செவ்வாய், 1 செப்டம்பர், 2015

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா?



முன்னுரை:

' பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா? ' என்ற கேள்விக்கு விடைகாணும் பொருட்டு பல காலங்களாக கருத்து மோதல்கள் இருந்து வந்துள்ளன என்பதை நாம் அறிவோம். ஆனால் இந்தக் கேள்வியே எவ்வளவு தவறானது என்பதைப் பற்றியும் நம்மை வியப்பில் ஆழ்த்தப் போகின்ற சில உண்மைகளைப் பற்றியும் இக் கட்டுரையில் நாம் காணலாம்.

குறுந்தொகைப் பாடல்:

குறுந்தொகையில் கீழ்க்காணும் ஒரு பாடல் வருகிறது.

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறிஎயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.     - பா எண்: 2

இறையனார் என்னும் புலவர் இயற்றியதாகக் கூறப்படும் இப் பாடலின் தற்போதைய பொருள் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! (தேனுண்ட மயக்கத்தினால்) பொய் சொல்லாமல் உண்மையைச் சொல்! நெருங்குதல் பொருந்திய நட்பினையும், மயிலினது சாயலையும் நெருங்கிய பற்களையும் உடைய இப் பெண்ணின் தலைமுடியைப் போல நறுமணமுள்ள பூக்கள் எவையேனும் உளவோ நீ (தேன் நாடி உண்டு) அறிந்த பூக்களில்.'

திருவிளையாடல் திரைப்படம்:

மேற்காணும் பாடலுக்கான விளக்கத்தில் உண்மையிலேயே பொருள் தவறு உள்ளது. அதைப் பற்றிக் காணும் முன்னர் திருவிளையாடல் படத்தில் வருகின்ற ஒரு நிகழ்ச்சியை இங்கே காணலாம்.

திருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயக்கப்பட்ட திருவிளையாடல் என்னும் பழைய திரைப்படத்தில் ஒரு நிகழ்ச்சி உண்டு. இயற்கையிலேயே பெண்களின் கூந்தலுக்கு மணம் உண்டா? என்பதைப் பற்றி பாண்டிய மன்னனுக்கு ஓர் ஐயம் வரும். அந்த ஐயத்தைத் தீர்ப்போருக்கு ஆயிரம் பொற்காசுகள் என்று மன்னன் அறிவிக்க, அதைக் கேட்கும் தருமி ஒருவன் சிவபெருமானிடம் இருந்து ஒரு பாடலைப் பெற்றுவந்து பாண்டிய மன்னனின் அவையில் படித்துக் காட்டுவான். அப் பாடலைக் கேட்டு தனது ஐயப்பாடு நீங்கிய மன்னன் மகிழ்ந்து பரிசளிக்கும்போது நக்கீரர் என்னும் அவைப்புலவர் குறுக்கிட்டு அப் பாடலில் பொருள்பிழை இருப்பதாகக் கூறி பரிசுகொடுக்காமல் தடுத்துவிடுவார். பின்னர் சிவபெருமானே மன்னனின் அவையில் தோன்றி நக்கீரருடன் வாதிடுவார். படத்தில் சிவபெருமானாக வரும் நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களது அருமையான நடிப்புத் திறமையாலும் தருமியாக வரும் நகைச்சுவை நாயகன் நாகேஷ் அவர்களின் வயிறுகுலுங்க வைக்கும் நகைச்சுவையினாலும் இத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று ஓடியது. படம் அருமையாக ஓடி இருந்தாலும் அதிலும் சில தவறுகள் இருந்தன. இத் தவறுகள் நம் கட்டுரையுடன் தொடர்புடையவை என்பதால் அவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.

திருவிளையாடல் புராணம்:

நாம் மேலே கண்ட திருவிளையாடல் திரைப்படத்தின் கதைக்கருவானது பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடல் புராணத்தில் இருந்தே உருவானது. இப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு திரைக்கதை எழுதும்போது சில உண்மைகளை அவர்கள் ஆராயத் தவறிவிட்டனர். அவை என்ன என்று பார்ப்போம்.

திருவிளையாடல் புராணத்தில் தருமிக்குப் பொற்கிழி அளித்த படலத்தில் கீழ்க்காணும் ஓர் பாடல் உள்ளது.

தென்னவன் குல தெய்வம் ஆகிய
மன்னர் கொங்கு தேர் வாழ்க்கை இன் தமிழ்
சொல் நலம் பெறச் சொல்லி நல்கினார்
இன்னல் தீர்ந்து அவன் இறைஞ்சி வாங்கினான்.
                             - பா.எண்: 2520.

மேற்காணும் பாடலுக்கு விளக்கம் கூறும்போது " சிவபெருமான் 'கொங்குதேர் வாழ்க்கை' என்னும் பாடலை தருமியின் துன்பம் தீரத் தந்தார்." என்று கூறியுள்ளனர். 'கொங்கு தேர் வாழ்க்கை' என்றே துவங்குவதால் இப் பாடலையும் நாம் மேலே கண்ட குறுந்தொகைப் பாடலையும் ஒன்றாகக் கருதி திரைப்படத்தில் காட்டி இருக்கிறார்கள். அது மட்டுமின்றி குறுந்தொகைப் பாடலை எழுதிய இறையனார் என்பவர் சிவபெருமானே என்றும் கூறுகிறார்கள். இக் கருத்து ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும். ஏனென்றால் கொங்குதேர் வாழ்க்கை என்று சிவபெருமான் எழுதிய பாடலும் இறையனார் எழுதிய பாடலும் ஒன்றே என்று உறுதிப்படுத்த எவ்வித ஆதாரங்களும் இல்லை.

மேலும் குறுந்தொகையில் வரும் பாடலின் உண்மையான விளக்கத்தை நாம் அறிந்த பின்னர் பாண்டிய மன்னனது ஐயத்திற்கும் இப் பாடலுக்கும் சற்றும் தொடர்பில்லை என்னும் உண்மையினையும் அறிந்துகொள்ளலாம்.

தவறுகள்:

குறுந்தொகைப் பாடலுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தற்போதைய விளக்கத்தில் தவறுகள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.

அறிவியல் கூற்றுக்களின் படி, தும்பி போன்ற தேன் உண்ணும் பூச்சி மற்றும் வண்டுகளை வெகுதூரத்தில் இருந்தே கவர்ந்து இழுப்பது பூக்களின் வண்ணமே அன்றி பூக்களின் வாசம் அல்ல. பூக்களின் வண்ணங்களால் கவரப்பட்டே அவை பூக்களின் மீது சென்றமர்கின்றன. அங்கு சென்றமர்ந்த பின்னர் தனது உணர்வுக் குழாய்களின் மூலம் தேனின் சுவை, மணம் ஆகியவற்றை அறிகின்றன. தேன் பிடித்திருந்தால் அவற்றை சேகரிக்கின்றன. தும்பிகள் மட்டுமின்றி தேனீ  போன்ற பல பூச்சிகளும் வண்ணம் அல்லது ஒளியினால் வெகுவாக கவரப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம். இரவில் கொளுத்தி வைத்த மண்ணெண்ணை விளக்கு அல்லது மெழுகுவர்த்தி வெளிச்சத்தை நாடி வந்து அந்த விளக்குத் தீயில் விழுந்து எரிந்து உயிர் மாய்க்கும் விட்டில் பூச்சிகள் இதற்கு ஓர் அருமையான சான்றாகும். மின்விளக்குகளின் வெளிச்சத்தால் கவரப்பட்டு வரும் வண்டுகளும், பூச்சிகளும் விளக்குகளின் மேல் மோதி விழுவதை இன்றும் நாம் காணலாம். தும்பிகள் எவ்வாறு பூக்களை வண்ணத்தால் அறிந்துகொள்கின்றன என்பதைப் பற்றி விக்கிபீடியாவில் காணலாம்.

தும்பிகள் பூக்களின் வாசத்தைக் கொண்டு பூக்களை அறிவதில்லை என்னும்போது அதனிடத்தில் ' நீ அறிந்த பூக்களில் என் காதலியின் கூந்தலை விட நறுமணமுள்ள பூ உண்டா? ' என்று கேட்பது எவ்வகையில் அறிவுடமை ஆகும்?. என்றால் இப்பாடலை இயற்றிய இறையனார் மூடரோ?.  இல்லை. ஒன்றை மட்டும் நாம் தெளிவாக இங்கே உணர்ந்து கொள்ளவேண்டும். தமிழ்ப் புலவர்கள் யாரும் இயற்கையின் தன்மைகளை அறியாதவர் அல்லர். ஒவ்வொரு உயிரின் பண்புகளையும் நன்கு அறிந்தபின்னரே அவற்றைத் தத்தம் பாடல்களில் பயன்படுத்துவர். அவ்வகையில் இங்கே இறையனாரும் தவறான ஒரு கேள்வியை காதலன் தும்பியிடம் கேட்பதாக அமைத்துப் பாடவில்லை. நாம் தான் அவர் கூறிய சொற்களின் உண்மையான பொருளை வேறு மாதிரியாகப் புரிந்துகொண்டு அவரை முட்டாளாக்கி இருக்கிறோம். இது போன்ற தவறான செயலை நாம் பல பாடல்களில் செய்திருக்கிறோம். காரணம், அகராதிகள் காட்டிய தவறான வழிநடத்தல் தான். அகராதிகள் கூறும் பொருட்களை முழுமையாக நம்பி பொருள் விளக்கம் தருவதால் தான் இவ்வளவு சிக்கல் நேரிடுகிறது. இந்த சிக்கல்களுக்கு எல்லாம் கூந்தல் மற்றும் நறிய என்ற சொற்களுக்கு நாம் கொண்ட தவறான பொருட்கள் தான் காரணம் ஆகும்.

திருத்தம்:

கூந்தல் என்ற சொல்லின் சரியான பொருள் ' கண்ணிமை ' ஆகும். 

நறிய என்றால் நல்ல / சிறந்த என்று பொருள். எயிறு என்றால் கண்விழி என்று பொருள். இதைப்பற்றி முன்னமே நாம் எயிறு என்றால் என்ன? என்ற கட்டுரையில் சான்றுகளுடன் கண்டிருக்கிறோம். இப் புதிய பொருட்களின் படி, மேற்காணும் பாடலின் புதிய பொருள் விளக்கம் கீழ் வருமாறு:

'பூந்தேன் உண்டு வாழும் அழகிய சிறகுகளுடைய தும்பியே! மயக்கும்மொழி இன்றி உண்மையைச் சொல்! பழகிய நட்புடைய மயில் போன்ற நோக்குடைய திரண்ட கண்களை உடைய இப் பெண்ணின் ( மையுண்ட) கண்ணிமைகளைக் காட்டிலும் சிறந்தவை உளவோ நீ அறிந்த பூக்களில்.'

நிறுவுதல்:

மேற்கண்ட புதிய விளக்கமே உண்மை என்று நிறுவதற்குக் கீழ்க்காணும் ஒரே ஒரு சிந்தாமணிப் பாடலே போதும். பாடலும் அதன் விளக்கமும் கீழே:

குவளை ஏய்ந்த கொடும் குழை கூந்தலுள்
திவளும் வாழிய செம் பொறி வண்டுகாள்
இவள கூர் எயிறு ஈனும் தகையவோ
தவள மெல் இணர் தண் கொடி முல்லையே – சிந்தா – 1331

( குவளை மலர் போலத் தோன்றுமாறு வண்ணச்சேறு கொண்டு வளைத்துப் பூசப்பட்ட கண்ணிமையினைப் பூவெனக் கருதி அதைத் தீண்டி இன்புறுகின்ற செந்நிறப் பொறிகளைக் கொண்ட வண்டுகளே நீங்கள் வாழ்க!. நீங்கள் இதுவரை பார்த்துள்ள குளிர்ச்சி பொருந்திய கொடிமுல்லைகள் இவளது மைதீட்டிய கடைக்கண்ணைப் போலக் கூரியதும் வெண்மை மிக்கதுமான பூக்களை ஈன்றதுண்டோ?...)

கொங்குதேர் வாழ்க்கை என்ற குறுந்தொகைப் பாடலைப் போலவே இந்த சிந்தாமணிப் பாடலிலும் தலைவன் வண்டுகளைப் பார்த்தே கேள்வியைக் கேட்கிறான். இவ் இரண்டு பாடல்களிலுமே தலைவியின் மையுண்ட கண்களைப் பூக்களுடன் ஒப்பிட்டுப் பாராட்டுகிறான். ‘ தலைவியே! நான் சொல்வதைத் தான் நீ நம்பமாட்டாய்; இதோ இந்த வண்டுகளே உண்மையைக் கூறும்; கேட்டுக்கொள் ‘ என்பதுபோல அமைக்கப்பட்ட இந்த இரண்டு பாடல்களுமே தலைவியின் கண்ணழகினை அன்றி தலைமயிரைப் பற்றி வந்திருக்க முடியாது. காரணம், அக் காலத்துப் பெண்கள் தமது தலைமயிரினை முழுவதும் தமது ஆடையினால் மூடி தலைக்கு மேலாகக் கொண்டுவந்து முகத்திரையாக அணிந்திருப்பர். இதுபற்றி ஏற்கெனவே ‘ கண்ணகி மதுரையை எரித்தது எப்படி? ‘ என்ற ஆய்வுக் கட்டுரையில் பல சான்றுகளுடன் கண்டுள்ளோம். இப்படி முழுவதும் மூடிவைக்கப்பட்ட நிலையில், அந்தத் தலைமயிரில் பூக்களை அணிந்தாலென்ன அணியாவிட்டாலென்ன?. யாரும் பார்த்துப் பாராட்ட இயலாத அந்தத் தலைமயிரில் நறுமணம் பூசினால் என்ன பூசாவிட்டாலென்ன?. இந்நிலையில் எங்கிருந்து வண்டுகள் தலைமயிரை மொய்க்கும்?. மொய்க்கவே இயலாத நிலையில் இப்பாடலில் வரும் கூந்தல் என்ற சொல்லுக்கு தலைமயிர் என்ற பொருள் பொருந்துமா?. சற்றும் பொருந்தாது அன்றோ!.  

மேற்கண்ட ஒரு பாடலே அருமையான சான்றாக அமைந்தாலும், கூந்தல் என்பது தலைமயிரைக் குறிக்காது என்பதற்கு இன்னும் சில சான்றுகளை இங்கே விளக்கங்களுடன் காணலாம்.

கூந்தல் என்பது தலைமயிர் அல்ல:

கூந்தல் என்ற சொல்லுக்குத் தலைமயிர் என்ற பொருள் பொருந்தாது என்ற கருத்தினை உறுதிசெய்ய மேலும் சில ஆதாரங்கள் கீழே முன்வைக்கப்படுகின்றது.

செம் பராகம் பட செறிந்த கூந்தலாள் – கம்ப – சூர்ப்பநகை.
( செஞ்சாந்து பூசப்பட்ட திரண்ட கண்ணிமைகளை உடையவள்......)

குட திசைச் செக்கரின் சேந்த கூந்தலாள் – கம்ப – ராவணன் அணங்குறு
( மேற்குத் திசையில் காணப்படும் சிவந்த வானம் போல செவ்வண்ணம் பூசிய கண்ணிமைகளை உடையவள்........)

செக்கர் வார் கூந்தல் – கம்ப – படைத்தலைவர்
( சிவந்த வானம் போல அழகு ஒழுகுகின்ற கண்ணிமை.......)


பெண்கள் தமது கண்ணிமைகளில் செவ்வண்ணம் கொண்டு பூசியிருக்கும் செய்தியினை மேற்பாடல்கள் கூறுகின்றன. இப் பாடல்களில் வரும் கூந்தல் என்ற சொல்லுக்கு ‘ தலைமயிர்’ என்ற பொருள் கொண்டால் என்ன ஆகும்?. சிவந்த நிறமுடைய தலைமயிர் என்றல்லவா பொருள்வரும்?. எந்தப் பெண்ணாவது தனது தலைமயிருக்கு சிவப்பு வண்ணம் பூசிக் கொள்வாளா?. நிச்சயம் பூசிக்கொள்ள மாட்டாள். ஏன், இக்காலத்துப் பெண்கள் தமது தலைமுடிக்கு சிவப்பு நிறம் உள்பட பலவண்ணச் சாயம் பூசிக்கொள்கிறார்களே என்று வாதிடக் கூடாது. இக் காலச் சமுதாயம் வேறு; அக் காலச் சமுதாயம் வேறு. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. அக் காலச் சமுதாயம் கட்டுப்பாடு மிக்கது. அதனால் தான், கட்டிய கணவனைத் தவிர பிறர் காண இயலாத வண்ணம், பெண்கள் தமது முகத்தை ஆடைகொண்டு மூடியே வைத்திருப்பர். எனவே இப் பாடல்களில் வரும் கூந்தல் என்ற சொல்லுக்கு தலைமயிர் என்ற பொருள் சற்றும் பொருந்தாது என்பது தெளிவாகிறது. அதுமட்டுமா இதோ கீழ்க்காணும் பாடலையும் பாருங்கள்.

ஒழிந்த மைந்தர் புண்தொட்டுக் குருதி செம் கை கூந்தல் தீட்டி
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் - புற - 62
( போரில் இறந்துபட்ட கணவரின் காயத்தைத் தொட்டுக் குருதியால் சிவந்த கையினால் கண்ணிமைகளின் மேல் தடவ, பேயினைப் போல அச்சந்தரும் உருவினராய்த் தோன்றுகின்ற பெண்கள்....)

இப்பாடலில் போரின் அவலநிலை கூறப்பட்டுள்ளது. இறந்துகிடக்கும் கணவரின் காயத்தைத் தொட்டுப் பார்த்து மனைவி கதறி அழுகிறாள். தொடும்போது கணவனின் ரத்தம் மனைவியின் கைகளில் ஒட்டிக் கொள்கிறது. பின்னர் அதே கைகளால் ஆறாகிப் பெருகி ஓடும் தனது கண்ணீரைத் துடைக்கும்பொழுது, அவள் கைகளில் இருந்த ரத்தம் அவளது கண்ணிமைகளிலும் முகத்திலும் தாறுமாறாக ஒட்டிக்கொள்கிறது. குருதி பூசிய கண்களுடன் பார்ப்பதற்கு அவர்கள் பேயினைப் போலத் தோன்றுவதாக பாடல் கூறுகிறது. 

இப் பாடலில் வரும் கூந்தல் என்பதற்கு தலைமயிர் எனப் பொருள்கொண்டால், அப் பெண்கள் தமது கையில் இருந்த குருதியைத் தமது தலைமுடியில் தடவினார்கள் என்றல்லவா பொருள்வரும்?. ஏன் அப்படிச் செய்யவேண்டும்?. அப்படிச் செய்ய எந்த ஒரு காரணமும் இல்லையே!. மேலும் எந்தப் பெண்ணாவது அப்படிச் செய்வாளா?. செய்யமாட்டாள். எனவே இங்கும் கூந்தல் என்பது தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது.

குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அரு முள்வேலி
கல்லென் பாசறை பல் சான்றீரே - புற - 301
( குமரிப் பெண்களின் கண்ணிமைகளில் உள்ள மயிரினைப் போல போர்க்களத்தில் நட்டுவைத்த முள்வேலிக்குள் ( அவர்களது கண்விழி போன்று ) அமைக்கப்பட்ட வெண்ணிறப் பாசறைக்குள் இருக்கும் சான்றோரே.....)

இப் பாடலில் பயின்றுவரும் உவமைகளைக் காணலாம். கண்ணிமையின் மேல் கீழ் ஆகிய இரு இதழ்களிலும் மயிர் இருக்கும். இந்த இதழ்கள் பிரிந்திருக்கின்ற நிலையில், இம் மயிர்களை நட்டுவைத்த முள்வேலியுடன் ஒப்பிடுகிறார் புலவர். இந்த இரு இதழ்களுக்குள் இருப்பதான வெண்ணிறக் கண்விழியினை, முள்வேலிக்குள் அமைக்கப்பட்ட வெண்ணிறத் துணியாலான பாசறையுடன் ஒப்பிடுகிறார். என்ன ஒரு கற்பனை !

இனி இப்பாடலில் வருவதான கூந்தல் என்ற சொல்லுக்கு ‘ தலைமயிர் ‘ என்று பொருள்கொண்டால், ‘ குமரிப் பெண்களின் தலைமயிரைப் போல போர்க்களத்தில் அமைத்த முள்வேலி ‘ என்றல்லவா பொருள்வரும்?. இப் பொருள் எவ்வளவு நகைப்புக்குரியது என்று சொல்லத் தேவையில்லை. எனவே இங்கும் கூந்தல் என்னும் சொல்லுக்கு தலைமயிர் என்னும் பொருள் பொருந்தவில்லை.

கூந்தலும் உவமைகளும்:     

இதுகாறும் கண்டவற்றில் இருந்து, கூந்தல் என்னும் சொல் தலைமயிரைக் குறிக்காது என்றும் கண்ணிமைகளையே குறிக்கும் என்றும் கண்டோம். இனி, கூந்தல் என்ற சொல் எவ்வாறு கண்ணிமைகளைக் குறிக்கும் என்று காண்போம்.

கூந்தல் என்னும் சொல் குறிக்கின்ற உண்மையான பொருளை அறிந்துகொள்ள அதனுடன் உவமையாகக் கூறப்படுகின்ற பிற பொருட்களைப் பற்றி முதலில் காணவேண்டும். இவ் உவமப் பொருட்களின் பண்புகளை அறிந்துகொள்வதின் மூலம், கூந்தல் என்னும் சொல் குறிக்கின்ற பொருளின் தன்மைகளையும் நாம் அறிந்துகொள்ள முடியும் அல்லவா?. ஆகையால், கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருட்களைப் பற்றி முதலில் காணலாம்.

கூந்தலுக்கு உவமையாகக் கீழ்க்காணும் பொருட்கள் இலக்கியங்களில் கூறப்படுகின்றன.

அறல்
மரல்
மயில்
யானைத் துதிக்கை
மேகம்
நாரத்தை
பறவைகள்
பூக்கள்
செவ்வானம்

இப் பொருட்களைப் பற்றித் தனித்தனியே ஆதாரங்களுடன் காணலாம்.

கூந்தலும் அறலும்:

பெண்களின் கூந்தலை அறலுடன் ஒப்பிட்டுப் பல பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. பொதுவாக, அறல் என்னும் சொல்லுக்குத் தற்போதைய அகராதிகள் கீழ்க்காணும் பொருட்களைக் கூறுகின்றன.

நுண்மணல், விழா, கொற்றான் செடி, நீர், நீர்த்திரை, கருமணல், மயிர் நெறிப்பு, சிறுதூறு, கலியாணம், அறுகை, அரித்தோடுகை.

அகராதிகள் இத்தனைப் பொருட்களைக் கூறினாலும், கூந்தல் என்ற சொல்லுடன் பயின்று வரும்போதுமட்டும் அறல் என்னும் சொல்லுக்கு ‘ கருமணல் ‘ என்றே பெரும்பாலும் பொருள்கொண்டு ‘ அறல் போல் கூந்தல் ‘ என்பதற்கு ‘ கருமணல் போல நுண்ணிய கரிய தலைமயிர் ‘ என்று உரை கூறுகின்றனர். ஆனால் இது தவறாகும். காரணம், தலைமயிர்க்கும் ஆற்றின் கரை ஒரங்களில் காணப்படுவதாகக் கூறப்படுகின்ற கருமணலுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்.?. அன்றியும், காதலன் காதலியின் தலைமயிரைப் பார்த்து, ‘ உனது தலைமுடியானது ஆற்றங்கரையில் இருக்கும் கருமணலைப் போல இருக்கிறது ‘ என்று கூறினால், அதை எந்தப் பெண்ணாவது ரசிப்பாளா?. நிச்சயம் விரும்ப மாட்டாள். காரணம், பளபளப்பும் அழகும் இல்லாத ஒன்றைத்தான் ‘ மண்ணு மாதிரி இருக்கிறது ‘ என்று சொல்வோம்.

கருமை நிறம் ஒன்றை மட்டுமே ஒற்றுமையாகக் கொண்டு கருமணலையும் தலைமயிரையும் ஒப்பிட்டுக் கூறுவது தவறானதாகும். காரணம், ஆற்றங்கரையில் அதிகம் காணப்படுவது வெண்மணலே ஆகும். ஆற்றங்கரையில் எங்கோ ஓரிடத்தில் அரிதாகக் காணப்படுகின்ற கருநிற வண்டல் மண்ணைப் பெண்களின் கரிய தலைமயிருடன் ஒப்பிட்டுக் கூறுவது இலக்கிய வழக்கம் என்றால் நரைத்த தலைமயிரினை ஆற்றங்கரையின் காய்ந்த வெண்மணலுடன் ஒப்பிட்டுக் கூறி இருக்க வேண்டும் அல்லவா?. ஆனால் அவ்வாறு எந்த இலக்கியத்திலும் ஒப்பிட்டுக் கூறப்படவில்லை. மேலும், பெண்களின் தலைமயிர் இயற்கையிலேயே கருநிறம் உடையது என்பதால் இதனை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டுக் கூறவேண்டிய தேவையும் இல்லை. இதிலிருந்து இலக்கியங்கள் கூறும் கூந்தல் என்பது தலைமயிர் அல்ல என்பதும் இக் கூந்தலுடன் ஒப்பிட்டுக் கூறப்படுவதான அறல் என்பது கருமணலும் அல்ல என்பது அறியப்படுகிறது.  

அறல் என்றால் என்ன?

அறல் என்பது கருமணல் இல்லை என்றால் அது எதைக் குறிக்கிறது?. என்பதைப் பற்றிக் காணலாம். கூந்தல் என்னும் சொல்லுடன் பயின்று வரும் இடங்களில் எல்லாம், அறல் என்ற சொல்லானது ‘ நத்தை, சிப்பி ‘ போன்ற மெல்லுடலிகளையே குறித்து வந்துள்ளது.

இவ் உயிரினங்களின் உடலின் மேலுள்ள கடினமான ஓடுகளானவை, பல வண்ணங்களில் பல வரிகளை உடையதாயும் பலவிதமான வேலைப்பாடு மிக்கனவாயும் பார்ப்பதற்கு மிக அழகாகத் தோன்றுபவை. மேலும் இவ் ஓடுகள் குவிந்த நிலையில் பளபளப்பு உடையதாய் இருப்பதால், இவற்றைப் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளுடன் உவமைப்படுத்திப் பாடியுள்ளனர். இன்னும் சில ஓடுகள் பார்ப்பதற்குக் கண்ணிமை போன்ற வடிவத்திலேயே காணப்படும். சான்றுக்கு சில அறல்களின் படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.


அறல் என்பது நத்தை, சிப்பி போன்றவற்றின் ஓடுகள் என்ற பொருளில் கீழ்க்காணும் சில பாடல்களில் பெண்களின் கூந்தலுக்கு அதாவது கண்ணிமைகளுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளன.

அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் - பொரு - 25
( சிப்பி போன்ற கண்ணிமையும் பிறைச்சந்திரன் போன்ற அடிக்கண்ணும்........)

அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் - மலை - 304
( சிப்பி போலும் கண்ணிமைகளை உடைய பெண்கள்......)

ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் - குறும் - 286
( சந்தனம் போல மணப்பதுவும் சிப்பி போன்றதுமான கண்ணிமைகள்........)

சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் - பதி -74
( கவிழ்த்த சிப்பி போலத் தோன்றுகின்ற தாழ்ந்த பெரிய கண்ணிமைகள்......)

குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் - அக -142
( சிப்பியின் எஞ்சிய ஓடு போலப் பலவாக வகுத்த பெரிய கண்ணிமைகள்....)

அறல் என அவிர்வரும் கூந்தல் - அக -162
( சிப்பி போல் பளபளக்கும் கண்ணிமைகள்......)

அறல் என விரிந்த உறல் இன் சாயல் ஒலி இரும் கூந்தல் - அக - 191
( சிப்பி போல் விரிந்து மையுற்ற அழகிய பெரிய கண்ணிமைகள்......)

இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த அறல் என நெறிந்த கூந்தல் - அக - 213
( காவிரி ஆற்றில் நீர் குறையுமிடத்து மணலில்
காணப்படுகின்ற மூடிய சிப்பிகளைப் போல வரிகளை உடைய கண்ணிமைகள்.......)

அறலின் நெறித்த கூந்தல் - அக -265
( சிப்பி போல வரிகளை உடைய கண்ணிமைகள்.....)

அறல் மருள் கூந்தலின் மறையினள் - அக - 299
( சிப்பி போன்ற இமைகளால் கண்ணீரை மறைத்தவளாய்.....)

அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை இரும் கூந்தல் - புற -25
( பளபளக்கும் சிப்பி போல் குவிந்த மெல்லிய பெரிய கண்ணிமைகள்....)

புது மலர் புனை அறல் கூந்தல் – கம்ப – அகலிகை
( புதுமலர் மாலை அணிந்த சிப்பி போன்ற கண்ணிமைகள்...)

அறல் இயல் கூந்தல் கண் – கம்ப. எழுச்சி படலம்     
( சிப்பி போன்ற கண்ணிமைகளை உடைய கண்.....)

அறல் புரை கூந்தல் – கம்ப – சித்திரகூட.
( சிப்பி போன்ற கண்ணிமைகள்......)

அறல் நாறும் கூந்தலும் – கம்ப – பிலம் புக்கு
( சிப்பி போல் தோன்றும் கண்ணிமைகளை உடையவள்....)

இந்த அறல் ஆகிய உயிரினங்கள் நீரிலேயே வாழ்ந்துவந்த காரணத்தால், இவற்றின் ஓடுகள் குளிர்ச்சியாகவே இருக்கும். இதைக் கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

தண் அறல் அன்ன இவள் விரி ஒலி கூந்தல் - நற் - 141
( குளிர்ந்த சிப்பி போன்ற இவளது விரிந்த கண்ணிமைகள்........)

தண் அறல் கூந்தல்- சிலம் - அந்திமாலை
( குளிர்ச்சி பொருந்திய சிப்பி போன்ற கண்ணிமைகள்....)

யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல்
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை
நுண் மணல் அறல் வார்ந்து அன்ன
நன் நெறியவ்வே நறும் தண்ணியவே - குறு -116

( நான் விரும்பும் காதலியின் கள்வடியும் கண்ணிமைகளானவை, சோழர்களின் வளம்மிக்க உறந்தையின் நீர்த்துறையில் நுண்மணலின் மேல் கிடக்கின்ற சிப்பிகளின் மேலிருக்கும் வரிகளைப் போல நல்ல வரிகளை உடையவை; நல்ல குளிர்ச்சியும் உடையவை.....)

இந்த சிப்பியானது ‘ மனவு ‘ என்ற பெயராலும் ‘ வளை ‘ என்ற பெயராலும் இலக்கியத்தில் குறிக்கப் பெற்றுள்ளது. 

மனவுக் கோப்பு அன்ன நன் நெடும் கூந்தல் - குறு -23
( சிப்பியின் அமைப்பழகினை ஒத்த அகன்ற கண்ணிமைகள்........)

கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் - ஐங்கு -196
( ஒளிவீசும் சிப்பி போல கோடுகள் வரையப்பட்டு பலவாகத் தோன்றும் திரண்ட கண்ணிமைகள்.....)

இனி, அறல் என்ற சொல் எவ்வாறு சிப்பியைக் குறிக்கும் என்பதனைக் கீழே பல சான்றுகளுடன் காணலாம். கீழ்க்காணும் பாடல்களில் வரும் அறல் என்பதற்கு அகராதிகள் காட்டும் பொருட்கள் எதுவும் பொருந்தாத நிலையினையும் சிப்பி என்ற பொருளே பொருந்தி வருகின்ற நிலையினையும் காணலாம்.

கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் - சிறு 6,7
( கண்ணிமைகளை விரித்துவைத்ததைப் போலத் தோன்றுகின்ற உள்ளே முத்துடைய வாடிய சிப்பி..)

அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப - நற் 208/2
( சிப்பியின் முத்துப் போல தெள்ளிய கண்ணீர்த் துளியானது கண்களை நனைக்க...)

சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் - மது 638,639
( சிறந்த கருமை நிறத்தையும் நுண்ணிய பல வேலைப்பாடுகளையும் உடைய வாடிய சிப்பியின் ஓடு......)

அவரோ வாரார் தான் வந்தன்றே குயில் பெடை இன் குரல் அகவ
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே – ஐங்கு -341
( பெண்குயிலானது இனிய குரலில் கூவவும், அழகிய நிறங்கொண்ட சிறிய சிப்பிகள் வாடவும் இதோ வேனில் காலம் வந்துவிட்டது; அவர் இன்னும் வரவில்லையே..)

இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார - கலி 29
( இளம்பெண்களின் மையுண்ட கண்ணிமைகளைப் போல பல வண்ணங்களைக் கொண்ட சிப்பிகள் மணற்குவியலில் இருந்து வெளிப்பட்டு ஊரவும்.....)

அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறை - அகம் 25
( பளபளக்கும் சிப்பிகளைக் கொண்ட மணல் பரந்த அகன்ற நீர்த்துறை......)

நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப – அகம் – 237
( நுண்ணிய அதிரல் கொடியுடன் வாடிய சிப்பிகளும் வரிந்திருக்க....)  

இதுபோல இன்னும் பல சான்றுகளை இலக்கியங்களில் இருந்து காட்டலாம் என்ற நிலையில் அறல் என்னும் சொல்லுக்கு சிப்பி என்ற பொருளும் உண்டு என்னும் கருத்து இங்கே நிறுவப்படுகிறது. 

கூந்தலும் மயிலும்:

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பலவாக வகுத்துப் பல வண்ணங்களில் மைபூசி அழகு செய்வர் என்பதைப் பல கட்டுரைகளில் முன்னர் கண்டுள்ளோம். அப்படிப் பூசி அலங்காரம் செய்யும்போது, அவரவர்க்குப் பிடித்த வண்ணம், மயில் தோகையில் இருக்கின்ற கண்போலப் பூசியும் அலங்காரம் செய்வர். பெண்கள் தமது மைபூசிய கண்ணிமைகளை முழுவதும் மூடி இருக்கும்பொழுது, அது மயில்தோகையில் உள்ள கண்ணைப் போலவே அழகுடன் தோன்றும். இதனை தோகை விரித்த மயிலுடன் ஒப்பிட்டுப் பல இலக்கியங்களில் பாடி இருக்கின்றனர். சில பாடல்கள் மட்டும் கீழே சான்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

பாம்பு அளை செறிய முழங்கி வலன் ஏர்பு
வான் தளி பொழிந்த காண்பு இன் காலை
அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும்
மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின்
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர - நற் – 264

( பாம்புகள் தம் வளைகளுக்குள் சென்று பதுங்குமாறு இடிஇடித்து மேலே ஒன்றுகூடிய மேகங்கள் மழை பெய்யத் துவங்கிய இனிய பொழுதினில், தனது அழகு பொருந்திய தோகையினை விரித்தவாறு நடக்கின்ற நீலமணி போன்ற கழுத்தினைக் கொண்ட மயிலைப் போல வண்ணம் பூசப்பட்ட உனது கண்ணிமைகளின் மேலாக அணிந்த பூமாலையானது வீசுகின்ற காற்றில் அசையவும்....)

இப் பாடலில் இருக்கின்ற உவமைநயம் மிகச் சுவையானது. மயிலானது தனது தோகையினை விரித்தவாறு நடக்கும்போது அதன் கண்களின்மேலாக இருக்கும் அழகிய கொண்டையானது அசைந்தாடுவது இயல்பாகும். இதனை, மயில்தோகையில் உள்ள கண்களைப் போல அழகாக மைபூசப்பட்ட கண்ணிமைகளை உடைய தலைவியானவள் தனது கண்ணிமைகளின் மேலாகத் தொங்குமாறு நெற்றியில் அணிந்திருந்த வண்ண மாலையானது வீசுகின்ற காற்றில் அசைகின்ற நிகழ்ச்சியுடன் ஒப்பிட்டுப் பாடுகிறார் புலவர். என்ன ஒரு உவமை பாருங்கள். !. . 

கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் - நற் - 265, குறு - 225
( மகிழ்ச்சியுற்ற மயிலின் விரிந்த தோகையில் உள்ள கண்களைப் போல மைபூசப்பட்ட மெல்லிய கண்ணிமைகள்......)

கொடிச்சி கூந்தல் போல தோகை
அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் - ஐங்கு - 300
( பெண்ணின் மை தீட்டிய கண்ணிமையினைப் போல மயிலானது தனது அழகிய தோகையினை விரிக்கின்ற மலைநாட்டினன்....)

கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க - அக -385
( நாட்டியமாடும் மயிலின் தோகையில் உள்ள கண்களைப் போல பொலிவுற்ற கண்ணிமைகள்.....)

விரை வளர் கூந்தல் வரை வளி உளர
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி - புற - 133
( நறுமணப் பொருள் கலந்து மயிலின் கண் போல பூசப்பட்ட கண்ணிமைகளின் ஈரத்தினை மலைக்காற்றில் உலர்த்தவேண்டி அவள் நடந்தபோது, தோகையினை விரித்தவாறு மயிலொன்று நடப்பது போலத் தோன்றியது.........)

கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ - புற - 146
( மயில்தோகையில் உள்ள கண்போலப் பூசிய கண்ணிமைகளின் ஈரத்தினை உலர்த்தக் கீழிருந்து மூட்டிய வெண்புகையானது, மகிழ்ச்சியுற்ற மயிலின் விரிந்த தோகையின் கீழ் இருக்கின்ற குவிந்த வெண்ணிற அடிப்பகுதி போலத் தோன்றியது....)

கூந்தல் மயில் அன்னாய் - ஏலாதி -33
( வண்ணம் பூசிய கண்ணிமைகளால் மயில் போலத் தோன்றுபவளே.....)

மேலே கண்ட பாடல்களில் கிடைக்கின்ற உவமை இன்பத்தில் இருந்து கூந்தல் என்ற சொல்லுக்கு கண்ணிமை என்ற பொருளே முற்றும் பொருந்தி வருவதை நன்கு அறியலாம். அதை விடுத்து, கூந்தல் என்ற சொல்லுக்கு, ‘ தலைமயிர்’ என்ற பொருளைக் கொண்டால், உவமை இன்பம் மறைந்து போவதை அறியலாம். காரணம், மயிலுக்கும் பெண்களின் தலைமயிருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. கேட்டால், இரண்டுமே பின்னால் நீண்டு தொங்குவது என்று கூறுகிறார்கள். இதெல்லாம் ஒரு காரணமாகுமா?. அழகற்ற கரிய தலைமயிர் எங்கே?. அழகே உருவான வண்ண மயில் தோகை எங்கே?. இவ் இரண்டுக்கும் தொடர்பில்லை என்பதால், இப் பாடல்களில் வரும் கூந்தல் என்பது பெண்களின் தலைமயிரைக் குறித்து வரவில்லை என்பது தெளிவு.

கூந்தலும் யானைத்துதிக்கையும்:

சில பெண்களின் கண்ணிமைகளில் இயற்கையிலேயே சில வரிகள் அமைந்து அழகாகக் காணப்படும். இருப்பினும் மேலும் அதை அழகாக்க வேண்டி, மேலும் பல வரிகளை மைகொண்டு எழுதுவர். யானையின் துதிக்கையிலும் இதுபோல பல வரிகள் இருப்பதாலும் கண்ணிமையினைப் போலவே யானையின் துதிக்கையினை நீட்டவும் சுருக்கவும் முடியும் என்பதாலும் யானையின் துதிக்கையுடன் கண்ணிமையினை உவமைப்படுத்திக் கூறுகிறது சிந்தாமணியின் கீழ்க்காணும் பாடலொன்று. 

பிடிக் கை கூந்தல் – சிந்தா -2663
( யானையின் துதிக்கை போல வரிகளை உடைய கண்ணிமைகள்....)

இப் பாடலில் வரும் கூந்தல் எனும் சொல்லுக்குக் கண்ணிமை என்று பொருள்கொள்ளாமல், தலைமயிர் எனப் பொருள் கொண்டு, யானையின் துதிக்கை போன்ற தலைமயிர் என்று தவறாக உரைகூறுகின்றனர். யானையின் துதிக்கைக்கும் பெண்களின் தலைமயிருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. யானையின் துதிக்கையோ முன்னால் நீண்டு தொங்குவது; பெண்களின் தலைமயிரோ பின்னால் நீண்டு தொங்குவது. ஆக, இங்கும் ‘கருமை நிறம்’ ஒன்று மட்டுமே ஒற்றுமை என்ற நிலையில் இவ் இரண்டையும் ஒப்பிட்டுக் கூறுவது தவறே ஆகும். காரணம், பெண்களின் தலைமயிர் இயற்கையிலேயே கருப்பு நிறம் உடையது தான். இதற்கு வேறு எதனையும் சான்று காட்டியோ எதனோடும் ஒப்பிட்டோ விளக்கத் தேவையில்லை. எனவே இங்கும் கூந்தல் என்ற சொல்லுக்கு தலைமயிர் என்ற பொருள் பொருந்தாமையினை அறியலாம்.

கூந்தலும் மேகமும்:

பெண்களின் கண்ணிமையினை மேகங்களுக்கு உவமையாகக் கூறி பல பாடல்களைப் புலவர்கள் இயற்றியுள்ளனர். புலவர்கள் பெண்களின் கூந்தலை ஏன் மேகங்களுடன் ஒப்பிட்டுக் கூறினார்கள் என்று பார்ப்போம். பெண்கள் தமது கூந்தல் ஆகிய கண்ணிமைகளை வெள்ளைநிறத்திலோ கருமைநிறத்திலோ பூசும்பொழுது மேற்புறத்தில் சில வளைவுகளையும் பூசுவர். இது பார்ப்பதற்கு வானில் தவழும் பொதிமேகங்களை ஒத்திருக்கும். மேகங்களுக்கு வடிவமில்லை என்ற போதிலும் மேகங்கள் திரண்டிருக்கும்போது கிட்டத்தட்ட பஞ்சுப்பொதி வடிவம் கொள்ளும். இப்படி வடிவத்திலும் வண்ணத்திலும் மட்டுமின்றி தமது நீர் வார்க்கும் பண்பிலும் கூட கண்ணிமைகளும் மேகங்களும் ஒப்புமை கொண்டவை. எப்படி மேகங்களில் இருந்து மழைநீர் வார்ந்து ஒழுகுமோ, அதைப்போல பெண்கள் அழும்போது மையுண்ட கண்ணிமைகளின் கீழ் இருந்து கண்ணீர் வார்ந்தொழுகும். இப்படிப்பட்ட ஒற்றுமைகள் இருப்பதால் தான் பெண்களின் மையுண்ட கண்ணிமைகளை மேகங்களுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர். கண்ணிமைகளையும் மேகங்களையும் ஒப்பிட்டுக் கூறுகின்ற சில பாடல் வரிகளை அவற்றின் பொருட்களுடன் கீழே காணலாம்.  

மெல் இயல் புயல் நெடும் கூந்தல் புலம்பும் - ஐங்கு -304
( மேகம் போலத் தோன்றுகின்ற மையுண்ட மெல்லிய கண்ணிமைகள் வாடும்......)

மாரி வீழ் இரும் கூந்தல் - கலி -14, 60, 131
( மேகம் போலத் தோன்றும் பெரிய மையுண்ட கண்ணிமைகள்...)

மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் - கலி -147
( மழைமேகம் போலத் தாழ்ந்து இருண்ட கண்ணிமைகள்....)

புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் - அக - 225
( மேகம் எனத் தோன்றுகின்ற தாழ்ந்த பெரிய கண்ணிமைகள்.........)


புயல் அமை கூந்தல் - பழ -229
( மேகம் போலத் தோன்றும் மையுண்ட கண்ணிமைகள்...)

மழை ஒக்கும் வடிந்த கூந்தல் – கம்ப – ராவணன் அணங்குறு
( மேகத்தினை ஒத்த நீண்ட கண்ணிமைகளை உடையவள்......)

புயல் இயல் கூந்தல் மாதர் குழாத்தொடும் – கம்ப – கிட்கிந்தை
( மேகம் போன்ற கண்ணிமைகளை உடைய பெண்கள் குழுவுடன்.....)

புயல் பொரு கூந்தல் – கம்ப – களியாட்டு
( மேகம் போன்ற கண்ணிமைகள்....)

கூந்தல் என்ற சொல்லுக்குக் கண்ணிமை என்று பொருள்கொள்ளாமல், பெண்களின் தலைமயிர் என்று தவறான பொருள் கொண்டு, மேகம் போன்ற தலைமயிர் என்று தவறான உரை இயற்றியுள்ளனர். பெண்களின் தலைமயிரை மேகங்களுக்கு எவ்வாறு ஒப்புமையாகக் கூறமுடியும்?. இரண்டும் கருநிறம் கொண்டவை என்ற ஒரே ஒரு ஒற்றுமை மட்டும் இங்கே பொருத்தமாயிராது. காரணம், மேகங்களில் கருமேகங்களும் உண்டு; வெண்மேகங்களும் உண்டு. அதுமட்டுமின்றி, பெண்களின் தலைமயிர் கருமைநிறத்தில் இருப்பது இயல்பானது தான். இதனைக் கார்மேகங்களுடன் ஒப்பிட்டுக் கூற வேண்டிய தேவையும் இல்லை. எனவே, கூந்தல் என்ற சொல்லுக்கு தலைமயிர் என்ற பொருள் பொருந்தாது என்னும் கருத்தானது இங்கும் உறுதி செய்யப்படுகிறது.

இதை மேலும் உறுதிசெய்ய, சிலப்பதிகாரத்தின் இந்திரவிழவூர் எடுத்த காதையில் இருந்து ஒரு பாடலைப் பார்ப்போம். இப் பாடலில், பூமியை ஒரு பெண்ணாக உருவகித்ததுடன் நிற்காமல், அவளது முகத்திரை, முகம், கண்கள், கண் இமைகள், கண்ணில் வரைந்த ஆரங்கள் என்று அவற்றையும் விடாமல் பூமியில் இருக்கின்ற பிற பொருட்களுடன் உருவகித்து அழகான ஒரு பாடலை இயற்றி உள்ளார் புலவர் இளங்கோ அடிகள். அப்பாடல் வரிகளும் அதன் பொருளும் இதோ கீழே:

அலைநீர் ஆடை மலை முலை ஆகத்து
ஆரப் பேரியாற்று மாரி கூந்தல்
கண் அகன் பரப்பின் மண்ணக மடந்தை - சிலம் – இந்திர

( அலைகடலினைத் தனது முகபடாமாகவும், பெரிய மலைகளைத் தனது திரண்ட கண்களாகவும், அம் மலைகளின்மேல் படிகின்ற மேகங்களை மையுண்ட கண்ணிமைகளாகவும், அம் மலைகளைச் சுற்றி ஓடும் ஆறுகளைத் தனது கண்ணைச் சுற்றி வரைந்த ஆரமாகவும், அகன்ற நிலப்பரப்பினையே தனது முகமாகவும் கொண்ட பூமிப்பெண்.......) 

இப் பாடலில் பயின்று வருவது தொகை உருவக அணி ஆகும். அதாவது ஆகிய என்னும் உருவக உருபு மறைந்து வருவதாகும். இதில் அனைத்துப் பொருட்களையும் இன்னொரு பொருளாக உருவகித்துப் பாடல் இயற்றப்பட்டுள்ளது. அவ்வகையில், மாரி கூந்தல் என்பதனை, மாரி போன்ற கூந்தல் என்று விரிக்காமல், மாரி ஆகிய கூந்தல் என்றே விரித்துப் பொருள்கொள்ள வேண்டும். அப்படிப் பொருள்கொள்ளும்பொழுது, கூந்தல் என்பதற்கு தலைமயிர் என்று பொருள்கொண்டால் என்ன ஆகும்?. பூமிப்பெண்ணானவள், மேகங்களையே தனது தலைமயிராகக் கொண்டிருக்கிறாள் என்பது போல அமைந்து அந்த உருவகத்தின் சிறப்பு குன்றிவிடுவதை அறியலாம். அதேசமயம், கூந்தல் என்பதற்கு கண்ணிமை எனப் பொருள்கொண்டால், பூமிப்பெண்ணானவள் மேகங்களைத் தனது கண்ணிமைகளாகக் கொண்டிருக்கிறாள் என்னும் விளக்கம் மிகப் பொருத்தமாய் இருப்பதுடன் உருவகத்தின் சிறப்பு அங்கே குன்றாமல் மிளிர்வதையும் காணலாம். இப் பாடலில் வரும் முலை என்ற சொல் கண்ணைக் குறிக்கும் என்று கண்ணகி மதுரையை எரித்தது எப்படி என்ற ஆய்வுக் கட்டுரையில் பல ஆதாரங்களுடன் கண்டுள்ளோம்.

கூந்தலும் நரையும்:

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பலவிதமாக மைதீட்டி மகிழ்ந்திருப்பர் என்று முன்னர் பல கட்டுரைகளில் கண்டோம். திருமணமாகாத பல இளம்பெண்கள் குழுவாக சேர்ந்துகொண்டு, ஒருவரது கண்ணிமைகளை இன்னொருவர் அலங்காரம் செய்து மகிழ்வர். இவர்களின் பொழுதுபோக்கே தமது கண்ணிமைகளைப் பலவிதமாக அலங்கரித்துக் கொள்வதும், அந்த அலங்காரம் செய்துகொள்வதற்குத் தேவையான பூக்கள், இலைகள், நறுமணப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதும் தான். வயதாக ஆக, பெண்கள் தமது அலங்காரங்களைக் குறைத்துக் கொள்வர். கணவர் இறந்தபின்னர், அலங்காரத்தை முற்றிலும் துறந்துவிடுவர். பெண்களின் கண்ணிமைகள் எப்போதுமே மைபூசப்பட்டு இருப்பதால், இமையின் தோலானது நாளடைவில் மெலிவடைவதுடன், சிறிதுசிறிதாக தனது இயல்பான நிறத்தினின்று மாறி வெளுக்கத் துவங்கிவிடுகிறது. இப்படி வெளுத்த இடங்களையே நரை என்று இலக்கியங்கள் கூறுகின்றன. கண்ணிமைகளின் வெளுத்த பகுதிகளையே குறித்துவந்த நரை என்ற சொல்லானது, நாளடைவில் வெளுப்புடைய மயிர் முதலானவற்றையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

நரை உடைய கூந்தல் பற்றிக் குறிப்பிடுகின்ற சில பாடல்களை அவற்றின் விளக்கங்களுடன் கீழே காணலாம்.

இரும் கடல் வான் கோது புரைய வாருற்று
பெரும் பின்னிட்ட வால் நரை கூந்தலர்            
நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர்   - மது - 407
( பெருங்கடலில் தோன்றிய வெள்ளிய சிப்பிகளைப் போலத் தோன்றுமாறு தோலுரிந்து பெரும் வரிகளைக் கொண்ட வெளுத்த கண்ணிமைகளை உடைய உடல்நலம் பொருந்திய மிகவும் வயதான மூதாட்டிகள்.........)

இப் பாடலில், பெண்களுக்கு வயது முதிர முதிர, அவர்களின் மையுண்ட கண்ணிமைகளின் தோல் உரிந்து வெளுக்கும் செய்தி கூறப்பட்டுள்ளது. இப்படி கண்ணிமை முழுவதும் தோலுரிந்து வெளுக்கும்போது அது பார்ப்பதற்குக் கடற்கரையில் ஒதுங்கி இருக்கும் சிப்பி போன்றவற்றின் வெளுத்த ஓடுகளைப் போலத் தோன்றுவதாகப் பாடல் கூறுகிறது. இப் பாடலில் வரும் கோது என்பது பொதுவாக தடித்த ஓடு போன்ற மேந்தோலைக் குறித்தாலும் இங்கே ' இருங் கடல் வான் கோது ' என்று கூறப்பட்டுள்ளதால், அது கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிப்பி போன்றவற்றின் வெளுத்த ஓடுகளைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.

மேலும் இப் பாடலில் வரும் ‘ பின் ‘ என்பது வரியினைக் குறிப்பதாகும். இது பின்னு எனவும் சில இடங்களில் குறிக்கப்பெறும். பின்னுதல் என்பது வரிகளை உருவாக்குதல் என்ற பொருளில் வகுத்தல் என்றும் பொருள்தரும். பின்னம், பின்னல் போன்றவை இதன் அடிப்படையில் அமைந்த சொற்களே ஆகும்.

நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம் முது செவிலியர் - நெடு - 152, அக - 254
( வெளுப்பு பொருந்திய நல்ல மெல்லிய கண்ணிமைகளை உடைய முதிய செவிலித் தாயர்.......)

அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும்
பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த
நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும்
நீத்தல் ஓம்பு-மதி          - நற் - 10
( தலையை நிமிர்த்திக் கையில் ஏந்தியவாறு கண்டு மகிழ்ந்த அழகிய கண்ணிமைகள் வயதாகியதால் சோர்வுற்று திறக்க முடியாதபோதும், பொன் போல அழகுசெய்யப்பட்டுத் ஒளிவீசித் திகழ்ந்த அந்த அகன்ற கண்ணிமைகள் இப்போது வெளுத்துவிட்டபோதும் அவளை விட்டுப் பிரிவதைக் கைவிடுவாயாக......) 

நறு விரை துறந்த நரை வெண் கூந்தல்
இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலை
செம் முது பெண்டின் - புற - 276
( நறுமணப் பொருளைத் துறந்ததும் வெள்ளைவெளேர் என்று வெளுப்புற்றதுமான கண்ணிமைகளையும் பெரிய முத்துப் போல தோன்றுமாறு வற்றிச்சுருங்கிய விழிகளையும் உடைய முதிய பெண்ணின்....)

இப் பாடலில் வரும் கூந்தல், முலை ஆகிய இரண்டு சொற்களும் கண்ணிமை என்ற ஒரே பொருளையே குறித்து வந்தன.

மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரை கூந்தல் முதியோள் - புற -277
( மீனை உண்ணும் கொக்கினுடைய இறகினைப் போல வெளுத்த கண்ணிமைகளை உடைய மூதாட்டி....)

இப் பாடலில், மூதாட்டியின் மேல் கீழ் ஆகிய இரண்டு கண்ணிமைகளும் முழுவதுமாக வெள்ளைவெளேர் என்று வெளுத்துவிட்டதால், அது பார்ப்பதற்கு கொக்கினது ஒரு தனித்த இறகு போலத் தோன்றுவதாக புலவர் கூறுகிறார்.

ஆறு ஐந்து இரட்டி யாண்டு உனக்கு ஆயது என
நாறு ஐங் கூந்தலும் நரை விராவுற்றன                         - மணிமே – சிறைசெய்காதை
( ஆறும் ஐந்துமாகிய முப்பதினை இரட்டித்த அறுபது ஆண்டுகள் உனக்கு ஆகிவிட்டது என்பதால் பலவாக வகுத்துப் பூசப்பட்ட கண்ணிமைகள் இப்போது வெளுக்கத் துவங்கிவிட்டன....)

கூந்தலும் மரலும்:

பெண்களுக்கு வயது முதிர முதிர அவர்களது கண்ணிமைகளில் தோல்நிறம் மாறி வெளுக்கத் துவங்கும் என்று முன்னர் கண்டோம். அப்படி வெளுக்கும்போது ஒரேநேரத்தில் இமை முழுவதும் வெளுப்பதில்லை. இமைகளில் ஆங்காங்கே தோலுரிந்து வெளுப்பு தோன்றும். இந் நிலையில், இது பார்ப்பதற்கு மரல் செடியின் இலைகளை ஒத்திருப்பதாக இலக்கியங்கள் கூறுகின்றன.

நுண் அறல் போல நுணங்கிய ஐம் கூந்தல்
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய  - ஐந்.ஐம்-27
( சிப்பியின் நுண்ணிய வரிகளைப் போல வகுத்துப் பூசப்பட்ட அழகிய கண்ணிமைகள் இப்போது மரல் செடியின் இலைகளைப் போல ஆங்காங்கே வெளுத்து நிறம்மாறி...)

தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மரல் ஆகிய கூந்தல் காணாய்  மணிமேகலை - உதய
( குளிர்ச்சி பொருந்திய சிப்பியைப் போல அழகிய வண்ணத்துடன் விளங்கிய கண்ணிமைகள் இப்போது மரல் செடியின் இலைகளைப் போல ஆங்காங்கே வெளுத்து இருப்பதைக் காண்பாய்....)

இந்த மரல் செடியானது தற்காலத்தில் மரலாக்கு எனவும் மரலாடி எனவும் அழைக்கப்படுகிறது. சான்சிவீரியா என்ற குடும்பத்தைச் சேர்ந்த இதில் பல வகைகள் உண்டு. உயரமாக வளர்கின்ற தடித்த இலைகளை உடைய வகை ஒன்றுக்கு ஆங்கிலத்தில் மாமியார் நாக்கு என்று வேடிக்கையான பெயருண்டு. விக்டோரியா என்ற இன்னொரு வகையில் இலைகள் கண்ணிமை போலவே நடுவில் அகன்று முதலிலும் முடிவிலும் ஒடுங்கிக் காணப்பெறும். பொதுவாக மரல்செடியின் அனைத்து வகைகளிலும் இலைகளில் வெள்ளைநிறப் பட்டைகளோ புள்ளிகளோ ஆங்காங்கே திட்டுத்திட்டாய் அமைந்திருக்கும். இதனால் தான் இதனை நரை விழுந்த கண்ணிமைகளுடன் ஒப்பிட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர்.   

கூந்தலும் பறவைகளும்:

இளம்பெண்கள் விளையாடும்பொழுது, தமது கண்ணிமைகளைத் தாம் விரும்பும் வண்ணம் மைதீட்டி அலங்கரித்து மகிழ்வர். அப்படி அலங்கரிக்கும்பொழுது சில நேரங்களில் பறவைகளைப் போலத் தோன்றுமாறும் மைதீட்டி அலங்கரிப்பர். இப் பறவைகளில் கொக்கு, நாரை, கிளி போன்ற பறவைகளும் அடங்கும். இதுபற்றிய சில பாடல்களைக் கீழே விளக்கங்களுடன் காணலாம்.  

அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல்
நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல்
ஓரைமகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் - குறு -401
( வண்ணம் பூசிய கண்ணிமையில் இருந்து நீர் சொட்டச்சொட்ட, நெய்தல் மலர்களுடன் அடும்பின் மலர்களை இடையிட்டுக் கட்டிய மாலையினையும் நெற்றியில் அணிந்துகொண்டு ஓரை விளையாடும் பெண்களைக் கண்டு அஞ்சி கடற்கரையில் இருந்த நண்டுகள் கடலுக்குள் விரைந்தோடுகின்ற.....)

இப் பாடலில் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த பெண்களைக் கண்டு அஞ்சிய நண்டுகள் கடலுக்குள் ஓடி ஒளிவதாகக் கூறப்பட்டுள்ளது. ஏன் அவை அஞ்சி ஓட வேண்டும்?. ஒரு கோணத்தில் பார்த்தால், தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் குழம்பில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சியிருக்கலாம். ஆனால் பெண்கள் அவ்வளவு தைரியமாக நண்டினைக் கையால் பிடிக்க முன்வருவார்களா என்பது ஐயத்திற்குரியதே. இன்னொரு கோணத்தில் பார்த்தால், அப் பெண்களிடம் இருந்த ஏதோ ஒன்று அவற்றை அச்சுறுத்தி இருக்கலாம். விளையாடிக் கொண்டிருக்கும்போது அவர்களிடம் ஆயுதம் ஏதும் இருந்திருக்க வாய்ப்பில்லை. எனவே அவர்களின் முகத்தில் தான் நண்டுகள் அஞ்சத்தக்க ஒன்று ஒருந்திருக்க வேண்டும். பொதுவாக நண்டுகள், நீர்ப்பறவைகளான நாரை முதலானவற்றைக் கண்டு அஞ்சும். அப் பெண்களும் தமது முகத்தில் குறிப்பாக கண்ணிமைகளில் நாரைத் தலை மற்றும் வாய் போல வண்ணம் பூசி இருந்திருக்கலாம். இதைக்கண்டு தான் அந்த நண்டுகள் அஞ்சி ஓடி இருக்க வேண்டும். இக் கருத்துக்கு வலு சேர்க்குமாறு இன்னொரு பாடலும் இருக்கிறது.

நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ - ஐங்கு -186
( நாரைகள் போலத் தோன்றுமாறு மைபூசிய கண்ணிமைகளில் இருந்து சொட்டும் நீரினை பெண்கள் உலர்த்துகின்ற துறைவனே......)

அதாவது, பெண்கள் தமது கண்ணிமைகளை நாரையின் தலையினைப் போல வெண்மையாகப் பூசிக்கொண்டு, கடைக்கண் ஈற்றினை செந்நிறத்தால் நாரையின் அலகு போல நீளமாகக் கூர்மையாகத் தீட்டிக்கொள்வர். பார்ப்பதற்கு இது நாரையின் தலையினைப் போலவே தோன்றும்.

அடுத்து, கீழ்வரும் பாடலொன்றில், பெண்கள் தமது கண்ணிமைகளை கிளி போலத் தோன்றுமாறு மையினால் பூசிய செய்தி கூறப்பட்டுள்ளது.

கிள்ளை பிறங்கிய பூ கமழ் கூந்தல் கொடிச்சி - ஐங்கு -290
( கிளியினைப் போல விளங்கி கூர்மையுடன் தோன்றும் கண்ணிமைகளை உடைய பெண்.....)

இப் பாடலில் இருந்து, பெண்கள் தமது கண்ணிமைகளைக் கிளியின் தலையைப் போல பச்சை வண்ணத்தில் பூசியும், கடைக்கண் ஈற்றினை கிளியின் அலகு போல செந்நிறத்தில் கூராகத் தீட்டியும் அழகுசெய்த செய்தி கூறப்பட்டுள்ளது.

கூந்தலும் பூக்களும்:

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பூக்களின் இதழ் போலத் தோன்றுமாறு பல வண்ணங்களில் பூசி அழகு செய்வர். சில நேரங்களில் இவ் வண்ணங்களின் மேல் பூக்களின் மகரந்தத் தாதுக்களை அப்பி அலங்கரிப்பதுமுண்டு. இப் பூக்களில் நெய்தல், குவளை, மல்லிகை, வேங்கை, மராமரம், தாழை போன்றவையும் அடங்கும். இதைப் பற்றிய சில பாடல்களைக் கீழே விளக்கங்களுடன் காணலாம்.

இரவினானும் இன் துயில் அறியாது அரவு உறு துயரம் எய்துப தொண்டி
தண் நறு நெய்தல் நாறும் பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே - ஐங்கு -173

( கடற்கழியிலே பூத்த குளிர்ச்சி மிக்க நல்ல நெய்தல் மலர் போலத் தோன்றுவதாய் வரிகளை உடைய பெரிய கண்ணிமைகளுக்குக் கண்ணீரையும் துயரத்தையும் தந்த காதலரும் பாம்பினால் கடிபட்டவரைப் போல இரவெல்லாம் தூங்கமுடியாமல் துன்புறுவாராக.....)

நெய்தல் உண்கண் பைதல் கூர பின் இரும் கூந்தலின் மறையினள் - நற் - 113
( நெய்தல் மலர் போன்ற மையுண்ட கண்கள் கலங்க, வரிகளையுடைய பெரிய கண்ணிமைகளைக் கொண்டு அதை மறைத்தவளாய்....)

அவிழ் இணர் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் - நற் - 20
( வண்டுகள் மொய்ப்பதான மரா மரத்தின் மலர்களைப் போலத் தோன்றுகின்ற கண்ணிமைகள்......)

கணை கால் குவளை நாறும் கூந்தல் - நற் - 262
( திரண்ட கால்களை உடைய குவளை மலர் போலத் தோன்றுகின்ற மையுண்ட கண்ணிமைகள்.....)

ஒருமை செப்பிய அருமை வான் முகை இரும் போது கமழும் கூந்தல் - நற் - 298
( கிளையிலே தனியாகப் பூத்த அரிய மல்லிகை மொட்டு ஒன்று பெரிதாக மலர்ந்ததைப் போல ஒளியுடன் தோன்றும் கண்ணிமைகள்.......) 

 பெரும் தண் கொல்லி சிறு பசும் குளவி கடிபதம் கமழும் கூந்தல் - நற் - 346
( குளிர்ச்சி பொருந்திய பெரிய கொல்லிமலையில் பூத்த சிறிய மல்லிகை மலரைப் போல ஒளிவீசுகின்ற கண்ணிமைகள்......)

எல்உறு மௌவல் நாறும் பல் இரும் கூந்தல் - குறு -19
( ஒளிமிக்க மல்லிகை மலர் போலத் தோன்றும் பெரிய கண்ணிமைகள்....)

குவளை குறும் தாள் நாள்மலர் நாறும் நறு மென் கூந்தல் - குறு -270
( குவளைப்பூவின் புதுமலரைப் போலத் தோன்றுகின்ற மெல்லிய நல்ல கண்ணிமைகள்.......)

குவளை நாறும் குவை இரும் கூந்தல் - குறும் - 300
( குவளைப் பூவினை ஒத்த குவிந்த பெரிய கண்ணிமைகள்.....)

பனி மலர் குவளை உள்ளகம் கமழும் கூந்தல் - ஐங்கு -225
( குளிர்ச்சி மிக்க குவளை மலரின் உட்புறம் போலத் தோன்றும் கண்ணிமைகள்......)

வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே - ஐங்கு -324
( வேங்கை மலரினைப் போலத் தோன்றுகின்ற பூந்தாதுக்களை அணிந்த வண்டுகள் மொய்ப்பதான கண்ணிமைகளை உடைய அழகி.......)

தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் - அக - 353
( தாழை மலரின் தாது துகள்களை உதிர்த்துப் பூசிய அழகிய கண்ணிமைகள்.......)

பெண்கள் தமது கண்ணிமைகளை மலர்களின் இதழ்களைப் போலத் தோன்றுமாறு வண்ணம் பூசி அலங்கரித்ததுடன் நிற்காமல், அந்த இமைகளுக்கு மேலாக அசைந்து விளங்குமாறு தனது நெற்றியில் மலர் மாலைகளையும் அணிந்து மகிழ்வர். இதைப் பற்றி ஏற்கெனவே ‘ அழகின் மறுபெயர் அல்குல் ‘ என்ற கட்டுரையில் விரிவாகப் பல ஆதாரங்களுடன் கண்டிருந்தாலும், இங்கேயும் சில சான்றுகள் விளக்கங்களுடன் முன்வைக்கப்படுகின்றன.

வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழை
திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங்கு -72
( வயலில் பூத்த ஆம்பல் மலர்களைக் கொண்டு கட்டிய மாலையினை, கண்ணிமைகளின் மேலாக அசையுமாறு, புள்ளிகள் வரையப்பட்ட நெற்றியில் அணிந்து......)

மா கொடி அதிரல் பூவொடு பாதிரி
தூ தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் - நற் - 52
( அதிரல் கொடியின் பூவுடன் பாதிரியின் மலரும் சேர்த்துக்கட்டி நெற்றியில் அணிந்த மாலையானது கண்ணிமையின் மேல் இருந்தவாறு நறுமணம் வீசுகின்ற நாம் விரும்பத்தக்க இவள்.......)

ஒலி பல் கூந்தல் நலம் பெற புனைந்த முகை அவிழ் கோதை - நற் - 260
( பல்வேறு வண்ணங்களைப் பூசிய கண்ணிமைகள் மேலும் அழகு பெறுமாறு அதன்மேலாக நெற்றியில் அணிந்த மலர்மாலை.....)

கரும் கால் வேங்கை நாள் உறு புது பூ
பொன் செய் கம்மியன் கைவினை கடுப்ப
தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து
ஒலி பல் கூந்தல் அணி பெற புனைஇ - நற் - 313
( பொற்கொல்லனின் வேலைப்பாடு மிக்க பொன்நகையினை ஒத்ததாய், கருங்கால் வேங்கை மரத்து மஞ்சள்நிறப் பூக்களைக் கொண்டு செய்த மாலையினை, கண்ணின் கருநிற மையினை அழித்துப் பலவாக வகுத்துப் பூசப்பட்ட கண்ணிமைகள் மேலும் அழகுபெறுமாறு நெற்றியில் அணிந்து.....)

பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை
குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்-மார்
நின்று கொய மலரும் - குறு -208
( சினம்கொண்ட களிற்றுயானை மிதித்ததால் வளைந்த காலினையுடைய வேங்கைமரத்தில், கண்ணிமைகளை அழகுசெய்ய விரும்பிய குறத்திகள் நின்றவாறே கொய்வதற்கு ஏதுவாக மஞ்சள்நிறப் பூக்கள் மலர......)

முட சினை வெட்சி தளை அவிழ் பல் போது கமழும்
மை இரும் கூந்தல் - குறு -209
( வளைந்த காலினை உடைய வெட்சி மரத்தின் மலர்மாலை அணிந்த மைபூசிய பெரிய கண்ணிமைகள்......)

கூந்தலும் நாரத்தையும்:

பெண்கள் தமது கண்ணிமைகளை பலவிதமாக மைபூசி அலங்கரிப்பர் என்று முன்னர் கண்டோம். அப்படி அலங்கரிக்கும்பொழுது நாரத்தம் பழம் போலத் தோன்றுமாறு செம்மஞ்சள் ( ஆரஞ்சு) வண்ணத்திலும் பூசி அலங்கரிப்பர். உருண்டு திரண்ட கண்ணிமைகளின் மேல் செம்மஞ்சள் வண்ணம் பூசி இருக்கும்போது பார்ப்பதற்கு நாரத்தம் பழம் போலவே தோன்றும். இந்த நாரத்தம் பழத்தினை நரந்தம் என்று கீழ்க்காணும் பாடல்கள் கூறுகின்றன.

நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் - குறு -52, அகம் - 266
( நாரத்தம் பழம் போலத் தோன்றும் திரண்ட பெரிய கண்ணிமைகள்....)

நரந்தம் நாறும் இரும் கூந்தல் - கலி -54
( நாரத்தம் பழம் போலத் தோன்றுகின்ற பெரிய கண்ணிமைகள்....)

கூந்தல் அலங்காரமும் நறுமணப் பொருட்களும்:

பெண்கள் தமது கண்ணிமைகளைப் பல வண்ணங்களால் பூசி அலங்கரித்து மகிழ்வர் என்பது நாமறிந்ததே. இவ் வண்ணங்களைத் தயாரிக்க, பூக்கள், இலைகள், மகரந்தத் தாதுக்கள், பட்டைகள் போன்றவற்றை நீர்விட்டுக் குழம்பு போல அரைத்துக் கொள்வர். பின்னர் அதில் அகில், சந்தனம், நானம் முதலான பல நறுமணப் பொருட்களைக் கலந்து கொள்வர். பின்னர் இக் கலவையினைக் கொண்டு கண்ணிமைகளின் மேல் பூசுவர். அப்படிப் பூசிய பின்னர், கண்ணிமைகளில் இருந்து நீர் சொட்டும். சொட்டும் நீரினைத் துடைத்தால் வண்ணம் போய்விடும் என்பதால் துடைக்காமல் காற்றில் இயற்கையாக உலரவிடுவர். சிலசமயங்களில் ஒரு சிறுபாத்திரத்தில் அகில், சந்தனம் முதலானவற்றின் சுள்ளிகளை இட்டுத் தீமூட்டி, அப் புகையினைக் கொண்டும் கண்ணிமைகளை உலர்த்துவர். இதுபற்றிய சில பாடல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் - சிறு -263
( அகிற்புகையில் காயவேண்டி விரித்த அழகிய மெல்லிய கண்ணிமைகள்......)

கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன
ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇ - புற – 146

( மயில்தோகையில் உள்ள கண்போலப் பூசிய கண்ணிமைகளின் ஈரத்தினை உலர்த்தக் கீழிருந்து மூட்டிய வெண்புகையானது, மகிழ்ச்சியுற்ற மயிலின் விரிந்த தோகையின் கீழ் இருக்கின்ற குவிந்த வெண்ணிற அடிப்பகுதி போலத் தோன்றியது....)

மேலும், திருமணமான பெண்கள் தமது கணவர் உடனிருக்கும்பொழுது, தமது கண்ணிமைகளைத் தமது கணவரைக் கொண்டே அழகுசெய்யச் சொல்வர். கணவரின் விருப்பத்துக்கேற்றபடி, அவர் கைகளாலேயே தமது கண்ணிமைகளை அலங்கரித்துக் கொண்டு கொஞ்சி மகிழ்ந்திருப்பர். சிலநேரங்களில், கணவனானவன் தனது மனைவியின் கண்ணிமைகளை மேலும் மேலும் அழகூட்ட விரும்பி, அதில் பல மாலைகளைக் கட்டி விடுவதுமுண்டு. அப்படிச் செய்தால் என்ன ஆகும் என்பதனை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது குறுந்தொகைப் பாடலொன்று.  

மகிழ்ந்ததன் தலையும் நறவு உண்டாங்கு
விழைந்ததன் தலையும் நீ வெய்துற்றனை
இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம்
பெரும் பெயல் தலைய வீந்தாங்கு இவள்
இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே - குறு -165

( பலவாக வகுத்துப் பூசப்பட்டிருக்கும் பெரிய கண்ணிமைகளின் அழகுகண்டு மகிழ்ந்த நீ, அதற்கு மேலும் அழகுசேர்க்க அணிகலன்களை அணிவிக்க விரும்புகிறாய். இது எவ்வாறு இருக்கிறதென்றால், ஏற்கெனவே கள்குடித்த ஒருவன் அதற்குமேலும் விரும்பிக் குடிப்பதைப் போலவும், கடற்கரையில் நிற்கின்ற உப்புநிறைந்த வண்டியில் மேலும் அதிகமாக உப்பினைப் பெய்வதைப் போலவும் இருக்கின்றது. அளவுக்கு அதிகமாகக் கள்குடித்தவன் எப்படி நடக்கமுடியாமல் கீழேவிழுந்து கிடப்பானோ அதைப்போல, அளவுக்கு அதிகமாக உப்பேற்றிய வண்டியானது எப்படி முரிந்து விழுந்திடுமோ அதைப்போல, அளவுக்கு அதிகமாக அணிகளை அணிவித்தால், உனது காதலியின் கண்ணிமைகள் பாரம் தாங்கமாட்டாமல் திறவாது...)

கண்ணிமைகளுக்கு அதிகமாகப் பாரம் கூட்டாதே என்று கூறுவதற்கு எதையெல்லாம் எடுத்துக்காட்டி கூறி இருக்கின்றனர் பாருங்கள்.

முடிவுரை:

இதுகாறும் கண்டவற்றில் இருந்து கூந்தல் என்பது தலைமயிரைக் குறிக்காது என்பதும் கண்ணிமைகளையே குறிக்கும் என்பதுவும் உறுதிசெய்யப்பட்டது. மேலும், பெண்கள் தமது கண்ணிமைகளுக்கு மைபூசும்பொழுது நறுமணப் பொருட்களைக் கலந்து பூசுவதன் காரணம், கண்ணிமைகளில் இருந்து வருகின்ற நறுமணத்தை எப்போதும் நுகர்ந்துகொண்டே இருக்கலாம் என்பதுதான். நறுமணப் பொருட்களைப் பூசுவதை நிறுத்திவிட்டால், இந்தக் கண்ணிமைகளில் இருந்து மணம் எதுவும் வீசாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதிலிருந்து,

இயற்கையிலேயே

கூந்தல் ஆகிய கண்ணிமைகளுக்கு

மணம் வீசும் பண்பு

இல்லை இல்லை இல்லை


என்பது முடிந்த முடிபாகச் சொல்லப்படுகிறது. 
================================ தமிழ் வாழ்க!============