வெள்ளி, 15 பிப்ரவரி, 2019

வேதிப்பொருட்களுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டும் முறைகள்


முன்னுரை:

தமிழில் அறிவியல் நூல்கள் சாத்தியமா? – 1 என்ற தலைப்பில் வேதியியல் பாடங்களை முழுக்கவும் தமிழில் இயற்றிக் கற்பிப்பது எப்படி என்று விளக்கமாகக் கண்டோம். அதன் தொடர்ச்சியாக, வேதியியலில் அடிப்படையாக விளங்கும் சில தனிமங்களின் பெயர்களை எவ்வாறு தமிழில் படைப்பது என்றும் அவற்றின் சேர்மங்கள் மற்றும் பிற சேர்மங்களைத் தமிழில் வழங்கும் முறை பற்றியும் இக் கட்டுரையில் விளக்கமாகக் காணலாம்.

தனிமங்களும் தமிழ்ப்பெயர்களும்:

வேதியியலில் இருக்கும் தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களைத் தமிழ்மொழியில் மொழிபெயர்க்காமல் அப்படியே கையாளலாம் என்றும் ஆனால் அவற்றின் குறியீடுகளைத் தமிழில் எழுதலாம் என்றும் முன்னர் கண்டோம். இதன் அடிப்படையில், தனித்தமிழில் உருவாக்கப்பட்ட தனிம அட்டவணையும் மேற்கண்ட முதலாம் கட்டுரையில் இணைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஒருசில அடிப்படைத் தனிமங்களின் ஆங்கிலப் பெயர்களை மட்டும் தமிழில் மாற்றவேண்டிய தேவை உருவாகி இருக்கிறது. காரணம், இந்த தனிமங்களின் பெயர்கள் பிற பெயர்ச்சொற்களுடன் இணைந்துப் பெருவாரியாக வழக்கத்தில் உள்ளன. கார்பன், கைற்றசன், ஆக்சிசன் ஆகிய மூன்று தனிமங்களே இங்கே குறிப்பிடப்படுகின்ற அடிப்படைத் தனிமங்கள் ஆகும். இந்த மூன்று தனிமங்களுக்கும் ஏற்கெனவே தமிழில் பெயர் இருக்கும்நிலையில் மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்று கீழே விளக்கமாகக் காணலாம்.

கார்பன் அல்லது கரி:

கார்பன் என்னும் சொல்லுக்குக் கரி, கரிமம் என்ற பெயர்கள் ஏற்கெனவே புழக்கத்தில் இருக்கின்றன. இவற்றில் கரி என்ற பெயரே மிகப் பொருத்தமானது என்பதால் அதுவே இக் கட்டுரையில் இனி பயன்படுத்தப்படும். இதற்கான காரணத்தையும் கீழே காணலாம்.

ஒரு திணை (பொருள்) க்குப் பெயர் வைக்கும் முன்னர் அத்திணையுடன் தொடர்புடைய பிறவற்றுக்கும் அத்திணையின் பெயரை அடிப்படையாகக் கொண்டு பிற பெயர் / வினைச் சொற்களைப் பொருத்தமாக உருவாக்க முடியுமா என்று பார்க்க வேண்டும். கலைச்சொல் ஆக்கத்தின் முதல் விதியும் இன்றியமையாத விதியும் இதுதான். சான்றாக, கார்பன் என்பதற்குக் கரிமம் என்ற பெயரைக் கொண்டால், கார்பானிக், கார்போ, கார்பனேசியச், கார்பாக்சில் போன்ற சொற்களுக்குப் பெயர் வைப்பதில் சிக்கல்கள் எழுகின்றன. ஆனால், கார்பன் என்பதற்குக் கரி என்ற பெயரைக் கொண்டால் இச் சிக்கல்களைக் கீழ்க்கண்டவாறு தீர்க்கலாம்.

CARBON = கரி
CARBONACEOUS = கரிச
CARBONIC = கரிம
CARBONIC ACID = கரிமக்காடி
CARBO = கார்

கார்பாக்சில் என்பதில் கார்பனும் ஆக்சிசனும் இருப்பதால் இதைப்பற்றி அகராதி அட்டவணையில் காணலாம்.

ஆக்சிசன் அல்லது உயிர்வளி:

ஆக்சிசன் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு உயிர்வளி என்ற தமிழ்ச்சொல் பல ஆண்டுகளாகப் புழக்கத்தில் இருந்து வருகிறது. இச்சொல்லே நல்ல தமிழ்ச்சொல் தான். ஆனால், இச்சொல்லில் இருந்து ஆக்சிசனுடன் தொடர்புடைய பிற பெயர் / வினைச்சொற்களை உருவாக்க, இச்சொல்லின் மூலத்தையே நாம் பயன்படுத்த வேண்டும். அதாவது,

உயிர்வளி என்பதில் உள்ள உயிர் என்ற சொல்லின் வேர்மூலம் உய் ஆகும். உய்த்தல் அதாவது பிழைத்தல் என்ற வினையின் அடிப்படையில் எழுந்ததே உயிர் ஆகும். எதிரிகளையும் சூழலையும் சமாளித்து எது உய்க்கிறதோ / பிழைக்கிறதோ அதுவே உயிரி ஆகும். ஆங்கிலத்தில் SURVIVAL என்ற சொல்லுக்கு ஈடானதே இந்த உய்த்தல் ஆகும். சுருக்கமாகச் சொன்னால்,

உய்த்தல் (பிழைத்தல்) >>> உயிர்

எனவே, ஆக்சிசன் தொடர்பான பிற பெயர் / வினைச் சொற்களுக்கு இந்த உய் என்னும் வேரையும் இதன் இன்னொரு தோற்றமான உஞ்ச் (யகரத்திற்கும் சகரத்திற்கும் உள்ள தொடர்பு ஏற்கெனவே அறிந்ததே) என்னும் வேரையும் பயன்படுத்தித் தமிழில் கீழ்க்கண்டவாறு பெயர் சூட்டலாம்.

OXYGEN = உயிர்வளி
OXY / OXYL = உய் / உஞ்ச்
OXIDE = உஞ்சை

கைற்றசன் அல்லது உறைவளி:

கைற்றசன் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்கெனவே நீர்வளி என்ற தமிழ்ச்சொல்லைப் படைத்துள்ளனர். நீரிலிருந்து தோன்றுவது / நீரினைத் தோற்றுவிப்பது என்ற பொருளுடைய இச்சொல்லும் அருமையானதே. ஆனால், வழக்கம்போல கைற்றசனுடன் தொடர்புடைய பிற பெயர் / வினைச்சொற்களுக்கு நீர்வளி என்ற சொல்லில் இருந்து புதிய பெயர்களைப் படைப்பதில் சிக்கல் எழுகிறது. கீழே ஒரு சான்றினைக் காணலாம்.

கைற்றசன் என்னும் சொல்லுக்கு நீர்வளி என்ற பெயரைக் கொண்டால்,
கைற்றோ கார்பன் என்பதற்கு எப்படிப் பெயர் வைப்பது?

நீர்வளிக்கரிமம் என்றோ நீர்க்கரி என்றோ பெயர்வைப்பது பொருத்தமாயிராது என்பதுடன் பொருள்குழப்பத்தையும் சொல்நீளத்தையும் கூட்டுவதாய் அமையும். எனவே, இதேபொருளில் அமைந்த வேறொரு சொல்லின் தேவை எழுகிறது. நீர் என்னும் சொல்லுக்கு மாற்றாக, உறை என்ற சொல்லை இங்கே பயன்படுத்தலாம். காரணம், கைற்றசன் வளியின் முதன்மைப் பயன்பாடுகளில் ஒன்று துளியங்களை உறையச்செய்தல் அல்லது உரம்புதல் ஆகும். மேலும், உறை என்ற சொல்லுக்கு நீர் என்ற பொருளும் அகராதியில் உண்டு. ஆக, நீர் என்பதற்கு மாற்றாக உறை என்ற சொல்லைக் கொண்டால் கீழ்க்காணுமாறு கலைச்சொற்களைப் படைக்கலாம்.

HYDROGEN = உறைவளி
HYDRO = உறு / உற்

வேதிப்பெயர் விகுதிகள்:

பல வேதிப்பொருட்களின் பெயர்களைக் கவனித்துப் பார்த்தால், அவற்றின் விகுதிகள் ஒரு ஒழுங்குமுறையில் அமைந்திருப்பதனை அறிய முடியும். சான்றாக,

கார்பனேட், குளோரேட், கைற்றேட் …. போன்றவற்றில் ஏட் விகுதியும்
கார்பைட், குளோரைட், கைற்றைட் …. போன்றவற்றில் ஐட் விகுதியும்

அமைந்திருப்பதை அறியலாம். இதுபோன்ற விகுதிகளைக் கீழ்க்கண்டவாறு தமிழ்ப்படுத்திப் பெயர்களை உருவாக்கலாம்.

-    IDE =  - அடு / ஐடு
-    ATE = - ஏடு

மேற்காணும் தமிழ் விகுதிகளைப் பயன்படுத்திக் கீழ்க்கண்டவாறு வேதிப்பொருட்களின் பெயர்களை அமைக்கலாம். சில சான்றுகள் கீழே:

CARBONATE = காரேடு
CARBIDE = காரடு
HYDRATE = உறேடு
HYDRIDE = உறடு

வேதிப்பெயர் சுருக்கங்கள்:

பல வேதிப்பொருட்களின் பெயர்கள் நீளமாக இருப்பவை. சான்றாக, சோடியம் குளோரேட், பொட்டாசியம் குளோரைடு, சோடியம் பைகார்பனேட் போன்றவற்றைச் சொல்லலாம். இது போன்ற வேதிப்பொருட்களின் பெயர்களைக் கீழ்க்காணும் முறைகளில் சுருக்கமாகக் கூறலாம்.

சோடியம் குளோரேட் = சோகுரே
பொட்டாசியம் குளோரைடு = பொகுரை
சோடியம் பைகார்பனேட் = சோடியம் ஈர்காரேடு = சோய்காரேடு
சோடியம் கார்பனேட் = சோடியம் காரேடு = சோகாரேடு
கால்சியம் கார்பைடு = கால்காரடு
மெக்னீசியம் சல்பைடு = மெக்சபை
அலுமினியம் பாஸ்பேட் = அலுபாபே
பெரிலியம் நைற்றேட் = பென்றே
போரான் நைற்றைட் = போன்றை
போரான் கார்பைட் = போகாரடு
சிலிகான் கார்பைடு = சிலிகாரடு

வேதியியல் கலைச்சொல் அகராதி:

இதுவரை மேலே கண்டவற்றின் அடிப்படையில் இயற்றப்பட்ட முதலாம் வேதியியல் கலைச்சொல் அகராதியைக் கீழே காணலாம்.

carbon
கரி

carbonize
கரியேற்று

carbonized
கரியேற்றிய

carbonizer
கரியேற்றி

carbonization
கரியேற்றம்

carbo
கார்

carbide
காரடு

carbonate
காரேடு

calcium carbide
கால்காரடு
கால்சியம் காரடு
calcium carbonate
கால்காரேடு
கால்சியம் காரேடு
hydrogen
உறைவளி

hydrogenate
உறைவளியேற்று

hydrogenated
உறைவளியேற்றிய

hydrogenation
உறைவளியேற்றம்

hydro
உறு

hydride
உறடு

hydrate
உறேடு

carbohydrate
காருறேடு

hydrocarbon
உறுகரி

oxygen
உயிர்வளி

oxy
உய் / உஞ்ச்

oxide
உஞ்சை

oxidize
உஞ்சேற்று

oxidizer
உஞ்சேற்றி

oxidation
உஞ்சேற்றம்

oxygenate
உய்யேற்று

oxygenation
உய்யேற்றம்

oxygenator
உய்யேற்றி

hydroxide
உறுஞ்சை

hydroxyl
உறுஞ்ச

sodium hydroxide
சோவுறுஞ்சை / சௌறுஞ்சை
சோடியம் உறுஞ்சை
carboxide
காருஞ்சை

carboxyl
காருஞ்ச

potassium chloride
பொகுரை
பொட்டாசியம் குளோரைடு
potassium chlorate
பொகுரே
பொட்டாசியம் குளோரேட்
potassium oxide
பொவுஞ்சை / பௌஞ்சை
பொட்டாசியம் உஞ்சை
potassium carbonate
பொகாரேடு
பொட்டாசியம் காரேடு
potassium carbide
பொகாரடு

potassium bi-carbonate
பொய்க்காரேடு
பொ + ஈ + காரேடு
carbonic acid
கரிமக்காடி

potassium sulphide
பொசபை

potassium sulphate
பொசபே

sodium nitride
சோன்றை

sodium nitrate
சோன்றே

hydro chloric acid
உகுரை காடி
உறைவளி குளோரைடு
nitric acid
உன்றே காடி
உறைவளி நைட்ரேட்
sulphuric acid
உசபே காடி
உறைவளி சல்பேட்