ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

மதுரையை எரித்த கண்ணகி

முன்னுரை:

'கண்ணகி' - கணவன் மீது கொண்ட பேரன்பினால் தன் இளமை வாழ்க்கையை தொலைத்தவள். இருந்தாலும் இறுதியில் தன் கற்பை நிலைநாட்டி இலக்கிய வரலாற்றில் நீங்கா இடம்பெற்ற கற்புக்கரசி. இவளது கற்பிற்காகவே எழுதப்பட்டது அன்றோ சிலப்பதிகாரக் காவிய நூல்?. சிலப்பதிகார ஆசிரியரான இளங்கோவடிகள் மட்டுமின்றி பிற ஆசிரியர்களும் இவளைப் போற்ற மறக்கவில்லை. இவளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் எத்தனையோ கற்புக்கரசிகள் வாழ்ந்திருந்தாலும் 'கற்புக்கோர் கண்ணகி' என்று சான்று காட்டும் அளவுக்கு இவள் ஒரு தகைசால் பத்தினி ஆவாள். அவ் வகையில் இவளும் ஒரு சான்றோளே ஆவாள். இவள் தனது கற்பின் வலிமையால் தனக்கு அநீதி இழைத்த பாண்டியனின் மதுரை மாநகரை தனது ஒரு முலையினால் எரித்தாள் என்று கூறுகிறது சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்திற்கு விளக்கம் எழுதிய பெரியோர்கள் கண்ணகி மதுரையினை தனது மார்பகத்தினால் எரித்தாள் என்று கூறி உள்ளனர். இந்த விளக்கம் எந்த அளவிற்கு உண்மை என்பதைப் பற்றிய ஆய்வே இந்த கட்டுரை ஆகும்.

கண்ணகி மதுரையை எரித்தல்:

சிலப்பதிகாரத்தில் கண்ணகி மதுரையை எரித்த நிகழ்ச்சியானது மதுரைக் காண்டத்தில் வஞ்சின மாலையிலும் அழற்படு காதையிலும் கூறப்பட்டுள்ளது. இவற்றில் வஞ்சின மாலை கண்ணகியின் சீற்றத்தினை நம் கண்முன்னே கொண்டுவந்து நிறுத்துகின்றது. கணவனை இழந்த நிலையில் சொல்லொணாத் துயரமும் சீற்றமும் கொண்ட கண்ணகி மதுரையினை எவ்வாறு எரித்தாள் என்று கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் 
                                       - பா.எண்: 5

இதற்கு கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கமானது ' இடது மார்பகத்தினை கையால் திருகி, மதுரை மாநகரினை மூன்றுமுறை வலமாகச் சுற்றிவந்து, மிகுந்த வருத்தத்துடன், தேன் நிறைந்த தெருவிலே, விளங்கிய அணியினள் ஆன கண்ணகி, அம் மார்பகத்தினை வட்டித்து விட்டெறிந்தாள்.' என்பது ஆகும்.  

கண்ணகி எறிந்தது மார்பகமா?

கண்ணகி தனது இடப்பக்க மார்பகத்தினை கையினால் அறுத்து  மதுரை மீது விட்டெறிந்தாள் என்று கூறுகின்றனர் தற்போதைய உரையாசிரியர்கள். மேற்காணும் பாடலில் வரும் முலை என்ற சொல்லுக்கு மார்பகம் என்ற பொருள் கொண்டு இவ்வாறு விளக்கம் கூறுகின்றனர். ஆனால் இது பொருந்துமா என்று இங்கே பார்ப்போம்.


பெண்களின் மார்பகம் என்பது அவர்களது உடலுடன் பல தசைநார்களால் பின்னிப் பிணைந்துள்ளதும் உடல் தோலால் மூடப்பட்டுள்ளதுமான ஒரு உறுப்பு ஆகும். இதனை ஆயுதங்கள் ஏதுமின்றி யாரும் உடலில் இருந்து அறுத்துவிட முடியாது. குறிப்பாக பெண்களால் வெறும் கைகளால் இதைச் செய்யவே இயலாது. இந்நிலையில் கண்ணகி தன் மார்பகத்தினை கையால் அறுத்து எறிந்தாள் என விளக்கம் கூறியிருப்பது தவறு என்பதை அறியலாம். 

சிலப்பதிகாரப் பதிகத்தின் முதல் பாடலில் கண்ணகியினைக் குறிப்பிடும் புலவர் இவ்வாறு கூறுகிறார்: ' ... பொலம்பூ வேங்கை நலங்கிளர் கொழுநிழல் ஒருமுலை இழந்தாள் திருமா பத்தினி...' இதன் பொருளானது: ' பொன்போன்ற பூக்களை உடைய வேங்கை மரத்தின் நல்ல நிழலில் ஒரு முலையினை இழந்த நிலையில் ஒரு திருமா பத்தினி நின்றிருந்தாள்' என்பது ஆகும். புலவர் இங்கே முலை என்பதனை மார்பகம் என்ற பொருளில் கூறி இருக்க முடியாது. ஏனென்றால் எந்தப் பெண்ணும் தனது மார்பகம் வெளியே தெரியும் வண்ணம் ஆடை உடுத்த மாட்டாள். அதிலும் கற்புக்கரசியாகிய கண்ணகி இவ்வாறு செய்திருப்பாளா?. ஒருபோதும் செய்திருக்க மாட்டாள். அன்றியும் கண்ணியம் மிக்க தமிழ்ப் புலவர் யாராகிலும் ஒரு பெண்ணைப் பார்க்கும்போது அவள் முகத்தைப் பார்ப்பார்களே ஒழிய அவளது மார்பகம் விலகி இருக்கிறதா இல்லையா என்று ஒருபோதும் பார்க்க மாட்டார். இத்தகைய எண்ணம் தமிழினத்திற்கே இழுக்கல்லவா?. எனவே இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறித்து வந்திருக்காது என்று தெளியலாம்.

குன்றக்குரவையின் முதல் பாடலில் குறவர்கள் கண்ணகியை நோக்கிக் கேட்பதாக உள்ளது. அதில் " மலைவேங்கை நறுநிழலின் வள்ளி போல்வீர்! மனம் நடுங்க முலை இழந்து வந்து நின்றீர்! யாவிரோ?" என்னும் அடி உள்ளது. இதில் வரும் முலை என்னும் சொல்லுக்கு மார்பகம் எனப் பொருள் கொண்டால் கண்ணகி தன் மார்பகம் வெளியே தெரியுமாறு குறவர்களின் முன்னே தோன்றினாள் என்றல்லவா பொருள் வரும்?. கண்ணகி அவ்வாறு செய்ய மாட்டாள் என்பதால் இங்கும் முலை என்பது மார்பகத்தைக் குறிக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இதுபோல பல சான்றுகளை சிலப்பதிகாரத்தில் இருந்தே காட்டலாம். ஆனால் கட்டுரையின் விரிவஞ்சி சில சான்றுகளே மேலே கூறப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கண்ணகி மதுரையை எரிக்க அறுத்து எறிந்தது மார்பகம் அல்ல என்பதை அறியலாம்.

கண்ணகி எதை எறிந்தாள்?

கண்ணகி அறுத்து எறிந்தது அவளது மார்பகம் இல்லை என்றால் அவள் எதை எறிந்திருக்கக் கூடும்?. வெறும் கைகளால் எளிதில் அறுத்து எறியக்கூடிய அதே சமயம் வெம்மை மிக்க ஒரு சிறு உறுப்பினைத் தான் கண்ணகி அறுத்து எறிந்திருக்க வேண்டும் அல்லவா?. அவ்வாறெனில் அந்த உறுப்பு அதாவது முலை என்பது ஒரு கண்ணாகத் தான் இருக்கும். இது வெறும் ஊகமல்ல; நிறுவப்படப் போகின்ற ஓர் பேருண்மை. அதற்கு முன்னர் கண்ணைப் பற்றிய சில உண்மைகளைக் கீழே காணலாம்.

கண்ணானது ஒரு சிறிய அதேசமயம் மிகவும் இன்றியமையாத உறுப்பாகும். உறுப்புக்களில் அழகானதும் பெண்களால் மிகவும் அழகுபடுத்தப் படுவதும் கண்ணே. மனித உணர்வுகளைக் காட்டும் கண்ணாடியும் இதுவே. அதேசமயம் இந்த உணர்வுகளால் மிகவும் பாதிக்கப்படுவதும் கண் தான். துயர உணர்வு  மிகும்போது கண்களில் நீர் துளிர்ப்பதையும் எல்லையற்ற சினத்தின்போது கண்கள் கோவைப்பழமாகச் சிவப்பதையும் நாம் காண்கிறோம். குறிப்பாக ஒருவர் சினம்கொள்ளும்போது வெளிப்படுகிற வெப்ப ஆற்றல் கண்களைச் சிவப்பாக்குவதுடன் வெப்பப் படுத்தவும் செய்கிறது. இந் நிலையில் இந்தக் கண்களுக்கு எரிக்கும் ஆற்றல் உண்டாகிறது. இதைத்தான் 'கண்களால் சுட்டெரித்தல்' என்று கூறுவார்கள். இது சாத்தியமா இல்லையா என இங்கே நாம் நிறுவப்போவது இல்லை. ஆனால் கண்களால் சுட்டெரித்த பல நிகழ்வுகள் புராண இலக்கியங்களில்  இடம்பெற்றுள்ளன. சிவபெருமான் முப்புரம் எரித்தது, காமனை எரித்தது, நக்கீரரை எரித்தது என சிலவற்றை அதற்கு சான்றுகளாகக் கூறலாம்.

சினம் எல்லோருக்கும் வரும்; அந்த சினத்தினால் கண்களும் சிவக்கும். ஆனால் சிவனுடைய கண்களுக்கு மட்டுமே எரிக்கும் ஆற்றல் உண்டு. அதனால் தான் சிவனை 'கண்ணுதல் பெருமான்' என்று அழைப்பர். சிவனுக்கு மட்டுமின்றி சீவனுக்கும் (மாந்தருக்கும்) எரிக்கும் ஆற்றல் உண்டு என்பதற்கு ஓர் சான்றே கண்ணகி ஆவாள். நீதிமுறை தவறி  தன் கணவனை கொன்ற பாண்டிய மன்னனின் மீது பெரும்சினம் கொண்ட கண்ணகி ஓர் பத்தினி (கற்புக்கரசி) என்பதால் அவளது சினம் மதுரை நகரை எரித்தது எனலாம். பெருகிய சினத்தினால் சிவந்து வெம்மையுற்ற தனது கண்களில் இடது கண்ணைப் பறித்த கண்ணகி மதுரையினை மூன்றுமுறை சுற்றிவந்து எறிந்ததாகக் கீழ்வரும் சிலப்பதிகாரப் பாடல் கூறுகிறது.

இடமுலை கையால் திருகி மதுரை
வலமுறை மும்முறை வாரா அலமந்து
மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் 
                                       - பா.எண்: 5

கண்ணகி மதுரையை எரிக்க தனது இடது கண்ணைப் பறித்து நிற்கின்ற நிலையிலும் அவளது கண்ணின் அழகை புலவர் பாராட்டத் தவறவில்லை. மேற்காணும் பாடலில் 'கள் குடிக்கும் வண்டு போன்ற கண்மணியை உடைய கண்' என்று மூன்றாம் வரியில் பாடுகிறார் பாருங்கள். இதில்வரும் மறுகு என்னும் சொல் மறுகித் திரியும் இயல்புடைய வண்டினைக் குறிக்கும். மட்டு என்பது கள்ளினைக் குறிக்கும். கண்ணகி மதுரையை எரிக்க கண்ணைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. கண் மட்டுமே எளிதில் பறித்துவிடக் கூடிய சிறிய உறுப்பாகும். இதில் இருந்து கண்ணகி மதுரையை எரிக்க அறுத்து எறிந்த முலை என்பது கண்ணாகத் தான் இருக்கும் என்ற எண்ணம் வலுவாகிறது.

முலை என்றால் என்ன?

முலை என்ற சொல்லுக்கு இன்றைய அகராதிகள் மார்பகம் என்ற பொருளை மட்டுமே கூறுகின்றன.  ஆனால் பல இடங்களில் இச்சொல் மார்பகத்தைக் குறிக்காததை மேற்கண்ட சான்றுகளால் அறிந்தோம். என்றால் இச்சொல் உணர்த்தும் வேறு சில பொருள்கள் என்ன என்று பார்க்கலாம்.

முலை என்னும் சொல் உணர்த்தும் வேறு பொருட்கள்
'கண் புருவம்' மற்றும் 'கண்' ஆகும்.


நிறுவுதல்:

கண்ணகி அறுத்து எறிந்ததாகக் கூறப்படும் முலை என்பது கண்ணையே குறிக்கும் என்பதை நிறுவுவதற்கு பல ஆதாரங்கள் உண்டெனினும் சில ஆதாரங்கள் மட்டுமே இங்கே காட்டப்படுகின்றன. முதலில் சிலப்பதிகாரத்தில் இருந்தே சில சான்றுகளைக் காணலாம்.

நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த உறைமலி உய்யாநோய்
ஊர்சுணங்கு மென்முலையே தீர்க்கும் போலும் - கானல்வரி - பா.எண்: 4
இதன் பொருளானது ' முழுநிலா போன்று ஒளிவீசும் முகத்தில் மீன் போலும் கண்கள் தோற்றுவித்த காதல்நோய்க்கு சுணங்கணிந்த கண்களே மருந்து போலும்.' என்பதாகும். ஆம், ஒரு பெண்ணின் கண்கள் ஓர் ஆடவனின் உள்ளத்தில் தோற்றுவிக்கின்ற காதல் நோய்க்கு அப் பெண்ணின் கண்களே அன்றி அவளது மார்பகங்கள் மருந்தாக முடியாது அல்லவா?. இதே கருத்தினை வள்ளுவரும் 'குறிப்பறிதல்' அதிகாரத்தில் கூறுகிறார்.

இருநோக்கு இவள் உண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்று அந்நோய் மருந்து - குறள் : 1091

அடுத்து அதே கானல்வரியில் மேலும் ஒரு சான்று:
...முழுமதி புரைமுகமே! இளையவள் இணைமுலையே எனை இடர் செய்தவையே!' - பா.எண்: 7
'முழுநிலா போன்ற முகமும் அதில் இணையாக விளங்கும் கண்களும் என்னை இடர் செய்தன' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் முகத்தினை முழுநிலா என்று முதலில் வருணிக்கும் காதலன் அம்முகத்தில் உள்ள கண்களைப் பற்றிக் கூறாமல் உடனே மார்பகத்தைப் பற்றிக் கூறுவானா? மாட்டான் அன்றோ?. எனவே இங்கும் முலை என்பது கண்களையே குறித்து வருவதை அறியலாம்.

'கதிர் இள வன முலை கரை நின்று உதிர்த்த கவிர் இதழ்ச் செவ்வாய்' - புறஞ்சேரி இறுத்த காதை - 163
'ஒளிவீசுகின்ற இளமை மிக்க அழகிய கண்களின் ஈற்றில் முருக்கமலர் போன்ற செம்மை பூசிய கடைக்கண் ' என்பது இதன் பொருளாகும். முலை என்பதற்கு மார்பகம் என்ற பொருள் கொண்டால் இவ் வரியின் விளக்கம் பொருந்தாது என்பதுடன் பண்பற்றதாகவும் இருக்கும்.

'மேகலை ஒலியாது மென்முலை அசையாது' - நடுகல்காதை -72
'(நாட்டியத்தின்போது ஒலிக்கும்) மேகலை ஒலிக்காமல் (நடனமாடும் பெண்ணின்) கண்கள் அசையாது' என்பதே இதன் பொருளாகும். பெண்ணின் மார்பகங்கள் அசையாது என்று கூறுவது பண்பற்றதாகும்.

சிலப்பதிகாரப் பதிகத்தில் இருந்து மேலும் ஒரு சான்றைப் பார்க்கலாம்.

'பத்தினி ஆதலின் பாண்டியன் கேடுற
முத்தார மார்பின் முலைமுகம் திருகி
நிலைகெழு கூடல் நீளெரி ஊட்டிய ' - 35

இதன் பொருளானது ' பத்தினி என்பதால் முத்துமாலை அணிந்த மார்பினனாகிய பாண்டிய மன்னன் கேடுற தனது கண்ணைத் திருகி எறிந்து கூடல் நகராகிய மதுரைக்கு தீ மூட்டிய' என்பதாகும். இங்கும் முலை என்பது கண்ணையே குறிப்பதை அறியலாம்.

முலை என்ற சொல் கண்புருவம் என்ற பொருளில் கீழ்க்காணும் பாடல்களில் ஆளப்பட்டுள்ளது.

'திருமுலைத் தடத்திடை தொய்யில் அன்றியும்' - மனையறம் படுத்த காதை -69
'மலையத்து ஆரமும் மணிமுத்து ஆரமும் அலர்முலை ஆகத்து' - அந்திமாலை சிறப்புசெய் காதை -63
'ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்' - வேனில் காதை -95
'சாந்தம் தோய்ந்த ஏந்திள வனமுலை' - அழல்படு காதை -119

பிற நூல்களில் முலை:

இதுவரை சிலப்பதிகாரத்தில் முலை என்ற சொல்லின் பயன்பாட்டினைக் கண்டோம். இனி பிற நூல்களில் முலை என்ற சொல் எவ்வாறு பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதை சில ஆதாரங்களுடன் காணலாம்.

கண்புருவம் என்ற பொருளில்:

தும்பை மாலை இளமுலை - ஐங்கு-127
சுணங்கு வளர் இளமுலை - ஐங்கு-149
சுணங்கு அணி மென்முலை - கலி-111
தொய்யில் சூழ் இளமுலை - கலி- 125
கொம்மை வரிமுலை - குறு-159
வனமுலை ஒளிபெற எழுதிய - குறு-276
வனமுலை அரும்பிய சுணங்கின் - அக.-6
திதலை அணிந்த தேம்கொள் மென்முலை - அக.-26
ஒண்கேழ் வனமுலை பொலிந்த - அக.-61
தொய்யில் பொறித்த சுணங்கெதிர் இளமுலை - மதுரைக்காஞ்சி -416
சுணங்கு அணி வனமுலை - நற்.-9
தித்தி ஏர் இள வனமுலை - நற்.-160
முகமும் வளர்முலைக் கண்ணும் - பரி.-10

கண் என்ற பொருளில்:

முலையகம் நனைப்ப விம்மி - புற.-143
கருங்கண் கொண்ட நெருங்கல் வெம்முலை - புற.-345
எழில்தகை இளமுலை - ஐங்கு.-347
பெருங்குளம் ஆயிற்று எம் இடைமுலை நிறைந்தே - குறு.-325
அலர்முலை ஆகத்து இன்துயில் மறந்தே - அக.-69
இளமுலை நனைய - அக.-161
மென்முலை மேல் ஊர்ந்த பசலை - திணைமாலை ஐம்பது -22

நிறைவுரை:

முலை என்ற சொல் மார்பகம் என்ற பொருளிலும் சில இடங்களில் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதுவே பிற இடங்களிலும் இதே பொருளைக் கொள்வதற்கு வழிவகுத்து விட்டது. பொருள் மாறும்போது எழுத்து மாறவேண்டும் என்ற விதிப்படி மார்பகம் என்ற பொருளில் வரும்போது முளை என்று பயன்படுத்தி இருக்க வேண்டும். ஏனென்றால் பெண்களின் மார்பகம் ஆனது உரிய பருவத்தில் முளைத்து வளரும் இயல்புடையது. ஒருவேளை புலவர்கள் இதனை எதுகை அணிநயத்திற்காக எழுத்துப்போலியாக (லகர- ளகர கடைப்போலி) பயன்படுத்தி இருக்கலாம். எது எவ்வாறாயினும் இந்த எழுத்துப் போலியினால் ஒரு தவறான பொருள்கோள் இதுநாள்வரையிலும் தமிழகத்தில் காலூன்றி விட்டதே.

முலை என்ற சொல் மட்டுமின்றி முலையின் வேறு பெயர்களான கொங்கையும் மார்பும் கூட பல இடங்களில் கண் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளன. எனவே இடத்திற்கேற்ப அவற்றை மாற்றிப் பொருள்கொண்டால் பாடலின் உண்மையான பொருளை நாம் அறிந்துகொள்வதுடன் நம் தமிழும் களங்கமற்ற பெருமையுடன் தலைநிமிர்ந்து நிற்கும்.