சனி, 1 ஜனவரி, 2011

செய்யவள் தவ்வை

குறள்:

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையை காட்டி விடும் -  167

தற்போதைய விளக்கங்கள்:

கலைஞர் உரை: செல்வத்தை இலக்குமி என்றும், வறுமையை அவளது அக்காள் மூதேவி என்றும் வர்ணிப்பதுண்டு. பொறாமைக் குணம் கொண்டவனை அக்காளுக்கு அடையாளம் காட்டிவிட்டுத் தங்கை இலக்குமி அவனைவிட்டு அகன்று விடுவாள்.
மு.வ உரை: பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.
சாலமன் பாப்பையா உரை: பிறர் உயர்வு கண்டு பொறாமைப்படுபவனைப் பார்க்கும் திருமகள் வெறுப்புக் கொண்டு தன் அக்காள் மூதேவிக்கு அவனை அடையாளம் காட்டிவிட்டு விலகிப் போய்விடுவாள்.

உரைத்தவறுகள்:

மேற்காணும் மூன்று உரைகளிலும் பொருள் தவறுகள் உள்ளன. செய்யவள் என்ற சொல்லுக்கு இலக்குமி (திருமகள்) என்றும் தவ்வை என்ற சொல்லுக்கு இலக்குமியின் மூத்தோள் ஆகிய மூதேவி என்றும் பொருள் கொண்டு இக் குறளுக்கு தவறான விளக்க உரைகளை இயற்றியுள்ளனர். உரைகளை எழுதும் முன்னர் இச் சொற்களுக்கு (செய்யவள், தவ்வை) இப் பொருள்கள் (இலக்குமி, மூதேவி) பொருந்துமா என்று ஆராய வேண்டியது உரையாசிரியர்களின் கடமையாகும்.

உரையாசிரியர்கள் தாம் சார்ந்திருக்கும் சமய நோக்கிலேயே நூலாசிரியர்களின் கருத்தையும் கூற முற்படுவதே இது போன்ற தவறான விளக்க உரைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. திருவள்ளுவர் சமயச் சார்பற்றவர் என்பதை நாம் முன்பே தாமரைக் கண்ணான் உலகு, ஆதிபகவன் யார்?, இந்திரனே சாலும் கரி போன்ற ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். சமயங்களைப் பொறுத்தவரை திருவள்ளுவரின் நிலைப்பாடு என்பது நடுநிலையானது என்பதையே மீண்டும் இக் கட்டுரை நிறுவுகிறது. ஆனால் இதைப் புரிந்து கொள்ளாமல் இக் குறளுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் சமயச் சார்புடைய தெய்வப் பெயர்களான இலக்குமி, மூதேவி போன்ற பெயர்ச்சொற்களை வள்ளுவர் பயன்படுத்தி இருப்பதாகக் கூறியிருப்பது வள்ளுவரின் நிலைப்பாட்டினை சீர்குலைப்பதாக அமைகிறது. எனவே இப் பொருட்களை இவ் உரையாசிரியர்களின் சமயம் சார்ந்த சொந்தக் கருத்துக்களாகக் கொள்ளலாமே தவிர வள்ளுவரின் கருத்துக்களாகக் கொள்ள முடியாது.

அதுமட்டுமின்றி பொறாமைக் குணம் கொண்டவனை இலக்குமி மூதேவிக்கு அடையாளம் காட்டுதல், இலக்குமியின் அக்காள் மூதேவி போன்ற கருத்துக்கள் வள்ளுவரை அப்பட்டமான ஒரு சமயவாதியாகக் காட்ட முயலும் சிறுபிள்ளைத் தனமான முயற்சி என்பதும் இங்கே அறியப்பட வேண்டிய ஒன்றாகும். இப்படி இக் குறளுக்கு தவறான பொருள் விளக்கங்கள் கொள்வதற்கு அடிப்படையாய் அமைந்தவை எழுத்துப் பிழைகளாகும். அப் பிழைகளைப் பற்றியும் வள்ளுவன் இக் குறளுக்குக் கூற விழைந்த மெய்ப்பொருள் என்ன என்பதையும் கீழே காணலாம்.

திருந்திய பொருள்:

இக் குறளின் உண்மையான வடிவம் கீழ்க்காண்பதாகத் தான் இருக்க வேண்டும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
வ்வையே காட்டி விடும்

இதன் பொருளானது: பேராசையால் காழ்ப்புணர்ச்சி உடையவனை அவனது இல்லாளின் ஆரவார ஒலியே காட்டிக் கொடுத்து விடும். 

நிறுவுதல்:

மனிதர்களில் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று இருவகையினர் உண்டு. இவர்கள் இருவருமே மனித உருவம் கொண்டவர்கள் தான். இவர்களில் கெட்டவர்களை அடையாளம் காண்பது எவ்வாறு?. குறிப்பாக பேராசையும் காழ்ப்புணர்ச்சியும் கொண்ட மனிதர்களை எவ்வாறு இனங்காண்பது?. இக் கேள்விக்கு விடை கூறும் விதமாகத் தான் இக் குறளை இயற்றியுள்ளார் வள்ளுவர்.

தன்னால் அடையமுடியாத ஒன்றினை பிறர் அடையும்போதோ தன்னிடம் இல்லாத ஒன்றை பிறரிடம் காணும்போதோ ஏக்கத்தால் எழுகின்ற ஒருவகையான உணர்வே பொறாமை.ஆகும். இப் பொறாமையும் வள்ளுவர் கூறுகின்ற காழ்ப்புணர்ச்சியும் வேறு வேறானவை ஆகும். பொறாமையானது ஒரு தற்காலிக உணர்வாகும். இது மனிதர்கள் அனைவரிடத்திலும் குறிப்பாக பெண்களிடத்தில் மிக எளிதாக தோன்றக் கூடிய உணர்வாகும். இப் பொறாமை உணர்வானது நல்லவர்களிடத்தில் தோன்றும்போது அதுவே ஆரோக்யமான போட்டிக்கு வழிவகுக்கிறது. தீயவர்களிடத்தில் தோன்றும் பொறாமை உணர்வானது முட்செடி போன்றதாகும்.  முட்செடி முதிர்ந்து முள்மரமாகிக் குத்துவதைப் போல பொறாமை உணர்வானது முதிர்ந்து காழ்ப்புணர்ச்சியாகிறது. இதுவே அவர்களது மனதைக் குத்திக்குத்தி அவர்களை தீய நெறிகளில் செல்லத் தூண்டுகிறது. வள்ளுவர் கூறும் அழுக்காறு என்ற சொல் இங்கு காழ்ப்புணர்ச்சியைத் தான் குறிக்கிறது.

இக் காழ்ப்புணர்ச்சி தோன்றுவதற்கு அடிப்படையாய் அமைவது பேராசை எண்ணம் தான். நல்லவர்கள் பேராசை கொள்வதில்லை. தீயவர்களே பேராசை கொள்கிறார்கள். இதனால் தான் காழ்ப்புணர்ச்சியும் தீயவர்களையே தொற்றிக் கொள்கிறது. காழ்ப்புணர்ச்சியால் கேடான சிந்தனைகள் மனதில் தோன்றி வலுப்படத் துவங்குகின்றன. 'கெடுவான் கேடு நினைப்பான்' என்பது போல காழ்ப்புணர்ச்சியானது காழ்ப்புணர்ச்சி உடையவனையே பதம்பார்க்கிறது. முதலில் அவனது நிம்மதியைக் குலைக்கிறது. நிம்மதி குலைந்ததால் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன் மனைவியுடன் தேவையின்றி அடிக்கடி சண்டை உருவாகிறது. சண்டையின் துவக்கத்தில் இவனது குரல் ஒங்கியிருந்தாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவனது மனைவியின் குரலே பின்னர் ஓங்கி ஒலித்து அனைவருக்கும் அவனைப் பற்றிப் பறைசாற்றிக் கொண்டிருக்கும். இதைத்தான் 'செய்யவள் கவ்வையே காட்டி விடும்' என்று கூறுகிறார் வள்ளுவர்.

செய்யவள் யார்?

செய்யவள் என்ற சொல்லுக்கு மனைவி என்று இங்கு புதியதாக ஒரு பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இப் பொருள் இதற்கு எவ்வாறு பொருந்தும் என்று இங்கே காணலாம்.

பொதுவாக பெண்களை பூமிக்கு ஒப்பிடுவது வழக்கம். பெண்கள் பொறுமையாக இருப்பார்கள் என்பதுடன் தவறு செய்தவர்களை மன்னிக்கும் நற்பண்பு உண்டு என்பதாலும் இவர்கள் பூமியுடன் ஒப்பிடப் படுகிறார்கள். வள்ளுவர் ஒருபடி மேலே போய் மணமான பெண்ணை 'செய்யவள்' அதாவது 'விளைநிலத்திற்கு ஒப்பானவள்' என்கிறார். இது ஏன் என்று பார்ப்போம்.

மணமான பெண் கொண்டவனின் அன்பு என்னும் ஈரத்தால் நெகிழ்கிறாள்; மக்களைப் பெற்றெடுத்து வளர்க்கிறாள். மக்களுக்கும் கொண்டவனின் அன்புக்கும் ஆதாரமாக இருக்கிறாள். அதுபோல மேகம் பூமியின் மேல் மழையைப் பொழிகிறது. மழையின் ஈரத்தைப் பெற்ற பூமி நெகிழ்கிறது; பயிர்களைப் பெற்றெடுத்து வளர்க்கிறது; பயிர்களுக்கும் மழையின் ஈரத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. இதனால் தான் மணமான பெண்ணை வெறும் பூமி என்று கூறாமல் விளைநிலத்திற்கு ஒப்பானவள் என்று கூறி இருக்கிறார் வள்ளுவர். இதே பொருளில் தான் விருந்தோம்பலில் வரும் 84 ஆவது குறளிலும் கூறியுள்ளார்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

இதன் பொருளானது: வீட்டு வாசலில் இருந்து கொண்டு வருகின்ற விருந்தினர்களைப் பேணுபவனின் இல்லத்தில் அவனது மனைவி உள்ளக் களிப்புடன் (விருந்தினர்களிடத்தில்) நடந்து கொள்வாள்.

இங்கே முகன் என்பது வீட்டின் முகமாகிய வாசலைக் குறிக்கும். உறைதல் என்பது ஒழுகுதல் அதாவது நடந்து கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இங்கும் செய்யாள் என்பது இல்லாளைக் குறித்தே வருகிறது என்பதைத் தெளியலாம். இதுகாறும் கண்டவைகளில் இருந்து வள்ளுவர் சமயச் சார்பற்றவர் என்னும் கருத்தே வலியுறுத்தப் படுகிறது.

ஆதாரங்கள்:

செய் = வயல், பேப்ரிசியஸ் இணையப் பேரகராதி.
கவ்வை = ஒலி, சென்னை இணையப் பேரகராதி
அவாவுதல் = பேராசை கொள்ளுதல், வின்சுலோ இணையப் பேரகராதி
உறைதல் = ஒழுகுதல், சென்னை இணையப் பேரகராதி