வேர்ச்சொல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வேர்ச்சொல் ஆய்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

தமிழ் எண்களின் பெயர்ச் சொற்பிறப்பியல்

தமிழ் எண்களின் பெயர்ச் சொற்பிறப்பியல்

முன்னுரை:

தமிழர்கள் பழங்காலம் தொட்டே நிறுத்தல் அளவை, நீட்டல் அளவை, முகத்தல் அளவை போன்ற பலவகை அளவைகளில் எண்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த எண்கள் பலவகைகளாக இருந்தாலும், நம் வசதிக்கேற்ப அவற்றை ஒன்றுக்கு மேற்பட்டவை என்றும் ஒன்றுக்குக் கீழ்ப்பட்டவை என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்டும் எண்ணற்ற எண்கள் இருப்பதால் ஒன்றாதிபதி (ஒன்று முதல் பத்து வரையிலானவை) எண்கள் மற்றும் நூறு, ஆயிரம், இலக்கம், கோடி என்ற எண்களுக்குமான தமிழ்ப் பெயர்கள் மட்டும் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பதை இக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்று:

ஒன்னுதல் என்றால் பொருந்துதல், தொடுதல் என்று பொருளுண்டு. ஒரு செயலைத் துவக்க வேண்டுமென்றால் முதலில் அதற்கான பொருளைத் தொட வேண்டும். இதனால் தான் துவக்கத்திற்குத் தொடக்கம் (தொடு + ஆக்கம்) என்ற பெயரும் உண்டானது. எண்களின் தொடக்கமாக இந்த எண் விளங்குவதால் இந்த எண்ணிற்கு ஒன்று என்ற பெயர் ஏற்பட்டது. ஒன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

ஒன் (=பொருந்து, தொடு) + உ =  ஒன்னு >>> ஒன்று = தொடக்கம்.

பி.கு: ஒன்று என்னும் தமிழ்ச் சொல்லே ஒந்து என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இரண்டு:

ஈர்தல் என்றால் கீறுதல், பிளத்தல் என்ற பொருளுண்டு. ஒருபொருளை ஒருமுறை கீறும்போது / பிளக்கும்போது கிடைப்பது இரண்டு பாகங்கள் என்பதால் ஈர்தல் வினையே  இந்த எண்ணிற்கு அடிப்படையானது. இரண்டு என்ற எண்ணின் பெயர்த் தோற்றத்தினைக் கீழே காணலாம்.

ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது.

பி.கு: இரண்டு என்ற தமிழ்ச்சொல்லே ரெண்டு என்று தெலுங்கிலும் எரடு என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

மூன்று:

பழந்தமிழர்கள் தமது வாழ்வில் இயற்கையுடன் இணைந்து அதனை உற்றுநோக்கி வாழ்ந்தனர் என்பதும் அந்த அடிப்படையிலேயே பல சொற்களின் பெயர்களை அமைத்தனர் என்பதும் மறுக்க இயலாத உண்மை ஆகும். அவ்வாறு இயற்கை நியதியை உற்று நோக்கித் தமிழர்கள் அமைத்த பல எண்ணுப் பெயர்களில் ஒன்றுதான் மூன்று என்பதாகும். இயற்கையை உற்றுநோக்கிய தமிழர்கள் அதன் நியதியில் பெரும்பாலும் மூன்று வகைகளே இருப்பதை அறிந்தனர். அவற்றில் சில சான்றுகளை மட்டும் கீழே காணலாம்.

வாழ்க்கை வகை         : பிறப்பு – வாழ்வு – இறப்பு

இருப்பிட வகை          : மேல் – இடை – கீழ்

இயல்பொருள் வகை      : திடம் – திரவம் – வாயு

பாலின வகை            : ஆண் – அலி – பெண்

வரிசை வகை           : முதல் – இடை – கடை

பொழுது வகை           : காலை – மதியம் – இரவு

இயற்கையின் நியதியில் இத்தகைய மூன்று வகைகளே பெரும்பான்மையாக அறியப்பட்டதால், இயற்கை நியதியைக் குறிக்கும் “முறை” என்ற சொல்லில் இருந்தே இந்த எண்ணுக்கான பெயரை அமைத்தனர். மூன்று என்ற பெயரின் தோற்றத்தைக் கீழே காணலாம்.

முறை (=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின் எண்ணிக்கை.

பி.கு: மூறு என்ற தமிழ்ச்சொல்லே தெலுங்கில் மூடு என்றும் கன்னடத்தில் மூறு என்றும் இன்றளவும் வழங்கி வருகிறது.

நான்கு:

ஏனை உயிர்களின் வாழ்வைக் காட்டிலும் மனித உயிர்களின் வாழ்வு மகத்தானது என்று அறிவோம். இதைப் பற்றிப் புலவர்கள் பலர் தமது பாடல்களில் பாடியும் உள்ளனர். இந்த மனித வாழ்வின் மகத்துவத்திற்கான காரணம், மனிதர்களால் மட்டுமே நாற்பொருள் என்று அழைக்கப்படும் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு நன்மைகளை அடைய முடியும் என்பதே. மனிதர்கள் தமது வாழ்வில் இந்த நான்கு நற்பொருட்களை அடையும் முறைகளைப் பற்றியே தமிழ் இலக்கியங்கள் பலவும் விரிவாகக் கூறியுள்ளன. இனி, நான்கு என்ற எண் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

நன்மை + கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

நான்கு என்ற எண் பெயரானது நால்கு என்றும் இலக்கியங்களில் வழங்கப் பட்டுள்ளது. எனவே நால்கு என்ற பெயர் தோன்றிய முறையினையும் கீழே காணலாம்.

நல் (=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

பி.கு: நால்கு என்ற தமிழ்ச்சொல்லே நாலகு என்று தெலுங்கிலும் கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஐந்து:

மனிதருடைய கையில் இயற்கையாக ஐந்து விரல்கள் தான் இருக்கும். அவ்வாறு இந்த கையை அடிப்படையாகக் கொண்டு தோன்றியதே ஐந்து என்னும் எண் பெயராகும். இப் பெயரின் தோற்றம் கீழே:

அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ்  >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது.

பி.கு: ஐந்து என்னும் தமிழ்ப் பெயரே ஐது என்று கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஆறு:

கை விரல்களைக் கொண்டு ஐந்து என்ற எண்ணின் பெயரை அமைத்ததைப் போல, கால் விரல்களைக் கொண்டு ஆறாம் எண்ணிற்கான பெயரை அமைத்தனர். தேனீ, வண்டு முதலான பெரும்பாலான பூச்சிகளில் கால்களின் எண்ணிக்கை ஆறாக அமைந்துள்ளது. இந்த அடிப்படையில், தேனீ / வண்டைக் குறிக்கும் பெயரை அடிப்படையாகக் கொண்டே இந்த எண்ணிற்கான பெயரைக் கீழ்க்காணுமாறு சூட்டினர்.

அரி (=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ்  >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை.

பி.கு: ஆறு என்னும் தமிழ்ச் சொல்லானது அப்படியே கன்னடத்திலும் தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

ஏழு:

இயற்கையில் தோன்றும் வண்ணங்களை எண்ணத் தொடங்கினால் அது கணக்கில் அடங்காது என்று அறிவோம். ஆனால் வானவில்லில் தோன்றும் வண்ணங்களின் எண்ணிக்கையோ ஏழாகவே எப்போதும் அமைந்து விடுகிறது. இந்த அடிப்படையில் அமைக்கப்பட்ட பெயரே ஏழு ஆகும். ஏழு எனும் எண்ணுப் பெயர் தோன்றிய விதத்தைக் கீழே காணலாம்.

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை.

பி.கு: ஏழு என்ற தமிழ்ச் சொல்லே ஏழு என்று கன்னடத்திலும் ஏடு என்று தெலுங்கிலும் வழங்கப்பட்டு வருகிறது.

எட்டு:

தமிழில் ஆறு என்றால் வழி, பக்கம் என்ற பொருட்களும் உண்டு. பக்கம், வழி என்பதற்கு மாற்றாகத் திசை என்று கூறுவதும் உண்டு. திசைகள் என்று எடுத்துக் கொண்டால் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு என்ற எட்டு மட்டுமே மக்களால் பயன் கொள்ளப் படுபவை ஆகும். இனி, எட்டு என்ற எண் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன் கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை.

பி.கு: எட்டு என்ற தமிழ்ச் சொல்லே எண்ட்டு என்று கன்னடத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

ஒன்பது:

பத்தைக் காட்டிலும் குறைவானது என்ற பொருளில் உருவானதே ஒன்பது என்ற எண்ணின் பெயராகும். இப் பெயர் உருவான முறையைக் கீழே காணலாம்.

உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை

பத்து:

இதுவரையிலும் கண்ட எண்ணுப் பெயர்கள் யாவும் ஒரு தனிப்பொருள் அல்லது தனிவினை சார்ந்ததாக அமைந்திருப்பதை அறிந்தோம். இனி, பத்து முதல் கோடி வரையிலான எண்ணுப் பெயர்கள் யாவும் தனிப்பொருள் / தனிவினை குறித்து அமையாமல் கூட்டப் பொருளில் அமைவதை அறியலாம். முதலில், பத்து என்ற எண்ணின் பெயர் தோன்றும் முறையைக் காணலாம்.

பற்று (=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை

பி.கு: பத்து என்னும் தமிழ்ச்சொல்லே பதி என்று தெலுங்கிலும் அத்து என்று கன்னடத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.

நூறு:

பத்து என்பது கூட்டப் பொருளில் அமைந்திருப்பதைப் போல நூறு என்பதும் கூட்டப் பொருளில் அமைந்த எண்ணுப் பெயரே ஆகும். நூறு என்னும் எண்ணுப் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

நிரை (=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை

ஆயிரம்:

பத்து, நூறு ஆகிய எண்களைப் போலவே ஆயிரம் என்ற எண்ணுப் பெயரும் கூட்டப் பொருளில் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெருங்கூட்டம் என்பதன் அடிப்படையில் அமைந்திருப்பதைக் கீழே காணலாம்.

ஆயம் (=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை. 

இலக்கம்:

இலக்கம் என்ற தமிழ்ச்சொல்லே இலட்சம் என்று மருவி வழங்கப் படுகிறது. இலக்கம் என்ற எண்ணுப் பெயர் தோன்றிய முறையைக் கீழே காணலாம்.

ஏல் (=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப் பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

கோடி:

கூட்டப் பொருளில் அமைந்த இறுதியான எண்ணுப் பெயரே கோடி ஆகும். கோடி என்னும் எண்ணுப் பெயர் தோன்றும் முறையினைக் கீழே காணலாம்.

கோடு (=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின் எண்ணிக்கை.

எண்ணுப் பெயர் அட்டவணை:

இதுவரை கண்ட தமிழ் எண்ணுப் பெயர்களின் சொல்லாக்க முறையினைக் கீழே அட்டவணை வடிவில் காணலாம்.

 

எண்ணுப் பெயர்

எண்

உரு

தோன்றும் முறை

ஒன்று

1

ஒன் (=பொருந்து, தொடு) + உ =  ஒன்னு >>> ஒன்று = தொடக்கம்.

இரண்டு

2

ஈர் (=கீறு, பிள) + அண்டு (=அடை) = இரண்டு = பிளப்பதால் அடைவது

மூன்று

3

முறை (=இயற்கை நியதி, தடவை, எண்ணிக்கை) + உ = மூறு >>> மூன்று = இயற்கை நியதிகளின் எண்ணிக்கை.

நான்கு

4

(1) நன்மை + கூழ் (=பொருள், எண்ணு) = நான்கூழ் >>> நான்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை. (2) நல் (=நன்மை) + கூழ் (=பொருள், எண்ணு) = நால்கூழ் >>> நால்கு = நன்மைப் பொருட்களின் எண்ணிக்கை.

ஐந்து

5

அத்தம் (=கை) + ஊழ் (=எண்ணு) = அத்தூழ்  >>> ஐந்து = கையில் எண்ணப்படுவது

ஆறு

6

அரி (=தேனீ, கால்) + ஊழ் (=எண்ணு) = ஆரூழ்  >>> ஆறு = தேனீயின் கால்களின் எண்ணிக்கை.

ஏழு

7

ஏ (=மேல்நோக்குகை, அடுக்கு, வில்) + ஊழ் (=ஒளி, எண்ணு) + உ = எயூழு >>> ஏழு = மேல்நோக்கப்படும் ஒளிவில்லில் உள்ள அடுக்குகளின் எண்ணிக்கை

எட்டு

8

ஆறு (=பயன், பக்கம், திசை) + ஊழ் (=எண்ணு, முற்று) = அற்றூழ் >>> எட்டு = பயன் கொள்ளும் திசைகளின் முற்றிய எண்ணிக்கை

ஒன்பது

9

உண் (=குறை) + பத்து = உண்பத்து >>> ஒன்பது = பத்தின் குறை

பத்து

10

பற்று (=குலை, கூட்டம், எண்ணு) >>> பத்து = கூட்டத்தின் எண்ணிக்கை

நூறு

100

நிரை (=கூட்டம்) + ஊழ் (=எண்ணு) = நீரூழ் >>> நூறு = கூட்டத்தின் எண்ணிக்கை

ஆயிரம்

1000

ஆயம் (=கூட்டம், எண்ணம்) + இருமை (=பெருமை) + அம் = ஆயிரம் = பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

இலக்கம்

100000

ஏல் (=மிகு, பெரு, எண்ணு) + ஆக்கம் (=கூட்டம்) = எலாக்கம் >>> இலக்கம் = மிகப் பெரிய கூட்டத்தின் எண்ணிக்கை

கோடி

10000000

கோடு (=எண்ணு, குலை, கூட்டம், வரம்பு) + ஈ (=அறு) = கோடீ >>> கோடி = வரம்பற்ற கூட்டத்தின் எண்ணிக்கை

 முடிவுரை:

இதுவரையிலும் தமிழர்கள் பயன்படுத்துகின்ற பல்வேறு எண்களுக்கான பெயர்கள் தோன்றிய விதங்களை விளக்கமாகக் கண்டோம்.  இவற்றை எல்லாம் தொகுத்துப் பார்க்குமிடத்து, பழந்தமிழர்கள் எண்களுக்குப் பெயர் அமைக்கும்போது இடுகுறியாக அதாவது எதேச்சையாகச் செய்யாமல் பொருள் / வினைகளின் அடிப்படையில் காரணப் பெயர்களாகவே அமைத்துள்ளனர்  என்னும் செய்தியை அறியலாம். கோடிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பதற்கு ஆம்பல், வெள்ளம், பதுமம், சங்கம் முதலான பல எண்ணுப் பெயர்களும் உண்டு.

வியாழன், 11 டிசம்பர், 2014

அலங்கு என்பது என்ன?

முன்னுரை:

அலங்கு என்னும் வினைச்சொல்லானது அலங்குதல், அலங்கல் என்ற வடிவங்களில் இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு இக் கால இலக்கிய அகராதிகள் கூறும் பொருட்கள் பல பாடல்களில் பொருந்தாநிலை காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறு பொருள்/பொருட்கள் இருப்பதையே காட்டுகிறது. இக் கட்டுரையில் இச் சொல்லின் மூலப் பொருள் என்ன என்பதையும் அதிலிருந்து பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதையும் பல ஆதாரங்களுடன் விரிவாகக் காணலாம்.

அலங்கு - அகராதிகள் காட்டும் பொருட்கள்:

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கு-தல் alaṅku-
, 5 v. intr. [T. K. alagu, M. alaṅṅu, Tu. alaṅgu.] 1. To move, shake, swing, dangle, to be in motion; அசைதல். அலங்குளைப் புரவி (புறநா. 2). 2. To be agitated in mind, troubled; மனந்தத்தளித்தல். (W.) 3. To pity, sympathise; இரங்குதல். (பிங்.) 4. To shine, glitter, flash; ஒளிசெய்தல். (பிங்.)

பேப்ரிசியஸ் அகராதி:
அலங்கு (p. 33) [ alangku ] III. v. i. move, shake, swing, அலை; 2. shine, flash. ஒளிசெய்.

வின்சுலோ அகராதி:
 அலங்கு, (p. 40) [ alngku, ] கிறேன், அலங்கினேன், வேன், அலங்க, v. n. To shine, glitter, flash, ஒளிசெய்ய. 2. To dangle as a garland or locks of hair, move, shake, swing as branches of trees, be in motion as waves, அசைய. 3. To be agitated in mind, be troubled, be in grief, தத்தளிக்க. 4. To pity, sympathize, yearn, grieve, be distressed, இரங்க. (p.)

மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால், அலங்கு எனும் வினைச்சொல்லுக்கு அசைதல், ஒளிசெய்தல், இரங்குதல், தத்தளித்தல் என்ற பொருட்களே கூறப்பட்டுள்ளதை அறியலாம்.

அலங்கு - சொல் பயிலும் இடங்கள்:

அலங்கு என்னும் வினைச்சொல் பயிலும் பாடல்கள் சிலவற்றை இங்கே காணலாம்.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த - பெரும் 83
முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினை பலவே - மலை 144
அலங்கு கழை நரலும் ஆரி படுகர் - மலை 161
அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலிய - நற் 118/1
அகல் இலை காந்தள் அலங்கு குலை பாய்ந்து - நற் 185/8
அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்து - நற் 243/3
நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த - நற் 292/1
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4
சிலம்பு உடன் கமழும் அலங்கு குலை காந்தள் - குறு 239/3
அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை - குறு 296/2
அலங்கு வெயில் பொதிந்த தாமரை - குறு 376/5
அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் - ஐங் 8/4
அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை - ஐங் 185/1
அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம் - பதி 58/18
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை - அகம் 1/15
அலங்கு கழை நரல தாக்கி விலங்கு எழுந்து - அகம் 47/4
அரிஞர் யாத்த அலங்கு தலை பெரும் சூடு - அகம் 84/12
பல் துடுப்பு எடுத்த அலங்கு குலை காந்தள் - அகம் 108/15
அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை - அகம் 169/2
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக - அகம் 178/10
அலங்கு கதிர் திகிரி ஆழி போழ - அகம் 224/14
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை - அகம் 241/11
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17
அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய - அகம் 304/10
அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் - அகம் 381/5
அலங்கு உளை புரவி ஐவரோடு சினைஇ - புறம் 2/13
நீயே அலங்கு உளை பரீஇ இவுளி - புறம் 4/13
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த - புறம் 22/14
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/21
அலங்கு கதிர் கனலி நால்_வயின் தோன்றினும் - புறம் 35/6
அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி - புறம் 375/1
அலங்கு உளை அணி இவுளி - புறம் 382/4
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் - புறம் 325/11
அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என - பதி 64/10
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

(நன்றி. திரு. பாண்டியராஜா ஐயா, சங்கம்கன்கார்டன்ஸ். இன்)

அகராதிப் பொருள் பொருந்தா இடங்கள்:
இனி மேற்காணும் பாடல்களில் தற்போதைய அகராதிகள் கூறும் பொருட்கள் பொருந்தா இடங்களைக் காணலாம்.

மேலே கண்ட பாடல்களில், அலங்கு எனும் வினைச்சொல்லானது

சினை என்னும் பெயருடன் 14 இடங்களிலும்

கழை என்னும் பெயருடன் 2 இடங்களிலும் பயின்று வந்துள்ளது.

இதில் சினை என்பதற்கு மரக்கிளை என்ற பொருளில் அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்றும்

கழை என்பதற்கு மூங்கில் என்ற பொருளில் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்றும் உரை இயற்றியுள்ளனர். இவை இங்கு பொருந்துமா எனில் பொருந்தாது. காரணம்,

சாதாரணமாக சிறுகாற்று வீசும்போது மரத்தில் உள்ள இலைகளும், பூக்களும் அசையுமேயன்றி கிளைகள் அசையாது. அதைப்போல சிறுகாற்றில் மூங்கில் இலைகள் அசையுமே ஒழிய மரம் அசையாது. மேலும் இவற்றின் அசைவினைப் பற்றி இப் பாடல்களில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய தேவை ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அலங்கு சினை என்பதற்கு அசைகின்ற மரக்கிளை என்று பொருள் கொள்வதும் அலங்கு கழை என்பதற்கு அசைகின்ற மூங்கில் என்று பொருள் கொள்வதும் பொருத்தமாகத் தோன்றவில்லை. இச் சொல்லின் மூலம் சினை மற்றும் கழையுடன் தொடர்புடைய வேறு ஏதோ ஒன்றை உணர்த்த முனைந்துள்ளனர் என்பது தான் உண்மை. அதைப் பற்றிக் கீழே காணலாம். 

அலங்கு சினையும் அலங்கு கழையும்:

அலங்கு சினை மற்றும் அலங்கு கழையில் வருகின்ற அலங்குதல் என்னும் வினை குறிக்கும் பொருள் பூத்தல் என்பதாகும். அதாவது,

அலங்கு சினை என்பது பூத்த மரக்கிளை என்றும்
அலங்கு கழை என்பது பூத்த மூங்கில் என்றும் பொருள்படும்.

பூ என்பது எப்படி பூக்கும் செயலையும் (வினைச்சொல்) பூவையும் (பெயர்ச்சொல்) குறிக்கிறதோ அதைப்போல
அலங்கு என்பதும் பூக்கும் வினை மற்றும் பூப்பொருள் ஆகிய இரண்டையும் குறிக்கப் பயன்படுகிறது.

பொதுவாக மரங்கள் ஆண்டு முழுவதும் பூத்திருப்பதில்லை. மரங்களின் பூக்கும் பருவம் பல காரணங்களால் வேறுபடுகின்றது. மரங்கள் பூத்திருக்கும் சமயம் அது பார்ப்போரின் கண்களை ஈர்த்து சிந்தையைக் கவர்கிறது. இதனால் தான் மரங்கள் பூத்திருக்கும் நிலையினை பல பாடல்களில் புலவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியுள்ளனர். மேலும் மரங்கள் பூக்கும் பருவம் சங்க காலத்தில் மிக இன்றியமையாத நிகழ்வாகக் கருதப்பட்டது. தலைவியைப் பிரிந்து செல்லும் தலைவன் இன்னின்ன மரங்கள் பூக்கும் காலத்திற்கு முன் திரும்பிவிடுவதாகக் கூறிச் செல்வதைப் பல சங்கப் பாடல்களில் காணலாம். மரங்கள் பூக்கும் நிகழ்வினைக்  குறிப்பிடப் பயன்படுத்தப்பட்ட பல சொற்களுள் ஒன்று தான் அலங்கு என்பதாகும். இதற்கான ஆதாரங்களைக் கீழே காணலாம்.

ஆதாரங்கள்:

அலங்கு என்பது பூத்தலைக் குறிக்கும் என்பதைக் கீழ்க்காணும் பாடல்கள் நேரடியாகவே உணர்த்துகின்றன.

பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - திரு 298
பூ உடை அலங்கு சினை புலம்ப தாக்கி - குறு 134/4

பூ உடை அலங்கு சினை என்று கூறுவதில் இருந்து, அலங்கு சினை என்பது பூக்களை உடைய மரக்கிளையே என்பது தெளிவாகிறது. மேலும்,,

இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
அணி அலங்கு ஆவிரை பூவோடு எருக்கின் - கலி 139/8
கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினை புது பூ - அகம் 236/7
அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூ - அகம் 245/15
மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய - அகம் 272/17

என்ற பாடல்களில் மரங்கள் பூத்திருக்கும் நிலை நேரடியாகக் கூறப்பட்டுள்ளதுடன், அலங்கு எனும் சொல்லுடன் தொடர்புபடுத்திக் கூறப்பட்டுள்ளதில் இருந்து அலங்கு என்னும் சொல் பூத்தலையே குறிப்பது தெளிவு. இவைதவிர இன்னொரு ஆதாரத்தையும் கீழே காணலாம்.

அலங்கல் என்னும் சொல்லுக்குப் பொருள் பூமாலை என்று அகராதிகள் கூறுகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:
 அலங்கல் alaṅkal , n. < அலங்கு-. 1. Wreath, garland; பூமாலை. (பிங்.) 2. Wreath for the hair; மயிர்ச்சூட்டுமாலை. (பிங்.) 3. Sprout; தளிர். (பிங்.) 4. Waving ear of corn; அசையுங் கதிர். (அகநா. 13, உரை.) 5. Regularity, arrangement, order; ஒழுங்கு. (குருபரம். ஆறா. 121.)

வின்சுலோ அகராதி:
அலங்கல், (p. 40) [ alngkl, ] s. A sprout, தளிர். 2. A garland, a wreath, பூமாலை.

இந்த அலங்கல் என்னும் சொல்லானது அலங்கு என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். அலங்கல் என்பது அலங்கினால் அதாவது பூக்களால் ஆன மாலையைக் குறிப்பதில் இருந்து அலங்கு என்பது பூ / பூத்தலைக் குறிப்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

அலங்கு குறிக்கும் பிற பொருட்கள்:

அலங்கு என்னும் சொல், அகராதிகளில் இதுவரை கூறப்படாத புதிய பொருளாக, பூ / பூத்தல் என்ற பொருளை மட்டும் குறிக்காமல் சில இடங்களில் வேறு சில புதிய  பொருட்களைக் குறித்தும் வருகிறது. அவற்றையும் ஈண்டு காண்போம்.

அலங்கு என்பது கிளைத்தல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

மரா மலர்த்தாரின் மாண் வரத் தோன்றி,
அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழிய - பரி 15/21

இதன் பொருளானது: மராமலர்களால் ஆன மாலைபோல, இரண்டாகக் கிளைக்கும் (அலங்கும்) அருவியானது பின்னர் ஓரிடத்தில் ஒன்றாகி (ஆர்த்து) பேரிரைச்சலுடன் ஒலித்து (இமிழ்பு) கீழே இறங்க (இழிய).

அலங்கு என்பது மின்னுதல் என்னும் பொருளில் கீழ்க்காணும் பாடலில் வருகின்றது.

அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி - ஐங் 220/1

மின்னிய மேகங்கள் பொழிந்ததால் அகன்ற இடத்தில் தோன்றிய அருவி என்பது இதன் பொருள்.

வேர்ச்சொல் ஆய்வு:

இனி, அலங்கு என்பது எவ்வாறு பூத்தல், கிளைத்தல், மின்னுதல் ஆகிய பொருட்களைக் குறிக்கும் என்பதை வேர்ச்சொல் ஆய்வின் மூலம் காணலாம்.

அலங்கு என்னும் வினையின் முதன்மைப் பொருளானது வெளிப்பட்டுத் தோன்றுதல் என்பதாகும். இதிலிருந்தே பிற பொருட்கள் தோன்றின. இது கீழே காட்டப்பட்டுள்ளது.

அலங்குதல் = பூத்தல் ---> கிளைகளில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில்.
அலங்குதல் = கிளைத்தல் ----> மரத்தில் இருந்து புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். 
அலங்குதல் = மின்னுதல் / ஒளிர்தல் -----> வானத்தில் புதியதாக வெளிப்பட்டுத் தோன்றுதல் என்ற பொருளில். (அலங்கல் = ஒளி. அகராதி காண்க.)

முடிவுரை:

சங்க காலத்தில் குதிரையின் தலைக்கு மேலே பூக்களால் ஆன அணியினைச் சூட்டியிருக்கிறார்கள். இதையே அலங்கு உளை என்று பாடல்கள் குறிப்பிடுகின்றன. குதிரை நடக்கும்போதோ ஓடும்போதோ இந்த அலங்கு உளை பக்கவாட்டில் அசைந்தாடும். இதில் இருந்தே அலங்கு என்னும் சொல்லுக்கு அசைதல் என்ற பொருள் பிற்பாடு தோன்றி இருக்கக் கூடும். மேலும் நாம் இக்காலத்தில் வடமொழியாகக் கருதி பயன்படுத்துகின்ற அலங்காரம் என்னும் சொல் உண்மையில் பூக்களால் ஆன மாலை அணியினையே ( அலங்கு + ஆரம் ) ஆதியில் குறித்துவந்தது. நாளடைவில் வேறு அணிகளையும் குறிக்கப் பயன்படலாயிற்று.
===================== தமிழ் வாழ்க! ===================

செவ்வாய், 18 நவம்பர், 2014

குயம் என்றால் என்ன?

முன்னுரை:

குயம் என்ற சொல்லுக்கு இன்றைய நிகண்டுகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

திவாகர நிகண்டு        குயம் = 360 - கொங்கை சொர்க்கம் குயம் தனம் நகிலம் தங்கிய குரூஉகண் அம்மம் பயோதரம் இங்கிவை மாதர் முலை என இசைப்பர்.
                     1158 - குயமும் புள்ளமும் கொடுவாளாகும்.
                     1938  அரிவையர் முலையும் கொடுவாளும் இளமையும் கருதில் இம்மூன்றும் குயமெனக் கருதுவர்
பிங்கள நிகண்டு        குயம் =  3396 - கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே
உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 இலையும் நிலனும் தலம் கொடுவாளும் குயம்
கயாதர நிகண்டு        குயம்   = 471 கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயமது என்க
பாரதி தீப நிகண்டு  குயம்    = குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலமே குரூஉக்கண் அம்மம் பயோதரம் என் முலையே
ரேவண சித்தர் அகராதி நிகண்டு    குயம்    = குயமென்பதுவே இளமையும் அரிவாள் எனவும் ஆகும் முப்பேரே
சூடாமணிநிகண்டு குயம் = 158 தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்
ஆசிரிய நிகண்டு      குயம்    = 87 பேசும் நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குரூஉகண் பெருமை பெரு கொங்கை சுவர்க்கம் பறம்பு உடன் பெருத்த குயம் முலையின் பெயர். 
வட மலை நிகண்டு  குயம்    =  குயமெனும் பெயரே இளமையும் முலையும் கொடுவாளெனவும் கூறப்படுமே
அரும்பொருள் விளக்க நிகண்டு குயம்    =378 குயம் முலை   அரிவாளின்பேர் கொழுமை சேர் இளமையுமே
பொதிகை நிகண்டு குயம்  = 790 குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும்
நாமதீப நிகண்டு குயம் = 417 அரிவாள் புள்ளம் கொடுவாள் குயம்
                           582 கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் செக்கை பறம்பு அம்மம் பயோதரம் குயம் தனம் முலை
நானார்த்த தீபிகை  குயம் 587 குயமே கொடுவாள் இளமை முலை
அபிதான மாலை  குயம் = 448  முலை அம்மம் உரோருகம் சொர்க்கம் குரூஉகண் செக்கை கொங்கை  தனம் நகிலம் பறம்பு மெய்க்கதிர் ஆமெனப் புகல்வர்
வேதகிரியார் சூடாமணி நிகண்டு குயம் 297 குயம் தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்.
(நன்றி: திரு. நு. த. லோகசுந்தரம் ஐயா அவர்கள்)

இச் சொல்லுக்கு இணையத் தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:  குயம்¹ kuyam n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500). 3. Potter caste; குயச்சாதி., n. prob. 4. குழ. Juvenility, youth; இளமை. (திவா.), 5. < kuca. Woman's breast; முலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190), 6. n. < kuša. Darbha grass. See தருப்பை.

பேப்ரிசியஸ் அகராதி: குயம் (p. 266) [ kuyam ] , s. juvenility, இளமை; 2. a sickle, அரிவாள்; 3. the potter caste. குயவன், (fem. குயத்தி) see குசவன் under குசம்., (p. 266) [ kuyam ] {*}, s. breast, முலை; 2. sacrificial grass, தருப்பை.

வின்சுலோ அகராதி: குயம், (p. 328) [ *kuyam, ] s. Female breast, முலை. Wils. p. 225. KUCHA. 2. Juvenility, youthful ness, இளமை. (Compare கயம்.) 3. A sickle, a reaping hook, a curved knife; wrought iron, கொடுவாள். 4. Sacrificial grass, தருப்பை Wils. p. 235. KUS'A.

மேலே கூறியவற்றைத் தொகுத்துக் காணுமிடத்து, குயம் என்பதற்கு கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாகத் தெரிகிறது.

குயம் = அரிவாள், முலை, இளமை, தருப்பைப்புல், நிலம், இலை, ஒருவகை சாதி.

இப் பொருட்களைப் பார்த்தால், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக இருப்பதை அறியலாம். ஆனாலும், இப் பொருட்களுக்கிடையே ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்பதைப் பற்றியும் இப் பொருட்கள் எதிலிருந்து எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

குயம் - ஆணிவேரும் சல்லிவேர்களும்:

முதலில் குயம் என்ற சொல்லின் வேர்மூலம் அதாவது ஆணிவேர் என்ன என்று காணலாம்.

குயம் என்ற சொல்லில் இருந்து அம் என்ற விகுதியைக் களைந்தால் மிஞ்சுகின்ற குய் என்பதே இதன் மூல வேர்ச்சொல்லாகும். 

குய் என்ற வேர் குறிக்கும் முதன்மைப் பொருள் குழைதல் என்பதாகும். இறுகிய (அ) உறைந்த நிலையில் இருந்து ஒரு பொருள் இளகிய நிலையினை எய்துவதே குழைதல் என்று பொதுவாகக் குறிக்கப் பெறுகிறது.

குழைவான நிலையில் இருக்கும் பொருட்களுக்கு வளைந்து கொடுக்கும் பண்பும் மென்மைத் தன்மையும் உண்டு. ஆக,

குழைதல் என்ற முதன்மைப் பொருளில் இருந்து வளைதல் மற்றும் மென்மையாதல் ஆகிய இரண்டு விரிவாக்கப் பொருட்கள் பெறப்படுகின்றன. இனி,

குழைதல் பொருளைக் குறிக்க யகரத்தைக் கொண்டால், வளைதலைக் குறிக்க யகரத்தின் இன எழுத்தான சகரத்தையும், மென்மையாதலைக் குறிக்க இன்னொரு இன எழுத்தான ஞகரத்தையும் கொள்ளமுடியும். ஆனால், இப்படியானதோர் பகுப்புமுறையினை நடைமுறைப் படுத்தும்போது சிக்கல்கள் இருந்ததால், ய, ச, ஞ என்ற மூன்று எழுத்துக்களும் குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய பொருட்களில் எதைக் குறிக்க வேண்டுமானாலும் பயன்படுத்தப் பட்டன. அவ்வகையில்,

குய் என்ற ஆணிவேரில் இருந்து,

குச், குஞ் என்ற இரண்டு சல்லிவேர்கள் தோன்றின எனலாம்.


சொல் - பொருள் தொடர்பு:

இனி, குயம் என்ற சொல் குறிக்கும் மேலே கண்ட பல்வேறு பொருட்களுக்கிடையிலான தொடர்பு என்ன என்று காணலாம்.

குயம் = முலை - இது குழையும் பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = அரிவாள் / கொடுவாள் - இது வளைந்த பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = மட்பாண்டம் செய்யும் ஒருவகை சாதியினர். மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்வதால் இவர்கள் குயவர் எனப்பட்டனர். 
குயம் = தருப்பைப்புல் - இது நீண்டு வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராகும்.
குயம் = நிலம் - இது குழைக்கப்பட்ட மண் என்ற பொருளில் ஆகுபெயராய் நிலத்தையும் குறித்தது.
குயம் = இளமை - இது குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய மூன்று பண்புகளையும் உடைய பெயராகும்.
குயம் = இலை - இதுவும் புல்லைப் போலவே வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராம்.

விரிவாக்கப் பொருட்கள்:

குயம் என்ற சொல்லுக்கு எவ்வாறு இத்தனைப் பொருட்கள் தோன்றின என்பதை மேலே கண்டோம். இனி, இப் பொருட்களைத் தவிர, வேறு சில பொருட்கள் எவ்வாறு இந்த மூலவேர் மற்றும் சல்லிவேர்களில் இருந்து தோன்றின என்பதையும் இங்கே காணலாம்.

குய் = நெய் / எண்ணை - இது குழையும் பண்பினால் பிறந்த பெயர்.
குய்ப்புகை = நெய் / எண்ணையால் தாளிக்கும் புகை.
குயக்குண்டு = குயவர் மண்ணெடுத்த குழி.

குச்சு / குச்சம் = நாணல் புல்.
குச்சி = புல்லின் தண்டுப் பகுதி, இலைகள் தொங்குகின்ற மெலிந்த மரக்கிளை.
குச்சில் = புல்லால் வேய்ந்த வீடு.
குசம் = முலை.
குசமசக்கு = குழப்பம்.

குசினி = சமையல் அறை. சமைத்தல் என்பது அரிசி / பிற பொருட்களை குழையச்செய்யும் வினையே என்பதால், குசினி என்ற இந்த தமிழ்ச்சொல்லில் இருந்தே சமையலைக் குறிக்கும் cuisine என்ற சொல் பிறந்தது என்றால் மிகையாகாது.
குசினிக்காரன் = சமையல்காரன்.

குஞ்சம் = புல்லின் நுனியில் வளைந்து தொங்கும் நீண்ட மென்மையான பூ, மென்மையான பூங்கொத்து, மென்மையான துணி.
குஞ்சி = ஆண்குறி - வளைந்து தொங்குவது என்ற பொருளில்.
குஞ்சியப்பன் = சித்தப்பன் - அப்பாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சியாயி / குஞ்சியாய்ச்சி = சித்தி - அம்மாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சு = பறவைகளின் இளமைப் பெயர்.
குஞ்சிதம் = வளைந்தது.
குஞ்சரம் = துதிக்கை. நீண்டு வளைந்து தொங்கும் கை யானையின் சிறப்பாதலால், ஆகுபெயராய் யானைக்கு வழங்கியது.

குயம் மண்டு ஆகம் :

அகநானூற்றில் 48 ஆம் பாடலில் குயம் மண்டு ஆகம் என்ற சொல்லாட்சி வருகிறது. இதற்கு எப்படி பொருள் கொள்வது என்பதைப் பற்றி இங்கே காணலாம். அப் பாடலின் குறிப்பிட்ட வரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
.........................................................................................
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
..............................................................................
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.

மேற்காணும் பாடலில் குயம் என்பதற்கு முலை என்றோ அகராதிகள் குறிப்பிடும் ஏனைய பொருட்களையோ கொண்டால் பொருள் பொருந்தாததுடன், நகைப்புக்குரியதாகவும் ஆகிவிடும் என்பதால், இச் சொல்லுக்கு இங்கே புதிய பொருள் ஒன்று இருப்பது உறுதியாகிறது. அப் புதிய பொருள் என்ன என்று காணும் முன்னர் அத் தொடரின் உண்மையான வடிவத்தை நாம் அறிய வேண்டும். ஒலைச் சுவடிகளில் செய்யுள் எழுதும்போது சொற்களைத் தனித்தனியாக எழுதாமல் சேர்த்தே எழுதுவர். சான்றாக,

குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி என்பதற்குப் பதிலாக,
குயம் மண்டாகச் செஞ்சாந்து நீவி என்றே எழுதுவர்.

இதைச் சொற்களாகப் பிரித்து எழுதும்போதுதான் தவறு நேர்கிறது. அப்படியானதோர் தவறினால் தான் இத் தொடருக்குத் தவறான பொருளும் கொள்ள ஏதுவாகிவிட்டது. இனி இதைச் சரியாகப் பிரித்தோமென்றால்,

குயம் மண்டு ஆக செஞ்சாந்து நீவி என்று வரும்.

இதில் வரும் குயம் என்பதற்கான புதிய பொருள் எண்ணை / நெய் என்பதாகும். இதை நாம் முன்னரே குய்ப்புகையில் கண்டோம்.

மண்டு என்பதற்கு மிகுதி என்று பொருள். எனவே மண்டாக என்பது மிகுதியாக என்ற பொருளைத் தரும். இனி, இத் தொடரின் சரியான பொருள் இதுதான்:

நெய்ப்பு மிகுதியாக செஞ்சாந்தினைப் பூசி வரிகள் எழுதப்பட்ட வில்லினை உடையவன்.
அந்த ஆடவன் அணிந்திருந்த மாலை மற்றும் கண்ணியினைப் பற்றிச் சொன்னவள்,  அவன் கையில் பிடித்திருந்த வில்லினைப் பற்றிக் கூறுமிடத்து, அந்த வில்லானது நெய்ப்பு மிகுதியால் பளபளப்பாக இருந்ததுடன், அதில் சிகப்பு வண்ண வரிகள் எழுதப்பட்டு அழகுடன் இருந்ததாகக் கூறுகிறாள். பொதுவாக வில்லைப் பராமரிப்பதற்கு அதில் எண்ணை பூசுவது வழக்கம். இது சங்க காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.

முடிவுரை:

மேலே கண்டவற்றில் இருந்து இதுவரை பிற மொழியாகக் கருதப்பட்டு வந்த குசினி, குஞ்சரம், குஞ்சித, குசம், குயம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே என்பதை அறியலாம். இதேபோல விரிவான சொல் ஆய்வுகள் செய்வதன் மூலம் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று இன்றைய நிலையில் பிறமொழிச் சொல்லாகவே அறியப்படும் பல சொற்களை தக்க ஆதாரங்களுடன் மீட்டெடுக்க முடியும்.
================= தமிழ் வாழ்க!====================