
சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் கீழ்க்காணும் வரிகள் உள்ளன.
.....வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள.....
இப் பாடல் வரிகளுக்குக் கீழ்க்காணுமாறு பொருள் கூறியுள்ளனர்.
' பாண்டிய மன்னனானவன் தனது வடிவேலைக் கடல்மீது எறிந்திட, அந்தப் பெரிய பகையினைப் பொறுக்கமாட்டாமல், கடலானது பொங்கி எழுந்து பஃறுளி ஆற்றுடன் குமரி மலை அடுக்குகளையும் தன்னுள் விழுங்கிக்கொள்ள......'
இவ்விளக்கம் சரியானதுதானா என்று இக் கட்டுரையில் விரிவாக அலசலாம்.
விளக்கத் தவறுகள்:
இவ் விளக்கத்தில் இரண்டு தவறுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
பாண்டிய மன்னனானவன் தனது வேலினை கடல்மீது எறிந்ததாகக் கூறுவது முதல் தவறு. இக் கூற்று சரியென்றால், இதனை எவ்வாறு எடுத்துக் கொள்வது?. உண்மை நிகழ்ச்சியாகவா?. புராணக் கதையாகவா?. இப் பாடலில் பாண்டியன் போற்றப்படுவதால், இது ஓர் உண்மை நிகழ்வாகத் தான் இருக்கவேண்டும்.
முதலில் இதை ஒரு உண்மை நிகழ்ச்சியாக எடுத்துக்கொண்டால், பாண்டியன் ஏன் தனது வேலினை கடல்மீது எறியவேண்டும்?. காரணம் எதுவானாலும், ஒரு மனிதன் தனது வேலை கடல்மீது எறிவதை முட்டாள்தனமான செயலாக அல்லாமல் எவ்வாறு எடுத்துக்கொள்வது?. ஆக, முதல்கூற்று உண்மை நிகழ்ச்சியென்றால், பாண்டியன் ஒரு முட்டாள் என்பது உறுதியாகிறது. பாண்டியனைப் புகழ்வதே இப் பாடலின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், அவனை முட்டாளாகக் காட்ட புலவர் ஒருபோதும் விரும்பமாட்டார். இதிலிருந்து இப் பாடலில் ' பாண்டியன் தனது வேலினை கடல்மீது எறிந்தான்' என்ற கருத்தானது கூறப்படவில்லை என்பது தெளிவு.
அடுத்ததாக, பாண்டியன் வேலை எறிந்தது ஒரு பெரிய பகையைத் தோற்றுவித்ததாம். இதுவும் தவறான கூற்று. காரணம், கடல்மீது வேலை எறிந்தால் என்ன பகை உண்டாகும்? யாரோடு பகை உண்டாகும்?. ஒரு சிறிய வேலினை எறிந்ததற்கு எல்லாம் கடலானது பொங்கி எழுவதாக இருந்தால், நம்மில் பலர் எதைஎதையோ கடலில் வீசி அசுத்தப் படுத்துகின்றனரே !. இவற்றுக்கெல்லாம் கடல் பொங்குவதாக இருந்தால் நம் கதி அதோ கதிதான்!!!. எனவே இரண்டாவது கூற்றும் தவறு என்பது புலப்படும்.
இப் பாடலுக்கான தவறான விளக்கத்திற்குக் காரணம், வான்பகை என்ற சொல்லே. இதில் வரும் வான் என்பதற்கு ' பெருமை' எனப் பொருள்கொண்டு, வான்பகை என்பதற்கு பெரிய பகை என்று பொருள்கொள்கின்றனர். இதுவே இத் தவறான விளக்கங்களுக்கு அடிகோலி இருக்கிறது. வான்பகை என்ற சொல்லைப் பற்றிக் கீழே காணலாம்.
வான்பகை - பொருள் என்ன?
வான்பகை என்ற சொல்லின் உண்மையான பொருள் என்ன என்று இங்கே காணலாம்.
பொதுவாக, வான் என்ற சொல்லுக்குக் கீழ்க்காணும் பொருட்கள் இருப்பதாக சென்னை இணையத் தமிழ்ப் பேரகராதி கூறுகின்றது.
வான்¹ vāṉ , n. 1. [T. vāna, K. bāna, M. vānu.] Sky, the visible heavens; ஆகாயம். வானுயர் தோற்றம் (குறள், 272). 2. Primordial matter; மூலப்பிரகிருதி. வானின் றிழிந்து வரம்பிகந்த மாபூதத்தின் (கம்பரா. அயோத். மந்திர. 1). 3. Cloud; மேகம். ஏறொடு வான் ஞெமிர்ந்து (மதுரைக். 243). 4. Rain; மழை. வான்மடி பொழுதில் (பெரும் பாண். 107). 5. Celestial world; தேவருலகு. வான்பொரு நெடுவரை (சிறுபாண். 128). 6. Ambrosia; அமிர்தம். வான்சொட்டச் சொட்ட நின் றட்டும் வளர்மதி (தேவா. 586, 1). 7. Heaven; மோட்சலோகம். வானேற வழிதந்த (திவ். திருவாய். 10, 6, 5). 8. Goodness; நன்மை. வரியணி சுடர் வான் பொய்கை (பட்டினப். 38). 9. Greatness; largeness; பெருமை. (பிங்.) இருடூங்கு வான்முழை (காசிக. காசியின்சிறப். 13). 10. Beauty; அழகு. வான்பொறி பரந்த புள்ளி வெள்ளையும் (கலித். 103). 11. Strength; வலிமை. (பிங்.) 12. Regularity; நேர்மை. வானிரைவெண்பல் (கலித். 14). 13. A kind of tree; மரவகை. (பிங்.)
இப் பாடலில் வரும் வான் என்பது இங்கே மேகத்தைக் குறிப்பதாகும். பகை என்பது பகைமையினையோ பகைமையினை உடைய எதிரியையோ குறிக்கும் என்று அறிவோம். இதிலிருந்து,
வான்பகை என்பது மேகத்தின் எதிரி என்ற பொருளைத் தருவதாகும்.
என்றால் மேகத்தின் எதிரி யார்?. மலை தான். இது எப்படி என்று பார்ப்போம்.

வடிவேல் எறிந்த வான்பகை
இப் பாடலில் வரும் வான்பகை என்ற சொல்லானது மலையினைக் குறிக்கும் என்று மேலே கண்டோம். என்றால், இது எந்த மலையினைக் குறிக்கும் என்று இங்கே காண்போம்.
புலவர் இப் பாடலில், வெறுமனே ' வான்பகை ' என்று கூறாமல் ' வடிவேல் எறிந்த வான்பகை ' என்று கூறி இருக்கிறார். இதற்கு ' வடிவேல் கொண்டு எறியப்பட்ட மலை ' என்று பொருளாகும்.
வடிவேல் கொண்டு எறியப்பட்ட மலை என்று இலக்கியங்களில் கூறப்படும் மலை எது என்று ஆய்ந்ததில், அது முருகப் பெருமானின் வடிவேலினால் கூறுசெய்யப்பட்ட கிரவுஞ்ச மலையினைக் குறிப்பதாகக் கந்த புராணம், கந்தர் அலங்காரம் போன்ற இலக்கியங்கள் கூறுகின்றன. இதைப் பற்றிக் கீழே விரிவாகக் காணலாம்.
புராணங்களில் கிரவுஞ்ச மலை:
கந்த புராணம், கந்தர் அலங்காரம், திருப்புகழ் போன்ற இலக்கியங்களில் கிரவுஞ்ச மலையினை முருகன் தனது வேலினால் கூறுசெய்த நிகழ்வானது கூறப்பட்டுள்ளது.
தாரகன் என்னும் அசுரனானவன், முருகனுடன் போர்புரியும்போது, கிரவுஞ்ச மலைக்குள் புகுந்து ஒளிந்துகொண்டதாகவும், முருகனும் விடாமல், தனது வேலினை அம் மலைமீது பாய்ச்சி மலையைப் பிளக்கச் செய்து அசுரனைக் கொன்றார் என்று இலக்கியங்கள் முருகப் பெருமானின் புகழ் பாடுகின்றன.
இப்படி முருகப்பெருமானால் வேல்கொண்டு எறியப்பட்ட மலையான கிரவுஞ்ச மலையினை சிலப்பதிகாரத்தில் ஆசிரியர் ஏன் எடுத்தாள வேண்டும்? இதைப் பற்றிக் கீழே காணலாம்.
கிரவுஞ்ச மலை - அமைப்பும் பெயர்க் காரணமும்:
முதலில், கிரவுஞ்ச மலைக்கு ஏன் அப்பெயர் வந்தது என்று பார்க்கலாம். உண்மையில், கிரவுஞ்சம் என்பது ஒருவகை கொக்குப்பறவையின் பெயராகும். ஆங்கிலத்தில் sarus crane என்று அழைக்கப்படுகிறது.

கிரவுஞ்ச மலைக்கு அப் பெயர் வந்த காரணம், கிரவுஞ்சப் பறவையின் கூடு போன்ற அமைப்பே. கிரவுஞ்சப் பறவையின் கூடானது எப்படி நீர் சூழ ஒரு உயரமான அகலமான தீவு போல இருக்கிறதோ, அதைப் போலவே கிரவுஞ்ச மலையானது கடல்நீர் சூழ்ந்த ஒரு தீவு போல மிக மிக அகலமாகவும் உயரமாகவும் இருந்தது. உண்மையில் கிரவுஞ்ச மலையானது ஒரு மடிப்பு மலையாகும். ஆங்கிலத்தில் இதனை fold mountain என்று கூறுவார்கள்.
இப் பாடலில் வரும் கிரவுஞ்ச மலையானது கடல்நீர் சூழப்பட்ட ஒரு பெரிய மடிப்புமலை ஆகும். இது அகலமாகவும் உயரமாகவும் இருந்துவந்ததால், கடல் ஓதங்களில் இருந்து நிலத்தைக் காப்பாற்றி தென் இந்தியாவில் ஒரு இயற்கையான தடுப்பு அரணாக செயல்பட்டு வந்தது. இருந்தாலும், அது ஒரு வலிமையற்ற படிவுப்பாறை / உருமாறிப்பாறை மலையாதலால், நாளடைவில், அது கடல் அலைகளின் சீற்றத்தினைத் தாங்கமாட்டாமல், பிளவுற்றது. விளைவு?. கடல் அலைகள் சீற்றத்துடன் புகுந்து, கிரவுஞ்ச மலையினை அடுத்திருந்த பஃறுளி ஆற்றினையும் அதனை அடுத்திருந்த உயரம் குறைவான குமரி மலைத் தொடரையும் தனக்குள் விழுங்கி விட்டது.
முடிவுரை:
இதுகாறும் கண்டவற்றில் இருந்து, நாம் அறிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால்,
இப்பாடலில் வரும், ' வடிவேல் எறிந்த வான்பகை ' என்பது கிரவுஞ்ச மலையினைக் குறிக்கும் என்பதும்
கிரவுஞ்ச மலையினைப் போல பல மடிப்பு மலைகள் தென்னிந்தியக் கடற்கரைகளை ஒட்டி அமைந்திருந்தன என்பதும்
கிரவுஞ்ச மலையே அவற்றில் மிகப் பெரியதாய் ஒரு தடுப்பு அரணாக செயல்பட்டு வந்தது என்பதும்
கிரவுஞ்ச மலை பிளவுற்றதால் கடல் ஓதம் நிலத்துக்குள் புகுந்து
பஃறுளி ஆற்றினையும் குமரி மலைத் தொடரினையும் தனக்குள் மூழ்கச்செய்து விட்டது என்றும்
கிரவுஞ்ச மலையின் பிளவினை முருகனுடன் தொடர்புறுத்தி புராணக் கதையாக்கியது பிற்காலத்தவர் செயலென்பதும் ஆகும்.
================================================