புதன், 27 மே, 2009

அம்மியும் அடியும்


பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

தற்போதைய பொருள்:

அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியும்.

தவறு:

அம்மிக்கல்லை அக்கால இல்லத்தரசிகளின் கைஅரைப்பான் என்றே கூறலாம். உணவுப் பொருட்களை சிறிய அளவில் அரைப்பதற்கென்று மின்னூறி(மிக்ஸி) வந்துவிட்ட இந்தக் காலத்தில் அம்மிக்கல்லைப் பார்ப்பதே அரிதாய் இருக்கின்றது. பழைய வீடுகளில் எல்லாம் இந்த அம்மிக்கல்லானது வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் கருப்பு ஆடு போல படுத்திருக்கும். இது மட்டும் தனியாக இருக்காமல் துணைக்கு ஒரு குழவிக் கல்லையும் சேர்த்துக்கொண்டு தனது தலைக்குமேலே அதனைப் படுக்க வைத்திருக்கும். ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். இந்த நாற்பது கிலோ எடையுள்ள ஒரு அம்மிக்கல்லை நகர்த்திவைக்க ஏன் அதனை அடியோ அடி என்று அடிக்க வேண்டும்?. இரண்டு கைகளால் நன்கு அழுத்தித் தள்ளினால் போதும்; நகர்ந்துவிடும். முடியாதவர்கள் ஒரு கடப்பாரையால் கீழிருந்து நெம்பினால் போதும்; நகர்ந்துவிடும். அதுவும் முடியாதவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்!.

இப்படிப் பல வழிகள் இருக்க ஏன் அம்மிக்கல்லை அடித்துப் படாதபாடு படுத்தவேண்டும்?. ஏற்கெனவே அடிமேல் அடி வாங்கித் தான் அது நம் வீட்டுக்கே வந்திருக்கிறது. ஆம், ஒரு அம்மிக்கல் சரியான வடிவம் பெறும்வரை ஆசாரியின் உளியால் எவ்வளவு அடிகளைப் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். இந் நிலையில் மேலும் பல அடிகள் அதற்குத் தேவையா?. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து அந்த அம்மிக்கல் உடைந்துவிட்டால்?. முதலுக்கே மோசம் அல்லவா ஆகிவிடும்!. நடைமுறை உண்மையும் அது தானே. நகர்த்துகிறேன் பேர்வழி என்று ஒரு அம்மிக்கல்லை அடியோ அடி என்று அடித்துப் பாருங்கள். இறுதியில் அது உடைந்தே போய்விடும். எனவே அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று பொருள் கூறும் இப்பழமொழி தவறு என்பது தெளிவாகிறது. இந்தத் தவறான பொருளுக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'நகரும்' என்ற சொல்லில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றிக் கீழே காணலாம்.  

திருத்தம்:

'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்.

நிறுவுதல்:

'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என்னும் உண்மையினை உணர்த்த வந்த அருமையான பழமொழியே இது. நம்மில் பலரும் பல பல குறிக்கோள்களுடன் நாள்தோறும் நன்கு உழைக்கத் தான் செய்கிறோம். ஆனால் வெற்றி எல்லோரையுமா அரவணைக்கிறது?. இல்லையே. அன்றியும் வெற்றி ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே வெற்றிக் கனியைச் சுவைக்க நாள்தோறும் கடினமாக உழைக்கத் தான் வேண்டும். ஆனால் எதுவரை?. நாம் எண்ணிய செயல்கள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிட்டும் வரை. சிலமுறை முயன்று தோல்விகளைத் தழுவியவர்கள் கூறும் வார்த்தை இது தான்: 'என்னால் முடியவில்லை; எனக்கு அது கிடைக்காது.' இது தவறான கருத்தாகும். ஏனென்றால் முடியும் என்று முழுமூச்சுடன் நம்பி தொடர்ந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. கிடைக்காதது எதுவுமில்லை. இதனால் தான் திருவள்ளுவரும் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்று கூறுகிறார். இங்கே வள்ளுவர் கூறும் முயற்சி என்பது விடாமுயற்சியே ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இதுதான்: 'என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கான காரணங்கள்.' 

விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இப் பழமொழியின் உண்மையான பொருள் இது தான்: 'அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் உடைந்துசிதறும்.' இப் பழமொழியில் வரும் 'அம்மிக்கல்' என்பது அரிய செயலையும் 'அடிமேல் அடி வைத்தல்' என்பது விடாமுயற்சியினையும் உருவகமாகக் குறித்து நிற்கின்றன.

சரியான பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் கரும்.


............................வாழ்க தமிழ்!..................................

செவ்வாய், 26 மே, 2009

பழம்நழுவிப் பாலில் விழுந்தால்?


பழமொழி:

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

தற்போதைய பொருள்:

உண்ணும்போது கையில் இருந்த பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல மிக்க நன்மை விளைந்தது.

தவறு:

முதல் கேள்வி இதுதான். உண்மையிலேயே பழம் நழுவிப் பாலில் விழுந்தால் விளைவு என்ன ஆகும்?. அது பால் இருக்கும் பாத்திரத்தின் வாய் அளவினையும் பழத்தின் அளவினையும் பொறுத்தது. பாத்திரத்தின் வாய் பழத்தைவிட சிறியதாய் இருந்தால் அந்த பாத்திரம் பழத்தினால் தட்டிவிடப்பட்டு பால் முழுவதும் தரையில் கொட்டிவிடும். பாத்திரத்தின் வாய் பழத்தைவிட பெரியதாய் இருந்தால் பழமானது பாத்திரத்தின் உள்ளே விழுந்து பால் வெளியே தெறிக்கும். உள்ளே விழுகின்ற பழத்தின் அளவினைப் பொறுத்து வெளியே தெறிக்கும் பாலின் அளவு மாறுபடும். அதிலும் புளியம்பழமோ ஆரஞ்சுப் பழச் சுளையோ தவறுதலாகப் பாலில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. பால் முழுவதும் திரிந்து வீணாகி விடும். எப்படிப் பார்த்தாலும் பழம் நழுவிப் பாலில் விழுந்தால் பாலுக்குத் தான் பாதிப்பு; பழத்துக்கு இல்லை. இப்படி விழுந்த பழத்துக்குப் பாலினால் உடனே சுவை கூடுவதுமில்லை. ஏனென்றால் பால் இனிப்பாக இருந்து அதில் பழத்தை நன்கு ஊறவைத்தால் தான் பழத்துக்குச் சுவை கூடும். பாலில் நழுவி விழுவதால் மட்டும் பழத்துக்குச் சுவை கூடுவதில்லை என்பதால் மேற்காணும் பொருளில் இப் பழமொழியினைப் பயன்படுத்துவது தவறு என்பதை அறியலாம்.

இப்படி நன்மை எதையும் தராமல் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியினை மிக்க நன்மை தருகின்ற ஒரு நிகழ்வாகக் கருதி அதனை மக்கள் எப்படி உவமையாகப் பயன்படுத்துகின்றனர்?. இத் தொடர் எப்படி மக்களால் பழமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?. இதற்கான விடைகளை ஆய்வு செய்ததில் கீழ்க்காணும் கருத்துக்கள் கிடைத்தன. பழமொழியின் பொருள் சரியானது தான். அதில் எவ்விதத் தவறும் இல்லை. பழமொழியில் உள்ள 'பால்' என்ற சொல்லில் தான் ஒரே ஒரு எழுத்துப் பிழை உள்ளது. அதைத் திருத்தி எழுதினால் தான் நாம் இன்று மேற்கொண்டிருக்கும் பொருள் இப்பழமொழிக்குப் பொருத்தமாக அமையும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

பழமொழியில் வரும் 'பால்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பாகு' என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.

நிறுவுதல்:

பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது.

இந்த வெல்லப்பாகு நீண்ட நாள் வரையிலும் கெடாது என்பதால் இந்தப் பாகிற்குள் இனிப்பான பழங்களைப் பலநாட்கள் வரை ஊறவைத்தும் உண்ணலாம். அவ்வாறு உண்டால் பழங்கள் மிக்க இனிப்புச் சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே இந்தப் பழமொழி. ஏற்கெனவே இனிப்பாக இருக்கும் பழத்தின் சுவையினை வெல்லப் பாகானது மேலும் கூட்டுவதால் அதிக மகிழ்ச்சியையும் மிக்க நன்மையையும் குறிப்பதற்கு இப் பழமொழி ஒரு உவமையாகப் பயன்படலாயிற்று.

சரியான பழமொழி:

பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல
....................................வாழ்க தமிழ்!...........................

திங்கள், 25 மே, 2009

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

பழமொழி:

இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்

தற்போதைய பொருள்:

தங்குவதற்கு மடத்தில் (அ) வீட்டில் சிறிது இடம் கொடுத்தால் நாளடைவில் மடம் (அ) வீடு முழுவதையும் பறித்துத் தனதாக்கிக் கொள்வான்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது மேற்காணும் தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையினை. விடுமொழி என்றால் என்ன என்று அறியும் முன்னர் இக் கருத்து எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். மடம் என்றால் தங்கும் விடுதி போல ஒரு பொது இடம். பழங்காலத்தில் மக்கள் பெரும்பாலும் கால்நடையாகவே பயணம் செய்து அயலூருக்குச் செல்வர். அப்படிச் செல்லும்போது நடந்துவந்த களைப்பு தீரவும் மறுபடியும் பயணத்தைத் தொடர்வதற்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெறவும் இந்த மடத்தில் வந்து சிலநாட்கள் தங்குவார்கள். இக்காலத்திலும் பேருந்து, நாலாழி போன்ற ஊர்திகளில் பயணம் செய்கிற வெளியூர்க்காரர்கள் இந்த மடத்தில் வந்து தங்குகிறார்கள். இப்படித் தங்குகிற பயணிகளில் ஒருசிலர் அந்த மடத்தையே மெல்லமெல்ல தனக்குச் சொந்தமாக்கிக் கொள்கிறார்கள். அதுவும் எப்படி?. மடத்திற்குச் சொந்தக்காரர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பறித்துக் கொள்கிறார்கள் என்று பொருள் உரைக்கிறது இந்தத் தொடர். இக் கருத்து பொருத்தமானதா என்றால் பொருந்தாது. இது எவ்வாறு என்று பார்ப்போம்.

பொதுவாக மடம் என்பது பலருக்கும் இடமளிக்கக் கூடிய வகையில் ஒரு சாதாரண வீட்டைவிட பெரிய அளவில் தான் இருக்கும். இங்கே பலரும் தங்கள் குடும்பத்துடன் தாராளமாகப் பலநாட்கள் தங்கிச் செல்லலாம். இப்படி வருகிற பயணிகள் யாவருக்கும் ஒரு குடும்பமும் இருக்கும் ஒரு வீடும் இருக்கும். எனவே இவர்கள் இந்த மடத்தைத் தமது சொந்தமாக்கிக் கொள்ள விரும்ப மாட்டார்கள். சரி, குடும்பமும் வீடும் இல்லாத ஒருவன் மடத்தை பிடுங்கிக் கொள்ள விரும்புவானா?. அவனும் விரும்பமாட்டான். ஏனென்றால் குடும்பமும் வீடும் இல்லாதவன் யார்? ஒரு துறவி தானே. முற்றும் துறந்த துறவிக்கு மடத்தைப் பிடுங்கும் ஆசை மட்டும் ஏன் வரப்போகிறது?. அன்றியும் மடத்தைப் பிடுங்குவது ஒன்றும் அவ்வளவு எளிதான செயல் அல்ல. அதற்கு முதலில் அந்த மடத்தில் தங்கி இருக்கும் பயணிகளை எல்லாம் துரத்தவேண்டும். உடல்வலிமையும் தீய எண்ணங்களும் கடுமையும் மிக்க கொடியவன் ஒருவனால் அன்றி ஒரு துறவியால் இத்தகைய கொடிய செயலைச் செய்யவே இயலாது. இப்படிப்பட்ட கொடியவர்களும் மடத்தில் இடம்கொடுத்தால் மெல்லமெல்ல அந்த மடத்தில் தங்கியுள்ளோரின் பொருட்களைத் தான் அடைய விரும்புவார்களே ஒழிய மடத்தையே பிடுங்க விரும்பமாட்டார்கள். 

மடத்துக்குப் பதிலாக வீடு என்று எடுத்துக் கொண்டாலும் இக் கருத்து பொருந்தாது. ஏனென்றால் நன்கு தெரிந்தவர்களுக்குத் தான் வீட்டில் நாட்கணக்கில் தங்க இடம் கொடுப்பார்களே அன்றி அறிமுகம் இல்லாதவர்களுக்குப் பெரும்பாலும் கொடுப்பது இல்லை. அப்படியே கொடுத்து அவர்கள் தீயவர்களாய் இருந்தால் அந்த வீட்டில் இருக்கும் பொருட்களைத் தான் களவாடிச் செல்வார்களே ஒழிய அந்த வீட்டையே பிடுங்க முயலமாட்டார்கள். எனவே இத் தொடருக்கு மேற்கண்ட நேரடியான பொருளைக் கொள்வது தவறு என்று அறியலாம். இனி இத் தொடர் உணர்த்தும் மறைமுகமான பொருள் என்ன என்று காணலாம்.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'நோய்க்கிருமி' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன. 

'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.'
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'நோய்க்கிருமி' யைக் குறிக்கும் என்று பார்ப்போம். நோய்கள் யாவும் அழையா விருந்தாளிகள் என்று நாம் அறிவோம். ஏனென்றால் நம்மில் யாரும் நோயை விரும்பி வரவழைத்துக் கொள்வதில்லை. உணவு, நீர், காற்று ஆகியவற்றின் மூலம் நோய்க்கிருமிகள் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பரவுகிறது. இப்படிப் பரவுகிற கிருமிகள் நம் உடம்பில் புகுந்தவுடன் நம் உடம்பில் ஒரு எதிர்ப்பாற்றல் இல்லாத பகுதியைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்கி பல்கிப்பெருகத் துவங்கிறது. இப்படிப் பெருகும் கிருமிகள் நாளடைவில் உடல்முழுவதும் பரவுகின்றன. இதனால் நோய் முற்றி நம் உடல் நம் வசம் இல்லாமல் நோயின் வசமாகிறது. விளைவு மரணம்.

கிருமிகள் நம் உடலில் புகவே புகாத வண்ணம் காப்பது என்பது நடைமுறையில் இயலாத செயல் ஆகும். ஆனால் புகுந்த கிருமிகளை நம் உடலில் தங்க அனுமதிக்காமல் இருப்பது நம் கையில் தான் இருக்கிறது. தங்குவதற்கு உடலில் சிறிது இடம் கொடுத்தாலும் நாளடைவில் கிருமிகள் நமது உடலையே நம்மிடம் இருந்து பிடுங்கித் தன் வசப்படுத்தி விடும். இதனால் தான் ஔவையாரும் தனது ஆத்திச்சூடியில் 'நோய்க்கு இடம் கொடேல்' என்று அறிவுறுத்துகிறார்.கிருமிகளின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே இந்த விடுகதை ஆகும். 


இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அவன் யார்?' என்ற கேள்வித் தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.

...............................வாழ்க தமிழ்!.......................

சனி, 23 மே, 2009

பிச்சைக்காரனும் பல்லக்கும்


பழமொழி:

எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.

தற்போதைய பொருள்:

'பிச்சை எடுத்து உண்டு வாழ்ந்தாலும் பல்லக்கில் தான் ஏறுவேன்' என்பதே இதன் பொருள் ஆகும்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பல்லக்கு என்பது நடமாடும் அரியாசனம் போன்றதாகும். வள்ளுவர் காலத்துக்கு முன்பிருந்தே பல்லக்கில் மனிதர்களை ஏற்றிச் சுமந்திருக்கின்றனர் என்பது குறள் எண்: 37 இல் இருந்து தெரியவருகிறது. பொதுவாக பல்லக்கில் ஏறுபவர்கள் அனைவரும் மேல்தட்டு மக்களாகவே இருப்பர். ஏனென்றால் பல்லக்கைச் சுமந்து செல்வதற்கென்று குறைந்தது இருவரையேனும் நியமித்து அவர்களுக்குச் சம்பளம் வழங்கவேண்டும். இது மேல்தட்டு மக்களால் மட்டுமே முடியும். இக்காலத்தில் நாலாழி (கார்) மாதிரி அக்காலத்தில் பல்லக்கில் ஏறி பவனி வருதல் என்பது ஒரு பெருமையாகவே கருதப்பட்டது. இப்படி மேல்தட்டு மக்கள் மட்டுமே ஏறி செல்லக் கூடிய ஒரு பல்லக்கில் பயணிப்பது குறித்து ஒரு பிச்சைக்காரன் நினைத்துக் கூட பார்க்க முடியுமா என்பது ஐயம் தான். நிலைமை இப்படி இருக்க பிச்சை எடுத்து உண்டு வாழும் ஒருவன் பல்லக்கில் தான் ஏறுவேன் என்று சொல்வானா?. அப்படிச் சொல்வதாகக் கருத்து கூறும் இந்த தொடர் உண்மையிலேயே ஒரு சரியான பழமொழி தானா?. இதுவே இங்கு கேள்வி.

பிச்சைக்காரர்கள் இக்காலத்தில் மட்டுமல்ல அக்காலத்திலும் இருந்திருக்கிறார்கள். சங்க காலத்தில் வாழ்ந்த பல தமிழ்ப் புலவர்களின் வாழ்க்கை கிட்டத்தட்ட பிச்சைக்காரர்களின் நிலையில் தான் இருந்தது. இதை நாம் பல புறநானூற்றுப் பாடல்களின் வாயிலாக அறிகிறோம். தற்போது 'நான் கடவுள்' என்ற தமிழ்த் திரைப்படத்தில் பிச்சைக்காரர்களின் வாழ்க்கை விரிவாகக் காட்டப்பட்டு உள்ளது. இதன்படி குழந்தைகளும் முதியவர்களும் உடல் ஊனமுற்றோரும் அடிமைகளாக பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர். இவர்களில் யாராவது பல்லக்கில் ஏற முடியுமா?. முடியாது!. அடிமையாக வாழ்கின்ற இந்த பிச்சைக்காரர்களைத் தவிர கட்டுப்பாடற்ற பிச்சைக்காரர்களும் தமிழ்நாட்டில் உண்டு. இவர்களில் சிலர் பிச்சைத்தொழிலினால் நல்ல வருமானம் பார்த்து நாலாழி வசதியுடன் வாழ்வதாகப் பல தமிழ்த் திரைப்படங்கள் காட்டுகின்றன. இதில் ஓரளவுக்கு உண்மையும் இருக்கக் கூடும். இதனால் இந்தத் தொடரின் தற்போதைய பொருள் இக்காலத்தில் வாழும் ஒருசில பிச்சைக்காரர்களுக்குப் பொருந்துவதாக இருக்கலாம். ஆனால் இந்த நிலைமை எப்போது தோன்றியது?. மிக அண்மையில் தானே. ஆனால் இத் தொடரோ பல்லக்குகள் பயன்பாட்டில் இருந்த பழங்காலத்திலேயே தோன்றிவிட்டது. பழங்காலத்தில் ஏன் இன்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த எந்த ஒரு பிச்சைக்காரனும் அடிப்படை வசதி கூட இன்றியே வாழ்ந்து மடிந்தான். இந்த பிச்சைக்காரன் ஒருநாளாவது பல்லக்கில் அல்லது தற்கால நாலாழியில் ஏற விரும்பி இருப்பானா?. ஒருபோதும் விரும்பி இருக்க மாட்டான். நாள்தோறும் உணவைத் தேடிஅலைந்து கிடைத்ததை உண்டு வாழ்வதே பெரும்பாடாய் இருக்க பல்லக்கை நினைப்பதற்கு அவனுக்கு மனமும் இல்லை; கையில் பணமும் இல்லை. இந் நிலையில் மேற்காணும் தொடர் கூறும் கருத்து இவனுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது. இப்படி ஒரு காலத்தில் வாழும் மனிதனுக்குப் பொருந்தி இன்னொரு காலத்தில் வாழும் மனிதனுக்குப் பொருந்தாமல் இருந்தால் ஒரு தொடர் 'பழமொழி' என்ற தகுதியினையே இழந்துவிடும். எனவே மேற்காணும் தொடர் ஒரு பழமொழியே இல்லை என்பதை உணரலாம்.

அதுமட்டுமின்றி இங்கே இன்னொரு உண்மையையும் நாம் உணரவேண்டும். 'ஏறுகிறது பல்லக்கு' என்று தான் இத் தொடர் கூறுகிறதே ஒழிய 'செல்கிறது பல்லக்கு' என்று கூறவில்லை. இதில் இருந்து இத் தொடர் பல்லக்கில் ஏறுவதை மட்டுமே குறிப்பிடுகிறது என்பதையும் பல்லக்கில் ஏறி பயணம் செய்வதைக் குறிப்பிடவில்லை என்பதையும் அறியலாம். எனவே இத் தொடர் பிச்சைக்காரர்கள் பல்லக்கில் ஏறி பயணம் செய்வதைக் குறிப்பிடவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு. அது என்ன?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'அணில்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'அணிலை'க் குறிக்கும் என்று பார்ப்போம். பல்லினால் உணவைக் கடித்து உண்ணும் விலங்குகளில் அணிலும் ஒன்று என்று நாம் அறிவோம். உணவை உள்ளங்கைகளில் தாங்கிக் கொண்டு பற்களால் கடித்து அணில் உணவு உண்ணும் அழகே தனிதான். அருகிலுள்ள படத்தைப் பாருங்கள்.

ஒரு பிச்சைக்காரன் தன் உணவை இரு கைகளிலும் ஏந்தி இருப்பதைப் போலத் தானே தோன்றுகிறது. அதனால் தான் 'எடுக்கிறது பிச்சை' என்ற தொடர் அணிலைக் குறிக்க வந்தது. அது மட்டுமின்றி அணில் உணவுக்காக மட்டும் தான் மரத்தில் இருந்து கீழே வரும். அது கிடைத்துவிட்டால் போதும் விடுவிடு என்று தான் வாழும் மரத்தின் உச்சாணிக் கொம்புக்கே சென்று அமர்ந்துகொள்ளும். ஏனென்றால் மரத்தின் உயரமான கிளைகளில் இருந்துகொண்டே வாழ்கின்ற இயல்பு கொண்டவை இந்த அணில்கள். இந்த உயரமான இருப்பிடத்தைத் தான் 'பல்லக்கு' என்று உருவகமாக இந்தத் தொடர் கூறுகிறது.

ஏனென்றால் பல்லக்கும் ஒரு உயர்வான இருப்பிடம் என்பதுடன் விடுகதைகள் ஒரு பொருளை நேரடியாகக் கூறாமல் இன்னொரு பொருளுடன் உருவகப்படுத்தியே கூறும். எனவே 'எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லக்கு' என்பது அணிலைக் குறித்து எழுந்த ஒரு விடுகதையே என்று தெளியலாம். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.
....................................வாழ்க தமிழ்!................................

வியாழன், 21 மே, 2009

அற்பனும் அர்த்தராத்திரிக் குடையும்


பழமொழி:

'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

தற்போதைய பொருள்:

அற்ப சிந்தனை உள்ள மனிதர்கள் தமக்கு திடீரென்று பெரும்பொருள் அல்லது உயர்ந்தபதவி கிடைத்தால் மழை இல்லாத நள்ளிரவில் கூட குடைபிடிப்பார்கள்.

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இத் தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்பது தான். விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் கருத்தில் உள்ள தவறினைக் காணலாம். அற்ப சிந்தனை என்பது கீழான எண்ணம் அதாவது பொறாமை. பிறர் நன்றாக இருப்பதைக் கண்டு மனம் பொறாமல் எப்போதும் அவர்களின் அழிவினைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பவர்களே இவ்வுலகில் அற்பர்கள் அதாவது கடைநிலை மனிதர்கள்(?) ஆவர். இவர்கள் தமது அற்பமான எண்ணத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியாமல் பின்தங்கிய நிலையிலேயே இருப்பர். இப்படி இருக்கின்ற நிலையில் திடீரென்று இவர்களுக்கு பெரும்பணமோ உயர்ந்த பதவியோ தவறுதலாகக் கிடைத்துவிட்டால் என்ன செய்வார்கள்?. தாம் பொறாமை கொண்டிருக்கும் பிறர் முன்னால் தங்களை மிகவும் பகட்டாகக் காட்டிக்கொள்வார்கள். தமது பணத்தையோ பதவியினையோ பயன்படுத்தி அவர்களுக்குத் துன்பம் விளைவிக்க முயல்வார்கள். எதற்கெடுத்தாலும் போட்டி மனப்பான்மையுடன் நடந்துகொண்டு அவர்களைத் தோற்கடிப்பது அல்லது அவமானப்படுத்துவது போன்ற செயல்களில் அதிகம் ஈடுபடுவார்கள். இதுதான் பொறாமைக் குணம் கொண்ட அற்பர்களுக்குத் திடீரென்று பெருவாழ்வு கிட்டினால் உண்டாகும் மனக்கோளாறுகள் ஆகும்.

இந்த அற்பர்கள் மட்டுமின்றி நாம் அனைவருமே குடையைப் பயன்படுத்துபவர்கள் தான். நள்ளிரவில் குடைபிடிப்பது ஒன்றும் தவறான செயல் அல்ல; அது குடையை ஏன் பிடிக்கிறோம் என்ற காரணத்தைப் பொறுத்தது. மழைபெய்தால் அது இரவு நேரமானாலும் குடைபிடித்துத் தான் நடக்கவேண்டும். இதில் அற்பர்கள் என்றோ மற்றவர்கள் என்றோ வேறுபாடு இல்லை. ஆனால் மழையே இல்லாத இரவு நேரத்தில் கூட அற்பர்கள் குடைபிடிப்பார்கள் என்று இத் தொடருக்குக் கருத்து கூறப்பட்டுள்ளது. இக் கருத்து இங்கே பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பொறாமைக்காரர்கள் கல்நெஞ்சம் கொண்டவர்களே அன்றி வடிகட்டிய முட்டாள்கள் அல்லர். எந்தெந்த வழிகளில் எல்லாம் துன்பம் விளைவிக்கலாம் அல்லது அவமானப்படுத்தலாம் என்று தீய வழியில் சிந்தித்துக் கொண்டே இருப்பார்கள். மழையே இல்லாத நள்ளிரவில் இவர்கள் பிறர் முன்னால் குடைபிடித்து நின்றால் என்ன நடக்கும்?. இவர்கள் யாரை அவமானப்படுத்த இதைச் செய்தார்களோ அவர்களே இச்செயலைக் கண்டு எள்ளி நகையாடுவர். இதனால் இந்த பொறாமைக்காரர்கள் தான் வெட்கித் தலைகுனிய நேரும். இதை இவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே இந்த அற்பர்கள் தமக்கு பணம்பதவி வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி இதுபோன்ற மடத்தனமான செயலில் மட்டும் ஒருபோதும் ஈடுபட மாட்டார்கள் என்று உறுதியுடன் கூறலாம். சரி, இத் தொடர் உணர்த்தும் தற்போதைய பொருள் தவறென்றால் இதன் உண்மையான பொருள் தான் என்ன?. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான். அவன் யார்?' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'காளான்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'
'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'காளானை'க் குறிக்கும் என்று பார்ப்போம். இடிமின்னலுடன் மழைபெய்யும்போது மாட்டுச்சாணம், வைக்கோல், இற்றுப்போன மரம், மட்கிய இலை முதலான கரிமப் பொருட்கள் மீது இயற்கையாய்த் தோன்றுவதே காளான் என்னும் பூஞ்சை என்று நாம் அறிவோம். அன்றியும் இந்தக் காளான்கள் இரவு நேரத்தில் தான் பூக்கும். ஏனென்றால் சூரிய வெளிச்சம் பூஞ்சைகளுக்கு ஆகாது. காளானில் பல வகைகள் உண்டு என்றாலும் வெண்ணிறத்தில் ஒரு குடையினைப் பிடித்துக் கொண்டு நிற்குமே 'குடைக்காளான்' அதுவே அனைத்து இடங்களிலும் பரவலாகத் தோன்றுவது.

அதிகாலையில் எழுந்து கொல்லைப்பக்கம் சென்றால் வெண்குடைவிரித்து சிரித்தவாறு நம்மை வரவேற்கும் இந்த குட்டிக் காளான்கள். இக் காளான்களைத் தான் நாம் 'நேற்றுப் பெய்த மழையில் இன்று முளைத்த காளான்' என்று அற்பப் பொருளாக எண்ணிக் கூறுகிறோம். இதனால் தான் இந்த விடுமொழியும் இதனை 'அற்பன்' என்றே கூறுகிறது.

இந்த அற்பக் காளான்களுக்கு வாழ்வு வருவதோ மழைபெய்கின்ற ஒரு இரவில் தான் என்றாலும் தோன்றிய பின்னர் ஒரு சில நாட்கள் வரை பகலிலும் ஏன் நள்ளிரவுநேரத்திலும் கூட இவை குடைபிடித்தே நிற்கும். (என்ன செய்வது இவற்றால் தமது குடையை மடக்கிக் கொள்ளமுடியாதே!.) காளான்களின் இந்த வாழ்வினை அடிப்படையாய் வைத்து எழுந்ததே இந்த விடுகதை ஆகும். இதுவே நாளடைவில் தனது 'அவன் யார்?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது. இறுதியாக ஒரு உண்மையினையும் நாம் இங்கே அறிந்து கொள்ளவேண்டும். விடுமொழிகளை விடுகதைகளாக மறுபடியும் மாற்றமுடியும் என்பதே அந்த உண்மை ஆகும்.
.....................................வாழ்க தமிழ்!...............................

செவ்வாய், 19 மே, 2009

ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.பழமொழி:
ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்.

தற்போதைய பொருள்:

ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக்கல்லும் பறந்து செல்லும்.

தவறு:

எழுத்துப் பிழையினால் தவறான பொருள் கொள்ளப்பட்ட பல பழமொழிகளுள் இதுவும் ஒன்று. இந்தப் பழமொழிக்குக் கூறப்பட்டுள்ள கருத்து தவறானது என்று நாம் நன்கு அறிவோம். ஏனென்றால் ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மிக் கல் மட்டுமில்லை எந்தக் கல்லும் பறப்பதில்லை. இல்லை இல்லை ஆடி மாதத்தில் வீசும் காற்றுக்கு மற்ற மாதங்களில் வீசும் காற்றைவிட வலிமை அதிகம். இக் கருத்தினை உணர்த்தவே சற்று உயர்வு நவிற்சியாக இவ்வாறு கூறியுள்ளனர் என்று ஒரு கருத்தும் மக்களிடையே நிலவுகிறது. இவ்வாறு கொண்டாலும் இக் கருத்துப் பிழையானதாகவே தோன்றுகிறது. ஏனென்றால் ஆடி மாதக் காற்றுக்கு வலிமை அதிகம் என்று மக்களுக்கு அறிவுறுத்துவதன் மூலம் என்ன சொல்ல முற்படுகிறது இந்தப் பழமொழி?. ஆடி மாதத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது; மீறி வந்தால் காற்று தூக்கிக் கொண்டு போய்விடும் என்றா?. இப்படி ஒரு கட்டுப்பாட்டினை ஒரு பழமொழி கூறினால் யாரேனும் அதற்கு உடன்படுவார்களா?. ஒருபோதும் உடன்பட மாட்டார்கள். என்றால் இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். உண்மையைச் சொன்னால் ஆடி மாதத்தில் தான் திருக்கோயில் வழிபாடுகளும் வயல் வேலைகளும் புனித நீராடல்களும் அதிக அளவில் நடைபெறுகின்றன.

ஆடி மாதக் காற்றுக்கு வலிமை சற்று அதிகம் தான் என்றாலும் அது ஒன்றும் சூறாவளிக் காற்று அல்ல. ஆடி மாதத்தில் மேக மூட்டம் அதிகமாக இருக்கும். எனவே மழைக் காற்று சற்று பலமாக இருக்கும். அவ்வளவு தான். ஆடிக் காற்றில் அம்மிக் கல் புரண்டுவிடும் என்று சொன்னாலாவது சற்று சிந்திக்க இடமுண்டு. ஆனால் பறக்கச்செய்வது என்றால் அது மிகையோ மிகை ஆகும். அத்துடன் அம்மிக்கல்லானது பெரும்பாலும் வீட்டின் உள்ளே தான் இருக்கும். வீட்டின் உள்ளே இருக்கும் அம்மிக்கல்லை வெளியில் இருந்து காற்று வந்து பறக்கச் செய்யும் என்றால்?. எவ்வளவு பெரிய பொய்!. எனவே இப் பழமொழி உணர்த்தும் கருத்து உண்மையும் இல்லை உயர்வு நவிற்சியும் இல்லை என்று தெளியலாம். இந்தத் தவறான கருத்துக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'அம்மி' என்ற சொல்லில் உள்ள எழுத்துப் பிழையே ஆகும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

'அம்மி' என்ற சொல்லுக்குப் பதிலாக 'அம்மை' என்ற சொல் வருவதே திருத்தம் ஆகும். 'அம்மை' என்ற சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டு என்றாலும் இச்சொல் இப் பழமொழியில் 'அம்மை நோயினைக்' குறிக்கும். இந் நோய்க்கு வைசூரி என்றும் பெயர் உண்டு. 'ஆடி மாதத்தில் வீசும் காற்றில் அம்மை நோயும் பறந்து போகும்' என்பது தான் திருந்திய பொருள் ஆகும்.

நிறுவுதல்:

இக் கருத்தினை நிறுவும் முன்னர் ஆடி மாதம் பற்றியும் அம்மை நோயினைப் பற்றியும் சிறிது அறிந்து கொள்ளுதல் இங்கே நலம் பயக்கும். வேனில் காலங்களான பங்குனி,சித்திரை,வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் வெயிலின் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம். இந்த நான்கு மாதங்களில் சிறிதளவு மழையும் இல்லை என்றால் அங்கே எவ்வளவு கொடிய வெப்பம் நிலவும்?. இத்தகைய கொடிய வெப்பத்தினால் உண்டாவதே அம்மை நோய் ஆகும். கொடிய வெப்பமும் உணவுத் தூய்மையின்மையும் கைகோர்க்கும்போது அங்கே அம்மை நோய் தோன்றுகிறது. உயிர்க் கொல்லி நோய்களுள் ஒன்றாக அம்மை நோயினையும் கருதலாம். ஏனென்றால் இந்த நோய் அவ்வளவு கொடுமையானது என்பதுடன் ஆறாத வடுக்களையும் உண்டாக்கி விட்டு செல்கிறது. இந்த நோய்க்கு நாட்டு மருந்தாக வேப்பிலையும் நவீன ஆங்கில மருந்துகளும் இருந்தபோதும் அம்மை நோயினைப் போக்கவல்ல ஒரு கண்கண்ட இயற்கை மருந்து ஆடி மாதக் காற்று ஆகும்.

பன்னிரெண்டு மாதங்களில் ஆடி மாதத்திற்கு பல சிறப்புக்கள் உண்டு. மழைக் காலத்தின் தொடக்கமே ஆடி மாதம் ஆகும். இந்த மாதத்தில் தான் இலையுதிர்ந்த மரங்கள் எல்லாம் புதிய தளிர்களை உருவாக்கத் துவங்கும். 'ஆடிப் பட்டம் தேடி நடு' என்ற பழமொழிக்கு ஏற்ப இந்த மாதத்தில் தான் உழவர்கள் வேளாண்மையினைத் துவக்குவார்கள். ஒரு ஆண்டின் துவக்கமழையாகப் பெய்து வருகின்ற ஆடி மாதப் புது வெள்ளத்திலே மக்கள் நீராடி மகிழ்வர். காவிரி ஆற்றங்கரையில் 'ஆடிப்பெருக்கு' என்னும் விழா நடப்பதும் இந்த மாதத்தில் தான். கருநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாய் அதிக அளவில் உலா வரத்துவங்கும் மாதம் இது. கோடைகாலம் முடிந்தவுடன் வரும் முதல் மழை என்பதால் குளிர்ந்த மழைக் காற்று பலமாக மோதி நம் உடலையும் உள்ளத்தையும் சிலிர்க்கச் செய்யும். தென்றல் காற்றும் வாடைக் காற்றும் செய்யாத ஒரு நன்மையினை கொண்டல் காற்று அதாவது ஆடிக் காற்று மட்டுமே செய்யும்.

ஏனென்றால் ஆடிக் காற்று மட்டும் தான் குளிர்ச்சியுடன் புத்துணர்ச்சியையும் நல்குவது. குளிர்ந்த மழைக் காற்று பலமாக உடலில் மோதும்போது உடலில் உள்ள வெப்பம் சடாரெனக் குறைகிறது. அம்மை நோயினால் உடலில் உண்டான முத்துக்களின் மேல் இக் காற்று பட்டதும் அந்த முத்துக்களின் வழியாக உடல்வெப்பம் சடாரென வெளியேற அந்த முத்துக்களில் ஒரு மாற்றம் உண்டாகி விரைந்து அவை பழுக்கத் துவங்குகின்றன.

ஏனை மாதங்களில் முத்துக்கள் பழுக்க இரண்டு வாரங்கள் ஆகும் என்றால் ஆடி மாதக் காற்று உடலில் படுமாறு நன்கு காட்டினால் அவை நான்கே நாட்களில் பழுத்துவிடும். அதுமட்டுமின்றி அதுவரை வெப்பமான சூழ்நிலையில் கூத்தாடி மகிழ்ந்த அம்மைநோய்க் கிருமிகள் திடீரென்ற பருவகால மாற்றத்தினைத் தாங்க மாட்டாமல் காற்றின் அழுத்தத்தாலும் குளிர்ச்சியாலும் கொல்லப்பட்டு விடுகின்றன. இதனால் அம்மைநோய் பரவுவதும் தடுக்கப்பட்டு விடுகிறது. இது ஆடி மாதக் காற்றுக்கு இயற்கை அளித்த ஒரு வரம் ஆகும். ஆடிக் காற்று வீசும்போது உதிர்ந்த இலைகளும் பூக்களும் தூசியும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம். இவைமட்டுமல்ல 'அம்மைநோயும்' பறக்கும் அதாவது வேகமாக நீங்கும் என்னும் பொருளைக் குறிக்கவே 'அம்மையும்' என்று உம்மையுடன் பழமொழி கூறப்பட்டுள்ளது.

சரியான பழமொழி:

ஆடிக் காற்றில் அம்மையும் பறக்கும்.
...................................வாழ்க தமிழ்!..................................

திங்கள், 18 மே, 2009

'தயிர் பிசைந்த தாரகை'


பாடல்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடீஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎன கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.
- குறுந்தொகை பா.எண்: 167

தற்போதைய பொருள்:

காய்ச்சித் தோய்த்த தயிரைப் பிசைந்த காந்தள் மலர் போன்ற தன் கைவிரல்களைக் கழுவாமல் (மாசறக்) கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு குவளை போன்ற தனது மைதீற்றிய கண்களிலே தாளிப்பின் நறுமணம் கமழும் புகை புகுந்து வருத்தத் தானே தன் கையால் துழாவிச் சமைத்த இனிய புளிக்குழம்பினை இனிப்பாய் இருக்கிறது என்று புகழ்ந்து தன் கணவன் உண்டதினாலே உள்ளம் மிக மகிழ்ந்தது மகளின் முகம்.
(ஆதாரம்: குறுந்தொகை மூலமும் உரையும், இராமரத்தினம், கங்கை புத்தக நிலையம், சென்னை, 2002)

தவறு:

இப்பாடலின் இரண்டாவது வரிக்குக் கூறப்படும் பொருளின் மீது நிறைய நாட்களாகவே ஒரு நெருடல் இருந்து வந்தது. 'கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு' என்பது தான் இந்த அடிக்குக் கூறப்படும் பொருள் ஆகும். 'தயிர் பிசைந்த விரல்களைக் கழுவாமல் கழுவுற்ற சீலையினை உடுத்திக் கொண்டு ' என்று பொருள் கூறினால் அதன் உட்கருத்து என்ன?. 'தயிர் பிசையும்முன்னர் ஆடை ஏதும் அணியாது இருந்தவள் பிசைந்த பின்னர் ஆடை அணிந்தாள்' என்றோ 'தயிர் பிசையும்போது அழுக்கான ஆடையுடன் இருந்தவள் பிசைந்த பின்னர் துவைத்த ஆடையினை அணிந்தாள்' என்றோ தானே பொருள் கொள்ள வேண்டி வருகின்றது. இந்த இடத்தில் இக்கருத்துக்கள் சற்றேனும் பொருந்துகின்றனவா என்றால் சிறிதும் இல்லை. ஏனென்றால் இந்த இரண்டு உட்கருத்துக்களும் பண்பற்றவைகள் என்பதுடன் அறிவுக்குப் புறம்பானவையும் ஆகும் . இவ்வாறு உட்கருத்து கொண்டால் அந்தப் பெண்ணைப் பற்றி ஏன் சங்ககாலப் பெண்களைப் பற்றியே ஒரு தவறான கருத்து அல்லவா கற்போர் நெஞ்சில் முகிழ்த்துவிடும்?.

அன்றியும் எந்த ஒரு பெண்ணும் இவ்வாறு கீழ்த்தரமாகவும் மடத்தனமாகவும் நடந்து கொள்வாளா?. ஒருபோதும் மாட்டாள். இல்லறத்தின் சிறப்பினைப் போற்றுகின்ற இந்தப் பாடலுக்கு பெண்மையினை இழிவுபடுத்தும் விதமாக ஒரு கருத்தினை ஏன் கூறினர் என்று ஆராய்ந்த போது அது ஒரே ஒரு எழுத்துப் பிழையால் தான் என்று தெரிய வந்தது. அந்த எழுத்துப் பிழை இருப்பது இரண்டாம் வரியில் உள்ள கடைசிச் சொல்லில் தான். 'கழாஅ துடீஇ' என்ற தொடரினை 'கழாஅது உடீஇ' என்று பிரித்து அதற்கு 'கழுவாமல் உடுத்தி' என்று பொருள் கொண்டிருப்பது தான் இங்கே தவறு ஆகும்.

திருத்தம்:

இரண்டாம் வரியில் உள்ள 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வந்திருக்க வேண்டும். இதுவே இதன் திருத்தமாகும். 'கழாஅ துடைஇ' என்னும் தொடருக்கு 'கழுவாமல் துடைத்து' என்று பொருள் வரும். 'கழாஅத்தலையார்' என்ற பெயர் எவ்வாறு 'கழுவாத தலையார்' என்று பொருள் தருகின்றதோ அவ்வாறே இதனையும் பொருள் கொள்ள வேண்டும்.

நிறுவுதல்:

இல்லறத்தின் முதுகெலும்பாகிய 'இயைபு' பண்பின் சிறப்பினை உணர்த்த வந்த பாடல் இது. இப்பாடலின் உண்மையான பொருளை அறியும் முன்னர் இப்பாடல் தோன்றிய பின்புலத்தை ஆராயலாம். செல்வச் செழிப்பில் வளர்ந்து வந்த ஒரே செல்ல மகள் ஒரு காளையின் மேல் காதல் கொள்கிறாள். அவனோ ஏழை. மகளின் பெற்றோர் இவர்களது காதலை எதிர்க்கவே இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய்த் திருமணம் செய்துகொள்கின்றனர். இதை அறிந்த அவளது அன்னை மிகவும் வருந்துகிறாள். சமையலைப் பற்றி எதுவுமே அறியாத தனது ஒரே செல்ல மகள் வயதில் மிகவும் இளையவள். எவ்வாறு தன் கணவனுடன் சிக்கல் ஏதும் இல்லாமல் இல்லறம் நடத்துகிறாளோ என்ற கவலை மேலிடவே தன் மகள் இல்லறம் நடத்தும் பாங்கினை அறிந்துவர செவிலித்தாயினை அனுப்புகிறாள். அந்த செவிலித்தாய் மகளின் வீட்டை அணுகி ஒரு சாளரத்தின் வழியாக அந்த வீட்டிற்குள் நடக்கும் நிகழ்ச்சியைக் கண்டு சென்று அன்னையிடம் கூறுவதாக அமைவதே இந்தப் பாடல் ஆகும்.

மிகவும் செல்லமாக வளர்ந்தவள் என்பதால் இன்னும் சமையல் கலையினையே கற்றுக் கொள்ளாதவள் கணவனுக்குச் சமைத்துக் கொடுக்கவேண்டுமே என்ற ஆவலில் மூன்று தவறுகளைச் செய்கிறாள். தயிர் கெட்டியாய் இருந்தால் சற்று தண்ணீர் விட்டு ஒரு கரண்டியால் கிண்டினால் போதும். ஆனால் இவளோ தனது செங்காந்தள் மலர் போன்ற சிவந்த மெல்லிய விரல்களால் பிசைகிறாள். இது முதல் தவறு ஆகும். அவ்வாறே விரல்களால் பிசைந்த போதிலும் பிசைந்த பின்னர் விரல்களைத் தண்ணீரில் நன்றாகக் கழுவிவிட்டுத் துணியால் துடைத்துக் கொள்ளவேண்டும். ஆனால் இவளோ விரல்களைத் தண்ணீரில் க்ழுவாமல் தனது சலவை செய்த புடவையிலேயே துடைத்துக் கொள்கிறாள். இது இரண்டாவது தவறு ஆகும். அடுத்து தாளிக்கும்போது எண்ணையை அதிகம் சூடேறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் எண்ணை ஆவியாவதுடன் அதில் நீர் பட்டால் புகை உருவாகி எண்ணை தெறிக்கவும் செய்யும். ஆனால் இவளோ சமையல் அறியாதவள் ஆயிற்றே. அதிகம் சூடேறிய எண்ணையில் தயிரைக் கொட்டித் தாளிக்க முயல்கிறாள். இது மூன்றாவது தவறு ஆகும். இதனால் அதிகமான புகை தோன்றி இவளது கண்களைப் பதம் பார்க்கிறது. இப்படி தவறுக்கு மேல் தவறு செய்து சமைத்து முடித்த பின்னர் அதனை தனது கணவனுக்குப் பரிமாறுகிறாள். அதை உண்டுவிட்டு கணவன் 'என்ன சொல்வானோ?' என்று அவளது பேதை நெஞ்சம் பதைபதைக்கிறது. ஆனால் அவளது கணவனோ பண்பாடு தெரிந்தவன். மனைவி சமைத்த தீம்புளிப்பாகில் குறை இருந்த போதிலும் அதை மறைத்துக்கொண்டு 'நன்றாக இருக்கிறது' என்று புகழாரம் சூட்டுகிறான். இது தான் இல்வாழ்வின் இயைபுப் பண்பாகும். அதாவது ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்தல் அல்லது அனுசரித்துப் போதல் ஆகும். கணவனின் பாராட்டைக் கேட்ட அவள் உள்ளம் மகிழ்கிறாள். அது அவளது முகத்தில் தெரிகிறது.

இதுதான் அந்த வீட்டில் நடக்கின்ற நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியைக் கூறும்போது மகள் செய்த மூன்று தவறுகளையும் அதைப் பொறுத்துக்கொண்டு அவளது கணவன் அவளைப் பாராட்டியதையும் மட்டும் செவிலித்தாய் கூறவில்லை. தன் மகளுக்கு சமையல் தான் தெரியாதே தவிர நன்றாக சலவை செய்யத் தெரியும் என்றும் தன்னை நன்கு அலங்காரம் செய்துகொள்ளத் தெரியும் என்றும் கூறி பெருமைப் படுகிற நுட்பமும் இப்பாடலில் புலனாகிறது. 'கழுவுறு கலிங்கம்', 'உண்கண்' ஆகிய தொடர்கள் இதைப் பறைசாற்றுகின்றன. இதிலிருந்து இந்தப் பாடலில் 'கழாஅ துடீஇ' என்ற தொடருக்குப் பதிலாக 'கழாஅ துடைஇ' என்று வருவதே சரி என்று தெளியலாம்.

சரியான பாடல்:

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅ துடைஇக்
குவளை உண்கண் குய்ப்புகை கமழத்
தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎன கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகமே.

(விரல் என்ற சொல்லை அடுத்து கழாஅ என்ற சொல்லைப் பொருத்திப் பொருள் கொள்க.)
..................................தமிழ் வாழ்க!.................................

சனி, 9 மே, 2009

' தாளை வணங்காத் தலை '


பாடல்:

'கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.'
- குறள் எண்: 9


தற்போதைய விளக்கம்:

கலைஞர் உரை: உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
மு.வ உரை: கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.
சாலமன் பாப்பையா உரை: எண்ணும் நல்ல குணங்களுக்கு எல்லாம் இருப்பிடமான கடவுளின் திருவடிகளை வணங்காத தலைகள், புலன்கள் இல்லாத பொறிகள்போல, இருந்தும் பயன் இல்லாதவையே.

தவறு:

இக் குறளுக்குக் கூறப்பட்டிருக்கும் உரைகளில் 'கோள்,பொறி,தலை' ஆகிய மூன்று சொற்களுக்குத் தவறான பொருள்களைக் கூறியுள்ளனர். இம்மூன்று உரைகளில் கலைஞரின் உரை முற்றிலும் மாறுபட்டிருப்பதைக் காணுங்கள். அவர் 'எண்குணத்தான்' என்ற சொல்லிற்கு 'ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவன்' என்று பொருள் கூறுகிறார். இப்பொருள் இச் சொல்லிற்குப் பொருந்தாது என்று அறிஞர்கள் அறிவர். எனவே இந்த உரை தவறானது என்று தெளியலாம். அத்துடன் இந்த மூன்று விளக்கங்களையும் ஒப்புநோக்கினால் ஓர் உண்மை புரியும். இவை அனைத்திலுமே 'தலை' என்ற சொல் 'மண்டை' யைக் குறிப்பதாகவும் 'பொறி' என்ற சொல் மனித உடலின் ஐம்பொறிகளைக் (கண், காது, மூக்கு, வாய், மெய்) குறிப்பதாகவும் 'கோள்' என்ற சொல் இப்பொறிகளின் மூலம் நாம் பெறுகின்ற ஐம்புலன்களைக் (காட்சி, ஒலி, வாசனை, சுவை, தட்பவெப்பம்) குறிப்பதாகவும் கொள்ளப்பட்டு அதற்கேற்ப குறளுக்கு உரை கூறப்பட்டு உள்ளது. மு.வ மற்றும் பாப்பையா உரைகளில் 'இறைவனை வணங்காதவனின் தலையானது இயக்கம் அற்ற ஐம்பொறிகளைப் போல பயனற்றது' என்று கூறப்பட்டு உள்ளது. இப்படி ஒரு கருத்தினை வள்ளுவர் இங்கே கூறி இருப்பாரா?. என்பதே இங்கு எழுகின்ற கேள்வி. வள்ளுவர் அவ்வாறு கூறி இருக்க முடியாது என்பதே இக் கட்டுரையின் துணிபு ஆகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

இவ்வுலகில் வாழும் உயிர்கள் யாவும் இறைவனின் படைப்புக்களே ஆகும். இப் படைப்புக்களில் காது கேளாதோரும் வாய்பேச இயலாதோரும் காண இயலாதோரும் மூளை வளர்ச்சி குன்றியோரும் உண்டு. இயக்கம் அற்ற இப்பொறிகளை உடைய இம் மக்களின் குறைபாடுகளுக்கு யார் காரணம்?. இவர்களைப் படைத்த இறைவன் தானே காரணம். எனில் இவர்களைக் குறைகூறுவதோ இழிவுபடுத்தும் வகையில் மேற்கோள் காட்டுவதோ அறச் செயல் ஆகாதன்றோ?. இப்படி இருக்க 'இறைவனை வணங்காதவனின் தலையானது இயக்கம் அற்ற பொறிகள் போலப் பயனற்றது' என்று மேற்கோள் காட்டினால் அது அறமல்லாத செயல் மட்டுமின்றி இறைவனின் படைப்பினை அதாவது இறைவனையே இழிவுபடுத்துவது போல ஆகிவிடுமே. இறைவனை வாழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தினையும் அறச் சிந்தனைகளையும் உடைய வள்ளுவப் பெருமான் இப்படி இழிவுபடுத்திக் கூறுவாரா?. ஒருபோதும் கூறமாட்டார். எனவே இப்பாடலில் வரும் 'கோள்' என்ற சொல் 'ஐம்புலனையும்' 'பொறி' என்ற சொல் 'ஐம்பொறியையும்' 'தலை' என்ற சொல் 'மண்டை' யினையும் குறிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

திருத்தம்:

இக் குறளில் வரும் 'கோள், பொறி, தலை' ஆகிய சொற்களுக்குப் பல பொருட்கள் உண்டென்றாலும் இங்கே 'கோள்' என்னும் சொல் 'வலிமை (வீரம்)' யினையும் 'பொறி' என்ற சொல் 'செல்வத்தினையும்' 'தலை' என்ற சொல் 'தலைவனையும்' குறிப்பதாகக் கொள்வதே பொருத்தமாகும்.
(ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி, வின்சுலோ இணையத் தமிழ் அகராதி).

நிறுவுதல்:

'கடவுள் வாழ்த்து' அதிகாரத்தில் இறைவனின் புகழ் கூறவந்த வள்ளுவர் இந்தக் குறளை ஒன்பதாம் பாடலாக அமைத்திருக்கிறார். இவ்வாறு அமைத்ததற்கும் 'எண்குணத்தான்' என்று இறைவனை இக்குறளில் வள்ளுவர் புகழ்வதற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்று ஆராய்ந்ததில் ஒரு கருத்து முகிழ்த்தது. அது இது தான்: முதல் எட்டுப் பாடல்களில் பாடலுக்கு ஒரு குணமாக இறைவனின் எட்டு குணங்களையும் பாடிய வள்ளுவர் ஒன்பதாம் குறளில் இறைவனை 'எண்குணத்தான்' என்று போற்றுகிறார். என்னே வள்ளுவரின் புலமை!. மிகவும் அருமை அன்றோ?. இனி வள்ளுவர் கூறும் இறைவனின் எட்டு குணங்களைப் பார்ப்போம்.


குறள் 1: இறைவன் உலகிற்கு முதலானவன் (தலைமைக் குணம்)
குறள் 2: இறைவன் மாசற்ற அறிவுடையவன் (நுண்மைக் குணம்)
குறள் 3: இறைவன் அண்டவெளியினைக் கடந்தவன் (பெருமைக் குணம்)
குறள் 4: இறைவன் விருப்பு வெறுப்பு அற்றவன் (சாராமைக் குணம்)
குறள் 5: இறைவன் நல்வினை தீவினை அற்றவன் (மாறாமைக் குணம்)
குறள் 6: இறைவன் ஐம்பொறிகளையும் அடக்கியவன் (வலிமைக் குணம்)
குறள் 7: இறைவன் உவமை இல்லாதவன் (ஒப்பின்மைக் குணம்)
குறள் 8: இறைவன் அறக் கடல் ஆனவன் (எளிமைக் குணம்)

இப்படி எட்டு குணங்களைக் கொண்டு குணக்குன்றாக விளங்கும் இறைவனை 'எண்குணத்தான்' என்று போற்றிய வள்ளுவர் இந்த எண்குணத்தானை வணங்காத ஒருவன் மக்கள் தலைவனாகவே இருந்தாலும் அவனுடைய வீரமும் செல்வமும் பயன்படாது என்கிறார். இது எவ்வாறெனில் கல்வி அறிவு (நுண்மைக் குணம்), வீரம் (வலிமைக் குணம்), செல்வம் (பெருமைக் குணம்) ஆகிய மூன்றையும் உடைய உலகத்தின் ஒரே தலைவனான இறைவனிடமிருந்து உயிர்கள் கொடையாகப் பெறுவதே கல்வியும் வீரமும் செல்வமும் ஆகும். அப்படி பெற்ற பின்னர் அந்த இறைவனையே வணங்க மறுத்தால் அது நன்றி மறப்பது போலத்தானே. செய்ந்நன்றி கொன்றவற்கு உய்வில்லை அல்லவா?. அதனால் தான் அவை பயன்படாது என்கிறார்.


மனித வாழ்விற்கு இன்றியமையாத செல்வங்களான கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றில் இறைவனை வணங்காதவரின் கல்வி அறிவு பயன்படாது என்று இரண்டாவது குறளில் விளக்கிய வள்ளுவர் இக்குறளில் வீரமும் செல்வமும் இறைவனை வணங்கா விட்டால் பயன்படாமல் போய்விடும் என்கிறார். என்னே வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம்!.

சரியான பொருள்:

' எண்வகைக் குணங்களை உடைய இறைவனின் திருவடிகளை
வணங்காத தலைவனின் வலிமையும் செல்வமும் பயனற்றவையே.'
..............................வாழ்க தமிழ்! ....................................

வெள்ளி, 8 மே, 2009

பசப்பும் பசலையும்
முன்னுரை:

பசப்பு என்ற சொல் சங்ககாலத்தில் இருந்து இன்றுவரை பயன்படுத்தப்பட்டுவரும் பல சொற்களில் ஒன்று. ஆனால் இச்சொல்லுக்கு நாம் கொண்டிருக்கும் பொருள்தான் தவறாக உள்ளது. இச் சொல்லின் உண்மையான பொருள் பற்றியும் அது எவ்வாறெல்லாம் திரிந்து வேறுபல பொருட்களுக்கு இடமளித்தது என்பது பற்றியும் இக் கட்டுரையில் காணலாம்.

சொல்வடிவங்கள்:

பசப்பு என்ற சொல் இலக்கியங்களில் பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவற்றைக் கீழ்க்காணுமாறு வகைப்படுத்தலாம்.

1.        பசலை            2.  பசப்பு,           3.  பசத்தல்   4. பயலை.    5.. பயப்பு.

அகராதிகள் காட்டும் பொருட்கள்:

தமிழ் அகராதிகள் பசப்பு என்ற சொல்லின் பல்வேறு வடிவங்களுக்கு என்ன பொருள் கூறுகின்றன என்று கீழே காணலாம்.

சென்னை தமிழ்ப் பேரகராதி

பசப்பு     : பாசாங்கு, பச்சை நிறம், நிறமாற்றம்,ஈரப்பற்று, சுகநிலை, வளம்.
பசப்புதல்  : ஏமாற்றுதல், அலப்புதல்.
பசலை    : அழகுத் தேமல்; பொன் நிறம், நிறவேறுபாடு, 
            இளமை, கவலையின்மை,சஞ்சலம், வருத்தம்.
பயப்பு     : பயன், கிருபை, நிறம்வேறுபடுகை, பொன்னிறம்.
பயலை   : தலைவன் பிரிவால் தலைவிக்கு உண்டாகும் நோய்.

தற்போதைய நடைமுறைப் பொருள்:

இக்காலத்தில் 'பசப்பு' என்ற சொல்லை ஒரே ஒரு பொருளில் பயன்படுத்துகின்றனர். 'சும்மா அழுது பசப்பாதே', 'அவள் ஒரு பசப்புக்காரி' ஆகிய தொடர்கள் நடைமுறையில் உள்ளவையே. இத்தொடர்களில் வரும் பசப்பு என்ற சொல் 'நடித்தல், ஏமாற்றுதல்' ஆகிய பொருட்களில் பயன்படுத்தப் பட்டு உள்ளது.

சொல் பயன்பாடு:

பசப்பு, பசலை, பசத்தல், பயப்பு, பயலை ஆகிய சொற்கள் நூற்றுக்கும் அதிகமான பாடல்களில் பயின்று வந்துள்ளன. அத்தனை பாடல்களையும் ஈண்டு விரித்தால், கட்டுரை பெரிதாகும் என்பதால் சில பாடல்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்க - கலி 16/1
பசந்த மேனியொடு படர் அட வருந்தி - புறம் 159/6
பல்லோர் அறிய பசந்தன்று நுதலே - ஐங் 55/4
பாஅய் பாஅய் பசந்தன்று நுதல் - கலி 36/12
தாம் பசந்தன என் தட மென் தோளே - குறு 121/6
அளியவோ அளிய தாமே ஒளி பசந்து - ஐங் 455/3,4
நன் மா மேனி பசப்ப நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே - குறு 331/7,8
சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர - நற் 358/2
நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி - குறு 185/1
பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் - ஐங் 429/1
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே - கலி 7/8
பாம்பு சேர் மதி போல பசப்பு ஊர்ந்து தொலைந்த_கால் - கலி 15/17
பழி தபு வாள் முகம் பசப்பு ஊர காணும்_கால் - கலி 100/18
ஆக மேனி அம் பசப்பு ஊர - அகம் 333/2
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின் - முல் 12
அடு பால் அன்ன என் பசலை மெய்யே - நற் 175/9
பாசி அற்றே பசலை காதலர் - குறு 399/2
மெல் இறை பணை தோள் பசலை தீர - ஐங் 459/1
பசலை நிலவின் பனி படு விடியல் - புறம் 392/3
மென் முலை மேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல் - திணை50:3 22/1
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை50:3 24/1
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - மணி 5/140
பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான் - சிந்தா:6 1510/3
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம் - அயோ:5 6/1
இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் - கிட்:10 116/2
நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என் மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5

பசப்பு - புதிய பொருள்:

பசத்தல் என்னும் சொல் குறிக்கும் முதன்மைப் பொருள் ' கலங்குதல் / நெகிழ்தல் ' என்பது ஆகும்.

பசலை, பசப்பு ஆகிய சொற்கள் குறிக்கும் முதன்மைப் பொருள்கண்ணீர்ஆகும்.

இந்த முதன்மைப் பொருட்களிலிருந்து ‘ ஒளி மழுங்குதல் / குறைதல் ‘, ‘ வாடுதல் ‘ ‘நிறம் மாறுதல்’ ஆகிய இரண்டாம் நிலைப் பொருட்களும் தோன்றும். இது எவ்வாறெனில், கண்கலங்கி தொடர்ந்து அழும்போது கண்களின் ஒளியானது மழுங்கி அதில் ஒரு வாட்டமும் நிறமாற்றமும் தோன்றும்.

இப் புதிய பொருட்கள் எவ்வாறு சரி என்பதைக் கீழே ஆதாரங்களுடன் காணலாம்.

நிறுவுதல்:

மேலே காட்டப்பட்ட பாடல்கள் அனைத்தையும் நோக்கினால் ஏறத்தாழ அவை அனைத்தும் காதல் பற்றிய பாடல்கள் என்று அறியலாம். அதிலும் குறிப்பாக காதலன் காதலியை விட்டுப் பிரிகின்ற அல்லது பிரிந்த சூழலைப் பற்றிப் பாடுபவை. காதலன் காதலியை விட்டுப் பிரியும் போது அல்லது பிரிந்த போது காதலி என்ன செய்வாள்?. அழுது புலம்புவாள். இது தான் உலகெங்கும் இன்றளவும் நடக்கின்ற நிகழ்ச்சி. இதைத் தான் பல சொற்களால் பலவிதமாகப் புலவர்கள் பாடி உள்ளனர்.

இதை விடுத்து காதலனின் பிரிவினால் காதலியின் மேனியில் நிறம் மாறியது என்பதோ பசுமையாகியது என்பதோ பொன்னிறமானது என்பதோ அழகுத் தேமல் உண்டானது என்பதோ நாம் எங்குமே காணாதவைகளாகும். இத்தகைய நிகழ்வுகள் உலக மாந்தர் எவருக்கும் ஒவ்வாதவை என்பதுடன் இப்படிப்பட்ட நம்பிக்கைகள் சங்க காலத் தமிழ்ப் பெண்களை ஏதோ வேற்றுக்கிரகவாசிகள் போல நினைக்கச் செய்துவிடும்.

ஆக, பசப்பு, பசலை, பசத்தல் ஆகிய சொற்கள் யாவும் கண்கள் கலங்குவதை அதாவது அழுகையினைத் தான் குறித்து வந்திருக்கும் என்று முடிவு செய்யலாம். இக் கருத்தினை நிறுவும் முன்னர் பசலையின் தன்மைகளாக இலக்கியங்கள் காட்டும் கருத்துக்களையும் காணலாம்.

கண்ணுடன் தொடர்புடையது பசலை:

பசலையானது கண் என்னும் உறுப்புடன் தொடர்புடையது என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

ஆய்மலர் உண்கண் பசலை - அகநா.பா.எண்:52
என்செயப் பசக்கும் தோழி என் கண்ணே - ஐங்கு.பா.எண்.169
ஏதிலாளர்க்கு பசந்த என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 34
கொன்றைப் பூவின் பசந்த உண்கண் - ஐங்கு.பா.எண்: 500
ஆய்மலர் உண்கண் பசப்ப - ஐங்கு.பா.எண்: 242
உண்கண் பசப்பது எவன்கொல் அன்னாய் - ஐங்கு.பா.எண்: 24
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே - ஐங்கு.பா.எண்: 45
பல்இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ - ஐங்கு.பா.எண்: 170
பசக்குவ மன்னோ என் நெய்தல் மலர் அன்ன கண் - கலி.பா.எண்: 142
பொன்எனப் பசந்த கண் போது எழில்நலம் செல - கலி.பா.எண்: 77
பல்இதழ் மலர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 45
அரிமதர் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 82
ஆய் இதழ் உண்கண் பசப்ப - கலி.பா.எண்: 112
பசலை ஆர்ந்தன குவளையங் கண்ணே - குறு.பா.எண்: 13
காமம்கொல் இவள் கண் பசந்ததுவே - நற்.பா.எண்: 35
பூப்போல் உண்கண் பசந்து - புற.பா.எண்:96
பசப்புற்றன பேதைப் பெருமழைக் கண் - திருக்குறள் பா.எண்: 1239
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே - திருக்குறள் பா.எண்: ௧௨௪0

தம் மீது அன்புடையோர் தம்மைவிட்டுப் பிரியும்போது கண்கள் என்ன செய்யும்?. பொசுக்கென்று கலங்கி கண்ணீர் விடுமன்றோ. இதைத்தவிர இச் சூழலில் கண்கள் செய்யும் பணி வேறெதுவும் இல்லை. அதுவும் பெண்களைப் பொறுத்தமட்டிலும் கண்கள் அதிகம் துன்புறுவது அழுகையினால் தான். எனவே இப் பாடல்களில் வரும் பசலை / பசப்பு / பசத்தல் என்பவை அழுகையைத் தான் குறிக்கும் என்பதை உறுதியாகக் கூறலாம். இதனை மேலும் உறுதிப்படுத்த கீழ்க்காணும் சான்றுகளையும் காணலாம்.

பசத்தல் வினையின் பயன் என்ன?

மேற்பாடல்களில் கண்களானவை பசத்தல் தொழிலுடன் தொடர்புடையவை என்று கண்டோம். இனி, இத் தொழிலினால் விளையும் பயன் என்ன என்று அறிவதன் மூலம் பசத்தலின் உண்மைப் பொருளை உறுதிசெய்து கொள்ளலாம்.

பாடு இன்றி பசந்த கண் பைதல பனி மல்ககலி – 16
(பொருள்: உறக்கமின்றி அழுத கண்களில் கண்ணீர் நிறைய .........)

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும் பசந்து பனி வாரும் கண் - குறள் 124:2
( பொருள்: எம் காதலர் எமக்கு அருளாமையினை பிறர்க்கு உரைப்பது போல எம் கண்கள் அழுது நீர் சொரிகின்றன. )

நயந்தோர் உண்கண் பசந்து பனிமல்க - ஐங்கு.பா.எண்: 37
( பொருள்: காதலித்தாரின் மையுண்ட கண்கள் அழுது கண்ணீர் நிறைய .....)

பனி மலர் நெடும் கண் பசலை பாய – ஐங்கு. 477
( பொருள்: பனிநீர் நிறைந்த மலர் போல நெடிய கண்களில் இருந்து கண்ணீர் பாயவும்….)

மேற்காணும் பாடல்களில் வரும்பனிஎன்ற சொல்லுக்கு நீர் என்ற பொருள் மட்டுமின்றி கண்ணீர்என்ற பொருள் இருப்பதாகவும் அகராதிகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி, கண்கள் பசக்கும்பொழுது கண்களில் கண்ணீர் பெருகுவதாக மேற்காணும் பாடல்கள் அனைத்தும் கூறுவதைக் காணலாம். இதிலிருந்து, கண்களின் பசத்தலாகிய தொழில் என்பது அழுகையினையே அன்றி வேறெதையும் குறிக்காது என்பது உறுதியாகிறது. இதை மேலும் சில உவமை விளக்கங்களின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பாசி போன்றது பசலை:

கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் பசலையினை பாசியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது.

ஊர் உண் கேணி உண்துறை தொக்க பாசி அற்றே பசலை காதலர்
தொடுவுழி தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழி பரத்தலானே - குறு - 399.

பொருள்: ஊர் உண்ணும் நீரினை உடைய கிணற்றுக்கருகிலே தேங்கிய நீரில் படர்ந்திருக்கும் பாசியினைப் போல காதலர் என்னைத் தொடும்போதெல்லாம் நீங்கி, விடும்போதெல்லாம் கண்ணை மூடி மறைக்கின்றது கண்ணீர்.

இப்பாடலில் இருக்கும் அழகான உவமைகளைப் பாருங்கள். நீரினை கண்ணுக்கும், நீரின் மேல் படர்ந்திருக்கும் பாசியினை கண்ணின் மேல் ஊரும் கண்ணீருக்கும் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். எவ்வாறெனில், ஏடு போல நீரின்மேல் மெலிதாகப் படர்ந்திருக்கும் பாசியினை விரலால் தொட்டால் பாசி விலகி தெளிவான நீர் தெரியும். விரலை எடுத்துவிட்டால், மறுபடியும் அந்த நீரை பாசி மூடி மறைத்துக்கொள்ளும். அதைப்போல, காதலன் காதலியைத் தனது விரலால் தொடும்போது, காதலியின் கண்ணீர் விலகி கண்கள் மகிழ்ச்சியால் ஒளிர, விரலை எடுத்தவுடன், மறுபடியும் கண்ணீர் பெருகி கண்ணை மறைத்ததாம். என்ன அழகான உவமை!.

இதே கருத்தினை கீழ்க்காணும் கலித்தொகைப் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

விடுவழி விடுவழி சென்று ஆங்கு அவர் தொடுவழி தொடுவழி நீங்கின்றால் பசப்பேகலி - 130

இப் பாடல்களில் இருந்து இன்னொரு கருத்தும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, பெண்களின் கண்களில் கண்ணீர் எப்போது வரும் எப்போது போகும் என்று யாராலுமே எதிர்பார்த்துச் சொல்லமுடியாது. காரணம், பெண்களுக்குப் பொதுவாக ஆண்களைக் காட்டிலும் இளகிய மனம் என்பதால் அவர்களால் பிரிவுத் துயரம் உள்பட எந்த ஒரு துயரத்தையும் தாங்க முடியாது. துன்பத்தின்போது கண்களில் குபுக்கென்று தோன்றி பெருக்கெடுத்து ஓடும் கண்ணீர், சமாதானமாகிவிட்டாலோ, மகிழ்ச்சி வந்துவிட்டாலோ, இருந்த இடம் தெரியாமல் மாயமாய் மறைந்துவிடும். பெண்களுக்கே உண்டான இச் சிறப்புப் பண்பினை திருவள்ளுவரும் உறுதிப்படுத்துகிறார். அதனைக் கீழே காணலாம்.

 இருள் போன்றது பசலை:

விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

பொருள்: விளக்கு அணைவதை எதிர்பார்க்கும் இருளினைப் போல, காதலனின் தீண்டல் நீங்குவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது கண்ணீர்.

இப் பாடலில் வரும் அழகான உவமைகளைப் பாருங்கள். விளக்கினை கண்ணுக்கும், விளக்கினைச் சூழும் இருளுக்குக் கண்ணைச் சூழ்கின்ற கண்ணீருக்கும், விளக்கின் ஒளியினை அன்பினுக்கும் உவமையாக்கி இருக்கிறார் வள்ளுவர். எவ்வாறெனில், விளக்கை ஏற்றியதும் விளக்கில் தோன்றும் ஒளியானது இருளைத் தூரமாக ஓட்டிவிடும். சற்றுநேரம் கழித்து, விளக்கின் ஒளி அணைந்ததும், விளக்கினை மீண்டும் இருள் சூழ்ந்துவிடும். அதைப்போல காதலரின் அன்புமிக்க தீண்டலால் காதலியின் கண்ணீர் நீங்கி, கண்கள் மகிழ்ச்சியால் விளக்கு போல ஒளிர, அன்பு நீங்கியதும் மறுபடியும் இருளாகிய கண்ணீர் பெருகி கண் ஆகிய விளக்கு அணைந்துவிடும். எவ்வளவு அழகான உவமை இல்லையா ?

இதை இன்னொரு கோணத்தில் இருந்துபார்த்தால் ஒரு புதிய கருத்து முகிழ்க்கும். அதாவது, விளக்கினை இருள் சூழ்வது இயல்புதான் என்றாலும் விளக்கு எப்போது அணைந்தது இருள் எப்போது சூழ்ந்தது என்று பிரித்துக் கூறமுடியாத அளவில் இரண்டு செயல்களுமே ஒரே நேரத்தில் நடக்கும் இல்லையா?. இதனை பெண்களின் கண்ணீருடன் ஏற்றிக் கூறியதில் இருந்து, பெண்களுக்குத் துயர எண்ணம் தோன்றிய அளவிலேயே கண்ணீரும் தோன்றிவிடும் என்னும் கருத்து பெறப்படுகிறது..

இக் கருத்தினை கீழ்க்காணும் குறளின் மூலம் அவரே உறுதிப்படுத்துவதைப் பாருங்கள். 

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ் அளவில்
அள்ளி கொள்வு அற்றே பசப்பு - குறள் 119:7

பொருள்: காதலருடன் சேர்ந்து இருந்தேன். சற்றே நகர்ந்தேன். அம்மாத்திரையில், கண்ணீர் என்னை அள்ளிக் கொண்டது.

காதலரை விட்டு நகர்ந்த அந்த மாத்திரையிலேயே கண்ணீர் தோன்றியதாகக் கூறுகிறாள். இச் செயல், பெண்கள் தமது காதலரின் / கணவரின் மேல் வைத்திருக்கும் அளவிறந்த அன்பினைக் காட்டுகிறது. அன்பு நிறைந்த மனதில் அழுகையும் உண்டு என்று இதன்மூலம் உறுதியாகிறது. இதை ஏற்கெனவே அன்புடைமை அதிகாரத்தில் கீழ்க்காணும் குறளில் வள்ளுவர் கூறிவிட்டார்.

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்.

மேகம் போன்றது பசலை:

பெண்களின் கண்களில் தோன்றும் கண்ணீரை மேகத்துடன் ஒப்பிட்டுக் கூறுகிறது சிந்தாமணியின் கீழ்க்காணும் பாடலொன்று.

பனி கொள் மா மதி போல் பசப்பு ஊர யான் - சிந்தா:6 1510/3

பொருள்: மேகம் மறைத்த நிலவினைப் போல கண்ணீர் பெருக நான் ...........

இப் பாடலில், நிலவினைக் கண்ணுக்கும், நிலவை மறைக்கும் மேகத்தினை கண்ணை மறைக்கும் கண்ணீருக்கும் உவமையாகக் கூறியிருக்கிறார் திருத்தக்கத் தேவர். நிலவினை மேகங்கள் அடிக்கடி மூடி மறைப்பதும் பின்னர் அம் மறைப்பு விலகுவதும் வழக்கம். அதைப்போல அப் பெண், தனது துயரத்தை நினைத்து நினைத்து விட்டுவிட்டு அழும்போது கண்ணீர் பெருகி கண்ணை மறைப்பதும் விலகுவதுமாக இருப்பதாக இப்பாடல் கூறுகிறது.

பாலாடை போன்றது பசலை:

கீழ்க்காணும் நற்றிணைப் பாடலொன்று, பசலையினை பாலின் மேல் தோன்றும் ஆடையுடன் ஒப்பிட்டுக் கூறுவதைப் பாருங்கள்.

அடு பால் அன்ன என் பசலை மெய்யே - நற் 175/9
( பொருள்: காய்ச்சும் பாலின் மேல் தோன்றும் ஆடையினைப் போல கண்களின் மேல் தோன்றும் கண்ணீர்....)

இப் பாடலில் கண், ஆடை போன்ற சொற்களை நேரடியாகக் கூறாமல் உய்த்துணர வைத்துள்ளார் புலவர். பாலினைக் கண்ணுக்கும், பாலின் மேல் தோன்றும் ஆடையினைக் கண்ணின் மேல் தோன்றும் கண்ணீருக்கும், பாலாடை தோன்றக் காரணமான வெப்பத்தினை கண்ணீர் தோன்றக் காரணமான துயரத்திற்கும் உவமையாக்கிக் கூறியுள்ளார். அதாவது, வெப்பமூட்டும் பொழுது பாலின்மேல் ஆடை தோன்றிப் படர்வதைப் போல, துயரத்தின்போது கண்ணின் மேல் கண்ணீர் தோன்றிப் பரவுவதாக இப்பாடல் கூறுகிறது. மிக அழகான உவமைதான் இல்லையா?.

நிறமற்றது பசலை:

பசலை என்பது கண்ணீரையே குறிக்கும் என்று முன்னர் பல பாடல்களின் மூலமாகக் கண்டோம். இக் கண்ணீர் நிறமற்றது என்று நம் அனைவருக்கும் தெரியும். இதைக் கீழ்க்காணும் கம்பராமயாணப் பாடலும் உறுதிசெய்கின்றது.

இல் நிற பசலை உற்று இருந்த மாதரின் - கிட்:10 116/2

இதனை, நிறம் இல் பசலை என்று மாற்றிப் பொருள்கொள்ள வேண்டும். அதன்படி இதன் பொருளானது, ‘ நிறம் அற்ற கண்ணீரைக் கொண்டிருந்த பெண்களின்.....’

கண்ணீருக்கு வண்ணம் இல்லை என்றால், கீழ்க்காணும் பாடல்களில் பொன் போன்ற பசலை, பீர் மலர் போன்ற பசலை, கொன்றைப் பூ போன்ற பசலை என்ற உவமைகள் கையாளப்பட்டுள்ளனவே, இது ஏன்? என்ற கேள்வி எழலாம். இக் கேள்விக்கான விடையினைக் கீழே காணலாம்.

கொன்றை பூவின் பசந்த உண்கண் - ஐங் 500/1
பொன் என பசந்த கண் போது எழில் நலம் செல - கலி 77/12
பீர் அலர் போல பெரிய பசந்தன - கலி 143/49,50
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே - நற் 197/2
பொன் நேர் பசலை பாவின்று-மன்னே - அகம் 172/18
பொன் ஏர் பசலை ஊர்தர பொறி வரி - அகம் 229/13
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புற பசலை மூழ்கி - சிந்தா:1 371/2
பொன் ஊறி அன்ன பசப்பு - முத்தொள் 3/4

பொதுவாக, பெண்கள் தம் கண்களைப் பல வண்ணங்களால் மை பூசி அலங்காரம் செய்திருப்பர் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவ் வண்ணங்களில் அதிகம் பயன்படுத்தப் படுவது மஞ்சள் நிறம் என்பதே உண்மை. இதைப் பற்றி ஏராளமான பாடல்கள் உள்ளன. இம் மஞ்சள் நிறத்தினை தங்கத்துடனும், பீர்க்கங்கொடியின் மஞ்சள் பூவுடனும், கொன்றை மரத்தின் மஞ்சள்நிறப் பூவுடனும் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இப்படிப் பொன்நிறம் பூசப்பட்ட கண்களில் அரும்பும் கண்ணீரானது, தனக்கென ஓர் நிறமும் இன்மையால், தன்னைச் சுற்றியுள்ள மஞ்சள் வண்ணத்தினை தனக்குள் பிரதிபலித்து தன்னையும் அதே வண்ணத்தில் காட்டும். வெளியில் இருந்து காண்போருக்கு, பொன் நிறத்தில் கண்ணீர் பூப்பதாகத் தோன்றும். இதைத்தான் கொன்றைப் பூவுடனும், பீர்க்க மலருடனும், பொன்னுடனும் ஒப்பிட்டு மேற்காணும் பாடல்களில் பாடியுளளனர்.

பசலையால் நிறம் மாறும் கண்:

பசலைக்கு நிறம் இல்லை என்று மேலே கண்டோம். ஆனால் தொடர்ச்சியான பசலையால் அதாவது தொடர்ந்து அழுவதால் கண்களுக்கு என்னாகும்?. கண்கள் சிவப்படையும். இதைக் கீழ்க்காணும் பாடல்வரி உணர்த்துகின்றது.

பசந்தனள் பெரிதெனச் சிவந்த கண்ணை - ஐங்கு.பா.எண்: 366
( பொருள்: அழுது அழுது பெரிதாய்ச் சிவந்த கண்ணினை....)

பசப்பு / பசலையின் இரண்டாம்நிலைப் பொருட்கள்:

தொடர்ந்து கண்ணைக் கசக்கி அழுவதால் கண்ணின் நிறம் மாறுவது மட்டுமின்றி கண்ணின் ஒளியானது குன்றி ஒரு வாட்டம் தோன்றும். இதிலிருந்து ஒளி குறைதல், வாடுதல், நிறம் மாறுதல் போன்ற இரண்டாம்நிலைப் பொருட்கள் தோன்றின. இனி, பசலை, பசப்பு ஆகிய சொற்கள் குறிப்பதான இரண்டாம் நிலைப் பொருட்களைச் சில சான்றுகளுடன் காணலாம்.

அளியவோ அளிய தாமே ஒளி பசந்துஐங். 455/3,4 – ஒளி குறைதல் என்னும் பொருளில்
சிறு தாம்பு தொடுத்த பசலை கன்றின்முல். 12 – வாடுதல் என்ற பொருளில்
பசலை நிலவின் பனி படு விடியல்புறம். 392/3 – ஒளி குறைதல் என்ற பொருளில்
அந்தி என்னும் பசலை மெய்யாட்டிமணி. 5/140 – ஒளி குறைதல் என்னும் பொருளில்
பரந்து மீன் அரும்பிய பசலை வானகம்கம்பரா.அயோ:5 6/1 – ஒளி குறைதல் என்னும் பொருளில்

பசப்புதலும் ஏமாற்றுதலும்:

இதுவரை கண்டவற்றில் இருந்து, பசப்பு என்பது துயரத்தால் கண் கலங்கி அழுவதைக் குறிக்கும் என்று அறிந்தோம். இப் பொருளில் இருந்துஏமாற்றுதல்என்ற புதிய பொருள் எவ்வாறு பிறந்தது என்று இங்கே காணலாம். நீர்நில வாழ்வனவற்றில் முதலைகள் ஆற்றல் மிக்கவை. இவை பிற உயிரினங்களை வேட்டையாடும் போது சில தந்திரங்களைச் செய்யுமாம். குழந்தை அழுவதுபோல ஓசை எழுப்புவதும், வாயைத் திறந்துவைத்துக்கொண்டு கண்ணீர் விடுவதும் அத் தந்திரங்களில் அடங்கும். இதை உண்மை என்று எண்ணி யாரேனும் அருகில் சென்றால் அவர்கள் கதை முடிந்துவிடும். இப்படித்தான் முதன்முதலில் துயரத்துடன் கூடிய அழுகையினையே குறித்துவந்த பசப்பு என்னும் சொல் நாளடைவில் முதலைகளால், துயரமற்ற ஒரு பொய்யான அழுகையினையும் ஏமாற்றுதலையும் குறிக்கப் பயன்படலாயிற்று.   

முடிவுரை:

பசப்பு, பசலை, பசத்தல், பயலை, பயப்பு ஆகிய சொற்கள் பயன்படுவதான பல பாடல்களை மேலே கண்டோம். இவற்றில் பசலை என்னும் சொல்லானது பயலை என்றும் பசப்பு என்பது பயப்பு என்றும் மிகச்சில இடங்களில் மட்டுமே வரும். மேலும், தமிழில் 'அழுகை, கண்ணீர்ஆகிய பொருட்களில் பயன்பட்டு வந்த பசப்பு என்ற சொல் கன்னடத்தில் 'வடிதல்' என்ற பொதுப்பொருளில் பயன்படுத்தப் படுகிறது. கண்ணில் இருந்து நீர் வடிதலை ' கண்ணீரு பசத்தே' என்று கூறுவர். சோறு சமைத்த பின்னர் அதிலிருந்து வடித்த நீரை 'பசகஞ்சி' (வடித்த கஞ்சி) என்று சொல்கின்றனர். இப்படி வடித்த நீர் கெட்டியானதும் ஒட்டும் தன்மை பெற்றுவிடும். இதுவே பின்னாளில் 'பசை' என்றானது.