சனி, 19 ஜனவரி, 2013

சும்மா (இரு) என்றால் என்ன?


முன்னுரை:

தமிழ் இலக்கியங்களில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு இன்றளவும் நடைமுறையில் அதிக மாற்றமின்றி பயன்பட்டு வரும் தமிழ்ச் சொற்கள் பலவற்றில் 'சும்மா' என்ற சொல்லும் ஒன்று. இச் சொல்லை எத்தனைமுறை எவ்வளவு பேர் பயன்படுத்துகிறார்கள் என்று கூறத் தேவையில்லை. தவறு செய்துவிட்டு எளிதாக தப்பித்துக் கொள்வதற்கும் அல்லது மன்னிப்புக் கேட்பதற்கும் விளையாட்டாய் பேசுவதற்கும் இன்னும் பல காரணங்களுக்காகவும் இச் சொல்லை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். ஆனால் இச் சொல்லின் உண்மையான வடிவம் என்ன? இதன் உண்மையான பொருள் என்ன? என்பதைப் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க மாட்டோம். இதைப் பற்றி ஆதாரங்களுடன் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

சும்மா - அகராதிப் பொருட்கள்:

தற்கால அகராதிகள் சும்மா என்ற சொல்லுக்குக் கூறும் பல்வேறு பொருட்கள் கீழே தரப்பட்டுள்ளன.

சென்னைப் பேரகராதி: 
, adv. prob. சுகமாக. [K. summane.] 1. [M. cumma.] Leisurely, without any occupation or work; தொழிலின்றி. வாகன மேறிச் சேணிற் சும்மா திரிமூர்த்தி யல்லாமல் (தனிப் பா. ii, 246, 581). 2. In normal condition, in health; இயல்பாய். உடம்பு சும்மா இருக்கிறான். 3. [M. cumma.] Silently, quietly, in perfect peace and rest; அமைதியாய். சும்மாவிருக்கு மெல்லையுட் செல்ல வெனைவிட்டவா (கந்தரலங். 10). 4. Bare; வறிதாக. அவள் கழுத்துச் சும்மா இருக் கிறது. 5. Without any reason; காரணமின்றி. சும்மா போவானேன் 6. Uselessly; பயனின்றி. போய்ச் சும்மா வந்தான். 7. Vaguely, unintentionally, at random; கருத்தின்றி. சும்மா சொன்னே னோ? 8. As a joke; விளையாட்டாய். சும்மா சொன் னேன். 9. [M. cumma.] Gratuitously, gratis; இலவசமாய். சும்மா கொடுப்பானா? Colloq. 10. Freely, unhesitatingly, unceremoniously; தடை யின்றி. சும்மா வரலாம். 11. Continuously, repeatedly; அடிக்கடி. சும்மா வந்துகொண்டிருக்கிறான்.

பேப்ரிசியஸ் அகராதி:
சும்மா (p. 414) [ cummā ] , adv. lazily, idly, leisurely, தொழில் படாமையாய்; 2. uselessly, விருதாவாய்; 3. unintentionally, without reason, முகாந்திரமில்லாமல்; 4. gratuitously, இலவசமாய்; 5. freely, repeatedly, continuously, ஒழியாமல்.

வின்சுலோ அகராதி:
சும்மா, (p. 479) [ cummā, ] adv. Leisurely, uselessly, lazily, idly, தொழிற்படாமையாய். 2. Separately, வா ளா. 3. Gratuitously, இலவசமாய். 4. Jocosely, &c., பொருணோக்கின்றி. 5. Silently, taciturnly, மௌனமாய். 6. Freely, unhesitatingly, unceremoniously, உபசாரமின்றி. 7. Cause lessly, vaguely, unintentionally, முகாந்தரமி ன்றி. 8. Merely, simply, இயல்பாய். 8. Over and above; continuously, repeatedly, ஒழி வின்றி. இப்போது நான்சும்மப இருக்கிறேன். I am at present without any employment. சும்மாகிடைக்குமாசோணாசலன்பாதம். Can the feet of the High be approached without pains? சத்தியம்பண்ணிச்சொன்னானோசும்மாசொன்னானோ. Did he speak on oath, or vaguely? சும்மாகிட. Hold your peace. சும்மாவந்தேன். I came having no par ticular business. போய்ச்சும்மாவந்தான். He went and re turned without success. சும்மாவருகிறான். He comes here very often. அவனைச்சும்மாவிடுவேனா. Will I let him go unpunished? அவனைச்சும்மாவிடு. Let him alone. சும்மாசொல்லு. Tell it without fear. சும்மாவாயைத்திற. Just open your mouth.

சும்மா - உண்மை வடிவம் என்ன?

சும்மா என்று நாம் தற்போது வழங்கும் சொல்லின் உண்மையான வடிவம் 'சும்மாது' ஆகும். இந்த சும்மாது என்ற சொல் ஈற்றில் உள்ள 'து' எழுத்தினை இழந்து 'சும்மா' என்று தற்போது வழங்கப்படுகிறது. இவ்வாறு ஈற்றெழுத்தை ஒழித்து வழங்கலாமா? இவ்வாறு வழங்கப்படுவதற்கு அடிப்படை என்ன? என்னும் கேள்விகள் எழலாம். இவற்றுக்கான விடைகளைக் காணலாம்.

வாளாது இருந்தான் என்பதனை 'து' கரம் நீக்கி 'வாளா இருந்தான்' என்றோ 'வாளாவிருந்தான்' என்று புணர்ந்தோ கூறுவது இலக்கிய வழக்காகும். இதன் பொருள் செயலற்று இருந்தான் என்பதேயாம். இதைப் போலவே,

வாரா விடல், பாடா விடல் - வாராது விடல், பாடாது விடல் என்பதில் து கரம் நீக்கி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வழங்கப்படுவதற்கு ஈறு கெட்ட எதிர்மறை வினையெச்சம் என்று இலக்கணம் உண்டு.

இந்த இலக்கணத்தின் அடிப்படையில் தான் 'சும்மாது' என்னும் சொல் தனது ஈற்றில் உள்ள துகரத்தை இழந்து 'சும்மா' என்று வழங்கப்பட்டு வருகிறது.

இதிலிருந்து சும்மா என்னும் சொல் இலக்கண முறைப்படி அமைந்த தமிழ்ச்சொல்லே என்பது தெளிவாகிறது.


சும்மா இரு - சில தவறான புரிதல்கள்:

சும்முதல் என்னும் வினைச்சொல்லின் அடிப்படையில் பிறந்ததே சும்மா என்பதாகும். சும்முதல் என்னும் சொல்லுக்கு மூச்சு வாங்குதல் என்ற பொருளை எடுத்துக் கொண்டு சும்மா(து) இரு என்பதற்கு மூச்சு வாங்காதிரு என்னும் விளக்கம் அளிக்கின்றனர் ஒரு சிலர். இவ் விளக்கமும் பொருளும் அடிப்படையிலேயே மிகத் தவறானதாகும். இது எவ்வாறு என்பதைப் பார்ப்போம்.

முதலில் சும்மா இரு என்னும் சொல் இலக்கியங்களில் எங்கெங்கே ஆளப்பட்டுள்ளன என்று பார்ப்போம்.

சும்மா திருந்திடஞ் சோதனை யாகுமே - திருமந்திரம்: 2635
சும்மா இருசொல் லறவென் றலுமே - அருணகிரிநாதர்:12
சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் - பட்டினத்தார்.
துறவி யானவர்கள் அகப்பேய் சும்மா இருப்பார்கள் - அகப்பேய் சித்தர்
சொன்னது கேட்டாயே அகப்பேய் சும்மா இருந்துவிடு - அகப்பேய் சித்தர்
சும்மா இருந்தவிடம் அகப்பேய் சுட்டது சொன்னேனே - அகப்பேய் சித்தர்
சும்மா இருக்கும் சுகம் - திருவருட்பா: 1959

மேலே உள்ளவற்றைப் பார்த்தால் ஓர் உண்மை புலப்படும். சும்மா இரு என்று மேலே சொன்னவர்கள் யாவரும் சித்தர்களாகவோ ஞானிகளாகவோ இருந்திருக்கிறார்கள் என்பது தான் அது. சித்தர்களும் ஞானிகளும் இறைவனை அடைவதற்கான வழிமுறையாக மக்களுக்குச் சொல்லப்பட்டவையே மேற்காணும் பாடல்கள்.

சும்மா இருப்பதே சுகம் என்று ராமலிங்க அடிகள் கூறுகிறார். இதற்கு மூச்சு வாங்காமலிருப்பதே சுகம் என்று பொருள் கொள்ளலாமா?. கூடாது. அவ்வாறு பொருள் கொண்டால் மிகப்பெரிய தவறாகிவிடும்!. ஏனென்றால் மூச்சு வாங்காமல் தொடர்ந்தாற்போல ஓரிரு நிமிடங்கள் இருந்தாலே நமது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கும் என்பதையும் உடல் எவ்வளவு துன்பம் அடையும் என்பதனையும் நாம் நன்கு அறிவோம். ஏன் மூச்சு வாங்காமல் இருந்தால் இவ்வாறு நிகழ்கிறது? குருதியில் இருந்து கரியமில வாயுவினை வெளியே எடுத்துச் செல்வதும் உயிர்வாயுவினை குருதிக்கு அளிப்பதுமான மிக இன்றியமையாத வேலையை இந்த மூச்சுக் காற்று தான் செய்கிறது. இந்த மூச்சினை உள்ளிழுக்காமல் இருந்தால் என்னாகும்? குருதியின் இயல்பான தன்மையே மாறி இதயம் நின்று மரணம் ஏற்படும்! இப்படி உயிருக்கே உலை வைக்கிறதும் மக்களால் இயல்பாக செய்யவே முடியாததுமான ஒரு கடினமான செயலை எந்த சித்தராவது ஞானியாவது மக்களுக்குச் சொல்வாரா?. ஒருபோதும் மாட்டார்!.

அதுமட்டுமின்றி, எந்த ஒரு சித்தராகட்டும் ஞானியாகட்டும் மூச்சு வாங்காமல் உயிருடன் இருக்கவே முடியாது. அதற்கான காரணம் மேலே கூறப்பட்டுள்ளது. உண்வு உண்ணாமல் ஏன் நீரைக் கூடப் பருகாமல் வெறும் காற்றை மட்டுமே உண்டு வாழ்ந்த சித்தர்கள் உண்டு. இவர்களை பவகார யோகிகள் என்பர். ஆனால் மூச்சுக் காற்றினைக் கூட உள்ளிழுக்காமல் உயிருடன் வாழ்ந்ததாக எந்த ஒரு சித்தரின் வரலாறும் கூறவில்லை.

எனவே சும்மா இரு என்று சித்தர்கள் சொன்னதற்கு மூச்சு வாங்காமல் இரு என்று பொருள் கொள்வது மிகப்பெரிய தவறு என்பது புலப்படும். இதிலிருந்து சும்முதல் என்னும் சொல்லுக்கு மூச்சு வாங்குதல் என்னும் பொருளைக் கொள்வது தவறு என்பது தெளிவாகிறது. என்றால், சும்முதல் என்னும் சொல்லுக்கு உண்மையான பொருள் என்ன? சும்மா இரு என்பதன் உண்மையான விளக்கம் என்ன?. என்பதைப் பற்றிக் காண்லாம்.

சும்மாவும் சும்மையும்:

சும்மா என்னும் சொல்லானது சும்முதல் என்னும் வினையின் அடிப்படையாகப் பிறந்தது என்று முன்னர் கண்டோம்.  இந்த சும்முதல் என்பதன் உண்மையான பொருள் அதிர்தல் / ஒலித்தல் என்பதாகும்.

இந்த சும்முதல் வினையின் விளைவே சும்மை எனப்பட்டது. இதன் பொருள் ஓசை என்பதாகும்.

சென்னைப் பேரகராதி:  சும்மை² cummai
, n. < சும் onom. 1. Sound, noise, clamour; ஓசை. இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் (பொருந. 65).

இந்த சும்மை என்னும் சொல்லானது பொதுவாக ஓசைப் பொருளையே குறித்து வருவதால் இது மனிதர்கள் பேசும் பொருளுள்ள பேச்சு மொழியைக் குறிக்காமல் அவர்தம் பொருளற்ற ஒலிக் குறிப்புக்களையும், பறவைகள், வண்டுகள், விலங்குகள் எழுப்பும் ஒலிக்குறிப்புக்களையும் கடலலைகள், மேகங்கள், இசைக் கருவிகள் எழுப்பும் அதிர்வுகளையும்  குறிக்கவே பெரும்பாலும் பயன்படுத்தப் பட்டுள்ளது. சான்றுக்கு சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பழு மரத்து ஈண்டிய பறவையின் எழூஉம்
இழுமென் சும்மை இடை இன்று ஒலிப்ப - மணிமேகலை: 14-027
வருவோர் பெயர்வோர் மாறாச் சும்மையும் - மணிமேகலை: 06-070
சோலை வாய்வண்டு இரைத்தெழு சும்மையும் - பெரியபுராணம்: 1.2.17
தளிமழை பொழியுந் தண்பரங் குன்றிற் கவிகொள் சும்மை - மதுரைக் காஞ்சி: 263
பழுமர முள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை யிடனுடை வரைப்பின் - பொருந:65
நரம்பி னோசையும் முழவதிர் சும்மையும் - திருவிளையாடல்
ஒலி கொண்ட சும்மையான் மண மனை - கலித்தொகை
பாடுஇமிழ் கடலின் எழுந்த சும்மையொடு - அகநானூறு
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து - அகநானூறு
குற்றானா உலக்கையால் கலிச் சும்மை வியல் ஆங்கண் - புறநானூறு

சும்மா - உண்மைப் பொருள் என்ன?

நாம் மேலே கண்ட சும்மை என்பதன் எதிர்ப்பதமே சும்மா என்பதாகும். சும்மை என்பது ஒலிநிலையைக் குறிக்கவும் சும்மா என்பது ஒலியற்ற நிலையைக் குறிக்கவும் பயன்படலாயிற்று. இதன் விளக்கத்தைக் கீழே காணலாம்.

சும்முதல் என்பது ஒலித்தலைக் குறிக்க,

சும்மாது இருத்தல் என்பது அதன் எதிர்வினையான ஒலியற்று இருத்தலைக் குறிப்பதாயிற்று.

சும்முதல்  x   சும்மாது இருத்தல் ......> சும்மா இருத்தல் = அதிராமல் (அ) ஒலியற்று இருத்தல்.

சரி, சித்தர்களும் ஞானிகளும் பேசாமலிரு என்று சொல்லாமல் ஏன் சும்மா இரு என்று சொல்ல வேண்டும்?. இதைப் பற்றிக் கீழே காணலாம்.

சும்மா இரு - உண்மை விளக்கம்:

சித்தர்களும் ஞானிகளும் இறைவனை அடைவதற்குப் பல வழிமுறைகளைக் கூறி இருந்தாலும் அவற்றின் மையக் கருத்து மனதை ஒருநிலைப் படுத்துதலே ஆகும். மனிதரின் மனம் ஏனை உயிரினங்களைக் காட்டிலும் மிகவும் சிக்கலானது. ஏனென்றால் மனிதனே பல்வேறு வினைகளைச் செய்கிறான். இதனால் அவ் வினைகளுடன் தொடர்புடைய எண்ணங்களும் அவனது மனதில் பதிவாகின்றன. இந்த எண்ணங்களின் குவியலாக உள்ள மனதினை எப்படி ஒருநிலைப் படுத்தி இறைவனை நினைக்க வைப்பது?. இது சாத்தியமா? இது எளிதான செயலா?. என்றால் ஆம் என்பதே சித்தர்களின் பதில். அவர்கள் வெறும் பதிலை மட்டும் கூறவில்லை; அப்படியே வாழ்ந்து காட்டியும் சென்றிருக்கிறார்கள்.

மனிதன் தனது மனதினை அடக்க வேண்டுமென்றால் முதலில் அவன் தனது ஆற்றல் வீணாவதைத் த்டுக்க வேண்டும் என்று அறிந்தனர் அப் பெரியோர். அப்படி வீணடிக்கப்படும் ஆற்றலில் அவனது பேச்சுமொழியே முதன்மையானதும் இன்றியமையாததும் ஆக இருப்பதைக் கண்டனர். ஒருநாளில் எத்தனைமுறை மனிதன் பேசிப்பேசி தனது ஆற்றலை வீணாக்குகிறான் என்று அறிந்த அவர்கள் இந்த பேச்சைக் கட்டுப்படுத்தி உள் ஆற்றலைப் பெருக்குவதின் மூலம் மனதின் அலைச்சல் குறைவதை அறிந்தனர். எதையுமே பேசாமல் எவ்வித ஒலிகளும் எழுப்பாமல் மௌனமாக யோக நிலையில் அமர்ந்து இருப்பதன் மூலம் மனம் அடங்குவதைக் கண்ட சித்தர்கள் அதையே மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

சும்மா இருத்தல் என்பது சொல்லற இருத்தலே என்பதைத் தனக்கு இறைவனே காட்டினான் என்று கூறுகிறார் அருணகிரிநாதர்.

சும்மா இருசொல் லறவென் றலுமே - அருணகிரிநாதர்:12

இப்படி எவ்வித ஒலியும் எழுப்பாமல் மௌனமாக இருக்கும் சூத்திரத்தை இதுநாள் வரையிலும் தான் அறியாமல் வீணடித்து விட்டதாக வருந்துகிறார் பட்டினத்தார்.

சும்மா விருக்கவைத்தான் சூத்திரத்தை நானறியேன் - பட்டினத்தார்.

சரி, பேசாமல் இருப்பதற்கும் சித்தர்கள் கூறும் சும்மா இருப்பதற்கும் ஏதேனும் வேறுபாடு உள்ளதா என்றால் உண்டு. பேசாதிருத்தல் என்பது மொழி வழங்காமையைக் குறிக்கும். ஆனால் சும்மா இருத்தல் என்பது பேச்சு மட்டுமின்றி எவ்வித ஒலியினையும் எழுப்பாத நிலையைக் குறிக்கும். வாயிலிருந்தோ மற்ற உடலுறுப்புக்களில் ( கைகள், கால்கள்) இருந்தோ எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றா வண்ணம் இருக்கும் நிலையினையே சும்மா இருத்தலென்று கூறினர் சித்தர்கள்.

ஆம், வாய் அமைதியாய் இருக்கும் போது பேச்சு எழுவதில்லை. அதைப்போல கைகளும் கால்களும் இயக்கமின்றி ஓரிடத்தில் அமைதியாய் இருக்கும் போது எவ்வித ஒலிக்குறிப்பும் அதிர்வும் தோன்றுவதில்லை. இப்படி வாயும் கைகளும் கால்களும் அமைதியாய் ஓரிடத்தில் தொடர்ந்து இருக்கும் நிலையினையே யோகநிலை என்று கூறினர் பெரியோர். இந்த யோகநிலையில் தொடர்ந்து அமர்ந்திருக்கும் போது நமது உள்முக ஆற்றல் பெருகுகிறது. இந்த ஆற்றலின் தாக்கத்தால் மனம் ஒருநிலைப்படத் துவங்குகிறது. இறைவனைக் காண அதுவே அடிகோலுகிறது.


முடிவுரை:

மனம் ஒருநிலைப்பட்ட சித்தர்களும் ஞானிகளும் யாரிடத்திலும் பேசமாட்டார்கள். இவர்களையே நிறைமொழி மாந்தர் என்று கூறுகிறார் வள்ளுவர்.

நிறைமொழி மாந்தர் பெருமை நிறத்து
மறைமொழி காட்டி விடும்.

மௌனமே இவர்களது மொழியாகும். சும்மா இருத்தலையே செய்யும் இப்பெரியோர்களின் பெருமையினை அவர்களது உடல்குறிப்பு மொழிகள் ( சின்முத்திரைகள்) காட்டி நிற்கும் என்கிறார் வள்ளுவர். இதைப்பற்றி நிறைமொழி மாந்தர் என்ற ஆய்வுக் கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

இப்படி சித்தர்கள் கூறிய சும்மா இருத்தல் என்பது அதன் உண்மையான யோகநிலைப் பொருளில் இருந்து விரிவடைந்து தற்காலத்தில் செயலின்றி இருப்பதையும் பேசாமல் இருப்பதையும் குறிக்கப் பயன்படலாயிற்று.
-----------------------------------------------------------------------------

10 கருத்துகள்:

 1. அருமையான விளக்கத்திற்கு மிக்க நன்றிகள்..!!

  நன்றிகளுடன்,
  லோகநாதன்

  பதிலளிநீக்கு
 2. செந்தமிழா உம் தமிழ் பார்த்தோம் படித்தோம் அகமிக மகிழ்ந்தோம். உம் வலைப்பூக்கள் அனைத்திற்கும் பொற் பூக்கள் விழக் கடவதாகுக. செல்லும் சபையிலெல்லாம் உம் தமிழ் வெல்லட்டும். உம் பாட்டில் குற்றம் உண்டு என எவரும் சொல்லாதிருக்கட்டும். உம் தமிழால் கட்டுண்ட சிவபெருமான், மதுரையம்பதி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கருத்துக்களுக்கு மிக்க நன்றி அசோகன் ஐயா.

   நீங்கள் கேட்ட அந்த தகவல்களை விரைவில் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்.

   அன்புடன்,
   தி.பொ.ச.

   நீக்கு
 3. தாயுமானவரின் இந்தப் பாடலில் "சும்மா இருப்பதே சுகம் " என்ற வரி வருகிறது? அறிய ஆவல். நன்றி .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை தான். சும்மா இருப்பது சுகம் தான். ஆனாலும் நம்மைச் சும்மா இருக்க விடாமல் வினைப்பயன் தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கும். எல்லாம் அவன் அருள்.

   நீக்கு
 4. அருமையான விளக்கங்களுடன் ஆன்றோர்களின் அமுத வரிகளையும் கண்டேன்.. சிந்தனைக்கு விருந்தாகின்ற பதிவு.. மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.