செவ்வாய், 22 ஏப்ரல், 2014

நான்கு கடவுள் - பகுதி 6 ( இந்தியா - திராவிடம் - தமிழ் )

முன்னுரை:

நான்கு கடவுள் ஐந்தாம் பகுதியின் தொடர்ச்சியாக இக் கட்டுரை வெளியிடப்படுகிறது. நான்கு கடவுள் மூன்றாம் பகுதியில் தொல்தமிழகமானது இன்றைய இந்தியாவின் எப்பகுதியில் அமைந்திருந்தது என்பதை ஆதாரங்களுடன் கண்டோம். நான்காம் பகுதியில் மகாபாரதப்போரானது தமிழ் மன்னர் ஐவருக்கும் வேற்றினத்தவர் நூற்றுவருக்கும் இடையில் நடந்த போரே என்பதைக் கண்டோம். ஐந்தாம் பகுதியில் சிலப்பதிகாரத்தில் விரிவாகப் பாடப்பட்ட இந்திரவிழாவே இன்றைய தைப்பொங்கல் விழாவின் முன்னோடி என்பதைக் கண்டோம். இந்த ஆறாம் பகுதியில் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றி ஆதாரங்களுடன் காண இருக்கின்றோம். இதற்கு முதலில் இப் பெயர்களுடன் தொடர்புடைய பிற பெயர்களைப் பற்றியும் அவற்றின் தோற்றம் குறித்த இன்றைய கருத்துக்கள் என்னென்ன என்பதைப் பற்றியும் காணலாம்.

இந்தியா :

நாம் வாழ்ந்து வரும் இந்தியத் திருநாட்டிற்குப் பழங்காலத்தில் பல பெயர்கள் உண்டு. இந்துஸ்தான், பாரதம், ஜம்புதுவீபம், நபிவருஷம், பாரதவருஷம் போன்றவை அவற்றுள் சில. அதுமட்டுமின்றி, பல மொழிகளில் இந்தியாவிற்குப் பல பெயர்களும் உண்டு. சான்றாக, ஜப்பான் மொழியில் இந்தியாவானது 'தெஞ்சிகு' என்றும், சீன மொழியில் 'யிந்து' என்றும், ஹிப்ரு மொழியில் 'ஹொது' என்றும், செங்கிருதத்தில் 'ஆர்யவர்தம்' என்றும் அழைக்கப்படுகிறது. இதைப் பற்றிய மேலதிக செய்திகளை விக்கிப்பீடியாவில் 'இந்தியாவின் பெயர்கள்' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் 'ஆர்யவர்த்தா' என்ற ஆங்கிலத்தலைப்பிலும் காணலாம்.

இனி இந்தியாவின் பெயர்கள் எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றித் தற்போதைய கருத்துக்கள் என்னென்ன என்று காணலாம். 

1) சிந்து நதிக்கரையில் அமைந்திருந்தபடியால் இந்தியா என்று அழைக்கப்படலாயிற்று.
2) பரதன் என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் பாரதம் / பாரதவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
3) நபிராஜா என்ற மன்னனால் ஆளப்பட்டமையால் நபிவருஷம் என்று அழைக்கப்படலாயிற்று.
4) நாவல் மரங்கள் நிறைந்த நாடாக அறியப்பட்டமையால் ஜம்புதுவீபம் என்று அழைக்கப்படலாயிற்று.

திராவிடம் / திராவிடர் :

பல்லாண்டு காலமாக வரலாற்று அறிஞர்கள் மற்றும் மொழியியல் அறிஞர்களால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டும் தொடர்ந்து பேசப்பட்டும் வருகின்ற பெயர்ச்சொல் இதுவேயாகும். திராவிடர் என்ற சொல் தமிழர்களை மட்டுமின்றி தெலுங்கர், கன்னடியர், மலையாளிகளையும் சேர்த்துக் குறிப்பதாக அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த திராவிடர் என்ற சொல்லின் மூலம் திராவிடம் என்பதாகும். திராவிட நாட்டில் வசிக்கும் மக்கள் அனைவரும் திராவிடர் என்று குறிப்பிடப்பட்டனர். இந்தியாவின் தென்பகுதியில் வாழ்ந்த மக்கள் அனைவரும் திராவிடர் என்று பொதுவாக அறியப்பட்டதால், திராவிடர் என்ற இப் பெயரானது உறுதியாக தமிழர், தெலுங்கர், கன்னடியர் மற்றும் மலையாளிகளால் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது. 

ஆம், இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்துவந்த வேற்றினத்து மக்களால் வழங்கப்பட்ட பெயரே திராவிடம் / திராவிடர் என்பதாகும். இப் பெயர் எவ்வாறு தோன்றியது என்பதைப் பற்றிக் காணும்முன்னர், அது குறித்து தற்போதிய கருத்துக்கள் என்னென்ன என்பதைக் காணலாம்.

1) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று திரவிட என்று வழங்கலாயிற்று என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும்.
2) திராவிடம் என்ற சொல் செங்கிருதத்தில் இருந்து வந்தது என்றும் இதை 'த்ர+விட்' என்று பிரித்து, இதற்கு 'தோல்வியுற்று ஓடி ஒளிந்த இடம்' என்று பொருள்கொண்டு, திராவிடர் என்றால் ஆரியப் படையிடம் தோற்று ஓடி ஒளிந்தவர்கள் என்று பொருள் கொள்கின்றனர் சிலர்.


தமிழ்:

அமிழ்தினும் இனிய மொழியாம் தமிழுக்கு அதன் பெயர் (தமிழ்) எவ்வாறு வந்தது என்பதைப் பற்றியும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.

1) தமிழானது 'தமி' என்ற சொல்லின் அடிப்படையில் பிறந்த பெயரென்றும் இதற்கு 'தனித்துவமானது' 'தனியாக இயங்க வல்லது' என்ற பொருள் கொள்வார் சிலர்.
2) தம்+மொழி என்பதே திரிபுற்று தமிழ் என்றானது என்பது இன்னொரு சாராரின் கருத்தாகும்.
3) த்ரமிள என்ற சொல்லே திரிபுற்று தமிழ் என்றானது என்பது பெரும்பான்மையோர் கருத்தாகும்.

புதிய கருத்து:

இதுகாறும் இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய பெயர்கள் தொடர்பாக பலரது கருத்துக்களைக் கண்டோம். இனி, இப் பெயர்களின் தோற்றம் குறித்த புதியதோர் கருத்தினைக் கீழே காணலாம்.

இந்தியா, திராவிடம், தமிழ் என்ற மூன்று பெயர்களுமே இந்திரவிழா என்ற பெயரில் இருந்தே உருவாகி இருக்கக் கூடும்  என்பதே அப் புதிய கருத்தாகும்.

இந்திரவிழா என்ற சொல் இரண்டாக பிரிந்து இந்து, த்ரவிழா என்று வழங்கப்பட்டது. இதில்,

இந்து என்பதுடன் ஸ்தான் என்ற சொல்லை சேர்த்து இந்துஸ்தான் என்று இந்தியாவின் வடபகுதியினைக் குறித்தனர்.

வடபகுதியில் இருந்து தெற்குநோக்கி வந்தவர்கள் தங்கிய இடம் த்ரவிட என்று அழைக்கப்பட்டது. இது த்ரவிழ என்பதன் திரிபாகும்.

த்ரவிழ என்பது மேலும் திரிந்து த்ரமிழ என்றாகி தமிழ என்றானது.

ஆக, இந்தியா, திராவிடம், தமிழ் ஆகிய மூன்று பெயர்களின் தோற்றத்திற்கும் அடிப்படையாய் அமைந்தது இந்திரவிழா என்னும் ஒரு பெயரே என்பது இங்கு அறியப்பட்டது. இதனை சில ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.

நிறுவுதல்:

நான்கு கடவுள் மூன்று மற்றும் நான்காம் பகுதிக் கட்டுரைகளில் தொல்தமிழகமானது இந்தியாவின் வடக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் இதில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை என்ற ஐவகை நிலங்கள் தனித்தனியே அமைந்திருந்தது என்றும் கண்டோம். இந்த ஐவகை நிலங்கள் தனித்தனியே இருந்தாலும் இவற்றை ஒருங்கிணைக்கும் நிலமாகவும் மையநிலமாகவும் பெரிய நிலமாகவும் மருதமே விளங்கிற்று எனலாம். இந்த மருதநிலத்து மக்களால் முதன்முதலில் துவக்கப்பட்டு பின்னர் ஆண்டுதோறும் அம் மக்களால் கதிரவனுக்கு எடுக்கப்பட்டு வந்த விழாவே இந்திரவிழாவாகும். நாளடைவில் இந்த இந்திரவிழாவில் மருதநில மக்கள் மட்டுமின்றி ஏனையோரும் கலந்துகொள்ள, அது ஒரு பெரும் விழாவாக, தமிழர் விழாவாக மாறியது. இந்த விழாவின் மூலம் தமிழரின் ஒற்றுமை வலுப்பட்டதால் தான் மகாபாரதப் போரில் தமிழர்களால் வேற்றினத்தவர் நூற்றுவரை தோற்கடிக்க முடிந்தது என்றால் அது மிகையில்லை.

இப்படி தமிழ்மக்கள் அனைவராலும் பெரும்விழாவாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்திரவிழாவின் பெருமையினை அறிந்த பிற தேசத்தவர் தொல்தமிழகத்தினை 'இந்திரவிழா' நாடு என்றே அழைக்கலாயினர். நாளடைவில், தமிழ் மன்னர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ஒற்றுமை குலைய, படையெடுத்துவந்த வேற்றினத்தவரிடம் தோற்று வடபுலம் நீங்கி தென்புலம் பெயரலாயினர்.

இப்படி இந்தியாவின் வடபுலத்தை வெற்றிகண்ட வேற்றினத்தவருக்கு இந்திரவிழா என்ற நீண்ட பெயர் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் அப் பெயரை இந்து , த்ரவிழ என்று இரண்டாகப் பிரித்தனர். தாம் வெற்றி கொண்ட வடபுலத்திற்கு இந்து என்ற சொல்லுடன் ஸ்தான் என்ற தம் மொழிச்சொல்லைச் சேர்த்து இந்துஸ்தான் என்று அழைக்கலாயினர். தம்மிடம் தோற்றோடிய மன்னர்கள் சென்று தங்கிய தென்பகுதியினை த்ரவிழ என்று அழைக்கலாயினர். நாளடைவில் அதுவே த்ரமிழ, த்ரவிட என்று மருவ இவற்றிலிருந்து தமிழ், திரவிடம் என்ற பெயர்கள் தோன்றலாயின.

இந்துஸ்தான் என்ற பெயரில் இருந்தே இந்தியா என்ற பெயர் தோன்றியது. இருந்தாலும், இந்துஸ்தான் என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

முடிவுரை:

இந்தியா, தமிழ், திராவிடம் போன்ற பெயர்களின் தோற்றம் குறித்து மேலே கூறப்பட்ட கருத்துக்கள் யாவும் ஒரு கோணமே ஆகும். இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இனத்தவரின் படையெடுப்பு நடந்தது என்பதையும் அதிலும் குறிப்பாக வளம் நிறைந்த வடபுலமே அதிகமாக படையெடுக்கப்பட்டது என்பதையும் நாமறிவோம். இதனால் தென்புலம் நோக்கி  நிரந்தரமாகப் புலம் பெயர்ந்த தமிழர்கள் அவரவர் விருப்பத்திற்கேற்ப பிரிந்து வாழத்துவங்க, இதுவே தமிழில் இருந்து பல கிளை மொழிகள் தோன்றக் காரணமாயிற்று எனலாம்.

புதன், 9 ஏப்ரல், 2014

ஆதிபகவன் - உலகின் முதல் உழவன் !

முன்னுரை:

ஆதிபகவன் யார் என்ற கட்டுரையின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகமாக இக் கட்டுரை வெளிவருகிறது. ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில், ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பதிலாக ஆதியகவன் என்ற சொல்லை பாடபேதமாகக் கொண்டு அச் சொல்லுக்கு 'காரண அறிவானவன்' என்ற பொருள் கொண்டு, இறைவன் காரண அறிவின் வடிவினனாய் இருக்கிறான் என்று வள்ளுவர் கூறுவதாக உரை கூறப்பட்டது. இனி, இக் கட்டுரையில் இந்த ஆதிபகவன் என்ற சொல்லை வேறொரு புதிய கோணத்தில் இருந்து ஆய்வுசெய்து புதியதோர் உரைவிளக்கம் முன்வைக்கப்படுகிறது. அப்படியானால், முன்னர் கூறப்பட்ட விளக்க உரை தவறா? என்று நினைத்தல் வேண்டற்பாலது. ஏனெனில், வள்ளுவரால் எழுதப்பட்ட உண்மையான திருக்குறள் ஒலைச்சுவடிகளை யாரும் இதுவரை கண்டதில்லை. இந் நிலையில், தற்போது கிடைத்து இருக்கும் குறள்களில் பாடபேதங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் மிக அதிகம். ஆகவே, கூடியவரை மிகப் பொருத்தமாக உள்ள பாடபேதங்களைக் கண்டறிந்து அவற்றின் அடிப்படையில் குறளுக்குப் புதிய கருத்துக்களை முன்வைப்பதில் தவறில்லை. மேலும், ஏனைய கட்டுரைகளைப் போலவே, இக் கட்டுரையும் வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் என்பதிலும் ஐயமில்லை.

ஆதிபகவன் - யார்?

திருக்குறளின் முதல் குறளில் வருகின்ற இந்த ஆதிபகவன் என்ற சொல்லைப் பற்றிப் பல ஆண்டுகளாக பல அறிஞர்கள் ஆய்வுமேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் புலமைக்கு ஏற்றவாறு அவரவர் கருத்துக்களை முன்வைக்கின்றனர். இருப்பினும், இக் கருத்துக்களால் திருவள்ளுவரின் மாட்சி மேம்படுத்தப்படுகிறதா இல்லையா என்பதே கேள்வி. இதுகாறும் இக் குறளுக்கு உரைக்கப்பட்ட விளக்கங்கள் எவையும் வள்ளுவரின் மாண்புக்கு அணிசேர்க்கவில்லை. காரணம், இவ் விளக்கங்கள் அனைத்தும் திருவள்ளுவரை ஏதேனும் ஒரு சமயத்தை சார்ந்தவராகவே காட்ட முற்படுகின்றன. உலகப் பொதுமறை என்று போற்றப்படும் ஒரு நூலாகிய திருக்குறளில் குறிப்பிட்ட சமயம் சார்ந்த கருத்துக்கள் மலிந்து கிடக்குமானால், அது எங்ஙனம் உலகப் பொதுமறையாகத் திகழ முடியும்?. எனவே, இந்த ஆதிபகவன் என்ற சொல்லானது எந்த ஒரு குறிப்பிட்ட சமய சார்புமின்றி, அனைத்து சமய மக்களுக்குப் பொதுவானதாகவும், அனைவராலும் அறியப்பட்ட ஒரு பொதுப்பண்பினை குறிப்பிடுவதாயும் இருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட ஒரு பண்பான காரண அறிவு என்பதைப் பற்றித்தான் ஆதிபகவன் யார் என்ற கட்டுரையில் கண்டோம். இக் கட்டுரையிலும் அப்படியானதோர் பொதுப்பண்பினையே காண இருக்கிறோம்.

ஆதிபகவன் - திருத்தமும் புதிய விளக்கமும்:

இக் கட்டுரையில் ஆதிபகவன் என்ற சொல்லுக்குப் பாடபேதமாக 'ஆதிபகலன்' என்ற சொல் முன்வைக்கப்படுகிறது.

இதில் வரும் 'பகல்' என்பதற்கு 'ஏர்நுகம்' என்பது பொருள். 'பகலன்' என்பது ஏர்நுகத்தை உடையவன் அதாவது உழவன் என்று பொருள். மேலும்,

ஆதி என்பதற்கு முதல் என்பது பொருள். ஆக,

ஆதிபகலன் = முதல் உழவன்.

இதன்படி, இக் குறளுக்கான புதிய விளக்கமானது:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தையே முதல் எழுத்தாகக் கொண்டுள்ளன. அதைப்போல இவ் உலகமானது இறைவனையே முதல் உழவனாகக் கொண்டுள்ளது.


நிறுவுதல்:

மேற்காணும் புதிய கருத்தினை ஆதாரங்களுடன் இங்கே நிறுவலாம்.  நாம் ஏற்கெனவே கண்டதைப் போல, திருக்குறளானது முதன்முதலில் திருவள்ளுவரால் ஓலைச்சுவடியில் எழுதப்பட்டு பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் சிக்குண்டு சிதிலமடைந்து எழுத்துருக்கள் மாறுபட்டு பின்னர் அது பல படிகளாக ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு இப்போது ஒருவகையாக நமக்குக் கிடைத்துள்ளது. மேலும், எந்த ஒரு மிகப்பழைய ஓலைச்சுவடியையும் படிக்கும்போது 'ல' கர 'வ' கர வேறுபாடு காண்பது மிக நுட்பமான திறமை வாய்ந்த செயலாகும். வரிவடிவத்தில் மிகவும் ஒத்துப் போகின்ற இந்த இரண்டு எழுத்துருக்கள் படிப்போரின் கண்ணை மிக எளிதாக ஏமாற்றிவிடும். அவ் வகையில், ஆதிபகவன் என்பது ஆதிபகலனாக எழுதப்பட்டிருப்பதற்கு வாய்ப்புக்கள் மிக அதிகம்.

இனி, பகல் என்ற சொல் எவ்வாறு ஏர்நுகத்தைக் குறிக்கும் என்பதைக் காணலாம்.

பகல் - புதிய பொருள்:

பகுதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய சொல்லே பகலாகும். பகுதல் என்பதற்கு கூராதல் என்ற பொருளுமுண்டு. சான்று: பகுவாய் நாரை = கூர்வாய் நாரை.

பகுதல் அதாவது கூராதல் என்ற வினையின் அடிப்படையில் தோன்றிய பிற சொற்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பகழி = கூர்மையான அம்பு.
பகர் / பகரம் / பகல் = கூர்மையான ஒளிக்கதிர்.
பகலாணி = நுகத்துக் கூராணி.
பகம் = கூரிய அலகுடைய கொக்கு.

இவற்றை சென்னைத் தமிழகராதியிலும் காணலாம்.

பகலாணி என்றும் பகல் என்றும் அறியப்படும் நுகத்தின் கூராணியே நுகத்தின் முதன்மைப் பொருளாகும். இதுவே நிலத்தைக் கிழித்து உழுவதற்கு உதவுவதாகும்.

முடிவுரை:

சுழன்றும் ஏர் பின்னது உலகம் என்று உழவுத்தொழிலின் இன்றியமையாமையை அறிந்த வள்ளுவர் உழவரின் சிறப்பை உலகோர்க்கு எடுத்துக்கூறவே உழவரின் பெருமையினை கடவுள் வாழ்த்தில் அதுவும் முதல் பாடலிலேயே பாடி இருக்கிறார் என்றால் மிகையாகாது. காரணம், உழவுத்தொழில் இன்றியமையாதது மட்டுமின்றி சமயம் சாராதது. உலகோர் அனைவருக்கும் பொதுவானது. முதல் பாடலில் இறைவனை உலகின் முதல் உழவன் என்று குறிப்பிட்ட வள்ளுவர் 8 ஆம் பாடலில் அறவாழி அந்தணன் அதாவது அறத்தையே கலப்பையாகக் கொண்ட உழவன் என்று இறைவனைப் பாடுகிறார். இதைப் பற்றி அறவாழி அந்தணன் என்ற கட்டுரையில் விரிவாகக் காணலாம். கூரிய எழுத்தாணியால் இயற்றப்படும் எழுத்துக்கள் அனைத்திற்கும் அகரமே தலைமையாகும்.  அதைப்போல உழவே தலையாகக் கொண்ட இவ் உலகிற்கு இறைவனே முதல் உழவனாவான் என்கிறார். இறைவனை உழவனாக உருவகித்ததில் இருந்து இறைவனின் ஆக்கல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று வினைகளையும் முதல் பாட்டிலேயே உணர்த்திவிடுகிறார் வள்ளுவர். என்னே வள்ளுவரின் நுண்மாண் நுழைபுலம்!