சனி, 29 ஆகஸ்ட், 2009

தொல்காப்பிய உயிர்ப்பாகுபாடு - சரியா?


முன்னுரை:

தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் மரபியலில் காணப்படும் பாடல்கள் இவை:

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே
இரண்டு அறிவதுவே அதனொடு நாவே
மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே
நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே
ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே
ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே - பா.எண் - 27
புல்லும் மரனும் ஓர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -28
நந்தும் முரளும் ஈர் அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -29
சிதலும் எறும்பும் மூ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -30
நண்டும் தும்பியும் நான்கு அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் - 31
மாவும் மாக்களும் ஐ அறிவினவே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண்- 32
மக்கள்தாமே ஆறறிவு உயிரே
பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே - பா.எண் -33
ஒருசார் விலங்கும் உள என மொழிப - பா.எண் - 34

தற்போதைய பொருள்:

மேற்காணும் எட்டு பாடல்களின் தற்போதைய கருத்துக்கள் ஆவன: தொட்டு அறிவன ஓரறிவு உயிர்களாகும். சான்று: புல்,மரம் போன்றவை. தொடுதலுடன் நாவினால் சுவையும் அறிபவை ஈரறிவு உயிர்களாகும். சான்று: நத்தை, இப்பி போன்றவை. தொடுகை மற்றும் சுவையுடன் மூக்கினால் மணமும் அறிபவை மூன்று அறிவுடையவை ஆகும். சான்று: கறையான், எறும்பு போன்றவை. தொடுகை,சுவை,மணத்துடன் கண்களினால் காட்சியும் அறிபவை நான்கு அறிவுடைய உயிர்கள் ஆகும். சான்று: நண்டு, தும்பி (தேனீ) போன்றவை. தொடுகை,சுவை,மணம், காட்சியுடன் காதினால் ஒலியும் அறிபவை ஐந்து அறிவுடையவை ஆகும். சான்று: விலங்குகள், மாக்கள் போன்றவை. இந்த ஐந்து அறிவுகளுடன் மனதினால் சிந்திக்கும் அறிவினைப் பெற்றவர்கள் மக்களும் அவர் போன்றோரும் ஆவர். ஒருவகை விலங்குகளும் ஆறறிவுடையன என்று கூறுவார்கள்.

பொருட்பிழைகள்:

மேற்காணும் எட்டு பாடல்களில் பல பொருட்பிழைகள் காணப்படுகின்றன. அவற்றைக் கீழே காணலாம்.


தும்பியாகிய தேனீக்கு மெய்,வாய்,மூக்கு,கண் ஆகிய நான்கு அறிவுகள் உண்டென்று 31 ஆம் பாடல் கூறுகிறது. இக் கருத்து அறிவியல் உண்மைக்குப் புறம்பானது ஆகும். ஏனென்றால் தேனீக்குக் கண்கள் உண்டு; ஆனால் மூக்கு இல்லை. பூவிதழ்களின் ஒளியினால் கவரப்பட்டே இவை பூவில் அமர்ந்து தேன் உண்ணுகின்றனவே அன்றி பூக்களின் நறுமணத்தால் அல்ல. இது அறிவியல் உண்மை. இதனை மேட்சி என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம்.
அதேபோல் நண்டுகளுக்கும் மூக்கு என்பது இல்லை. நீர்வாழ் நண்டுகளானாலும் சரி நிலத்தில் வாழும் தென்னைமர நண்டுகளானாலும் சரி தனிப்பட்ட சுவாச உறுப்பான மூக்கு என்பதே இவற்றுக்குக் கிடையாது. இவை பற்றிய உண்மைகளை நீர்வாழ்நண்டுகள் மற்றும் தென்னைமர நண்டுகள் என்ற இணையதளப் பக்கங்களில் காணலாம். இதில் இருந்து தேனீ மற்றும் நண்டிற்கு நான்கறிவு என்னும் கருத்து தவறானது என்று அறியலாம்.

நத்தைக்கு மெய், வாய் என்ற இரண்டு அறிவுகள் மட்டுமே உண்டென்று 29 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் தவறாகும். ஏனென்றால் நத்தைக்குக் கண்களும் உண்டு. இதை அனிமல்ஸ் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். எனவே நத்தைக்கு ஈரறிவு மட்டுமே என்று கூறுவது தவறு என்று தெளியலாம்.
எறும்பிற்கு மெய்,வாய்,மூக்கு என்று மூன்று அறிவுகள் உண்டு என்று 30 ஆம் பாடல் கூறுகிறது. இதுவும் அறிவியலுக்குப் புறம்பான கருத்தாகும். ஏனென்றால் எறும்பினங்களுக்கு மூக்கு இல்லை என்பதே அறிவியல் உண்மை. இந்த உண்மையினைப் பற்றி விளக்கமாக ஆன்ட்ஹில்வுட் என்ற இணையதளப் பக்கத்தில் காணலாம். இதில் இருந்து எறும்பிற்கு மூக்கு உண்டு என்று கூறுவது தவறு என்று அறியலாம்.

பரிணாம வளர்ச்சி ஆய்வுமுறைப்படி உயிர்களுக்கான மூன்றாவது அறிவு கண்ணே என்றும் மூக்கானது நான்காவது அறிவே என்றும் அறியலாம். இது எவ்வாறெனில் மணம் என்பது குறுகிய எல்லைக்குள் அறியப்படுவது. காட்சி என்பது நீண்ட எல்லையிலும் அறியப்படுவது. உணவைத் தேடுகின்ற உயிர்களுக்கு உணவுப் பொருளின் இருப்பிடம் அறிதலே முதல்நிலைத் தேவை ஆகும். உணவுப் பொருளின் மணம் அறிதல் என்பது இரண்டாம் நிலைத் தேவையே ஆகும். எனவே முதல்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக கண்களை மூன்றாவது அறிவாக உயிர்களுக்கு அளித்தது இயற்கை. இரண்டாம்நிலைத் தேவையை நிறைவேற்றும் விதமாக மூக்கினை நான்காவது அறிவாக அளித்தது இயற்கை. ஆனால் 27 ஆம் பாடலோ மூன்றாவது அறிவு மூக்கு என்றும் நான்காவது அறிவு கண் என்றும் கூறுகிறது. இப் பாடலின்படி கண்கள் உடைய உயிர்களுக்கு எல்லாம் மூக்கு இருக்க வேண்டும். ஆனால் உண்மை அவ்வாறு இல்லை என்று மேலே நத்தை, எறும்பு, நண்டு போன்ற உயிர்களுக்குக் கண்டோம். மாறாக மூக்குடைய உயிர்களுக்கு எல்லாம் (சான்று: விலங்குகள், பறவைகள்) கண்களும் உண்டு என்ற உண்மையை நாம் அறிவோம். இதில் இருந்து கண்களுக்குப் பின்னரே மூக்கு பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது என அறியலாம். இயற்கையின் இந்த விதிக்கு மாறாக 27 ஆம் பாடலின் கருத்து அமைவதால் அக் கருத்து தவறு என்று தெள்ளிதின் அறியலாம்.

விலங்குகளும் மாக்களும் (விலங்கொத்த மனிதர்களும்) ஐந்து அறிவினர் என்று 32 ஆம் பாடல் கூறுகிறது. இந்த விலங்கொத்த மனிதர்கள் என்போர் யாவர் என்பதற்கு மனித உருவில் விலங்கின் குணமுடையோர் என்று பொருள் கொள்கின்றனர். இது அடிப்படையில் தவறாகும். ஏனென்றால் இங்கு உயிர்களின் புலன்களைப் பற்றித் தான் பேசப்படுகிறதே ஒழிய தீய அல்லது நல்ல குணங்கள் அன்று. அவ்வகையில் மனிதர்களுக்கு அவர்கள் (நல்லோராயினும் தீயோராயினும்) மெய்,வாய்,கண்.மூக்கு.காது,மனம் என்ற ஆறறிவு உண்டு தானே. எனவே ஆறறிவு உடைய மனிதர்களை (அவர் இழிகுணத்தோர் ஆயினும்) ஐயறிவில் சேர்த்துக் கூறுவது தவறாகும்.

மக்களுக்கு மட்டுமே மனம் இருப்பதாக 33 ஆம் பாடல் கூறுகிறது. ஒருவகை விலங்குகளுக்கும் மனம் இருப்பதாக 34 ஆம் பாடல் கூறுகிறது. இது அறிவியல் முறைப்படி தவறாகும். ஏனென்றால் மனம் இல்லாத உயிர்களே உலகில் இல்லை. மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பே ஆகும். ஒவ்வொரு உயிரும் அதனதன் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப சிந்திக்கிறது; அதற்கேற்ப செயல்படுகிறது. இவற்றைக் கட்டுப்படுத்துவது மூளை ஆகும். மூளை இல்லாத உயிர்கள் உண்டா?. இருக்க முடியாது. ஏனென்றால் மூளை இல்லாமல் உயிர்களால் வாழவே முடியாது. நமது மூளையைப் போல இல்லாவிட்டாலும் மூளையானது ஏதேனும் ஒரு வடிவத்தில் வண்ணத்தில் அனைத்து உயிர்களுக்கும் எங்காவது இருந்தே ஆகவேண்டும். மூளை இல்லையேல் சிந்தனையும் இல்லை; இயக்கமும் இல்லை. எங்குமே நகராமல் நின்று கொண்டே இருக்கும் மரம் செடி கொடிகளுக்கும் கூட மூளை உண்டு. அதனால் தான் அவற்றால் அவற்றின் சூழலுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. இவை அனைத்தும் அறிவியல் உண்மைகள். (அருகில் இருக்கும் மரங்களைப் பாருங்கள். தம் கரங்களை நீட்டி 'வருக வருக' என்று அவை நம்மை வரவேற்பது போலத் தோன்றவில்லை?.) அவ்வாறு இருக்க மனிதர்களுக்கும் ஒருவகை விலங்குகளுக்கு மட்டுமே மனம் அல்லது மூளை உண்டு என்று கூறி இருப்பது தவறாகும்.

பிற குற்றங்கள்:

மேற்காணும் எட்டு பாடல்களிலும் ஒரு பாடலில் கூட பறவை இனத்தைப் பற்றிக் கூறவே இல்லை. ஏன்? பறவை இனத்திற்கு ஒரு அறிவு கூட இல்லையா என்ன?. மரம்,செடி,கொடி,விலங்குகள் ஏன் சிறுசிறு உயிர்களுக்கும் கூட இத்தனை அறிவு என்று கூறிவிட்டு பறவைகள் என்ற ஒரு மிகப் பெரிய இனத்தைப் பற்றி நேரிடையாகவோ உய்த்துணரும் படியாகவோ கூட குறிப்பிடாதது இப் பாடல்களில் உள்ள மிகப் பெரிய குறைபாடு ஆகும். இது தெளிவின்மைக் குற்றமாகும்.

மேற்காணும் எட்டு பாடல்களும் மரபியலில் வைக்கப்பட்டுள்ளது. மரபியலின் முதல் 26 பாடல்கள் உயிர்களின் இளமைப் பெயர்கள் எவ்வாறு வழங்கப் படவேண்டும் என்று விரித்துக் கூறுகிறது. திடீரென 27 முதல் 34 வரையில் உள்ள பாடல்கள் அதாவது மேற்காணும் 8 பாடல்கள் உயிர்களின் அறிவுகளைப் பற்றிக் கூறுகிறது. மீண்டும் 35 ஆம பாடலில் இருந்து உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை தொடர்கிறது. உயிர்களின் இளமைப் பெயர் வழங்கும் முறை பற்றிக் கூறும்போது இடையில் தொடர்பே இல்லாமல் உயிர்களின் அறிவு பற்றிக் கூறவேண்டிய தேவை என்ன?. 24 ஆம் பாடலில் ஓர் அறிவு உயிர் என்ற தொடர் வருகிறது. அதனால் தான் உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது என்று சிலர் கருதலாம். ஆனால் அது தவறாகும். ஏனென்றால் அத் தொடருக்கான விளக்கத்தை 25 ஆம் பாடலின் மூலமே உய்த்துணர வைத்துவிட்டார் தொல்காப்பியர். 'நெல்லும் புல்லும் நேரார் ஆண்டே' என்று 25 ஆம் பாடலில் கூறியதில் இருந்து ஓர் அறிவு உயிர் என்பது நெல்,புல் போன்ற அசைவற்ற தன்மை உடைய உயிர்கள் என்னும் கருத்து உய்த்துணரப் படுகிறது. எனவே உயிர்களின் அறிவுப் பாகுபாடு பற்றிய விளக்கம் இங்கே தேவையின்றியே வந்துள்ளது என்று தெளியலாம். ஆக பொருத்தமில்லாத இடத்தில் இந்த எட்டு பாடல்களும் அமைந்திருப்பது அமைப்புக் குற்றமாகும்.

துணிபு:

தொல்காப்பியரின் நுண்மாண் நுழைபுலம் பற்றி ஏற்கெனவே நாம் 'மாயோன் மேய' என்னும் கட்டுரையில் கண்டிருக்கிறோம். தெளிவான சிந்தனை, நுட்பமான அறிவு, எளிமையான நடை ஆகியவை இவரது சிறப்பு இயல்புகள் ஆகும். உண்மை இவ்வாறு இருக்க, மேற்காணும் எட்டு பாடல்களை இவ்வளவு பொருட்பிழைகளுடனும் தெளிவின்மை மற்றும் அமைப்புக் குற்றங்களுடனும் அவர் தொல்காப்பியத்தில் இயற்றி இருப்பாரா? என்பதே கேள்வி. ஒருபோதும் இருக்க முடியாது என்பதே அதற்கான விடை ஆகும். என்றால் இப் பாடல்களை யார் இயற்றி இருப்பர்? இக் கேள்விக்கான விடை:

உயிர்ப்பாகுபாடு குறித்த இப் பாடல்கள் எட்டும் இடைச்செருகல் (அ) பிற்சேர்க்கையே ஆகும். அதாவது தொல்காப்பியர் அல்லாத வேறொருவரால் தொல்காப்பியருக்குப் பின் இயற்றப்பட்டு தொல்காப்பியத்தில் வேண்டுமென்றே புகுத்தப்பட்டவை. இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஆத்துல ஒரு கால்


பழமொழி:
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

தற்போதைய கருத்து:
ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல.

தவறு:
இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து நீரானது தேங்கி நிற்கும் இயலபினது. ஆகையால் குளத்தங்கரையில் தான் சேறு நிறைந்து இருக்கும். ஆற்றங்கரையில் சேறு இல்லை எனும்போது ஆற்றுநீரில் தனது ஒருகாலை வைத்த ஒருவன் இன்னொருகாலை சேற்றுமண்ணில் எப்படி வைக்க முடியும்?. ஒருபோதும் முடியாது அல்லவா?. இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கருத்தை உணர்த்துவதால் இப் பழமொழிக்குக் கூறப்பட்ட மேற்காணும் பொருள்விளக்கம் தவறு என்பதை அறியலாம்.

மேற்காணும் பொருள்விளக்கத்தில் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது 'ஆத்துல' மற்றும் 'சேத்துல' ஆகிய கொச்சைச்சொற்களே என்று புலப்பட்டது. ஆத்துல என்ற கொச்சைச்சொல் ஆற்றுநீரைக் குறிப்பதாகவும் சேத்துல எனும் கொச்சைச்சொல் சேற்றுமண்ணைக் குறிப்பதாகவும் புரிந்து கொண்டதே தவறான பொருள்விளக்கத்திற்கு அடிகோலி இருக்கிறது. இனி இவற்றின் சரியான பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

திருத்தம்:
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
கற்றறிந்த மக்களின் வாய்வழக்காக மட்டும் முதலில் இருந்தவந்த பழமொழிகள் காலப்போக்கில் கல்லாத பாமர மக்களின் வாயில் நுழைந்தபோது பலவிதமான மாற்றங்களை அடைந்தன. அவற்றுள் ஒன்றே கொச்சை மாற்றம் ஆகும். அகத்தில் என்னும் தூயதமிழ்ச் சொல் கொச்சையாக ஆத்துல என்று எவ்வாறு வழங்கப்பெறும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இப் பழமொழியில் வரும் அயத்தில் மற்றும் செயத்தில் ஆகிய தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு திரியும் என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

அயம் (நீரைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ---> ஆம் (நீரைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மயல் (மயக்கத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ----> மால் (மயக்கத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
பெயர் (தூய தமிழ்வடிவம்) ----> பேர் (திரிபு வடிவம்)
வெயர்வு (சினத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) --> வேர்வு (சினத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)

மேற்கண்ட சான்றுகளில் இருந்து மொழிமுதலாய் வரும் குற்றெழுத்துக்கள் திரிபின்போது யகரத்தை இழந்து நெடிலாக மாற்றமடையும் என்று அறியலாம். இவ் இலக்கணப் படியே

அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்
செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்

கொச்சை வழக்கில் மாற்றமடையும் என்பதை அறியலாம்.

அயம் என்பதற்கு குதிரை என்ற பொருள் அகராதிகளில் காணப்படுகிறது. இதனால் தான் குதிரையில் ஏறிவரும் சாமியை அய்யனார் என்கிறோம். செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வெற்றி என்பது இரண்டாம் நிலைப் பொருள் ஆகும். பூமி என்பதே முதல்நிலைப் பொருள் ஆகும். ஏனென்றால் போருக்குச் செல்லும் மன்னனின் முதல் நோக்கம் எதிரி நாட்டு மன்னனின் பூமியைக் கைப்பற்றுவதே ஆகும். பூமியைக் கைப்பற்றினாலே வெற்றி பெற்றுவிட்டதாகவே பொருள் கொள்ளப்படும்.

ஒரு சான்றாக செயம்கொண்டான் என்னும் பெயரை எடுத்துக் கொள்வோம். இப் பெயரின் பொருளை வெற்றிகொண்டான் என்று விரிப்பதைவிட பூமிகொண்டான் என்று விரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வெற்றியை உடையவன் என்பதைவிட பரந்த பூமியை உடையவன் என்பதே மன்னருக்குச் (முதலாம் இராசராச சோழன்) சிறப்பு தரும் பெயராகும். செயம் என்னும் சொல் முதல்நிலையில் பூமியைத் தான் குறிக்கும் என்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செய் என்னும் சொல்லுக்கு விளைநிலம் என்று அகராதிகள் பொருள்கூறுகின்றன. இது செயம் என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதிலிருந்து செயம் என்பது நிலப்பொருளையே குறிக்கும் என்பதை அறியலாம்.செய்யாள்,செய்யவள்,செய்யோள் என்ற சொற்களுக்கு இலக்குமி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பூமியே அனைத்து செல்வங்களின் இருப்பிடம் என்பதால் பூமித்தாயே இலக்குமி ஆவாள். செய்யாள் என்பது செய்யை உடையவள் என்று விரிந்து பூமித்தாயைக் குறிப்பதால் இங்கும் செய் என்பது நிலத்தையே குறிக்கிறது என்று அறியலாம். இனி இப் பழமொழி உணர்த்தும் கருத்தினை ஒரு சிறுகதையுடன் காணலாம்.

குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.

சரியான பழமொழி:
அயத்தில்
ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஆத்துல போட்டாலும்


பழமொழி:
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

தற்போதைய பொருள்:
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.

தவறு:
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

திருத்தம்:
இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.

மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.


'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல

சரியான பழமொழி:


அகத்தில் போட்டாலும் றிந்து போடவேண்டும்.

புதன், 19 ஆகஸ்ட், 2009

பூமி என்னும் தாய்


பாடல்:
அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.
- குறள் எண்: ௨௪௫


தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: உள்ளத்தில் ஊறிடும் அருளின் இயக்கத்தினால் துன்பத்தை உணராமல் கடமையாற்றலாம் என்பதற்கு, காற்றின் இயக்கத்தினால் வலிமையுடன் திகழும் இந்தப் பெரிய உலகமே சான்று.
மு.வ உரை: அருளுடையவராக வாழ்கின்றவர்களுக்குத் துன்பம் இல்லை, காற்று இயங்குகின்ற வளம் பெரிய உலகத்தில் வாழ்வோரே இதற்குச் சான்று ஆவர்.
சாலமன் பாப்பையா உரை: அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.

தவறு:

மேற்காணும் மூன்று உரைகளும் தவறானவை ஆகும். ஏனென்றால் இக் குறளின் மூலம் வள்ளுவர் கூறவரும் கருத்து இதுவல்ல. அருளுடையவர்க்குத் தீவினை அதாவது துன்பம் இல்லை என்று 244 ஆம் குறளில் கூறிய வள்ளுவர் அதே கருத்தை இக் குறளிலும் கூறுவாரா?. அவ்வாறு கூறினால் அது கூறியது கூறல் என்னும் குற்றமாகி விடும். வள்ளுவர் போன்ற பெருந்தகையாளர்கள் அக் குற்றத்தை ஒருபோதும் செய்யமாட்டார்கள். எனவே இக் குறளில் துன்பம் என்ற பொருளையே வள்ளுவர் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது. என்றால் இந்தத் தவறான கருத்துரைகளுக்குக் காரணம் என்ன?. அல்லல் என்ற சொல்லுக்குத் துன்பம் என்று பொருள் கொண்டதே ஆகும். இப் பொருள் இக் குறளுக்குப் பொருந்தாது.

அதுமட்டுமின்றி இந்த உரைகளில் காணப்படும் காற்று என்ற பொருள் இங்கு தேவையின்றி வந்துள்ளது. வெறுமனே உலகம் என்று சொல்லாமல் காற்று இயங்குகின்ற உலகம் என்று வள்ளுவர் ஏன் கூறவேண்டும்?. பூமிக்கு வரும் துன்பங்களை எல்லாம் காற்று மண்டலம் தடுத்து பூமியைக் காப்பாற்றி விடும் என்ற கருத்திலா?. உறுதியாக இல்லை. ஏனென்றால் பிற அண்டவெளிப் பொருட்களால் பூமிக்கு நேர்கின்ற துன்பங்களை எல்லாம் காற்று மண்டலத்தால் தடுத்துவிட முடியாது. இந்த அறிவியல் உண்மையினை தகைசான்ற வள்ளுவரும் அறிவார். எனவே காற்று எனும் பொருள் இக் கருத்தினைக் குறிக்க வரவில்லை என்பது தெளிவாகிறது. காற்று எனும் பொருளை வள்ளுவர் இங்கு பயன்படுத்தியதன் நோக்கங்கள் எவையும் தெளிவாகவும் பொருத்தமாகவும் இல்லை என்பதால் அப்பொருளை வள்ளுவர் இக் குறளில் பயன்படுத்தி இருக்கவே மாட்டார் என்பது உறுதியாகிறது. இதிலிருந்து காற்று என்னும் பொருளைக் குறிக்கும் வளி என்ற சொல்லில் தான் ஏதோ பிழை உள்ளது என்னும் கருத்தைப் பெறலாம். இனி இவற்றிற்கான திருத்தங்களைக் காணலாம்.

திருத்தம்:

அல்லல் என்னும் சொல் இக்குறளில் வறுமைப் பொருளில் வந்துள்ளது. வறுமையும் ஒருவகைத் துன்பமே என்பதாலும் எதுகை அழகிற்காகவும் அல்லல் என்னும் சொல்லை வறுமைப் பொருளில் இங்கு வள்ளுவர் பயன்படுத்தியுள்ளார். வளி என்னும் சொல்லுக்குப் பதிலாக வரி என்ற சொல் வந்திருக்க வேண்டும். வரி என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இச் சொல் இக் குறளில் கடலைக் குறிக்கும். வரிவழங்கும் மல்லல் என்பது கடல் தருகின்ற பெருவளமாகிய மழையினைக் குறிக்கும். இவையே இக் குறளில் வரும் திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:

அருளுடைமைக்குச் சிறந்த சான்றுகாட்ட விரும்பிய வள்ளுவர் இக் குறளில் நமது பூமியையே சான்றாகக் காட்டுகிறார். ஆம், நமது பூமித்தாயினைவிட அருளில் சிறந்தவள் யார் இருக்கமுடியும்?. அண்டவெளியில் விழுந்து தொலைந்து போகாமல் தன்னோடு ஈர்த்துவைத்துக் கொண்டு ஒரு தாயைப்போல நம்மையெல்லாம் சுமந்து கொண்டிருக்கின்றது பூமி. இப் பூமியை நமது தேவைக்காகப் பங்குபோட்டுக் கொண்டு வெட்டுகிறோம்; குத்துகிறோம்; குடைகிறோம்; வெடிவைத்துத் தகர்க்கிறோம். இத் துன்பங்களுக்காக நம்மீது சினம்கொள்ளாமல் பொறுமையாக இருப்பதுடன் நமக்காக நல்ல பல வளங்களையும் தந்து காப்பதால்தான் பூமியை அருளில் சிறந்தவள் என்று வள்ளுவர் கூறுகிறார்.

சரி, பூமித்தாயை வள்ளுவர் ஏன் இக்குறளில் சான்றாகக் கூறுகிறார் அதாவது இச் சான்றின் மூலம் வள்ளுவர் உணர்த்த வரும் கருத்து என்ன என்று காணலாம். அருள் என்னும் உயரிய பண்பு ஒரு குலப்பண்பு ஆகும். பிறரது துன்பத்தைத் தனது துன்பமாக நினைத்து உதவுதலும் யாருக்கும் துன்பமே விளைவிக்காமல் வாழ்தலும் அருளுடையோரின் அடையாளங்கள் ஆகும். அருட்குடியில் பிறந்த மக்கள் பிறருக்கு உதவிசெய்து வாழவேண்டும் என்பதே அவர்களுக்கான விதி. ஆனால் இப்படி வாழ்வதால் தமது பெருஞ்செல்வத்தை இழந்து வறுமையின் பிடியில் சிக்கி வாடவேண்டுமோ என்று அஞ்சி பலர் உதவிசெய்யத் தயக்கம் காட்டுவதுண்டு. இவர்களது தயக்கத்தினைக் களையவே இக் குறளை இயற்றியுள்ளார் வள்ளுவர்.


பிறருக்கு உதவிசெய்து வாழ்வதால் வறுமைநிலை உண்டாகாது; வளமான நிலையே உருவாகும். இக் கூற்றுக்குச் சான்றாகத் தான் கடல் உடுத்த பூமியைக் காட்டுகிறார் வள்ளுவர்.
பூமி உயிர்களிடத்தில் காட்டும் அருளே மழை ஆகும். உப்புநீராகிய கடல்நீர் ஆவியாகி மேகமாகி நன்னீராக மீண்டும் பூமிக்கே பொழிகிறது. இதனால் பூமியின் மொத்த நீர்வளம் குறைவதில்லை; மாறாக கூடவே செய்கிறது. இதற்குச் சான்றாக பூமியில் அடிக்கடி உண்டாகும் வெள்ளப் பெருக்குகள் மற்றும் கடல் கொந்தளிப்புக்களைக் கூறலாம். பிறரது துன்பம் கண்டு அருள்செய்வோரிடத்தில் மழைநீர்ப் பெருக்கைப் போல எதிர்பாராத பலவழிகளில் செல்வம் பெருகும். இதனால் அருளுடையோருக்கு வறுமை என்பதே இல்லை. கடல் வழங்குகின்ற பெருவளமாகிய மழையினை உடைய இந்த பெரும்பூமியே இதற்குச் சிறந்த சான்றாகும் என்கிறார் வள்ளுவர். இதுவே இக் குறளின் சரியான பொருள்விளக்கம் ஆகும். பூமியின் அருட்செல்வமாகிய மழையினை மாந்தரின் பொருட்செல்வத்துடன் ஒப்பிட்டு இக் குறளை இயற்றிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத் தக்கது அல்லவா?.

சரியான பாடல்:

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வரிவழங்கும்
மல்லல்மா ஞாலம் கரி.