இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலக்கணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 நவம்பர், 2025

சங்கத் தமிழில் அகர எதிர்முறை முன்னொட்டு

 சங்கத் தமிழில் அகர எதிர்முறை முன்னொட்டு



முன்னுரை:


ஒரு சொல்லுக்கு முன்னால் அகர எழுத்தினை ஒட்டாக வைத்து எதிர்முறைப் பொருளில் வழங்கும் முறையானது தமிழில் இல்லை என்றும் வடமொழியில் தோன்றிய முறையே அது என்றும் தமிழ் ஆய்வாளர்களால் இதுவரை கருதப்பட்டு வந்தது. தற்போது நடந்து முடிந்த ஆய்வு முடிவுகள் அக் கருத்துக்களைப் பொய்யாக்கித் தகர்த்தெறிந்துள்ளன. இன்னும் சொல்லப் போனால், வடமொழிக்கு வெகு காலத்திற்கு முன்னரே இந்த முறையானது தமிழில் தோன்றி இருக்க வேண்டும் என்பதே இக் கட்டுரையின் துணிபாகும்.  இதைப் பற்றி விளக்கமாகக் கீழே காணலாம்.

எதிர்முறை முன்னொட்டு:

எதிர்முறை முன்னொட்டு என்பது எதிர்முறைப் பொருளில் ஒரு சொல்லுக்கு முன்னால் ஒட்டாகப் பயன்படும் எழுத்து அல்லது சொல் ஆகும். ஆங்கிலம் முதலான ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் பலவிதமான எதிர்முறை முன்னொட்டுக்கள் உள்ளன. தமிழில் அல், இல் என்ற இரண்டு எதிர்முறை முன்னொட்டுக்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. சான்றுக்குச் சிலவற்றைக் கீழே காணலாம்.

a + sexual = asexual
il + legal = illegal
அல் + திணை = அஃறிணை
அல் + மொழி = அன்மொழி
இல் + ஆன் = இல்லான்
இல் + மை = இன்மை

தமிழில் மேற்காணும் இரண்டு முன்னொட்டுகளைத் தவிர அ  என்னும் எழுத்தும் எதிர்முறை முன்னொட்டாக அறியப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த முன்னொட்டு சங்க இலக்கியப் பாடல்களில் அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளது. 

சங்க இலக்கியத்தில் அகர எதிர்முறை முன்னொட்டு:

தமிழ் இலக்கியங்களிலே காலத்தால் முற்பட்ட சங்க இலக்கியங்களில் அகரத்தை முன்னொட்டாகக் கொண்ட சொற்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன என்பது புதிய செய்தி. அதிலும் அவை எதிர்முறைப் பொருளைக் குறிக்கவே கையாளப் பட்டுள்ளன என்பது வியப்பூட்டும் செய்தி.  அந்த சொற்கள் எவை எவை என்று முதலில் காணலாம்.

  • அகளம்
  • அச்சிரம்
  • அசோகம்
  • அந்தரம்
  • அமரர்
  • அமிர்தம்
  • அமிர்து
  • அவலம்
  • அவுணர்
  • அனந்தர்
  • அனந்தல்


மேற்காணும் சொற்கள் அனைத்திலும் அகர முன்னொட்டு எவ்வாறு எதிர்மறைப் பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை அறிய இச் சொற்களின் பிறப்பியல் முறைகளைக் காண வேண்டும். இச் சொற்களின் பிறப்பியல் முறைகளை அவற்றின் பொருட்கள் மற்றும் இலக்கியப் பயன்பாட்டு இடங்களுடன் வரிசையாகக் கீழே காணலாம்.

1. அகளம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + களம் (=கழுத்து, மேடு) = அகளம் = கழுத்தில்லாமல் குழி உடையது அதாவது கழுத்தில்லாத பாத்திர வகைகள்.
பொருளியல்: வாளி, அண்டா, தொட்டி போன்ற பாத்திரங்கள், யாழின் பத்தர் என்னும் கழுத்தற்ற பானை போன்ற உறுப்பு.
வழக்கியல்: சிறுபாணாற்றுப்படை - 224, 225, மலைப்படுகடாம் - 104.

2. அச்சிரம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + சுரம் (=வெப்பம்) = அச்சுரம் > அச்சிரம் = வெப்பமற்ற நிலை.
பொருளியல்:
குளிர்ச்சி, பனி, பனிக்காலம்.
வழக்கியல்: பரிபாடல் - 18, ஐங்குறுநூறு - 223.

3. அசோகம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + சோகம் (=வாட்டம்) = அசோகம் = வாட்டமின்மை, செழிப்பானது.
பொருளியல்: கவலையின்மை, எப்போதும் பசுமையான இலைகளைக் கொண்ட மரவகைகள், பிண்டி, வாழை.
வழக்கியல்: கலித்தொகை - 57.

4. அந்தரம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + தரம் (=பூமி, கீழ்ப்பகுதி) = அந்தரம் = கீழ்ப்பகுதி அற்றது.
பொருளியல்: மேலிடம், வெளி, ஆகாயம், தேவலோகம்.
வழக்கியல்: திருமுருகாற்றுப்படை - 119, 174, ஐங்குறுநூறு - 76, பரிபாடல் - 24, அகநானூறு - 68, புறநானூறு - 392, பதிற்றுப்பத்து - 51.

5. அமரர்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மரி (=இற) + அர் (விகுதி) = அமரர் = இறப்பு இல்லாதவர்.
பொருளியல்: வானோர், தேவர்.
வழக்கியல்: பட்டினப்பாலை - 184, 200, பரிபாடல் - 1, 2, 3, 5, 8, 11, கலித்தொகை - 108, புறநானூறு - 0, 55, 99.

6. அமிர்தம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மிருது (=இறப்பு) + அம் (விகுதி) = அமிருதம் > அமிர்தம் = இறவாமையைத் தருவது, மரணத்தை ஒத்தி வைப்பது.
பொருளியல்: நல்லுணவு, இனிய உணவு.
வழக்கியல்: பரிபாடல் - 2, 8.

7. அமிர்து:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + மிருது (=இறப்பு) = அமிருது > அமிர்து = இறவாமையைத் தருவது, மரணத்தை ஒத்தி வைப்பது.
பொருளியல்: நல்லுணவு, இனிய உணவு.
வழக்கியல்: மதுரைக்காஞ்சி - 532, பதிற்றுப்பத்து - 16, பரிபாடல் - 3,8,12.

8. அவலம்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + வலம் (=வெற்றி, வலிமை) = அவலம் = வெற்றி மற்றும் வலிமையின் எதிர்.
பொருளியல்: தோல்வி, வீண், பலவீனம், கேடு, நோய்.
வழக்கியல்: நற்றிணை - 58, குறுந்தொகை - 159, கலித்தொகை - 28,103, அகநானூறு - 285, புறநானூறு - 210 மற்றும் பலப்பல.

9. அவுணர்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + ஒண்மை (=அழகு, நற்செயல், நல்லறிவு, ஒழுக்கம்) + அர் (விகுதி) = அவொணர் > அவுணர் = அழகும் நற்செயலும் நல்லறிவும் ஒழுக்கமும் அற்றவர்.
பொருளியல்: அரக்கர், அசுரர்.
வழக்கியல்: திருமுருகாற்றுப்படை - 59, மதுரைக்காஞ்சி - 590, குறுந்தொகை - 1, பதிற்றுப்பத்து - 11, பரிபாடல் - 3,5,8, புறநானூறு - 174, கலித்தொகை - 2.

10. அனந்தர்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + நந்தம் (=முயற்சி, ஊக்கம்) + அர் (விகுதி) = அனந்தர் = முயற்சியின்மை, ஊக்கமின்மை.
பொருளியல்: சோம்பல், மந்தம், மயக்கம், தூக்கம்.
வழக்கியல்: பொருநராற்றுப்படை - 94, அகநானூறு - 37, புறநானூறு - 316.

11. அனந்தல்:

பிறப்பியல்: அ (எதிர்முறை ஒட்டு) + நந்தம் (=முயற்சி, ஊக்கம்) + அல் (விகுதி) = அனந்தல் = முயற்சியின்மை, ஊக்கமின்மை.
பொருளியல்: சோம்பல், மந்தம், மயக்கம், தூக்கம். 
வழக்கியல்: மலைப்படுகடாம் - 173, புறநானூறு - 62.

முடிவுரை:

மேலே கண்ட சொற்களுக்கான பிறப்பியல் முறைகளில் இருந்து அவை அனைத்தும் அகர முன்னொட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டவையே என்றும் அவை யாவும் எதிர்முறைப் பொருளில் அமைந்தவையே என்றும் அறியலாம். ஆக, அகரத்தை முன்னொட்டாகக் கொண்டு உருவாக்கிய சொல்லை எதிர்முறைப் பொருளில் வழங்கும் வழக்கம் சங்ககாலம் அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து நடைமுறையே அன்றி வடமொழிக்கானது அல்ல என்று தெளியலாம். எனவே இனி கீழ்வருவன போன்ற பல சொற்களை வடமொழியோ என்று சந்தேகிக்காமல் தமிழெனவே துணிந்து பயன்படுத்தலாம்.

அ + சாதாரணம் = அசாதாரணம்
அ + பூர்வம் = அபூர்வம்
அ + பயம் = அபயம் 

இது போன்ற ஏராளமான சொற்களின் பிறப்பியல் முறைகளை அவற்றின் பொருட்கள் மற்றும் மேற்கோள் பாடல்களுடன் அறிந்துகொள்ள கீழ்க்காணும் இணைய தளம் உதவுகிறது. குறிப்பாக ஒரு சொல் தமிழா சமக்கிருதமா என்று தெளிந்தகொள்ள கீழ்க்காணும் தளத்தைப் பயன்படுத்தலாம். வாழ்க தமிழ்!. 

pirappiyal.kesug.com




சனி, 8 ஜனவரி, 2022

சங்க இலக்கியமும் சொல்லப்படாத இலக்கணமும்

 சங்க இலக்கியமும் 

சொல்லப்படாத 

இலக்கணமும்

 

 

முன்னுரை:

தமிழ் என்று சொன்னாலே வலுவான மொழி என்று தான் ஆன்றோர் பொருள் கூறுவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள சொற்பிறப்பியல் முறையில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.

தா (=வலிமை, படை) + வீழ் (=சொல், மொழி) = தாவீழ் >>> தமிழ் = வலுவாகப் படைக்கப்பட்ட மொழி. 

ஒரு மொழியின் பெயரே அதன் வலுவான தன்மையை அடிப்படையாகக் கொண்டு  அமைக்கப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மொழியாகத் தான் இருக்கும். ஆம், தொன்றுதொட்டு இன்றுவரை சிதைவின்றிச் செழித்து வளர்ந்துவரும் வலுவான மொழியாம் நம் அன்னைத் தமிழுக்குக் கிடைத்துள்ள “செம்மொழி” என்ற சிறப்பினைத் தமிழ் அன்னையின் மணிமுடியில் பதித்த வைரம் எனலாம். தமிழின் இந்த செம்மொழிச் சிறப்புக்குக் காரணமாய் அமைந்தவை சங்க இலக்கியங்களே என்றால் மிகையல்ல. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதான சங்க இலக்கியங்கள் ஒரு வலுவான இலக்கணக் கட்டமைப்புடன் படைக்கப்பட்டவை என்பதால்தான் பல்லாயிரம் காலங்களைத் தாண்டியும் இன்றுவரை பல சங்கச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பொதுவாக, எந்தவொரு மொழியிலும் இரண்டு சொற்களைப் புணர்த்திப் புதிய சொல்லை உருவாக்குவதற்காக ஒரு ஒழுங்கான கட்டமைப்பு அதாவது புணர்ச்சி விதி கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் அம் மொழியில் புதிய சொற்களை உருவாக்கித் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அவ்வகையில் சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களில் உயிர் முன் உயிர்  புணர்ச்சியால் உண்டான விளைவுகளைப் பற்றி மட்டும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

தொல்காப்பியத்தில் உயிர் முன் உயிர் புணர்ச்சி விதிகள்:

தமிழின் இலக்கணத்தைக் கூறும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் ஆகும். ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற தொல்காப்பியத்தில் புணர்ச்சி விதிகளைப் பற்றி எழுத்ததிகாரப் புணரியல் காண்டம் விரிவாகக் கூறுகிறது. அவற்றுள் உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றிக் கூறும் முதல் விதியைக் கீழே காணலாம்.

உயிர் இறு சொல்முன் உயிர் வரு வழியும்

…………………………………………………………………………………………………

நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று

ஆயீர் இயல புணர்நிலை சுட்டே. – பா. 5

மேற்பாடலின் பொருளானது: உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் உயிர், மெய் முன் மெய் என நான்கு வகையான புணர்ச்சிகள் உண்டு. இப் புணர்ச்சிகளில் முதலில் வரும் சொல்லை நிறுத்த சொல் என்றும் அதனை அடுத்து வருவதைக் குறித்துவரு கிளவி என்றும் இரண்டு வகையாகச் சுட்டுவர் என்பதாகும்..

நான்கு வகையான எழுத்துப் புணர்ச்சிகளில் உயிர் முன் உயிரும் உண்டு என்று மட்டுமே மேற்பாடலில் தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் அவை எவ்வாறு புணரும் என்று எந்த ஒரு பாடலிலும் விரிவாகக் கூறவில்லை. மாறாக, உயிர் முன் உயிர் புணரும்போது உடம்படு மெய்கள் தோன்றுவதைப் பற்றிக் கீழ்க்காணும் ஒரேயொரு பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே

உடம்படு மெய்யின் உருபு கொளல் வரையார் – பா. 38

மேற்காணும் நூற்பாவின் பொருளானது, உயிர் வந்து புணர்கின்ற எல்லாச் சொற்களிலும் உடம்படு மெய்யை உருவாக்கிக் கொளல் வேண்டும் என்று வரையறை இல்லை என்பதாகும். இதிலிருந்து, உயிர் முன் உயிர் வரும் புணர்ச்சியிலும் உடம்படு மெய்யை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, உடம்படு மெய்கள் இன்னின்ன என்ற வரையறை கூட தொல்காப்பியரின் காலத்தில் இல்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம். காரணம், தொல்காப்பியரின் காலத்தில் இருந்த இலக்கியங்களில் பல சொற்கள் உடம்படு மெய்யின்றிப் புணர்த்தி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் உடம்படுமெய் என்ற கருத்தியல் இருந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.

நன்னூலில் உயிர் முன் உயிர்ப் புணர்ச்சி விதிகள்:

தொல்காப்பியருக்குப் பின்னர் பல ஆசிரியர்களால் பல இலக்கண நூல்கள் தமிழுக்கு இயற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த நூல்களுள் காலத்தால் பிற்பட்டது ஆயினும் பவணந்தியாரின் நன்னூலே எழுத்துக்களின் புணர்ச்சி விதிகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளது. எனவே நன்னூல் விதிகளைப் பற்றி இங்கே காணலாம்.

உயிர் முன் உயிர் வரும் புணர்ச்சியில் உடம்படுமெய் தோன்றலாம் அல்லது தோன்றாமலும் போகலாம் என்றும் உடம்படுமெய்கள் இன்னின்ன என்ற வரையறை இல்லை என்றும் தொல்காப்பியர் கூறியிருப்பதை மேலே கண்டோம். தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தியாரோ தொல்காப்பியரின் கருத்தில் இருந்து மாறுபட்டுப் புதிய விதிகளைப் படைக்கிறார். உயிர் முன் உயிர் வரும் புணர்ச்சியில் உடம்படுமெய் கட்டாயம் தோன்றும் என்றும் அவை இன்னின்ன மெய்களே என்றும் புதிய கருத்தினைப் புகுத்துகிறார். அதைப் பற்றிக் கூறுகின்ற நன்னூல் விதிகளைக் கீழே காணலாம்.

இ ஈ ஐ வழி யவ்வும்

ஏனை உயிர் வழி வவ்வும்

ஏ முன் இவ் இருமையும்

உயிர்வரின் உடம்படுமெய் என்று ஆகும் – பா. 162

மேற்காணும் பாடலின் பொருளானது: நிறுத்த சொல்லின் இறுதியில் இ, ஈ, ஐ என்ற உயிர் எழுத்துக்கள் வரும்போது யகரமும், ஏ என்ற உயிர் எழுத்து வரும்போது யகரம் அல்லது வகரமும், ஏனைய உயிர் எழுத்துக்களான அ, ஆ, உ, ஊ, ஓ ஆகியன வரும்போது வகரமும் உடம்படு மெய்களாகத் தோன்றும் என்பதாகும். நிறுத்த சொல்லின் இறுதியில் உகரம் வரும்போது உடம்படுமெய்யாக வகரம் தோன்றும் என்று மேற்காணும் நூற்பாவில் பொதுவிதியாகக் கூறிய நன்னூலார், உகர ஈற்றுப் புணர்ச்சிக்கு மட்டும் சிறப்புவிதி ஒன்றைக் கீழ்க்காணும் நூற்பாவில் படைக்கிறார்.

உயிர் வரின் உ குறள் மெய்விட்டு ஓடும் – பா. 164

மேற்பாடலின் பொருளானது: நிறுத்த சொல்லின் ஈற்றில் வரும் உகர உயிரானது, வருமொழியின் முதலில் உயிர் எழுத்து வரும்போது, தான் சேர்ந்துள்ள மெய்யெழுத்தை விட்டு நீங்கும் என்பதாகும்.

சங்க இலக்கியமும் உயிர் முன் உயிர்ப் புணர்ச்சியும்:

சங்க இலக்கியச் சொற்களில் உயிர் முன் உயிர்ப் புணர்ச்சியால் உண்டான விளைவுகளை அறிவதே இக் கட்டுரையின் நோக்கம் என்று முன்னர் கண்டோம். இதனை அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் முறையினை முதலில் அறிய வேண்டும். எனவே, கீழ்க்காணும் சில சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் முறையைக் காண்பதன் மூலம் அவற்றில் என்னென்ன உயிர் முன் உயிர் புணர்ச்சி விதிகள் பின்பற்றப் பட்டுள்ளன என்பதை எளிதில் இனங்காண முடியும்.

அரங்கு, கட்டில், அம்பணம், ஆம்பல், இறும்பு, உடம்பு, உலகம், எருத்தம், கட்டளை, கட்டூர், கராம், குஞ்சரம், சுணங்கு, ஞாயிறு, திங்கள், ஞெண்டு, சுருங்கை.

இதுவரை உருவாக்கப்பட்டுள்ள சொற்பிறப்பியல் அகராதிகள் எவற்றிலும் மேற்காணும் சங்ககாலச் சொற்களுக்கான முழுமையான விளக்கங்கள் காணப்படவில்லை. சிலவற்றில் மட்டும் வேர்ச்சொல்லைக் கொண்டு விளக்குவதற்கான முயற்சி செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் அந்த விளக்கங்கள் பொருத்தமாக அமையவில்லை என்பதும் சொல் முழுவதற்கும் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். தொடர்ந்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சொற்பிறப்பு நெறிமுறைகள் தொகுத்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சில சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல்:

Ø  அரங்கு = மேடை [ ஆர் (=இடம், பேசு, கட்டு) + அகை (=உயர், வகு) + உ = அரக்கு >>> அரங்கு = பேசுவதற்காக உயரமாக வகுத்துக் கட்டப்படும் இடம் ].

Ø  கட்டில் = படுக்கை [ கடி (=காவல், கண்விழிப்பு, நீக்கு, அடங்கு) + இல் (=வீடு, இடம்) = கட்டில் = கண்விழிப்பை நீக்கி வீட்டில் அடங்கும் இடம்]

Ø  அம்பணம் = அளவுப் பாத்திரம் [ ஆம்பி (=கொள்கலம்) + எண் (=அள) + அம் = அம்பெணம் >>> அம்பணம் = அளப்பதற்கான கொள்கலம் ]

Ø  ஆம்பல் = ஒரு மலர் [ ஆவி (=வாய்திற, மலர், நீர்நிலை) + அல் (=இரவு) = அவ்வல் >>> ஆம்பல் = நீர்நிலையில் இரவில் மலர்வது ]

Ø  இறும்பு = மலை [ இறை (=உயரம், இடம்) + உப்பு (=பெரு) = இறுப்பு >>> இறும்பு = உயர்ந்து பெருத்த இடம் ]

Ø  உடம்பு = உடல் [ உறை (=தங்குமிடம்) + ஆவி (=உயிர்) + உ = உறாவ்வு >>> உடாப்பு >>> உடம்பு = உயிர்க்குத் தங்கும் இடமாவது ]

Ø  உலகம் = பூமி [ ஒல் (=பொறு, சும) + அகம் (=வீடு, உயிர்) = ஒலகம் >>> உலகம் = உயிர்களைச் சுமக்கும் வீடு. ].

Ø  எருத்தம் = கழுத்து [ இறை (=உயரம், தலை) + உத்து (=பொருத்து) + அம் = இறுத்தம் >>> எருத்தம் = உயரத்தில் தலையைப் பொருத்துவது ]

Ø  கட்டளை = பொன்னுரை கல் [ கறை (=கருமை, கல்) + அள (=அறி, கல, உரசு) + ஐ = கற்றளை >>> கட்டளை = உரசி அறிவதற்கான கருநிறக் கல்.]

Ø  கட்டூர் = பாசறை [ கடி (=பகை, அழி, காவல், விரைவு, கட்டு) + ஊர் (=பெரிய இடம்) = கட்டூர் = பகையை அழிக்க விரைந்து கட்டிய காவலுடைய பெரிய இடம் ]

Ø  கராம் = முதலை [ கர (=மறை, கவர், விடாதிரு, கொல்) + அம் (=நீர்) = கரம் >>> கராம் = நீரில் மறைந்திருந்து கவர்ந்து விடாதிருந்து கொல்வது ]

Ø  குஞ்சரம் = யானை [ குழி (=வயிறு) + ஆர் (=நிறை, உண், பெரு) + அம் = குழாரம் >>> குசாரம் >>> குஞ்சரம் = நிறைய உண்கின்ற பெரிய வயிற்றைக் கொண்டது ]

Ø  சுணங்கு = பூந்தாது [ சினை (=பூ, கருத்தரி, முட்டை) + அஃகு (=சுருங்கு, நுணுகு) = சினஃகு >>> சுணங்கு = பூக்களைக் கருத்தரிக்கச் செய்யும் நுண்ணிய முட்டைகள் ]

Ø  ஞாயிறு = கதிரவன் [ ஆய் (=நீக்கு) + இர (=இரவு, இருள்) + உ = ஆயிரு >>> ஞாயிறு = இருளை நீக்குபவன் ]

Ø  திங்கள் = சந்திரன் [ தீம் (=இனிமை) + கால் (=இருள், ஒளி, வெளிப்படுத்து) = தீங்கால் >>> திங்கள் = இருளில் இனிமையான ஒளியை வெளிப்படுத்துவது ]

Ø  ஞெண்டு = நண்டு [ இறை (=தலை, உயரம், மேல், கண், சிறுமை) + உ = இற்று >>> எட்டு >>> ஞெண்டு = தலைக்கு மேலே சிறிய கண்களைக் கொண்டது ]

Ø  சுருங்கை = சுரங்கம் [ சூர் (=துளையிடு, தோண்டு) + இக (=கட, நீளு) + ஐ = சுரிக்கை >>> சுருங்கை = கடப்பதற்காக நீளமாகத் தோண்டப்பட்டது ].

சங்க இலக்கியம் காட்டும் புதிய உயிர் முன் உயிர் புணர்ச்சி விதி:

பொதுவாக, இலக்கணம் என்பது அந்தந்த கால கட்டங்களில் சான்றோரால் பயிலப்பட்ட பல்வேறு மொழியியல் நெறிமுறைகளின் அணுக்கத் தொகுப்பே அன்றி அவையே முழுமையான முடிபல்ல என்பதைத் தொல்காப்பியரும் சரி நன்னூலாரும் சரி தமது நூல்களின் இறுதியில் கூறியிருப்பதைக் காணலாம். இந்நிலையில், மேற்காணும் சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் நெறிகளை ஆய்வு செய்தபோது அவை தொல்காப்பியர் தொட்டுச் சென்றதாகவும் நன்னூலார் விட்டுச் சென்றதாகவும் இருப்பது அறியப்பட்டது. அதாவது, இவர்கள் இருவருமே வெளிப்படையாகக் கூறாத புதிய விதி இந்த பிறப்பியல் நெறிகளில் இருப்பது காணப்பட்டது. அவ்வாறு சங்க இலக்கியத்தில் பயிலப்பட்டுள்ளதும் தொல்காப்பியர் மற்றும் நன்னூலாரால் கூறப்படாததும் ஆகிய புதிய உயிர் முன் உயிர்ப் புணர்ச்சி விதியானது கண்டறியப்பட்டுப் பாடல் வடிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிறுத்த சொல்லின் ஈற்றுயிர் தானே

மெய்விட் டோடும் வேற்றுயிர் வரினே – பா. 1

மேற்காணும் நூற்பாவின்படி, நிறுத்த சொல்லின் இறுதியில் வருகின்ற எந்தவொரு உயிர் எழுத்தும் வருமொழியின் முதலில் உயிரெழுத்து வந்தால், தான் சேர்ந்துள்ள மெய்யெழுத்தை விட்டு நீங்கும் என்பது பொருளாகும். இந்  நூற்பாவை உற்று நோக்கினால், நன்னூலார் உகரவீற்றுப் புணர்ச்சிக்காக உருவாக்கிய சிறப்பு விதியே அனைத்து உயிர் ஈறுகளுக்கும் பொருந்துவதாக இந்த நூற்பாவில் பொதுமைப்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதற்கு முன்னர் மேலே கண்ட சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் முறைகளில் இந்த புதிய நூற்பா மிகக் கச்சிதமாகப் பொருந்தி வருவதை அறிந்து கொள்ளலாம்.

இலக்கணப் போலிகளுக்கான புதிய விதிகள்:

முன்னர் கண்ட சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் முறைகளை உற்று நோக்கினால் அவற்றில் பல இலக்கணப் போலிகள் பயன்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம். தமிழ் மொழிக்கு இலக்கணப் போலிகள் புதிதல்ல என்பதும் சில வகையான இலக்கணப் போலிகளைப் பற்றி நன்னூலார் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத் தக்கதாகும். எனவே நன்னூலில் கூறப்படாத புதிய இலக்கணப் போலிகள் எவை எவை என்பதை மட்டும் கீழே பாடல் வடிவில் காணலாம்.

முன்னின்ற உயிரொடு சகரம் ஊர்தலும்

ழ ய க்கள் திரிந்து ய ஞ ச ஆதலும்

ச ஞ க்கள் முற்றும் தம்முள் திரிதலும்

போலி என்ப அறிந்திசி னோரே – பா. 2

மேற்பாடலின் பொருளானது: சொல்லின் முதலில் வருவதான உயிரெழுத்தின் மீது சகர மெய் சேர்ந்து உயிர்மெய் ஆகுதலும் ழ, ய ஆகிய எழுத்துக்கள் திரிந்து ய, ஞ, ச ஆகியவற்றில் ஒன்றாதலும் ச, ஞ ஆகிய எழுத்துக்கள் முழுவதும் தமக்குள் திரிந்து வேறாதலும் போலி எனப்படும் என்று அறிஞர் கூறுவர் என்பதாகும்.

றஃகான் திரிந்து த ட ர ஆதலும்

வ ம ப க்கள் முற்றும் தம்முள் திரிதலும்

ன ண க்கள் தம்முள் திரிதலும்

ல ள க்கள் தம்முள் திரிதலும்

போலி என்ப அறிந்திசி னோரே – பா. 3

மேற்காணும் பாடலின் பொருளானது: றகர மெய் திரிந்து த, ட, ர மெய்களில் ஒன்றாகவும் வ, ம, ப ஆகிய மெய்கள் முழுவதும் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் ன, ண ஆகிய மெய்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் ல, ள ஆகிய மெய்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் மாறுவதைப் போலி என்று அறிஞர் கூறுவர் என்பதாகும். மெய்யெழுத்துக்களைப் போலவே உயிரெழுத்துக்களும் மாறுவதைப் பற்றிக் கூறும் தனிப்பாடல் கீழே:

அ ஆ எ ஏ தாமே தம்முள் திரிதலும்

இ ஈ உ ஊ தாமே தம்முள் திரிதலும்

உ ஊ ஒ ஓ தாமே தம்முள் திரிதலும்

எ ஏ இ ஈ தாமே தம்முள் திரிதலும்

ஐகாரந் தானே அய் இ எனத் திரிதலும்

ஔகாரந் தானே அவ் உ எனத் திரிதலும்

போலி என்ப அறிந்திசி னோரே – பா. 4

மேற்காணும் பாடலின் பொருளானது: அ, ஆ, எ, ஏ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் இ, ஈ, உ, ஊ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் எ, ஏ, இ, ஈ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் ஐகார உயிரானது திரிந்து அய், இ என்றாகவும் ஔகார உயிரானது திரிந்து அவ், உ என்றாகவும் மாறுவதனைப் போலி என்று அறிஞர் கூறுவர் என்பதாகும்.

முடிவுரை:

:இதுவரை மேலே கண்ட இலக்கணப் போலிகள் யாவும் மக்களின் வழக்காற்றில் இருப்பவையே ஆகும். சான்றாக, காற்று, கொம்பு என்பதை முறையே காத்து, கொப்பு என்று பேச்சு வழக்கில் கூறுகிறோம். இதுபோன்ற போலிகளை வரையறை செய்து எந்தவொரு இலக்கண நூலும் கூறாததால் புதிய இலக்கணங்கள் வகுக்கப்பட்டுக் கூறப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள புதிய இலக்கண விதிகள் யாவும் சங்க இலக்கியச் சொற்கள் உருவாக்கப்பட்ட பிறப்பியல் முறைகளை அடியொட்டியே அமைக்கப்பட்டவை என்பதால் இவற்றைப் புறந்தள்ளாமல் நினைவில் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகம் பயன்கொள்ள வேண்டும்.

வியாழன், 7 நவம்பர், 2019

கோவில், கோயில் - எது சரியான சொல்?.எப்படி?


முன்னுரை:

கோவில், கோயில் – என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தமிழர்களிடையே பன்னெடுங் காலமாகவே புழக்கத்தில் இருந்து வருகிறது. இருந்தாலும், இந்த இரண்டு சொற்களில் இலக்கணப்படி எது சரி? என்ற கேள்வியும் பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. கோவில் என்பதே சரி என்று ஒரு சாராரும் கோயில் என்பதே சரியென்று இன்னொரு சாராரும் விடைகூறி வருகின்றனர். இந்த இரண்டு விடைகளில் எது சரி?. எப்படிச் சரி?. என்று தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கிய நூல்களின் உதவியுடன் இங்கே விரிவாகக் காணலாம்.

உயிர் முன் உயிர் புணர்ச்சி

கோ என்னும் தமிழ்ச் சொல்லுக்கு இறைவன், தலைவன், அரசன் என்றெல்லாம் பொருளுண்டு. இல் என்னும் தமிழ்ச் சொல்லானது இருக்கும் வீட்டைக் குறிக்கும். இறைவனின் இல்லத்தைக் குறிப்பிடுவதற்கு இந்த இரண்டு சொற்களையும் புணர்த்திக் கூறவேண்டும். அதாவது,

கோ + இல் = இறைவனின் இல்லம்.

இதில் கோ என்னும் சொல்லின் இறுதியில் ஓ எனும் உயிர் தொக்கி நிற்கிறது. இல் என்னும் சொல்லின் முதலில் இ என்னும் உயிர் குறித்து நிற்கிறது. ஓ, இ என்ற இரண்டு உயிர்களும் புணரும்போது / சேரும்போது என்ன மாற்றங்கள் விளையும் என்று தமிழ் இலக்கண நூல்கள் கூறியுள்ளன. இதைப்பற்றி முதலில் காணலாம்.

தொல்காப்பியம் காட்டும் விதிகள்:

உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் எழுத்ததிகாரம் புணரியலில் 5 ஆம் பாடலில் முதன்முதலில் இவ்வாறு கூறுகிறார்.

உயிர் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
உயிர் இறு சொல் முன் மெய் வரு வழியும்
மெய் இறு சொல் முன் உயிர் வரு வழியும்
மெய் இறு சொல் முன் மெய் வரு வழியும் என்று
இவ் என அறியக் கிளக்கும் காலை
நிறுத்த சொல்லே குறித்து வரு கிளவி என்று
ஆயீர் இயல புணர் நிலைச் சுட்டே.- 5

இப்பாடலில் நிறுத்த சொல் என்பது நிலைமொழியைக் குறிக்கும். குறித்துவரு கிளவி என்பது வருமொழியைக் குறிக்கும். இந்த இரண்டு வகையானும் புணர்ச்சி மாறுபடும் என்று இப் பாடலில் கூறுகிறார். இப்பாடலில் உயிர் முன் உயிர் மட்டுமின்றி ஏனைய வகையினையும் குறிப்பிடுகிறார். இதனை அடுத்து வரும் பாடல்களில் புணர்ச்சியின் போது என்னென்ன மாற்றங்கள் விளையும் என்று கீழ்க்காணுமாறு கூறுகிறார்

நிறுத்த சொல்லின் ஈறு ஆகு எழுத்தொடு
குறித்து வரு கிளவி முதல் எழுத்து இயைய
பெயரொடு பெயரைப் புணர்க்குங் காலும்
பெயரொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு பெயரைப் புணர்க்குங் காலும்
தொழிலொடு தொழிலைப் புணர்க்குங் காலும்
மூன்றே திரிபுடன் ஒன்றே இயல்பு என
ஆங்கு அந் நான்கே மொழி புணர் இயல்பே. - 6

மேற்காணும் 6 ஆவது பாடலில், மூன்று வகைத் திரிபுகளும் திரிபில்லாத இயல்பு ஒன்றும் என்று நான்கு வகையான புணர்ச்சிகள் உண்டு என்கிறார்.

அவைதாம், மெய் பிறிது ஆதல் மிகுதல் குன்றல்
என்று இவ் என மொழிப திரியும் ஆறே. - 7

மேற்காணும் 7 ஆவது பாடலில் அந்த மூன்றுவகைத் திரிபுகள் எவை என்று கூறுகிறார். மெய் வேறாகுதல், மிகுதல், கெடுதல் என்பவையே அந்த மூன்று வகையான திரிபுகள் என்று விளக்குகிறார்.

அவ்வளவுதான், இதற்கப்புறம் உயிர் முன் உயிர் பற்றிய பாக்கள் வரவில்லை. இறுதியாக, கீழ்க்காணும் பாடல்களில் உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றிப் பேசுகிறார்.

எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படுமெய்யின் உருபு கொளல் வரையார். 38

பொருள்: நிலைமொழி, வருமொழி என்று எல்லா மொழியிலும் உயிர் முதலிலோ ஈற்றிலோ வரும்போது உடம்படுமெய் என்னும் எழுத்து தோன்றும். ஆனால் இன்னது தான் தோன்றும் என்று வரைய மாட்டார்.

இந்தப் பாடல் மிக முகன்மையானது. தொல்காப்பியர் மேற்சொன்ன பாடலில் கூறியுள்ள கருத்தைக் கவனியுங்கள். உடம்படுமெய்யாக இன்ன எழுத்துதான் தோன்றும் என்று வரையறுக்க மாட்டார் என்று கூறுகிறார். ஏன் இவ்வாறு அவர் கூறவேண்டும்.?. என்று நம்மில் சிலர் நினைக்கக் கூடும். அதனால் அதற்கான காரணத்தையும் அடுத்த பாடலில் அவரே கூறிவிட்டார். .

எழுத்து ஓரன்ன பொருள் தெரி புணர்ச்சி
இசையின் திரிதல் நிலைஇய பண்பே. 39

பொருள்: ஒரே எழுத்தாக இருந்தாலும் பொருள்கொள்ளும் நிலையில் இசைக்கேற்பத் திரிவதே புணர்ச்சிக்குரிய நிலையான பண்பாகும். அதாவது, ஒரே எழுத்தே இடத்திற்கேற்ப தனது இசையில் / ஒலியில் திரியும் என்று கூறுகிறார். இதற்கொரு சரியான எடுத்துக்காட்டே கோவில் - கோயில் ஆகும். அதாவது, கோ, இ ஆகிய எழுத்துக்களே புணரும் இடத்திற்கேற்ப இசையில் திரியும் என்பது இதன் பொருளாகும். இதன்படி,

கோ + இல் = கோயில் என்றும்
கோ + இல் = கோவில் என்றும் ஆகும். இதிலிருந்து,

தொல்காப்பியப் புணரியல் நூற்பா 39 ல் கூறியுள்ளபடி, கோ + இல் என்பது கோவில் என்றாவதும் கோயில் என்றாவதும் சரியே என்றாகிறது.

மேற்காணும் நூற்பாவிற்கு எடுத்துக்காட்டாகச் சங்க இலக்கியங்களில் இருந்தும் சில சான்றுகளைக் கீழே காணலாம். மா என்னும் சொல்லும் இகர முதல் சொற்களும் புணரும்போது இருவகையாகப் புணர்வதைக் கீழே காணலாம்.

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்க - திரு 91
மணி வார்ந்து அன்ன மாயிரு மருப்பின் - பெரும் 14
மாயிரும் குருந்தும் வேங்கையும் பிறவும் - குறி 95

மேற்காணும் பாடல்களில் வரும் மாயிரு என்பது யகர உடம்படுமெய் பெற்று வந்துள்ளது. அதாவது, மா + இரு = மா + ய் + இரு = மாயிரு.

தொன் மாவிலங்கை கருவொடு பெயரிய - சிறு 119
நன் மாவிலங்கை மன்னருள்ளும் - சிறு 120

மேற்காணும் பாடல்களில் வரும் மாவிலங்கை என்பது வகர உடம்படுமெய் பெற்று வந்துள்ளது. அதாவது, மா + இலங்கை = மா + வ் + இலங்கை = மாவிலங்கை.

இதுவரை கண்டவற்றில் இருந்து, தொல்காப்பியத்தின்படி, உயிர் முன் உயிர் புணர்ச்சியின்போது தோன்றும் உடம்படுமெய் இன்னதென்று வரையறுக்கப் படவில்லை என்றும் இடத்திற்கேற்பத் திரியும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

நன்னூல் காட்டும் விதிகள்:

உயிர் முன் உயிர் புணர்ச்சி பற்றித் தொல்காப்பியர் கூறியுள்ள அளவுக்குப் பல பாடல்களை நன்னூலார் இயற்றவில்லை. மாறாகத், தொல்காப்பியர் இன்னதென்று விளக்கமாகக் கூறாத உடம்படுமெய் பற்றி விளக்கமாகக் கீழ்க்காணும் ஒற்றைப் பாடலில் கூறிச் சென்றுவிட்டார். 

இ ஈ ஐ வழி “ய” வ்வும்
ஏனை உயிர்வழி “வ” வ்வும்
ஏமுன் இவ் இருமையும்
உயிர்வரின் உடம்படுமெய் என்றாகும்…. - நன்னூல். 162

பொருள்: இ, ஈ, ஐ என்ற உயிர்கள் யகர மெய்யினையும் ஏனைய உயிர்கள் வகர மெய்யினையும் ஏகார உயிர் மட்டும் யகர வகர மெய்கள் இரண்டையும் உடம்படுமெய்யாகப் பெறும். 

தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் உயிர் முன் உயிர் புணர்ச்சியில் தோன்றும் உடம்படுமெய்கள் இன்னவை என்று வரையறுக்கவில்லை. ஆனாலும் அவருக்குப் பின்னர் வந்த நன்னூலார் சங்க இலக்கியங்களை ஆராய்ந்து அவற்றில் வரும் உடம்படுமெய்களை உற்றுநோக்கித் தனது நூலில் பதிவுசெய்து விட்டார்.

நன்னூலின் மேற்காணும் விதி 162 ஐப் பற்றிப் பலரும் பலவித கருத்துக்களைப் பதிந்துள்ளனர். அதாவது, இந்த விதி ஒருதலையாக உள்ளது என்றும் இலக்கியங்களில் உள்ள அனைத்துவகைப் புணர்ச்சிகளையும் இது சுட்டவில்லை என்றும் கூறுகின்றனர். இதற்கொரு சான்றாகக் கோயில் என்னும் சொல்லைக் காட்டுகின்றனர்.

நன்னூலாரின் விதிப்படி, கோ என்னும் சொல்லானது இல் என்னும் சொல்லுடன் புணரும்போது வகர உடம்படுமெய் பெற்றுக் கோவில் என்றுதானே புணரவேண்டும். ஆனால், சங்க இலக்கியங்களில் கோவில் என்று வராமல் கோயில் என்ற சொல்லே கீழ்க்காணும் பாடல்களில் வந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.

திரு கிளர் கோயில் ஒரு சிறை தங்கி - பொரு 90
வெண் கோயில் மாசு ஊட்டும் - பட் 50
அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் - பரி 30
வாயில் விடாது கோயில் புக்கு எம் - புறம் 67
சாயின்று என்ப ஆஅய் கோயில் - புறம் 127
நல் தார் கள்ளின் சோழன் கோயில்.. - புறம் 378

ஆராய்ந்து பார்த்தால், நன்னூலார் சரியாகத் தான் கூறியிருக்கிறார் என்றும் அதனைப் புரிந்துகொள்வதில் தான் தவறு நேர்ந்துள்ளது என்றும் தெரிய வருகிறது. அதாவது, விதி 162 ல் இ ஈ ஐ ஆகியவை உயிர்வரின் யகர உடம்படுமெய் பெறும் என்றார். இந்த வரிக்குக் கீழ்க்காணும் இரண்டு வகைகளில் பொருள் கொள்ளலாம்.

(இ / ஈ / ஐ) + உயிர் = (இ / ஈ / ஐ) + ய் + உயிர் ………… (1) - நேர்வகை

உயிர் + (இ / ஈ / ஐ) = உயிர் + ய் + (இ / ஈ / ஐ) ……………(2) - உத்திவகை

முதலாவதாக உள்ள நேர்வகையில் இ / ஈ / ஐ ஆகியவை நிலைமொழி ஈற்றில் வந்து உயிருடன் புணரும். விதியில் இருந்து நேரடியாக அறியப்படும் கருத்து என்பதால் இது நேர்வகை ஆகும். இரண்டாவதாக உள்ள உத்திவகையில் இ / ஈ / ஐ ஆகியவை வருமொழி முதலில் வந்து உயிருடன் புணரும். விதியில் இருந்து நேரிடையாக அறியப்படாமல் உத்தி முறையில் அறியப்படும் கருத்து என்பதால் இது உத்திவகை ஆகும். நன்னூல் விதி 162 சுட்டுவது மேற்காணும் இருவகைப் புணர்ச்சிகளையும் ஆகும். இந்த இரண்டு வகைகளையும் எளிதாகப் புரிந்துகொள்ள ஒரு எடுத்துக்காட்டினைக் கீழே பார்க்கலாம்.

மணி + ஆரம் = மணி + ய் + ஆரம் = மணியாரம் ……….. (1)
மா + இருள் = மா + ய் + இருள் = மாயிருள் …………. (2)

இல்லை இல்லை, முதலாவது புணர்ச்சியே சரியென்றும் இரண்டாவது சரியல்ல என்றும் கூறமுடியாது. ஏனென்றால், இந்த இரண்டிலும் ஒரே வகையான எழுத்துக்களே அதாவது ஆகாரமும் இகரமுமே புணர்கின்றன. அதுமட்டுமின்றி, உயிர் வரின் என்று பாடலில் இருப்பதால் அது வருமொழியை மட்டுமே குறிக்கும் என்றும் அது முதலாவது புணர்ச்சியை மட்டுமே குறிக்கும் என்றும் கருதக் கூடாது. ஏனென்றால், ஒன்றை மட்டும் விளக்கமாகக் கூறி அதனுடன் தொடர்புடைய இன்னொன்றை விளக்கிக் கூறாமல் உய்த்துணர வைப்பது இலக்கண உத்திகளில் ஒன்று ஆகும். இந்த இருவகையான புணர்ச்சிகளிலும் ஒரேவகையான எழுத்துக்களே புணர்வதால் தனித்தனி பாக்களாக இயற்றாமல் ஒரே நூற்பாவில் இவற்றை அடக்கினார் என்க.

இதுவரை கண்டவற்றில் இருந்து, நன்னூல் விதிப்படி, கோயில், கோவில் என்ற சொற்களின் தோற்ற முறைகளைக் கீழே காணலாம்.

கோ + இல் = கோ + வ் + இல் = கோவில் ……….. (1) நேர்வகைப் படி
கோ + இல் = கோ + ய் + இல் = கோயில் ………. (2) உத்திவகைப் படி

ஆக, நன்னூல் விதி 162 ன் படி கோ + இல் என்பது கோவில் என்றாவதும் கோயில் என்றாவதும் சரியே என்றாகிறது.

முடிவுரை:

மேலே கண்டவற்றில் இருந்து, கோவில், கோயில் என்ற இரண்டு தமிழ்ச் சொற்களும் தொல்காப்பியம் மற்றும் நன்னூல் இலக்கணங்களின் படி அமைந்த சரியான சொற்களே என்பது உறுதியானது. தற்போது இந்த இரண்டு சொற்களையும் ஒரே பொருளில் நாம் பயன்படுத்தி வந்தாலும் இந்த இரண்டுக்கும் இடையில் ஒரு நுணுக்கமான வேறுபாடு உண்டு.  

கோவில் என்பதில் வில் என்று வருவதால், அது வளைக்கப்பட்ட வெளிப்புறப் பரப்பையும், கோயில் என்பதில் இல் என்று வருவதால், அது இறைவன் இருக்கும் உட்புற அறையையும் குறிப்பதாகக் கொள்ளலாம். .சுருக்கமாகச் சொல்வதானால்,

கோயில் = இறைவன் இருக்கும் கருவறை.
கோவில் = கோபுரமும் மதிலும் கொண்ட பரப்பு.
 

திங்கள், 4 செப்டம்பர், 2017

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும்

முன்னுரை:

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும் - என்ற இக் கட்டுரையில் கலித்தொகையில் வரும் தாழிசை உறுப்பின் மூலம் பெண்களின் உடல் உறுப்புக்களைக் குறிப்பதான பல சொற்களுக்குப் புதிய அல்லது உண்மையான பொருட்களைத் தருக்கமுறைப்படி எப்படி நிறுவலாம் என்பது பல்வேறு சான்றுகளுடன் விளக்கப்படுகிறது. தாழிசையை அடிப்படையாகக் கொண்டு ஏரணமுறைப்படி நிறுவப்படுவதால், இப்புதிய ஆய்வு அணுகுமுறையினை 'தாழிசை ஏரணமுறை' என்று அழைக்கலாம்.


தாழிசையும் கலிப்பாவும்:

தாழிசை என்பது கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றாகும். கலிப்பாவின் பொதுவான ஆறு உறுப்புக்களாக அறியப்படுகின்ற தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியவற்றில் இரண்டாவதாக வருவது தாழிசை ஆகும். தாழிசை என்னும் உறுப்புக்குரிய பொது இலக்கணம் கீழே:

> அடிதோறும் இரண்டு முதல் ஐந்து சீர்கள் வரை பெற்று வரும்.
> ஒரு அடுக்கில் இரண்டு முதல் நான்கு அடிகள் வரை அமைந்து வரும்.
> மூன்று முதல் பல அடுக்குகள் வரை ஒருபொருள்மேல் அடுக்கி வரும்.

கலிப்பாக்களில் பல வகைகள் இருந்தாலும் கலித்தொகையில் அதிக எண்ணிக்கையில் பயின்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். கலித்தொகையில் மொத்தமுள்ள 150 பாடல்களில் 80 க்கும் மேற்பட்ட பாடல்களில் இதுவே பயின்று வருவதால், இக் கட்டுரையில் ஆய்வுக்கு இதுவே எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இப் பாவகையினைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா:

அடிப்படை உறுப்புக்களான தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புக்களை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். இதன் இலக்கணம் பின்வருமாறு:

> முதலில் ஒரு தரவு வரும். தரவின் குறைந்த அளவு மூன்றடி. அதிக அளவுக்கு எல்லை இல்லை.
> தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டு அடி. அதிக அளவு நான்கு அடி. தரவைவிடத் தாழிசையானது ஓரடியாவது குறைந்து வரும்.
> தாழிசையைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.
> தனிச்சொல்லுக்குப் பின் ஒரு சுரிதகம் வரும். அது ஆசிரியப்பாவாகவோ வெண்பாவாகவோ இருக்கலாம்.

இப் பாவகையினைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள கலித்தொகைப் பாடல் எண் 11 இனைப் பல உறுப்புக்களாகப் பிரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவு: ( அடி எண் 1 முதல் 5 வரை )

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்எனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎள்இனி

தாழிசை: ( அடி எண் 6 முதல் 17 வரை மூன்று அடுக்குகளில் )

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

தனிச்சொல்: ( அடி எண் 18 மட்டும் )

என ஆங்கு,

சுரிதகம்: ( அடி எண் 19 முதல் 23 வரை )

இனைநலம் உடைய கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே.

தாழிசையின் தன்மை விளக்கம்:

பொதுவாகவே தாழிசை என்பது ஒரே பொருளின் மேல் பலமுறை அடுக்கி வருவதாகும். அதாவது ஒரே பொருளின் பல்வேறு தன்மைகளைப் பற்றித் தெளிவாக விளக்குவதற்காகப் புலவர்கள் பயன்படுத்தும் அமைப்புமுறை ஆகும். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, மேற்கண்ட கலித்தொகைப் பாடல் 11 ல் வரும் தாழிசையைக் காணலாம்.

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

பாடல் 11 ல் தாழிசையானது மூன்று அடுக்குகளாய் ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு அடிகளைக் கொண்டு வந்துள்ளது. கலித்தொகையின் பெரும்பாலான தாழிசைகள் இதுபோன்ற அமைப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனி, இவற்றில் கூறப்படுகின்ற பொருளைப் பற்றிப் பார்க்கலாம். 

முதலடுக்கு: கால்வைக்க முடியாத அளவுக்குத் தீயினைப் போல சுடுகின்ற வெம்மை கொண்டது அக்காடு. அக்காட்டில் தேங்கியிருந்த சிறிதளவு நீரினையும் குட்டியானை தனது கால்களால் கலக்கிவிட, அந்த நீரையும் தான் முதலில் உண்ணாமல் தனது பெண்துணைக்கு ஊட்டிவிட்டுப் பின்னரே தானுண்ணுமாம் களிற்றுயானை.

இரண்டாமடுக்கு: இலைகள் தீய்ந்துபோகும் அளவுக்கு வெப்பக்காற்று வீசுவதால் அவ்வழியே செல்வோர் இன்பம் சிறிதுமின்றி பெருந்துன்பம் அடைகின்ற தன்மையது அக்காடு. அக்காட்டில் தனது அன்புக்குரிய பெண்துணையின் துன்பம் தணியுமாறு தனது மெல்லிய சிறகுகளை அசைத்து வீசி வெப்பத்தினை ஆற்றுமாம் ஆண்புறா.

மூன்றாமடுக்கு: மலையில் இருக்கும் மூங்கில்களும் வாடி அழியுமாறு கொடிய வெப்பக்கதிர் வீசுகின்ற நெருங்குதற்கு அரிய காடாகும் அது. அக்காட்டில் மரநிழல் இன்மையால் வருந்திய தனது பெண்துணைக்குத் தன்னுடைய உடல்நிழலைக் கொடுத்து உதவுமாம் ஆண்மான்.

இம் மூன்று அடுக்குகளும் ஒரேபொருளையே அல்லது ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன. அதாவது, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லவிருக்கும் காட்டுப்பாதையானது மிகவும் கொடிய வெப்பமுடையது. அந்தக் கொடுமையான வெப்பத்திலும் அக்காட்டில் வாழ்கின்ற உயிரினங்கள் தமது பெண்துணையின்மீது அன்பு குறையாமல் வாழ்கின்றன. இக் கருத்தினைத் தலைவனுக்குத் தெளிவாகப் புரியவைத்துப் பிரிவினைத் தடுக்கவே ஒருமுறை இருமுறை இன்றி மூன்றுமுறை இக்கருத்தினைப் பலவிதமாகக் கூறி வலியுறுத்துகிறாள்.

இதிலிருந்து, தாழிசை என்பது எத்தனை அடிகளில் எத்தனை அடுக்குகளில் வந்தாலும் ஒரே பொருளை அல்லது ஒரே கருத்தினை வலியுறுத்தவே அமைக்கப்பட்டவை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தாழிசையும் தருக்கவியலும்:

தாழிசையின் தன்மை பற்றிய விளக்கத்தினை ஒரு சான்றின் மூலம் தெளிவாக மேலே அறிந்துகொண்டோம். இனி இதைத் தருக்கவியலில் எப்படிப் பயன்படுத்தலாம் எதற்குப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். அதற்குமுன்னர் தருக்கவியலைப் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தினைக் கீழே காணலாம்.

ஏரணவியல் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்துறையாகும். ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல் -> ஏர் -> ஏரணம் என்றாயிற்று. ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும், ஏலாது என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட ஒரு துறையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Logic (லாஜிக்) என்று கூறுவர்.

தாழிசையின் ஒரேபொருளைக் குறிப்பதான தன்மையைக் கொண்டு பல தமிழ்ச்சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்களைத் தருக்கவியல் முறைப்படி இங்கே கண்டறியலாம். அதாவது, தாழிசை என்பது எத்தனை அடுக்குகளில் வந்தாலும் அவையனைத்தும் ஒரே பொருளை விளக்குவதற்காகவே புலவர்களால் எழுதப்பட்டவை என்பதனை ஓர் கலித்தொகை எடுத்துக்காட்டின் மூலம் மேலே கொண்டோம் அல்லவா, அதனையே இங்கே நாம் ஏரணமாகப் பயன்படுத்திப் பல சொற்களுக்குப் புதிய பொருட்களைக் கண்டறியப் போகிறோம். கீழே சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கலித்தொகையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

சான்று ஒன்று: கலித்தொகைப் பாஎண்: 15

புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?

பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும்
பசப்பு ஊர்தல் என்பதும்
தெண்பனி உறைத்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், தெண்பனி உறைத்தல் என்பது கண்ணீர் வழிதல் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும் பசப்பு ஊர்தல் என்பதும் தெண்பனி உறைத்தலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பயலையும் பசப்பும் கண்ணீரைக் குறிக்கின்ற சொற்களே என்பதும் பெறப்படுகிறது.

சான்று இரண்டு: கலித்தொகைப் பாஎண்: 25

மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர்
தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;

ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்;

ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கிலும் வருகின்ற இரண்டாவது அடிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி இவ் வரிகளில் வரும்

கலுழ்பு ஆனாக் கண் என்பதும்
நெகிழ்பு ஓடும் வளை என்பதும்
பசக்கும் நுதல் என்பதும்

ஒரே பொருளையே குறித்து வந்திருக்க வேண்டும். இம்மூன்றனுள், கலுழ்பு ஆனாக் கண் என்பது கண்ணீர் வழிகின்ற கண்ணைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து, தாழிசையின் ஏரணமுறைப்படி,

நெகிழ்பு ஓடும் வளை என்பதும் பசக்கும் நுதல் என்பதும் கலுழ்பு ஆனாக் கண்ணைப் போலவே கண்ணீர் வழிகின்ற கண்ணையே குறிக்கும் என்பது பெறப்படுகிறது. மேலும், நெகிழ்தல் என்பது அழுகையைக் குறிக்கும் என்பதால், வளை என்பது கண்ணீருடன் கலந்து ஓடுவதான மையணியைக் குறிப்பதே என்று அறிந்துகொள்ளலாம். பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையைக் குறிக்கும் என்று மேலே கண்டதால், நுதல் என்பது கண்ணையும் குறிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சான்று மூன்று: கலித்தொகைப் பாஎண் 100

ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்   
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-   
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்   
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!

'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்   
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்-
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   

'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்-
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

கண் பனி மல்குதல் என்பதும்
தொடி இறை ஊர்தல் என்பதும்
முகம் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், கண் பனி மல்குதல் என்பது கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

தொடி இறை ஊர்தல் என்பதும் முகம் பசப்பு ஊர்தல் என்பதும் கண் பனி மல்குதலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று மேலே கண்டபடியால், முகம் என்பது கண்ணையும் தொடி என்பது கண்ணீருடன் கலந்துஓடும் மையணியையும் இறை என்பது கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சான்று நான்கு: கலித்தொகைப் பாஎண்: 127

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,   
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ -
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,   
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும்
வளை தோள் ஊர்தல் என்பதும்
நுதல் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், நுதல் பசப்பு ஊர்தல் என்பது கண்ணில் இருந்து கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும் வளை தோள் ஊர்தல் என்பதும் நுதல் பசப்பு ஊர்தலைப் போலவே அழுதல் / கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், வளை என்பது கண்மை அணி என்று முன்னர் கண்டதால், தோள் என்பது இங்கே கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

இதுவரை, தாழிசை ஏரண முறைப்படி நாம் மேலே கண்டவற்றில் இருந்து, இனைதல், பசப்பு, பயலை, இறை, தோள், முகம், நுதல், தொடி, வளை போன்ற சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள் இருப்பதைக் கண்டோம். இதேமுறையில், இன்னும் பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய / பொருத்தமான பொருட்களைக் கண்டறிய முடியும்.