புதன், 28 டிசம்பர், 2011

திருக்குறளில் தெய்வம் - பகுதி 1


முன்னுரை:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 'தெய்வம்' என்ற சொல் மொத்தம் ஆறு குறட்பாக்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு 'மனிதரிடத்தில் இல்லாத புதிய ஆற்றலைக் கொண்ட ஒரு கடவுள்'  என்றும் 'விதி' என்றும் பொருள் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர் பல உரை ஆசிரியர்கள். இப் பொருட்கள் இக் குறள்களுக்குப் பொருந்தாது என்பதைப் பற்றியும் உண்மையில் இச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் பல ஆதாரங்களுடன் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

முதலில் இச்சொல் பயின்று வருகின்ற ஆறு குறள்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அக் குறளில் கடவுள் அல்லது விதி என்ற பொருள் ஏன் பொருந்தாது என்பதைப் பற்றிக் காணலாம்.

மனிதனால் காக்கப்பட வேண்டியவரா கடவுள்?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
                                                               - குறள் 43:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வ உரை: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

மேற்காணும் உரை விளக்கங்களில் கலைஞர் உரை 'தெய்வம்' என்பதற்கு 'வாழ்வாங்கு வாழ்வோர்' என்று பொருள் கூறுகிறது. இப்படி ஒரு பொருள் இச்சொல்லுக்கு எந்த அகராதியிலும் இல்லை. மேலும் இப் பொருள் இக் குறளில் மட்டுமல்ல மற்ற குறள்களிலும் பொருந்தாமையால் இவ் உரை தள்ளப்படுகிறது. அதே சமயம் ஏனைய உரைகள் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கொண்டுள்ளன. இப்பொருள் இக் குறளுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது.  இது எவ்வாறு என்று பார்ப்போம்.

இன்பத்தில் திளைக்கும் பொழுது நினைக்கிறார்களோ இல்லையோ தாள முடியாத துன்பத்தில் துவளும் போது கடவுளை நினையாத மாந்தர் மிகச் சிலராகவே இவ் உலகில் இருக்கக் கூடும். கடவுள் இல்லை என்று கூறி மறுப்பவரும் கூட தீர்க்க ஒண்ணா துயரத்தின் போது தம்மை அறியாமலேயே கடவுளை நினைப்பதுண்டு. அவர் கடவுளை வணங்குகின்றாரா இல்லையா என்பது வேறு. கடவுளை நினைத்தாலே வணங்கியதற்குச் சமமாகும். இப்படி துன்பங்களில் இருந்து தம்மைக் காக்க வேண்டும் என்றெண்ணி தான் மனிதர்கள் கடவுளை வணங்கி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது இல்வாழ்வில் உள்ள மனிதர்கள் தெய்வமாகிய கடவுளைக் காக்க வேண்டும் என்ற தொனியில் மேற்காணும் குறளுக்குப் பொருள் கொள்வது முரணான கருத்தல்லவா?. ஏனென்றால் ஓம்புதல் என்ற சொல்லுக்கு பாதுகாத்தல் அல்லது காப்பாற்றுதல் என்பதே அகராதிகள் கூறும் பொருளாகும். அறம் செய்தல் என்னும் பொருள் எங்கும் கூறப்படவில்லை.

அதுமட்டுமின்றி மேற்காணும் குறளில் தெய்வமானது முதலிடத்தில் இல்லாமல் தென்புலத்தாராகிய துறவிகளுக்கு (நீத்தார்) அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது. இது துறவிகளைக் காட்டிலும் கடவுள் மதிப்பு குறைந்ததாகக் கருத இடமளிக்கிறது. இப்படி சொல் வைப்பு முறையாலும் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் பொருந்தவில்லை. இதிலிருந்து இக் குறளில் வரும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது தெளிவு.

மனிதனால் கடவுளாக மாற முடியுமா?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
                                                           - குறள்: 50

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வ உரை: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் 'உலகிலே அறநெறிப்படி இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன் கடவுளாகக் கருதப்படுவான்' என்று கூறுகின்றன.

மேற்காணும் குறளைப் போலவே கீழ்க்காணும் குறளுக்கும் பொருள் கூறுகின்றனர் உரை ஆசிரியர்கள்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
                                          - குறள் 702.

கலைஞர் உரை: ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
மு.வ உரை: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

மேற்காணும் உரைகளிலும் 'உள்ளத்தைத் தெளிவாக உணரவல்ல மனிதனை கடவுளுக்குச் ச்மமாகக் கருத வேண்டும்' என்றே கூறியுள்ளனர். இவ் விளக்கங்கள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தனக்கு ஈடு இணையற்றவர் கடவுள் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே கூறிவிட்டார் வள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் -7

இப்படி தனக்கு உவமையில்லாதவராக கடவுள் இருக்க, மனிதனை கடவுளுக்குச் சமமாகக் கருதுவது என்பது வள்ளுவரைப் பொருத்தமட்டில் எந்த சூழ்நிலையிலும் ஒப்பக்கூடிய கருத்தல்ல. எனவே இக் குறள்களிலும் தெய்வம் என்ற சொல்லை கடவுள் என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டிருக்க முடியாது என்பது தெளிவு.

கணவனே கண்கண்ட கடவுள்?

வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
                                                       - குறள் 55.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் கணவனையே கண்கண்ட கடவுளாகக் கருதி வாழும் ஒரு இல்லாள் 'பெய்' என்று சொன்னதும் மழை பெய்யும் என்று கூறுகின்றன. மழை பெய்வதாக வரும் இக் கருத்து தவறு என்றும் இதில் வரும் மழை என்ற சொல்லுக்குப் பதில் மிழை என்று வரவேண்டும் என்றும் அவ்வாறு வந்தால் அதன் உண்மையான பொருள் என்ன என்றும் நாம் ஏற்கெனவே பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். ஆயின் இங்கு நாம் இப்போது காணப்போகும் கருத்து என்ன? கணவனே கண்கண்ட தெய்வம் என்பது ஏற்கத்தக்க பொருளா இல்லையா என்பதே அது. இல்லறம் புகுந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடு மிகாமல் விட்டுக் கொடுத்து வாழ்வதே இல்வாழ்விற்கான அடிப்படைப் பண்பாகும். கணவனின் பொருளாதார நிலை அறிந்து அதற்கேற்றபடி தனது குடும்பத்தை நடத்திச் செல்வதே இல்லாளுக்குரிய கற்பாகும். இதைத்தான் வள்ளுவரும் இக் குறளின் மூலம் உணர்த்த வருகிறார். அதைவிடுத்து கட்டிய கணவனையே கண்கண்ட தெய்வமாக எண்ணித் தொழுது வணங்க வேண்டும் என்றோ அவன் என்ன தவறுகள் செய்தாலும் இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. அவ்வாறு கூறினால் அது பெண்ணடிமைக்கு அடிகோலியதாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதுடன் முன்னர் சொன்னது போல எந்நிலையிலும் மனிதன் கடவுளுக்கு ஈடாக மாட்டான் என்பதால் இக்குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது உறுதியாகிறது.

ஆடை அணிவாரா ஆண்டவன்?

குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
                                                      - குறள் 1023.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
மு.வ உரை: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா உரை: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

மேற்காணும் உரைகளை நோக்கும் பொழுது ஒரு கருத்து தெளிவாகிறது. மூன்று உரைகளுமே 'கடவுளானவர்  பிறருக்கு உதவி செய்ய தனது ஆடையினை வரிந்து இறுகக் கட்டிக்கொண்டு முன்வருவார்' என்று கூறுகின்றன. இவ் விளக்கப்படி பார்த்தால் கடவுள் என்பது ஒரு மனிதன்; அதிலும் ஓய்வான நேரங்களில் (நாம் வீட்டில் லுங்கி, வேட்டிகளை அணிந்திருப்பதைப்போல) தனது ஆடையினை தொய்வாகக் கட்டிக்கொண்டு திரியும் மனிதன் என்றும் உதவி செய்யப் போகும்பொழுது மட்டும் தனது ஆடையினை இறுகக் கட்டிக்கொள்ளும் என்றும் நகைப்புக்கு இடமளிக்கும் கருத்துக்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா?. இப்படி கடவுளை மனிதனாக்கிப் பார்க்கும் பார்வை வள்ளுவத்தில் இல்லை; இல்லவே இல்லை என்பதால் இக் குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுளைக் குறித்து வரவில்லை என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

கடவுளால் ஆகாதது உண்டா?.

இதுவரை தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருளைக் கூறி வந்த உரை ஆசிரியர்கள் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற கீழ்க்காணும் குறளில் மட்டும் புதியதோர் பொருளைக் கொள்கின்றனர்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
                                                 - குறள் 619:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
மு.வ உரை: ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

மேற்காணும் உரைகளில் கலைஞர் உரையில் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் கொண்டிருந்தாலும் விளக்கம் தவறாக இருப்பதால் அதை இங்கே ஆராயத் தேவையில்லை. ஏனைய உரைகாரர்களும் தெய்வம் என்ற சொல்லுக்கு ஊழ் அதாவது விதி என்று புதிய பொருளை வேண்டுமென்றே கூறியுள்ளனர். காரணம் தெய்வம் என்ற சொல்லுக்கு வழக்கம் போல கடவுள் என்ற பொருளைக் கொண்டால் 'கடவுளால் ஆகாத காரியமானாலும்' என்ற பொருத்தமில்லாத பொருள் தோன்றிவிடும். இருப்பினும், ஊழ் என்ற பொருளும் இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் இக் குறளை அடுத்து வரும் 620 ஆம் குறளிலும் ஊழைப்பற்றி இதே கருத்தைத் தான் கூறுகிறார்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். - 620

இப்படி இரண்டு அடுத்தடுத்த குறள்களில் ஒரே கருத்தைக் கூறுவது 'கூறியது கூறல்' குற்றமாகும். வள்ளுவர் அக் குற்றத்தைச் செய்ய மாட்டார் என்பதால் இக் குறளில் வரும் தெய்வம் என்னும் சொல்லுக்கு விதி என்ற பொருள் பொருந்தாது என்பது தெளிவு.

தெய்வம் என்பது என்ன?

தெய்வம் என்னும் சொல்லுக்கு இதுகாறும் கூறப்பட்டு வந்த கடவுள், விதி என்ற பொருட்கள் பொருந்தாது என்றால் வேறு என்ன பொருள் இக் குறள்களுக்குப் பொருந்தி வரும்? இதைப் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.


                                                                        - தொடரும்.

வியாழன், 8 டிசம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 5 (இந்திரவிழாவும் தைப்பொங்கலும்)


மருதநில மக்கள் சூரியனையே தெய்வமாக வணங்கினர் என்பதைப் பற்றி நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்) என்ற கட்டுரையில் கண்டோம். அவ் வரிசையில், சிலப்பதிகாரமும் மணிமேகலையும் குறிப்பிடுகின்ற இந்திரவிழாவே நாம் தற்போது கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதனை இக் கட்டுரையில் சான்றுகளுடன் காணலாம்.

தொல்காப்பிய இந்திரன்

மாயோன் மேய என்று தொடங்கும் தொல்காப்பியப் பொருளதிகாரப் பாடல் 'வேந்தன் மேய தீம்புனல் உலகம்' என்று மருதநிலத்தைக் குறிப்பிடுகிறது.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்'

இப்பாடலில் வரும் வேந்தன் என்னும் சொல் தேவர்களின் அரசனான ஐராவத யானையுடைய இந்திரனைக் குறிக்காமல் சூரியனையே குறிக்கும் என்று முன்னர் கட்டுரையில் (நான்கு கடவுள் - பகுதி 1) கண்டோம். தொல்காப்பியர் இப்பாடலில் சூரியனை 'வேந்தன்' என்று கூறியதன் காரணம், சூரியனும் ஒரு மன்னனைப் போல ஒரு குடைக் கீழ் பல உயிர்களைக் காப்பதாலும் வெம்மைத் தன்மை (வேது) உடையதாலும் தான்.

வேது ----------------------------> வேந்தன்
(வெம்மை)                (வெம்மை மிக்கவன்)

தீம்புனல் உலகமாகிய மருதநிலங்கள் நிறைந்த சோழநாட்டிலே வாழ்ந்த மக்கள் தங்களது வழிபடு தெய்வமான சூரியனுக்கு எடுத்த பெருவிழாவே இந்திர விழாவாகும். ஆம், தொல்காப்பியரால் வேந்தன் என்று குறிப்பிடப்பட்ட சூரியனே பிற்காலத்தில் இந்திரன் என்றும் அழைக்கப்பட்டான்.

இந்திரனும் சூரியனும்

இந்திர விழாவின் நாயகன் சூரியனே என்பதைப் பற்றிக் காணும் முன்னர் இந்திரன் என்னும் சொல் எவ்வாறு சூரியனைக் குறிக்கும் என்று காணலாம்.

இந்திரன் என்ற சொல் சூரியனைக் குறிக்கும் என்பதற்கு கீழ்க்காணும் ஆதாரங்கள் அளிக்கப்படுகின்றன.

ஆதாரம் - 1: கிழக்குத் திசைக்கு 'இந்திரி', 'ஐந்திரம்' என்ற பெயர்களும் உண்டென்று சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்திரி¹ intiri
, n. < aindrī. The eastern cardinal direction, கிழக்கு. இந்திரி முதற்றிசை யெட்டுங் கேட்டன (கம்பரா. வாலி வதை.)
ஐந்திரம் aintiram
, n. < aindra. 1. See ஐந்திரவியாகரணம். ஐந்திர நிறைந்த தொல்காப்பியன் (தொல். பாயி.). 2. East, கிழக்கு. (பிங்.)

இந்த கிழக்குத் திசையில் இருந்து தோன்றுவதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்ட்து.

இந்திரி -----> இந்திரியன் -----> இந்திரன்
ஐந்திரம் ------> ஐந்திரன் -----> இந்திரன்

ஆதாரம் - 2:  திருக்குறளில் 25 ஆம் பாடலில் இந்திரன் என்று வள்ளுவர் குறிப்பிடுவதும் இந்த சூரியனையே ஆகும்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்புளார் கோமன்
இந்திரனே சாலும் கரி.
                                                 
இதைப்பற்றி நாம் ஏற்கெனவே இந்திரனே சாலும் கரி என்ற கட்டுரையில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

ஆதாரம் - 3: வானவில்லுக்கு இந்திரவில் என்ற பெயரும் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

*இந்திரவில் intira-vil
, n. < id. +. Rainbow, வானவில். (திவா.)

மழை பெய்த பின்னர் காற்றில் கலந்துள்ள நீர்த்துளிகளில் பட்டுச் சிதறும் சூரிய ஒளிக் கதிர்களே வானவில் தோன்றக் காரணம் என்பதால் வானவில்லுக்கு இந்திரவில் அதாவது சூரியனுடைய வில் என்ற பெயர் ஏற்பட்டது.

ஆதாரம் - 4: இந்து என்ற சொல்லுக்கு கரடி,கரி என்ற பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

இந்து, (p. 88) [ *intu, ] s. The moon, சந்திரன். 2. Crude camphor, பச்சைக்கர்ப்பூரம். Wils. p. 131. INDU. 3. A bear, கரடி. 4. A char coal, கரி. 5. A kind of prepared arsenic, கௌரிபாஷாணம். 6. The river Indus, சிந்து நதி.

உண்மையில் இந்து என்பதன் முதன்மைப் பொருள் 'கருமை / இருள்' என்பதாகும். இப்பொருளே விரிவாக்கமாக கருமை நிறக் கரடியையும் கருமை நிறக் கரியினையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.

இந்துவாகிய இருளைத் தோற்றோடச் செய்வதால் சூரியனுக்கு இந்திரன் என்ற பெயர் ஏற்பட்டது.

இந்து + இரியன்                  = இந்திரியன் -----> இந்திரன்
(இருள்) + (அகற்றுபவன்)   = சூரியன்

இரித்தல் என்பதற்கு தோற்றோடச் செய்தல், ஓட்டுதல், அகலச் செய்தல் என்று பொருள்.
(சான்று: சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி.)

இரி, (p. 97) [ iri, ] கிறேன், ந்தேன், வேன், ய, v. n. To be destroyed, broken, கெட. 2. To be routed, defeated, discomfited. தோற்க. 3. To retreat, flee away--as defeated ar mies, to scamper away through fear, தோற் றோட. 4. To run, flow, recede--as waves --as darkness before the rising sun, &c., அகல. 5. To incline, சாய. 6. To fear, அஞ்ச. (p.)

பி.கு: இந்து + இரியம் = இந்திரியம் என்பது இருளை ஓட்டும் ஒளியைக் குறிப்பதாகும். மன இருளை அகற்றும் ஒளியே அறிவாதலால் அறியப்படும் எல்லா அறிவும் (இந்திரியங்களும்) ஒளியே ஆகும்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து இந்திரன் என்ற சொல் சூரியனையும் குறிக்கும் என்பது நிறுவப்படுகிறது.

இந்திர விழா:

தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் தான் இந்திர விழாவினைப் பற்றிய தெளிவான விரிவான செய்திகள் கூறப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூர் எடுத்த காதையும் கடலாடு காதையும் மணிமேகலையில் விழாவறை காதையும் இந்திர விழா பற்றிய செய்திகளை நமக்குக் கண்ணாடி போலக் காட்டுகின்றன.

சிலப்பதிகாரம் காட்டும் இந்த இந்திர விழா என்பது உறுதியாக சூரியனுக்கு எடுக்கப்பட்ட திருவிழாவே ஆகும். இவ் விழாவானது ஐராவத யானையினை உடையவனாகக் கூறப்படும் தேவேந்திரனுக்காக எடுக்கப் பட்டிருக்காது என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஏனென்றால், இந்த தேவேந்திரன் ஓர் காமுகன் என்பதனை நாம் அறிவோம். கவுதம முனியின் மனைவியான அகலிகையின் மேல் ஆசைப்பட்டவன் இவனே. தேவசர்மா முனிவரின் மனைவி ரிஷியின் மேல் காமம் கொண்டவனும் இவனே. காம ஆசையினால் உடம்பெல்லாம் பெண்குறியாகப் பெற்றவனும் இவனே. இதுபோலப் பல குற்றங்களை இவன்மீது அடுக்கிக்கொண்டே போகலாம். இவ்வளவு காம ஆசைகள் நிறைந்த, புலனடக்கம் இல்லாத ஒருவனுக்கு ஒரு நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுகூடி மிகப்பெரிய திருவிழா எடுப்பார்களா?. ஒருபோதும் மாட்டார்கள் அல்லவா?.

அதேசமயம் இன்னொரு கோணத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். மருதநிலமான சோழநாட்டில் வாழும் மக்கள் தங்கள் நிலத்துத் தெய்வமான சூரியனுக்கே ஒரு புத்தாண்டின் துவக்கத்தில் விழா எடுப்பர். மேலும் இந்த இந்திர விழா கொண்டாடப்பட்டது சித்திரைத் திங்களில் தான். இந்த சித்திரைத் திங்களே ஆண்டின் முதல் திங்களாகும் என்பதுடன் இத் திங்களில் தான் சூரியன் மேஷ ராசியில் நுழைகிறான். இந்த மேஷ ராசியில் தான் சூரியன் உச்சமும் அடைகிறான். அதுமட்டுமின்றி, சித்திரைத் திங்களின் முதல் நாளில் துவங்கும் இத் திருவிழாவானது ஏறத்தாழ 28 நாட்கள் வரையிலும் தொடர்ந்து சித்ரா பவுர்ணமி அன்று நிறைவடைந்தது.  ஏனென்றால் சித்ரா பவுர்ணமி அன்று தான் சூரியனும் சந்திரனும் முழு பலத்துடன் இருப்பார்கள். சூரிய ஆற்றலும் சந்திர ஆற்றலும் நிறைந்த சித்ரா பவுர்ணமி அன்று இரவில் கடல்நீராடுவது உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சி தருவது. இதை முன்னிட்டே இந்திரவிழாவின் இறுதிநாளன்று மக்கள் கடலாடியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது. இனி, தற்போது நாம் கொண்டாடி வருகின்ற தைப் பொங்கல் திருவிழாவின் முன்னோடி இந்திரவிழாவே என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

உழவர் திருநாள்:

தற்போது நாம் அனைவரும் தை மாதம் முதல் தேதியில் இருந்து மூன்றாம் தேதி வரையிலும் தைப்பொங்கல் திருவிழாவை  கொண்டாடி வருகின்றோம். மக்கள் அனைவரும் சாதி மத வேறுபாடின்றி ஏழை பணக்காரன் என்ற பாகுபாடின்றி ஒற்றுமையாகக் கொண்டாடினாலும் இந்த தைப்பொங்கல் திருவிழாவானது உழவர் பெருமக்களின் போற்றத்தக்க பெருமுயற்சியான வேளாண்மையின் சிறப்பை உணர்த்தவே கொண்டாடப்படுகிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

இந்த உழவுத்தொழிலின் சிறப்பை அறிந்ததால் தான் உழவு என்னும் அதிகாரத்தில் உழவர்களின் சிறப்பினைக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் வள்ளுவர்.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. - 1032

இதில் உழவர்களே ஏனைய உலகத்தார்க்கு அச்சாணி போன்றவர் என்று புகழ்கிறார்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். - 1034

இதில் உழவர்களுக்கு அரசர்கள் செய்யும் சிறப்பு (குடை) கூறப்படுகின்றது. இப்படி ஒரு சிறப்பினை சோழநாட்டு மன்னர்களும் உழவர் பெருமக்களுக்காக இந்திரவிழாவின் போது செய்ததாக சிலப்பதிகாரம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

ஆயிரத்து ஓர் எட்டு அரசு  தலைக்கொண்ட
தண்நறுங் காவிரித் தாதுமலி பெருந்துறைப்
புண்ணிய நல்நீர் பொன்குடத்து ஏந்தி
மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழுநீர் ஆட்டி
                   - இந்திரவிழவூர் எடுத்த காதை - 164 - 168

இப் பாடலில் வரும் அரசு என்பது வேளாண் மக்களுக்கு சோழ அரசர்கள் அளிக்கும் பட்டப் பெயர் ஆகும். சான்று: சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி.

அரசு² aracu
, < rājan. n. 1. Kingliness; அரசனது தன்மை. (குறள், 384, உரை.) 2. King; அரசன். (மதுரைக். 128.) 3. Kingdom, territory of a ruler; இராச்சியம். எனதுயி ரரசுவாழ் வென்ப யாவையும் (பாரத. குருகுல. 45). 4. Government; அரசாட்சி. அரசாக வெண்ணேன்மற் றரசுதானே (திவ். பெருமாள். 10, 7). 5. That which is pre-eminent; தலைமையானது. மின்னார் தமக்கோ ரரசே (கந்தபு. தெய்வ. 143). 6. An ancient title of Vēḷāḷa chieftains; பண்டை வேளாளர் பட்டப்பெயர். வேளெ னவும் அரசெனவு முரிமை யெய்தினோரும் (தொல். பொ. 30, உரை). 7. Tiru-nāvukkaracu Nayaṉār, the author of a part of the Tēvāram; அப்பர். (பெரி யபு. திருஞான. 494.)--int. An exclamation equivalent to `check', used in chess; சதுரங்கத்தில் அர சன் கட்டுப்படவிருத்தலைக் குறிக்கும் குறிப்புச்சொல்.

இப்படி 'அரசு ' பட்டப் பெயர் பெற்ற 1008 உழவர் பெருமக்கள், தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரித் தண்ணீரால் தான் இந்திரனுக்கு முழுக்கு செய்யப்பட்டது என்று மேற்காணும் சிலப்பதிகாரப்பாடல் கூறுகிறது. இப்படி இந்திர விழாவின்போது உழவர் பெருமக்களை அரசர்கள் சிறப்பித்ததில் இருந்து  இந்திர விழாவானது தைப்பொங்கலைப் போல ஒரு உழவர் திருநாளாகத் தான் கொண்டாடப்பட்டது என்று கொள்ளலாம்.

பொங்கல் படைத்தல்:

இன்று நாம் கொண்டாடும் தைப்பொங்கல் திருவிழாவின்போது முதல்நாளன்று அதிகாலையில் கதிரவனின் உதயத்திற்கு முன்னரே ஒரு மண்பானையில் நீரும் அரிசியும் இட்டு அடுப்பில் வைத்து சூடேற்றுவர். அரிசி குழையும் பருவம் வந்ததும் பாலும் சிறிது சர்க்கரையும் கலப்பர். பாலினால் சோறு பொங்கி பானையை விட்டு வெளியே வரும் போது  'பொங்கலோ பொங்கல்' என்று அனைவரும் உரக்கக் கூறி மகிழ்வர். பின்னர் மிச்சமுள்ள சர்க்கரையினையும் முந்திரி, ஏலக்காய், கிஸ்மிஸ் போன்ற பொருட்களையும் போட்டு சிறிது நெய்யினையும் ஊற்றி நன்கு கிளறிய பின் பானையினை அடுப்பில் இருந்து இறக்கி வைப்பர். இதுதான் தைத்திருவிழாவின் முதன்மை உணவான சர்க்கரைப் பொங்கல் ஆகும். இந்தப் பானையில் இருந்து பொங்கலை எடுத்து கதிரவனுக்குப் படைத்துப் பூவும் புகையும் காட்டி வழிபடுவர். இதுதான் இன்றைய பொங்கல் திருவிழாவின் பொதுவான நடைமுறை ஆகும்.

தைத்திருநாளன்று கதிரவனுக்குப் பொங்கல் வைத்து இன்று நாம் வழிபடுவதைப் போலவே இந்திரவிழாவின் போதும் இந்திரனுக்குப் பொங்கலைப் படைத்து பூவும் புகையும் காட்டி வழிபட்டதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து

            - இந்திரவிழவூர் எடுத்த காதை: 69

அதுமட்டுமின்றி, பொங்கலின் போது 'பொங்கலோ பொங்கல்' என்று நாம் கூறி மகிழ்கிறோம். எதற்காக? இந்தப் பொங்கல் பொங்குவதைப் போல நம் வாழ்க்கையில் எல்லா நலங்களும் வளங்களும் பெருக வேண்டும் என்று வேண்டியே அன்றோ?. அதைப் போல, இந்திரவிழாவின் போதும் மக்கள் ' பசியும் நோயும் பகையும் நீங்கி, மழையும் வளமும் பெருகுக' என்று வாழ்த்தியதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க என வாழ்த்தி

                            - இந்திரவிழவூர் எடுத்த காதை : 72-73

இப்போது நாம் கொண்டாடும் பொங்கல் திருவிழாவானது தனித்தனிக் குடும்ப விழாவாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்திரவிழாவோ ஒரு நாட்டு மக்கள் அனைவராலும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடப்பட்ட ஒரு விழாவாகும். ஆகவே தான் வாழ்த்து முறையிலும் பிறவற்றிலும் சிறுசிறு மாற்றங்கள் இருக்கின்றன என்பது இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

வழிபடு தெய்வம்:

நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைத்திருநாளின் வழிபடு தெய்வம் சூரியனே என்பது அனைவருக்கும் தெரியும். உழவர்களுக்கு மட்டுமின்றி அனைவருக்குமே தேவையான வெப்பத்தினையும் ஒளியினையும் தந்துதவும் அந்த கதிரவனின் கருணையைப் போற்றும் விதமாக அமைந்த நல்லதொரு நாளே தைத்திருநாளாகும்.

தைத்திருநாளன்று கீழ்வானில் மெல்லமெல்ல கதிரவனின் செம்மேனி வெளிப்பட அதைக் கண்டு மயங்கி மகிழ்ச்சியுறாத உள்ளமும் உண்டோ?. அந்தச் செம்மேனியின் வண்ணம் தான் என்னே!. மிகச் சிறிது நேரமே காணக் கிடைக்கும் அந்த அழகு மேனியைக் காணக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமே!. அந்த செக்கர்மேனியனைக் காண பொங்கலைப் படைத்து வைத்துக் கொண்டு ஆவலாய்க் காத்திருக்கும் மக்கள் கூட்டம். இதோ மெல்லமெல்ல அந்தக் கதிரவனும் கண் திறந்து விட்டான். அதோ கீழ்வானில் கதிரவனின் அழகுமிக்க தேர் தோன்றிவிட்டது. மெய் சிலிர்க்கிறது. கைகள் தாமாகவே மேலே சென்று குவிந்து அவனை வணங்குகின்றன. கதிரே போற்றி! கடவுளே போற்றி! என்று உதடுகள் உரக்கக் கூவுகின்றன. அட, இந்த ஒரு நொடிக்காகத் தானே மக்கள் முதல் நாளில் ( தமிழர் கணக்குப் படி கதிரவன் தோன்றிய பின்னரே புதிய நாள் துவங்குவதால்) இருந்தே புனித நீராடி புத்தாடையும் அணிகலன்களும் அணிந்துத் தம்மை ஆயத்தமாக்கிக் காத்திருந்தனர்!.

ஆம், இதைப் போன்றதொரு ஆயத்தமும் கதிரவனுக்கான காத்திருப்பும் இந்திரவிழாவின் போதும் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது. சித்திரைத் திங்கள் முதல் நாளில் துவங்கிய இந்த இந்திரவிழாவானது சித்திரை மீனொடு மதி சேரும் முழுமதி நன்னாளான சித்ரா பவுர்ணமி அன்று நிறைவுறுகிறது. அன்றைய நாள் தருநிலைக் கோட்டத்துள்ள கதிரவனுக்கு 1008 உழவர் பெருமக்கள் கொண்டுவந்த காவிரி நீரைக் கொண்டு திருமுழுக்கு செய்கின்றனர். பின்னர் பிற கடவுளர்க்கும் பூசைகள் செய்கின்றனர். அன்று இரவு முழுவதும் பலவிதமான ஆடல் பாடல்கள், கேளிக்கைகளில் ஈடுபடுவதும், பலவிதமான விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ள தம் ஊரினையும் சிறப்பங்காடிகளையும் சுற்றிப் பார்ப்பதும், பூங்காக்களுக்குச் சென்று விளையாடிப் பொழுதைக் கழிப்பதுமாக மக்கள் இரவுப்பொழுதைக் கழிக்கின்றனர். பின்னர் கடலுக்குச் சென்று குளித்துப் புத்தாடைகளும் புதிய அணிகலன்களும் அணிந்து கதிரவனின் செம்மேனியைக் காணக் கடற்கரையில் காத்துக் கிடக்கின்றனர். கதிரவனின் அழகிய தேர் கீழ்வானில் தோன்றுவதுடன் இந்த விழா நிறைவுறுவதாக சிலப்பதிகாரம் கூறுகிறது.

இந்திரவிழவூர் எடுத்த காதையின் துவக்கமே கதிரவனைப் பற்றியதாக இருப்பதைப் பாருங்கள்.

அலைநீர் ஆடை மலைமுலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரிக் கூந்தல்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருள் படாஅம் போக நீக்கி
உடைய மால்வரை உச்சித் தோன்றி
உலகுவிளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி
 ...................................

இப்படி கதிரவனைப் போற்றுதலுடன் துவங்கும் இந்திரவிழாவானது சித்ரா பவுர்ணமி இரவு முடிந்து மறுநாள் காலை கதிரவன் தோன்றுவதுடன் முடிவடைகிறது.

வேலைமடல் தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு காலைக்
களிநறவம் தாதூத தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.
                            - கடலாடு காதையை அடுத்த வெண்பா.

இப்படி இந்திரவிழாவின் துவக்கமும் முடிவும் கதிரவனைப் பற்றியே இருப்பதால் இந்திரவிழாவின் நாயகனும் வழிபடு தெய்வமும் கதிரவனே என்று உறுதி செய்யலாம். அதுமட்டுமின்றி, கீழ்க்காணும் சான்றுகளும் இதை உறுதிப்படுத்தும்.

தருநிலைக் கோட்டம்:

சிலப்பதிகாரம் பலவகையான கோட்டங்களைப் பற்றிக் கூறுகிறது. கோட்டம் என்பது கோயிலைக் குறிக்கும். இக் கோட்டங்களில் முதன்மையானது தருநிலைக் கோட்டமாகும். இதுதான் கதிரவனுக்குரிய கோட்டமாகும். இங்கு கொடிமரமும் பலிபீடமும் அமைக்கப் பட்டிருந்தது. இந்திர விழாவின் போது இக் கொடிமரத்தில் மங்கல நெடுங்கொடியை வானளாவப் பறக்க விட்டதாகக் கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

தங்கிய கொள்கை தருநிலைக் கோட்டத்து
மங்கல நெடுங்கொடி வானுற எடுத்து
மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவளத் திரள்கால் பைம்பொன் வேதிகை

                 - இந்திரவிழவூர் எடுத்த காதை: 145-146

இங்கு தரு என்பது கொடிமரத்தைக் குறிப்பதாகும். வேதிகை என்பது பலிபீடத்தைக் குறிப்பதாகும். சோழ மன்னனால் அரசு பட்டம் பெற்ற 1008 உழவர் பெருமக்கள் தங்கள் தலையில் பொற்குடத்தில் சுமந்து வந்த காவிரி நீரைக்கொண்டு இக் கோட்டத்தில் இருந்த கதிரவனுக்கு திருமுழுக்காட்டினர்.

காமவேள் கோட்டம்:

கதிரவனுக்கு மட்டுமல்ல காமதேவனுக்கும் கோட்டம் இருந்தது. இதைக் காமவேள் கோட்டம் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது. இக் கோட்டத்தைப் பற்றியும் காமனைப் பற்றியும் பல அரிய செய்திகள் சிலப்பதிகாரத்தில் காணப்படுகின்றன.

தனது கரும்பு வில்லில் இருந்து மலர்க்கணைகளைத் தொடுத்து மாந்தர்க்கு காதல் நோயினை ஏற்படுத்துபவன் காமன். இவனது கொடி மகர மீன் அதாவது சுறவுக் கொடி ஆகும். இது நாமறிந்த செய்தி. ஆனால் இக் காமன் ஓர் காவல் தெய்வமும் ஆவான் என்பது நாம் அறிந்திராத செய்தி. இதோ இச் செய்தியைக் கூறும் சிலப்பதிகாரப்பாடல்.

பாண்வாய் வண்டு நோதிறம் பாட
காண்வரு குவளைக் கண்மலர் விழிப்ப
புள்வாய் முரசமொடு பொறிமயிர் வாரணத்து
முள்வாய்ச் சங்கம் முறைமுறை ஆர்ப்ப
உரவுநீர்ப் பரப்பின் ஊர்த்துயில் எடுப்பி
இரவுத்தலைப் பெயரும் வைகறைகாறும்
அரையிருள் யாமத்தும் பகலும் துஞ்சான்
விரைமலர் வாளியொடு கருப்புவில் ஏந்தி
மகரவெல்கொடி மைந்தன் திரிதர
நகரம் காவல் நனி சிறந்தது என
                             - அந்திமாலை சிறப்பு செய் காதை: 75-84

காமன் இரவு பகல் பாராமல் புகார் நகரத்தைக் காவல் செய்வதாக மேற்காணும் பாடல் கூறுகிறது. இப்படிக் காவல் தெய்வமாய் விளங்கிய காமவேளுக்கு ஓர் கோட்டம் எடுத்து இந்திரவிழாவின் போது கடைநாள் பூசையை காமவேளுக்குச் செய்ததாக கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வால்வெண் களிற்று அரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி
                              - இந்திரவிழவூர் எடுத்த காதை: 143-144

இதில் வரும் களிறு என்ற சொல் யானையினைக் குறிக்காமல் ஆண் சுறாவினைக் குறிப்பதாகும்.

அதுமட்டுமின்றி, காவிரி ஆறு கடலில் கலக்கும் பகுதியில் உள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் என்ற நீர்நிலைகளில் நீராடி இக் காமவேள் கோட்டம் வந்து காமவேளைக் கைதொழும் பெண்டிர் தமது கணவருடன் இன்புற்று வாழ்வர் என்று கூறுகிறது கீழ்க்காணும் பாடல்.

கடலொடு காவிரி அலைக்கும் முன்றில்
மடலவிழ் நெய்தலம் கானல் தடம் உள
சோமகுண்டம் சூரியகுண்டம் துறை மூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்
                           - கனாத்திறம் உரைத்த காதை: 57-61

இக் கட்டுரையில் காமவேள் கோட்டத்தைப் பற்றி விரிவாகக் கூறியதன் நோக்கமானது 'வால்வெண் களிற்று அரசு' என்னும் தொடரானது வெள்ளை நிற ஐராவத யானையினை உடைய தேவேந்திரனைக் குறிக்காமல் வெண்ணிற சுறவுக் கொடி கொண்ட அரசனான காமவேளையே குறிக்கும் என்பதை உறுதிப்படுத்தவே ஆகும்.

விண்ணவர் கோமான்:

சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் பல இடங்களில் விண்ணவர் கோமான், தேவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொல்லாடல்கள் வருகின்றன. இச் சொற்கள் எல்லா இடங்களிலும் யாரைக் குறிக்கின்றன? தேவேந்திரனையா? இல்லை. இச் சொற்கள் சில இடங்களில் சூரியனையும் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கின்றன. இது எவ்வாறு என்று பார்க்கலாம்.

வானத்தில் உள்ள விண்மீன்கள் எல்லாவற்றையும் தேவர்களாகக் கொண்டால் சூரியனே நமக்குத் தெரிந்த மிகப்பெரிய தேவன் அல்லவா?. யார் பெரியவரோ அவரைத் தானே நாம் தலைவனாகக் கொள்வது வழக்கம். அவ்வகையில் தேவர்களில் பெரிய தேவனான சூரியனுக்கு விண்ணவர் கோமான், தேவர் கோமான் என்ற பெயர்கள் ஏற்பட்டிருக்கலாம்..

மாந்தர்களாகிய நமக்கு இரண்டு கண்கள் மட்டுமே உண்டு. இந்த இரண்டு கண்களால் ஒரு நேரத்தில் ஒரு பொருளை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் சூரியனோ மேலிருந்து கொண்டு பூமியில் உள்ள அனைத்துப் பொருட்களையும் ஒரே நேரத்தில் பார்ப்பதாகவும் இப்படி பார்ப்பதற்கு அவனுக்கு ஆயிரக்கணக்கான கண்கள் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் சூரியனுக்கு ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். இந்திரவிழாவில் புகழ்ச்சியாக வருகின்ற இடங்களில் ஆயிரங்கண்ணோன் என்ற பெயர் உறுதியாக தேவேந்திரனைக் குறிக்காது. ஏனென்றால் இப் பெயர் தேவேந்திரன் சாபத்தால் பெற்ற கெட்ட பெயர். புகழாகக் குறிப்பிடும் அளவுக்கு அது ஒரு நல்ல பெயர் அல்ல. எனவே சாபத்தால் பெற்ற ஒரு அவப்பெயரைக் கொண்ட தேவேந்திரனை இச் சொல் இங்கு குறிக்கவில்லை என்பது தெளிவு.

ஆதியில் சூரியனையே குறித்து வந்த இப் பெயர்கள் பின்னாளில் 'இந்திரன்' என்ற பெயர்க் குழப்பத்தினால் தேவேந்திரனையே குறிப்பதாகக் கொள்ளப்படலாயிற்று. ஆம், எப்படி வேந்தன் என்ற சொல் சூரியனையும் தேவேந்திரனையும் குறிக்கிறதோ அதைப்போல சூரியனைக் குறித்துவந்த இந்திரன், தேவர் கோமான், விண்ணவர் கோமான், ஆயிரம் கண்ணோன் என்ற சொற்கள் சில இடங்களில் தேவேந்திரனையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

இந்திரவிழாவே தைப்பொங்கலின் முன்னோடி:

மேலே கண்ட பல சான்றுகளில் இருந்து இந்திரவிழாவானது, ஒரு உழவர் திருநாளைப் போல, உழவர்களைச் சிறப்பித்தும், பொங்கல் படையலிட்டும், சூரியனின் கோயிலில் கொடியேற்றியும்,  சூரியனுக்கு திருமுழுக்காட்டியும், சூரியனையே வழிபடு தெய்வமாகக் கொண்டும் அனைத்துப் பிரிவு மக்களாலும் கொண்டாடப்பட்டது என்னும் செய்தி பெறப்பட்டது.

இந்திரவிழாவின் போது நடந்த இந்த நிகழ்வுகள் அனைத்தும் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவின் நிகழ்வுகளுடன் நெருங்கிய தொடர்புடைதாய் அமைந்திருப்பதை அறியலாம். கொண்டாடப்படும் மாதம் மட்டும் சித்திரை என்றில்லாமல் தை மாதமாக இருக்கிறது. இதைப்போல வேறு சில மாற்றங்கள் இருந்தாலும் பெரிய அளவில் எந்த மாற்றங்களும் இல்லை என்பது தெளிவு. அவ்வகையில் நாம் இன்று கொண்டாடி வருகின்ற தைப்பொங்கல் திருவிழாவிற்கு இந்திரவிழாவே முன்னோடியாக இருந்திருக்கிறது என்பதே இக் கட்டுரையின் முடிபாகும்.

பி.கு: இக் காலத்தில் பல இடங்களில் இந்திரன் சந்திரன் என்ற பெயர்கள் ஒரு இணையாகப் பயன்படுத்தப் படுகின்றன. சூரிய சந்திரராகிய இணையைத் தான் அப்படி குறிப்பிடுகின்றனர்.
...............................................................வாழ்க தமிழ்!................................

சனி, 19 நவம்பர், 2011

குடம்பையும் புள்ளும் (கூண்டுப் பறவைகள்)


குறள்:

குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு.

                           - எண்: 338

தற்போதைய உரைகள்:

கலைஞர் உரை: உடலுக்கும் உயிருக்கும் உள்ள உறவு முட்டைக்கும் பறவைக் குஞ்சுக்கும் உண்டான உறவு போன்றதுதான்.
மு.வ உரை: உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை: உடம்பிற்கும் உயிருக்கும் இடையேயான உறவு, முட்டை தனித்துக் கிடக்கப் பறவை பறந்து விடுவது போன்றதே.
           
உரைத்தவறுகள்:

மேற்காணும் உரைகளில் மு.வ. உரையானது மணக்குடவரது உரையைப் பின்பற்றியும் கலைஞர் மற்றும் பாப்பையாவின் உரைகள் பரிமேலழகரின் உரையினைப் பின்பற்றியும் எழுதப்பட்டுள்ளன. பரிமேலழகர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் முட்டைக்கும் பறவைக்கும் இடைப்பட்ட உறவு போன்றதாம். இங்கே பரிமேலழகர் குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்ற பொருளைக் கொண்டுள்ளார். மணக்குடவர் உரைப்படி, உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது பறவையின் கூட்டுக்கும் பறவைக்கும் இடையிலான உறவு போன்றதாம். இங்கே மணக்குடவர் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு என்ற பொருளைக் கொண்டுள்ளார். இவற்றில் எது சரியான விளக்கம் என்று இங்கே காணலாம்.

ஆராய்ந்து பார்க்குமிடத்து, மேற்கண்ட இரண்டு விளக்கங்களுமே தவறாகப் படுகிறது. முதலில் மணக்குடவரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை கூடு-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் பறவை தனது கூட்டிலேயே எப்போதும் இருப்பதில்லை. மாலையில் வந்து தங்கி இருந்து இரவு கழித்து அதிகாலையில் எழுந்ததும் இரைதேடச் சென்று விடுகிறது. மறுபடியும் மாலை ஆனதும் தனது கூட்டுக்கே திரும்பி விடுகிறது. இது நாள்தோறும் நடக்கும் செயலாகும். ஆனால் ஒருமுறை ஒரு உடலை விட்டு பிரிந்து செல்லும் உயிரோ மீண்டும் அதே உடலுக்கு திரும்ப வருவதில்லை. இதைத் தான் நாம் மரணம் என்று அழைக்கிறோம். இப்படியாக பறவையின் செயலும் (கூட்டுக்குத் திரும்பி வருவது) உயிரின் செயலும் ( உடலுக்குத் திரும்பாமை) முற்றிலும் இங்கே மாறுபடுகின்றதால் மணக்குடவரின் உரை தவறு என்று தெளியலாம். இல்லை, இல்லை, மணக்குடவர் கூற விழைவது யாதெனின், ஒரு பறவை தனது கூட்டை விட்டு நிரந்தரமாகவே பிரிந்து சென்று விடுகின்றதல்லவா அதைத்தான் உடல்-உயிர் உறவுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் என்று சிலர் கூறலாம். இவ் விளக்கமும் பொருந்தா விளக்கமே. ஏனென்றால் அனைத்து பறவைகளுமே கூடுகட்டி வாழ்வதில்லை என்பதுடன் தனது வாழ்நாளில் பலமுறை கூட்டை விட்டுப் பறவை பிரிந்து செல்லும் நிகழ்ச்சியை எப்போதோ ஒருமுறை நிகழும் மரணத்துடன் ஒப்பிடுவது இயல்பாகப் படவில்லை. ஆகவே மணக்குடவரின் விளக்கம் இங்கு பொருத்தமாகப் படவில்லை.

அடுத்து பரிமேலழகரின் விளக்கத்தைப் பார்ப்போம். அவரது உரைப்படி, உடல்-உயிர் உறவினை முட்டை-பறவை உறவுடன் ஒப்பிட முடியுமா என்றால் முடியாது. ஏனென்றால் முட்டை பொறிந்தவுடன் முட்டைக்குள் இருந்து பறவைக் குஞ்சு வெளிவரும் போது முட்டை முற்றிலும் சிதிலமடைந்திருக்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால், முட்டையை முற்றிலும் சேதப்படுத்திய பின்னரே பறவைக் குஞ்சு வெளிவருகிறது. அதுமட்டுமின்றி வெளிவந்த குஞ்சுகளுக்கு சிறகுகள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் அனைத்துப் பறவைக் குஞ்சுகளுமே உடனடியாகப் பறந்துவிடுவதில்லை. ஆனால் உடலிலில் இருந்து உயிர் பிரியும் போது உடலுக்கு எவ்வித சேதாரமும் ஏற்படுவதில்லை. பறவையின் முட்டையைப் போல உடையாமல் மனித உடலானது அப்படியே முழுமையாகத் தான் இருக்கிறது. உயிர் பிரிந்த பல மணி நேரத்திற்குப் பின்னர் தான் உடல் அழுகத் துவங்குகிறது. அப்படியே அழுகினாலும் பறவை முட்டையைப் போல உடைந்து விடுவதில்லை. எனவே பறவை முட்டையை மனித உடலுடன் ஒப்பிட்டு பரிமேலழகர் இக் குறளுக்கு விளக்கம் கூறியிருப்பது பொருத்தமாகத் தோன்றவில்லை.

இப்பொருள் குழப்பங்களுக்குக் காரணம் 'குடம்பை' என்ற சொல்லே ஆகும். இக் குறளில் இச் சொல் குறிக்கும் புதிய பொருள் என்னவென்றும் இக் குறளுக்கான புதிய விளக்கம் என்னவென்றும் கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு செய்கூடு அதாவது கூண்டு என்பது பொருளாகும். இப்புதிய பொருளின்படி, இக்குறளுக்கான புதிய விளக்கமானது:

உடலுக்கும் உயிருக்கும் இடையிலான உறவானது, (அத்தனை நாளும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருந்த) கூண்டை விட்டு பறவை ஒன்று தனியே (திரும்பி வராதபடிக்கு) பறந்து செல்வதைப் போன்றதாகும். 

நிறுவுதல்:

குடம்பை என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்களை இன்றைய அகராதிகள் கூறுகின்றன.

சென்னை மற்றும் வின்சுலோ இணையத் தமிழ்ப்பேரகராதிகள்:

குடம்பை kuṭampai: , n. < குட. 1. Nest; கூடு. குடம்பைநூ றெற்றி (கல்லா. கணபதிதுதி, வரி, 26). 2. Egg; முட்டை. (பிங்.) குடம்பை தனித் தொழியப் புட்பறந்தற்றே (குறள், 338).

ஃபேபரிசியஸ் இணையத் தமிழ்ப் பேரகராதி:

குடம்பை (p. 254) [ kuṭampai ] , s. a bird's nest, கூடு; 2. an egg, முட்டை; 3. body, உடம்பு; 4. a tank.

மேற்காணும் கூடு, முட்டை, உடம்பு, தொட்டி ஆகிய பொருட்களில் ஏதேனும் ஒரு பொருளாவது கீழ்க்காணும் பாடல்களுக்குப் பொருந்தி வருகின்றதா என்று பார்ப்போம்.

1. கற்றுரிக் குடம்பை கதநாய் வடுகர் - அகநா: 382

2.  தன் பெரும் கணத்து உளான் ஓர் தலைவனும் சலதிவாணன்
என்பது தோன்ற வேடம் எடுத்து எறி வலை தோள் இட்டு
என் புற மலைப்பக் காவி மீன் இடு குடம்பை தாங்கிப்
பின்புற நடந்து செல்லப் பெருந்துறைப் பாக்கம் புக்கான்.
                - திருவிளையாடல்: 2695

மேற்காணும் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு கூடு, முட்டை, உடம்பு, தொட்டி என்று எந்தப் பொருளைப் போட்டாலும் பொருந்தவில்லை அல்லவா. இது இச் சொல்லுக்குப் புதிய பொருள் இருப்பதையே காட்டுகிறது. ஆம், இப் பாடல்களில் வரும் குடம்பை என்ற சொல்லுக்கு 'கூண்டு' என்ற புதிய பொருளே பொருத்தமாயுள்ளது. இது எவ்வாறென்று காண்போம்.

முதல் பாடலில் வரும் 'கற்றுரிக் குடம்பை' என்பது கீழ்க்காணுமாறு பிரியும்.

கற்றுரிக் குடம்பை = கற்று (கன்று) + உரி ( = தோல்) + குடம்பை

கன்று என்பது இங்கு கற்று என்று வலித்தல் விகாரம் பெற்று வந்துள்ளது. ஆக, கற்றுரிக் குடம்பை என்பது விலங்குக் கன்றின் தோலினால் செய்த கூண்டைக் குறிப்பதாகும்.

இரண்டாம் பாடலில் 'மீன் இடு குடம்பை' என்று இருக்கிறது. இதன் பொருள் 'மீன்களை இடுகின்ற கூண்டு' என்பதாகும். கூடுக்கும் கூண்டுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் தான். கூடு திறந்த நிலையில் இருக்கும். அதை மூடி விட்டால் அதுவே கூண்டு ஆகும்.

ஆக, அகராதிகள் கூறியுள்ள பொருட்களே அன்றி குடம்பை என்னும் சொல்லிற்கு கூண்டு என்ற பொருளும் உண்டு என்பது தெளிவாகிறது. இதே பொருளில் தான் வள்ளுவர் குடம்பை என்ற சொல்லை இக் குறளில் கையாண்டுள்ளார். இது எவ்வாறு என்று பார்ப்போம்.

ஒரு மனிதன் ஒரு பறவையைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைக்கிறான். அக் கூண்டுக்குள்ளேயே அப் பறவையை அடைத்து வைத்து அதற்குத் தேவையான உணவையும் நீரையும் அளித்து வருகிறான். வேளா வேளைக்கு உண்ண உணவு கிடைத்தாலும் பருக நீர் கிடைத்தாலும் அந்தப் பறவையின் ஒரே ஒரு ஏக்கம், நோக்கம் எதுவாக இருக்கும் என்றால் அது சுதந்திரமாக அக் கூட்டை விட்டு வெளியே வந்து வானில் பறந்து திரிய வேண்டும் என்பது தானே. இந்த சுதந்திரத்திற்காகத் தான் அப் பறவை ஒவ்வொரு நொடியும் பல வகைகளில் முயன்று கொண்டே இருக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது சடீரென்று கூண்டை விட்டு வெளியேறி சிறகடித்து வானில் பறந்து சென்று விடுகிறது. அப் பறவை இனி திரும்ப வருமா அதே கூட்டுக்கு? ஒருபோதும் வராது. மறுபடியும் ஒரு மனிதன் அப் பறவையைப் பிடித்து வேறொரு கூட்டில் அடைத்து வைக்காதவரை அப் பறவை உல்லாசமாய் வானில் பறந்து கொண்டே இருக்கும்.

இக் கூண்டுப் பறவையின் வாழ்க்கையைப் போலத்தான் மனித உயிரின் வாழ்க்கையும் இருக்கிறது. விதிவசத்தால் உயிரானது ஒரு உடலுக்குள் அடைபடுகிறது. அதுவே பிறப்பு எனப்படுகிறது. உடலுக்குள் அடைபட்டுக் கிடந்தாலும் உயிரானது ஒவ்வொரு நொடியும் தனது சுதந்திரமான இயல்பை எண்ணிக் கொண்டே இருக்கிறது. அண்டவெளியில் கலப்பதையே நாடுகிறது. சரியான வாய்ப்பு கிடைக்கும் பொழுது உடலை விட்டு உயிர் வெளியேறி அண்டவெளியில் கலந்து விடுகின்றது. மறுபடியும் விதிவசத்தால் வேறொரு உடலுக்குள் அடைபடாதவரை அந்த உயிர் அண்டவெளியில் தான் இருக்கும். இந்த விதியின் அளப்பரும் வலிமையை அறிந்த வள்ளுவர் இக் குறள் மூலம் அவ் விதியின் வசத்தால் உடலுக்குள் அகப்பட்ட உயிரின் கதியை ஒரு கூண்டுப் பறவையின் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார்.

அதேசமயம், கூண்டின் வலிமையைப் பொறுத்தும் பறவையின் தப்பித்துச் செல்லும் வாய்ப்பு அமைவதைப் போல உடலின் வலிமையைப் பொறுத்தும் உயிர் பிரியும் வாய்ப்பு அமைகிறது. அதனால் தான் திருமூலர் இவ்வாறு கூறுகிறார்.

உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

                        - திருமந்திரம்.

கூண்டு என்னதான் வலிமையானதாக இருந்தாலும் ஒருநாள் சமயம் பார்த்து பறவை வெளியேறி விடுவதைப் போல உடலைவிட்டு உயிரும் வெளியேறி விடும் என்று இக் குறள் மூலம் எச்சரிக்கிறார் வள்ளுவர். இப்படியாக, கூண்டுப் பறவையினை உயிருடனும், கூண்டினை உடலுடனும் ஒப்பிட்டு, மனித வாழ்க்கை நிலையற்றது என்னும் உண்மையினை நயம்படக் கூறிய வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம் வியக்கத்தக்க தன்றோ!

................................................. வாழ்க தமிழ்!................................

வெள்ளி, 18 நவம்பர், 2011

உலகியற்றியான் (வள்ளுவர் இறைவனை சபித்தாரா?)


குறள்: 

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற் றியான்
                          - எண்: 1062

தற்போதைய பொருள்:

கலைஞர் உரை: பிச்சையெடுத்துதான் சிலர் உயிர்வாழ வேண்டும் என்ற நிலையிருந்தால் இந்த உலகத்தைப் படைத்தவனாகச் சொல்லப்படுபவனும் கெட்டொழிந்து திரியட்டும்.
மு.வ உரை: உலகத்தை படைத்தவன் உலகில் சிலர் இரந்தும் உயிர்வாழுமாறு ஏற்படுத்தியிருந்தால், அவன் இரப்பவரைப் போல் எங்கும் அலைந்து கெடுவானாக.
சாலமன் பாப்பையா உரை: பிச்சை எடுத்துத்தான் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை இருந்தால், இந்த உலகைப் படைத்தவன் அங்கும் இங்கும் அலைந்து கெடுவானாக.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளும் 'உலகியற்றியான்' என்னும் சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்றே பொருள் கூறுகின்றன. உலகைப் படைத்தவன் யார் என்றால் அது இறைவன் என்று அனைவருக்கும் தெரியும். அவ்வகையில் மேற்காணும் மூன்று உரைகளுமே உலகைப் படைத்த இறைவனுக்கு 'பரந்து கெடுக' என்று வள்ளுவர் சாபமிடுவது போன்ற தொனியில் விளக்கம் கூறியுள்ளன. இக் கருத்து சற்றேனும் ஏற்புடையதா?. இல்லை. ஒருபோதும் இல்லை.

ஏனென்றால் ஒரு மனிதன் தனது வறுமை நிலையினால் பிச்சை எடுத்துண்டு வாழ்கின்றான் என்றால் அதற்கு உலகைப் படைத்த இறைவன் எப்படிப் பொறுப்பாக முடியும்?. இவ் உலகில் அனைத்து உயிர்களையும் இறைவனே படைத்தான் என்றால் அவன் படைத்த அனைத்து உயிர்களிடத்திலும் ஒரே மாதிரித்தானே அன்பு செலுத்துவான். அப்படிச் செலுத்துவது தானே முறையென்று கூறப்படும். இறைவன் முன்னால் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் சமம் என்று தானே அனைத்து மதங்களுமே கூறுகின்றன. அப்படி இருக்க, ஒருவனுடைய ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்விதத்திலும் அறமாகாது.

ஒருவரது ஏழ்மைக்கு இறைவன் பொறுப்பாகாத நிலையில் வள்ளுவர் இறைவனுக்கு சாபம் இடவேண்டிய தேவையும் இல்லை. அதுமட்டுமின்றி, கடவுள் வாழ்த்தில் இறைவனைப் புகழ்ந்த வள்ளுவர் ' இருள் சேர் இருவினையும் சேரா இறைவன்" என்று அவனது நன்மை தீமைகளுக்கு அப்பாற்பட்ட தன்மையைக் கூறுகிறார். அதன்படி வள்ளுவரது சாபமோ யாருடைய சாபமோ இறைவனைப் பற்றாது. இதை வள்ளுவரும் நன்கு அறிவார். எனவே இறைவனுக்குச் சாபமிடும் மதிகெட்ட செயலை அவர் ஒருபோதும் செய்திருக்க மாட்டார். இதிலிருந்து மேற்காணும் பொருள் விளக்கங்கள் தவறு என்பதை அறிந்து கொள்ளலாம்.

இப்பொருள் குளறுபடிக்குக் காரணம் 'உலகியற்றியான்' என்ற சொல்லுக்கு 'உலகைப் படைத்தவன்' என்று தவறாகப் பொருள் கொண்டதே ஆகும். இதன் உண்மையான பொருள் என்ன என்று கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

உண்மையில் 'உலகியற்றியான்' என்ற சொல் ஒரு நாட்டின் அரசனைக் குறிப்பதாகும். இது எவ்வாறெனில் 'உலகு' என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் இருந்தாலும் இங்கு இச்சொல் ஒரு நாட்டையே குறிக்கும்.

உலகு = நாடு
இயற்றுதல் = நடத்துதல், விதித்தல்

( ஆதாரம்: வின்சுலோ தமிழ் இணையப் பேரகராதி)

ஆக, உலகை இயற்றியவன் என்பது இங்கு ஒரு நாட்டை நடத்திச் செல்பவன் அல்லது ஒரு நாட்டிற்கு சட்டதிட்டங்கள் மற்றும் வரிகளை விதிப்பவன் என்ற முறையில் ஒரு அரசனையே குறிப்பதாகும்.

இனி இக்குறளின் திருந்திய பொருள் இதுதான்: " பிச்சை எடுத்தும் ஒருவன் (ஒரு நாட்டில்) உயிர்வாழ வேண்டுமானால் அந் நாட்டை நடத்திச் செல்கிற மன்னன் (பொருளை இழந்து உணவுக்காக) அலைந்து திரிந்து கெட்டொழியட்டும்." 

நிறுவுதல்:

ஒரு நாட்டில் பிச்சைக்காரர்கள் வாழ்வதற்கு முழுமுதல் காரணம் யார்?. உறுதியாக அந் நாட்டின் அரசனே அன்றோ?. ஆம், ஒரு நாட்டு மன்னன், தன் நாட்டு மக்களின் மீது ஏராளமான வரிகளை விதிப்பதாலும் கொடுங்கோலாட்சி புரிவதாலும் பொருள் வளம் இழந்தவர்கள் ஏழ்மையால் பிச்சை எடுத்துண்டு வாழும் நிலைக்குத் தள்ளப்படுவர். பொதுமக்களின் நலனை சற்றும் கருத்தில் கொள்ளாமல் தனது சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு அதிக வரி வசூலிக்கும்பொழுது அதைத் தாளமாட்டாமல் குடிமக்கள் வடிக்கும் கண்ணீர் அந் நாட்டு மன்னனின் செல்வத்தை அழிக்கும் கருவியாகும் என்று கொடுங்கோன்மை என்னும் அதிகாரத்தில் கூறுகிறார்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. - 555

இப்படியாக செல்வத்தை இழந்து அம் மன்னனும் வறுமை நிலையுற்று உணவுக்காக அங்கும் இங்கும் அலைந்து திரிந்து கெட்டு ஒழியட்டும் என்று இக் குறளில் அவனுக்குச் சாபமிடுகிறார் வள்ளுவர்.

இதிலிருந்து இக் குறளில் வள்ளுவர் சாபமிடுவது பிச்சைக்காரனின் ஏழ்மை நிலைக்குக் காரணமான நாட்டு மன்னனையே அன்றி உலகைப் படைத்த இறைவனை அன்று என்பது உறுதி செய்யப்படுகிறது.

................................. வாழ்க தமிழ்!................................

செவ்வாய், 1 நவம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 4 (மகாபாரதப் போர் - தமிழர்கள்)


ஐந்திணைகளும் ஐம்பூதங்களும்:

தொல்தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்கள் இருந்ததாக முன்னர் கண்டோம். இயற்கையின் ஒப்பற்ற அமைப்புக்களாக விளங்கிய இந்த ஐந்துவகை திணைகளும் தொல்தமிழகத்திற்குக் கிடைத்த அரிய வரங்கள் என்றே கூறலாம். வடக்கே பனிமலையும், கிழக்கே கடலும், மேற்கே பாலைவனமும் இயற்கை அன்னை கொடுத்த பாதுகாப்பு அரண்களாக இருந்து தொல்தமிழகத்தைக் காத்துக் கொண்டிருந்தன என்றால் மிகையாகாது.

அதுமட்டுமின்றி, இந்த ஐவகைத் திணைகளில் ஒவ்வொரு திணையும் ஒவ்வொரு விதத்தில் சிறப்புடையதாக விளங்கியது. அதாவது இந்த ஐவகைத் திணைகளும் இயற்கையின் ஐம்பேராற்றல்களான ஐந்து பூதங்களுடன் தொடர்புடையனவாய் இருந்தன. ஒவ்வொரு திணையும் ஒரு பூதத்துடன் தொடர்புடையதாய் அதன் அளப்பரிய ஆற்றலை தன்னில் கொண்டதாய் விளங்கியது. இனி இந்த ஐந்து திணைகளுக்கும் ஐந்து பூதங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்று காணலாம்.

முல்லைத் திணையில் இயற்கையின் முதல் பூதமான ஆகாயம் சிறப்புற விளங்கியது எனலாம். கார்காலத்தை தனது பெரும்பொழுதாகவும் மேகத்தையே (மாயோன்) தனது தெய்வமாகவும் கொண்டது முல்லைத் திணை ஆகும். இம் மேகங்கள் உலாவரும் இடம் ஆகாயம் என்பதால் ஆகாயமே முல்லைத் திணைக்குரிய பூதமாகியது.

குறிஞ்சித் திணையில் இயற்கையின் இரண்டாவது பூதமான நிலம் சிறப்புற விளங்கியது எனலாம். செந்நிலம் ஆகிய சேயோனை தனது தெய்வமாக உடையது குறிஞ்சித் திணை ஆகும். எனவே நிலம் குறிஞ்சித் திணைக்குரிய பூதமாகியது.

மருதத்திணையில் இயற்கையின் மூன்றாவது பூதமான காற்று சிறப்புற விளங்கியது எனலாம். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென விளங்கும் வயல்கள் நிறைந்தது மருத நிலம். காற்று வீசுவதற்குத் தங்குதடையில்லாத இந்த வயல்வெளியில் கொண்டல், கோடை, தென்றல், வாடை என்ற நால்வகைக் காற்றும் வலம் வந்தன. தொல்தமிழகத்தின் மத்தியில் இருந்த மருத நிலத்திற்குக் கிழக்கே இருந்து கொண்டல் காற்று வீசியது. மேற்கில் இருந்து கோடைக்காற்று வீசியது. வடக்கில் இருந்து வாடைக்காற்று வீசியது. தெற்கில் இருந்து தென்றல் காற்று வீசியது. இப்படி நான்கு புறங்களிலும் இருந்து வீசிய நால்வகைக் காற்றினையும் மருதநில மக்கள் அனுபவித்தனர். இப்படித் தான் மருதநிலத்துக்குரிய பூதமாக காற்று விளங்கியது. காற்று சிறப்புற விளங்கும் இந்த 'மருத' நிலத்திற்கும் காற்றைக் குறிக்கும் 'மாருத' த்திற்கும் மயிரிழை அளவே வேறுபாடு உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

மருதம் <----> மாருதம் (காற்று)

நெய்தல் திணையில் இயற்கையின் நான்காவது பூதமான நீர் சிறப்புற விளங்கியது எனலாம். நெய்தல் நில மக்களுக்கு கடலே தெய்வம் என்பதால் நீர் நெய்தல் திணைக்குரிய பூதமாயிற்று.

பாலைத்திணையில் இயற்கையின் ஐந்தாவது பூதமான தீ சிறப்புற விளங்கியது எனலாம். வேனிலை பெரும்பொழுதாகவும் பகலை சிறுபொழுதாகவும் உடைய பாலைநிலத்தில் தீயையொத்த கதிரவனின் வெம்மை கோலோச்சி இருக்கும். எனவே தான் தீ பாலைத்திணைக்குரிய பூதமாயிற்று.

மேலே கண்ட ஐம்பூத - ஐந்திணை உறவானது கீழே தொகுத்துக் கூறப்பட்டுள்ளது.

பூதம்----------------------------திணை

ஆகாயம்---------------------முல்லை
நிலம்---------------------------குறிஞ்சி
காற்று-------------------------மருதம்
நீர்--------------------------------நெய்தல்
தீ----------------------------------பாலை

மகாபாரதப் போரில் தமிழர்கள்:

மகாபாரதப் போரானது பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் கவுரவர்கள் நூற்றுவருக்கும் இடையில் நடந்ததாகக் கூறப்படுகிறது. வியாசர் இயற்றிய மகாபாரத நூலின்படி இந்த பாண்டவர்கள் ஐந்து பேரும் பாண்டு மன்னனின் பிள்ளைகள் என்றும் கவுரவர்கள் நூற்றுவரும் திருதராட்டிரனின் மக்கள் என்றும் சொல்லப்படுகிறது. குருசேத்திரம் என்னும் இடத்தில் நடந்ததாகக் கூறப்படும் இந்த பெரும்போர் உண்மையிலேயே நடந்ததா? கற்பனையாகக் கூறப்படும் ஒன்றா? உண்மை என்றால் எந்த அளவிற்கு அதில் உண்மை கலந்துள்ளது என்று காண்பதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

உண்மையில் இந்த மகாபாரதப் போரானது தொல்தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து தமிழ் மன்னர்களுக்கும் வேற்றினத்தாருக்கும் இடையில் நடந்த போராகும். இந்த வேற்றினத்தாருக்கு என்ன பெயர் வைப்பது? ஏற்கெனவே ஆரியர் என்ற சொல் புழக்கத்தில் இருந்தாலும் இச்சொல் பல குழப்பங்களையே தோற்றுவித்துள்ளது. எனவே இந்த வேற்றினத்தவருக்கு 'நூற்றுவர்' என்ற பெயரையே கொள்ளலாம்.

இந்த மகாபாரதப் போரானது பல நாட்கள் நீடித்ததாகச் சொல்லப்படுகிறது. என்றால், ஒரு ஐந்து பேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல பல நாட்களாகுமா?. என்ற ஐயம் மனதில் எழலாம். அதுமட்டுமின்றி, வெறும் ஐந்துபேர் ஒருநூறு பேருடன் போரிட்டு வெல்ல முடியுமா? என்ற கேள்வியும் கூடவே எழலாம். இக் கேள்விகளுக்கான விடைகளை மட்டுமின்றி இப் போரில் பங்கேற்ற அந்த ஐந்து தமிழ் மன்னர்கள் யார் யார்? என்றும் கீழே காணலாம்.

தமிழ் மன்னர்கள்:

தொல்தமிழகத்தில் இருந்ததாகக் கூறப்படும் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐவகை நிலங்களையும் ஆண்டு கொண்டிருந்த ஐந்து தமிழ் மன்னர்கள் தாம் இந்த மகாபாரதப் போருக்குத் தலைமையேற்றவர்கள் ஆவார். இவர்கள் ஐவரின் தலைமையில் பல்லாயிரக் கணக்கான  தமிழ் வீரர்களும் நூற்றுவர் தலைமையில் பல்லாயிரம் எதிரி வீரர்களும் நிலம் அதிரப் பொருத 'தும்பை' வகைப் போரே மகாபாரதப் போர் ஆகும்.

இப்போரில் பங்கேற்ற ஐந்து தமிழ் மன்னர்கள் தான் பிற்காலத்தில் பாண்டவர்களாகிய தருமன், அர்ஜுனன், பீமன், சகாதேவன், நகுலன் என்று அழைக்கப்பட்டனர். இப் பெயர்கள் இம் மன்னர்களின் இயற்கைப் பெயர்கள் அல்ல; பட்டப்பெயர்கள். ஒவ்வொரு நிலத்தில் இருந்தும் வந்த இம் மன்னர்களுக்கு அவர்களின் தனிச்சிறப்பு கருதி இடப்பட்ட தமிழ்ப் பெயர்களே வடமொழியில் இவ்வாறு திரிபுற்று வழங்கப்படுகின்றன.

தருமன்:

பாண்டவர் ஐவரில் முல்லை நிலத்து மன்னனாக வந்தவனே தருமன் ஆவான். கற்பு நெறியும் ஒழுக்கமும் சான்ற முல்லை நிலத்தில் இருந்து வந்தமையால் இம் மன்னனுக்கு தருமன் என்ற பட்டப்பெயர் வழங்கப்பட்டது. தருமன் என்ற தமிழ்ப் பெயரே தர்மா என்று வடமொழியில் வழங்கப்பட்டது.

தருமன் -----> தர்மா

மேகத்தை தெய்வமாகக் கொண்டது முல்லை நாடு. இந்த மேகம் தரும் மழையோ தருமத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒரு நாட்டில் தருமம் பிறழும் போது மழையில்லாமல் போவதை நாம் அறிவோம். திருவள்ளுவரும் இக் கருத்தை பல இடங்களில் வலியுறுத்தி உள்ளார். இப்படி முல்லை நிலமானது தருமத்தையே தலைமேற்கொண்டு விளங்குவதால் இந் நாட்டில் இருந்து வந்த மன்னனுக்கு அவரது நாட்டின் சிறப்பான தருமம் பற்றி 'தருமன்' என்ற பெயரை சூட்டியிருக்கலாம்.

அர்ஜுனன்:

குறிஞ்சி நிலத்தில் இருந்து வந்த மன்னனே அர்ஜுனன் ஆவான். இவனது பட்டப்பெயர் அருஞ்சுனையன் என்பதாகும். அரிய பல சுனைகளை உடைய மலைநாட்டில் இருந்து வந்தமையால் இவன் அருஞ்சுனையன் எனப்பட்டான். இவன் சிறந்த வேடன் ஆவான். வில் எய்வதில் நிகரற்ற ஆற்றல் உடையவனாக அறியப்பட்டான். அருஞ்சுனையன் என்ற தமிழ்ப் பெயரே அர்ஜுனா என்று வடமொழியாக்கப் பட்டிருக்கலாம்.

அருஞ்சுனையன் -----> அர்ஜுனா

பீமன்:

மருத நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே பீமன் ஆவான். இவனது பட்டப்பெயர் பருமன் என்பதாகும். ஓங்கிய உருவமும் அதற்கேற்ப ஈடான உடலும் வலிமையும் கொண்டவனாக இருந்ததால் பெருமை கருதி பருமன் எனப்பட்டான். பருமம் உடையவன் ஆதலால் பருமன் எனப்பட்டான். இப் பருமன் என்ற தமிழ்ப் பெயரே வடமொழியில் பீமன் என்று வழங்கப்படுகிறது.

பருமன் ----> ப்ரமன் ---> பீமன் ----> பீமா

அதுமட்டுமின்றி, ஐந்து பூதங்களில் வலிமை மிக்கது காற்று ஆகும். மெல்லிய தென்றலாய் வருடிக் கொடுப்பதும் புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்த்து இடுவதும் காற்றே ஆகும். வலிமையின்றி தொய்ந்து கிடக்கும் ஒரு டயருக்குள் காற்றினை அடித்தவுடன் அது ஒரு வண்டியையே தாங்கி நிற்கும் ஆற்றலைப் பெறுகிறது. இந்த காற்றின் ஆற்றல் சிறப்புற்று விளங்கும் மருதநிலத்தில் இருந்து வந்தவன் என்பதாலும் காற்றைப் போல எதிரிகளை தனது உடல் வலிமையால் பந்தாட வல்ல பலசாலி மன்னன் என்பதாலும் இவனுக்கு இப் பெயர் சூட்டப்பட்டிருக்கலாம்.

பருமன் என்ற சொல்லில் இருந்து தோன்றிய ப்ரமன் என்ற சொல்லே பிரம்மாண்டம் (பெரியது) என்ற சொல்லுக்கும் வலிமை மிக்க சுழல் காற்றினைக் குறிக்கும் பிரமம் என்ற சொல்லுக்கும் ஆதாரமாய் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ப்ரமன் ----> பீமன் (பருமையும் வலிமையும் கொண்டவன்)
ப்ரமன் ----> ப்ரமாண்டம் (பெரியது)
ப்ரமன் ------> ப்ரமம் (வலிமையான சுழல்காற்று)

சகாதேவன்:

நெய்தல் நிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே சகாதேவன் ஆவான். இவனது பட்டப்பெயர் சகடதேவன் ஆகும். இப் பெயரே சகாதேவ் என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

சகடதேவன் ------> சகாதேவா

வண்டிச் சக்கரங்களைச் (சகடம்) செய்வதில் பெயர் பெற்றிருந்தவர்கள் இந் நிலத்து மக்கள் ஆதலால் அச் சிறப்பு கருதி இவனுக்கு இப் பெயர் ஏற்பட்டிருக்கலாம். ஐந்துநில மக்களிலும் கடலில் செல்லும் மரக்கலங்களை முதலில் கண்டறிந்தவர்கள் நெய்தல் நில மக்களே ஆவர். கடலில் இருந்து விளைவிக்கப்பட்ட உப்பினை ஏற்றிச் செல்லத் தேவையான வண்டியையும் சக்கரங்களையும் முதலில் கண்டறிந்ததும் நெய்தல் மக்களாகவே இருக்கலாம் என்று தோன்றுகிறது. ஏனென்றால் அதிக விளைபொருட்களை உடைய மருத நிலத்தில் பொருட்களைக் கடத்த மாடுகள் இருந்தன. முல்லை நிலத்திலோ குறிஞ்சி நிலத்திலோ வண்டிகளில் ஏற்றிக்  கடத்த வேண்டிய அளவுக்குப் பொருட்பெருக்கம் இல்லை. பாலைநிலத்தில் கொள்ளையடிப்பதைத் தவிர வேலை எதுவும் இல்லை. எஞ்சியுள்ள நெய்தல் நிலத்தாருக்கு மட்டுமே பெரும் அளவிலான மீனையும் உப்பினையும் கடத்த வேண்டிய சூழல் இருந்ததால் அவர்களே வண்டிகளைக் கண்டறிந்திருக்கலாம். முதன்முதலில் கையால் தள்ளப்பட்ட இந்த வண்டிகளில் மாடுகளைப் பூட்டி இழுக்கும் வழக்கம் பின்னாளில் ஏற்பட்டிருக்க வேண்டும்.

நகுலன்:

பாலைநிலத்தில் இருந்து வந்த தமிழ் மன்னனே நகுலன் ஆவான். இவனுடைய பட்டப்பெயர் நற்குலன் என்பதாகும். இப் பெயரே நகுலா என்று வடமொழியில் வழங்கப்படுகிறது.

நற்குலன் -----> நகுலா

முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை என்னும் நான்கு நிலங்களுக்கும் தனித்தனியே சிறப்பு உண்டு. ஆனால் பாலை நிலத்து மக்களுக்கு என்ன சிறப்பு உள்ளது? பிறரது பொருட்களை கொள்ளையடிப்பதைத் தவிர அவர்கள் வேறெதுவும் அறியாதவர்கள். இருந்தாலும் தமிழருக்கு எதிரான போர் என்றதும் தானாகவே வந்து தனது ஆதரவைக் காட்டினான் இந் நிலத்து மன்னன். தொல்காப்பியர் கூறியதைப் போல இம் மன்னன் கடைக்குலத்தவனாகவே இருந்தாலும் ஆதரவு தந்து போர் புரியத் தயாராக இருந்ததால் அவனுக்கு 'நல்ல குலத்தவன்' என்ற பொருளில் 'நற்குலன்' என்ற பட்டப்பெயரைச் சூட்டியுள்ளது தமிழரின் பரந்த மனப்பான்மையைக் காட்டுகிறது.

இதுவரை கண்டவற்றை கீழ்க்கண்டவாறு தொகுத்து வழங்கலாம்.


போர் நடந்த இடம்:

இந்தியாவின் தற்போதைய அரியானா மாநிலத்தில் உள்ள குருசேத்திரம் என்ற ஊரில் தான் இப்போர் நடந்ததாகக் கூறப்படுகிறது. தொல்தமிழகப் பகுதிகளில் தமிழ் மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த பொழுது ஆஃப்கானிஸ்தானில் இருந்து கைபர் போலன் கணவாய் வழியாக இந்த வேற்றினத்தாராகிய நூற்றுவர்கள் இந்தியாவிற்குள் நுழையத் தலைப்பட்டிருக்கக் கூடும். அப்பொழுது அவர்களுக்கும் தமிழ் மன்னர் ஐவருக்கும் இடையில் இந்த குருசேத்திரம் என்னும் இடத்தில் வைத்து நடந்த பெரும்போரே இந்த மகாபாரதப் போராகும். இந்த நூற்றுவர்கள், தமிழரின் போர்வீரத்தைப் பற்றி முன்னரே கேள்விப்பட்டிருக்கக் கூடும். அதனால் தான் அவர்களது படைக்கு நூறு பேர் தலைமை தாங்கி பெரும் படையாக வந்துள்ளனர்.

போர்க்காலத்தில் இப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர் ஐவரின் படைவீரர்களுக்கும் தேவையான உணவினை அளித்தான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் என்னும் தமிழ் மன்னன் என்று புறநானூறு கூறுகிறது. அப்படியென்றால் இம் மன்னனுடைய நாடும் தொல்தமிழகத்தில் தான் இருந்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் இவனால் படைவீரர்களுக்கு குருசேத்திரத்தில் உணவளித்திருக்க முடியும். இப்போதுள்ள தமிழகத்தில் இருந்துகொண்டு இதைச் செய்திருக்க சாத்தியமில்லை.

ஆதாரங்கள்:

மேலே நாம் பல புதிய செய்திகளைக் கண்டோம். இவை உண்மை என்பதற்கு என்ன ஆதாரங்கள் உள்ளன என்று காண்போம்.

மேலே கண்ட பல புதிய செய்திகளில், பாரதப் போரில் ஈடுபட்ட தமிழ் மன்னர்கள் ஐவரின் பெயர்களில் வேண்டுமானால் மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மகாபாரதப்போர் என்பது தமிழ் மன்னர்கள் ஐவருக்கும் வேற்றினத்தார் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போர் தான் என்பதில் எந்தவித மாறுபாடுமில்லை. இதை உறுதிசெய்யும் வண்ணம் தமிழ் இலக்கியங்களில் இப் போர் பற்றிய குறிப்புக்களும் உள்ளன.

அலங்குஉளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலம்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

                                                    - புறநானூறு - 2

பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போர் நிகழ்ந்த காலத்தில் பெருஞ்சோறு அளித்த நிகழ்ச்சியை இப்பாடல் விவரிக்கிறது.

ஈரைம் பதின்மரும் பொருதுகளத்து அவியப்
பேரமர்க் கடந்த கொடிஞ்சி நெடுந்தேர்
ஆராச் செருவின் ஐவர் போல

- பெரும்பாணாற்றுப்படை - 415-417

                                                                          ..... தொடரும்

செவ்வாய், 18 அக்டோபர், 2011

நான்கு கடவுள் - பகுதி 3 (தொல்தமிழகம்)

தொல் தமிழகம்:

தொல் தமிழகத்தில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்று ஐவகை நிலங்கள் இருந்ததாக தொல்காப்பியம் கூறியதை முன்னர் கண்டோம். என்றால் இந்த தொல் தமிழகம் இந்தியாவின் எந்தப் பகுதியில் இருந்தது? தற்போது இருக்கும் தமிழ்நாட்டிலா? லெமூரியா என்று கூறப்படும் கண்டத்திலா? வேறு எங்கு இந்த தொல்தமிழகம் அமைந்திருந்தது? இதைப் பற்றி ஆராய்வதே இப் பகுதியின் நோக்கமாகும்.

தமிழரும் காற்றும்:

காற்று இல்லையேல் பூமியில் உயிர்கள் இல்லை. நாம் உயிர் வாழத் தேவையான உயிர்வளியத்தையும் தாவரங்களுக்குத் தேவையான கரிவளியத்தையும் தந்து உதவுவதுடன் மழை பெய்விப்பதில் இன்றியமையாத பங்கினையும் இக் காற்றே வகிக்கிறது. மழையைப் போலவே காற்று ஆக்கவும் வல்லது; அழிக்கவும் வல்லது. தென்றலாய் தாலாட்டுவதும் காற்றே; புயலாய் மாறி பொருட்களை புடைபெயர்ப்பதும் இக் காற்றே.

அதுமட்டுமின்றி, புவி மண்டலத்தின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளப் பெரிதும் உதவுவது காற்று மண்டலமே ஆகும். விண்வெளியில் இருந்து வரும் எரிகற்கள் பூமியைத் தாக்காத வண்ணம் ஒரு கவசம் போல் இருந்து அந்தக் கற்களை வழியிலேயே எரித்துச் சாம்பலாக்கி விடுவதும் இந்த காற்று மண்டலமே ஆகும். இவ்வளவு சிறப்புக்களை அடக்கிய ஐந்து பூதங்களில் ஒன்றான காற்றுக்குத் தமிழர்களின் வாழ்வில் தனி இடம் உண்டு. காற்றின் தன்மைகளை அறிந்து அவற்றை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் தமிழர்கள் திறமையானவர்கள். மிகப் பழங்காலத்திலேயே காற்றின் இயல்பறிந்து கப்பல்களை ஓட்டி கடல் வாணிகம் செய்தவர்கள் தமிழர்கள்.

' திரைகடல் ஓடியும் திரவியம் தேடு '
' காற்றுள்ள போதே தூற்றிக் கொள் '

போன்ற பழமொழிகள் தமிழரின் காற்று பற்றிய அறிவினை நன்கு புலப்படுத்துவன.

காற்றின் வகைகள்:

காற்றுக்குப் பல தன்மைகள் உண்டு. மழைக் காற்று, வெப்பக் காற்று, ஊதைக் காற்று, தென்றல் காற்று என்று காற்று நால்வகைப் படும். இந்த நால்வகைக் காற்றுக்கும் தனித்தனியாக பெயரிட்டு அழைத்துள்ளனர் நம் முன்னோர். கோடை, கொண்டல், வாடை, தென்றல் என்பன காற்றுக்கு நம் முன்னோர் இட்ட பெயர்கள். காற்றின் வலிமைக்கேற்ப வரிசையாக
இவை நான்கையும் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

கோடை:

கோடை என்பது மேற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் இட்ட பெயராகும். மேற்குத் திசைக்கு குடக்கு என்ற பெயரும் உண்டு. குடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கோடை என்ற பெயர் ஏற்பட்டது.

குடக்கு ----> கோடை

இதை வெப்பக் காற்று என்றும் கூறுவர். பாலைவனப் பகுதிகள் மற்றும் மழையின்றி வறண்ட நிலங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும். இவற்றில் இருந்து வீசும் காற்றானது வெப்பமுடையதாய் இருப்பதால் இதனை வெப்பக் காற்று என்று கூறுகின்றனர்.

கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதாக சென்னை இணையத் தமிழ்ப்பேரகராதி கூறுகிறது.

கோடை¹ kōṭai
, n. < குடக்கு. [K. kōḍe.] 1. [M. kōṭa.] West wind; மேல்காற்று. கோடை தூற்றக் கூடிய வூழிலை (ஞானா. 28, 12). 2. Summer season, as the time of the west wind; வேனிற் காலம். (பிங்.) 3. Sunshine, intense heat of the summer season; வெயில். வெந்துயர்க் கோடை மாத்தலை கரப்ப (திருவாச. 3, 71).

கோடை என்ற சொல் மேல்திசைக் காற்றினை மட்டுமின்றி வெயிலையும் வேனில் காலத்தையும் குறிப்பதால் இச் சொல் பொதுவாக வீசும் வெப்பக் காற்றினைக் குறிக்காமல் கடும் வெயிலையும் வேனில் காலத்தையுமே பெரும் பொழுதாக உடைய பாலைநிலங்களில் வீசும் காற்றினையே துவக்கத்தில் குறித்திருப்பதாகக் கொள்ளலாம். ஏனென்றால் கோடைக் காற்று வீசிய பொழுது மணலையும் அள்ளிவீசி அதனால் மணற்குன்றுகள் தோன்றியதாக கீழ்க்காணும் குறுந்தொகைப் பாடல் கூறுகிறது.

கோடை இட்ட அடும்பு இவர் மணற்கோடு ஊர
நெடும்பனை குறியவாகும் - குறு : 248

பெரிய பனைமரங்களே சின்ன மரங்களாகத் தெரியும்படிக்கு கோடை காற்றினால் மணல்மேடுகள் உருவான நிலையினையே மேற்காணும் பாடல் காட்டுகிறது. ஆம், நால்வகைக் காற்றில் கோடைக் காற்றே மிக வலிமையானது ஆகும். இதுவே சூறாவளியாகவும் புயலாகவும் மாறுகிறது. கோடையின் தன்மை பற்றி எண்ணும் பொழுது கொடுமை என்ற சொல்லின் பயன்பாடு அத் தன்மையில் இருந்தே உருவாகி இருக்கலாம் என்று தோன்றுகிறது.

கொண்டல்:

கொண்டல் என்பது கிழக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல் ஆகும். கிழக்குத் திசைக்கு குணக்கு என்ற பெயரும் உண்டு. குணக்கில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்கு கொண்டல் என்ற பெயர் ஏற்பட்டது.

குணக்கு ---> கொண்டல்

இதை மழைக் காற்று என்றும் கூறுவர். கடலுக்கு மேலே தோன்றி பஞ்சுப் பொதிகளாய் மிதந்த வெண்மேகங்கள் கருக்கொண்டதும் அவை சில்லென்ற காற்றை வீசுகின்றன. இதுவே கொண்டல் ஆகும். கொண்டல் வீசினால் மழை வரப்போகிறது என்று பொருள்.

கொண்டல் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பல பொருட்கள் உள்ளதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகிறது.

கொண்டல்¹ koṇṭal
, n. < கொள்-. 1. Receiving, taking; கொள்ளுகை. உணங்கற் றலையிற் பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5). 2. [M. koṇṭal.] Cloud; மேகம். கொண்டல் வண்ணா குடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6). 3. Rain; மழை. (ஞானா. 43, 14, உரை.) 4. [prob. ஷை] Aries, a constellation of the zodiac; மேஷராசி. (சாதகசிந். காலநிக. 24.) 5. See கொண்டற்கல். (சங். அக.) 6. A girls' game; மகளிர் விளையாட்டுவகை. (W.), n. < குணக்கு. 1. East wind; கீழ்காற்று. கொண்டல் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22). 2. Wind; காற்று. (பிங்.) 3. East; கிழக்கு. Naut.

மேற்காணும் பொருட்களே அன்றி கொண்டல் என்பதற்கு கடல் என்பதும் ஒரு பொருளாக இருந்திருக்கக் கூடும் என்றே தோன்றுகிறது. சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதியில் கீழ்க்காணும் சொல்லும் பொருளும் வருகிறது.

கொண்டலை koṇṭalai
, n. perh. கொண்டல்¹. Seaside Indian oak. See சமுத்திரக்கடம்பு. (L.)

மேற்காணும் சொல்-பொருள் தொடர்பில் இருந்து கொண்டல் என்பது சமுத்திரம் அதாவது கடலையும் குறிக்கும் என்பது தெளிவாகிறது. மேகங்கள் தோன்றுவது கடலில் இருந்தே என்பதால் மேகங்களைக் குறித்த கொண்டல் என்ற சொல் மேகங்கள் தோன்றும் கடலையும் குறிக்கப் பயன்படலாயிற்று எனலாம்.

வாடை:

வாடை என்பது வடக்குத் திசையில் இருந்து வீசும் காற்றினைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயராகும். வடக்குத் திசையில் இருந்து வீசுவதால் இதற்கு வாடை என்ற பெயர் ஏற்பட்டது.

வடக்கு -----> வாடை

இதை ஊதைக் காற்று என்றும் கூறுவர். இது மிகவும் குளிர்ச்சியான காற்றாகும்.  இது கொண்டல் காற்றில் இருந்து வேறானது. கொண்டல் காற்றிலும் குளிர்ச்சி இருக்கும். ஆனால் அது இன்பமாய் இருக்கும். வாடைக் காற்றோ துன்பம் தரும். ஆம், வாடைக் காற்று உடலை நடுநடுங்கச் செய்யும் பனிக்காற்றாகும். பனி மிகுந்த பகுதிகளில் இருந்து வீசும் காற்றில் பனித்துகள்கள் கலந்திருப்பதால் அவை உடலை நடுக்குறச் செய்கின்றன. வாடைக் காற்றில் பனி கலந்திருப்பதைக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

அரும்பனி கலந்த அருளில் வாடை - ஐங்குறுநூறு - 479

பொதுவாக வாடைக் காற்று வீசும் பொழுது மென்மையான மலர்களின் இதழ் ஓரங்கள் சுருண்டு கொள்ளும். அதுமட்டுமின்றி  விலங்குகளும் பறவைகளும் கூட குளிர் தாங்காமல் சுருண்டு படுக்கும். வாடுதல் / வாட்டுதல் என்ற சொல்லின் பயன்பாடு வாடைக் காற்றின் சுருண்டு கொள்ளச் செய்யும் இத் தன்மையில் இருந்தே தோன்றி இருக்கக் கூடும்.

தென்றல்:

தென்றல் என்பது தெற்குத் திசையில் இருந்து வீசும் காற்றுக்குத் தமிழர்கள் சூட்டிய பெயராகும். தெற்குத் திசையில் இருந்து வீசுவதால் இக் காற்றுக்குத் தென்றல் என்ற பெயர் ஏற்பட்டது.

தெற்கு ----> தென்றல்

நால்வகைக் காற்றிலும் இதமான காற்று தென்றலே ஆகும். மென்மையாக வருடிக் கொடுத்து அருமையான சுகத்தை அளிப்பது தென்றல் காற்றே ஆகும். நால்வகைக் காற்றில் தென்றலே மக்களால் மிகவும் விரும்பப்படுவது. மரம், செடி, கொடி, ஆறு, மலை, பள்ளத்தாக்கு எனப் பல்வேறு தடைகளையும் கடந்துவருவதால் தென்றலின் வேகம் மெதுவாகவே இருக்கும். அதுமட்டுமின்றி வரும் வழியில் பல மூலிகைகளையும் தடவிக் கொண்டு வருவதால் தென்றல் காற்று நோய் தீர்க்கும் மருத்துவக் காற்றாகவும் திகழ்கிறது.

பலவித மலர்களின் நறுமணத்தைத் தென்றலானது அள்ளி வரும் பொழுது கூடவே வண்டுகளையும் அழைத்துக் கொண்டு வந்துவிட்டதாக இளங்கோ கூறுகிறார்.

வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் - சிலம்பு - 2, 24

ஆனால் தென்றலைப் பற்றிய கவியரசு கண்ணதாசரின் கற்பனை வேறுவிதமாக இருக்கிறது. திரைப்பாடல் ஒன்றில் தென்றலைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்.

'நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
நடந்த இளம் தென்றலே'

இப்படிப் புலவர்கள் நாவில் பொருந்திய தென்றல் காற்றே நால்வகைக் காற்றில் வலிமை குறைந்த ஒன்றாகும்.

தொல்தமிழக எல்லைகள்:

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம் எங்கே அமைந்திருந்தது என்னும் கேள்விக்கான விடையினை மேலே கண்ட நான்கு வளிகளே தெள்ளத் தெளிவாகக் கூறி நிற்கின்றன. பொதுவாக மக்கள் தாம் வாழும் இருப்பிடத்தைப் பொருத்துத்தான் திசைச் சொற்களை உருவாக்குவார்கள். சான்றாக, தமது இருப்பிடத்திற்கு கீழ்த்திசையில் உள்ள நாட்டைத் தான் கீழை நாடு என்பார்கள். அதைப் போல தொல்தமிழரும்  தாம் வாழ்ந்த நாட்டிற்கு,

கிழக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கொண்டல் என்றார்கள்.
மேற்குப்பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் கோடை என்றார்கள்.
வடக்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் வாடை என்றார்கள்.
தெற்குப் பகுதியில் இருந்து வீசிய காற்றைத் தான் தென்றல் என்றார்கள்.

இப்படி அழைப்பது தான் இயல்பு வழக்காகும். அவ் வழக்கப்படியே தான் தொல்தமிழரும் அழைத்துள்ளனர். அதன்படி தொல்தமிழகத்தின்,

கிழக்குப் பகுதியில் கொண்டல் காற்றைத் தருகின்ற மேகங்களை உருவாக்கும் கடலும்
மேற்குப் பகுதியில் கோடைக் காற்றை உருவாக்கும் பாலை நிலமும்
வடக்குப் பகுதியில் வாடைக் காற்றை உருவாகும் பனிமலையும்
தெற்குப் பகுதியில் தென்றல் காற்றை உருவாக்கும் காடு, மலைகளை உடைய நீண்ட நிலப் பகுதியும்

இருந்திருக்க வேண்டும். இவ்வாறு கிழக்கில் கடலையும், மேற்கில் பாலைவனத்தையும், வடக்கில் பனிமலையையும், தெற்கில் நீண்ட நிலப்பகுதியையும் எல்லைகளாகக் கொண்ட நில அமைப்பு இன்றைய இந்தியாவில் எப் பகுதியில் அமைந்துள்ளது என்று காண்போம்.

இன்றைய இந்தியாவில் தொல்தமிழகம்:

இன்றைய இந்தியாவின் புவி அமைப்பினை நோக்கும் பொழுது வடக்கில் பனிமலையும் மேற்கில் பாலைவனமும் கிழக்கில் கடலும் தெற்கில் நீண்ட நிலப் பகுதியும் கொண்ட தொல்தமிழகமானது,

பனிமலையான இமயமலைக்குக் கீழேயும்
இராஜஸ்தானில் உள்ள தார் பாலைவனத்திற்கு வலது புறத்திலும்
வங்கக் கடலுக்கு இடது புறத்திலும்

இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஆனால் இந் நிலத்தின் தெற்கு எல்லையைத் தெளிவாகக் கூற இயலவில்லை. ஏனென்றால் தெற்கே நீண்ட நிலப் பகுதி இருப்பதால் தொல்தமிழகத்தின் தெற்கு எல்லை எதுவரை பரவி இருந்தது என்பதை அறுதியாகக் கூற இயலவில்லை. மேலதிக ஆய்வுகள் மூலமே அதனை உறுதி செய்ய வேண்டும்.

தற்போதிய ஆய்வு முடிவுகளின் படி, தொல்தமிழகமானது, தற்போதிய மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா, ஜார்கண்ட், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சில பகுதிகளின் தொகுப்பாக இருந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. கீழ்க்காணும் படத்தில் தொல்தமிழக நிலப்பகுதியானது சிவப்பு வண்ணத்தில் காட்டப்பட்டுள்ளது.

கங்கை நதியை அடிப்படையாகக் கொண்டு எழுந்த இந்த தொல்தமிழரின் நாகரீகம், தொல்காப்பியர் குறிப்பிட்டது போல ஐவகை நிலங்களையும் உள்ளடக்கியதாகவே தெரிகிறது. படத்தில் காட்டியுள்ளபடி, தொல்தமிழகத்தின்

மத்தியில் மருத நிலமும்
மேற்கில் பாலை நிலமும்
கிழக்கில் நெய்தல் நிலமும்
வடக்கில் குறிஞ்சி நிலமும்
தெற்கில் முல்லை நிலமும்

இருந்திருக்க வேண்டும்.

                                                               .................. தொடரும்.

செவ்வாய், 4 அக்டோபர், 2011

நான்கு கடவுள் - பகுதி 2 (தெய்வப் பொருட்கள்)


தெய்வப் பொருட்கள்:

பழந்தமிழர்கள் மேகம் (மாயோன்), மலை (சேயோன்), சூரியன் (வேந்தன்) மற்றும் கடல் (வருணன்) ஆகிய நால்வகைப் இயற்கைப் பொருட்களையே தெய்வங்களாக எண்ணி வழிபட்டனர் என்று முன்னர் கண்டோம். இவற்றை மட்டுமின்றி அவர்கள் இவ் இடங்களில் விளைந்த சிறு பொருட்களையும் தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர். தெய்வம் சார்ந்த பொருட்கள் எவை எவை என்று இங்கே காணலாம்.
உப்பு:

கடல் தரும் அமிழ்தம் என்ற பெயருடன் நமது அன்றாட உணவில் இன்றியமையாத இடம் பிடித்துவிட்ட பொருள் தான் உப்பு. 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' , ' உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பினை உணர்த்தி நிற்பவை. உணவுக்குச் சுவை கூட்டி உணர்வுகளைப் பதப்படுத்தும் பொருளே உப்பு. உணவில் உப்பின் அளவு மிகுந்தாலும் அவ் உணவுப் பொருள் உண்ணப்படாமல் வீணாகிவிடும். வள்ளுவர் உப்பின் அளவு குறித்து இவ்வாறு கூறுகிறார்.

உப்பு அமைந்தற்றால் புலவி, அது சிறிது
மிக்கற்றால் நீள  விடல் - குறள் - 1302

நாம் நுகரும் உணவிற்குத் தேவையான அளவிற்கு உப்பைச் சேர்த்தால், அது உணவிற்குச் சுவை ஊட்டும். அதைப்போல், தலைவன், தலைவியிடையே நிகழும் ஊடலும் அளவோடு இருந்தால் இன்பம் தரும். மாறாக, உணவில் உப்பை அளவுக்கு மீறிச் சேர்த்தால் அதனால் அந்த உணவையே உண்ண முடியாமல் இருப்பதைப்போல, ஊடல் அளவுக்கு அதிகமாக நீடித்தால், துன்பம் தருவது மட்டுமல்ல, இருவர் உறவைக் கூட பாதிக்கும்படி செய்துவிடும். அன்றாடம் நாம் நம் நடைமுறை வாழ்க்கையில், உணவில் பயன்படுத்தும் உப்பை, காதலர்களுக்கிடையே நிகழும் ஊடலுக்கு ஒப்பிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.
நாவிற்குச் சுவை தந்து இன்பமளிப்பதால் உப்பு என்ற சொல் இனிமையைக் குறிக்கவும் பயன்படலாயிற்று.

கடலைத் தெய்வமாக வணங்கிய பழந்தமிழர்கள் அக் கடலில் இருந்து பிறக்கும் இந்த உப்பினையும் தெய்வமாகக் கருதி வழிபட்டனர். அந்தத் தெய்வம் தான் மகாலக்ஷ்மி. ஆம், கடல் தரும் அமிழ்தமாகிய உப்பு தான் மகாலக்ஷ்மி ஆகும். இது எவ்வாறு என்று காண்போம்.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் மகாலக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுவர். அதைப்போல கடலில் இருந்து பெறப்படும் அமிழ்தமே உப்பு ஆகும். ஆம், கதிரவனின் வெப்பத்தால் கடல்நீர் ஆவியாகி மேலே சென்று மேகங்களாகிறது. அதே சமயம் உப்பு கீழே படிகிறது. உப்பு பிறக்கும் இந் நிகழ்ச்சியினைத் தான் பாற்கடலைக் கடைந்த போது அமிழ்தத்துடன் லக்ஷ்மி வெளிப்பட்டாள் என்று கூறுகின்றனர்.

கடல்நீர் ஆவியாகும் பொழுது பிரிந்து மேலே சென்ற மேகங்களை மாயோன் (திருமால்) என்று வழிபட்டனர். அதே சமயம் கீழே படிந்த உப்பினை மகாலக்ஷ்மி என்று வழிபட்டனர். இந்த மகாலக்ஷ்மியே பின்னாளில் திருமாலை மணம் புரிந்தவள். மாயோனின் மார்பில் இருந்துகொண்டு அவனைக் குளிர்விப்பவள் இந்த லக்ஷ்மி. அதைப்போலவே மேகங்கள் மழை பெய்யாமல் வானில் திரிந்து கொண்டிருந்தால் அவற்றைக் குளிர்வித்து செயற்கையாக மழை பெய்யச் செய்வதற்கு இந்த உப்பைத்தான் மேகங்களின் மேல் தூவுகிறார்கள். உப்புக்கும் மேகத்திற்கும் இடையே உள்ள இத் தெய்வீகத் தொடர்பு வியப்பாக உள்ளது அல்லவா?

இன்றைய நடைமுறையில் பல மங்கல நிகழ்வுகளில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது இந்த உப்பு ஆகும். குறிப்பாக புதுமனைப் புகும் பொழுது முதலில் வீட்டுக்குள் கொண்டு செல்லப்படுபவை உப்பும் மஞ்சளும் ஆகும். இதில் உப்பு என்பது மகாலக்ஷ்மி ஆகும். முதலில் உப்பைக் கொண்டு செல்வதன் காரணம் புது இல்லத்தில் மகாலக்ஷ்மியின் அருளால் பொருள் வளம் கொழிக்க வேண்டும் என்பதே.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று கூறுவார்கள். இந்த அமிர்தம் என்பது உப்பே ஆகும். உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்து உண்டால் அது உடலுக்குப் பல தீங்குகளை விளைவிக்கும். அதிக ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றிற்கு எளிதாக வழிவகுக்கும். உணவில் உப்பு குறைவாக இருந்தாலும் குறைந்த ரத்த அழுத்தம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றிற்கு அடிகோலும். இதைத்தான் 'மிகினும் குறையினும் நோயே' என்றனர் பெரியோர். பொருள் செல்வமும் அவ்வாறே ஆகும். அளவுக்கு அதிகமாக பொருள் அல்லது சொத்து சேர்த்து வைத்தவர்களின் நிலை என்ன என்று நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம். ஒரளவுப் பணம் நமக்குப் பாதுகாப்பைத் தரும். அதுவே அதிகமானால் பணத்தை நாம் பாதுகாக்க வேண்டி வரும். அதனால் மன நிம்மதியை இழந்து தவிக்க நேரிடும். அவ்வகையில்,

உணவில் உப்பும் 
உழைப்பில் பணமும் (உழைப்பு இல்லாத பணம். உழைத்தால் அதிக பணம் ஈட்ட முடியாதே!)
ஓரளவே சேர்க்க வேண்டும் 

என்னும் கருத்து உறுதியாகிறது. இங்கு உப்பு, பணம் என்ற இரண்டிற்கும் மகாலக்ஷ்மியே தெய்வமாக இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

மஞ்சள்:

உப்புக்கு அடுத்தபடியாக மங்களப் பொருளாகக் கருதப்படுவது மஞ்சள் கிழங்கு ஆகும். புதுமனைப் புகுவிழாவில் உப்புடன் இதையும் சேர்த்துத்தான் வீட்டிற்குள் முதலில் கொண்டு செல்வார்கள். பொருள் பெருக்கத்திற்கு உப்பு என்றால் மங்களத்திற்கு மஞ்சள் ஆகும். புது வீட்டில் தொடர்ந்து மங்கள நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று விரும்பியே மஞ்சள் கிழங்குகளை ஒரு தனித்தட்டில் எடுத்துச் செல்கின்றனர்.

மஞ்சளைப் பயன்படுத்தாத பெண்கள் தமிழகத்தில் இல்லை என்று கூறலாம். பெண்களின் முகத்திற்குப் பொலிவினைத் தருவதுடன் நல்லதொரு கிருமிநாசினியாகவும் மஞ்சள் செயல்படுகிறது. வெளிப்புறத்தில் மஞ்சளாகவும் உட்புறத்தில் சிவப்பாகவும் உள்ள கிழங்கு மஞ்சளையே பெண்கள் பெரிதும் விரும்புவர். இந்த மஞ்சள் விளைவது செம்மண் பூமியில். செம்மண் பூமியை சேயோன் என்று வழிபட்ட மக்கள் அம் மண்ணில் விளையும் மஞ்சளையும் அத் தெய்வம் சார்ந்த பொருளாகவே கருதினர்.

இந்த மஞ்சள் என்ற சொல்லே மங்கள் என்று திரிந்திருக்கக் கூடும் என்று தோன்றுகிறது. ஏனென்றால் மஞ்சள் நிறத்தை மங்களகரம் என்று இன்றும் நாம் கூறுகிறோம். மங்களகரமான மஞ்சள் நிறத்தைத் தருகின்ற மஞ்சளை விளைவித்துத் தருகின்ற படியால் சேயோனுக்கு அதாவது முருகனுக்கு மங்களன் என்ற பெயரும் உண்டு. மங்களவாரம் என்று முருகனுக்குரிய செவ்வாய்க் கிழமையை நாம் கூறுவது இதன் அடிப்படையில் எழுந்ததே. கீழ்க்காணும் படம் இத் தொடர்பினை விளக்கும்.

மஞ்சள் ---> மங்களம் --> மங்களன் (முருகன்)

நெல்லும் கரும்பும்:

கடலில் விளைந்த உப்பையும் செம்மண்ணில் விளைந்த மஞ்சளையும் மட்டுமின்றி நெல்லையும் கரும்பினையும் கூட தெய்வம் சார்ந்த பொருட்களாகவே கருதினர் பழந்தமிழர். மருத நிலத்தின் வயல்களில் பயிர் செய்யப்பட்ட இவற்றைக் கொண்டு தான் மருத நிலத்தின் தெய்வமான சூரியனுக்கு பொங்கலைப் படையல் இடுகின்றனர். இதைத்தான் தைத்திங்கள் முதல் நாளன்று பொங்கல் திருவிழாவாக மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

உண்மையில் பொங்கல் திருவிழாவானது சூரியனுக்கு உழவர்கள் நன்றி செலுத்தும் விழாவாகும். வயல்களில் இருந்து புதிதாக அறுவடை செய்த முதல்நெல்லை அவித்து அரிசியாக்கி வைத்திருப்பர். புதிதாக அறுத்த கரும்புகளின் சாற்றில் இருந்து வெல்லம் தயாரித்து வைத்திருப்பர். இவ் இரண்டையும் கொண்டு பொங்கல் சமைத்து அதை சூரியனுக்குப் படைத்து வழிபடுவர். சூரியனைப் போலவே நெல்லுக்கும் கதிர் உண்டு என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பாலை:

தலைப்பில் கூறப்பட்ட நூற்பாவில் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நால்வகை நிலங்களைக் கூறிய தொல்காப்பியர் அகத்திணை இயலின் 11 வது பாடலில் ஐந்தாவது நிலம் ஒன்றையும் குறிப்பிடுகிறார்.

நடுவுநிலைத் திணையே நண்பகல் வேனிலொடு
முடிவுநிலை மருங்கின் முன்னிய நெறித்தே.

ஏனை நான்கு நிலங்களுக்கும் பெயர்களைக் கூறிய தொல்காப்பியர் ஐந்தாவது நிலத்திற்கு பெயரெதுவும் கூறாமல் நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார். ஆனாலும் இந் நிலத்தின் தன்மைகளைக் கூறிவிட்டுத் தான் சென்றுள்ளார். இந் நிலத்தின் சிறுபொழுது நண்பகல் ஆகும். பெரும்பொழுது வேனில் ( இளவேனில் மற்றும் முதுவேனில்) ஆகும். பின்பனிக் காலமும் உரியதே. இந் நிலத்தில் வாழும் மக்கள் கடைநிலை குலத்தவர் (முடிவுநிலை மருங்கு = கடைநிலைக் குலம்) ஆவர். 'முன்னிய நெறித்தே' என்பது கடைநிலைக் குலத்தவர் எதிர்ப்படும் பாதையைக் குறிப்பது. அதாவது பாதையில் செல்வோரை இடைமறித்துத் தாக்கி வழிப்பறி செய்வார்கள் என்பதனை குறிப்பாக உணர்த்துகிறார்.

(மருங்கு = குலம்; முன்னுதல் = எதிர்ப்படுதல் - சான்று: சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி)

சரி, தொல்காப்பியர் ஏன் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை என்று கூறுகிறார் என்பதைப் பற்றிக் காண்போம். இவ்வகை நிலங்கள் ஓர் இடத்தில் அல்லது ஓர் ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குச் செல்லும் வழியின் இடைப்பட்டதாய் (நடுவினதாய்) இருக்கும். அதனால் தான் இந் நிலத்தை நடுவுநிலைத் திணை அதாவது இடைப்பட்ட நிலம் என்று கூறுகிறார் தொல்காப்பியர். அதுமட்டுமின்றி இவ் வகை நிலங்கள் முல்லை, குறிஞ்சி, மருதம் போன்ற நிலங்களிலும் இடையிடையே இருக்கும். ஊர் விட்டு ஊர் செல்லும் மக்கள் இந்த இடைப்பட்ட நிலங்களைக் கடந்து செல்லும்போது தான் அங்குள்ள ஆறலைக் கள்வர்களால் (வழிப்பறித் திருடர்கள்) தாக்கப்படுவர்.

அகத்திணை இயலின் முதல் நூற்பாவில் இவ்வாறு கூறுகிறார்.

கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப
அவற்றுள்
நடுவண் ஐந்திணை நடுவணது ஒழிய
படுதிரை வையம் பாத்திய பண்பே.

மேற்காணும் பாடலிலும் ஐந்தாவது நிலத்தை 'நடுவணது' என்று தான் கூறுகிறாரே ஒழிய அதன் பெயர் இன்னதென்று கூறவில்லை. இப்படி அகத்திணை இயலில் எந்த ஒரு இடத்திலும் ஐந்தாவது நிலத்தின் பெயரைக் கூறாத தொல்காப்பியர் புறத்திணை இயலில் கீழ்க்காணும் பாடல் மூலமாகத் தான் அந்த ஐந்தாவது நிலம் 'பாலை' என்பதை 'உய்த்துணர' வைக்கிறார்.

வாகை தானே பாலையது புறனே - பா: 15

இந்த நடுவண் நிலமாகிய பாலைநிலத்தில் வாழும் ஆறலைக் கள்வர்கள் யாரைத் தெய்வமாக வணங்கினர் என்பதற்கான குறிப்புகள் தொல்காப்பியத்தில் இல்லை.

                                                                                                          - தொடரும்.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

நான்கு கடவுள் - பகுதி 1 (நிலமும் தெய்வமும்)


முன்னுரை:

தொல்காப்பிய பொருளதிகாரத்தில் அகத்திணை இயலில் கூறப்படும் நால்வகைக் கடவுளரை பற்றிய விரிவான செய்திகளை ஆய்வுசெய்வதே இக் கட்டுரையின் நோக்கம் ஆகும். இருந்தாலும் அவற்றுடன் தொடர்புடைய பல வரலாற்று உண்மைகளையும் இங்கே காணப் போகிறோம். முதலில் நால்வகைக் கடவுளரைப் பற்றிக் கூறும் தொல்காப்பியப் பாடலைக் காணலாம்.

மாயோன் மேய கானுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமதில் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலென
சொல்லிய முறையான்
சொல்லவும் படுமே.
- தொல்காப்பியம்-பொருளதிகாரம்-
அகத்திணை இயல்-பாடல் எண்:5

(பி.கு: இப்பாடலில் வரும் கானுறை, பெருமதில் என்ற சொற்கள் நமது 'மாயோன் மேய' என்ற ஆய்வுக் கட்டுரையின் படி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.)

இப் பாடலில் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற நால்வகைக் கடவுளரைக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்த நால்வகைக் கடவுளரும் யார் யார்? என்பதை ஆராய்வதே இக் கட்டுரையின் முதல் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கம்:

மாயோன் என்றால் மாமை (இளங்கருப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் மாமை நிறங்கொண்ட கடவுளாகிய திருமாலைக் குறிக்கிறது. பலவகையான பூக்களின் கலவையான மணத்தை எப்போதும் உடையதாயிருக்கும் காடு மற்றும் காடு சேர்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாகத் திருமால் கூறப்படுகிறார்.

சேயோன் என்றால் செம்மை (இளஞ்சிவப்பு) நிறமுள்ளவன் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. வண்ணத்தின் அடிப்படையில் இச்சொல் செம்மை நிறங்கொண்ட கடவுளாகிய (செவ்வேள்) முருகவேளைக் குறிக்கிறது. மேகங்கள் படிந்திருக்கும் மலை மற்றும் மலை சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக முருகவேள் கூறப்படுகிறார்.

வேந்தன் என்றால் இந்திரன் (தேவர் கோமான்) என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. இனிய சுவை உடைய ஆற்றுநீர், ஊற்றுநீர்  போன்ற நீர்வளங்கள் நிறைந்த வயல் மற்றும் வயல் சார்ந்த இடங்களை ஆளும் தெய்வமாக இந்திரன் கூறப்படுகிறார்.

வருணன் என்றால் மழைக்கடவுள் என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பெரிய மணற்பரப்பையும் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அலைகளையும் உடைய கடல்  மற்றும் கடல் சார்ந்த நிலங்களை ஆளும் தெய்வமாக வருணன் கூறப்படுகிறார்.

இயற்கையே கடவுள்:

தொல்காப்பியத்தில் வரும் மாயோன், சேயோன், வேந்தன், வருணன் என்ற சொற்களில் ஆண்பாலுக்குரிய 'அன்' விகுதி சேர்ந்து வருவதால் அவை பொதுவாக ஆண்மக்களை அல்லது ஆண்பால் கடவுளரைக் குறிப்பது போல ஒரு தோற்றம் உருவாகிறது. இதுவே பின்னாளில் பலப்பல கற்பனைகளுக்கு இடமளித்து ஆண்மக்களின் உருவம் கொண்ட கடவுளாக எண்ணுவதற்கு அடிகோலி இருக்கிறது. உண்மையில் இந்த நான்கு சொற்களும் எதைக் குறிக்கிறது?

உண்மையில் இந்த நான்கு சொற்களும் ஆண்மக்களை அல்லாமல் இயற்கைப் பொருட்களையே குறிக்கிறது. ஆம் இயற்கை வழிபாடே பழந்தமிழர்களின் முதன்மை வழிபாடாகும். தன்னைச் சுற்றியுள்ள இயற்கையை உற்றுநோக்குவதும் அதன் சிறப்பைப் போற்றிப்பாடி மகிழ்வதுமே பழந்தமிழரின் வழிபாடாகும். தமக்கு உதவியாய் இருந்து தம்மைப் பாதுகாத்து வருகின்ற இயற்கையினை தமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவன் நினைவுகூற மறக்கவில்லை. மகிழ்ச்சி, வீரம், துயரம், அழுகை போன்ற எந்த உணர்ச்சி நிலையிலும் அவன் இயற்கையைப் பற்றி பாடுவதற்கு மறக்கவில்லை. நமது சங்க இலக்கியங்களே இதற்குச் சான்றாக இருக்கின்றன.

மழை:

இயற்கையின் பல்வேறு நிகழ்வுகளில் 'மழை' ஒரு மிகமிக இன்றியமையாத நிகழ்வாகும். நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவனின் வாக்கிற்கேற்ப மழையே உலகின் தன்மையினை நிர்ணயிக்கிறது. மாந்தரின் பண்புகளையும் அரசனின் ஆட்சியினையும் மாற்றியமைக்க வல்லது இந்த மழை. பயிர்களின் பிறப்பிற்கு உறுதுணையாய் இருப்பது மட்டுமின்றி பல உயிர்களின் வாழ்விற்கும் ஆதாரமாய் அமைந்திருப்பது இம் மழையாகும்.

இம் மழையுடன் தொடர்புடையவை நான்கு. அவை கடல், கதிரவன், கார்மேகம் மற்றும்  குறிஞ்சி (மலை).

கதிரவனின் வெப்பத்தால் கடல் நீர் ஆவியாகி கார்மேகங்கள் உருவாகின்றன. விண்ணில் தவழும் இம் மேகங்கள் மலைகளின் மேல் தவழ்ந்து விளையாடும் அழகைப் பாடாத புலவர் இல்லை எனலாம். பின்னர் இம் மேகங்கள் மழையாய்ப் பொழிந்து மலைகளையும் மண்ணையும் குளிரச் செய்கின்றன.

நான்கு கடவுள்:

இந்த மழை நிகழ்ச்சியுடன் தொடர்புடைய நால்வகை இயற்கைப் பொருட்களையே பழந்தமிழர்கள் போற்றிப்பாடி மகிழ்ந்து வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்ததக்கது. ஆம், பழந்தமிழர்கள் வழிபட்டு வந்த இந்த நால்வகை இயற்கைப் பொருட்கள் இந்த கடல், கதிரவன், கார்மேகம் மற்றும் மலையே ஆகும்.

மழை தரும் மேகங்கள் கருநிறமுடையவை. இந்த மேகங்களையே மாயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்கள் உருவாகக் காரணமாய் இருப்பது கதிரவன். இக் கதிரவனையே வேந்தன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மேகங்களின் பிறப்பிற்கு அடிப்படையாய் இருப்பது கடல். இக் கடலையே வருணன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.
மழையின் பயனை நுகர்வது மலை அதாவது நிலம் ஆகும். இந்த நிலத்தையே சேயோன் என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

முருகன் வள்ளித் திருமணம்:.

என்றால் இந்த மழை என்பது யாரைக் குறிக்கிறது?. அது தான் வள்ளி. பல்வேறு வளங்களைத் தருவதால் மழைக்கு வள்ளி (வள்ளன்மையுடையவள்) என்று பெயர். வாரி வழங்குவதில் மாரிக்கு நிகர் உண்டா?. கைம்மாறு கருதாமல் உலக உயிர்கள் அனைத்திற்கும் பயன் தருவது மழை. பாரிவள்ளலைப் போற்றும் ஒரு புலவர் அவனை மாரியுடன் (மழையுடன்) ஒப்பிட்டுக் கூறுகிறார்.

பாரி பாரி என்று பல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே.  - புறநானூறு:

இந்த மழைநீர் பூமியில் விழும் முதல் இடம் மலையே ஆகும். மலை என்பதும் ஒருவகை நிலமே. பொதுவாக மலைகளில் உள்ள மண் செம்மண்ணாகத் தான் இருக்கும். இந்த செம்மண் நிலமானது மழைநீருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையே முருகு புணர்ந்து இயன்ற வள்ளி (நற்றிணை: 82) என்னும் தொடரால் குறிப்பிடப்படுகிறது. மண்ணிற்கு பல நிறங்கள் உண்டென்றாலும் செந்நிறமே மண்ணுக்குரிய பொதுவான நிறம். இந்த செம்மண் நிலத்தைத்தான் செவ்வேள் என்று கூறுவர். வேள் என்றால் மண், நிலம் என்ற பொருளும் உண்டு. வேளாண்மை என்பது மண்ணை ஆளுதல் என்ற பொருளில் விவசாயத்தைக் குறிப்பதாகும்.  இனி,

மங்குல் (மேகம்) ஆகிய திருமால் மாமனாய் இருந்து
மழை ஆகிய வள்ளி மகளை
மலை ஆகிய முருகனுக்கு

மணம் செய்விப்பதே மழை நிகழ்வாகும் என்றால் அது சாலப் பொருத்தமாய் உள்ளது அல்லவா?

சரி, திருமணம் என்றால் சாட்சிகள் அதாவது பார்வையாளர்கள் இல்லாமலா?. குறைந்தது இருவராவது வேண்டுமே. அவ்வகையில் இத் திருமணத்திலும் இரண்டு சாட்சிகள் உண்டு. ஒருவர் சூரியன். இவர் பூமியாகிய முருகவேளைத் தோற்றுவித்த தந்தை. இன்னொருவர் சந்திரன். ஆகமொத்தம், சூரிய சந்திரர் சாட்சியாக இத் திருமணம் இனிதே நடைபெறுகிறது.

தொல்காப்பியத்தில் வள்ளி:

மழை என்ற பொருளில் வள்ளி என்ற சொல்லை தொல்காப்பியரும் பயன்படுத்தியுள்ளார்.

கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் முதலன மூன்றும்
கடவுள் வாழ்த்தொடு கண்ணிய வருமே. (தொல்.புற - 33)

இதில் வரும் வள்ளி என்பது மழையினைக் குறிக்கும். கந்தழி என்பது பற்றறுத்த தன்மையினைக் குறிக்கும். கொடிநிலை என்பது கொடிபோல உயர்ந்த நிலையில் பறந்தவாறு இறைவனின் புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கும் அறத்தைக் குறிக்கும்.

தொல்காப்பியர் கூற்றுப்படி, கடவுள் வாழ்த்தினை அடுத்து அறமும், அதனையடுத்து பற்றின்மையும், அதனையடுத்து மழையின் சிறப்பும் பாடப்பெற வேண்டும். ஏனென்றால் இறைவனுக்கு மிக அணுக்கமாக இருப்பது அறம் தானே. அதன்படி திருக்குறளில் கடவுள் வாழ்த்தை அடுத்து அறன் வலியுறுத்தலும், அதையடுத்து நீத்தார் பெருமையும் அதையடுத்து வான்சிறப்பும் வந்திருக்க வேண்டும். ஆனால் இன்று நாம் காணும் திருக்குறளில் கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார்பெருமை, அறன் வலியுறுத்தல் என்று முறை வைக்கப்பட்டுள்ளது. அதாவது கடவுளுக்கு அடுத்த படியாக மழை வைக்கப்பட்டுள்ளது. இம் முறைவைப்பினை வள்ளுவர் தான் செய்தாரா அல்லது பின்னால் வந்த உரையாசிரியர்கள் செய்தனரா எனத் தெரியவில்லை.

ஆனால் வள்ளுவரே இந்த முறை மாற்றத்தினை செய்திருக்கலாமோ என்று எண்ணும் வகையில் ஒரு குறள் இருக்கிறது.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.  - குறள்: 19.

அறச்செயல்களான தானமும் தவமும் மழை இல்லையேல் இவ் உலகில் நிலைபெறாது என்கிறார் வள்ளுவர். இது உண்மைதான். ஏனென்றால் மழை இல்லையேல் உலகில் உணவுவளம் இல்லை. உணவு இல்லையேல் மனிதப் பண்புகளே இல்லை. பசி வந்தால் பத்தும் பறந்து போவதைப்போல மனிதன் மனிதப்பண்பினையே மறந்து உணவுக்காக உயிர் வாழ்வதற்காக எதையும் செய்யத் துணிவான். இதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். ஆகவே அறத்தைவிட இன்றியமையாதது மழை என்றால் அது மிகையாகாது.

நிலமும் தெய்வமும்:

காடும் காடுசார்ந்த இடமுமாகிய முல்லைநிலத்திற்குத் தெய்வம் மாயோன் என்றார் தொல்காப்பியர். அதைப்போல மலையும் மலைசார்ந்த இடமாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வம் சேயோன் என்றார். இனிய நீர்வளங்களை உடைய வயலும் வயல் சார்ந்த மருத நிலத்திற்குத் தெய்வம் வேந்தன் என்றும் கடலும் கடல்சார்ந்த நெய்தல் நிலத்திற்குத் தெய்வம் வருணன் என்றும் கூறுகிறார். இந்த நிலங்களுக்கும் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு? எதன் அடிப்படையில் இன்ன நிலத்திற்கு இன்ன தெய்வம் என்று வகுத்தனர் பெரியோர்?. இதைப் பற்றி இங்கே காணலாம்.

முல்லை நிலத்தின் மக்கள் இடையர், இடைச்சியர், ஆயர், ஆய்ச்சியர் ஆகியோர். இவர்களின் முதன்மைத் தொழில் ஆடு, மாடுகளை மேய்த்தல் ஆகும். காலையில் மேய்ப்புக்குச் செல்லும் ஆண்மக்கள் மாலையில் வீடு திரும்பும் வரை அவர்களது வரவுக்காக இல்லத்தில் காத்திருப்பர் அவரது இல்லத்தரசிகள். இந்த இருத்தல் (காத்திருத்தல்) நிமித்தம் மாலைநேரத்தில் (பிற்பகல் 6 மணி முதல் பிற்பகல் 10 மணி வரை) நிகழ்வதால் மாலைப் பொழுதே முல்லைக்குரிய சிறுபொழுதாக வைக்கப்பட்டது. முல்லைநிலத்துக் கால்நடைகளின் முதன்மை உணவான பசும்புற்கள் நன்கு செழித்து வளர்வது கார்காலமே ஆகும். அதனால் தான் முல்லைநிலத்துக்குரிய பெரும்பொழுதாக கார்காலத்தை வைத்தனர். இந்த கார்காலத்தில் தான் கரியநிற மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் திரிந்து கொண்டிருக்கும். எனவே தான் மேகத்தினை (மாயோன்) முல்லைநிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் பெரியோர்.

குறிஞ்சி நிலத்தின் மக்கள் குறவர், குறத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் செந்தினைப் பயிர்செய்தல் ஆகும். தினைகளை மலைச்சாரல்களில் பயிரிட்டு வளர்க்கும்பொழுது இப் பயிர்களுக்கு யானைகள் போன்ற விலங்குகளால் தொல்லை ஏற்படும். பகல் நேரத்தில் பெற்றோரும் சகோதரர்களும் தினைப்புனங்களில் வேலைசெய்த அலுப்பினால் இரவில் தினைப்புனங்களில் காவல் இருக்க தமது கன்னிப் பெண்களை அவளது தோழிமாருடன் காவலுக்கு வைப்பர். என்னதான் காவல் இருந்தாலும் நள்ளிரவு நேரத்தில் கண்ணயராமல் இருக்க முடியாதே! தோழிகள் கண்ணுறங்க நள்ளிரவாகிய சாமத்தில் காதல் கொண்ட தலைவனும் தலைவியும் சந்திப்பர். குறிஞ்சி நிலத்துக்குரிய கூடல் நிமித்தம் இந்த நேரத்தில் நிகழ்வதால் யாமப்பொழுதே (பிற்பகல் 10 மணி முதல் முற்பகல் 2 மணி வரை) குறிஞ்சிக்குரிய சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. மேலும் ஆண்டுமுழுவதும் மலைச்சரிவுகளில் பயிர் செய்யமுடியாது. மழைக்காலத்தில் மழைநீரானது சரிவான நிலங்களில் விளைந்துள்ள பயிர்களை எளிதாக அடித்துச்சென்று விடும். மழை குறைந்த குளிர் காலம் மற்றும் முன்பனிக் காலங்களில் தான் தினைப்பயிர் செய்ய முடியும். எனவே இந்த காலங்கள் தான் குறிஞ்சிக்குரிய பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. குறிஞ்சி நில மக்களின் முதன்மை உணவு செந்தினை மாவும் செந்தேனும் ஆகும். இவற்றை விளைவித்துத் தருகின்ற மலைநிலமும் ஒரு செம்மண் பூமியாவதால் செம்மண் நிலமான மலையினை (சேயோன்) குறிஞ்சி நிலத்தின் தெய்வமாகக் கொண்டனர் முன்னோர்.

மருத நிலத்தின் மக்கள் உழவர், உழத்தியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் நெல் சாகுபடி ஆகும். பொன்னி, சம்பா போன்ற பலவகையான அரிசி வகைகளை வயல்நிலங்களில் பயிரிட்டு வளர்ப்பர். ஓர் ஆண்டுக்கு முப்போகம் நெல் சாகுபடி செய்வர். எனவே மருத நிலத்திற்கு (ஆண்டு முழுவதும்) ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. மருத நிலத்துக்குரிய நிமித்தம் ஊடல் ஆகும். தலைவியை விட்டு பரத்தையரிடம் சென்று இரவு முழுவதும் கழித்த தலைவன் அதிகாலையில் (வைகறையில்) தனது இல்லம் திரும்புவான். வாசல் கதவைத் திறக்காமல் தலைவனுடன் சண்டை இடுவாள் தலைவி. இந்த ஊடல் நடைபெறுவது வைகறை என்பதால் வைகறையே (முற்பகல் 2 மணி முதல் முற்பகல் 6 மணி வரை)  மருதநிலத்தின் சிறுபொழுதாகக் கொள்ளப்பட்டது. நெல் சாகுபடிக்கு மழை மட்டும் இருந்தால் போதாது. அதை அறுவடை செய்ய வெயிலும் வேண்டும். மழைமேகங்களைத் தோற்றுவித்து மழைக்குக் காரணமாய் இருப்பதுடன் பயிர்கள் வளரவும் அறுவடை செய்யவும் தேவையான வெயிலும் வெப்பமும் தருவதால் கதிரவனே (வேந்தன்) மருத நிலத்துக்குரிய தெய்வமாகக் கொள்ளப்பட்டான்.

நெய்தல் நிலத்தின் மக்கள் நுளையர், நுளைச்சியர் ஆவர். இவர்களின் முதன்மைத் தொழில் கடலில் மீன் பிடித்தல் ஆகும். மீன்பிடித் தொழில் ஆண்டுமுழுவதும் நடைபெறுவதால் நெய்தல் நிலத்திற்கு ஓராண்டின் ஆறு பருவங்களும் பெரும்பொழுதாகக் கொள்ளப்பட்டன. பெற்றோரும் சகோதரர்களும் மீன்பிடிக்கச் சென்றுவிட கடற்கரை மணல் மேடுகளில் மீன்களை காயவைக்கும் வேலையில் தம் வீட்டுக் கன்னிப்பெண்களை அமர்த்தியிருப்பர். இச்சமயத்தில் அங்குவரும் தலைவன் தலைவியை சந்திப்பான். காதலில் மகிழ்ந்திருக்கும் பொழுது நேரம் போவதே தெரியாதே!. திடீரென்று அந்திசாயத் துவங்கிவிடும். கடலில் மீன்பிடிக்கச் சென்ற பரதவ மக்கள் அந்திசாயும் பொழுதாகிய எற்பாட்டில் தான் கரைக்குத் திரும்புவார்கள். இதனால் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று விடுவான். பிரிந்து சென்ற தலைவனை நினைத்து இரங்கி (வருந்தி) இருப்பாள் தலைவி. இப்படி இரங்கல் நிமித்தம் நிகழ்கின்ற இந்த எற்பாடே (பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை) நெய்தல் நிலத்தின் சிறுபொழுதாக வரையறுக்கப்பட்டது. கடலை நம்பியே வாழ்ந்து வந்த நெய்தல்நில மக்கள் கடலையே (வருணன்) தெய்வமாகக் கொண்டனர்.

நில வைப்பு முறை:

தலைப்பில் கண்ட நூற்பாவில் முல்லைநிலத்தை முதலிலும் அதற்கடுத்து குறிஞ்சியும் அதனையடுத்து மருதமும் இறுதியாக நெய்தலையும் வைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். இது ஏன் என்று காண்போம்.

பழந்தமிழர் வாழ்க்கை நெறியினை கற்பு, களவு என்று இரண்டாக வகுத்திருந்தனர். இதில் கற்பு எனப்படுவது பல்லோரறிய திருமணம் புரிந்து இல்லறத்தில் ஈடுபடுவது. களவு என்பது யாரும் அறியாமல் காதல் செய்வது. நால்வகை நிலங்களில் முல்லை நிலத்தில் மட்டுமே கற்புநெறி வாழ்க்கையைக் காட்டியுள்ளனர் சான்றோர். முல்லையில் ஏன் களவு நடைபெறவில்லை? காரணம் முல்லைநில மக்களின் வாழ்க்கை முறைதான். ஏனை நிலங்களைப் போலன்றி முல்லைநிலத்தில் ஆண்மக்கள் மட்டுமே ஆடு, மாடுகளை மேய்ப்பிற்கு ஓட்டிச் செல்வர். அவரது பெண்டிரும் பிள்ளைகளும் வீட்டில் இருந்துகொண்டு கன்றுக்குட்டிகளையும் ஆட்டுக் குட்டிகளையும் பராமரிப்பர். கன்னிப் பெண்களுடன் அவரது தாயாரும் மற்றோரும் எப்போதும் உடன் இருப்பதால் இங்கு களவில் சந்திக்க வாய்ப்பு அமைவதில்லை. இருந்தாலும் பெண்கள் தமது விருப்பப்படி கணவரைத் தேர்ந்தெடுக்க ஒரு வழிமுறையும் அவர்களிடத்தில் இருந்திருக்கிறது. அதுதான் ஏறு தழுவுதல் விளையாட்டு. இவ் விளையாட்டில் வெற்றிபெறும் காளையரையே பலர் முன்னிலையில் பெண்கள் மணந்து கொள்வர். ஆக முல்லை நிலத்தின் காதல் மற்ற நிலங்களின் காதலைப் போலன்றி பல்லோரறிய நிகழ்வது. எனவே இது களவாகாது. களவினை விட கற்பு உயர்ந்தது என்பதால் கற்புநெறியை பின்பற்றும் முல்லை நிலத்தை முதலில் வைத்தார் தொல்காப்பியர்.

இந்த முல்லைநிலத்திற்கு உரிய சிறுபொழுது மாலைப் பொழுதாகும். இந்த மாலைப் பொழுதை அடுத்து யாமமும் அதனையடுத்து வைகறையும் அதனையடுத்து காலை, பகல், எற்பாடு என்று வரிசையாக வரும். இந்த ஆறு சிறுபொழுதுகளின் வரிசைக்கேற்பவே நிலங்களையும் அமைத்துப் பாடியுள்ளார் தொல்காப்பியர். கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

மாலை------> யாமம் -------> வைகறை -------> காலை -------> பகல் ----------> எற்பாடு
(6 -10)            (10 - 2)                        ( 2 - 6)                  (6 - 10)            (10 - 2)              ( 2 - 6)

முல்லை ------> குறிஞ்சி ------> மருதம் -------> திணை இல்லை ------------> நெய்தல்

சிறுபொழுதினைப் போலவே பெரும்பொழுதிலும் கார்காலத்தை அடுத்தே கூதிரும் முன்பனியும் வரும். அவ்வகையிலும் கார்காலத்துக்குரிய முல்லை முன்னதாகவும் கூதிர் மற்றும் முன்பனிக் காலங்களைக் கொண்ட குறிஞ்சி பின்னதாகவும் வைக்கப்பட்டது. ஆறு பருவங்களையும் பெரும்பொழுதுகளாகக் கொண்ட மருதமும் நெய்தலும் இவற்றின் பின்னால் வைக்கப்பட்டன. கீழ்க்காணும் படம் இதனை விளக்கும்.

கார்காலம் -------> கூதிர்,முன்பனி -------> ஆறு பருவங்கள்
முல்லை ---------> குறிஞ்சி -------------------> மருதம், நெய்தல்


                                                                             தொடரும்....