திங்கள், 26 ஜூன், 2017

கூழையும் கூழாங்கல்லும்

முன்னுரை:

சங்கப் புலவர்கள் நாவில் பயின்றுவந்து பல காலங்களாகப் பின்பற்றப்பட்டு இன்றளவும் புழக்கத்தில் இருந்துவருகின்ற பல தமிழ்ச்சொற்களுள் ஒன்றுதான் 'கூழை' என்பதாகும். இச் சொல்லுக்குப் பலவிதமான பொருட்களை இற்றைத் தமிழ் அகராதிகள் கூறியிருந்தபோதிலும், சில இலக்கியப் பாடல்களில் எப்பொருளும் பொருந்தாத நிலையே காணப்படுகின்றது. இது இப்பொருளுக்குப் புதியதோர் பொருள் இருப்பதையே காட்டுகின்றது. இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் பல ஆதாரங்களுடனும் விளக்கங்களுடனும் காணலாம். 

கூழை - தற்போதைய அகராதிப்பொருட்கள்:

கூழை என்னும் சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் காட்டுகின்ற பொருட்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கூழை¹ kūḻai , n. < குழை-. 1. Woman's hair; பெண்டிர் தலைமயிர். கூழை விரித்தல் (தொல். பொ. 262). 2. Feathers, plumage; இறகு. (திவா.) 3. Peacock's tail; மயிற்றோகை. (பிங்.) 4. Tail; வால். புன்கூழையங் குறுநரி (கல்லா. 89, 18). 5. Middle, centre; நடு. (திவா.) , n. prob. khulla. 1. That which is short; குட்டையானது. நாய் கூழைவா லாற் குழைக்கின்றதுபோல (திவ். திருவாய். 9, 4, 3). 2. [T. kūḷa, K. kūḻe, Mhr. khuḷa.] Dullness of intellect, stupidity; புத்திக்குறைவு. கூழைமாந்தர்தஞ் செல்கதி (தேவா. 462, 9). 3. A mode of versification. See கூழைத்தொடை. ஈறிலி கூழை (காரிகை, உறுப். 19). 4. Dwarf snake. See கூழைப்பாம்பு. (சங். அக.) , n. < குழை¹-. 1. Mud, mire; சேறு. கூழை பாய்வயல் (தேவா. 473, 8). 2. cf. kuš. Gold; பொன். (அக. நி.), , n. cf. kūla. 1. Rear of an army; படையின் பின்னணி. கூழைதார் கொண்டி யாம் பொருதும் (புறநா. 88, 1). 2. Hindmost row, as of a herd of cows; கடைவரிசை. அவன்றான் . . . பிற்கூழையிலே நிற்குமாய்த்து (ஈடு, 9, 9, ப்ர.).  n. Drum; முரசு. (அக. நி.).

கூழை என்னும் சொல்லுக்கு, பெண்களின் தலைமயிர், இறகு, மயில்தோகை, வால், நடு, குட்டையானது, புத்திக்குறைவு, ஒருவகைத்தொடை, ஒருவகைப்பாம்பு, சேறு, பொன், படையின் பின்னணி, கடைசிவரிசை, முரசு என்று 14 விதமான பொருட்களை அகராதிகள் கூறியிருக்கின்றன.

பொருள் பொருந்தா இடங்கள்:

தமிழ் அகராதிகள் மேலே கூறியுள்ள 14 விதமான பொருட்களில் எதுவும் பொருந்தாத சில இலக்கிய இடங்களைக் கீழே காணலாம்.

கூழையும் சந்தனமும்:

பெண்கள் தமது கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்
தகைபெற வாரி புலர்வுஇடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140

இப்பாடலில் வரும் ஐம்பால் மற்றும் கூழையில் சந்தனக் குழம்பினைப் பூசியதால் அது உலர உலர கீழே துகள்கள் உதிர்வதைப் பற்றி மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதற்கும் கூழை என்பதற்கும் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்கள் தமது தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக் காயவைத்தார்கள் என்று பொருள்வரும். ஆனால், உண்மையில் எந்தவொரு பெண்ணும் தலைமயிரில் சந்தனக் குழம்பினைப் பூசிக்கொள்ளமாட்டார். அவ்வாறு பூசிக்கொள்வது பெண்களின் பழக்கமுமில்லை. இதைப்பற்றி விரிவாக முச்சி என்றால் என்ன? என்ற கட்டுரையிலும் கண்டுள்ளோம். இதிலிருந்து இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் கூழை என்பதும் தலைமயிரினைக் குறித்து வரவில்லை என்பதும் கூழை என்ற சொல்லுக்கு அகராதிப் பொருட்கள் நீங்கலாக புதியதோர் பொருள் உள்ளது என்பதும் உறுதியாகிறது.

கூழையும் நெறியும்:

பெண்களின் கூழையில் குறுநெறிகள் தோன்றுவதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கூழையும் குறுநெறி கொண்டன முலையும்
சூழி மென் முகம் செப்புடன் எதிரின
பெண் துணை சான்றனள் இவள் என .. - அகம். 315

ஒரு பெண்ணின் கூழையில் குறுநெறிகள் தோன்றியதாலும் அவளது முலையின் மென்முகம் செப்புவடிவம் கொண்டதாலும் அப்பெண் ஓர் ஆடவனுக்குப் பெண்துணையாக மாறும் பருவத்தை அடைந்துவிட்டதாக இப்பாடலுக்குப் பொருள் கூறுகின்றனர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குத் தலைமயிர் என்று பொருள்கொண்டு அப் பெண்ணின் தலைமயிரில் பல குறுகிய வளைவுகள் அல்லது சுருள்கள் தோன்றியதால் அவள் திருமணத்திற்குத் தயாராகி விட்டாள் என்று விளக்கம் கொள்கின்றனர். இவ் விளக்கம் பொருத்தமானதா என்றால் இல்லை எனலாம். காரணம், பெண்களுடைய தலைமயிரில் இயற்கையாகவே பல குறுகிய வளைவுகளோ சுருள்களோ உருவாவதில்லை. அவர்கள் செயற்கையாகச் செய்யும் வினைகளால் மட்டுமே அப்படியான விளைவுகளைத் தமது தலைமயிரில் உருவாக்கிக் கொள்ளமுடியும். இது அனைவரும் அறிந்த ஒன்றே ஆகும். நீக்ரோ போன்ற சில இனங்களைச் சேர்ந்த பெண்களுக்கு வேண்டுமானால் சுருள்சுருளான தலைமயிர் இருக்கலாம். ஆனால் அதுகூட அவர்களது சிறுவயது முதலே சுருள்சுருளாகத்தான் இருக்கும். திருமண வயதுக்கும் தலைமயிரில் உள்ள சுருள்களுக்கும் ஒரு தொடர்புமில்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

கூழையும் மணியும்:

பெண்களின் கூழையினை ஒளிவீசும் மணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது கீழ்க்காணும் பெருங்கதைப் பாடல்.

நீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன
கோலம் கொண்ட குறு நெறி கூழை - பெருங்.இலாவா.

பெரிய நீலமணி ஒன்று தானே முயன்று அசைவதைப் போல அழகுடையதும் குறுகிய வளைவுகளை உடையதுமான கூழை என்று இப்பாடலுக்குப் பொருள் கொள்ளலாம். இப்பாடலில் பெண்களின் கூழையினை நீலமணியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். இப்பாடலில் வரும் கூழை என்பதற்குப் பெண்களின் தலைமயிர் என்று பொருள்கொண்டால், பெண்களின் தலைமயிரானது நீலமணி போல இருந்தது என்று விளக்கம் வரும். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. காரணம், மணியானது உருண்டை வடிவில் ஒளிரும் பண்புடையது. ஆனால், பெண்களின் கூந்தலுக்கு உருண்டை வடிவமோ ஒளிரும் பண்போ கிடையாது. பொருத்தமே இல்லாத இரண்டு பொருட்களை ஒப்பிடுவது புலவர்களின் வழக்கம் இல்லை என்பதால் இப்பாடலில் வரும் கூழை என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

கூழை - புதிய பொருள் என்ன?

கூழை என்ற சொல்லுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:
  
கண்ணிமை .

கூழை - பெயர்க்காரணம்:

பெண்களின் கண்ணிமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏன் ஏற்பட்டது என்று கீழே காணலாம்.

1. குழையும் அதாவது நெகிழும் தன்மை உடையதால் இமைகளுக்குக் கூழை என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

குழைதல் ----> கூழை

2. கூழ் போன்ற நறுஞ்சேறு / சாந்தினைப்பூசி அழகுசெய்யப்படுவதால் கூழை என்று அழைக்கப்பட்டிருக்கலாம்.

கூழ் ------> கூழை

நிறுவுதல்:

கூழை என்பதற்குக் கண்ணிமை என்ற புதிய பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனைப் பல ஆதாரங்களுடன் விளக்கமாகக் கீழே காணலாம்.

கண்ணிமைகளில் சாந்து பூசுதல்:

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் குளிர்ச்சியும் நறுமணமும் தரவல்ல சந்தனம், தகரம், கத்தூரி முதலான பொருட்களைத் தனியாகவோ பிற சாந்துகளுடன் கலந்தோ பூசுவர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். அதைப்போல கூழை ஆகிய இமையின் மேலும் இவற்றைப் பூசிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

....நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்- கம்ப.அயோ.5/10

.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்
தகைபெற வாரி புலர்வுஇடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140

இப்பாடலில் வரும் ஐம்பால் என்பதும் கூழையினைப் போலவே இமைகளைக் குறிப்பதாகும். பொதுவாக சந்தனக் குழம்பானது உலர உலர துகள் துகளாக உதிர்ந்து விடும் தன்மையது. ஆகவே பெண்கள் ஒருநாளில் இதனைப் பலமுறை பூசுவதுண்டு. தனது தாய் தன்னைத் திட்டிவிடுவாள் என்று பயந்து, சந்தனத்தைக்கூடச் சரியாகப் பூசி முடிக்காமல் தனது மேலாடை சரிந்துவிழாமல் இருக்க அதனைக் கைகளால் தழுவிக்கொண்டு அவசர அவசரமாகக் கொல்லைப்புறத்தில் இருக்கின்ற காட்டுக்குள் ஓடிப்போகும் ஒரு தலைவியைப் பற்றிய பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

......யானும் என் சாந்து உளர் கூழை முடியா
நிலம் தாழ்ந்த பூங்கரை நீலம் தழீஇ தளர்பு ஒல்கி
பாங்கு அரும் கானத்து ஒளித்தேன்.. - கலி.115

கண்ணிமைகளும் வரிகளும்:

பெண்களின் கண்ணிமைகளில் பலருக்கு இயற்கையாகவே பல வரிகள் காணப்படும் என்று முன்னர் கண்டுள்ளோம். இவ் வரிகள் உண்டாவதற்குக் காரணம், இவர்களது கண்கள் உருண்டு திரண்டு பெரியதாக இருப்பதே ஆகும். இமைகளின் சுருங்கி விரியும் தன்மையினால் இயற்கையாகவே பல சுருக்கங்கள் அதாவது வரிகள் தோன்றிவிடும். இந்த சுருக்கங்கள் அல்லது வரிகளையே நெறிகள் என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. இவை இயல்பாகவே அளவில் குறுகியவை என்பதால் இவற்றைக் குறுநெறி என்று குறிப்பிடுவர். சான்றுக்குச் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

....கோலம் கொண்ட குறுநெறிக் கூழை - பெருங்.இலாவா.
....நெறிபடு கூழை கார் முதிர்பு இருந்த .. - நற்.368

பெண்கள் வளர வளரச் சிறிதாக இருந்த அவரது கண்கள் அகன்று பெரிதாகும்; அதற்கேற்ப அவரது கண்ணிமைகளும் மெலிந்து பெரிதாகும். இதனால் அவரது இமைகளில் பல நெறிகள் அதாவது வரிகள் உருவாகும். இயற்கையாகவே அவரது விழிகள் உருண்டு திரண்டு அழகாகத் தோன்றத் துவங்கும். போதாக்குறைக்கு தமது கண்ணிமைகளின் மேல் பல வண்ணச்சாந்துகளைக் கொண்டு பூசி அழகும் செய்வர். பலவரிகளைக் கொண்டதும் செந்நிறத்தில் மைபூசி குங்குமச்சிமிழ் போலக் குவிந்து தோன்றுவதுமான அழகிய கண்களை உடையதோர் மங்கையைக் கண்டு மனம் மயங்காத காளையர் உண்டோ?. அப்படிப்பட்ட ஒரு மங்கையைப் பற்றிக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் கூறும் செய்தியினைக் காண்போம்.

கூழையுங் குறுநெறிக் கொண்டன முலையும்
சூழி மென்முகஞ் செப்புடன் எதிரின
பெண்துணை சான்றனள் இவளெனப் பன்மாண்
கண்துணை ஆக நோக்கி நெருநையும்
அயிர்த்தன்று மன்னே நெஞ்சம்! பெயர்த்தும்    
அறியா மையிற் செறியேன் யானே
பெரும்பெயர் வழுதி கூடல் அன்னதன்
அருங்கடி வியனகர்ச் சிலம்புங் கழியாள்
சேணுறச் சென்று வறுஞ்சுனைக்கு ஒல்கி
புறவுக்குயின்று உண்ட புன்காய் நெல்லிக்    
கோடை யுதிர்த்த குவிகண் பசுங்காய்
அறுநூற் பளிங்கின் துளைக்காசு கடுப்ப
வறுநிலத் துதிரும் அத்தம் கதுமெனக்
கூர்வேல் விடலை பொய்ப்பப் போகிச்
சேக்குவள் கொல்லோ தானே தேக்கின்    
அகலிலை குவித்த புதல்போல் குரம்பை
ஊன்புழுக்கு அயரும் முன்றில்
கான்கெழு வாழ்நர் சிறுகுடி யானே.     - அகம். 315

பொருள்: என் மகளின் கண்ணிமையில் குறுகிய வரிகள் தோன்றின; அவளது கண்களோ குங்குமச் சிமிழைப் போல உருண்டு திரண்டு விட்டன. (கண்டவர் மயங்கும் கண்ணழகி ஆனதால்) இவளுக்குப் பெண்துணை தேவையென்று பலநாட்களாக எனது கண்பார்வையில் இருக்குமாறு வீட்டுக்குள் செறித்து வைத்திருந்தேன் நேற்றுவரை. இன்று ஒருநாள் எனது அறியாமையினால் வீட்டுக்குள் அவளைச் செறித்துவைக்காமல் போய்விட்டேனே! ஐயகோ! கூரிய வேலையுடைய ஒரு விடலை சொன்ன பொய்யினை உண்மையென்று நம்பி, தான் அணிந்திருந்த கால்சிலம்பினைக் கூடக் கழிக்காமல் வழுதியின் கூடல்நகர் போல வளம்மிக்க தனது ஊரினைக் கடந்து, நீரில்லாததால் புறாக்கள் குடைந்துண்ட நெல்லிக்காய்கள் நூலறுந்து வீழும் துளையுடைய பளிங்குக்காசுகளைப் போல கோடைக்காற்றிலே உதிர்வதான பாலைநில வழியாக அவனுடன் நெடுந்தூரம் சென்ற என் மகள், தேக்கின் அகன்ற இலைகளால் மூடப்பட்ட புதர்போன்ற குடிசையில் இறைச்சி உண்ணும் கானக மனிதர் வாழ்கின்ற சிறுகுடி எனும் ஊரில் தான் இனி வாழ்வாளோ!

பெண்களைப் பெற்றோர் அவர்களைத் திருமணம் செய்துகொடுக்கும்வரையிலும் தமது வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வதாக அடிக்கடிப் புலம்புவதுண்டு. இப்புலம்பல் இன்று நேற்றல்ல சங்ககாலத்திலும் இருந்துள்ளது என்பதற்கு இப்பாடல் ஓர் சான்றாகும்.

கண்ணிமைகளும் மணியும்:

பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை ஒளிரும் மணிகளுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம் என்று மேனி என்றால் என்ன என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல பெண்களின் கூழையாகிய இமைகளையும் நீலமணிகளுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல் வரி கீழே:

....நீல மாமணி நிமிர்ந்து இயன்று அன்ன
கோலம் கொண்ட குறு நெறி கூழை... - பெருங்.இலாவா.

உருண்டு திரண்ட விழிகளுடன் நீலநிறத்தில் மைபூசி இருக்கும்போது பெண்களின் கண்கள் பார்ப்பதற்குப் பெரியதோர் நீலமணியினைப் போலவே தோன்றும். அத்துடன், இமைகள் எப்போதும் அசையும் தன்மை உடையவை என்பதால், வெறுமனே நீலமணி என்று கூறாமல் தானே முயன்று அசையும் தன்மை கொண்டதோர் நீலமணி என்று சிறப்பித்துக் கூறுகிறார் புலவர்.

முடிவுரை:

பெண்களைப் பொருத்தமட்டில் கூழை என்பது அவரது கண்ணிமையினையும் குறிக்கும் என்று மேலே கண்டோம். பொதுவாக பெண்களின் கூழையில் அதாவது கண்ணிமைகளில் பல வரிகள் காணப்படும் என்று மேலே கண்டோம். இமைகளில் காணப்படும் வரிகளைப் போல இருப்பதால் ஒழுங்குடன் கூடிய அணிவகுப்பு / வரிசையினைக் குறிக்கவும் கூழை என்ற சொல்லினை பயன்படுத்தலாயினர் எனலாம்.

அதுமட்டுமின்றி, பெண்களின் உருண்டு திரண்ட விழிகளும் மையுண்ட இமைகளும் சேர்ந்து காண்பதற்கு மணிகளைப் போலவும் தோன்றும் என்று மேலே கண்டோம். இந்த மணிகளைப் போலவே உருண்டு திரண்டு கூர்முனை ஏதுமின்றி வழவழப்புடன் கூடிய சிலவகைக் கற்களும் உண்டு. இக்கற்களையே கூழாங்கல் என்று அழைக்கிறோம். கூழாங்கற்களில் பல வண்ணங்களும் உண்டு. காண்பதற்கு வழவழப்பாய்த் தோன்றும் கூழாங்கல் என்ற பெயரின் காரணம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கூழாங்கல் = கூழ் + ஆம் + கல் = வழவழப்பினை / மழுக்கத்தினை உடைய சிறுகல்.

வழவழப்பினை / மழுக்கத்தினைக் குறித்து வந்த கூழ் என்ற சொல்லானது நாளடைவில் வெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவற்றைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.

கூழைக்கை = குறைக்கப்பட்டு மழுங்கிய கை
கூழைக்கொம்பன் = மழுங்கிய கொம்புள்ள மாடு
கூழைநரி = வால் குட்டையான நரி.

வெட்டுண்டு மழுங்கிய கை, வால், கொம்பு போன்றவை குறையுடையவை / குட்டையானவை என்பதால், கூழை என்ற சொல்லானது நாளடைவில் குறைபாடுடையதையும் குட்டையானதையும் குறிக்கப் பயன்படலாயிற்று. கூழை என்னும் சொல்லின் பொருள் விரிவாக்கப் படிநிலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1) கூழை = கண்ணிமை
          ===> திரட்சி + வழவழப்பு
                     ( மணி, கூழாங்கல்... )
          ===> மழுக்கம்
                    ( மழுங்கிய கை, வால், கொம்பு....)
          ===> குறைபாடு, குட்டை
                                                             
2) கூழை = கண்ணிமை
          ===> வரிகள்
          ===> வரிசை

வெள்ளி, 9 ஜூன், 2017

முச்சி என்றால் என்ன? ( கண்ணாமுச்சி ரே... ரே...)

முன்னுரை:

சங்ககாலம் தொட்டு பலகாலங்களாகப் பயன்படுத்தப்பட்டு வந்து தற்போது பயன்பாட்டில் இல்லாத பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றாக 'முச்சி' என்ற சொல்லைக் கூறலாம். இச் சொல்லுக்குப் பல பொருட்களை இன்றைய தமிழ் அகராதிகள் கூறியிருந்தாலும் இப் பொருட்களில் எதுவுமே பொருந்தாத நிலை சில இலக்கியப் பாடல்களில் காணப்படுகிறது. இது இச்சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. இச் சொல்லுக்கான புதிய பொருள் என்ன என்றும் அது எவ்வாறு பொருந்தும் என்றும் இக் கட்டுரையில் ஆதாரங்களுடன் காணலாம்.

முச்சி - அகராதி காட்டும் பொருட்கள்:

தற்போதைய தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களைக் காட்டுகின்றன.

முச்சி¹ mucci , n. < உச்சி. [M. mucci.] 1. Crown of head; தலையுச்சி. மகளை . . . முச்சி மோந்து (சூளா. இரதநூ. 102). 2. Tuft of hair on the head; கொண்டை முடி. இவள் போதவிழ் முச்சி யூதும் வண்டே (ஐங்குறு. 93). 3. Crest; சூட்டு. வாகையொண்பூப் புரையு முச்சிய தோகை (பரிபா. 14, 7). , n. < Hind. mōcī. 1. Stationer, one who serves out stationery in a public office; கச்சேரிகளில் உத்தியோகஸ்தர்க்கு எழுதுமை கருவி முதலியன சித்தஞ்செய்து கொடுக் கும் வேலையாள். (C. G.) 2. One who works in leather; தோல்வினைஞன். (C. G.) 3. Sheath-maker; உறைகாரன். (அக. நி.) 4. See முச்சியன், 1. (M. M.) 5. Painter; வர்ணக்காரன். (W.)

அகராதிப் பொருட்கள் பொருந்தா இடங்கள்:

தற்போதைய தமிழ் அகராதிகள் காட்டும் மேற்காணும் பொருட்களுள் எதுவுமே பொருந்தாத சில இலக்கியப் பாடல்களை இங்கே காணலாம்.

முச்சியும் மண்ணுறுத்தலும்:

பெண்கள் தமது முச்சி எனும் உறுப்பில் மண்ணுறுக்கும் செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் காட்டுகின்றன.

....மகர பகு வாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25

இப்பாடலில் வரும் மண்ணுறுத்தல் என்பது சாந்து முதலானவற்றைப் பூசுதல் என்ற பொருளைத் தருவதாகும். சூரர மகளிர் தமது முச்சி எனும் உறுப்பில் மகரமீன் போலும் பிளந்த வாயினையுடைய உருவத்தைத் தாழ்வாகப் பிசிரில்லாமல் சாந்துகொண்டு பூசி வரைந்திருந்ததனை மேற்காணும் பாடல்வரிகள் விளக்குகின்றன. இப்பாடலில் வரும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு முதலாக எப்பொருளைக் கொண்டாலும் அப்பொருள் பாடலுடன் பொருந்தாமல் நிற்பதனை அறியலாம். காரணம், கொண்டைமுடி, தலையுச்சி, சூட்டு போன்ற எதிலும் சாந்துகொண்டு பூசி வரையமாட்டார்கள். இதிலிருந்து, இப் பாடல்வரிகளில் வரும் முச்சி என்பதற்கு மேற்காட்டிய அகராதிப் பொருட்கள் நீங்கலாக வேறு ஒரு பொருள் இருப்பது உறுதியாகிறது.

முச்சியும் அல்குலும்:

பெண்கள் தமது முச்சியின் மேல் புரளுமாறு அல்குலில் மாலை அணிந்த செய்தியினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடல் வரிகள் கூறுகின்றன.

...வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை .... - அகம். 390

இப்பாடலில் வரும் அல்குல் என்பதற்கு இடுப்பு என்றும் முச்சி என்பதற்கு கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வளைந்து சுருண்ட கொண்டைமுடி முழுவதும் மாலை அணிந்த அவளது இடுப்பிலே புரண்டது ' என்று விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதல்காரணம், முச்சி என்பதற்குக் கொண்டையாகப் போடப்பட்ட தலைமயிரையே அகராதிகள் காட்டுகின்ற நிலையில், கொண்டைமயிர் அப்பெண்ணின் இடுப்புவரையில் தாழ்ந்து புரள்வது என்பது சாத்தியமற்றதும் நல்ல நகைச்சுவையும் ஆகும். இரண்டாவது காரணம், எந்தப் பெண்ணும் மாலையினை தொடுத்துத் தனது இடுப்பில் கட்டிக் கொள்ளமாட்டாள். இதைப்பற்றி அழகின் மறுபெயர் அல்குல் என்ற கட்டுரையில் விளக்கமாகக் காணலாம். இதிலிருந்து, இப்பாடலில் வரும் அல்குல் என்பது இடுப்பைக் குறிக்காது என்பதையும் முச்சி என்பது கொண்டைமுடியினைக் குறிக்காது என்பதையும் அறிந்துகொள்ளலாம்.

முச்சியும் அளிப்பும்:

காதலனின் பிரிவினால் மனநோய்கொண்டு வாடும் பெண்ணொருத்திக்குப் பேய் பிடித்திருக்குமோ என்று கருதி அதனை அவளிடமிருந்து ஓட்டுவதற்கு வேலனை அழைத்துவந்து முயற்சிசெய்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

....பெயல் ஆனாதே வானம் பெயலொடு       
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே... - நற். 51

இப்பாடலில் வரும் அளிப்பு என்பதற்குக் காப்பாற்றுதல் என்றும் முச்சி என்பதற்குக் கொண்டைமுடி என்றும் பொருள்கொண்டு ' வேலன் வந்து வெறியாட்டுதலால் கொண்டைமுடியில் அணிந்திருந்த பூக்களைக் காப்பாற்ற இயலவில்லையே ' என்று தலைவி வருந்துவதாக விளக்கம் கூறுகின்றனர். இவ் விளக்கம் பொருந்துமா என்றால் பொருந்தாது. முதற்காரணம், தலைவியானவள் தனது கொண்டைமுடியில் பூக்களை அணிந்திருந்தாள் என்று எந்தக் குறிப்பும் இப்பாடலில் இல்லை. இரண்டாவது காரணம், ஆனாமை என்பதற்கு நீங்காமை, கெடாமை என்றுதான் அகராதிகள் பொருள்கூறி இருக்கின்றன. அதன்படி, 'அளிப்பு ஆனாதே' என்பதற்கு ' காப்பாற்றுதல் கெடாது' அதாவது 'காப்பாற்ற முடியும்' என்றுதான் பொருள்வருமே ஒழிய ' காப்பாற்ற முடியாதே' என்று பொருள்வரவில்லை. அதுமட்டுமின்றி, தலைவன் வரும்வரை தலைவி தனது தலையில் சூடிய பூக்களை ஏன் காப்பாற்றி வைக்கவேண்டும்?. வாடிப்போன பூக்களைக் காட்டுவதற்கு அவள் ஏன் ஏங்கவேண்டும்?. எந்த ஒரு பெண்ணும் அப்படிச் செய்ய விரும்ப மாட்டார் என்பதால் இவ் விளக்கம் முற்றிலும் பொருந்தாமல் போவதுடன் முச்சி என்பதற்கு வேறொரு பொருள் இருக்கிறது என்ற உண்மையையும் அறிந்துகொள்ளலாம்.

முச்சி - புதிய பொருள் என்ன?

முச்சி என்பதற்கு அகராதிகள் காட்டாத புதிய பொருள்:

கண்ணிமை ஆகும்.

முச்சி - பெயர்க் காரணம்:

முச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதைக் கீழே காணலாம்.

முச்சுதல் என்பதற்கு மூடுதல் என்ற பொருள் உண்டென்று அகராதிகள் காட்டுகின்றன.

முச்சு-தல் muccu- , 5 v. tr. cf. மூய்-. [T. mūyu, K. Tu. muccu.] 1. To cover; மூடுதல். தாட்செருப்புலகெலாந் தோன் முச்சுந் தரம்போல் (ஞானவ��. மாவலி. 8). 2. cf. முற்று-. To make; செய்தல். முச்சியே மரக்கோவை முயற்சியால் (சிவ தரு. பாவ. 81).

கண்களை மூட உதவுவதால் கண் இமைகளுக்கு முச்சி என்ற பெயர் ஏற்பட்டது எனலாம். அதாவது,

முச்சுதல்  ------> முச்சி.
(வினை)        ( வினையால் அணையும் பெயர் )

இப்போது நாம் அன்றாடம் புழங்கிவருவதான ' கண்ணாமுச்சி ' ஆட்டமானது கண்களை மூடிக்கொண்டு அல்லது கண்களுக்கு மறைவாக இருந்துகொண்டு ஆடும் விளையாட்டு ஆகும். முச்சு என்ற சொல் பொதுவாக மூடுதலைக் குறித்தாலும் வாயை மூடுதல், காதுகளை மூடுதல் என்ற பொருளில் பயன்படாமல் 'கண்ணாமுச்சி' அதாவது கண்களை மூடுதல் என்ற பொருளில் மட்டுமே புழக்கத்தில் இருப்பது கண்ணுக்கும் முச்சிக்குமான தொடர்பினைத் தெற்றெனத் தாங்கி நிற்பதனை அறியலாம்.

நிறுவுதல்:

முச்சி என்பதற்குக் கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதனை இன்னும் பல சான்றுகளுடனும் விளக்கங்களுடனும் விரிவாகக் காணலாம்.

இற்றைத் தமிழ் அகராதிகள் முச்சி என்னும் சொல்லுக்கு ' தோல்வினைஞன், உறைகாரன், வர்ணக்காரன் ' என்ற பொருட்களைக் கூறி இருப்பதனை மேலே கண்டோம். இம் மூன்று பொருட்களையும் ஒன்றுசேர்த்து நோக்குமிடத்து, முச்சியானது ஒரு தோல்வகையினது என்றும் அது உறையினைப் போல மூட உதவுவது என்றும் அதில் பல வண்ணங்கள் பூசப்படும் என்றும் தெரிய வருகிறது. இம் மூன்று பண்புகளையும் உடைய உறுப்பு எதுவென்று கேட்டால் கிடைக்கும் ஒரே விடை கண்ணிமை தான் !. காரணம், கண்ணிமை என்பது மெல்லிய தோல் என்பதுடன் அது கண்களை மூட உதவுவது என்பதுடன் அதில் பெண்கள் பல வண்ணங்களைப் பூசி மகிழ்வர் என்பதும் அனைவரும் அறிந்ததே. இனி, இலக்கியங்களில் இருந்தும் சில சான்றுகளைக் காணலாம்.

கண்ணிமைகளின் பண்புகள்:

பெண்களின் முச்சியாகிய கண்ணிமைகளைப் பற்றிக் கூறுமிடத்து, தண், நறும் என்ற அடைச்சொற்கள் அதனுடன் முன்னொட்டாக இணைந்து சில இடங்களில் வருகின்றன. அவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393
தண் நறு முச்சி புனைய அவனொடு.. - அகம். 221

இப்பாடல்களில் வரும் தண் என்பது குளிர்ச்சியையும் நறும் என்பது நறுமணத்தையும் குறிக்கும். தண் நறு முச்சி என்பது குளிர்ச்சியும் நறுமணமும் பொருந்திய இமைகள் என்று விளக்கம் பெறும். பெண்கள் தமது இமைகளை எப்போதும் குளிர்ச்சியாகவும் நறுமணத்துடனும் வைத்திருக்க சந்தனம், தகரம் போன்ற குளிர்ச்சியும் நறுமணமும் கொண்ட பொருட்களைச் சாந்துடன் கூட்டிப் பூசுவது வழக்கம். இவற்றைப் பெண்கள் தலைமயிரில் பூசிக்கொள்ள விரும்புவதில்லை. காரணம், இவற்றைத் தலைமயிரில் பூசினால் உலர்ந்தபின் தலைமயிரினை நீர்கொண்டு முழுவதும் கழுவி முடியினை நன்கு உலர்த்த வேண்டும். சரியாக உலர்த்தாவிட்டால் தலைவலியும் சளியும் பிடித்துக் கொண்டுவிடும். இப்படியான தொல்லைகள் இருப்பதால் தலைமயிரில் பூசிக்கொள்ள பெண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால் இமைகளில் பூசிக்கொள்வதும் எளிது; உலர்த்துதலும் எளிது; கழுவுதலும் எளிது. ஒருநாளில் எத்துணைமுறை வேண்டுமானாலும் பூசலாம்; கழுவலாம்; உலர்த்தலாம். கண்ணிமைகளில் சாந்தினைப் பூசுவது பற்றி இலக்கியங்கள் கூறுவதனைக் கீழே தொடர்ந்து காணலாம்.

கண்ணிமைகளும் சாந்தும்:

பெண்கள் தமது கண்ணிமைகளின்மேல் வண்ணவண்ணச் சாந்துகளைப் பூசி வரைவர் என்று பல ஆய்வுக் கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். அதைப்போல தமது முச்சி ஆகிய இமைகளின்மேலும் சாந்துகொண்டு பூசி அழகுசெய்திருந்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

....மகரப் பகுவாய் தாழ மண்ணுறுத்து
துவர முடித்த துகள் அறும் முச்சி .. - திரு. 25

மகரமீன் போல பிளந்தவாயுடைய மீன்உருவத்தைச் சிறிதுகூடத் துகள் அதாவது பிசிர் இல்லாமல் இமைகளின்மேல் வரைந்திருந்தனர் என்று இவ் வரிகள் கூறுகின்றன. இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசி அழகுசெய்யும்போது துகளுடன் அதாவது பிசிருடன் பூசினால் அவை உலர உலர உதிர்ந்து விடும். இதைப் பற்றிக் கூறும் கலித்தொகைப் பாடல்வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

...என் மகன் மேல் முதிர் பூண் முலை பொருத
ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை.... - கலி. 81

பரத்தையினது இமைகளின்மேல் பூசியிருந்த சாந்தின் துகள்களானவை அவளைப் புணர்ந்தபோது ஆடையில் உதிர்ந்து விட்டதனை இவ் வரிகள் விளக்கி நிற்கின்றன. தகரம் எனப்படும் நறுமணப் பொருளைக்கூட்டி இமைகளின்மேல் சாந்துகொண்டு பூசியிருந்ததனைக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகிறது.

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393

கண்ணீரும் மழைநீரும்:

காதலனைப் பிரிந்து துயருற்று வாடும் தலைவியின் நிலைமையினை வான்மழையுடன் ஒப்பிட்டுக் கூறும் நற்றிணைப் பாடல்வரிகள் கீழே:

யாங்கு செய்வாம்கொல் தோழி ஓங்கு கழை
காம்பு உடை விடரகம் சிலம்ப பாம்பு உடன்று
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல்
கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇ
பெயல் ஆனாதே வானம் பெயலொடு       
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என
பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே
பெரும் தண் குளவி குழைத்த பா அடி
இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு
பேதை ஆசினி ஒசித்த               
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே  - நற். 51

பொருள்: மூங்கில் மரங்கள் நிறைந்த மலைமீது பட்டு எதிரொலிக்குமாறு இடியிடித்தும் மின்னியும் பெயத் துவங்கிய மழை விடாமல் இன்னும் பெய்கிறது. அந்த மின்னலைப் போல ஒளிவீசுகின்ற வேலினை உடைய வேலனும் வெறியாட்டிற்கு வந்துவிட்டான். வேங்கைப் பூக்கள் மலர்ந்திருக்கும் அந்த மலைநாட்டில் முல்லைக்கொடிகளை மிதித்துச் சிதைத்தும் பலாமரத்தினை மோதி முறித்தும் திரிகின்றது மதங்கொண்ட யானை ஒன்று. தலைமீது சேற்றினை வாரியிறைத்துப் பூசிக்கொண்டு திரிகின்ற அந்த மதயானை வாழும் மலைநாட்டில் இருக்கும் எனது தலைவனோ இன்னும் என்னைக் காண வராததால் எனது கண்களில் இருந்து வரும் கண்ணீரும் அந்த மழையினைப் போல நின்ற பாடில்லையே.

இப்பாடலில் வரும் முச்சி என்பது கண்ணிமையினையும் அளிப்பு என்பது குழைவு / குழைதல் என்ற அகராதிப் பொருளையும் குறிக்கும். காதலனை நினைத்து வருந்தி கண்கலங்கி அழுவதால் கண்ணிமைகளும் குழைந்து அதாவது கசங்கிப் பாழாயின. மழையானது நிற்காமல் எப்படி விட்டுவிட்டுப் பெய்ததோ அதைப்போல அவளது அழுகையும் நிற்காமல் விட்டுவிட்டுத் தொடர்ந்தது என்பதனை அழகான உவமையாக இப்பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

கண்ணிமைகளும் பூக்களும்:

பெண்கள் தமது அல்குல் பகுதியில் அதாவது கண்களுக்கு மேலாக இருக்கும் நெற்றிப் பகுதியில் பலவிதமான மாலைகளைக் கட்டி அழகுசெய்வர் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டோம். அப்படிக் கட்டித் தொங்கவிடப்படும் மாலைகளில் சில பூக்கள் கண்ணிமைகளின்மேல் படுவதும் புரளுவதும் உண்டு. இதைப் பற்றிக் கூறுகின்ற பாடல் வரிகள் கீழே தரப்பட்டுள்ளன. 

.... வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள
ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த
பல் குழை தொடலை ஒல்குவயின் ஒல்கி .. - அகம். 390

பொருள்: வளைந்தும் சுருங்கியும் இருந்த கண்ணிமைகளின்மீது முழுவதுமாய்ப் புரளுமாறு அகன்ற நெற்றியிலே அழகாகப் புனைந்த நெய்தல் மலர்மாலையினை அணிந்து....

இன்னொரு பெண்ணானவள் தனது இமைகளில் சாந்தினைப் பூசாமல் வெறும் வரிகளை மட்டும் வரைந்து அழகு செய்திருக்கிறாள். அத்துடன் கள் வடியும் பூக்களை தனது நெற்றியில் இமைகளுக்கு மேலாக அணிந்திருக்கிறாள். இதைப்பற்றிய பாடல்வரிகள் கீழே:

பின்னொடு முடித்த மண்ணா முச்சி
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ.. - அகம். 73

பொருள்: வெறும் வரிகளை மட்டும் வரைந்து சாந்து ஏதும் பூசாமல் தேன் முதிர்ந்து வழியும் குழல் போன்ற பூக்களை இமைகளுக்கு மேலாக அணிந்து...

இப்பாடலில் வரும் நெய் என்பது தேனையும் குழல் என்பது குழல்போன்ற மலரினையும் குறிக்கும். மேலும் இப்பாடலில் வரும் பின் / பின்னு என்பது வரியினைக் குறிக்கும். இதைப்பற்றி அதிக தகவல்களைத் தெரிந்துகொள்ள பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா என்ற ஆய்வுக் கட்டுரையினைப் படிக்கலாம். 

முடிவுரை:

முச்சி என்பதற்கு அகராதிகள் கூறும் பொருட்கள் நீங்கலாக கண்ணிமை என்ற பொருளும் உண்டு என்று மேலே பல ஆதாரங்களுடன் கண்டோம். முச்சி என்பது குழந்தைகளைப் பொறுத்தமட்டில் அவரது தலைமயிரைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குழந்தைகளின் தலைமுடி நன்கு வளர்வதற்கு ஐயவி எனப்படும் வெண்சிறுகடுகினை அரைத்து எண்ணையுடன் சேர்த்துத் தலைமயிரில் பூசுவார்கள். இதைப்பற்றிய செய்தியினைக் கீழ்க்காணும் மணிமேகலைப் பாடல்வரிகள் கூறுகின்றன.

..... ஐயவி அப்பிய நெய்அணி முச்சி
மயிர்ப்புறம் சுற்றிய கயிற்கடை முக்காழ்
பொலம்பிறைச் சென்னி நலம்பெறத் தாழ
செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை.. - மலர்வனம் புக்ககாதை.

.................. தமிழ் வாழ்க !......................