புதன், 28 டிசம்பர், 2011

திருக்குறளில் தெய்வம் - பகுதி 1


முன்னுரை:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 'தெய்வம்' என்ற சொல் மொத்தம் ஆறு குறட்பாக்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு 'மனிதரிடத்தில் இல்லாத புதிய ஆற்றலைக் கொண்ட ஒரு கடவுள்'  என்றும் 'விதி' என்றும் பொருள் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர் பல உரை ஆசிரியர்கள். இப் பொருட்கள் இக் குறள்களுக்குப் பொருந்தாது என்பதைப் பற்றியும் உண்மையில் இச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் பல ஆதாரங்களுடன் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

முதலில் இச்சொல் பயின்று வருகின்ற ஆறு குறள்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அக் குறளில் கடவுள் அல்லது விதி என்ற பொருள் ஏன் பொருந்தாது என்பதைப் பற்றிக் காணலாம்.

மனிதனால் காக்கப்பட வேண்டியவரா கடவுள்?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
                                                               - குறள் 43:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வ உரை: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

மேற்காணும் உரை விளக்கங்களில் கலைஞர் உரை 'தெய்வம்' என்பதற்கு 'வாழ்வாங்கு வாழ்வோர்' என்று பொருள் கூறுகிறது. இப்படி ஒரு பொருள் இச்சொல்லுக்கு எந்த அகராதியிலும் இல்லை. மேலும் இப் பொருள் இக் குறளில் மட்டுமல்ல மற்ற குறள்களிலும் பொருந்தாமையால் இவ் உரை தள்ளப்படுகிறது. அதே சமயம் ஏனைய உரைகள் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கொண்டுள்ளன. இப்பொருள் இக் குறளுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது.  இது எவ்வாறு என்று பார்ப்போம்.

இன்பத்தில் திளைக்கும் பொழுது நினைக்கிறார்களோ இல்லையோ தாள முடியாத துன்பத்தில் துவளும் போது கடவுளை நினையாத மாந்தர் மிகச் சிலராகவே இவ் உலகில் இருக்கக் கூடும். கடவுள் இல்லை என்று கூறி மறுப்பவரும் கூட தீர்க்க ஒண்ணா துயரத்தின் போது தம்மை அறியாமலேயே கடவுளை நினைப்பதுண்டு. அவர் கடவுளை வணங்குகின்றாரா இல்லையா என்பது வேறு. கடவுளை நினைத்தாலே வணங்கியதற்குச் சமமாகும். இப்படி துன்பங்களில் இருந்து தம்மைக் காக்க வேண்டும் என்றெண்ணி தான் மனிதர்கள் கடவுளை வணங்கி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது இல்வாழ்வில் உள்ள மனிதர்கள் தெய்வமாகிய கடவுளைக் காக்க வேண்டும் என்ற தொனியில் மேற்காணும் குறளுக்குப் பொருள் கொள்வது முரணான கருத்தல்லவா?. ஏனென்றால் ஓம்புதல் என்ற சொல்லுக்கு பாதுகாத்தல் அல்லது காப்பாற்றுதல் என்பதே அகராதிகள் கூறும் பொருளாகும். அறம் செய்தல் என்னும் பொருள் எங்கும் கூறப்படவில்லை.

அதுமட்டுமின்றி மேற்காணும் குறளில் தெய்வமானது முதலிடத்தில் இல்லாமல் தென்புலத்தாராகிய துறவிகளுக்கு (நீத்தார்) அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது. இது துறவிகளைக் காட்டிலும் கடவுள் மதிப்பு குறைந்ததாகக் கருத இடமளிக்கிறது. இப்படி சொல் வைப்பு முறையாலும் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் பொருந்தவில்லை. இதிலிருந்து இக் குறளில் வரும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது தெளிவு.

மனிதனால் கடவுளாக மாற முடியுமா?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
                                                           - குறள்: 50

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வ உரை: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் 'உலகிலே அறநெறிப்படி இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன் கடவுளாகக் கருதப்படுவான்' என்று கூறுகின்றன.

மேற்காணும் குறளைப் போலவே கீழ்க்காணும் குறளுக்கும் பொருள் கூறுகின்றனர் உரை ஆசிரியர்கள்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
                                          - குறள் 702.

கலைஞர் உரை: ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
மு.வ உரை: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

மேற்காணும் உரைகளிலும் 'உள்ளத்தைத் தெளிவாக உணரவல்ல மனிதனை கடவுளுக்குச் ச்மமாகக் கருத வேண்டும்' என்றே கூறியுள்ளனர். இவ் விளக்கங்கள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தனக்கு ஈடு இணையற்றவர் கடவுள் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே கூறிவிட்டார் வள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் -7

இப்படி தனக்கு உவமையில்லாதவராக கடவுள் இருக்க, மனிதனை கடவுளுக்குச் சமமாகக் கருதுவது என்பது வள்ளுவரைப் பொருத்தமட்டில் எந்த சூழ்நிலையிலும் ஒப்பக்கூடிய கருத்தல்ல. எனவே இக் குறள்களிலும் தெய்வம் என்ற சொல்லை கடவுள் என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டிருக்க முடியாது என்பது தெளிவு.

கணவனே கண்கண்ட கடவுள்?

வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
                                                       - குறள் 55.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் கணவனையே கண்கண்ட கடவுளாகக் கருதி வாழும் ஒரு இல்லாள் 'பெய்' என்று சொன்னதும் மழை பெய்யும் என்று கூறுகின்றன. மழை பெய்வதாக வரும் இக் கருத்து தவறு என்றும் இதில் வரும் மழை என்ற சொல்லுக்குப் பதில் மிழை என்று வரவேண்டும் என்றும் அவ்வாறு வந்தால் அதன் உண்மையான பொருள் என்ன என்றும் நாம் ஏற்கெனவே பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். ஆயின் இங்கு நாம் இப்போது காணப்போகும் கருத்து என்ன? கணவனே கண்கண்ட தெய்வம் என்பது ஏற்கத்தக்க பொருளா இல்லையா என்பதே அது. இல்லறம் புகுந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடு மிகாமல் விட்டுக் கொடுத்து வாழ்வதே இல்வாழ்விற்கான அடிப்படைப் பண்பாகும். கணவனின் பொருளாதார நிலை அறிந்து அதற்கேற்றபடி தனது குடும்பத்தை நடத்திச் செல்வதே இல்லாளுக்குரிய கற்பாகும். இதைத்தான் வள்ளுவரும் இக் குறளின் மூலம் உணர்த்த வருகிறார். அதைவிடுத்து கட்டிய கணவனையே கண்கண்ட தெய்வமாக எண்ணித் தொழுது வணங்க வேண்டும் என்றோ அவன் என்ன தவறுகள் செய்தாலும் இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. அவ்வாறு கூறினால் அது பெண்ணடிமைக்கு அடிகோலியதாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதுடன் முன்னர் சொன்னது போல எந்நிலையிலும் மனிதன் கடவுளுக்கு ஈடாக மாட்டான் என்பதால் இக்குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது உறுதியாகிறது.

ஆடை அணிவாரா ஆண்டவன்?

குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
                                                      - குறள் 1023.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
மு.வ உரை: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா உரை: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

மேற்காணும் உரைகளை நோக்கும் பொழுது ஒரு கருத்து தெளிவாகிறது. மூன்று உரைகளுமே 'கடவுளானவர்  பிறருக்கு உதவி செய்ய தனது ஆடையினை வரிந்து இறுகக் கட்டிக்கொண்டு முன்வருவார்' என்று கூறுகின்றன. இவ் விளக்கப்படி பார்த்தால் கடவுள் என்பது ஒரு மனிதன்; அதிலும் ஓய்வான நேரங்களில் (நாம் வீட்டில் லுங்கி, வேட்டிகளை அணிந்திருப்பதைப்போல) தனது ஆடையினை தொய்வாகக் கட்டிக்கொண்டு திரியும் மனிதன் என்றும் உதவி செய்யப் போகும்பொழுது மட்டும் தனது ஆடையினை இறுகக் கட்டிக்கொள்ளும் என்றும் நகைப்புக்கு இடமளிக்கும் கருத்துக்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா?. இப்படி கடவுளை மனிதனாக்கிப் பார்க்கும் பார்வை வள்ளுவத்தில் இல்லை; இல்லவே இல்லை என்பதால் இக் குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுளைக் குறித்து வரவில்லை என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

கடவுளால் ஆகாதது உண்டா?.

இதுவரை தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருளைக் கூறி வந்த உரை ஆசிரியர்கள் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற கீழ்க்காணும் குறளில் மட்டும் புதியதோர் பொருளைக் கொள்கின்றனர்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
                                                 - குறள் 619:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
மு.வ உரை: ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

மேற்காணும் உரைகளில் கலைஞர் உரையில் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் கொண்டிருந்தாலும் விளக்கம் தவறாக இருப்பதால் அதை இங்கே ஆராயத் தேவையில்லை. ஏனைய உரைகாரர்களும் தெய்வம் என்ற சொல்லுக்கு ஊழ் அதாவது விதி என்று புதிய பொருளை வேண்டுமென்றே கூறியுள்ளனர். காரணம் தெய்வம் என்ற சொல்லுக்கு வழக்கம் போல கடவுள் என்ற பொருளைக் கொண்டால் 'கடவுளால் ஆகாத காரியமானாலும்' என்ற பொருத்தமில்லாத பொருள் தோன்றிவிடும். இருப்பினும், ஊழ் என்ற பொருளும் இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் இக் குறளை அடுத்து வரும் 620 ஆம் குறளிலும் ஊழைப்பற்றி இதே கருத்தைத் தான் கூறுகிறார்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். - 620

இப்படி இரண்டு அடுத்தடுத்த குறள்களில் ஒரே கருத்தைக் கூறுவது 'கூறியது கூறல்' குற்றமாகும். வள்ளுவர் அக் குற்றத்தைச் செய்ய மாட்டார் என்பதால் இக் குறளில் வரும் தெய்வம் என்னும் சொல்லுக்கு விதி என்ற பொருள் பொருந்தாது என்பது தெளிவு.

தெய்வம் என்பது என்ன?

தெய்வம் என்னும் சொல்லுக்கு இதுகாறும் கூறப்பட்டு வந்த கடவுள், விதி என்ற பொருட்கள் பொருந்தாது என்றால் வேறு என்ன பொருள் இக் குறள்களுக்குப் பொருந்தி வரும்? இதைப் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.


                                                                        - தொடரும்.

வியாழன், 8 டிசம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 5 (இந்திரவிழாவும் தைப்பொங்கலும்)


மருதநில மக்கள் சூரியனையே தெய்வமாக வணங்கினர் என்பதைப் பற்றி நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்) என்ற கட்டுரையில் கண்டோம். அவ் வரிசையில், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்ற இந்திரவிழாவே நாம் தற்போது கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதனை இக் கட்டுரையில் சான்றுகளுடன் காணலாம்.

தொல்காப்பிய இந்திரன்

மாயோன் மேய என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல் 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத்தைக் குறிப்பிடுகிறது.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்'

இப்பாடலில் வரும் வேந்தன் என்னும் சொல் தேவர்களின் அரசனான ஐராவத யானையுடைய இந்திரனைக் குறிக்காமல் சூரியனையே குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் (நான்கு கடவுள் - பகுதி 1) கண்டோம். தொல்காப்பியர் இப்பாடலில் சூரியனை 'வேந்தன்' என்று கூறியதன் காரணம், சூரியனும் ஒரு மன்னனைப் போல ஒரு குடைக் கீழ் பல உயிர்களைக் காப்பதாலும் வெம்மைத் தன்மை (வேது) உடையதாலும் தான்.

வேது ----------------------------> வேந்தன்
(வெம்மை)                (வெம்மை மிக்கவன்)

தீம்புனல் உலகமாகிய மருதநிலங்கள் நிறைந்த சோழநாட்டிலே வாழ்ந்த மக்கள் தங்களது வழிபடு தெய்வமான சூரியனுக்கு எடுத்த பெருவிழாவே இந்திர விழாவாகும். ஆம், தொல்காப்பியரால் வேந்தன் என்று குறிப்பிடப்பட்ட சூரியனே பிற்காலத்தில் இந்திரன் என்றும் அழைக்கப்பட்டான்.

இந்திரனும் சூரியனும்

இந்திர விழாவின் நாயகன் சூரியனே என்பதைப் பற்றிக் காணும் முன்னர் இந்திரன் என்னும் சொல் எவ்வாறு சூரியனைக் குறிக்கும் என்று காணலாம்.

இந்திரன் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் என்பதற்கு கீழ்க்காணும் ஆதாரங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆதாரம் - 1: கிழக்குத் திசைக்கு 'இந்திரி', 'ஐந்திரம்' என்ற பெயர்களும் உண்டென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்திரி¹ intiri
, n. < aindrī. The eastern cardinal direction, கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா. வாலி வதை.)
ஐந்திரம் aintiram
, n. < aindra. 1. See ஐந்திரவியாகரணம். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 2. East, கிழக்கு. (பிங்.)

இந்த கிழக்குத் திசையில் இருந்து தோன்றுவதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்ட்து.

இந்திரி -----> இந்திரியன் -----> இந்திரன்
ஐந்திரம் ------> ஐந்திரன் -----> இந்திரன்

ஆதாரம் - 2:  திருக்குறளில் 25 ஆம் பாடலில் இந்திரன் என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த சூரியனையே ஆகும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமன்
இந்திரனே சாலும் கரி.
                                                 
இதைப்பற்றி நாம் ஏற்கெனவே இந்திரனே சாலும் கரி என்ற கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

ஆதாரம் - 3: வானவில்லுக்கு இந்திரவில் என்ற பெயரும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

*இந்திரவில் intira-vil
, n. < id. +. Rainbow, வானவில். (திவா.)

மழை பெய்த பின்னர் காற்றில் கலந்துள்ள நீர்த்துளிகளில் பட்டுச் சிதறும் சூரிய ஒளிக் கதிர்களே வானவில் தோன்றக் காரணம் என்பதால் வானவில்லுக்கு இந்திரவில் அதாவது சூரியனுடைய வில் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதாரம் - 4: இந்து என்ற சொல்லுக்கு கரடி,கரி என்ற பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்து, (p. 88) [ *intu, ] s. The moon, சந்திரன். 2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131. INDU. 3. A bear, கரடி. 4. A char coal, கரி. 5. A kind of prepared arsenic, கௌரிபாஷாணம். 6. The river Indus, சிந்து நதி.

உண்மையில் இந்து என்பதன் முதன்மைப் பொருள் 'கருமை / இருள்' என்பதாகும். இப்பொருளே விரிவாக்கமாக கருமை நிறக் கரடியையும் கருமை நிறக் கரியினையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.

இந்துவாகிய இருளைத் தோற்றோடச் செய்வதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்து + இரியன்                  = இந்திரியன் -----> இந்திரன்
(இருள்) + (அகற்றுபவன்)   = சூரியன்

இரித்தல் என்பதற்கு தோற்றோடச் செய்தல், ஓட்டுதல், அகலச் செய்தல் என்று பொருள்.
(சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.)

இரி, (p. 97) [ iri, ] கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be destroyed, broken, கெட. 2. To be routed, defeated, discomfited. தோற்க. 3. To retreat, flee away--as defeated ar mies, to scamper away through fear, தோற் றோட. 4. To run, flow, recede--as waves --as darkness before the rising sun, &c., அகல. 5. To incline, சாய. 6. To fear, அஞ்ச. (p.)

பி.கு: இந்து + இரியம் = இந்திரியம் என்பது இருளை ஓட்டும் ஒளியைக் குறிப்பதாகும். மன இருளை அகற்றும் ஒளியே அறிவாதலால் அறியப்படும் எல்லா அறிவும் (இந்திரியங்களும்) ஒளியே ஆகும்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து இந்திரன் என்ற சொல் சூரியனையும் குறிக்கும் என்பது நிறுவப்படுகிறது.

இந்திர விழா:

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் தான் இந்திர விழாவினைப் பற்றிய தெளிவான விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையும் கடலாடு காதையும் மணிமேகலையில் விழாவறை காதையும் இந்திர விழா பற்றிய செய்திகளை நமக்குக் கண்ணாடி போலக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரம் காட்டும் இந்த இந்திர விழா என்பது உறுதியாக சூரியனுக்கு எடுக்கப்பட்ட திருவிழாவே ஆகும். இவ் விழாவானது ஐராவத யானையினை உடையவனாகக் கூறப்படும் தேவேந்திரனுக்காக எடுக்கப் பட்டிருக்காது என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஏனென்றால், இந்த தேவேந்திரன் ஓர் காமுகன் என்பதனை நாம் அறிவோம். கவுதம முனியின் மனைவியான அகலிகையின் மேல் ஆசைப்பட்டவன் இவனே. தேவசர்மா முனிவரின் மனைவி ரிஷியின் மேல் காமம் கொண்டவனும் இவனே. காம ஆசையினால் உடம்பெல்லாம் பெண்குறியாகப் பெற்றவனும் இவனே. இதுபோலப் பல குற்றங்களை இவன்மீது அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு காம ஆசைகள் நிறைந்த, புலனடக்கம் இல்லாத ஒருவனுக்கு ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய திருவிழா எடுப்பார்களா?. ஒருபோதும் மாட்டார்கள் அல்லவா?.

அதேசமயம் இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். மருதநிலமான சோழநாட்டில் வாழும் மக்கள் தங்கள் நிலத்துத் தெய்வமான சூரியனுக்கே ஒரு புத்தாண்டின் துவக்கத்தில் விழா எடுப்பர். மேலும் இந்த இந்திர விழா கொண்டாடப்பட்டது சித்திரைத் திங்களில் தான். இந்த சித்திரைத் திங்களே ஆண்டின் முதல் திங்களாகும் என்பதுடன் இத் திங்களில் தான் சூரியன் மேஷ ராசியில் நுழைகிறான். இந்த மேஷ ராசியில் தான் சூரியன் உச்சமும் அடைகிறான். அதுமட்டுமின்றி, சித்திரைத் திங்களின் முதல் நாளில் துவங்கும் இத் திருவிழாவானது ஏறத்தாழ 28 நாட்கள் வரையிலும் தொடர்ந்து சித்ரா பவுர்ணமி அன்று நிறைவடைந்தது.  ஏனென்றால் சித்ரா பவுர்ணமி அன்று தான் சூரியனும் சந்திரனும் முழு பலத்துடன் இருப்பார்கள். சூரிய ஆற்றலும் சந்திர ஆற்றலும் நிறைந்த சித்ரா பவுர்ணமி அன்று இரவில் கடல்நீராடுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவது. இதை முன்னிட்டே இந்திரவிழாவின் இறுதிநாளன்று மக்கள் கடலாடியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இனி, தற்போது நாம் கொண்டாடி வருகின்ற தைப் பொங்கல் திருவிழாவின் முன்னோடி இந்திரவிழாவே என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

உழவர் திருநாள்:

தற்போது நாம் அனைவரும் தை மாதம் முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரையிலும் தைப்பொங்கல் திருவிழாவை  கொண்டாடி வருகின்றோம். மக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடின்றி ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையாகக் கொண்டாடினாலும் இந்த தைப்பொங்கல் திருவிழாவானது உழவர் பெருமக்களின் போற்றத்தக்க பெருமுயற்சியான வேளாண்மையின் சிறப்பை உணர்த்தவே கொண்டாடப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த உழவுத்தொழிலின் சிறப்பை அறிந்ததால் தான் உழவு என்னும் அதிகாரத்தில் உழவர்களின் சிறப்பினைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் வள்ளுவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. - 1032

இதில் உழவர்களே ஏனைய உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் என்று புகழ்கிறார்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். - 1034

இதில் உழவர்களுக்கு அரசர்கள் செய்யும் சிறப்பு (குடை) கூறப்படுகின்றது. இப்படி ஒரு சிறப்பினை சோழநாட்டு மன்னர்களும் உழவர் பெருமக்களுக்காக இந்திரவிழாவின் போது செய்ததாக சிலப்பதிகாரம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

ஆயிரத்து ஓர் எட்டு அரசு  தலைக்கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி
                   - இந்திரவிழவூர் எடுத்த காதை - 164 - 168

இப் பாடலில் வரும் அரசு என்பது வேளாண் மக்களுக்கு சோழ அரசர்கள் அளிக்கும் பட்டப் பெயர் ஆகும். சான்று: சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

அரசு² aracu
, < rājan. n. 1. Kingliness; அரசனது தன்மை. (குறள், 384, உரை.) 2. King; அரசன். (மதுரைக். 128.) 3. Kingdom, territory of a ruler; இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45). 4. Government; அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7). 5. That which is pre-eminent; தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143). 6. An ancient title of Vēḷāḷa chieftains; பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெ னவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை). 7. Tiru-nāvukkaracu Nayaṉār, the author of a part of the Tēvāram; அப்பர். (பெரி யபு. திருஞான. 494.)--int. An exclamation equivalent to `check', used in chess; சதுரங்கத்தில் அர சன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்.

இப்படி 'அரசு ' பட்டப் பெயர் பெற்ற 1008 உழவர் பெருமக்கள், தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரித் தண்ணீரால் தான் இந்திரனுக்கு முழுக்கு செய்யப்பட்டது என்று மேற்காணும் சிலப்பதிகாரப்பாடல் கூறுகிறது. இப்படி இந்திர விழாவின்போது உழவர் பெருமக்களை அரசர்கள் சிறப்பித்ததில் இருந்து  இந்திர விழாவானது தைப்பொங்கலைப் போல ஒரு உழவர் திருநாளாகத் தான் கொண்டாடப்பட்டது என்று கொள்ளலாம்.

பொங்கல் படைத்தல்:

இன்று நாம் கொண்டாடும் தைப்பொங்கல் திருவிழாவின்போது முதல்நாளன்று அதிகாலையில் கதிரவனின் உதயத்திற்கு முன்னரே ஒரு மண்பானையில் நீரும் அரிசியும் இட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுவர். அரிசி குழையும் பருவம் வந்ததும் பாலும் சிறிது சர்க்கரையும் கலப்பர். பாலினால் சோறு பொங்கி பானையை விட்டு வெளியே வரும் போது  'பொங்கலோ பொங்கல்' என்று அனைவரும் உரக்கக் கூறி மகிழ்வர். பின்னர் மிச்சமுள்ள சர்க்கரையினையும் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போன்ற பொருட்களையும் போட்டு சிறிது நெய்யினையும் ஊற்றி நன்கு கிளறிய பின் பானையினை அடுப்பில் இருந்து இறக்கி வைப்பர். இதுதான் தைத்திருவிழாவின் முதன்மை உணவான சர்க்கரைப் பொங்கல் ஆகும். இந்தப் பானையில் இருந்து பொங்கலை எடுத்து கதிரவனுக்குப் படைத்துப் பூவும் புகையும் காட்டி வழிபடுவர். இதுதான் இன்றைய பொங்கல் திருவிழாவின் பொதுவான நடைமுறை ஆகும்.

தைத்திருநாளன்று கதிரவனுக்குப் பொங்கல் வைத்து இன்று நாம் வழிபடுவதைப் போலவே இந்திரவிழாவின் போதும் இந்திரனுக்குப் பொங்கலைப் படைத்து பூவும் புகையும் காட்டி வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

            - இந்திரவிழவூர் எடுத்த காதை: 69

அதுமட்டுமின்றி, பொங்கலின் போது 'பொங்கலோ பொங்கல்' என்று நாம் கூறி மகிழ்கிறோம். எதற்காக? இந்தப் பொங்கல் பொங்குவதைப் போல நம் வாழ்க்கையில் எல்லா நலங்களும் வளங்களும் பெருக வேண்டும் என்று வேண்டியே அன்றோ?. அதைப் போல, இந்திரவிழாவின் போதும் மக்கள் ' பசியும் நோயும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகுக' என்று வாழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி

                            - இந்திரவிழவூர் எடுத்த காதை : 72-73

இப்போது நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது தனித்தனிக் குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திரவிழாவோ ஒரு நாட்டு மக்கள் அனைவராலும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். ஆகவே தான் வாழ்த்து முறையிலும் பிறவற்றிலும் சிறுசிறு மாற்றங்கள் இருக்கின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

வழிபடு தெய்வம்:

நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைத்திருநாளின் வழிபடு தெய்வம் சூரியனே என்பது அனைவருக்கும் தெரியும். உழவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே தேவையான வெப்பத்தினையும் ஒளியினையும் தந்துதவும் அந்த கதிரவனின் கருணையைப் போற்றும் விதமாக அமைந்த நல்லதொரு நாளே தைத்திருநாளாகும்.

தைத்திருநாளன்று கீழ்வானில் மெல்லமெல்ல கதிரவனின் செம்மேனி வெளிப்பட அதைக் கண்டு மயங்கி மகிழ்ச்சியுறாத உள்ளமும் உண்டோ?. அந்தச் செம்மேனியின் வண்ணம் தான் என்னே!. மிகச் சிறிது நேரமே காணக் கிடைக்கும் அந்த அழகு மேனியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!. அந்த செக்கர்மேனியனைக் காண பொங்கலைப் படைத்து வைத்துக் கொண்டு ஆவலாய்க் காத்திருக்கும் மக்கள் கூட்டம். இதோ மெல்லமெல்ல அந்தக் கதிரவனும் கண் திறந்து விட்டான். அதோ கீழ்வானில் கதிரவனின் அழகுமிக்க தேர் தோன்றிவிட்டது. மெய் சிலிர்க்கிறது. கைகள் தாமாகவே மேலே சென்று குவிந்து அவனை வணங்குகின்றன. கதிரே போற்றி! கடவுளே போற்றி! என்று உதடுகள் உரக்கக் கூவுகின்றன. அட, இந்த ஒரு நொடிக்காகத் தானே மக்கள் முதல் நாளில் ( தமிழர் கணக்குப் படி கதிரவன் தோன்றிய பின்னரே புதிய நாள் துவங்குவதால்) இருந்தே புனித நீராடி புத்தாடையும் அணிகலன்களும் அணிந்துத் தம்மை ஆயத்தமாக்கிக் காத்திருந்தனர்!.

ஆம், இதைப் போன்றதொரு ஆயத்தமும் கதிரவனுக்கான காத்திருப்பும் இந்திரவிழாவின் போதும் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சித்திரைத் திங்கள் முதல் நாளில் துவங்கிய இந்த இந்திரவிழாவானது சித்திரை மீனொடு மதி சேரும் முழுமதி நன்னாளான சித்ரா பவுர்ணமி அன்று நிறைவுறுகிறது. அன்றைய நாள் தருநிலைக் கோட்டத்துள்ள கதிரவனுக்கு 1008 உழவர் பெருமக்கள் கொண்டுவந்த காவிரி நீரைக் கொண்டு திருமுழுக்கு செய்கின்றனர். பின்னர் பிற கடவுளர்க்கும் பூசைகள் செய்கின்றனர். அன்று இரவு முழுவதும் பலவிதமான ஆடல் பாடல்கள், கேளிக்கைகளில் ஈடுபடுவதும், பலவிதமான விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள தம் ஊரினையும் சிறப்பங்காடிகளையும் சுற்றிப் பார்ப்பதும், பூங்காக்களுக்குச் சென்று விளையாடிப் பொழுதைக் கழிப்பதுமாக மக்கள் இரவுப்பொழுதைக் கழிக்கின்றனர். பின்னர் கடலுக்குச் சென்று குளித்துப் புத்தாடைகளும் புதிய அணிகலன்களும் அணிந்து கதிரவனின் செம்மேனியைக் காணக் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றனர். கதிரவனின் அழகிய தேர் கீழ்வானில் தோன்றுவதுடன் இந்த விழா நிறைவுறுவதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்திரவிழவூர் எடுத்த காதையின் துவக்கமே கதிரவனைப் பற்றியதாக இருப்பதைப் பாருங்கள்.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி
 ...................................

இப்படி கதிரவனைப் போற்றுதலுடன் துவங்கும் இந்திரவிழாவானது சித்ரா பவுர்ணமி இரவு முடிந்து மறுநாள் காலை கதிரவன் தோன்றுவதுடன் முடிவடைகிறது.

வேலைமடல் தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு காலைக்
களிநறவம் தாதூத தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.
                            - கடலாடு காதையை அடுத்த வெண்பா.

இப்படி இந்திரவிழாவின் துவக்கமும் முடிவும் கதிரவனைப் பற்றியே இருப்பதால் இந்திரவிழாவின் நாயகனும் வழிபடு தெய்வமும் கதிரவனே என்று உறுதி செய்யலாம். அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் சான்றுகளும் இதை உறுதிப்படுத்தும்.

தருநிலைக் கோட்டம்:

சிலப்பதிகாரம் பலவகையான கோட்டங்களைப் பற்றிக் கூறுகிறது. கோட்டம் என்பது கோயிலைக் குறிக்கும். இக் கோட்டங்களில் முதன்மையானது தருநிலைக் கோட்டமாகும். இதுதான் கதிரவனுக்குரிய கோட்டமாகும். இங்கு கொடிமரமும் பலிபீடமும் அமைக்கப் பட்டிருந்தது. இந்திர விழாவின் போது இக் கொடிமரத்தில் மங்கல நெடுங்கொடியை வானளாவப் பறக்க விட்டதாகக் கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

தங்கிய கொள்கை தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை

                 - இந்திரவிழவூர் எடுத்த காதை: 145-146

இங்கு தரு என்பது கொடிமரத்தைக் குறிப்பதாகும். வேதிகை என்பது பலிபீடத்தைக் குறிப்பதாகும். சோழ மன்னனால் அரசு பட்டம் பெற்ற 1008 உழவர் பெருமக்கள் தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரி நீரைக்கொண்டு இக் கோட்டத்தில் இருந்த கதிரவனுக்கு திருமுழுக்காட்டினர்.

காமவேள் கோட்டம்:

கதிரவனுக்கு மட்டுமல்ல காமதேவனுக்கும் கோட்டம் இருந்தது. இதைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக் கோட்டத்தைப் பற்றியும் காமனைப் பற்றியும் பல அரிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன.

தனது கரும்பு வில்லில் இருந்து மலர்க்கணைகளைத் தொடுத்து மாந்தர்க்கு காதல் நோயினை ஏற்படுத்துபவன் காமன். இவனது கொடி மகர மீன் அதாவது சுறவுக் கொடி ஆகும். இது நாமறிந்த செய்தி. ஆனால் இக் காமன் ஓர் காவல் தெய்வமும் ஆவான் என்பது நாம் அறிந்திராத செய்தி. இதோ இச் செய்தியைக் கூறும் சிலப்பதிகாரப்பாடல்.

பாண்வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத்தலைப் பெயரும் வைகறைகாறும்
அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகரவெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனி சிறந்தது என
                             - அந்திமாலை சிறப்பு செய் காதை: 75-84

காமன் இரவு பகல் பாராமல் புகார் நகரத்தைக் காவல் செய்வதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்படிக் காவல் தெய்வமாய் விளங்கிய காமவேளுக்கு ஓர் கோட்டம் எடுத்து இந்திரவிழாவின் போது கடைநாள் பூசையை காமவேளுக்குச் செய்ததாக கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
                              - இந்திரவிழவூர் எடுத்த காதை: 143-144

இதில் வரும் களிறு என்ற சொல் யானையினைக் குறிக்காமல் ஆண் சுறாவினைக் குறிப்பதாகும்.

அதுமட்டுமின்றி, காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற நீர்நிலைகளில் நீராடி இக் காமவேள் கோட்டம் வந்து காமவேளைக் கைதொழும் பெண்டிர் தமது கணவருடன் இன்புற்று வாழ்வர் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

கடலொடு காவிரி அலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலம் கானல் தடம் உள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்
                           - கனாத்திறம் உரைத்த காதை: 57-61

இக் கட்டுரையில் காமவேள் கோட்டத்தைப் பற்றி விரிவாகக் கூறியதன் நோக்கமானது 'வால்வெண் களிற்று அரசு' என்னும் தொடரானது வெள்ளை நிற ஐராவத யானையினை உடைய தேவேந்திரனைக் குறிக்காமல் வெண்ணிற சுறவுக் கொடி கொண்ட அரசனான காமவேளையே குறிக்கும் என்பதை உறுதிப்படுத்தவே ஆகும்.

விண்ணவர் கோமான்:

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பல இடங்களில் விண்ணவர் கோமான், தேவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொல்லாடல்கள் வருகின்றன. இச் சொற்கள் எல்லா இடங்களிலும் யாரைக் குறிக்கின்றன? தேவேந்திரனையா? இல்லை. இச் சொற்கள் சில இடங்களில் சூரியனையும் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கின்றன. இது எவ்வாறு என்று பார்க்கலாம்.

வானத்தில் உள்ள விண்மீன்கள் எல்லாவற்றையும் தேவர்களாகக் கொண்டால் சூரியனே நமக்குத் தெரிந்த மிகப்பெரிய தேவன் அல்லவா?. யார் பெரியவரோ அவரைத் தானே நாம் தலைவனாகக் கொள்வது வழக்கம். அவ்வகையில் தேவர்களில் பெரிய தேவனான சூரியனுக்கு விண்ணவர் கோமான், தேவர் கோமான் என்ற பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம்..

மாந்தர்களாகிய நமக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. இந்த இரண்டு கண்களால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் சூரியனோ மேலிருந்து கொண்டு பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதாகவும் இப்படி பார்ப்பதற்கு அவனுக்கு ஆயிரக்கணக்கான கண்கள் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சூரியனுக்கு ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்திரவிழாவில் புகழ்ச்சியாக வருகின்ற இடங்களில் ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் உறுதியாக தேவேந்திரனைக் குறிக்காது. ஏனென்றால் இப் பெயர் தேவேந்திரன் சாபத்தால் பெற்ற கெட்ட பெயர். புகழாகக் குறிப்பிடும் அளவுக்கு அது ஒரு நல்ல பெயர் அல்ல. எனவே சாபத்தால் பெற்ற ஒரு அவப்பெயரைக் கொண்ட தேவேந்திரனை இச் சொல் இங்கு குறிக்கவில்லை என்பது தெளிவு.

ஆதியில் சூரியனையே குறித்து வந்த இப் பெயர்கள் பின்னாளில் 'இந்திரன்' என்ற பெயர்க் குழப்பத்தினால் தேவேந்திரனையே குறிப்பதாகக் கொள்ளப்படலாயிற்று. ஆம், எப்படி வேந்தன் என்ற சொல் சூரியனையும் தேவேந்திரனையும் குறிக்கிறதோ அதைப்போல சூரியனைக் குறித்துவந்த இந்திரன், தேவர் கோமான், விண்ணவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொற்கள் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

இந்திரவிழாவே தைப்பொங்கலின் முன்னோடி:

மேலே கண்ட பல சான்றுகளில் இருந்து இந்திரவிழாவானது, ஒரு உழவர் திருநாளைப் போல, உழவர்களைச் சிறப்பித்தும், பொங்கல் படையலிட்டும், சூரியனின் கோயிலில் கொடியேற்றியும்,  சூரியனுக்கு திருமுழுக்காட்டியும், சூரியனையே வழிபடு தெய்வமாகக் கொண்டும் அனைத்துப் பிரிவு மக்களாலும் கொண்டாடப்பட்டது என்னும் செய்தி பெறப்பட்டது.

இந்திரவிழாவின் போது நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவின் நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடைதாய் அமைந்திருப்பதை அறியலாம். கொண்டாடப்படும் மாதம் மட்டும் சித்திரை என்றில்லாமல் தை மாதமாக இருக்கிறது. இதைப்போல வேறு சில மாற்றங்கள் இருந்தாலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது தெளிவு. அவ்வகையில் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவிற்கு இந்திரவிழாவே முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதே இக் கட்டுரையின் முடிபாகும்.

பி.கு: இக் காலத்தில் பல இடங்களில் இந்திரன் சந்திரன் என்ற பெயர்கள் ஒரு இணையாகப் பயன்படுத்தப் படுகின்றன. சூரிய சந்திரராகிய இணையைத் தான் அப்படி குறிப்பிடுகின்றனர்.
...............................................................வாழ்க தமிழ்!................................