ஞாயிறு, 21 மார்ச், 2010

ஆதிபகவன் யார்?

குறள்:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
                                             - குறள் எண்: 1

தற்போதைய பொருள்:

பரிமேலழகர் உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரம் ஆகிய முதலை உடையன. அதுபோல உலகம் ஆதிபகவன் ஆகிய முதலை உடைத்து.
மு.வ உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
கலைஞர் உரை: அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
சாலமன் பாப்பையா உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.

குழப்பங்கள்:

மேற்காணும் உரைகளில் கலைஞர் உரை நீங்கலான மூன்று உரைகளும் ஆதிபகவன் என்பதற்கு பொதுவாக 'கடவுள்' என்று விளக்கம் கொடுத்துள்ளன. ஆனால் இன்றைய சூழ்நிலையில் கடவுள் ஒருவர் அல்லரே. சிவன், விட்டுணு, அல்லா, இயேசு, அருகன், புத்தர் என்று ஒவ்வொரு மதத்தவருக்கும் ஒரு கடவுள் உள்ளனரே. வள்ளுவர் இவர்களில் யாரைக் குறிப்பிடுகிறார்?. இது குறித்து இணைய தளங்களில் தேடியபோது பல கருத்துக்கள் கிடைத்தன. அவை கீழே தரப்பட்டுள்ளன.

ஆதிபகவன் என்பது பரமசிவன் தான் என்று சைவர்கள் கூறுகின்றனர். இல்லை இல்லை, ஆதி என்பது வள்ளுவரின் தாய்; பகவன் என்பது அவரது தந்தை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. சமண மதத் தீர்த்தங்கரர்களில் முதலாமவரான ரிஷப தேவரையே இச்சொல் குறிப்பதாக ஒரு சாரார் கருதுகின்றனர். அத்துடன் நிற்காமல் திருவள்ளுவரை சமணர் என்றும் கூறத் தலைப்பட்டு விட்டனர். இன்னும் ஒரு சாரரோ ஆதிபகவன் விட்டுணுவைக் குறிப்பதாகக் கூறி வள்ளுவரை வைணவர் என்று தங்கள் பக்கம் இழுக்கின்றனர். ஆதி பகலவன் என்பதே ஆதி பகவனாக மாறிவிட்டது என்றும் இச்சொல் ஆதி காலத்தில் இருந்து இன்றுவரை வணங்கப்பட்டு வரும் சூரியனையே குறிக்கிறது என்றும் கூறுவார் உளர். இப்படி ஆதிபகவன் குறித்து ஒரு தெளிவான விடையினைக் காண இயலவில்லை. என்றால் உண்மையில் இந்த ஆதிபகவன் யார்?. குழப்பமான இக் கேள்விக்கு சரியான விடையினைக் காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

ஆதிபகவன் - சரியான சொல்லா?

ஆதிபகவன் என்னும் சொல்லே முதலில் தவறானதாகும். இதில் ஒரு எழுத்துப் பிழை உள்ளது. ஆதியகவன் என்பதே சரியான சொல்லாகும். இது கீழ்க்கண்டவாறு இரண்டாகப் பிரிந்து பொருள் தரும்.

ஆதியகவன் = ஆதி + அகவன்.

ஆதி = காரணம். (மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)
அகவன் = அறிவானவன்.
(அகம் = ஞானம் / அறிவு. மேற்கோள்: கழகத் தமிழ்க் கையகராதி, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.)

எனவே ஆதியகவன் என்பது காரண அறிவானவன் என்ற பொருளைத் தரும்.

ஆதியகவன் சரியே என நிறுவுதல்:

ஆதிபகவன் என்ற சொல் தவறு; ஆதியகவன் என்பதே சரி என்று முன்னர் கண்டோம். இது எவ்வாறு சரி என்று இங்கே பார்ப்போம்.

தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி விதி என்ற ஒன்று உண்டு. இது மிகவும் இன்றியமையாததாகும். திருவள்ளுவரும் இவ் விதிகளை மீறாமல் குறள்களை இயற்றி உள்ளார். பொதுவாக எழுத்துப் புணர்ச்சியினை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று உள்ளடிப் புணர்ச்சி. இன்னொன்று புறவடிப் புணர்ச்சி. இதை ஒரு சான்றுடன் காணலாம்.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின் அடங்கப் பெறின்.

இக் குறளின் இரண்டாம் அடியில் 'அடங்க+பெறின் = அடங்கப் பெறின்' என்ற உள்ளடிப் புணர்ச்சி ( ஒரு அடிக்குள் நிகழும் எழுத்துப் புணர்ச்சி) உள்ளது. முதல் அடிக்கும் இரண்டாம் அடிக்கும் இடையிலான 'அறிவறிந்து + ஆற்றின் = அறிவறிந் தாற்றின்' என்பதில் புறவடிப் புணர்ச்சி உள்ளது. புறவடிப் புணர்ச்சி என்பது அடுத்தடுத்த அடிகளுக்கு இடையிலான எழுத்துப் புணர்ச்சியினைக் குறிக்கும். அவ்வகையில் அறிவறிந்து என்ற முதலடியின் ஈற்றுச்சொல் ஆற்றின் என்னும் இரண்டாமடியின் முதல் சொல்லுடன் புணர்ந்து அறிவறிந்தாற்றின் என்று இங்கே வந்துள்ளது. இதுபோன்ற புறவடிப் புணர்ச்சிகளை திருக்குறளில் பல இடங்களில் காணலாம். திருக்குறளில் மட்டுமின்றி பல தமிழ் இலக்கியங்களிலும் இப் புறவடிப் புணர்ச்சியினை காணலாம். இதுபோன்ற ஒரு புறவடிப் புணர்ச்சியே கடவுள் வாழ்த்தின் முதல் பாடலில் வந்துள்ளது.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
யகவன் முதற்றே உலகு.

இக் குறளில் முதல் அடியின் ஈற்றில் வரும் ஆதி என்னும் சொல் இரண்டாம் அடியின் முதலாக வரும் அகவன் என்ற சொல்லுடன் புணரும்போது நன்னூல் சூத்திரம் 162 இன் படி கீழ்க்கண்டவாறு ஆகும்.

ஆதி + அகவன் = ஆதி+ய்+அகவன் (ய் என்பது உடம்படுமெய்)
                           = ஆதியகவன்.

எனவே புணர்ச்சி விதிப்படி ஆதியகவன் என்பதே சரியாகும். திருவள்ளுவரும் ஓலைச்சுவடியில் ஆதியகவன் என்றே எழுதியிருப்பார். பிற்கால மக்கள் ஓலைச்சுவடியில் இருந்து எடுத்து எழுதும்போது தவறுதலாக ஆதிபகவன் என்று எழுதிவிட்டனர். இத் தவறே நாம் மேலே கண்ட குழப்பங்களுக்கு எல்லாம் காரணம் ஆகும்.

அறிவே தெய்வம்:

வள்ளுவர் கடவுள் இருப்பதை மறுக்கவில்லை. அதேசமயம் கடவுளுக்கு ஒரு மதத்தை கற்பிக்கவோ பருப்பொருள் வடிவம் கொடுக்கவோ இல்லை. வள்ளுவர் கடவுளை அறிவின் வடிவமாகவே காண்கிறார். 'சுத்த அறிவே சிவம்' என்று தாயுமானவரும் 'அறிவே தெய்வம்' என்று பாரதியாரும் ' அறிவே கடவுள்' என்று திருமூலரும் இதே நோக்கில் கூறி இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  கடவுளைப் பற்றிய வள்ளுவரது தெளிவான இந் நோக்கினை இதோ கீழ்க்காணும் கடவுள் வாழ்த்துப் பாடல்களிலும் காணலாம்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழார் எனின்.

இப்பாடலில் 'இறைவன் தூய அறிவின் வடிவானவன்' என்பதனை 'வாலறிவன்' என்ற சொல்லால் நேரடியாக உணர்த்துகிறார். அதுமட்டுமின்றி கீழ்க்காணும் பாடல்களிலும் 'இறைவன் அறிவு வடிவானவன்' என்ற கருத்தினை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைக்கிறார்.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடு வாழ்வர்.
வேண்டுதல் வேண்டாமை இலான்அடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல.
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகல் புரிந்தார் மாட்டு.
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால் பிறவாழி நீந்தல் அரிது.
கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார்.

மேற்காணும் ஏழு பாடல்களும் இறைவனின் அடிசேர்தலைப் பற்றியே கூறுகின்றன. உண்மையில் இந்த 'அடிசேர்தல்' என்றால் என்ன?. என்று பார்ப்போம்.

பகுத்தறிவும் ஏன் என்ற கேள்வியும்:

உயிரினினங்களில் மனிதன் மட்டுமே கேள்விகள் கேட்கிறான். இக் கேள்விகள் பலவகைப்படும். எங்கே, எப்படி, எப்போது, யாரால், எதனால், எவற்றால், எவர்களால், ஏன் என்று கேள்விச் சொற்கள் பல உள்ளன. இவற்றுள் ஏன் என்ற கேள்விச்சொல் காரணம் பற்றி எழுவது; மிக மிக இன்றியமையாது; எல்லையற்ற ஆற்றல் கொண்டது; கீழ்நிலையில் உள்ள ஒருவனை மேல்நிலைக்கு உயர்த்தும் ஆற்றல் உடையது; சிந்திக்கும் திறனைத் தூண்டுவது; புரட்சிக்கு அடிகோலி ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் மேம்பாட்டுக்கு உதவுவது. இப்படி இக் கேள்வியின் சிறப்புக்களை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். அதுவல்ல நம் நோக்கம்.

உண்மையில் ஏன் என்னும் கேள்வி ஒரு முடிவில்லாமல் இயங்குகின்ற ஒரு குடைகருவி போன்றாகும். மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்துவதில் ஓர் எல்லை உண்டு. ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் மற்ற கேள்விச் சொற்களை பயன்படுத்த முடியாது. ஆனால் ஏன் என்ற கேள்வியை மட்டும் எல்லை இல்லாமல் எவ்வளவு வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும். ஏன் என்ற கேள்வியே கேட்கப் படாத மாதிரி யாராலும் விடை கூற முடியாது. நீங்கள் விரும்பினால் முயன்று பாருங்கள்.

என்றால் ஏன் என்ற கேள்வி எப்போது நிற்கும்?. எங்கே முடியும்?. இவற்றின் விடை: 'இறைவன்' ஆகும். ஆம், இறைவனே ஏன் என்ற கேள்வியின் முடிவாவான். ஏனென்றால் இறைவன் காரண அறிவானவன். காரண அறிவை அறிய உதவும் கேள்வியான ஏன் என்ற கேள்விக்கு காரண அறிவாய் விளங்கும் இறைவன் தானே விடையாக இருக்க முடியும். எல்லையற்ற புரியாத புதிர்களால் நிறைந்து இருக்கும் இவ் உலகில் எவ்வளவோ இயக்கங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சான்றாக நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றதை நாம் அறிவோம். ஆனால் ஏன் நமது பூமி கதிரவனைச் சுற்றி வருகின்றது?. இந்த ஒரு கேள்விக்கே நம் அறிவியலாளர்களால் இன்னும் சரியான விடை காண முடியவில்லை. அப்படியே அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து இக் கேள்விக்கு விடை கூறி விட்டாலும் அதற்கும் ஒரு ஏன் போட்டுவிட்டால் அவர்கள் கதி என்னாகும்?. ஆம், ஏன் என்ற கேள்வி கேட்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் அதற்கான விடையினைக் காண மிகவும் கடினமாக உழைக்க வேண்டும். இப்படி மனிதனை உந்தும் ஆற்றலாகவும் ஏன் என்ற கேள்வி விளங்குகிறது. 

காரண அறிவின் வடிவாய் விளங்கும் இறைவனே உலகில் உள்ள அனைத்துக் கேள்விகளின் அடிப்பொருள் அதாவது இறுதி விடை ஆவான். இந்த இறுதி விடை ஆகிய அடிப்பொருள் காண்டலையே அடிசேர்தல் என்று கூறுகிறார் வள்ளுவர். தாள் வணங்குதல், தாள் சேர்தல், புகல் புரிதல், அடி சேர்தல் ஆகிய சொற்கள் அனைத்தும் ஏன் என்ற கேள்விகளால் நாம் நம்முள் குடைந்து குடைந்து அடிப்பொருள் ஆகிய இறைவனை அடைய வேண்டும் என்னும் பொருளையே உணர்த்தி நிற்கின்றன.

இப்படி மேலே கண்ட ஏழு பாடல்களிலும் இறைவனை அறிவின் வடிவாகவே போற்றியுள்ளார் வள்ளுவர். அதுமட்டுமின்றி இறைவனை அடையும் முறையினையும் நமக்கு மறைமுகமாக உணர்த்திச் சென்றிருக்கின்றார். இதிலிருந்து வள்ளுவர் எழுதியது ஆதியகவன் தான் என்பதனை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

முடிவுரை:

தாள் வணங்குதல், அடி சேர்தல், தாள் சேர்தல் என்ற சொற்களுக்கு பாதங்களைத் தொட்டு வணங்குதல், பாதங்களில் தலையை வைத்து வணங்குதல் என்றெல்லாம் பொருள் கொண்டு வள்ளுவர் கடவுளுக்கு உருவம் கொடுத்திருப்பதாகக் க்ருதி அவரை தத்தம் மதங்களின் பக்கம் இழுக்க முயன்றுள்ளனர் நமது முன்னோர்கள். இது தவறாகும். ஏனென்றால் ஒரு பாடலுக்குப் பொருள் கூறுமிடத்து தன்கருத்தை ஏற்றிக் கூறாமல் நடுநிலையில் நின்று ஆசிரியரின் கருத்து என்னவாக இருக்கும் என்று ஆராய்ந்து பொருள் கூற வேண்டும் என்பதே விதியாகும்.

கடவுள் வாழ்த்தில் வரும் அனைத்துப் பாடல்களும் இறைவனை அறிவின் வடிவமாகக் காட்டும்போது ஆறாவது பாடலான ' பொறிவாயில் ஐந்தவித்தான்' என்ற பாடல் மட்டும் விதிவிலக்காகவும் நெருடலாகவும் உள்ளது. ஏனென்றால் ஐம்பொறிகளையும் அடக்குதல் என்பது ஐம்பொறிகள் உடைய மாந்தர்க்குரிய செயலாகும். அதை உருவமில்லாத இறைவனுக்கு ஏற்றிக் கூறுவது மிகப் பெரும் தவறாகும். நீத்தார் பெருமையில் வரவேண்டிய இக் குறளை தவறுதலாகவோ வேண்டுமென்றோ சிலர் கடவுள் வாழ்த்தில் சேர்த்துள்ளனர். இதுவே இக் கட்டுரையின் துணிந்த முடிபாகும்.

சனி, 6 மார்ச், 2010

கூந்தலுக்கு மணம் உண்டா?

முன்னுரை:
' பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம்.

குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.


கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.     - பாடல் எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

திருவிளையாடல் திரைப்படம்:

மேற்காணும் பாடலுக்கான விளக்கத்தில் உண்மையிலேயே பொருள் தவறு உள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியை இங்கே காணலாம்.


திருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயக்கப்பட்ட திருவிளையாடல் என்னும் பழைய திரைப்படத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா? என்பதைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு ஓர் ஐயம் வரும். அந்த ஐயத்தைத் தீர்ப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று மன்னன் அறிவிக்க, அதைக் கேட்கும் தருமி ஒருவன் சிவபெருமானிடம் இருந்து ஒரு பாடலைப் பெற்றுவந்து பாண்டிய மன்னனின் அவையில் படித்துக் காட்டுவான். அப் பாடலைக் கேட்டு தனது ஐயப்பாடு நீங்கிய மன்னன் மகிழ்ந்து பரிசளிக்கும்போது நக்கீரர் என்னும் அவைப்புலவர் குறுக்கிட்டுத் தடுத்துவிடுவார். பின்னர் சிவபெருமானே மன்னனின் அவையில் தோன்றி நக்கீரருடன் வாதிடுவார். படத்தில் சிவபெருமானாக வரும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது அருமையான நடிப்புத் திறமையாலும் தருமியாக வரும் நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவையினாலும் இத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ஓடியது. படம் அருமையாக ஓடி இருந்தாலும் அதிலும் சில தவறுகள் இருந்தன. இத் தவறுகள் நம் கட்டுரையுடன் தொடர்புடையவை என்பதால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

திருவிளையாடல் புராணம்:

நாம் மேலே கண்ட திருவிளையாடல் திரைப்படத்தின் கதைக்கருவானது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இருந்தே உருவானது. இப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதும்போது சில உண்மைகளை அவர்கள் ஆராயத் தவறிவிட்டனர். அவை என்ன என்று பார்ப்போம்.

புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் கீழ்க்காணும் ஓர் பாடல் உள்ளது.

தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
                             - பா.எண்: 2520.

மேற்காணும் பாடலுக்கு விளக்கம் கூறும்போது " சிவபெருமான் 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடலை தருமியின் துன்பம் தீரத் தந்தார்." என்று கூறியுள்ளனர். 'கொங்கு தேர் வாழ்க்கை' என்றே துவங்குவதால் இப் பாடலையும் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலையும் ஒன்றாகக் கருதி திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி குறுந்தொகைப் பாடலை எழுதிய இறையனார் என்பவர் சிவபெருமானே என்றும் கூறுகிறார்கள். இக் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனென்றால் கொங்குதேர் வாழ்க்கை என்று சிவபெருமான் எழுதிய பாடலும் இறையனார் எழுதிய பாடலும் ஒன்றே என்று உறுதிப்படுத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மேலும் குறுந்தொகையில் வரும் பாடலின் உண்மையான விளக்கத்தை நாம் அறிந்த பின்னர் பாண்டிய மன்னனது ஐயத்திற்கும் இப் பாடலுக்கும் சற்றும் தொடர்பில்லை என்னும் உண்மையினையும் அறிந்துகொள்ளலாம்.

தவறுகள்:

குறுந்தொகைப் பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கத்தில் தவறுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.


அறிவியல் கூற்றுக்களின் படி, தும்பியாகிய தேனீ இனத்திற்கு மூன்றறிவு மட்டுமே உண்டு. அதாவது தேனீக்களால் பூக்களின் நறுமணத்தை அறிய இயலாது. பூக்களின் ஒளிமிக்க பல வண்ணங்களால் கவரப்பட்டே அவை பூக்களின் மீது சென்றமர்கின்றன. அங்கு சென்றமர்ந்த பின்னர் தனது உணர்வுக் குழாய்களின் மூலம் தேனின் சுவையை அவை அறிகின்றன. சுவை பிடித்திருந்தால் அவற்றை சேகரிக்கின்றன. தேனீக்களின் அறிவு பற்றி ஏற்கெனவே நாம் தொல்காப்பிய உயிர்ப்பாகுபாடு சரியா என்ற கட்டுரையில் கண்டுள்ளோம். தேனீக்கள் மட்டுமின்றி தேனீ  போன்ற பல பூச்சிகளும் ஒளியினால் வெகுவாக கவரப்படுவதை நாம் பர்ர்த்திருக்கிறோம். இரவில் கொளுத்தி வைத்த மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சத்தை நாடி வந்து அந்த விளக்குத் தீயில் விழுந்து எரிந்து உயிர் மாய்க்கும் விட்டில் பூச்சிகள் இதற்கு ஓர் அருமையான சான்றாகும்.

தேனீக்களுக்கு நான்காவது அறிவாகிய வாசமறியும் அறிவே இல்லை என்னும்போது அதனிடத்தில் ' நீ அறிந்த பூக்களில் என் காதலியின் கூந்தலை விட நறுமணமுள்ள பூ உண்டா? ' என்று கேட்பது எவ்வகையில் அறிவுடமை ஆகும்?. என்றால் இப்பாடலை இயற்றிய இறையனார் மூடரோ?. ஒன்றை மட்டும் நாம் தெளிவாக இங்கே உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ்ப் புலவர்கள் யாரும் இயற்கையின் தன்மைகளை அறியாதவர் அல்லர். ஒவ்வொரு உயிரின் பண்புகளையும் நன்கு அறிந்தபின்னரே அவற்றைத் தத்தம் பாடல்களில் பயன்படுத்துவர். அவ்வகையில் இங்கே இறையனாரும் தவறான ஒரு கேள்வியை காதலன் தேனீயிடம் கேட்பதாக அமைத்துப் பாடவில்லை. நாம் தான் அவர் கூறிய சொற்களின் உண்மையான பொருளை வேறு மாதிரியாகப் புரிந்துகொண்டு அவரை முட்டாளாக்கி இருக்கிறோம். இது போன்ற தவறான செயலை நாம் பல பாடல்களில் செய்திருக்கிறோம். காரணம், அகராதிகள் காட்டிய தவறான வழிநடத்தல் தான். அகராதிகள் கூறும் பொருட்களை முழுமையாக நம்பி பொருள் விளக்கம் தருவதால் தான் இவ்வளவு சிக்கல் நேரிடுகிறது. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் கூந்தல் மற்றும் நறிய என்ற சொற்களுக்கு நாம் கொண்ட தவறான பொருட்கள் தான் காரணம் ஆகும்.

திருத்தம்:

கூந்தல் என்ற சொல்லின் சரியான பொருட்கள் ' கண்ணிமை ' மற்றும் 'கண்' ஆகும். கண்ணிமையே முதன்மைப் பொருள் ஆகும். இடவாகு பெயராக கண்ணையும் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. நறிய என்றால் ஒளிமிக்க என்று பொருள். எயிறு என்றால் கடைக்கண் ஈறு என்று முன்னமே நாம் எயிறு என்றால் என்ன? என்ற  கட்டுரையில் கண்டிருக்கிறோம். இப் புதிய பொருட்களின் படி, மேற்காணும் பாடலின் புதிய பொருள் விளக்கம் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும் மயிலினது சாயலையும் கூரிய கடைக்கண் ஈற்றையும் உடைய இப் பெண்ணின் கண்ணிமையைப் போல ஒளிமிக்க பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

நிறுவுதல்:

முதலில் நறிய என்ற சொல்லின் பொருள் பற்றிக் காணலாம். இதற்கு நாம் தற்போது கொண்டிருக்கும் பொருள் 'நறுமணம் மிக்க' என்பதாகும். இது தவறு என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் உணர்த்தும்.
முண்டக நறு மலர் - ஐங்கு.-177
நறுமுல்லை - கலி.-118, 22, 30,32,35,66
நறுவீ முல்லை - அக.-84,164
முல்லை நறுமலர் - அக.-234
நறுவீ முல்லை - முல்லைப்பாட்டு - 9
நறு முல்லை - நற்.- 169
நறுவீ முல்லை - நற்.-367
நறும் தாமரைப் பூவின் - பரிபாடல் திரட்டு -1
முல்லை நறுமலர் - ஐந்திணை ஐம்பது - 6

மேற்காணும் பாடல்களில் 'நறு' என்ற சொல் முல்லை மற்றும் தாமரை (முண்டகம்) மலர்களின் பண்புகளை விளக்க அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இவ் இரண்டு மலர்களும் மணம் அற்ற மலர்கள் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் நல்ல ஒளிவண்ணம் (வெள்ளை மற்றும் சிவப்பு) கொண்டவை என்பதும் நாம் அறிந்ததே. இதிலிருந்து நறு என்ற சொல் இம் மலர்களின் ஒளிமிக்க பண்பினை பற்றியே வந்துள்ளது என்பது தெளிவு.


நறு என்ற சொல் மேற்காணும் பூக்களுக்கு மட்டுமின்றி வேங்கை, கொன்றை, புன்னை போன்ற மரங்களின் பூக்களுக்கும் நெய்தல், குவளை, ஆம்பல் முதலான நீர்த்தாவரங்களின் பூக்களுக்கும் அடைமொழியாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. இப் பூக்களுக்கும் மணம் இல்லை என்றாலும் இப்பூக்களைக் காட்டிலும் முல்லை மற்றும் தாமரைப் பூக்களைப் பற்றியே நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்பதால் தான் இப் பூக்கள் வரும் பாடல்களை இங்கே சான்றாகக் காட்டவில்லை. மணமற்ற பூக்களுக்கு நறு என்ற சொல் அடைமொழியாகப் பயன்படுத்தப் படுவதில் இருந்து நறு என்பது மணத்தைக் குறிக்காமல் ஒளியைக் குறிப்பதாகவே அமைகிறது என்பதை உறுதியாகக் கொள்ளலாம்.

மேலும் நறு என்ற சொல் மேனி என்ற சொல்லுக்கும் அடைமொழியாக கீழ்க்காணும் பாடல்களில் வந்துள்ளது.

நறிய நல்லோள் மேனி - குறு.-62
நறு மேனி - ஐந்திணை ஐம்பது - 30

மேனி என்னும் சொல் கண்ணிமை மற்றும் கண்ணைக் குறிக்கும் என்று ஏற்கெனவே மேனி என்றால் என்ன? என்ற ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ளோம். வண்ணங்கள் தீட்டப்பட்டு ஒளிரும் தன்மையுடைய கண்ணிமைக்கு அடைமொழியாக நறு என்ற சொல் வந்துள்ளதால் இங்கும் நறு என்பது ஒளிப் பண்பையே குறித்து வந்துள்ளது எனலாம்.

அடுத்து கூந்தல் என்பது எவ்வாறு கண்ணிமை அல்லது கண்ணைக் குறிக்கும் என்பதனை சில சான்றுகளுடன் கீழே காணலாம்.

கூந்தலை மலருடன் ஒப்பிடுதல்:

கூந்தல் பசுமலர் - ஐங்கு.-76
போது ஆர் கூந்தல் - ஐங்கு.- 82,232,417
நறுமலர் காண்வரும் குறும்பல் கூந்தல் - அகநா.-116
கூந்தல் போது - அகநா.-145
கூந்தல் மலர் - அகநா. 162
தோடு ஆர் கூந்தல் - அகநா.-231
போது ஆர் கூந்தல் - அகநா.-246,371
கூந்தல் போதின் - நற்.-284
இரும் போது கமழும் கூந்தல் - நற்.-298
கார்மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் - பதிற்.-20
குவளை உள்ளகம் கமழும் கூந்தல் - ஐங்கு.-225
பூ கமழ் கூந்தல் - ஐங்கு.- 290
( ஆர்தல் = ஒத்தல்; கமழ்தல் = தோன்றுதல்)

மேற்காணும் பாடல் வரிகளில் கூந்தலை மலருடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். பொதுவாக மலர்கள் அனைத்துமே மெல்லிய ஏடுகளை (இதழ்களை) உடையவை. ஒன்று அல்லது பல வண்ணங்களில் அழகுடன் ஒளிர்பவை. விரிந்து சுருங்கும் தன்மை கொண்டவை. ஒரு மலரின் இந்தப் பண்புகள் அனைத்தையும் பெற்ற மனித உடல் உறுப்பு எது?. பெண்களின் தலைமுடியா?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் பெண்களின் தலைமுடியில் மெல்லிய ஏடுகள் இல்லை. அத்துடன் அவை சுருங்கி விரியும் தன்மை பெற்றவையும் அல்ல. கருமை நிறம் ஒன்றைத் தவிர வேறு நிறமும் இதற்குக் கிடையாது. ஆனால் பெண்களின் கண்ணிமைகளுக்கு இப் பண்புகள் அனைத்தும் உண்டு. மெல்லிய இதழ் போன்ற பெண்களின் கண்ணிமைகள் வண்ணப் பொடிகளால் விரும்பியவாறு அழகு செய்யப் படுபவை. சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. இதிலிருந்து கூந்தல் என்ற சொல் மேற்காணும் பாடல்களில் எல்லாம் கண்ணிமையினைத் தான் குறிக்கிறது என்பதைத் தெளியலாம்.

கூந்தலை வண்டுகள் மொய்த்தல்:

வண்டு படு கூந்தல் - ஐங்கு.-256, 267
தேம் பாய் கூந்தல் - ஐங்கு.-324
வண்டு அரற்றும் கூந்தலாள் - கலி.-1
தேம் பாய் கூந்தல் - குறு.-116
வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் - அக.-131
சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் - அக.-161
தேம் பாய் கூந்தல் - அக.-257
சுரும்பு ஆர் கூந்தல் - அக.-319
தேம் பாய் மராம் கமழும் கூந்தல் - நற்.-20
வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் - நற்.-270
தேம் மறப்பு அறியா கமழ் கூந்தலளே - நற்.-301
மகிழ் மிகு தேம் கோதையர் கூந்தல் - பரி.-17

மேற்காணும் பாடல் வரிகளில் பெண்களின் கூந்தலை வண்டுகள் மொய்ப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ் வரிகளில் வரும் வண்டு, தேம், சுரும்பு ஆகிய பெயர்கள் யாவும் தேனீக்களைக் குறிப்பவை. தேனீக்கள் எதனை மொய்க்கும்? ஏன் மொய்க்கும்? என்பதனை நாம் முன்னரே கண்டுள்ளோம். வண்ண மலர்களின் ஒளியினால் கவரப்படுவதால் தேனீக்கள் மலர்களை மொய்க்கின்றன என்னும் அறிவியல் உண்மையினை நாம் முன்னரே அறிவோம். பெண்களின் தலைமுடியானது கருமை நிறம் கொண்டது என்பதால் தேனீக்கள் அதனை ஒருபோதும் மொய்க்காது. ஆனால் பெண்களின் கண்ணிமையானது மலர்களைப் போல் வண்ணங்களால் தீட்டப்படுவதால் தேனீக்கள் அவற்றை மலர்களோ என மயங்கி மொய்ப்பதாகக் கருத இடமுண்டு. எனவே இங்கும் கூந்தல் என்ற சொல்லானது கண்ணிமைப் பொருளிலேயே வந்துள்ளதை அறியலாம்.

இது போல பல சான்றுகள் இன்னும் இருந்தாலும் இறுதியாக ஒரு வரலாற்றுச் சான்றினை இங்கே தந்து நிறுவலாம். பரிபாடலில் மூன்றாவது பாடலில் திருமாலை வாழ்த்துவதாகக் கீழ்க்காணும் வரி வருகிறது.

வடிவு வேற்றுமையும் பெயர் வேற்றுமையும்
கூந்தல் என்னும் பெயரொடு
கூந்தல் எரிசினம் கொன்றோய்!

மேற்காணும் பாடல் வரிகளில் முதலாவதாக வரும் கூந்தல் என்பது கண்ணனைக் குறிக்கும். இரண்டாவதாக வரும் கூந்தல் என்பது குதிரை வடிவெடுத்த கேசி என்னும் அரக்கனைக் குறிக்கும். குதிரை வடிவெடுத்து சினத்துடன் தன்னை தாக்க வந்த கேசி என்னும் அரக்கனின் வாயைப் பிளந்து கொன்றான் கண்ணன் என்று கீழ்க்காணும் திருப்பாவை எட்டாம் பாடல் கூறுகிறது.


கீழ்வானம் வெள்ளன் றெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான் வந்து நின்றோம் கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

                                                   தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால்
                                                   ஆவா வென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்!

மேற்காணும் பாடலில் வரும் 'மாவாய் பிளந்தானை' என்னும் சொற்றொடர் முற்சொன்ன வரலாற்றையே குறிக்கிறது. இனி கூந்தல் என்ற ஒரே பெயர் எவ்வாறு கண்ணனையும் அரக்கனையும் குறிக்கும் என்று பார்ப்போம். கண்ணனின் கண்ணிமைகள் காயா மலரின் கருநீல வண்ணத்தில் இருந்தன என்று பரிபாடல் கூறுவதாக நாம் முன்னரே ஒரு கட்டுரையில் கண்டுள்ளோம். கருநீல வண்ணத்தில் அழகிய கண் இமைகளைப் பெற்றவன் என்ற பொருளில் தான் அவனுக்குக் 'கண்ணன்' என்றே பெயரிட்டு அழைத்தனர் போலும். கண்ணனின் சிறப்பு அவனது பெயரில் வரும் கண்ணே என்பதால் கண்ணனை 'கூந்தல்' என்று பெயர் வேற்றுமையாக குறிப்பிட்டுள்ளனர். இதிலிருந்து கூந்தல் என்பது இங்கே கண்ணிமைப் பொருளில் வந்துள்ளதை அறியலாம்.


அடுத்து கூந்தல் என்பது எவ்வாறு குதிரை வடிவெடுத்த அரக்கனைக் குறிக்கும் என்று பார்ப்போம். விலங்குகளில் குதிரையின் கண் சிறப்பு வாய்ந்தது. நிலத்தில் வாழும் பாலூட்டி விலங்குகளில் குதிரையின் கண்ணே மிகப் பெரியதாகும். இந்த அறிவியல் உண்மையினை விக்கிபதில்கள் என்ற இணையதளத்தில் காணலாம். இதைத் தவிர குதிரையின் கண்களுக்குப் பல சிறப்பம்சங்கள் உண்டு. இவை பற்றி ஹார்ஸ்வைஸ் என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு தனது கண்களால் குதிரை சிறப்படைவதால் குதிரைக்கு 'கூந்தல்' என்ற பெயர் ஏற்பட்டது. குதிரைக்கு 'கூந்தல்மா' என்றொரு பெயரும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது. கூந்தலை உடைய குதிரையின் வடிவெடுத்து வந்த அரக்கனின் வாயை கண்ணன் பிளந்த வரலாற்றினை கீழ்க்காணும் பாடலும் உறுதி செய்கிறது.

மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை
வாய் பகுத்திட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்
மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு
- கலித்தொகை பா.எண்: 102

இப்படி கூந்தலால் சிறப்பு பெற்ற குதிரையின் வடிவெடுத்து வந்தமையால் அந்த அரக்கனை 'கூந்தல்' என்று வடிவு வேற்றுமையாகக் குறிப்பிட்டுள்ளனர். " குதிரைக்கு அதன் பிடரி மயிர் சிறப்பம்சமாகும். எனவே கூந்தல் என்பது குதிரையின் பிடரி மயிரைத் தான் குறிக்கும்" என்று சிலர் கருதலாம். ஆனால் இது தவறாகும். ஏனென்றால் பிடரி மயிர் என்பது குதிரைக்கு மட்டுமே உரிய சிறப்பம்சமல்ல; சிங்கங்களுக்கும் உண்டு. அன்றியும் எல்லாக் குதிரைகளுக்கும் பிடரி மயிர் இருப்பதுமில்லை. கூந்தல் என்பது குதிரையின் சிறப்புப் பெயர் என்பதால் இப் பெயர் குதிரையின் சிறப்பம்சமான கண்ணையே குறிக்கிறது எனத் தெளியலாம்.


                                                                                      முடிவுரை:

கூந்தல் என்ற சொல் சங்க இலக்கியத்தில் கண் மற்றும் கண்ணிமை ஆகிய பொருட்களிலேயே பயன்படுத்தப் பட்டுள்ளதை நாம் மேலே ஆதாரங்களுடன் கண்டோம். சில பாடல்களில் கூந்தலைக் குறிப்பிடும்போது ஐம்பால், ஐங்கூந்தல் என்றெல்லாம் கூறி உள்ளனர். இதற்கு ஐந்துவகையாகப் பிரிக்கப்பட்ட பெண்களின் தலைமுடி என்று பொருள் கொள்கின்றனர். இது தவறான பொருளாகும். ஐந்து வண்ணங்களில் அலங்கரிக்கப்பட்ட கண்ணிமையினையே இச் சொற்கள் குறிக்கின்றன. அருகில் உள்ள படம் இதற்கு ஓர் சான்றாகும்.  மயில் தோகையில் பல கண்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். மயில் தோகையில் உள்ள கண்களைப் போல பெண்களின் கண்கள் பல வண்ணங்களில் அலங்கரிக்கப் படுவதால்  பெண்களை 'கூந்தல் மயில்' என்று கூறுகிறது ஏலாதியின் 33 ஆம் பாடல்.

இப்படிப் பல சான்றுகளை மேலும் கூறிக் கொண்டே போகலாம். இனி முன்னுரைக்கு வருவோம். கூந்தலுக்கு மணம் உண்டா? என்னும் கேள்வியே நம் கட்டுரையின் தொடக்கமாகும். திருவிளையாடல் புராணத்தை அடிப்படையாக வைத்துத் திரைக்கதை அமைக்கும்போது செய்த தவறே இக் கேள்விக்கு அடிகோலி இருக்கிறது. இப் புராணத்திற்கும் நாம் முன்னர் கண்ட குறுந்தொகைப் பாடலுக்கும் துளியும் தொடர்பில்லை என்னும் உண்மையினை நாம் இங்கே அறிந்து கொண்டோம் அல்லவா!. இப்போது நீங்களே சொல்லுங்கள் கூந்தலுக்கு மணம் உண்டா?.

இக் கட்டுரை குறித்த உங்கள் ஐயங்களை அல்லது கருத்துக்களை நீங்கள் தாராளமாகப் பின்னூட்டத்தில் கேட்கலாம் அல்லது இடலாம்.