வெள்ளி, 31 ஜூலை, 2015

கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?

முன்னுரை:

'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற கற்புக்கரசி. இவளது கற்பிற்காகவே எழுதப்பட்டது அன்றோ சிலப்பதிகாரக் காவிய நூல்?. சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் மட்டுமின்றி பிற ஆசிரியர்களும் இவளைப் போற்ற மறக்கவில்லை. இவளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எத்தனையோ கற்புக்கரசிகள் வாழ்ந்திருந்தாலும் 'கற்புக்கோர் கண்ணகி' என்று சான்று காட்டும் அளவுக்கு இவள் ஒரு தகைசால் பத்தினி ஆவாள். அவ் வகையில் இவளும் ஒரு சான்றோளே ஆவாள். இவள் தனது கற்பின் வலிமையால் தனக்கு அநீதி இழைத்த பாண்டியனின் மதுரை மாநகரை தனது ஒரு முலையினால் எரித்தாள் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திற்கு விளக்கம் எழுதிய பெரியோர்கள் கண்ணகி மதுரையினை தனது மார்பகத்தினால் எரித்தாள் என்று கூறி உள்ளனர். இந்த விளக்கம் எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றிய ஆய்வே இந்த கட்டுரை ஆகும்.

கண்ணகி மதுரையை எரித்தல்:

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியானது மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையிலும் அழற்படு காதையிலும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வஞ்சின மாலை கண்ணகியின் சீற்றத்தினை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. கணவனை இழந்த நிலையில் சொல்லொணாத் துயரமும் சீற்றமும் கொண்ட கண்ணகி மதுரையினை எவ்வாறு எரித்தாள் என்று கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
                                       - பா.எண்: 5

இதற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கமானது ' இடது மார்பகத்தினை கையால் திருகி, மதுரை மாநகரினை மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து, மிகுந்த வருத்தத்துடன், தேன் நிறைந்த தெருவிலே, விளங்கிய அணியினள் ஆன கண்ணகி, அம் மார்பகத்தினை வட்டித்து விட்டெறிந்தாள்.' என்பது ஆகும். 

கண்ணகி எறிந்தது மார்பகமா?

கண்ணகி தனது இடப்பக்க மார்பகத்தினை கையினால் அறுத்து  மதுரை மீது விட்டெறிந்தாள் என்று கூறுகின்றனர் தற்போதைய உரையாசிரியர்கள். மேற்காணும் பாடலில் வரும் முலை என்ற சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் கொண்டு இவ்வாறு விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இது பொருந்துமா என்று இங்கே பார்ப்போம்.

பெண்களின் மார்பகம் என்பது அவர்களது உடலுடன் பல தசைநார்களால் பின்னிப் பிணைந்துள்ளதும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளதுமான ஒரு உறுப்பு ஆகும். இதனை ஆயுதங்கள் ஏதுமின்றி யாரும் உடலில் இருந்து அறுத்துவிட முடியாது. குறிப்பாக பெண்களால் வெறும் கைகளால் இதைச் செய்யவே இயலாது. இந்நிலையில் கண்ணகி தன் மார்பகத்தினை கையால் அறுத்து எறிந்தாள் என்பது சாத்தியமற்ற செயல் என்பதால் இவ் விளக்கமே அடிபட்டுப் போவதை அறியலாம். இருப்பினும் ஒரு கற்பனையாக, கண்ணகி தனது பெரிய மார்பகத்தினை தனது கூரிய நகங்களால் குத்திக் குத்தித் திருகிப் பிய்த்தெடுத்துத் தனது உடலிலும் கையிலும் குருதியானது ஆறாகப் பெருகி வழிந்தோட, சதை உண்ணும் ஒரு பேயினைப் போல, அறுத்தெடுத்த மார்பினைக் கையில் வைத்திருப்பதாகக் கற்பனை செய்து பார்த்தால்.......... அப்பப்பா, நமக்கு மயக்கமே வந்துவிடுமல்லவா?. அதுமட்டுமின்றி, மனித உடலில் கண், காது, மூக்கு, பல், தலைமயிர், விரல்கள், நகங்கள் என்று எத்தனையோ உறுப்புக்கள் இருக்க, கண்ணகி தனது மார்பகத்தினைக் குறிப்பாக அறுத்தெறிவதற்கு ஒரு காரணமும் இல்லையே.

மேலும், சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் பாடலில் கண்ணகியினைக் குறிப்பிடும் புலவர் இவ்வாறு கூறுகிறார்:

' பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு...'

இதன் பொருளானது: ' பொன்போன்ற பூக்களை உடைய வேங்கை மரத்தின் நல்ல நிழலில் ஒரு முலையினை இழந்த நிலையில் ஒரு திருமா பத்தினி நின்றிருந்தாள்' என்பது ஆகும். புலவர் இங்கே முலை என்பதனை மார்பகம் என்ற பொருளில் கூறி இருக்க முடியாது. ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது மார்பகம் வெளியே தெரியும் வண்ணம் ஆடை உடுத்த மாட்டாள். அதிலும் கற்புக்கரசியாகிய கண்ணகி இவ்வாறு செய்திருப்பாளா?. ஒருபோதும் செய்திருக்க மாட்டாள். அன்றியும் கண்ணியம் மிக்க தமிழ்ப் புலவர் யாராகிலும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் முகத்தைப் பார்ப்பார்களே ஒழிய அவளது மார்பகம் விலகி இருக்கிறதா இல்லையா என்று ஒருபோதும் பார்க்க மாட்டார். இத்தகைய எண்ணம் தமிழினத்திற்கே இழுக்கல்லவா?. எனவே இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறித்து வந்திருக்காது என்று தெளியலாம்.

அடுத்து, குன்றக்குரவையின் முதல் பாடலில் குறவர்கள் கண்ணகியை நோக்கிக் கேட்பதாக உள்ளது. அப்பாடல்:

" மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர்! மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர்! யாவிரோ?"

இதன் பொருளானது: " மலைவேங்கை மரநிழலில் இருந்த வள்ளியைப் போலத் தோன்றும் பெண்ணே, கண்டவர் உள்ளம் நடுங்குமாறு ஒரு முலையினை இழந்தவளாய் வந்திருக்கின்ற நீங்கள் யார்?.". இதில் வரும் முலை என்னும் சொல்லுக்கு மார்பகம் எனப் பொருள் கொண்டால் கண்ணகி தன் மார்பகம் வெளியே தெரியுமாறு குறவர்களின் முன்னே தோன்றினாள் என்றல்லவா பொருள் வரும்?. கண்ணகி அவ்வாறு செய்ய மாட்டாள் என்பதால் இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இதுபோல பல சான்றுகளை சிலப்பதிகாரத்தில் இருந்தே காட்டலாம். ஆனால் கட்டுரையின் விரிவஞ்சி சில சான்றுகளே மேலே கூறப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கண்ணகி மதுரையை எரிக்க அறுத்து எறிந்தது மார்பகம் அல்ல என்பதை அறியலாம்.

கண்ணகி எதை எறிந்தாள்?

கண்ணகி அறுத்து எறிந்தது அவளது மார்பகம் இல்லை என்றால் அவள் எதை எறிந்திருக்கக் கூடும்?. வெறும் கைகளால் எளிதில் அறுத்து எறியக்கூடிய அதே சமயம் வெம்மை மிக்க ஒரு சிறு உறுப்பினைத் தான் கண்ணகி அறுத்து எறிந்திருக்க வேண்டும் அல்லவா?. அவ்வாறெனில் அந்த உறுப்பு அதாவது முலை என்பது ஒரு கண்ணாகத் தான் இருக்கும். இது வெறும் ஊகமல்ல; நிறுவப்படப் போகின்ற ஓர் பேருண்மை. அதற்கு முன்னர் கண்ணைப் பற்றிய சில உண்மைகளைக் கீழே காணலாம்.

கண்ணானது ஒரு சிறிய அதேசமயம் மிகவும் இன்றியமையாத உறுப்பாகும். உறுப்புக்களில் அழகானதும் பெண்களால் மிகவும் அழகுபடுத்தப் படுவதும் கண்ணே. மனித உணர்வுகளைக் காட்டும் கண்ணாடியும் இதுவே. அதேசமயம் இந்த உணர்வுகளால் மிகவும் பாதிக்கப்படுவதும் கண் தான். துயர உணர்வு  மிகும்போது கண்களில் நீர் துளிர்ப்பதையும் எல்லையற்ற சினத்தின்போது கண்கள் கோவைப்பழமாகச் சிவப்பதையும் நாம் காண்கிறோம். குறிப்பாக ஒருவர் சினம்கொள்ளும்போது வெளிப்படுகிற வெப்ப ஆற்றல் கண்களைச் சிவப்பாக்குவதுடன் வெப்பப் படுத்தவும் செய்கிறது. இந் நிலையில் இந்தக் கண்களுக்கு எரிக்கும் ஆற்றல் உண்டாகிறது. இதைத்தான் 'கண்களால் சுட்டெரித்தல்' என்று கூறுவார்கள். இது சாத்தியமா இல்லையா என இங்கே நாம் நிறுவப்போவது இல்லை. ஆனால் கண்களால் சுட்டெரித்த பல நிகழ்வுகள் புராண இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சிவபெருமான் முப்புரம் எரித்தது, காமனை எரித்தது, நக்கீரரை எரித்தது என சிலவற்றை அதற்கு சான்றுகளாகக் கூறலாம்.

சினம் எல்லோருக்கும் வரும்; அந்த சினத்தினால் கண்களும் சிவக்கும். ஆனால் சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு. சிவனுக்கு மட்டுமின்றி சீவனுக்கும் (மாந்தருக்கும்) எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதற்கு ஓர் சான்றே கண்ணகி ஆவாள். நீதிமுறை தவறி  தன் கணவனை கொன்ற பாண்டிய மன்னனின் மீது பெரும்சினம் கொண்ட கண்ணகி ஓர் பத்தினி (கற்புக்கரசி) என்பதால் அவளது சினம் மதுரை நகரை எரித்தது எனலாம். பெருகிய சினத்தினால் சிவந்து வெம்மையுற்ற தனது கண்களில் இடது கண்ணைப் பறித்த கண்ணகி மதுரையினை மூன்றுமுறை சுற்றிவந்து எறிந்ததாகக் கீழ்வரும் சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்
                                       - பா.எண்: 5

கண்ணகி மதுரையை எரிக்க தனது இடது கண்ணைப் பறித்து நிற்கின்ற நிலையிலும் அவளது கண்ணின் அழகை புலவர் பாராட்டியிருப்பதைப் பாருங்கள். மேற்காணும் பாடலில் 'கள் குடிக்கும் வண்டு போன்ற கண்மணியை உடைய கண்' என்று மூன்றாம் வரியில் பாடுகிறார். இதில்வரும் மறுகு என்னும் சொல் மறுகித் திரியும் இயல்புடைய வண்டினைக் குறிக்கும். மட்டு என்பது கள்ளினைக் குறிக்கும். எவ்வளவு அழகாக ஒளிவீசிய கண், இப்போது பறிக்கப்பட்டுக் குருதி வழிகின்ற ஓர் சதைக்கோளமாய்...... நினைக்கவே பயங்கரமாகவும் கண்ணகியின் நிலையினை நினைத்துப் பாவமாகவும் இருக்கிறதல்லவா?. சரி, கண்ணகி மதுரையை எரிக்கக் கண்ணைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் என்ன என்று பார்க்கலாம்.

கண்ணுக்குக் கண்ணாக, கண்ணின் அணியாக விளங்கிய கணவனே இறந்தபின்னர், இந்தக் கண்களால் பயன் என்ன?. யார் எனது கண்களை அழகு செய்து மகிழ்வார்?. யாருக்காக இனி அக் கண்களில் மைதீட்டி அழகு பார்க்க?. ஆம், கணவனாகிய கோவலன் தனது மையுண்ட கண்களின் அழகினைப் பாராட்டி மகிழ்ந்திருந்த நிகழ்ச்சிகள் அவளது நினைவுக்கு வந்துவந்து அவளை வாட்டுகிறது.

பணை இள வன முலையே முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே - சிலம் : கானல்
( முழுநிலாப் போல ஒளிரும் முகமும், அதில் பருத்த மெல்லிய அழகிய கண்ணிமைகளும், வளைந்த வில் போன்ற புருவங்களும்....)

முழு_மதி புரை முகமே இளையவள் இணை முலையே எனை இடர் செய்தவையே - சிலம் : கானல்
( முழுநிலாப் போன்ற முகமும் அதில் இருக்கும் கண்களும் என் நெஞ்சில் நோய் செய்தன.....)

திரு முலை தடத்துஇடை தொய்யில் அன்றியும் ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் - சிலம்: மனை
( ஒளிவீசும் முத்துப் போன்ற கண்கள் இருக்க, அழகிய கண்ணிமைகளின் பரப்பில் தொய்யில் எழுதியதும் ஏனோ?.......)

எப்படியெல்லாம் எனது கண்ணைப் பாராட்டி மகிழ்ந்தார் அவர்?. எவ்வளவு அன்புடன் இருந்தார் அவர்?. என்றெல்லாம் எண்ணி எண்ணி மருகுகிறாள். இறுதியில் ஒரு பெண் தனது மிகப் பெரிய சொத்தாக அழகுப் பொருளாகக் கருதிப் போற்றுகின்ற கண்ணையே அழித்துக் கொள்ள முடிவெடுக்கிறாள். ஆம், கண் போய்விட்டால், முகத்தின் ஒட்டுமொத்த அழகும் போய்விடும் அல்லவா?. கணவன் இறந்தபின்னர், மதுரையை விட்டு வெளியேறிய கண்ணகி சிந்திக்கிறாள். கண்ணுக்குக் கண்ணான தனது கணவனையே பறிகொடுத்த பின்னர், இந்தக் கண் மட்டும் எதற்கு? இதையும் இந்த மதுரை மாநகரே வைத்துக் கொள்ளட்டும் என்று கோபத்துடன் தன் கண்ணைப் பறித்து எறிகிறாள். இதுதான் கண்ணகி தனது கண்ணைப் பறித்து எறிந்ததற்கான காரணமும் சூழ்நிலையும் ஆகும்.

கண்ணகி அறுத்து எறிந்த முலையானது கண்ணையே குறிக்கும் என்பதனை மணிமேகலையில் இருந்தும் ஒரு சான்று கொண்டு நிறுவலாம்.

கணவற்கு உற்ற கடுந் துயர் பொறாஅள்        
மணம் மலி கூந்தல் சிறுபுறம் புதைப்ப
கண்ணீர் ஆடிய கதிர் இள வன முலை
திண்ணிதின் திருகி தீ அழல் பொத்தி
காவலன் பேர் ஊர் கனை எரி ஊட்டிய
மா பெரும் பத்தினி மகள் மணிமேகலை - மணி: ஊரலர்

இதன் பொருளானது: " கணவனாகிய கோவலனுக்கு நேர்ந்த கொடுந்துயரைக் கேட்டுப் பொறாதவளாய் மணமிக்க சாந்து பூசிய கண்ணிமைகளும் அமிழுமாறுப் பெருகி வழிந்த கண்ணீரை உடைய ஒளிமிக்க அழகிய தன் கண்ணை வலிமையுடன் கையினால் திருகியெடுத்து அதில் இருந்த வெப்பத்தினை தீயாக மூட்டி அதைக்கொண்டு பாண்டியனின் மதுரை மாநகரினைச் சுட்டெரித்த மாபெரும் பத்தினியாகிய கண்ணகியின் மகள் மணிமேகலை.."

இப் பாடல் மிகத் தெளிவாக முலை பற்றிக் கூறுகிறது. இப் பாடலில் வரும் ' கண்ணீர் ஆடிய கதிர் இள வனமுலை ' என்னும் வரியினுக்கு, ' கண்ணீர் பெருகிய ஒளிவீசும் அழகிய கண்கள் ' என்பதே பொருத்தமான விளக்கமாய் இருக்கும். மாறாக, ' கண்ணீரில் நனைந்த ஒளிவீசும் அழகிய மார்பகங்கள் ' என்று பொருள் கொள்வது சற்றும் பொருத்தமற்றது என்பது நன்கு புலப்படும்.

மேற்கண்டவற்றில் இருந்து, கண்ணகி அறுத்து எறிந்தது மார்பகம் அல்ல அவளது கண் தான் என்பது உறுதிசெய்யப்பட்டு விட்டது. இனி, முலை என்னும் சொல் எவ்வாறு கண் என்பதைக் குறிக்கும் என்று சான்றுகளுடன் காணலாம். .

முலை என்றால் என்ன?

முலை என்னும் சொல்லுக்கு இன்றைய அகராதிகள் மார்பகம் என்ற பொருளை மட்டுமே கூறுகின்றன. ஆனால் பல இடங்களில் இச்சொல் மார்பகத்தைக் குறிக்காததை மேற்கண்ட பாடல்களில் இருந்து அறிந்தோம். என்றால் இச்சொல் உணர்த்தும் வேறு சில பொருள்கள் என்ன என்று பார்க்கலாம்.

முலை என்னும் சொல் உணர்த்தும் வேறு பொருட்கள்
'கண் இமை' மற்றும் 'கண்' ஆகும்.

நிறுவுதல்:

கண்ணகி அறுத்து எறிந்ததாகக் கூறப்படும் முலை என்பது கண்ணையே குறிக்கும் என்பதை நிறுவுவதற்கு பல ஆதாரங்கள் உண்டெனினும் சில ஆதாரங்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகின்றன. முதலில் சிலப்பதிகாரத்தில் இருந்தே சில சான்றுகளைக் காணலாம்.

நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய்
ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும் - கானல்வரி - பா.எண்: 4

இதன் பொருளானது ' முழுநிலா போன்று ஒளிவீசும் முகத்தில் மீன் போலும் கண்கள் தோற்றுவித்த காதல்நோய்க்கு பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண் இமைகளே மருந்து போலும்.' என்பதாகும். ஆம், ஒரு பெண்ணின் கண்கள் ஓர் ஆடவனின் உள்ளத்தில் தோற்றுவிக்கின்ற காதல் நோய்க்கு அப் பெண்ணின் கண்களே அன்றி அவளது மார்பகங்கள் மருந்தாக முடியாது அல்லவா?. இதே கருத்தினை வள்ளுவரும் 'குறிப்பறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார்.

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - குறள் : 1091

அடுத்து அதே கானல்வரியில் மேலும் ஒரு சான்று:

...முழுமதி புரைமுகமே! இளையவள் இணைமுலையே எனை இடர் செய்தவையே!' - பா.எண்: 7

' முழுநிலா போன்ற முகமும் அதில் இணையாக விளங்கும் கண்களும் என்னை இடர் செய்தன' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் முகத்தினை முழுநிலா என்று முதலில் வருணிக்கும் காதலன் அம்முகத்தில் உள்ள கண்களைப் பற்றிக் கூறாமல் உடனே மார்பகத்தைப் பற்றிக் கூறுவானா? மாட்டான் அன்றோ?. எனவே இங்கும் முலை என்பது கண்களையே குறித்து வருவதை அறியலாம்.

'கதிர் இள வன முலை கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய்' - புறஞ்சேரி இறுத்த காதை - 163

'ஒளிவீசுகின்ற இளமை மிக்க அழகிய கண்களின் ஈற்றில் முருக்கமலர் போன்ற செம்மை பூசிய கடைக்கண் ' என்பது இதன் பொருளாகும். முலை என்பதற்கு மார்பகம் என்ற பொருள் கொண்டால் இவ் வரியின் விளக்கம் பொருந்தாது என்பதுடன் பண்பற்றதாகவும் இருக்கும்.

'மேகலை ஒலியாது மென்முலை அசையாது' - நடுகல்காதை -72

'(நாட்டியத்தின்போது ஒலிக்கும்) மேகலை ஒலிக்காமல் (நடனமாடும் பெண்ணின்) கண்கள் அசையாது' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் மார்பகங்கள் அசையாது என்று கூறுவது பண்பற்றதாகும்.

சிலப்பதிகாரப் பதிகத்தில் இருந்து மேலும் ஒரு சான்றைப் பார்க்கலாம்.

'பத்தினி ஆதலின் பாண்டியன் கேடுற முத்தார மார்பின் முலைமுகம் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய ' - 35

இதன் பொருளானது ' பத்தினி என்பதால் முத்துமாலை அணிந்த மார்பினனாகிய பாண்டிய மன்னன் கேடுற தனது கண்ணைத் திருகி எறிந்து கூடல் நகராகிய மதுரைக்குத் தீ மூட்டிய' என்பதாகும். இங்கும் முலை என்பது கண்ணையே குறிப்பதை அறியலாம். முலை என்பது கண்ணைக் குறிக்கும் என்பதற்கு மேலே கண்ட சிலப்பதிகாரச் சான்றுகளே போதுமானதாக இருந்தாலும், இன்னும் சில சான்றுகளின் மூலம், அதனை நாம் நிறுவ முயலலாம்.

முலைக்கான உவமைகள்:

ஒரு சொல்லின் முழுமையான பொருளை அறிய அதனுடன் ஒப்பிட்டுக் கூறப்படுகின்ற பிறவற்றின் பண்புகளை அறிந்தால் போதுமானது;. அப் பண்புகளைக் கொண்டு அச் சொல் எதைக் குறிக்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். அவ்வகையில், முலை எனும் சொல்லுக்கு இலக்கியங்களில் உவமையாகக் காட்டப்பட்டிருக்கும் பிற பொருட்களைப் பற்றி அறிந்துகொள்வதின் மூலம், முலை என்பது எவ்வாறு கண் மற்றும் கண்ணிமையினைக் குறிக்கும் என்பதை எளிதாக விளங்கிக் கொள்ளலாம்.

பொதுவாக, பெண்களின் முலையினைக் கீழ்க்கண்டவற்றுடன் இலக்கியங்கள் ஒப்பிட்டுக் கூறுகின்றன.

கோங்க மரத்தின் மலர்
ஞாழல் மரத்தின் மலர்
வேங்கை மரத்தின் மலர்
செந்தாமரை மலர்மொக்கு.
புன்க மரத்தின் இளந்தளிர்
பனைமரத்தின் இளநுங்கு
கடலில் விளைந்த வெண்முத்து
மழைநீரில் தோன்றும் நீர்க்குமிழி
குங்குமம் வைக்கின்ற சிமிழ்

இவை ஒவ்வொன்றினையும் தனித்தனியே சில ஆதாரங்களுடன் காணலாம்.

கோங்கும் முலையும்:

கோங்க மரத்தின் மலர்கள் நல்ல மஞ்சள் நிறத்தில் பொன் போல அழகாக இருக்கும். பெண்கள் தமது கண்களின் மெல்லிய இமைகளைப் பொன் வண்ணத்தில் பூசி இருக்கும்போது, அவை பார்ப்பதற்கு கோங்க மரத்தின் மஞ்சள்நிற மலர் இதழ்களைப் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கூறுகின்ற சில இலக்கியப் பாடல்கள் கீழே சான்றாகத் தரப்பட்டுள்ளன.

யாணர் கோங்கின் அவிர் முகை எள்ளி    பூண் அகத்து ஒடுங்கிய வெம்முலை....சிறு -25   
( கோங்கின் புதிய ஒளிவிடும் மலர்மொக்கினைப் போல் வண்ணம் பூசப்பட்ட அழகிய இமைகள்....)

இன வண்டு ஆர்ப்ப முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் - குறு - 254
( வண்டுகள் ஊதுதலால், பெண்களின் மைபூசிய கண்ணிமை போல் கோங்க மரத்தின் மெல்லிய மலர்மொட்டுக்கள் மலர.....)

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56
( கோங்க மரத்தின் மலர் போல மஞ்சள்வண்ணம் பூசப்பட்டும், சிறுநுங்கினைப் போல பருத்துத் திரண்டும், மழைநீரில் தோன்றிய நீர்க்குமிழ் போல மெல்லியதாயும் இருக்கின்ற உனது கண்ணிமைகள்.....)

கோங்கின் முதிரா இள முகை ஒப்ப எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய் - கலி - 117
( கோங்க மரத்தின் மஞ்சள்நிற மலர்மொட்டு போலத் தோன்றுகின்ற தொய்யில் எழுதிய அழகிய கண்ணிமைகள்......)

மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு - அகம் - 99
( அழகிய பெண்களின் மையணிந்த கண்ணிமை போல கோங்க மரத்தின் மஞ்சள்நிற மொட்டுக்கள் அவிழ்ந்து மலர..)

கோங்கு முகைத்து அன்ன குவி முலை - அகம் - 240
( கோங்க மரத்தின் மஞ்சள்நிற மலர்மொக்கு போல் மைபூசிய குவிந்த கண்ணிமைகள்......)

கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலை - புறம் - 336
( கோங்க மரத்தின் மஞ்சள்நிற மலர்மொட்டு போன்ற மைபூசிய மெல்லிய கண்ணிமைகள்......)

பொன் ஈன்ற கோங்கு அரும்பு அன்ன முலையாய் - நால -10
( கோங்க மரத்தின் பொன்நிறத்து மலர்மொட்டுக்களைப் போன்ற மைபூசிய கண்ணிமைகளை உடையவளே.....)

பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் - திணை.நூற் - 63
( கோங்க மரத்தின் பொன்வண்ண மலர் போன்ற கண்ணிமைகளை உடையவளே....)

ஞாழலும் முலையும்:

ஞாழல் என்பது ஒருவகைக் கொன்றைமரத்தினைக் குறிப்பதாக அகராதிகள் கூறுகின்றன. இம் மரத்தின் பூக்கள் சிறியதாகவும் கொத்தாகவும் ஒளிவீசும் மஞ்சள்நிறத்திலும் இருப்பதாக இலக்கியங்கள் காட்டுகின்றன. பெண்கள் தமது கண்ணிமைகளில் மிகச்சிறிய பொன்நிறப் பூந்தாதுக்களைக் கொண்டு அலங்காரம் செய்திருப்பதனை, ஞாழலின் மலர்களுடன் ஒப்பிட்டு இலக்கியங்கள் கூறுகின்றன.

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டல் பாவை வன முலை முற்றத்து ஒண் பொறி சுணங்கின் ஐது பட தாஅம் - நற் - 191

( பெண்கள் தமது அழகிய கண்ணிமையின் பரப்பில் பூசியிருந்த மஞ்சள்நிறப் பூந்தாதுக்களைப் போல, அவர்கள் மணலில் கட்டிய வண்டல் பாவையின்மேல் ஞாழலின் சிறிய மஞ்சள்நிறப் பூக்கள் விழுந்து பரந்திருக்க.... )

ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை - ஐங்கு -149
( ஞாழல் மரத்தின் மஞ்சள்நிறப் பூக்களைப்போல பூந்தாதுக்களை அணிந்த மெல்லிய கண்ணிமைகள்....)

வேங்கையும் முலையும்:

வேங்கை மரத்தின் பூக்கள் பொன் போல ஒளிரும் தன்மையவை. பெண்கள் தமது கண்களின் மெல்லிய இமைகளைப் பொன் வண்ணத்தில் பூசி இருக்கும்போது, அவை பார்ப்பதற்கு வேங்கை மரத்தின் மஞ்சள்நிற மலர் இதழ்களைப் போலத் தோன்றும். இதைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன. 

பொன் வீ வேங்கை புது மலர் புரைய நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை - அகம் - 319
( வேங்கை மரத்தின் பொன்நிறப் புதுமலர்களைப் போல நல்ல மஞ்சள்நிறத்தில் மைபூசப்பட்ட பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகள்.......)

விரி சினை துணர்ந்த நாகு இள வேங்கையின் கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின்
மா கண் மலர்ந்த முலையள் - புறம் - 352
( வேங்கை மரத்தின் விரிந்த கிளைகளில் பூத்த மலர்களைப் போல ஒளிவீசுகின்ற நுண்ணிய பலவாகிய பூந்தாதுக்களை உடைய மைபூசிய கண்ணிமைகளை உடையவள்.....)

தாமரையும் முலையும்:

குளத்து நீரில் பூக்கும் பூவான செந்தாமரை மலரின் மொக்குகள் கூரானவை; இதழ்கள் குளிர்ச்சி மிக்கவை; பல வரிகளை உடையவை. பெண்கள், வரிகளை உடைய தமது கண்ணிமைகளை இளஞ்சிவப்பு நிறத்தில் பூசி கடைக்கண் ஈற்றினையும் கூராக்கி இருக்கும்போது, அவை பார்ப்பதற்குச் செந்தாமரையின் மலர்மொக்குகள் போலத் தோன்றும். இதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

வரு முலை அன்ன வண் முகை உடைந்து
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு - 72
( பெண்டிரின் மை தீட்டிய கண்ணிமை போல இதழ் மலர்ந்த தாமரை .........)

குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் இள முலை - கலி -22
( குளத்தில் பூத்த தாமரையின் அரும்புகளை ஒத்திருக்கின்ற மென்மையான மைபூசிய கண்ணிமைகள்......)

குளிர் தாமரை மொட்டின் வீங்கிய வெம் முலை - சிந்தா - 2575
( குளிர்ச்சிமிக்க தாமரை மொகுட்டுப் போலப் பருத்த அழகிய கண்ணிமைகளை உடையவள்......)

புன்க மரமும் முலையும்:

புன்க மரமானது அரிசிப்பொரி போன்ற சிறிய வெண்ணிறப் பூக்களைப் பூப்பதாகும். இம் மரத்தின் இளந்தளிர்கள் தீயின் வண்ணத்தில் அதாவது மஞ்சளும் சிவப்பும் கலந்த ஆரஞ்சு வண்ணத்தில் தோன்றும். இலைகளை எல்லாம் உதிர்த்துவிட்டு மொட்டையாக நிற்கும் இம்மரங்கள், மீண்டும் தளிர்க்கின்ற காலத்தை வைத்துப் பெண்கள் தமது கணவர் திரும்பிவருகின்ற காலத்தை அறிவர். இதைப் பற்றிய பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பொரி பூ புன்கின் அழல் தகை ஒண் முறி
சுணங்கு அணி வன முலை அணங்கு கொள திமிரி - நற் -9
( நெற்பொரி போலும் பூப்பதான புன்க மரத்தில் தீப்போல ஒளிரும் இளந்தளிர்களானது, பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகள் வருந்துமாறுத் தோன்றி.......)

அவரோ வாரார் தான் வந்தன்றே எழில் தகை இள முலை பொலிய
பொரி பூ புன்கின் முறி திமிர் பொழுதே - ஐங்கு -347
( நெற்பொரி போலப் பூப்பதான புன்க மரத்தில், மையணிந்த அழகிய கண்ணிமை போன்ற இளந்தளிர்கள் தோன்றுகின்ற காலம் வந்துவிட்டது; ஆனால் என் காதலர் இன்னும் வரவில்லையே...)

பனைமரமும் முலையும்:

பனைமரமானது மாந்தர்க்கு அளிக்கின்ற பல பயன்களுள் ஒன்றுதான் நுங்கு ஆகும். இதனைக் குரும்பை என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன. பனைமரத்தின் இளங்காய்களை வெட்டினால் உள்ளே இருப்பதுவே குரும்பை அதாவது நுங்கு எனப்படும். இது வெளியில் இருந்து பார்ப்பதற்கு, இரண்டு இமைகளையும் மூடிய கண்ணைப் போல, இருபுறங்களிலும் புடைப்பினை உடையதாகவும் நடுவில் சிறுகோடு போன்ற பள்ளம் உடையதாகவும் இருக்கும். இதனுள்ளே பார்த்தால், கண்விழியினைப் போல பளபளப்பு மிக்க திரட்சியான சதைப்பற்றும் நீரும் இருக்கும். நுங்கின் மேற்புறத் தோலானது வெட்டி எடுத்தவுடன் வெள்ளை நிறமாகக் காட்சியளிக்கும். நேரம் செல்லச்செல்ல மஞ்சளாகி இறுதியில் செம்பழுப்பு நிறத்திற்கு மாறிவிடும். இத்தகைய பண்புகளால் தான் நுங்கினைப் பெண்களின் மையுண்ட கண்களுக்கு உவமையாக்கிக் கூறுகின்றனர் புலவர். சில சான்றுகள் கீழே தரப்பட்டுள்ளன.

முலை என வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் - சிறு -25
( பெண்களின் மையுண்ட கண்களைப் போன்ற மிக்க குலைகளை உடைய பனைமரத்து நுங்குகளின்......)

தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை - நற் - 392
( இனிய சுவைகொண்ட நுங்கினைப் போல பருத்த அழகிய கண்கள்.....)

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56
( கோங்க மரத்தின் மலர் போல மஞ்சள்வண்ணம் பூசப்பட்டும், சிறுநுங்கினைப் போல பருத்துத் திரண்டும், மழைநீரில் தோன்றிய நீர்க்குமிழ் போல மெல்லியதாயும் இருக்கின்ற உனது கண்ணிமைகள்.....)

குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 253
( நுங்கு போல் திரண்ட கண்களின் இமையில் தோன்றுகின்ற பூந்தாதுக்கள்......)

குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம் - சிந்தா -97
( பனைமரத்து நுங்கு போன்ற கண்களின் இமையில் எழுதப்பட்ட குங்குமம்.......)

குரும்பையின் பொலிந்த வெம் முலை - சிந்தா - 1022
( நுங்கு போல பொலிவுற்று விளங்கும் அழகிய கண்ணிமைகள்......)

மோட்டு இளம் குரும்பை அன்ன முலை - சிந்தா - 1688
( பருத்த இள நுங்கு போன்ற கண்கள்......)

மடல் அணி பெண்ணை ஈன்ற மணி மருள் குரும்பை மான
உடல் அணி ஆவி நைய உருத்து எழும் முலையினாளும் - சிந்தா - 2053
( பனைமரத்துப் பிறந்த மணி போலும் சதைப்பற்றுடைய நுங்கினை ஒப்பதாய் உடலும் உயிரும் நோகுமாறு திரண்டு காணப்படுகின்ற கண்களை உடையவளும்....)

கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற
இழை முலை தடத்தினாள் - சிந்தா - 2526
( பனைமரத்துப் பிறந்த நுங்கு போலவும் குங்குமச்சிமிழ் போலவும் தோன்றும் மையணிந்த கண்ணிமைகளை உடையவள்........)

முத்தும் முலையும்:

கடல் உயிரினங்களான சிப்பிகளுக்குள் தோன்றும் முத்துக்களில் பல வகைகள் உண்டு. இவற்றில் மிகச் சிறந்த முத்துக்கள் பெரிதாகவும் வலிமை மிக்கதாயும் வெண்ணிறத்தில் ஒளிவீசுவதாய் இருக்கும். இவற்றைப் பெண்களின் பருத்த அழகிய ஒளிவீசும் வெண்ணிறக் கண்களுடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம். சில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகத் தரப்பட்டுள்ளன.

வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க - அகம் -73
( இருளில் ஒளிரும் பூனையின் கண்களைப் போல வெண்ணிற ஒளிவீசுகின்ற முத்துப்போன்ற திரண்ட கண்கள் இமைகளுக்கிடையில் விளங்க......)

திரு முலை தடத்துஇடை தொய்யில் அன்றியும் ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் - சிலம்: மனை
( ஒளிவீசும் முத்துப் போன்ற கண்கள் இருக்க, அழகிய கண்ணிமைகளின் பரப்பில் தொய்யில் எழுதியதும் ஏனோ?.......)

கடல் நித்திலம் வைத்த கதிர் முலையின் இடன் எத்துணை அத்துணையும் எழுதி - சிந்தா -1515
( கடலில் தோன்றிய முத்துப்போல் ஒளிவிடும் கண்களின் மேல் இமைகளில் அனைத்து இடங்களிலும் எழுதி......)

பரு முத்து உறையும் பணை வெம் முலை - சிந்தா -1518
( திரண்ட முத்துப் போலப் பருத்த அழகிய கண்கள்.....)

நீர்க்குமிழியும் முலையும்:

மழை பெய்யும்போது மழைநீரில் தோன்றுகின்ற நீர்க்குமிழிகள் பளபளப்பு உடையதாய் மிக மெல்லியதாய் இருக்கும். இதனைப் பெண்களின் குவிந்த அதேசமயம் மெல்லிய இதழ் போன்ற கண் இமைகளுடன் ஒப்பிடுவது இலக்கிய வழக்கம். இதனை முகிழ் என்றும் மொக்குள் என்றும் இலக்கியம் கூறுகிறது. சில பாடல்கள் கீழே:

முதிர் கோங்கின் முகை என முகம் செய்த குரும்பை என
பெயல் துளி முகிழ் என பெருத்த நின் இள முலை - கலி - 56
( கோங்க மரத்தின் மலர் போல மஞ்சள்வண்ணம் பூசப்பட்டும், சிறுநுங்கினைப் போல பருத்துத் திரண்டும், மழைநீரில் தோன்றிய நீர்க்குமிழ் போல மெல்லியதாயும் இருக்கின்ற உனது கண்ணிமைகள்.....)

முகிழ் மென் முலை - சிந்தா -18
( நீர்க்குமிழி போன்ற மெல்லிய கண்ணிமைகள்....)

மழை மொக்குள் அன்ன வரு மென் முலை மாதர் நல்லார் - சிந்தா - 1064
( மழைநீர்க் குமிழி போல் மென்மையான கண்ணிமைகளை உடைய பெண்கள்.......)

குங்குமச்சிமிழும் முலையும்:

பெண்கள் தமது மங்கலப் பொருட்களில் ஒன்றாகக் கருதுகின்ற குங்குமத்தினைச் சிறிய சிமிழ்களில் அதாவது குப்பிகளில் அடைத்து வைத்திருப்பர். இவை கண் போன்ற வடிவத்தில் கண்ணிமை போல பருத்த மூடியால் மூடப்படுவதாய் இருக்கும். பெரும்பாலும் இது செம்பினால் செய்யப்பட்டிருப்பதால் இதனைச் செப்பு என்றே இலக்கியங்கள் கூறுகின்றன. பெண்கள் தமது குவிந்த கண்ணிமைகளைச் செந்நிறத்தில் பூசி இருக்கும்பொழுது அவை பார்ப்பதற்குக் குங்குமச் சிமிழ்களைப் போலத் தோன்றும். இதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

கொம்மை வரி முலை செப்புடன் எதிரின - குறு - 159
( அழகிய வரிகளையுடைய செந்நிறக் கண்ணிமையானது குங்குமச்சிமிழ் போலத் தோன்ற.......)

குலிக செப்பு அன கொம்மை வரி முலை - சிந்தா - 641
( குங்குமச்சிமிழ் போலப் பருத்ததுவும் செந்நிறத்ததுவும் ஆகிய அழகிய கண் இமைகள்......)

செப்பினை காய்ந்த வெம் முலையாய் - சிந்தா - 759
( குங்குமச் சிமிழ் போன்ற அழகிய கண்ணிமைகள்.....)

திரு மணி செப்பு என செறிந்த வெம் முலை - சிந்தா - 822
( அழகிய ஒளிவீசும் குங்குமச் சிமிழ் போல பருத்த அழகிய கண்ணிமைகள்..........)

செப்பு இணை அனைய செம் கேழ் வன முலை - சிந்தா - 1691
( இரண்டு குங்குமச்சிமிழ்கள் போல் செவ்வண்ணம் தீட்டப்பெற்ற அழகிய கண்ணிமைகள்.....)

கொழு மடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற இழை முலை தடத்தினாள் - சிந்தா - 2526
( பனைமரத்துப் பிறந்த நுங்கு போலவும் குங்குமச்சிமிழ் போலவும் தோன்றும் மையணிந்த கண்ணிமைகளை உடையவள்........)

முலையும் அணிகளும்:

கண்ணுக்கு மையழகு, கவிதைக்குப் பொய்யழகு என்பதைப் போல பெண்ணுக்கு எது அழகு என்றால் அது அவரது கண் தான். ஆம், ஒரு பெண் தன்னை அழகாகக் காட்டிக்கொள்ள மிளிரும் வண்ண ஆடைகளையோ ஜொலிக்கும் நகைகளையோ அணியத் தேவையில்லை. தமது கண்ணிமைகளை மைபூசி அலங்கரித்தால் போதும். காண்பவர் மனதைக் கொள்ளை கொண்டுவிடும். சிலருக்கு இயல்பாகவே கண் இமைகள் பருத்தும் வரிகளை உடையதாயும் அழகாக இருக்கும். சிலருக்கு வறண்டு அழகின்றிக் காணப்படும். நல்ல கண் இமைகள் இருந்தால் தான் அவற்றில் மைபூசி அழகுசெய்ய முடியும். இமைகள் வறண்டு மோசமாக இருந்தால் அதனை அழகுசெய்ய முடியாது. இதனால் தான், நல்ல கண் இமைகள் இல்லாத ஒரு பெண்ணை ஒரு ஆடவன் விரும்புவது கல்வி அறிவே இல்லாத ஒருவனது பேச்சைக் கேட்க விரும்புவது போலாகும் என்று கூறுகிறார் வள்ளுவர்.   

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றன்று. -402

அதாவது, எப்படிக் கல்வி அறிவு இல்லாதவனின் பேச்சு கேட்போருக்கு மகிழ்ச்சியைத் தராதோ அதைப்போல ஒரு பெண்ணின் அழகுசெய்ய இயலாத இமைகள் அதைக் காணும் ஆடவனுக்கு மகிழ்ச்சியைத் தராது என்கிறார். இக் குறளில் வரும் முலை என்பது நல்ல கண்ணிமையினைக் குறித்து வந்துள்ளது.

இப்படிப் பெண்கள் மிகவும் விரும்பி அழகுசெய்யக்கூடிய உறுப்பான கண் இமையினைப் பல அணிகளால் அலங்காரம் செய்து வந்துள்ளனர். பல வண்ண மைகளாலும், பூக்களின் தாதுக்களாலும் அழகு செய்யப்பட்ட கண்ணிமைகள் காணும் ஆடவரின் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும் தன்மையன என்பதனால் அதனை முகத்திரை போன்ற துணியினால் மூடியிருப்பர். பெண்களின் மையுண்ட அழகிய கண்களை மதங்கொண்ட யானையின் மருட்சியினை உடைய கண்களுடன் ஒப்பிட்டு இரண்டையும் ஆடைகொண்டு மூடச் சொல்கிறார் வள்ளுவர். காரணம், இந்த இரண்டும் மூடிவைக்கப்படா விட்டால் பிறருக்குத் துன்பமே தரும். எவ்வாறு மதங்கொண்ட யானையானது மிரண்டு பிறருக்குத் துன்பம் தருமோ, அதைப்போல பெண்களின் அழகிய விழிகளைக் கண்ட ஆடவரும் காமநோயால் துன்புறுவர்.

கடாஅ களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில் - குறள் - 1087

( பொருள்: மதங்கொண்ட யானையின் கண்களைக் கட்படாம் கொண்டு மூடுவதைப்போல, பெண்கள் தம் அழகிய கண்களை ஆடையால் மூடியிருப்பர். )

இப்படிப் பெண்கள் தமது கண்ணிமைகளை மூடியிருக்கின்ற மெல்லிய ஆடையினைக் கோட்டைமதிலைச் சுற்றிலும் பாதுகாப்புக்காகத் தோண்டப்பட்டிருக்கும் அகழியுடன் ஒப்பிட்டுக் கூறுகிறது சிந்தாமணிப் பாடலொன்று.

அகழ் கிடங்கு அம் துகில் ஆர்ந்த பாம்புரி
புகழ் தகு மேகலை நாயில் பூண் முலை
திகழ் மணி கோபுரம் திங்கள் வாள் முகம்
சிகழிகை நெடும் கொடி செல்விக்கு என்பவே - சிந்தா -1444

( பொருள்: முகபடாம் ஆகிய அகழியைத் தாண்டிச்சென்றால் வரும் கோட்டைமதிலானது நெற்றியில் அணிந்த மேகலை அணி போல விளங்க, கோட்டைமதிலுக்கு மேலே முகப்பின் இருபுறங்களிலும் இருப்பதான அம்பெய்யும் ஏவறைகள் இரண்டு கண்களாக விளங்க, கோட்டையின் முகப்புக் கோபுரமானது ஒளிவீசும் முகம்போலத் தோன்ற, கோபுரத்தின் உச்சியில் பறக்கின்ற நீண்ட கொடியானது, அவள் தன் மார்பில் அணிந்திருந்த மாலையின் மையப்பகுதி போலவும் தோன்றியது.......)

புலவர்கள் எப்படியெல்லாம் கற்பனை செய்கின்றனர் பாருங்கள் !!!. இனி, பெண்கள் எப்படியெல்லாம் தமது கண்ணிமைகளை அழகு செய்தனர் என்று பார்க்கலாம்.

சுணங்கும் முலையும்:

சங்கப் பெண்கள் பெரும்பாலும் இயற்கைப் பொருட்களாலேயே தம் கண்களை அழகு செய்திருக்கின்றனர். குறிப்பாக, பூக்களின் வண்ண வண்ணத் தாதுக்களைக் கொண்டு கண் இமைகளின் மேல் அப்பி அழகு செய்திருக்கின்றனர். இதில் பொன் நிறத் தாதுக்களே அதிகம் பயன்படுத்தப் பட்டுள்ளன. தாதுக்களை அரைத்து மொத்தமாகக் கண் இமைகளின் பூசாமல் ஆங்காங்கே தூவியதுபோல பயன்படுத்தி இருக்கின்றனர். இதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின்    - நற் - 160
( புள்ளிகள் வரையப்பட்ட அழகிய மென்மையான கண்ணிமைகளில் தூவியது போலத் தோன்றுகின்ற அழகிய பூந்தாதுக்கள்......)

சுணங்கு அணி வன முலை - நற் - 319
( பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமை....)

அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை - குறு - 71
( பூந்தாதுக்கள் பூசப்பட்ட அழகிய மெல்லிய கண்ணிமைகள்......)

சுணங்கு அணி வன முலை சுடர் கொண்ட நறு நுதல் - கலி - 60
( பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகளும் ஒளிவீசுகின்ற கண்களும் ......)

சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ - கலி -111
( பூந்தாதுக்களை அணிந்த மென்மையான கண்ணிமைகளின் மேல் தொய்யில் எழுதலாமா?....)

வன முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 6
( அழகிய கண்ணிமைகளின் மேல் தோன்றுகின்ற பூந்தாதுக்கள்....)

சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி - அகம் - 87
( பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகளின் அழகினைப் பாராட்டி....)

அணங்கு உடை வன முலை தாஅய நின் சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே - அகம் - 177
( அழகிய கண்ணிமையில் பரவியிருக்கின்ற பூந்தாதுக்களை இடையிலிட்டு எழுதப்பட்ட தொய்யிலை நினைத்து...)

குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் - அகம் - 253
( நுங்கு போல் திரண்ட கண்களின் இமையில் தோன்றுகின்ற பூந்தாதுக்கள்......)

பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென் முலை முற்றம் - அகம் - 279
( பொன்நிறத்துப் பூந்தாதுக்களுடன் விளங்குகின்ற மெல்லிய இமைகளின் பரந்த இடத்தில்...)

சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை - அகம் - 302
( சிலவாகிய பூந்தாதுக்களை அணிந்த திரண்ட அழகிய கண்ணிமைகள்.....)

பொன் வீ வேங்கை புது மலர் புரைய நன் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை - அகம் - 319
( வேங்கை மரத்தின் பொன்நிறப் புதுமலர்களைப் போல நல்ல மஞ்சள்நிறத்தில் மைபூசப்பட்ட பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகள்.......)

சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை - அகம் - 343
( சிலவாகிய பூந்தாதுக்களை அணிந்த பல வண்ணங்கள் கொண்ட மெல்லிய கண்ணிமைகள்.....)

முலை மேல் சுணங்கு - திணை . ஐம் - 28
( கண்ணிமையின் மேல் விளங்கும் பூந்தாதுக்கள்.....)

பூம் சுணங்கு மென் முலைகள் - திணை.நூற் - 21
( பூந்தாதுக்களைப் பூசிய மெல்லிய கண்ணிமைகள்.....)

பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் - சிறு - 46
( பொன் போலும் பூந்தாதுக்களை அணிந்த மெல்லிய கண்ணிமைகளை உடையவளே....)

நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த           
உறை மலி உய்யா நோய் ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும் - சிலம்: கானல்
( முழுநிலாப் போல ஒளிரும் முகத்தில் மீன் போலும் உனது கண்கள் எனக்குள் உருவாக்கிய காமநோயினை பூந்தாதுக்கள் பரவியிருக்கும் உனது மெல்லிய கண்இமைகளே தீர்க்கும் போலும்.....)

பொன் அவிர் சுணங்கு பூத்த பொங்கு இள முலையினார் - சிந்தா - 457
( பொன் போன்ற பூந்தாதுக்களை அணிந்த பருத்த கண்ணிமைகளை உடையவர்...)

பொன் அவாம் சுணங்கு போர்த்த பொங்கு இள முலையினாள் - சிந்தா -1626
( பொன் போன்ற பூந்தாதுக்களை அணிந்த அழகிய கண்ணிமைகளை உடையவள்.......)

பொன் படு சுணங்கு போர்த்த பொங்கு இள முலையில் - சிந்தா - 2664
( பொன் போன்ற பூந்தாதுக்களை அணிந்த கண்ணிமைகளில்.......)

தொய்யிலும் முலையும்:

பெண்கள் பூந்தாதுக்களைக் கொண்டு கண் இமைகளின் மேல் அப்பி அழகு செய்தனர் என்று மேலே கண்டோம். அதுமட்டுமின்றி, வண்ண மைகளாலும் கண் இமைகளைச் சுற்றி வரிபோலப் பூசியும் அழகு செய்துள்ளனர். இவ் வரிகளைத் தொய்யில் என்று இலக்கியம் கூறுகிறது. இந்தத் தொய்யில் வரிகளுக்கு இடையிலான பரப்பில் தான் பூந்தாதுக்களைக் கொண்டு அழகு செய்வர். இதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை - மது - 416
( தொய்யில் எழுதப்பட்ட பூந்தாதுக்கள் பூசப்பட்ட மெல்லிய கண்ணிமைகள்.....) 

தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்ப - நற் - 225
( மை எழுதிய அழகிய கண்ணிமைகள் வண்ணங்களை இழக்க.....)

உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் - குறு - 276
( திரட்சியை உடைய அழகிய கண்ணிமையானது ஒளி பெறுமாறு எழுதப்பட்ட தொய்யில் .......)

சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ - கலி -111
( பூந்தாதுக்களை அணிந்த மென்மையான கண்ணிமைகளின் மேல் தொய்யில் எழுதலாமா?....)

கோங்கின் முதிரா இள முகை ஒப்ப எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய் - கலி - 117
( கோங்க மரத்தின் மஞ்சள்நிற மலர்மொட்டு போலத் தோன்றுகின்ற தொய்யில் எழுதிய அழகிய கண்ணிமைகள்......)

இள முலை மேல் தொய்யில் எழுதவும் வல்லன் - கலி -143
( மெல்லிய கண்ணிமைகளின் மேல் தொய்யில் எழுதவும் வல்லவன்......)

அணங்கு உடை வன முலை தாஅய நின் சுணங்கு இடை வரித்த தொய்யிலை நினைந்தே - அகம் - 177
( அழகிய கண்ணிமையில் பரவியிருக்கின்ற பூந்தாதுக்களை இடையிலிட்டு எழுதப்பட்ட தொய்யிலை நினைத்து...)

குங்குமமும் சந்தனமும்:

பெண்கள் தமது கண்ணிமைகளை வண்ண மையினால் மட்டுமின்றி குங்குமத்தாலும் சந்தனத்தாலும் பூசி ஆழகு செய்திருக்கின்றனர். இதில் சந்தனத்தையும் குங்குமத்தையும்  கரைத்து அப்படியே கண் இமைகளின் மேல் பூசி இருக்கின்றனர். சில சமயங்களில் குங்குமக் கரைசலை கண்ணிமைகளின் மேல் கொடி போல வளைத்து எழுதி இருக்கின்றனர். இதைப் பற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

குளிர் சாந்தம் மிக்க வன முலை - கைந் - 48
( குளுமை தரும் சந்தனம் பூசிய அழகிய இமைகள்.....)

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை - சிலம்: அழல்
( சந்தனம் பூசிய அழகிய கண்ணிமைகள்........)

சாந்தம் தோய்ந்த ஏந்து இள வன முலை காய்ந்த பசி எருவை கவர்ந்து ஊண் ஓதையும் - மணி: சக்கர
( கடும்பசியால் வாடிய கழுகானது, சந்தனம் பூசிய அழகிய கண் இமையினைக் கொத்தி உண்ணும்போது எழுப்புகின்ற ஓசையும்......)

கதிர் முலை திமிர்ந்த சாந்தம் - சிந்தா -109
( ஒளிவிடும் கண்களின் இமையில் பூசப்பட்ட சந்தனம்.......)

குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி - சிந்தா - 850
( குங்குமத்தினையும் சந்தனத்தையும் கலந்து அழகிய கண்ணிமையின் மேல் கொடிபோல் வளைத்து எழுதி விளையாடி.......)

சாந்து-இடை குளித்த வெம் கண் பணை முலை - சிந்தா -1358
( சந்தனம் பூசிய அழகிய பருத்த கண்ணிமைகள்.......)

மலை கொள் சந்தனம் வாய் மெழுக்கிட்ட தன் முலை - சிந்தா - 1371
( மலையில் விளைந்த சந்தனத்தால் பூசிய கண்ணிமைகள்.....)

சாந்து கொண்டு இள முலை எழுதி - சிந்தா -1992
( சந்தனத்தினால் கண்ணிமைகளில் எழுதி........)

குங்குமம் சேர் வெம் முலை மேல் - சிந்தா -1043
( குங்குமத்தால் எழுதப்பட்ட அழகிய கண்ணிமைகளின் மேல்.......)

குங்கும கொடியோடு ஏந்தி கோலம் வீற்றிருந்த கொம்மை பொங்கு இள முலையினார்க்கு - சிந்தா - 1096
( குங்குமத்தால் கொடிபோல எழுதப்பட்ட அழகு பொங்கும் கண்ணிமைகளை உடையவர்க்கு......)

அலர் முலை முழுதும் குங்குமம் முத்தொடு அணிந்த பின் - சிந்தா -1317
( பரந்த கண்ணிமை முழுவதும் குங்குமத்தை அழகுடன் அணிந்தபின்......)

குங்குமமும் சந்தனமும் கூட்டி இடு கொடியா வெம் கண் இள முலையின் மிசை எழுதி விளையாடி - சிந்தா - 850
( குங்குமத்தினையும் சந்தனத்தையும் கலந்து அழகிய கண்ணிமையின் மேல் கொடிபோல் வளைத்து எழுதி விளையாடி.......)

குங்குமம் குயின்ற கும்மை குவி முலை - சிந்தா - 2064
( குங்குமம் எழுதப்பட்ட அழகிய குவிந்த கண்ணிமைகள்.......)

கோல மென் முலை குங்குமம் இடு கொடி எழுதி - சிந்தா - 2383
( அழகிய மெல்லிய கண்ணிமைகளில் குங்குமத்தினால் கொடிபோல வளைத்து எழுதி.......)

இமைத்தலும் முலையும்:

முலை என்ற சொல் கண் அல்லது கண்ணிமையைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். இதில் கண்ணிமையின் முதன்மைத் தொழில் இமைத்தலே ஆகும். கண்ணிமைக்கும் நேரத்தினை இமைப்பொழுது என்று கூறுவோம். இந்த இமைப்பொழுது பற்றிய ஒரு சங்கப் பாடலைக் கீழே காணலாம்.

ஆளி நன் மான் அணங்கு உடை குருளை மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி
முலை கோள் விடாஅ மாத்திரை ஞெரேரென தலை கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு - பொரு - 141

( சிங்கத்தின் வலிய குட்டியானது களிற்று யானையின் கழுத்தினைக் குறிவைத்துக் கண்ணிமைக்கும் நேரத்தில் ஒரு யமனைப் போன்ற வலிமையுடன் பாய்ந்ததைப் போல.....)

இப் பாடலில், முலை என்பது கண்ணிமையினையும் முலைகோள் என்பது கண்ணிமைத்தலையும்,. முலைகோள் விடா மாத்திரை என்பது கண்ணிமைக்கும் கால அளவினையும் குறிக்கும்.

கண்ணீரும் முலையும்:

முலை என்னும் சொல்லானது சில இடங்களில் பசப்பு, பசலை ஆகிய சொற்களுடன் இணைந்து வந்துள்ளது. இந்த ' பசப்பு, பசலை ' ஆகிய சொற்கள் கண்ணீரைக் குறிக்கும் என்று முன்னர் ' பசலை என்றால் என்ன? ' என்ற கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம். கண்ணீருடன் தொடர்புற்று வரும் இடங்களில் எல்லாம் முலை என்பது கண்ணையே குறிக்கும் என்று சொல்லத் தேவையில்லை. காரணம், கண்ணில் இருந்தே கண்ணீர் வரும். கண்ணீருடன் தொடர்புற்று வரும் சில பாடல்களைக் கீழே காணலாம்.

நல் அக வன முலை கரை சேர்பு மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே - நற் - 33
( அழகிய கண்களின் விளிம்பில் தோன்றிய கண்ணீர் பெருகிப் பரந்த மலர் போன்ற கண்கள்........)

ஆக வன முலை கரைவலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம் மா அரிவை - நற் -81
( அழகிய கண்களின் விளிம்பின் மேலிருந்து கண்ணீர் தெறித்து ஓடுமாறு அழுதவாறு இருக்கும் பெண்......)

கரும் கால் வெண்குருகு மேயும் பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே - குறு - 325
( என் கண்ணிமைகளுக்கு இடையில் கண்ணீர் பெருகி கரிய கால்களை உடைய வெண் நாரைகள் மேயும் குளம் போல ஆகியது....)

முலை மேல் ஊர்ந்த பசலை - திணை. ஐம் - 22
( கண்களில் பெருகிய கண்ணீர்...)

செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை . ஐம் - 24
( செந்நிறத்துப் பூந்தாதுக்களைப் பூசிய மெல்லிய இமைகளை உடையவளே, உனது கண்ணீர் இதோ தீரும்....)

இலையார் எரி மணி பூண் ஏந்து முலையும் சிலையார் திரு நுதலும் செம் பசலை மூழ்க - சிந்தா -732
( தாமரையின் பூவிதழ் போலவும் வில் போலவும் தோன்றுமாறு செம்மணி கொண்டு பூசியிருந்த கண்ணிமைகள் கண்ணீரில் அமிழ......)

பிறையார் திரு நுதலும் பேர் அமர் உண்கண்ணும் பொறையார் வன முலையும் பூம் பசலை மூழ்க - சிந்தா -733
( பிறைச்சந்திரன் போன்ற அழகிய அடிக்கண்ணும் மையுண்ட கண்ணும் பொதிபோலப் பருத்த அழகிய கண்ணிமைகளும் கண்ணீரில் அமிழ.....)

அரும்பு ஏர் வன முலையும் ஆடு அமை மென் தோளும் திருந்து ஏர் பிறை நுதலும் செம் பசலை மூழ்க - சிந்தா - 734
( தாமரை அரும்பு போன்ற அழகிய மைபூசிய கண்ணிமைகளும் மூங்கில்காய் போலப் பருத்த கண்ணும் பிறைச்சந்திரன் போன்ற அழகிய அடிக்கண்ணும் கண்ணீரில் அமிழ.....)

துணை வெம் முலைகள் பசப்பு ஊர - சிந்தா - 1659
( அழகிய இரு கண்களிலும் கண்ணீர் பெருக.....)

இள முலை மேல் பொன் பசலை பூப்ப - சிந்தா -2051
( இளமைமிக்க கண்களிலே பொன் போன்ற கண்ணீர் பூக்க.......)

திருமாவுண்ணியும் கண்ணகியும்:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து கண்ணகி மதுரை மாநகரினை தனது இடது கண்ணைக் கொண்டே எரியூட்டி அழித்தாள் என்பதனை உறுதிபட அறிந்துகொண்டோம். இந் நிலையில், சிலப்பதிகார காலத்துக்கு முன்பாகத் தோன்றிய சங்ககால நூலான நற்றிணையில் திருமாவுண்ணி என்ற பெண் தெய்வம் பேசப்பட்டுள்ளது. இந்தத் திருமாவுண்ணியும் சிலப்பதிகாரக் கண்ணகியும் ஒருவரே என்று சிலர் கருதுகின்றனர். இதற்குக் காரணம், இருவரும் ஒரு முலையினை அறுத்ததாகப் பாடல்கள் கூறுவதே.

ஆனால், உண்மையில் இவ் இருவரும் வேறு வேறு ஆவர். திருமாவுண்ணியின் காலம் சங்க காலம். ஆனால், கண்ணகியின் காலமோ அதற்கு மிகப் பிற்பாடானது. காலவேறுபாடு ஒருபுறமிருக்க, முலை அறுத்த நிகழ்ச்சியிலும் இவ் இருவருக்கிடையில் வேறுபாடு உள்ளது. கண்ணகி, தனது இடப்பக்கக் கண்ணைப் பறித்து மதுரைநகர் மீது விட்டெறிந்தாள். ஆனால், திருமாவுண்ணியோ, தவறு செய்த ஒருவனுக்குத் தண்டனையாக அவனது ஒருகண் பார்வையைப் பறித்தாள். இவ் வேறுபாட்டினைத் தெளிவாகப் புரிந்துகொள்ள திருமாவுண்ணியைப் பற்றிக் கூறுகின்ற நற்றிணைப் பாடலையும் அதன் விளக்கத்தையும் முதலில் காணலாம்.

துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும்
இனிதே காணுநர் காண்பு_உழி வாழ்தல்
கண் உறு விழுமம் கை போல் உதவி
நம் உறு துயரம் களையார் ஆயினும்
இன்னாது அன்றே அவர் இல் ஊரே       
எரி மருள் வேங்கை கடவுள் காக்கும்
குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண்
ஏதிலாளன் கவலை கவற்ற
ஒரு முலை அறுத்த திருமாவுண்ணி
கேட்டோர் அனையர் ஆயினும்           
வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே - நற் - 216

இப் பாடலின் விளக்கத்தினை அறியும் முன்னர், இப் பாடல் தோன்றிய பின்னணி பற்றி அறியலாம். தலைவியானவள் தன் தோழியின் துணையோடு இரவோடிரவாக ஊரைவிட்டு ஓடிவந்து தலைவனின் ஊரில் தங்கிவிட்டாள். சிறிதுகாலம் அவளுடன் வாழ்ந்த தலைவன், அவளைப் பிரிந்துசென்று பல நாட்களாகியும் திரும்பவில்லை. அதுவரை ஊருக்கு உண்மை தெரியாமல் வாழ்ந்துவந்த நிலையில், திருமாவுண்ணியைப் பற்றிய செய்தியைக் கேட்டதும், தனது உண்மை ஊராருக்குத் தெரிந்தால் என்னாகுமோ என்று அஞ்சுகிறாள் தலைவி. .இந்த அச்சம் மாறாத மனநிலையில் தலைவியானவள், தனது தோழியிடம் கூறும் கூற்றாக அமைந்தது இந்தப் பாடல்.

இப் பாடலின் பொருளானது: " துயர் துடைக்கும் நட்பினராய் என்னிடம் வாரார் ஆயினும், கண்ணீரைத் துடைக்கும் கைபோல எனக்கு உதவிசெய்யார் ஆயினும், இந்த ஊர்மக்களின் கண்ணுக்கு இன்பமாக இருப்பதைப்போல் வாழமுடியும் என்றாலும் என் காதலர் இல்லாத இவ் ஊர் எனக்குத் துன்பமே ஆகும். இது எவ்வாறெனில், தீப்பொறி போன்ற பூக்கள் பூத்திருக்கும் வேங்கை மரத்தில் உறைந்திருக்கும் காவல் தெய்வமாகிய திருமாவுண்ணியானது, கொக்குகள் பறக்கின்ற வயலின் நடுமேடைக்கு அருகில் இருந்த கிணற்றில் தீய எண்ணத்துடன் ஏற்றம் இறைத்த அயலான் ஒருவனின் கண்ணைப் பறித்த செய்தியைக் கேட்டவர்கள், அவனது செயலை இகழ்ந்து தூற்றி அவனது துயரைப் பெருக்கியதைப்போல, எனது உண்மை நிலையினை அறிந்தால் இவ் ஊரார் எனது துன்பத்தினையும் பெருக்குவரே அன்றி களையார். "

திருமாவுண்ணியால் கண்பார்வையினைப் பறிகொடுத்தவனைக் காணச் சென்ற ஊர்மக்கள், அவனது துன்பத்தைக் குறைக்கும் விதமாக ஆறுதல் கூறாமல், அவன் செய்த இழிசெயலுக்காக அவனைப் பழித்து அவனது துன்பத்தைப் பெருக்கியதை அறிந்த தலைவி கலங்குகிறாள். தான் ஊரைவிட்டு ஓடிவந்து வாழ்ந்துவரும் உண்மையினை அறிந்தாலும் இவ் ஊர்மக்கள் தனது துன்பத்தைக் குறைக்காமல் தனது தவறைச் சுட்டிக்காட்டிப் பழித்து தனது துயரினை பெருக்குவரே அன்றி களையார். தன் காதலனே அன்றி வேறுயாரும் தனது துயரைக் களையமுடியாது என்கிறாள். இப் பாடலில் வரும் திருமாவுண்ணித் தெய்வமானது, வேங்கை மரத்தில் உறைந்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. பொதுவாக வேங்கை மரத்தினை தெய்வங்கள் உறையும் புனித மரமாக சங்க கால மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கை சிலப்பதிகாரத்திலும் பிரதிபலித்துள்ளது.

சிலப்பதிகாரத்தின் முதல் பாடலிலேயே கண்ணகியைப் பற்றிக் கூறுமிடத்து,

' பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் ஓர் திருமா பத்தினிக்கு...'

அதாவது ' பொன்போன்ற பூக்களை உடைய வேங்கை மரத்தின் நல்ல நிழலில் ஒரு முலையினை இழந்த நிலையில் ஒரு திருமா பத்தினி நின்றிருந்தாள்' என்று துவக்கத்திலேயே கண்ணகியை வேங்கை மரத்துடன் தொடர்புறுத்திப் பாடிவிட்டார். அடுத்ததாக, குன்றக் குரவையிலும், குறவர்கள் கண்ணகியைக் காணுமிடத்து,

" மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர்! மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர்! யாவிரோ?"

அதாவது: " மலைவேங்கை மரநிழலில் வள்ளியைப் போலத் தோன்றும் பெண்ணே, கண்டவர் உள்ளம் நடுங்குமாறு ஒரு முலையினை இழந்தவளாய் வந்திருக்கின்ற நீங்கள் யார்?.". என்று கூறுவதில் இருந்தும் கண்ணகிக்கும் வேங்கை மரத்துக்குமான தொடர்பு உறுதிசெய்யப் படுகிறது. 

திருமாவுண்ணியைப் போல கண்ணகியும் ஓர் பத்தினித் தெய்வமே என்பதைக் காட்டவேண்டியே சிலப்பதிகாரத்தில் கண்ணகியினை வேங்கை மரத்துடன் தொடர்புபடுத்திப் பாடியிருக்க வேண்டும். எது எவ்வாறாயினும், திருமாவுண்ணியும் கண்ணகியும் வேறு வேறு என்பது இப்போது தெளிவாகி இருக்கும்.

நிறைவுரை:

முலை என்ற சொல் மார்பகம் என்ற பொருளிலும் இலக்கியங்களில் சில இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவே பிற இடங்களிலும் இதே பொருளைக் கொள்வதற்கு வழிவகுத்து விட்டது. பொருள் மாறும்போது எழுத்து மாறவேண்டும் என்ற விதிப்படி மார்பகம் என்ற பொருளில் வரும்போது முளை என்று பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்களின் மார்பகம் ஆனது உரிய பருவத்தில் முளைத்து வளரும் இயல்புடையது. ஒருவேளை புலவர்கள் இதனை எதுகை அணிநயத்திற்காக எழுத்துப்போலியாக (லகர- ளகர கடைப்போலி) பயன்படுத்தி இருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்த எழுத்துப் போலியினால் ஒரு தவறான பொருள்கோள் இதுநாள்வரையிலும் காலூன்றி விட்டதே.

முலை என்ற சொல் மட்டுமின்றி முலையின் வேறு பெயர்களான கொங்கையும் மார்பும் கூட பல இடங்களில் கண் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. எனவே இடத்திற்கேற்ப அவற்றை மாற்றிப் பொருள்கொண்டால் பாடலின் உண்மையான பொருளை நாம் அறிந்துகொள்வதுடன் நம் தமிழும் களங்கமற்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும்.
======================== வாழ்க தமிழ் !================