புதன், 6 மார்ச், 2013

தீ.....தான்......சிவம் !


முன்னுரை:

யார்....யார்....சிவம்?
நீ...நான்...சிவம்!

அன்பே சிவம் என்னும் தமிழ்த் திரைப்படத்தில் வருகின்ற மேற்காணும் பாடல் வரிகளை நம்மில் பலர் கேட்டு மகிழ்ந்திருக்கலாம். இதைப் போலவே அமைந்தது தான் இந்தக் கட்டுரையின் தலைப்பும்.

யார் .... யார் ..... சிவம்?
தீ.... தான் ...... சிவம்!

ஆம், சிவம் என்பது தீயின் வடிவமே என்பதை ஆதாரங்களுடன் நிறுவுவதே இக் கட்டுரையின் நோக்கமாகும். சைவ இலக்கியங்களிலும் சிவன் தீயின் வடிவாகப் போற்றப்பட்டிருக்கிறார். சில பாடல்களில் சிவனை நேரடியாக தீயின் வடிவாகவும் சிலவற்றில் மறைமுகமாகவும் கூறியிருக்கின்றனர். இதைப் பற்றிக் கீழே விளக்கமாகக் காணலாம்.

பொன்னார் மேனியன்:

சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடப்பட்ட பல அருமையான பாடல்களில் கீழ்க்காணும் தேவாரப் பாடலை அறியாதவர் இருக்க முடியாது என்றே கூற்லாம்.

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்க்கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.: தேவாரம்: 239

திருமழபாடியிலுள்ள ஈசனை மேற்காணும் பாடலில் தீயின் வடிவமாகவே கண்டு பாடுகிறார் சுந்தரர்.  இதைப் பற்றிக் கீழே விளக்கமாகக் காணலாம்.

தீயானது பற்றி எரியும் போது அதன் மையத்தில் வெளிர்பொன் நிறம் ஒளிரும். தீயின் இந்த மையப் பகுதியினை சிவனின் உடலாக உருவகப்படுத்தி 'பொன்னார் மேனியன்' என்றார் சுந்தரர். அருகில் உள்ள படம் இதை விளக்கும்.

தீயானது கங்கு நிலையில் கனன்றுகொண்டு இருக்கும் போது அதன் மேற்புறத்தில் சில இடங்களில் கரிந்துபோய் பார்ப்பதற்கு கருப்பும் சிவப்புமாகத் தோன்றும். இந்த கங்குதான் தீயின் அடிநிலை அதாவது முதல்நிலை. இதிலிருந்து தான் தீ வெளிப்படுகிறது. இந்த கங்கினை நோக்கிய சுந்தரருக்கு உடல் முழுவதும் கருநிறக்  கோடுகளைக் கொண்ட புலியின் ஞாபகம் வருகிறது.  இதனால் இந்த கங்கினை, ஈசன் தன் இடையில் அணிந்திருக்கும் புலித்தோலாக உருவகப்படுத்திக் கூறுகிறார் சுந்தரர். அருகில் இருக்கும் இரண்டு படங்களையும் ஒப்பு நோக்கினால் இது எளிதின் விளங்கும்.

பற்றி எரிகின்ற தீயின் நுனி நாக்குகளைப் பார்த்தால் அவை செம்பழுப்பு வண்ணத்தில் ஒளிர்வதைக் காணலாம். மேலும் அவை ஓரிடத்தில் நிலையாக இராமல் அங்குமிங்கும் பரந்து திரிந்த வண்ணமாக இருப்பதையும் காணலாம். தீயின் இந்த புற நாக்குகளையே 'மின்னார் செஞ்சடை' என்கிறார் சுந்தரர். செம்பழுப்பு வண்ணத் தீயின் நாக்குகளை நடராஜரின் செம்பழுப்பு வண்ண சடாமுடியாக உருவகப்படுத்துகிறார் சுந்தரர். ஆம், பரந்து விரிந்து எரிந்து கொண்டிருக்கும் தீயினை, தலைமுடி அங்குமிங்கும் பறக்கக் கூத்தாடும் நடராஜராகக் காண்கிறார். அருகில் உள்ள படம் இதை தெளிவாக்கும்.

அடுத்து ஈசன் தன் செஞ்சடைமேல் கொன்றை மாலையை அணிந்துள்ளதாகக் கூறுகிறார். இந்த மாலையானது தீயின் எப்பகுதியினைக் குறிப்பிடுகிறது?. அருகில் இருக்கும் தீயின் படத்தைப் பார்த்தால் இது விளங்கும். தீயின் செம்பழுப்பு வண்ண புறநாக்குகளின் கீழாகவும் தீயின் மையப்பகுதிக்கு மேலாகவும் அடர்மஞ்சள் நிறத்தில் வளைந்து வளைந்து செல்லும் ஒரு மாலை போன்ற ஒரு பகுதி தெரிகிறதே அதைத்தான் 'கொன்றை மாலை' என்று குறிப்பிடுகிறார் சுந்தரர். அருகிலுள்ள கொன்றை மலரின் படம் இதை இன்னும் தெளிவாக்கும்.

இப்படி, ஈசனின் உடல், சடாமுடி, அணிந்திருக்கும் ஆடை, புனைந்திருக்கும் மலர் என்று நால்வகைப் பொருட்களையும் தீயின் வெவ்வேறு பகுதிகளுடன் உருவகப்படுத்தியே மேற்காணும் பாடலில் அவர் பாடியிருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.

சிவனுக்கு எட்டு தோள்களா?:

சுந்தரர் மட்டுமல்ல, மணிவாசகப் பெருமானும் ஈசனை தீயின் வடிவாகவே கண்டு வழிபடுகிறார். கீழ்க்காணும் பாடலில் சிவனுக்கு எட்டு தோள்களும் மூன்று கண்களும் இருப்பதாகப் பாடுகிறார்.

அன்றே என்றன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே அனையாய் எனையாட்கொண்ட போதே கொண்டிலையோ
இன்றோர் இடையூறு எனக்குண்டோ எண்டோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே.

- திருவாசகம்: குழைத்த பத்து.

கேட்போர் மனதை அப்படியே உருக்கிவிடும் தன்மை வாய்ந்த இப்பாடலின் மூன்றாம் வரியில் ஈசனுக்கு எட்டு தோள்களும் மூன்று கண்களும் இருப்பதாகக் கூறுகிறார். சிவனுக்கு நெற்றிக்கண்ணையும் சேர்த்து மூன்று கண்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதைப் பிற நாயன்மார்களும் புலவர்களும் பாடியுள்ளனர். ஆனால் சிவனுக்கு எட்டு தோள் என்று இப்பாடலில் மாணிக்கவாசகர் பாடுவது ஏன்?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

தோள் என்பது புயத்தை மட்டுமின்றி கண்ணைச் சுற்றியுள்ள விளிம்புப் பகுதியையும் குறிக்கும் என்று முன்னர் ' தோள் என்றால் என்ன?' என்ற ஆய்வுக்கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். இப் பாடலில் வரும் தோள் என்ற சொல்லும் கண்விளிம்பு என்ற் பொருளில் தான் ஆளப்பட்டுள்ளது. இப் புதிய பொருளின்படி சிவனுக்குக் கண்விளிம்புகள் எட்டு என்ற புதிய விளக்கம் பெறப்படுகிறது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

அருகில் உள்ள சிவனின் படத்தைப் பாருங்கள். தவநிலையில் அமர்ந்திருக்கும் அவரது நெற்றிக்கண்ணானது முழுமையாக மூடிய நிலையில் இருக்கிறது. இக்கண்ணிற்கு மேல், கீழ் என்று இரண்டு விளிம்புகள் உண்டு. கீழிருக்கும் இரண்டு கண்களோ பாதி மூடி பாதி திறந்த நிலையில் இருக்கின்றன. இக் கண்கள் ஒவ்வொன்றிற்கும் மேல், இடை, கீழ் என்று மூன்று விளிம்புகள் உண்டு. ஆக இந்த மூன்று கண்களின் விளிம்புகளையும் கூட்டினால் மொத்தம் எட்டாக வருவதைக் காணலாம்.

நெற்றிக்கண் = 2 விளிம்புகள்
வலக்கண் = 3 விளிம்புகள்
இடக்கண்= 3 விளிம்புகள்

மொத்தம்= 2+3+3 = 8 விளிம்புகள்.

சிவன் முகம்:

ஈசனின் முகத்தில் மூன்று கண்களும் அக் கண்களுக்கு மொத்தம் எட்டு விளிம்புகளும் உண்டு என்று மேலே கண்டோம். இந்த உருவ அமைப்பு எதனைக் குறிக்கிறது? இதற்கும் சிவனின் தீ வடிவத்திற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?. இதைப் பற்றிக் கீழே காண்லாம்.

சிவன் தீயின் வடிவம் என்று முன்னர் கண்டோம். எனில் சிவனுடைய மூன்று கண்களும் அவற்றின் எட்டு விளிம்புகளும்  தீயுடன் தொடர்புடையதாய்த் தானே இருக்க முடியும்?. ஆம்! இந்த மூன்று கண்களும் தீயின் மூன்று வகையான தொழில்களையே குறிக்கின்றன. படைத்தல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழில்களையே சிவனின் மூன்று கண்களாகக் கூறுகிறார் மணிவாசகர். இம் மூன்று தொழில்களும் தீக்குரிய மூன்றுவித தொழில்களே ஆகும். ஆம், அழித்தல் மட்டுமின்றி தீயானது ஆக்கல் மற்றும் காத்தல் பணிகளையும் செய்கிறது.


இதற்கு சான்றாக கதிரவனைக் கூறலாம். ஆம், கதிரவனும் பன்னெடுங்காலமாக எரிந்து கொண்டிருக்கும் ஒரு தீப்பிழம்பு தானே.! இக் கதிரவனே பூமியில் உயிர்களின் பிறப்பிற்கு மூலகாரணமாக விளங்குவது நாம் அனைவரும் நன்கு அறிந்ததே. உயிர்களின் படைப்பிற்கும் அவற்றின் வாழ்வுக்கும் காரணமாய் இருக்கும் கதிரவனே அவற்றை அழிக்கவும் செய்கிறான்.

கதிரவன் என்னும் தீயின் இந்த மூன்று தொழில்களையே ஈசனின் மூன்று கண்களாகக் கூறுகிறார் மணிவாசகப்பெருமான். இதன் மூலம் கதிரவனையே அவர் சிவனாக போற்றியிருப்பதும் தெள்ளிதின் விளங்கும். இனி ஈசனின் எட்டு தோள்களைப் பற்றிக் காணலாம்.


தோளும் கோளும்:

முறையான அறிவியல் கல்வி பயின்றிராத போதும் இறை அருளாளர்கள் சிறந்த வானியல் அறிவு பெற்றிருந்தார்கள் என்பதற்கு மேற்காணும் பாடலையே ஒரு காட்டாகக் கூறமுடியும். ஆம், நமது பால்வீதி மண்டலத்தின் நடுவில் கதிரவன் இருக்க அதைச் சுற்றிலும் எட்டு கோள்கள் இருக்கும் இயற்கை அமைப்பினை உணர்ந்த மணிவாசகர், கதிரவன் என்னும் தீயினை சிவனாகவும், அதைச் சுற்றியுள்ள எட்டு கோள்களை சிவனின் எட்டு தோள்களாகவும் இப்பாடலில் உருவகப்படுத்துகிறார்.

புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற எட்டு கோள்களும் கதிரவனின் எட்டு ஆற்றல் விளிம்புகளாக (ஆளும் இடங்கள்) செயல்பட்டுக் கொண்டிருப்பதாக அவர் கூறுகிறார். ஏனென்றால் கதிரவன் என்னும் பெருந்தீயிடமிருந்து வெளிப்படும் ஆற்றலை இக்கோள்களே உள்வாங்கிப் பெருக்குகின்றன. இந்த எட்டு கோள்களின் மீதும் கதிரவன் நேரடியாக ஆட்சி செய்கிறது. ஆனால் இந்த கோள்களின் கணக்கில் சந்திரன் வராதா? என்றால் வராது. ஏனென்றால் சந்திரன் பூமியினுடைய ஒரு துணைக்கோள். பூமியைப் போலவே பால்வீதி மண்டலத்தில் பல கோள்களுக்குத் துணைக்கோள்கள் உண்டு. இவற்றையெல்லாம் கணக்கில் கொள்ள முடியாது. ஏனென்றால் இத் துணைக்கோள்களின் இயக்கமானது அவற்றின் கோள்களைச் சார்ந்தே அமைந்திருக்கிறது.

இதுவரை கண்டவற்றில் இருந்து மணிவாசகர் மேற்காணும் பாடலில் பாடிய மூன்று கண்ணும் எட்டு தோளும் முறையே தீயின் முத்தொழில்களையும் எட்டு ஆற்றல் விளிம்புகளையுமே குறித்து நிற்கிறது என்பதை தெள்ளிதின் அறியலாம்.

சிவலிங்கம்:

ஈசனின் திருக்கோயில்களில் மூலவராக இருப்பது பெரும்பாலும் லிங்க வடிவமே ஆகும். இந்த லிங்க வடிவத்தின் பொருள் என்ன? இதுவும் தீயின் வடிவம் தானா? என்பதைப் பற்றி இங்கே காணப் போகிறோம்.

நாம் முன்னரே கண்டதைப் போல ஈசனின் லிங்க வடிவமும் எரிந்து கொண்டிருக்கும் தீயின் வடிவமே ஆகும். பொதுவாக லிங்க வடிவத்தில் மூன்று பகுதிகள் உண்டு. முதலாவது அடிப்பகுதி. அதற்கு மேல் ஆவுடை. அதற்கு மேல் தண்டுப் பகுதி. இதில் அடிப்பகுதியானது விளக்கு வைக்கப்படும் மணை (கட்டை) யாகும். ஆவுடை என்பது அகல் விளக்காகும். தண்டு என்பது விளக்குத் தீ ஆகும். ஆம், எரிந்து கொண்டிருக்கும் ஒரு விளக்குத் தீயின் வடிவாக ஈசனை உணர்த்தவே கோயிலில் ஈசனுக்கு லிங்க வடிவம் கொடுத்தனர் பெரியோர்.

பரந்து விரிந்து எரிகின்ற பெருந்தீயினை தலைவிரித்துக் கூத்தாடும் நடராஜரின் வடிவாகக் காட்டிய பெரியோர் ஏன் அதனை மூலவராகக் கொள்ளாமல் ஒரு சிறிய விளக்குத் தீயினைக் கொள்ள வேண்டும்?. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

அழல் உருவான சிவம்:

சைவ இலக்கியங்களில் பல சிவனை அழல் வடிவமாகவே பாடியுள்ளன. சிவபெருமான் நீண்டதோர் அழல் உருவாக வடிவெடுத்து நின்றதையும் இந்த அழலின் அடியைத் தேடி திருமாலும், முடியைத் தேடி பிரமனும் சென்று காண முடியாமல் திரும்பியதையும் கீழ்க்காணும் தேவாரப் பாடல் கூறுகிறது.

அரிஅயன் தேடும் அடிமுடி காணா
...அழலுரு வாய்நெடி துயர்ந்தாய்
வரியதள் உடையாய் மான்மழு தீயும்
...மகிழ்வுடன் கரமதில் கொண்டாய்
வரிசையில் துயர்செய் வருவினை தாங்கும்
...மனதையும் தந்தருள் செய்வாய்
பரிமளக் கொடிப்பூ படர்ந்திடும் பொழில்சூழ்
...பராய்த்துறை மேவிய பரனே....8

இப்படி கட்டுக்கடங்காத ஓர் ஆற்றலின் வடிவாக விளங்கும் ஈசனை ஒரு கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியின் விளைவாகத் தோன்றியதே லிங்க வடிவமாகும்.

ஈசன் தானே ஒரு அளப்பெரும் ஆற்றலாய் எங்கும் விரிந்து பரந்திருந்தாலும் அவனை நமக்குள் எழுப்புவதன் மூலம் நாம் அவன் பதத்தை எளிதின் அடைய முடியும் என்பதை உணர்ந்த பெரியோர் அதனை மக்களுக்கு உணர்த்தவே லிங்க வடிவம் கொடுத்தனர். ஆம், ஆசை, சினம் போன்ற உணர்வுகளை மேலெழும்ப விடாமல் கீழே அழுத்தி ( மணை), வயிறே அகல் விளக்காக, விந்து என்னும் உயிர்நீரே எண்ணையாக எரித்தால் சிவம் என்னும் தீ அங்கு தோன்றும். இத் தீயினை தொடர்ந்து எரியச் செய்வதன் மூலம் உயிர்கள் முக்தி பெறலாம். மேலும் இத் தீயானது குண்டலி எனப்படும் வட்ட வடிவ அடிவயிற்றுப் பகுதியின் நடுவில் தோன்றுவது. இந்த குண்டலியைத் தான் சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள ஒரு பாம்பின் வடிவாகக் கோயில்களில் காட்டினர் பெரியோர்.

மண்ணுலகில் பிறந்த உயிர்கள் யாவும் இத் தீயினை எழுப்பி உய்ய வேண்டும் என்னும் உயரிய நோக்கத்தை வலியுறுத்தவே கோவில்களில் சிவலிங்க வழிபாடு தோன்றியது. ஆனால் நாளடைவில் சிவலிங்க வடிவத்தின் தத்துவம் தவறாகக் கொள்ளப்பட்டு பல கீழ்த்தரமான விளக்கங்களும் இன்று உலா வருவது வேதனையானது.

                                 .............தொடரும்.