செவ்வாய், 18 நவம்பர், 2014

குயம் என்றால் என்ன?

முன்னுரை:

குயம் என்ற சொல்லுக்கு இன்றைய நிகண்டுகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

திவாகர நிகண்டு        குயம் = 360 - கொங்கை சொர்க்கம் குயம் தனம் நகிலம் தங்கிய குரூஉகண் அம்மம் பயோதரம் இங்கிவை மாதர் முலை என இசைப்பர்.
                     1158 - குயமும் புள்ளமும் கொடுவாளாகும்.
                     1938  அரிவையர் முலையும் கொடுவாளும் இளமையும் கருதில் இம்மூன்றும் குயமெனக் கருதுவர்
பிங்கள நிகண்டு        குயம் =  3396 - கொங்கையும் அரிவாளும் குயம் எனப்படுமே
உரிச்சொல் நிகண்டு  குயம் = 228 இலையும் நிலனும் தலம் கொடுவாளும் குயம்
கயாதர நிகண்டு        குயம்   = 471 கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயமது என்க
பாரதி தீப நிகண்டு  குயம்    = குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலமே குரூஉக்கண் அம்மம் பயோதரம் என் முலையே
ரேவண சித்தர் அகராதி நிகண்டு    குயம்    = குயமென்பதுவே இளமையும் அரிவாள் எனவும் ஆகும் முப்பேரே
சூடாமணிநிகண்டு குயம் = 158 தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்
ஆசிரிய நிகண்டு      குயம்    = 87 பேசும் நகிலம் கொங்கை அம்மம் பயோதரம் பெருகிய தனம் குரூஉகண் பெருமை பெரு கொங்கை சுவர்க்கம் பறம்பு உடன் பெருத்த குயம் முலையின் பெயர். 
வட மலை நிகண்டு  குயம்    =  குயமெனும் பெயரே இளமையும் முலையும் கொடுவாளெனவும் கூறப்படுமே
அரும்பொருள் விளக்க நிகண்டு குயம்    =378 குயம் முலை   அரிவாளின்பேர் கொழுமை சேர் இளமையுமே
பொதிகை நிகண்டு குயம்  = 790 குயம் அரிவாளும் கொங்கையும் இளமையும்
நாமதீப நிகண்டு குயம் = 417 அரிவாள் புள்ளம் கொடுவாள் குயம்
                           582 கொம்மை குரூஉக்கண் சுவர்க்கம் கொங்கை நகில் செக்கை பறம்பு அம்மம் பயோதரம் குயம் தனம் முலை
நானார்த்த தீபிகை  குயம் 587 குயமே கொடுவாள் இளமை முலை
அபிதான மாலை  குயம் = 448  முலை அம்மம் உரோருகம் சொர்க்கம் குரூஉகண் செக்கை கொங்கை  தனம் நகிலம் பறம்பு மெய்க்கதிர் ஆமெனப் புகல்வர்
வேதகிரியார் சூடாமணி நிகண்டு குயம் 297 குயம் தனம் இளமையோடு கூரரிவாளும் முப்பேர்.
(நன்றி: திரு. நு. த. லோகசுந்தரம் ஐயா அவர்கள்)

இச் சொல்லுக்கு இணையத் தமிழ் அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைத் தருகின்றன.

சென்னைத் தமிழ்ப் பேரகராதி:  குயம்¹ kuyam n. perh. கொய்-. 1. Sickle, reaping-hook, curved knife, அரிவாள். கொடுவாய்க் குயத்து (சிலப். 16, 30). 2. Razor; நாவிதன் கத்தி. அருங்குயந் தான்களைந்து (சீவக. 2500). 3. Potter caste; குயச்சாதி., n. prob. 4. குழ. Juvenility, youth; இளமை. (திவா.), 5. < kuca. Woman's breast; முலை. குச்சிலியமாதர் குயமும் (தனிப்பா. ii, 75, 190), 6. n. < kuša. Darbha grass. See தருப்பை.

பேப்ரிசியஸ் அகராதி: குயம் (p. 266) [ kuyam ] , s. juvenility, இளமை; 2. a sickle, அரிவாள்; 3. the potter caste. குயவன், (fem. குயத்தி) see குசவன் under குசம்., (p. 266) [ kuyam ] {*}, s. breast, முலை; 2. sacrificial grass, தருப்பை.

வின்சுலோ அகராதி: குயம், (p. 328) [ *kuyam, ] s. Female breast, முலை. Wils. p. 225. KUCHA. 2. Juvenility, youthful ness, இளமை. (Compare கயம்.) 3. A sickle, a reaping hook, a curved knife; wrought iron, கொடுவாள். 4. Sacrificial grass, தருப்பை Wils. p. 235. KUS'A.

மேலே கூறியவற்றைத் தொகுத்துக் காணுமிடத்து, குயம் என்பதற்கு கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாகத் தெரிகிறது.

குயம் = அரிவாள், முலை, இளமை, தருப்பைப்புல், நிலம், இலை, ஒருவகை சாதி.

இப் பொருட்களைப் பார்த்தால், ஒன்றுக்கொன்று தொடர்பற்றவையாக இருப்பதை அறியலாம். ஆனாலும், இப் பொருட்களுக்கிடையே ஒரு தொடர்பு உண்டு. அது என்ன என்பதைப் பற்றியும் இப் பொருட்கள் எதிலிருந்து எவ்வாறு தோன்றின என்பதைப் பற்றியும் ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

குயம் - ஆணிவேரும் சல்லிவேர்களும்:

முதலில் குயம் என்ற சொல்லின் வேர்மூலம் அதாவது ஆணிவேர் என்ன என்று காணலாம்.

குயம் என்ற சொல்லில் இருந்து அம் என்ற விகுதியைக் களைந்தால் மிஞ்சுகின்ற குய் என்பதே இதன் மூல வேர்ச்சொல்லாகும். 

குய் என்ற வேர் குறிக்கும் முதன்மைப் பொருள் குழைதல் என்பதாகும். இறுகிய (அ) உறைந்த நிலையில் இருந்து ஒரு பொருள் இளகிய நிலையினை எய்துவதே குழைதல் என்று பொதுவாகக் குறிக்கப் பெறுகிறது.

குழைவான நிலையில் இருக்கும் பொருட்களுக்கு வளைந்து கொடுக்கும் பண்பும் மென்மைத் தன்மையும் உண்டு. ஆக,

குழைதல் என்ற முதன்மைப் பொருளில் இருந்து வளைதல் மற்றும் மென்மையாதல் ஆகிய இரண்டு விரிவாக்கப் பொருட்கள் பெறப்படுகின்றன. இனி,

குழைதல் பொருளைக் குறிக்க யகரத்தைக் கொண்டால், வளைதலைக் குறிக்க யகரத்தின் இன எழுத்தான சகரத்தையும், மென்மையாதலைக் குறிக்க இன்னொரு இன எழுத்தான ஞகரத்தையும் கொள்ளமுடியும். ஆனால், இப்படியானதோர் பகுப்புமுறையினை நடைமுறைப் படுத்தும்போது சிக்கல்கள் இருந்ததால், ய, ச, ஞ என்ற மூன்று எழுத்துக்களும் குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய பொருட்களில் எதைக் குறிக்க வேண்டுமானாலும் பயன்படுத்தப் பட்டன. அவ்வகையில்,

குய் என்ற ஆணிவேரில் இருந்து,

குச், குஞ் என்ற இரண்டு சல்லிவேர்கள் தோன்றின எனலாம்.


சொல் - பொருள் தொடர்பு:

இனி, குயம் என்ற சொல் குறிக்கும் மேலே கண்ட பல்வேறு பொருட்களுக்கிடையிலான தொடர்பு என்ன என்று காணலாம்.

குயம் = முலை - இது குழையும் பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = அரிவாள் / கொடுவாள் - இது வளைந்த பண்பினால் தோன்றிய பெயராகும்.
குயம் = மட்பாண்டம் செய்யும் ஒருவகை சாதியினர். மண்ணைக் குழைத்து பாண்டங்கள் செய்வதால் இவர்கள் குயவர் எனப்பட்டனர். 
குயம் = தருப்பைப்புல் - இது நீண்டு வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராகும்.
குயம் = நிலம் - இது குழைக்கப்பட்ட மண் என்ற பொருளில் ஆகுபெயராய் நிலத்தையும் குறித்தது.
குயம் = இளமை - இது குழைதல், வளைதல், மென்மையாதல் ஆகிய மூன்று பண்புகளையும் உடைய பெயராகும்.
குயம் = இலை - இதுவும் புல்லைப் போலவே வளைந்து தொங்குவதால் தோன்றிய பெயராம்.

விரிவாக்கப் பொருட்கள்:

குயம் என்ற சொல்லுக்கு எவ்வாறு இத்தனைப் பொருட்கள் தோன்றின என்பதை மேலே கண்டோம். இனி, இப் பொருட்களைத் தவிர, வேறு சில பொருட்கள் எவ்வாறு இந்த மூலவேர் மற்றும் சல்லிவேர்களில் இருந்து தோன்றின என்பதையும் இங்கே காணலாம்.

குய் = நெய் / எண்ணை - இது குழையும் பண்பினால் பிறந்த பெயர்.
குய்ப்புகை = நெய் / எண்ணையால் தாளிக்கும் புகை.
குயக்குண்டு = குயவர் மண்ணெடுத்த குழி.

குச்சு / குச்சம் = நாணல் புல்.
குச்சி = புல்லின் தண்டுப் பகுதி, இலைகள் தொங்குகின்ற மெலிந்த மரக்கிளை.
குச்சில் = புல்லால் வேய்ந்த வீடு.
குசம் = முலை.
குசமசக்கு = குழப்பம்.

குசினி = சமையல் அறை. சமைத்தல் என்பது அரிசி / பிற பொருட்களை குழையச்செய்யும் வினையே என்பதால், குசினி என்ற இந்த தமிழ்ச்சொல்லில் இருந்தே சமையலைக் குறிக்கும் cuisine என்ற சொல் பிறந்தது என்றால் மிகையாகாது.
குசினிக்காரன் = சமையல்காரன்.

குஞ்சம் = புல்லின் நுனியில் வளைந்து தொங்கும் நீண்ட மென்மையான பூ, மென்மையான பூங்கொத்து, மென்மையான துணி.
குஞ்சி = ஆண்குறி - வளைந்து தொங்குவது என்ற பொருளில்.
குஞ்சியப்பன் = சித்தப்பன் - அப்பாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சியாயி / குஞ்சியாய்ச்சி = சித்தி - அம்மாவுக்கு இளையவர் என்ற பொருளில்.
குஞ்சு = பறவைகளின் இளமைப் பெயர்.
குஞ்சிதம் = வளைந்தது.
குஞ்சரம் = துதிக்கை. நீண்டு வளைந்து தொங்கும் கை யானையின் சிறப்பாதலால், ஆகுபெயராய் யானைக்கு வழங்கியது.

குயம் மண்டு ஆகம் :

அகநானூற்றில் 48 ஆம் பாடலில் குயம் மண்டு ஆகம் என்ற சொல்லாட்சி வருகிறது. இதற்கு எப்படி பொருள் கொள்வது என்பதைப் பற்றி இங்கே காணலாம். அப் பாடலின் குறிப்பிட்ட வரிகள் கீழே தரப்பட்டுள்ளது.

"அன்னாய்! வாழி! வேண்டு அன்னை! நின்மகள்
.........................................................................................
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்,
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்,
குயம்மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி,
வரிபுனை வில்லன், ஒருகணை தெரிந்துகொண்டு
..............................................................................
அதன்அளவு உண்டுகோள், மதிவல் லோர்க்கே.

மேற்காணும் பாடலில் குயம் என்பதற்கு முலை என்றோ அகராதிகள் குறிப்பிடும் ஏனைய பொருட்களையோ கொண்டால் பொருள் பொருந்தாததுடன், நகைப்புக்குரியதாகவும் ஆகிவிடும் என்பதால், இச் சொல்லுக்கு இங்கே புதிய பொருள் ஒன்று இருப்பது உறுதியாகிறது. அப் புதிய பொருள் என்ன என்று காணும் முன்னர் அத் தொடரின் உண்மையான வடிவத்தை நாம் அறிய வேண்டும். ஒலைச் சுவடிகளில் செய்யுள் எழுதும்போது சொற்களைத் தனித்தனியாக எழுதாமல் சேர்த்தே எழுதுவர். சான்றாக,

குயம் மண்டு ஆகம் செஞ்சாந்து நீவி என்பதற்குப் பதிலாக,
குயம் மண்டாகச் செஞ்சாந்து நீவி என்றே எழுதுவர்.

இதைச் சொற்களாகப் பிரித்து எழுதும்போதுதான் தவறு நேர்கிறது. அப்படியானதோர் தவறினால் தான் இத் தொடருக்குத் தவறான பொருளும் கொள்ள ஏதுவாகிவிட்டது. இனி இதைச் சரியாகப் பிரித்தோமென்றால்,

குயம் மண்டு ஆக செஞ்சாந்து நீவி என்று வரும்.

இதில் வரும் குயம் என்பதற்கான புதிய பொருள் எண்ணை / நெய் என்பதாகும். இதை நாம் முன்னரே குய்ப்புகையில் கண்டோம்.

மண்டு என்பதற்கு மிகுதி என்று பொருள். எனவே மண்டாக என்பது மிகுதியாக என்ற பொருளைத் தரும். இனி, இத் தொடரின் சரியான பொருள் இதுதான்:

நெய்ப்பு மிகுதியாக செஞ்சாந்தினைப் பூசி வரிகள் எழுதப்பட்ட வில்லினை உடையவன்.
அந்த ஆடவன் அணிந்திருந்த மாலை மற்றும் கண்ணியினைப் பற்றிச் சொன்னவள்,  அவன் கையில் பிடித்திருந்த வில்லினைப் பற்றிக் கூறுமிடத்து, அந்த வில்லானது நெய்ப்பு மிகுதியால் பளபளப்பாக இருந்ததுடன், அதில் சிகப்பு வண்ண வரிகள் எழுதப்பட்டு அழகுடன் இருந்ததாகக் கூறுகிறாள். பொதுவாக வில்லைப் பராமரிப்பதற்கு அதில் எண்ணை பூசுவது வழக்கம். இது சங்க காலத்திலும் இருந்திருக்கிறது என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று.

முடிவுரை:

மேலே கண்டவற்றில் இருந்து இதுவரை பிற மொழியாகக் கருதப்பட்டு வந்த குசினி, குஞ்சரம், குஞ்சித, குசம், குயம் போன்ற சொற்கள் யாவும் தமிழ்ச் சொற்களே என்பதை அறியலாம். இதேபோல விரிவான சொல் ஆய்வுகள் செய்வதன் மூலம் தமிழில் இருந்து பிற மொழிக்குச் சென்று இன்றைய நிலையில் பிறமொழிச் சொல்லாகவே அறியப்படும் பல சொற்களை தக்க ஆதாரங்களுடன் மீட்டெடுக்க முடியும்.
================= தமிழ் வாழ்க!====================