செவ்வாய், 19 டிசம்பர், 2017

சங்க இலக்கியத்தில் விலங்கியல் - 2 - பன்றி



முன்னுரை:

பன்றி - என்று சொன்னாலே உடம்பெல்லாம் சேறுபூசிய கருத்த நிறத்துடன் கூடிய சாக்கடையிலும் மலக்கிடங்குகளிலும் திரிவதான அந்த பாவப்பட்ட விலங்கின் உருவம்தான் நம்மில் பெரும்பாலோருக்கு நினைவுக்கு வரும். தமிழகத்தில் பன்றிகளின் நிலை இப்படியிருக்க, அயல்நாட்டுப் பன்றிகளோ வெளுத்த நிறத்தில் விதவிதமான சத்தான உணவுகளை உண்டு கொழுத்துத் திரிகின்றன. ஆடு, மாடு மற்றும் கோழி வளர்ப்புக்களில் அவற்றின் இறைச்சி நீங்கலாக முட்டை, பால், சாணம், மயிர் போன்றவையும் கிடைக்கின்ற நிலையில், பன்றிகளால் மக்கள் அடையும் ஒரே பயன் அதன் இறைச்சி மட்டுமே. அயல்நாடுகளில் பன்றிகள் வளர்ப்பு என்பது மிக இன்றியமையாத தொழில் என்பதால் அங்கே பன்றிகளை நன்கு கவனித்து வளர்த்து விற்பனை செய்கின்றனர். ஆனால், இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பன்றிவளர்ப்பில் மக்கள் அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. காரணம் நமது இந்தியப்பன்றிகளின் கருத்த நிறம் தான். பன்றிகளை வளர்ப்போரும் அதனை சுகாதாரமான முறையில் வளர்க்காமல் சாக்கடைகளிலும் மலக்கிடங்குகளிலும் எதையாவது தின்றுதிரியவிட்டு வளர்க்கின்றனர். இதனால் பன்றி என்பது ஒரு அருவருக்கத்தக்க விலங்காகவே இன்றைய தமிழக மக்கள் மனதில் இடம்பெற்று நிற்கிறது. ஆனால், சங்ககாலத்தில் இந்தப் பன்றிகளின் நிலை வேறுவிதமாக இருந்தது. சங்ககாலத்தில் பன்றிகளின் நிலையினைப் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.

பன்றி - பெயர்களும் காரணங்களும்:

பன்றி என்னும் விலங்கினைக் குறிப்பிடும் பெயர்களாக, பன்றி, கேழல், ஏனம், முளவுமா, அரி, கோட்டுமா, களிறு, எய், எய்ம்மா போன்றவற்றைச் சங்க இலக்கியங்கள் பதிவுசெய்துள்ளன. இவற்றுள்,

பன்றி என்னும் பெயர் அவ்விலங்கின் சிறப்பு உறுப்பான பல்லை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கவேண்டும். அதாவது, பல் >>> பன்றி.

பொதுவாக, காட்டுப்பன்றிகளுக்கும் நாட்டுப்பன்றிகளுக்கும் உடல் அமைப்பிலும் முக அமைப்பிலும் சற்று வேறுபாடு உண்டு. காட்டுப்பன்றியின் வாய்க்குள் இருந்து நான்கு பற்கள் மிக நீளமாக யானையின் தந்தம்போல வெளிப்புறமாக வளர்ந்து வளைந்த நிலையில் இருக்கும். சங்க இலக்கியங்களில் பெரும்பாலும் காட்டுப்பன்றிகளே குறிப்பிடப்படுவதாலும் காட்டுப்பன்றியின் முகத்தில் காணப்படும் சிறப்பு உறுப்பாக பற்களே விளங்குவதாலும் 'பல்' என்ற சொல்லின் அடிப்படையில் 'பன்றி' என்ற பெயர் அதற்கு உண்டாயிற்று எனலாம். அடுத்தது,

கேழல் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய நிலத்தைக் கெண்டும் அதாவது தோண்டும் பண்பினை அடிப்படையாகக் கொண்டு எழுந்த பெயராகும். அதாவது, கெண்டுதல் >>> கேளல் >>> கேழல்.

ஏனம் என்னும் பெயர் அவ்விலங்கினுடைய முகவாய் அமைப்பினால் வந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. ஏனம் என்பது ஆய்த எழுத்தினையும் குறிக்கின்றநிலையில், பன்றியின் முகவாய் அமைப்பானது மேலே இரண்டு நாசி துவாரங்களையும் கீழே ஒரு வாய் துவாரத்தினையும் கொண்டு பார்ப்பதற்கு ஆய்த எழுத்தின் அமைப்பினை ஒத்திருப்பதால் பன்றிக்கும் ஏனம் என்ற பெயர் ஏற்பட்டிருக்க வேண்டும்.

முளவுமா என்ற பெயர் முள்ளம்பன்றிக்கு அமைந்த பெயராகும். முள்ளை உடையதால் முளவுமா என்றாயிற்று. எய், எய்ம்மா ஆகிய பெயர்களும் எய் அதாவது முள்ளின் அடிப்படையில் முள்ளம்பன்றிக்கு அமைந்த பெயர்களாகும்.

களிறு என்ற பெயர் ஆண்யானையைக் குறிக்கும் பெயராகவே பெரிதும் அறியப்படும் நிலையில், காட்டுப்பன்றிக்கும் களிறு என்ற பெயர் ஏற்பட மூன்று காரணங்களைக் காட்டலாம். ஆண் காட்டுப்பன்றியும் சரி ஆண்யானையும் சரி இரண்டுமே நிறத்தில் கரியவை; இரண்டுக்குமே நீண்ட வளைந்த வெண்ணிற மருப்புக்கள் உண்டு; இரண்டுமே சேற்றில் விரும்பி விளையாடி உடலெல்லாம் சேற்றினை பூசிக்கொள்பவை.

சங்க இலக்கியத்தில் பன்றி:

சங்க இலக்கியத்தில் பெரும்பாலும் காட்டுப்பன்றிகளே பேசப்பட்டுள்ளன. இவைதவிர முள்ளம்பன்றிகளும் நாட்டுப் பன்றிகளும் சிற்சில இடங்களில் பேசப்பட்டுள்ளன. காட்டுப்பன்றிகளைப் பற்றிக் கூறும்போது, பயிர் விளைந்திருக்கும் வயலைத் தோண்டி நாசம் செய்வதைப் பற்றியும் இதனால் அவற்றைப் பிடிப்பதற்குத் தோட்டக் காவலர்கள் பல்வேறு வழிமுறைகளைப் பின்பற்றுவதைப் பற்றியும் விரிவான செய்திகள் காணப்படுகின்றன. பல்லிகளின் ஓசையினை சகுனமாகக் கொண்டு, தோட்டக் காவலர்கள் மாட்டிவைத்த பொறிகளில் சிக்காமல் காட்டுப்பன்றிகள் தப்பிச்செல்லும் சுவையான நிகழ்வுகளையும் அறியமுடிகிறது. காட்டுப்பன்றிகளின் உடலைக் கட்டளைக் கல்லுக்கும் மருப்பினை வாகைப்பூ, முருக்கின் காய், இளம்பிறை, வச்சிராயுதம் போன்றவற்றுக்கும் பிடரிமயிரினை மூங்கில் வேருடனும் பனைமரத்தின் செறும்புடனும் கண்களை நெருப்புத் துண்டுடனும் ஒப்பிட்டுச் சங்கப் புலவர்கள் பாடியிருப்பது நினைந்து இன்புறத்தக்கது. முள்ளம்பன்றிகளைப் பற்றிக் கூறும்போது, அவற்றை வேட்டையாடிய கானவர்களின் உடலில் குத்திய கூரிய முட்களை வெளியே எடுக்கும்போது கானவர்கள் பட்ட வேதனை விளக்கப்படுகிறது. நாட்டுப்பன்றிகளைப் பற்றிக் கூறும்போது, கோழி, ஆடு போன்றவற்றுடன் பன்றிக்குட்டிகளும் புறச்சேரிகளில் வளர்க்கப்பட்ட செய்தியும் அறியப்படுகிறது. இனி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, நாட்டுப்பன்றி ஆகிய மூன்றினையும் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் விரிவான செய்திகளைத் தனித்தனியே காணலாம்.

காட்டுப்பன்றி:

இந்தியக்காடுகளில் வளர்வதான காட்டுப்பன்றிகளின் விலங்கியல் பெயர் சுஸ் ஸ்குரொஃபா க்ரிஸ்டேடஸ் (sus scrofa cristatus) ஆகும். முதிர்ந்த இந்திய காட்டுப்பன்றியின் சராசரி உயரம் 3 அடி நீளம் 5 அடி எடை 110 கிலோ. சங்ககாலத்தில் வாழ்ந்த காட்டுப்பன்றிகளின் உடலமைப்பினைப் பற்றியும் தன்மைகளைப் பற்றியும் அவற்றை வேட்டையாடிய முறைகளைப் பற்றியும் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் கீழே விரிவாகப் பார்க்கலாம்.

காட்டுப்பன்றியின் உடலமைப்பு:

காட்டுப்பன்றிகள் கருமைநிறம் கொண்டவை. இருளைத் துண்டுதுண்டாக வெட்டியதைப் போல காட்டுப்பன்றிகள் கருநிறத்தில் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகிறது.

இருள் துணிந்து அன்ன ஏனம் - மலை. 243

கருமைநிறம் கொண்ட காட்டுப்பன்றிகளைச் சங்ககாலத்தில் பொன்னை உரசிப்பார்த்து மாற்று அறிய உதவிய கருமைநிறக் கட்டளைக் கல்லுடன் ஒப்பிட்டும் சில பாடல்கள் உள்ளன. அவற்றுள் சில கீழே:

நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல்
கட்டளை அன்ன கேழல் மாந்தும் - ஐங்கு. 263

பொன்போன்ற தினைகள் முதிர்ந்திருந்த தோட்டத்தில் காட்டுப்பன்றிகள் மேய்ந்தபோது அவற்றின் உடலின்மேல்  ஒட்டியிருந்த தினைகளின் தோற்றமானது, பொன்னை உரசிப் பார்த்த கருநிறக் கட்டளைக்கல்லின்மேல் இருந்த பொன்னின் துகள்களைப் போலத் தோன்றியதாக மேற்பாடலில் கூறுகிறார் புலவர். இதேபோன்ற ஒரு உவமை விளக்கத்தினைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலிலும் காணலாம்.

பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வர
கிளைஅமல் சிறுதினை விளைகுரல் மேய்ந்து - அகம். 178

காட்டுப்பன்றியின் பிடரியில் இருந்த தடித்த மயிரானது மூங்கிலின் வேர்களைப் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி - அகம். 178

காட்டுப்பன்றியின் பிடரிமயிரினை பனைமரத்தின் செறும்புடன் அதாவது நாருடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

இரும் பனஞ்செறும்பின் அன்ன பரூஉமயிர் சிறுகண் பன்றி - அகம். 277

காட்டுப்பன்றியின் கண்கள் சிறியதாக நெருப்புத் துண்டம்போல இருந்ததைக் கீழ்க்காணும் பாடல்வரி கூறுகிறது.

நெருப்பின் அன்ன சிறுகண் பன்றி - அகம். 84

காட்டுப்பன்றியின் வாய்க்குள் இருந்து நான்கு பற்கள் வெளிப்புறமாக நீண்டு வளைந்திருக்கும் என்று முன்னர் கண்டோம். இப்பற்களை மருப்பு என்றும் கோடு என்றும் சங்க இலக்கியம் கூறும். காட்டுப்பன்றியின் நீண்ட பற்களானவை பிறைச்சந்திரனைப் போல வளைந்தும் வெண்மையாகவும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

இளம்பிறை அன்ன கோட்ட கேழல் - ஐங்கு. 264
பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றி - அகம்.322

காட்டுப்பன்றியின் கூரிய வளைந்த மருப்பானது வச்சிராயுதம் போலக் கூர்மையுடன் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் - - அகம். 178

காட்டுப்பன்றியின் வளைந்த பல்லினை முருக்கமரத்தில் விளைந்த நீண்ட பெரிய வளைந்த காயுடன் ஒப்பிட்டுக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

கேழல் வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய்
நனை முதிர் முருக்கின் சினை சேர் பொங்கர்
காய் சின கடு வளி எடுத்தலின் வெம் காட்டு
அழல் பொழி யானையின் ஐயென தோன்றும்    - அகம். 223

காட்டுப்பன்றியின் வளைந்த மருப்பினைப்போலத் தோன்றும் நீண்ட காயினை உடைய முருக்கமரத்தில் மலர்ந்திருந்த செந்நிறப் பூக்கள் கடுமையான காற்று வீசியதால் கீழிருந்த கரும்பாறையின்மேல் உதிர்ந்த தோற்றமானது ஒரு காட்டுயானையின் மேல் தீப்பொறிகள் சொரிந்ததைப் போலத் தோன்றியது என்று அக்காட்சியினை அழகான உவமையுடன் விளக்குகிறது மேற்பாடல் வரிகள்.

காட்டுப்பன்றிகளின் வளைந்த வெண்மருப்பினை வாகைப்பூக்களுடன் ஒப்பிட்டுக் கூறும் பாடல்வரி கீழே:

புகழா வாகைப்பூவின் அன்ன வளைமருப்பு ஏனம் - பெரும்.106

கரிய நிறத்தில் வெண்ணிற வளைந்த மருப்புக்களுடன் காணப்படும் காட்டுப்பன்றிகளின் கூட்டத்தினைப் பேய்மகளிருடன் ஒப்பிட்டுக் கூறும் மதுரைக்காஞ்சிப் பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. 

பிண கோட்ட களிற்றுக் குழும்பின்
நிண வாய் பெய்த பேய்மகளிர்   - மது.24  

கருநிற உருவம் கொண்ட பேய்ம்மகளிர் தின்ற வெண்ணிற மாமிசக் கொழுப்பானது வாயின்மேல் ஆங்காங்கே பூசியிருக்க, பார்ப்பதற்குப் பின்னிய நீண்ட வெண்பற்களையுடைய கரிய காட்டுப்பன்றிகளின் கூட்டம்போல அவர்கள் காணப்பட்டனர் என்று மேற்பாடல் வரிகள் கூறுகின்றன.

காட்டுப்பன்றியின் தன்மைகள்:

காட்டுப்பன்றிகளின் முதன்மை உணவும் பிடித்தமான உணவும் கிழங்கு வகைகள் ஆகும். கிழங்குகள் நிலத்தின்கீழ் விளைபவை என்பதால் காட்டுப்பன்றிகள் எப்போதுமே தமது வாயினைக்கொண்டு நிலத்தைத் தோண்டிக் கொண்டேயிருக்கும் தன்மை கொண்டவை. இப்படித் தோண்டிய மலைநிலத்தில் இருந்து ஒளிவீசும் பல்வேறு மணிகள் வெளிப்பட்டதாகக் கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் கூறுவதைப் பாருங்கள்.

வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி          
ஒளி திகழ் விளக்கத்து - நற். 399

கிழங்குகளை உண்பதற்காகக் காட்டுப்பன்றிகள் வயல்நிலங்களை ஆழமாக உழுதுவிட்டதால், காட்டுவாசிகளும் குறவர்களும் அந்த நிலங்களை மீண்டும் உழாமலே வித்தி விளைந்த பயிர்களைக் கொண்டுசென்ற செய்தியினைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில்
தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் - ஐங்கு. 270

கொழும் கிழங்கு மிளிரக் கிண்டி கிளையொடு
கடுங்கண் கேழல் உழுதபூழி நன்நாள் வருபதம் நோக்கிக்
குறவர் உழாஅது வித்திய பரூஉ குரல் சிறுதினை - புறம். 168

காட்டுப்பன்றிகள் தமது நீண்ட வாயினால் ஆழமாக உழுத நிலத்தில் ஆமைகள் முட்டையிட்டு மண்ணைக்கொண்டு மூடிவிட்டுச் செல்லும். மழைநீரினால் சேறாகிப்போன அந்நிலத்தினை ஓரை விளையாடிய பெண்கள் கிளறிப் பார்த்தபோது அதற்குள் ஆமைகளின் முட்டைகளும் ஆம்பல் கிழங்குகளும் இருந்ததாகக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின்
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையை
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் - புறம். 176

பன்றிகளுக்குச் சேற்றில் புரள்வதும் விளையாடுவதும் மிகப் பிடித்தமான ஒன்றாகும். இதனை இக்காலத்திலும் நாம் பார்க்கலாம். அதைப்போல சங்ககாலத்திலும் காட்டுப்பன்றிகள் சேற்றில் விளையாடியதால் உடலெல்லாம் பூசியிருந்த சேறானது காய்ந்தபின்னர் பார்ப்பதற்கு நீறுபோலத் தோன்றியதாக கீழ்க்காணும் பாடல் வரிகள் கூறுகின்றன.

சிறுகண் பன்றி பெருஞ்சின ஒருத்தல்
சேறுஆடு இரும்புறம் நீறொடு சிவண - நற்.82

வீட்டில் இருந்து ஒரு நல்லகாரியத்திற்காகப் புறப்பட்டுச் செல்லும் முன்னர் வீட்டில் உள்ள பல்லி வாயுமூலையில் இருந்தவாறு சத்தமிட்டால் அதனை நல்லசகுனம் என்று கருதி மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் செல்வர். இப்படிப் பல்லி இருக்கும் இடத்தினைப் பொறுத்து அதன் ஒலியைக் கொண்டு மனிதர்கள் பல வேலைகளுக்கும் சகுனம் பார்ப்பது வழக்கமே. சங்ககாலத்திலும் மக்கள் பல்லி சகுனம் பார்த்த செய்திகளைச் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறியலாம். ஆனால், பன்றிகளும் குறிப்பாகக் காட்டுப்பன்றிகளும் பல்லிசகுனம் பார்த்ததாகக் கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல் புதிய செய்தியினைத் தெரிவிக்கிறது.

சிறுகண் பன்றி ஓங்குமலை வியன்புனம்
படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில்
தாழாது பாங்கர் பக்கத்து பல்லி பட்டு என            
மெல்லமெல்ல பிறக்கே பெயர்ந்து தன்
கல் அளை பள்ளி வதியும் நாடன் - நற். 98

சிறிய கண்களையுடைய காட்டுப்பன்றியானது பொறி அமைக்கப்பட்டிருந்த வாசல்வழியாகத் தோட்டத்திற்குள் நுழையும் முன்னர் அருகில் இருந்த பல்லி எழுப்பிய ஓசையினைக் கேட்டு, ஆபத்து இருப்பதனை உணர்ந்து தோட்டத்திற்குள் நுழையாமல் பின்வாங்கி தனது இருப்பிடத்திற்கே சென்றுவிட்டதாக மேற்பாடல் கூறுகிறது. காட்டுப்பன்றிகள் பல்லியின் ஒலியைக் கொண்டு சகுனம் பார்க்கும் செய்தியைக் கீழ்க்காணும் அகநானூற்றுப் பாடலும் கூறுவதைப் பாருங்கள்.

முதைசுவல் கலித்த மூரி செந்தினை
ஓங்கு வணர் பெருங்குரல் உணீஇய பாங்கர்
பகுவாய் பல்லி பாடு ஓர்த்து குறுகும் புருவைபன்றி - அகம். 88

காட்டுப்பன்றிகள் பாய்ந்துசெல்லும் காட்டாற்று நீரிலும் நீச்சல் அடித்துச் செல்லும் திறன் உடையவை. இதைப்பற்றிக் கூறும் அகநானூற்றுப் பாடல் கீழே தரப்பட்டுள்ளது.

உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம்               
கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து - அகம். 18

காட்டுப்பன்றி வேட்டை:

காட்டுப்பன்றிகள் வயலில் விளைந்திருக்கும் பயிர்களைத் தோண்டி நாசம் செய்யும். பகலில் மட்டுமின்றி இரவிலும் இவை தோட்டங்களுக்குள் புகுந்து இரைதேடும். அப்படி ஒருமுறை பயிரும் களையும் வளர்ந்திருந்த தோட்டத்திற்குள் காட்டுப்பன்றிகள் புகுந்ததால் அஞ்சிப் பறந்துசென்று கடம்பமரத்தின் நறுமணமிக்க வண்ணப் பூக்களைப் போலிருந்த தனது குஞ்சுகளை அணைத்துத் தழுவியவாறு தனது கூட்டில் தங்கியதாம் கருநிற மோவாயும் குறுகிய கால்களையும் கொண்ட ஒரு குறும்பூழ்ப் பறவை. இந்த அழகிய காட்சியைப் படம்பிடித்துக் காட்டும் பாடல்;வரிகள் கீழே:

துளர்படு துடவை     அரிபுகு பொழுதின் இரியல் போகி
வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன
வளர் இளம் பிள்ளை தழீஇ குறும் கால்
கறை அணல் குறும்பூழ் கட்சி சேக்கும் - பெரும். 201

தோட்டத்தை நோக்கிக் காட்டுப்பன்றிகள் திரளான கூட்டமாக வரும்போது அவற்றைத் துரத்துவதற்காகத் தோட்டக்காவலர்கள் ஊதிய கரிய ஊதுகொம்பின் ஓசையானது குறுநரிகள் இரவிலே எழுப்பும் ஊளை ஓசையுடன் ஒத்து இசைத்ததாக கீழ்க்காணும் பாடல் விளக்குகிறது.

குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி
சிறு கண் பன்றி பெரு நிரை கடிய
முதை புனம் காவலர் நினைத்திருந்து ஊதும்
கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும்
வன்புல காட்டு நாட்டதுவே - அகம். 94

வயல்நிலங்களில் விளைந்திருந்த பயிர்களைச் சேதம்செய்த காட்டுப்பன்றிகளை வேட்டையாட பல்வேறு வழிமுறைகளைச் சங்ககால மக்கள் பயன்படுத்தினர். காட்டுப்பன்றிகள் வயலைநோக்கி வரும் வழியில் தோட்டக்காவலன் நிலத்திலே வெட்டியிருந்த வலையுடன் கூடிய பள்ளத்திலே விழுந்த காட்டுப்பன்றியானது எழுப்பிய மரண ஓலத்தினைப் பற்றிக் கீழ்க்காணும் பாடல்வரிகள் கூறுகின்றன.

சேணோன் அகழ்ந்த மடிவாய் பயம்பின்    
வீழ்முகம் கேழல் அட்ட பூசல் - மது. 295

காட்டுப்பன்றிகளைப் பிடிப்பதற்காக வெட்டிய பெரிய பள்ளங்களுக்குள் காட்டுவாசிகள் ஒளிந்திருந்து காட்டுப்பன்றிகளின் வரவினை எதிர்பார்த்துக் காத்திருந்த செய்தியினைக் கீழ்க்காணும் பாடல் வரிகளில் இருந்து அறியலாம்.

பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி             
புகழா வாகை பூவின் அன்ன
வளை மருப்பு ஏனம் வரவு பார்த்திருக்கும்
அரைநாள் வேட்டம் அழுங்கின் - பெரும்.106

பயிர் விளைந்திருக்கும் தோட்டத்தினை நாசம் செய்யவருகின்ற காட்டுப்பன்றிகள் தோட்டங்களில் நுழையும் வழிகளில் எல்லாம் பெரிய கற்களைக் கொண்டு செய்த 'அடார்' என்னும் பொறிகளை அமைத்திருந்தனர். இந்த அடார் என்னும் கல்பொறியின் அமைப்பினைப் புரிந்துகொள்ள அருகிலுள்ள படம் உதவும். காட்டுப்பன்றிகளைப் பிடிக்க உதவிய அடார் என்னும் பொறிகளைப் பற்றிக் கூறும் சில பாடல்வரிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி        
புழைதொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் - மலை. 193

தினை உண் கேழல் இரிய புனவன்
சிறுபொறி மாட்டிய பெருங்கல் அடாஅர் - நற்.119

காட்டுப்பன்றிகளை வேட்டைநாய்களின் உதவியுடன் வேட்டையாடிய செய்திகள் சங்க இலக்கியங்களில் பல பாடல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிறிய கண்களையும் பெரும் சினமும் கொண்ட ஆண்பன்றி ஒன்றின் உடலெலாம் சேறு அப்பியிருக்க உலர்ந்தநிலையில் பார்ப்பதற்கு அது நீறுபூசியதைப் போலத் தோன்றியது. வேட்டுவன் எறிந்த கூர்முனைகொண்ட நீண்ட கோலானது அப்பன்றியின்மேல் சரியாகப் படவும் அதனை நெருங்கிய வேட்டைநாயானது அதன் பெரிய காதினைக் கடித்து வாயில் கவ்வியவாறு வேட்டுவனைப் பின்தொடர்ந்த காட்சியினை கீழ்க்காணும் நற்றிணைப் பாடல் அப்படியே நம் கண்முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றது.

சிறு கண் பன்றி பெரும் சின ஒருத்தல்
சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ
கோள் நாய் கொண்ட கொள்ளை           
கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே - நற்.82

வேட்டைநாய்கள் மட்டுமின்றி, கானவர்களும் தோட்டக் காவலர்களும் வில்கொண்டு அம்பெய்தியும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடினர். இதைப்பற்றிக் கூறும் சில பாடல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சாரல் கொடுவில் கானவன் கோட்டுமா தொலைச்சி
பச்சூன் பெய்த பகழி போல - நற். 75

கழுதில் சேணோன் ஏவொடு போகி - மலை. 243

வன்கை கானவன் வெஞ்சிலை வணக்கி
உளம்மிசை தவிர்த்த முளவுமான் ஏற்றையொடு - நற்.285

நாட்டுப்பன்றி:

வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிகளாகிய நாட்டுப்பன்றிகளின் விலங்கியல் பெயர் சுஸ் ஸ்குரோஃபா டொமஸ்டிகஸ் (sus scrofa domesticus) ஆகும். இப்போது கருப்புப்பன்றிகள் மட்டுமின்றி வெள்ளைநிறம் கொண்ட ஐரோப்பியப் பன்றிகளும் கலப்பினப் பன்றிகளும் வளர்ப்பில் இருந்தாலும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் வளர்க்கப்பட்டு வந்தவை கருப்புநிறப் பன்றிகளே ஆகும். சங்ககாலத்தில் தமிழர்கள் தம் வீட்டில் வளர்த்துவந்த பன்றிகளைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறும் செய்திகளைக் காணலாம்.

சங்கத்தமிழர்கள் வீட்டில் வளர்த்த பன்றிக்குட்டிகளுடன் கோழிகளும் ஆடுகளும் சிவல்களும் உறைகிணற்றினை உடைய புறச்சேரியில் விளையாடிய செய்தியை கீழ்க்காணும் பட்டினப்பாலை வரிகள் கூறுகிறது.

பறழ்பன்றி பல்கோழி
உறைகிணற்றுப் புறச்சேரி
மேழகத் தகரொடு சிவல் விளையாட - பட். 75

கள்ளைக் காய்ச்சிய பெண்கள் பாத்திரங்களைக் கழுவி ஊற்றிய நீரானது வழிந்துசென்ற பள்ளத்தில் உண்டாகிய சேற்றிலே குட்டிகளுடனும் தனது துணையுடனும் தங்கிவிட்ட ஆண்பன்றியின் குடும்பத்துக்கு அரிசிமாவு போன்ற உணவுகளை நாள்தோறும் அவற்றுக்கான குழியிலிட்டு உண்ணச்செய்து வளர்த்த செய்தியினைக் கீழ்க்காணும் பெரும்பாணாற்றுப்படைப் பாடல்வரிகள் பறைசாற்றுவதைக் காணலாம்.

கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய
வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின்              
ஈர் சேறு ஆடிய இரும் பல் குட்டி
பல் மயிர் பிணவொடு பாயம் போகாது
நெல்மா வல்சி தீற்றிப் பல் நாள்
குழி நிறுத்து ஓம்பிய குறும்தாள் ஏற்றை - பெரும். 339

முள்ளம்பன்றி:

இந்தியக் காடுகளில் வாழ்வதும் உடலெல்லாம் கூரிய முட்களை உடையதுமான முள்ளம்பன்றியின் விலங்கியல் பெயர் ஹிஸ்ட்ரிக்ஸ் இண்டிகா (hystrix indica) ஆகும். இதன் பெயரில் பன்றி என்று இருந்தாலும் இது பன்றி இனத்தைச் சேர்ந்ததல்ல. இது சராசரியாக 3 அடி நீளமும் 15 கிலோ எடையும் உடையது. இதன் உடலில் உள்ள முட்கள் பல அடுக்குகளாகக் காணப்படும். கழுத்து மற்றும் தோள் பகுதிகளில் நீண்ட மெல்லிய முட்களும் முதுகு மற்றும் வால்புறத்தில் குட்டையான தடித்த முட்களும் காணப்படும். சில முட்கள் 2 அடி நீளத்தில் கூட காணப்படும். சங்க இலக்கியத்தில் இந்த முள்ளம்பன்றிகளை எய், எய்ம்மா, முளவுமா என்று குறிப்பிட்டுள்ளனர். சங்க இலக்கியங்கள் முள்ளம்பன்றிகளைப் பற்றிக் கூறியுள்ள செய்திகளைக் கீழே காணலாம்.

காடுகளில் வாழ்ந்த மக்கள் ஈச்சமரத்தின் இலைகளால் வேய்ந்த குடிசைகள் காய்ந்து நிறம் மாறியதும் முள்ளம்பன்றியின் முதுகுப்புறம் போலத் தோன்றியதாகக் கீழ்க்காணும் பாடல் கூறுகிறது.

ஈத்து இலை வேய்ந்த எய்ப்புறக் குரம்பை   - பெரும். 88

மலையில் இருக்கும் குகைகளில் தங்கியிருக்கும் முள்ளம்பன்றிகளை வேட்டையாடிய பொழுது எஃகு போன்ற கூரிய முட்களால் அவை கொட்டியதால் அம்முட்களை இழுத்தபோது வலிதாங்காமல் காட்டுவாசிகள் அழுது ஓலமிட்டதை கீழ்க்காணும் பாடல் வரிகள் விளக்குகின்றன.

சேய் அளை பள்ளி எஃகு உறு முள்ளின்
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - மலை.300    

முடிவுரை:

சங்க இலக்கியங்களில் பன்றிகளைப் பற்றிக் கூறியிருக்கும் பல்வேறு செய்திகளை மேலே பல தலைப்புக்களின் கீழ் விரிவாகக் கண்டோம். இவைதவிர இன்னும் பல சுவையான செய்திகள் சங்க இலக்கியத்தில் நிரம்பியுள்ளன. தோட்டக் காவலர்கள் எய்த அம்பானது உடலில் பாய்ந்தும் தப்பி ஓடிய காட்டுப்பன்றிகள் வழியில் இறந்துகிடக்க, காட்டுவழியில் செல்வோர் அவற்றைத் தீமூட்டிச் சுட்டுத்தின்ற செய்தியும் காட்டுப்பன்றிகளுக்காக வைத்த பொறிகளில் காட்டுப்புலி மாட்டிக்கொள்ளும் செய்தியும் ஆண்காட்டுப் பன்றியானது தனது குட்டிகளைக் காப்பாற்றப் புலியை எதிர்த்துநின்ற செய்தியும் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவை. வாழ்க இலக்கியம் ! வாழட்டும் பன்றியும் !!.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.