செவ்வாய், 26 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 4 ( உயிருக்குள் ஒளிந்திருக்கும் உண்மைகள் )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியலைப் பற்றி விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்புகளை விளக்கமாகக் கண்டோம். மூன்றாம் பகுதியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் எண்களுக்கு அவற்றின் மதிப்பு நீங்கலாக  வேறு புதிய பொருள்களும் உண்டு என்று தெளிந்தோம். நான்காம் பகுதியான இதில் உயிர் எழுத்துக்களைப் பற்றி விளக்கமாகக் காணலாம்.

உயிர் எழுத்துக்களும் வகைப்பாடும்:

தமிழில் உள்ள உயிர் எழுத்துக்கள் பன்னிரெண்டையும் பல முறைகளில் பலவகைகளாகப் பகுத்துள்ளனர். சான்றாக, அ,இ,உ,எ,ஒ போன்றவற்றைக் குறில் என்றும் ஏனையவற்றை நெடில் என்றும் ஒலிக்கும் மாத்திரைகளின் அடிப்படையில் வகுத்துள்ளனர். எழுத்துக்கள் பிறக்கும் முறையின் அடிப்படையில் அ, ஆ ஆகியவற்றை அங்காப்பு எழுத்துக்கள் என்றும் உ,ஊ,ஒ,ஓ,ஔ ஆகியவற்றை குவிநிலை எழுத்துக்கள் என்றும் பலவாறாகப் பகுத்துள்ளனர்.

இக்கட்டுரையில் உயிர் எழுத்துக்களை சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துக்கள், உணர்ச்சி எழுத்துக்கள் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் விளக்கங்களுடன் காணலாம்.

சுட்டெழுத்துக்கள்:

சுட்டெழுத்து என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தினையோ பொருளையோ மனிதரையோ சுட்டிக்காட்டும் பொருளில் வரும் எழுத்தாகும். உயிரெழுத்துகளில் 'அ', 'இ', உ' என்ற மூன்று எழுத்துகளும் அவற்றின் நெடில்களும் சுட்டெழுத்துகள் ஆகும். அ என்ற எழுத்து கண் தோன்றாத சேய்மையையும், இ என்ற எழுத்து அண்மையையும் உ என்ற எழுத்து சேய்மைக்கும், அண்மைக்கும் இடைப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் நிலத்தையும் சுட்டுவன. அகரம் பேசுவோனுக்கும் கேட்போனுக்கும் சேய்மையிலுள்ள பொருளையும்; இகரம் பேசுவோனுக்கு அண்மையிலுள்ள பொருளையும்; உகரம் கேட்போனுக்கு அண்மையிலுள்ள பொருளையும் சுட்டுவதே பொதுவான மரபாகும். சுட்டெழுத்துக்கள் அகச்சுட்டு (அவன், இவன், உவன்), புறச்சுட்டு (அக்கரை, இப்பக்கம், உதுக்காண்) என இருவகைப்படும்.

தொல்காப்பிய எழுத்ததிகாரத்தில் நூல்மரபின் 31 ஆம் நூற்பா சுட்டெழுத்துக்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.

அ இ உ அம்மூன்றும் சுட்டு. - 31.

அ, இ, உ ஆகிய மூன்று எழுத்துக்களும் சுட்டெழுத்துக்கள் ஆகும் என்று கூறுகிறது மேற்காணும் நூற்பா. அ, இ, உ என்று குறில் எழுத்துக்களை மட்டுமே நூற்பா குறிப்பிட்டாலும், இவற்றின் நெடில்களாகிய ஆ, ஈ, ஊ ஆகிய மூன்றையும் கூட சுட்டெழுத்துக்களாகவே கொள்ள வேண்டும். சான்றாக,

ஆங்கண் ( ஆ முதல் சுட்டுச்சொல் ) = அவ்விடம்
ஈங்கண் ( ஈ முதல் சுட்டுச்சொல் ) = இவ்விடம்
ஊங்கண் ( ஊ முதல் சுட்டுச்சொல் ) = உவ்விடம்

ஆகிய சொற்களும் ஒரு இடத்தினைச் சுட்டிக்காட்டவே பயன்படுவதால், ஆ, ஈ, ஊ ஆகிய எழுத்துக்களும் சுட்டெழுத்துக்களாகவே அறியப்படுகின்றன.

சுட்டெழுத்துக்கள் இடம், பொருள் முதலானவற்றைச் சுட்டிக்காட்டுவதற்குப் பயன்படுகின்றன என்று மட்டுமே நாம் அறிவோம். ஆனால் உண்மையில் அவை நமக்கு எவ்வளவு பெரிய உதவியினைச் செய்கின்றன என்பதனை நாம் விரிவாக அறியமாட்டோம். இதை ஒரு எடுத்துக்காட்டுடன் பார்த்தால் நன்கு விளங்கும். கீழே உள்ள எடுத்துக்காட்டில் சுட்டுச்சொற்கள் பயின்று வந்துள்ளன.

" பாலாற்றின் வடக்கே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கே 2 கல் தொலைவில் ஒரு சிவன் கோவில் உண்டு. அக் கோவிலில் தினமும் காலையில் பூசைசெய்வதற்கு 25 வயது மதிக்கத்தக்க நல்ல சிவப்பழகுடைய ஒரு இளைஞர் வருவார். அவரை நான் ஒருநாள் சந்தித்தேன்.'

மேற்காணும் எடுத்துக்காட்டினைச் சுட்டுச்சொற்கள் இல்லாமல் எழுதினால் எப்படி இருக்கும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

" பாலாற்றின் வடக்கே நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் இருந்து மேற்கே 2 கல் தொலைவில் இருக்கும் சிவன் கோவிலில் தினமும் காலையில் பூசைசெய்வதற்கு வருகின்ற 25 வயது மதிக்கத்தக்க நல்ல சிவப்பழகுடைய ஒரு இளைஞரை நான் ஒருநாள் சந்தித்தேன். "

சுட்டுச்சொற்களைப் பயன்படுத்தி எழுதுவதற்கும் பயன்படுத்தாமல் எழுதுவதற்கும் உள்ள வேறுபாட்டினை மேலே உள்ல எடுத்துக்காட்டில் இருந்து தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அதாவது,

> சுட்டுச்சொற்கள் சொற்றொடர்களைச் சுருக்கி எழுதத் துணைபுரிகின்றன. இதனால்
> சொற்றொடரின் பொருளைச் சட்டெனப் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும்,
> சொற்றொடர்களுக்கு இடையிலான தொடர்பினையும் எளிதில் விளங்கிக் கொள்ள முடிகிறது.

சுட்டெழுத்துக்களின் உதவியினை எடுத்துக்காட்டுகளுடன் கூறுவதானால், அவை ஒரு கட்டிடத்தில் உள்ள தூக்கி (லிஃப்ட்) களைப் போலவும் சாலைகளின் கீழே உள்ள சுருங்கை (சப்-வே) களைப் போலவும் உதவிசெய்கின்றன எனலாம். மொத்தத்தில், உயரமாக அல்லது தூரமாக உள்ள இடத்திற்கு ஒரு குறுக்குவழி (ஷார்ட்கட்) யாக இவை செயல்படுகின்றன.

இதுவரை கண்டவற்றில் இருந்து, அ, ஆ, இ, ஈ, உ, ஊ ஆகிய ஆறு எழுத்துக்களும் சுட்டெழுத்துக்களாகப் பயன்படுத்தப் படுவதனை அறிந்து கொள்ளலாம்.

வினா எழுத்துக்கள்:

வினாப் பொருளைக் குறிக்கும் எழுத்துக்கள் வினாவெழுத்துக்கள் எனப்படும். இவ்வெழுத்துக்கள் ஒரு சொல்லில் வினாவை உண்டாக்குகின்றன. வினா எழுத்துக்களை அகவினா, புறவினா என்று இருவகையாகப் பிரிக்கலாம். வினாச்சொல்லில் இருந்து வினாப்பொருளைத் தரும் எழுத்தினை நீக்கினாலும் மிச்சமிருப்பவை பொருள்தரும் என்றால் அவை புறவினா எனப்படும்; பொருள்தராவிட்டால் அவை அகவினா எனப்படும். சான்றாக,

எப்பொழுது?        எவ்விடம்?        எவ்வகையில்?

ஆகிய இச்சொற்களில் இருந்து முதல் எழுத்தாகிய எ காரத்தினை நீக்கிவிட்டாலும் மிச்சமிருக்கின்ற பொழுது, இடம், வகையில் ஆகிய சொற்கள் பொருள் தருவதை அறியலாம்.  எனவே இவை புறவினாச் சொற்கள் ஆகும். இவற்றில் வரும் 'எ' கார எழுத்தானது புறவினா எழுத்தாகும். எ என்ற வினா எழுத்து புறவினாக்களை மட்டுமின்றி அகவினாக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. சான்றாக,

எங்கே?         எதற்கு?           எப்படி?
எது?            எவன்?            எந்த?

போன்றவை அகவினாச்சொற்கள் ஆகும். இச் சொற்களின் முதலில் வரும் எ கார எழுத்தே வினாப்பொருளை உணர்த்துவதுடன் இதனை நீக்கிவிட்டால் ஏனைய எழுத்துக்கள் பொருள்தராமல் போவதையும் அறியலாம். எ என்ற குறில் எழுத்து மட்டுமின்றி, இதன் நெடிலாக விளங்குகின்ற ஏ என்ற எழுத்தும் வினாப் பொருளை உணர்த்தப் பல இடங்களில் பயன்படுகின்றன. ஆனால், ஏ என்ற எழுத்தானது அகவினா எழுத்தாகும். காரணம், அந்த வினாச் சொற்களில் இருந்து இவ் எழுத்தினை நீக்கிவிட்டால் மிச்சமிருப்பவை பொருள் தராது. சான்றாக,

ஏன்?                ஏது?

என்ற அகவினாச்சொற்களில் இருந்து ஏ என்ற வினா எழுத்தினை நீக்கிவிட்டால் மிச்சமிருக்கும் ன், து ஆகிய எழுத்துக்களுக்குப் பொருளில்லை. இனி, எந்தெந்த எழுத்துக்கள் வினா எழுத்துக்களாக வரக்கூடியவை என்று நன்னூலார் கீழ்க்காணும் நூற்பாவில் கூறுகிறார்.

"எ யா முதலும் ஆ ஓ ஈற்றும்
ஏ இருவழியும் வினாவாகும்மே." - நன்னூல், எழுத்தியல். 67

இந்நூற்பாவின் பொருள்:

எ எழுத்தும் யா எழுத்தும் சொல்லின் முதலில் நின்று வினாப்பொருள் உணர்த்தும்.
சான்று: எவன்?. எப்போது? யார்?.

ஆ எழுத்தும் ஓகார எழுத்தும் சொல்லின் ஈற்றில் நின்று வினாப்பொருள் உணர்த்தும்.
சான்று: வரலாமா?. தருவானோ?

ஏ என்ற எழுத்தானது சொல்லின் முதலில் மட்டுமின்றி ஈற்றிலும் நின்று வினாப்பொருளை உணர்த்த வல்லதாகும்.
சான்று: ஏன்?. அவன் தானே?.

நன்னூலாரின் மேற்காணும் விதிப்படி, எ, ஏ, யா ஆகிய எழுத்துக்கள் சொல்லின் முதலிலும் ஆ, ஏ, ஓ ஆகிய எழுத்துக்கள் சொல்லின் ஈற்றிலும் நின்று வினாப்பொருள் உணர்த்தும் என்பது அறியப்படுகிறது.

சுட்டெழுத்துக்கள் எப்படிச் சொற்றொடர்களைச் சுருக்கி எழுதவும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் பயன்படுகின்றனவோ அதைப்போல வினா எழுத்துக்களும் சில நன்மைகளைச் செய்கின்றன. பொதுவாக, ஒருவினா தொடுக்கப்படும்போது நமக்குள் என்ன நடக்கிறது?.

> வினாவானது கூர்நுனி கொண்ட ஒரு அம்புபோல நுணுகி நமது அறிவுக் கடலுள் பாய்ந்து மூழ்குகிறது.
> பரந்துபட்ட நமது அறிவுக்கடலில் ஏதோ ஒரு விடையினைத் தேடுகிறது. இறுதியாக,
> அம்பினால் குத்துண்ட மீன்போல தனக்குள் சிக்கியதை விடையாகக் கொண்டு மேலெழும்புகிறது. 

இப்படியாக, வினாச்சொற்கள் நம்மைத் தொடர்ந்து சிந்திக்க வைக்கின்றன; தேடச்செய்கின்றன; புதிய முயற்சிகளில் நம்மை ஈடுபடச் செய்கின்றன. இந்தச் சிந்தனைகள், தேடல்கள் மற்றும் முயற்சிகளினால் தான் ஏனை விலங்குகளில் இருந்து மனிதன் மட்டும் முன்னேறி பண்பட்டதோர் விலங்கினமாக மாற முடிந்தது எனலாம். ஆக, மனிதனுடைய வாழ்க்கை நிலையினை உயர்த்த வல்ல ஆற்றல் வினா எழுத்துக்களுக்கு உண்டென்றால் அது மிகையில்லை.

உணர்ச்சி எழுத்துக்கள்:

உணர்ச்சிகளை வெளிப்படுத்த உதவும் எழுத்துக்கள் உணர்ச்சி எழுத்துக்கள் என்று அழைக்கப்படும். வியப்பு, மகிழ்ச்சி, அவலம் போன்ற உணர்ச்சிகளை மொழி வாயிலாக வெளிப்படுத்த சில எழுத்துக்களை நாம் அன்றாடம் பயன்படுத்துகிறோம். சான்றாக,

குழந்தைகள் யானையைக் காணும்போது தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்த கீழ்க்கண்டவாறு கூறுவர்.

ஐ ! யானை !

பெரிய ஆற்றினையோ கட்டிடத்தையோ பார்த்து வியக்கும்போது நாம் கீழ்க்காணுமாறு கூறுவதுண்டு.

ஓ! எவ்வளவு பெரியது !

நெருங்கிய உறவுகளின் இழப்பின்போதும் அழுகையின்போதும் அவலநிலையில் கீழ்க்காணுமாறு கூறுவதுண்டு.

ஓஓஓ! கடவுளே !

ஐ எனும் எழுத்தும் ஓ எனும் எழுத்தும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த தனித்தனியே பயன்படுத்தப் படுவதுடன் ஒன்றாகச் சேர்ந்து ஐயோ என்றும் பல நேரங்களில் பயன்படுத்தப்படுவதுண்டு.

ஐயோ ! தெய்வமே !

இப்படி உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் எழுத்துக்களாக ஐ, ஓ ஆகிய எழுத்துக்கள் பயன்படுவதால் இவற்றை உணர்ச்சி எழுத்துக்கள் என்று அழைக்கலாம்.

.... தொடரும் .....

புதன், 20 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 3 ( எண்களுக்கும் பொருளுண்டு )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றித் தொல்காப்பியம் கூறும் செய்திகளை விரிவாகக் கண்டோம். இரண்டாம் பகுதியில் மெய்யெழுத்துக்களுக்கும் வினைச்சொற்களுக்கும் இடையிலான தொடர்பினைக் கண்டோம். மூன்றாம் பகுதியான இதில் எண்களைப் பற்றிய செய்திகளைக் குறிப்பாக எண்களுக்கும் பொருளுண்டு என்பதைப் பற்றி விரிவாகக் காணலாம்.

எண்களின் சிறப்பு:

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - என்றாள் ஔவை மூதாட்டி.
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு - என்றான் ஐயன் வள்ளுவன்.

இவ் இரண்டு பாடல்களும் எண்களையே முதன்மைப்படுத்திக் கூறியிருப்பதில் இருந்து எழுத்துக்களைக் காட்டிலும் எண்களே சிறப்பு மிக்கவை என்பது கூறாமலே புரிந்துவிடும். காரணம், எழுத்துக்களைக் காட்டிலும் எண்களைப் புரிந்துகொள்வதும் பயன்படுத்துவதும் எளிதானது. சான்றாக, ஒருவரிடம் கடன் கேட்க விரும்பினால்,

ரூ. 15750 என்று எண்ணால் எழுதிக் கேட்கலாம். அல்லது
ரூ. பதினைந்து ஆயிரத்து எழுநூற்றி ஐம்பது என்று எழுத்தால் எழுதியும் கேட்கலாம்.

மேற்காணும் இரண்டு முறைகளில், எழுதுவதற்கும் புரிந்துகொள்வதற்கும் எளிமையானது எண்களால் எழுதும் முறையே என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றேயாகும். அதுமட்டுமின்றி, கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்ற பலவகையான கணக்குகளைச் செவ்வனே செய்வதற்கும் எண்களே பெரிதும் உதவிசெய்கின்றன.

எண்ணும் பொருளும்:

சொல்லுக்குப் பொருள் உண்டு என்று அனைவரும் அறிவோம். இதென்ன எண்ணுக்குப் பொருள்?. என்ற கேள்வி எழலாம். சொல்லுக்குப் பொருள் இருப்பதைப் போல எண்ணுக்கும் பொருளுண்டு. அதைப்பற்றித் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

தமிழில் எண்ணம் என்ற சொல்லுக்கு நினைப்பு, மதிப்பு என்ற இருவகையான பொருட்களைத் தற்கால அகராதிகள் குறிப்பிடுகின்றன. ஒரு முறுக்குப் பையின் மேல் 50 எண்ணம் என்று குறிப்பிட்டிருந்தால், அப் பையில் 50 முறுக்குகள் இருப்பதாகப் பொருள். இதில் வரும் எண்ணம் என்பது மதிப்பு அல்லது எண்ணிக்கையினைக் காட்டுகின்றது. ஆசிரியராவதே என் எண்ணம் என்று ஒருவர் கூறினால், ஆசிரியராக வாழ அவர் நினைக்கிறார் என்பது பொருள். இப்படி, எண்ணம் என்ற ஒரு சொல்லுக்கு எண்ணிக்கை / மதிப்பு மட்டுமே பொருள் என்றில்லாமல் நினைப்பும் ஒரு பொருளாக வருவதைப் போல ஒவ்வொரு எண்ணுக்கும் அதன் மதிப்பு மட்டுமே பொருளாக இல்லாமல் வேறொரு பொருளும் இருக்கிறது என்பதுதான் இக் கட்டுரையில் விளக்கப்பட இருக்கும் செய்தியாகும். இவ் ஆய்வுக் கட்டுரையில் 1 முதல் 9 வரையிலான எண்களானவை புதிய பொருள்தரும் அடிப்படையில் கீழ்க்காணும் நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

1. குறிநிலை எண்கள். சான்று: மூன்று, ஐந்து, ஒன்பது.
இவை குறியீட்டு நிலையிலேயே புதிய பொருளினை உணர்த்தும்.

2. சொல்நிலை எண்கள். சான்று: ஒன்று, ஆறு.
இவை சொல்நிலையிலேயே புதிய பொருளினை உணர்த்தும்.

3. புணர்நிலை எண்கள். சான்று: இரண்டு, நான்கு, ஏழு.
இவை பிறசொற்களுடன் புணரும்போது அடையும் மாற்றத்தினால் புதிய பொருளினை உணர்த்தும்.

4. இருநிலை எண். சான்று: எட்டு.
இது சொல்நிலை, புணர்நிலை ஆகிய இருநிலைகளிலும் புதிய பொருள் உணர்த்தும்.

எண்களின் இந்த நால்வகை நிலைகளைப் பற்றி ஒவ்வொரு எண்ணின் கீழே விரிவாகக் காணலாம்.

எண் ஒன்று:

எண் ஒன்றினை எண்ணால் எழுதும்போது ' 1 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஒன்று ' என்று எழுதுகிறோம். எண் ஒன்றினை '1' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'ஒன்று' என்று எழுத்தால் எழுதும்போது அது எண் ஒன்றினை மட்டும் குறிக்காமல் ' ஒன்றுபடுதல் ' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஒன்று = 1 ( எண் ) 
ஒன்று = ஒன்றுபடுதல். ( வினை )

இப்படி ஒன்று என்ற சொல்லானது சொல்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது சொல்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் இரண்டு:

எண் இரண்டினை எண்ணால் எழுதும்போது ' 2 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' இரண்டு ' என்று எழுதுகிறோம். எண் இரண்டினை '2' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. இரண்டு என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், இரண்டு என்ற சொல்லானது உயிர் முதலாக்கொண்ட வருமொழியுடன் புணரும்போது ஈர் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

இரண்டு + உருளி = ஈர் + உருளி = ஈருருளி.
இரண்டு + உடல் = ஈர் + உடல் = ஈருடல்.

இவ்வாறு இரண்டு என்ற சொல்லானது புணர்நிலையில் 'ஈர்' என்று மாற்றம் பெறும்போது அது எண் இரண்டை மட்டும் குறிக்காமல் 'ஈர்த்தல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஈர் = 2 ( எண் )
ஈர் = ஈர்த்தல் = அறுத்தல். ( வினை )

இப்படி இரண்டு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் மூன்று:

எண் மூன்றினை எண்ணால் எழுதும்போது ' 3 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' மூன்று ' என்று எழுதுகிறோம். எண் மூன்றினை 'மூன்று' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '3' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் மூன்றின் வடிவத்தினை ஆராய்ந்தால், அதில் மூன்று கிடைக்கோடுகளும் இந்த மூன்று கிடைக்கோடுகளையும் ஒருபுறமாக இணைக்கின்ற ஒரு செங்குத்துக்கோடும் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவை. அடிநிலையில் உள்ள ஒருவர் இடைநிலைக்குச் சென்ற பின்னரே முதல்நிலையினை எட்ட முடியும் என்பது பொதுவிதி. ஆனால், இந்த செங்குத்துக் கோடு என்னும் மேலூக்கி (லிஃப்ட்)யின் துணைகொண்டு அடிநிலையில் உள்ள ஒருவர் இடைநிலைக்குச் செல்லாமலேயே முதல்நிலையை அடைய முடியும். இவ்வாறாக எண் மூன்றின் வடிவமானது, ஒருவரது வாழ்க்கை நிலையினை சட்டென்று உயர்த்தி உதவி செய்யும் மேலூக்கியாகத் திகழ்கிறது என்பதைப் பொருளாக உணர்த்தி நிற்பதனை அறியலாம்.

எண் நான்கு:

எண் நான்கினை எண்ணால் எழுதும்போது ' 4 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' நான்கு ' என்று எழுதுகிறோம். எண் நான்கினை '4' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. 'நான்கு' என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், நான்கு என்ற சொல்லானது உயிர் முதலாக்கொண்ட வருமொழியுடன் புணரும்போது நால் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

நான்கு + ஆயிரம் = நால் + ஆயிரம் = நாலாயிரம்.
நான்கு + ஊர் = நால் + ஊர் = நாலூர்.

இவ்வாறு நான்கு என்ற சொல்லானது புணர்நிலையில் 'நால்' என்று மாற்றம் பெறும்போது அது எண் நான்கினை மட்டும் குறிக்காமல் 'நாலுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

நால் = 2 ( எண் )
நால் = நாலுதல் = தொங்குதல். ( வினை )

இப்படி நான்கு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஐந்து:

எண் ஐந்தினை எண்ணால் எழுதும்போது ' 5 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஐந்து ' என்று எழுதுகிறோம். எண் ஐந்தினை 'ஐந்து' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '5' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் ஐந்தின் வடிவத்தினை ஆராய்ந்தால், எண் மூன்றினைப் போலவே இதிலும் மூன்று கிடைக்கோடுகள் இருப்பதனை அறியலாம். ஆனால், எண் மூன்றில் இருப்பதைப் போல ஒரு உயர்ந்த செங்குத்துக்கோட்டிற்குப் பதிலாக, அடுத்தடுத்த கிடைக்கோடுகளை பக்கம் மாறி இணைப்பதைப் போல இரண்டு சிறிய செங்குத்துக் கோடுகள் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், வழக்கம்போல இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவையே. பொதுவாக, அடிநிலையில் வாழ்கின்ற ஒருவர் யாருடைய உதவியும் கிட்டாமல் போனால் எல்லா துன்பங்களையும் தானே தாங்கி முயன்று இடைநிலைக்குச் சென்று அதனை முழுமையாக அனுபவித்து பின்னர் மீண்டும் பல துன்பங்களைக் கடந்து முயன்றால் தான் முதல்நிலையை அடைய முடியும். இவ்வாறாக எண் ஐந்தின் வடிவமானது, ஒருவரது வாழ்க்கை நிலையினை சட்டென்று உயர்த்தி உதவி செய்யும் மேலூக்கியாக இல்லாமல் அனைத்து துன்பங்களையும் ஒருவர் அனுபவித்துத் தானே முயன்று படிப்படியாக முன்னேறுகின்ற நிலையினைப் பொருளாக உணர்த்தி நிற்பதை அறியலாம்.

எண் ஆறு:

எண் ஆறினை எண்ணால் எழுதும்போது ' 6 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஆறு ' என்று எழுதுகிறோம். எண் ஆறினை '6' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'ஆறு' என்று எழுத்தால் எழுதும்போது அது எண் ஆறினை மட்டும் குறிக்காமல் ' ஆறுதல் ' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

ஆறு = 6 ( எண் ) 
ஆறு = ஆறுதல் = அமைதல், இயல்பாதல். ( வினை )

இப்படி ஆறு என்ற சொல்லானது சொல்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது சொல்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஏழு:

எண் ஏழினை எண்ணால் எழுதும்போது ' 7 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஏழு ' என்று எழுதுகிறோம். எண் ஏழினை '7' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. 'ஏழு' என்று எழுத்தால் எழுதும்போதும் அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது.

அதேசமயம், ஏழு என்ற சொல்லானது சில பெயர்ச்சொற்களுடன் புணரும்போது எழு என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

ஏழு + கடல் = எழு + கடல் = எழுகடல்.
ஏழு + மலை = எழு + மலை = எழுமலை.

இவ்வாறு ஏழு என்ற சொல்லானது புணர்நிலையில் 'எழு' என்று மாற்றம் பெறும்போது அது எண் ஏழினை மட்டும் குறிக்காமல் 'எழுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எழு = 7 ( எண் )
எழு = எழுதல் = உயர்தல். ( வினை )

இப்படி ஏழு என்ற சொல்லானது புணர்நிலையில் புதியதோர் பொருள் தருவதால், இது புணர்நிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் எட்டு:

எண் எட்டினை எண்ணால் எழுதும்போது ' 8 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' எட்டு ' என்று எழுதுகிறோம். எண் எட்டினை '8' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. அதேசமயம், 'எட்டு' என்று எழுத்தால் எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டும் குறிக்காமல் 'எட்டுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எட்டு = 8 ( எண் )
எட்டு = எட்டுதல் = முடிதல், முழுமையாதல். (வினை)

அதுமட்டுமின்றி, எட்டு என்ற சொல்லானது சில பெயர்ச்சொற்களுடன் புணரும்போது எண் என்று மாற்றம் அடைகிறது. சான்றாக,

எட்டு + நாள் = எண் + நாள் = எண்நாள்.
எட்டு + திசை = எண் + திசை = எண்டிசை.

இவ்வாறு எட்டு என்ற சொல்லானது புணர்நிலையில் 'எண்' என்று மாற்றம் பெறும்போது அது எண் எட்டினை மட்டும் குறிக்காமல் 'எண்ணுதல்' என்ற வினையினையும் குறிப்பதை அறியலாம். அதாவது,

எண் = 8 ( எண் )
எண் = எண்ணுதல் = சிந்தித்தல். ( வினை )

இப்படி எட்டு என்ற சொல்லானது சொல்நிலையில் ஒரு புதிய பொருளும் புணர்நிலையில் ஒரு புதிய பொருளும் தருவதால், இது இருநிலை எண் என்று அறியப்படுகிறது.

எண் ஒன்பது:

எண் ஒன்பதினை எண்ணால் எழுதும்போது ' 9 ' என்று குறிப்பிடுகிறோம். அதனையே எழுத்தால் எழுதும்போது ' ஒன்பது ' என்று எழுதுகிறோம். எண் ஒன்பதினை 'ஒன்பது' என்று சொல்லாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்கிறது. ஆனால், அதனை '9' என்று குறியீடாக எழுதும்போது அது ஒரு எண்ணை மட்டுமே குறிக்காமல் வேறொரு பொருளையும் உணர்த்துகிறது. இதைப்பற்றி விரிவாகக் கீழே காணலாம். 

எண் ஒன்பதின் வடிவத்தினை ஆராய்ந்தால், அது எண் மூன்று மற்றும் ஐந்தின் அமைப்பினை உள்ளடக்கியதாக இருப்பதனை அறியலாம். மூன்று, ஐந்து ஆகிய எண்களில் இருப்பதைப் போல எண் ஒன்பதிலும் மூன்று கிடைக்கோடுகளும் ஒரு உயர்ந்த வலப்பக்கச் செங்குத்துக்கோடும் ஒரு சிறிய இடப்பக்கச் செங்கோடும் இருப்பதனை அறியலாம். தத்துவ நோக்கில் பார்த்தால், வழக்கம்போல இந்த மூன்று கிடைக்கோடுகளும் அடி, இடை, முதல் என்ற மூன்று படிநிலைகளைக் குறிப்பவையே. ஆனால், எண் ஒன்பதில் உயர்ந்த செங்கோடும் சிறிய செங்கோடும் இருப்பதால், எண் மூன்று மற்றும் ஐந்தின் தன்மைகள் இரண்டையும் கொண்டதாக எண் ஒன்பது திகழ்கிறது. அதாவது, எண் மூன்றினைப் போலத் தூக்கி (லிஃப்ட்) யாகச் செயல்பட்டு வாழ்க்கையில் உடனே முன்னேற உதவி செய்ய வல்லதும் எண் ஐந்தினைப் போல பல துன்பங்களைக் கொடுத்து அனுபவிக்கச் செய்து தானே முயன்று படிப்படியாய் முன்னேற வைப்பதும் ஆகிய இருவிதமான நிலைகளையும் பொருளாக உணர்த்தி நிற்கின்றது.


.... தொடரும்...

வியாழன், 14 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 2 ( மெய்யும் வினையும் பொய்யல்ல )

முன்னுரை:
எண்ணும் எழுத்தும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியான ' தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் ' என்பதில் தமிழ் மொழியில் உள்ள உயிரெழுத்துக்கள் பன்னிரெண்டும் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் பிறக்கின்ற பல்வேறு முறைகள் பற்றி விரிவாக விளக்கப் படங்களுடன் கண்டோம். இதில், ஒவ்வொரு எழுத்தும் பிறக்கும்போது நாக்கின் நிலை எப்படி இருந்தது என்பது படவிளக்கமாகக் காட்டப்பட்டு இருந்தது. இதனை அடிப்படையாகக் கொண்டு இந்த இரண்டாம் பகுதியில் மெய்எழுத்துக்களுடன் தொடர்புடைய பல்வேறு வகையான வினைகளைப் பற்றி விரிவாகக் காணலாம்.

மெய்எழுத்துக்களும் நாக்கின் நிலையும்:

தமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் பதினெட்டும் பிறக்கும்போது நாக்கின் நிலை எவ்வாறு இருக்கும் என்பதைப் பற்றி முதலாம் பகுதியில் சொல்லப்பட்டவை கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

எழுத்து(க்கள்)     எழுத்து(க்கள்) பிறக்கும்போது
                                         நாக்கின் நிலைப்பாடு

க், ங்                                          திரளுதல்

ச், ஞ்                            உயர்தல், மெலிதல், பரவுதல்

ட், ண்                                        வளைதல்

த், ந்                                          மழுங்குதல்

ப், ம், வ்                              சமமாயிருத்தல்

ற், ன்                                      உட்குழிதல்

ர்                                                  திரள்தல்

ழ்                                             மழுங்குதல்

ல்                                               உட்குழிதல்

ள்                                               வளைதல்

ய்                              உயர்தல், மெலிதல், பரவுதல் 

நாநிலையும் மெய்எழுத்துத் தொகுதிகளும்:                   

மேற்காணும் நாநிலைகளிலிருந்து பிறக்கின்ற பதினெட்டு மெய்யெழுத்துக்களையும், அவை பிறக்கும்போது உள்ள நாக்கினது நிலையின் அடிப்படையில் கீழ்க்காணுமாறு ஆறுவகையான தொகுதிகளாகத் தொகுக்கலாம்.

நாக்கின் நிலை                                   பிறக்கும் எழுத்துக்கள்      

திரள்தல்                                                            க், ங், ர்                   
உயர்தல், மெலிதல், பரவுதல்                  ச், ஞ், ய்                  
வளைதல்                                                         ட், ண், ள்                  
மழுங்குதல்                                                     த், ந், ழ்                    
சமமாயிருத்தல்                                            ப், ம், வ்                    
உட்குழிதல்                                                     ற், ன், ல்                    

மெய்யெழுத்துத் தொகுதிகளுக்குப் பெயரிடுதல்:

பதினெட்டு மெய்யெழுத்துக்களையும் மேற்கண்டவாறு ஆறுவகையாகத் தொகுத்த பின்னர், ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு பெயரைச் சூட்டியாகவேண்டும். காரணம், கட்டுரையில் அந்த எழுத்துத் தொகுதியினைக் குறிப்பிடுவதற்கு ஒரு பெயர் தேவைப்படுமென்பதால். எழுத்துக்களின் தொகுதிக்குப் பெயர் சூட்டும்போது கீழ்க்காணும் விதிமுறைகளைப் பின்பற்றிப் பெயர் சூட்டப்படுகிறது. ஒரு தொகுதிக்கான பெயரானது,

> அத்தொகுதியில் உள்ள எழுத்துக்களையே அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும்.
> அத்தொகுதியில் உள்ள மூன்று எழுத்துக்களையும் தொடர்ச்சியாகக் கொண்டிருக்க வேண்டும்.
> அத்தொகுதியின் இயல்பினை விளக்கும் ஒரு முன்மாதிரியாக அதாவது சான்றாக இருக்கவேண்டும்.

இவ் விதிமுறைகளின் அடிப்படையில் ஆறு மெய்யெழுத்துத் தொகுதிகளுக்கும் கீழ்க்காணுமாறு பெயர் சூட்டப்படுகிறது.

மெய்எழுத்துக்கள்       தொகுதியின் பெயர்

க், ங், ர்                                       பொங்கர்
ச், ஞ், ய்                              நஞ்சை (நஞ்சய்)
ட், ண், ள்                                  மண்டளி
த், ந், ழ்                                      குழந்தை
ப், ம், வ்                                        வம்பு
ற், ன், ல்                                 முன்றில்

மேற்காணும் ஆறுதொகுதிகளுக்கான பெயர்களும் தமக்குரிய தொகுதியின் இயல்பினை விளக்கி எவ்வாறு தாமே ஒரு சான்றாக அமைந்துள்ளன என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொங்கர் = பலவகையான பூக்கள் ஓரிடத்தில் பூத்திருப்பதான சோலை.
நஞ்சை = பரந்த பரப்புடைய விளைநிலம்.
மண்டளி = மண்+தளி = மண்ணைக்கொண்டு வளைத்துச்செய்யப்பட்ட அகல்விளக்கு.
குழந்தை = பொருள்விளங்காத மழுங்கிய மொழி பேசும் மழலை.
வம்பு = ஒன்றை இன்னொன்றுக்குச் சமம் என்று காட்டும் உவமை.
முன்றில் = வீட்டின் முன்னால் உள்ள தாழ்வான வெற்றிடம்.

இன எழுத்துக்களின் தொடர்புமுறை:

மேற்கண்ட ஒவ்வொரு மெய்யெழுத்துத் தொகுதியிலும் வல்லின, மெல்லின, இடையினத்தைச் சேர்ந்த எழுத்துக்கள் ஒவ்வொன்றும் இடம்பெற்றிருப்பதைக் கண்டோம். இப்படி ஒரு தொகுதியில் அடங்குகின்ற மூன்று இனத்தைச் சேர்ந்த மெய்எழுத்துக்களுக்கு இடையில் ஏதாவது தொடர்பு உண்டா?. என்று பார்க்கலாம்.

> வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் இடையிலான தொடர்பினை தொல்காப்பியரே பிறப்பியலில் கூறிவிட்டார். அதாவது, வல்லினம் எங்கே எப்படி பிறக்கிறதோ அதே இடத்தில் அதே முறையில் தான் மெல்லினமும் பிறக்கும் என்று முன்னர் முதல் கட்டுரையில் கண்டோம்.

> இடையினத்திற்கும் வல்லினத்திற்குமான தொடர்பினைக் கீழ்க்காணும் சில சான்றுகளுடன் காணலாம்.

தன்வினை        பிறவினை

காய்                       காய்ச்சு
பாய்                       பாய்ச்சு
வார்                       வாக்கு
அடர்                     அடக்கு
கழல்                    கழற்று
சுழல்                    சுழற்று
பரவு                      பரப்பு
நிரவு                     நிரப்பு
ஆழ்                    ஆழ்த்து
நெகிழ்              நெகிழ்த்து
புரள்                     புரட்டு
சுருள்                  சுருட்டு

மேலே உள்ள சான்றுகளை நோக்கினால், ஒவ்வொரு தன்வினைச் சொல்லின் ஈற்றில் வரும் இடையின மெய்யானது பிறவினைச் சொல்லாக மாறும்போது வல்லின மெய்யாக மாறியோ வல்லின மெய்யுடன் சேர்ந்தோ வருவதனை அறியலாம். அதாவது, தன்வினைச் சொல்லின் ஈற்றில் வருகின்ற இடையின மெய்யாகிய

யகரம் சகரத்துடனும்
ரகரம் ககரத்துடனும்
லகரம் றகரத்துடனும்
வகரம் பகரத்துடனும்
ழகரம் தகரத்துடனும்
ளகரம் டகரத்துடனும் தொடர்புற்றிருப்பதனை அறியலாம்.

மேற்கண்ட சான்றுகளில் இருந்து, வல்லினத்திற்கும் மெல்லினத்திற்கும் தொடர்பு இருப்பதைப் போலவே வல்லினத்திற்கும் இடையினத்திற்கும் தொடர்பு இருப்பதும் உறுதியாகிறது. ஆக, மூன்று இனச் சொற்களும் தமக்குள் ஒன்றுக்கொன்று ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்புடையவையே என்பது நிறுவப்படுகிறது. இனி, ஒவ்வொரு மெய்யெழுத்துத் தொகுதிக்கும் உரித்தான வினைகள் எவைஎவை என்று விரிவாகக் கீழே காணலாம்.

பொங்கர்த் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

க், ங், ர் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய பொங்கர்த் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் 'திரளுதல்' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

திரளுதல் >>> ஒன்றுபடுதல் >>> சேர்தல்.
திரளுதல் >>> பெருகுதல் >>> பெரியதாதல் >>> மறைத்தல் >>> தடுத்தல்.
திரளுதல் >>> வலிமையாதல்.

நஞ்சைத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ச், ஞ், ய் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய நஞ்சைத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' உயர்தல், மெலிதல், பரவுதல் ' என்ற வினைகளை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

உயர்தல் >>> எழுதல் >>> ஏறுதல் 
மெலிதல் >>> மென்மையாதல் >>> வலிமையிழத்தல் >>> தளர்தல் >>> துஞ்சுதல்.
பரவுதல் >>> பரப்புகூடுதல் >>> விரிதல் >>> திறத்தல்
பரவுதல் >>> நீளமாதல், அகலமாதல் >>> வளர்தல்

மண்டளித் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ட், ண், ள் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய மண்டளித் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' வளைதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

வளைதல் >>> பணிதல் >>> அடங்குதல் >>> தாழுதல் >>> விழுதல் >>> இறங்குதல்
வளைதல் >>> இளமையாதல் >>> மென்மையாதல்
வளைதல் >>> நாலுதல் (தொங்குதல்)

குழந்தைத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

த், ந், ழ் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய குழந்தைத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' மழுங்குதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

மழுங்குதல் >>> மயங்குதல் >>> தெளிவறுதல் >>> கலங்குதல் >>> குழைதல் >>> மென்மையாதல்
மழுங்குதல் >>> வட்டமாதல் >>> சுழலுதல் >>> சூழ்தல் >>> எண்ணுதல், மறைத்தல், பாதுகாத்தல்
மழுங்குதல் >>> உருண்டையாதல் >>> முழுமையாதல் >>> நிறைதல் (பொதிதல்) >>> கொழுத்தல், தடித்தல்

வம்புத் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ப், ம், வ் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய வம்புத் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' சமமாயிருத்தல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

சமமாயிருத்தல் >>> வளையாதிருத்தல் >>> வலியதாதல் >>> அழியாதிருத்தல்
சமமாயிருத்தல் >>> சாயாதிருத்தல் >>> நடுநிலைமை >>> நடுதல் (ஊன்றுதல்) >>> நிலைபெறுதல் >>> அமைதல்
சமமாயிருத்தல் >>> இயல்பாயிருத்தல் >>> மாறாதிருத்தல் >>> தாங்குதல் >>> எதிர்த்தல்

முன்றில் தொகுதியும் சார்புடைய வினைகளும்:

ற், ன், ல் ஆகிய மூன்று எழுத்துக்களையும் உள்ளடக்கிய முன்றில் தொகுதியில் அடங்குவதான பல்வேறு வினைகளுள் சிலவற்றை மட்டும் கீழே காணலாம். இத் தொகுதியின் கீழ் வருவதான அனைத்து வினைகளும் ' உட்குழிதல் ' என்ற வினையினை அடிப்படையாகக் கொண்டு கீழ்க்காணுமாறு பிறக்கும்.

உட்குழிதல் >>> பள்ளமாதல் >>> குறைபடுதல் >>> இல்லாதுபோதல் >>> நீங்குதல், மறைதல், அழிதல்
உட்குழிதல் >>> வலிமையற்றிருத்தல் >>> நோவுண்டாதல் >>> துன்புறுதல்
உட்குழிதல் >>> தாங்காதிருத்தல் >>> முறிதல் >>> இரண்டாதல் >>> பிளவுறுதல்


..... தொடரும்...

சனி, 9 செப்டம்பர், 2017

எண்ணும் எழுத்தும் - 1 ( தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் )

முன்னுரை:

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - என்பது ஔவையார் வாக்கு. இது முக்காலும் உண்மையே. ஏனென்றால் இந்த இரண்டுமே நமக்கு இரண்டு கண்களைப் போல இருந்து வாழ்க்கையினை சீருடனும் சிறப்புடனும் வாழ உதவி புரிகின்றன என்றால் அது மிகையில்லை. ஆனால், இந்த இரண்டுக்குமே ஏதாவது தொடர்புண்டா?. என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?. அதாவது, இரண்டு கண்களும் தனித்தனியாகவே தெரிந்தாலும் உள்முகமாக அவற்றுக்கிடையில் தொடர்பு இருப்பதைப் போல, எண்களுக்கும் எழுத்துக்களுக்கும் ஏதேனும் உள்முகத் தொடர்பு இருக்குமா?. இன்னும் தெளிவாகச் சொல்வதானால், ஒவ்வொரு எழுத்துடனும் ஏதாவது ஒரு எண் எவ்வகையிலாவது தொடர்பு கொண்டிருக்குமா?. என்ற சிந்தனையின் வெளிப்பாடே இந்த ஆய்வுக் கட்டுரை ஆகும்.

ஆங்கிலத்தில் நியுமராலஜி என்ற பெயரில் எண்கணித அடிப்படையிலான ஒரு சோதிடமுறை உண்டு. இதில், ஒவ்வொரு ஆங்கில எழுத்தினையும் ஒரு எண்ணுடன் தொடர்புறுத்தி, அந்த எழுத்துக்கு அந்த எண்ணையே மதிப்பெண்ணாக அளித்திருப்பார்கள். ஆனால், இதற்கு ஒரு வரைமுறை இல்லாமல் பலவிதமான முறைகளைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஒரே எழுத்துக்குப் பலரும் பலவிதமான மதிப்பெண்களை வழங்கி இருக்கின்றனர். இதற்குக் காரணம், ஆங்கில எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் இடையிலான தொடர்புக்கு எவ்வித ஆதாரங்களும் முறையாகக் காட்டப்படவில்லை என்பதே. ஆனால், இலக்கிய வளமும் இலக்கண வளமும் பெற்ற சீரும் சிறப்புமுடைய தொன்மொழியாம் நம் தமிழ்மொழியின் நிலைமை அப்படி இல்லை. தமிழ்மொழிக்கு அருமையான விரிவான இலக்கணம் வகுத்துத் தந்திருக்கும் தொல்காப்பியர் தமிழ் எழுத்துக்கள் பிறக்கும் முறைகளைப் பற்றியும் விரிவாகக் கூறியிருக்கிறார். இதனை அடிப்படையாகக் கொண்டு தமிழ் எழுத்துக்களுக்கும் எண்களுக்கும் இடையிலான தொடர்பினை உருவாக்க முடியுமா என்ற முயற்சியின் விளைவாகவே இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது. இந்த ஆய்வுக் கட்டுரையின் முதல் பகுதியான இதில் தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல் பற்றிக் காணலாம்.

தமிழ் எழுத்துக்களின் பிறப்பியல்:

தமிழ் எழுத்துக்களில் உயிர் பன்னிரெண்டும் மெய் பதினெட்டும் பிறக்கும் முறைகளைப் பற்றி விரிவாக விளக்கும் முன்னர், பிறப்பியலின் முதல் பாடலில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் தொல்காப்பியர்.

உந்தி முதலா முந்து வளி தோன்றி
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇ
பல்லும் இதழும் நாவும் மூக்கும்
அண்ணமும் உளப்பட எண் முறை நிலையான்
உறுப்பு உற்று அமைய நெறிப்பட நாடி
எல்லா எழுத்தும் சொல்லும்காலை
பிறப்பின் ஆக்கம் வேறு வேறு இயல
திறப்பட தெரியும் காட்சியான - பா. எண் 1

பொருள்: உந்தியில் இருந்து தோன்றிய முதல் காற்றானது தலையிலும் மிடற்றிலும் நெஞ்சிலும் நிலைபெற்று பல், உதடு, நாக்கு, மூக்கு, அண்ணம் உட்பட எண்வகையான நிலைகளில் உள்ள உறுப்புக்களிலே பொருந்தி அமைய, அவற்றை முறைப்படி ஆராய்ந்து எல்லா எழுத்துக்களைப் பற்றியும் சொல்லுமிடத்து, அவ் எழுத்துக்களின் பிறப்புமுறையானது வேறுவேறு வகையினவாய் திறன்கொண்டு அறியப்படும் தன்மையுடையவாய் உள்ளன.

தமிழ் எழுத்துக்களின் பல்வகையான பிறப்புக்களைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காண்பவற்றின் அடிப்படையில் பகுத்தும் தொகுத்தும் கூறுகிறார் தொல்காப்பியர்.

> எழுத்துக்கள் பிறக்கும் இடம். சான்று: அண்பல், அண்ணம்.
> எழுத்துக்கள் பிறக்கும் வினை. சான்று: ஒற்றுதல், வருடுதல், அணர்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் நிலை. சான்று: அங்காத்தல், குவித்தல்.
> எழுத்துக்கள் பிறக்கும் உறுப்பு. சான்று: நாக்கு, உதடு, பல், மூக்கு, அண்ணம்

தமிழ் உயிரெழுத்துக்களின் பிறப்பியல்:

தமிழ் உயிர் எழுத்துக்களின் ஒலிகள் பிறக்கும் முறையினைக் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார் தொல்காப்பியர்.

அ ஆ ஆயிரண்டு அங்காந்து இயலும் - பா. எண் 3

அகாரமும் ஆகாரமும் வாயினைத் திறந்தநிலையில் பிறக்கக் கூடியவை. மிடற்றில் தோன்றும் ஓசையுடன் கூடிய காற்றானது எவ்விதத் தடையுமின்றி திறந்திருக்கும் வாயின் வழியாக வெளிப்படுகையில் இவ் ஒலிகள் தோன்றும். வாயைக் கொஞ்சமாகத் திறந்து குறைந்த நேரம் ஒலித்தால் அகாரமும் நன்றாக விரியத் திறந்து நீண்டநேரம் ஒலித்தால் ஆகாரமும் கேட்கும்.

இ ஈ எ ஏ ஐ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் அவற்று ஓரன்ன அவைதாம்
அண்பல் முதல்நா விளிம்பு உறல் உடைய - பா. எண் 4

இகாரம், ஈகாரம், எகாரம், ஏகாரம் மற்றும் ஐகார ஒலிகளும் அகார, ஆகார ஒலிகளைப் போலவே வாயைத் திறந்தநிலையில் பிறப்பனவே. ஆனால், இவ் ஒலிகளின் பிறப்பில் உரசல் இருப்பதால் ஒலிப்புமுறையில் இவை சற்று வேறுபடுபவை. மிடற்றில் தோன்றிய ஒலியுடன் கூடிய காற்றானது அண்பல்லின் விளிம்பில் உரசி வரும்போது இகார ஈகார ஒலிகள் தோன்றும். முதல்நாவின் விளிம்பில் உரசி வரும்போது எகாரமும் ஏகாரமும் ஐகாரமும் தோன்றும்.

உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும்
அப்பால் ஐந்தும் இதழ் குவிந்து இயலும் - பா. எண் 5

உகரமும் ஊகாரமும் ஒகரமும் ஓகாரமும் ஔகாரமும் மேலுதடும் கீழுதடும் முன்னோக்கிக் குவிந்தநிலையில் பிறப்பவை என்று மேற்காணும் நூற்பாவில் கூறுகிறார் தொல்காப்பியர். இப்படி ஒரே நிலையில் பல ஒலிகள் பிறந்தாலும் அவ் ஒலிகள் தமக்குள் சிறிய அளவிலான வேறுபாடுகளைக் கொண்டவை என்று கீழ்க்காணும் பாடலில் கூறுகிறார்.

தம்தம் திரிபே சிறிய என்ப - பா. எண் 6

தமிழ் மெய்யெழுத்துக்களின் பிறப்பியல்:

மெய்யெழுத்துக்கள் பதினெட்டின் பிறப்பினைப் பற்றிக் கூறுமிடத்துக் கீழ்க்காணும் முறைகளைக் கையாள்கிறார்.

> பிறக்கும் இடத்தின் அடிப்படையில், ஒவ்வொரு வல்லின எழுத்தினையும் அதனுடன் ஒட்டி ஒரே இடத்தில் பிறக்கும் மெல்லின எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் கூறுகிறார். சான்றாக, முதல்நாவால் அண்ணத்தில் பிறக்கின்ற ககார எழுத்தினை அதனுடன் ஒட்டி அதே இடத்தில் பிறக்கின்ற ஙகார எழுத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவினால் விளக்குகிறார். ஆயினும், மெல்லின எழுத்துக்கள் பிறக்கும் வகையினை விளக்கும்போது, அவை வல்லின எழுத்துக்கள் பிறக்கும் இடத்தில் தோன்றினாலும் அவை வாய்வழியே அன்றி மூக்கின் வழியாக வெளிப்பட்டு ஒலிப்பவை என்று கீழ்க்காணும் நூற்பாவில் கூறுகிறார்.

மெல்லெழுத்து ஆறும் பிறப்பின் ஆக்கம்
சொல்லிய பள்ளி நிலையின ஆயினும்
மூக்கின் வளி இசை யாப்புற தோன்றும் - பா. எண் 18

>  ஒரே இடத்தில் வேறுவேறு வினையால் பிறக்கும் இடையின எழுத்துக்களை இணைத்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார். சான்றாக, நுனிநாவானது அண்பல்லைப் பொருந்துதலால் பிறக்கும் லகாரத்தினை அண்பல்லை வருடுதலால் பிறக்கும் ளகாரத்துடன் சேர்த்து ஒரே நூற்பாவில் விளக்குகிறார்.

> பிறக்கும் உறுப்புக்களின் அடிப்படையில் சில எழுத்துக்களைத் தனித்தனியே விளக்குகிறார். சான்றாக, வகாரம் உதடுகளில் பிறந்தாலும் பல்லினால் பிறப்பதால் அதனைப் பகார, மகாரங்களுடன் சேர்த்துக் கூறாமல் தனியே விளக்குகிறார்.

ககார ஙகார ஒலிபிறப்பியல்:

ககார ஙகாரம் முதல் நா அண்ணம் - பா.எண். 7

தமிழ் மெய்யெழுத்துக்களில் ககார ஒலியும் ஙகார ஒலியும் முதல் நா எனப்படுவதான நாவின் தடித்த அடிப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது ககார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஙகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் அடிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் குவிந்து திரண்ட நிலையில் இருப்பதை அறியலாம்.

சகார ஞகார ஒலிபிறப்பியல்:

சகார ஞகாரம் இடை நா அண்ணம் - பா. எண்: 8

தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நா எனப்படுவதான நாவின் மெலிந்த நடுப்பகுதியானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது சகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ஞகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நடுப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் மேல்நோக்கி உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் இருப்பதை அறியலாம்.

டகார ணகார ஒலிபிறப்பியல்:

டகார ணகாரம் நுனி நா அண்ணம் - பா. எண்: 9

தமிழ் மெய்யெழுத்துக்களில் டகார ஒலியும் ணகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணத்தின் நடுப்பகுதியைத் தொடும் நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது டகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது ணகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் வாயின் உட்புறம் நோக்கி வளைந்த நிலையில் இருப்பதை அறியலாம்.

தகார நகார ஒலிபிறப்பியல்:

அண்ணம் நண்ணிய பல் முதல் மருங்கில்
நா நுனி பரந்து மெய் உற ஒற்ற
தாம் இனிது பிறக்கும் தகார நகாரம் - பா. எண் 11

தமிழ் மெய்யெழுத்துக்களில் தகார ஒலியும் நகார ஒலியும் நுனி நா எனப்படுவதான நாவின் கூர்மையான நுனிப்பகுதியானது அண்ணமும் மேல்பல் வரிசையும் பொருந்துவதான இடத்தைத் (அண்பல்) தொட்டுப் பரந்த நிலையில் உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது தகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது நகார ஒலியும் பிறக்கும்.

இவ் இரண்டு ஒலிகளும் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில்  நாக்கின் நுனிப்பகுதியின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது இயல்பான நிலையில் இல்லாமல் தனது கூர்முனை மழுங்கித் தடித்த நிலையில் இருப்பதை அறியலாம்.

பகார மகார வகார ஒலிபிறப்பியல்:

இதழ் இயைந்து பிறக்கும் பகார மகாரம் - பா. எண் 15
பல் இதழ் இயைய வகாரம் பிறக்கும் - பா. எண் 16

தமிழ் மெய்யெழுத்துக்களில் பகார ஒலியும் மகார ஒலியும் மேலுதடும் கீழுதடும் பொருந்திய நிலையில்  உண்டாவதாக மேற்காணும் முதல் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது பகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது மகார ஒலியும் பிறக்கும். வகார ஒலியானது மேற்பல் வரிசையும் கீழுதடும் பொருந்திய நிலையில் பிறப்பதாக மேற்காணும் இரண்டாம் பாடலில் குறிப்பிடுகிறார்.

இவ் ஒலிகள் பிறக்கின்ற நிலையானது அருகில் உள்ள படத்தில் வரைந்து காட்டப்பட்டுள்ளது. இப் படத்தில் நாக்கின் நிலையினைக் கவனித்துப் பார்த்தால், அது எந்தவொரு மாற்றமுமின்றி தனது இயல்பான சமநிலையில் இருப்பதை அறியலாம்.

றகார னகார ஒலிபிறப்பியல்:

அணரி நுனி நா அண்ணம் ஒற்ற
றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 12

தமிழ் மெய்யெழுத்துக்களில் றகார ஒலியும் னகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்த நிலையில் அண்ணத்தைப் பொருந்தும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அணர்தல் என்பது உட்குழிதல் ஆகும். (சான்று: அணர் செவிக் கழுதை = குழிந்த காதினையுடைய கழுதை.) இந்நிலையில், மிடற்றிலிருந்து வரும் வளியானது வாய்க்குள் முழுவதுமாக அடைபடும்போது றகார ஒலியும் மூக்கின் வழியாக வெளியேறும்போது னகார ஒலியும் பிறக்கும்.

ரகார ழகார ஒலிபிறப்பியல்:

நுனி நா அணரி அண்ணம் வருட
ரகார ழகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 13

தமிழ் மெய்யெழுத்துக்களில் ரகார ஒலியும் ழகார ஒலியும் நாக்கு நுனியானது உட்குழிந்து அண்ணத்தைப் பொருந்தி வருடும்போது உண்டாவதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். நாக்கு நுனியானது மழுங்கிய நிலையில் உள்நோக்கி அண்ணத்தை வருடும்போது ழகரமும் குவிந்த நிலையில் வெளிநோக்கி அண்ணத்தை வருடும்போது ரகரமும் பிறக்கும்.

லகார ளகார ஒலிபிறப்பியல்:

நா விளிம்பு வீங்கி அண்பல் முதல் உற
ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்
லகார ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும் - பா. எண் 14

தமிழ் மெய்யெழுத்துக்களில் லகார ஒலியும் ளகார ஒலியும் நாக்கு நுனியானது வீங்கி 'அண்பல்' எனப்படுவதான மேல்வரிசைப் பல்லும் அண்ணமும் பொருந்துகின்ற இடத்தினை முறையே பொருந்தவும் வருடவும் பிறப்பதாக மேற்காணும் பாடலில் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர். அதாவது, அண்பல்லைப் பொருந்தும்போது லகாரமும் வருடும்போது ளகாரமும் பிறப்பதாகக் கூறுகிறார். நாக்கு நுனியானது வீங்கி அண்பல்லைப் பொருந்தும்போது உட்குழிந்தும் வருடும்போது உள்நோக்கி வளைந்தும் காணப்படும்.

யகார ஒலிபிறப்பியல்:

அண்ணம் சேர்ந்த மிடற்று எழு வளி இசை
கண்ணுற்று அடைய யகாரம் பிறக்கும்  - பா. எண் 17

தமிழ் மெய்யெழுத்துக்களில் சகார ஒலியும் ஞகார ஒலியும் இடை நாவானது அண்ணத்தைத் தொடும் நிலையில் உண்டாவதாக முன்னர் கண்டோம். பொதுவாக இவ் ஒலிகள் பிறக்கும்போது மிடற்றில் இருந்து வெளிவரும் காற்றானது அண்ணத்தைத் தொடும்போது இடைநாவின் உரசலால் முழுவதுமாக வாய்க்குள் அடைபட்டுப் போகும். அப்படி இடைநாவுக்கும் அண்ணத்துக்கும் இடையில் அடைபட்டு நிற்காமல் காற்றானது வெளிப்பகுதியினை அடையும்போது யகர ஒலி பிறக்கும். சகார, ஞகாரத்தைப் போன்றே, யகார ஒலி பிறக்கும்போதும் நடுநாவானது உயர்ந்து மெலிந்து பரந்த நிலையில் காணப்படும். அருகிலுள்ள படத்தில் நாக்கின் நிலையானது வரைந்து காட்டப்பட்டுள்ளது.

..... தொடரும்.


திங்கள், 4 செப்டம்பர், 2017

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும்

முன்னுரை:

கலித்தொகையில் தாழிசையும் தருக்கவியலும் - என்ற இக் கட்டுரையில் கலித்தொகையில் வரும் தாழிசை உறுப்பின் மூலம் பெண்களின் உடல் உறுப்புக்களைக் குறிப்பதான பல சொற்களுக்குப் புதிய அல்லது உண்மையான பொருட்களைத் தருக்கமுறைப்படி எப்படி நிறுவலாம் என்பது பல்வேறு சான்றுகளுடன் விளக்கப்படுகிறது. தாழிசையை அடிப்படையாகக் கொண்டு ஏரணமுறைப்படி நிறுவப்படுவதால், இப்புதிய ஆய்வு அணுகுமுறையினை 'தாழிசை ஏரணமுறை' என்று அழைக்கலாம்.


தாழிசையும் கலிப்பாவும்:

தாழிசை என்பது கலிப்பாவின் உறுப்புக்களுள் ஒன்றாகும். கலிப்பாவின் பொதுவான ஆறு உறுப்புக்களாக அறியப்படுகின்ற தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச்சொல், சுரிதகம் ஆகியவற்றில் இரண்டாவதாக வருவது தாழிசை ஆகும். தாழிசை என்னும் உறுப்புக்குரிய பொது இலக்கணம் கீழே:

> அடிதோறும் இரண்டு முதல் ஐந்து சீர்கள் வரை பெற்று வரும்.
> ஒரு அடுக்கில் இரண்டு முதல் நான்கு அடிகள் வரை அமைந்து வரும்.
> மூன்று முதல் பல அடுக்குகள் வரை ஒருபொருள்மேல் அடுக்கி வரும்.

கலிப்பாக்களில் பல வகைகள் இருந்தாலும் கலித்தொகையில் அதிக எண்ணிக்கையில் பயின்று வருவது நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். கலித்தொகையில் மொத்தமுள்ள 150 பாடல்களில் 80 க்கும் மேற்பட்ட பாடல்களில் இதுவே பயின்று வருவதால், இக் கட்டுரையில் ஆய்வுக்கு இதுவே எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது. இப் பாவகையினைப் பற்றி விரிவாகக் கீழே காணலாம்.

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா:

அடிப்படை உறுப்புக்களான தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்ற நான்கு உறுப்புக்களை மட்டும் கொண்டு அமையும் கலிப்பா நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பா ஆகும். இதன் இலக்கணம் பின்வருமாறு:

> முதலில் ஒரு தரவு வரும். தரவின் குறைந்த அளவு மூன்றடி. அதிக அளவுக்கு எல்லை இல்லை.
> தரவைத் தொடர்ந்து மூன்று தாழிசைகள் ஒரு பொருள்மேல் அடுக்கி வரும். தாழிசையின் அடிச்சிறுமை இரண்டு அடி. அதிக அளவு நான்கு அடி. தரவைவிடத் தாழிசையானது ஓரடியாவது குறைந்து வரும்.
> தாழிசையைத் தொடர்ந்து ஒரு தனிச்சொல் வரும்.
> தனிச்சொல்லுக்குப் பின் ஒரு சுரிதகம் வரும். அது ஆசிரியப்பாவாகவோ வெண்பாவாகவோ இருக்கலாம்.

இப் பாவகையினைப் பற்றித் தெளிவாகப் புரிந்துகொள்ள கலித்தொகைப் பாடல் எண் 11 இனைப் பல உறுப்புக்களாகப் பிரித்துக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தரவு: ( அடி எண் 1 முதல் 5 வரை )

அரிதாய அறனெய்தி அருளியோர்க்கு அளித்தலும்
பெரிதாய பகைவென்று பேணாரைத் தெறுதலும்
புரிவமர் காதலின் புணர்ச்சியும் தரும்எனப்
பிரிவெண்ணிப் பொருள்வயின் சென்றநம் காதலர்
வருவர்கொல் வயங்கிழாஅய் வலிப்பல்யான் கேஎள்இனி

தாழிசை: ( அடி எண் 6 முதல் 17 வரை மூன்று அடுக்குகளில் )

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கல்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

தனிச்சொல்: ( அடி எண் 18 மட்டும் )

என ஆங்கு,

சுரிதகம்: ( அடி எண் 19 முதல் 23 வரை )

இனைநலம் உடைய கானம் சென்றோர்
புனைநலம் வாட்டுநர் அல்லர் மனைவயின்
பல்லியும் பாங்கொத்து இசைத்தன
நல்எழில் உண்கண்ணும் ஆடுமால் இடனே.

தாழிசையின் தன்மை விளக்கம்:

பொதுவாகவே தாழிசை என்பது ஒரே பொருளின் மேல் பலமுறை அடுக்கி வருவதாகும். அதாவது ஒரே பொருளின் பல்வேறு தன்மைகளைப் பற்றித் தெளிவாக விளக்குவதற்காகப் புலவர்கள் பயன்படுத்தும் அமைப்புமுறை ஆகும். இதனைத் தெளிவாகப் புரிந்துகொள்ள, மேற்கண்ட கலித்தொகைப் பாடல் 11 ல் வரும் தாழிசையைக் காணலாம்.

அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்
கடியவே கனம்குழாஅய் காடென்றார் அக்காட்டுள்
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின்நீரைப்
பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறெனவும் உரைத்தனரே.

இன்பத்தின் இகந்தொரீஇ இலைதீந்த உலவையால்
துன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
அன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை
மென்சிறகரால் ஆற்றும் புறவெனவும் உரைத்தனரே.

கன்மிசை வேய்வாடக் கனைகதிர் தெறுதலான்
துன்னரூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்
இன்நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்
தன்நிழலைக் கொடுத்தளிக்கும் கலையெனவும் உரைத்தனரே.

பாடல் 11 ல் தாழிசையானது மூன்று அடுக்குகளாய் ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு அடிகளைக் கொண்டு வந்துள்ளது. கலித்தொகையின் பெரும்பாலான தாழிசைகள் இதுபோன்ற அமைப்பிலேயே எழுதப்பட்டுள்ளன. இனி, இவற்றில் கூறப்படுகின்ற பொருளைப் பற்றிப் பார்க்கலாம். 

முதலடுக்கு: கால்வைக்க முடியாத அளவுக்குத் தீயினைப் போல சுடுகின்ற வெம்மை கொண்டது அக்காடு. அக்காட்டில் தேங்கியிருந்த சிறிதளவு நீரினையும் குட்டியானை தனது கால்களால் கலக்கிவிட, அந்த நீரையும் தான் முதலில் உண்ணாமல் தனது பெண்துணைக்கு ஊட்டிவிட்டுப் பின்னரே தானுண்ணுமாம் களிற்றுயானை.

இரண்டாமடுக்கு: இலைகள் தீய்ந்துபோகும் அளவுக்கு வெப்பக்காற்று வீசுவதால் அவ்வழியே செல்வோர் இன்பம் சிறிதுமின்றி பெருந்துன்பம் அடைகின்ற தன்மையது அக்காடு. அக்காட்டில் தனது அன்புக்குரிய பெண்துணையின் துன்பம் தணியுமாறு தனது மெல்லிய சிறகுகளை அசைத்து வீசி வெப்பத்தினை ஆற்றுமாம் ஆண்புறா.

மூன்றாமடுக்கு: மலையில் இருக்கும் மூங்கில்களும் வாடி அழியுமாறு கொடிய வெப்பக்கதிர் வீசுகின்ற நெருங்குதற்கு அரிய காடாகும் அது. அக்காட்டில் மரநிழல் இன்மையால் வருந்திய தனது பெண்துணைக்குத் தன்னுடைய உடல்நிழலைக் கொடுத்து உதவுமாம் ஆண்மான்.

இம் மூன்று அடுக்குகளும் ஒரேபொருளையே அல்லது ஒரே கருத்தினையே வலியுறுத்துகின்றன. அதாவது, தலைவன் தலைவியைப் பிரிந்து செல்லவிருக்கும் காட்டுப்பாதையானது மிகவும் கொடிய வெப்பமுடையது. அந்தக் கொடுமையான வெப்பத்திலும் அக்காட்டில் வாழ்கின்ற உயிரினங்கள் தமது பெண்துணையின்மீது அன்பு குறையாமல் வாழ்கின்றன. இக் கருத்தினைத் தலைவனுக்குத் தெளிவாகப் புரியவைத்துப் பிரிவினைத் தடுக்கவே ஒருமுறை இருமுறை இன்றி மூன்றுமுறை இக்கருத்தினைப் பலவிதமாகக் கூறி வலியுறுத்துகிறாள்.

இதிலிருந்து, தாழிசை என்பது எத்தனை அடிகளில் எத்தனை அடுக்குகளில் வந்தாலும் ஒரே பொருளை அல்லது ஒரே கருத்தினை வலியுறுத்தவே அமைக்கப்பட்டவை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம்.

தாழிசையும் தருக்கவியலும்:

தாழிசையின் தன்மை பற்றிய விளக்கத்தினை ஒரு சான்றின் மூலம் தெளிவாக மேலே அறிந்துகொண்டோம். இனி இதைத் தருக்கவியலில் எப்படிப் பயன்படுத்தலாம் எதற்குப் பயன்படுத்தலாம் என்பதைப் பற்றிப் பார்க்கலாம். அதற்குமுன்னர் தருக்கவியலைப் பற்றிய ஒரு சிறிய விளக்கத்தினைக் கீழே காணலாம்.

ஏரணவியல் அல்லது அளவையியல் அல்லது தருக்கவியல் என்பது அறிவடிப்படையில் ஓர் உண்மை ஆகும், ஒரு பொருள் பற்றி அது ஏற்கக்கூடியது என்று அறியவும், ஒரு முடிவுக்கு வரவும், உறுதியாக நிலைநிறுத்தவும் பயன்படும் ஓர் அடிப்படைக் கருத்தியல் முறைகளைப் பற்றிய ஓர் அறிவுத்துறையாகும். ஏரணம் மெய்யியலின் ஒரு முக்கியமான துறை. ஏரணம் என்னும் தமிழ்ச்சொல் ஏல் = ஏற்றுக்கொள், இயல்வது, பொருந்துவது என்பதில் இருந்து ஏல் -> ஏர் -> ஏரணம் என்றாயிற்று. ஏரணம் என்பது படிப்படியாய் அறிவடுக்க முறையில் ஏலும், ஏலாது என்று கருத்துக்களைப் படிப்படியாய் முறைப்படி தேர்ந்து மேலே சென்று உயர் முடிபுகளைச் சென்றடையும் முறை மற்றும் கருத்தியல் கூறுகள் கொண்ட ஒரு துறையாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்தில் இதனை Logic (லாஜிக்) என்று கூறுவர்.

தாழிசையின் ஒரேபொருளைக் குறிப்பதான தன்மையைக் கொண்டு பல தமிழ்ச்சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்களைத் தருக்கவியல் முறைப்படி இங்கே கண்டறியலாம். அதாவது, தாழிசை என்பது எத்தனை அடுக்குகளில் வந்தாலும் அவையனைத்தும் ஒரே பொருளை விளக்குவதற்காகவே புலவர்களால் எழுதப்பட்டவை என்பதனை ஓர் கலித்தொகை எடுத்துக்காட்டின் மூலம் மேலே கொண்டோம் அல்லவா, அதனையே இங்கே நாம் ஏரணமாகப் பயன்படுத்திப் பல சொற்களுக்குப் புதிய பொருட்களைக் கண்டறியப் போகிறோம். கீழே சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே கலித்தொகையில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன.

சான்று ஒன்று: கலித்தொகைப் பாஎண்: 15

புரிபு நீ புறம் மாறிப், போக்கு எண்ணிப், புதிது ஈண்டிப்
பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ -
செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம்; அந் நலம்
பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?

பொய் அற்ற கேள்வியால், புரையோரைப் படர்ந்து, நீ
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ -
தீம் கதிர் மதி ஏய்க்கும் திருமுகம்; அம் முகம்,
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?

பின்னிய தொடர் நீவிப், பிறர் நாட்டுப் படர்ந்து, நீ
மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ -
புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத்,
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பயலையால் உணப்பட்டுப் பண்டை நீர் ஒழிந்தக் கால்?
பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக் கால்?
திரி உமிழ் நெய்யே போல், தெண் பனி உறைக்கும்கால்?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும்
பசப்பு ஊர்தல் என்பதும்
தெண்பனி உறைத்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், தெண்பனி உறைத்தல் என்பது கண்ணீர் வழிதல் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

பயலையால் உண்ணப்படுதல் என்பதும் பசப்பு ஊர்தல் என்பதும் தெண்பனி உறைத்தலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பயலையும் பசப்பும் கண்ணீரைக் குறிக்கின்ற சொற்களே என்பதும் பெறப்படுகிறது.

சான்று இரண்டு: கலித்தொகைப் பாஎண்: 25

மணக்கும்கால், மலர் அன்ன தகையவாய்ச், சிறிது நீர்
தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
சிறப்புச் செய்து, உழையராப், புகழ்பு ஏத்தி, மற்று அவர்
புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல்;

ஈங்கு நீர் அளிக்கும்கால் இறை சிறந்து, ஒரு நாள் நீர்
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
செல்வத்துள் சேர்ந்து அவர் வளன் உண்டு, மற்று அவர்
ஒல்கு இடத்து உலப்பு இலா உணர்வு இலார் தொடர்பு போல்;

ஒரு நாள் நீர் அளிக்கும்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர்
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து, அம் மறை
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடு இலார் தொடர்பு போல்

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கிலும் வருகின்ற இரண்டாவது அடிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தணக்கும்கால், கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ?
நீங்கும்கால், நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ?
பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ?

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி இவ் வரிகளில் வரும்

கலுழ்பு ஆனாக் கண் என்பதும்
நெகிழ்பு ஓடும் வளை என்பதும்
பசக்கும் நுதல் என்பதும்

ஒரே பொருளையே குறித்து வந்திருக்க வேண்டும். இம்மூன்றனுள், கலுழ்பு ஆனாக் கண் என்பது கண்ணீர் வழிகின்ற கண்ணைக் குறிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து, தாழிசையின் ஏரணமுறைப்படி,

நெகிழ்பு ஓடும் வளை என்பதும் பசக்கும் நுதல் என்பதும் கலுழ்பு ஆனாக் கண்ணைப் போலவே கண்ணீர் வழிகின்ற கண்ணையே குறிக்கும் என்பது பெறப்படுகிறது. மேலும், நெகிழ்தல் என்பது அழுகையைக் குறிக்கும் என்பதால், வளை என்பது கண்ணீருடன் கலந்து ஓடுவதான மையணியைக் குறிப்பதே என்று அறிந்துகொள்ளலாம். பசத்தல் என்பது கண்ணீர் / அழுகையைக் குறிக்கும் என்று மேலே கண்டதால், நுதல் என்பது கண்ணையும் குறிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம்.

சான்று மூன்று: கலித்தொகைப் பாஎண் 100

ஐயம் தீர்ந்து யார் கண்ணும் அரும் தவ முதல்வன் போல்   
பொய் கூறாய்' என நின்னைப் புகழ்வது கெடாதோ தான்-   
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள்   
பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!

'சுரந்த வான் பொழிந்தற்றாச் சூழ நின்று யாவர்க்கும்   
இரந்தது நசை வாட்டாய்' என்பது கெடாதோ தான்-
கலங்கு அஞர் உற்று, நின் கமழ் மார்பு நசைஇயாள்
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   

'உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல்,
முறை செய்தி' என நின்னை மொழிவது கெடாதோ தான்-
அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள்
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பல் இதழ் மலர் உண் கண் பனி மல்கக் காணும் கால்!
இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணும் கால்!   
பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணும் கால்!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

கண் பனி மல்குதல் என்பதும்
தொடி இறை ஊர்தல் என்பதும்
முகம் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், கண் பனி மல்குதல் என்பது கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்பது நாம் அனைவரும் நன்கு அறிந்த ஒன்றேயாகும். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

தொடி இறை ஊர்தல் என்பதும் முகம் பசப்பு ஊர்தல் என்பதும் கண் பனி மல்குதலைப் போலவே கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், பசப்பு என்பது கண்ணீரைக் குறிக்கும் என்று மேலே கண்டபடியால், முகம் என்பது கண்ணையும் தொடி என்பது கண்ணீருடன் கலந்துஓடும் மையணியையும் இறை என்பது கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

சான்று நான்கு: கலித்தொகைப் பாஎண்: 127

கொடும் கழி வளைஇய குன்று போல், வால் எக்கர்,
நடுங்கு நோய் தீர, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க,   
இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!

குறி இன்றிப் பல்நாள், நின் கடும் திண் தேர் வருபதம் கண்டு,
எறி திரை இமிழ் கானல், எதிர்கொண்டாள் என்பதோ -
அறிவு அஞர் உழந்து ஏங்கி, ஆய் நலம் வறிது ஆகச்
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   

காண்வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை,   
யாமத்து வந்து, நின் குறி வாய்த்தாள் என்பதோ -   
வேய் நலம் இழந்த தோள் விளங்கு இழை பொறை ஆற்றாள்,   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

மேலே உள்ள தாழிசையின் ஒவ்வொரு அடுக்கின் இறுதியிலும் வருகின்ற வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

இடும்பையோடு இனைபு ஏங்க, இவளை நீ துறந்ததை!
செறி வளை தோள் ஊர, இவளை நீ துறந்ததை!   
வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை!   

தாழிசையின் தன்மையின்படி, மேற்காணும் மூன்று வரிகளுமே ஒரே பொருளையே குறித்து வந்திருக்கவேண்டும். இதுதான் இங்கே நமக்குத் தேவையான ஏரணம். இந்த ஏரணப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும்
வளை தோள் ஊர்தல் என்பதும்
நுதல் பசப்பு ஊர்தல் என்பதும்

ஒரே வினையினைத் தான் குறித்துவந்திருக்க வேண்டும். இம் மூன்றனுள், நுதல் பசப்பு ஊர்தல் என்பது கண்ணில் இருந்து கண்ணீர் வழிதலைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இதிலிருந்து தாழிசையின் ஏரணமுறைப்படி,

இனைபு ஏங்குதல் என்பதும் வளை தோள் ஊர்தல் என்பதும் நுதல் பசப்பு ஊர்தலைப் போலவே அழுதல் / கண்ணீர் வழிதலையே குறித்து வந்திருக்க வேண்டும் என்பது பெறப்படுகிறது. மேலும், வளை என்பது கண்மை அணி என்று முன்னர் கண்டதால், தோள் என்பது இங்கே கண் / கண்ணிமையையும் குறிக்கும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

இதுவரை, தாழிசை ஏரண முறைப்படி நாம் மேலே கண்டவற்றில் இருந்து, இனைதல், பசப்பு, பயலை, இறை, தோள், முகம், நுதல், தொடி, வளை போன்ற சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய பொருட்கள் இருப்பதைக் கண்டோம். இதேமுறையில், இன்னும் பல சொற்களுக்கு அகராதிகள் காட்டாத புதிய / பொருத்தமான பொருட்களைக் கண்டறிய முடியும்.