ஞாயிறு, 10 நவம்பர், 2019

சிங்கம், சிங்காரம், சித்திரம், சிருட்டி, சிராத்தம் - எது தமிழ்? எது மூலம்?


சிங்கம்:

தமிழில் பலவகைப்பட்ட இலக்கணப் போலிகள் உண்டு என்று பலரும் அறிவோம். அவற்றுள் ஒன்றுதான் சம்மோனைப் போலி ஆகும். முதலிச் சொல்லில் வரும் உயிர் மோனைக்குப் பதிலாக அவ்வுயிரின் மேலேறிய சகர மெய்யினை முதல் எழுத்தாகக் கொண்டு அதே பொருளில் வரும் போலிச்சொல்லே சம்மோனைப் போலி ஆகும். இதற்குச் சான்றாக கீழே சில எடுத்துக்காட்டுக்களைக் காணலாம்.

இப்பி >>> சிப்பி இறகு >>> சிறகு உணங்கு >>> சுணங்கு

இவற்றில் இப்பி, இறகு, உணங்கு என்பன முதலிச் சொற்கள். சிப்பி, சிறகு, சுணங்கு ஆகியன சகர மெய் ஏறியதால் சம்மோனைப் போலிகள். இதைப்போன்ற ஒரு சம்மோனைப் போலியே சிக்கு என்பதாகும்.

இக்கு என்னும் தமிழ்ச் சொல்லுக்கு முடிச்சு, பின்னல் என்றெல்லாம் பொருட்கள் உண்டு. இக்கு என்ற சொல்லின் சம்மோனைப் போலியே சிக்கு என்பதாகும். அதாவது,

இக்கு >>> சிக்கு

மேலே காணப்படும் சிக்கு என்னும் பெயர்ச்சொல்லில் இருந்து சிக்குதல் எனும் வினை பிறக்கும். சிக்கிக் கொள்ளுதல், பின்னிக் கொள்ளுதல் எனும் வினைகளைச் சுட்டுவதான சிக்குதல் என்ற வினையின் அடிப்படையில் சிக்கம், சிகை, சிக்கல், சிக்கடி, சிகண்டம், சிகண்டி போன்ற பல சொற்கள் தோன்றும்.

சிக்கு >>> சிகை = தலைமயிர் – அடிக்கடி பின்னிக் கொள்ளும் தன்மையது.
சிக்கு >>> சிக்கு+வாரி = தலைமயிர்ப் பின்னலை நீக்கும் சீப்பு.
சிக்கு >>> சிக்கல் = பின்னல், குழப்பம்.
சிக்கு >>> சிக்கடி = தலைமயிரின் எண்ணை நாற்றம்.
சிக்கு >>> சிக்கம் = தலைமயிர், குடுமி.
சிக்கு >>> சிகண்டம் = தலைமயிர், குடுமி.
சிக்கு >>> சிகண்டி = மயில் = தலையுச்சியில் அழகிய குடுமியைக் கொண்டது.

சிக்கம் என்ற சொல்லானது தலைமயிரைக் குறித்தாலும் சிக்கலைக் கொண்டது என்ற பொருளில் சிக்கலுடைய அடர்த்தியான தலைமயிரைக் குறிக்கவே பெரிதும் பயன்படுகிறது. ஏனென்றால், அடர்த்தியான தலைமயிரில்தான் சிக்கல்கள் அதிகமாக உருவாகும்.

சிக்கம் என்ற சொல்லானது சிங்கம் என்று மெலித்தல் விகாரமாகவும் பயன்பட்டு இருக்கிறது. குறவர்களின் தலைமயிர் சரியாக வாரப்படாமல் எப்போதும் சிக்கலைக் கொண்டிருந்ததால் அவர்கள் சிங்கன் என்றும் சிங்கி என்றும் அழைக்கப்பட்டனர்.

சிக்கம் >>> சிங்கம் >>> சிங்கன் = குறவன், சிங்கி = குறத்தி.

குறவர்களைப் போலவே சிக்கலான அடர்ந்த தலைமயிரைக் கொண்ட விலங்கினமே சிங்கம் என்று அழைக்கப்பட்டது. அதாவது,

சிக்கம் >>> சிங்கம் = சிக்கலான அடர்ந்த தலைமயிர் கொண்ட விலங்கு.

சிங்கம் என்ற பெயரானது அவ் விலங்கின் சிக்கலான அடர்ந்த தலைமயிரின் அடிப்படையில் தான் அமைக்கப் பட்டது என்பதனைச் சிங்கத்தைக் குறிக்கும் வேறுசில பெயர்களின் மூலமும் உறுதி செய்யலாம்.

அரிமா (தமிழ்) = அரி ஆகிய தலைமயிரைக் கொண்ட விலங்கு = சிங்கம்.
கேசரி (சமக்கிருதம்) = கேசம் ஆகிய தலைமயிரைக் கொண்ட விலங்கு = சிங்கம்.

அரிமா, கேசரி போன்ற பெயர்களைப் போலவே அடர்ந்த தலைமயிரின் அடிப்படையில் இவ் விலங்கிற்கு சூட்டப்பட்ட பெயரே சிங்கம் ஆகும். இதிலிருந்து, சிங்கம் என்னும் பெயரானது தமிழ்ச் சொல்லே என்பது உறுதியாகிறது.

சிங்கம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து கீழ்க்காணும் விதிகளின்படி சி`ம்க` என்னும் தமிக்ருதப் பெயர் தோன்றியது.

சிங்கம் >>> சி`ம்க` (வி.15,5,15,6)

வி.15 – கிரந்தமாற்று விதி – இதன்படி, சிகரம் சி`கரமாகவும் ககரம் க`கரமாகவும் மாறின.
வி.5 – நட்பெழுத்து விதி – இதன்படி, ஙகரமானது அதன் நட்பெழுத்து ஆகிய மகரமாக மாறியது.
வி.6 – விகுதிகெடல் விதி – இதன்படி, மகர விகுதி கெட்டது.

சிங்காரம்:

ஆண் மயிலுக்குத் தோகையைப் போல, ஆண் சிங்கத்திற்கு அழகே அதன் அடர்த்தியான தலைமயிர் தான். குதிரை போன்றவற்றுக்கும் அழகிய பிடரி மயிர் / தலைமயிர் உண்டு என்றாலும் சிங்கத்தின் தலைமயிர் ஆனது அதன் தலையைச் சுற்றிலும் வட்ட வடிவில் சூழ்ந்திருக்கும் என்பது இங்கே குறிப்பிட்டுச் சொல்லத்தக்கது ஆகும். சிங்காரம் என்னும் சொல்லே இவ் வடிவத்தின் அடிப்படையில் தோன்றியது தான். அதாவது,

சிங்காரம் = சிங்க + ஆரம் = சிங்கத்தின் வட்டவடிவமான தலைமயிர்.

சிங்கம், ஆரம் ஆகிய இரண்டு சொற்களும் தமிழே என்பதால் இவற்றின் கூட்டுச் சொல்லான சிங்காரம் என்பதும் தமிழ்ச் சொல்லே என்பது உறுதியாகிறது. சிங்கத்தின் வட்டவடிவமான தலைமயிரைக் குறித்துவந்த சிங்காரம் என்னும் தமிழ்ச் சொல்லானது நாளடைவில் தலையில் சூட்டப்படுவதான வட்டவடிவ மலர்மாலைகள், மணிமாலைகள் போன்ற பலவற்றையும் குறிக்கப் பயன்படலாயிற்று.

சிங்காரம் = வட்டவடிவ தலைமாலை.

இப்படியான வட்டவடிவ மாலைகளைத் தலையில் சூட்டி அழகுபடுத்திக் கொள்வதனையே சிங்காரித்தல் என்ற வினைச்சொல்லால் குறிக்கத் தொடங்கினர் எனலாம். இச் சொல்லே பின்னர் அனைத்து வகையான அழகூட்டும் வினைகளையும் குறிக்கும் பொதுச்சொல்லாக மாறியது.

சிங்காரம் >>> சிங்காரித்தல் = அழகுசெய்தல்.

சிங்காரம் என்னும் தமிழ்ச்சொல்லே கீழ்க்காணும் விதிகளுக்கு ஏற்பத் திரிந்து தமிக்ருத மொழியாக மாறியது.

சிங்காரம் >>> ச்`ருங்கார (வி. 21,6)

வி.21 – விரிமோனை விதி – இதன்படி, சி என்னும் மோனை ச்`ரு என்று இரண்டு எழுத்துக்களாக விரிந்தது.
வி. 6 – விகுதிகெடல் விதி – இதன்படி, மகர விகுதி கெட்டது.

சித்திரம்:

சித்திரம் என்னும் சொல்லானது சித்திறம் என்னும் தமிழ்ச் சொல்லின் போலி வடிவமே ஆகும். இச் சொல்லானது மூவகைப் பொருட்களின் / முறைகளின் அடிப்படையில் தோன்றியுள்ளது. அவற்றைக் கீழே காணலாம்.

சில் + திறம் = சிற்றிறம் >>> சித்திறம் = சிறிய உடல் (1)
சில் + திறம் = சிற்றிறம் >>> சித்திறம் = சிறிய கோலம் (2)
சில் + திறம் = சிற்றிறம் >>> சித்திறம் = சிறிய வகை (3)

சித்திறம் என்ற சொல்லானது மேலே கண்டபடி மூன்று வகையான பொருட்களைக் குறிக்கக் காரணம், திறம் என்ற சொல்லுக்கு உடல், கோலம், வகை என்று பலவகையான பொருட்கள் இருப்பதே.

சித்திறம் என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே கீழ்க்காணும் விதிமுறைகளின்படி சி`த்ர என்ற தமிக்ருதச் சொல் தோன்றும்.

சித்திறம் >>> சி`த்ர (வி.15,25,4,24,6)

வி. 15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சி என்பது சி` என்று கிரந்த ஒலியாக மாறியது.
வி. 25 – மெய்கெடல் விதி – இதன்படி, முதல் தகரமெய் கெட்டது.
வி. 4 – மெய்யெதுகை விதி – இதன்படி, இரண்டாவது தகர உயிர்மெய்யில் இருந்து உயிர்நீங்கி த் என்று ஆனது.
வி. 24 – போலிமாற்று விதி – இதன்படி றகரம் ரகரப் போலியாக மாறியது.
வி. 6 – விகுதிகெடல் விதி – இதன்படி மகர விகுதி கெட்டது.

சித்திறம் எனும் தமிழ்ச்சொல்லுக்கு எப்படி மூன்றுவகையான பொருட்கள் உள்ளனவோ அதைப்போலவே சி`த்ர என்னும் தமிக்ருதச் சொல்லையும் கீழ்க்காணும் மூன்று வகையான பொருட்களில் பயன்படுத்துகின்றனர்.

(1) சி`த்ர + குள்ளன் = சிறிய உடலைக் கொண்ட குள்ளன்.
(2) சி`த்ர + காரன் = சிறிய கோலங்களை வரைபவன் = ஓவியன்.
(3) சி`த்ர + அன்னம் = சிறிய வகையான உணவுகள். (புளிசோறு, தயிர்சோறு, தக்காளி சோறு போன்ற உணவுகள்..)

பி.கு: சித்திரம் என்பதில் உள்ள ரகரம் றகரத்தின் போலி என்பதால் சித்திறம் என்று எழுதுவதே தமிழ் வழக்காகும்.

சிருட்டி:

சிருட்டி என்பது ஒரு தஞ்சந்தச் சொல் ஆகும். அதாவது, தமிழில் இருந்து சமக்கிருதம் சென்று மீண்டும் தமிழுக்கே திரும்பி வந்த சொல்லாகும். சிருட்டி என்பதன் தமிழ் மூலம் என்ன என்று கீழே விரிவாகப் பார்க்கலாம்.

சூல் என்ற தமிழ்ச் சொல்லானது பெயர்ச்சொல்லாக முட்டை, கருப்பம் போன்றவற்றையும் வினைச்சொல்லாக கருப்பந் தரித்தல் என்பதையும் குறிக்கும். சூலுதல் என்ற தன்வினைச் சொல்லானது பிறவினைச் சொல்லாக மாறும்போது தமிழ் இலக்கிய விதிகளின்படி கீழ்க்காணும் மாற்றங்களைப் பெறும்.

சூல் >>> சூற்று (1) >>> சூட்டு (2)

(1) சூல் என்பது சூற்று என்று ஆகுமா என்றால் ஆகும். இதனை வினையிடமாற்றம் என்று கூறலாம். அதாவது தன்வினைச் சொல்லானது பிறவினைச் சொல்லாக மாறும்போது அச்சொல்லின் ஈற்றில் உள்ள மெய்யெழுத்தானது பலவகைகளில் மாற்றம் அடையும். அவற்றுள் ஒன்றுதான் லகர – றகர மாற்றம். இம் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ள வேறு சில சொற்களையும் கீழே காணலாம்.

உடல் >>> உடற்று, நிழல் >>> நிழற்று, ஏல் >>> ஏற்று.

சூலுதல் என்னும் தன்வினைச் சொல்லானது சூற்றுதல் என்று பிறவினைச் சொல்லாக மாறி கருவாக்குதல் / உருவாக்குதல் என்ற பொருளைத் தரும்.

(2) சூற்று என்பது சூட்டு என்று ஆகுமா என்றால் இலக்கணப் போலியின் படி ஆகும். இப்படி மாறுவதனை றகர – டகரப் போலி என்பர். இதற்கான வேறு சில காட்டுகளையும் கீழே காணலாம்.

ஒற்று >>> ஒட்டு, அசறு >>> அசடு, முசிறு >>> முசிடு

கருவாக்குதல் / உருவாக்குதல் என்னும் வினையைக் குறிக்கும் சூட்டு என்னும் சொல்லில் இருந்து தோன்றும் சூடு என்னும் தமிழ்ச் சொல்லானது விளைந்து உருவான நெற்கதிர்களைக் குறிக்க இலக்கியங்களில் பயன்பட்டுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

உருவாக்கு எனும் பொருளுடைய சூட்டு எனும் இந்த தமிழ்ச் சொல்லில் இருந்தே கீழ்க்காணும் விதிகளின்படி படைப்பினைக் குறிக்கும் தமிக்ருதச் சொல் தோன்றும்.

சூட்டு >>> ச்`ருச்~டி (வி. 21, 12, 15, 6)

வி. 21 – விரிமோனை விதி – இதன்படி சூ என்னும் முதல் எழுத்தானது ச்`ரு என்று இரண்டு எழுத்துக்களாக விரிந்தது.
வி. 12 – மெய்மாற்று விதி – இதன்படி இரட்டித்து வரும் டகர மெய்யில் ஒன்று சகரமாக மாறியது.
வி. 15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரமெய்கள் அனைத்தும் கிரந்த ஒலிகளாக மாறின.
வி. 6 – இதன்படி ஈற்றில் உள்ள உகர உயிர் விகுதி இகரமாக மாறியது.

சூட்டு என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய ச்`ருச்~டி என்னும் தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழ்மொழிக்குத் திரும்பும்போது தமிழ் இலக்கணப்படி திரிந்து சிருட்டி என்று தஞ்சந்தச் சொல்லாக மாறும். இச்சொல்லின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூட்டு (தமிழ்) >>> ச்`ருச்~டி (தமிக்ருதம்) >>> சிருட்டி (தஞ்சந்தம்)

பி.கு: சிருட்டி என்பது திரிசொல் ஆனதால் படைத்தல் என்ற வினையைக் குறிக்க சூட்டு எனும் சொல்லையே பயன்படுத்தலாம். கீழ்க்காணும் சங்க இலக்கியப் பாடல்களில் சூட்டுதல் என்பது படைத்தல் பொருளில் வந்துள்ளது.

இமையம் சூட்டிய ஏம வில்பொறி – புறம் – 39
நிலவரை சூட்டிய நீள் நெடும் தானை – புறம் – 228

சிராத்தம்:

சிராத்தம் என்பது உண்மையில் பிதிர்க்கடனைக் குறிப்பதாகும். இறந்துபோன உயிர்களின் ஆசையினை நிறைவேற்றச் செய்யப்படும் இக் கடமையின்போது அவித்த சோற்றினை சிறுசிறு உருண்டைகளாகப் படைத்து வழிபாடு செய்வர். இவ்வாறு வழிபடுவதற்கான தமிழ்ச்சொல் சித்தவி என்பதாகும். இதன் தோற்றம் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.

அவி என்னும் தமிழ்ச் சொல்லுக்குச் சோறு என்ற பொருளுண்டு. அரிசியை நீரில் அவித்துச் செய்யப்படுவதால் சோற்றுக்கு அவி என்றும் ஒரு பெயருண்டு. இச் சோற்றினை சிறுசிறு உருண்டைகளாகப் பிடிப்பதனை சித்தவி என்று கூறுவர். இச்சொல் கீழ்க்காணுமாறு தோன்றும்.

சிறு + அவி >>> சிற்றவி (1) >>> சித்தவி (2)

(1) சிறு+அவி என்பது சிற்றவி என்று மாறுவது தமிழ் இலக்கணப் புணர்ச்சி விதிகளுக்கு உட்பட்டதே ஆகும். இதற்கான வேறு சில சான்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சிறு + அன்னை = சிற்றன்னை, சிறு + ஓடை = சிற்றோடை.

(2) சிற்றவி என்பது சித்தவி என்று மாறுவது றகர – தகரப் போலியாகும். தமிழில் மிக அதிகமாகப் புழங்கும் இவ்வகை போலி வழக்கிற்குச் சான்றாக கீழே சில காட்டுகளைக் காணலாம்.

காற்று >>> காத்து, நாற்று >>> நாத்து, மாற்று >>> மாத்து

சிறிய உணவு என்ற பொருளைக் கொண்ட சித்தவி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்தே கீழ்க்காணும் விதிமுறைகளுக்கு ஏற்ப தமிக்ருதச் சொல் தோன்றும்.

சித்தவி >>> ச்`ராத்த^ (வி. 21, 15, 6)

வி. 21 – விரிமோனை விதி – இதன்படி சி என்னும் முதல் எழுத்தானது ச்`ரா என்று இரண்டு எழுத்துக்களாக விரிந்தது.
வி. 15 – கிரந்தமாற்று விதி – இதன்படி சகரமும் தகரமும் கிரந்த ஒலிகளாக மாறின.
வி. 6 – விகுதிகெடல் விதி – இதன்படி விகர விகுதி கெட்டது.

சித்தவி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து தோன்றிய ச்`ராத்த^ என்னும் தமிக்ருதச் சொல்லானது மீண்டும் தமிழுக்குத் திரும்பும்போது தமிழ் முறைப்படி சிராத்தம் என்று தஞ்சந்தச் சொல்லாக மாறும். இச்சொல்லின் தோற்றமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சித்தவி (தமிழ்) >>> ச்`ராத்த^ (தமிக்ருதம்) >>> சிராத்தம் (தஞ்சந்தம்)

பி.கு: சிராத்தம் என்பது திரிசொல் ஆதலால் அதற்கு மாற்றாக சித்தவி என்னும் தமிழ்ச் சொல்லையே இனி பயன்படுத்தலாம்.


1 கருத்து:

உங்கள் கருத்துக்களைத் தமிழில் தட்டச்சு செய்யும் வழி:
வலப்பக்கத்தில் உள்ள பகுதியில் தமிழ் ஒலிகளை ஆங்கில எழுத்துக்களில் அசசடித்து நகல் செய்து இங்கே ஒட்டலாம்.