புதன், 23 மார்ச், 2016

குறங்கு என்றால் என்ன?



முன்னுரை:

சங்ககாலம் தொட்டுப் பயின்றுவந்து இன்று நடைமுறையில் வழக்கற்றுப் போன பல தமிழ்ச் சொற்களுள் ஒன்றுதான் குறங்கு என்பதாகும். இச் சொல்லுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பொருட்களை இன்றைய அகராதிகள் கூறி இருந்தாலும் அவற்றில் எதுவுமே பொருந்திவராத பல இடங்கள் இலக்கியங்களில் காணப்படுகின்றது. இது இச் சொல்லுக்கு புதிய பொருள் இருக்கும் நிலையினையே காட்டுகின்றது. இச் சொல் உணர்த்தும் அந்தப் புதிய பொருள் என்ன என்பதைப் பற்றியும் அப் பொருள் எவ்வாறு இச் சொல்லுக்குப் பொருந்தும் என்பதைப் பற்றியும் இக் கட்டுரையில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் காணலாம்.

குறங்குஅகராதிகள் காட்டும் பொருட்கள்:

குறங்கு என்னும் சொல்லுக்குத் தற்காலத் தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் மூன்று பொருட்களையே காட்டுகின்றன.

1.       தொடை.                                         2. கிளைக்கால்.                                          3. கொக்கி.

பொருள் பொருந்தாத இடங்கள்:

அகராதிகள் மேலே காட்டுகின்ற மூன்று பொருட்களும் பல இலக்கியப் பாடல்களில் பொருந்தாதபோதும் அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம். 

கல் அறை கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ   
அகம் -385

 இப் பாடல் வரிகளுக்குப் பொருள்கூறுமிடத்து, குறங்கு என்பதற்கு தொடை எனவும் தித்தி என்பதற்கு தேமல் எனவும் பொருள்கொண்டுஆலமரத்தின் விழுதுகளானவை தலைவியினுடைய தேமல் நிறைந்த தொடைகளின் மேல் பட்டு உரசியதாகஉரைகூறியுள்ளனர். இந்த உரை பொருத்தமானதா என்றால் கிஞ்சித்தும் இல்லை. இதற்கான காரணங்கள் கீழே முன்வைக்கப்படுகின்றன.

1.       1. எந்த ஒரு பெண்ணும் தனது தொடையானது பிறர்காண வெளியே தெரியுமாறு  உடை அணியமாட்டாள். அதுவும் அப்படி வெளியில் தெரியுமாறு காட்டிக்கொண்டு வெட்ட வெளியில் நடந்துவர மாட்டாள். மேலும் இப்பாடல் விலைமாதரைப் பற்றியதுமல்ல. பிறர்காணவே முடியாத நிலையில் இருப்பதான தொடையில் தேமல் இருந்தது என்று கூறுவது ஏற்புடையதல்ல. 

2.       2. ஆலமரத்தின் விழுதுகள் மேலிருந்து கீழ்நோக்கித் தொங்குபவை. அவற்றைத் தலைவியானவள் கடக்கும்போது அவ் விழுதுகள் தலைவியின் தலையைத் தான் முதலில் தீண்டுமே ஒழிய தொடையினைத் தீண்ட வழியில்லை.

இவற்றிலிருந்து இப் பாடலில் வரும் குறங்கு என்பது தொடையைக் குறித்து வந்திருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

பெண்களின் குறங்கினை யானையின் துதிக்கையுடன் உவமைப்படுத்திப் பல பாடல்களில் பாடியுள்ளனர். சான்றுக்கு சில பாடல்கள் மட்டும் கீழே:

இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்            -  பொருந.

இரும் பிடி தட கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின்       - சிறுபாண்.

பிடி கை போலும் திரள் குறங்கின்  சிந்தா-1/353

மேற்காணும் பாடல்களில் வரும் குறங்கு என்பதற்கு தொடை என்று பொருள்கொண்டால், பெண்களின் தொடையானது யானையின் துதிக்கை போலத் தோன்றியது என்று பொருள்படுகிறது. இவ்வாறு பொருள்கொள்வது பொருந்துமா என்றால் இல்லை. அதற்கான காரணங்கள் இதோ கீழே:

3.      1. முன்பே சொன்னதைப் போல எந்தப் பெண்ணும் தனது தொடையானது வெளியே பிறர்காணத் தெரியுமாறு உடையுடுத்த மாட்டாள். பிறர்காணவே முடியாத நிலையில், தொடையினைப் பற்றி பிற பொருட்களுடன் உவமைப்படுத்திக். கூறமாட்டார்கள்.  

4.     2. பெண்களின் தொடையாகட்டும், ஆண்களின் தொடையாகட்டும் ஒரே வடிவத்தில் தான் இருக்கும். இது அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் ஒரு பொருட்டாக உவமைப்படுத்திக் கூறவேண்டிய தேவை புலவர்களுக்கு இல்லை

5.      3.      தொடைக்கும் யானையின் துதிக்கைக்கும் ஒரு ஒற்றுமை கூட இல்லை. ஏன் மேலே விரிந்து கீழே சுருங்கிவரும் வடிவ ஒற்றுமை இல்லையா என்று கேட்கலாம். சொல்லப்போனால் அதுவும் ஒற்றுமை இல்லை. பெண்களின் தொடை மற்றும் காலமைப்பினை நன்கு கவனித்தால் இந்த உண்மை புரியும். மாறாக, தொடைக்கும் துதிக்கைக்கும் வேறுபாடுகள் தான் பல உண்டு. யானையின் துதிக்கையில் உட்துளை உண்டு. பெண்களின் தொடையில் அது இல்லை. யானையால் தனது துதிக்கையினை மேல்நோக்கி வளைக்கவும் கீழ்நோக்கி வளைக்கவும் முடியும். ஆனால் தொடைகளை அவ்வாறு செய்ய இயலாது

மேற்கண்ட காரணங்களை நோக்கும்பொழுது, பெண்களின் தொடையினை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறுவது தவறு என்பது புலப்படும். ஆனால், புலவர்கள் இப் பாடல்களில் பெண்களின் குறங்கினை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். இதிலிருந்து, இப் பாடல்களில் வரும் குறங்கு என்பதும் பெண்களின் தொடையினைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

அடுத்து, பெண்களின் குறங்கினை வாழை மரத்துடன் ஒப்பிட்டும் பல பாடல்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கே காணலாம்.

மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்கம்பரா. அயோத். 2/37

குறங்கு என மால் வரை ஒழுகிய வாழை  - சிறுபாண்.

இரு குறங்கின் பிறங்கிய வாழையில் குருகுறங்கும்கம்பரா. 15/41


மேலே கண்ட பாடல்களில் பெண்களின் குறங்கினை வாழை மரத்துடன் ஒப்பிட்டுக் கூடியுள்ளனர். இப் பாடல்களில் வரும் குறங்கு என்பதற்கு தொடை எனப் பொருள்கொண்டு, வாழைத்தண்டு போல வழுவழுப்பான பெண்களின் தொடை என்று உரைகூறியுள்ளனர். இவ் உரைகள் பொருந்துமா என்றால் சற்றும் பொருத்தமற்றவை என்பதே பதில். இதற்கான காரணங்களைக் கீழே காணலாம்.
 
6.       1.  நாம் முன்பே கண்டதுபோல, எந்த ஒரு பெண்ணும் தனது தொடையழகினைப் பிறர் கண்டு ரசிக்குமாறு ஆடை அணியமாட்டாள். அவ்வாறு அணிவது ஒரு பெண்ணுக்கு அழகல்ல என்பதுடன் நல்ல பண்பாடுமல்ல. மேலும் அது  ஆடவர் மனதில் காம இச்சையைத் தூண்டிவிடும் என்பதால், அதை மறைத்தே ஆடை அணிவார்கள். பிறர்காணவே முடியாத நிலையில், தொடையினைப் பற்றி பிற பொருட்களுடன் உவமைப்படுத்தி யாரும் கூறமாட்டார்கள்.

7.     2.   பெண்களின் தொடையானது மேலே பெருத்து கீழே சிறிதாகும் வடிவினது. ஆனால், வாழைத்தண்டோ கீழே பெருத்து மேலே சிறுக்கின்ற இயல்பினது. ஆக, இவ் இரண்டுக்கும் இடையே வடிவ ஒப்புமையும் இல்லை.

   3. மேலே உள்ள மூன்று பாடல்களிலும் பெண்களின் குறங்கினுக்கு ஒப்பாகத்தான் வாழையைக் கூறியிருக்கிறார்களே ஒழிய வாழைக்கு உவமையாக பெண்களின் குறங்கினைக் கூறவில்லை. அப்படியென்றால், இந்த வாழைத்தண்டுகளைப் பார்த்தபோதெல்லாம் பெண்களின் ஆடைநீங்கிய தொடையழகு தான் இப் புலவர்களுக்கு நினைப்பில் வந்தது என்றல்லவா பொருள்படும்.?. அப்படி ஒருபொருளில் புலவர்கள் பாடுவார்களா என்றால் உறுதியாக இல்லை. காரணம், இப் பொருளானது புலவர்களின் நுண்மாண் நுழைபுலத்திற்கும் கண்ணியத்திற்கும் ஒருபோதும் பெருமை சேர்க்காது.

நாம் மேலே கண்டவற்றில் இருந்து, பெண்களின் குறங்கினை வாழைத்தண்டுடன் ஒப்பிடுவது தவறானது என்பதை அறியலாம். ஆனாலும் புலவர்கள் பெண்களின் குறங்கினை வாழையுடன் ஒப்பிட்டுப் பாடி இருப்பதில் இருந்து இப் பாடல்களில் வரும் குறங்கு என்ற சொல்லுக்குத் தொடை என்னும் பொருள் பொருந்தாது என்பது உறுதியாகிறது.


குறங்குபுதிய பொருள் என்ன? :

குறங்கு என்னும் சொல்லுக்கு இங்கே காட்டப்படும் புதிய பொருள்:

கண்ணிமை.



குறங்கு = கண்ணிமை என நிறுவுதல்:

குறங்கு என்னும் சொல் எவ்வாறு கண்ணிமை என்ற புதிய பொருளைக் குறிக்கும் என்று இங்கே விரிவாக பல ஆதாரங்களுடன் காணலாம்.

குறுகிய அங்கம் = குறு + அங்கம் = குறங்கம் என்பதே குறங்கு எனத் திரிந்து வழங்கியிருக்கலாம். காரணம், பெண்களின் புற உடல் உறுப்புக்களில் குறுகிய உறுப்பாக அடிக்கடி புலவர்களால் பாடப்படுவது இந்தகண்ணிமையே ஆகும். இக் கண்ணிமைக்கு நுசுப்பு, ஓதி, கூந்தல், மேனி, கதுப்பு எனப் பல பெயர்களும் உண்டு என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். புலவர்கள் கண்ணிமையைப் பாடும்பொழுது, அதன் நுட்பத்தன்மையை அதாவது குறுகிய தன்மையைக் குறிப்பிட்டு, நுணுகிய நுசுப்பு, ஒடுங்கு ஈர் ஓதி என்றெல்லாம் பாடுவது வழக்கம். இனி, கண்ணிமை எனும் பொருளில் குறங்கு என்னும் சொல் எங்கெல்லாம் பயின்று வருகின்றது என்பதைக் கீழே காணலாம்.

கல் அறை கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்
தித்தி குறங்கில் திருந்த உரிஞ வளை உடை முன்கை அளைஇ கிளைய
பயில் இரும் பிணையல் பசும் காழ் கோவை அகல் அமை அல்குல் பற்றி
கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும்அகம் -385

மேலே காணும் அகநானூற்றுப் பாடல் தலைவியை தலைவன் எவ்வாறெல்லாம் அழகுசெய்து மகிழ்ந்தான் என்பதை விவரிக்கிறது. தலைவியானவள் தலைவனுடன் நடந்துவரும் பொழுது, வழியில் இருந்த ஆலமரத்தில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த  விழுதுகளின் மேல் தெரியாமல் மோதுகிறாள். இதனால் தலைவியின் நெற்றியில் அணிந்திருந்த அணிகலன்கள் நிலைகுலைந்தன; வண்ணப் பொட்டுகளால் வரையப்பட்டு அழகாக இருந்த கண்ணிமைகள் பாழாயின. இதனால் மனமுடைந்து தலைவி வருத்தமுறுவதைக் கண்ட தலைவன், தலைவியின் கண்ணிமைகளை மயில் தோகையில் இருக்கும் கண்களைப் போலத் தோன்றுமாறு மைபூசி அழகுசெய்கிறான். அதுமட்டுமின்றி, சிறிய பூமாலையினையும் மணிக்கோவையினையும் அவளது நெற்றியில் அணிவித்து அவளை மகிழச் செய்கிறான்.

இவ் விளக்கம் இப் பாடலுக்கு எவ்வளவு பொருத்தமாய் இருக்கிறது என்பதைக் காணுங்கள். காரணம், இப் பாடலில் வரும் குறங்கு என்பதற்கு கண்ணிமை என்று பொருள்கொண்டதே ஆகும். மேலும் இப் பாடலில் வரும் தித்தி என்பது வண்ணப் பொட்டுகளைக் குறிக்கும் என்று அழகின் மறுபெயர் அல்குல் என்ற கட்டுரையில் முன்னர் விரிவாகக் கண்டுள்ளோம். இனி, மேலும் சில ஆதாரங்களைக் காணலாம்.

குறங்கும் துதிக்கையும்:

பெண்களின் குறங்கினை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்களில் குறங்கு என்பதற்கு கண்ணிமை என்ற பொருள் பொருந்திவருமாற்றை ஈண்டு காணலாம். 

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்
இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின்    - பொருந.

இதன் பொருள்: வண்டுகள் நெருக்கமாக அமர்ந்திருப்பதைப் போல பல மணிகளால் ஆன கோவையினை அணிந்த நெற்றியும், கரிய பெண்யானையின் துதிக்கையினைப் போல செறிவுற்று வரிகளுடன் விளங்கும் கண்ணிமைகளும்…..

ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடி தட கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின்     - சிறுபாண்.

இதன் பொருள்: கரிய பெண்யானையின் நிலத்தில் தோய்கின்ற துதிக்கையினைப் போல செறிவுற்று வரிகளுடன் திகழும் கண்ணிமைகள்……..

மறம் கிளர் மத கரி கரமும் நாணின
குறங்கினுக்கு உவமை உலகில் கூடுமோகம்பரா. சுந்த. 4 / 44

இதன் பொருள்:  வலிமை மிக்க யானையொன்று, தலைவியின் கண்ணிமையில் இருந்த அழகிய வரிகளைக் கண்டு நாணமுற்று தனது கையினை உயர்த்த மாட்டாது தாழ்த்தி நிலத்தில் போட்டதாம். என்ன ஒரு கற்பனை கம்பனுக்கு !!!!

பின்னிவிட்ட பிடி தட கை இரண்டு போன்று திரண்டு அழகார்
கன்னி கலிங்கம் அகில் ஆர்ந்து கவவி கிடந்த குறங்கினாள்சிந்தா -7/1658

இதன் பொருள்: மெல்லிய ஆடைகொண்டு மூடியிருந்த அவளது கண்ணிமைகள் அகில் பூசப்பட்டு, யானையின் தும்பிக்கையினைப் போலத் திரண்டு  அழகிய வரிகளுடன் விளங்கின.

இப் பாடலில், தலைவியானவள் அகில் குழம்பினை தனது குறங்கினில் பூசி இருப்பது சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பெண்டிர் யாரும் தமது தொடையில் அகில் குழம்பினை பூசிக்கொள்ள மாட்டார்கள் மாறாக, அவற்றை தமது கண்ணிமைகளின் மேல் பூசிக்கொள்வர் என்று பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? என்ற கட்டுரையில் முன்னர் கண்டுள்ளோம்.

பிடி கை வென்று கடைந்தன போல் பஞ்சி ஆர்ந்த திரள் குறங்குசிந்தா -13/2695

இதன் பொருள்: யானையின் துதிக்கையினைப் போலத் தோன்றுமாறு பல வரிகள் இழைக்கப்பட்ட, மெல்லிய ஆடை தழுவிய செறிந்த கண்ணிமைகள்……..

இனி, புலவர்கள் பெண்களின் கண்ணிமைகளை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டு ஏன் பாடினார்கள் என்று பார்ப்போம்.

பெண்களின் கண் இமைகளில் இயற்கையாகவே பல சுருக்கங்கள் அதாவது வரிகள் காணப்படும். சிலருக்கு இவ் வரிகள் மெலிதாகவும் சிலருக்கு ஆழமாகவும் காணப்படும். பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகு சேர்க்குமிடத்து, இவ் வரிகள் தெளிவாகத் தெரியுமாறு கரியமைகொண்டு பூசி வரைந்திருப்பர்.  இவ் வரிகள் பார்ப்பதற்கு யானையின் துதிக்கையில் காணப்படும் வரிகளைப் போலத் தோன்றுவதால் இவ் இரண்டையும் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர்.

பெண்களின் கரிய மையுண்ட கண்ணிமைகளை யானையின் துதிக்கையுடன் ஒப்பிட்டுபிடிக் கை கூந்தல்என்று புலவர் பாடியிருப்பதனைபெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா? ‘ என்ற கட்டுரையிலும் கண்டு தெளியலாம்.

குறங்கும் வாழையும்:

பெண்களின் குறங்கினை வாழையுடன் ஒப்பிட்டுப் பாடியிருக்கும் பாடல்களில் குறங்கு என்பதற்கு கண்ணிமை என்ற பொருள் எவ்வாறு பொருந்தும் என்பதைக் கீழே காணலாம்.
 
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்கம்பரா. அயோத். 2/37

இதன் பொருள்: பெண்களின் கண்ணிமைகளைப் போலத் தோன்றுமாறு பூத்திருக்கும் வாழைகள்………

இப் பாடலில் வரும்வகுத்தஎன்ற சொல்லானது படைத்தல், தோற்றுவித்தல் என்ற அகராதிப் பொருளில், வாழைமரம் பூக்களை ஈன்றுள்ள நிலையைச் சுட்டுவதாகும்.

குறங்கு என மால் வரை ஒழுகிய வாழை  - சிறுபாண். 

இதன் பொருள்: பெண்களின் மையுண்ட கண்ணிமைகள் போலும் அழகிய வரிகள் ஒழுகும் பூக்களை ஈன்றுள்ள மலைவாழைகள்…….

இரு குறங்கின் பிறங்கிய வாழையில் குருகுறங்கும்கம்பரா. 15/41

இதன் பொருள்: பெண்களின் மையுண்ட கண்ணிமைகளைப் போலப் பூத்திருக்கும் வாழையினில் நாரையானது உறங்கும்…….

தண்டலை வாழை அன்ன குறங்கிடை அல்குல் தட்டில்
கொண்ட பூம் துகிலும் கோவை கலைகளும் சோர   - கம்பரா. சுந்தர. 2/186

இதன் பொருள்: குளிர்ச்சிமிக்க தலைவாழையின் பூக்களைப் போலத் தோன்றும் மையுண்ட கண்ணிமைகளுக்கு  இடையில் நெற்றிப் பகுதியில் அணிந்திருந்த மேகலையும் மலர்மாலையும் முகத்திரையுடன் தளரவும்………..

இனி, பெண்களின் கண்ணிமைகளை ஏன் வாழைப்பூக்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடினர் என்று பார்ப்போம்.

பெண்கள் தமது கண்ணிமைகளை அணிசெய்யுமிடத்து, அதை மைகொண்டு பூசவும் அதில் உள்ள வரிகளைத் தெளிவாக எழுதவும் செய்வர். இதில் பெண்கள் அதிகம் விரும்பி பூசும் வண்ணம் செவ்வண்ணம் ஆகும். செவ்வண்ணம் கொண்டு பூசிய கண்ணிமைகளை மாமரத்து இளந்தளிருடன் ஒப்பிட்டுமாந்தளிர் மேனிஎன்று புலவர்கள் பாடியிருப்பதைமேனி என்றால் என்ன? ‘ என்ற கட்டுரையில் முன்னர் கண்டோம். அதைப்போல, இங்கு பெண்களின் செவ்வண்ணம் பூசிய வரிகளையுடைய கண்ணிமைகளை வாழைப்பூக்களின் வரிகளையுடைய செவ்விதழ்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். 

வாழைமரத்தை சாதாரணமாகப் பார்ப்பதைக் காட்டிலும் அது பூத்திருக்கும் சமயத்தில் பார்ப்பது கண்ணுக்கு விருந்தாகும். அப்படி பூத்திருக்கும் பூக்களின் வரிகளை உடைய செவ் இதழ்களைக் காணுமிடத்து, பெண்களின் மையுண்ட வரிகள் எழுதப்பட்ட கண்ணிமைகள் புலவர்களின் நினைவுக்கு வருவதில் வியப்பில்லை; தவறுமில்லை அல்லவா?.

அதுமட்டுமின்றி, பெண்களின் மையுண்ட வரிகளை உடைய கண்ணிமைகளை வாழைப்பூவின் இதழ்களுடன் ஒப்பிட்டுவாழைப்பூ எனப் பொலிந்த ஓதிஎன்று  புலவர்கள் பாடியிருப்பதைகதுப்புஓதிநுசுப்புஎன்ற கட்டுரையில் விரிவாகக் கண்டு தெளியலாம்.

குறங்கு =  கண்ணிமை - மேலும் சில விளக்கங்கள்:

குறங்கு என்னும் சொல்லுக்கு கண்ணிமை என்ற பொருள் பொருந்தி வருவதான மேலும் சில இலக்கிய இடங்களை இங்கே விளக்கங்களுடன் காணலாம்.


மழை தோயும் உயர் மாடத்து சே அடி செறி குறங்கின்
பாசிழை பகட்டு அல்குல் தூசு உடை துகிர் மேனி
மயில் இயல் மான் நோக்கின் கிளி மழலை மென் சாயலோர்   - பட்டின.

இதன் பொருள்: மேகங்கள் தவழும் உயர்ந்த மாடங்களில், சிவந்த கடைக்கண்களையும் நெருங்கிய வரிகளையுடையதும் செம்பவளம் போல பூசப்பட்டதுமான கண்ணிமைகளையும் அழகிய அணிகளை அணிந்த நெற்றியினையும் உடையவராய் மயில் போன்ற நடையினையும் மான் போல் மருட்சியுடைய நோக்கினையும் கிளி போன்ற மொழியினையும் கொண்ட இளம்பெண்கள்……… 

மட கண் தகர கூந்தல் பணை தோள்
வார்ந்த வால் எயிற்று சேர்ந்து செறி குறங்கின்
பிணையல் அம் தழை தைஇ துணையிலள்
விழவு_களம் பொலிய வந்து நின்றனளே           - நற். 170

இதன் பொருள்: மணம்வீசும் தகரச்சாந்து பூசிய நெருங்கிய வரிகளையுடைய இமையினையும் கூர்மையாக எழுதிய கடைக்கண்ணையும் பெரிய தோள்வரிகளையும் உடையவளாய் நெற்றியில் மாலையணிந்து தனியாக அவள் விழாவுக்கு வந்தபோது அந்த இடமே களைகட்டியது…….

அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை
தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்பகுறு. 293

இதன் பொருள்: நெற்றியில் அணிந்திருந்த வெள்ளாம்பல் மலர்மாலையானது, கண்ணிமைகளின் மேல் வரைந்திருந்த வண்ணப் பொட்டுக்களின் அழகுகெடுமாறு அசைந்தாடவும்…….

தாமரை மலர்க்கு உவமை சால்புறு தளிர் கை
பூ மருவு பொன் செறி குறங்கிடை பொருந்த                            - கம்பரா.கிட்கி.14/46

இதன் பொருள்: தாமரை மலரின் இதழ்களுக்கு உவமையாகக் கூறத்தக்க மெல்லிய சிவந்த கைகளை, வேங்கையின் பூப்போலத் தோன்றுமாறு பொன்வண்ணம் கொண்டு பூசப்பட்ட நெருங்கிய வரிகளையுடைய கண்ணிமைகளின் மேல் வைத்து………

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, குறங்கு என்னும் சொல்லுக்கு அகராதிகள் கூறும் பொருட்களைத் தவிரகண்ணிமைஎன்ற பொருளும் உண்டு என்பதைத் தெள்ளிதின் அறிந்துகொண்டோம்.

பொதுவாக குறங்கு என்பது கண்ணிமையைக் குறித்தாலும், அக் கண்ணிமையில் இருக்கின்ற வரிகளே அதன் சிறப்பாவதால், குறங்கு என்னும் சொல் கண்ணிமைப் பொருளில் இருந்து வரிகள் என்ற பொருளையும் நாளடைவில் குறிக்கப் பயன்படலாயிற்று. இந்த வரிகள் என்ற பொருளில் இருந்தே கிளைக்கால் என்ற அகராதிப் பொருள் தோன்றி இருக்கக் கூடும்.

மேலும், குறங்கறுத்தல் என்னும் சொல்லுக்கு கால்வாயில் இருந்து தனிக்கால் பிரிதல் என்று அகராதிகள் பொருள்கூறுகின்றன. உண்மையில் குறங்கறுத்தல் என்பது கண்ணிமைகளில் வரிகளை உருவாக்குதல் என்ற பொருள்நிலையைக் குறித்துவந்து நாளடைவில் அது தற்போதிய பொருளைக் குறிக்கலாயிற்று எனலாம்

==================== தமிழ் வாழ்க ===============