                     மலையாளம், கன்னடம்
`கரா                    இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி`
பே^ரா                    வங்காளம்
பா^ரு                    பஞ்சாபி`
சக~ரா                    இந்தி
சாக~                     இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
சாக~                   செங்கிருதம்
சேலி                     மராத்தி, ஒரியா
மேக                     தெலுங்கு
மேகெ                    கன்னடம்
மேச~                    கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம்
மேடா`                   இந்தி
மேண்ட`                 மராத்தி, கு~ச்^ராத்தி, ஒரியா
பே^`                    இந்தி, பஞ்சாபி`, ஒரியா
ஏட`                    செங்கிருதம்
அச^                     மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம்.
உரப்^                   செங்கிருதம்
ச்`துப^ / ச்`தப`            செங்கிருதம், மலையாளம்
கா~`                   கு~ச்^ராத்தி
வல்கு~                  செங்கிருதம்
மேத்^                  செங்கிருதம்
          
மேலுள்ளவற்றைக் காணும்போது, தகர் என்ற தமிழ்ச்சொல்லே பெரிதும் திரிபுற்று பிற மாநில மொழிகளில் வழங்கப்படுவதை அறியலாம். தகர் என்ற தமிழ்ச்சொல்லானது ஆடு என்ற பொருளில் டக`ர் என்ற வடிவில் பலவிதமான ஆட்டுவகைகளைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

கி`மாலயன் டக`ர் - விலங்கியல் பெயர்: கெ`மிட்ராக~ச்` செ^ம்லாகி`கச்`
அரேபி`யன் டக`ர் - விலங்கியல் பெயர்: அரபி`ட்ராக~ச்` ^யகரி
நீல்கி~ரி டக`ர் - விலங்கியல் பெயர்: நீல்கி~ரிட்ராக~ச்` கை`லோக்ரியச்`

அதுமட்டுமின்றி, ஆடு எனும் பொருளைத் தருவதான ட்ராகோ~ச்` என்ற கிரேக்கச்சொல்லில் கூட தகர் என்ற தமிழ்ச்சொல்லின் தாக்கம் இருப்பதனைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக, சண்டை என்று வந்தால் எதிரியைத் தாக்குவதற்காகத் துள்ளிக் குதித்துத் தனது தலையினால் எதிரியை மோதித் தாக்குவது ஆட்டின் குணமாகும். இவ்வாறு தாக்கும் செயலையும் கூட 'டக்கர்' என்ற சொல்லால் இந்தியில் குறிப்பிடுவது தகர் என்ற தமிழ்ச்சொல்லின் தாக்கத்தினை நன்கு விளக்குவதாக உள்ளது.

சங்க இலக்கியத்தில் ஆடு:

இலைதழைகளை உண்டுவாழும் உயிரினமான ஆடானது போ`விடே` என்ற விலங்குக் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். பன்னெடுங்காலமாக மனிதர்களால் வளர்க்கப்பட்டு வந்த பல்வேறு உயிரினங்களில் ஆடுகளும் ஒன்றாகும். சங்க காலத்தில் ஆடுகளுடன், நாய், கோழி, அன்னம், பன்றி ஆகியவற்றையும் வீடுகளில் வளர்த்து வந்தனர். சங்க இலக்கியங்கள் வெள்ளாடு, மலையாடு, செம்மறி ஆடு என்று மூன்றுவகையான ஆடுகளைப் பற்றிப் பேசுகின்றன. இவற்றில் வெள்ளாடு என்பது பெயருக்கேற்றாற் போல வெண்ணிறத்தில் மட்டும் இல்லாமல் கருப்பு, சிவப்பு நிறங்களிலும் இருக்கும். ஆடுகளை வளர்ப்பதையே தொழிலாகக் கொண்ட மக்களை இடைமகன் என்றும் இடையன் என்றும் பூழியர் என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது. இம்மக்கள், தங்களுடைய ஆடுகளின் பாலைக் கொடுத்துவிட்டு நெல்வாங்கிச் சென்ற செய்தியினையும் கூறுகிறது. மிகவும் இளையதான வயிறு ஒட்டிய வெள்ளாட்டுக் குட்டியின் வயிற்றினை உள்ளே எதுவும் இல்லாத அவரைக்காயின் வெள்ளைத் தோலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. மலையாடுகளைப் பற்றிக் கூறும்போது, மலைகளில் வாழும் ஆடுகளாகிய இவை மிக்க வலிமை கொண்டவை என்றும் பாய்ந்து தாக்குவதில் வல்லவை என்றும் கூறுகிறது. கருப்புநிறத்தில் உடலெங்கும் மயிரைக் கொண்டனவாய் இந்த ஆடுகள் ஆங்காங்கே பரந்து மேயும்போது பார்ப்பதற்குக் கரடிகளைப் போலவே தோன்றும் என்றும் கூறுகிறது. மலையாடுகளின் குட்டியைப் பிடித்துவந்து வீடுகளில் வளர்ப்பதும் உண்டு என்ற செய்தியைக் காணமுடிகிறது. மலையாடுகளின் நீண்டு சுருண்டு வளைந்த கொம்புகளை வழிப்பறி செய்யும் கொடியவர்களின் சுருண்ட தலைமயிருடன் ஒப்பிட்டுக் கூறுகிறது. செம்மறி ஆடுகளைப் பற்றிக் கூறும்போது, எண்ணை நீவப்படாத சிறுவர்களின் செம்பட்டைத் தலைமயிருடன் செம்மறி ஆடுகளின் உடல்மயிரை ஒப்பிட்டுக் கூறுகிறது. சங்க இலக்கியங்கள் ஆடுகளைப் பற்றிக் கூறியிருக்கும் பல்வேறு செய்திகளைக் கீழ்க்காணும் தலைப்புக்களின் கீழ் விளக்கமாகக் கானலாம்.

1. வெள்ளாடு
2. மலையாடு
3. செம்மறியாடு

1. வெள்ளாடு:

இதன் விலங்கியல் பெயர் கப்ரா ஏகா~க்~ரச்` கி`ர்கச்` ஆகும். வீடுகளில் மக்களால் விரும்பி வளர்க்கப்படும் ஆட்டுவகைகளில் இதுவே முதன்மையானது. கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் இருக்கும். வெள்ளை நிறத்தில் இருக்கும் ஆட்டினை வெள்ளை என்றும் கருப்புநிறத்தில் இருப்பதனை மை என்றும் சிவப்பு நிறத்தில் இருப்பதனை செச்சை என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு தலை வெள்ளை தோடு பரந்து அன்ன - குறு 163
வாயில் மாடம்தொறும் மை விடை வீழ்ப்ப - புறம். 33
வெள்ளை வெள்யாட்டு செச்சை போல - புறம் 286

சங்ககாலத் தமிழர்கள் தமது வீடுகளில் வெள்ளாடுகளை வளர்த்தனர். இவற்றின் பாதுகாப்புக்காகக் கூடவே நாய்களையும் வளர்த்தனர். நாய்களும் ஆடுகளும் நட்புடன் விளையாடியவாறு துள்ளிக்குதித்து வீட்டின் முன்னால் இருந்த பொதிமூட்டைகளின் மேல் ஏறிநின்ற காட்சியானது மலைக்குன்றுகளின்மேல் கூட்டமாக ஏறிநிற்கும் மலையாடுகளைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பட்டினப்பாலை வரிகள் கூறுகின்றன.

..... பொதி மூடை போர் ஏறி
மழை ஆடு சிமைய மால் வரை கவாஅன்
வரை ஆடு வருடை தோற்றம் போல
கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை
ஏழக தகரோடு உகளும் முன்றில் - பட்.139

ஆடுகள் வளர்ப்பதையே தொழிலாகக் கொண்ட மக்களை இடைமகன், இடையன் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. கீழே சில பாடல்கள் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடு உடை இடைமகன் .... - நற்.266
துருவின் தோடு தலைப்பெயர்க்கும் வன்கை இடையன் - நற். 169

வெள்ளாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு அவற்றின் பாலைக் கறந்துகொண்டு வந்து பிற வீடுகளில் கொடுத்துவிட்டுப் பாலுக்குப் பதிலாக நெல் முதலானவற்றை இடையர்கள் வாங்கிச்சென்ற செய்தியினைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் கூறுகிறது.

...பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடுஉடை இடைமகன் .... - குறு.221

மிகவும் இளையதான வெள்ளாட்டுக் குட்டியின் வயிறு காலியாக இருந்ததால் அதனை உள்ளே ஒன்றுமில்லாத அவரையின் வெண்நிறத் தோலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

பூ கொடி அவரை பொய் அதள் அன்ன
உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி .... - அகம். 104

2. மலையாடு:

இதன் விலங்கியல் பெயர் நீல்கி~ரிட்ராக~ச்` கை`லோக்ரியச்` ஆகும். தமிழ்நாட்டில் நீலகிரி மலைப் பகுதிகளில் அதிகம் காணப்படுவதால் நீலகிரி இபெ`க்ச்` என்றும் நீலகிரித் தக`ர் என்றும் இவை அழைக்கப்படுகின்றன. வரையாடு என்றும் அழைக்கப்படுவதான இந்த மலையாடுகளை வருடை என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவ்வகை ஆடுகளின் கால்கள் குட்டையாக இருக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சங்கப்பாடல் குறிப்பிடுகிறது.

நெடு வரை மிசையது குறும் கால் வருடை ... - ஐங்கு. 287

கால்கள் குட்டையாக இருந்தாலும் வருடை ஆடுகளின் தலை அதிக வலிமை கொண்டதாகும் என்று கீழ்ப்பாடல் கூறுகிறது.

வரை வாழ் வருடை வன் தலை மா தகர்  - மலை 503

மலைக்காடுகளில் வளரும் இயல்புடைய இவ்வகை ஆடுகள் போர்க்குணம் மிக்கவை. எதிரி விலங்குகளிடம் இருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ள எதிரியின்மேல் துணிந்து பாய்ந்து தனது வலிமைமிக்க தலையினால் மோதித் தாக்கும் இயல்புடையவை. மலையாடுகளின் பாய்ந்துதாக்கும் போர்க்குணம் பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:

போர் உடை வருடையும் பாயா - நற். 359

வரையாடுகளின் கொம்பினைப் பற்றிக் கூறுமிடத்து, அது நீண்டு வளர்ந்து பல வளைவுகள் / சுற்றுக்களைக் கொண்டதாக இருக்கும். இந்நிலையில் இந்த கொம்புகள் பார்ப்பதற்குக் கொலைத்தொழில் புரியும் வேடர்களின் நீண்டுவளர்ந்த பல வளைவுகள் / சுருள்களையுடையத் திரண்ட தலைமுடியினைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

.... தகர் மருப்பு ஏய்ப்ப சுற்றுபு சுரிந்த
சுவல் மாய் பித்தை செம் கண் மழவர் - அக.101

சங்ககாலத் தமிழர்கள் மலையாட்டின் குட்டிகளைக் கொணர்ந்து வீடுகளிலும் வளர்த்தனர். இதைப்பற்றிய குறிப்பு கீழ்க்காணும் பாடலில் உள்ளது.

வழை வளர் சாரல் வருடை நன் மான்
குழவி வளர்ப்பவர் போல பாராட்டி .... - கலி. 50

மலையாடுகள் பரந்து மேயும்போது அவை பார்ப்பதற்குக் கரடிகளைப் போலவே தோன்றும் என்று கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன. இதிலிருந்து, மலையாடுகளின் சில வகைகளானவை கரடிகளைப் போலவே கருமை நிறத்தில் உடலெங்கும் சடைபோல நீண்ட மயிர் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் - அகம். 331

3. செம்மறியாடு:

இதன் விலங்கியல் பெயர் ஓவிச்` ஏரிச்` ஆகும். இரும்பின் துருவினைப் போலப் பழுப்பு / செந்நிறத்தில் உடலெங்கும் மயிர் நிறைந்து இருப்பதால் செம்மறியாட்டினைத் துரு, துரூஉ, துருவை, புருவை என்றெல்லாம் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சரியாக எண்ணைநீவிப் பராமரிக்கப் படாவிட்டால் தலைமயிரானது தனது கருநிறம் இழந்து செம்பட்டை / பழுப்பு நிறம் கொள்வதனை நன்கு அறிவோம். இந்த பழுப்பு நிறத் தலைமயிரினைப் புன்மயிர் என்று குறிப்பிடும் கீழக்காணும் சங்கப் பாடல்வரியானது அதனைச் செம்மறியாட்டின் உடலின்மேல் இருக்கும் பழுப்புநிற மயிருடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

துருவின் அன்ன புன் தலை மகாரோடு - மலை.217

சங்ககாலத்தில் வாழ்ந்த இடையர்கள் வெள்ளாடுகளை மட்டுமின்றி செம்மறியாடுகளையும் சேர்த்தே வளர்த்து வந்தனர் என்பதைக் கீழ்க்காணும் பாடல்வரிகளின் மூலம் அறிகிறோம்.

கொடு முக துருவையொடு வெள்ளை சேக்கும் - பெரும். 154
துருவின் தோடு தலைப்பெயர்க்கும் வன்கை இடையன் - நற். 169
மறி துரூஉ தொகுத்த பறி புற இடையன் - அகம்.94

செம்மறியாடுகளை மேய்ச்சலுக்குக் கூட்டிச் சென்ற அந்த இடையன் மாலையில் வீடு திரும்பும்வழியில் திடீரென கார்மேகங்கள் ஒன்றுகூடி இருண்டு விட்டது. சட் சடார் என்று இடியும் மின்னலும் மாறிமாறித் தோன்றிப் பெருமழை பொழியத் துவங்கியது. மழையில் நன்றாக மாட்டிக்கொண்டதால் ஓரிடத்தில் தங்கிவிட்ட அந்த இடையன் திண்ணிய உறிக்கயிற்றில் கட்டிய பானையைத் தனது தோளில் தொங்கவிட்டிருந்தான். தனது தலைக்குமேல் தோலினைப் போர்வையாகப் போர்த்தியிருந்தான். நள்ளிரவாகி விட்டபடியால் ஆடுகளுக்கு வழிகாட்ட வேண்டியும் அவற்றின் அச்சத்தைப் போக்கவேண்டியும் முனையில் தீமூட்டிய கோலினை ஒரு கையில் பிடித்தவாறும் இன்னொரு கையில் பிடித்திருந்த வலிய தண்டினை மண்ணில் ஊன்றியவாறும் சென்று கொண்டிருந்தான். அப்போது.... வானம் இன்னும் லேசாகத் தூறிக்கொண்டிருக்க, அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு ஆடு திசைமாறி தன் பக்கம் வராதா? என்று குறுநரி ஒன்று காத்திருந்தது. இதையறிந்த இடையன் தன் வாயினால் நீண்ட சீழ்க்கை ஒலியெழுப்ப, அதைக்கேட்டு அஞ்சிய நரியானது முட்புதருக்குள் புகுந்து ஒளிந்து கொண்ட காட்சியினை அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவருகின்றன கீழ்க்காணும் அகப்பாடல் வரிகள்.

இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து
இகு பெயல் அழி துளி தலைஇ வானம்
பருவம் செய்த பானாள் கங்குல்
ஆடு தலை துருவின் தோடு ஏமார்ப்ப
கடைக்கோல் சிறு தீ அடைய மாட்டி
திண் கால் உறியன் பானையன் அதளன்
நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்ப
தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன்
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ
முள் உடை குறும் தூறு இரிய போகும்
தண் நறு புறவினதுவே .... - அகம். 274

முடிவுரை:

சங்க இலக்கியத்தில் ஆடு பற்றி பல தகவல்களை மேலே கண்டோம். இவைதவிர இன்னும் பல செய்திகளும் தெரியவருகின்றன. பூழியர் என்றால் சேரர் என்றும் பாண்டியர் என்றும் தமிழ் அகராதிகள் பொருள் கூறுகின்றன. ஆனால், பூழியர் என்னும் சொல்லுடன் ஆடுகளைத் தொடர்புறுத்திக் கீழ்க்காணும் இரண்டு பாடல்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன.

பூழியர் சிறுதலை வெள்ளை தோடு பரந்து அன்ன - குறு 163
பூழியர் உருவ துருவின் நாள் மேயல் ஆரும் - நற் 192

இப்பாடல்களைப் பார்க்கும்போது பூழியர் என்பவர் ஆடுகளை மேய்க்கும் ஒருவகை மக்கள் என்பதையும் இவர்கள் செம்மறி ஆடுகளைப் போல செம்பட்டை / பழுப்பு நிறத்தில் இருந்தார்கள் என்பதையும் அறிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமின்றி, வெள்ளைநிற வெள்ளாடு, பழுப்புநிறச் செம்மறியாடு மற்றும் கருப்புநிற மலையாடுகள் கலந்த கூட்டத்தினைப் பார்த்தபோது நெல் விற்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த பலவண்ண நெற்குவியல்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதையும் பார்க்கலாம்.

..... பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன
தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇ
கல்லென் கடத்திடை கடலின் இரைக்கும்
பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே - மலை. 415