திங்கள், 29 அக்டோபர், 2012

புத்தேள் நாடு


முன்னுரை:

புத்தேள் நாடு, புத்தேள் என்ற சொல்லாடல்கள் தமிழிலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இவற்றுக்கு இன்றைய தமிழ் அகராதிகள் கூறும் பொருட்கள் பாடலின் கருத்துக்களோடு சற்றும் பொருந்தா நிலையே காணப்படுகிறது. இது இச் சொல்லுக்கு வேறொரு பொருள் உள்ள நிலையினையே நமக்குக் காட்டுகிறது. இக் கட்டுரையில் புத்தேள் நாடு அல்லது புத்தேள் உலகு என்பது என்ன என்பதைப் பற்றியும் புத்தேளிர் அல்லது புத்தேள் எனப்பட்டோர் யாவர் என்பது பற்றியும் விரிவாக பல சான்றுகளுடன் காணலாம்.

புத்தேள் நாடு - தற்போதைய விளக்கங்கள்

புத்தேள்நாடு என்பதற்கும் புத்தேள் என்ற சொல்லிற்கும் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.

சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி:

புத்தேள்¹ puttēḷ , n. < புது-மை. 1. Novelty; புதுமை. (சூடா.) 2. Strange woman; stranger; புதியவள். புலத்தகைப் புத்தேளில் புக்கான் (கலித். 82).
புத்தேள்² puttēḷ, n. prob. puttala. God, deity; தெய்வம். புத்தேளிர் கோட்டம் வலஞ்செய்து (கலித். 82)
புத்தேணாடு puttēṇāṭu , n. < புத்தேள்² + நாடு. Celestial world; வானுலகு. புலத்தலிற் புத்தேணா டுண்டோ (குறள், 1323).

பேப்ரிசியஸ் இணையப் பேரகராதி:

புத்தேள் (p. 717) [ puttēṉ ] , s. God, தெய்வம்; 2. novelty, புதுகை.
புத்தேணாடு, (புத்தேள்+நாடு) Swerga, the world of Indra.
புத்தேளிர், supernals.

வின்சுலோ இணையப் பேரகராதி:

புத்தேள், (p. 793) [ puttēḷ, ] s. God, தெய்வம். 2. Novelty, புதுமை. (சது.)
புத்தேணாடு, s. Swerga, the world of Indra, தெய்வலோகம்; [ex நாடு.]
புத்தேளிர், s. [pl.] The gods, supernals, inhabitants of Swerga, தேவர்கள். 2. The celestials, வானோர். (p.)

பொருள் தவறுகள்:

மேற்காணும் அகராதிப் பொருட்களில் இருந்து புத்தேளிர் எனப்படுவோர் வானுலகத் தேவர்கள் என்றும் புத்தேளிர் உலகு எனப்படுவதாவது இந்த வானுலகத் தேவர்கள் வாழும் சொர்க்க உலகம் அதாவது இந்திர உலகம் என்றும் அறியப்படுகிறது. இப் பொருட்கள் உண்மையா எனில் இல்லை என்றே கூறலாம். இதைக் கீழ்க்காணும் திருக்குறள்களின் வாயிலாக அறியலாம்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. 290

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 966

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. 1323

மேற்காணும் ஆறு திருக்குறள்களிலும் புத்தேள் உலகு என்பதற்கு இந்திர உலகம் என்ற பொருளைக் கொள்ள முடியுமா என்றால் உறுதியாக முடியாது என்றே கூறலாம். ஏனென்றால் வள்ளுவர் இந்திர உலகம் போன்ற கற்பனையான உலகத்தைப் பற்றித் திருக்குறளில் எவ்விடத்திலும் கூறவில்லை என்று தாமரைக்கண்ணான் உலகு என்ற ஆய்வுக் கட்டுரையில் முன்னரே பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். மேலும் வள்ளுவர் இக் குறள்களில், உதவி செய்தல், ஊடல் கொள்ளுதல், திருடாதிருத்தல், கற்புநெறி போன்ற மனிதருக்குத் தேவையான பண்புகளைப் பற்றித் தான் பேசுகிறாரே ஒழிய இவை ஏதும் தேவையற்ற கற்பனையான வானுலகத் தேவர்களைப் பற்றியல்ல.

இதிலிருந்து மேற்காணும் குறள்களில் வரும் புத்தேள் உலகு என்பது இந்திர உலகத்தையோ அல்லது கற்பனையான வேறு ஒரு உலகத்தையோ குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. மேலும் புத்தேள் என்னும் சொல் வானுலகத் தேவர்களையோ அல்லது கற்பனையான பிற உயிரினங்களையோ குறித்து வரவில்லை என்பது இதனால் உறுதியாகிறது.

புத்தேள் உலகத்தின் தன்மைகள்:

என்றால் புத்தேள் உலகம் என்பது என்ன? அது எங்கிருந்தது? அங்கே யார் வசித்தனர்? என்பது போன்ற கேள்விகள் எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.

புத்தேள் உலகத்தின் தன்மைகள் பற்றி பல பாடல்களின் வாயிலாகப் பெறப்பட்ட செய்திகள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

புத்தேள் உலகத்தில் கற்புநெறி சான்ற பெண்களுக்கு பெரும் செல்வாக்கு இருந்தது. ( குறள் - 58)

புத்தேள் உலகம் கைம்மாறு கருதாமல் உதவி செய்யும் நல்லோரைக் கொண்டது. ( குறள் - 213)

புத்தேளுலகம் பிறர்க்கு உதவி செய்வோர் எங்கிருந்தாலும் அவரை வரவேற்று இணைத்துக் கொள்ளும் தன்மையது. ( குறள் - 234)

புத்தேள் நாட்டில் திருட்டு என்பதே இல்லாமல் அனைவரும் பாதுகாப்புடன் வாழ்ந்தார்கள். ( குறள் - 290)

புத்தேள் நாடு நல்ல கல்வியறிவில் சிறந்து விளங்கியது. ( குறள் - 1323)

கல்வி அறிவாலும் சிறந்த பண்பாலும் புகழ் பெறாதவர்கள் புத்தேள் உலகத்தில் வாழ முடியாது. ( குறள் - 966)


மேலே கண்டவற்றில் இருந்து இந்த புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் நிறைந்த புகழ் பெற்ற பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பது பெறப்படுகிறது.

புத்தேள் நாடு எங்கிருந்தது?

இனி இந்த புத்தேள் நாடு எங்கே இருந்தது என்பதைப் பற்றிக் காணலாம். புத்தேள் நாட்டின் இருப்பினைப் பற்றி நேரடியாகக் கூறாவிட்டாலும் மறைமுகமாக சில பாடல்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

செவ்வேள் பரங்குன்றம் ஆகிய திருப்பரங்குன்றம் புத்தேள் நாட்டிற்கு அருகில் இருந்தது. ( ஆதாரம்: பரிபாடல்)

ஈவாரைக் கொண்டாடி, ஏற்பாரைப் பார்த்து உவக்கும்--
சேய் மாடக் கூடலும், செவ்வேள் பரங்குன்றம்,
வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார்; மற்றையார்
போவார் ஆர், புத்தேள் உலகு? - பரிபாடல்

நான்மாடக் கூடல் என்று மதுரை மாநகர் போற்றப்படுவதைப் போல இந்த திருப்பரங்குன்றம் சேய்மாடக் கூடல் என்று இப்பாடலில் போற்றப்பட்டுள்ளது. இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு உதவி செய்து அவரின் மகிழ்வைக் கண்டு தாம் மகிழும் இயல்பினர். இவர்களுக்கு புத்தேள் உலக வாழ்க்கை எளிதில் கிடைக்கும்  என்று இப் பாடல் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளுலகமானது இந்த திருப்பரங்குன்றத்திற்கு அருகில் தான் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

புத்தேள் உலகம் வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்தது. ( ஆதாரம்: மதுரைக் காஞ்சி) 

காய்சின முன்பிற் கடுங்கட் கூளியர்
ஊர்சுடு விளக்கிற் றந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாடொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாடர வந்த விழுக்கல மனைத்தும்
கங்கையம் பேரியாறு கடற்படர்ந் தாங்கு
அளந்துகடை யறியா வளங்கெழு தாரமொடு
புத்தே ளுலகம் கவினிக் காண்வர
மிக்குப்புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்
சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ...

                                                 -     -மதுரைக்காஞ்சி - 700

மேற்காணும் பாடலில் புத்தேள் உலகமானது கங்கை ஆறு கடலில் கலக்கின்ற கழிமுகம் போல பல்வேறு உணவுப்பொருள் வளங்களுடன் அழகுற விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தேள் உலகத்தினால் மதுரை பெரும்பெயர் பெற்று விளங்கியது என்று கூறப்பட்டுள்ளது. இதிலிருந்து புத்தேள் உலகமானது மதுரையில் இருந்த வையை ஆற்றங்கரையில் அமைந்திருந்து பெரும் பொருள் வளத்தாலும் நல்ல கல்வி அறிவாலும் மதுரைக்குப் பெரும் புகழினைத் தேடித் தந்தது என்று கூறலாம்.

புத்தேள் உலகமைப்பு: 

புத்தேளுலகத்தின் அமைப்பு பற்றிய வேறு பல செய்திகள் கீழே தரப்பட்டுள்ளன.

புத்தேள் உலகில் மந்தாரப் பூஞ்சோலை இருந்தது. அதில் கிளிகள் வாழ்ந்தன. ( ஆதாரம் -திருவிளையாடல் புராணம்)

தீவினை யந்த ணாளர் சிறார்பயி றெய்வ வேதம்
நாவரு வேற்றக் கேட்டுக் கிளிகளோ நவிலும் வேற்றுப்
பூவையும் பயின்று புத்தே ளுலகுறை புதுமந் தாரக்
காவுறை கிளிகட் கெல்லாங் கசடறப் பயிற்று மன்னோ.

அந்தணாளர் ஓதிய வேத மொழிகளைக் கிளிகள் பயில, அதைக் கேட்டறிந்த பூவைகள் புத்தேலகம் வந்து அங்கிருக்கும் மந்தாரப் பூஞ்சோலையில் வசிக்கும் கிளிகளுக்கெல்லாம் கற்றுக் கொடுத்தனவாம். இதிலிருந்து புத்தேள் உலகத்தில் வேத மொழிகள் ஏதும் ஓதப்படவில்லை என்பது தெளிவாகிறது.

புத்தேள் உலகத்திற்கு மதில் இருந்தது. ( ஆதாரம்- கலித்தொகை)

ஞாலம் வறம் தீரப் பெய்யக், குணக்கு ஏர்பு
காலத்தில் தோன்றிய கொண்மூ போல், எம் முலை
பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை,
புத்தேளிர் கோட்டம் வலம் செய்து இவனொடு
புக்க வழி எல்லாம் கூறு;

மேற்காணும் பாடலானது புத்தேளிர்க் கோட்டத்தினை ஆணும் பெண்ணும் சேர்ந்து வலம் வருதலைப்  பற்றிக் கூறுகிறது. இதிலிருந்து புத்தேளிர் நாட்டிற்கு ஒரு சுற்று மதில் இருந்திருக்க வேண்டும் என்பது புலனாகிறது.

புத்தேள் உலகத்திற்கு காவலும் கட்டுப்பாடும் இருந்தது. ( ஆதாரம்- சிலப்பதிகாரம்)

பத்தினி இல்லோர் பல அறம் செய்யினும்
புத்தேள் உலகம் புகாஅர் என்பது
கேட்டும் அறிதியோ? - சிலம்பு- 22-115

ஒருவர் எவ்வளவு தான் அறங்கள் செய்திருந்தாலும் கற்புசான்ற மனைவியுடன் அல்லாமல் தனியாக புத்தேளிர் கோட்டத்திற்குள் புக முடியாது என்று மேற்காணும் பாடல் கூறுகிறது.  இதிலிருந்து புத்தேளுலகிற்குள் நுழைவதற்கு கடுமையான காவலும் கட்டுப்பாடும் இருந்தது என்பது தெளிவாகிறது.

மதுரையில் அமைந்திருந்த இந்த புத்தேள் நாடானது பாண்டிய நாட்டின் தனிப்பெரும் சிறப்பாக விளங்கியது எனலாம். பாண்டிய நாட்டில் மட்டும் தான் புத்தேள் நாடா ஏன் எங்கள் மன்னன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையின் சேர நாடே புத்தேள் நாட்டினைப் போலத் தானே இருக்கிறது என்று ஒரு புலவர் பாடுவதிலிருந்து இதனை அறியலாம்.

............................................................
மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
புத்தேள் உலகத்து அற்று’ எனக் கேட்டு, வந்து
இனிது காண்டிசின்: பெரும! - புறநானூறு: 22

புத்தேள் / புத்தேளிர் - யார்?

இதுவரை புத்தேள் நாட்டின் தன்மைகள், புத்தேள் நாடு எங்கிருந்தது மற்றும் புத்தேள் உலகமைப்புப் பற்றிப் பல ஆதாரங்களுடன் கண்டோம். இனி புத்தேளிர் / புத்தேள் என்னும் சொல் குறிப்பிடும் முதன்மைப் பொருள் என்ன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

இதுவரை கண்டவற்றில் இருந்து புத்தேள் நாட்டில் நல்ல கல்வி அறிவும் நற்பண்புகளும் மிக்க பெரியோர்கள் வாழ்ந்தனர் என்பதை அறிந்தோம். இவர்கள் தமது பரந்த கல்வி அறிவாலும் அனுபவ அறிவாலும் பிறருக்கு வாழ்க்கை நெறிமுறைகளை வகுத்து அதன்படி வாழ நல்வழி காட்டினர். மணமான ஆண்களும் பெண்களும் இணைந்தே சென்று இக் கோட்டத்தில் வாழ்ந்த பெரியோர்களிடத்து நல்ல வாழ்க்கைக் கல்வியையும் அறம் பற்றியும் அறிந்தனர். அறமும் கல்வியும் தழைத்தோங்கிய பொருள் வளம் மிக்க ஒரு இன்ப பூமியாக இந்த புத்தேளிர்க் கோட்டம் விளங்கியது என்றால் அது மிகையில்லை. கல்வி சான்ற ஆசிரியர்களையும் அறம் சான்ற ஆன்றோர்களையும் தனியாக ஒரு பாதுகாப்பான கோட்டத்திற்குள் வாழச் செய்ததின் மூலம் பாண்டிய மன்னர்கள் கல்விக்கும் அறத்திற்கும் கொடுத்த பெருமதிப்பினை தெற்றென விளங்கிக் கொள்ளலாம். புகழ் சான்ற பெரும்புலவர்கள் பலர் இங்கு வாழ்ந்தனர். மொத்தத்தில் இங்கு வாழ்ந்த மக்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாகவும் அறியாமை இருளகற்றும் ஆசிரியர்களாகவும் இருந்தனர் என்பது தெரிகிறது. எனவே,

புத்தேள் என்னும் சொல்லுக்கு 'அறியாமை இருளகற்றும் ஆசிரியன்' என்று பொதுவாக ஒரு விளக்கம் கொள்வது சாலப் பொருத்தமாய் இருக்கும். புத்தேளிர் என்பது புத்தேளின் பன்மையாகும். இச் சொல் பல ஆசிரியர்களைக் குறிக்கும்.

புத்தேள் - விரிவாக்கப் பொருட்கள்:

இவ்வாறு ஆதியில் ஆசிரியரைக் குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் வேறு பல பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. இந்த பிற பொருட்கள் எவ்வாறு கிளைத்தன என்பதைப் பற்றி இங்கே காணலாம்.

ஒரு ஆசிரியரின் முதல் கடமையானது மாணவனின் அறியாமை இருளை அகற்றி அவனிடத்து அறிவொளியை ஏற்றுவது. இது நம் எல்லோருக்கும் தெரியும். ஒரு ஆசிரியரைப் போலவே உலகத்தின் புற இருளை அகற்றி உலகோர்க்கு ஒளி தருவதால் கதிரவனையும் நாளடைவில் புத்தேள் என்று கூறலாயினர். கீழ்க்காணும் பாடல்களில் கதிரவனை புத்தேள் என்று கூறுகின்றனர்.

ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக்;
காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை,
மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய், ஓர்
ஆயனை அல்லை; பிறவோ அமரர் உள்
ஞாயிற்றுப் புத்தேள் மகன்?
அதனால் வாய்வாளேன்; - கலித்தொகை

விண்ணிடைப் பரிதிப் புத்தேள் மேலைநீர் குளிக்கும் எல்லை
அண்ணலை வணங்கிற் கோடி யானினத் தானப் பேறோம்
பண்ணவர் பரவும் பாதி யிருள்வயிற் பணியப் பெற்றால்
வண்ணவெம் புரவி மேத மகம்புரி பெரும்பே றெய்தும் - திருவிளையாடல்

சரி, கதிரவன் மட்டும் தான் உலகுக்கு ஒளி தருகிறதா? நிலவு ஒளி தருவதில்லையா? அது புத்தேள் இல்லையா? என்றால் நிலவும் ஒரு புத்தேள் தான்.ஆனால் அது ஒளி தருவதால் இல்லை. ஏனென்றால் நிலவின் ஒளியானது உலகின் இருளை முழுமையாக அகற்றுவதில்லை. கீழ்க்காணும் பாடலானது நிலவு எப்படி ஒரு புத்தேள் ஆக விளங்குகிறது என்பதை விளக்குகிறது.

........................................................
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியா தோரையும், அறியக் காட்டித்,
திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து, - புறநானூறு

இவ் உலகில் உள்ள அனைத்திற்கும் ஆக்கமும் தேய்வும் வளர்ச்சியும் அழிவும் உண்டென்னும் உண்மையினை உலகோருக்கு உணர்த்த நிலவானது தன்னைத்தானே ஒரு சான்றாகக் காட்டிக் கொண்டு திரிவதாக இப்பாடல் கூறுகிறது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல பணியாற்றுவதால் நிலவும் ஒரு புத்தேள் ஆயிற்று.

கதிரவனையும் நிலவையும் தொடர்ந்து தீயும் ஒரு புத்தேளாக வருகிறது. தீயை நேரடியாகப் புத்தேள் என்று எங்கும் கூறவில்லை. ஆனால் மறைமுகமாக கீழ்க்காணும் பாடலில் கூறியுள்ளனர்.

வெள்ளநீர் வறப்ப ஆதி வேதியன் ஞாலம் முன்போல்
உள்ளவாறு உதிப்ப நல்கி உம்பரோடு இம்பர் ஏனைப்
புள்ளடு விலங்கு நல்கிக் கதிர் உடல் புத்தேள் மூவர்
தள்ளரு மரபின் முன் போல் தமிழ் வேந்தர் தமையும்
தந்தான். -   திருவிளையாடல்: 2333

மேற்காணும் பாடலில் வரும் ' கதிர் உடல் புத்தேள் மூவர்' என்ற தொடரானது ஒளி தரும் உடலை உடைய கதிரவன், நிலவு மற்றும் தீயைக் குறிப்பதாகும். தீயானது வெப்பத்துடன் ஒளியையும் தரும் என்பது நாமறிந்ததே. இத் தீயினை சமைத்தல், சூடாக்குதல், விளக்கேற்றுதல் போல பல்வேறு ஆக்க வினைகளுக்கு நாம் பயன்படுத்துகிறோம். அதே சமயம் இத் தீயினை எரித்தல், உருக்குதல், ஆவியாக்குதல் போன்ற அழிவு வினைகளுக்கும் பயன்படுத்த முடியும். இப்படி தீயினால் தீமை மட்டுமில்லை; நன்மையும் உண்டு. ஆனால் தீய செயல்களோ தீமையை மட்டுமே தரும். அதனால் தான் தீவினையானது தீயை விட மிகவும் அஞ்சத்தக்கது என்று கூறுகிறார் வள்ளுவர்.

தீயவை தீய பயத்தலால தீயவை
தீயினும் அஞ்சப் படும். - 202

சரி, இந்த தீ நமக்கு என்ன உண்மையினை விளக்குகிறது?அது எப்படி புத்தேளாகிறது? என்று பார்ப்போம். தீயானது நமது அறிவிற்கு ஒப்பானது. எப்படி தீயை ஆக்கத்திற்கும் அழிவிற்கும் பயன்படுத்துகிறோமோ அதைப் போலவே நமது அறிவினையும் ஆக்க மற்றும் அழிவு வேலைகளுக்குப் பயன்படுத்த முடியும். எனவே தீயையும் சரி அறிவினையும் சரி பயன்படுத்தும்போது ஒரு கட்டுப்பாடு தேவை என்றாகிறது. இப்படி தீயானது தனது பண்பின் மூலமாக ஒரு எச்சரிக்கை உணர்வினை மனித சமுதாயத்தினருக்கு வழங்கி வழிகாட்டுவதால் தீயும் ஒரு புத்தேள் ஆகிறது.

புத்தேள் வண்டு:

கதிரவன், நிலா, தீ ஆகிய இயற்கைப் பொருட்கள் எப்படிப் புத்தேள் ஆகினர் என்பதை மேலே கண்டோம். கீழ்க்காணும் ஒரு பாடலில் ஒரு வண்டினைப் புத்தேள் என்று புலவர் கூறுகிறார். ஏன் அவ்வாறு அழைக்கிறார் என்று பார்ப்போம்.

முத்து ஏர் நகையார் வளைப்ப முகை விண்டு அலர் பூங்கொம்பர்ப்
புத்தேள் வண்டும் பெடையும் புலம்பிக் குழலில் புகுந்து
தெத்தே எனப் பாண் செய்து தீந்தேன் அருந்தும் துணையோடு
ஒத்து ஏழ் இசை பாதிக் கள் உண்ணும் பாணர் ஒத்தே.
                          - திருவிளையாடல்: 2464

ஒரு மரக்கிளையில் பூமொக்குகள் நிறைந்து இருந்தனவாம். மலராத நிலையிலிருந்த அவற்றின் மேல் சென்று இந்த வண்டுகள் ஊத அம் மொக்குகள் வாய் பிளந்து மலர்ந்தனவாம். இந் நிகழ்ச்சியினை, அறிவுக்கண் மூடி முகம் வாடியிருந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கல்வி அறிவினை ஊட்டியதும் அவர்களது அகக் கண் மலர்ந்து அவர்களிடத்தில் ஒரு முகத்தெளிவு பிறக்குமே அதற்கு ஒப்பாகக் கூறுகிறார். என்ன ஒரு ஆழ்ந்த ஒப்புமை!. இங்கு புத்தேளிரைப் போலவே இந்த வண்டுகளும் ஒரு இணையாய் (ஆணும் பெண்ணுமாய்) சேர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு ஆசிரியரைப் போல இந்த வண்டுகள் செயலாற்றியதால் இவற்றை புத்தேள் என்று கூறுகிறார் புலவர்.

முடிவுரை:

இயற்கைப் பொருட்களையே குறித்து வந்த புத்தேள் என்ற சொல் நாளடைவில் புராணப் பொருட்களையும் குறிக்கப் பயன்படலாயிற்று. குறிப்பாக பிரம்மதேவன் வேதங்களையும் கல்வியையும் படைத்து ஒரு குருவைப் போல பணியாற்றியதால் பிரம்மதேவனை புத்தேள் என்று பல பாடல்கள் குறிப்பிடுகின்றன.

கமலப் புத்தேள், நான்முகப் புத்தேள், பூவில் தோன்றும் புத்தேள், வான்மலர் மேலுறை புத்தேள் என்று பல்வேறு பெயர்களில் இந்த பிரம்மதேவர் குறிப்பிடப்படுகிறார். சான்றுக்கு ஒருசில பாடல்கள் மட்டும் கீழே.

புகுந்தறி வான்மலர் மேலுறை புத்தேள் - திருமந்திரம் - 397

ஒண்சுடர் அடிப்போது
ஒன்றுவிண் செலீஇ, நான்முகப் புத்தேள்
நாடுவியந் துவப்ப, - திவ்ய பிரபந்தம் - 2582

புரந்தர் ஆதிவா னவர்பதம் போதுறை புத்தேள்
பரந்த வான்பதஞ் சக்கரப் படையுடைப் பகவன்
வரந்த வாதுவார் பதமெலா நிலைகெட வருநாள்
உரந்த வாதுநின் றூழிதோ றோங்குமவ் வோங்கல் - திருவிளையாடல்.
-------------------------------- ---------------------------------