
'மயிர் பெரிதா? உயிர் பெரிதா?' என்று கேட்டால், நாம் அனைவரும் 'உயிர் தான் பெரிது' என்று சொல்வோம். ஆனால் 'மயிரே தனக்கு பெரிது' என்று பழந் தமிழ்நாட்டில் ஒரு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஏதாவது ஒரு காரணத்தால் தனது மயிரை இழக்க நேர்ந்தால் தனது உயிரை விட்டுவிடவும் அது தயங்கவில்லை. அது தான் கவரிமா எனப்படும் உயிரினமாகும். இந்த கவரிமா என்பது என்ன என்று ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். அதற்கு முன்னர், கவரிமா உயிர் விடும் செயலைப் பற்றித் திருக்குறளில் வள்ளுவர் கூறியுள்ளதைக் காணலாம்.
குறள்:
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.
- 969
தற்போதைய விளக்க உரைகள்:
கலைஞர் உரை: உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள். அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள்.
மு.வ உரை: தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.
சாலமன் பாப்பையா உரை: மயிர்எலாம் இழந்துவிட்டால் உயிர் வாழ முடியாத கவரிமான் (சாமரம்) போன்றவர் தம் குடும்பப் பெருமை எல்லாம் அழிய நேர்ந்தால் உயிர் வாழமாட்டார்.
கவரிமா என்பது விலங்கா?:
மேற்காணும் விளக்க உரைகளில் 'கவரிமா' என்று வள்ளுவர் குறளில் எழுதியதை 'கவரிமான்' எனக் கொண்டு அச் சொல் ஒரு வகைக் காட்டு மானைக் குறிப்பதாக சிலர் விளக்கம் கூறுகின்றனர். ஒருசிலர் இச்சொல்லானது பனிப்பிரதேசங்களில் வாழ்கின்ற, உடல் முழுவதும் அடர்ந்த மயிரால் மூடப்பட்ட, ஆங்கிலத்தில் 'யாக்' என்று அழைக்கப்படுகிற ஒருவகை மாட்டினைக் குறிப்பதாகக் கூறுகின்றனர். இவற்றில் எது சரி?. உண்மையில் வள்ளுவர் இக் குறளில் கவரிமா என்று ஒரு விலங்கினைத் தான் குறிப்பிடுகிறாரா?. என்று இக்கட்டுரையில் பார்ப்போம்.
ஆராயந்து பார்த்தால், வள்ளுவர் 'கவரிமா' என்று இக் குறளில் குறிப்பிடுவது மேற்காணும் இரண்டு விலங்குளையுமே அல்ல என்று தெரிய வரும். முதலில் கவரிமானைப் பற்றிப் பார்ப்போம். முதலில் உடலில் உள்ள மயிர் முழுவதும் நீக்கப்பட்டு விட்டால் இந்த மான் இறந்துவிடுமென்றால் அதற்கொரு அறிவியல் காரணம் இருந்தாக வேண்டும். அப்படியான எந்த ஒரு காரணமும் ஒரு காட்டு மானுக்குப் பொருந்தாது. மேலும் பொதுவாக காட்டில் வாழும் மானை வேட்டையாடுபவர்கள் வெறும் மயிரை மட்டும் மழித்துவிட்டு அந்த மானை அப்படியே உலவ விட்டுவிடுவார்களா?. இல்லையே. மானை வேட்டையாடுவதே மானின் இறைச்சிக்கும் தோலுக்கும் அதன் கொம்புகளுக்கும் தானே. இந் நிலையில் மயிரை மழித்துவிட்டால் கவரிமான் உயிர் வாழாது என்று கூறுவது சற்றும் பொருந்தாத கூற்றாகிறது. இதை இன்னொரு கோணத்தில் இருந்தும் பார்க்கலாம். ஒருவகை நோயினால் மானின் உடல் மயிர் முழுவதும் தானே உதிர்ந்து அது இறந்துவிட்டால், அந்த மானின் இறப்புக்கு அந்த நோயைத் தான் காரணமாகக் கூறலாமே ஒழிய மயிரை இழந்ததால் தான் அது மரணம் அடைந்தது என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அது அறிவியலுக்குப் புறம்பான கூற்றாகும். எனவே இக்குறளில் வரும் கவரிமா என்பது ஒரு காட்டுமானைக் குறித்து வரவில்லை என்பது தெளிவாகிறது.

மேலே கண்டவற்றில் இருந்து கவரிமா என்னும் சொல்லின் மூலம் வள்ளுவர் எந்த ஒரு விலங்கினையும் குறிப்பிடவில்லை என்பது உறுதியாகிறது. என்றால், உண்மையில் இச்சொல் எதைக் குறிக்கும் என்று பார்ப்போம்.
கவரிமா என்றால் என்ன?
முதலில் கவரிமா என்ற சொல்லுக்கு தற்கால அகராதிகள் கூறும் பொருள் என்ன என்று காணலாம்.
சென்னை இணையத் தமிழ் அகராதி:
கவரிமா = கவரிமான் = மான் வகை
ஆனால், பிங்கல நிகண்டோ கவரிமாவைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாக எகினம் என்ற சொல்லைத் தருகிறது. ஆனால் எகினம் என்பதோ அன்னப் பறவையைக் குறிக்கும் பல பெயர்களுள் ஒன்றாகும். இதிலிருந்து,
கவரிமா = எகினம் = அன்னப் பறவை.
என்பது பெறப்படுகிறது.
மேலும் வின்சுலோ அகராதி கீழ்க்கண்டவாறு பொருள் கூறுகிறது.
அன்னம், (p. 58) [ aṉṉm, ] s. A swan, அன்னப்புள். 2. (p.) The bosgrunniens, or yak, as கவரிமா.
எகினம் (p. 169) [ ekiṉm ] --எகின், s. A swan, அன்னம். 2. The yac or bos grunniens, கவரிமா.
இதிலிருந்து கவரிமாவிற்கும் எகினத்திற்கும் அன்னப்பறவைக்கும் இடையே உள்ள தொடர்பு தெரிய வருகிறது. இம் முக்கோணத் தொடர்பின் அடிப்படையை நோக்கும்பொழுது கவரிமா என்பது அன்னப்பறவையாக இருக்கக் கூடும் என்னும் கருத்து முகிழ்க்கிறது. இதை மேலும் சில சான்றுகளுடன் ஆராயலாம்.
அன்னப் பறவை:
அன்னப் பறவை ஒரு நீர்நில வாழ் பறவையாகும். நீரில் இருந்தவாறே பறந்து சென்று மரத்திலும் அமரும். நீரில் மிக வேகமாக நீந்தக் கூடியது. ஆனால் தரையில் மிக மெதுவாகத் தான் நடக்கும். இதைத்தான் நம் மக்கள் 'அன்ன நடை நடக்கிறாள் ' ' என்று சொல்வார்கள். தமிழ் இலக்கியங்களில் அன்னப் பறவை பரவலாகப் பேசப்பட்டுள்ளது.
இலக்கியங்கள் கூறுவதிலிருந்து அன்னப்பறவையினைப் பற்றிக் கீழ்க்காணும் தகவல்களைப் பெறுகின்றோம்.
அன்னம் மெல்ல நடக்கும் இயல்பினது.
அன்னம் பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும்.
அன்னம் தூய வெள்ளை நிறத்தில் இருக்கும். (காரோதிமம் விதிவிலக்கு)
அன்னத்தின் தூவி (இறகின் அடிமயிர்) மிக மெல்லியது. இதை தலையணை மற்றும் மஞ்சத்தில் பயன்படுத்துவார்கள்.
அன்னத்தின் கண்களும் கால்களும் சிவந்த நிறமுடையவை.
அன்னத்தின் கால்கள் குட்டையானவை.
அன்னம் தாமரை மலர் மேல் படுத்துறங்கும். சில நேரங்களில் புன்னை மரங்களிலும் தங்கும்.
அன்னப் பறவையும் மயிலும் ஒன்றுக்கொன்று நட்புடையவை.
கவரிமாவும் அன்னப் பறவையும்
அன்னப் பறவையானது பெரும்பாலும் தனது துணையுடனே இருக்கும் என்று மேலே கண்டோம். மேலும் அன்னப்பறவையின் இன்னொரு இயல்பான மெல்ல நடக்கும் பண்பினையும் வைத்துப் பார்க்கும் பொழுது 'அன்னம்' என்னும் பெயர் ஒரு பெண் பறவையைக் குறிப்பதாகக் கொள்ள முடிகிறது. என்றால் இதனுடைய ஆண் துணையின் பெயர் என்ன?. அது தான் கவரிமா என்பதாகும். ஆம், கவரிமா என்பது அன்னத்தின் ஆண் துணையின் பெயராகும். இதனுடைய இன்னொரு பெயர் 'எகினம்' என்பதாகும்.
கவரிமாவின் பண்புகளாகக் கீழ்க்காண்பவற்றை இலக்கியங்களில் இருந்து பெறுகிறோம்.
இதன் உடல் முழுவதும் நீண்ட மயிர் மூடி இருக்கும்.
இதுவும் அன்னத்தைப் போலவே வெண்மையானது..
இது தனது உடல் மயிரை முழுவதுமாக இழந்தால் வாட்டமுற்று உணவேதும் உண்ணாமல் உயிரிழந்து விடும்.
இனி இக் கருத்துகளுக்கான ஆதாரங்களைக் காணலாம்.
ஆதாரங்கள்
நெடுமயிர் எகினத் தூநிற ஏற்றை
குறுங்கால் அன்னமோ டுகளு முன்கடைப்
- நெடுநல்வாடை: 91-92
மேற்காணும் பாடலில் இருந்து, எகினமாகிய கவரிமாவிற்கு நீண்ட மயிர் உள்ளது என்ற தகவலும் அது அன்னத்தைப் போலவே வெண்மையானது (தூநிறம்) என்பதும் அது தனது துணையாகிய அன்னத்துடன் இருக்கும் என்ற தகவலும் பெறப்படுகிறது.
கீழ்க்காணும் சிலப்பதிகாரப் பாடலானது எகினமே கவரிமா என்றும் அது அன்னப் பறவையின் துணையாகும் என்றும் கூறுகிறது.
எகினக் கவரியும் தூமயிர் அன்னமும் துணை எனத் திரியும் - நாடுகாண்: 5 - 6
கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலும் கவரிமாவின் தூய வெண்ணிறத்தைப் போற்றுகிறது.
பசைகொல் மெல்விரல் பெருந்தோள் புலைத்தி
துறைவிட் டன்ன தூமயிர் எகினம்
துணையொடு திளைக்கும் காப்புடை வரைப்பிற்,
- அகநானூறு: 35
உயிரும் மயிரும்
சரி, கவரிமா தன் உடல் மயிரை ஏன் இழக்கிறது? அது தன் உடல் மயிரை இழந்தால் ஏன் இறக்கிறது?. இக் கேள்விகளுக்கான விடைகளைக் கீழே காணலாம்.
கவரிமா தனது உடல் மயிரை அதுவாக இழப்பதில்லை. மாறாக அது மழிக்கப்படுகிறது. ஆம், அதன் தூய வெள்ளைநிற நீண்ட மெல்லிய மயிரானது கவரி எனப்படும் சாமரம் செய்யப் பயன்படுகிறது. கவரிமா உயிரோடு இருக்கும் போது அதன் மயிர் மழிக்கப்பட்டால், அது இறந்து படுவதன் அறிவியல் காரணம் அது ஒரு நீர்ப் பறவை என்பதே. பொதுவாக நீரில் நீந்தும் பறவைகளுக்கு நீரின் குளிர்ச்சியால் பறவையின் உடல் சில்லிடாத வண்ணம் அதன் உடல் மயிர் ஒரு கவசமாக இருந்து பாதுகாக்கும். உடல் மயிர் முழுவதும் மழிக்கப்பட்டால் கவரிமாவால் நீரில் இறங்கி நீந்த முடியாது. காரணம் சில்லென்ற நீரின் குளிர்ச்சி அதன் உடலைத் தாக்கும். இதனால் கவரிமா ஏக்கத்தால் வாடியும் மீன் முதலிய உணவுகளை உண்ண முடியாமல் தவித்தும் உயிர் துறக்கும்.
முடிவுரை:
மேறகண்ட சான்றுகளில் இருந்து வள்ளுவர் திருக்குறளில் கூறியுள்ள கவரிமா என்பது அன்னப் பறவையின் ஆண் துணையினைத் தான் குறிக்கும் என்பது நிறுவப் படுகிறது. இதுவே சில இடங்களில் கவரி எனவும் பயின்று வந்துள்ளது.
ஆண் அன்னத்தினைக் குறித்து வந்த கவரிமா என்ற சொல் எவ்வாறு மானைக் குறிக்கலாயிற்று என ஆராய்ந்ததில் ஓர் உண்மை புலப்பட்டது. காட்டில் வாழும் விலங்குகளில் கவரிக் கடமா என்றொரு மான் இருக்கிறது ( சான்று: ஐந்திணை ஐம்பது). இதுவே கவரிமான் என்று அழைக்கப்பட்டு அது பின்னர் கவரிமாவுடன் பிறழக் கொள்ளப்பட்டுள்ளது. இதோ கவரிமாவையும் கவரிமானையும் பிறழக் கொண்டு இயற்றப்பட்டுள்ள விவேகசிந்தாமணியின் பாடல்:
மானம் உள்ளோர்கள் தங்கள் மயிர் அறின் உயிர் வாழாத
கானுறு கவரி மான்போல் கனம்பெறு புகழே பூண்பார்
மானம் ஒன்று இல்லார் தாமும் மழுங்கலாய்ச் சவங்கலாகி
ஈனமாம் கழுதைக்கு ஒப்பாய் இருப்பர் என்று உரைக்கலாமே. 48.
இப்படித் தான் கவரிமாவும் ( பறவை) கவரிமானும் ( விலங்கு) இதுவரை ஒன்றாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இனியேனும் இவை வேறு வேறானவை என்று அறியப்பட்டால் அதுவே இக் கட்டுரையின் பயனாகும்.
--------------------- வாழ்க தமிழ்!------------------------------