திங்கள், 31 ஜூலை, 2017

போகப்பொருளா பெண்கள்?

முன்னுரை:

இக்காலத்தில் பெண்களைப் போகப்பொருளாகவே பெரும்பான்மையான ஆண்கள் நினைக்கின்றனர். தமக்கு வேண்டும் நேரத்தில் எல்லாம் உடற்சுகம் தரக்கூடிய இயந்திரங்களாகவே அவர்களைப் பாவிக்கின்றனர். பெண்களுக்கு என்று தனிப்பட்ட எண்ணங்கள் உண்டு என்றோ உணர்ச்சிகளும் உண்டு என்றோ அவற்றை மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்றோ பலர் அறிவதில்லை; அறிந்தும் சிலர் உடன்படுவதில்லை. ஆண்களின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு யார் காரணம்?. என்று தமிழர்களிடம் கேட்டால், ' நமது முன்னோர்கள் தான். நமது முன்னோர்களின் மனப்பாங்கே வழிவழியாகத் தொடர்ந்து வருகிறது. சங்க இலக்கியங்களே இதற்குப் போதுமான சான்று ' என்று பதில் கூறுகின்றனர். ஆனால் நமது முன்னோர்கள் ஒருக்காலும் இதற்குக் காரணமாக இருந்ததில்லை. 

உண்மை என்னவென்றால், சங்க இலக்கியங்கள் தொட்டுப் பல இலக்கியச் செய்திகளை மக்கள் தவறாகவே புரிந்துகொண்டுள்ளனர். சங்ககாலப் புலவர்கள் பயன்படுத்திய பல தமிழ்ச் சொற்களுக்குச் சரியான பொருளை அறியாமல் நிகண்டுகளும் அகராதிகளும் தவறாக எடுத்துரைக்க, அதை அடிப்படையாகக் கொண்டு பின்னாளில் இலக்கியப் பாடல்களுக்கு உரை எழுதமுற்பட்டோர் அப் பாடல்களுக்கான பொருளைத் தவறாகப் புரிந்துகொண்டு உரைவிளக்கம் எழுதிவைத்தனர். இந்தத் தவறான உரைவிளக்கங்களைப் படித்தோரும் அவ் விளக்கங்களுக்கேற்பவே நடந்துகொள்ளலாயினர். ஆக, நிகண்டுகளிலும் அகராதிகளிலும் துவங்கிய சொல்-பொருள் தவறுகள் எப்படியெல்லாம் தமிழ்ச் சமுதாயத்தையே தவறாகச் சிந்திக்கவும் நடந்துகொள்ளவும் வைத்திருக்கின்றன பாருங்கள். தமிழ்ச் சமுதாயத்தின் எண்ணங்களையே மாற்றியமைக்கின்ற அளவுக்கு அப்படியென்ன தவறான பொருட்களை நிகண்டுகளும் அகராதிகளும் தந்துவிட்டன?. என்ற கேள்விக்கான பதிலைத் தான் இக் கட்டுரையில் விளக்கமாகக் காணப்போகிறோம்.

சங்க இலக்கியங்களில் காதலா? காமமா?:

அகராதிகள் செய்த சொல்-பொருள் தவறுகளால் விளைந்த பல இடையூறுகளில் முதன்மையானதாகக் காதலா - காமமா என்ற குழப்பத்தைச் சொல்லலாம். எது காதல்?. எது காமம்? என்ற தெளிவின்மையே எங்கும் விரவிக் காணப்படுகிறது. காதலைக் காமமாகப் புரிந்துகொண்டுப் பெண்களிடம் தவறாக நடந்துகொள்ள முயல்வதும் காமத்தைக் காதலாகப் புரிந்துகொண்டு மனம் லயித்து மீளமுடியாமல் பைத்தியமாகி வாழ்விழப்பதும் இன்றைய சூழலில் பரவலாக நடந்துவருகிறது. காதலையும் காமத்தையும் தெளிவாகப் புரியவைக்க இன்றைய கல்வியியலாளர்கள் தவறிப்போய் இருந்தாலும் சங்கப் புலவர்கள் அதை எழுதிவைக்கத் தவறவில்லை.

சங்ககாலப் புலவர்கள் தமது இலக்கியங்களில் ஆண்-பெண் காதலைப் பற்றி அழகான ஓவியங்களாக வரைவதற்குப் பதிலாக எழுதிவைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இல்லறத்தில் அல்லது காதலில் ஈடுபடுகின்ற ஆணும் பெண்ணும் எவ்வாறு காதல் செய்தனர் என்பதை மிக விரிவாக ஏராளமான பாடல்களில் பாடியுள்ளனர். சங்க இலக்கியங்கள் யாவற்றிலும் விரவிக்கிடக்கின்ற ஒரே செய்தி: காதல். சங்க இலக்கியங்களின் முதன்மை நோக்கம் காதலை முன்னிறுத்துவதே அன்றி காமத்தை அல்ல. ஆனால், அகராதிகள் செய்த சொல்-பொருள் தவறுகளால் இவ் இலக்கியங்களின் உன்னதமான நோக்கம் புரிந்துகொள்ளப் படாமல் போய்விட்டது. அகராதிகளின் சொல்-பொருள் தவறுகளால் காதல் எப்படிக் காமமாகக் கருதப்படுகிறது என்பதைப் பல சான்றுகளுடன் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம். முதலில் அகராதிப் பொருள் தவறுகள் சிலவற்றைக் காணலாம்.

அகராதிகளின் சில சொல்-பொருள் தவறுகள்:

அகராதிகளின் சொல்-பொருள் தவறுகளில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவையாகக் கீழ்க்காண்பவற்றைச் சொல்லலாம்.

கூந்தல், தோள், ஆகம், முலை. இவற்றில்,

கூந்தல் என்ற சொல்லுக்குப் பெண்களின் தலைமயிர் என்றும்
தோள் என்ற சொல்லுக்குப் பெண்களின் புஜங்கள் என்றும்
ஆகம் என்ற சொல்லுக்குப் பெண்களின் உடல் / மார்பகம் என்றும்
முலை என்ற சொல்லுக்குப் பெண்களின் மார்பகம் என்றும் இற்றைத் தமிழகராதிகள் பொருளுரைக்கின்றன.

ஆனால் இச் சொற்களுக்கு இவைமட்டுமே பொருள் அல்ல; வேறு சில பொருட்களும் உண்டு. அதாவது,

கூந்தல் என்பதற்குக் கண்ணிமை என்ற பொருளும்
தோள் என்பதற்குக் கண், கண்ணிமை ஆகிய பொருட்களும்
ஆகம் என்ற சொல்லுக்குக் கண், கண்ணிமை ஆகிய பொருட்களும்
முலை என்ற சொல்லுக்குக் கண், கண்ணிமை ஆகிய பொருட்களும் உண்டு.

இப் புதிய பொருட்களைப் பற்றி மிக விரிவாக அறிந்துகொள்ள 'பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணமுண்டா?' , தோள் என்றால் என்ன?', 'தொடி-ஆகம் தொடர்பு என்ன?', ' கண்ணகி மதுரையை எரித்தது எப்படி?' ஆகிய ஆய்வுக் கட்டுரைகளைப் படிக்கலாம். இப் புதிய பொருட்களை அகராதிகள் காட்டாத காரணத்தினால் சங்கப் பாடல்கள் பலவும் தவறாகப் பொருள் கொள்ளப்பட்டதுடன் சங்ககாலத் தமிழர்களின் அழகான காதல் வாழ்க்கையானது காமம் நிறைந்த வாழ்க்கையாகப் புரிந்துகொள்ளப் பட்டுவிட்டது. இது எப்படி என்று பார்ப்போம்.

காதல் காமமாகிப் போனச் சில கதைகள்:

காதலானது காமமாகப் புரிந்துகொள்ளப்பட்டப் பல இலக்கிய இடங்களில் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கே காணலாம். குறிப்பாகப் பெண்களின் தூக்கத்துடன் தொடர்புடைய பல பாடல்களை உரையாசிரியர்கள் தவறாக உடலுறவு தொடர்புடையதென்று கருதிய சில இடங்களை மட்டும் இங்கே காணலாம். சங்ககால இலக்கியங்களை ஆராய்ந்தவிடத்து, மூன்று வகையான பெண்கள் தமது தூக்கத்தினைத் தொலைத்து வாடியதாக அறியப்படுகிறது.

> பெண்களைப் பெற்று வளர்த்து ஆளாக்கிய தாய்மார்கள் தமது மகள் நல்ல அழகிய பருவத்தினை அடைந்ததும் விடலைகள் / காளையருடன் சேர்ந்து ஓடிப்போகாமல் இருக்க, இரவெல்லாம் விழித்திருந்து அவளைப் பார்த்துக்கொண்டு தூக்கத்தினைத் தொலைத்தது ஒருவகை.

> தான் காதலித்த காதலனுடன் தன்னை ஓடிப்போக விடாமல் கண்விழித்தவாறு பார்த்துக் கொண்டிருக்கும் அன்னையின் முன்னால் தூங்குவதைப் போலப் பாசாங்கு செய்தவாறு உண்மையில் தூங்காமல் விழித்திருப்பது இரண்டாம் வகை.

> காதலன் / கணவரைப் பிரிந்த நிலையில் அவரது வரவினை எண்ணி எதிர்பார்த்து இரவெல்லாம் விழித்திருந்து தூக்கத்தினைத் தொலைத்தவாறு தலைவி காத்திருப்பது மூன்றாவது வகை.

இம் மூன்றுவகைகளிலும், மூன்றாவது வகையே அதிகமாகப் பேசப்பட்டிருப்பதால், அதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கீழே விரிவாகக் காணலாம். 

காதல் ஒன்று: தோழி தலைவிக்குக் கூறியது.

... பொருள்வயின் நீடலோ இலர் நின்
இருள் ஐங்கூந்தல் இன்துயில் மறந்தே. - அகம்.233

..... தலைநாள் அலரின் நாறும்நின்
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே. - அகம்.69

...... நெகிழ் நூல் பூச்சேர் அணையின் பெருங்கவின்
தொலைந்த நின் தோள்துயர் கெடப் பின் நீடலர்... - குறு.253

மேற்காணும் சங்க இலக்கியப் பாடல்வரிகள் யாவும் உண்மையிலேயே தலைவன் - தலைவியின் ஆழமான காதலைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவை. இப்பாடல் வரிகளில் வரும் கூந்தல், ஆகம், முலை, தோள் ஆகியவை பெண்களின் கண் மற்றும் கண்ணிமைகளைக் குறிக்கும். இப் பொருள்களின் அடைப்படையில் இவை உணர்த்துகின்ற மையக்கருத்து இதுதான்: கட்டிய மனைவியைப் பிரிந்து பணம் சம்பாதிக்கவேண்டி தொலைதூரம் சென்றிருக்கிறான் தலைவன். அவனுடைய பிரிவினை நினைத்துக் காதல் மனைவியானவள் பல இரவுகள் தூக்கமின்றித் தவித்துக் கண்கலங்கி அழுதவாறு இருக்கிறாள். அவளுக்கு ஆறுதல் சொல்லும் அவளது தோழியானவள், ' நீ தூங்காமல் இரவெல்லாம் விழித்திருந்து அழுது துன்புறுவாய் என்பதை உன் கணவர் அறிவார். உனது அழகிய மலர் போன்ற கண்களுக்குத் தூக்கத்தினைக் கொடுப்பதற்காகக் கூடிய விரைவில் அவர் வந்துவிடுவார். நீ அழவேண்டாம்.' என்று கூறுகிறாள்.

ஆனால், அகராதிகளின் தவறான சொல்-பொருள் விளக்கத்தினால், மேற்காணும் அழகான காதல்கதை ஒரு காமக்கதையாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இப்பாடல்களில் வரும் துயில் என்பதற்குத் தூக்கம் என்று பொருள்கொள்ளாமல், புணர்ச்சி என்று பொருள்கொண்டு, கீழ்க்காணுமாறு உரைவிளக்கம் எழுதியுள்ளனர்.

> உன் தலைமயிரைப் பாய்போல விரித்துப்போட்டு அதன்மேல் படுத்தவாறு உன்னைப் புணர்வதைப் பற்றியும்
> மலர்போல நறுமணம் வீசுகின்ற உன் மார்பகங்களைப் புணர்ந்து இன்பம் துய்ப்பதைப் பற்றியும்
> பூக்கள் தூவிய படுக்கையைப் போன்ற உன் புஜங்களைப் புணர்ந்து இன்பம் துய்ப்பதைப் பற்றியும் 

நினைத்துப் பார்க்கும் உனது கணவன் வெகுவிரைவில் அதற்காக வீடு திரும்புவான் ' என்று தோழியானவள் தலைவிக்கு ஆறுதல் கூறுவதாக விளக்கம் எழுதியுள்ளனர். பார்த்தீர்களா, அகராதிகளின் தவறான பொருட்களினால், ஒரு அழகிய காதல்கதை எப்படியெல்லாம் அசிங்கமாகக் காமக்கதையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்று. இப்படிப்பட்டத் தவறான  காம விளக்கங்களைப் படிப்போர் பெண்களைப் போகப்பொருளாகக் கருதாமல் வேறு எப்படிக் கருதுவர்?.

காதல் இரண்டு: தோழி தலைவனுக்குக் கூறியது.

.... திருமணி விளக்கில் பெறுகுவை
இருள்மென் கூந்தல் ஏமுறு துயிலே! - அகம்.92


...... கோங்குமுகைத் தன்ன குவிமுலை ஆகத்து
இன்துயில் அமர்ந்தனை ஆயின் ... - அகம்.240

மேற்காணும் பாடல்வரிகள் சுட்டிக்காட்டுவது தலைவன் தலைவியின்மேல் கொண்டிருக்கும் அன்பினைத் தான். தலைவனின் பிரிவினால் கண்களில் தூக்கமின்றித் தவித்து வாடிக்கொண்டிருக்கின்ற தலைவியின் நிலையினைத் தலைவனுக்கு எடுத்துக் கூறுகின்ற தோழியானவள் தலைவனிடம் ' நீ அவளை வந்துச் சந்தித்தால்தான் அவளது கருமையுண்ட கண்கள் நிம்மதியாகத் துயில்கொள்ளும் ' என்றும் ' கோங்கின் மலர்மொட்டுப் போல் குவிந்து தோன்றும் அவளது கண்கள் உறங்கவேண்டும் என்று நீ விரும்பினால், நீ அவளை வந்து சந்திக்கவேண்டும். ' என்றும் கூறுகிறாள். இதுதான் இயல்பான பேச்சுமுறை என்பதுடன் ஒரு தோழியானவள், தலைவிக்கும் தலைவனுக்கும் இடையிலான அன்பின் தன்மை குறித்துத் தான் அறிந்துகொள்ளத்தக்க வெளிப்படையான செய்திகளுமாகும். 

ஆனால், அகராதிகள் கூந்தல், ஆகம், முலை ஆகிய சொற்களுக்குக் கொடுத்திருக்கும் தவறான பொருட்களினால், மேற்காணும் காதல்கதை ஒரு காமக்கதையாகத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. இப்பாடல்களில் வரும் துயில் என்பதற்கும் தூக்கம் என்று பொருள்கொள்ளாமல், புணர்ச்சி என்று பொருள்கொண்டு, கீழ்க்காணுமாறு உரைவிளக்கம் எழுதியுள்ளனர்.

> உன் காதலியின் தலைமயிரைப் பாய்போல விரித்துப்போட்டு அதன்மேல் படுத்தவாறு விளக்கின் ஒளியில் அவளைப் புணர்வதற்கும்
> கோங்கின் மலர்மொட்டுப் போன்ற உன் காதலியின் மார்பகங்களைப் புணர்ந்து இன்பம் துய்ப்பதற்கும்

நீ விரும்புவாயானால், அவளை வந்து நீ சந்திக்கவேண்டும் ' என்று தோழியானவள் தலைவனிடம் கூறுவதாக விளக்கவுரை எழுதியுள்ளனர். பார்த்தீர்களா, அகராதிகளின் தவறான பொருட்களினால், ஒரு அழகிய காதல்கதை எப்படியெல்லாம் அசிங்கமாகக் காமக்கதையாகப் புரிந்துகொள்ளப்படுகிறது என்று. அதுமட்டுமின்றி, தலைவனுக்கும் தலைவிக்கும் இடையிலான அந்தரங்க உறவுகளைப் பற்றித் தோழியானவள் எவ்வாறு அறிந்திருப்பாள் என்பதும் அதனை இவ்வளவு வெளிப்படையாகத் தலைவனாகிய ஆண்மகனிடம் வெட்கமின்றிக் கூறுவாளா என்பதும் சிந்திக்கப்பட வேண்டியவை. இப்படிப்பட்டத் தவறான காம விளக்கங்களைப் படிப்போர் பெண்களைப் போகப்பொருளாகக் கருதாமல் வேறு எப்படிக் கருதுவர்?.

காதல் மூன்று: அணை செய்த வினை

..... தேம்பாய் ஒண்பூ நறும்பல அடைச்சிய
கூந்தல் மெல்லணைத் துஞ்சிப் பொழுதுபடக் - அகம்.308

...... கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி... - கலி.71

..... அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள்.... - கலி.14

மேலே உள்ள மூன்று பாடல்வரிகளிலும் கூந்தல், கதுப்பு, தோள் ஆகிய சொற்களுடன் இணைந்தும் அவற்றுக்கு உவமையாகவும் 'அணை' என்ற சொல் பயின்று வருவதை அறியலாம். பொதுவாக, அணை என்ற பெயர்ச்சொல்லுக்கு அணைக்கட்டு, நீர்க்கரை, தடை, முட்டு, புணர்ச்சி, ஆசனம், மெத்தை, படுக்கும் இடம் என்று பலவிதமான பொருட்களை அகராதிகள் கூறுகின்றன. இந்த மூன்று பாடல்களிலும் கண், கண்ணிமையினைக் குறிப்பதான கூந்தல், கதுப்பு, தோள் ஆகியவற்றுடன் உவமைப்படுத்தி 'அணை' என்ற சொல்லைக் கூறியதன் காரணம் என்ன? என்று அறியவேண்டியது அவசியமாகிறது.

பொதுவாக நீர்க்கரைகளும் சரி அணைக்கட்டுகளும் சரி அடிப்பாகத்தில் அகன்று மேல்பாகத்தில் குவிந்திருக்கும். பெண்களின் கண்விழிகள் அவ்வாறே மேல்நோக்கித் திரண்டு குவிந்திருப்பதாலும் நீருடன் தொடர்புடையதாலும் அதனை அணை என்றனர் போலும். அதுமட்டுமின்றி, கணவன் / காதலன் பிரிந்துசெல்ல முயலும்போது கண்ணீர் சிந்தி அவனது பிரிவிற்கு ஒரு தடையாக விளங்குவதும் அதே கண்கள் தான். வண்ண மலர்கள் தூவிய பஞ்சுமெத்தை போல வண்ணமும் மென்மையும் குவிந்த தன்மையும் கொண்டிருப்பதாலும் மையுண்ட கண்களை அணை என்றிருக்கலாம். இறுதியாக, படுக்கும் இடம் என்று கண்ணையோ கண்ணிமையினையோ ஏன் அழைக்கவேண்டும்? என்று பார்ப்போம். 

படுக்கும் இடம் என்பது இடத்தை மட்டுமின்றி படுக்க உதவும் பொருட்களையும் சேர்த்தே குறிக்கும். படுக்க உதவும் பொருட்களில் பாய் என்ற ஒன்றும் உண்டு. இதுதான் பெரும்பான்மை மக்களின் வீடுகளில் படுப்பதற்கு இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. மெத்தைக்கும் பாய்க்கும் சில வேறுபாடுகள் உண்டு. மெத்தையானது சற்று உயரமாக தடிமன் கூடியதாக இருக்கும். இதனை அவ்வளவு எளிதாகச் சுருட்டி மடக்க முடியாது என்பதால் பெரும்பாலும் விரிந்தே கிடக்கும். ஆனால் பாய் மெல்லியது என்பதால் அதனைத் தேவைப்படும்போது விரித்தும் சுருட்டியும் வைத்துக் கொள்ளலாம். இந்தப் பாயினைப் போலவே பெண்களின் கண்ணிமைகள் மெல்லியதாகவும் பலவரிகளை உடையதாகவும் சுருங்கி விரியும் தன்மை கொண்டதாகவும் இருப்பதால்தான் அவற்றை 'அணை' யுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்தப் பாயின்மேல் படுப்பதால், தூக்கத்திற்குப் 'பாயல்' என்ற பெயரும் உண்டானது. சரி, பாயின் மேல் பாயல் கொள்ளலாம் அதாவது படுக்கலாம். ஆனால் இமைகளின்மேல் படுக்கலாமா?. படுக்க முடியாது. அப்படியென்றால், அணையில் துஞ்சுதல் / துயிலுதல் என்பது எதைக் குறித்து இங்கே வருகிறது?. துஞ்சுதல் என்பதற்கு நிலைபெறுதல் என்ற அகராதிப் பொருளும் உண்டு. தூக்கத்தின்போது உடலும் கண்களும் ஒருநிலைப்பட்டு இருப்பதைப் போல காதலில் வீழ்ந்த காதலனும் காதலியும் தமது உடலும் கண்களும் நிலைமாறாது மற்றவர் கண்களை தமது கண்களால் இடைவிடாது பார்த்தவாறு இன்புற்று இருப்பர். இவ் இருவரும் தமது கண்களாலே காதல்மொழி பேசிக்கொண்டுச் சுற்றுச்சூழலையும் மறந்து அணைத்தவாறு இருக்கும் நிலையினையே அணையில் ' துயில் கொள்ளுதல் ' அல்லது 'துஞ்சுதல்' என்ற சொல்லினால் இப்பாடல்களில் புலவர்கள் குறித்துள்ளனர். எங்கேயோ எதையோ தொடர்ந்து பார்த்தவாறு சிலர் மெய்ம்மறந்துபோய் இருப்பதை நாம் இக்காலத்திலும் பார்க்கிறோம் இல்லையா அதைப்போன்ற ஒரு நிலையே இங்கே குறிப்பிடப்படுகிறது. சங்க காலத்தில் காதலர்கள் சந்திக்கும்போதெல்லாம் இதேநிலைதான். இந்த நிலைக்கு 'முயக்கம்' என்றொரு பெயருமுண்டு. முயக்கத்தைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள ' திருக்குறளில் முயக்கம் ' மற்றும் ' சங்ககால முதலிரவும் காதலர் தினமும் ' ஆகிய கட்டுரைகளைப் படிக்கலாம்.

ஆனால், உரை ஆசிரியர்கள் இப்பாடல்வரிகளுக்குக் கூறியிருக்கும் விளக்கங்கள் என்ன?. அணை என்பதற்குப் படுக்கை என்றும் துயில் / துஞ்சுதல் என்பதற்குப் புணர்ச்சி என்றும் பொருள்கொண்டு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளித்துள்ளனர்.

> வண்டுகள் பாயும் பலவண்ணப் பூக்களைச் சூடிய உனது தலைமயிர் ஆகிய படுக்கையின் மேல் புணர்ந்து....
> ஆற்றங்கரையின் கருமணல் போன்ற உனது தலைமயிரைப் படுக்கையாகக் கொண்டு புணர்ந்து .....
> மெத்தையைப் போலப் பருத்த அகன்ற மெல்லிய புஜங்களை இனிதே தழுவிப் புணர்ந்து .....

அகராதிகளின் தவறான சொல்-பொருள் விளக்கத்தினால் அழகான காதல் ஓவியங்கள் எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு காமலீலைகளாக மாறிப்போய்விட்டது பாருங்கள். இப்படியெல்லாம் காமரசம் சொட்டும் விளக்கங்களைப் படிப்போர் பெண்களைப் போகப்பொருட்களாக நினைக்காமல் இருப்பார்களா?. எல்லாம் அணை செய்த வினையே அன்றோ !.

பெண்களின் கண்ணும் தூக்கமும்:

இவ்வளவு விளக்கங்களையும் படித்துவிட்டுச் சிலர், ' ஏன், காமத்தைப் பற்றி இலக்கியங்களில் பேசக்கூடாதா?. பேசப்படாமல் இருப்பதற்குக் காமம் மோசமானதா?. காதலுக்கு அடிப்படையே காமம் தானே?. அதைப் பற்றி இலக்கியங்கள் பேசுவதில் என்ன தவறு?. ' என்றெல்லாம் கேள்விகளை எழுப்புவர். இக் கேள்விகளுக்கு விடைசொல்லும் பொருட்டுத் 'துயில்' என்ற சொல்லானது பெண்களின் கண்களுடன் நேரடியாகத் தொடர்புற்று வருவதான சில இலக்கிய இடங்களும் அவற்றின் விளக்கங்களும் கீழே தரப்பட்டுள்ளன.

.... பிறங்குமலை அருஞ்சுரம் இறந்தவர்ப் படர்ந்து
பயிலிருள் நடுநாள் துயில் அரிதாகித்
தெண்ணீர் நிகர்மலர் புரையும்
நன்மலர் மழைக்கணிற்கு எளியவால் பனியே. - குறு.329

பணம் சம்பாதிப்பதற்காக மனைவியைப் பிரிந்து பாலைவனம்போன்ற கொடுமையான மலைப்பாதையினையும் கடந்து செல்கிறான் கணவன். அவன் போகும் வழியில் அவனுக்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களை எண்ணி அஞ்சியவாறு அவர் எப்போது பத்திரமாக வீடு திரும்புவார் என்று எதிர்பார்த்து இரவெல்லாம் தூக்கம் இன்றி தவித்து அழுது புலம்புகிறாள் தலைவி மேற்காணும் குறுந்தொகைப் பாடலில்.

.... பொன் எனப் பசந்த கண் போது எழில் நலம் செலத்,
தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்மன் - கலி.77

இரவெல்லாம் தூக்கமின்றி அழுது புலம்பிய தலைவியின் கண்கள் செம்பொன் நிறத்தில் சிவந்து விட்ட நிலையினை மேற்காணும் கலித்தொகை வரிகள் காட்டுகின்றன.

முழவுமுதல் அரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமடல் இழைத்த சிறுகோல் குடம்பைக்
கருங்கால் அன்றில் காமர் கடுஞ்சூல்
வயவுப்பெடை அகவும் பானாள் கங்குல்
மன்றம் போழும் இனமணி நெடுந்தேர்
வாராதாயினும் வருவது போலச்
செவிமுதல் இசைக்கும் அரவமொடு
துயில் துறந்தனவால் தோழிஎன் கண்ணே. - குறு. 301.

மேற்காணும் குறுந்தொகைப் பாடலில், பிரிந்துசென்ற தலைவன் தன்னைக் காண தேரில் வருவான் என்று எதிர்பார்த்துத் தூங்கியும் தூங்காமலும் இரவிலே காத்திருக்கிறாள் தலைவி. அப்போது நள்ளிரவில் பனைமரத்தில் இருந்த அன்றில் பறவையானது ஒலி எழுப்புகிறது. அன்றிலின் அவ் ஒலியானது தனது காதில் விழுந்ததும், தனது தலைவன் தேரில் வருவதால் தான் அன்றில் பறவை ஒலியெழுப்புகிறதோ என்று எண்ணித் திடுக்கிட்டுத் துயில் கலைகிறாள் தலைவி.

முடிவுரை:

மேலே கண்டதைப் போல இன்னும் பல சங்க இலக்கியப் பாடல்களில் கண்ணும் துயிலும் நேரடியாகவே இணைத்துப் பாடப்பட்டுள்ளன. இதையெல்லாம் பார்த்த பின்னரும், சங்க இலக்கியங்களில் காதலே பெரிதும் பாடப்பட்டு இருக்கிறது என்று தெளியாமல் காமமே பெரிதும் பாடப்பட்டுள்ளது என்று கூறுவோர்முன் வைக்கப்படும் கேள்விகள் இதுதான்:

> தலைவனும் தலைவியும் மட்டுமே அறிந்த கூடல் / புணர்ச்சி தொடர்பான அந்தரங்கச் செய்திகளைத் தலைவியின் தோழி எவ்வாறு அறிவாள்?. எப்படியோ அறிந்தாலும் அதனை ஓர் ஆண்மகனிடம் வெட்கமின்றிக் கூறுவாளா?

> தலைவனும் தலைவியும் முன்னர் கொண்ட கூடல் / புணர்ச்சி தொடர்பான அந்தரங்கச் செய்திகளைத் தலைவன் தனது தேரோட்டியிடம் வெட்கமின்றி விளக்கிக் கூறுவானா?.

இக் கேள்விகளுக்கெல்லாம் சரியான ஒரே பதில் 'இல்லை' என்பதே. ஆம், பெண்களும் சரி ஆண்களும் சரி, தமது அந்தரங்க செய்திகளை வெளிப்படையாக யாரிடத்திலும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். காரணம், நாணமும் அச்சமும். சங்ககால மக்களிடம் இவை நிறையவே இருந்தன என்பதற்குப் பல இலக்கிய ஆதாரங்கள் உண்டென்பதால், நமது முன்னோர்களான சங்ககால ஆண்கள், பெண்களை ஒருபோதும் போகப்பொருளாகக் கருதவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன், இக்காலத்து ஆண்கள் பெண்களைப் போகப்பொருளாகக் கருதுவதற்குத் தமிழ் அகராதிகளே அன்றி நம் முன்னோர்கள் காரணம் அல்ல என்பதும் தெளிவாக்கப்படுகிறது.

********************** தமிழ் வாழ்க ! *****************

வெள்ளி, 14 ஜூலை, 2017

கண்ணும் கண்சார்ந்த இடமும் - 9 ( பெண்களின் கண்களைப் பூவிழி என்பதேன்? )

முன்னுரை:

கண்ணும் கண்சார்ந்த இடமும் என்ற ஆய்வுக் கட்டுரையின் முதல் ஆறு பகுதிகளில் அல்குல் முதல் வயிறு வரையிலான பல்வேறு பெயர்ச் சொற்கள் குறிக்கின்ற பெண்களின் உடல் உறுப்புக்களைப் பற்றி அறிந்துகொண்டோம். இவற்றில் பெண்களின் கண்களைப் பூக்களுடன் உவமைப்படுத்திப் புலவர்கள் பாடிய பாடல்கள் பலவற்றையும் கண்டோம். சங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களைப் பூக்களுடன் உவமைப்படுத்தி ஏராளமான பாடல்களில் பாடுவதற்கான காரணங்கள் என்னவென்று இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

பெண்களின் கண்களும் பூக்களும்:

சங்ககாலப் புலவர்கள் பெண்களின் கண்களோடு உவமைப்படுத்திப் பாடியுள்ள பல்வேறு பூக்களில் குவளை, நெய்தல், நீலம், பீரம், கருவிளை, கொன்றை, வேங்கை, காந்தள் போன்றவற்றைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். பெண்கள் தமது கணவர் அல்லது காதலருடன் கூடி மகிழ்ந்திருக்கும்போது அவர்களது மையிட்டு அழகுசெய்யப்பட்ட கண்ணிமைகளை அப்போதுதான் பூத்திருக்கும் அழகிய மலர்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

... நெய்தல் கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண் எம் காதலி குணனே!    - அகம். 83

....குவளை எதிர் மலர்ப் பிணையல் அன்ன
இவள் அரி மதர் மழைக்கண் ... - நற். 160

அதேசமயம், பெண்கள் தமது கணவரை / காதலரைப் பிரிந்தநிலையில் அழுதுகொண்டிருக்கும்போது அவர்களது மை அழிந்த அழகற்றக் கண்ணிமைகளை மழைநீரில் நன்றாக நனைந்து நீர்சொட்டிக் கொண்டிருக்கின்ற பூவிதழ்களுடன் ஒப்பிட்டுப் பாடுவதும் இலக்கிய வழக்கமே. சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

குவளை மாரி மாமலர் பெயற்கு ஏற்றன்ன
நீரொடு நிறைந்த பேரமர் மழைக்கண் .... - அகம். 395

....பெயல் உறு மலரின் கண்பனி வார
ஈங்கிவள் உழக்கும் ..... - அகம். 307

கண்ணும் மலரும் - ஒப்பீட்டுக்கான காரணங்கள்:

பெண்களின் கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியதற்கான காரணங்கள் எவை என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. மென்மை உடையதாயிருத்தல்
2. வண்ணம் பூசியிருத்தல்
3. நறுமணம் கமழுதல்
4. பூந்தாதுக்களைக் கொண்டிருத்தல்
5. வண்டுகள் மொய்த்தல்

இக் காரணங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியே விரிவாகக் காணலாம்.

1. மென்மை / நுட்பத் தன்மை:

பொதுவாகக் கண்ணிமைகள் என்றாலே மென்மை / நுட்பத் தன்மை உடையவை தான் என்று அனைவரும் அறிவோம். இவை மென்மையாக இருப்பதால்தான் நம்மால் இமைகளைச் சுருக்கி விரிக்க முடிகிறது. பெண்களின் கண்ணிமைகள் எவ்வளவு மெல்லியவை என்றால் அவை ஆடையிலுள்ள சிறு நூலின் அளவிலான தடிமன் கொண்டவை; சில மென் கொடிகளின் தடிமன் கொண்டவை. அதனால் தான் இவற்றை நுட்பத் தன்மை கொண்டவை என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணிமைகளின் கொடி மற்றும் நூல் போன்ற தடிமன் அல்லது நுட்பத் தன்மை பற்றிப்பேசும் சில பாடல் வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நூல்போன்ற நுட்பம்:

துகில் நூலின் வாய்த்த நுண் கேழ் நுசுப்பின் மடவீர் - சிந்தா: 2346
நூல் ஒக்கும் மருங்குலாள் - கம்ப. கிட்.13/46
இழை புரை மருங்குல் - கம்ப. சுந்தர. 3/88

கொடிபோன்ற நுட்பம்:

குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் - திரு -101
கொடி மருங்குல் விறலியருமே - புறம்.139
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய - புறம். 316

பெண்களின் கண்ணிமைகளைக் குறிப்பதான மருங்குல், நுசுப்பு போன்றவை நுட்பத்தன்மை வாய்ந்த மெல்லிய இதழ்களாக இருப்பதால் தான் அவற்றைப் பூக்களின் இதழ்களுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். பெண்களின் மெல்லிய கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன.

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

..... முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை
எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள்
அரி மதர் மழைக்கண் காணா ஊங்கே - நற். 160

... நெய்தல் கூம்புவிடு நிகர்மலர் அன்ன
ஏந்துஎழில் மழைக்கண் எம் காதலி குணனே!    - அகம். 83

மேற்காணும் பாடல்கள் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை வேங்கை, குவளை, நெய்தல் மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகின்றன. பெண்களது கண்ணிமைகளின் நுட்பத்தன்மையை விளக்குமிடத்துச் சில புலவர்கள் ஒருபடி மேலே போய், ' இவரது கண்ணிமைகள் எவ்வளவு மெல்லியவை என்றால், சிறிய பூமாலையினை அதன்மேல் அணிந்தாலும் அதன் பாரம் தாங்காமல் முரிந்துவிடும் ' என்று கீழ்க்காணும் பாடல்களில் கூறுவதைப் பாருங்கள்.

பூமாலை சூடின் பொறை ஆற்றா நுண் மருங்குல் - சிந்தா: 7/1699
முல்லை அம் சூட்டு வேயின் முரிந்து போம் நுசுப்பின் நல்லார் - சிந்தா:13 3119/3

இப்பாடல்களில் வரும் மருங்குலும் நுசுப்பும் பெண்களின் இடுப்பினை அன்றி அவரது கண்ணிமைகளையே குறிக்கும் என்று மருங்குல் என்றால் என்ன?, கதுப்பு - ஓதி - நுசுப்பு ஆகிய கட்டுரைகளில் ஏற்கெனவே ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

2. வண்ணம் உடைமை:

பெண்கள் தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைபூசி அழகுசெய்வர் என்று முன்னர் ஏராளமான கட்டுரைகளில் கண்டுள்ளோம். இவ் வண்ணங்களில் சிவப்பும் மஞ்சளும் மிக அதிகமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. கருமையும் நீலமும் கூடப் பரவலாகப் பயன்படுத்தப் பட்டுள்ளன. பெண்கள் தமது கண்ணிமைகளில் பூசியுள்ள வண்ணத்திற்கேற்ப அவரது இமைகளைப் பூக்களுடன் ஒப்பிட்டுப் பாடுவது புலவர்களின் வழக்கம். சான்றாக,

... குவளை நாண்மலர் புரையும் உண்கண் ... - அகம். 179

இப்பாடலில் தலைவியானவள் தனது இமைகளைக் குவளை மலர்களின் வண்ணத்தில் ( செம்மை அல்லது கருமை ) மைதீட்டி அழகுசெய்திருந்ததால், அவற்றைக் குவளை மலர்களுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார் புலவர். மேலும் சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

... முற்று எழில் நீல மலர் என உற்ற
இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும்.. - கலி. 64

... வண்டுவாய் திறந்த வாங்குகழி நெய்தல்
போது புறங்கொடுத்த உண்கண் ..... - அகம். 130

நுணங்கிய நுசுப்பின் நுண்கேழ் மாமைப்
பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய - அகம் - 318

இப்பாடல்களில் வரும் உண்கண், நுண்கேழ் மாமை ஆகியவை பெண்களின் கண்ணிமைகள் மையுண்ட நிலையில் இருந்ததனைக் காட்டுகின்றன. பெண்கள் அழும்போது வண்ண மையணிந்து அழகுடன் விளங்கும் தமது கண்ணிமைகளைக் கசக்குவதாலும் கண்ணீர் படுவதாலும் அவரது இமைகளில் தீட்டிய மை அழிந்து இமைகளின் அழகு கெட்டுவிடும். இந்நிலையில் இக் கண்ணிமைகளை, மழைநீரில் நன்கு நனைந்து நீர்சொட்டிக் கொண்டிருப்பதும் தனது இயல்பான வண்ணத்தில் இருந்து வெளிறிப்போனதுமான பூவிதழ்களுடனும் வாடிய பூவிதழ்களுடனும் ஒப்பிட்டுப் புலவர்கள் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளனர். அவற்றில் சிலவற்றை மேலே கண்டோம். மேலும் சில பாடல்வரிகள் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

... அகல்அறை நெடுஞ்சுனை துவலையின் மலர்ந்த
தண்கமழ் நீலம் போலக் கண்பனி கலுழ்ந்தன ... - அகம். 143

.... வளிபொரத் துயல்வரும் தளிபொழி மலரின்   
கண்பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து ... - அகம். 146

திதலை மாமை தளிர்வனப்பு அழுங்கப்
புதலிவர் பீரின் எதிர்மலர் கடுப்பப்
பசலை பாய்ந்த நுதலேன் ஆகி
எழுதெழில் மழைக்கண் கலுழ... - அகம். 135

3. நறுமணம் உடைமை:

பெண்கள் தமது கண்ணிமைகளுக்குப் பல வண்ணங்களில் மைதீட்டி அழகுசெய்யும்போது வண்ணச் சாந்துடன் சந்தனம், தகரம், மான்மதச்சாந்து (கத்தூரி/நாவி), அகில் முதலான நறுமணப் பொருட்களையும் கூட்டி அரைத்துப் பூசுவர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டுள்ளோம். இவ்வாறு நறுமணப் பொருட்களைக் கலந்து இமைகளின்மேல் பூசுவதன் மூலம் கண்களுக்கு வெகு அருகில் உள்ள மூக்கிற்கு இனிய நறுமணமானது தொடர்ச்சியாகக் கிடைக்கும். 

பெண்கள் தமது இமைகளின்மேல் நறுமணப் பொருள்களைக் கூட்டிப் பூசிய செய்தியினைக் கூறுகின்ற சில பாடல்வரிகள் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

... பொறிவரிச் சிறைய வண்டினம் மொய்ப்பச்
சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் ... - ஐங்கு. 240

...நாவி விரி கூழை இள நவ்வியர் துயின்றார்- கம்ப.அயோ.5/10

.... பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால்
தகைபெற வாரி புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழை .. - நற். 140

தகரம் மண்ணிய தண் நறு முச்சி.. - அகம். 393

இப்பாடல்களில் வரும் கூந்தல், கூழை, ஐம்பால், முச்சி ஆகியவை பெண்களின் கண்ணிமைகளைக் குறிக்கும் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

4. பூந்தாதுக்களைக் கொண்டிருத்தல்:
பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு அழகுசெய்யும்போது சுணங்கு எனப்படுவதான பூந்தாதுக்களையும் இமைகளின் மேல் அப்பி அழகுசெய்வர் என்று முன்னர் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படிப் பூசும்போது பூந்தாதுக்களை இமைகளின்மேல் தூவி விட்டாற்போல ஆங்காங்கே ஒட்டி அழகுசெய்வர். இதைப் பற்றிக் கூறுகின்ற சில பாடல்வரிகள் மட்டும் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

விதிர்த்து விட்டன்ன அம் நுண் சுணங்கின்
ஐம்பால் வகுத்த கூந்தல் .. - நற்.160

.... மாயவள் மேனி போல் தளிர் ஈன அம் மேனித்
தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக, ... - கலி.35

மேற்காணும் கலித்தொகைப் பாடலில் பெண்ணின் மையுண்ட கண்ணிமையினைப் போல வேங்கை மரத்தில் இலைக் கொழுந்து தோன்ற, அக் கண்ணிமையின் மேல் தூவிவிட்ட பூந்தாதுக்களைப் போல கொழுந்திலையின்மேல் வேங்கைப் பூவின் தாதுக்கள் பரவலாக உதிர்ந்திருந்த செய்தி அழகான உவமையுடன் கூறப்பட்டுள்ளது. இளம்பெண்கள் சேர்ந்து விளையாடியபோது வண்டல் மணலில் பாவை போன்று செய்திருக்க, அதன்மேல் ஞாழலின் சிறிய பூக்கள் பரவலாக உதிர்ந்திருந்தன. இதனை அப் பெண்களின் மையுண்ட கண்ணிமையின்மேல் பரவலாகத் தூவியிருந்த பூந்தாதுக்களுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடலில் கூறுவதைப் பாருங்கள்.

சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர்
நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த
வண்டற் பாவை வன முலை முற்றத்து
ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் .. - நற்.191

பெண்களின் சுணங்கணிந்த கண்ணிமைகளைப் புலவர்கள் பெரும்பாலும் வேங்கைப் பூவிற்கு உவமையாகவே கூறியுள்ளனர். சான்றாகச் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நாகிள வேங்கையின் கதிர்த்துஒளி திகழும்
நுண்பல் சுணங்கின் மாக்கண் .... - புறம்.352

.... வேங்கை வென்ற சுணங்கின் தேம்பாய் கூந்தல்.... - ஐங்கு. 324

.... வேங்கை ஊழுறு நறுவீ கடுப்பக் கேழ்கொள
ஆகத்து அரும்பிய மாசுஅறு சுணங்கினள் ... - அகம். 174

.... பொன்வீ வேங்கைப் புதுமலர் புரைய
நன்னிறத் தெழுந்த சுணங்கணி வனமுலை ... அகம். 318

... ஓதி நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிக்
களிச்சுரும் பரற்றுஞ் சுணங்கின் .... - சிறுபாண்.

மேற்கண்ட பாடல்வரிகளில் இருந்து, பெண்கள் பூந்தாதுக்களைக் கொண்டு தமது கண், மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி ஆகியவற்றை அழகுசெய்திருந்ததனை அறிந்துகொள்ள முடியும். அத்துடன் பெண்கள் தமது தோள்களையும் கூட பூந்தாதுக்களால் அழகுசெய்திருந்ததனைக் கீழ்க்காணும் பாடல்வரிகளில் இருந்து அறிந்துகொள்ளலாம்.

பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு    .. - கலி.141
பணைத் தோள் அரும்பிய சுணங்கின்.. - நற்.262

பெண்களின் சுணங்கணிந்த கண், மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி, தோள் ஆகியவற்றை வேங்கை முதலான பூக்களுடன் ஒப்பிட்டுக் கூறியிருப்பதில் இருந்து, மேனி, முலை, கூந்தல், ஆகம், ஓதி, தோள் ஆகியவை பெண்களின் மையுண்ட கண்இமைகளையும் குறிக்கும் என்பதைத் தெள்ளிதின் அறிந்து கொள்ளலாம். பெண்கள் பூந்தாதுக்களையே அன்றி தாதுக்களைப் போலத் தோன்றுகின்ற வண்ணவண்ணப் பொட்டுக்களாலும் தமது இமைகளை அழகுசெய்வர். இப் பொட்டுக்களைத் தித்தி என்றும் திதலை என்றும் இலக்கியங்கள் கூறும். இவை பற்றி விரிவாகத் தித்தியும் திதலையும் என்ற ஆய்வுக் கட்டுரையில் காணலாம். வண்டுகள் குடைதலால் இளந்தளிரின்மேல் பூந்தாதுக்கள் உதிர்ந்து பரவியிருப்பதைப் போல மையுண்ட கண்ணிமையின்மேல் அழகிய பல வண்ணப் பொட்டுக்களை வரைந்து அழகுசெய்திருந்ததினைப் பற்றிக் கூறும் ஒரு பாடல் சான்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

..... மென்சிறை வண்டின் தண்கமழ் பூந்துணர்
தாதுஇன் துவலை தளிர்வார்த் தன்ன
அம்கலுழ் மாமை கிளைஇய,
நுண்பல் தித்தி மாஅயோளே - அகம். 41

5. வண்டுகள் மொய்த்தல்:

பொதுவாக வண்டுகளும் தும்பிகளும் சுரும்புகளும் ஞிமிறுகளும் பூக்களை நாடிச்சென்று அவற்றில் இருக்கும் மகரந்தங்களில் இருப்பதான தேனை உண்பது இயற்கையே. பூக்களின் ஒளிமிக்க வண்ணங்களாலும் அவற்றின் மணத்தினாலும் கவரப்படுகின்ற இவை, மகரந்தங்கள் எங்கிருந்தாலும் அவற்றில் உள்ள தேனை உண்ணச் சுற்றிச்சுற்றி வரும் போலும். பெண்கள் தமது கண்ணிமைகளை ஒளிமிக்க வண்ண மைகொண்டு பூசியிருப்பதாலும் அதன்மேல் பூந்தாதுக்களைக் கொண்டு அப்பி இருப்பதாலும் வண்டினங்கள் அவரது கண்ணிமைகளைப் பூக்கள் என்று கருதி அதன்மேல் உள்ள பூந்தாதுக்களைக் குடைந்து அதில் இருக்கும் தேனை உண்ணப் பாய்ந்துவரும். இதைப்பற்றி ஏராளமான பாடல்களில் புலவர்கள் பாடியிருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மட்டும் சான்றாகக் கீழே காணலாம்.

.. தெண்நீர் ஆய்சுனை நிகர்மலர் போன்ம் என நசைஇ
வீதேர் பறவை விழையும்
போதார் கூந்தல் நம் காதலி கண்ணே - அகம். 371

கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டினம் மொய்ப்பத்
தெண்கடல் பெருந்திரை மூழ்குவோளே. - ஐங்கு. 126

......பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத்,
தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார்! .... - கலி.26

முடிவுரை:

சங்ககாலப் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளானவை பூக்களைப் போலவே மென்மை, வண்ணம், நறுமணம் மற்றும் பூந்தாதுக்களைக் கொண்டிருந்ததாலும் தேன் உண்ணும் வண்டுகளால் மொய்க்கப்பட்டதாலும் இவரது கண்ணிமைகளைப் பூவிதழ்களுடன் ஒப்பிட்டுச் சங்ககாலப் புலவர்கள் பல பாடல்களில் பாடினர் என்பதை மேலே பல ஆதாரங்களுடன் அறிந்துகொண்டோம். பெண்களின் விழிகளைப் பூக்களுடன் உவமைப்படுத்திக் கூறுகின்ற வழக்கம் சங்ககாலத்தில் மட்டுமல்ல இன்றும்கூட இருக்கிறது என்பதனை ' பூவிழி, மலர்விழி ' போன்ற பெயர்களே பறைசாற்றி நிற்கின்றன. சரி, பெண்களின் மையுண்ட கண்களைப் பூக்களாக நினைத்து வண்டினங்கள் பாய்ந்தால் என்ன ஆகும்?. இதைப்பற்றி விரிவாக அடுத்த கட்டுரையில் காணலாம்.