விலங்கியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விலங்கியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 2 செப்டம்பர், 2021

14. அசுணம் / அசுணமா ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


           அசுணம் 

என்றால் என்ன?

முன்னுரை:

சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற தலைப்பில் பல்வேறு விலங்குகளைப் பற்றிய தகவல்களைத் தொடர் ஆய்வுக் கட்டுரைகளாக முன்னர் கண்டோம். அவற்றில், நாய், கழுதை, பூனை, கரடி, மான், குரங்கு, யானை, புலி, குதிரை, எருமை, பன்றி ஆகிய பதினோரு விலங்குகளைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள விரிவான செய்திகள் படங்களுடன் தொகுக்கப்பட்டு சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற நூலாக 2018 ஆம் ஆண்டில் அச்சில் வெளிவந்தது. அதனை அடுத்து, ஆடு மற்றும் கழுது என்ற விலங்குகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ள நிலையில், அசுணம் அல்லது அசுணமா என்று அழைக்கப்படுவதான விலங்கினைப் பற்றிய விரிவான ஆய்வினை இக் கட்டுரையில் காணலாம்.

அசுணம் பற்றி நிலவும் கருத்துக்கள்:

அசுணம் / அசுணமா பற்றிய விரிவான ஆய்வுக்குள் செல்லும்முன் அதைப்பற்றித் தற்போது நிலவிவருகின்ற கருத்துக்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

1.   அசுணம் - ஒரு கற்பனை விலங்கு:

அசுணம் என்பது இசையை அறியக்கூடிய ஒரு விலங்கு என்றும் அப்படி ஒரு விலங்கு இவ் உலகில் வாழவே இல்லை என்றும் அது புலவர்களால் கற்பனையாகப் படைக்கப்பட்ட ஒரு விலங்கு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

2.   அசுணம் - ஒருவகைப் பறவை:

அசுணம் என்பது இசையை அறியக் கூடிய ஒரு உயிரி தான் என்றும் ஆனால் அது ஒரு விலங்கு அல்ல என்றும் அது ஒருவகைப் பறவை என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

3.   அசுணம் - ஒருவகைப் பாம்பு:

அசுணம் என்பது இசையை அறியக் கூடிய விலங்கு தான் என்றும் அது ஒருவகையான பாம்பினையே குறிக்கும் என்றும் ஒரு கருத்து நிலவி வருகிறது.

தற்போதைய கருத்துக்கள் சரியா?

ஆராய்ந்து பார்த்ததில், மேலே கண்ட மூன்று கருத்துக்களிலும் தவறு இருப்பதாகவே பட்டது. எனவே முதலில் இக் கருத்துக்கள் சரியா தவறா என்று கீழே காணலாம்.

அசுணம் என்பது ஒரு கற்பனை விலங்கு என்னும் கருத்திற்கு எவ்வித ஆதாரங்களும் முன்வைக்கப் படவில்லை. “ இன்று உயிருடன் இல்லை “ என்ற ஒரேயொரு காரணத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அந்த உயிரினம் பூமியில் வாழவே இல்லை என்று முடிவுசெய்வது அறிவியல் முறைப்படி தவறானது ஆகும். ஏனென்றால், எத்தனையோ வகையான உயிரினங்கள் காலந்தோறும் மண்ணில் வாழ்ந்து மடிந்து இருந்த தடம் தெரியாமல் போய் இருக்கின்றன. மேலும், அசுணம் ஒரு கற்பனை விலங்கு என்றால் அதைப்பற்றிக் குறிப்பிட்ட காலகட்டங்களில் மட்டுமே கூறியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறின்றி, பல்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த பல்வேறு புலவர்கள் அசுணமாவைப் பற்றி இலக்கியங்களில் குறிப்பிட்டு இருப்பதில் இருந்து அசுணம் என்பது உண்மையிலேயே இவ் உலகில் வாழ்ந்து வரும் ஒரு உயிரினம் தான் என்றும் அதுவொரு கற்பனை விலங்கு அல்ல என்றும் முடிவு செய்யலாம்.

அடுத்ததாக, அசுணம் என்பது ஒரு பறவையைக் குறிக்கும் என்ற கூற்றைப் பார்க்கலாம். அசுணம் என்பது ஒரு பறவை என்பதற்குச் சான்றாக கூர்மபுராணத்தில் இருந்து கீழ்க்காணும் பாடல்வரி முன்வைக்கப் பட்டுள்ளது.

“ .... முரசொலி கேட்ட அசுண மென்புள் மூச்சவிந்து ..”

                    (இராமன் வனம் புகு படலம்)

மேற்காணும் பாடல்வரிக்குப் பொருள் கொள்கையில், அசுணம் + என் + புள் என்று பிரித்து அசுணம் என்னும் பறவை என்று அதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். இது தவறான விளக்கமாகும். அசுணம் + என்பு + உள் என்பதே சரியான பிரிப்பாகும். இங்கே என்பு என்பது உடலைக் குறிக்கும். இதன் பொருளானது “ முரசொலியைக் கேட்ட அசுணமானது உடலுக்குள் உயிர் அடங்கி “ என்பதாகும். இப் பாடல்வரியில் பறவை என்ற பொருளே இல்லை என்பதால் இப்பாடல் வரியை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்பட்ட “ அசுணம் ஒரு பறவை “ என்ற கருத்து பொருந்தாமல் போனது.

இறுதியாக, அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்ற கூற்றைப் பார்க்கலாம். .பொதுவாகப் பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் இல்லை என்பது அனைவரும் அறிந்த அறிவியல் உண்மை ஆகும். அசுணம் என்பது ஒருவகைப் பாம்பு என்றால் அசுணத்திற்கும் காதுகள் இல்லை என்றுதான் பொருள் கொள்ளப்படும். மாறாக, அசுணத்திற்கு நீண்ட காதுகள் இருந்தன என்று சூளாமணியின் கீழ்க்காணும் பாடல்வரி குறிப்பிடுகிறது.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்

உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

மேற்காணும் பாடல்வரியில் வரும் உலவு என்பது காதைக் குறிப்பதாகும். இது உளவு என்பதன் போலியாகும். உளவு என்ற சொல் கேட்டு அறிதல் என்ற பொருளில் இன்றும் பயன்பட்டு வருவதாகும். கேட்டு அறியும் வினைக்கு உதவும் கருவியாக காதே விளங்குவதால் காதையும் உளவு என்ற சொல்லால் குறித்தார் எனலாம். அவ்வகையில், உலவு நீள் அசுணமா என்பது காது நீண்ட அசுணம் என்று பொருள் பெறுகிறது. அசுணத்திற்கு நீண்ட காதுகள் உண்டு என்று மேற்காணும் பாடல் கூறுவதால் அசுணம் என்பது பாம்பாக இருக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாகிறது.

இலக்கியங்களில் அசுணம்:

அசுணம் என்பது கற்பனை விலங்கு அல்ல என்றும் பறவையும் அல்ல என்றும் பாம்பும் அல்ல என்றும் மேலே கண்டோம். என்றால், அசுணம் என்பது எதைத்தான் குறிக்கிறது என்ற கேள்வி முன் நிற்கிறது. இக் கேள்விக்கான விடையைக் காணும்முன் இலக்கியங்களில் அசுணமாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளைக் கீழே தொகுத்துக் காண;லாம்.

அசுணமும் மெல்லிசையும்:

அசுணம் என்பது பறவையோ பாம்போ அல்ல என்னும் கருத்து உறுதியாகி விட்ட நிலையில் அது இசையை அறிந்து அனுபவிக்கின்ற ஒரு விலங்குதான் என்பதைப் புரிந்து கொள்ளலாம். அசுணமானது மென்மையான இனிமையான இசையைக் கேட்டு மகிழ்ந்த மற்றும் உறங்கிய செய்திகளைக் கூறும் பாடல்வரிகளைக் கீழே காணலாம்.

மாதர் வண்டின் நயவரும் தீங்குரல்

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

கடாம் இருஞ்சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ்செத்து

இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

இன் அளி கேட்ட அசுணமா அன்னளாய் மகிழ்வு .. சிந்தா. 1402

மேற்பாடல் வரிகளில் இருந்து, வண்டுகள் இசைக்கும் யாழிசை போன்ற மெல்லிசையை அசுணங்கள் கேட்டு மகிழ்ந்தன என்ற செய்தி பெறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புல்லாங்குழலின் இனிமையான மெல்லோசையும் பெண்கள் பாடிய குறிஞ்சிப்பண்ணும் கூட அசுணத்திற்கு மிக விருப்பமானது என்று இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழைகளின் துளைதொறும் கால்பரந்து இசைக்கின்ற ஏழிசைக்கு

உளமுருகி மெய் புளகெழ இரைகொளும் அசுணங்கள் ... வில்லி. 9/20

கொடிச்சியர் எடுத்த இன்குறிஞ்சி கனிந்த பாடல்கேட்டு

அசுணமா வருவன காணாய் ... கம்ப. அயோத். 10/24

அசுணமும் பறையோசையும்:

யாழோசை, புல்லாங்குழல் ஓசை, குறிஞ்சிப்பண் போன்ற மெல்லிசைகளை விரும்பிக் கேட்டு மகிழ்ந்த அசுணங்களைப் பறையோசை, முரசொலி போன்ற வலிய ஓசைகள் படுத்திய பாட்டினைக் கீழே பார்க்கலாம்.

முரசொலி கேட்ட அசுணம் என்புள் மூச்சவிந்து .. கூர்ம.இரா.வ.பு.படலம்

பறைபட வாழா அசுணமா... -. நான்மணி – 2

சீறியாழ் இன்னிசை கேட்ட அசுண நல்மா அந்நிலைக் கண்ணே

பறையொலி கேட்டுத் தன்படி மறந்தது போல்.... பெருங். உஞ்சை. 47/242

மேற்காணும் பாடல்களில் இருந்து, பறையோசை மற்றும் முரசொலியைக் கேட்ட அசுணங்கள் வெய்துயிர்த்துத் தன்னிலை மறந்தன என்ற செய்தியும் உடலில் மூச்சடங்கி இறந்தன என்ற செய்தியையும் அறிய முடிகிறது.

அசுணங்களின் வாழ்விடம்:

அசுணங்களின் வாழ்விடம் பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிய முடிகிறது.

மணம்நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் .... நற். 244

இருங்கல் விடரளை அசுணம் ஓர்க்கும் ... – அகம். 88

மேற்காணும் பாட்ல்களில் இருந்து, அசுணங்கள் மலைகளில் காணப்பட்ட பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன என்பதை அறியலாம். அசுணமாக்கள் மலைகளில் மட்டுமின்றி மனிதர்களின் குடியிருப்புகளுக்கு  அருகிலும் வாழ்ந்திருக்க வேண்டும். அப்போதுதான் மனிதர்கள் இசைத்த யாழோசை, புல்லாங்குழல் ஓசை, பறையோசை, முரசொலி முதலானவற்றைக் கேட்டிருக்க இயலும் அல்லவா?. 

அசுணமும் மனிதர்களும்:

அசுணங்கள் மனிதர்களின் குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்ந்திருக்க வேண்டும் என்று மேலே கண்டோம். உண்மையில், அசுணங்களை மனிதர்கள் வீட்டு விலங்குகளாகவும் வளர்த்து இருக்க வேண்டும் என்று கீழ்க்காணும் பாடல்வழி அறிய முடிகிறது.

.... அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும்

இன்பமும் துன்பமும் உடைத்தே ... – நற். 304

அசுணங்களை வளர்த்த மனிதர்கள் தமது கைகளாலேயே அவற்றைக் கொலை செய்வதைப் பற்றித்தான் மேற்பாடல் கூறுகிறது. காதலரின் மார்பு சேரும்போதும் பிரியும்போதும் தனக்கு தரக்கூடிய இன்பமும் துன்பமும் எப்படிப்பட்டது என்றால் அசுணங்களுக்குத் தனது கைகளால் உணவளித்து அன்பு காட்டியவர்கள் திடீரென்று தனது கைகளாலேயே அவற்றைக் கொல்லுவதற்கு ஒப்பாகும் என்று மேற்பாடலில் கூறுகிறாள் காதலி. கோழி, ஆடு, மாடு, பன்றி, எருமை போன்ற விலங்குகள் வீடுகளில் வளர்க்கப்பட்டு உணவுக்காகக் கொல்லப்படுவது கொடுஞ்செயலாகக் கூறப்படாத நிலையில், அசுணங்களைக் கொல்வது மட்டும் கொடிய செயலாகக் கருதப்பட்டது என்பதனை இப்பாடலின் வழியாக அறிய முடிகிறது, இதிலிருந்து, அசுணங்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் அன்பு காட்டப்படும் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டன என்று அறியலாம்.

அசுணங்களின் உடலமைப்பு:

அசுணங்களின் உடலமைப்பு பற்றிய செய்திகளைக் கீழ்க்காணும் பாடல்களின் வழியாக அறிந்துகொள்ள முடிகிறது.

கனியிசை கள்ளினால் தூமமேனி

அசுணம் துயில்வுறும் ........ கம்ப. கிட்.. 13/14

அசுணத்தின் உடலானது தூமம் அதாவது புகையைப் போல வெண்ணிறத்தில் பொங்கிப் பொலிந்த நிலையில் காணப்பட்டது என்ற செய்தியை மேற்பாடல் கூறுகிறது. இதிலிருந்து, அதன் உடல் முழுவதும் வெண்ணிற மயிர் புசுபுசுவென்று பொலிந்து இருந்ததை அறியலாம். அசுணமாவிற்கு நீண்ட காதுகள் இருந்தன என்ற செய்தியைப் பற்றி ஏற்கெனவே மேலே கண்டோம்.

“ ..... குலவுகோல் கோவலர் கொன்றைத் தீங்குழல்

உலவுநீள் அசுணமா உறங்கும் என்பவே ..... (நாட்டுச்சருக்கம்)

அசுணம் என்பது எதைக் குறிக்கிறது?

அசுணம் பற்றிப் பல்வேறு இலக்கியங்கள் கூறிய செய்திகளை மேலே கண்டோம். இனி அவற்றைக் கீழே தொகுத்துப் பார்க்கலாம்.

1.    அசுணங்கள் மலைப்பிளவுகள் மற்றும் குகைகளில் வாழ்ந்தன.

2. அசுணங்களை மனிதர்கள் கொன்று உண்பதற்காக அல்லாமல் செல்லப் பிராணிகளாக வீடுகளில் வளர்த்தார்கள்.

3. அசுணங்கள் மனிதர்கள் இசைத்த மெல்லிசையைக் கேட்டு மகிழ்ந்தன. வல்லிசையைக் கேட்டு மடிந்தன / துன்புற்றன.

அசுணத்தின் உடலில் வெண்ணிற மயிர் புசுபுசு என்று இருக்கும். அதன் காதுகள் நீண்டு இருக்கும்.

மேற்கண்ட தகவல்களைத் தொகுத்துப் பார்த்ததில், அசுணம் / அசுணமா என்பது கீழ்க்காணும் விலங்காகத் தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

                   அசுணம் / அசுணமா = பூனை.

அசுணம் – பெயர் விளக்கம் என்ன?:

அசுணம் என்பது பூனை என்றால், பூனையைக் குறிக்கும் பூசை, பிள்ளை, வெருகு போன்ற சொற்களைக் கூறாமல் அசுணம் என்ற புதிய சொல்லை ஏன் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. இதற்கான விடையினைக் கீழே காணலாம்.

அசை என்ற வினைச்சொல்லுக்குப் பாடுதல், இசைத்தல், ஒலித்தல் என்ற பொருட்களுண்டு. உண்ணு என்ற வினைச்சொல்லுக்கு அனுபவித்தல், உட்கொள்ளுதல் என்ற பொருட்களுண்டு. இந்த இரண்டு சொற்களும் இணைந்து உருவானதே அசுணம் ஆகும்.

அசை (=பாடு, ஒலி, இசை) + உண் (=அனுபவி) + அம் = அசுணம் = இசையினை அனுபவிப்பது.

இசையை அனுபவிப்பது என்ற பொருளில் பூனையைக் குறிக்க உருவாக்கப்பட்டதே அசுணம் என்ற சொல்லாகும்.

மேலதிக சான்றுகள்:

இலக்கியங்கள் கூறியுள்ள செய்திகளில் இருந்து அசுணம் என்பது பூனையைக் குறிக்கும் என்று முடிவு செய்யப்பட்டது. இருப்பினும், கீழ்க்காணும் மேலதிக சான்றுகள் மூலம் இக் கருத்துக்கு மேலும் வலுவூட்டலாம்.

மனிதர்கள் மற்றும் நாய்களைக் காட்டிலும் பூனைகளுக்கு அதிகக் கேட்புத் திறன் உள்ளதென்று அறிவியல் கூறுகிறது. பூனைகளால் சிறுசிறு ஒலிகளைக் கூட தெளிவாகக் கேட்டு இருட்டிலும் இரையின் இருப்பிடத்தைத் துல்லியமாகக் கணிக்க முடியும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. பூனை தனது காதுமடல்களை 180 டிகிரி கோணத்தில் தனித்தனியாக திருப்பும் திறன் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளதைப் போலவே, வீணை, கிடார், யாழ், புல்லாங்குழல் போன்ற கருவிகளில் இருந்து எழும் மெல்லிசைகளை மிகவும் விரும்பிக் கேட்பதாகவும் பறைகளை முழக்கும்போது பூனையின் கேட்புத்திறன் பாதிக்கப்பட்டு அதன் செயல்பாடுகளில் பெருத்த மாற்றம் உண்டாகுவதாகவும் பூனைகளை வீட்டில் வளர்ப்பவர்கள் கூறுவதை இணையங்களில் பார்க்க முடிகிறது. திடீரென ஒலிக்கும் இடியோசையால் பூனைகள் சுருண்டு விழுந்த செய்திகளும் அதில் உள்ளன. மற்ற விலங்குகளைக் காட்டிலும் பூனைகள் ஒலியினால் அதிகம் பாதிப்பு அடைவதன் காரணம் அதன் செவியமைப்பு தான். சிறிய ஒலியைக் கூட பலமடங்காகப் பெருக்கித்தரும் ஒலிபெருக்கியாக அவற்றின் காதுகள் செயல்படுவதே இந்த மோசமான விளைவுகளுக்குக் காரணம் என்று விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக, பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த மூதாதையர் விலங்குகளுக்கு “அசிணோ” (ACINO) என்ற ஒட்டுச்சொல்லுடன் கூடியதாக, அசிணோனிக்சு (ACINONYX), மிராசிணோனிக்சு (MIRACINONYX) போன்ற பெயர்கள் சூட்டப்பட்டு இருப்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

முடிவுரை:

இதுவரை கண்டவற்றில் இருந்து, அசுணம் அல்லது அசுணமா என்பது பூனையைக் குறித்தே இலக்கியங்களில் பயின்று வந்துள்ளது என்பது உறுதியாகிறது.

பூனைகளுக்கு வண்டோசை, யாழோசை, குழலோசை போன்ற மெல்லிசைகள் தான் பிடிக்கும் என்று இப்போதுதான் ஆய்வாளர்கள் கண்டு அறியும் நிலையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இச் செய்திகளை இலக்கியங்களில் பதிவுசெய்து விட்டுச்சென்ற நம் முன்னோரின் அறிவுத் திறனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் அல்லவா?.

புதன், 19 ஜூன், 2019

13 - கழுது ( சங்க இலக்கியத்தில் விலங்கியல் )


முன்னுரை:

சங்க இலக்கியத்தில் விலங்கியல் என்ற தலைப்பில் நாய், பன்றி, கழுதை, மான், கரடி உட்பட ஏராளமான விலங்குகளைப் பற்றிச் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள செய்திகளை விளக்கமாகப் பல ஆய்வுக் கட்டுரைகளில் கண்டோம். அதனைத் தொடர்ந்து கழுது என்னும் விலங்கினைப் பற்றிச் சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள பல்வேறு செய்திகளை இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

கழுது – அகராதிகள் காட்டும் பொருட்கள்:

தமிழ் இலக்கியங்களில் வரும் கழுது என்ற சொல்லுக்கு பேய், காவல்பரண், வண்டு ஆகிய பொருட்கள் இருப்பதாகத் தமிழ் அகராதிகளில் கொடுக்கப்பட்டுள்ளன.

கழுது (p. 804) kaḻutu கழுது kaḻutu, n. 1. Demon; பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633). 2. Elevated platform from which fields are guarded against damage from beasts and birds; காவற்பரண். சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற். 276). 3. Beetle; வண்டு. (திவா.)

கழுது – புதிய பொருள்:

கழுது என்னும் சொல்லுக்கு மேற்காணும் அகராதிப் பொருட்கள் நீங்கலாக புதிய பொருளும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தது. சங்க இலக்கியங்களில் வரும் கழுது என்ற சொல்லானது பெரும்பாலான இடங்களில் ஒருவகை விலங்கினையே குறித்து வந்துள்ளது. அந்த விலங்கினைக் குறிக்கும் வேறு பெயர் தமிழில் இல்லாமையால் அதன் ஆங்கிலப் பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கழுது    = இரவில் வேட்டையாடும் குட்டி விலங்குவகை 
          = டார்சி`யர் (TARSIER)

கழுது – பெயர்க் காரணம்:

இரவில் வேட்டையாடுவதற்குத் தாவித் திரியும் இந்த குட்டி விலங்கிற்குக் கழுது என்ற பெயர் ஏற்பட்ட காரணத்தைக் காணலாம்.

கழுது என்னும் சொல்லுக்குப் பேய் என்ற அகராதிப் பொருள் உண்டு என்று மேலே கண்டோம். இந்தக் குட்டி விலங்கும் கிட்டத்தட்ட ஒரு குட்டிப்பேய் / குட்டிச் சாத்தானைப் போலவே தோன்றும். அச்சம் தரக்கூடிய வகையிலான பெரிய பெரிய முட்டைக் கண்களையும் பெரிய வித்தியாசமான காதுகளையும் எலும்புக் கூடுகளின் கைகளைப் போன்ற குச்சியான நீண்ட விரல்களையும் கொண்ட இவ் விலங்கின் உருவத்தைப் பார்ப்பவருக்குக் குட்டிச்சாத்தானின் உருவம் நினைவுக்கு வருவதில் வியப்பில்லை. அதனால் தான் இவ் விலங்கிற்கு பேய் என்ற பொருளைத் தரும் கழுது என்னும் சொல்லையே பெயராகச் சூட்டினர் எனலாம். அத்துடன் நிற்காமல், குட்டிச்சாத்தான் / பேய் பயணம் செய்யும் ஊர்தியாகவும் இதனைக் கருதி கீழ்க்காணும் பாடல்களில் புலவர்கள் பாடியிருக்கின்றனர். ,

கவைத்தலை பேய்மகள் கழுது ஊர்ந்து இயங்க - பதி 13.
 
பானாள் கொண்ட கங்குல் இடையது
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல்
கூற்றக்கொல் தேர் கழுதொடு கொட்ப – மது. 631

சங்க இலக்கியத்தில் கழுது:

சங்க இலக்கியத்தில் வரும் கழுது என்னும் விலங்கானது ஆங்கிலத்தில் டார்சி`யர் என்று அழைக்கப்படுகிறது. டார்சி`டே எனும் குடும்பத்தைச் சேர்ந்த இந்தக் குட்டி விலங்கில் பல வகைகள் உண்டு. பிலிப்பைன் டார்சி`யர் என்னும் வகையைச் சேர்ந்த விலங்கானது 85 முதல் 160 மிமீ வரையிலான உயரமே கொண்டதாகும். இதன் எடையோ 80 முதல் 160 கிராமுக்குள் இருக்கும். சாம்பல் நிறம் முதல் அடர் பழுப்பு வரையிலான பல்வேறு நிறங்களில் காணப்படும் இவ் விலங்கிற்கு அதன் உயரத்தைக் காட்டிலும் மிக நீளமான வால் உண்டு. இனி, இந்த விலங்கினைப் பற்றிச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ள பல்வேறு செய்திகளை இங்கே தொகுத்துக் காணலாம். 

கழுதானது ஆந்தையைப் போலவே இரவு நேரத்தில் வேட்டையாடும் ஒருவகைக் குட்டி விலங்காகும். பெரும்பாலும் ஊரடங்கிய நள்ளிரவு நேரத்திற்குப் பின்னால்தான் இது வேட்டையாடத் தொடங்குகிறது. கழுதானது ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்திற்கு மிக எளிதாகவும் மிக வேகமாகவும் தாவும் வலிமை வாய்ந்தது. தனது இரையை இவ்வாறு மிக வேகமாகத் தாவியே பற்றி உண்கிறது. கழுதிற்கு அதன் கண்கள் மிக இன்றியமையாத சிறப்பு வாய்ந்த உறுப்பு ஆகும். கழுதைப் பார்க்கும்போது அதன் கண்களே நமக்குத் தெரியும். பார்ப்பவருக்கு அச்சம் தரும் வகையில் மிகப் பெரியதாக உருண்டை வடிவில் இருக்கும். எனவே தான் கழுதின் கண்கள் இலக்கியத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, கழுது எழுப்பும் ஒலியானது கேட்பதற்கு மணியோசை போலத் தோன்றும் என்று சங்க இலக்கியம் கூறுகிறது.

கழுதின் கண்கள்:

கழுதின் கண்கள் அதன் முகத்தில் மிகப் பெரியதாக உருண்டையாக இருக்கும். அதன் மூளையைக் காட்டிலும் அதன் கண்கள் பெரிதாக இருக்கும். ஒவ்வொரு கண்ணும் ஏறத்தாழ 16 மிமீ விட்டம் கொண்டவை. இதன் கண்களில் ஒளியைப் பிரதிபலிக்கும் படலம் இல்லை என்றாலும் இரவு நேரத்தில் மிகக் குறைந்த வெளிச்சத்தில் கூட இதனால் தனது இரையினைப் பார்க்க முடியும். பகற்பொழுதில் இதன் கண்கள் ஒரு புள்ளி அளவுக்குச் சுருங்கிவிடும். இதன் கண்களைச் சுழற்ற முடியாது என்றாலும் தனது இரையைப் பார்க்க இது தனது கழுத்தை அரைவட்டமாகக் கூடத் திருப்ப முடியும் என்று விக்கிபீடி`யா கூறுகிறது. கழுதின் கண்களைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை – குறு. 161

இரவுப் பொழுதாகியும் மழையானது தொடர்ந்து பெய்ததினாலும் வீசிய குளிர்காற்றினாலும் கழுதின் மிகப் பெரிய கண்கள் நடுங்கியதாக மேற்பாடல் கூறுகிறது. பனிக்காற்றினால் கழுது நடுங்கியது என்று கூறாமல் கழுதின் கண்கள் நடுங்கின என்று இலக்கியம் கூறுவதில் இருந்து கழுதிற்கு அதன் கண்கள் எவ்வளவு இன்றியமையாத குறிப்பிட்டுச் சொல்லத்தக்க உறுப்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.

கழுதின் ஓசை:

இரவு நேரங்களில் கழுதுகள் எழுப்பும் ஓசையானது பெரும்பாலும் நிவச்சீர் (அல்ட்ரா சோனிக்) ஒலிவகையைச் சேர்ந்த்தாகும். தங்களது ஓசையை பிற வேட்டையாடும் விலங்குகளும் பறவைகளும் கேட்டுவிடாதிருக்க, இத்தகைய ஓசையினை எழுப்பும். தகவல் பரிமாற்றம், அழைப்பு போன்றவற்றுக்கு இதனைப் பயன்படுத்தும். நிவச்சீர் ஒலியை மட்டுமின்றி, மனிதர்கள் தெளிவாகக் கேட்கக்கூடிய அளவிலும் சில நேரங்களில் ஒலியெழுப்பும். கழுதின் ஓசை குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பார்க்கலாம்.

… வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப
கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் – நற். 171
 
இரவு நேரத்தில் கழுது எழுப்பிய ஓசையானது கேட்பதற்குத் தெளிவான 
மணியோசையைப் போன்று இருந்தது என்று மேற்பாடல் கூறுகிறது. 
கழுது எழுப்பும் மணி ஓசையினைக் கொடுக்கப்பட்டுள்ள யூடியூப் இணைப்பில் 
கேட்டுப் புரிந்து கொள்ளலாம்.  

கழுது தாவுதல்:

கழுதானது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு மிக வேகமாகத் தாவும் வலிமை வாய்ந்தது. மரத்தின் ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்குத் தனது உடல் அளவைக் காட்டிலும் 40 மடங்கு தூரத்தைத் தாவிக் கடக்க வல்லது. தாவுவதற்கு ஏதுவாக இதன் பின்னங்கால்கள் மிக நீளமாக இருக்கும். மிக நீளமான இதன் பின்னங்கால்களே இவ் விலங்கிற்கு டார்சி`யர் என்ற பெயரைப் பெற்றுத் தந்திருக்கிறது.

இதனுடைய கால்விரல்களும் மரக்கிளைகளை இறுகப் பற்றிக் கொள்ளும் விதத்தில் அமைந்துள்ளன. மிக நீளமாகவும் சதைப்பற்றில்லாத எலும்புக் குச்சிகளைப் போலவும் தோன்றும் இதன் விரல்களின் நுனியில் மட்டும் உருண்டையாக இருக்கும். கழுது தாவுதலைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் - நற் 171
கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே - நற் 255

மேற்காணும் பாடல்களில் வரும் கால்கிளர்தல், கால்கொள்ளுதல் ஆகிய சொற்கள் தாவுதல் வினையைக் குறிப்பதாகும். ஊரடங்கிய நள்ளிரவுப் பொழுதில் கழுதுகள் மரத்திற்கு மரம் தாவித்தாவி இரையை வேட்டையாடும். 

கழுது வேட்டையாடுதல்:

ஆந்தையைப் போலவே கழுதானது இரவு நேரத்தில் வேட்டையாடும் இயல்பு உடையது. கழுது இரவில் வேட்டையாடுவதற்கு அதன் பெரிய கண்களும் நீண்ட பின்னங்கால்களும் எலும்புக்குச்சி போன்ற விரல்களும் பெரிதும் உதவி செய்கின்றன. இரைகள் எழுப்பும் மிகச் சிறிய ஒலியைக் கேட்பதற்கு ஏதுவாக கழுதின் காதுகள் அமைந்துள்ளன.

பூச்சிகள், எலிகள், சிறிய பறவைகள் ஆகியவற்றை கழுதுகள் வேட்டையாடி உண்ணும். இரையினை நோக்கி மிக வேகமாகப் பாய்ந்து தனது விரல்களால் இறுகப் பற்றி நெருக்கிக் கொல்லும். இதன் கூரிய பற்கள் இரையைக் கிழித்து உண்ண உதவி செய்கின்றன. இவை ஒருபோதும் தாவர உணவுகளை உண்பதில்லை என்று விக்கிபீடி`யா கூறுகிறது. கழுதுகள் வேட்டையாடி உண்பதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைப் பார்க்கலாம்.

அவிர் தொடி கொட்ப கழுது புகவு அயர - ஐங் 314

மேற்பாடலில் வரும் அவிர்தொடி என்பது மின்மினிப் பூச்சிகளைக் குறிக்கும். மின்மினிப் பூச்சிகள் அங்குமிங்கும் பறந்து திரிய, கழுதுகள் அவற்றைப் பாய்ந்து வேட்டையாடி உண்டன என்று மேற்பாடல் கூறுகிறது. பொதுவாக, தொடி என்பது பொன்போல ஒளிரக்கூடிய வளையல்கள், பூண்கள், கண்மைப் பூச்சுக்களைக் குறிப்பதாகும். இப்பாடலில் கொட்ப என்று வருவதால் அது இரவில் ஒளிர்ந்து திரியக்கூடிய மின்மினிப் பூச்சிகளைக் குறிப்பதாயிற்று.

கழுதும் ஆந்தையும்:

கழுதும் ஆந்தையும் இரவில் வேட்டையாடும் தன்மை கொண்டவை. இவற்றில் ஆந்தையானது கழுதைக் காட்டிலும் மிகப்பெரிய பறவையாகும். கழுதானது ஆந்தையைக் காட்டிலும் மிகச் சிறிய விலங்காகும். அதுமட்டுமின்றி, இவை இரண்டும் இரவில் வேட்டையாடும்போது பல நேரங்களில் கழுதுகள் ஆந்தைகளிடம் சிக்கி வேட்டையாடப் பட்டுவிடும். ஆந்தைகள் கழுதுகளை வேட்டையாடும் என்று விக்கிபீடி`யாவும் கூறுகிறது.  கழுதுகளும் ஆந்தைகளும் இரவில் வேட்டையாடுவதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழி_தக குழறும் – அகம். 122
 
முது மரத்து உறையும் முரவு வாய் முதுபுள்
கதுமென குழறும் கழுது வழங்கு அரைநாள் – அகம். 260
 
மேற்காணும் இரண்டு பாடல்களும் இரவு நேரத்தில் கழுதும் ஆந்தையும் 
சுற்றித் திரிந்ததைப் பற்றிக் கூறுகின்றன. இப்பாடல்களில் வரும் கூகை, முதுபுள் 
ஆகியவை ஆந்தையைக் குறிப்பனவாகும். கழுதுகளைக் கண்டதும் ஆந்தையானது
அலறல் ஓசையை எழுப்பியவண்ணம் அவற்றைத் துரத்தி வேட்டையாடும் 
என்று இப்பாடல்களின் வழி புரிந்துகொள்ள முடிகிறது. 
 
முடிவுரை:
 
சங்ககாலத் தமிழகத்தில் கழுதுகள் வாழ்ந்திருந்த செய்திகளை மேற்காணும் 
பாடல்களின் வழியாக அறிந்து கொண்டோம். தற்போது இந்தியாவில் இருந்து 
முற்றிலும் அழிந்துபோய் விட்ட இந்தத் தொன்மிகளின் (PRIMATES) பல வகைகள் 
வேகமாக உலகில் இருந்தே அழிந்து வரும் செய்தியை இணையத்தின் மூலம் 
அறிந்துகொள்ள முடிகிறது. இறுதியாக, கீழ்க்காணும் புறநானூற்றுப் பாடலில் 
வரும் கழுது என்னும் சொல்லானது பாடபேதம் என்று தெரிகிறது. 
 
கண நரியோடு கழுது களம் படுப்ப - புறம் 369

மேற்காணும் பாடலில் கழுகு என்று வருவதே சரியாகும். காரணம், கழுகுகளும் நரிகளுமே பிணங்களைக் கூடித் தின்னும் இயல்புடையவை. எனவே, இக் கட்டுரையில் நாம் இதுவரை கண்ட கழுது என்னும் விலங்கிற்கும் இப் பாடலுக்கும் ஒரு தொடர்புமில்லை. 

=================== முற்றும் =============

செவ்வாய், 3 ஜூலை, 2018

இந்திய மொழிகளின் தாய் தமிழே ! - 5 - விலங்குப் பெயர்கள்


முன்னுரை:

இந்திய மொழிகளின் தாய் தமிழே என்ற தொடர் ஆய்வுக் கட்டுரையின் முதல் நான்கு பகுதிகளில் மனிதர்களின் தலை முதல் அடி வரையிலான அனைத்துப் புற உறுப்புக்களின் பெயர்களைப் பற்றி விரிவாகக் கண்டோம். பிற இந்திய மொழிகளில் இந்த உறுப்புக்களைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் எவ்வாறு தமிழ்ச்சொற்களில் இருந்து தோன்றின என்று விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டோம். இதன் தொடர்ச்சியாக, இந்திய மொழிகளில் பல்வேறு விலங்குகளைக் குறிக்கும் பெயர்ச்சொற்கள் தமிழ்ப் பெயர்ச்சொற்களில் இருந்து எவ்வாறு தோன்றின என்று இந்த ஐந்தாம் பகுதியில் விரிவாகக் காணலாம். ஒவ்வொரு விலங்குப் பெயரின் கீழும் அவ்விலங்கினைக் குறிக்கும் தமிழ்ப்பெயர்கள் திரிபடைந்து எந்தெந்த வடிவங்களில் உள்ளன என்பதும் அச்சொல் வடிவங்கள் எந்தெந்த மொழிகளில் பேசப்படுகின்றன என்பதும் கொடுக்கப்பட்டுள்ளது.

1. ஆடு:

ஆடு >>> ஆடு`
தகர் >>> ப`கரா >>> பே^ரா >>> பா^ரு
தகர் >>> சக~ரா >>> சாக~ >>> சாக~ல >>> சேலி
மேழகம் >>> மேக >>> மேகெ
மேழகம் >>> மேச~ >>> மேடா`, மேண்ட`
வருடை >>> பே^ட`
ஏழகம் >>> ஏட`க.
ஏழகம் >>> ஏச~ >>> அச^
துருவை >>> உரப்^ர
துருவை >>> ச்`துப^, ச்`தப`
கிடாய் >>> கா~ட`ர
வெள்ளை >>> வல்கு~
மோத்தை >>> மேத்^ய

சொல் வடிவம்             பேசப்படும் மொழிகள்

ஆடு`                       மலையாளம், கன்னடம்
ப`கரா                      இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, பஞ்சாபி`
பே^ரா                      வங்காளம்
பா^ரு                      பஞ்சாபி`
சக~ரா                     இந்தி
சாக~                      இந்தி, செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
சாக~ல                    செங்கிருதம்
சேலி                      மராத்தி, ஒரியா
மேக                      தெலுங்கு
மேகெ                     கன்னடம்
மேச~                      கன்னடம், இந்தி, செங்கிருதம், வங்காளம்
மேடா`                     இந்தி
மேண்ட`                   மராத்தி, கு~ச்^ராத்தி, ஒரியா
பே^ட`                     இந்தி, பஞ்சாபி`, ஒரியா
ஏட`க                      செங்கிருதம்
அச^                       மலையாளம், தெலுங்கு, இந்தி, செங்கிருதம்.
உரப்^ர                     செங்கிருதம்
ச்`துப^ / ச்`தப`              செங்கிருதம், மலையாளம்
கா~ட`ர                    கு~ச்^ராத்தி
வல்கு~                    செங்கிருதம்
மேத்^ய                    செங்கிருதம்
         
மேலுள்ளவற்றைக் காணும்போது, தகர் என்ற தமிழ்ச்சொல்லே பெரிதும் திரிபுற்று பிற மாநில மொழிகளில் வழங்கப்படுவதை அறியலாம். தகர் என்ற தமிழ்ச்சொல்லானது ஆடு என்ற பொருளில் டக`ர் என்ற வடிவில் பலவிதமான ஆட்டுவகைகளைக் குறிப்பிடப் பயன்படுகின்றது.

கி`மாலயன் டக`ர் - விலங்கியல் பெயர்: கெ`மிட்ராக~ச்` செ^ம்லாகி`கச்`
அரேபி`யன் டக`ர் - விலங்கியல் பெயர்: அரபி`ட்ராக~ச்` ச^யகரி
நீல்கி~ரி டக`ர் - விலங்கியல் பெயர்: நீல்கி~ரிட்ராக~ச்` கை`லோக்ரியச்`

அதுமட்டுமின்றி, ஆடு எனும் பொருளைத் தருவதான ட்ராகோ~ச்` என்ற கிரேக்கச்சொல்லில் கூட தகர் என்ற தமிழ்ச்சொல்லின் தாக்கம் இருப்பதனைப் புரிந்துகொள்ளலாம். பொதுவாக, சண்டை என்று வந்தால் எதிரியைத் தாக்குவதற்காகத் துள்ளிக் குதித்துத் தனது தலையினால் எதிரியை மோதித் தாக்குவது ஆட்டின் குணமாகும். இவ்வாறு தாக்கும் செயலையும் கூட 'டக்கர்' என்ற சொல்லால் இந்தியில் குறிப்பிடுவது தகர் என்ற தமிழ்ச்சொல்லின் தாக்கத்தினை நன்கு விளக்குவதாக உள்ளது.

2. புலி:

புலி >>> கு`லி
வயம் / வேங்கை >>> வ்யாக்^ர >>> வாக^ >>> பா`க்^, பா`க^
சிறுவரி >>> ச^கு~வார்
வயம் >>> வ, வா

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

புலி                  மலையாளம், தெலுங்கு
கு`லி                 கன்னடம்
வ்யாக்^ர             மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி,
                     செங்கிருதம், கு~ச்^ராத்தி, வங்காளம்
வாக^                மராத்தி, கு~ச்^ராத்தி
பா`க^, பா`க்^          இந்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
வ, வா               செங்கிருதம்
ச^கு~வார்             இந்தி

3. யானை:

யானை >>> ஆன, ஆனெ
யானை >>> எனுகு~, யெனுக~
கரி >>> கரிணு
கயம் >>> க^ய >>> க^ச^
நாகம் >>> நாக~
வாரணம் >>> பா`ரண
வேழம் >>> பில
குஞ்சரம் >>> குஞ்ச^ர

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

ஆன                 மலையாளம்
ஆனெ                கன்னடம்
எனுகு~, யெனுக~      தெலுங்கு
கரி                   மலையாளம், கன்னடம்
கரிணு                வங்காளம்
க^ய                  கு~ச்^ராத்தி
க^ச^                 மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி,
செங்கிருதம், வங்காளம், கு~ச்^ராத்தி,
மராத்தி, பஞ்சாபி`, ஒரியா.
நாக~                 வங்காளம், கு~ச்^ராத்தி
பா`ரண               வங்காளம்
பில                  வங்காளம்
குஞ்ச^ர               கு~ச்^ராத்தி

4. எருமை:

மை >>> மஇ >>> மகி` >>> மகி`ச` (ஒப்பீடு: தயிர் >>> தயி >>> தஇ >>> தகி`)
எருமை >>> எரும >>> எம்மெ
எருமை >>> எனுமு
போத்து >>> போத்து

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

மகி`ச`              இந்தி, செங்கிருதம், வங்காளம், மராத்தி, கு~ச்^ராத்தி,
                     கன்னடம், மலையாளம், தெலுங்கு.
எம்மெ              கன்னடம்
எரும               மலையாளம்
எனுமு              தெலுங்கு
போத்து             மலையாளம்

5. குரங்கு:

குரங்கு >>> குரணன்
குரங்கு >>> கொட`க~ >>> கோட்டி
மந்தி >>> திம்மடு` (தலைகீழ்த் திரிபு)
மந்தி >>> மங்க~
மந்தி >>> ப`ந்த`ர்

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

குரணன்              மலையாளம்
கொட`க~             கன்னடம்
கோட்டி               கன்னடம், தெலுங்கு
திம்மடு`              தெலுங்கு
மங்க~                கன்னடம்
ப`ந்த`ர்               இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`

6. பூனை:

பிள்ளை >>> பி`ல்லி
பூசை >>> பூச்சா
வெருகு >>> பெ`க்கு

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

பி`ல்லி               இந்தி, தெலுங்கு
பூச்சா                மலையாளம்
பெ`க்கு               கன்னடம்

7. மான்:

மான் >>> மானு
இரலை >>> எரலெ
புல்வாய் >>> கு`ல்லி
மரை >>> ம்ரிக~

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

மானு                மலையாளம்
எரலெ               கன்னடம்
கு`ல்லி              கன்னடம்
ம்ரிக~               இந்தி, கு~ச்^ராத்தி, மராத்தி, வங்காளம்

8. கரடி:

கரடி >>> கரடி`
எண்கு >>> எலுகு~

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

கரடி                 மலையாளம், கன்னடம்
எலுகு~               தெலுங்கு

9. குதிரை:

குதிரை >>> குதிர >>> குது`ரெ >>> குர்ரமு
குதிரை >>> கோ^டா`
பரி >>> க`ரி
இவுளி >>> சு^வுளி >>> சூ^ளா
புரவி >>> ரேவத்

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

குதிர                மலையாளம்
குது`ரெ              கன்னடம்
குர்ரமு              தெலுங்கு
கோ^டா              இந்தி, மராத்தி, கு~ச்^ராத்தி, வங்காளம், பஞ்சாபி`
க`ரி                 கு~ச்^ராத்தி
சூ^ளா                மராத்தி
ரேவத்               கு~ச்^ராத்தி

10. கழுதை:

கழுதை >>> களுத >>> கத்தெ >>> க~தா^ >>> க~தே^டோ`
கழுதை >>> கா~டி`த` >>> கா~ட^வ்

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

களுத                மலையாளம்
கத்தெ                கன்னடம்
க~தா^                இந்தி, வங்காளம், பஞ்சாபி`, ஒரியா
க~தே^டோ`           கு~ச்^ராத்தி
கா~டி`த`              தெலுங்கு
கா~ட^வ்              மராத்தி

11. பன்றி:

பன்றி >>> பன்னி >>> பந்நி >>> பந்தி` >>> க`ந்தி`
கேழல் >>> எக்கல
ஏனம் >>> ப்`யான

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

பன்னி, பந்நி          மலையாளம்
பந்தி`                தெலுங்கு
க`ந்தி`               கன்னடம்
எக்கல               கன்னடம்
ப்`யான              இந்தி

12. நாய்:

நாய் >>> நாய >>> நாயி
எகினம் >>> குன்னி
ஞாளி >>> ச`ல
ஞமலி >>> ச~யாலு
முடுவல் >>> மண்ட`ல

சொல்வடிவம்         பேசப்படும் மொழிகள்

நாய                 மலையாளம்
நாயி                 கன்னடம்
குன்னி               கன்னடம்
ச`ல                  செங்கிருதம்
ச~யாலு              செங்கிருதம்
மண்ட`ல             செங்கிருதம்

பாதுகாப்புக்காக மட்டுமின்றி, வேட்டையாடுவதற்கும் நாய்கள் பெருமளவில் பயன்பட்டன. பன்றி, மான், முயல் போன்றவற்றின்மீது ஈட்டி / வேல் போன்ற கருவிகளை எறிந்தும் அம்பினை எய்தும் வேட்டையாடிய மனிதர்கள் நாய்களை ஏவிவிட்டும் வேட்டையாடினர். ஈட்டியைக் குறிக்கும் சங்கத் தமிழ்ச்சொல்லான குந்தமும் ஈட்டியைப் போலவே ஏவிவிடப்படும் விலங்கான நாயும் கீழ்க்காணுமாறு திரிந்து பிறமொழிகளில் வழங்கப்படுகிறது.

குந்தம் >>> குந்த = ஈட்டி - செங்கிருதம்
குந்தம் >>> குத்தா >>> குத்ர, குதரோ = நாய்

சொல்வடிவம்        பேசப்படும் மொழிகள்

குத்தா               இந்தி, பஞ்சாபி`
குத்ர                 மராத்தி
குதரோ              கு~ச்^ராத்தி

நாயைக் குறிக்கும் எகினம் என்னும் தமிழ்ப்பெயரும் எக்குவது அதாவது மேலே பாய்வது என்ற வினையின் அடிப்படையில் அமைந்திருப்பது ஈண்டு குறிப்பிடத் தக்கதாகும்.

........ தொடரும்......