சொல்லப்படாத
இலக்கணமும்
முன்னுரை:
தமிழ்
என்று சொன்னாலே வலுவான மொழி என்று தான் ஆன்றோர் பொருள் கூறுவர். கீழே கொடுக்கப்பட்டுள்ள
சொற்பிறப்பியல் முறையில் இருந்து இதனை அறிந்து கொள்ளலாம்.
தா
(=வலிமை, படை) + வீழ் (=சொல், மொழி) = தாவீழ் >>> தமிழ் = வலுவாகப் படைக்கப்பட்ட
மொழி.
ஒரு
மொழியின் பெயரே அதன் வலுவான தன்மையை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது என்றால் அது தமிழ் மொழியாகத்
தான் இருக்கும். ஆம், தொன்றுதொட்டு இன்றுவரை சிதைவின்றிச் செழித்து வளர்ந்துவரும் வலுவான
மொழியாம் நம் அன்னைத் தமிழுக்குக் கிடைத்துள்ள “செம்மொழி” என்ற சிறப்பினைத் தமிழ் அன்னையின்
மணிமுடியில் பதித்த வைரம் எனலாம். தமிழின் இந்த செம்மொழிச் சிறப்புக்குக் காரணமாய்
அமைந்தவை சங்க இலக்கியங்களே என்றால் மிகையல்ல. ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கும் முற்பட்டதான
சங்க இலக்கியங்கள் ஒரு வலுவான இலக்கணக் கட்டமைப்புடன் படைக்கப்பட்டவை என்பதால்தான்
பல்லாயிரம் காலங்களைத் தாண்டியும் இன்றுவரை பல சங்கச் சொற்கள் மக்களால் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன.
பொதுவாக,
எந்தவொரு மொழியிலும் இரண்டு சொற்களைப் புணர்த்திப் புதிய சொல்லை உருவாக்குவதற்காக ஒரு
ஒழுங்கான கட்டமைப்பு அதாவது புணர்ச்சி விதி கட்டாயம் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்
தான் அம் மொழியில் புதிய சொற்களை உருவாக்கித் தொடர்ந்து பயன்படுத்த முடியும். அவ்வகையில்
சங்க இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களில் உயிர் முன் உயிர் புணர்ச்சியால் உண்டான விளைவுகளைப் பற்றி மட்டும்
இக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
தொல்காப்பியத்தில் உயிர்
முன் உயிர் புணர்ச்சி விதிகள்:
தமிழின்
இலக்கணத்தைக் கூறும் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியம் ஆகும். ஏறத்தாழ 3500
ஆண்டுகளுக்கு முன்பே இயற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற தொல்காப்பியத்தில் புணர்ச்சி விதிகளைப்
பற்றி எழுத்ததிகாரப் புணரியல் காண்டம் விரிவாகக் கூறுகிறது. அவற்றுள் உயிர் முன் உயிர்
புணர்ச்சி பற்றிக் கூறும் முதல் விதியைக் கீழே காணலாம்.
உயிர் இறு சொல்முன் உயிர் வரு வழியும்
…………………………………………………………………………………………………
நிறுத்த சொல்லே குறித்துவரு கிளவி என்று
ஆயீர்
இயல புணர்நிலை சுட்டே. – பா. 5
மேற்பாடலின்
பொருளானது: உயிர் முன் உயிர், உயிர் முன் மெய், மெய் முன் உயிர், மெய் முன் மெய் என
நான்கு வகையான புணர்ச்சிகள் உண்டு. இப் புணர்ச்சிகளில் முதலில் வரும் சொல்லை நிறுத்த
சொல் என்றும் அதனை அடுத்து வருவதைக் குறித்துவரு கிளவி என்றும் இரண்டு வகையாகச் சுட்டுவர்
என்பதாகும்..
நான்கு
வகையான எழுத்துப் புணர்ச்சிகளில் உயிர் முன் உயிரும் உண்டு என்று மட்டுமே மேற்பாடலில்
தொல்காப்பியர் கூறியுள்ளார். ஆனால் அவை எவ்வாறு புணரும் என்று எந்த ஒரு பாடலிலும் விரிவாகக்
கூறவில்லை. மாறாக, உயிர் முன் உயிர் புணரும்போது உடம்படு மெய்கள் தோன்றுவதைப் பற்றிக்
கீழ்க்காணும் ஒரேயொரு பாடலில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.
எல்லா மொழிக்கும் உயிர் வரு வழியே
உடம்படு
மெய்யின் உருபு கொளல் வரையார் – பா. 38
மேற்காணும்
நூற்பாவின் பொருளானது, உயிர் வந்து புணர்கின்ற எல்லாச் சொற்களிலும் உடம்படு மெய்யை
உருவாக்கிக் கொளல் வேண்டும் என்று வரையறை இல்லை என்பதாகும். இதிலிருந்து, உயிர் முன்
உயிர் வரும் புணர்ச்சியிலும் உடம்படு மெய்யை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம்
இல்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, உடம்படு மெய்கள் இன்னின்ன என்ற
வரையறை கூட தொல்காப்பியரின் காலத்தில் இல்லை என்பதையும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.
காரணம், தொல்காப்பியரின் காலத்தில் இருந்த இலக்கியங்களில் பல சொற்கள் உடம்படு மெய்யின்றிப்
புணர்த்தி உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. ஆனாலும் உடம்படுமெய்
என்ற கருத்தியல் இருந்துள்ளது என்பதை மறுக்க இயலாது.
நன்னூலில் உயிர் முன் உயிர்ப்
புணர்ச்சி விதிகள்:
தொல்காப்பியருக்குப்
பின்னர் பல ஆசிரியர்களால் பல இலக்கண நூல்கள் தமிழுக்கு இயற்றப்பட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த நூல்களுள் காலத்தால் பிற்பட்டது ஆயினும் பவணந்தியாரின் நன்னூலே எழுத்துக்களின்
புணர்ச்சி விதிகளைப் பற்றி விரிவாகப் பேசியுள்ளது. எனவே நன்னூல் விதிகளைப் பற்றி இங்கே
காணலாம்.
உயிர்
முன் உயிர் வரும் புணர்ச்சியில் உடம்படுமெய் தோன்றலாம் அல்லது தோன்றாமலும் போகலாம்
என்றும் உடம்படுமெய்கள் இன்னின்ன என்ற வரையறை இல்லை என்றும் தொல்காப்பியர் கூறியிருப்பதை
மேலே கண்டோம். தொல்காப்பியருக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் வந்த பவணந்தியாரோ
தொல்காப்பியரின் கருத்தில் இருந்து மாறுபட்டுப் புதிய விதிகளைப் படைக்கிறார். உயிர்
முன் உயிர் வரும் புணர்ச்சியில் உடம்படுமெய் கட்டாயம் தோன்றும் என்றும் அவை இன்னின்ன
மெய்களே என்றும் புதிய கருத்தினைப் புகுத்துகிறார். அதைப் பற்றிக் கூறுகின்ற நன்னூல்
விதிகளைக் கீழே காணலாம்.
இ ஈ ஐ வழி யவ்வும்
ஏனை உயிர் வழி வவ்வும்
ஏ முன் இவ் இருமையும்
உயிர்வரின்
உடம்படுமெய் என்று ஆகும் – பா. 162
மேற்காணும்
பாடலின் பொருளானது: நிறுத்த சொல்லின் இறுதியில் இ, ஈ, ஐ என்ற உயிர் எழுத்துக்கள் வரும்போது
யகரமும், ஏ என்ற உயிர் எழுத்து வரும்போது யகரம் அல்லது வகரமும், ஏனைய உயிர் எழுத்துக்களான
அ, ஆ, உ, ஊ, ஓ ஆகியன வரும்போது வகரமும் உடம்படு மெய்களாகத் தோன்றும் என்பதாகும். நிறுத்த
சொல்லின் இறுதியில் உகரம் வரும்போது உடம்படுமெய்யாக வகரம் தோன்றும் என்று மேற்காணும்
நூற்பாவில் பொதுவிதியாகக் கூறிய நன்னூலார், உகர ஈற்றுப் புணர்ச்சிக்கு மட்டும் சிறப்புவிதி
ஒன்றைக் கீழ்க்காணும் நூற்பாவில் படைக்கிறார்.
உயிர்
வரின் உ குறள் மெய்விட்டு ஓடும் – பா. 164
மேற்பாடலின்
பொருளானது: நிறுத்த சொல்லின் ஈற்றில் வரும் உகர உயிரானது, வருமொழியின் முதலில் உயிர்
எழுத்து வரும்போது, தான் சேர்ந்துள்ள மெய்யெழுத்தை விட்டு நீங்கும் என்பதாகும்.
சங்க இலக்கியமும் உயிர்
முன் உயிர்ப் புணர்ச்சியும்:
சங்க
இலக்கியச் சொற்களில் உயிர் முன் உயிர்ப் புணர்ச்சியால் உண்டான விளைவுகளை அறிவதே இக்
கட்டுரையின் நோக்கம் என்று முன்னர் கண்டோம். இதனை அறிந்து கொள்வதற்குச் சங்க இலக்கியச்
சொற்களின் பிறப்பியல் முறையினை முதலில் அறிய வேண்டும். எனவே, கீழ்க்காணும் சில சங்க
இலக்கியச் சொற்களின் பிறப்பியல் முறையைக் காண்பதன் மூலம் அவற்றில் என்னென்ன உயிர் முன்
உயிர் புணர்ச்சி விதிகள் பின்பற்றப் பட்டுள்ளன என்பதை எளிதில் இனங்காண முடியும்.
அரங்கு,
கட்டில், அம்பணம், ஆம்பல், இறும்பு, உடம்பு, உலகம், எருத்தம், கட்டளை, கட்டூர், கராம்,
குஞ்சரம், சுணங்கு, ஞாயிறு, திங்கள், ஞெண்டு, சுருங்கை.
இதுவரை
உருவாக்கப்பட்டுள்ள சொற்பிறப்பியல் அகராதிகள் எவற்றிலும் மேற்காணும் சங்ககாலச் சொற்களுக்கான
முழுமையான விளக்கங்கள் காணப்படவில்லை. சிலவற்றில் மட்டும் வேர்ச்சொல்லைக் கொண்டு விளக்குவதற்கான
முயற்சி செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் அந்த விளக்கங்கள் பொருத்தமாக அமையவில்லை
என்பதும் சொல் முழுவதற்கும் விளக்கம் கொடுக்கப்படவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்
தக்கதாகும். தொடர்ந்து இணையத்தில் தேடியபோது கிடைத்த சொற்பிறப்பு நெறிமுறைகள் தொகுத்துக்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
சில சங்க இலக்கியச் சொற்களின்
பிறப்பியல்:
Ø
அரங்கு
= மேடை [ ஆர் (=இடம், பேசு, கட்டு) + அகை (=உயர், வகு) + உ = அரக்கு >>> அரங்கு
= பேசுவதற்காக உயரமாக வகுத்துக் கட்டப்படும் இடம் ].
Ø
கட்டில்
= படுக்கை [ கடி (=காவல், கண்விழிப்பு, நீக்கு, அடங்கு) + இல் (=வீடு, இடம்) = கட்டில்
= கண்விழிப்பை நீக்கி வீட்டில் அடங்கும் இடம்]
Ø
அம்பணம்
= அளவுப் பாத்திரம் [ ஆம்பி (=கொள்கலம்) + எண் (=அள) + அம் = அம்பெணம்
>>> அம்பணம் = அளப்பதற்கான கொள்கலம் ]
Ø
ஆம்பல்
= ஒரு மலர் [ ஆவி (=வாய்திற, மலர், நீர்நிலை) + அல் (=இரவு) = அவ்வல் >>>
ஆம்பல் = நீர்நிலையில் இரவில் மலர்வது ]
Ø
இறும்பு
= மலை [ இறை (=உயரம், இடம்) + உப்பு (=பெரு) = இறுப்பு >>> இறும்பு = உயர்ந்து
பெருத்த இடம் ]
Ø
உடம்பு
= உடல் [ உறை (=தங்குமிடம்) + ஆவி (=உயிர்) + உ = உறாவ்வு >>> உடாப்பு
>>> உடம்பு = உயிர்க்குத் தங்கும் இடமாவது ]
Ø
உலகம்
= பூமி [ ஒல் (=பொறு, சும) + அகம் (=வீடு, உயிர்) = ஒலகம் >>> உலகம் = உயிர்களைச்
சுமக்கும் வீடு. ].
Ø
எருத்தம்
= கழுத்து [ இறை (=உயரம், தலை) + உத்து (=பொருத்து) + அம் = இறுத்தம் >>>
எருத்தம் = உயரத்தில் தலையைப் பொருத்துவது ]
Ø
கட்டளை
= பொன்னுரை கல் [ கறை (=கருமை, கல்) + அள (=அறி, கல, உரசு) + ஐ = கற்றளை
>>> கட்டளை = உரசி அறிவதற்கான கருநிறக் கல்.]
Ø
கட்டூர்
= பாசறை [ கடி (=பகை, அழி, காவல், விரைவு, கட்டு) + ஊர் (=பெரிய இடம்) = கட்டூர் =
பகையை அழிக்க விரைந்து கட்டிய காவலுடைய பெரிய இடம் ]
Ø
கராம்
= முதலை [ கர (=மறை, கவர், விடாதிரு, கொல்) + அம் (=நீர்) = கரம் >>> கராம்
= நீரில் மறைந்திருந்து கவர்ந்து விடாதிருந்து கொல்வது ]
Ø
குஞ்சரம்
= யானை [ குழி (=வயிறு) + ஆர் (=நிறை, உண், பெரு) + அம் = குழாரம் >>> குசாரம்
>>> குஞ்சரம் = நிறைய உண்கின்ற பெரிய வயிற்றைக் கொண்டது ]
Ø
சுணங்கு
= பூந்தாது [ சினை (=பூ, கருத்தரி, முட்டை) + அஃகு (=சுருங்கு, நுணுகு) = சினஃகு
>>> சுணங்கு = பூக்களைக் கருத்தரிக்கச் செய்யும் நுண்ணிய முட்டைகள் ]
Ø
ஞாயிறு
= கதிரவன் [ ஆய் (=நீக்கு) + இர (=இரவு, இருள்) + உ = ஆயிரு >>> ஞாயிறு =
இருளை நீக்குபவன் ]
Ø
திங்கள்
= சந்திரன் [ தீம் (=இனிமை) + கால் (=இருள், ஒளி, வெளிப்படுத்து) = தீங்கால்
>>> திங்கள் = இருளில் இனிமையான ஒளியை வெளிப்படுத்துவது ]
Ø
ஞெண்டு
= நண்டு [ இறை (=தலை, உயரம், மேல், கண், சிறுமை) + உ = இற்று >>> எட்டு
>>> ஞெண்டு = தலைக்கு மேலே சிறிய கண்களைக் கொண்டது ]
Ø
சுருங்கை
= சுரங்கம் [ சூர் (=துளையிடு, தோண்டு) + இக (=கட, நீளு) + ஐ = சுரிக்கை
>>> சுருங்கை = கடப்பதற்காக நீளமாகத் தோண்டப்பட்டது ].
சங்க இலக்கியம் காட்டும்
புதிய உயிர் முன் உயிர் புணர்ச்சி விதி:
பொதுவாக,
இலக்கணம் என்பது அந்தந்த கால கட்டங்களில் சான்றோரால் பயிலப்பட்ட பல்வேறு மொழியியல்
நெறிமுறைகளின் அணுக்கத் தொகுப்பே அன்றி அவையே முழுமையான முடிபல்ல என்பதைத் தொல்காப்பியரும்
சரி நன்னூலாரும் சரி தமது நூல்களின் இறுதியில் கூறியிருப்பதைக் காணலாம். இந்நிலையில்,
மேற்காணும் சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் நெறிகளை ஆய்வு செய்தபோது அவை தொல்காப்பியர்
தொட்டுச் சென்றதாகவும் நன்னூலார் விட்டுச் சென்றதாகவும் இருப்பது அறியப்பட்டது. அதாவது,
இவர்கள் இருவருமே வெளிப்படையாகக் கூறாத புதிய விதி இந்த பிறப்பியல் நெறிகளில் இருப்பது
காணப்பட்டது. அவ்வாறு சங்க இலக்கியத்தில் பயிலப்பட்டுள்ளதும் தொல்காப்பியர் மற்றும்
நன்னூலாரால் கூறப்படாததும் ஆகிய புதிய உயிர் முன் உயிர்ப் புணர்ச்சி விதியானது கண்டறியப்பட்டுப்
பாடல் வடிவாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்த சொல்லின் ஈற்றுயிர் தானே
மெய்விட்
டோடும் வேற்றுயிர் வரினே – பா. 1
மேற்காணும்
நூற்பாவின்படி, நிறுத்த சொல்லின் இறுதியில் வருகின்ற எந்தவொரு உயிர் எழுத்தும் வருமொழியின்
முதலில் உயிரெழுத்து வந்தால், தான் சேர்ந்துள்ள மெய்யெழுத்தை விட்டு நீங்கும் என்பது
பொருளாகும். இந் நூற்பாவை உற்று நோக்கினால்,
நன்னூலார் உகரவீற்றுப் புணர்ச்சிக்காக உருவாக்கிய சிறப்பு விதியே அனைத்து உயிர் ஈறுகளுக்கும்
பொருந்துவதாக இந்த நூற்பாவில் பொதுமைப்படுத்தப் பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
இதற்கு முன்னர் மேலே கண்ட சங்க இலக்கியச் சொற்பிறப்பியல் முறைகளில் இந்த புதிய நூற்பா
மிகக் கச்சிதமாகப் பொருந்தி வருவதை அறிந்து கொள்ளலாம்.
இலக்கணப் போலிகளுக்கான
புதிய விதிகள்:
முன்னர்
கண்ட சங்க இலக்கியச் சொற்களின் பிறப்பியல் முறைகளை உற்று நோக்கினால் அவற்றில் பல இலக்கணப்
போலிகள் பயன்படுத்தப் பட்டுள்ளதை அறியலாம். தமிழ் மொழிக்கு இலக்கணப் போலிகள் புதிதல்ல
என்பதும் சில வகையான இலக்கணப் போலிகளைப் பற்றி நன்னூலார் கூறியிருப்பதும் இங்கே குறிப்பிடத்
தக்கதாகும். எனவே நன்னூலில் கூறப்படாத புதிய இலக்கணப் போலிகள் எவை எவை என்பதை மட்டும்
கீழே பாடல் வடிவில் காணலாம்.
முன்னின்ற உயிரொடு சகரம் ஊர்தலும்
ழ ய க்கள் திரிந்து ய ஞ ச ஆதலும்
ச ஞ க்கள் முற்றும் தம்முள் திரிதலும்
போலி
என்ப அறிந்திசி னோரே – பா. 2
மேற்பாடலின்
பொருளானது: சொல்லின் முதலில் வருவதான உயிரெழுத்தின் மீது சகர மெய் சேர்ந்து உயிர்மெய்
ஆகுதலும் ழ, ய ஆகிய எழுத்துக்கள் திரிந்து ய, ஞ, ச ஆகியவற்றில் ஒன்றாதலும் ச, ஞ ஆகிய
எழுத்துக்கள் முழுவதும் தமக்குள் திரிந்து வேறாதலும் போலி எனப்படும் என்று அறிஞர் கூறுவர்
என்பதாகும்.
றஃகான் திரிந்து த ட ர ஆதலும்
வ ம ப க்கள் முற்றும் தம்முள் திரிதலும்
ன ண க்கள் தம்முள் திரிதலும்
ல ள க்கள் தம்முள் திரிதலும்
போலி
என்ப அறிந்திசி னோரே – பா. 3
மேற்காணும்
பாடலின் பொருளானது: றகர மெய் திரிந்து த, ட, ர மெய்களில் ஒன்றாகவும் வ, ம, ப ஆகிய மெய்கள்
முழுவதும் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் ன, ண ஆகிய மெய்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும்
ல, ள ஆகிய மெய்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் மாறுவதைப் போலி என்று அறிஞர் கூறுவர்
என்பதாகும். மெய்யெழுத்துக்களைப் போலவே உயிரெழுத்துக்களும் மாறுவதைப் பற்றிக் கூறும்
தனிப்பாடல் கீழே:
அ ஆ எ ஏ தாமே தம்முள் திரிதலும்
இ ஈ உ ஊ தாமே தம்முள் திரிதலும்
உ ஊ ஒ ஓ தாமே தம்முள் திரிதலும்
எ ஏ இ ஈ தாமே தம்முள் திரிதலும்
ஐகாரந் தானே அய் இ எனத் திரிதலும்
ஔகாரந் தானே அவ் உ எனத் திரிதலும்
போலி
என்ப அறிந்திசி னோரே – பா. 4
மேற்காணும்
பாடலின் பொருளானது: அ, ஆ, எ, ஏ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் இ, ஈ,
உ, ஊ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும் உ, ஊ, ஒ, ஓ ஆகிய உயிர்கள் தமக்குள்
திரிந்து வேறொன்றாகவும் எ, ஏ, இ, ஈ ஆகிய உயிர்கள் தமக்குள் திரிந்து வேறொன்றாகவும்
ஐகார உயிரானது திரிந்து அய், இ என்றாகவும் ஔகார உயிரானது திரிந்து அவ், உ என்றாகவும்
மாறுவதனைப் போலி என்று அறிஞர் கூறுவர் என்பதாகும்.
முடிவுரை:
:இதுவரை
மேலே கண்ட இலக்கணப் போலிகள் யாவும் மக்களின் வழக்காற்றில் இருப்பவையே ஆகும். சான்றாக,
காற்று, கொம்பு என்பதை முறையே காத்து, கொப்பு என்று பேச்சு வழக்கில் கூறுகிறோம். இதுபோன்ற
போலிகளை வரையறை செய்து எந்தவொரு இலக்கண நூலும் கூறாததால் புதிய இலக்கணங்கள் வகுக்கப்பட்டுக்
கூறப்பட்டுள்ளது. இக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள புதிய இலக்கண விதிகள் யாவும் சங்க
இலக்கியச் சொற்கள் உருவாக்கப்பட்ட பிறப்பியல் முறைகளை அடியொட்டியே அமைக்கப்பட்டவை என்பதால்
இவற்றைப் புறந்தள்ளாமல் நினைவில் கொண்டு தமிழ் கூறும் நல்லுலகம் பயன்கொள்ள வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.