பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பண்பாடு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 ஜூன், 2022

தமிழரின் பாரம்பரிய உடை "வேட்டி" அல்ல !!!


தமிழரின் பாரம்பரிய உடை 

“வேட்டி” அல்ல !!!

 

முன்னுரை:

சமீப காலமாக தமிழரின் பாரம்பரிய உடை வேட்டி தான் என்று நிறுவுவதற்கு சங்க இலக்கியங்களில் இருந்து தொடர்பில்லாமல் எதை எதையோ சான்றாகக் காட்டி இணையங்களில் பலர் கட்டுரை எழுதி வருகின்றனர். போதாக்குறைக்கு “கட்டிக்கோ ஒட்டிக்கோ” போன்ற விளம்பரங்களுடன் வேட்டிகளின் விற்பனையைப் பெருக்குவதற்கான முயற்சிகளும் மிகுந்து வருகின்றன. தமிழகத்தில் உள்ள அரசியல்வாதிகளோ வெள்ளை வேட்டியைக் கட்டிக்கொண்டு “அதுதான் தமிழரின் பாரம்பரிய உடை” என்பதைப் போல பொதுக்கூட்டங்களில் பேசியும் வருகின்றனர். ஆனால் இவர்கள் எல்லோரும் இந்தக் கட்டுரையைப் படித்து முடிக்கும்போது தங்களது கருத்து முற்றிலும் தவறானது என்பதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆம், தமிழர்களது பாரம்பரிய உடை வேட்டியே அல்ல. இதைப் பற்றி விளக்கமாக இக் கட்டுரையில் காணலாம். 

வேட்டி – சொல்லும் ஆக்கமும்: 

வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே இல்லை என்றும் வேச்~டி என்னும் சமக்கிருதச் சொல்லில் இருந்தே அது தோன்றியது என்றும் விவாதம் உண்டு. உண்மையில் வேட்டி என்ற சொல் தமிழ்ச்சொல்லே ஆகும். வேடு என்ற சொல்லின் அடிப்படையில் உருவானதே வேட்டி என்பதாகும். 

வேடு என்ற தமிழ்ச்சொல்லுக்குப் பாத்திரத்தின் வாயைச் சுற்றிக் கட்டும் ஆடை என்ற பொருள் அகராதிகளில் உண்டு. பாத்திரத்தின் வட்டமான விளிம்பைச் சுற்றிலும் கட்டி மூடுவதற்கும் வடிகட்டுவதற்கும் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி ஆகும். அதாவது, 

வேடு + இ = வேட்டி (ஆடு + அம் = ஆட்டம் என்பதைப் போல) 

வேடுவதற்காக அதாவது சுற்றிக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட துணியே வேட்டி என்றானது. கண்கள் மற்றும் மூக்கு மட்டும் வெளியில் தெரியுமாறு தலையைச் சுற்றிக் கட்டி மறைத்துக் கொள்வதை வேடம் என்றும் அவ்வாறு செய்பவரை வேடர் என்றும் அழைத்தனர். அதாவது,

வேடு + அம் = வேடம் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தல்

வேடு + அர் = வேடர் = தலையைச் சுற்றிக் கட்டி முகத்தை மறைத்தவர் 

வேட்டி என்ற சொல் தமிழே என்றாலும் அச்சொல் தமிழ் இலக்கியங்களில் ஆளப் பெறவில்லை. இதை ஒரு காரணமாக முன்வைத்து, வேச்~டி என்ற சமக்கிருதச் சொல்லில் இருந்துதான் வேட்டி வந்தது என்று கூறுவது பொருந்தாது. காரணம், சமக்கிருதத்தில் வேச்~டி என்ற சொல்லுக்கான விளக்கம் சிறிதும் பொருத்தமற்றது. 

வேட்டியும் பயன்பாடும்: 

நீளமாக நெய்யப்பட்ட துணியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் எதுவுமே வேட்டி தான். வேட்டிக்கும் துண்டுக்கும் பெரிய வேறுபாடு எதுவும் இல்லை. சிறிய விரிப்பாக இருந்தால் துண்டு. சற்று பெரிய விரிப்பாக இருந்தால் வேட்டி. அவ்வளவுதான். பழங்காலத்தில் வேட்டி என்பது பாத்திர வாயில் கட்டி மூடுதல், வடிகட்டுதல், முகத்தை மறைத்துக் கொள்ளுதல் போன்ற வேலைகளுக்குப் பயன்பட்டதை மேலே கண்டோம். 

ஆனால் தற்காலத்தில் வேட்டியை இரண்டு விதமாகக் கட்டுகின்றனர். இடுப்பில் இருந்து பாதம் வரையிலும் முழுமையாகத் தொங்கவிட்டுக் கட்டுவது ஒருவிதம். அதையே முழங்கால் தெரியுமாறு தூக்கி மடித்துக் கட்டுவது இன்னொரு விதமாகும். முதலாம் முறைப்படி கட்டுவதை மரியாதை முறை என்றும் இரண்டாம் விதத்தினை அவமரியாதை முறை என்றும் கூறுகின்றனர். காரணம், கோவிலுக்குள் செல்லும்போதோ பெரியவர்கள் யாரும் எதிரில் வரும்போதோ அலுவலகத்தில் அமரும்போதோ இரண்டாம் முறையில் இருந்து முதலாம் முறைக்கு மாறிவிடுகின்றனர். அதாவது தூக்கிக் கட்டிய மடிப்பினை கீழே இறக்கிவிட்டு முதலாம் முறைக்கு மாறி விடுகின்றனர். அப்படிச் செய்வதுதான் மரியாதை என்று கருதப்படுவதே இதற்குக் காரணம் ஆகும். எனவேதான் இரண்டாவது முறையானது அவமரியாதை முறை என்று அழைக்கப்படுகிறது. 

ஆனால் முதலாம் முறைப்படி வேட்டியை அணிந்துகொண்டு இயல்பான பல வேலைகளைச் செய்ய இயலாது. காரணம், வேட்டியை முழுமையாகத் தொங்கவிட்டு வேகமாக நடக்கும்போது அது கால்களைத் தடுக்கும். நமது அவசர நகர்வுகளுக்கு ஒத்துழைக்காமல் தடையாக இருக்கும். குறிப்பாக, வயல்வேலைகளை வேட்டி அணிந்து செய்வது மிகுந்த சிரமமாக இருக்கும். எனவே சிலர் இரண்டாம் முறைப்படி முழங்காலுக்கு மேல் தூக்கிக் கட்டிக்கொண்டு செய்கின்றனர். ஆனால் இந்த முறையானது அவமரியாதை முறை என்பதால் வயல்வேலை தவிர பல அலுவல்களை அவ்வாறு அணிந்துகொண்டு செய்வது பல நேரங்களில் தர்ம சங்கடத்தை உருவாக்குகிறது.  

எப்படிப் பார்த்தாலும் வேட்டியை அணிந்துகொண்டு வேலை செய்வது என்பது சிரமமாகக் கருதப்படுவதால் தான் இக் காலத்தில் கிராமத்து விவசாயிகள் கூட முழுக்கால்சட்டை அணிந்துகொண்டு வயல்வேலை செய்கின்றனர். 

வேட்டி – தமிழர்களின் பாரம்பரிய உடை அல்ல: 

சங்க இலக்கியம் உட்பட பல்வேறு தமிழ் இலக்கியங்களில் தமிழரின் உடையைக் குறிப்பிடுவதற்கு எழுபதுக்கும் மேற்பட்ட சொற்களைப் பயன்படுத்தி உள்ளனர். இவற்றில் வேட்டி என்ற சொல் தமிழாகவே இருந்தாலும் சங்க இலக்கியம் உட்பட எந்த இலக்கியத்திலும் இடம்பெறவில்லை. வேட்டி என்பது தமிழரின் பாரம்பரிய உடை அல்ல என்னும் கூற்றுக்கு இதுவொன்றே போதுமான சான்று ஆகும். இருந்தாலும் மேலும் பல சான்றுகளையும் இங்கே காணலாம். 

சங்ககாலத்தில் தமிழர்கள் உடை வடிவமைப்பில் பல நுட்பங்களை அறிந்தவராக இருந்துள்ளனர் என்பதை சங்கப் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது. பாம்பின் சட்டையைப் போலவும் (புறம்: 397) புகையினைப் போலவும் (பெரும்: 469) மிக மெலிதான அதேசமயம் பார்வை உட்புகாத விதமாக உடைகளை உருவாக்கியுள்ளனர். கொடிகளைப் போன்ற வளைவுகள், பூ வேலைப்பாடுகள், ஒளிரும் வண்ணங்கள் என்று பலவற்றையும் தமது உடைகளில் உருவாக்கி இருந்தனர் என்னும் செய்திகளை சங்கப் பாடல்கள் பறை சாற்றுகின்றன. 

சங்ககாலத் தமிழர்கள் தமது உடைகளின் வடிவமைப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்ததால்தான் அவர்கள் வேட்டியை அணியவில்லை. காரணம், வேட்டி என்பது மிகமிக எளிமையான ஒரு துண்டுத் துணி ஆகும். அதை அணிந்துகொண்டு வேலைசெய்வதும் சிரமமான ஒன்று என்பதால் சங்க காலத்திலும் சரி அதற்கு அப்புறமும் சரி வேட்டியை யாரும் விரும்பி உடையாக அணியவில்லை. இருந்தாலும், வேட்டியைப் போன்ற மிக எளிமையான துண்டுத் துணிகளை உடையாக உடுத்தாமல் மேலே போர்த்துவதற்கு மட்டுமே பயன்படுத்தி இருப்பதை சங்க இலக்கியத்தில் (புறம்: 286) காண முடிகிறது. 

அதுமட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் காணப்படும் சிலைகள்  மற்றும் பிற சிற்பங்களில் கூட வேட்டியை உடுத்தியவாறான ஒரு சிற்பத்தையும் காண இயலவில்லை. இச் சான்றுகளில் இருந்து, வேட்டி என்பது தமிழர்களால் பாரம்பரியமாக உடுத்தப்பட்ட உடை அல்ல என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். 


தமிழரின் பாரம்பரிய உடை கலிங்கமே: 

தமிழர்களின் பாரம்பரிய உடை வேட்டி அல்ல என்றால் வேறு எது? என்ற கேள்வி எழுகிறது. இக் கேள்விக்கான விடை “கலிங்கம்” என்பதாகும். கலிங்கம் என்னும் சொல்லுக்கு உடை என்ற பொதுப்பொருள் மட்டுமே தமிழ் அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்களும் உண்டு. 

சங்க இலக்கியத்தில் மட்டும் 28 பாடல்களில் கலிங்கம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு உள்ளது. அந்த அனைத்துப் பாடல்களின் குறிப்பிட்ட வரிகளையும் கீழே காணலாம். 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56

நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109

காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து - நெடு 134

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69

கான மஞ்ஞைக்கு கலிங்கம் நல்கிய - சிறு 85

நீலம் நாகம் நல்கிய கலிங்கம் ஆலமர்செல்வற்கு - சிறு 96

ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் இரும் பேர் ஒக்கலொடு - பெரும் 469

கண் பொருபு உகூஉம் ஒண் பூ கலிங்கம் பொன் புனை வாளொடு - மது 433

பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் - மது 513

மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்ப - மது 554

சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம் உடை அணி பொலிய - மது 721

இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம்  - மலை 561

துளங்கு இயல் அசைவர கலிங்கம் துயல்வர - நற் 20

கழுவு-உறு கலிங்கம் கழாஅது உடீஇ - குறு 167

நூலா_கலிங்கம் வால் அரை கொளீஇ - பதி 12

கழுவு-உறு கலிங்கம் கடுப்ப சூடி - பதி 76

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92

முருங்கா கலிங்கம் முழுவதும் வளைஇ - அகம் 136

ஒண் பூ கலிங்கம் உடீஇ நுண் பூண் - புறம் 383

நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் என - புறம் 392

அகன்று மடி கலிங்கம் உடீஇ செல்வமும் - புறம் 393

புரையோன் மேனி பூ துகில் கலிங்கம் உரை செல அருளியோனே - புறம் 398

கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி - புறம் 400

மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் - நற் 380

அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு  - நெடு 146

புகா புகர் கொண்ட புன் பூ கலிங்கமொடு  - நற் 90

பாம்பு உரித்து அன்ன வான் பூ கலிங்கமொடு  - புறம் 397 

மேற்காணும் பாடல் வரிகளில் வரும் கலிங்கம் என்ற சொல்லானது இரண்டு விதமான சிறப்புப் பொருட்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. அவை பற்றிக் கீழே காணலாம். 

கலிங்கம் – சொல்லும் ஆக்கமும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு இரண்டு விதமான சிறப்புப் பொருட்கள் தோன்றும் முறையினைக் கீழே காணலாம். 

(1)  சிறப்புப் பொருள்: முழுக்கால்சட்டை 

கால் + இங்கு (=அழுந்து, புகு) + அம் (=நீளம்) = கலிங்கம் = கால்களில் நீளமாகப் புகுத்தப்படுவது = முழுக்கால் சட்டை. 

(2)  சிறப்புப் பொருள்: முழுநீள புடவை 

கலை (=உடை, கலைவடிவம்) + இங்கு (=தங்கு, பொருந்து) + அம் (=நீளம்) = கலிங்கம் = கலைவடிவம் பொருந்திய நீண்ட உடை = முழுநீளப் புடவை 

கலிங்கமும் முழுக்கால் சட்டையும்: 

கலிங்கம் என்னும் சொல்லுக்கு முழுக்கால்சட்டை என்ற பொருளும் உண்டென்று மேலே கண்டோம். சங்க இலக்கியத்தில் எந்தெந்த பாடல்களில் இப் பொருள் வந்துள்ளது என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.  

முழுக்கால்சட்டை என்பது இடுப்பில் இருந்து இரண்டாகப் பிரிந்து இரண்டு கால்களிலும் தனித்தனியாகப் பொருந்தி மறைக்கின்ற நீண்ட உடையாகும். சங்ககாலத்தில் வாழ்ந்த புலவர் ஒருவர் காவி நிறத்தில் அணிந்திருந்த முழுக்கால் சட்டை நைந்துபோய் இருந்ததால் அது பார்ப்பதற்கு பாம்பின் பிளவுபட்ட சிவந்த நாக்கைப் போல தோன்றியதாகவும் அப்படிப்பட்ட தனது நைந்துபோன உடையை மாற்றி பகன்றை மலர்போல வெண்ணிறத்தில் முழுக்கால்சட்டை அளித்ததாகக் கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார். 

ஈன்ற அரவின் நா உரு கடுக்கும் என் தொன்றுபடு சிதாஅர் துவர நீக்கி

போது விரி பகன்றை புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇ – புறம். 393 

அடுத்ததாக, சங்க காலத்தில் சில உழவர்கள் பகன்றையின் வெண்ணிற மலர்களைக் கொண்டு அகலமாகவும் நீளமாகவும் மாலைகளைக் கட்டிக் கழுத்தில் அணிந்து தொங்க விட்டிருந்தனர். அப்போது அது பார்ப்பதற்கு வெளுக்கப்பட்ட வெண்ணிற முழுக்கால்சட்டையைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுவதைக் காணலாம். 

பல் விதை உழவின் சில் ஏராளர் பனி துறை பகன்றை

பாங்கு உடை தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி – பதி. 76 

மேற்காணும் இரண்டு பாடல்களிலும் கலிங்கம் என்னும் ஆடையின் வடிவத்திற்கு உவமைகளாக, இரண்டு பிரிவுகளைக் கொண்ட பாம்பின் பிளந்த நாக்கு மற்றும் மாலையினைக் கூறி இருப்பதில் இருந்து கலிங்கம் என்பது இரண்டு பிரிவுகளைக் கொண்ட முழுக்கால்சட்டையைத் தான் குறிக்கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். 

கலிங்கமும் முழுநீள புடவையும்: 

சங்ககாலத்தில் ஆண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுக்கால் சட்டையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். அதேசமயம், பெண்கள் அணிந்திருந்த கலிங்கம் என்பது முழுநீளப் புடவையைக் குறிக்கும் என்பதனைக் கீழ்க்காணும் சான்றுகளின் வழியாக அறியலாம். 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் கலிங்கம் என்னும் உடையினை பாதம் வரையிலும் தாழ்வாக உடுத்தினர் என்பதைக் கீழ்க்காணும் கலித்தொகைப் பாடல் கூறுவதைக் காணலாம். 

ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை - கலி 92 

சங்ககாலத் தமிழ்ப் பெண்கள் உடுத்திய கலிங்கம் என்னும் உடையில் பல்வேறு கலை வடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் இருந்தன என்பதைக் கீழ்க்காணும் கலிப்பாடல் கூறுகிறது. 

பல் கலை சில் பூ கலிங்கத்தள்  - கலி 56 

கலிங்கம் என்னும் உடையானது தற்காலத்துத் தாவணி போன்ற கீழாடையாக மட்டுமே இருந்திருக்கலாமோ என்ற சந்தேக எண்ணம் இப்போது பலருக்கு எழலாம். ஆனால் அந்த எண்ணம் தவறு என்பதைக் கீழ்க்காணும் பாடல்களில் இருந்து புரிந்து கொள்ளலாம். 

கொடும் புறம் வளைஇ கோடி கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த - அகம் 86

காதல் கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய - கலி 69 

மேற்காணும் இரண்டு பாடல்களுமே கலிங்கம் என்னும் உடைக்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்ற செய்தியைக் கூறுகின்றன. இவ்விரண்டு பாடல்களில், கலிங்கத்தை முதுகுப் பக்கமாக வளைத்து அதற்குள் அவள் ஒடுங்கி இருந்தாள் என்று முதல் பாடல் விளக்கமாகக் கூறுகிறது. இதிலிருந்து, சங்ககாலப் பெண்கள் அணிந்த கலிங்கம் என்பது கலைவடிவங்களும் பூ வேலைப்பாடுகளும் பொருந்திக் கீழாடையாகவும் மேலாடையாகவும் உடுத்தப்பட்ட முழுநீள புடவையே என்று அறியலாம். 

பிறமொழி ஆட்சியும் தமிழர் உடை மாற்றங்களும்: 

ஆங்கிலத்தில் டிரவுசர் அல்லது ஃபேன்ட் அல்லது ஃபேன்டலூன் என்று அழைக்கப்படும் முழுக்கால் சட்டையானது முதன்முதலில் மத்திய ஆசியாவில் தோன்றியதாக விக்கிபீடியா கூறுகிறது. உண்மையில், அது தமிழர்கள் இவ் உலகிற்கு அளித்த கொடையே ஆகும். காரணம், ஏறத்தாழ 3500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட சங்க இலக்கியத்திலேயே முழுக்கால்சட்டை பற்றிக் கூறப்பட்டுள்ளது என்றால் அதற்கும் முன்னரே அந்த உடையினைத் தமிழர்கள் கண்டறிந்து இருக்க வேண்டும் என்பது உறுதியாகிறது.  

கலிங்கம் என்னும் முழுக்கால் சட்டையானது தமிழர்களால் கண்டறியப்பட்டு அவரது பாரம்பரிய உடையாகத் தமிழகத்தில் பலகாலம் கோலோச்சி வந்தது. இதற்குச் சான்றாக தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில் சிற்பங்களில் இன்றளவும் காணப்படும் ஆண்களின் முழுக்கால்சட்டை உடை வடிவமைப்பைக் கூறலாம். இவ்வாறு கோலோச்சி வந்த கலிங்கமானது தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றங்களால் மாறுதல்களுக்கு உள்ளானது. நாயக்கர், ஆங்கிலேயர் போன்ற பிறமொழிக் காரர்களின் ஆட்சியின்போது தமிழர்மீது கொண்ட வெறுப்பு மற்றும் அடிமைப்படுத்தும் நோக்கத்தினால் தமிழரது ஆடைச் சுதந்திரம் பறிக்கப்பட்டு வேட்டி, துண்டுகளே தமிழரது உடைகளாக ஒதுக்கப்பட்டன. இதனால் தமிழர்கள் பலரும் தமது பாரம்பரிய உடையான கலிங்கம் என்னும் முழுக்கால்சட்டையைத் தொலைத்து வேட்டிக்கும் துண்டுக்கும் மாறினர். 

முடிவுரை: 

இதுவரை கண்டவற்றில் இருந்து, தமிழர்களின் பாரம்பரிய உடையானது வேட்டி அல்ல முழுக்கால்சட்டை ஆகிய கலிங்கமே என்று பல சான்றுகளின் வழியாகத் தெரிந்து கொண்டோம். வேட்டி என்பது பிறமொழி ஆட்சியாளருக்குத் தமிழர்கள் அடிமையாக இருந்தபோது ஒதுக்கப்பட்ட அடிமை உடை என்றும் தெரிந்து கொண்டோம். எனவே இனிமேல் TROUSER / PANT / PANTALOON என்ற ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்தாமலும் முழுக்கால்சட்டை என்று நீட்டி முழக்காமலும் கலிங்கம் என்ற நமது பாரம்பரியச் சொல்லையே பெருமையுடன் பயன்படுத்துவோமாக. அத்துடன், வேட்டி என்னும் அவமானச் சின்னத்தை உதறி கலிங்கம் என்னும் பாரம்பரிய உடையினையே மிடுக்குடன் அணிந்து மகிழ்வோமாக !!! 

ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

                                         


தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

 முன்னுரை:

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோவில்களில் பன்னெடுங் காலமாக இன்றுவரையிலும் மூலக் கடவுளுக்கும் துணைக் கடவுளர்க்கும் மந்திரம் ஓதி பூசை செய்து வருபவர்கள் பார்ப்பனர் ஆவர். இவர்களை அந்தணர், ஐயர், வேதியர் என்று அழைப்பதும் வழக்கமாக உள்ளது. இம் மக்கள் தமிழர்களே அல்லர் என்றும் இவர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தேறிகள் அதாவது வெளியில் இருந்துவந்து குடிபுகுந்தவர்கள் என்றும் பரவலான கருத்து பல காலமாகவே இருந்து வருகிறது. எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது மாதிரி இம் மக்களில் சிலர் தமக்குத் தாய்மொழி தமிழ் அல்ல சமக்கிருதமே என்று கூறி பகையுணர்வைப் பெருக்கி வருகின்றனர். தமிழகத்தில் வாழும் பலவகை மக்களால் வந்தேறி என்று தொடர்ந்து தூற்றப்பட்டு வரும் இம் மக்கள் உண்மையிலேயே யார்?. இவர்களின் பூர்வீகம் என்ன?. இவர்கள் தமிழகத்தின் வந்தேறிகள் தானா?. என்பதைப் போன்ற பல கேள்விகளுக்கான விடைகளைச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களில் கூறப்பட்டுள்ள செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காண முயல்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

 சாதியும் தமிழகமும்:

 பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான் – குறள். 972

 என்று கூறுவார் வள்ளுவர். பிறப்பினால் ஒருவருக்கு ஏற்ற தாழ்வு உண்டாவதில்லை; அவர் செய்யும் செயல் / தொழிலின் மூலமே அவருக்குச் சிறப்பும் இழிவும் அமைகிறது என்பதே இக் குறளின் விளக்கமாகும். ஆதியில் செய்யும் தொழிலால் வெறும் உயர்வோ தாழ்வோ மட்டுமே பெறப்பட்ட நிலையில் காலப்போக்கில் அதுவே சாதீய அமைப்பிற்கு அடிகோலி விட்டது. ஆதியில், சிறப்புடைய தொழிலைச் செய்வோரை உயர்ந்தோர் அல்லது மேல்சாதி என்றும் இழிவான தொழிலைச் செய்வோரைத் தாழ்ந்தோர் அல்லது கீழ்சாதி என்றும் இரண்டு வகைகளாகப் பாகுபடுத்தினர். பின்னர் ஒவ்வொரு வகையுள்ளும் பல உட்பிரிவுகள் தோன்றலாயிற்று. இன்றைய நிலையில் தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான சாதிகள் இருந்து வருகின்றன.

 தமிழகத்தில் உள்ள சாதீயப் பிரிவுகளின் தோற்ற காலத்தை மிகச் சரியாக கணக்கிட முடியாது. எப்போது பெருமையும் சிறுமையும் மக்களுக்குள் தோன்றியதோ அப்போதே சாதீயம் பிறந்துவிட்டது எனலாம். சாதீய உணர்வின் தாக்கம் பழங்காலத் தமிழர் சமுதாயத்திலும் இருந்தது என்பதனைச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

 தமிழகத்துப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா?

 தமிழகத்துப் பார்ப்பனர்கள் வந்தேறிகளா? என்று கேட்டால் இல்லை என்பதே மிகப் பொருத்தமான சரியான விடையாக இருக்கும். காரணம், ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டதான தொல்காப்பியத்திலும் சரி, சங்க இலக்கியத்திலும் சரி இம்மக்களின் பெயர்களான பார்ப்பனர் / பார்ப்பார், அந்தணர், ஐயர், வேதியர் ஆகியவை ஏராளமான பாடல்களில் இடம்பெற்று உள்ளன. கீழ்க்காணும் அட்டவணையில் அந்தப் பாடல்களின் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரங்களைக் காணலாம்.


பெயர்

தொல்காப்பியம்

சங்க இலக்கியம்

மொத்தம்

பார்ப்பனர்

6

21

27

அந்தணர்

5

40

45

ஐயர்

2

5

7

வேதியர்

0

1

1

மொத்தம்

13

67

80

ஆக மொத்தம் எண்பது பாடல்களில் இம் மக்களது பெயர்கள் இடம்பெற்றுள்ளன. உழவர், வணிகர், அரசர், பாணர், பொருநர், கூத்தர், துடியர், குயவர், தச்சர், பறையர் என்று பல்வேறு சாதியினரின் பெயர்களும் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களில் இடம்பெற்று இருந்தாலும் இவ்வளவு எண்ணிக்கையில் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். பார்ப்பனர்கள் தமிழகத்தின் வந்தேறிகள் இல்லை; அவர்கள் தமிழகத்தின் பூர்வீகக் குடிகள் தான் என்று நிரூபணம் செய்வதற்குச் சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இடம் பெற்றிருக்கும் ஒரே சாதி என்ற ஒரு தரவு மட்டுமே போதுமானது தான். இருந்தாலும் மேலும் பல தரவுகளைக் கொண்டு இக் கூற்றினை மிக ஆழமாக மெய்ப்பிக்கலாம்.

 சங்க இலக்கியத்தில் அந்தணர்:

 சங்க இலக்கியத்தில் வரும் அந்தணர் என்ற சொல்லானது கீழ்க்காணும் மூன்று பொருட்களில் பயன்பட்டுள்ளது.   

 1.   இறைவன்

2.   வேதியன்

3.   உழவன்

 மேற்காணும் மூன்று பொருட்களில், இறைவன், வேதியன் என்ற பொருட்களைத் தமிழ் அகராதிகளில் காணலாம். அந்தணர் என்பது உழவர் என்னும் புதிய பொருளையும் குறிக்கும் என்பதைப் பற்றிப் பல ஆதாரங்களுடன் அறவாழி அந்தணன் என்ற ஆய்வுக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, வேதம் ஓதுவோரைப் புரிநூல் அந்தணர் என்றும் உழவுத் தொழில் செய்வோரை விரிநூல் அந்தணர் என்றும் கீழ்க்காணும் பரிபாடல் செய்யுளும் கூறுவதைப் பார்க்கலாம்.

 மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை

விரிநூல் அந்தணர் விழவு தொடங்க

புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப – பரி. 11

 மார்கழி மாத முழுநிலா நாளில் திருவாதிரை நட்சத்திரத்தில் விரிநூல் அந்தணர் ஆகிய உழவர்கள் வேளாண் விழாவைத் தொடங்கினார்கள் என்றும் புரிநூல் அந்தணர் ஆகிய வேதம் ஓதுவோர் பரிசுகளைப் பெற்றார்கள் என்றும் மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

 அந்தணன் – பெயர் விளக்கம்:

 அந்தணன் என்ற சொல்லுக்கு இறைவன், வேதியன், உழவன் என்ற மூன்று பொருட்கள் இருப்பதாக மேலே கண்டோம். இந்த மூன்று பொருட்கள் தோன்றிய முறைகளைக் கீழே காணலாம்.

 (1). அந்தம் (=இன்மை) + அணை (=பிற, இற) + அன் = அந்தணன் = பிறப்பும் இறப்பும் இல்லாதவன் = இறைவன்.

 (2) அந்தி (=மாலை, தீ) + அணை (=உண்டாக்கு) + அன் = அந்தணன் = மாலைநேரத்தில் தீயை உண்டாக்குபவன் = வேதியன்.

 (3) அறை (=நிலம், பாத்தி) + அணி (=அழகு) + அன் = அற்றணன் >>> அத்தணன் >>> அந்தணன் = நிலத்தைப் பாத்திசெய்து அழகாக்குபவன் = உழவன்.

 வேதிய அந்தணர் பற்றிய செய்திகள்:

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியப் பாடல்களை விரிவாக ஆய்வு செய்ததில், வேதிய அந்தணர் என்னும் மக்கள் குறித்து கீழ்க்காணும் செய்திகள் பெறப்பட்டன.

 1.   அந்தணர்கள் தீமூட்டி யாகம் வளர்த்தார்கள். அந்த யாகத்தீயானது நீரில் மலர்ந்த செந்தாமரை போலத் தோன்றியது.

ஆதாரம்: திருமு. 96, பெரும். 315, பதி. 64, கலி. 36, புறம். 122, 361, 397.

2.   அந்தணர்கள் வேதம் ஓதினார்கள். அவர்கள் ஓதிய மந்திர ஒலியானது பூக்களை மொய்க்கும் வண்டுகள் இசைக்கும் ஒலியைப் போல இருந்தது.

ஆதாரம்: பரிபா. 1,2,3,4, மது. 656, புறம். 1, சிறு. 204, ஐங்கு. 387, தொல்.எழுத்.பிற.20,  

3.   மாலைநேரத்தில் அந்தண ஆண்கள் வீட்டிற்கு வெளியே தீமூட்டி அந்திக்கடன் முடித்தார்கள். அந்தண மகளிர் பூச்சூடி வீட்டிற்கு உள்ளே விளக்கேற்றி வழிபட்டார்கள்.

ஆதாரம்: கலி.119, புறம்.2, குறி. 225.

4.   அந்தணர்கள் செய்த தொழில்கள் மொத்தம் ஆறு. அவை (1) வேதம் ஓதுதல், (2) ஓதுவித்தல் / கற்பித்தல், (3) யாகத்தீ வளர்த்தல், (4) தீ வளர்ப்பித்தல் / சமையல் செய்தல், (5) தானம் கொடுத்தல், (6) தானம் பெறுதல்.

ஆதாரம்: பதி. 24, கலி. 1, புறம். 397

5.   அந்தணர்களின் வீடுகள் பார்ப்பதற்கு மலைக்குடைவு போலத் தோன்றியது. இதிலிருந்து, அந்தணர்களின் வீடுகள் மேலே மலைபோலக் குவிந்த புற்களால் ஆன கூரையைக் கொண்டிருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஆதாரம்: மது. 474.

6.   அந்தணர்களின் திருமணத்தின் போது மணமகனும் மணமகளும் புத்தாடை அணிந்து விரலைப் பற்றிக் கொண்டு தீயை வலம் வந்தார்கள்.

ஆதாரம்: கலி. 69

7.   அந்தணர்களுக்கு உரிய பொருட்களாகக் குடை, மறைநூல், நீர்க்கரகம் / கமண்டலம், உட்காரும் மனை, முக்கோல் என்னும் தண்டு ஆகியவை கூறப்பட்டுள்ளன.

ஆதாரம்: கலி. 9, 126, தொல். மர. 70. 

8.   அந்தணர்களுக்கு இரு பிறப்பு என்றும் இரண்டு பெயர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம்: பரி. 14, புறம். 367

9.   எண்ணைப் பிசுக்கற்ற, கலங்கலற்ற, பூக்களும் நறுமணமும் அற்ற தூய ஆற்றுநீரில் மட்டுமே அந்தணர்கள் தம்மைச் சுத்தம் செய்து கொள்வர்.

ஆதாரம்: பரி. 24

10.  அந்தணர்கள் புரிநூல் அணிந்தனர்.

ஆதாரம்: பரி. 11

11.  அந்தணர்கள் பிறரது குடும்பத்தில் சண்டை ஏற்பட்டால் கணவன் மனைவியரிடையே சமரசம் செய்து வைக்கும் தூதராகவும் இருந்தனர்.

ஆதாரம்: கலி. 72

 சங்க இலக்கியத்தில் பார்ப்பனர்:

 சங்க இலக்கியத்தில் பார்ப்பனர் எனப்படுவோர் பார்ப்பார் என்ற சொல்லாலும் குறிப்பிடப்பட்டுள்ளனர். முதலில் இப் பெயர்களுக்கான விளக்கங்களைக் கீழே காணலாம்.

 (1). பாற்பு (=பால்நிறம்) + ஆணம் (=உடல்) + அர் = பாற்பாணர் >>> பார்ப்பனர் = பால்நிறத்து உடலைக் கொண்டவர்.

 (2). பாற்பு (=பால்நிறம்) + ஆர் = பாற்பார் >>> பார்ப்பார் = பால்நிறத்தவர்.

 பார்ப்பனர்கள் பால்போல வெளுத்த அழகிய தோற்றத்தைக் கொண்டவர்கள் என்பதைக் கீழ்க்காணும் பாடல் வரிகளின் மூலமாகவும் அறிய முடிகிறது.

 ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் – புறம். 9

(பொருள்: பசுக்களும் பசுவைப் போன்ற நிறமும் குணமும் கொண்ட பார்ப்பன மக்களும் ... )

 கல் தோய்த்து உடுத்த படிவ பார்ப்பான்  – முல். 37

(பொருள்: காவிநிறம் தோய்த்து உடுத்திய அழகிய தோற்றங்கொண்ட பார்ப்பான். )

 இனி, சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களில் பார்ப்பனர் / பார்ப்பார் என்ற மக்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் கீழே காணலாம். 

 1.   பார்ப்பனர்க்குரிய பொருட்களாக முக்கோல் என்னும் தண்டும் கமண்டலம் என்னும் நீர்க்கரகமும் கூறப்பட்டுள்ளன.

ஆதாரம்: குறு. 156, முல். 37

2.   பார்ப்பனர்கள் செவ்வாடை அணிதலும் தலையை மொட்டை அடித்துக் கொள்ளுதலும் தாம்பூலம் தின்றலும் சிறுமியர் தலையில் குடுமி வைத்தலும் உண்டு.

ஆதாரம்: முல். 37, கலி. 65, ஐங்கு. 202

3.   பார்ப்பனர்க்கும் அறுதொழில் உண்டென்று தொல்காப்பியம் கூறுகிறது.

ஆதாரம்: பொருள். புற. 20

4.   தானம் பெறுதல், ஓலை ஒப்படைத்தல், தூது / வாயில் செய்தல், வேதம் ஓதுதல், யாகம் வளர்த்தல், சங்கு அறுத்தல் ஆகிய ஆறுவகைத் தொழில்களைப் பார்ப்பனர்கள் செய்தனர்.

ஆதாரம்: குறு. 156, புறம். 305, 367, அகம். 24, 337, ஐங்கு. 4.

5.   காமநிலை உரைத்தல், தேர்நிலை கூறல், காதலன் குறிப்பினைக் கூறல், பசு நிமித்தம் கூறல், பயணத்தைத் தெரிவித்தல், பயணம் தவிர்த்தலை அறிவித்தல் ஆகிய ஆறுவகையான வினைகள் தூதாக / வாயிலாக இருக்கும் பார்ப்பானுக்குரிய கடமைகளாகும்.

ஆதாரம்: தொல். பொருள். கற். 36

6.   பார்ப்பனர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவராய் வறுமையில் வாடி உழன்றனர்.

ஆதாரம்: அகம். 337, புறம். 305.

 சங்க இலக்கியத்தில் ஐயர் & வேதியர்:

 சங்க இலக்கிய நூல்கள் மற்றும் தொல்காப்பியத்தில் ஐயர் மற்றும் வேதியர் என்ற மக்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ள செய்திகளைக் காணலாம்.

 1.   ஐயர் யாகத்தில் தீ வளர்த்தனர்.

ஆதாரம்: கலி. 130

2.   பொய்யும் தவறும் மிகுதியாகி இல்லற நெறியில் பிறழ்வு உண்டானதால் திருமணங்கள் ஐயர்களின் முன்னிலையில் நடத்தப்பட்டன.

ஆதாரம்: தொல்.பொருள். கற். 4

3.   வேதியர்கள் வேள்வித் தீ வளர்த்தனர்.

ஆதாரம்: பரி. 11

 பார்ப்பனர் – அந்தணர் ஒப்பீடு:

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பியத்தில் பார்ப்பனரும் அந்தணருமே அதிக தரவுகளைக் கொண்டிருப்பதால் இந்த இரண்டு பெயர்கள் தொடர்பாகக் கூறப்பட்டுள்ள செய்திகளை இங்கே ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

 யாகம் வளர்த்தல்              : இருவருக்கும் பொதுவானது.

வேதம் ஓதுதல்                : இருவருக்கும் பொதுவானது.

தூது / வாயில் செய்தல்        : இருவருக்கும் பொதுவானது

தானம் பெறுதல்               : இருவருக்கும் பொதுவானது

கமண்டலம் & முக்கோல்       : இருவருக்கும் பொதுவானது

மனைப்பலகை & குடை        : அந்தணர்களுக்கு மட்டும் உண்டு.

கற்பித்தல்                     : அந்தணர்களுக்கு மட்டும் உண்டு.

சங்கறுத்தல்                   : பார்ப்பனர்களுக்கு மட்டும் உண்டு.

தாம்பூலம் தின்றல்             : பார்ப்பனர்களுக்கு மட்டும் உண்டு.

பொருளாதாரம்                : அந்தணர்கள் செல்வந்தர்களுடன் இணைந்து வாழ்ந்ததால் பொருளாதாரத்தில் குறைவின்றி இருந்ததனைப் பல பாடல்களின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால், பார்ப்பனர்கள் சாதாரண மக்களுடன் இணைந்து வாழ்ந்ததால் பொருளாதாரத்தில் பின்தங்கியவராக வறுமையில் வாடி உழன்றதை அகம். 337 மற்றும் புறம். 305 பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

வேதநூல்                     : அந்தணர்களுக்கு வேதநூல் இருந்தது என்பதனை தொல்காப்பிய மரபியல் நூற்பா 70 ன் மூலம் அறியலாம். ஆனால், பார்ப்பனர்களிடத்தில் வேதநூல் இல்லை என்பதை குறுந்தொகையின் 156 ஆம் பாடலில் வரும் “ எழுதாக் கற்பு “ என்ற சொல் மூலம் அறியலாம். வேதநூல் இல்லாத காரணத்தினால் தான் பார்ப்பனர்களால் கற்பித்தல் தொழிலைச் செய்ய இயலவில்லை என்று தெரிய வருகிறது.

 மேற்கண்ட ஒப்பீட்டில் இருந்து, பார்ப்பனர் என்போர் தமிழ்ச் சமுதாயத்தில் அடித்தட்டு மக்களாகவும் அந்தணர் என்போர் மேல்தட்டு மக்களாகவும் வாழ்ந்து வந்தனர் என்பதனை அறிந்துகொள்ள முடிகிறது.

 வேதநூலில் இருந்த மொழி எது?

 சங்க காலத்தில் வாழ்ந்து வந்த அந்தணர்களிடத்தில் வேதநூல் இருந்தது என்று மேலே கண்டோம். இந்த வேதத்தினை மறை, மந்திரம் என்ற பெயர்களாலும் இலக்கியங்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளன. ஆதியில், எழுதாக் கற்பாக அதாவது எழுதப்படாத கல்வியாக விளங்கிய வேதமானது பின்னாளில் அந்தணர்களின் செல்வாக்கினால் நூலாக்கம் பெற்றது எனலாம். அப்படி நூலாக்கம் செய்யப்பட்ட வேதநூலில் இருந்த மொழி என்ன? என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

 சங்க இலக்கியம் மற்றும் தொல்காப்பிய நூல்களை ஆய்வு செய்ததில், அந்தணரின் வேதநூலில் இடம்பெற்றிருந்த எழுத்துக்கள் “ தமிழ் “ தான் என்பதனை உறுதியாகக் கூறமுடிகிறது. இதனைக் கீழ்க்காணும் தரவுகளின் மூலம் உறுதி செய்யலாம்.

 1.   தொல்காப்பியர் எழுத்ததிகாரம் பிறப்பியல் நூற்பா 20 ல் அந்தணர்களின் மறைநூலில் வரும் எழுத்தொலிகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார்.

                 எல்லா எழுத்தும் வெளிப்பட கிளந்து

                சொல்லிய பள்ளி எழுதரு வளியின்

                பிறப்பொடு விடு-வழி உறழ்ச்சி வாரத்து

                அகத்து எழு வளி இசை அரில் தப நாடி

                அளபின் கோடல் அந்தணர் மறைத்தே

                அஃது இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்

                மெய் தெரி வளி இசை அளபு நுவன்றிசினே. - 20

 மேற்காணும் நூற்பாவில் அந்தணர்களின் மறைநூலில் வரும் சிறப்பொலிகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்கிறார் தொல்காப்பியர். தமிழ் எழுத்துக்கள் இவ்வாறு பிறக்கும், இவ்வாறு ஒலிக்கப்படும் என்று முதல் 19 நூற்பாக்களில் கூறி முடித்த பின்னர், அந்தணர்கள் அந்த எழுத்துக்களை உறழ்த்தியும் அதாவது திரித்தும் அளவில் வேறுபட்ட ஓசை தோன்றுமாறும் ஒலிப்பர் என்று 20 ஆம் நூற்பாவில் கூறுகிறார்.

 தொல்காப்பியம் என்னும் இலக்கண நூலானது தமிழ் மொழிக்கானது என்னும் நிலையில் அந்த நூலில் அந்தணரின் மறைநூலில் உள்ள எழுத்துக்களைக் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதில் இருந்தே  அந்தணரின் மறைநூலில் தமிழ் எழுத்துக்களே இருந்தன என்பது உறுதியாகிறது. காரணம், அந்தணரின் மறைநூல் பிறமொழியில் இருந்திருந்தால் தொல்காப்பியர் அதைப்பற்றித் தனது நூலில் பேசியிருக்க மாட்டார் அன்றோ !

 2.   தொல்காப்பிய பொருளதிகாரச் செய்யுளியல் நூற்பாக்கள் 164, 165 மற்றும் 178 ல் மறைமொழியான மந்திரங்களைப் பற்றிக் கீழ்க்காணுமாறு குறிப்பிடுகிறார். 

   எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்

அடி வரை இல்லன ஆறு என மொழிப - 164
அவை-தாம் நூலினான உரையினான
நொடியொடு புணர்ந்த பிசியினான
ஏது நுதலிய முதுமொழியான
மறை மொழி கிளந்த மந்திரத்தான
கூற்று இடை வைத்த குறிப்பினான – 165
நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளக்கும்
மறைமொழி-தானே மந்திரம் என்ப - 178

தமிழ் நிலத்தில் எழுதப்பட்ட செய்யுள் வகைகளில் அடி வரையறை இல்லாதவை ஆறு என்றும் அவை நூல், உரை, பிசி, முதுமொழி, மந்திரம், குறிப்பு ஆகியன என்றும் இவற்றில் மந்திரம் என்பது நிறைமொழி மாந்தராகிய சித்தர், முனிவர், துறவி போன்றோர் மக்களுக்கு உறுதிமொழியாகப் பொருள் வெளிப்பட அன்றி மறைத்துக் கூறிய மறைமொழிகளே என்றும் மேற்பாடல் வரிகள் கூறுகின்றன. தமிழ்ச் செய்யுள் வகைகளில் மந்திரங்கள் என்னும் மறைமொழி வருவதால் வேதங்களின் / மறைகளின் மொழியானது தமிழாகத் தான் இருந்திருக்க வேண்டும் என்பது இதனானும் உறுதியாகிறது.

3.   வேதமானது தன்பெயர் உட்பட மறை, மந்திரம் என்ற பெயர்களாலும் சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் பல பாடல்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவற்றில் எந்தவொரு பாடலும் வேதங்கள் தமிழ் அல்லாத பிற மொழியில் இருந்தது என்று கூறவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கதாகும்.

இதுவரை கண்டதில் இருந்து, சங்க காலத்தில் வாழ்ந்த அந்தணர்களும் பார்ப்பனர்களும் ஐயர்களும் வேதியர்களும் ஓதிய வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தான் இருந்தன என்னும் கருத்தானது உறுதி செய்யப்படுகிறது. 

முடிவுரை:

இதுவரை மேலே கண்ட பல்வேறு கருத்துக்களைத் தொகுத்துக் கீழே காணலாம்.

Ø  பார்ப்பனர் என்போர் சங்ககாலத் தமிழ்ச் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த பாணர், பொருநர், கூத்தர் முதலானவருடன் இணைந்து வாழ்ந்துவந்த தமிழ் மக்களே அன்றி வந்தேறிகள் அல்லர்.

Ø  அந்தணர் என்போர் பார்ப்பனருடன் பலவகைகளில் ஒற்றுமை உடையவராக ஆனால் செல்வமும் செல்வாக்கும் மிக்க நிலையில் அரசர், வணிகர் முதலானவருடன் இணைந்து வாழ்ந்து வந்த தமிழர்கள் ஆவர்.

Ø  ஐயர், வேதியர் என்பது பார்ப்பனருக்கும் அந்தணருக்கும் உரிய பொதுப்பெயர்களாக இருந்தன.

Ø  சங்க காலத்தில் ஓதப்பட்ட வேத மந்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் தான் இருந்தன.