புதன், 28 டிசம்பர், 2011

திருக்குறளில் தெய்வம் - பகுதி 1


முன்னுரை:

உலகப் பொதுமறையாம் திருக்குறளில் 'தெய்வம்' என்ற சொல் மொத்தம் ஆறு குறட்பாக்களில் பயின்று வந்துள்ளது. இச் சொல்லுக்கு 'மனிதரிடத்தில் இல்லாத புதிய ஆற்றலைக் கொண்ட ஒரு கடவுள்'  என்றும் 'விதி' என்றும் பொருள் கொண்டு விளக்கம் கொடுத்துள்ளனர் பல உரை ஆசிரியர்கள். இப் பொருட்கள் இக் குறள்களுக்குப் பொருந்தாது என்பதைப் பற்றியும் உண்மையில் இச்சொல் யாரைக் குறிக்கிறது என்பதைப் பற்றியும் பல ஆதாரங்களுடன் இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

முதலில் இச்சொல் பயின்று வருகின்ற ஆறு குறள்களையும் ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு அக் குறளில் கடவுள் அல்லது விதி என்ற பொருள் ஏன் பொருந்தாது என்பதைப் பற்றிக் காணலாம்.

மனிதனால் காக்கப்பட வேண்டியவரா கடவுள்?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
                                                               - குறள் 43:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: வாழ்ந்து மறைந்தோரை நினைவுகூர்தல், வாழ்வாங்கு வாழ்வோரைப் போற்றுதல், விருந்தோம்பல், சுற்றம் பேணல் ஆகிய கடமைகளை நிறைவேற்றத் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளல் எனப்படும் ஐவகை அறநெறிகளும் இல்வாழ்வுக்குரியனவாம்.
மு.வ உரை: தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த கடமையாகும்.
சாலமன் பாப்பையா உரை: இறந்து தென்திசையில் வாழ்பவர், தேவர்கள், விருந்தினர், சுற்றத்தார், தான் என்னும் ஐந்து பேருக்கும் செய்ய வேண்டிய அறத்தைத் தவறாமல் செய்வது சிறப்பு.

மேற்காணும் உரை விளக்கங்களில் கலைஞர் உரை 'தெய்வம்' என்பதற்கு 'வாழ்வாங்கு வாழ்வோர்' என்று பொருள் கூறுகிறது. இப்படி ஒரு பொருள் இச்சொல்லுக்கு எந்த அகராதியிலும் இல்லை. மேலும் இப் பொருள் இக் குறளில் மட்டுமல்ல மற்ற குறள்களிலும் பொருந்தாமையால் இவ் உரை தள்ளப்படுகிறது. அதே சமயம் ஏனைய உரைகள் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்று பொருள் கொண்டுள்ளன. இப்பொருள் இக் குறளுக்குப் பொருந்துமா என்றால் பொருந்தாது.  இது எவ்வாறு என்று பார்ப்போம்.

இன்பத்தில் திளைக்கும் பொழுது நினைக்கிறார்களோ இல்லையோ தாள முடியாத துன்பத்தில் துவளும் போது கடவுளை நினையாத மாந்தர் மிகச் சிலராகவே இவ் உலகில் இருக்கக் கூடும். கடவுள் இல்லை என்று கூறி மறுப்பவரும் கூட தீர்க்க ஒண்ணா துயரத்தின் போது தம்மை அறியாமலேயே கடவுளை நினைப்பதுண்டு. அவர் கடவுளை வணங்குகின்றாரா இல்லையா என்பது வேறு. கடவுளை நினைத்தாலே வணங்கியதற்குச் சமமாகும். இப்படி துன்பங்களில் இருந்து தம்மைக் காக்க வேண்டும் என்றெண்ணி தான் மனிதர்கள் கடவுளை வணங்கி வருகின்றனர். அப்படி இருக்கும் பொழுது இல்வாழ்வில் உள்ள மனிதர்கள் தெய்வமாகிய கடவுளைக் காக்க வேண்டும் என்ற தொனியில் மேற்காணும் குறளுக்குப் பொருள் கொள்வது முரணான கருத்தல்லவா?. ஏனென்றால் ஓம்புதல் என்ற சொல்லுக்கு பாதுகாத்தல் அல்லது காப்பாற்றுதல் என்பதே அகராதிகள் கூறும் பொருளாகும். அறம் செய்தல் என்னும் பொருள் எங்கும் கூறப்படவில்லை.

அதுமட்டுமின்றி மேற்காணும் குறளில் தெய்வமானது முதலிடத்தில் இல்லாமல் தென்புலத்தாராகிய துறவிகளுக்கு (நீத்தார்) அடுத்ததாக வைக்கப்பட்டுள்ளது. இது துறவிகளைக் காட்டிலும் கடவுள் மதிப்பு குறைந்ததாகக் கருத இடமளிக்கிறது. இப்படி சொல் வைப்பு முறையாலும் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் பொருந்தவில்லை. இதிலிருந்து இக் குறளில் வரும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது தெளிவு.

மனிதனால் கடவுளாக மாற முடியுமா?

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
                                                           - குறள்: 50

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தெய்வத்துக்கென எத்தனையோ அருங்குணங்கள் கூறப்படுகின்றன. உலகில் வாழ வேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானில் வாழ்வதாகச் சொல்லப்படும் தெய்வத்துக்கு இணையாக வைத்து மதிக்கப்படுவான்.
மு.வ உரை: உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
சாலமன் பாப்பையா உரை: மனைவியுடன் வாழும் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ்பவன், பூமியில் வாழ்ந்தாலும், வானத்துள் வாழும் தேவருள் ஒருவனாகவே மதிக்கப்படுவான்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் 'உலகிலே அறநெறிப்படி இல்வாழ்க்கை நடத்தி வாழ்பவன் கடவுளாகக் கருதப்படுவான்' என்று கூறுகின்றன.

மேற்காணும் குறளைப் போலவே கீழ்க்காணும் குறளுக்கும் பொருள் கூறுகின்றனர் உரை ஆசிரியர்கள்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல்.
                                          - குறள் 702.

கலைஞர் உரை: ஒருவன் மனத்தில் உள்ளத்தைத், தெளிவாக உணர்ந்து கொள்ளக்கூடிய சக்தி தெய்வத்திற்கே உண்டு என்று கூறினால், அந்தத் திறமை படைத்த மனிதனையும் அத்தெய்வத்தோடு ஒப்பிடலாம்.
மு.வ உரை: ஐயப்படாமல் மனத்தில் உள்ளதை உணரவல்லவனை (அவன் மனிதனே ஆனாலும்) தெய்வத் தோடு ஒப்பாக கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை: அடுத்தவனின் மனக்கருத்தைச் சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் கண்டுகொள்ளும் ஆற்றல் உள்ளவனைத் தெய்வத்திற்குச் சமமாக மதிக்க வேண்டும்.

மேற்காணும் உரைகளிலும் 'உள்ளத்தைத் தெளிவாக உணரவல்ல மனிதனை கடவுளுக்குச் ச்மமாகக் கருத வேண்டும்' என்றே கூறியுள்ளனர். இவ் விளக்கங்கள் பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் தனக்கு ஈடு இணையற்றவர் கடவுள் என்று கடவுள் வாழ்த்து அதிகாரத்திலேயே கூறிவிட்டார் வள்ளுவர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. - குறள் -7

இப்படி தனக்கு உவமையில்லாதவராக கடவுள் இருக்க, மனிதனை கடவுளுக்குச் சமமாகக் கருதுவது என்பது வள்ளுவரைப் பொருத்தமட்டில் எந்த சூழ்நிலையிலும் ஒப்பக்கூடிய கருத்தல்ல. எனவே இக் குறள்களிலும் தெய்வம் என்ற சொல்லை கடவுள் என்ற பொருளில் வள்ளுவர் கையாண்டிருக்க முடியாது என்பது தெளிவு.

கணவனே கண்கண்ட கடவுள்?

வாழ்க்கைத் துணைநலம் எனும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
                                                       - குறள் 55.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கணவன் வாக்கினைக் கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் போலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.
சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல் கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை பெய்யும்.

மேற்காணும் உரை விளக்கங்கள் யாவும் கணவனையே கண்கண்ட கடவுளாகக் கருதி வாழும் ஒரு இல்லாள் 'பெய்' என்று சொன்னதும் மழை பெய்யும் என்று கூறுகின்றன. மழை பெய்வதாக வரும் இக் கருத்து தவறு என்றும் இதில் வரும் மழை என்ற சொல்லுக்குப் பதில் மிழை என்று வரவேண்டும் என்றும் அவ்வாறு வந்தால் அதன் உண்மையான பொருள் என்ன என்றும் நாம் ஏற்கெனவே பெய்யெனப் பெய்யும் மழை என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் கண்டுள்ளோம். ஆயின் இங்கு நாம் இப்போது காணப்போகும் கருத்து என்ன? கணவனே கண்கண்ட தெய்வம் என்பது ஏற்கத்தக்க பொருளா இல்லையா என்பதே அது. இல்லறம் புகுந்த ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு கருத்து வேறுபாடு மிகாமல் விட்டுக் கொடுத்து வாழ்வதே இல்வாழ்விற்கான அடிப்படைப் பண்பாகும். கணவனின் பொருளாதார நிலை அறிந்து அதற்கேற்றபடி தனது குடும்பத்தை நடத்திச் செல்வதே இல்லாளுக்குரிய கற்பாகும். இதைத்தான் வள்ளுவரும் இக் குறளின் மூலம் உணர்த்த வருகிறார். அதைவிடுத்து கட்டிய கணவனையே கண்கண்ட தெய்வமாக எண்ணித் தொழுது வணங்க வேண்டும் என்றோ அவன் என்ன தவறுகள் செய்தாலும் இறுதிவரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்றோ அவர் கூறவில்லை. அவ்வாறு கூறினால் அது பெண்ணடிமைக்கு அடிகோலியதாகி விடும். வள்ளுவர் அத் தவறைச் செய்யமாட்டார் என்பதுடன் முன்னர் சொன்னது போல எந்நிலையிலும் மனிதன் கடவுளுக்கு ஈடாக மாட்டான் என்பதால் இக்குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் ஆளப்படவில்லை என்பது உறுதியாகிறது.

ஆடை அணிவாரா ஆண்டவன்?

குடிசெயல்வகை என்னும் அதிகாரத்தில் கீழ்க்காணும் குறள் வருகின்றது.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்.
                                                      - குறள் 1023.

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: தன்னைச் சேர்ந்த குடிமக்களை உயர்வடையச் செய்திட ஓயாது உழைப்பவனுக்குத் தெய்வச் செயல் எனக்கூறப்படும் இயற்கையின் ஆற்றல் கூட வரிந்து கட்டிக்கொண்டு வந்து துணைபுரியும்.
மு.வ உரை: என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவனுக்கு ஊழ், ஆடையைக் கட்டிக் கொண்டு தானே முன் வந்து துணை செய்யும்.
சாலமன் பாப்பையா உரை: என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

மேற்காணும் உரைகளை நோக்கும் பொழுது ஒரு கருத்து தெளிவாகிறது. மூன்று உரைகளுமே 'கடவுளானவர்  பிறருக்கு உதவி செய்ய தனது ஆடையினை வரிந்து இறுகக் கட்டிக்கொண்டு முன்வருவார்' என்று கூறுகின்றன. இவ் விளக்கப்படி பார்த்தால் கடவுள் என்பது ஒரு மனிதன்; அதிலும் ஓய்வான நேரங்களில் (நாம் வீட்டில் லுங்கி, வேட்டிகளை அணிந்திருப்பதைப்போல) தனது ஆடையினை தொய்வாகக் கட்டிக்கொண்டு திரியும் மனிதன் என்றும் உதவி செய்யப் போகும்பொழுது மட்டும் தனது ஆடையினை இறுகக் கட்டிக்கொள்ளும் என்றும் நகைப்புக்கு இடமளிக்கும் கருத்துக்கள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை அல்லவா?. இப்படி கடவுளை மனிதனாக்கிப் பார்க்கும் பார்வை வள்ளுவத்தில் இல்லை; இல்லவே இல்லை என்பதால் இக் குறளிலும் தெய்வம் என்ற சொல் கடவுளைக் குறித்து வரவில்லை என்பது உறுதிப்படுத்தப் படுகிறது.

கடவுளால் ஆகாதது உண்டா?.

இதுவரை தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருளைக் கூறி வந்த உரை ஆசிரியர்கள் ஆள்வினையுடைமை என்ற அதிகாரத்தில் வருகின்ற கீழ்க்காணும் குறளில் மட்டும் புதியதோர் பொருளைக் கொள்கின்றனர்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
                                                 - குறள் 619:

இதன் தற்போதைய பொருள் விளக்கங்கள் கீழ் வருமாறு:

கலைஞர் உரை: கடவுளே என்று கூவி அழைப்பதால் நடக்காத காரியம் ஒருவர் முயற்சியுடன் உழைக்கும் போது அந்த உழைப்புக் கேற்ற வெற்றியைத் தரும்.
மு.வ உரை: ஊழின் காரணத்தால் ஒரு செயல் செய்ய முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை: விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

மேற்காணும் உரைகளில் கலைஞர் உரையில் தெய்வம் என்ற சொல்லுக்கு கடவுள் என்ற பொருள் கொண்டிருந்தாலும் விளக்கம் தவறாக இருப்பதால் அதை இங்கே ஆராயத் தேவையில்லை. ஏனைய உரைகாரர்களும் தெய்வம் என்ற சொல்லுக்கு ஊழ் அதாவது விதி என்று புதிய பொருளை வேண்டுமென்றே கூறியுள்ளனர். காரணம் தெய்வம் என்ற சொல்லுக்கு வழக்கம் போல கடவுள் என்ற பொருளைக் கொண்டால் 'கடவுளால் ஆகாத காரியமானாலும்' என்ற பொருத்தமில்லாத பொருள் தோன்றிவிடும். இருப்பினும், ஊழ் என்ற பொருளும் இங்கு பொருந்துமா என்றால் பொருந்தாது. ஏனென்றால் இக் குறளை அடுத்து வரும் 620 ஆம் குறளிலும் ஊழைப்பற்றி இதே கருத்தைத் தான் கூறுகிறார்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். - 620

இப்படி இரண்டு அடுத்தடுத்த குறள்களில் ஒரே கருத்தைக் கூறுவது 'கூறியது கூறல்' குற்றமாகும். வள்ளுவர் அக் குற்றத்தைச் செய்ய மாட்டார் என்பதால் இக் குறளில் வரும் தெய்வம் என்னும் சொல்லுக்கு விதி என்ற பொருள் பொருந்தாது என்பது தெளிவு.

தெய்வம் என்பது என்ன?

தெய்வம் என்னும் சொல்லுக்கு இதுகாறும் கூறப்பட்டு வந்த கடவுள், விதி என்ற பொருட்கள் பொருந்தாது என்றால் வேறு என்ன பொருள் இக் குறள்களுக்குப் பொருந்தி வரும்? இதைப் பற்றி அடுத்த பகுதியில் காணலாம்.


                                                                        - தொடரும்.

1 கருத்து: 1. தெய்வத்தான் ஆகா தெனினும்
  ஊழையும் உப்பக்கம் காண்பர்


  சில பேர் விதியை advantage ஆக , ஒரு loophole பயன்படுத்தி ,

  விதியை சொல்லி சோம்பறி தனமாக இருப்பார்கள் , அப்படி பட்டவர்ககுக்குத்தான் , விதியை சொல்லி நியாயம் படுத்தாதே , justify பண்ணாதே என்ற அர்த்தத்தில் சொல்லியிருக்கிறார்

  தெய்வம்
  மடிதற்றுத் தான்முந் துறும். இறைவனின் அருள் கிடைக்கும் , இறைவனின் support கிடைக்கும் என்று உவமையாக சொல்லியிருக்கிறார்

  வான்உறையும்
  தெய்வத்துள் வைக்கப் படும். வானலோகத்தில் உள்ள இறைவனும் அல்லாஹ்வும் மலக்குகளும் /வானவர்களும் அடிக்கடி சந்தித்தது , சில மனிதர்களின் செயலை பார்த்து புகழ்ந்து பேசுவார்கள் என்ற அர்த்தத்தில் சில ஹதீஸ் இருக்கிறது ,

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.