பழமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழமொழி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 அக்டோபர், 2017

கழுதையும் கட்டெறும்பும் குட்டிச்சுவரும்

முன்னுரை:

தமிழ்நாட்டில் புழக்கத்தில் இருந்துவரும் பல்வேறு பழமொழிகளில் கழுதை சார்ந்த பழமொழிகள் பல உண்டு. சிவனே என்று நின்றுகொண்டிருக்கும் கழுதை என்னதான் பாவம் செய்ததோ தெரியவில்லை. பல பழமொழிகளுக்குள் இதனை இழுத்துப்போட்டுத் தவறான பொருள்கூறி அதனை அவமானப்படுத்தி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பல பழமொழிகளில் இரண்டே இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இங்கே காணலாம்.

கழுதையும் பழமொழிகளும்:

தமிழகத்தில் புழக்கத்தில் இருந்துவரும் கழுதை சார்ந்த பல்வேறு பழமொழிகளில் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

கழுதை கெட்டால் குட்டிச்சுவர்.
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல.
கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?
பொன்னைச் சுமந்தாலும் கழுதை கழுதைதான்.
குதிரையில்லா நாட்டில் கழுதை அரசாளும்.
அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
எழுதி வழங்கான் வாழ்க்கை கழுதை புரண்ட களம்.
காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி.

இப் பழமொழிகளில் முதல் இரண்டு பழமொழிகளைப் பற்றி மட்டும் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

1. கழுதை கெட்டால் குட்டிச்சுவர்:

இப்பழமொழிக்குத் தற்போது புரிந்துகொள்ளப்படுகின்ற கருத்தானது: கழுதையினைப் போல மதிகெட்டவர்கள் அமர்ந்து கதைபேசும் இடம் குட்டிச்சுவர். அதாவது, படித்து முடித்துவிட்டு வேலைக்குப் போகாமல் தங்கள் தோழர்களுடன் சேர்ந்துகொண்டு குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு பகலெல்லாம் அரட்டை அடிக்கும் இளைஞர்களைப் பார்த்து அவரது பெற்றோர் இப்படிக் கூறுவதைப் பல வீடுகளில் கேட்டிருக்கலாம்.

இளைஞர்கள் வேலைக்குப் போகாமல் குட்டிச்சுவரின்மேல் அமர்ந்துகொண்டு அரட்டை அடிப்பதற்கும் கழுதைக்கும் என்ன தொடர்பு இருக்கமுடியும்?. பொதுவாக, படிக்காத முட்டாள்களைக் கழுதையுடன் ஒப்பிடுவது உலக வழக்கம். படித்திருந்தும் படிக்காத முட்டாள்களைப் போல வெட்டியாகப் பொழுதைக் கழிப்பதனால் ஒருவேளை இந்த ஒப்பீடு செய்திருக்கலாமோ?. ஆனால்.... ஆனால்... படிக்காதவர்கள் எல்லோரும் முட்டாள்கள் அல்லரே!. படித்தவர்கள் அனைவரும் அறிவாளிகளும் அல்லரே!!. படிக்காத முட்டாளாகவே இருந்தாலும் வேலைக்குச் செல்கின்றனரே!!!. ஆக, படிப்புக்கும் முட்டாள்தனத்துக்கும் வேலைக்குப் போவதற்கும் எப்படி ஒருதொடர்பும் இல்லையோ அதைப்போலவே கழுதைக்கும் இதற்கும் ஒரு தொடர்பும் கிடையாது. என்றால், இப் பழமொழி உணர்த்தும் உண்மைப் பொருள்தான் என்ன?. இதைப்பற்றிக் கீழே காணலாம்.

மக்கள் பயன்பாட்டில் கழுதை:

மனித சமுதாயத்திற்கு நன்மை செய்யும் பல்வேறு விலங்குகளில் கழுதையும் ஒன்றாகும். பொருட்களை ஓரிடத்தில் இருந்து வேறோர் இடத்திற்குக் கொண்டுசெல்வதற்கு மட்டுமின்றி உழவுக்கும் கழுதையானது பயன்படுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் சங்ககாலம் தொட்டே கழுதையானது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது என்பதற்குக் கீழ்க்காணும் பாடல்கள் சான்றாகும்.

.... தடவு நிலைப் பலவின் முழு முதல் கொண்ட
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து
அணர் செவி கழுதை சாத்தொடு வழங்கும் ..- பெரும்பாண்.

கழுதை சுமந்துவந்த மிளகு மூட்டையானது பலாப்பழம் போலத் தோன்றியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

... அணங்கு உடை மரபின் இரும் களம்தோறும்
வெள் வாய் கழுதை புல்இனம் பூட்டி
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ வாழிய பெரிது என ... - புறம். 392

வெற்றிபெற்ற போர்க்களத்திலே கழுதைகளை ஏரில் பூட்டி வெள்ளை வரகும் கொள்ளும் வித்தியதாக மேற்காணும் பாடல் கூறுகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இனி பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். பொதுவாகக் கழுதைகள் மந்தமான நடையினை உடையவை. கழுதைகளைப் பொருள் போக்குவரத்திற்கோ உழவுக்கோ பயன்படுத்தும் முன்னர் அவற்றை நன்கு பழக்கவேண்டும். பழக்காவிட்டால் அவற்றிடம் இருந்து வேலைவாங்க முடியாது; உதைதான் வாங்கமுடியும்.

வேலைவாங்கினால் மட்டும் போதாது; அவற்றை நன்கு பராமரிக்க வேண்டும். வேளாவேளைக்கு உணவும் நீரும் கொடுப்பதுடன் அதனைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கழுதைதானே என்று சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டால் அது மருண்டுவிடும் அதாவது குழம்பிவிடும். சரியாக உண்ணாது; கட்டளைகளை ஏற்று வேலைசெய்யாது. இதைத்தான் 'கழுதை கெடுதல்' என்று பழமொழி கூறுகிறது. இவ்வாறு கழுதையின் மனநிலை பாதிக்கப்பட்டாலோ உடல்நிலை கெட்டாலோ அதன் இயல்பான நடவடிக்கைகள் பாதிப்படையும். எந்தவேலையும் செய்யாமல் ஒரு குட்டிச்சுவர் போல அப்படியே நின்றுகொண்டிருக்கும். சிலநேரங்களில் சாலையின் நடுவிலோ பொது இடத்திலோ கழுதைகள் அப்படியே அசையாமல் சிலைபோல நின்றுகொண்டிருப்பதைக் காணலாம். ஓசை எழுப்பினாலும் கட்டளை இட்டாலும் ஒரு குட்டிச்சுவரைப் போல அவை நகராமல் இருப்பதன் காரணம் அவற்றின் மனநிலை அல்லது உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதே.

இப்படி ஒரு கழுதையானது மனநிலை மற்றும் உடல்நிலையில் கெடும்போது / பாதிப்படையும்போது ஒரு குட்டிச்சுவரைப் போல அசையாமல் கட்டளைகளை ஏற்காமல் வேலைசெய்யாமல் நிற்பதையே இப்பழமொழி கூறுகிறது. இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டியது:

கழுதையைப் போல ஒருவன் முட்டாளாக இருந்தாலும்
தன் மனநிலை / உடல்நிலை கெட்டுப் போனால்
குட்டிச்சுவரைப் போல பயனற்றுப் போவான்.

2. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனதைப் போல:

இப் பழமொழிக்குத் தற்போது கொள்ளப்படும் பொருள் இதுதான்: ' கழுதையானது தனது பெரிய உருவில் இருந்து மெலிந்து மெலிந்து ஒரு கட்டெறும்பு அளவுக்குச் சுருங்கியதைப் போல ' . மிக்க வளத்துடனும் பலத்துடனும் நல்ல நிலையில் இருந்து பின்னர் மெல்ல மெல்ல அனைத்தையும் இழந்து நிற்கும் நிலைக்கு இந்தப் பழமொழியினை ஒரு உவமையாகக் குறிப்பிடுவர்.

பழமொழி விளக்கம் சரியா?:

இப்பழமொழியின் விளக்கம் சரியா என்று பார்க்கலாம். இப் பழமொழியில் இரண்டு உயிரினங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒன்று: கழுதை. இன்னொன்று: கட்டெறும்பு. இதில் வரும் கழுதை என்பதற்குப் பொதி சுமக்கும் நாலுகால் விலங்கு என்றும் கட்டெறும்பு என்பதற்குக் கருநிறம் கொண்ட பெரிய எறும்பு என்றும் பொருள்கொண்டால் பழமொழியின் விளக்கத்தில் கேள்விக்குறி எழுகிறது. காரணம், கழுதை எனும் விலங்கிற்கும் கட்டெறும்பிற்கும் என்ன தொடர்பு என்பதை அறிய முடியவில்லை. கழுதையின் எந்தவொரு பண்பினையும் கட்டெறும்பிற்குப் பொருத்திப் பார்க்க இயலவில்லை. அதுமட்டுமின்றி, கழுதை எவ்வளவுதான் மெலிந்தாலும் கட்டெறும்பின் அளவுக்குச் சுருங்க முடியாது என்பதை அனைவரும் அறிவோம். 

இல்லை இல்லை இங்கே கழுதை, கட்டெறும்பு ஆகிய சொற்கள் மோனை (முதலெழுத்து) நயம் பற்றித்தான் கூறப்பட்டுள்ளனவே அன்றி இவ் இரண்டுக்கும் இடையில் வேறு யாதும் தொடர்பில்லை என்று ஒருசிலர் கூறுகின்றனர். இவர்களது கருத்து தவறானதாகும். காரணம், மோனை அழகுக்காகத் தான் கழுதை என்ற சொல்லைப் பயன்படுத்தினர் என்றால் கழுதைக்குப் பதிலாக கரடியைச் சொல்லியிருக்கலாம். கழுதையைக் காட்டிலும் கரடி என்ற சொல் இன்னும் பொருத்தமாயிருக்கும். காரணம், கரடியும் கட்டெறும்பும் கருநிறம் கொண்டவை. ஆனால் அவ்வாறு கூறவில்லை. எனவே கழுதையும் கட்டெறும்பும் வெறும் மோனைநயம் பற்றிக் கூறப்படவில்லை என்பது உறுதியாகிறது.

பழமொழியின் உண்மை விளக்கம்:

இப் பழமொழியின் உண்மை விளக்கம் என்ன என்று காணலாம். இப் பழமொழியில் வரும் கழுதையும் கட்டெறும்பும் நேரடியாகத் தத்தம் பொருட்களை உணர்த்தாமல் ஆகுபெயராக நின்று அவற்றுடன் தொடர்புடைய பிற பொருட்களை உணர்த்தி நிற்கின்றன. அதாவது,

கழுதை என்பது ஆகுபெயராகக் கழுதை சுமக்கும் பொதிபோன்ற பெரும் செல்வத்தையும்
கட்டெறும்பு என்பது ஆகுபெயராகக் கட்டெறும்பு சுமக்கும் உணவுபோன்ற சிறிய பொருளையும்

இப் பழமொழியில் உணர்த்தி நிற்கின்றன. இனி இப்பழமொழியின் உண்மை விளக்கம் இதுதான்:

கழுதை = கழுதை சுமக்கும் பொதியின் அளவில் இருந்த பெரும் செல்வமானது
தேய்ந்து = மெல்ல மெல்லக் குறைந்து
கட்டெறும்பு ஆனதைப் போல = கட்டெறும்பு சுமக்கும் உணவின் அளவுக்குச் சிறுத்துப் போனதைப் போல.

இப் பழமொழியின் விளக்கத்தில் இருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய கருத்து:

' சரியாகப் பராமரிக்கப்படாவிட்டால் எவ்வளவு பெரிய பொருட்செல்வமும் வற்றிவிடும் '.

முடிவுரை:

பழமொழிகளின் பொருளைச் சரியாகப் புரிந்துகொள்ள பொறுமை தேவைப்படுகிறது. அவசரப்பட்டுத் தவறான பொருட்களைப் புரிந்துகொண்டால் பழமொழிகள் கூறப்பட்டதன் நோக்கமே மாறிவிடும். இப்படித் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட பழமொழிகளில் இரண்டைத் தான் மேலே கண்டிருக்கிறோம். வாழ்க தமிழ் !

புதன், 13 ஜூன், 2012

பெற்ற மனம் பித்து

பழமொழி:

பெற்ற மனம் பித்து; பிள்ளை மனம் கல்லு.

தற்போதைய கருத்து:

மேற்காணும் பழமொழிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ஒரே கருத்து இதுதான்:

பிள்ளைகளைப் பெற்றெடுத்து வளர்க்கும் பெற்றோரின் மனமோ பிள்ளைகளின் மேல் பாசப்பித்தாய் இருக்கிறது. ஆனால் பிள்ளைகளின் மனமோ பெற்றோரின் மேல் எள்ளளவும் பாசமின்றி கல்போல உள்ளது.

இன்னொரு கோணம்:

இப் பழமொழிக்குக் கூறப்பட்டு வரும் மேற்கண்ட கருத்தினை முழுதாக ஏற்க இயலவில்லை. அதற்கான காரணங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணம் இருக்குமா என்பதைப் பற்றிய ஆய்வும் இக் கட்டுரையில் செய்யப்பட்டுள்ளது.

பொதுவாக திருமண உறவில் ஈடுபடும் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல் இருப்பதில் வியப்பில்லை. ஏனென்றால் இது இயற்கையின் உந்துதல். பிள்ளைப் பேற்றின் சிறப்பினைப் பற்றித் திருக்குறளில் புதல்வரைப் பெறுதல் என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணுமாறு கூறுகிறார் வள்ளுவர்.

அறியவேண்டுவனவற்றை அறியும் அறிவு படைத்த பிள்ளைச் செல்வத்தைத் தவிர மற்றவற்றை ஒருவன் பெறும் நன்மையாக நான் எண்ணுவதில்லை. ( குறள் - 61)

தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும். ( குறள் - 64)

மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்: அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டால் செவிக்கு இன்பம் தருவதாகும். ( குறள் - 65)

பெற்ற பிள்ளைகள் பேசும் பொருளற்ற மழலைச் சொல்லைக் கேட்காதவர்தாம், குழலும் யாழும் கேட்க இனியவை என்பர். ( குறள் - 66)

இப்படியெல்லாம் பெருமையாகப் பேசப்படும் பிள்ளைச் செல்வங்கள் வளர்ந்து பெரியவர்களாக ஆனதும் பெற்ற தாய் தந்தையரின் மேல் சிறிதும் அக்கறையின்றி கல்நெஞ்சத்துடன் நடந்து கொள்வதாக இப் பழமொழிக்குப் பொருள் கூறப்பட்டுள்ளது.

பிள்ளைகளின் மேல் இடப்படும் இந்தக் குற்றச்சாட்டு உண்மை தானா என்று பார்ப்பதைவிட இப்படி குற்றம் சாட்டுவது முறைதானா என்று முதலில் பார்க்க வேண்டும்.  ஆம், பிள்ளைகள் ஏன் பெற்றோரிடம் பாசமில்லாமல் நடந்து கொள்கின்றனர்?. அவர்கள் எந்த சூழ்நிலையில் அப்படி நடந்து கொள்கின்றனர்? என்பதையும் அலசிப் பார்க்க வேண்டும். தவறு யார் மீது இருக்கிறது என்று ஆராயாமலே பொத்தாம்பொதுவாக இப்படிப் பிள்ளைகளின் மேல் மட்டும் குற்றம் சுமத்துவது சரியல்ல.

பல குடும்பங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு அன்பை ஊட்டி வளர்ப்பதில்லை. பிள்ளைகள் கேட்கும் பணத்தைக் கொடுத்து விட்டால் மட்டும் அது அன்பாகி விடாது. அன்பு என்பது என்ன என்று சரியான முறையில் புரியுமாறு குழந்தைகள் வளர்க்கப் பட்டிருந்தால் எந்தப் பிள்ளையும் பாசமின்றி இருக்காது.

மேலும் திருமணத்திற்குப் பின்னர் சில பிள்ளைகள் குறிப்பாக ஆண் பிள்ளைகள், தமது மனைவியின் கட்டளைப்படியோ, இல்லற சுமையினைத் தாங்க முடியாமலோ பிற காரணங்களாலோ பெற்றோரைக் கவனிக்காமல் /கவனிக்க முடியாமல் இருந்து விடுகின்றனர். காரணம் எதுவாயினும் பெற்றோரைப் பிள்ளைகள் கவனிக்காமல் இருப்பது தவறுதான். ஆசையுடன் பெற்றுப் பாசத்துடன் வளர்த்து ஆளாக்கிய  பெற்றோரின் கடைசிக் காலத்தில் பிள்ளைகள் ஓர் ஆதரவாய் இல்லாவிட்டால் அந்தக் கொடுமையினை பெற்றோரால் தாங்க முடியாது. தன்னால் முடிந்த அளவுக்கேனும் பெற்றோருக்கு ஓர் உதவியாய் இருக்க வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

பிள்ளையின் கடமைகள்:

புதல்வரைப் பெறுதல் எனும் அதிகாரத்தில் பிள்ளைகளின் குறிப்பாக ஆண் பிள்ளையின் கடமை பற்றிக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். - 70

அதாவது, மகன் தன் தந்தைக்குச் செய்யத் தக்க உதவி, இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.

இக் குறளில் வள்ளுவர் கடமை என்று கூறாமல் உதவி என்ற சொல்லைக் கையாண்டுள்ளதைக் கவனிக்கவும். உதவி என்பது கடமையைப்போல கட்டாயமானதல்ல. விருப்பப்பட்டால் செய்யலாம். இருந்தாலும் ஒரு மகன் தன் தந்தைக்குப் புகழ் தேடித் தருகிறானோ இல்லையோ அவரது நற்பெயருக்கு எவ்விதத்திலும் களங்கத்தை ஏற்படுத்தி விடக் கூடாது என்னும் கருத்தினையே இக் குறள் இங்கே வலியுறுத்துவதாகக் கொள்ளலாம்.  அதேபோல ஒரு மகன் தனது தாய்க்குச் செய்கின்ற ஒரு கடமையாகக் கீழ்க் காணும் குறளைக் கூறுகிறார் வள்ளுவர்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். - 69

அதாவது, தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் என பிறர் சொல்லக் கேள்வியுற்ற தாய், தான் அவனை பெற்றக் காலத்தில் உற்ற மகிழ்ச்சியை விடப் பெரிதும் மகிழ்வாள்.

இதிலிருந்து தனது தாய்க்கு இப்படிப்பட்ட ஒரு மகிழ்ச்சியை அளிக்க வேண்டியதும் ஒரு மகனின் கடமை என்ற கருத்தினை மறைமுகமாக உணர வைக்கிறார் வள்ளுவர்.

பெற்றோரின் கடமை:

பிள்ளைகளுக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் குறிப்பாகத் தந்தைக்கும் கடமை ஒன்று இருப்பதாகக் கீழ்க்காணும் குறளில் கூறுகிறார் வள்ளுவர்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். - குறள் - 67.

அதாவது, தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க கடமை, கற்றவர் கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில் மேம்படச் செய்தலாகும்.

இங்கே நன்றி என்ற சொல்லை கடமை என்ற பொருளில் கூறுகிறார் வள்ளுவர். பிள்ளைகளைப் பெற்று விட்டால் மட்டும் போதாது; அவர்களுக்கு நல்ல ஆசானாய் இருந்து கல்வியைத் தந்து நல்வழியைக் காட்டிநின்று அவர்களைக் கற்றவர்களின் அவையில் முதல்வனாக விளங்கச் செய்ய வேண்டியது தந்தையின் கடமை என்று கூறுகிறார் வள்ளுவர். ஆனால் இன்று எத்தனை தந்தையர் அவ்வாறு நடந்து கொள்கின்றனர்.?. குழந்தையின் பிறப்புக்குக் காரணமாய் இருப்பதோடு சரி, அதன்பின் அக் குழந்தையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலத்தைப் பற்றிச் சிறிதும் கவலையில்லாமல் திரிகின்ற தந்தையர் பலர் இச் சமுதாயத்தில் இருப்பதைப் பார்க்கிறோம். இப்படிப் பல குழந்தைகள் தந்தையின் கவனிப்பின்றியும் சரியான பாதை காட்டப்படாமலும் வளர்க்கப்படுவதால் தறுதலைகளாகச் சமுதாயத்தில் உருவெடுத்து வருவதை நாம் இன்றும் கண்கூடாகப் பார்க்கலாம்.

இப்படிப்பட்ட தந்தையின் நிலையையும் அவரது மனைவியின் நிலையையும் காணும் போது பசுவும் காளையும் தான் நினைவுக்கு வருகிறது. 

பசுவும் காளையும்:

பசுவின் குணம் பற்றியும் காளையின் குணம் பற்றியும் ஏற்கெனவே நமது திருக்குறளில் தெய்வம் மற்றும் திருக்குறள் காட்டும் தேவர் யார்? என்ற ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம்.

பொதுவாக, பசு, காளை மற்றும் கன்று அடங்கிய ஒரு பசுவின் குடும்பத்தில் பசு தாயாக இருந்து தனது கன்றின் மேல் பாசம் காட்டி பாலூட்டி வளர்க்கிறது. தனது கன்றுக்கொரு துன்பம் வந்தால் அத் துயரத்தினைத் தாங்க மாட்டாமல் கண்ணீர் வடித்து அழுகிறது; உதவிக்கு அழைத்துக் கதறுகிறது. ஆனால் அந்தக் கன்றின் மேல் எந்தவித அக்கறையுமின்றி காளைமாடு திரிகிறது. அந்தக் கன்றின் பிறப்புக்குத் தானே தந்தையாய் இருந்தும் அந்தக் கன்றின் மீது ஒரு பற்றுதலும் இல்லாமல் கல்நெஞ்சம் கொண்டவரைப் போல வாழ்கிறது காளைமாடு. இந்தப் பசுவின் மனநிலையையும் காளையின் மனநிலையையும் பற்றிக் கூறுவதாக அமைவதே நமது தலைப்புப் பழமொழியாகும். இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

பழமொழியின் வடிவமும் பொருளும்:

பழமொழிகள் வாய்மொழி வழியாக பல்லாண்டு காலம் வழங்கப்பட்டு பின்னர் எழுத்தில் இடம்பெற்றன. அப்படி எழுதப்பட்ட பொழுது பல எழுத்துப் பிழைகளால் பொருள் தவறுகள் நேர்ந்துள்ளதை நாம் இதற்கு முன்னர் பல பழமொழி ஆய்வுக் கட்டுரைகளில் கண்டுள்ளோம். அப்படி ஒரு எழுத்துப் பிழையே இப் பழமொழியிலும் பொருள் மாறுபாடு உண்டாகக் காரணமாகி விட்டது.

நமது தலைப்புப் பழமொழியின் உண்மையான வடிவம் கீழ்க்காணுமாறு இருப்பதாகும்.

பெற்ற மனம் பித்து; புல்ல மனம் கல்லு.

இதில் வரும் பெற்றம் என்பது பசுவையும் புல்லம் என்பது காளையையும் குறிக்கும் என்று அகராதிகள் கூறுகின்றன. அவ்வகையில்,

பெற்ற மனம் = பெற்றத்தின் மனம் அதாவது பசுவின் மனம் ஆகும்.

புல்ல மனம் = புல்லத்தின் மனம் அதாவது காளையின் மனம் ஆகும்.

புல்ல என்பது லகர ளகர குழப்பத்தால் புள்ள என்று  உருமாறி பின் தூய தமிழாக உருவெடுக்கும்போது பிள்ளை என்று மாறிவிட்டது. இதன் வரலாறு கீழே காட்டப்பட்டுள்ளது.

புல்ல ---> புள்ள -----> பிள்ளை

இனி, பழமொழியின் உண்மைப் பொருள் இதுதான்:  
பசுவின் மனம் (கன்றின் மேல்) பாசத்தால் பித்தாக இருக்கிறது; காளையின் மனமோ ( கன்றின் மேல்) பாசமின்றிக் கல்லாக இருக்கிறது.

பசுவுக்கும் காளைக்கும் இயற்கையாக அமைந்த இந்த இருவிதமான மனநிலைகளையே இப் பழமொழி வாயிலாக நம் முன்னோர்கள் கூறியுள்ளதாகத் தெரிகிறது. காளையின் இயற்கைக் குணத்தினை மாற்ற இயலாது. ஆனால் மனிதன் நினைத்தால் மாறலாம்; தன் கீழான குணத்தினை மாற்றிக் கொண்டு அன்பு காட்டலாம். அப்படி அன்பு காட்டாத கல்நெஞ்சம் கொண்ட தந்தையரை காளைக்கும் பாசத்தினால் பித்துகொண்டு அன்புகாட்டி உருகும் அன்னையரை பசுவிற்கும் உவமையாக கூறி, இந்தக் காளைகளைப் போல தந்தையர் இருக்கக் கூடாது என்ற நற்கருத்தினை வலியுறுத்துவதாக அமைகிறது இப்பழமொழி. இதுவே இப்பழமொழியின் இன்னொரு கோணம் ஆகும்.
====================== வாழ்க தமிழ்!==============

திங்கள், 19 மார்ச், 2012

ஆனைக்கொரு காலம் ( பூனைக்கு?)

முன்னுரை:

ஆனைக்கு ஒரு காலம் வந்தால்
பூனைக்கும் ஒரு காலம் வரும்.


என்றொரு பழமொழி இன்றும் வழக்கில் உண்டு. இதைப்பற்றி விரிவாக ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

தற்போதைய விளக்கங்கள்:

இப்பழமொழிக்குக் காலம் காலமாகக் கூறப்பட்டு வரும் விளக்கம் இதுதான்:


ஆனை போல பெரியவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல காலம் வந்தால்
பூனை போல சிறியவர்களுக்கும் அவரது வாழ்வில் ஒரு நல்ல காலம் வரும்.

இக் கருத்து சரியானதா என்று பார்ப்போம். இங்கே பெரியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் போன்றவற்றால் பெருமை உடையவர்களைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். சிறியவர் என்பது உருவத்தால் மட்டுமின்றி செல்வாக்கு, பணபலம், புகழ் ஆகிய எதுவுமே கொஞ்சம்கூட இல்லாத மிகச் சாதாரண நிலையில் உள்ளவர்களையும் குறிப்பதாகக் கொள்ளலாம். மொத்தத்தில் இப்பழமொழி உணர்த்த வரும் கருத்துப்படி பார்த்தால் நல்லகாலம் என்பது அனைத்துவகையான மக்களுக்கும் வாழ்க்கையில் ஒரு கட்டத்திலாவது வரவே செய்யும் என்பதே.

ஆனை போல பெரியவர்களானாலும் சரி, பூனை போல சிறியவர்களானாலும் சரி, நன்மை மட்டுமல்ல தீமையும் அனைவருக்கும் அவரவர் வினைப்படிதான் நடக்கும். இதைத்தான் ' தீதும் நன்றும் பிறர்தர வாரா' என்று புறநானூற்றிலேயே கூறிவிட்டனர். ஆக, இக் கருத்து ஓரளவுக்குத் தான் சரியாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இக் கருத்தினை நேரடியாகக் கூறாமல் ஆனையினையும் பூனையினையும் பயன்படுத்திக் கூறி இருப்பதன் தேவை என்ன?. இக் கருத்து உருவான பின்புலம் என்ன? இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அதற்கு முன்னர், மேற்காணும் கருத்தைத்தவிர, இணையத்தில் காணப்பட்ட வேறு சில கருத்துக்களைப் பற்றிக் காணலாம்.

கருத்து 2:

இக் கருத்தினை முன்மொழிவோர், ஆனை என்பதனை ஆநெய் என்பதின் திரிபு என்றும் பூனை என்பதனை பூநெய் என்பதின் திரிபு என்றும் கொண்டு, இப்பழமொழியை

ஆநெய்க்கு ஒரு காலம் வந்தால்
பூநெய்க்கும் ஒரு காலம் வரும்.

என்று மாற்றிக் கொண்டு கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகின்றனர். 

ஆநெய் ஆகிய பசுநெய்யினை ஒரு காலத்தில் உண்டால் பூநெய் ஆகிய தேனையும் ஒரு காலத்தில் உண்ணவேண்டி வரும்.

அதாவது, பசுநெய்யினை உணவுடன் சேர்த்து அதிகம் உண்டால் அதனால் உண்டாகும் கொழுப்பினைக் குறைக்க அதன்பின்னர் தேனை உண்ண வேண்டி வரும் என்று விளக்கம் கூறுகின்றனர்.

இக் கருத்து ஏற்புடையதாகத் தோன்றவில்லை. ஏனென்றால், பசுநெய் மட்டுமல்ல, கொழுப்பை உண்டாக்கும் பல எண்ணைப் பலகாரங்களையும் மாமிச உணவுகளையும் நாம் (கொழுப்பு என) அறிந்தே தான் உண்கிறோம். இருந்தாலும் அதனைக் குறைப்பதற்கு நாம் தேனையா உட்கொள்கிறோம்?. இல்லையே. மேலும் நெய்யும் தேனும் உணவுப்பொருட்களே. இதில் எதை அதிகம் உண்டாலும் சிக்கல் வரும். அதனால் தானே ' அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு' என்று கூறினர் பெரியோர். எனவே இப் பழமொழி இங்கே உணவுப் பொருட்களைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது. 

கருத்து 3:

கருத்து 2 னைப் போலவே இதுவும் ஆநெய், பூநெய்யுடன் தொடர்புடையதே. ஆனால் சற்று மாறுபடுவது; ஆன்மீகத்துடன் தொடர்புடையது. இக் கருத்தின் படி,

இறைவனுக்கு முதலில் பசுநெய்யால் முழுக்காட்டப்படும். அதன்பின்னர்
தேனால் முழுக்காட்டப்படும்.

இக் கருத்தும் பொருத்தமானதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இறைவனுக்கு செய்யப்படும் முழுக்காட்டுதலைப் பழமொழியாகச் சொல்ல வேண்டிய தேவை ஒன்றுமில்லை. மேலும் இறைவனுக்குப் பலவகையான முழுக்காட்டுதல்கள் உண்டு. எனவே இப்பழமொழி இங்கே இறைவனுடன் தொடர்புடையதாய் வரவில்லை என்பது தெளிவு.

இனி, முதலாம் கருத்துக்கு அரணாக உள்ள இப் பழமொழியின் பின்புலம் பற்றிக் காண்போம்.

பழமொழியின் பின்புலம்:

பழமொழிகளிலே பலவகைகள் உண்டு. பழமொழிகள் கூறுகின்ற கருத்துக்களின் அடிப்படையில் அவற்றை மருத்துவப் பழமொழி, வேளாண்மைப் பழமொழி, இலக்கியப் பழமொழி, வரலாற்றுப்பழமொழி என பலவகைகளாகப் பிரிக்கலாம்.

நாம் தலைப்பில் கண்ட பழமொழியானது ஒரு வேளாண்மைப் பழமொழி ஆகும். வேளாண்மையே மக்களின் அடிப்படைத் தொழில் என்பதால் இது தொடர்பாக பல பழமொழிகள் வழக்கில் எழுந்தன. அவற்றில் ஒரு சில பழமொழிகள் மட்டும் சான்றாகக் கீழே தரப்பட்டுள்ளன. (நன்றி: விக்கிகோட்.ஆர்க்)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்
உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கு மிஞ்சாது.
அகல உழுவதை விட ஆழ உழுவது மேல்.
அறுக்க மாட்டாதவன் இடுப்பில் ஐம்பத்தெட்டு கருக்கு அருவாளாம்.
அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
ஆடிப் பட்டம் தேடி விதை.

மேலே கண்டதைப் போல, வேளாண்மைத் தொழிலை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பழமொழிகள் பலவற்றுள்ளும், நமது தலைப்புப் பழமொழிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. இப் பழமொழியானது வேளாண்மைத் தொழிலில் பயன்படுத்தப்படும் விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

வேளாண்மைத் தொழிலில் மிக அதிகமாக பயன்படுத்தப்படும் விலங்கு 'எருது' என்பது அனைவருக்கும் தெரியும். உழவுமாடாகவும் வண்டி மாடாகவும் பெரிதும் பயன்படுவது எருதே ஆகும். பல நேரங்களில் விளைந்த நெற்கதிர்களை கதிரடிக்கவும் இவற்றைப் பயன்படுத்துவர். ஆனால், விளைச்சல் அதிகமாக இருந்தால், யானைகளையும் கதிரடிக்கப் பயன்படுத்துவர். இதன் அடிப்படையில் எழுந்தது தான் கீழ்க்காணும் பாடல்:

" மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல் என்று
ஆனை கட்டிப் போரடிக்கும்
அழகான தென்மதுரை."


மிக அழகான இப் பாடலை இயற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால், தென்மதுரையில் உழவுத் தொழில் எவ்வளவு செழித்திருந்தது என்பது மட்டும் இப்பாடலின் மூலம் நன்கு தெரிகிறது.

இப்படி யானைகளைக் கொண்டு கதிரடித்த பின்னர், பிரிந்த நெல்மணிகளைத் தனியாக எடுத்துத் தானியக் கிடங்குகளில் சேமித்து வைத்திருப்பர். இப்போது தான் சிக்கல் துவங்குகிறது. சேமித்து வைக்கப்பட்டுள்ள இந்த நெல்மணிகளைக் குறிவைத்து எலிகளின் பட்டாளம் படையெடுக்கத் துவங்குகின்றது. ஒவ்வொரு எலியும் தனக்குத் தேவையானதை விட ஐந்து மடங்கு தானியத்தை அள்ளிக் கொண்டு செல்லுமாம். இதனடிப்படையில் தான்,

" அறுப்புக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி "

என்ற பழமொழியே எழுந்தது எனலாம்.

கூட்டம் கூட்டமாக இவை புகுந்து நெல்மணிகளைத் திருடிக் கொண்டு செல்வதை அப்படியே விட்டுவிட்டால், கிடங்கையே காலி செய்து விடும். எனவே இந்த எலிகளைக் கூண்டோடு ஒழிக்க, பூனைகளைக் கொண்டுவந்து தானியக் கிடங்குக்குள் வைப்பர். பூனைகளும் கிடங்கிற்குள் வருகின்ற எலிகளை வேட்டையாடித் தின்றுவிடும்.

முடிவுரை:

இவ்வாறாக கதிரடிக்கும் காலத்தில் யானையின் உதவியும் சேமிக்கும் காலத்தில் பூனையின் உதவியும் மனிதருக்குத் தேவைப்பட்டது. இதைத்தான்,

யானைக்கொரு காலம் வந்தால்
பூனைக்குமொரு காலம் வரும்.

என்று கூறிச் சென்றுள்ளனர் நம் முன்னோர். இப் பழமொழியில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத செய்தி என்னவென்றால்:

மிகப் பெரிய யானைகள் மட்டுமே பயன் தருபவை அல்ல.
மிகச் சிறிய பூனைகளும் தான். எனவே
உருவு கண்டு எள்ளாமை வேண்டாம்.! ( நன்றி: திருவள்ளுவர்)



......................................... தமிழ் வாழ்க!.......................................................

வெள்ளி, 23 செப்டம்பர், 2011

ஒட்டக்கூத்தனும் ஓட்டை வாயும்


முன்னுரை:

பழமொழிகள் மக்களின் வாழ்வியலுடன் பின்னிப் பிணைந்தவை. அனுபவம் வாய்ந்த பெரியோர்களால் இளைய தலைமுறையினரின் நன்மை கருதி வாய்மொழியாகக் காலங்காலமாக கூறப்பட்டு வந்தவை. நகைச்சுவை, அறிவுக்கூர்மை கருதியும் பெரியோர்கள் பல பழமொழிகளைக் கூறியுள்ளனர். பழமொழிகள் மட்டுமின்றி விடுகதைகள் வாயிலாகவும் பல அரிய கருத்துக்களை பெரியவர்கள் கூறியுள்ளனர். இந்த பழமொழிகளுக்கும் விடுகதைகளுக்கும் இடைப்பட்டதாக ஒரு வகை உண்டு. அதுதான் 'விடுமொழி' என்பதாகும். இந்த விடுமொழி என்பது பழமொழி போலத் தோன்றும் ஒரு விடுகதை ஆகும்.

தமிழ் கூறும் நல்லுலகில் பல விடுமொழிகள் உண்டு. அவற்றில் சில கீழே காட்டப்பட்டுள்ளன.

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்.
இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.
எடுக்கிறது பிச்சை ஏறுவது பல்லக்கு.
ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

இக் கட்டுரையில் இன்னும் ஒரு விடுமொழி பழமொழியாகக் கருதப்பட்டு எப்படித் தவறுதலாகப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்பதைக் காணலாம்.

பழமொழி: ஒட்டக்கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

இப் பழமொழிக்கு தற்போது கூறப்பட்டு வரும் பொருள் இதுதான்: ஒட்டக்கூத்தன் என்னும் புலவனுக்கு மட்டும் இரண்டு தாழ்ப்பாள் போட்டாளாம் அரசி. இக் கருத்தின் பின்னணியாக இணையத்தில் கூறப்பட்டு வரும் கதை என்னவெனில்:

கம்பனுக்கும் ஒட்டக்கூத்தனுக்கும் கட்டோட ஆகாது. மன்னன்கிட்ட ஒட்டக்கூத்தனுக்கு செல்வாக்கு. அரசிக்கோ கம்பன் கவிதையில் ஈடுபாடு. ஒரு நாள் அரசனிடம் அரசிக்கு ஊடல். ராணி உள்பக்கமா தாப்பா போட்டுகிட்டு தெறக்காமக் கோவமா இருக்கா. அரசன் ஒட்டக்கூத்தனக் கூப்பிட்டு எதாவது ஜல்சா கவிதை சொல்லி ராணிய சரிக்கட்ட சொல்றான். ஒட்ட்க்கூத்தனும் போய் கவி பாடறான். உள்ளேந்து தாப்பா போடற சத்தம் கேக்குது. பின்னாடியே ராணியோட குரலும் வருது. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள் அப்பிடின்னு.

இது கட்டுக்கதை என்பதைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம். பழமொழியைத் தவறாகப் புரிந்துகொண்டு பொருள் கூறியதால் அதை சரிக்கட்ட ஒரு கதை தேவைப்படுகிறது. இனி இப்பழமொழியின் உண்மையான நிலை என்ன என்று காணலாம்.

இப் பழமொழியின்  உண்மையான வடிவம் இதுதான்:

ஒத்தக் கூத்தனுக்கு இரட்டைத் தாழ்ப்பாள். அது என்ன?

விடை: இந்த விடுமொழியில் வரும் கூத்தன் என்பது கூத்தாடும் இயல்புடைய நாக்கினைக் குறிப்பதாகும். தாழ்ப்பாள் என்பது உதட்டினைக் குறிப்பதாகும். இரண்டு தாழ்ப்பாள் என்பது மேலுதடு, கீழுதடு ஆகிய இரண்டையும் குறிப்பதாகும். ஒத்தையா ரெட்டையா என்ற சொல் வழக்கினைப் போல இந்த விடுமொழியானது

ஒத்தக் கூத்தனுக்கு (ஒரு நாக்குக்கு) இரட்டைத் தாழ்ப்பாள் (இரண்டு உதடுகள்)

என்ற அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

முடிவுரை:

இதே நாக்கையும் உதடுகளையும் விடைகளாகக் கொண்டு தான் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் ' என்ற விடுமொழியும் அமைந்துள்ளது என்பதை ஏற்கெனவே நாம் ஒரு ஆய்வுக் கட்டுரையில் கண்டுள்ளோம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

................................................. தமிழ் வாழ்க!......................................

ஞாயிறு, 3 அக்டோபர், 2010

பந்திக்கு முந்து

முன்னுரை:

' பந்திக்கு முந்து படைக்குப் பிந்து ' என்றொரு பழமொழி தமிழ்நாட்டில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப் பழமொழிக்குத் தற்போது வழங்கப்படும் பல்வேறு விளக்கங்களைப் பற்றியும் அவ் விளக்கங்கள் எந்த அளவிற்குப் பொருத்தமாக உள்ளன என்பதைப் பற்றியும் இப் பழமொழிக்கு இன்னொரு கோணத்தில் ஒரு புதிய விளக்கத்தையும் இக் கட்டுரையில் காணலாம்.

தற்போதைய விளக்கங்கள்:

இப் பழமொழிக்கு மூன்று விதமான விளக்கங்கள் இதுவரை அறியப்பட்டுள்ளன. அவை அனைத்தும் கீழே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.

விளக்கம் 1: 'பந்திக்கு முந்து' என்றால் உணவு இடப்படும் பந்தியில் முதல் ஆளாகச் சென்று உண்ண வேண்டும். இல்லையேல் உணவு முழுமையாகவும் சுவையுடனும் கிடைப்பது அரிது. 'படைக்குப் பிந்து' என்றால் போருக்குப் போகும்போது படையில் கடைசி ஆளாகச் சேர வேண்டும். இல்லையேல் போரில் இறந்துபடுவது உறுதி.

விளக்கம் 2: இப் பழமொழியை ' பந்திக்கு முந்தும் படைக்குப் பிந்தும்'  என்று சற்று மாற்றி இதனை விடுகதையாகக் கொள்கின்றனர். இவ் விடுகதையின் விடை 'வலது கை' ஆகும். இது எவ்வாறெனில், வலது கையானது உணவு உண்ணும்போது முன்னால் செல்லும்; வில் மற்றும் வாள் படையை இயக்கும்போது பின்னால் செல்லும்.

விளக்கம் 3: இப் பழமொழியை 'பந்திக்கு முன் தீ படைக்குப் பின் தீ' என சற்றே மாற்றிக் கொண்டு பின்வருமாறு விளக்கம் கூறுகின்றனர்: பந்தியில் உணவு இடுவதற்கு முன்னால் தீயிட்டு உணவு சமைப்பர். படைகொண்டு போரில் வென்ற பின்னர் எதிரியின் நாட்டை தீயிட்டு அழிப்பர்.

இப் பழமொழி விளக்கங்கள் சரியா?

மேலே நாம் கண்ட பழமொழி விளக்கங்கள் எந்த அளவிற்கு பொருந்தி வருகின்றன என்பதை இங்கே காணலாம்.

முதல் விளக்கத்தில் உணவு உண்பதற்கு 'முதலிடமும்' போருக்குச் செல்வதற்கு 'கடைசியிடமும்' தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக் கருத்து சிறிதேனும் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் பழமொழிகளின் நோக்கமே இளைய தலைமுறையினருக்கு நல்ல வாழ்வியல் கருத்துக்களைத் தெரிவித்து நல்வழிப் படுத்தவேண்டும் என்பது தான். ஆனால் இவ் விளக்கத்தில் கூறப்பட்டுள்ள கருத்தோ ஒருவனை சாப்பாட்டு ராமனாகவும் தொடை நடுங்கியாகவும் இருக்கவேண்டும் என்று அறிவுறுத்துவதாக அமைகிறது. இப்படிப்பட்ட அறிவுரைகளை மக்கள் பின்பற்றினால் விளைவு என்னாகும்?. நாட்டுப்பற்று பின்தள்ளப்பட்டு சோற்றுப்பற்று முன்வந்து விடும். பழமொழியின் நோக்கத்திற்கு மாறாக இக் கருத்து அமைவதால் இக் கருத்து தள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.

இரண்டாம் விளக்கத்தில் இது பழமொழியே இல்லை என்றும் இது ஒரு விடுகதை என்றும் கூறப்பட்டுள்ளது. இதை ஒரு விடுகதையாகவே கொண்டாலும் இதற்கான விடையாக 'வலது கை' யினைக் கொள்வது பொருத்தமாகத் தோன்றவில்லை. ஏனென்றால் இடதுகை வலதுகை என்பது அவரவர் பயன்பாட்டைப் பொறுத்தது. சிலர் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள். சிலர் இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள். இடதுகைப் பழக்கம் உள்ளவர்கள் அனைத்து வேலைகளுக்கும் (உணவு உண்பது உள்பட) இடது கையினையே பயன்படுத்துகின்றனர்.  ஏன் வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் கூட சில நேரங்களில் நீர், தேநீர், பால் போன்ற நீர்ம உணவுகள் பருகும்போதோ சிறுசிறு நொறுக்குத் தீனிகளை உண்ணும்போதோ இடதுகையினை பயன்படுத்துகின்றனர். பந்தியிலும் உணவு வகைகள் இரண்டு புறங்களிலும் பரிமாறப் பட்டிருக்கும். வாழைப்பழத்தை பெரும்பாலும் இடப்புறமாகவே வைப்பர். இப் பழத்தை இடதுகையால் எடுத்து வலது கையால் உரித்து உண்பதை நடைமுறையில் பார்க்கலாம். எனவே 'பந்திக்கு முந்துவது வலதுகையே' என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வது விடுகதைக்கு அழகல்ல என்றே தோன்றுகிறது.

மூன்றாவது விளக்கம் மிக மிக இட்டுக் கட்டுப்பட்ட ஒரு விளக்கமாக உள்ளது. பந்திக்கு முன்னால் தீ என்றால் அங்கே யாராவது உட்கார்ந்து சாப்பிடுவார்களா?. படைக்குப் பின்னால் தீ என்றால் படை பயந்தல்லவா ஓடும்?. நேரடியாகத் தோன்றும் இப் பொருள்களை விடுத்து பந்தியில் சோறு இடுவதற்கு முன்னால் தீயிட்டுச் சமைப்பர் என்பதும் படையில் வெற்றி பெற்ற பின்னர் எதிரி நாட்டைத் தீயிட்டுப் பொசுக்குவர் என்பதும் தேவையற்ற மிகையான கற்பனையாகத் தோன்றுகிறது. மேலும் 'முந்து' பிந்து' என்ற சொல் வடிவங்களே பழமொழி வழக்கில் உள்ளன. இவற்றை 'முன் தீ' என்றும் 'பின் தீ' என்றும் திரித்துக் கொண்டு பலவாறாகப் பொருள் கொள்வது வேடிக்கையாக இருப்பதுடன் பழமொழிகளுக்குரிய சீரிய நோக்கமின்றி இருப்பதால் இவ் விளக்கம் தள்ளப்பட வேண்டிய ஒன்றே ஆகும்.

இன்னொரு கோணம்:

இப் பழமொழியை இன்னொரு கோணத்தில் ஆராய்ந்த போது புதியதோர் விளக்கம் கிடைத்தது. இக் கோணத்தின்படி இப் பழமொழியின் வடிவம் கீழ்க்கண்டவாறு இருக்கவேண்டும்.

பந்திக்க முந்து படைக்கப் பிந்து

இங்கே பந்தித்தல் என்றால் திருமணம் செய்தலைக் குறிக்கும். படைத்தல் என்றால் குழந்தை பெற்றுக் கொள்ளுதலைக் குறிக்கும். ஆக இப் பழமொழியின் இன்னொரு கோண விளக்கமானது ' திருமணம் செய்துகொள்வதை தள்ளிப் போடக்கூடாது. ஆனால் குழந்தை பேற்றினை சற்று தள்ளிப் போடவேண்டும்.' என்பதாகும்.

இப் புதிய விளக்கம் சரியா?

மேலே கண்ட புதிய விளக்கமானது எந்த அளவிற்குப் பொருத்தமானது என்று இங்கே பார்க்கலாம்.

பந்தித்தல் என்ற சொல்லுக்கு 'கட்டுதல்', 'கூடுதல்' என்ற பொருட்களை சென்னைத் தமிழ் இணையப் பேரகராதி கூறுகிறது. கட்டுதல் என்ற பொதுவான பொருள் விரிவாக்கமாக இங்கே தாலி கட்டுதலைக் குறிப்பதாகவும் கூடுதல் என்பது மணவாழ்வில் கூடுதலைக் குறிப்பதாகவும் கொள்ளலாம். ஆக பந்தித்தல் என்ற சொல்லிற்கு பந்தத்தில் (உறவில்) ஈடுபடுதல் அதாவது திருமணம் செய்தல் என்ற பொருளைக் கொள்வது சாலவும் பொருந்தக் கூடிய ஒன்றே. அடுத்து, படைத்தல் என்பதற்கு 'உயிர்களைப் படைத்தல்' அதாவது 'குழந்தை பெற்றுக் கொள்ளுதலைப்' பொருளாகக் கொள்வதும் பொருந்தக் கூடிய ஒன்றேயாகும். இனி இப் பழமொழி உருவாக்கப் பட்டதன் நோக்கம் என்ன என்று காணலாம்.

இல்லற வாழ்க்கையின் இன்றியமையாமையையும் அதை எவ்வாறு முறையோடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் இளைய தலைமுறையினருக்கு பெரியவர்கள் சொல்லும் அறிவுரையாக இப் பழமொழி அமைந்துள்ள பாங்கு முதலில் கவனிக்கத் தக்கதாகும். இன்றைய காலகட்டத்தில் பல இளைஞர்களும் இளைஞிகளும் காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்வதில்லை. மேற்படிப்பு, வேலை, குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் பருவ வயதுக்கு வந்த பின்னரும் திருமணம் செய்து கொள்ளாமல் (அ) கொள்ள முடியாமல் இருந்து விடுகின்றனர். இதன் பக்க விளைவாக சமுதாயத்தில் பாலியல் சிக்கல்கள் உள்பட பல தீய பழக்க வழக்கங்களுக்கு இவர்கள் ஆளாக நேரிடுவதை நாம் காண்கிறோம். மேலும் இளமையில் நுகர வேண்டிய இல்லற இன்பத்தையும் இவர்கள் இழந்து விடுகின்றனர். இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'திருமணத்தைத் தள்ளிப் போடவேண்டாம்' என்று கூறியுள்ளனர்.

மேலும் திருமணம் செய்த அனைவரும் உடனுக்குடன் குழந்தை பெற்றுக் கொண்டால் மக்கள் தொகை மிகவும் பெருகி விடும். மக்கள்தொகை பெருக்கத்தினால் வரக்கூடிய சமுதாயச் சிக்கல்கள் பற்றி நாம் நன்கு அறிவோம். அதுமட்டுமின்றி குழந்தை பிறந்ததும் மனைவியின் கவனம் முழுவதும் குழந்தை வளர்ப்பில் திரும்பி விடுகிறது. குழந்தை பெற்ற தாயின் உடலில் பல மாற்றங்கள் உண்டாவதால் அவருக்கு இல்லற இன்பத்தில் நாட்டம் குறைகிறது. இதனால் கணவன்-மனைவியிடையே உள்ள நெருக்கமானது தளர ஆரம்பித்து அவர்களுக்கிடையேயான இல்லற இன்பத்திலும் குறுக்கீடு நேர்கிறது. இதனால் அவர்களுக்கிடையில் புரிதல் குறைய ஆரம்பித்து பிணக்குகள் தோன்றத் துவங்குகின்றன. இதுவே பின்னாளில் மணமுறிவு வரை கொண்டுசென்று விடுகிறது. இதை நாம் பல குடும்பங்களில் நடைமுறையில் காணலாம். குழந்தை பெற்றுக் கொள்வதை 2 லிருந்து 3 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவதால் மக்கள்தொகையானது ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வருவதுடன் கணவன்-மனைவியிடையே புரிதல் ஏற்பட்டு நல்ல இல்வாழ்க்கை அமைவது சாத்தியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டே பெரியவர்கள் 'குழந்தை பெற்றுக் கொள்வதை சற்று தள்ளிப் போடுங்கள்' என்று கூறியுள்ளனர்.

முடிவுரை:

பெருகி வரும் மக்கள்தொகை ஒவ்வொரு நாட்டிற்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. ஒவ்வொரு நாட்டு அரசாங்கமும் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது. நம் நாட்டில் மகாராட்டிர மாநிலம் தற்போது ஒரு புதிய நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறப்பை 2 ஆண்டுகள் வரை தள்ளிப் போடுவோருக்கு ரூ.5000 பரிசளிப்பதாக அம் மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால் நமது பெரியவர்கள் குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடுவதின் இன்றியமையாமையை உணர்ந்து அக் காலத்திலேயே இப் பழமொழியின் வாயிலாகக் கூறிச் சென்றுள்ளனர். இனியேனும் இப் பழமொழியை நம் மக்கள் பின்பற்றினால் நாடு வளம்பெறும்.
......................................................................................................

வெள்ளி, 30 ஜூலை, 2010

ஊர் இரண்டுபட்டால்

பழமொழி:

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.

தற்போதைய பொருள்:

'ஒரு ஊரைச் சேர்ந்த மக்கள் இரண்டு பிரிவானால் கூத்தாடிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைவர்.'

தவறு:

முதலில் நாம் அறிந்துகொள்ள வேண்டியது இந்த தொடர் ஒரு பழமொழியே அல்ல; ஒரு விடுமொழி என்னும் உண்மையை. விடுமொழி என்றால் என்ன என்று காணும் முன்னர் இத் தொடருக்குக் கூறப்படும் தற்போதைய பொருள் எவ்வாறு தவறாகும் என்று பார்ப்போம். பொதுவாக ஒரு ஊர் என்றாலே அங்கே பலதரப்பட்ட மக்களும் வாழ்வார்கள். ஒரே ஊரில் வாழ்ந்தாலும் இம் மக்கள் சாதி, மதம், பொருளாதாரம் மற்றும் மொழி போன்றவற்றால் மற்றவர்களிடமிருந்து பிரிந்தே வாழ்கின்றனர். மனிதர்களுடைய இந்தப் பிரிவினை எண்ணங்களை தனக்குச் சாதகமாக இன்றுவரையில் மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வது யாரென்றால் அது அரசியல்வாதியாகத் தான் இருக்கும். இந்த அரசியல்வாதிகளின் வேலை மக்களைப் பிரிப்பது அல்ல; ஏற்கெனவே பிரிந்திருக்கும் மக்களை எக்காரணம் கொண்டும் ஒன்றுசேர விடாமல் தடுப்பதே ஆகும். ஏனென்றால் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டால் அது மிகப் பெரிய ஆற்றலாகிவிடும். அந்த ஆற்றலை எதிர்த்து நிற்க எந்த அரசியல்வாதியாலும் முடியாது. இறுதியில் அரசியல்வாதிகள் மண்ணைக் கவ்வ நேரிடும். அதனால் தான் அரசியல்வாதிகள் அனைவரும் மக்கள் ஒற்றுமையாகக் கூடாது என்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். இது நாம் அனைவரும் நன்கு அறிந்த நடைமுறை உண்மை.

இப்போது பழமொழிக்கு வருவோம். ஒரு ஊர் எப்போது ஏன் இரண்டு படும்?. மேலே நாம் கண்ட சாதி, மதம், பொருளாதாரம், மொழி ஆகியவற்றில் ஏதேனும் ஒரு/பல காரணத்தின்/ காரணங்களின் அடிப்படையில் ஊர்மக்கள் இரண்டாகலாம்; மூன்றாகலாம்; நான்காகலாம்; இன்னும் எவ்வளவோ பிரிவுகளாகலாம். இதை யாரும் பிரிக்க வேண்டிய அவசியமில்லை. சாதி மத அடிப்படையிலான பிரிவினை எண்ணம் என்பது மக்களின் குருதியில் வேரூன்றிப் போய்விட்டது. நமது முன்னோர்கள் எவ்வளவோ முயன்றும் பிரிவினை எண்ணத்தை அகற்றுவதில் முழுவெற்றி அடைய முடியவில்லை. திருமணம் தொடங்கி அரசாங்க வேலை வரையிலும் இன்று சாதி மதப் பேய்கள் தலைவிரித்து ஆடுகின்றன. இப்படி ஏற்கெனவே சாதி மதப் பாகுபாட்டால் பலவாறாகப் பிளவுபட்டுக் கிடக்கும் மக்களை ஏன் இரண்டாக்க வேண்டும்?. அதுமட்டுமின்றி இது சாத்தியமும் அல்ல; ஏனென்றால் ஒற்றுமையாக இருப்பவர்களைத் தானே பிரிக்க முடியும்?. எனவே 'ஊர்மக்கள் இரண்டு பிரிவானால்' என்ற விளக்கமே தவறு என்பதை உணரலாம்.  

இனி 'கூத்தாடிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி' என்பது எவ்வாறு தவறு என்பதை ஆராயலாம். அதற்குமுன் இங்கே ஒரு உண்மைக் கதையினையும் தெரிந்து கொள்ளலாம். ஒரு ஊரில் ஒரு சாதியைச் சேர்ந்த மக்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர். மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்துவந்த படியால் இவ் ஊரில் ஒரே ஒரு அம்மன் கோவில் மட்டுமே இருந்து வந்தது. ஊர்மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இக் கோவிலுக்குத் திருவிழா நடத்தி கலைநிகழ்ச்சிகளைக் கண்டுகளித்து வந்தனர். ஒருமுறை ஊர்த்தலைவரின் மகன்களுக்குள் நிகழ்ந்த பிணக்கு காரணமாக அவ் ஊர்மக்கள் இரண்டு பிரிவானார்கள். இந் நிலையில் அவ் ஊரில் திருவிழாவும் வந்தது. அப்போது இந்த இரண்டு பிரிவினருக்குள்ளும் சண்டை ஏற்பட்டு பல மண்டைகள் உடைய கலைநிகழ்ச்சிகள் நடத்த வந்திருந்த கூத்தாடிகள் உயிர் பயத்தில் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டனர். இப்போது சொல்லுங்கள் இந்த ஊர் இரண்டு பட்டதால் கூத்தாடிகள் திண்டாடினார்களா இல்லை கொண்டாடினார்களா என்று. பெரும்பாலான சிற்றூர்களில் இப்படித் தான் நடக்கிறது. சில சிற்றூர்களில் ஒரு பிரிவினர் அமைதியுடன் விட்டுக் கொடுக்க ஆண்டுதோறும் அங்கே எப்போதும்போல திருவிழாக்கள் நடக்கிறது. இதில் கூத்தாடிக்கு எங்கே இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கிறது?. அதுமட்டுமின்றி பழமொழியில் ' கூத்தாடிக்குக் கொண்டாட்டம்' என்று தான் சொல்லப்பட்டுள்ளது. கொண்டாட்டம் என்றால் 'இரட்டிப்பு மகிழ்ச்சி' என்று வலிந்து பொருள் கொள்வது தவறே ஆகும். இதிலிருந்து இப் பழமொழிக்குக் கூறப்படும் மேற்காணும் பொருளானது முற்றிலும் தவறானது என்பது தெரிய வருகிறது.

திருத்தம்:

மேற்காணும் தொடர் உண்மையில் ஒரு விடுமொழி ஆகும். ஒரு காலத்தில் விடுகதையாய் இருந்து இன்னொரு காலத்தில் பழமொழியாய் மாறியவைகளே விடுமொழிகள் ஆகும். மேற்காணும் தொடர் ஒரு காலத்தில் 'ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். அது என்ன? ' என்று விடுகதையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த விடுகதைக்குப் பதில் 'பல்லும் நாக்கும்' ஆகும். காலப்போக்கில் இந்த விடுகதை பழமொழியாக மாறிவிட்டது. இது எவ்வாறு என்று கீழே காணலாம்.

நிறுவுதல்:

விடுகதைகளும் பழமொழிகளும் நாட்டுப்புற மக்களின் வாழ்வுடன் பின்னிப் பிணைந்தவை என்பதை நாம் நன்கு அறிவோம். விடுகதைகளுக்கு என்று ஒரு தனிவடிவமும் பழமொழிகளுக்கென்று ஒரு தனி வடிவமும் உண்டு. என்றாலும் சில தொடர்களில் இவை இரண்டும் ஒன்றே போலத் தோன்றுவதும் உண்டு. இதற்குக் காரணம் விடுகதைகளில் வருகின்ற கேள்விகளான 'அவன் யார்?, அது என்ன?, அவள் யார்?' போன்றவை அவற்றில் விடுபட்டிருப்பதே ஆகும். இத்தகைய தொடர்களே 'விடுமொழிகள்' என்று அழைக்கப்படும். இந்த விடுமொழிகளில் ஒன்று தான் மேற்கண்ட தொடர் ஆகும். இதுபோலப் பல விடுமொழிகள் வழக்கில் உள்ளன. அவற்றில் சில மட்டும் கீழே காட்டப்பட்டு உள்ளன.

'எடுக்கிறது பிச்சை; ஏறுகிறது பல்லக்கு.'
'இடம் கொடுத்தால் மடம் பிடுங்குவான்.'
'அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்.'

இனி நாம் மேற்கொண்டிருக்கும் விடுமொழி எவ்வாறு 'பல்லையும் நாக்கையும்' குறிக்கும் என்று பார்ப்போம். மனிதரின் வாய்க்குள் பற்கள் இரண்டு வரிசைகளாக (மேல், கீழ்) 32 எண்ணிக்கையில் அமைந்தவை என்பதை நாம் அறிவோம். பொதுவாக நாம் வாய் மூடி இருக்கும்போது இந்த இரண்டு வரிசைப் பற்களும் ஒன்றுடன் ஒன்று தொட்டுக்கொண்டு ஒரு குழுமமாக இருக்கும். அப்போது இந்தப் பற்களுக்குப் பின்னால் உள்ள நாக்கோ மிக அமைதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும். இங்கே இந்த நாக்கு தான் கூத்தாடி ஆகும். இரண்டு வரிசைகளிலும் உள்ள 32 பற்களின் ஒருங்கிணைந்த குழுமம் தான் ஊர் ஆகும். இந்த ஊர் இரண்டாகும்போது அதாவது மேல்வரிசையும் கீழ்வரிசையும் பிரிந்து வாய் திறக்கும்போது இந்த நாக்கு ஆகிய கூத்தாடி ஆடத் துவங்கிவிடும். அதன் ஆட்டம் பேசுவதற்காகவோ உணவைச் சுவைப்பதற்காகவோ வேறு எதற்காகவோ இருக்கலாம். ஆக மொத்தம் பற்குழுமம் ஆகிய  ஊர் இரண்டு பட்டால்தான் நாக்கு ஆகிய கூத்தாடிக்குக் கொண்டாட்டமாக இருக்கும். இந்த நடைமுறை உண்மையினை உருவகமாக்கி அழகான ஒரு விடுகதையாகப் புனைந்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். இந்த விடுகதையே நாளடைவில் தனது 'அது என்ன?' என்ற கேள்வித்தொடரினை இழந்து பழமொழியாகி விட்டது.
...............................................வாழ்க தமிழ்!.............................................

இக் கட்டுரை குறித்த உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்ய இங்கே சொடுக்கவும்.

திங்கள், 12 அக்டோபர், 2009

மண்குதிரையை நம்பி



பழமொழி:
மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

தற்போதைய பொருள்:

இப் பழமொழிக்கு இதுவரை கூறப்பட்டு வந்த பொருள்விளக்கம் இதுதான்: ' மண்ணால் செய்த குதிரையினை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் ஆற்றைக் கடக்கும் முன்னர் அக் குதிரை கரைந்து விடும்.' ஆனால் தற்போது ஒருசிலர் 'குதிரை'யை 'குதிர்' எனக் கொண்டு இவ்வாறு பொருள் கூறுகின்றனர் : ' ஆற்றில் காணப்படும் மண்மேடுகளை நம்பி ஆற்றில் இறங்கவேண்டாம். ஏனென்றால் அவை பொய்யானவை. காலை வைத்ததும் உள்ளே இழுத்துக் கொண்டுவிடும்.'

தவறுகள்:

மேற்காணும் இரண்டு விளக்கங்களுமே தவறானவை ஆகும். இது எவ்வாறு என்று பார்ப்போம். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்க முடியுமா?. மண்குதிரை இயங்காத் தன்மை கொண்டது என்பதால் இக் கேள்விக்கான விடை 'முடியாது' என்பதே ஆகும். மண்குதிரையில் ஏறி ஆற்றில் இறங்கவே முடியாது என்ற நிலையில் இறங்கவேண்டாம் என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான ஒரு செயலாகும். பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் ஒருபோதும் கூறமாட்டார்கள் என்பதால் இவ் விளக்கம் தவறு என்பது பெறப்படுகிறது. அடுத்து இரண்டாவது கருத்தில் வரும் குதிர் என்ற சொல்லைப் பற்றிக் காண்போம். குதிர் என்றால் நெற்கூடு என்று பொருள். இச் சொல்லுக்கு இந்தப் பொருள் மட்டுமே அகராதிகளில் தரப்பட்டுள்ளது. மண்மேடு என்ற பொருள் வேண்டுமென்றே இட்டுக் கூறப்பட்ட ஒன்றாகும். குதிர் என்ற சொல்லுக்கு மண்மேடு என்ற பொருள் எவ்வகையிலும் பொருந்தாது. ஏனென்றால் நெற்கூடும் மண்மேடும் வேறுவேறு தன்மை கொண்டவை. தானியங்களைச் சேமித்து வைக்க உதவுகின்ற உயரமான கலமே குதிர் ஆகும். ஆனால் ஆற்றின் நடுவே காணப்படும் உயரமான மண்மேடுகள் எதையும் சேமிக்க உதவுவதில்லை. உயரமாக இருப்பதால் மட்டும் மண்மேடும் நெற்கூடும் ஒன்றாகி விட முடியாது.

அன்றியும் மேற்காணும் கருத்தில் சொல்வதைப் போல இந்த மண்மேடுகள் காலை வைத்தால் உள்ளே வாங்குவதுமில்லை. ஏனென்றால் இவை நன்கு செறிந்த மணலுடன் அடர்த்தியாகவே இருக்கும். இதன் காரணம் இந்த மண்மேடுகளில் புல், செடி, கொடி முதலான தாவரங்கள் வளரத் துவங்குவது தான். ஆற்றில் நடுநடுவே காணப்படும் இந்த மண்மேடுகளை 'ஆற்றிடைக் குறை' என்று அழைப்பர். இதற்கு நேரான செந்தமிழ்ச் சொல் 'துருத்தி' என்பதாகும். இச் சொல்லைப் பல சங்க இலக்கியங்களில் காணலாம். துருத்திக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு ஸ்ரீ ரங்கம் ஆகும். ஆம, காவிரி ஆற்றின் மிகப் பெரிய இடைக்குறை அதாவது மண்மேடே ஸ்ரீரங்கம் ஆகும். எட்டு மைல் நீளமும் நான்கு மைல் அகலமும் கொண்ட இந்தத் துருத்திக்கு இருபுறங்களிலும் ஆறு ஓடுகிறது. அருகில் உள்ள படம் இதனை நன்கு காட்டும். இதிலிருந்து ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டில் காலை வைத்தால் உள்வாங்கும் என்ற கருத்து தவறானது என்று தெளியலாம்.

அதுமட்டுமின்றி ஆற்றில் இறங்க விரும்பும் ஒருவர் ஆற்று நடுவில் உள்ள மண்மேட்டை நம்பியா இறங்குவார்?. ஒருபோதும் இல்லை. ஏனென்றால் தூரத்தில் இருக்கும் மண்மேடு இவருக்கு இக் கரையில் எவ்வகையிலும் உதவி செய்யப் போவதில்லை. எனவே ஆற்றில் இறங்கும்போது ஒவ்வொரு அடியாக ஆழம் பார்த்து இறங்குவாரே ஒழிய தூரத்தில் மண்மேடு தெரிகிறது உடனே ஓடிப்போய் விடலாம் என்று அவசர கதியில் இறங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வதில்லை. எனவே மண்மேட்டை நம்பி ஆற்றில் இறங்காதே என்று அறிவுரை கூறுவது பயனற்ற வேடிக்கையான செயலாகும். இத்தகைய பயனற்ற கருத்துக்களைப் பெரியோர்கள் கூறமாட்டார்கள் என்பதால் இக் கருத்து இட்டுக் கூறப்பட்டது என்பது பெறப்படுகிறது. இத் தவறுகளுக்கு எல்லாம் காரணம் ஒரு தூய தமிழ்ச் சொல்லை கொச்சை வழக்கெனத் தவறாகக் கருதி திருத்தியதே ஆகும். இனி சரியான சொல்லைப் பார்ப்போம்.

திருத்தம்:

இப் பழமொழியில் வரும் மண்குதிரை என்பது மங்குதிரை என வரவேண்டும். இதுவே திருத்தம் ஆகும். மங்குதிரையின் பொருளைக் கீழ்க்கண்டவாறு காணலாம்.

மங்குதிரை = மங்கு + திரை.

திரை என்றால் இங்கே அலை என்று பொருள். மங்குதல் என்றால் இங்கு ஒளி மழுங்குதல் என்று பொருள். (ஆதாரம்: கழகத் தமிழ்க் கையகராதி). மங்குதிரை என்னும் வினைத்தொகை ஒளி மழுங்கு அலைகள் என்ற பொருளில் கானல் நீரைக் குறிக்கும். இனி இப்பழமொழியின் சரியான பொருள் இதுதான்: கானல் நீரை நம்பி ஆற்று மணலில் இறங்காதே.

நிறுவுதல்:

மங்குதிரை என்னும் மூலச் சொல்லினை கொச்சை வடிவமாகக் கருதி மண்குதிரை எனத் திருத்தியது தான் இப் பழமொழியின் தவறான பொருள்கோளுக்குக் காரணமாகும். மங்குதிரை என்பது கானல்நீரினைக் குறிக்கும் ஒரு அருமையான சொல். கானல்நீரானது தூரத்தில் நீர்அலை வடிவத்தில் தெரிகின்ற ஒரு மாயத்தோற்றம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இத்தோற்றம் நிலையானதல்ல. மாறக்கூடியதே. இது எப்படி எங்கே எப்போது உருவாகிறது என்பதை அறிந்துகொண்டால் மங்குதிரை என்னும் சொல்லின் நயத்தினை நாம் நன்கு அறிந்துகொள்ள முடியும்.

கானல்நீர் தோன்றுவதற்கு முதற்காரணம் வெப்பம் ஆகும். நண்பகல் நேரத்தில் கதிரவனின் தெறுகதிர்கள் செங்குத்தாக வறண்ட மணல் பகுதிகளில் விழும்போது தான் இந்தக் கானல் நீர் உருவாகிறது. மணல்பரப்பின் மேற்பகுதி மிகவும் வெப்பமடையும் போது அந்த வெப்ப ஆற்றல் அலைவடிவம் பெற்று கதிர்வீசத் துவங்குகிறது. இந் நிலையில் தூரத்தில் உள்ள பொருட்களின் ஒளிக் கதிர்கள் இந்த அலைகளில் படும்போது அவை மழுங்குகின்றன. மழுங்கிய நிலையில் இந்த ஒளி அலைகள் நம் கண்களை அடைவதால் அப் பொருளுக்குக் கீழே அதன் நிழல் இருப்பதாக நமக்குத் தோன்றுகிறது. அதாவது எவ்வாறு ஒரு நீர்ப்பரப்பு ஒரு பொருளை தனக்குள் பிரதிபலிக்குமோ அதைப்போல இந்த மழுங்கிய ஒளி அலைகள் நமக்கு ஒரு மாய நிழலைக் காட்டுகிறது. அருகில் உள்ள படத்தைப் பாருங்கள். இதைக் காணும்போது அங்கே நீர் இருப்பது போன்ற ஒரு எண்ணம் நமக்குள் பிறக்கிறது இல்லையா?. இதுவே கானல் நீர் ஆகும். அதிக வெப்பமடைந்த தார்ச்சாலைகள் மற்றும் மணல் பரப்புக்களில் கானல்நீர் தோன்றும். கானல்நீர் பற்றிய மேலும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள  விக்கிபீடியா சென்று காணலாம்.

ஆற்றங்கரைகளில் பலவிதமான மரங்கள் வளர்ந்து நிழல் தருவதை நாம் கண்டிருக்கிறோம். எனவே தான் பழங்காலத்தில் (ஏன் இக்காலத்திலும் கூட) மக்கள் ஆற்றங்கரை ஓரமாகவே நடைப்பயணம் செய்து பிற ஊர்களுக்குச் செல்வர். இதனால் வெயிலின் கொடுமை தவிர்க்கப் படுவதுடன் ஆற்றின் அழகிய காட்சியினைக் கண்ட வண்ணம் பயணம் இனிதாக நடைபெறும். ஆனால் இயற்கைச் சூழ்நிலை எப்போதும் ஒரே மாதிரியாகவா இருக்கிறது?. பருவநிலை மாற்றங்களால் போதுமான மழை பெய்யாமல் போக பல ஆறுகள் நீர் முழுதும் வறண்டு வெறும் மணற்பரப்புக்களாகக் காட்சி அளிப்பதை நாம் காண்கிறோம். இந் நிலையில் ஆற்றங்கரை ஓரமாக நடைப்பயணம் செய்யும் மக்கள் வழியில் தாகமெடுத்தால் (தாம் கொண்டுவந்த நீர் முழுதும் தீர்ந்து போன நிலையில்) குடிப்பதற்கு நீரைத் தேடி ஏங்குவது இயல்பு. நீர்வேட்கை உடைய இவர்களது கண்களில் ஆற்றுமணலில் தோன்றிய இந்தக் கானல்நீர் கண்டிப்பாகப் படும். காரணம் ஆற்றுமணல் பகுதி தாழ்வாகவும் ஆற்றங்கரை பகுதி உயர்வாகவும் இருப்பதே. ஏற்கெனவே நீர்வேட்கையால் வருத்தமுற்று இருக்கும் இம் மக்கள் கானல்நீருக்கு எளிதில் ஏமாறுவர். கானல் நீரை உண்மையான நீரென்று நம்பி ஆற்று மணலில் இறங்கி நடப்பர். அதன்பின் அவர்களது நிலை என்னாகும்?. இல்லாத ஒரு நீருக்காக பொல்லாத வெயிலில் நடந்து நடந்து களைத்து உடல் வெம்பி ஏமாற்றத்தால் மனம் நொந்து .... அப்பப்பா! மிகப் பெரிய துன்பம் அது!.

இவ்வாறு கானல்நீரை நம்பி ஏமாந்து துன்பப் படக்கூடாது என்பதற்காகத் தான் பெரியோர்கள் இப் பழமொழியினைக் கூறியுள்ளனர். மணலில் இறங்கிய பின்னர் கானல்நீரினை நோக்கி நடக்கத்தானே செய்வர். அதனால் தான் ஆற்றுமணலில் நீர் இருப்பதுபோலத் தெரிந்தாலும் இறங்கவே வேண்டாம் என்கிறது இப் பழமொழி.

சரியான பழமொழி:

மங்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

........................வாழ்க தமிழ்!......................................

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

ஆத்துல ஒரு கால்


பழமொழி:
ஆத்துல ஒரு கால்; சேத்துல ஒரு கால்.

தற்போதைய கருத்து:
ஆற்றுநீரில் ஒருகாலையும் சேற்றுமண்ணில் ஒருகாலையும் வைப்பதைப் போல.

தவறு:
இப் பழமொழியின் பயன்பாட்டில் தவறேதும் இல்லை அதாவது ஒரே நேரத்தில் இரண்டு வேலைகளில் கவனம் வைத்தால் ஒரு செயலைக் கூட உருப்படியாய் செய்துமுடிக்க இயலாது என்பதென்னவோ உண்மைதான். ஆனால் இப் பழமொழிக்குக் கூறப்படும் பொருள்விளக்கம் அதாவது ஆற்றுநீரில் ஒருகால் சேற்றுமண்ணில் ஒருகால் என்பதுதான் தவறாகும். இது எவ்வாறு தவறாகும் என்று காண்போம். நம்மில் பலருக்கு ஆற்றைப் பற்றியும் குளத்தைப் பற்றியும் தெரியும். ஆற்றுநீரானது எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் இயல்பினது என்பதால் ஆற்றங்கரையில் மணல் நிறைந்து இருக்கும். இதற்கு மாறாக குளத்து நீரானது தேங்கி நிற்கும் இயலபினது. ஆகையால் குளத்தங்கரையில் தான் சேறு நிறைந்து இருக்கும். ஆற்றங்கரையில் சேறு இல்லை எனும்போது ஆற்றுநீரில் தனது ஒருகாலை வைத்த ஒருவன் இன்னொருகாலை சேற்றுமண்ணில் எப்படி வைக்க முடியும்?. ஒருபோதும் முடியாது அல்லவா?. இப்படி நடைமுறையில் சாத்தியமில்லாத ஒரு கருத்தை உணர்த்துவதால் இப் பழமொழிக்குக் கூறப்பட்ட மேற்காணும் பொருள்விளக்கம் தவறு என்பதை அறியலாம்.

மேற்காணும் பொருள்விளக்கத்தில் தவறு நேர்ந்ததற்குக் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது 'ஆத்துல' மற்றும் 'சேத்துல' ஆகிய கொச்சைச்சொற்களே என்று புலப்பட்டது. ஆத்துல என்ற கொச்சைச்சொல் ஆற்றுநீரைக் குறிப்பதாகவும் சேத்துல எனும் கொச்சைச்சொல் சேற்றுமண்ணைக் குறிப்பதாகவும் புரிந்து கொண்டதே தவறான பொருள்விளக்கத்திற்கு அடிகோலி இருக்கிறது. இனி இவற்றின் சரியான பொருட்கள் என்ன என்று பார்ப்போம்.

திருத்தம்:
ஆத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் அயத்தில் என்பதாகும். அயம் என்னும் சொல்லுக்குப் பல பொருட்கள் உண்டெனினும் இங்கு இச்சொல் குதிரையைக் குறிக்கும். சேத்துல என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ் வடிவம் செயத்தில் என்பதாகும். செயம் என்ற சொல் இங்கு பூமி அல்லது நிலத்தைக் குறிக்கும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
கற்றறிந்த மக்களின் வாய்வழக்காக மட்டும் முதலில் இருந்தவந்த பழமொழிகள் காலப்போக்கில் கல்லாத பாமர மக்களின் வாயில் நுழைந்தபோது பலவிதமான மாற்றங்களை அடைந்தன. அவற்றுள் ஒன்றே கொச்சை மாற்றம் ஆகும். அகத்தில் என்னும் தூயதமிழ்ச் சொல் கொச்சையாக ஆத்துல என்று எவ்வாறு வழங்கப்பெறும் என்று முன்னர் ஒரு கட்டுரையில் கண்டோம். இப் பழமொழியில் வரும் அயத்தில் மற்றும் செயத்தில் ஆகிய தூய தமிழ்ச் சொற்கள் எவ்வாறு திரியும் என்பதைக் கீழே சான்றுகளுடன் காணலாம்.

அயம் (நீரைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ---> ஆம் (நீரைக் குறிக்கும் திரிபு வடிவம்)
மயல் (மயக்கத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) ----> மால் (மயக்கத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)
பெயர் (தூய தமிழ்வடிவம்) ----> பேர் (திரிபு வடிவம்)
வெயர்வு (சினத்தைக் குறிக்கும் தூயதமிழ் வடிவம்) --> வேர்வு (சினத்தைக் குறிக்கும் திரிபு வடிவம்)

மேற்கண்ட சான்றுகளில் இருந்து மொழிமுதலாய் வரும் குற்றெழுத்துக்கள் திரிபின்போது யகரத்தை இழந்து நெடிலாக மாற்றமடையும் என்று அறியலாம். இவ் இலக்கணப் படியே

அயத்தில் --> ஆத்தில் ---> ஆத்துல என்றும்
செயத்தில் --> சேத்தில் --> சேத்துல என்றும்

கொச்சை வழக்கில் மாற்றமடையும் என்பதை அறியலாம்.

அயம் என்பதற்கு குதிரை என்ற பொருள் அகராதிகளில் காணப்படுகிறது. இதனால் தான் குதிரையில் ஏறிவரும் சாமியை அய்யனார் என்கிறோம். செயம் என்ற சொல்லுக்கு வெற்றி என்ற பொருள் மட்டுமே கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால் உண்மையில் வெற்றி என்பது இரண்டாம் நிலைப் பொருள் ஆகும். பூமி என்பதே முதல்நிலைப் பொருள் ஆகும். ஏனென்றால் போருக்குச் செல்லும் மன்னனின் முதல் நோக்கம் எதிரி நாட்டு மன்னனின் பூமியைக் கைப்பற்றுவதே ஆகும். பூமியைக் கைப்பற்றினாலே வெற்றி பெற்றுவிட்டதாகவே பொருள் கொள்ளப்படும்.

ஒரு சான்றாக செயம்கொண்டான் என்னும் பெயரை எடுத்துக் கொள்வோம். இப் பெயரின் பொருளை வெற்றிகொண்டான் என்று விரிப்பதைவிட பூமிகொண்டான் என்று விரிப்பதே மிகப் பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் வெற்றியை உடையவன் என்பதைவிட பரந்த பூமியை உடையவன் என்பதே மன்னருக்குச் (முதலாம் இராசராச சோழன்) சிறப்பு தரும் பெயராகும். செயம் என்னும் சொல் முதல்நிலையில் பூமியைத் தான் குறிக்கும் என்பதற்கு மேலும் சில ஆதாரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

செய் என்னும் சொல்லுக்கு விளைநிலம் என்று அகராதிகள் பொருள்கூறுகின்றன. இது செயம் என்னும் சொல்லில் இருந்து தோன்றியதாகும். இதிலிருந்து செயம் என்பது நிலப்பொருளையே குறிக்கும் என்பதை அறியலாம்.செய்யாள்,செய்யவள்,செய்யோள் என்ற சொற்களுக்கு இலக்குமி என்று அகராதிகள் பொருள் கூறுகின்றன. பூமியே அனைத்து செல்வங்களின் இருப்பிடம் என்பதால் பூமித்தாயே இலக்குமி ஆவாள். செய்யாள் என்பது செய்யை உடையவள் என்று விரிந்து பூமித்தாயைக் குறிப்பதால் இங்கும் செய் என்பது நிலத்தையே குறிக்கிறது என்று அறியலாம். இனி இப் பழமொழி உணர்த்தும் கருத்தினை ஒரு சிறுகதையுடன் காணலாம்.

குதிரை ஏற்றம் பயில விரும்பினான் ஒருவன். ஆனால் அவனுக்குக் குதிரை மீது ஏறவே பயம் எங்கே குதிரை அவனை மேலிருந்து கீழே தள்ளிவிடுமோ என்று. ஆனால் அவனுக்கோ கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. அதாவது குதிரையின் மீதும் ஏறவேண்டும்; அதேசமயம் குதிரையும் அவனைத் தள்ளிவிடக்கூடாது. அதற்காக ஒரு தந்திரம் செய்தான். வலதுகாலைத் தூக்கி குதிரையின் மேலே போட்டுவிட்டு இடதுகாலைத் தரையில் ஊன்றிக் கொண்டான். இப்படிச் செய்தால் பாதுகாப்பாகக் குதிரைப்பயணம் செய்யலாம் என்ற நினைப்பு அவனுக்கு. இப்போது குதிரையைப் பின்னால் இருந்து உசுப்பினான். உடனே குதிரை பாய்ந்து ஓடத் துவங்கியது. இதனால் நிலைதடுமாறிக் கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.

அப்போதுதான் அவனுக்குப் புரிந்தது " குதிரைமேல் ஒருகாலையும் தரையில் ஒருகாலையும் வைத்துக் கொண்டால்" குதிரைப் பயணமும் செய்ய முடியாது; நடக்கவும் முடியாது என்று. அதாவது ஒரு நேரத்தில் இரண்டு செயல்களில் கவனத்தை வைத்தால் ஒரு செயலும் உருப்படியாய் நடக்காது. இதுவே இப் பழமொழி உணர்த்தவரும் உண்மையான கருத்தாகும்.

சரியான பழமொழி:
அயத்தில்
ஒரு கால்; செயத்தில் ஒரு கால்.

வெள்ளி, 21 ஆகஸ்ட், 2009

ஆத்துல போட்டாலும்


பழமொழி:
ஆத்துல போட்டாலும் அளந்து போடணும்

தற்போதைய பொருள்:
தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுவரும் பல தமிழ்நாட்டுப் பழமொழிகளில் இதுவும் ஒன்று. 'ஆற்றில்' என்னும் தூயதமிழ்ச்சொல்லே 'ஆத்துல' என்று கொச்சைவழக்கில் மருவியதாகப் புரிந்துகொண்டு 'ஆற்று நீரில் போட்டாலும் அளந்து தான் போடவேண்டும்' என்று இப் பழமொழிக்குப் பொருள் கொள்கின்றனர். இன்னும் சிலர் 'அகத்தில்' என்னும் சொல்தான் 'ஆத்துல' என்று மருவியதாகப் புரிந்துகொண்டு 'அகத்துக்கே அதாவது வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்யவேண்டும்' என்று பொருள் கூறுகின்றனர்.

தவறு:
மேற்காணும் இரண்டு கருத்துக்களுமே தவறானவை. ஏனென்றால் இவை இரண்டுமே அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை உணர்த்துகின்றன. முதலில் ஆற்றுநீரில் போடுவதைப் பற்றிப் பார்ப்போம். இக் கருத்து அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். ஆற்றுநீரில் எதைப் போடவேண்டும்? ஏன் போடவேண்டும்?. கழிவுப் பொருட்களையா?. ஆற்றுநீரில் கழிவுப் பொருட்களைப் போட்டால் நீரின் தூய்மை கெடுவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப் பட்டுவிடும். அப்படியே போட்டாலும் அளந்துபோடச் சொன்னால் மிச்சத்தை எங்கே போடுவதாம்?. அதுமட்டுமின்றி எல்லா ஊர்களிலும் ஆறு ஓடுவதில்லை. ஆறில்லாத ஊர்களில் வசிப்பவர்கள் கழிவுகளை எங்கே போடுவார்கள்?. எனவே இப் பழமொழியானது கழிவுகளை ஆற்றில் போட்டு ஒழிப்பதற்காகக் கூறப்பட்டதாக இருக்க முடியாது என்பது தெளிவாகிறது.

அடுத்து வீட்டுச் செலவுக்கு வருவோம். வீட்டிற்கே செலவு செய்தாலும் அளந்துதான் செய்ய வேண்டும் என்று இப் பழமொழிக்குப் பொருள்கூறுவது ஏற்புடையதல்ல. ஏனென்றால் போடுதல் என்ற சொல்லிற்கு செலவுசெய்தல் என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை. இல்லாத பொருளை வருவித்துக் கூறுவதால் இக் கருத்துப் பொருந்தாத ஒன்றாகும். அன்றியும் பழமொழிகள் யாவும் அனுபவம் நிறைந்த சான்றோர்களால் இளைய தலைமுறையினரின் நல்வாழ்விற்காக உருவாக்கப் பட்டவை என்று நாம் அறிவோம். எனவே இதுபோன்ற அறிவுக்குப் புறம்பான பொருத்தமற்ற கருத்துக்களை அச் சான்றோர்கள் கூறி இருக்க முடியாது என்று தெளியலாம். இப் பழமொழியின் தவறான கருத்துக்களுக்குக் காரணம் இப் பழமொழியில் உள்ள தூயதமிழ்ச் சொற்கள் கொச்சைவழக்கில் திரிந்ததும் ஒருசில எழுத்துப் பிழைகளுமே. இனி அவற்றைப் பார்க்கலாம்.

திருத்தம்:
இப் பழமொழியில் வரும் 'ஆத்துல' என்னும் கொச்சைச் சொல்லின் தூய தமிழ்வடிவம் 'அகத்தில்' என்பதாகும். அகம் என்ற சொல்லிற்குப் பல பொருட்கள் உண்டெனினும் இப் பழமொழியில் வரும் பொருள் 'மனம் அல்லது நினைவு' என்பதாகும். அகத்தில் போடுதல் என்பது நினைவில் வைத்தலாகும். 'அளந்து' என்ற சொல்லில் எழுத்துப் பிழை உள்ளது. இது 'அறிந்து' என்று வரவேண்டும். இவையே இப் பழமொழிக்கான திருத்தங்கள் ஆகும்.

நிறுவுதல்:
புதுப்புது கருத்துக்களை நினைவில் கொள்ளும் முறை குறித்து இயற்றப்பட்டதே இப் பழமொழி ஆகும். மனித வாழ்க்கையில் புதிய கருத்துக்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவற்றை நினைவில் கொள்ளும்போது மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையேல் பலப்பல கேடுகளைச் சந்திக்க நேரிடும். சான்றாக ஒரு மாணவன் கல்வி கற்பதை எடுத்துக் கொள்வோம். கல்வி கற்கும்போது ஆசிரியர் நாள்தோறும் புதுப்புது தகவல்களை மாணவனுக்குக் கூறுகிறார். அவற்றை மாணவன் உள்வாங்கும்போது அத் தகவல்களைப் பற்றி நன்கு அறிந்தபின்னரே நினைவில் கொள்ளவேண்டும். தகவல்களின் தன்மைகளையும் நோக்கங்களையும் அறியாமல் வெறுமனே நினைவில் கொள்ளும்போது தகவல் குறுக்கீடு உண்டாகித் தெளிவின்மை பிறக்கும். அறிவுத் தெளிவின்மையே பல தவறான செயல்பாடுகளுக்கான மூலமாகும். இதனால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது பாதிக்கப்படுவதுடன் வாழ்வதே கடினமாகவும் தோன்றும். தெளிவின்மை எல்லை மீறும்போது பைத்தியமாகிவிடுகின்ற கேடும் இருக்கிறது.

மனித வாழ்க்கையில் அறிவின் பயன்பாடு எவ்வளவு இன்றியமையாதது என்று நாம் நன்கு அறிவோம். ஏனை உயிரினங்களில் இருந்து மனிதர்களை வேறுபடுத்திக் காட்டுவதே அறிவுதானே. வள்ளுவர் ஒருபடி மேலேபோய் அறிவினை ஒரு கருவி எனக் குறிப்பிடுகிறார். 'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்று 421 ஆம் குறளில் அவர் குறிப்பிடுவதில் இருந்து நல்ல தெளிவான அறிவினை ஆயுதமாகக் கொண்டு அனைத்துத் துன்பங்களில் இருந்தும் நம்மைக் காத்துக் கொள்ள இயலும் என்று அறியலாம். இப்படிப்பட்ட அறிவு தெளிவாக இல்லாவிட்டால் விளைவு மோசமாகிவிடும் அல்லவா?. அதனால் தான் கருத்துக்களை நினைவில் கொள்ளும்போது தெளிவாக அறிந்தபின்னரே நினைவில்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுகின்றனர். இதுவே இப்பழமொழியின் உண்மையான விளக்கமாகும்.

அன்றியும் கருத்துக்களை நினைவில் கொள்வது என்பது கடினமான செயல் ஒன்றும் அல்ல. ஏனென்றால் இதற்காக உடலுழைப்போ பொருட்செலவோ செய்யத் தேவையில்லை. இயல்பான மனநிலையில் உள்ள அனைவராலும் ஓரளவுக்குப் புதிய கருத்துக்களை மிக எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். அதனால் தான் 'அகத்தில் போட்டாலும்' என்று உம்மை சேர்த்துக் கூறப்படுகிறது. இங்கு உம்மையானது 'எளிதான செயல்தானே' என்ற இகழ்ச்சிப்பொருளில் வந்துள்ளது.


'நினைவில் கொள்ளவேண்டும் அவ்வளவுதானே' என்று இகழ்ச்சியாக எண்ணி கருத்துக்களைத் தெளிவாக அறிந்துகொள்ளாமல் நினைவில் கொள்ளக்கூடாது என்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறது இப்பழமொழி.



இப்பழமொழியின் திரிபு வரலாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அகத்தில் -> அகத்தில -> அகத்துல -> ஆத்துல

சரியான பழமொழி:


அகத்தில் போட்டாலும் அறிந்து போடவேண்டும்.

புதன், 27 மே, 2009

அம்மியும் அடியும்


பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும்.

தற்போதைய பொருள்:

அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லைக் கூட நகர்த்த முடியும்.

தவறு:

அம்மிக்கல்லை அக்கால இல்லத்தரசிகளின் கைஅரைப்பான் என்றே கூறலாம். உணவுப் பொருட்களை சிறிய அளவில் அரைப்பதற்கென்று மின்னூறி(மிக்ஸி) வந்துவிட்ட இந்தக் காலத்தில் அம்மிக்கல்லைப் பார்ப்பதே அரிதாய் இருக்கின்றது. பழைய வீடுகளில் எல்லாம் இந்த அம்மிக்கல்லானது வீட்டுத் திண்ணையின் ஒரு மூலையில் கருப்பு ஆடு போல படுத்திருக்கும். இது மட்டும் தனியாக இருக்காமல் துணைக்கு ஒரு குழவிக் கல்லையும் சேர்த்துக்கொண்டு தனது தலைக்குமேலே அதனைப் படுக்க வைத்திருக்கும். ஒரு அம்மிக்கல்லின் எடை (குழவிக்கல் நீங்கலாக) ஏறக்குறைய நாற்பது கிலோ இருக்கும். இந்த நாற்பது கிலோ எடையுள்ள ஒரு அம்மிக்கல்லை நகர்த்திவைக்க ஏன் அதனை அடியோ அடி என்று அடிக்க வேண்டும்?. இரண்டு கைகளால் நன்கு அழுத்தித் தள்ளினால் போதும்; நகர்ந்துவிடும். முடியாதவர்கள் ஒரு கடப்பாரையால் கீழிருந்து நெம்பினால் போதும்; நகர்ந்துவிடும். அதுவும் முடியாதவர்கள் துணைக்கு யாரையாவது அழைத்துக் கொள்ள வேண்டியதுதான்!.

இப்படிப் பல வழிகள் இருக்க ஏன் அம்மிக்கல்லை அடித்துப் படாதபாடு படுத்தவேண்டும்?. ஏற்கெனவே அடிமேல் அடி வாங்கித் தான் அது நம் வீட்டுக்கே வந்திருக்கிறது. ஆம், ஒரு அம்மிக்கல் சரியான வடிவம் பெறும்வரை ஆசாரியின் உளியால் எவ்வளவு அடிகளைப் பெறுகிறது என்பதை நாம் அறிவோம். இந் நிலையில் மேலும் பல அடிகள் அதற்குத் தேவையா?. பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து அந்த அம்மிக்கல் உடைந்துவிட்டால்?. முதலுக்கே மோசம் அல்லவா ஆகிவிடும்!. நடைமுறை உண்மையும் அது தானே. நகர்த்துகிறேன் பேர்வழி என்று ஒரு அம்மிக்கல்லை அடியோ அடி என்று அடித்துப் பாருங்கள். இறுதியில் அது உடைந்தே போய்விடும். எனவே அடிமேல் அடிவைத்தால் அம்மியும் நகரும் என்று பொருள் கூறும் இப்பழமொழி தவறு என்பது தெளிவாகிறது. இந்தத் தவறான பொருளுக்குக் காரணம் இப் பழமொழியில் வரும் 'நகரும்' என்ற சொல்லில் உள்ள ஒரே ஒரு எழுத்துப் பிழை தான். அதைப் பற்றிக் கீழே காணலாம்.  

திருத்தம்:

'நகரும்' என்ற சொல்லிற்குப் பதிலாகத் 'தகரும்' என்று வரவேண்டும். இதுவே இப் பழமொழியின் திருத்தமாகும். தகரும் என்றால் 'உடையும், சிதறும்' என்று பொருள்படும்.

நிறுவுதல்:

'முயன்றால் முடியாதது எதுவுமில்லை' என்னும் உண்மையினை உணர்த்த வந்த அருமையான பழமொழியே இது. நம்மில் பலரும் பல பல குறிக்கோள்களுடன் நாள்தோறும் நன்கு உழைக்கத் தான் செய்கிறோம். ஆனால் வெற்றி எல்லோரையுமா அரவணைக்கிறது?. இல்லையே. அன்றியும் வெற்றி ஒரே இடத்தில் நிலைத்து இருப்பதுமில்லை. எனவே வெற்றிக் கனியைச் சுவைக்க நாள்தோறும் கடினமாக உழைக்கத் தான் வேண்டும். ஆனால் எதுவரை?. நாம் எண்ணிய செயல்கள் அனைத்திலும் முழுமையான வெற்றி கிட்டும் வரை. சிலமுறை முயன்று தோல்விகளைத் தழுவியவர்கள் கூறும் வார்த்தை இது தான்: 'என்னால் முடியவில்லை; எனக்கு அது கிடைக்காது.' இது தவறான கருத்தாகும். ஏனென்றால் முடியும் என்று முழுமூச்சுடன் நம்பி தொடர்ந்து செயல்பட்டால் முடியாதது எதுவுமில்லை. கிடைக்காதது எதுவுமில்லை. இதனால் தான் திருவள்ளுவரும் 'முயற்சி திருவினை ஆக்கும்' என்று கூறுகிறார். இங்கே வள்ளுவர் கூறும் முயற்சி என்பது விடாமுயற்சியே ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கூறும் வார்த்தை இதுதான்: 'என்னால் முடியும் என்ற நம்பிக்கையும் விடாமுயற்சியுமே எனது வெற்றிக்கான காரணங்கள்.' 

விடாமுயற்சியும் கடினஉழைப்பும் இருந்தால் அரிய செயல்களைக் கூட நம்மால் செய்துமுடிக்க இயலும். இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால் விடாமுயற்சி என்னும் அடிமேல் அடி வைத்தால் உடையாது என்று நாம் எண்ணிக் கொண்டிருக்கும் கடினமான அம்மிக்கல் போன்ற அரிய செயல்கள் கூட நிறைவேறும். இதுவே இப் பழமொழியின் கருத்தாகும்.

இளைய தலைமுறையினருக்கு வாழ்வில் நம்பிக்கை ஊட்டும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள இப் பழமொழியின் உண்மையான பொருள் இது தான்: 'அடிமேல் அடி வைத்தால் அம்மிக்கல்லும் உடைந்துசிதறும்.' இப் பழமொழியில் வரும் 'அம்மிக்கல்' என்பது அரிய செயலையும் 'அடிமேல் அடி வைத்தல்' என்பது விடாமுயற்சியினையும் உருவகமாகக் குறித்து நிற்கின்றன.

சரியான பழமொழி:

அடிமேல் அடிவைத்தால் அம்மியும் தகரும்.


............................வாழ்க தமிழ்!..................................

செவ்வாய், 26 மே, 2009

பழம்நழுவிப் பாலில் விழுந்தால்?


பழமொழி:

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல

தற்போதைய பொருள்:

உண்ணும்போது கையில் இருந்த பழம் நழுவிப் பாலில் விழுந்ததைப் போல மிக்க நன்மை விளைந்தது.

தவறு:

முதல் கேள்வி இதுதான். உண்மையிலேயே பழம் நழுவிப் பாலில் விழுந்தால் விளைவு என்ன ஆகும்?. அது பால் இருக்கும் பாத்திரத்தின் வாய் அளவினையும் பழத்தின் அளவினையும் பொறுத்தது. பாத்திரத்தின் வாய் பழத்தைவிட சிறியதாய் இருந்தால் அந்த பாத்திரம் பழத்தினால் தட்டிவிடப்பட்டு பால் முழுவதும் தரையில் கொட்டிவிடும். பாத்திரத்தின் வாய் பழத்தைவிட பெரியதாய் இருந்தால் பழமானது பாத்திரத்தின் உள்ளே விழுந்து பால் வெளியே தெறிக்கும். உள்ளே விழுகின்ற பழத்தின் அளவினைப் பொறுத்து வெளியே தெறிக்கும் பாலின் அளவு மாறுபடும். அதிலும் புளியம்பழமோ ஆரஞ்சுப் பழச் சுளையோ தவறுதலாகப் பாலில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. பால் முழுவதும் திரிந்து வீணாகி விடும். எப்படிப் பார்த்தாலும் பழம் நழுவிப் பாலில் விழுந்தால் பாலுக்குத் தான் பாதிப்பு; பழத்துக்கு இல்லை. இப்படி விழுந்த பழத்துக்குப் பாலினால் உடனே சுவை கூடுவதுமில்லை. ஏனென்றால் பால் இனிப்பாக இருந்து அதில் பழத்தை நன்கு ஊறவைத்தால் தான் பழத்துக்குச் சுவை கூடும். பாலில் நழுவி விழுவதால் மட்டும் பழத்துக்குச் சுவை கூடுவதில்லை என்பதால் மேற்காணும் பொருளில் இப் பழமொழியினைப் பயன்படுத்துவது தவறு என்பதை அறியலாம்.

இப்படி நன்மை எதையும் தராமல் நடக்கின்ற இந்த நிகழ்ச்சியினை மிக்க நன்மை தருகின்ற ஒரு நிகழ்வாகக் கருதி அதனை மக்கள் எப்படி உவமையாகப் பயன்படுத்துகின்றனர்?. இத் தொடர் எப்படி மக்களால் பழமொழியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது?. இதற்கான விடைகளை ஆய்வு செய்ததில் கீழ்க்காணும் கருத்துக்கள் கிடைத்தன. பழமொழியின் பொருள் சரியானது தான். அதில் எவ்விதத் தவறும் இல்லை. பழமொழியில் உள்ள 'பால்' என்ற சொல்லில் தான் ஒரே ஒரு எழுத்துப் பிழை உள்ளது. அதைத் திருத்தி எழுதினால் தான் நாம் இன்று மேற்கொண்டிருக்கும் பொருள் இப்பழமொழிக்குப் பொருத்தமாக அமையும். அதைப் பற்றிக் கீழே காணலாம்.

திருத்தம்:

பழமொழியில் வரும் 'பால்' என்ற சொல்லுக்குப் பதிலாக 'பாகு' என்ற சொல் வந்திருக்க வேண்டும். இதுவே திருத்தம் ஆகும். இங்கே பாகு என்பது வெல்லப்பாகினைக் குறிக்கும்.

நிறுவுதல்:

பழங்களில் பலவகைகள் இருந்தாலும் இனிப்புச் சுவை உடைய பழங்கள் தான் மக்களால் பெரிதும் விரும்பி உண்ணப் படுகின்றன. இத்தகைய பழங்களை உண்ணும்போது கைநழுவித் தவறுதலாகக் கீழே ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஆறவைத்திருக்கும் வெல்லப்பாகில் விழுந்துவிட்டால் என்ன ஆகும்?. வெல்லப்பாகானது பால்போல அதிக நீர்த்தன்மை உடையது அல்ல என்பதால் வெளியே தெறிக்காது. மாறாக விழுந்த பழம் வெல்லப்பாகிற்குள் மூழ்கிவிடும். இப்படி மூழ்கிய பழத்தை வெளியே எடுத்தால் அந்தப் பழத்தின் மேல்புறம் முழுவதும் வெல்லப்பாகு ஒட்டியிருக்கும். இப்போது இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் அதன் சுவையைச் சொல்லவும் வேண்டுமோ?. வெல்லப்பாகின் சுவையுடன் பழத்தின் சுவையும் சேர்ந்து நாக்கிற்கு ஒரு இனிய விருந்து அல்லவா கிடைக்கும்!. அத்துடன் வெல்லப்பாகில் புளியம்பழம் விழுந்தாலும் சரி ஆரஞ்சுப் பழச்சுளை விழுந்தாலும் சரி அது வெல்லப்பாகினை பாதிக்காது.

இந்த வெல்லப்பாகு நீண்ட நாள் வரையிலும் கெடாது என்பதால் இந்தப் பாகிற்குள் இனிப்பான பழங்களைப் பலநாட்கள் வரை ஊறவைத்தும் உண்ணலாம். அவ்வாறு உண்டால் பழங்கள் மிக்க இனிப்புச் சுவையுடன் இருக்கும். வெல்லப்பாகின் இத் தன்மையினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப் பட்டதே இந்தப் பழமொழி. ஏற்கெனவே இனிப்பாக இருக்கும் பழத்தின் சுவையினை வெல்லப் பாகானது மேலும் கூட்டுவதால் அதிக மகிழ்ச்சியையும் மிக்க நன்மையையும் குறிப்பதற்கு இப் பழமொழி ஒரு உவமையாகப் பயன்படலாயிற்று.

சரியான பழமொழி:

பழம் நழுவிப் பாகில் விழுந்தது போல
....................................வாழ்க தமிழ்!...........................