ஞாயிறு, 30 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 3 ( எயிறு - ஓதி - கதுப்பு - குறங்கு )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் மூன்றாம் பகுதியான இதில் எயிறு, ஓதி, கதுப்பு, குறங்கு ஆகிய சொற்களைப் பற்றிக் காணலாம்.
 
எயிறு:

எயிறு என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவர்களது கண்ணையும் கடைக்கண் ஈற்றினையும் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்கள் உருண்டு திரண்டு வெண்ணிற ஒளி வீசுவதால் அவற்றை முத்துடன் ஒப்பிட்டுக் கூறுவது புலவர்களின் வழக்கமே.

இலங்கு முத்து உறைக்கும் எயிறு - ஐங்கு.-185

பெண்கள் தமது கண்களுக்கு அழகுசெய்யும்போது கடைக்கண் ஈற்றினையும் கூரிதாக நீட்டி வரைவது வழக்கம். வெண்மை நிறத்தில் வரையப்பட்ட கூரிய கடைக்கண் ஈற்றினை முல்லை மலர்களின் கூரிய மொக்குகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரிகள் கீழே:

முல்லைத் தொகு முகை இலங்கு எயிறாக - குறு.-126
எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லை - கலி.-31

கடைக்கண் ஈற்றில் கூரிதாக வரையும்போது வெண்மை நிறம் மட்டுமின்றி செம்மை நிறத்திலும் பூசுவது வழக்கம். இதனை முருக்க மலரின் சிவந்த கூரிய மொக்குகளுடன் ஒப்பிடும் பாடல் கீழே:

குவி முகை முருக்கின் கூர்நுனை வை எயிற்று - அக.-317

கடைக்கண்ணில் கூரிய வரியினை வரைவதுடன் மைகொண்டு பூசுவதும் பெண்களின் வழக்கமே. இப்படிப் பூசப்பட்ட இடத்தினைத் துவர்வாய் என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

எயிறு கெழு துவர் வாய் - ஐங்கு.-185, அகம் - 27,29,62
முள் எயிற்றுத் துவர் வாய் - அக.-39,179,385, குறு- 26

பொருளீட்ட வேண்டி தன்னைப் பிரிந்துசென்ற காதலனை மறுபடியும் காணும்போது காதலியின் கடைக்கண்களில் மகிழ்ச்சி மிகுதியினால் ஆனந்தக் கண்ணீர் துளிர்க்கும். மகிழ்ச்சியினால் தோன்றும் இக் கண்ணீர் உப்புக் கரிக்காமல் இன்சுவையாக இருக்கும். இக்கண்ணீரின் சுவையினை அமிழ்தம், நெல்லிக்காய், நுங்கு போன்றவற்றின் சுவையுடன் ஒப்பிட்டுப் பல பாடல்களில் புலவர்கள் பாடியுள்ளனர்.

ஊறுநீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் ..... - கலி.-20
மூவாப் பசுங்காய் நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் - அக. - 335
நுங்கின் இன்சேறு இகுதரும் எயிற்றின் - சிறுபாண்.-28

மகிழ்ச்சியினால் அரும்பிய கண்ணீரைத் துடைக்கும்போது கடைக்கண்ணில் வரையப்பட்டிருக்கும் கூரிய வரியானது கசங்கி அழிந்துவிடும். அதைக் காணுகின்ற காதலன் அவ்வரியினைத் தானே திருத்தி வரைய ஆசைப்படுவதாகக் காதலியிடம் கூறும் பாடல்கள் பல. இதனை எயிறு உண்ணல் என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

மழைக்கண் கலுழ்தலின் .... இலங்கு எயிறு உண்கு என - நற். - 17
நின் கூர் எயிறு உண்கு என - நற். - 204

சிவந்த விரல்களால் கண்களைக் கசக்கி அழுததினால் கடைக்கண்ணில் வரைந்திருந்த வண்ண வரியின் கூர்நுனை மழுங்கியதாகக் கீழ்வரும் பாடல் கூறுகிறது.

சிவந்த மெல்விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் - அக.-176

பெண்கள் தொடர்ந்து தமது கண்களைக் கசக்கி அழும்போது வெப்பத்தினால் கடைக்கண்கள் தீப்போல சிவந்து தோன்றும். இதைப் படம்பிடித்துக் காட்டும் இலக்கிய வரிகள் கீழே:

....எயிறு தீ பிறப்பத் திருகி நடுங்குதும்
பிரியின் யாம் கடும் பனி உழந்தே - அகம். 217

எயிறு என்னும் சொல்லின் வேர் எய் என்பதாகும். இது நீண்ட கூரிய முனையினை உடைய முள், அம்பு போன்றவற்றைக் குறிக்கும். அவ்வகையில் எயிறு என்பது முதல்நிலையில் யானைகளின் கூரிய தந்தம், காட்டுப்பன்றிகளின் கொம்பு போன்றவற்றைக் குறித்து வந்தது. இரண்டாம் நிலையில் பெண்கள் தமது கடைக்கண் ஈற்றில் வரைகின்ற கூரிய வரியினைக் குறிக்கவும் மூன்றாம் நிலையில் நாய், பூனை, பாம்பு போன்றவற்றின் கூர்மையான உட்புறக் கோரைப்பற்களைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. எயிறு பற்றி மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள எயிறு என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

ஓதி:

ஓதி என்னும் சொல்லானது பெண்களின் கண்ணிமையினைக் குறிக்கப் பயன்பட்ட சொல்லாகும். மெல்லிய வரிகளையுடைய தமது கண்ணிமைகளுக்குப் பெண்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் மைபூசியிருக்கும்போது பார்ப்பதற்கு அது வாழைப்பூவின் இதழ் போலவே தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

வாழைப்பூ என பொலிந்த ஓதி - சிறுபாண்: 22
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன
பூவொடு துயல் வரும் - நற் - 225

பெண்கள் தமது கண்ணிமைகளில் சுணங்கு எனப்படுகின்ற பூந்தாதுக்களை அப்பியும் அழகுசெய்வர் என்று கண்டோம். இதைப்பற்றிக் கூறும் பாடல் வரி கீழே:

பொன் பொதிந்தன்ன சுணங்கின் இருஞ்சூழ் ஓதி - நற் - 275

பெண்கள் தமது கண்ணிமைகளின் மேல் மைபூசி அழகுசெய்யும்போது காக்காய்ப்பொன் (மைக்கா) போன்ற ஒளிரும் பொருட்களைக் கலந்தும் பூசுவர். அப்படிப் பூசப்பட்ட பின்னர், அந்த இமைகளை மூடித் திறக்கும்போது மின்னல் ஒன்று வெட்டுவதைப் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறும் பாடல் வரிகள் கீழே:

மின் நேர் ஓதிப் பின்னுப்பிணி விடவே. அகம் - 236
மின் நேர் ஓதி இவளொடு நாளை - நற் - 340

பெண்கள் தமது கண்ணிமையின்மேல் சிறுகோல் அதாவது ஈர்க்குச்சியின் உதவியால் மையினை ஈர்த்துப் பூசி அலங்கரிப்பது வழக்கம். இதனைக் குறிப்பிடுகின்ற பல பாடல்களில் சில மட்டும் கீழே தரப்பட்டுள்ளன.

மை ஈர் ஓதி மடவீர்! நும் வாய் - அகம் - 49
மை ஈர் ஓதி மடவோய்! யானும்நின் அகம் - 389
மை ஈர் ஓதி பெரு மடத்தகையே - நற் -29
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் -57

இப் பாடல்களில் வரும் ஓதி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் தவிர வேறெதுவும் பொருந்தாது. காரணம், பழந்தமிப் பெண்கள் தமது கண்ணிமையில் மட்டுமே மை கொண்டு பூசுவர். ஓதி பற்றி மேலதிக தகவல் அறிய கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

கதுப்பு:

கதுப்பு என்னும் சொல்லானது பெண்களின் கண்ணிமையினைக் குறித்துப் பல இடங்களில் பயின்று வந்துள்ளது. பெண்களின் மையுண்ட கண்ணிமைகள் வேல் போலும் அகற்சியுடனும் கூர்மையுடனும் இருப்பதைக் கூறும் பாடல்வரி:

மறவர் வேல் என விரிந்த கதுப்பின் - நற் 86/2

கண்ணிமைக்கு அழகுசெய்யும்போது மயில்தோகையில் உள்ள கண்போல பலவண்ணங்களில் மைபூசுவதும் உண்டு. இதைப்பற்றிக் கூறும் பாடல்வரி கீழே:

கணம் கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ - மலை 44

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ணங்களால் மட்டுமின்றி கரிய நிற மையினாலும் பூசினர். இப்படிக் கருநிற மையால் பூசப்பட்ட கண்ணிமையினை கரிய மேகத்துடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

புயல் புரை கதுப்பு அகம் உளரிய வளியும் - பரி 21/49
கால்வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே - அகம் 323/13

பெண்களின் கருமை பூசிய கண்ணிமைகளையும் கார்மேகத்தையும் புலவர்கள் ஒப்பிட்டுப் பாடுவதற்குக் கீழ்க்காணும் காரணங்களைச் சொல்லலாம்.

கண்ணிமைகள் கார்மேகம்போல கருமை நிறத்தையும் வடிவத்தையும் கொண்டிருத்தல்
இமைகளை மூடித்திறக்கும்போது மேகத்தின் மின்னலைப் போல ஒளிவீசுதல்.
மேகத்தின் அடியிலிருந்து மழைபொழிவதைப் போலக் கண்ணிமைகளின் கீழிருந்து கண்ணீர் வடிதல்.

பெண்கள் தமது கதுப்பு ஆகிய கண்ணிமைக்கு மைபூசும்போது சந்தனம், தகரம் போன்ற நறுமணப் பொருட்களையும் கூட்டிப் பூசுவர். இப்படிப் பூசுவதால் கண்ணிமைகள் குளிர்ச்சியும் நறுமணமும் ஒளியும் கொண்டு அழகுடன் விளங்கும். இவற்றைத் தண் நறும் கதுப்பு என்று இலக்கியம் கூறுகிறது.

தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் - அகம் 391/6
தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர் - அகம் 141/13,14

இப்படி நறுமணமும் குளிர்ச்சியும் ஒளியும் கொண்டுவிளங்குகின்ற மெல்லிய இதழ் போன்ற கண்ணிமைகளைக் கொன்றை, முல்லை போன்ற பூக்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறுவதும் புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றிய சில பாடல்வரிகள்.

கதுப்பின் தோன்றும் புது பூங் கொன்றை - குறு 21/3
முகைவாய் திறந்த நகைவாய் முல்லை கடிமகள் கதுப்பின் நாறி - அகம் - 244
காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு - கலி 117/10
தோட்டார் கதுப்பினாள் தோள் - குறள் 1105

கதுப்பு பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள கதுப்பு - ஓதி - நுசுப்பு என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

குறங்கு:

குறங்கு என்ற சொல்லானது பெண்களைப் பொறுத்தமட்டில் கண்ணிமையினைக் குறிக்கவே பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் மெல்லிய கண்ணிமைகளில் பலருக்கு இயற்கையாகவே மெல்லிய சில வரிகள் செறிந்து காணப்படும். இக் கண்ணிமைகளைக் கருநிறத்தில் மைபூசி அழகுசெய்யும்போது அவை காண்பதற்கு யானையின் துதிக்கையில் உள்ள வரிகளைப் போலத் தோன்றும். இதைப்பற்றிக் கூறும் பாடல்வரிகள் கீழே:

இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் -  பொருந.
இரும் பிடி தட கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் - சிறுபாண்.
பிடி கை போலும் திரள் குறங்கின்  – சிந்தா-1/353

பெண்கள் வரிகளையுடைய தமது கண்ணிமைகளில் இளஞ்சிவப்பு நிறத்தில் மைபூசி அழகுசெய்திருக்கும்போது பார்ப்பதற்கு அவை வாழைமரத்தில் பூத்திருக்கின்ற வாழைப்பூக்களின் இதழ்களைப் போலவே தோன்றும். இதைப்பற்றி ஓதி என்ற கட்டுரையிலும் கண்டிருக்கிறோம். இங்கேயும் சில பாடல்வரிகள் சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள் – கம்பரா. அயோத். 2/37
குறங்கு என மால் வரை ஒழுகிய வாழை  - சிறுபாண்.
இரு குறங்கின் பிறங்கிய வாழையில் குருகுறங்கும் – கம்பரா. 15/41

பெண்கள் கண்ணிமைகளின்மேல் வண்ணப் புள்ளிகளை வரைந்தும் அழகுசெய்வர். இப்புள்ளிகளைத் தித்தி என்றும் திதலை என்றும் இலக்கியம் கூறுகிறது. இப்படி புள்ளிகள் வரையப்பட்ட ஒரு பெண்ணின் இமைகளின்மேல் ஆலமரத்தின் விழுது ஒன்று தவறுதலாக உரசி அதன் அழகினைக் கெடுத்துவிடுகிறது. இதைப்பற்றிக் கூறும் சங்கப் பாடல் ஒன்று கீழே தரப்பட்டுள்ளது.

கல் அறை கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ வளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை அகல் அமை அல்குல் பற்றி
கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் - அகம் -385

மேலே காணும் அகநானூற்றுப் பாடல் தலைவியை தலைவன் எவ்வாறெல்லாம் அழகுசெய்து மகிழ்ந்தான் என்பதை விவரிக்கிறது. தலைவியானவள் தலைவனுடன் நடந்துவரும் பொழுது, வழியில் இருந்த ஆலமரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த  விழுதுகளின் மேல் தெரியாமல் மோதுகிறாள். இதனால் தலைவியின் நெற்றியில் அணிந்திருந்த அணிகலன்கள் நிலைகுலைந்தன; வண்ணப் பொட்டுகளால் வரையப்பட்டு அழகாக இருந்த கண்ணிமைகள் பாழாயின. இதனால் மனமுடைந்து தலைவி வருத்தமுறுவதைக் கண்ட தலைவன், தலைவியின் கண்ணிமைகளை மயில் தோகையில் இருக்கும் கண்களைப் போலத் தோன்றுமாறு மைபூசி அழகுசெய்கிறான். அதுமட்டுமின்றி, சிறிய பூமாலையினையும் மணிக்கோவையினையும் அவளது நெற்றியில் அணிவித்து அவளை மகிழச் செய்கிறான்.

பெண்களின் கண்ணிமைக்குக் குறங்கு என்று ஏன் பெயர்வந்தது என்று காணலாம். குறுகிய அங்கம் = குறு + அங்கம் = குறங்கம் என்பதே குறங்கு எனத் திரிந்து வழங்கியிருக்கலாம். காரணம், பெண்களின் புற உடல் உறுப்புக்களில் குறுகிய உறுப்பாக அடிக்கடி புலவர்களால் பாடப்படுவது இந்த ‘ கண்ணிமை ‘ யே ஆகும். இக் கண்ணிமைக்கு நுசுப்பு, ஓதி, கூந்தல், மேனி, கதுப்பு எனப் பல பெயர்களும் உண்டு என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். புலவர்கள் கண்ணிமையைப் பாடும்பொழுது, அதன் நுட்பத்தன்மையை அதாவது குறுகிய தன்மையைக் குறிப்பிட்டு, நுணுகிய நுசுப்பு, ஒடுங்கு ஈர் ஓதி என்றெல்லாம் பாடுவது வழக்கம். குறங்கு பற்றிய மேலதிகத் தகவல்களை அறிந்துகொள்ள குறங்கு என்றால் என்ன என்ற ஆய்வுக்கட்டுரையினைப் படிக்கலாம்.

........... தொடரும்...

வியாழன், 27 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 2 ( அல்குல்-அளகம்-ஆகம்-இறை)

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற கட்டுரையின் முதல் பகுதியில் பெண்களுடைய அளகாபுரியின் அழகுச் செல்வங்கள் எவை என்று கண்டோம். இந்த இரண்டாம் பகுதியில் அந்த அழகுச் செல்வங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் தனித்தனியாகச் சுருக்கமாகக் காணலாம்.

அல்குல்:

அல்குல் என்னும் சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் அவரது நெற்றிப் பகுதியினைக் குறிக்கும். அணிகலன்கள் அல்கும் அதாவது பொருந்தும் இடம் என்ற பொருளில் அல்குல் என்ற சொல் பெண்களின் நெற்றியினைக் குறித்துவந்தது. கண்புருவங்களுக்கு மேலாக இருக்கும் இப்பகுதியில் பெண்கள் பல ஓவியங்களை வரைந்து அழகுசெய்வர். இவ் ஓவியங்களில் வரி ஓவியங்களும் புள்ளி ஓவியங்களும் அடங்கும். வரி ஓவியங்களில் நேர்கோட்டு வரிகளும் வளைவான வரிகளும் உண்டு. இவ்வகை ஓவியங்களை வரி என்றும் கோடு என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது.

தட அரவு அல்குல் நுண் வரி வாட ... - கலி. 125.

கடல்அலைகள் போல வளைவான வரிஓவியங்களைத் தாங்கிய நெற்றியினை ' பரவை அல்குல் ' என்று சீவக சிந்தாமணி பல இடங்களில் குறிப்பிடுகிறது.

பரவை அல்குல் .... பாடல் எண்கள் : 1/98, 1/109, 1/191, 2/479, 3/586, 3/606

புள்ளி ஓவியங்களில் நுட்பமான சிறுபுள்ளிகளும் பெரிய வட்டப் பொட்டுக்களும் அடங்கும். இவற்றைத் தித்தி, திதலை, காழ் ஆகிய பெயர்களால் இலக்கியம் குறிப்பிடுகிறது.

திதலை சில்பொறி அணிந்த பல்காழ் அல்குல் .. - நற். 133
பூந்துகில் இமைக்கும் பொலங்காழ் அல்குல் .. - அகம். 387

ஓவியங்கள் மட்டுமின்றி பலவிதமான அணிகலன்களைத் பெண்கள் தமது நெற்றிப் பகுதியில் அணிந்தனர். இந்த அணிகலன்களில் இயற்கை அணிகளாக தழை, மாலை, நெறி, பிணையல், கண்ணி ஆகியவற்றை இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

பல்பூ பகைத்தழை நுடங்கும் அல்குல் ..- நற்.8
கருங்கால் வேங்கைச் செம்பூ பிணையல் ஐது ஏந்து அல்குல் .. - அகம்.345

இயற்கை அணிகள் மட்டுமின்றி செயற்கை அணிகளாக மேகலை முதலானவற்றை அணிவதும் உண்டு. இலக்கியத்தில் இது மணிமேகலை, மேகலை, கலை, கலாபம், கோடு போன்ற பெயர்களால் குறிப்பிடப்படுகிறது. இதில் மணிகளையும் காசுகளையும் கோர்த்து நெற்றியில் அணிவர்.

மிடைந்த மாமணி மேகலை ஏந்து அல்குல் - சிந்தா. 950
பல்காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் - அகம். 75

பெண்கள் தமது நெற்றியில் அணிகின்ற மேகலையினைச் சிறுகுழந்தைகளுக்கு அணிவிக்கும்போது குழந்தைகளின் நெற்றியில் கட்டாமல் அவரது இடுப்பில் கட்டிவிட்டு அழகுபார்ப்பர். இதனையே இப்போது அரைஞாண் என்று அழைக்கிறோம். துவக்கத்தில் பெண்களின் நெற்றிப்பகுதியினை மட்டுமே குறித்துவந்த அல்குல் என்ற சொல்லானது நாளடைவில் இடுப்புப் பகுதியினைக் குறிக்கத் துவங்கியதன் காரணம் இதுவே ஆகும். ஆயினும் குழந்தைகள், குழந்தைத் தெய்வங்களுக்கு மட்டுமே இப்பொருள் பொருந்துவதாகும்.

குழந்தைகளுக்கு மட்டுமின்றி, பசுக்கள், கன்றுகள், யானைகள் போன்ற விலங்குகளின் நெற்றியிலும் ஓவியங்களை வரைந்தும் அணிகலன்களை கட்டியும் அழகுபார்ப்பது பழந்தமிழர் வழக்கம்.

பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி
கவைதாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் - பெரும். 243

நல்லபாம்பின் விரிந்த படப்பொறி, தேர்த்தட்டு, கடல் அலை, பொன் ஆலவட்டம், பூக்கூடை போன்றவை பெண்களின் அல்குலுக்கு அதாவது நெற்றிக்குக் காட்டப்படுகின்ற சில உவமைகள். அல்குல் பற்றி மேலும் விளக்கமாகத் தெரிந்துகொள்ள ' அழகின் மறுபெயர் அல்குல் ' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

அளகம்:

அளகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டிலும் அவரது கண்ணிமைகளைக் குறிப்பதாகும். அழகு மிக்கது என்ற பொருளில் பெண்களின் மையுண்ட கண் இமைகளைக் குறிக்க இச்சொல் பயன்படலாயிற்று. பொதுவாகப் பெண்களின் அளகத்தினை அதாவது மையுண்ட கண்ணிமையினைக் கார்மேகம், கருவண்டு, நிலவின் கறை, கரும்புவில் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கம்.

....அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திருநுதல் .. - நற். 377
( பொருள்: விரிந்த வானில் கரிய மேகத்தினால் சிறிதே மறைக்கப்பட்ட ஒளிவீசும் முழுநிலவினைப் போல ஒளிவீசும் விழிகளை மறைத்தக் கருமை பூசிய இமைகள் ...)

....அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறை நறும் தாமரை முகமும் நித்தில முறுவலும் .... - கம்ப. கிட்.9.
( பொருள்: நத்தையின் மேலொடு போல் குவிந்து தோன்றும் இமைகளும் அந்த இமையாகிய வண்டுகள் ஊதுகின்ற நிறைந்த தாமரைமலர் போன்ற முகமும் முத்துப் போன்ற கண்களும் ...)

..... மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள் - கம்ப. அயோ.3
(பொருள்: ...நிலாவில் தோன்றும் கறையினைத் துடைப்பவளைப் போல ஒளிரும் கண்ணுக்கு மேல் இமையில் எழுதப்பட்டிருந்த அருமையான மையணியினையும் அழித்தாள்...)

செந்தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்துமுறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ வாளி தீட்டும் இடம் - நள. 42
(பொருள்: செந்தேன் போலும் இனிய மொழியினைப் பேசுகின்ற இவளின் செறிந்த வரிவரியான மைபூச்சுக்களை உடைய இமைகளின் கீழ் இருப்பவைக் கண்கள் அல்ல பிறைச்சந்திரன் என்று கூறுவார். ஆனால் இதுதான் மலரம்புகளை உடைய மன்மதன் நாளும் வந்து தனது கரும்புவில்லைச் சார்த்திவைத்துத் தான் எய்கின்ற அம்புகளைக் கூர்செய்யும் இடமாகும்..)
      
பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மையினைப் பூசி அழகுசெய்வதுடன் கொன்றை, நீலம், அடம்பு, அசோகம் உட்பட பல்வேறு பூக்களின் தாதுக்களைத் தமது இமைகளின்மேல் அப்பிக் கொள்வதும் வழக்கமே. 

சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி ... - திணை.150. - 1
( பொருள்: கொன்றை, நீலம், அடம்பு மற்றும் அசோக மலர்களின் தாதுக்களை ஆய்ந்து புடைத்தபின்னர் அவற்றைத் தமது இமைகளின் மேல் அப்பியிருக்கும் ... )

இப்படிப் பலவண்ணங்களால் பூசியும் நறுமணம் மிக்கப் பொருட்களைக் குழைத்துக்கூட்டியும் பூந்தாதுக்களையும் அப்பியிருத்தலால் பார்ப்பதற்குப் பூவிதழ்களைப் போலவே தோன்றும் கண்ணிமைகளை உண்மையான பூவிதழ்களே என்று மயங்கி வண்டினங்கள் அவற்றில் தேன் உண்ண விரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருவதுமுண்டு.

..... சண்பகப் பொதும்பர் தாது தேர்ந்து உண்டு
மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு.. - சிலப். புகார். 2

( பொருள்: ...சண்பகச் சோலையிலே பூந்தாதுக்களைத் தேர்ந்துண்ட பின்னர், அச் சோலையிலிருந்த பெண்களின் அழகிய முகத்தில் ஒளிரும் குழல்விளக்குப் போன்ற இமைகளுக்குள் புகுவதற்கு விரும்பி ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள்...)

பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக பல வண்ணங்களில் பூசி அழகு செய்வது மட்டுமின்றி ஏற்கெனவே அழகுசெய்யப்பட்டுத் தயாராக இருக்கின்ற அணிகளை அப்படியே இமைகளின் மேல்பகுதியில் புருவங்களுக்குக் கீழாகப் பொருத்திப் பசைகொண்டு ஒட்டவைத்துக் கொள்வதும் உண்டு. இவ்வகை அணிகளைத் தான் பூண் என்றும் கச்சு என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இலக்கியப் பாடல்களில் வருவதான முலைப்பூண், முலைக்கச்சு ஆகியவை இமைகளுக்கு மேலாக அணியப்படுகின்ற இந்த அணிகலன்களையே குறிக்கும். அளகம் ஆகிய இமைகளின் மேலாக ஏற்றப்படும் பாரம் என்பதால் இதனை அளகபாரம் என்றும் கூறலாயினர். அளகம் பற்றிய மேலதிக தகவல்களுக்கு ' அளகம் என்றால் என்ன?' என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

ஆகம்:

ஆகம் என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் சில இடங்களில் கண்ணையும் சில இடங்களில் கண்ணிமையினையும் குறிப்பதற்காகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்கள் அழத்துவங்கும்போது கண்களில் நீர் உறைத்து அதாவது திரண்டு முத்துமுத்தாய் நிற்கும். இக்கண்ணீரைப் பனி என்று இலக்கியம் கூறுகிறது.

ஆகத்து அரி பனி உறைப்ப நாளும் - குறி 249
கண் பனி ஆகத்து உறைப்ப கண் பசந்து - அகம் 146/11
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப - அகம் 299/15

பெண்கள் தமது கண்ணிமையின் மேல் சந்தனத்தைக் குழைத்துப் பூசுவது வழக்கம். பூசுவதுடன் கொடிபோல எழுதியும் இருப்பர் என்று இலக்கியங்கள் கூறுகின்றன.

ஆகம் சாந்தின் அணிபெற எழுதி - சிந்தா:9 2091/3
ஏந்து எழில் ஆகம் சாந்தின் இடு கொடி எழுதி - சிந்தா:10 2181/1
சாந்தம் ஆகம் எழுதி தகை மா மலர் - சிந்தா:12 2479/3

சந்தனம் மட்டுமின்றி, பெண்கள் தமது கண்ணிமைகளில் பூந்தாது (சுணங்கு)க்களைக் கொண்டும் அலங்காரம் செய்தனர் என்னும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் பறைசாற்றுகின்றன.

நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம்  - கலி 4/17
சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த - அகம் 161/12

பெண்களின் மையுண்ட கண்ணிமையினைப் பூவிதழ்களுடன் (முகை) ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கமே. கீழே சில பாடல்வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - திரு 139
தளிர் ஏர் ஆகம் தகைபெற முகைந்த - அகம் 177/18

ஆகம் என்ற சொல் முலை என்ற சொல்லுடன் இணைந்து ' முலை ஆகம் ' என்று பல இடங்களில் பயின்றுவந்துள்ளது. முலை என்ற சொல்லுக்கும் கண், கண்ணிமை ஆகிய பொருட்கள் உண்டு என்பதால், ' முலை ஆகம் ' என்பதற்கு முலை ஆகிய ஆகம் என்று விரித்து கண் என்றோ இமை என்றோ இடத்திற்கேற்றாற்போல் பொருள்கொள்ளலாம்.

ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து - நெடு 136, அகம் 206/9, அகம் 75/12
கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து - அகம் 240/11
மென் முலை ஆகம் கவின் பெற - கலி 40/33

ஆகமும் முலையும் தூக்கத்துடன் (துயில்) தொடர்புடையதைக் கீழ்க்காணும் பாடல் தெளிவாக்குகிறது.

அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே - அகம் 69/20

ஆகம் பற்றிய மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள ' தொடி ஆகம் தொடர்பு என்ன? ' என்ற கட்டுரையினைப் படிக்கலாம்.

இறை:

இறை என்ற சொல்லானது பெண்களைப் பொருத்தமட்டில் கண்ணிமையினைக் குறிக்கவே பெரிதும் பயன்படுத்தப் பட்டுள்ளது. பெண்களின் கண்ணிமையினைக் குறிக்குமிடத்து, அதன் மென்மைத் தன்மையினையும் தாழ்ந்து இருக்கும் நிலையினையும் இலக்கியம் பெரிதும் பேசுகிறது.

சில்வளை சொரிந்த மெல்இறை - அகம்.19

காதலின்போது நாணத்தினால் தலைவி தலைவனை நேராகப் பார்க்காமல் தலைதாழ்த்தியே இருப்பாள். அப்போது அவளது கண்இமை தாழ்ந்தே இருக்கும். இதை சாய் இறை என்றும் வணங்கு இறை என்றும் இலக்கியம் கூறுகிறது.

சாய்இறைப் பணைத்தோள் அவ்வரி அல்குல் - ஐங்கு.481
நுணங்குகண் சிறுகோல் வணங்குஇறை மகளிரொடு - அகம்.97

மணமான பின்னர் கணவனை மனைவி நோக்கும்போது அவளின் கண்ணிமை தாழ்ந்திராமல் நேராக இருக்கும். இதை நேர் இறை என்று குறிப்பிடுகிறது இலக்கியம்.

நேர்இறை பணைத்தோட்கு ஆர் விருந்தாக - ஐங்கு - 468

பெண்கள் தங்கள் கண்ணிமையைப் பல வண்ணங்களால் பூசி அழகு செய்யும் வழக்கத்தினைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வண்ணம் நீவிய வணங்குஇறைப் பணைத்தோள் - புறம்.32

கடவுளைத் தொழும்போது நம் கண்களும் கைகளும் கூப்பியபடி அதாவது மூடியபடி இருக்கும். இதனைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறுகிறது.

வல்லே வருக, வரைந்த நாள்; என,
நல்இறை மெல்விரல் கூப்பி,
இல்லுறை கடவுட்கு ஓக்குதும், பலியே!  - அகம். 282

கண்ணிமையின் முதன்மையான பணி இமைத்தல் ஆகும். கண் இமைக்கும் நேரத்தினை இறைப்பொழுது என்றும் இறைப்போது என்றும் இறைமாத்திரை என்றும் இலக்கியம் குறிப்பிடுகிறது.

உடல் உடைந்தால் இறைப்போதும் வையாரே.-  திருமந்திரம் - 16
எழுமையும் கூடி ஈண்டிய பாவம் இறைப்பொழுது அளவினில் எல்லாம் கழுவிடும் - நாலா.395.
தத்தன் இறைப்பொழுதின் கண்கூடி வாளினால் எறியலுற்றான் - பெரியபுராணம்: 482
மறையன் மாமுனிவன் மருவார்புரம் இறையின் மாத்திரையில் எரியூட்டினான் - தேவாரம்: 479.

இறை என்ற சொல்லானது வளை என்ற சொல்லுடன் இணைந்து இறைவளை என்று பல இடங்களில் பயின்று வந்துள்ளது. இந்த வளை என்பது இமைகளின்மேல் விளிம்பில் வளைத்து எழுதப்படும் வட்டமான மையணியினைக் குறிக்கும். பெண்கள் கண்கலங்கி அழும்போது இந்த வளையாகிய மையணியானது கண்ணீர் பட்டு நெகிழ்ந்து கண்ணீருடன் போகும். இதனை வளை நெகிழ்தல் என்று இலக்கியம் குறிப்பிடுகிறது.

துறைநணி ஊரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்பு ஓடும்மே.- ஐங்கு  -10
வளர்பிறை போல வழிவழிப் பெருகி இறைவளை நெகிழ்த்த எவ்வ நோயொடு - குறு - 289
செவ்வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி இறைவளை நெகிழ்ந்த நம்மொடு  - அகம். 250

காதலனின் பிரிவினால் கண்கள் கலங்கி அழுது அழுது காதலியின் இமைகளும் வெம்மையுற்றன. அவ் வெம்மை தாளாத காதலி ஒருத்தி தன்மீது மழைநீர் மொத்தமும் பொழிய மேகத்திடம் வேண்டுவதைப் பாருங்கள்.

கனைஇருள் வானம்! - கடல் முகந்து, என் மேல்
உறையொடு நின்றீயல் வேண்டும்; ஒருங்கே -
நிறைவளை கொட்பித்தான் செய்த துயரால்
இறைஇறை பொத்திற்றுத் தீ. - கலி.145.

கண்ணின் இமைபோல மக்களை / உயிர்களைக் காப்பதால் அரசனுக்கும் கடவுளுக்கும் இறை என்ற பெயர் ஏற்பட்டது. கண்ணின் இமைபோல வீட்டின் முன்னால் தாழ்வாக அமைந்திருப்பதால் தாழ்வாரத்திற்கும் இறை என்ற பெயர். சாகும் தருணத்தில் இமைகள் திறந்தநிலையில் விழிகள் அசைவற்று நிற்பதனை இறைக்குத்து என்றும் கண்ணிமைகளை மூடி ஓய்வெடுப்பதனை இறைகூர்தல் என்றும் அகராதி கூறுகிறது. இறையினைப் பற்றி இன்னும் தெரிந்துகொள்ள இறை என்றால் என்ன?. என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம்.

............ தொடரும்...

செவ்வாய், 25 ஏப்ரல், 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - பகுதி 1

முன்னுரை:

மலையும் மலைசார்ந்த இடமும் குறிஞ்சித்திணை என்றான் மறத்தமிழன். காடும் காடுசார்ந்த இடமும் முல்லைத்திணை என்றான் கொடுந்தமிழன். வயலும் வயல்சார்ந்த இடமும் மருதத்திணை என்றான் வண்டமிழன். கடலும் கடல்சார்ந்த இடமும் நெய்தல்திணை என்றான் காவியத்தமிழன். இதேவரிசையில், கண்ணும் கண்சார்ந்த இடமும் எப்படி அழைக்கப்பெறும்?. இதைப் பற்றிய விரிவான ஆய்வே இக்கட்டுரை ஆகும்.

திணையும் பூவும்:

பழந்தமிழர்கள் வாழ்ந்த இடத்தினை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகைத் திணைகளாகப் பிரித்து அவற்றுக்குத் துறை முதலானவற்றையும் வகுத்துச் சங்கப் புலவர்கள் பல பாடல்களை இயற்றினர் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொரு திணைக்கும் பெயர் வைக்கும்பொழுது அந்த நிலத்தில் மிகச் சிறப்பாக வளர்கின்ற ஒரு பூக்கும் தாவரத்தின் பெயரையே அந்தத் திணையின் பெயராகச் சூட்டினர் புலவர். அவ்வகையில், மலைநிலங்களில் சிறப்பாக வளர்ந்து பூக்கின்ற குறிஞ்சியையும், காடுகளில் சிறப்பாக வளர்ந்து பூக்கின்ற முல்லையினையும், நீர்சார்ந்த வயல் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்ற மருதத்தினையும், கடலோரப் பகுதிகளில் சிறப்பாக வளர்கின்ற நெய்தலையும் அந்தந்த நிலங்களின் திணைகளுக்குப் பெயராகச் சூட்டினர். சங்கப் புலவர்கள் கையாண்ட இந்த முறையினைப் பின்பற்றிக் கண்ணும் கண்சார்ந்த இடத்துக்குமுரிய பெயரை வைக்கலாம்.

கண்ணிமை என்னும் பூ:

கண் மற்றும் கண்சார்ந்த இடத்தில் பூக்கின்ற பூ எது? என்ற கேள்விக்கான பதில்: கண்ணிமை. காரணம், பெண்கள் தமது கண்ணிமையினைத் தான் பல வண்ண மைகொண்டு பூசியும் பூந்தாதுக்கள் உட்பட பலவிதமான பொருட்களைப் பயன்படுத்தியும் பார்ப்பதற்குப் பூவிதழ்களைப் போலத் தோன்றுமாறு அழகுசெய்வர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். வேங்கை, கோங்கு, முல்லை, முருக்கம், கொன்றை, குவளை, தாமரை, நெய்தல் போன்ற பல பூக்களின் இதழ்களைப் போல இமைகளை அழகுசெய்வது பெண்களின் வழக்கமே. பூக்களில் தேன் நுகரும் வண்டினங்களும் பூவிதழ் போன்று அழகுசெய்யப்பட்டப் பெண்களின் கண்ணிமைகளை மெய்யான பூக்களாகக் கருதி மயங்கி அவர்களையே சுற்றிச்சுற்றி வரும் என்றும் பல பாடல்களில் கண்டிருக்கிறோம். ஆக, கண்ணும் கண்சார்ந்த இடத்திலும் பூப்பது அதாவது பூப்போலத் தோன்றுவது கண்ணிமையே என்பதால் கண்ணிமையினை அடிப்படையாகக் கொண்டே பெயர் அமைக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

இமையினைக் குறிக்கும் பல்வேறு பெயர்கள்:

தமிழில் ஒருபொருட் பன்மொழி என்ற பெயர்வகை உண்டு. அதாவது ஒரே பொருளைக் குறிப்பதற்குப் பல்வேறு பெயர்ச்சொற்களை இலக்கியங்களில் பயன்படுத்தி இருப்பர். அவ்வகையில், கண்ணிமையைக் குறிக்கும் பல்வேறு பெயர்களை முதலில் அறியவேண்டியது அவசியமாகிறது. இதுவரை ஆய்வுசெய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளவற்றில் கண்ணிமைகளைக் குறிப்பனவாக அறியப்படும் பல்வேறு பெயர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூந்தல், மேனி, முலை, இறை, அளகம், நுசுப்பு, ஓதி, கதுப்பு, மருங்குல், ஆகம், குறங்கு, சிறுபுறம், நுதல், வயிறு, கொங்கை.

பெயரைத் தெரிவுசெய்யும் முறை:

மேற்கண்ட பல்வேறு பெயர்ச்சொற்களில் கண்ணும் கண்சார்ந்த இடத்திற்கும் எந்தப் பெயரை வைப்பது?. எந்த அடிப்படையில் எந்தப் பெயரைத் தெரிவு செய்வது?. குழப்பமான வேலை தான் இல்லையா?. எனவே முதலில் மேற்காணும் பட்டியலில் இருந்து இமைகளை மட்டுமே குறிக்கின்ற பெயர்களைத் தெரிவு செய்யலாம்.

மேற்கண்ட பல்வேறு பெயர்களில் மேனி, முலை, மருங்குல், ஆகம், சிறுபுறம், நுதல், வயிறு, கொங்கை ஆகியவை இமைகளைத் தவிர கண்விழிகளையும் குறிக்கப் பயன்படுகின்றன. எனவே அவற்றைப் பட்டியலில் இருந்து நீக்கிவிட்டால் கூந்தல், இறை, அளகம், நுசுப்பு, ஓதி, கதுப்பு, குறங்கு ஆகிய ஏழு பெயர்களே எஞ்சும். இவற்றிலும் இறையும் குறங்கும் ரகர றகர வேறுபாட்டால் வேறுபொருட்களைக் குறிக்கும் தன்மை கொண்டனவால் அவையும் இப்பட்டியலில் இருந்து நீக்கப்படுகின்றன.

இனி எஞ்சியுள்ள ஐந்து பெயர்களில் இருந்து ஒரு பெயரைத் தெரிவுசெய்ய வேண்டும். அப்படித் தெரிவுசெய்த பின்னர், அப்பெயருடன் இடத்தினைக் குறிக்கின்ற ஒரு பெயர்ச்சொல்லினைப் பின்னொட்டாகச் சேர்க்கவேண்டும். அதாவது குறிஞ்சித்திணை என்பதில் குறிஞ்சியுடன் திணை என்னும் பின்னொட்டு இணைந்திருப்பதைப் போல.

இடத்தைக் குறிக்கும் பல்வேறு பெயர்களான திணை, ஊர், நகர், புரி, அகம் போன்றவற்றை ஆய்வுசெய்ததில் புரி என்பது சிறப்புடையதாக அறியப்பட்டது. காரணம் புரி என்பது பெயர்ச்சொல்லாக ஒரு இடத்தினைக் குறிப்பதுடன் வினைச்சொல்லாக விளங்குதல், ஒளிர்தல் ஆகிய வினையினையும் குறிக்கவல்லது. ஒளிர்தல், விளங்குதல் ஆகிய வினையானது இமையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால், புரி என்ற சொல்லே பின்னொட்டாக அமைக்கப்படும் சிறப்பினைப் பெறுகிறது. புரி என்னும் சொல்லினை எஞ்சியிருக்கின்ற ஐந்து இமைப்பெயர்களுடன் பின்னொட்டாக இணைப்பதன் மூலம் கீழ்க்காணும் சொற்களைப் பெறலாம்.

கூந்தல்புரி, அளகாபுரி, நுசுப்புபுரி, ஓதிபுரி, கதுப்புபுரி.

அளகாபுரி என்னும் அழகுபுரி:

மேற்கண்ட ஐந்து பெயர்களுள் அளகாபுரி என்னும் பெயர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது. காரணம், இப் பெயரானது குபேரனின் நகரத்தினைக் குறிப்பதாக அகராதிகள் கூறுகின்றன.

அளகாபுரி aḷakā-puri , n. < id. +. City of Kubēra; குபேரநகரம். (பாரத. மணிமான். 15.)

குபேரனைப் பல்வேறு செல்வங்களின் தலைவனாகப் புராணங்கள் கூறுகின்றன. அவ்வகையில், குபேரனுடைய அளகாபுரியில் செல்வங்கள் கொட்டிக் கிடக்கும் என்று சொல்லத் தேவையில்லை. செல்வங்கள் குவிந்து கிடக்கின்ற ஒரு ஊரில் அழகுக்கும் அலங்காரத்திற்கும் பஞ்சமிருக்காது. எனவே அளகாபுரியினை அழகுபுரி என்று கூறுவதிலும் தவறில்லை. அளகாபுரி என்றும் அழகாபுரி என்றும் தமிழ்நாட்டில் பல ஊர்கள் உண்டு. தஞ்சாவூருக்கு அளகாபுரி என்ற பெயரும் இருப்பதாக அகராதிகள் கூறுகின்றன.

கண்ணும் கண்சார்ந்த இடமும் அளகாபுரி:

அளகாபுரியில் ஏராளமான பொன்னும் முத்தும் வெள்ளியும் வைரவைடூரியங்களும் பல்வேறு நிதிகளும் கொட்டிக் கிடக்கும் என்று மேலே கண்டோம். இந்த நவமணி நிதியத்தினால் மஞ்சள், வெண்மை, செம்மை, பச்சை, நீலம் என்று பல வண்ணங்களில் ஒளிர்கின்ற அளகாபுரியினைப் போல பெண்களின் அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகள் ஒளிர்வதை முன்னர் கண்டோம்.

அழகிய வேலைப்பாடுகளால் பொலிவுபெற்ற பெண்களின் கண்ணிமைகள் பூவிதழ்களைப் போலத் தோன்றுதலாலும் குபேரனின் நகரத்துக்கு ஈடாக பல வண்ணங்களில் ஒளிர்ந்து விளங்குதலாலும் கண்ணும் கண்சார்ந்த இடத்தினையும் அளகாபுரி அல்லது அழகாபுரி என்ற பெயரால் அழைக்கலாம்.

அளகாபுரியின் அழகுச்செல்வங்கள்:

குபேரனின் அளகாபுரியில் பொருட்செல்வங்கள் கொட்டிக் கிடப்பதைப்போல பெண்களின் அளகாபுரியிலும் பல செல்வங்கள் கொட்டிக்கிடக்கின்றன. ஆம், பெண்கள் தமது பெருஞ்செல்வங்களாகக் கருதுவது தமது கண்ணையும் கண்சார்ந்த இடங்களையும் தான். இதைப்பற்றி மருங்குல் என்றால் என்ன?. என்ற கட்டுரையிலும் கொங்கை என்றால் மார்பகமா?. என்ற கட்டுரையிலும் முன்னர் கண்டோம். அவ்வகையில், பெண்களின் அளகாபுரியில் காணப்படுகின்ற அழகுச்செல்வங்கள் எவை என்று கீழே வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

அல்குல்,
அளகம்,
ஆகம்,
இறை,
எயிறு,
ஓதி,
கதுப்பு,
குறங்கு,
கூந்தல்,
கொங்கை,
சிறுபுறம்,
தோள்,
நுசுப்பு,
நுதல்,
மருங்குல்,
முகம்,
முறுவல்,
முலை,
மேனி,
வயிறு,
புருவம்
.

இந்த அழகுச்செல்வங்களைப் பற்றித் தனித்தனியே காணலாம்.
........ தொடரும்.

சனி, 15 ஏப்ரல், 2017

அளகம் என்றால் என்ன?

முன்னுரை:

சங்ககாலம் உட்பட பல காலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்து இன்றைய காலத்தில் பேச்சுவழக்கில் இருந்து ஒழிந்துபோன பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் ' அளகம் ' என்ற சொல்லாகும். இச்சொல்லுக்கு இன்றைய அகராதிகள் பல பொருட்களைக் கூறி இருந்தாலும் அவற்றில் ஒன்றுகூடப் பொருந்தாத நிலை பல இலக்கியங்களில் காணப்படுகின்றது. இது இச்சொல்லுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எப்படிப் பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் காணலாம்.

அளகம் - சொல்பயன்பாடும் பொருட்களும்:

அளகம் என்ற சொல்லானது தமிழ் இலக்கியங்களில் இதுவரை கண்டறியப்பட்ட நிலையில் கீழ்க்காணும் எண்ணிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சங்க இலக்கியம் - 1
பதினெண் கீழ்க்கணக்கு - 1
சிலப்பதிகாரம்- 2
சிந்தாமணி - 1
கம்பராமாயணம் - 16
நளவெண்பா - 1
பெருங்கதை - 2

ஆக மொத்தம் 24 இடங்களில் பயிலப்பட்டு வந்துள்ள அளகம் என்ற சொல்லுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைக் கூறியுள்ளன.

 அளகம்¹ aḷakam n. < alaka. Curls of hair on the forehead; நுதலைச்சார்ந்த முன்னுச்சிமயிர். halā. Rain-water; மழைநீர்.  Porcupine's quill; பன்றி முள். alaka. Woman's hair; பெண்மயிர். Curl; மயிர்க் குழற்சி.

அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

அளகம் என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் கூறியுள்ள பொருட்களான பெண்களின் முன்னுச்சி மயிர், தலைமயிர், மழைநீர், பன்றிமுள் போன்ற எவையும் பொருந்தாத பல இடங்கள் உள்ளன. அவற்றை இங்கே காணலாம்.

.... அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே - நற். 377

இப்பாடலில் வரும் 'அளகம்' என்பதற்கு மயிர் என்று பொருள்கொண்டு, 'அளகம் சேர்ந்த திருநுதல்' என்பதற்கு 'மயிர் சேர்ந்த நெற்றி' என்று விளக்கம் கூறுகிறார்கள். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், எந்த ஒரு பெண்ணுக்கும் தலையில் தான் மயிர் இருக்குமே ஒழிய நெற்றியில் மயிர் இருக்காது; மிகவும் அரிதாக நெற்றியில் இருந்தாலும் அது அப்பெண்ணுக்கு அழகு சேர்க்காது; அசிங்கமாகவே கருதப்படும். மேலும் அதை எந்தவொரு பெண்ணும் விரும்பமாட்டார். அசிங்கமான ஒன்றைப் பற்றிப் புலவர்களும் புகழ்ந்து பாடமாட்டார்கள். எனவே இப் பாடலில் வரும் அளகம் என்பது மயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

..... மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு - சிலப். புகார். 2

இப்பாடலில் வரும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருளைக் கொண்டால், பெண்களின் ஒளிமிக்க முகத்திலிருக்கும் சுருண்ட மயிருக்குள் புகுவதற்காக ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள் ' என்ற விளக்கம் கிடைக்கிறது. இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மஞ்சள் முதலானவற்றைப் பூசி முகத்தில் மயிர் வளராமல் பார்த்துக் கொள்வது பெண்களின் வழக்கம். முகத்தில் மயிர் வளர்வதனை எந்த ஒரு பெண்ணும் விரும்பாத நிலையில், அந்த மயிருக்குள் புகுவதற்காக வண்டினங்கள் ஏங்கி அவளையே சுற்றி வருகின்றன என்று விளக்கம் கூறுவது சிறிதும் ஏற்புடைய கருத்தல்ல என்பது எளிதில் விளங்கும். ஆக, இப்பாடலிலும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருள் பொருந்தாது என்பது தெளிவாகிறது.

கோதையும் குழலும் தாது சேர் அளகமும் ... - சிலப். புகார். 8

இப்பாடலில் வரும் அளகம் என்பதற்கு மயிர் என்ற பொருளைக் கொண்டால், தாது சேர் அளகம் என்பதற்கு பூந்தாதுக்களைக் கொண்ட மயிர் என்ற விளக்கம் வரும். இவ் விளக்கமும் பொருந்தாது. காரணம், பெண்கள் தமது தலைமயிரில் பூந்தாதுக்களைத் தூவிக்கொள்ளவோ பூசிக்கொள்ளவோ மாட்டார்கள். இதிலிருந்து இப்பாடலில் வரும் அளகம் என்பதும் மயிரையோ தலைமயிரையோ குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது. இதேபோல
கீழ்க்காணும்பாடலிலும்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      
 ... கொய் பூந்தாது கொண்டு அளகத்து அப்பி - சிந்தா. 2948

கொய்த பூக்களின் தாதுக்களைக் கொண்டு அளகத்தில் அப்பியிருப்பதனை மேற்காணும் பாடல்வரி கூறுகிறது. பெண்கள் தமது தலைமயிரில் பூந்தாதுக்களைக் கொண்டு அப்புவது வழக்கம் இல்லை என்பதால், இப்பாடலில் வரும் அளகம் என்பதும் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது உறுதியாகிறது. இதுபோல இன்னும் பல இடங்கள் இருக்கின்ற நிலையில், அவை பற்றிக் கீழ்வரும் பகுதிகளில் விளக்கமாகக் காணலாம்.

அளகம் - புதிய பொருள் என்ன?

அளகம் என்ற சொல் குறிக்கின்ற புதிய பொருள்:

கண்ணிமை.

நிறுவுதல்:

அளகம் என்ற சொல்லுக்கு கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்துகின்றது என்று கீழே பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் காணலாம். அதற்கு முன்னால், பெண்களின் அளகத்தினை எந்தெந்தப் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர் என்பதைப் பற்றி அறிந்துகொண்டால், அதன் மூலமாக அளகம் என்பது கண்ணிமையினைத் தான் குறிக்கும் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

அளகத்திற்கான உவமைகள்:

பெண்களின் அளகத்தினைக் கீழ்க்காணும் பொருட்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர்.

கார்மேகம்
கருவண்டு
நிலவின் கறை
கரும்புவில்

அளகமும் கார்மேகமும்:

பெண்களின் கூந்தலாகிய கண்ணிமையினைக் கார்மேகத்துடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கமே. இதைப்பற்றி விரிவாக, பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையில் ஏற்கெனவே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். அதைப்போலவே, இங்கு பெண்களின் அளகமாகிய கண்ணிமையினையும் கார்மேகத்துடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியிருக்கின்றனர். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

....அகல் இரு விசும்பின் அரவு குறைபடுத்த
பசும் கதிர் மதியத்து அகல் நிலா போல
அளகம் சேர்ந்த திருநுதல்
கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே - நற். 377

( பொருள்: விரிந்த வானில் கரிய மேகத்தினால் சிறிதே மறைக்கப்பட்ட ஒளிவீசும் முழுநிலவினைப் போல ஒளிவீசும் விழிகளை மறைத்தக் கருமை பூசிய இமைகள் கழன்று விழுவதுபோல மெலியச் செய்யும் நோய் ஆகிவிட்டதே...)

இப்பாடலில் வரும் நுதல் என்பது கண்விழியினையும் அரவு என்பது மேகத்தையும் குறிக்கும். இதைப்பற்றி நுதலும் நுதலப்படாத கருத்துக்களும் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். தலைவி தனது இமைகளின்மேல் கரிய மைபூசி இருக்கிறாள். வெண்ணிற ஒளிவீசும் கண்விழிகள் கீழிருக்க அதனை சற்றே மேலிருந்து மறைப்பதைப் போல கருமை நிறத்தில் அளகம் அதாவது கண்ணிமைகள் இருக்க, இது பார்ப்பதற்கு முழுநிலவின் ஒரு பகுதியினை பெரிய கார்மேகமொன்று மறைத்திருப்பதைப் போலத் தோன்றுகிறது புலவருக்கு. இப்பாடலில், முழுநிலவினை விழிகளுக்கும் முழுநிலவினை மறைக்கின்ற கார்மேகத்தினை கண்ணிமைகளுக்கும் ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். மிகப் பொருத்தமான உவமைதான் இல்லையா?.

இப் பாடலில் கூறப்பட்டிருக்கும் உவமையினைப் போலவே கம்பரும் ஒரு பாடலில் கூறுவதைப் பாருங்கள். 

விதியது வகையால் வான மீன்இனம் பிறையை வந்து
கதுவு உறுகின்றது என்ன கொழுந்து ஒளி கஞலத் தூக்கி
மதியினைத் தந்த மேகம் மருங்கு நா வளைப்பது என்ன
பொதி இருள் அளக பந்தி பூட்டிய பூட்டும் இட்டார் - கம்ப. பால.22

( பொருள்: வானில் ஒளிரும் விண்மீன்கள் எல்லாம் நெருங்கிச் சென்று நிலவினைப் பற்றித் தீண்டுவதைப் போல  இளம்பெண்கள் கொழுந்து ஒளியாம் சீதையை நெருங்கித் தூக்கி, நிலவினைப் புறந்தந்த மேகமொன்று மீண்டும் அதனை ஒருபுறமாக வளைத்து மறைப்பதைப் போல சீதையின் இருள்நிற இமைகள் தாழுமாறு அதன் மேலாக அணிகலன்களைப் பூட்டினர். )

இப்பாடலில் வரும் கொழுந்து ஒளி என்பது சீதையைக் குறிப்பதாகும். சீதையை நிலவுக்கும் இளம்பெண்டிரை விண்மீன்களுக்கும் உவமையாக்கினார் கம்பர். அளகபந்தி என்பது இமையின் மேலுள்ள வரிவரியான மைப்பூச்சுக்கள். ஐம்பால் கூந்தல் என்றும் இதனைக் குறிப்பிடுவர். நிலவினை முழுவதுமாய் மறைத்திருந்த கார்மேகம் ஒன்று அதனை முழுதுமாய் வெளிவிட்டுப் பின் மீண்டும் அதனை ஒருபுறமாக வளைத்து மறைக்கிறது. இதைப்போல சீதையின் கருமையுண்ட கண்ணிமைகள் சற்றே தாழ்ந்து அவளது ஒளிவீசும் விழிகளை மறைக்குமாறு அவளது இமைகளுக்கு மேலாக நெற்றியில் அணிகலன்களை அணிவித்தனர். இங்கே பூட்டுதல் என்பது அணிகலன்களை அணிவித்தல் ஆகும். நாம் முன்னால் கண்ட பாடலைப் போலவே இப்பாடலிலும் சீதையின் விழிகளை நிலவுடனும் அவளது கருமைநிறக் கண்ணிமைகளை கார்மேகத்துடனும் ஒப்பிட்டுப் பாடியிருக்கிறார் கம்பர். கம்பராமாயணத்தில் இருந்து இன்னொரு அழகிய பாடல் கீழே:

மஞ்சு ஒக்கும் அளக ஓதி மழை ஒக்கும் வடிந்த கூந்தல்
பஞ்சு ஒக்கும் அடிகள் செய்ய பவளத்தின் விரல்கள் ஐய
அம் சொற்கள் அமுதில் அள்ளி கொண்டவள் வதனம் மை தீர்
கஞ்சத்தின் அளவிற்றேனும் கடலினும் பெரிய கண்கள் - கம்ப. ஆரண். 70

( பொருள்: மேகம் போல கருமை பூசிய இமையினையும் பஞ்சு போன்ற மெல்லிய அடியினையும் செம்பவளம் போன்ற மெல்லிய விரல்களையும் அமுதம் போன்ற இனிய மொழியினையும் கொண்டவளாகிய சீதையின் முகம் களங்கமில்லாத தாமரை மலர் அளவினது என்றால் அவளது கண்களோ கடலினும் பெரியது ...)

இப்பாடலில் வரும் அளகம், ஓதி, கூந்தல் ஆகிய மூன்றுமே கண்ணிமைகளைக் குறித்துவந்த சொற்களாம். இவற்றுள் ஓதி என்பதைப் பற்றி கதுப்பு-ஓதி-நுசுப்பு என்ற கட்டுரையிலும் கூந்தல் என்பதைப் பற்றி பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா? என்ற கட்டுரையிலும் விரிவாகக் காணலாம்.

இப்பாடலில் சீதையின் கண்களைப் பற்றிக் கூறும்போது கடலைக் காட்டிலும் பெரியது என்று கூறுகிறார் கம்பர். ஏன் அவ்வாறு கூறுகிறார்?. கடலைப் போல பெரியது என்று கூறியிருந்தால் அதனை உவமை என்று கூறிவிடலாம். ஆனால் அவ்வாறு கூறாமல் கடலைக் காட்டிலும் பெரியது என்று ஏன் கூறவேண்டும்?. உயர்வு நவிற்சி அணி என்று ஒரேவரியில் விடைகூறி விடலாம் தான். ஆனால், கடலைக் காட்டிலும் பெரியதாய் ஆகாயம் இருக்க, கம்பர் ஏன் கடலைத் தேர்ந்தெடுத்தார் என்று அறியவேண்டியது அவசியம் அல்லவா?. சரி, கடலைக் காட்டிலும் பெரியதாகவும் ஆகாயத்தைக் காட்டிலும் சிறியதாகவும் இருப்பது எது?. அது எதுவாக இருந்தாலும், கடலைக் காட்டிலும் பெரியது என்பதால் அது கடலுக்கு வெளியில் இருக்கவேண்டும் அதேசமயம் அது ஆகாயத்தில் இருக்க வேண்டும். அது எது?. அது பூமி அல்லது நிலவாக இருக்கக் கூடும். இங்கே பூமியைக் காட்டிலும் நிலவுக்கே அதிகப் பொருத்தம் இருக்கிறது. காரணம், பெண்களின் வெண்ணிற ஒளிவீசும் விழிகளை ஒளிவீசும் பால்நிலவுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடுவது வழக்கம் தான் என்று பல பாடல்களில் கண்டிருக்கிறோம். எனவே, ' கடலைக் காட்டிலும் பெரிதான கண்கள் ' என்று கம்பர் கூறுவதற்கு ' கடலைக் காட்டிலும் பெரிதான நிலவு போன்ற கண்கள் ' என்று விரித்துப் பொருள்கொள்வது தான் பொருத்தமாயிருக்கும் என்று தோன்றுகிறது.

அளகமும் வண்டும்:

பெண்களின் கருமையுண்ட கண்ணிமையினைக் கருநிற வண்டுகளுடன் ஒப்பிட்டுக் கூறும் கம்பனின் பாடல் இதோ:


.....அறல் நறும் கூந்தலும் அளக வண்டு சூழ்
நிறை நறும் தாமரை முகமும் நித்தில முறுவலும் .... - கம்ப. கிட்.9.

( பொருள்: நத்தையின் மேலொடு போல் குவிந்து தோன்றும் இமைகளும் அந்த இமையாகிய வண்டுகள் ஊதுகின்ற நிறைந்த தாமரைமலர் போன்ற முகமும் முத்துப் போன்ற கண்களும் ...)

இப்பாடலில் வரும் அறல் என்பது நத்தையினையும் கூந்தல் என்பது இமையினையும் முறுவல் என்பது கண்விழிகளையும் குறிக்கும். அறல் மற்றும் கூந்தல் பற்றி விரிவாக அறிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற கட்டுரையிலும் முறுவல் பற்றி மேலும் விளக்கமாக முறுவல் என்றால் என்ன?. என்ற கட்டுரையிலும் ஆதாரங்களுடன் காணலாம். இப்பாடலில் சீதையின் முகத்தினை மலர்ந்த தாமரை மலராகவும் அம் முகத்தில் இருப்பதான அவளது மைபூசிய கண்ணிமைகளை தாமரைமலரில் ஊதுகின்ற கருவண்டுகளாகவும் உருவகப்படுத்திப் பாடியிருக்கிறார் கம்பர்.

அளகமும் நிலவின் கறையும்:

விளையும் தன் புகழ் வல்லியை வேரறுத்து என்ன
கிளை கொள் மேகலை சிந்தினள் கிண்கிணியோடும்
வளை துறந்தனள் மதியினில் மறு துடைப்பாள் போல்
அளக வாள் நுதல் அரும்பெறல் திலகமும் அழித்தாள் - கம்ப. அயோ.3

(பொருள்: தனது புகழாகிய கொடியினைத் தானே வேரறுப்பதுபோல நெற்றியில் அணிந்திருந்த மேகலையை நீக்கினாள்; கிண்கிணியுடன் கைவளைகளும் துறந்தாள்: நிலாவில் தோன்றும் கறையினைத் துடைப்பவளைப் போல ஒளிரும் கண்ணுக்கு மேல் இமையில் எழுதப்பட்டிருந்த அருமையான மையணியினையும் அழித்தாள்...)

இப்பாடலில் வரும் நுதல் என்பது கண்ணையும் திலகம் என்பது கண்ணிமையின் மேல் பூசப்படும் மையணியினையும் குறிக்கும். இதைப்பற்றி விரிவாக 'நுதலும் நுதலப்படாத கருத்துக்களும்' என்று கட்டுரையில் காணலாம். இப்பாடலில் நுதல் ஆகிய கண் நிலவுக்கும் திலகம் ஆகிய மைப்பூச்சு நிலவின் கறைக்கும் உவமை. ஒளிவீசும் நிலவின் மேல் கறை இருப்பதைப் போல ஒளிவீசும் கண்களின்மேல் இருக்கும் இமையில் கருமைப் பூச்சு இருந்த நிலையினை உவமையுடன் விளக்கி இருக்கிறார் கம்பர்.

இப்பாடலில் வரும் நுதல் என்பதற்கு நெற்றி என்றும் திலகம் என்பதற்கு நெற்றிப்பொட்டு என்றும் பொருள்கூறுவார் உளர். இப்பொருட்கள் இங்கே பொருந்துமா எனில் பொருந்தாது. ஏனெனில், நெற்றியில் வைக்கப்படும் பொட்டானது நெற்றிக்குப் பெருமையும் அழகும் சேர்ப்பதாகும். ஆனால், நிலவில் காணப்படும் கறையானது நிலவுக்குப் பெருமையாகவோ அழகுசேர்ப்பதாகவோ கருதப்படுவதில்லை; மேலும் அது பொட்டுபோல ஓரிடத்தில் இல்லாமல் பரவலாக இருப்பதாகும். பொருத்தமற்ற உவமைகளைக் கம்பர் அமைக்கமாட்டார் என்பதால், இப்பாடலில் வரும் நுதல் என்பது நெற்றியையோ திலகம் என்பது நெற்றிப்பொட்டினையோ குறிக்காது என்பதும் உறுதியாகிறது.

பெண்கள் தமது அளகம் ஆகிய கண்ணிமையில் மைபூசுவதைப் பற்றிய இன்னொரு பாடல் கீழே:

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட               
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு - சிலப். புகார். 8

(பொருள்: பெண்களின் அழகிய முகத்தில் மயக்கும் பார்வைகொண்ட கண்களின் மேலிருந்த மைப்பூச்சுடைய இமையானது சிறிய கரிய வில்போலவும் குவளைமலர் போலவும் குமிழம்பழம் போலவும் கோவைக்கனி போலவும்  தோன்றுகின்ற.....)

இதில் பெண்கள் தமது கண்ணிமைகளை அணிசெய்திருந்த விதங்கள் கூறப்பட்டுள்ளன. கருப்புநிற வில் போல கருமைநிறத்திலும் குவளைமலர் போல நீலநிறத்திலும் குமிழம்பழம் போல மஞ்சள் நிறத்திலும் கோவைக்கனி போலச் செம்மைநிறத்திலும் மைபூசி இருந்த செய்தி கூறப்பட்டுள்ளது. 

அளகமும் கரும்புவில்லும்:

செந்தேன் மொழியாள் செறி அளக பந்தியின் கீழ்
இந்துமுறி என்று இயம்புவார் வந்து என்றும்
பூ வாளி வேந்தன் பொரு வெம் சிலை சார்த்தி
ஏ வாளி தீட்டும் இடம் - நள. 42

(பொருள்: செந்தேன் போலும் இனிய மொழியினைப் பேசுகின்ற இவளின் செறிந்த வரிவரியான மைபூச்சுக்களை உடைய இமைகளின் கீழ் இருப்பவைக் கண்கள் அல்ல பிறைச்சந்திரன் என்று கூறுவார். ஆனால் இதுதான் மலரம்புகளை உடைய மன்மதன் நாளும் வந்து தனது கரும்புவில்லைச் சார்த்திவைத்துத் தான் எய்கின்ற அம்புகளைக் கூர்செய்யும் இடமாகும்..)

இப்பாடலில் வரிவரியாய் கருப்புமையினாலான பூச்சுக்களை உடைய கண்ணிமைகள் மன்மதனின் கரும்பு வில்லுக்கு உவமை. அந்த இமைகளின் கீழ் இருப்பதான கண்கள் பிறைச்சந்திரனுக்கு உவமை. அந்தக் கண்களில் இருந்து வெளிப்படுகின்ற ஒளிக்கதிர்களோ மன்மதனின் கூரிய அம்புகளுக்கு உவமை.

அளகமும் பூந்தாதுக்களும்:

பெண்கள் தமது கூந்தல் எனப்படுகின்ற கண்ணிமைகளின் மேல் சுணங்கு எனப்படும் பூந்தாதுக்களைப் பூசி அழகுசெய்வர் என்று ' பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா ' என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போலவே பெண்களின் அளகமாகிய இமைகளின் மேல் பூந்தாதுக்களைப் பூசுவதைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்களை இங்கே காணலாம்.

சுள்ளி சுனை நீலம் சோபாலிகை செயலை
அள்ளி அளகத்தின் மேல் ஆய்ந்து தெள்ளி
இதணால் கடி ஒடுங்கா ஈர்ம் கடா யானை
உதணால் கடிந்தான் உளன் - திணை.150. - 1

( பொருள்: கொன்றை, நீலம், அடம்பு மற்றும் அசோக மலர்களின் தாதுக்களை ஆய்ந்து புடைத்தபின்னர் அவற்றைத் தமது இமைகளின் மேல் அப்பியிருக்கும் இளம்பெண்களின் பார்வை அம்பிற்கு, காவற்பரணில் இருந்து எய்யப்படும் அம்புகளுக்கு அடங்காத மதம்கொண்ட யானை போன்ற ஆண்மகனும் அடங்காமல் தப்பமுடியாது. )

இப்பாடலில் பெண்கள் தமது கண்ணிமைகளின் மேல் அப்பிக்கொள்ளப் பயன்படுத்துகின்ற சில பூக்களின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன. இப்படி பல பூக்களில் இருந்து பெறப்பட்ட தாதுக்களைப் புடைத்து ஒரே சீரான அளவுடையவற்றை ஆய்ந்தெடுத்துப் பயன்படுத்துவர் என்ற செய்தியும் இப்பாடலின் மூலம் தெரியவருகின்றது.

அடுத்து வரும் பாடல் சற்றே வேறுபட்டது. இதில் பெண்களின் கண்ணிமையில் பூந்தாதுக்கள் பூசியிருப்பதை நேரடியாகக் கூறாமல் மறைமுகமாகக் கூறியிருப்பார் இளங்கோ அடிகள். இதோ பாடல் வரிகள் கீழே:

..... சண்பகப் பொதும்பர் தாது தேர்ந்து உண்டு
மாதர் வாள் முகத்து புரி குழல் அளகத்து
புகல் ஏக்கற்று திரிதரு சுரும்பொடு - சிலப். புகார். 2

( பொருள்: சண்பகச் சோலையிலே பூந்தாதுக்களைத் தேர்ந்துண்ட பின்னர், அச் சோலையிலிருந்த பெண்களின் அழகிய முகத்தில் ஒளிரும் குழல்விளக்குப் போன்ற இமைகளுக்குள் புகுவதற்கு விரும்பி ஏக்கமுற்றுச் சுற்றிவருகின்ற வண்டினங்கள்...)

சண்பகச் சோலையில் பூந்தாதுக்களில் இருந்து தேனைத் தேர்ந்தெடுத்துண்ட வண்டினங்கள் திடீரென்று பெண்களின் முகத்தில் இருக்கும் கண்ணிமைகளுக்குள் புகவிரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருகின்றனவாம். ஏன்?. காரணம், அப்பெண்கள் தமது கண்ணிமைகளில் பூசியிருந்த பூந்தாதுக்களின் வண்ணமும் வாசனையும் தான். மஞ்சள் நிறப் பூந்தாதுக்களைப் பூசியிருத்தலால் குழல்விளக்குப் போல ஒளிர்கின்ற அவர்களது கண்ணிமைகளின் ஒளியினாலும் வாசனையாலும் ஈர்க்கப்பட்ட வண்டினங்கள் அந்தக் கண்ணிமைகளுக்குள் புகவிரும்பி அவர்களையே சுற்றிச்சுற்றி வருவதாகக் கூறுகிறார் புலவர். இமைகளின்மேல் பெண்கள் பூந்தாதுக்களைப் பூசியிருக்கும் செய்தியினை நேரடியாகக் கூறாமல் வண்டுகளின் செயல்பாடு மூலமாக உய்த்துணர வைத்தார்.

கோதையும் துகிலும் ஏந்தி குங்குமம் எழுதி கொய் பூம்
தாது கொண்டு அளகத்து அப்பி தட முலை வருடி சேர்ந்து
காதல் கொண்டு இருந்த காமர் கை விரல் அளிய நீரும்
ஏதிலர் ஆகி கோமான் எண்ணமே எண்ணினீரே - சிந்தா. 2948

(பொருள்: மாலையையும் முகத்திரையையும் தாங்கிய எனது பெரிய கண்ணிமைகளின் மேல் குங்குமத்தால் எழுதியும் கொய்த பூக்களின் தாதுக்களைக் கொண்டு அப்பியும் காதலுடன் எனது கைவிரல்களைப் பிணித்திருந்த நீங்களும் இப்போது அயலவரைப் போல அரசனின் எண்ணத்தையே சிந்திக்கலாயினீர்....)

மேற்காணும் பாடலில் வரும் முலை என்பது இமையினைக் குறிக்கும் என்று கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?. என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே கண்டுள்ளோம். அடுத்து, அளகம் குறித்துக் கம்பன் காட்டும் அழகோவியத்தைக் கீழே காணலாம்.

கன்னியர் அணி கோலம் கற்று அறிகுநர் என்ன
பொன் அணி நிற வேங்கை கோங்குகள் புது மென் பூ
அன்ன மென் நடையாய் நின் அளக நல் நுதல் அப்பும்
சின்ன மென் மலர் மான சிந்துவ பல காணாய் - கம்ப. அயோ. 14

( பொருள்: அன்னத்தின் நடையினைக் கொண்டவளே ! கன்னிப்பெண்கள் அழகுசேர்க்கும் இமைக்கோலங்களைக் கற்று அறிபவரைப் போல வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் நீ உனது இமைகளில் அப்பி அழகுசெய்கின்ற தாதுக்களை உடைய பொன்போன்ற புதிய மலர்களை இடமெங்கும் சிந்துவதைக் காண்பாயாக! ...)

வேங்கை மரங்களும் கோங்கு மரங்களும் பொன்னிற மலர்களைப் பூமியின்மேல் சிந்துவது இயற்கைதான். ஆனால் கம்பரின் கண்ணோட்டம் வேறுமாதிரி இருக்கிறது. கன்னிப்பெண்கள் தமது இமைகளின் மேல் பொன்னிறப் பூந்தாதுக்களை அப்பி அழகுசெய்வதுபோல அம்மரங்கள் தமது பொன்னிறத்து மலர்களைப் பூமிப்பெண்ணின் மேல் சிந்தி அழகுசெய்யக் கற்றுக் கொள்கின்றனவாம். என்ன ஒரு கற்பனை !. அதுதான் கவிச்சக்கரவர்த்தி கம்பர் !!. இதோ இன்னுமொரு கவியோவியம் !.

மா கந்தமும் மகரந்தமும் அளகம் தரும் மதியின்
பாகம் தரும் நுதலாளொடு பவளம் தரும் இதழான்
மேகம் தனி வருகின்றது மின்னோடு என மிளிர் பூண்
நாகம் நனி வருகின்றது பிடியோடு என நடவா - கம்ப. அயோ. 4

( பொருள்: சந்தனப்பொடியும் பூந்தாதுக்களும் கொண்டு அப்பிய இமைகளின் கீழ் பிறைச்சந்திரன் போல் ஒளிவீசும் கண்களை உடைய சீதையுடன் இணைந்து செம்பவளம் போன்ற இதழ்களையுடைய ராமன் நடந்துவரும்போது, கார்மேகம் ஒன்று மின்னலுடன் வருவதைப் போலவும் பூணணிந்த களிற்றுயானை ஒன்று பெண்யானையுடன் வருவதைப் போலவும் தோன்றிற்று..)

அளகபாரம்:

அளகம் என்ற சொல் பயின்றுவரும் சில இடங்களில் அளகபாரம் என்ற சொல்லாட்சியும் உண்டு. இதைப் பற்றி விரிவாக இங்கே காணலாம். பாரம் என்றவுடன் கீழ்க்காணும் திரைப்படப் பாடல் வரிகள் நினைவுக்கு வரும்.

மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா? பெற்றெடுத்த
குழந்தை தாய்க்கு பாரமா?

மிக அருமையான இந்த பாடல்வரிகளில் இருந்து பாரம் எது என்பதற்கான வரையறையைப் பெறலாம். பாரம் எனப்படுவது யாதெனின், வெளியில் இருந்து ஏற்று / ஏற்றிக் கொள்ளப்படுவதும் தேவைப்பட்டால் இறக்கிவைத்துக் கொள்ளத் தக்கதுமானது எதுவோ அதுவே பாரம் எனப்படும். அவ்வகையில், வண்டியில் ஏற்றப்படும் பாரம், குழந்தையைக் கருவில் சுமக்கின்ற பாரம் போன்றவை அடங்கும். அதைப்போல, இமைகளுக்கு மேலாக பெண்களால் விரும்பி ஏற்றி வைக்கப்படும் பாரமே அளகபாரம் ஆகும்.

பெண்கள் தமது இமைகளுக்கு மேலாக பல வண்ணங்களில் பூசியும் பல பொருட்களைக் கொண்டும் அழகு செய்வர் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டிருக்கிறோம். இப்படி நேரடியாக இமைகளின் மேல் பூசி எழுதி அப்பி அழகு செய்வது ஒருவகை. இன்னொரு வகை இருக்கிறது. இவ்வகையில் இமைகளின்மேல் நேரடியாகப் பூசியோ எழுதியோ அப்பியோ அழகுசெய்யாமல் அழகுசெய்யப்பட்டுத் தயாராக இருக்கின்ற அணிகளை அப்படியே இமைகளின் மேல்பகுதியில் புருவங்களுக்குக் கீழாகப் பொருத்திப் பசைகொண்டு ஒட்டவைத்துக் கொள்வது. இவ்வகை அணிகளைத் தான் பூண் என்றும் கச்சு என்றும் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இலக்கியப் பாடல்களில் வருவதான முலைப்பூண், முலைக்கச்சு ஆகியவை இமைகளுக்கு மேலாக அணியப்படுகின்ற இந்த அணிகலன்களையே குறிக்கும். அளகம் ஆகிய இமைகளின் மேலாக ஏற்றப்படும் பாரம் என்பதால் இதனை அளகபாரம் என்றும் கூறலாயினர். சான்றாக, மயில் போல வரைந்து வெட்டி மைபூசி அழகுசெய்யப்பட்ட அணிகலன் ஒன்றை அப்படியே இமைகளுக்கு மேலாகப் பொருத்திக் கொள்வதைச் சொல்லலாம். இந்த அணிகலன்களை அவரவருடைய பொருளாதார வசதிகளுக்கேற்ப பொன், வெள்ளி போன்ற உலோகத் தகடுகளாலும் ஏனைப் பொருட்களாலும் செய்து அணிந்தனர் எனலாம். இப்படி அளகத்தின் மேல் ஏற்றப்படுகின்ற பாரம் அதிகமாகும்போது இமைகளைத் திறக்கமுடியாமல் பெண்கள் துன்புறுவர் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, அளகம் என்பதற்குக் ' கண்ணிமை ' என்ற பொருளும் உண்டு என்பதனைத் தெளிவாக அறிந்துகொண்டோம். அத்துடன் அளகபந்தி, அளகபாரம் போன்ற சொற்கள் குறிக்கின்ற உண்மையான பொருட்களையும் அறிந்துகொண்டோம். அழகே வடிவாய் விளங்குவதால் தான் கண்ணிமைக்கு அளகம் என்று பெயரிட்டார்களோ என்னவோ !.